திருமண விருந்து தயார்! – ஆதிபர்வம் பகுதி 195-(வைவாஹிக பர்வம் – 01)-திருஷ்டத்யும்னன் சொன்ன விவரங்களைக் கேட்ட துருபதன், உண்மையை உறுதி செய்ய ஒரு புரோகிதரை அனுப்பியது; யுதிஷ்டிரன் புரோகிதரைக் கடிந்து கொண்டது; துருபதன் மற்றொரு தூதுவரை அனுப்பியது…
வைசம்பாயனர் சொன்னார், “தனது தந்தையால் இப்படிச் சொல்லப்பட்ட சந்திரகுல இளவரசர்களில் முதன்மையான திருஷ்டத்யும்னன், மகிழ்ச்சியுடன் தனது தந்தையிடம் நடந்தது அத்தனையும் சொல்லி, யாரால் கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்பட்டாள் என்பதையும் சொன்னான்.(1) அந்த இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, “மான் தோலுடுத்திப் பெரிய சிவந்த கண்களுடனும், தெய்வீக அழகுடனும், அந்த முதன்மையான வில்லுக்கு நாணேற்றி, உயரத்தில் இருந்த குறியை தரையில் வீழ்த்திய இளைஞன், தான் செய்த சாதனைக்காக தன்னைக் கொண்டாடிய பிராமணர்களில் முதன்மையானவர்களால் வேகமாகச் சூழப்பட்டான். அவன், எதிரிகளைக் காணப் பொறுக்காமலும், பெரும் சக்தியுடன் கூடிய செயல்பாடுகளுடனும் தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினான். தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் வஜ்ரதாரியான இந்திரன் போல, பிராமணர்களாலும், முனிவர்களாலும் அவன் {அர்ஜுனன்} சூழப்பட்டிருந்தான்.(2,3) கூட்டத்தின் தலைவனைப் பின் தொடரும் பெண் யானையென, கிருஷ்ணை {திரௌபதி}, அந்த இளைஞன் உடுத்தியிருந்த மான்தோலைப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பின்தொடர்ந்து சென்றாள். அக்காட்சியைக் காணப் பொறுக்காத ஏகாதிபதிகள் கோபத்துடன், போரிட முன்னேறினர்.(4) அங்கே மற்றொரு வீரன் மரத்தைப் பிடுங்கி, அந்த மன்னர் கூட்டத்திடம் விரைந்து, உயிரினங்களை அடிக்கும் யமனைப் போல அவர்களை {அம்மரத்தைக் கொண்டு} இடமும், வலமுமாக அடித்தான்.(5)
ஓ ஏகாதிபதி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கிருஷ்ணையை அழைத்துக் கொண்டு சூரியனையும், சந்திரனையும் போல அரங்கத்தைவிட்டுச் சென்ற அந்த இரு வீரர்களும் புறநகரில் {நகருக்கு வெளியே} இருக்கும் ஒரு குயவனின் இல்லத்துக்குச் சென்றனர்.(6) அந்தக் குயவனின் இல்லத்தில் நெருப்பின் தழல் என ஒரு பெண் {குந்தி} அமர்ந்திருந்தாள். அவளை அவர்களின் தாய் என்று நினைக்கிறேன். அவளைச் சுற்றிலும் இன்னும் மூன்று மனிதர்களில் முதன்மையானவர்கள் நெருப்பைப் போல அமர்ந்திருந்தார்கள்.(7) அந்த இரு வீரர்களும் அவளை அணுகி அவளது பாதம் பணிந்து வணங்கி, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அவ்வாறே செய்யப் பணித்தனர். பிறகு கிருஷ்ணையை அவளிடம் {குந்தியிடம்} ஒப்படைத்துவிட்டு, அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், பிச்சை எடுக்க வெளியே ஒரு சுற்றுக்குச் சென்றனர்.(8) சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பினார்கள். கிருஷ்ணை அவர்களிடம் இருந்து பிச்சையைப் பெற்றுக் கொண்டு, ஒரு பகுதியை தேவர்களுக்கும், ஒரு பகுதியை பிராமணர்களுக்கும் கொடுத்தாள். மீதம் இருந்ததில் ஒரு பகுதியை அந்த மதிப்புக்குரிய பெண்ணுக்கும் {குந்திக்கும்} கொடுத்துவிட்டு, அதில் மீந்ததை மனிதர்களில் முதன்மையான மற்ற ஐவருக்கும் கொடுத்தாள். அதிலும் அவளுக்கென சிறிது எடுத்துக் கொண்டு, இறுதியாக அவளும் உண்டாள்.(9) பிறகு, ஓ ஏகாதிபதியே, அவர்கள் உறங்குவதற்காகத் தங்களைக் கிடத்திக் கொண்டார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவர்களின் பாத வரிசையில் அவர்களின் காலணையாகப் படுத்துக் கொண்டாள். அவர்கள் படுத்த படுக்கை குசப் புற்களால் {தர்ப்பை புல்லால்}ஆனது. அதன் மேல் மான் தோலை விரித்து அதில் அவர்கள் படுத்துக் கொண்டனர்.(10)
அவர்கள் உறங்குவதற்கு முன் கரிய மேகங்களைப் போன்ற உரத்த குரலில் பல்வேறு காரியங்களைக் குறித்துக் கலந்தாலோசித்தனர். அவர்களின் பேச்சு வைசியன் போலவோ, சூத்திரன் போலவோ, பிராமணன் போலவோ இல்லை.(11) ஓ ஏகாதிபதி, அவர்கள் க்ஷத்திரியக் காளைகளே என்பதில் ஐயமில்லை. அவர்கள் பேச்சு முழுவதும் ராணுவத்தை {படைகளைக்} குறித்தே இருந்தது. ஓ தந்தையே, நமது நம்பிக்கையின் விதையே கனி கொடுத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். குந்தியின் மகன்கள் அனைவரும் அந்த அரக்கு மாளிகை எரிப்பில் இருந்து தப்பியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.(12) அந்த இளைஞனால் குறி வீழ்த்தப்பட்ட விதமும், வில்லில் நாண் ஏற்ற அவன் பயன்படுத்திய பலமும், அவர்கள் பேச்சின் தன்மையும், ஓ ஏகாதிபதியே, அவர்கள் மாற்றுருவில் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மைந்தர்கள் என்பதையே உறுதிசெய்கின்றன” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(13) தன் மகனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, உண்மையில் அவர்கள் சிறப்புமிகுந்த பாண்டுவின் மகன்கள்தானா என்பதை உறுதிசெய்ய ஒரு புரோகிதரை அவர்களிடம் அனுப்பினான்.(14) இப்படி அனுப்பப்பட்ட மன்னனின் புரோகிதர், அவர்களிடம் {பாண்டவர்களிடம்} சென்று, அவர்களைப் பாராட்டி, மன்னனின் செய்தியை அவர்களுக்கு உரைத்தார்,(15)
அவர், “அனைத்தையும் முதலுரிமை கொண்டாட தகுதிவாய்ந்தவர்களே, பூமியின் மன்னனான வரம் கொடுக்கும் துருபதன் நீங்கள் யார் என்பதை உறுதிசெய்ய விரும்புகிறார். அக்குறியை வீழ்த்திய இவனைக் கண்டு, மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருக்கிறார்.(16) உங்கள் குடும்பம் மற்றும் குலம் {இனம்} குறித்த தகவல்களைக் கொடுத்து, எதிரிகளின் தலைகளில் உங்கள் பாதங்களை வைத்து, பாஞ்சால மன்னனின் இதயத்தையும், எனது இதயத்தையும் மகிழ்ச்சி கொள்ள வைப்பீராக.(17) மன்னர் பாண்டு துருபதனின் அன்புக்குரிய நண்பராக இருந்தார். துருபதனும் அவரைத் தன்னைப் போலவே கருதினார். நீண்ட காலமாகத் துருபதன் தனது மகளைப் பாண்டுவுக்கு மருமகளாக அளிக்க விருப்பம் கொண்டிருந்தார்.(18) குறையற்ற வீரர்களே, பலம்வாய்ந்த நீண்ட கரங்களை உடைய அர்ஜுனன், தனது மகளை உரிய விதிப்படி மணந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தையும் வளர்த்தார்.(19) அதுவே உண்மையானால், அதைவிடச் சிறந்ததும், நன்மையானதுமாக எதுவும் இருக்க முடியாது; துருபதனைப் பொறுத்தவரை அதைவிடப் புகழைத்தரக்கூடிய அறம்சார்ந்த எதுவும் இருக்க முடியாது” என்றார் {புரோகிதர்}.
இதைச் சொன்ன அந்தப் புரோகிதர், ஒரு பதிலுக்காக அமைதியாகக் காத்திருந்தார். அவர் அப்படி அமர்ந்திருப்பதைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அருகில் அமர்ந்திருந்த பீமனை அழைத்து,(20) “இந்த பிராமணருக்குப் பாதம் கழுவ நீரும், ஆர்க்கியமும் கொடுப்பாயாக. இவர் மன்னர் துருபதனின் புரோகிதர், எனவே நமது மரியாதைக்கு உகந்தவர். நாம் இவரைச் சாதாரணமாக அல்லாமல் உயர்வாக மதித்து வழிபட வேண்டும்” என்றான்.(21) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, கேட்டுக்கொண்டபடியே பீமனும் செய்தான். அவர்களின் வழிபாடுகளை ஏற்றுக் கொண்ட பிராமணர் இதயத்தால் மகிழ்ந்து வசதியாக அமர்ந்தார். பிறகு யுதிஷ்டிரன்,(22) “மன்னர் பாஞ்சாலர் {துருபதன்}, சிறந்த வகையிலான ஒரு மணக்கொடையை {பந்தயத்தை} நிச்சயம் செய்து, தனது மகளைத் தன் குல வழக்கப்படி கொடுத்திருக்கிறாரே அன்றி, சாதாரணமாகக் கொடுத்துவிடவில்லை. இந்த வீரன் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றியே இளவரசியை வென்றான்.(23) எனவே மன்னர் துருபதருக்கு, அந்த அருஞ்செயலைச் செய்தவனின் குலம், இனம், குடும்பம், மனநிலை ஆகியவற்றைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உண்மையில், அந்த வில்லில் நாணேற்றி, அக்குறியைத் தரையில் வீழ்த்தி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தாகிவிட்டது.(24) அவர் சொன்னதை {துருபதன் சொன்னதை} நிறைவேற்றிய இந்தச் சிறப்புமிகுந்த வீரன் {அர்ஜுனன்}, அங்குக் கூடியிருந்த மன்னர்களிடம் இருந்து கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கொண்டு வந்திருக்கிறான். இச்சூழ்நிலையில், வருத்தமளிக்கக்கூடிய காரியங்களில் சந்திர குல மன்னன் {துருபதன்} ஈடுபடக்கூடாது. இறுதியாக அவருக்குப் பொருந்தாத இவ்விஷயத்தில் அது மகிழ்ச்சிக் குறைவை மட்டுமே ஏற்படுத்தும்.(25)
மன்னன் துருபதன் நீண்டகாலமாக அனைத்து நற்குறிகளையும் கொண்ட இந்த இளவரசியைக் {திரௌபதியைக்} குறித்து மனத்தில் விரும்பியது ஈடேறும்.(26) பலவீனமான ஒருவனால் அந்த வில்லில் நாண் பொருத்த முடியாது. சாதாரணப் பிறப்பு பிறந்தவர்களாலும், ஆயுதத் தேர்ச்சி இல்லாதவர்களாலும் அக்குறியை கீழே வீழ்த்தியிருக்க முடியாது.(27) எனவே, பாஞ்சால மன்னன் அவரது மகளைக் குறித்து இன்று வருந்தத் தேவையில்லை. இனி இவ்வுலகில் யாரும், குறியை கீழே வீழ்த்தி அச்செயலை மாற்ற முடியாது. எனவே, மன்னன் {துருபதன்} இக்காரியத்தில் துயர் கொள்ளாமல், காரியம் நடக்கும் போக்கிலேயே விட்டுவிட வேண்டும்” என்றான் {யுதிஷ்டிரன்}.(28)
யுதிஷ்டிரன் இவையாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாஞ்சால மன்னனிடம் {துருபதனிடம்} இருந்து மற்றுமொரு தூதுவன் விரைவாக வந்து, “(திருமண) விருந்து தயாராக இருக்கிறது” என்றான்.(29)
விருந்தும் கண்காட்சியும்! – ஆதிபர்வம் பகுதி 196-(வைவாஹிக பர்வம் – 02)-குந்தியுடன் துருபதன் வசிப்பிடத்திற்குச் சென்ற பாண்டவர்கள்; பாண்டவர்களைச் சோதிப்பதற்காக பல பொருட்களைக் கொண்டு வந்த துருபதன்; திரௌபதியும் குந்தியும் அந்தப்புரம் சென்றது; உணவுக்குப் பிறகு ஆயுத வரிசையைப் பார்வையிட்ட பாண்டவர்கள்; ஒரு தீர்மானத்திற்கு வந்த துருபதன்…
வைசம்பாயனர் சொன்னார், “{அப்படி வந்த இரண்டாம்} தூதுவன், “மன்னர் துருபதர், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு மணமகனுக்கு அருமையான விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார். உங்கள் தினசரிக் கடமைகளை முடித்துவிட்டு அங்கே வருவீராக. கிருஷ்ணையின் {திரௌபதியின்} திருமணம் அங்கே நடைபெறும். தாமதிக்காதீர்.(1) அற்புதமான குதிரைகள் பூட்டித் தங்கத்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்தத் தேர் மன்னர்களுக்குத் தகுதியுடையது. அவற்றில் செலுத்திக் கொண்டு பாஞ்சால மன்னனின் வசிப்பிடத்திற்கு வாருங்கள்” என்றான்”.(2)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “அந்தக் குரு குல காளைகள், புரோகிதரை அனுப்பிவிட்டுக் குந்தியையும், கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அந்த தேர்களில் ஒன்றில் ஏற்றி, அந்த அற்புதமான வாகனங்களில் தாங்களும் ஏறிக்கொண்டு துருபதனின் இடத்தை நோக்கிச் சென்றனர்.(3) அதே வேளையில், ஓ பாரதா {ஜனமேஜயா}, தனது புரோகிதர் மூலமாக யுதிஷ்டிரனின் வார்த்தைகளை அறிந்த துருபதன், அந்த வீரர்களின் குலத்தை அறிய எண்ணி, பல்வேறு பொருட்களின் பெரும் தொகுப்பைத் (நான்கு வகை வர்ணங்களின் படி திருமணத்திற்குத் தேவையான பொருட்களைத்) தயாராக வைத்திருந்தான். கனிகளையும், புனிதமான மாலைகளையும், கவசங்களையும், கேடயங்களையும், தரைவிரிப்புகளையும், பசுக்களையும், விதைகளையும், பல்வேறு பொருட்களையும், விவசாயத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைத்திருந்தான்.(4,5)
ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, அந்த மன்னன், பல கலைப்பொருட்களையும், பல்வேறு விளையாட்டுக் கருவிகளையும் திரட்டி வைத்தான்.(6) பல்வேறு அற்புதமான கவசங்களையும், பளபளக்கும் கேடயங்களையும், வாட்களையும், உறுதியான கூர்வாள்களையும், குதிரைகளுடன் கூடிய அழகான தேர்களையும், முதல்தரமான விற்களையும், அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்புகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஏகப்பட்ட கணைகளையும் திரட்டி வைத்தான். அம்புகளையும், கணைகளையும், போர்க்கோடாரிகளையும், போர்த்தளவாடங்களையும் கூட அவன் {துருபதன்} தயாராக வைத்திருந்தான். பல்வேறு படுக்கைகள், தரைவிரிப்புகள், பல அற்புதமான பொருட்கள், பலவகை ஆடைகள் அந்தத் தொகுப்பில் இருந்தன.(7,8)
{பாண்டவர்கள் அடங்கிய} அந்தக் குழு, துருபதனின் வசிப்பிடத்தை அடைந்ததும், குந்தி, அறம்சார்ந்த கிருஷ்ணையை மன்னனின் {துருபதனின்} அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றாள். மன்னனின் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், மகிழ்ச்சிகரமான இதயத்துடன் குருக்களின் ராணியை {குந்தியை} வழிபட்டனர்.(9) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிங்கத்தின் நடை கொண்டு, மான் தோலால் ஆன மேலாடை அணிந்து பார்ப்பதற்குப் பெரும்பலம்வாய்ந்த காளைகளைப் போல பாண்டவர்கள் இருந்தனர். அகன்ற தோள்களுடனும், பெரும் பாம்புகளைப் போன்று நீண்டு தொங்கும் கரங்களுடன் இருந்த மனிதர்களில் முதன்மையான {பாண்டவர்களில்} ஒவ்வொருவரையும் கண்ட மன்னனும் {துருபதனும்}, மன்னனின் அமைச்சர்களும், மன்னனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, மன்னனின் நண்பர்களும், பணியாட்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.(10,11) அந்த வீரர்கள், பாதத்தைத் தாங்கும் மனைப் பலகையுடன் கூடிய அற்புதமான இருக்கைகளில், எந்தத் தடுமாற்றமும், தயக்கமும் இல்லாமல் அமர்ந்தனர். மனிதர்களில் முதன்மையான அவர்கள், ஒருவர் பின் ஒருவராக, அவரவர் வயதுக்குத் தக்க வரிசையாக, அந்த விலையுயர்ந்த இருக்கைகளில் சிறிதும் அச்சமற்று அமர்ந்தனர்.(12)
அந்த வீரர்கள் அமர்ந்ததும், நன்கு உடுத்திய ஆண் மற்றும் பெண் பணியாட்களும், திறன் வாய்ந்த சமையற்காரர்களும், மன்னர்களுக்குத் தகுந்த பண்டங்களைத் தங்கம் மற்றும் வெள்ளி வட்டில்களில் {தட்டுகளில்} கொண்டு வந்தனர்.(13) அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் உணவுகளை உண்டு, பெரும் மனநிறைவைக் கொண்டனர். அந்த இரவு உணவு முடிந்ததும், அந்த வீர மனிதர்கள், அங்கிருந்த பொருட்களை எல்லாம் கடந்து, போர்க்கருவிகளைப் பார்வையிட்டனர்.(14) இதைக் கண்ட துருபதனின் மகனும், துருபதனும், தங்கள் நாட்டின் தலைமை அமைச்சர்களுடன் கூடி, குந்தியின் மகன்களை அரச ரத்தம் உடையவர்களாக அறிந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்” {என்றார் வைசம்பாயனர்}.(15)
உமது மகள் எங்களுக்கு பொது மனைவியாவாள்! – ஆதிபர்வம் பகுதி 197-(வைவாஹிக பர்வம் – 03)துருபதன் விசாரிக்கும்போது தாங்கள் பாண்டவர்களே என்று சொன்ன யுதிஷ்டிரன்; திரௌபதி ஐவருக்கு மனைவியாக எதிர்ப்பு தெரிவித்த துருபதன்; வியாசர் வருகை…
வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் ஆயுதங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, சிறப்புமிகுந்த பாஞ்சால மன்னன் {துருபதன்}, குந்தியின் சிறப்புமிக்க மகனான, அந்த பிராமண வடிவில் இருக்கும் யுதிஷ்டிரனிடம் மகிழ்ச்சியாக, “நாங்கள் உங்களை க்ஷத்திரியர்கள் என்று அறிவதா? அல்லது பிராமணர்கள் என்று அறிவதா?(1,2) அல்லது சாதித்த வைசியர்களா? அல்லது சூத்திரர்களுக்குப் பிறந்தவர்களா? அல்லது திரௌபதியின் கைப்பிடிக்க மாயசக்தியைப் பயன்படுத்தி பிராமண வடிவில் பூமியில் உலவும் தேவர்கள் என்று அறிவதா? உண்மையைச் சொல்வீராக. எங்களுக்குப் பெரும் ஐயங்கள் எழுகின்றன.(3,4) எங்கள் சந்தேகங்கள் களையப்பட்டால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டோமா? ஓ எதிரிகளைத் தண்டிப்பவர்களே, எங்கள் விதி எங்களுக்கு நன்மையைச் செய்யுமா?(5) விருப்பத்துடன் உண்மையைச் சொல்லுங்கள். கிணறுகளை அர்ப்பணம் {உபயம்} செய்வதை விடவும், வேள்விகளைச் செய்வதை விடவும், உண்மையை பேசுவதே ஓர் ஏகாதிபதிக்குத் தகுந்ததாகும். எனவே, எங்களிடம் பொய்யுரைக்க வேண்டாம். (6) ஓ தெய்வீக அழகுடையவரே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது மறுமொழியைக் கேட்ட பிறகே, நான் எனது மகளின் திருமணத்தை உங்கள் முறையில் செய்ய ஏற்பாடு செய்ய முடியும்” என்றான்.(7)
துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “ஓ மன்னா, மகிழ்வற்றவராக இருக்காதீர். உற்சாகமடைவீராக. நீர் உமது மனத்தில் வளர்த்து வந்த விருப்பம் ஈடேறியது.(8) நாங்கள் க்ஷத்திரியர்களே, ஓ மன்னா, நாங்கள் சிறப்புமிக்க பாண்டுவின் மகன்களே. குந்தியின் மகன்களில் என்னை மூத்தவனாக அறிந்து கொள்வீராக. இவர்கள் பீமனும், அர்ஜுனனும் ஆவர்.(9) ஓ மன்னா இவர்களாலேயே, உமது மகள் {திரௌபதி}, அந்த மன்னர்கள் கூட்டத்தின் முன்னிலையில் வெல்லப்பட்டாள். இரட்டையர்களும் (நகுலனும், சகாதேவனும்), குந்தியும் கிருஷ்ணை {திரௌபதி} இருக்கும் இடத்தில் காத்திருக்கிறார்கள்.(10) ஓ மனிதர்களில் காளையே, நாங்கள் க்ஷத்திரியர்களே, ஆதலால் துயரத்தை உமது இதயத்தில் இருந்து விரட்டுவீராக. ஓ ஏகாதிபதி! தாமரையைப் போன்ற உமது மகள் ஒரு தடாகத்தில் இருந்து மற்றொரு தடாகத்திற்கு மாற்றப்படுகிறாள். அவ்வளவுதான்.(11) ஓ மன்னா, நீர் மரியாதைக்குரிய பெரியவரும், எங்கள் முக்கியப் புகலிடமும் ஆவீர். நான் உம்மிடம் முழு உண்மையையும் சொல்லிவிட்டேன்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(12)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துருபதன் பரவசத்தால் மெய்மறந்து கண்களை உருட்டினான். மகிழ்ச்சி நிறைந்த அம்மன்னனால் சிறிது நேரத்திற்கு யுதிஷ்டிரனுக்குப் பதில் அளிக்க இயலவில்லை.(13) பெருமுயற்சியுடன் தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு முறையான வார்த்தைகளால் யுதிஷ்டிரனுக்குப் பதில் கூறினான்.(14) அறம் சார்ந்த ஏகாதிபதி {துருபதன்} வாரணாவத நகரத்திலிருந்து பாண்டவர்கள் எப்படித் தப்பினார்கள் என்பதைக் கேட்டான். பாண்டுவின் மகன் அந்த ஏகாதிபதியிடம் அரக்கு மாளிகை எரியூட்டல் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தான்.(15) குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} சொன்னதைக் கேட்ட மன்னன் துருபதன், மனிதர்களின் ஆட்சியாளனான திருதராஷ்டிரனைப் பழித்தான்.(16) அப்போது, அந்த ஏகாதிபதி! குந்தியின் மகனான யுதிஷ்டிரனுக்கு அனைத்து உறுதிகளையும் கொடுத்தான். அந்தச் சொல்திறன் வாய்ந்தவர்களில் முதன்மையான {துருபதன்}, யுதிஷ்டிரனிடம் அவனது தந்தைவழி அரியணையை மீட்டுத் தருவதாக உறுதிமொழியளித்தான்.(17)
குந்தி, கிருஷ்ணை {திரௌபதி}, பீமன், அர்ஜுனன், இரட்டையர் ஆகியோர் மன்னனின் உத்தரவின் பேரில் அங்கேயே தங்கி,(18) அந்த யக்ஞசேனனால் {துருபதனால்} உரிய மரியாதையுடன் நடத்தப் பட்டனர். மன்னன் துருபதன் தனது மகன்களுடன் நடந்தது அத்தனையும் உறுதி செய்து கொண்டு, யுதிஷ்டிரனை அணுகி,(19) “ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரே, குரு இளவரசனான அர்ஜுனன், நன்னாளான இன்றே உரிய சடங்குகளுடன் எனது மகளின் {திரௌபதியின்} கரத்தைப் பற்றட்டும். எனவே, அவன் திருமணத்திற்கான தொடக்கச் சடங்குகளைச் செய்யட்டும்” என்றான்”.(20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “துருபதனின் இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், “ஓ பெரும் மன்னா! நானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான்.(21)
இதைக் கேட்ட துருபதன், “உமக்கு விருப்பம் இருந்தால், நீரே எனது மகளின் {திரௌபதியின்} கரத்தை உரிய சடங்குகளுடன் பெற்றுக் கொள்ளும். அல்லது கிருஷ்ணையை {திரௌபதியை} நீர் விரும்பிய சகோதரனுக்குக் கூடத் திருமணம் செய்து கொடுக்கலாம்” என்றான்.(22)
யுதிஷ்டிரன், “ஓ மன்னா, உமது மகள் எங்களுக்குப் பொது மனைவியாக இருப்பாள். ஓ ஏகாதிபதியே, இப்படியே எங்கள் அன்னை உத்தரவு இட்டிருக்கிறாள்.(23) எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, பாண்டுவின் மகன்களில் பீமனும் அப்படியே {திருமணம் ஆகாமல்}[1] இருக்கிறான். இந்த ரத்தினம் போன்ற உமது மகள் அர்ஜுனனால் வெல்லப்பட்டாள்.(24) ஓ மன்னா, எந்த ரத்தினத்தை நாங்கள் அடைந்தாலும், அதைச் சமமாக அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்ற விதி எங்களுக்குள் இருக்கிறது. ஓ ஏகாதிபதிகளில் சிறந்தவரே, அந்த நடத்தை விதியை எங்களால் கைவிட முடியாது.(25) எனவே, கிருஷ்ணை, எங்கள் அனைவராலும் மணந்து கொள்ளப்படும் மனைவியாக இருப்பாள். அவள், நெருப்பின் {அக்னியின்} முன்னிலையில், எங்கள் வயதின் வரிசைப்படி எங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றட்டும்” என்றான்.(26)
அதற்குத் துருபதன், “ஓ குரு குலத்தின் வழித்தோன்றலே, ஒரு மனிதன் பல மனைவிகளைக் கொள்ள வழிகாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு பெண்மணி பல கணவர்களைக் கொண்டதை நாம் கேள்விப்பட்டதே இல்லை.(27) ஓ குந்தியின் மகனே, நீர் தூய்மையானவராகவும், அறவிதிகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பதால், நீர் இத்தகு பாவ காரியத்தைச் செய்யக்கூடாது. இப்படிப்பட்ட பழக்கம் நடைமுறையிலும் இல்லை, வேதங்களிலும் இல்லை. ஓ இளவரசே, ஏன் உமது புரிதல் இப்படி ஆனது? {ஏன் உமது புத்தி இப்படிச் செல்கிறது?}” என்று கேட்டான்.(28)
அதற்கு யுதிஷ்டிரன், “ஓ ஏகாதிபதி! அறநெறியானது நுட்பமானது, நாம் அதன் போக்கை {வழியை} அறிவதில்லை. எனவே, பழங்காலத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் சென்ற வழியில் நாம் நடக்கலாம்.(29) எனது நாக்கு ஒருபோதும் பொய்யைச் சொல்லாது. எனது இதயமும் ஒருபோதும் பாவத்தின் பக்கம் திரும்பாது. எனது தாய் அப்படிக் கட்டளையிட்டாள்; எனது இதயமும் அதை அங்கீகரிக்கிறது.(30) எனவே, ஓ மன்னா, இஃது அறத்தின் நியமங்களுக்குக் கட்டுப்பட்டதே. எந்தப் பழிக்கும் அஞ்சாமல் அதன்படி நடந்து கொள்ள வேண்டியதுதான். ஓ மன்னா, இக்காரியத்தில் அச்சத்தை ஊக்கப்படுத்தாதீர்” என்றான்.(31)
துருபதன், “ஓ குந்தியின் மகனே, என்ன செய்யப்பட வேண்டும் என்பதை உமது தாயும், எனது மகன் திருஷ்டத்யும்னனும், நீரும் கலந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்து ஆராய்ந்து எடுத்த உங்கள் முடிவை, நாளை என்னிடம் சொல்லுங்கள். நான் எது சரியோ அதைச் செய்கிறேன்” என்றான்”.(32)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ பாரதா {ஜனமேஜயா}, அதன்பிறகு, யுதிஷ்டிரனும், குந்தியும், திருஷ்டத்யும்னனும் இக்காரியம் குறித்துக் கலந்து பேசினர். இருப்பினும், சரியாக அதே நேரத்தில், ஓ ஏகாதிபதி, தீவில் பிறந்தவர் {துவைபாயனர் = வியாசர்}, பயணம் போகும் வழியில் அங்கே வந்தார்” {என்றார் வைசம்பாயனர்}.(33)
ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? – ஆதிபர்வம் பகுதி 198-(வைவாஹிக பர்வம் – 04)-ஒருத்திக்கு பலர் கணவராக இருப்பதில் துருபதன் முதலியோருக்குள்ள மறுப்புகளைக் கேட்ட வியாசர்; பிறகு, திரௌபதி ஐவருக்கு மனைவியாவது அறமே எனச் சொன்ன வியாசர்..
வைசம்பாயனர் சொன்னார், “பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சாலர்களின் சிறப்பு வாய்ந்த மன்னனும், மற்றும் ஏனையோரும் எழுந்திருந்து சிறப்பு வாய்ந்த முனிவர் கிருஷ்ணருக்கு (துவைபாயனருக்கு) {வியாசருக்கு} மரியாதையுடன் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர்.(1) அந்த உயர் ஆன்ம முனிவர், அவர்கள் அனைவருக்கும் பதில் வணக்கம் செலுத்தி, அனைவரின் நலனையும் விசாரித்தபடி கீழே தங்கத் தரைவிரிப்பில் அமர்ந்தார்.(2) அளவிலா சக்தி கொண்ட கிருஷ்ணரால் (துவைபாயனரால்) {வியாசரால்} ஆணையிடப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் தங்கள் விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.(3) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தப் பிருஷதனின் மகன் {துருபதன்} இனிமையான குரலில் சிறப்பு மிகுந்த முனிவரிடம் தனது மகளின் {திரௌபதியின்} திருமணம் குறித்துப் பேசினான்.(4)
அவன், “ஓ சிறந்தவரே, பாவத்தின் கறை படியாமல் ஒரு பெண் எப்படிப் பல மனிதர்களுக்கு மனைவியாக முடியும்? இது குறித்து எனக்கு உண்மையைச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.(5)
இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசர், “ஓ மன்னா, இந்த நடைமுறை பயன்பாட்டுக்கும், வேதங்களுக்கும் எதிராக இருப்பதால் வழக்கற்றுப் போயிற்று. இருப்பினும் நான், இக்காரியத்தில் உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்.(6)
முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, முதலில் துருபதன் பேசினான், “பயன்பாட்டிலும், வேதங்களாலும் எதிர்க்கப்பட்டிருக்கும்போது, இந்த நடைமுறை பாவகரமானது என்பது எனது கருத்து, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, பலர் கூடி ஒரு மனைவியை வைத்திருப்பதை நான் எங்கும் கண்டிலேன்.(7) பழங்காலத்தில் இருந்த சிறப்பு வாய்ந்தவர்கள் கூட இது போன்ற பயன்பாட்டை கொண்டிருக்கவில்லை. ஞானிகள் ஒருபோதும் பாவம் செய்யமாட்டார்கள்.(8) எனவே, நான் இவ்வழியில் செயல்பட எனது மனத்தைத் தயார் செய்ய முடியாது. இந்த நடைமுறை எனக்குச் ஐயத்திற்கிடமான அறமாகவே படுகிறது” என்றான் {துருபதன்}.(9)
துருபதன் சொல்லி முடித்ததும், திருஷ்டத்யும்னன், “ஓ பிராமணர்களில் காளையே, ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஓ பிராமணரே! நல்ல மனநிலையில் உள்ள {நல்ல குணத்தைக் கொண்ட} ஓர் அண்ணன், தனது தம்பியின் மனைவியை எப்படி அணுக முடியும்?(10) அறவழிகள் நுட்பமானவை {தர்மத்தின் பாதைகள் புதிரானவை}, எனவே, அதுகுறித்து நாம் அறிவதில்லை. நாம் அறத்திற்கு உகந்தது எது, எது இல்லை என்பதைச் சொல்ல முடியாது.(11) எனவே, மனசாட்சியுடன் நாம் அத்தகு செயலைச் செய்ய முடியாது. உண்மையில், ஓ பிராமணரே! ‘திரௌபதி, ஐந்து சகோதரர்களுக்குப் பொது மனைவியாக இருக்கட்டும்’ என்று என்றால் சொல்ல முடியவில்லை” என்று பேசினான் {திருஷ்டத்யும்னன்}.(12)
பிறகு யுதிஷ்டிரன், “எனது நாக்கு ஒருபோதும் பொய்ம்மையைப் பேசுவதில்லை. எனது இதயம் ஒருபோதும் பாவமெனப்பட்டதை நோக்கி உயர்வதில்லை. ஒன்றை எனது இதயம் அங்கீகரிக்கும் போது, ஒருபோதும் அது பாவகரமாக இருக்க முடியாது.(13) புராணங்களில் நான் ஜடிலை என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோதம குலத்தைச் சார்ந்த அந்த அறம்சார்ந்த மங்கையரில் முதன்மையானவள் {ஜடிலை}, ஏழு முனிவர்களைத் திருமணம் செய்தாள்.(14) அதே போல, மரத்தில் பிறந்தவளான ஒரு துறவியின் மகள் {வார்க்ஷி [மாரிஷா]}, முன்பொரு காலத்தில், தவத்தின் உச்சத்தை அறிந்த ஆன்மாக்களான பிரசேதர்கள் என்ற ஒரே பெயரையுடைய பத்து சகோதரர்களைத் திருமணம் செய்தாள்.(15) ஓ அறவிதிகள் அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவரே, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் நன்மை பயக்கத்தக்கது என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லப்படும் பெரியோர்களில் தாயே முதன்மையானவள் என்பது நன்கு அறியப்பட்டது.(16) நாங்கள் பிச்சையாக அடைந்த திரௌபதியை அனைவரும் அனுபவிக்குமாறு அவளே ஆணையிட்டாள். இதன் காரணமாகவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, இச்செயலை நான் அறம் சார்ந்ததாகக் கருதுகிறேன்” என்று பேசினான் {யுதிஷ்டிரன்}.(17)
அப்போது குந்தி, “யுதிஷ்டிரன் சொன்னது போலவே இச்செயல் அறம்சார்ந்ததுதான். ஓ பிராமணரே! எனது வார்த்தை பொய்த்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன். பொய்ம்மையிலிருந்து நான் எவ்வாறு காக்கப்படுவேன்?” என்று சொன்னாள்.(18)
அனைவரும் பேசி முடித்த பிறகு, வியாசர், “ஓ இனிமையானவளே, இதுவே நிலைத்த அறமாக இருக்கும் போது, நீ பொய்ம்மையின் விளைவுகளிலிருந்து எவ்வாறு நீ காக்கப்படுவாய்? ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதா}, உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நான் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த மாட்டேன். ஆனால், நீ மட்டும் தனியாக அமர்ந்து, இந்த நடைமுறை எப்படி நிறுவப்பட்டது? இதுவே பழமையானதும், நிலைத்ததுமாக ஏன் மதிக்கப்படுகிறது? என்பதைப் பற்றி நான் சொல்லப் போவதைக் கேள். யுதிஷ்டிரன் சொன்னது அறத்திற்குக் கட்டுப்பட்டது என்பதில் யாதொரு ஐயமும் கிடையாது” என்றார்”.(19,20)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பிறகு அந்தச் சிறப்பு வாய்ந்த வியாசர், அந்தக் குரு துவைபாயனர், எழுந்திருந்து, துருபதனின் கையைப் பற்றி அரண்மனைக்குள் இருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.(21) பாண்டவர்களும், குந்தியும் பிருஷதனின் குலத்தில் வந்த திருஷ்டத்யும்னனும் அங்கேயே அமர்ந்து கொண்டு, வியாசர் மற்றும் துருபதனின் வரவுக்காகக் காத்திருந்தனர்.(22) அதே வேளையில் துவைபாயனர் {வியாசர்} அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, எப்படி பலபதியுடைமை என்ற நடைமுறை பாவகரமாகக் கருதப்பட முடியாது என்பது குறித்துப் விளக்கினார்” {என்றார் வைசம்பாயனர்}.(23)
பல கணவர்களுக்கு பொது மனைவி – ஆதிபர்வம் பகுதி 199-வைவாஹிக பர்வம் – 05)-இந்திரன் சிவனிடம் பெற்ற சாபத்தையும், பழைய காலத்தில் திரௌபதி சிவனிடம் ஐந்து கணவர்களை வரமாகப் பெற்ற கதையையும் வியாசர் துருபதனிடம் சொன்னது.
வைசம்பாயனர் சொன்னார், “வியாசர் தொடர்ந்தார்,[1]( கும்பகோணம் பதிப்பில், வியாசர் இந்தக் கதையைச் சொல்வதற்கு முன்னர் நளாயினியின் கதையைச் சொல்கிறார். இந்திரசேனை என்ற நாளாயினி தனது கணவரான மௌத்கல்யரை மகிழ்விக்க, அதில் மகிழ்ந்த அவர் ஐந்து வடிவங்களை எடுத்து அவளோடு இணைந்ததையும், அந்தப் போகத்தில் அவள் நிறைவையடையாததால், “ஐந்து கணவர்களை அடைவாய்” என்று மௌத்கல்யர் சபித்ததையும், அவள், சிவனை நோக்கித் தவமிருந்து ஐந்து முறை “கணவனைக் கொடுப்பாயாக” என்று வேண்டியதையும் சொல்லி, அவளே துருபதனின் மகளாகக் கிருஷ்ணையாகப் பிறந்திருக்கிறாள் என்றும் சொல்கிறார். கும்பகோணம் பதிப்பில் இரண்டு அத்தியாயங்களில் விரியும் இந்தக் கதை கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.) “பழங்காலத்தில், தேவர்கள் நைமிச வனத்தில் ஒரு பெரும் வேள்வியை ஏற்பாடு செய்தனர். ஓ மன்னா, விவஸ்வானின் மகனான யமன், அந்த வேள்வியில் அர்ப்பணிக்கப்பட்ட விலங்குகளைக் கொல்பவன் ஆனான்.(1) அந்த வேள்வியில் இப்படி நியமிக்கப்பட்ட யமன் (அவ்வேளையில்) ஒரு மனிதனையும் கொல்லவில்லை. உலகத்தில் மரணம் தவிர்க்கப்பட்டு, மனிதர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகமானது.(2) சோமன், சக்ரன் {இந்திரன்}, வருணன், குபேரன், சாத்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகிய தேவர்கள் அண்டத்தைப் படைப்பவனான பிரஜாபதியிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(3) மக்கள் தொகை அதிகமானதைக் கண்டு அஞ்சி அவர்கள் அந்த அண்டப் படைப்பாளனிடம், “ஓ தலைவா, பூமியில் மக்கள் தொகை அதிகமானதால் அஞ்சி, உம்மிடம் தீர்வைப் பெற வந்திருக்கிறோம். உண்மையில் நீர் தரும் பாதுகாப்புக்காக நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.(4)
இதைக்கேட்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, “மக்கள் தொகைப் பெருகுவதால் நீங்கள் அஞ்சத் தேவையில்லை. நீங்கள் இறவாதவர்கள். நீங்கள் மனிதர்களைப் பார்த்து அஞ்சுவது தகாது” என்றான்.(5)
அதற்குத் தேவர்கள், “மரணிப்பவர்கள் {மனிதர்கள்} இப்போது இறப்பதில்லை. இப்போது எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்த வேறுபாடுகள் மறைந்ததால் வெறுத்துப் போய், எங்களுக்கும் அவர்களுக்குமான வேறுபாட்டை நீர் அருள்வீர் என்றே உங்களிடம் வந்திருக்கிறோம்” என்றனர்.(6)
அதற்கு அந்தப் படைப்பாளி {பிரம்மன்}, “விவஸ்வானின் {சூரியனின்} மகன் {யமன்} இன்னும் அந்தப் பெரும் வேள்வியில் பங்கு கொண்டிருக்கிறான். அதனால் தான் மனிதர்கள் இறவாமல் இருக்கின்றனர். அந்த வேள்வியில் எமனின் தொடர்பு நிறைவடைந்தால், மனிதர்கள் முன்பைப் போலவே இறப்பார்கள்.(7) நேரம் வரும்போது, அந்த விவஸ்வான் மகன் {யமன்}, உங்கள் ஒவ்வொருவரின் சக்தியைக் கொண்டும், சக்தி மீதம் இல்லாமல் உலகத்தில் வாழும் அவர்கள் அனைவரையும் ஆயிரக்கணக்கில் பெருக்கித் தள்ளுவான் {கொல்வான்}” என்றான்”.(8)
வியாசர் தொடர்ந்தார், “தேவர்களில் முதலில் பிறந்தவரின் {பிரம்மனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் அந்தப் பெரும் வேள்வி நடந்த இடத்திற்குத் திரும்பினர்.பாகீரதியின் {கங்கையின்} அருகே அமர்ந்திருந்த அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர்கள் {தேவர்கள்} நீரோட்டத்தில் ஒரு (தங்கத்) தாமரை அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தேவர்களில் முதன்மையான இந்திரன், அஃது எங்கிருந்து வருகிறது என்பதை உறுதி செய்யப் பாகீரதியின் {கங்கையின்} போக்குக்கு {நீரோட்டத்துக்கு} எதிராகத் தொடர்ந்து சென்றான். கங்கை, வற்றாத நீரை வெளியிடும் இடத்திற்கு {நதி மூலத்திற்கு} வந்த இந்திரன், நெருப்புப் போன்ற பிரகாசமுள்ள ஒரு மங்கையைக் கண்டான்.(9,10) தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அந்த நீரோட்டத்திலிருந்து நீர் எடுக்க வந்த அந்த மங்கை, அழுது கொண்டே இருப்பதையும் கண்டான். அவள் உதிர்த்த கண்ணீர்த்துளிகள், அந்த நீரோட்டத்தில் விழுந்து, தங்கத்தாமரைகளாக மாறிக் கொண்டிருந்தன.(11) இந்த அற்புதக் காட்சியைக் கண்ட வஜ்ரதாரி {இந்திரன்} அந்த மங்கையை அணுகி, “ஓ இனிமையான மங்கையே நீ யார்? நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? நான் உண்மையை அறிய விரும்புகிறேன். என்னிடம் அனைத்தும் சொல்வாயாக” என்று கேட்டான்”.(12)
வியாசர் தொடர்ந்தார், “அதற்கு அந்த மங்கை, “ஓ சக்ரா {இந்திரா}, நான் யார் என்பதையும், நான் ஏன் நற்பேறற்றவளாக இருக்கிறேன் என்பதையும் நீ அறிந்திருக்கலாம். நான் அழைத்துச் செல்லும் இடத்திற்கு நீ வந்தால் நான் அழமாட்டேன். அப்படி வந்தால், நான் ஏன் அழுகிறேன் என்பதை அறிந்து கொள்வாய்” என்றாள்.(13)
அந்த மங்கையின் வார்த்தைகளைக் கேட்டு, அவளர் சென்ற வழியே இந்திரனும் பின்தொடர்ந்து சென்றான். விரைவில் இமயத்தின் சிகரங்கள் ஒன்றில் ஓர் அழகான இளைஞனும், ஒரு மங்கையும் அரியணையில் அமர்ந்து கொண்டு பகடை விளையாடிக் கொண்டிருந்தனர்.(14) {ஆணும், பெண்ணுமான} அந்த இளைஞர்களைக் கண்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, “ஓ புத்திமானான இளைஞனே, இந்த அண்டம் எனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வாயாக” என்றான். இருப்பினும், அந்த மனிதன் பகடையில் அவ்வளவு ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததால், வந்தவனைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட இந்திரன், “நானே அண்டத்தின் தலைவன்” என்றான்.(15)
அந்த இளைஞன் (தேவர்கள் தேவன்) மஹாதேவனைத் {சிவனைத்} தவிர வேறு யாரும் இல்லை. அவன், கோபத்தில் இருந்த இந்திரனைக் கண்டு, சிறு புன்னகை மட்டுமே புரிந்தான். இருப்பினும் அந்தப் பார்வையால், தேவர்கள் தலைவன் உடனே முடக்கப்பட்டு மரக்கட்டையைப் போல அங்கே நின்றான்.(16) பகடை விளையாட்டு முடிந்ததும், அந்த ஈசானன், அழுது கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம், “சக்ரனை {இந்திரனை} இங்கே கொண்டு வா. மறுபடியும் செருக்கு அவனது இதயத்திற்குள் வராதவாறு, அவனுக்கு நான் பாடம் புகட்ட வேண்டும்” என்றான்.(17) முடக்கப்பட்டிருந்த தேவர்கள் தலைவன் சக்ரன் {இந்திரன்}, அந்தப் பெண்மணியால் தொடப்பட்ட அந்தத் தீண்டலால் தரையில் விழுந்தான். பெரும் சக்தி கொண்ட சிறப்புவாய்ந்த ஈசானன் அவனிடம், “ஓ சக்ரா {இந்திரா}, இனி ஒருபோதும் இவ்வாறு நடந்து கொள்ளாதே.(18) உனது பலமும், சக்தியும் அளவிடமுடியாதவை, இந்தப் பெரும் கல்லை அகற்றி, சூரியனுக்கு ஒப்பான பிரகாசமுள்ள மற்றவர்கள் காத்திருக்கும் அந்தக் குழிக்குள் செல்வாயாக. அவர்கள் அனைவரும் உன்னைப் போன்றவர்களே” என்றான்.(19)
இந்திரன் அந்தக் கல்லை அகற்றி, மலைகளின் அரசனின் மார்பில் இருக்கும் அந்தக் குகையில், தன்னைப் போலவே நான்கு பேர் இருப்பதைக் கண்டான். அவர்களது அவல நிலையைக் கண்ட சக்ரன் {இந்திரன்} துயரத்தால் பீடிக்கப்பட்டு, “நானும் இவர்களைப் போல இருக்க வேண்டுமா?” என்றான்.(20)
பிறகு அந்தக் கிரீச தேவன் {சிவன்}, இந்திரனை முழுமையாகக் கண்டு கோபத்தில் கண்களை விரித்து, “ஓ ஆயிரம் வேள்விகள் செய்தவனே, என்னை அவமதித்துத் தவறு இழைத்ததால், நேரம் கடத்தாமல் குகைக்குள் நுழைவாயாக” என்றான். (21) ஈசானனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, பழித்துப் பேசப்பட்ட அந்தப் பயங்கரமான சூழலால் பெரும் வலி கொண்டு, உறுப்புகள் பலமற்றுப் போய், காற்றில் படபடக்கும் இமயத்தின் அத்திமர இலை {அரச இலை} போல அச்சத்தால் நடுங்கினான்.(22) காளை வாகனம் கொண்ட அந்தத் தேவனின் {சிவனின்} எதிர்பாராத சாபத்திற்கு உள்ளான இந்திரன், கரங்கள் குவித்துத் தலை முதல் கால் வரை நடுங்கிப் பல வடிவங்களும், அவதாரங்களும் எடுக்கும் அந்தக் கடும் தெய்வத்திடம், “ஓ பவனே, முடிவற்ற அண்டத்தின் காவலன் நீயே” என்றான்.(23)
கடும் சக்தி கொண்ட அந்தத் தேவனின் {இந்திரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு புன்னகைத்த அவன் {சிவன்}, “உன்னைப் போன்ற நிலை கொண்டவர்கள் எனது அருளை அடைய மாட்டார்கள். ஒருசமயத்தில் இவர்கள் அனைவரும் (குகையில் இருப்பவர்கள்) உன்னைப் போல்தான் இருந்தனர். இந்தக் குகைக்குள் நுழைந்து, சிறிது காலத்திற்கு இங்கேயே கிடப்பாயாக.(24) உங்கள் அனைவரின் தலைவிதியும் நிச்சயமாக ஒன்றே. நீங்கள் அனைவரும் உலகத்தில் மனிதர்களாகப் பிறந்து, பல கடினமான பணிகளைச் செய்து, கணக்கிலடங்கா மனிதர்களைக் கொன்று, உங்கள் நற்செயல்களால் தகுதியடைந்து, மீண்டும் மதிப்பு மிக்க இந்திரலோகம் திரும்புவீர்கள். நான் சொன்னதையும் தவிர்த்து, இன்னும் பல சாதனைகளையும் அங்கே நீங்கள் செய்வீர்கள்” என்றான்.(25,26)
அதன் பிறகு, பிரகாசமுள்ள அந்த இந்திரர்கள், “எங்கள் உலகத்திலிருந்து நாங்கள், மனிதர்களின் உலகத்திற்குச் சென்று எங்கள் முக்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடும் சாதனைகளைச் செய்வோம். ஆனால், தர்மனும், வாயுவும், மகவத்தும் {இந்திரனும்}, அஸ்வினிகளும் எங்கள் தாயாரிடம் எங்களைப் பெறட்டும். தேவ மற்றும் மனித ஆயுதங்களைப் பயன்படுத்தி மனிதர்களுடன் போரிட்டு, நாங்கள் மீண்டும் இந்திரலோகம் திரும்புவோம்” என்றனர்.(27)
வியாசர் தொடர்ந்தார், “பழைய இந்திரர்களின் அப்பேச்சைக் கேட்ட, வஜ்ரதாரி {இந்திரன்} அந்தத் தேவர்களில் முதன்மையானவனிடம், “இக்கடினமான பணிக்கு நானே நேரடியாகச் செல்லாமல், என்னிலிருந்து ஒரு பகுதியை உற்பத்தி செய்து, இவர்களில் ஐந்தாவது ஒருவனாக அனுப்புகிறேன்” என்றான்.(28)
விசுவபுக், பூததாமன், பெரும் சக்தி கொண்ட சிபி {சிபிச்சக்கரவர்த்தி}, நான்காவது சாந்தி மற்றும் தேஜாஸ்வி ஆகியோரே அந்தப் பழைய இந்திரர்களாகச் சொல்லப்பட்டுள்ளனர்(29). வல்லமைமிக்க வில்லைக் கொண்ட அந்த ஒப்பற்ற தேவன் {சிவன்}, அந்த ஐந்து இந்திரர்களிடமும் கருணை கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்ய அருளினான். மேலும், தெய்வீக ஸ்ரீ-ஆன (அருள் தேவதையான) {லட்சுமிதேவியான} ஒப்பற்ற அழகு கொண்ட அந்த மங்கையை மனித உலகில் அவர்களுக்குப் {அந்த ஐந்து இந்திரர்களுக்குப்} பொது மனைவியாக நியமித்தான்.(30)
அந்த ஐந்து இந்திரர்களையும் அழைத்துக் கொண்டு, அளவிடமுடியா ஆற்றல் கொண்டவனும், முடிவற்றவனும், படைக்கப்படாத ஆவியானவனும், பழையவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், வரம்புகள் இல்லாத அண்டங்களின் ஆவியுமான நாராயணனிடம் ஈசன் சென்றான்.(31) அனைத்தையும் நாராயணன் அங்கீகரித்தான். அந்த இந்திரர்கள் மனிதர்களின் உலகில் பிறந்தார்கள். பிறகு ஹரி (நாராயணன்) தனது உடலில் இருந்து கறுப்பும், வெள்ளையுமான இரு முடிகளை {மயிர்களை} எடுத்தான்.(32) அந்த இரு முடிகளும் தேவகி மற்றும் ரோஹிணி என்ற யது குலத்தின் கருவறைகளில் புகுந்தன. வெள்ளையாக இருந்த அந்த முடிகளில் ஒன்று பலதேவன் {பலராமன்} ஆனது. அந்தக் கறுப்பு முடியானது, கேசவனின் வடிவமாகக் கிருஷ்ணன் ஆனது.(33)
இமயத்தின் குகைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பழங்காலத்தின் இந்திரர்கள், பெரும் சக்தி கொண்ட பாண்டுவின் மகன்களைத் தவிர வேறு யாரும் இல்லை. பாண்டவர்களில், சவ்யசச்சின் {சம திறமையுடன் இரு கைகளினாலும் செயல்படுத்துபவன்} என்றும் அழைக்கப்படும் அர்ஜுனன், சக்ரனின் {இந்திரனின்} ஒரு பகுதியாவான்”.(34)
வியாசர் தொடர்ந்தார், “ஓ மன்னா, இப்படியாகப் பழங்காலத்திய இந்திரர்கள் பாண்டவர்களாகப் பிறந்தனர். அந்தத் தெய்வீக ஸ்ரீ-யே ஒப்பற்ற அழகு கொண்ட திரௌபதியாகப் பிறந்து, அவர்களின் பொது மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கிறாள்.(35) சூரியனையும், நிலவையும் போன்ற காந்தி கொண்டு இரண்டு மைல்கள் வரைத் தனது நறுமணத்தை வீசும் அவள், வேள்விச் சடங்கின் அறத்தால் பூமியில் பிறக்காமல் எப்படிச் சாதாரணமாகப் பிறக்க முடியும்?(36) ஓ மன்னா, எனது ஆன்மப் பார்வையைக் கொண்டு நான் உனக்கு ஒரு வரத்தை மகிழ்ச்சியாகத் தருகிறேன். அவர்களுடைய புனிதமான பழைய தெய்வீக உடல்களுடன் குந்தியின் மகன்களை இப்போது பார்” என்றார்”.(37)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இதைச் சொன்ன அறச் செயல்புரியும் அந்தப் புனிதமான பிராமணரான அந்த வியாசர், தனது ஆன்ம பலத்தால், அந்த மன்னனுக்கு தெய்வீகப் பார்வையை அளித்தார். அதனால் அந்த மன்னன் {துருபதன்} பாண்டவர்களை அவர்களது பழைய தெய்வீக உடலுடன் கண்டான்.(38) அந்த மன்னன் {துருபதன்} அவர்களைப் பழைய தெய்வீக உடலுடனும், தங்கக் கிரீடங்களுடனும், தெய்வீக மாலைகளுடனும், இந்திரனைப் போல அனைத்து ஆபரணங்களும் பூண்டு, நெருப்பையும், சூரியனையும் போன்ற நிறத்தில் அழகாகவும், இளமையாகவும், அகன்ற மார்புகளுடனும், ஐந்து முழ உயரத்திலும் இருப்பதைக் கண்டான்.(39) அவர்கள், அனைத்துச் சாதனைகளையும் தன்னகத்தே கொண்டு, தெய்வீக ஆடைகள் பூண்டு, பெரும் அழகுடனும், மாலைகளின் நறுமணத்துடனும் முக்கண் கடவுளரை (மகாதேவர்களை) {சிவன்களைப்} போல, அல்லது வசுக்களைப் போல, அல்லது ருத்திரர்களைப் போல, அல்லது ஆதித்யர்களைப் போல இருந்தனர்.(40)
பாண்டவர்களையும், குறிப்பாக அர்ஜுனனையும் பழைய இந்திரர்களாகக் கண்ட மன்னன் துருபதன் பெரும் மனநிறைவு கொண்டான். அந்தத் தெய்வீகச் சக்தி அவர்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்ட அந்த ஏகாதிபதி {துருபதன்} மிகவும் ஆச்சரியமடைந்தான்.(41) அம்மன்னன் பெரும் அழகுடன் கூடிய பெண்மணிகளில் முதன்மையான தனது மகளை நோக்கி, அவளிடம், அந்தத் தெய்வீகப் பிறவிகளுக்கு மனைவியாகப் போகும் நெருப்பைப் போன்றும், நிலவைப் போன்றும் பிரகாசமான, பெரும் அழகும், புகழும் கொண்ட அந்தத் தெய்வீக மங்கையைக் கண்டான் {கங்கைக் கரையில் அழுது கொண்டிருந்தாளே அந்த மங்கை}.(42)
அந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்த ஏகாதிபதி! சத்தியவதி மகனின் {வியாசரின்} பாதங்களைத் தொட்டு, “ஓ பெரும் முனிவரே, எதுவும் உமக்கு அதிசயமன்று” என்று சொன்னான்.(43)
அப்போது, அந்த முனிவர் மகிழ்ச்சியாகத் தொடர்ந்தார், “ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தில், ஒரு சிறப்புவாய்ந்த முனிவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகானவளாகவும், கற்புக்கரசியாகவும் இருந்தாள். ஆனால் அவள் ஒரு கணவனை அடையவில்லை.(44) எனவே, அந்தப் பெண் கடும் தவங்கள் இயற்றிச் சங்கரனை (மகாதேவனை) {சிவனை} மனநிறைவு கொள்ளச் செய்தாள். அந்தத் தெய்வமான சங்கரன், அவளது தவத்தால் மனநிறைவை அடைந்து, அவளிடம், “நீ விரும்பிய வரத்தைக் கேள்” என்றார்.(45)
இப்படிச் சொல்லப்பட்ட அந்த மங்கை, அந்தத் தன்னிகரில்லா தலைவனிடம், மறுபடியும் மறுபடியும் “அனைத்துச் சாதனைகளையும் செய்யும் கணவரை அடைய நான் விரும்புகிறேன்” என்றாள்.(46) தேவர்களின் தலைவனான சங்கரனும் அவளை மனநிறைவு கொள்ளச் செய்ய, “இனிமையான மங்கையே, நீ ஐந்து கணவர்களை அடைவாய்” என்றான்.(47) அந்தத் தேவனை மனநிறைவு கொள்ளச் செய்ய அந்த மங்கை மறுபடியும், “ஓ சங்கரா, உன்னிடம் இருந்து அனைத்து அறமும் கொண்ட ஒரு கணவரை அடையவே நான் விரும்புகிறேன்” என்றாள்.(48) அந்தத் தேவர்க்குத் தேவன், அவளிடம் பெரும் மனநிறைவு கொண்டு மறுபடியும், “ஓ மங்கையே, நீ ஐந்து முறை என்னிடம், ‘எனக்குக் கணவனைக் கொடு’ என்று கேட்டாய்(49). எனவே, ஓ இனிமையானவளே, நீ கேட்டவாறே உனக்குக் கிடைக்கும். நீ அருளப்பட்டிருப்பாயாக. இருப்பினும் இவை அனைத்தும் உனது எதிர்கால வாழ்விலேயே {அடுத்த ஜென்மத்திலேயே} கிடைக்கும்” என்றான்”.(50)
வியாசர் தொடர்ந்தார், “ஓ துருபதா, இந்தத் தெய்வீக அழகுடைய உனது மகளே அந்தக் கன்னிகையாவாள். உண்மையில், பிருஷதனின் குலத்தில் வந்த இந்தக் களங்கமற்ற கிருஷ்ணை {திரௌபதி}, ஐந்து கணவர்களுக்குப் பொது மனைவியாகும்படி முன்பே விதிக்கப்பட்டிருக்கிறாள்.(51) அந்தத் தெய்வீக ஸ்ரீ, கடும் தவங்களை இயற்றி, பாண்டவர்களுக்காகவே உனது மகளாக அந்தப் பெரும் வேள்வியில் பிறந்தாள்.(52) அந்த அழகிய தேவியே, அனைத்து தேவர்களாலும் {இந்திரர்களாலும்} சேவிக்கப்பட்டு, அவளது தனிப்பட்டச் செயல்களின் மூலமே ஐந்து கணவர்களுக்கும் மனைவியாகிறாள். இதன்காரணமாகவே சுயம்பு இவளைப் படைத்தான்” என்றார்[2]. இவை யாவற்றையும் கேட்ட மன்னன் துருபதன், “நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்வீராக” என்று சொன்னான்.(53)(கும்பகோணம் பதிப்பில் வியாசர் இதை விவரித்தபிறகு நிந்தந்து என்ற மன்னனின் மகன்களான ஸால்வேயன், சூரஸேனன், ஸ்ருதஸேனன், திந்துசாரன், அதிஸாரன் ஆகிய ஐவரும், சிபியின் மகளான பௌமாஸ்வி என்பவளாள் சுயம்வரத்தில் வரிக்கப்பட்டதையும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மகனை ஈன்றதையும், அவர்களின் வம்சத்தில் வந்தவர்களே ஸால்வேயர்கள், சூரசேனர்கள், ஸ்ருதசேனர்கள், திந்துஸாரர்கள், அதிஸாரர்கள் என்பதையும் துருபதனுக்குச் சொல்கிறார். இந்தக் கதையும் கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை)
ஒவ்வொரு நாளும் கன்னியானாள் திரௌபதி! – ஆதிபர்வம் பகுதி 200-(வைவாஹிக பர்வம் – 06)திஷ்டிரன் முதலான பாண்டவர்கள் வயதுக்குத் தக்க வரிசையில் திரௌபதியைத் திருமணம் செய்து கொண்டது..
வைசம்பாயனர் சொன்னார், “இதைக் கேட்ட துருபதன், “ஓ பெரும் முனிவரே {வியாசரே}, நீர் சொல்வதைக் கேட்காதிருந்தால், நான் முன்பு சொன்னவாறே நடந்து கொண்டிருப்பேன். இப்போது நான் அனைத்தையும் அறிந்ததால், தேவர்களால் தீர்மானிக்கப்பட்டதற்கு நான் வேறுபட்டிருக்க முடியாது. எனவே, நீர் சொன்னதைச் செய்ய நான் தீர்மானிக்கிறேன்.(1) விதியின் முடிச்சு அவிழ்க்கப்பட முடியாதது. இந்த உலகத்தில் இருக்கும் எதுவும் நமது செயல்களின் விளைவு கிடையாது {விளைவால் ஏற்பட்டவை கிடையாது}. ஒரு மணமகனை அடையும் நோக்கில் எங்களால் எது நிர்ணயிக்கப்பட்டதோ, அது இப்போது பலருக்கு {பல மணமகன்களுக்கு} ஆதரவாக முடிகிறது.(2) கிருஷ்ணை {திரௌபதி} (தனது முந்தைய பிறப்பில்) திரும்பத் திரும்ப, “எனக்குக் கணவனைக் கொடு” என்று பெரும் தேவனிடமே {சிவனிடமே} வரம் கேட்டிருக்கிறாள். இக்காரியத்தில் சரியும், தவறும் அந்தத் தேவன் மட்டுமே அறிவான்.(3) என்னைப் பொறுத்த மட்டில், சங்கரன் எதைத் தீர்மானித்தாலும், அது சரியோ, தவறோ பாவம் என்னைத் தொட முடியாது. எனவே, விதிக்கப்பட்டது போலவே இவர்கள் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களை உரிய சடங்குகளுடன் பெறட்டும்” என்றான்”.(4)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “சிறப்புமிக்க வியாசர், நீதிமானான யுதிஷ்டிரனிடம், “ஓ பாண்டுவின் மகனே, இன்று ஒரு நன்னாள் {அதிர்ஷ்டகரமான நாள்}! இன்று பூச(ம்) நட்சத்திரக்கூட்டத்திற்குள் சந்திரன் நுழைகிறான். இன்றே, உனது சகோதரர்களுக்கு முன்பு, நீ முதலில் கிருஷ்ணையின் {திரௌபதியின்} கரங்களைப் பெற்றுக் கொள்வாயாக” என்றார்.(5)
வியாசர் இப்படிச் சொன்னதும், மன்னன் யக்ஞசேனனும் {துருபதனும்}, அவனது மகனும் {திருஷ்டத்யும்னனும்} திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தனர். அந்த ஏகாதிபதி, பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைத் திருமணப் பரிசாகத் தர, தயாராக வைத்திருந்தான். அவனது மகளான கிருஷ்ணை குளித்த பிறகு, பல நகைகளாலும், முத்துக்களாலும் அவளை அலங்கரித்துக் கொண்டு வந்தான்.(6) மன்னனின் நண்பர்களும், உறவினர்களும், நாட்டின் அமைச்சர்களும், பல பிராமணர்களும், அந்நாட்டுக் குடிமக்களும் அத்திருமணத்தைக் கண்டு மகிழ அங்கே வந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தகுதிகளுக்கேற்ப இருக்கைகளில் அமர்ந்தனர்.(7) தாமரை மலர்களாலும் அந்த அரண்மனை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அல்லி மலர்கள் தூவப்பட்ட முற்றத்தில், படைகளை அழகாக வரிசையாக நிற்க வைத்து, வைரங்களும் ரத்தினங்களும் பதிக்கப்பட்ட அந்த அரண்மனை, நட்சத்திரங்களால் நிரம்பிய வானம் போல முக்கிய மனிதர்களின் கூட்டத்தால் நிறைந்திருந்தது.(8) இளமையுடன் கூடிய அந்தக் குரு குல இளவரசர்கள் {பாண்டவர்கள்}, குளித்து முடித்து, காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு, விலையுயர்ந்த ஆடை உடுத்தி, சந்தனக்குழம்பால் நறுமணமாக்கப்பட்டு, வழக்கமான அறச்சடங்குகள் செய்து,(9) நெருப்பின் பிரகாசமுள்ள தங்கள் புரோகிதர் தௌமியரை உடன் அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்குள் பெரும் காளைகள் பசுவின் கொட்டகையில் நுழைவது போல மகிழ்ச்சிகரமான இதயத்துடன் தகுந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நுழைந்தனர்.(10)
வேதங்களை நன்கு அறிந்தவரான தௌமியர், புனித நெருப்பை மூட்டி, தகுந்த உச்சரிப்புகள் கொண்ட வாழ்த்துகளுடன் {மந்திரங்களுடன்} தூய்மையாக்கப்பட்ட நெய்யை அந்தச் சுடர்விட்டெரியும் நெருப்பில் விட்டார். யுதிஷ்டிரனை அழைத்தவரும், மந்திரங்கள் அறிந்தவருமான தௌமியர், அவனைக் கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்து வைத்தார்.(11) நெருப்பை {ஏழுமுறை} வலம் வந்த மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் கரம்பற்றினர். இந்த ஒருங்கிணைப்பு முடிந்ததும், புரோகிதரான தௌமியர், போர்க்கள ரத்தினமான யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, அரண்மனையை விட்டு வெளியேறினார்.(12) அதன்பிறகு, குருகுலத்தைத் தழைக்கச்செய்பவர்களும், பெருந்தேர்வீரர்களுமான அந்த இளவரசர்கள், ஆடம்பர உடை உடுத்திக் கொண்டு, அடுத்த அடுத்த நாட்களில், அந்தப் புரோகிதரின் துணையுடன் அந்தப் பெண்களில் சிறந்தவளின் கரங்களைப் பற்றினர்.(13) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தத் தெய்வீக முனிவர் {வியாசர்} என்னிடம், இந்தத் திருமணங்களுக்குத் தொடர்புடைய, இயல்புக்குமிக்க ஓர் அற்புதமான காரியத்தைச் சொன்னார். அதாவது, கொடியிடை கொண்ட அந்தச் சிறப்புமிக்க இளவரசி, முந்தைய நாள் திருமணத்திற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் தனது கன்னித் தன்மையை மீண்டும் பெற்றாள் என்றார்.(14)
திருமணங்கள் முடிந்த பிறகு, மன்னன் துருபதன், அந்தப் பெரும் தேர் வீரர்களுக்குப் பல்வேறு அற்புதமான செல்வங்களைக் கொடுத்தான். அந்த மன்னன் {துருபதன்}, தங்கக் கடிவாளத்துடன் கூடிய நான்கு குதிரைகள் பூட்டப்பட்டவையும், தங்கக்கூடுகள் கொண்டவையுமான நூறு தேர்களை அவர்களுக்குக் கொடுத்தான்.(15) தங்கச் சிகரங்கள் கொண்ட நூறு மலைகளைப் போல நெற்றிப் பொட்டிலும், முகங்களிலும் அனைத்து நற்குறிகளும் கொண்ட நூறு யானைகளையும் கொடுத்தான். அழகான ஆடைகளுடனும், ஆபரணங்களுடனும், பூவேலை அலங்காரங்களுடனும் கூடியவர்களும், இளமையின் தொடக்கத்தில் இருந்தவர்களுமான நூறு பெண் பணியாட்களை, தெய்வீக அழகுடன் கூடிய அந்த இளவரசர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தான்.(16) அந்தச் சந்திர குலத்தின் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதி {துருபதன்}, புனித நெருப்பைச் சாட்சியாக வைத்துக் கொண்டு, இவை யாவற்றையும், இன்னும் பல பரிசுகளையும், பெரும் செல்வத்தையும், பல விலையுயர்ந்த ஆடைகளையும், பிரகாசமான ஆபரணங்களையும் கொடுத்தான்.(17) பெரும் பலம் பொருந்திய பாண்டுவின் மகன்கள், திருமணம் முடிந்து, தாங்கள் இரண்டாவது ஸ்ரீ-யைப் போல இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அடைந்து, பாஞ்சால மன்னனின் {துருபதனின்} தலைநகரில் {காம்பில்யத்தில்} பல இந்திரர்கள் இருப்பது போல, தங்கள் நாட்களை இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் கடத்தினார்கள்” {என்றார் வைசம்பாயனர்}.(18)
யுதிஷ்டிரன் பெற்ற திருமண பரிசுகள்! – ஆதிபர்வம் பகுதி 201-(வைவாஹிக பர்வம் – 07)- திரௌபதிக்கு குந்தியின் அறிவுரைகளும் ஆசீர்வாதமும்; பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அனுப்பிய பரிசுகள்…
வைசம்பாயனர் சொன்னார், “மன்னன் துருபதன், பாண்டவர்களின் சம்பந்தம் ஏற்பட்ட பிறகு, அவனது அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டான். உண்மையில் அந்த ஏகாதிபதி தேவர்களிடம் கூட அன்று முதல் அச்சமற்று இருந்தான்.(1) சிறப்புமிகுந்த துருபதனின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகள் குந்தியை அணுகி, அவளிடம் தங்கள் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களது தலையால் தரையைத் தொட்டு அவளது பாதத்தை வணங்கினர்.(2) சிவப்புப் பட்டு உடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, கை மணிக்கட்டில் இன்னும் திருமணத்திற்கான நோன்புக் கயிற்றைக் கொண்டு, தனது மாமியாரை மரியாதையுடன் வணங்கி, அவள் முன்பு அடக்கமாகக் கைக்கூப்பி நின்றாள்.(3)
பிருதை {குந்தி}, பெரும் அழகும், அனைத்து நற்குறிகளும், இனிமையான மனநிலையும், நல்ல குணமும் படைத்த தனது மருமகளிடம், தான் கொண்ட அன்பின் காரணமாக,(4) “சச்சி தனது கணவனான இந்திரனிடமும், ஸ்வாஹா விபாவசுவிடமும் {அக்னியிடமும்}, ரோஹிணி சோமனிடமும், தமயந்தி நளனிடமும்,(5) பத்தரை வைஸ்ரவணனிடமும் {குபேரனிடமும்}, அருந்ததி வசிஷ்டரிடமும், லட்சுமி நாராயணனிடமும் எப்படி இருப்பார்களோ அதே போல நீயும் உனது கணவர்களுடன் இருப்பாயாக.(6) ஓ இனியவளே, மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் கொண்டு, அனைத்தும் கொண்ட வீர மகன்களையும் நீ பெறுவாயாக. நற்பேறும், வளமையும் உனக்காகக் காத்திருக்கட்டும். பெரும் வேள்விகளில் ஈடுபடும் உனது கணவர்களுக்காக நீ எப்போதும் காத்திருக்க வேண்டும். உனது கணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பாயாக.(7)
உனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களையும், அந்நியர்களையும், பக்திமான்களையும், பெரியவர்களையும், சிறுவர்களையும் முறையாக ஆதரிப்பாயாக.(8) உனது கணவனான நீதிமான் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து குருஜாங்கலத் தலைநகருக்கும் {ஹஸ்தினாபுரத்திற்கும்}, அந்த நாட்டிற்கும் {குருஜாங்கலத்திற்கும்} ராணியாக நியமிக்கப்பட்டிருப்பாயாக.(9) ஓ மகளே, உனது கணவர்களின் பெரும்பலத்தாலும், ஆற்றலாலும் வெற்றிகொள்ளப்பட்ட மொத்த பூமியையும் ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அஸ்வமேத யாகத்தில்} பிராமணர்களுக்குக் கொடுப்பாயாக.(10) ஓ அனைத்தும் அடைந்தவளே, உயர் வகை ரத்தினங்கள் அனைத்தையும் அடைந்து நற்பேறு பெற்றவளாக, மகிழ்ச்சியுடன் நூறு வருடங்கள் வாழ்வாயாக.(11) ஓ மருமகளே, சிவப்புப் பட்டு உடுத்தியிருக்கும் உன்னைக் கண்டு நான் மகிழ்வது போல, சாதனை செய்ய மகனுக்கு நீ தாயாகும் போதும் நான் மகிழ்ச்சியடைவேன்” என்றாள்”.(12)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டு மகன்களின் திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு ஹரி (கிருஷ்ணன்} பல்வேறு தங்க ஆபரணங்களையும், முத்துக்களையும், வைடூரியங்களையும் பரிசாக அனுப்பி வைத்தான்.(13) மேலும், அந்த மாதவன் (கிருஷ்ணன்) பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடைகளையும், அழகுடன் கூடிய மென்மையான போர்வைகளையும், உயர் மதிப்புடைய விலங்குகளின் தோல்களையும், விலையுயர்ந்த பல படுக்கைகளையும், தரைவிரிப்புகளையும், வாகனங்களையும் அனுப்பி வைத்தான். நூற்றுக்கணக்கான பாத்திரங்களையும், ரத்தினங்கள் மற்றும் வைரங்களையும் அனுப்பி வைத்தான்.(14,15) மேலும், பல நாடுகளில் இருந்து வந்த அழகும், இளமையும் கொண்டு பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் பணியாட்களையும் கொடுத்தான்.(16) மத்ர நாட்டிலிருந்து, நன்கு பழக்கப்படுத்தப்பட்ட பல யானைகளையும், விலை உயர்ந்த சேணத்துடன் {குதிரை உடுப்பு}, பெரிய பற்களுடைய பல அற்புதமான குதிரைகளையும், தேர்களையும் பல வண்ணங்களில் கொடுத்தான்.(17) எல்லையற்ற ஆன்மா கொண்டவனும், மதுவைக் {மது என்ற ராட்சசன்} கொன்றவனுமான அவன் {மதுசூதனான கிருஷ்ணன்}, பசும்பொன் நாணயங்களைக் கோடிக் கோடியாகக் குவியல்களாக அனுப்பி வைத்தான்.(18) நீதிமானான யுதிஷ்டிரன் கோவிந்தனை {கிருஷ்ணனை} நிறைவு கொள்ளச் செய்ய எண்ணி, அந்தப் பரிசுகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்” {என்றார் வைசம்பாயனர்}.(19)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply