பாஞ்சாலம் செல்கையில்! – ஆதிபர்வம் பகுதி 186-(சுயம்வர பர்வம் – 01)-பாஞ்சால நாட்டிற்குச் செல்லும் வழியில் பாண்டவர்கள் பிராமணர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் சேர்ந்து செல்ல உடன்படுவதும்…
வைசம்பாயனர் சொன்னார், “அந்த ஐந்து சகோதரர்கள், அந்த மனிதப் புலிகளான ஐந்து பாண்டவர்கள், பாஞ்சால நாட்டையும், திரௌபதியையும், (அவளது திருமணத்தை ஒட்டி) அங்கு நடக்கப் போகும் விழாக்களையும் காண அந்நாட்டுக்குப் புறப்பட்டனர்.(1) எதிரிகளை ஒடுக்குபவர்களான அந்த மனிதப் புலிகள், தங்கள் தாயுடன் செல்லும்போது, வழியில் எண்ணற்ற பிராமணர்கள் தங்கள் வழியில் ஒன்றாகச் சேர்ந்து வருவதைக் கண்டனர்.(2) ஓ மன்னா {ஜனமேஜயா}, பிரம்மச்சாரிகளான அந்த பிராமணர்கள் பாண்டவர்களைக் கண்டு, “நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.(3)
அதற்கு யுதிஷ்டிரன், “பிராமணக் காளைகளே, நாங்கள் எங்கள் தாயுடன் செல்லும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதை அறிந்து கொள்வீராக. நாங்கள் ஏகச்சக்கர நகரத்தில் இருந்து வருகிறோம்” என்றான்.(4)அதற்கு அந்த பிராமணர்கள், “பாஞ்சால நாட்டிலுள்ள துருபதனின் வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அங்கே ஒரு பெரும் சுயம்வரம் நடக்கிறது. அச்சுயம்வரத்திற்காகப் பெரும் செல்வம் செலவழிக்கப்படுகிறது.(5) நாங்கள் அங்கேதான் செல்கிறோம். நாமனைவரும் ஒன்றாகச் செல்லலாம். இயல்புக்குமிக்க விழாக்கள் அங்கு (துருபதனின் வசிப்பிடத்தில்) நடைபெறும்.(6) துருபதன் என்று அழைக்கப்படும் அந்தச் சிறப்புமிகுந்த யக்ஞசேனன், வேள்விப்பீடத்தின் மத்தியில் இருந்து ஒரு மகளை எழுப்பியிருக்கிறான்.(7) தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், களங்கமற்ற தன்மைகளையும், இளமையையும், நுண்ணறிவையும் கொண்ட அவள் பேரழகியாக இருக்கிறாள். முற்றிலும் களங்கமற்ற தன்மைகள் அனைத்தையும் கொண்டவளும், முழுமையாக இரண்டு மைல்கள் தொலைவிற்கு நீலத்தாமரையின் {கருநெய்தலின்} நறுமணத்தைப் பரப்புபவளுமான அந்தக் கொடியிடை திரௌபதியானவள், வலிமையான கரங்களைக் கொண்டவனும், பேராற்றலைக் கொடையாகக் கொண்டவனும், கவசம், வாள், வில் மற்றும் கணைகளுடன் சுடர்மிக்க நெருப்பில் இருந்து பிறந்தவனும், துரோணரைக் கொல்லப் போகிறவனும், இரண்டாம் நெருப்பையே போலிருப்பவனுமான திருஷ்டத்யும்னனின் தங்கையாவாள்.(8-10)
அந்த யக்ஞசேனனின் மகள், அங்கு அழைக்கப்பட்ட இளவரசர்களிலிருந்து தனது கணவனைத் தேர்ந்தெடுப்பாள். அவளைக் காணவும், வானுலகில் நடக்கும் திருவிழாவைப் போல அங்கு நடக்கி இருக்கும் விழாக்களைக் காணவும் நாங்கள் அங்குச் செல்கிறோம்.(11) அச்சுயம்வரத்திற்குப் பல நிலங்களிலிருந்து {நாடுகளிலிருந்து} மன்னர்களும், இளவரசர்களும் வருவார்கள். அவர்களனைவரும் பெரும் வேள்விகளை நடத்தி பிராமணர்களுக்குப் பெரும் செல்வத்தைப் பரிசாக அளித்தவர்களாக, கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களாக, சிறப்பு வாய்ந்தவர்களாக, கடும் தவம் கொண்டவர்களாக, இளமையும் அழகும் கொண்டவர்களாக, பெரும் தேர் வீரர்களாக, கரங்களின் சாதனைக்குச் சொந்தக்காரர்களாகவும் இருப்பார்கள்.(12,13) அந்தக் கன்னிகையை (அவளது கரங்களை) வெல்ல விரும்பி வந்திருக்கும் ஏகாதிபதிகள், அங்கே பெரும் செல்வத்தையும், பசுக்களையும், உணவையும் இன்னும் மகிழ்ச்சியூட்டும் பல பொருட்களையும் தானமாகத் தருவார்கள். அவர்கள் கொடுப்பதைப் பெற்றுக் கொண்டும், சுயம்வரத்திற்குச் சாட்சியாக இருந்தும், விழாக்களைக் கண்டு மகிழ்ந்து, அதன்பிறகு நாம் எங்கு செல்ல நினைக்கிறோமோ அங்கு செல்லலாம்.(14,15)
அந்தச் சுயம்வரத்திற்குப் பல நாடுகளைச் சேர்ந்த நடிகர்களும், பாடகர்களும், ஆடற்கலைஞர்களும், புராணங்களையும் பழங்கதைகளையும் உரைப்பவர்களும், பெரும் விளையாட்டு வீரர்களும் வருவார்கள்.(16) இவை அனைத்தையும் கண்டு, அங்கு நமக்குத் தரப்படும் பொருட்களைப் பெற்று, எங்களுடனே நீங்களும் திரும்பி வாருங்கள்.(17) நீங்கள் அனைவரும் தேவர்களைப் போல அழகாக இருக்கிறீர்கள். ஒருவேளை, கிருஷ்ணை {திரௌபதி} உங்களைக் கண்டு, உங்களில் மேன்மையான ஒருவரை வரிக்கலாம்.(18) பல போர்களில் ஈடுபட்டு, பெரும்பலம் வாய்ந்த கரங்களுடன் அழகாக இருக்கும் இந்த உனது தம்பி {பீமன்}, (விளையாட்டுப்) போட்டிகளில் {மற்போரில்} ஈடுபட்டால், ஒருவேளை பெருஞ்செல்வம் கிடைக்கலாம்” என்றனர் {அந்தப் பிராமணர்கள்}.(19)
பிராமணர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், “பிராமணர்களே, நாங்களும் உங்களுடன் வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அக்கன்னிகையின் சுயம்வரத்தையும், அந்த அற்புதமான விழாவையும் காணலாம்” என்றான்.(20)
சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! – ஆதிபர்வம் பகுதி 187-(சுயம்வர பர்வம் – 02)பாண்டவர்கள் பாஞ்சாலம் செல்கையில் நடுவில் வியாசரைச்சந்திப்பது; பாஞ்சாலம் சென்று இரந்துண்டு வாழ்ந்து ஒரு குயவன் வீட்டில்வசிப்பது; திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பது; திரௌபதி மங்கள நீராடி சுயம்வர மண்டபத்திற்கு வருவது; குறியை அடிப்பவர்கள் திரௌபதியின் கரம் பற்றலாம் என்று திருஷ்டத்யும்னன் அறிவிப்பது..
வைசம்பாயனர் சொன்னார், “ஓ ஜனமேஜயா, பிராமணர்களால் இப்படிச் சொல்லப்பட்ட பாண்டவர்கள், மன்னன் துருபதனால் ஆளப்படும் தென்பாஞ்சாலத்தைநோக்கி முன்னேறினர்.(1) அப்படி அவர்கள் {பாண்டவர்கள்} செல்லும் வழியில் பாவங்களற்ற, சுத்தமானஆன்மாவைக் கொண்ட சிறப்பு மிகுந்த துவைபாயன முனிவரைக் {வியாசரைக்} கண்டனர்.(2) முனிவரை {வியாசரை} முறையாக வணங்கி, அவரால் {வியாசரால்} பதிலுக்கு வணங்கப்பட்ட அவர்கள், அவரது ஆணையின் பேரில் துருபதனின் வசிப்பிடத்திற்கு {அரண்மனைக்கு} முன்னேறிச் சென்றனர்.(3) அந்தப் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் வழியில் அழகான வனங்களையும், தடாகங்களையும் கண்டு அங்கே சிறிது காலம் தங்கி, மெதுவாகப் படிப்படியாக முன்னேறினச் சென்றர்.(4) கல்விக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், செயல்களில் தூய்மையானவர்களும், இனிமையானவர்களும், இன்சொல் பேசுகிறவர்களுமான பாண்டவர்கள், இறுதியாகப் பாஞ்சாலர்களின் நாட்டில் நுழைந்தனர்.(5)
அவர்கள், தலைநகரையும் {தலைநகர் காம்பில்யத்தையும்}, கோட்டையையும் கண்டபிறகு, ஒரு குயவனின் {பானை செய்பவர்} வீட்டில் வசித்தனர்.(6) அவர்கள், இரந்துண்டு வாழும் வாழ்வு முறையை நோற்று, பிராமணத் தொழிலைக் கைக்கொண்டனர். அந்த துருபதனின் தலைநகரில் {காம்பில்யத்தில்} யாரும் அந்த வீரர்களை அடையாளம் காணவில்லை.(7) யக்ஞசேனன் {துருபதன்}, தனது மகளை {திரௌபதியைப்} பாண்டுவின் மகனான கிரீடிக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுப்பதென்ற ஆசையை மனத்தில் வைத்திருந்தான். ஆனால் அதுகுறித்து அவன் {துருபதன்} யாரிடமும் பேசவில்லை.(8) ஓ ஜனமேஜயா! பாஞ்சால மன்னன் {துருபதன்}, அர்ஜுனனை மனத்தில் கொண்டு, அர்ஜுனனைத்தவிர வேறு யாராலும் நாணேற்ற முடியாத ஓர் உறுதியான வில்லை உண்டாக்கினான்.(9) மன்னன் {துருபதன்} வானத்தில் ஓர் இயந்திரத்தைச் செய்து, அதில் ஒரு குறியையும் இணைத்தான்.(10)
அப்போது துருபதன், “இந்த வில்லில் நாணேற்றி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இந்தக் கணைகளைக் கொண்டு, மேலே இந்த இயந்திரத்தில் இருக்கும் குறியை அடிப்பவனே எனது மகளை {திரௌபதியைப்} பெறுவான்” என்று சொன்னான் {துருபதன்}”.(11)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “இவ்வார்த்தைகளைச் சொல்லியே, துருபதன் அந்தச் சுயம்வரத்தை அறிவித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, இதைக்கேட்ட பிற நாடுகளின் மன்னர்கள் அவனது {துருபதனது} தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வந்தனர்.(12) அங்கே பல சிறப்பு மிகுந்த முனிவர்களும் அந்தச் சுயம்வரத்தைக் காண வந்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, துரியோதனனும், குருக்களும் கர்ணனைத் துணையாகக் கொண்டு அங்கே வந்தனர்.(13) அங்கே பல மேன்மைமிகு பிராமணர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். அங்கு வந்திருந்த ஏகாதிபதிகள் அனைவரும் சிறப்பு மிகுந்த துருபதனால் முறையாக வணங்கி வரவேற்கப்பட்டனர்.(14) சுயம்வரத்தைக் காண விரும்பிய குடிமக்கள், கடல் என ஆர்ப்பரித்து, அந்த அரைவட்ட அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மேடைகளில் அமர்ந்தனர்.(15)
அந்த ஏகாதிபதி {துருபதன்}, அந்தப் பெரிய அரங்கினுள் வடகிழக்கு வாயில் வழியாக வந்தான். பல அழகிய அறைகளுடன் இருந்த அந்த அரங்கமே துருபதன் தலைநகரத்திற்கு {காம்பில்யத்திற்கு} வடகிழக்கில், சமதளமான தரை கொண்ட மங்கலமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்டது. அந்த அரங்கத்தின் அனைத்துப் புறங்களும் உயர்ந்த சுவர்களுடன், சுற்றிலும் அகழியுடன், ஆங்காங்கே அலங்கார வளைவுகள் கொண்ட வாயில்களுடனும் இருந்தது. பலநிறத் துணிகள் ஆங்காங்கே அலங்காரமாகச் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன.(16,17) எக்காளத்தின் ஓசையும், கருப்புக் கற்றாழையின் நறுமணமும் அரங்கத்தை நிரப்பியது. ஆங்காங்கே சந்தனம்தெளிக்கப்பட்டு, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.(18) உயர்ந்த அறைகளால் சூழப்பட்ட அந்த அரங்கம் முழுவதும் வெண்மையாகக் கைலாச மலையை முட்டி நிற்கும் மேகத்தின் நிறத்தைக் கொண்டிருந்தது.(19) அந்த அரங்கத்தின் சாளரங்களில் {ஜன்னல்களில்}, தங்க இழைகளின் வலைகள் பின்னப்பட்டிருந்தன; சுவர்களில் வைரமும், விலை மதிப்பில்லாக் கம்பளங்களும், துணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதிலிருந்த அனைத்து படிக்கட்டுகளும் மலர் வளையங்களுடனும், மலர் மாலைகளுடனும், அற்புதமான கற்றாழைகளின் நறுமணத்துடன் முழுவதும் வெண்ணிறமாக ஒருகறையும் இல்லாமல் அன்னத்தின் கழுத்தைப் போல இருந்தன. அங்கே வீசிய நறுமணம் ஒரு யோஜனை (எட்டு மைல்கள்) தூரத்திற்கு நுகர முடிந்தது.(20,21)
அந்த அறைகள் ஒவ்வொன்றும் பெரும் கூட்டத்தை உள்ளே அனுமதிக்கும் வகையில் நூறு கதவுகளுடன் இருந்தன. அவை விலைமதிப்பில்லா படுக்கைகளுடனும், கம்பளங்களுடனும், பல உலோகங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, இமயத்தின் முகடுகளைப் போல இருந்தன.(22) அங்கே இருந்த ஏழு அடுக்கு வீடுகளில், துருபதனால் அழைக்கப்பட்டிருந்தவர்களும், தங்கள் மேனியில் பல்வேறு ஆபரணங்களை அணிந்திருந்தவர்களும், ஒருவரை ஒருவர் அழகில் விஞ்சியவர்களுமான பல ஏகாதிபதிகள் அங்கே தங்கினர். அந்த அரங்க மேடையில் அமர்ந்ததவர்களும், அந்த நகரத்திலும், நாட்டிலும் வசிப்பவர்களுமான குடிமக்கள், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} காண அங்கே குழுமிய மன்னர்கள், சிங்கங்கள் போன்று பெரும் சக்தி கொண்டு பெரும் ஆன்மாவுடன் அந்த அறைகளில் இருப்பதைக் கண்டனர். ஆட்சி உரிமை பெற்ற உயர்ந்தவர்களான அவர்கள் அனைவரும் கருங்கற்றாழையின் நறுமணக் குழம்பைப் பூசி மணத்துடன் இருந்தனர். பெரும் சுதந்திரத்துடன் அவர்கள் அனைவரும் பிரம்மனை வழிபட்டுத் தங்கள் நாடுகளை அனைத்து எதிரிகளிடம் இருந்தும் காத்தனர். தங்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் அவர்கள் முழு உலகத்தாலும் விரும்பப்பட்டார்கள்.(23-26)
அந்த அரைவட்ட அரங்கினுள் பாண்டவர்களும் நுழைந்தனர். அவர்கள் பிராமணர்களுடன் அமர்ந்து பாஞ்சால மன்னனின் {துருபதனின்} ஒப்பற்ற செழுமையைக் கண்டனர்.(27) அங்கே கூடியிருந்த இளவரசர்கள், பிராமணர்கள் மற்றும் பிற மனிதர்களின் கூட்டம் மிகவும் மகிழ்ச்சியுடன், நாடக நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களின் திறமைகளைக் காட்டும் நிகழ்ச்சிகளைக் கண்டு (தொடர்ச்சியாக அனைத்துவகைச் செல்வங்களையும் பெரும் பரிசாகப் பெற்றதால்) நாளுக்கு நாள் பருக்கத் {குண்டாகத்} தொடங்கினர்.(28) ஓ மன்னா {ஜனமேஜயா}, அது பல நாட்களுக்குத் தொடர்ந்தது. பதினாறாவது நாளில் நிறைந்தது. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, துருபதனின் மகள் {திரௌபதி}, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்த அரைவட்ட அரங்கினுள் நுழைந்தாள். அவள் விலைமதிப்பற்ற ஆடைகளும், அனைத்து ஆபரணங்களும்பூண்டிருந்தாள். தனது கரங்களில் ஒரு தங்கத் தட்டையும், மலர் மாலையையும் வைத்திருந்தாள்.(29,30)
அப்போது, அந்தச் சந்திர குலத்தின் புரோகிதரும், மந்திரங்கள் அறிந்தவருமான ஒரு புனிதமான பிராமணர், வேள்வி நெருப்பை மூட்டி, தூய்மையாக்கப்பட்ட நெய்யை ஊற்றினார்.(31) அப்படி நெய்யை ஊற்றிய அவர் {பிராமணர்}, அக்னியை நிறைவு கொள்ளச் செய்து, மற்ற பிராமணர்களை மங்கலச் சூத்திரங்களை {மந்திரங்களை} உச்சரிக்க வைத்துச் சுற்றிலும் இசைக்கப்பட்ட இசை வாத்தியங்களை அமைத்தார்.(32) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அந்த அரங்கமே அசைவற்று அமைதியானது. மேகத்தைப் போன்றோ, பேரிகையைப் போன்ற ஆழ்ந்த குரலுடைய திருஷ்டத்யும்னன், தனது தங்கையின் {திரௌபதியின்} கரம் பற்றி அந்தக் கூட்டத்திற்கு நடுவில் நின்றான். அப்படி நின்று ஓங்கிய குரலில், மேகத்தின் முழக்கத்தைப் போல, அழகானவார்த்தைகளில் சிறந்த முறையில் பேசினான்.(33,34)
அவன் {திருஷ்டத்யும்னன்}, “கூடியிருக்கும் மன்னர்களே, கேட்பீர்களாக. இதுதான் வில், இதுதான் குறி, இவைதாம் கணைகள். கூரியவையான இந்த ஐந்து கணைகளால், அதோ அந்த இயந்திரத்தில் இருக்கும் துளையின் வழியாக, அதற்கு அப்பால் இருக்கும் குறியை நீங்கள் அடிக்க வேண்டும்.(35) உண்மையாகச் சொல்கிறேன்; நல்ல குலத்தில் பிறந்தவரும், அழகுடன் கூடியவரும் பலம் கொண்டவருமான எவரும், இன்று இந்த அருஞ்செயலைச் சாதித்து, எனது தங்கை கிருஷ்ணையை {திரௌபதியை} தனது மனைவியாக அடையலாம்” என்றான் {திருஷ்டத்யும்னன்}.(36) அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகளிடம் இப்படிச் சொன்ன அந்தத் துருபதனின் மகன் {திருஷ்டத்யும்னன்}, தனது தங்கையிடம் {திரௌபதியிடம்}, அங்கே கூடியிருந்த பூமியின் {நாடுகளின்} தலைவர்களின் பெயர், குலம் மற்றும் சாதனைகளைச் சொல்லத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(37)
சுயம்வரத்திற்கு வந்த மன்னர்கள் யார்? – ஆதிபர்வம் பகுதி 188-(சுயம்வர பர்வம் – 03)சுயம்வரத்திற்கு வந்த மன்னர்களின் பெயர்களை திரௌபதிக்கு சொன்ன திருஷ்டத்யும்னன்–
திருஷ்டத்யும்னன் {திரௌபதியிடம்} சொன்னான், “துரியோதனன், துர்விஷகன், துர்முகன், துஷ்பிரதர்ஷனன், விவிம்சதி, விகர்ணன், ஸஹன், துச்சாசனன்,(1) யுயுத்சு, வாயுவேகன், பீமவேகரவன், உக்கிராயுதன், பலாகி, கனகாயு, விரோசனன்,(2) சுகுந்தலன், சித்ரசேனன், சுவர்ச்சஸ், கனகத்வஜன், நந்தகன், பாஹுசலி, துகுண்டன், விகடன் ஆகிய இவர்களும்,(3) ஓ! தங்கையே {திரௌபதியே}, மேலும் கர்ணனுடன் கூடிய திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்கள் பலரும் உனது கரங்களுக்காக இங்கே வந்திருக்கின்றனர்.(4)
க்ஷத்திரியர்களில் காளையான கணக்கிலடங்கா மற்றச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதிகளும் உனக்காக வந்திருக்கின்றனர். சகுனி, சௌபலன், விருஷகன், பிருஹத்பலன்(5) ஆகிய காந்தார மன்னரின் மகன்களும் வந்திருக்கிறார்கள். ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவர்களான சிறப்பு மிகுந்த அஸ்வத்தாமன் மற்றும் போஜன் ஆகியோர்(6) தங்களை நன்கு அலங்கரித்துக் கொண்டு இங்கு வந்திருக்கின்றனர்.
பிருஹந்தன், மணிமான், தண்டதாரன்,(7) சகதேவன், ஜயத்சேனன், மேகசந்தி ஆகியோரும், சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய தனது இரு மகன்களுடன் விராடனும்,(8) வர்த்தக்ஷேமி {விருத்தக்ஷேமன்}, சுசர்மன்[1], சேனாபிந்து ஆகியோரும், சுநாமன் மற்றும் சுவர்ச்சஸ் ஆகிய தனது இரு மகன்களுடன் கூடிய சுகேதுவும்,(9) (திரிகர்த்த நாட்டரசன். சம்சப்தகர்களின் தலைவன். குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனன் தனது பெரும்பங்கு நேரத்தை சம்சப்தகர்களை அழிப்பதிலேயே செலவிட்டான். கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் இவன், “விருத்தக்ஷேமன் புத்ரனான சுசர்மன்” என்று குறிப்பிடப்படுகிறான்.)சுசித்ரன், சுகுமாரன், விருகன், சத்யத்ருதி, சூர்யத்வஜன், ரோசமானன், நீலன், சித்ராயுதன்,(10) அம்சுமான், சேகிதானன், பெரும் பலம் வாய்ந்த ஸ்ரேணிமான், சமுத்ரசேனனின் பெரும் பலம் பொருந்திய மகன் சந்திரசேனன்,(11) ஜராசந்தன் {ஜலசந்தன்}[2], தந்தையும் மகனுமான விதண்டனும் தண்டனும், பௌண்டரகவாசுதேவன், பெரும் சக்தி வாய்ந்த பகதத்தன் ஆகியோரும்,(12)-(இது ஜலசந்தன்; மகதமன்னன் ஜராசந்தன் அல்ல. ஜராசந்தன் இதே பகுதியில் பின்னர் குறிப்பிடப்படுகிறான். கும்பகோணம் பதிப்பு, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும் இங்கே ஜலசந்தன் என்றே இருக்கிறது.)
கலிங்கன், தாம்ரலிப்தன், பத்தனையின் மன்னன் {பத்தனாதிபதி} ஆகியோரும், வீரனான ருக்மாங்கதன் என்ற தனது மகனுடன் வந்திருப்பவனும், பெரும் தேர்வீரனுமான மத்ர மன்னன் சல்லியன், ருக்மரதன் ஆகியோரும், பெரும் தேர் வீரர்களான பூரி, பூரிஸ்ரவஸ் மற்றும் சலன் என்ற தனது மகன்களுடன் குரு குலத்தோனான சோமதத்தனும், சுதக்ஷேனன், பூரு குலத்தைச் சேர்ந்த காம்போஜன், பிருஹத்பலன், {திருடதன்வா},(12-15) சுஷேணன், உசீநரனின் மகனான சிபி, காரூஷ மன்னன் பட்சரணிஹந்தன்[3] ஆகியோரும்,(16) (கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில், “காம்போஜ தேசத்தரசனாகிய ஸுதக்ஷிணன், பூருவம்சத்தவனான த்ருடதன்வா, ப்ருஹத்பலன், ஸுஷேணன், உசீநர புத்திரனான சிபி, திருடர்களை ஒழிப்பவனாகிய காருஷ தேசத்தரசன்” என்றிருக்கிறது.)சங்கர்ஷணன் (பலதேவன்{பலராமன்}), வாசுதேவன் (கிருஷ்ணன்), ருக்மிணியின் பலம் பொருந்திய மகன் சாம்பன், கதனோடு கூடிய பிரத்யும்னனின் மகன் சாருதேஷ்ணன்,(17) அக்ரூரன், சாத்யகி, உயர் ஆன்ம உத்தவர், ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், பிருது, விப்ருது,(18) விதூரதன், கங்கன், சங்குவுடன் கூடிய கவேஷணன், ஆசாவஹன், அனிருத்தன், சமீகன், சாரிமேஜயன் ஆகியோரும்,(19) வீரர்களான வாதாபி {வாதபதி}, ஜில்லி, பிண்டாரகன், பலம்வாய்ந்த உசீநரன் ஆகிய விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தோரும்,(20)பகீரதன், பிருஹத்க்ஷத்ரன், சிந்துவின் மகனான ஜெயத்ரதன், பிருஹத்ரதன், பாஹ்லீகன், பலம்பொருந்திய தேர் வீரனான ஸ்ரூதாயு,(21) உலூகன்[4], ( இவன் சகுனியின் மகன் என்ற குறிப்பு பீஷ்ம பர்வம் பகுதி 72ல் வருகிறது.)கைதவன், சித்ராங்கதன், சுபாங்கதன், மிகப் புத்திசாலியான வத்ஸராஜன், கோசல மன்னன்,(22) சிசுபாலன் மற்றும் பலம்பொருந்திய ஜராசந்தன்[5] ஆகியோரும், (மகத மன்னன் ஜராசந்தன்)மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும் மன்னர்கள் பலரும்,(23) உலகம் முழுவதும் கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களும், ஓ அருளப்பட்டவளே, உனக்காக வந்திருக்கிறார்கள். ஆற்றலைக் கொண்டவர்களான இவர்கள் அந்தக் குறியை அடிக்கப் போகிறார்கள். அந்தக் குறியை இவர்களில் எவர் அடிக்கிறாரோ {அடிக்கிறார்களோ} அவரை {அவர்களில் ஒருவரை} நீ உனது கணவராகத் தேர்ந்தெடுக்கலாம்” என்று சொன்னான் {திருஷ்டத்யும்னன்}.(24)-
காட்சியில் வந்த நாயகன் {கிருஷ்ணன்}! – ஆதிபர்வம் பகுதி 189-(சுயம்வர பர்வம் – 04)-பாண்டவர்கள், பிராமணர்களுக்கு மத்தியில் இருப்பதை அறிந்த கிருஷ்ணன், பலராமருக்கு அதைச் சுட்டிக் காட்டியது; வில்லைப் பார்த்து சில அரசர்களின் ஆசை ஒழிந்தது; பல அரசர்கள் வில்லில் நாணேற்ற முடியாமல் பங்கமடைந்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்ற எழுந்தது…
வைசம்பாயனர் சொன்னார், “பிறகு காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களான அந்த இளமையான இளவரசர்கள், ஒருவயொருவர் விஞ்சும் வகையில் தங்களை, ஆயுதச் சாதனைச் செய்தவர்களாகவும், பெரும் பலத்தைக் கொடையாகக் கொண்டிருப்பவர்களாகவும் நினைத்துக் கொண்டு, தங்கள் ஆயுதங்கள் பளபளக்க எழுந்தனர்.(1) அவர்கள் தங்கள் அழகிலும், ஆற்றலிலும், குலவழியிலும் {பிறப்பிலும்}, அறிவிலும், செல்வத்திலும், இளமையிலும் செருக்கு கொண்டவர்களாக, இமயத்தின் மதம் பிடித்த யானைகளைப் போல இருந்தனர். ஒருவரையொருவர் பொறாமையுடன் பார்த்துக்கொண்டு, காமதேவனின் வசப்பட்டு, “கிருஷ்ணை {திரௌபதி} எனதே” என்று சொல்லிக்கொண்டு தங்கள் அரச ஆசனங்களில் இருந்து திடீரென எழுந்தனர்.(2,3) க்ஷத்திரியர்கள் ஒவ்வொருவரும் துருபதனின் மகளை {திரௌபதியை} வெல்லும் விருப்பத்தோடு, மலையரசனின் {இமவானின்} மகளான உமையைச் சூழ்ந்து நிற்கும் தேவர்கள் போல அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர்.(4) மலர்களால் ஆன வில்லைக் கொண்டிருக்கும் தேவனின் {மன்மதனின்} கணைகளால் தாக்கப்பட்டு, கிருஷ்ணையின் {திரௌபதியின்} நினைவால் இதயத்தைத் தொலைத்த அந்த அரங்கத்திலிருந்த இளவரசர்கள், அந்தப் பாஞ்சால மங்கையை {திரௌபதியை} வெல்வதற்காகத் தங்கள் சிறந்த நண்பர்களைக் கூடப் பொறாமையுடன் கண்டனர்.(5)
ருத்ரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள், ஸ்வாதாக்கள் {சத்தியஸ்கள்}, மருத்துக்கள் கூடி வர; குபேரனும், யமனும் முன்னணியில் நடக்க, தேவர்கள் தங்கள் தேர்களில் அந்த இடத்திற்கு வந்தனர்.(6) தைத்தியர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், தெய்வீக முனிவர்கள், குஹ்யர்கள், சாரணர்கள், விஸ்வாவசு, நாரதர், பர்வதர், அப்சரஸ்களுடன் கூடிய முக்கியக் கந்தர்வர்களும் அங்கே வந்தனர்.(7)
ஹலாயுதன் (பலதேவன் {பலராமன்}), ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மற்றும் பிற விருஷ்ணி குலத் {யாதவக் குலத்} தலைவர்கள், அந்தகர்கள் மற்றும் கிருஷ்ணனின் தலைமையை ஏற்ற மற்ற யாதவக் குடிகளும் அந்தக் காட்சியைக் கண்டு அங்கே நின்றிருந்தனர்.(8) யதுகுல வீரர்களில் முதன்மையானவனான கிருஷ்ணன், தாமரைகள் நிறைந்த தடாகங்களை நோக்கும் வலிமைமிக்க யானைகளைப் போலவோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பைப் போலவோ திரௌபதியை நோக்கி ஈர்க்கப்பட்ட மதங்கொண்ட யானைகளான அந்த (பாண்டவர்கள்) ஐவரையும் கண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(9) பிறகு அவன், ராமனிடம் {பலராமனிடம்}, “அது யுதிஷ்டிரர், அது பீமர், அது ஜிஷ்ணு (அர்ஜுனன்); அஃது அந்த இரட்டையர்கள் {நகுலனும், சகாதேவனும்}” என்று சொன்னான். ராமன் {பலராமன்} மெதுவாக அவர்கள் ஒவ்வொவரையும் ஆய்ந்து, மனநிறைவான கண்ணோட்டத்துடன் கிருஷ்ணனைக் கண்டான்.(10)
பிற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், கோபத்தில் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு, கண்களும், இதயங்களும், நினைவுகளும் கிருஷ்ணையின் {திரௌபதியின்} மேல் நிலைத்திருக்க, தங்கள் கண்களை அகல விரித்துத் திரௌபதியை மட்டுமே பார்த்துக் கொண்டு, அங்கிருந்த பாண்டவர்களைக் கவனியாதிருந்தனர்.(11) வலிய கரங்களைக் கொண்டவர்களான பிருதையின் மகன்களும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன்}, அந்தச் சிறப்பு மிகுந்த வீர இரட்டையர்களும் {நகுலன், சகாதேவனும்} திரௌபதியைக் கண்டு, காமனின் கணையால் தைக்கப்பட்டிருந்தனர்.(12) தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், சுபர்ணர்கள், நாகர்கள், அசுரர்கள், சித்தர்கள் கூடியிருக்கத் தெய்வீக மலர்கள் தூவி, தெய்வீக நறுமணம் வீச, துந்துபிகளின் ஓலியும், கணக்கற்ற மனிதக் குரல்களும் ஒலிக்கப் புல்லாங்குழலின் அமைதியான இசை எதிரொலிக்க, வீணை மற்றும் சிறு முரசின் இசை அந்தச் சுற்றுவட்டாரத்தையே நிரப்ப அங்கே தேவர்களின் தேர்கள் உள்ளே நுழைவதற்கு இடமில்லாமல் இருந்தது.(13,14)
கர்ணன், துரியோதனன், சால்வன், சல்லியன், அஸ்வத்தாமன், கிராதன், சுனிதன், வக்ரன், கலிங்க மன்னன், பங்கன், பாண்டியன் {பாண்டிய மன்னன்}, பௌண்டரன், விதேக ஆட்சியாளன், யவனர்கள் தலைவன், மற்றும் பிற மன்னர்களின் மகன்களும், பேரன்களும், தாமரைக் கண்களைக் கொண்டவர்களும், அரசுரிமை பெற்றவர்களுமான அந்த இளவரசர்கள், ஒருவர் பின் ஒருவராக, அந்த ஒப்பற்ற அழகுடைய கன்னிகையை அடையத் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தத்தொடங்கினர்.(15,16) மகுடங்களாலும், மாலைகளாலும், கை வளைகளாலும், பிற ஆபரணங்களாலும், அலங்கரிக்கப்பட்டுப் பெரும் பலத்துடனும், பெரும் ஆற்றலுடனும் இருந்த அந்த இளவரசர்கள், தங்கள் பலமும், சக்தியும் வெடித்துச் சிதற முயற்சித்தாலும், அந்த இயல்புக்குமீறிய உறுதியுன் கூடிய வில்லுக்கு கற்பனையாலும் நாணேற்ற முடியவில்லை.(17) அந்த மன்னர்களில் சிலர், தங்கள் பலம், கல்வி, திறன், சக்தி ஆகியவற்றை பயன்ப்படுத்தித் தங்கள் உதடுகள் வீங்க அந்த வில்லுக்கு நாணேற்ற முயன்றனர். ஆனால், அப்படிச் செய்த அவர்கள் தரையில் தூக்கி வீசப்பட்டுச் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தனர்.(18) தங்கள் சக்தி வீணானதால், தங்கள் மகுடங்களும், மாலைகளும் நழுவப் பெரு மூச்சு வாங்கியபடியே, இனியும் தங்களால் அந்த அழகான கன்னிகையை வெல்ல முடியாது என்று அமைதியடைந்தனர்.(19) அந்தக் கடினமான வில்லால் தூக்கி வீசப்பட்டு, மாலைகளும், கை வளையங்களும் கலைந்து அவர்கள் பெரும் துயர் கொண்டனர். அங்கே கூடியிருந்த ஏகாதிபதிகள் கிருஷ்ணையை {திரௌபதியை} அடையும் நம்பிக்கை இல்லாமல், துக்கத்துடன் இருந்தனர்.(20)
வில் தரிக்கும் அனைவரிலும் முதன்மையானவனான கர்ணன், அந்த ஏகாதிபதிகளின் துயரைக் கண்டு, அந்த வில்லிருக்கும் இடத்திற்குச் சென்றான். அவ்வில்லை விரைவாகத் தூக்கி உயர்த்தி, அதற்கு நாணேற்றி, அந்த நாண் கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்.(21) சூத இனத்தைச் சேர்ந்தவனும், சூரியனின் மகனுமான கர்ணன், நெருப்பையோ, சோமனையோ, சூரியனையோ போல, இலக்கை {குறியை} அடிக்கத் தீர்மானித்ததைக் கண்ட வில்லாளிகளில் முதன்மையான அந்தப் பாண்டுவின் மகன்கள், அந்தக் குறி ஏற்கனவே அடிக்கப்பட்டு, தரையில் வீழ்த்தப்பட்டுவிட்டதாக் கருதினர்.(22) ஆனால், கர்ணனைக் கண்ட திரௌபதி, “ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்” என்று உரக்கச் சொன்னாள். அப்போது, கர்ணன், எரிச்சலுடன் சிரித்து, சூரியன் மீது தன் பார்வையைச் செலுத்தி, ஏற்கனவே வட்டமாக வளைக்கப்பட்டிருந்த அந்த வில்லை வீசியெறிந்தான்[1].(23)
(கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கர்ணனின் நாணேற்றும் முயற்சியும், திரௌபதி அவனை மறுத்த குறிப்பும் மேற்கண்டவாறே இருக்கின்றன. ஆனால் கும்பகோணம் பதிப்பிலோ, மிக வித்தியாசமாக {நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை}, வில்லில் நாணேற்றுவதில் கர்ணனின் முயற்சி குறித்து பின்வருமாறு இருக்கிறது: “ஸூர்யபுத்திரனும், ஸூதபுத்திரனும், ஸ்ரேஷ்டனுமான கர்ணன், வில்லினிடம் வந்து அதைத் தூக்கினான். அவனாலும் ஏறிடப்பட்ட அந்த வில் மயிரிழையளவில் திரும்பியடித்தது {கர்ணனை அந்த வில் தூக்கியெறிகிறது}. மூன்று லோகங்களையும் ஜயிக்கத்தக்கவனும், பலத்தினால் மூன்று லோகங்களிலும் பெயர் பெற்றவனுமான அந்தக் கர்ணனும் அந்த வில்லினால் தோல்வியடைந்தானென்றதனால், எல்லோரும் அந்த வில்லினிடம் பயமுற்றனர். கர்ணனும் அந்த வில்லினால் இவ்வாறு தோற்கச் செய்யப்பட்டுப் போகவே, ராஜஸ்ரேஷ்டர்கள் தாமரை மலர் போன்ற முகங்கள் கவிழ்ந்து கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. கர்ணன் தோல்வியுற்றதைப் பார்த்து, உலகத்தில் வீரர்களான ராஜஸ்ரேஷ்டர்கள் வில்லெடுப்பதிலும், திரௌபதியை அடைவதிலும் ஆசையற்றவராயினர்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இன்னும் ஆச்சரியமாக, கர்ணன் நாண்பூட்ட முயற்சிப்பதோ, திரௌபதி அவனை நிராகரிப்பதோ சொல்லப்படவே இல்லை. இதற்குப் பிறகு, சிசுபாலன், ஜராசந்தன், சல்லியன் ஆகியோர் நாண்பூட்ட முயற்சி செய்து தோல்வியுறுவதும் சொல்லப்படவில்லை. பொதுவாக மன்னர்கள் அனைவரும் தோல்வியுற்றனர் என்றே சொல்லப்பட்டுள்ளது. Sacred texts வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சம்ஸ்க்ருத மஹாபாரத மூலத்தைக் கண்டால், http://sacred-texts.com/hin/mbs/mbs01178.htm என்ற சுட்டியில் வில்லில் நாணேற்றி இலக்கை அடிக்கும் போட்டி விவரிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் கர்ணனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றே அனுமானிக்கிறேன். ஆனால், அடுத்த பகுதியில் (http://sacred-texts.com/hin/mbs/mbs01179.htm) yat karṇa śalya pramukhaiḥ pārthivair lokaviśrutaiḥ nānṛtaṃ balavadbhir hi dhanurvedā parāyaṇaiḥ tat kathaṃ tv akṛtāstreṇa prāṇato durbalīyasā baṭu mātreṇa śakyaṃ hi sajyaṃ kartuṃ dhanur dvijāḥ avahāsyā bhaviṣyanti brāhmaṇāḥ sarvarājasu karmaṇy asminn asaṃsiddhe cāpalād aparīkṣiteஎன்ற இந்த வரிகளை பிபேக்திப்ராயின் மொழிபெயர்ப்பில் கண்டால் “உலகப்புகழ் பெற்றவர்களும், பெரும் பலம் கொண்டவர்களும், தனுர்வேதத்தை நன்கறிந்த க்ஷத்திரியர்களான கர்ணன் மற்றும் சல்லியனைப் போன்றோராலேயே இந்த வில்லுக்கு நாணேற்ற முடியவில்லையென்றால் ஆயுதங்களில் ஞானமில்லாத பலவீனனான இந்தப் பிராமணனால் எவ்வாறு வெல்ல முடியும்?” என்று சொல்லப்படுவதாகத் தெரிகிறது.)
பிறகு பல க்ஷத்திரியர்களும் அந்தச் சாதனையைக் கைவிட்ட பிறகு, யமனைப் போன்று வலிமைமிக்கவனும், சிறப்புமிக்கவனும், தீர்மானத்துடன் கூடியவனும், தமகோஷனின் மகனுமான சிசுபாலன், அந்த வில்லுக்கு நாணேற்ற முயற்சித்து, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்.(24,25) பெரும் பலமும், சக்தியும் கொண்ட மன்னன் ஜராசந்தன், அந்த வில்லை அணுகி அசைவற்ற மலையைப் போன்ற உறுதியுடன் அங்கே சிறிது நேரம் நின்றான்.(26) அவனும் அந்த வில்லால் தூக்கியெறியப்பட்டு, முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான். அப்படி விழுந்த அவன், விரைவாக எழுந்து அந்த அரங்கத்தை விட்டு வெளியேறித் தனது நாட்டுக்குப் புறப்பட்டான்[2].(27) (கங்குலியில் ஜராசந்தன் புறப்பட்டான் என்று முடிந்தாலும், கும்பகோணம் பதிப்பில், “பிறகு, “இந்த உயர்ந்த வில்லை இப்போது எந்த அரசன்தான் நாணேறிடுவான்” என்று மனத்தில் நிச்சயஞ்செய்து கொண்டு மறுபடியும் நின்றான். அவனுக்குப் பிறகு துரியோதனராஜன் எழுந்தான்” என்றிருக்கிறது.)பிறகு, பெரும் வீரனும், பெரும் பலத்தைக் கொண்டவனுமான மத்ர மன்னன் சல்லியன், அந்த வில்லுக்கு நாண்பூட்டும் முயற்சியில் முழங்கால் மடிந்து தரையில் விழுந்தான்[3].(28)(கும்பகோணம் பதிப்பில், இங்கே சிசுபாலன் வில்லை வளைக்க முற்பட்டு, அதற்கு நாண்பூட்ட உளுந்தளவு மிச்சமிருக்கையில் முழங்கால் மடிந்து கீழே விழுந்தது, மலைபோன்ற அரசன் ஜராசந்தன் நாண்பொருத்தக் கடுகளவு இருந்தபோது, அந்த வில் திருப்பியடித்தது, சல்லியனும் திரும்பியடிக்கப்பட்டது, துரியோதனன் அந்த வில்லை எடுத்தது; ஏறிடப்பட்ட அந்த வில் இன்னும் எள்ளளவிருக்கையில் திருப்பியடித்து அவன் அண்ணாந்து விழுந்தது ஆகியவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக துரியோதனனின் முயற்சியைச் சொல்லுமிடத்தில், “அகங்காரமுள்ளவனும், அஸ்திரங்களில் நிச்சயமான ஞானமுள்ளவனும், ராஜலக்ஷணங்களெல்லாம் பொருந்தினவனும், மஹாபலசாலியும், சூரனும், திருதராஷ்டிர புத்திரனுமான துரியோதனராஜன் அங்கே ஸஹோதரர்களின் நடுவில் விரைவாக எழுந்தான்; திரௌபதியைக் கண்டு களிப்புற்று வில்லினருகில் வந்தான். அவன் வில்லை எடுத்துக் கொண்ட பிறகு, வில்லைத் தரித்த இந்திரனைப் போல் விளங்கினான். அவன் தனுஸை நாணேறிடத் தொடங்கினான். ஏறிடப்பட்ட அந்தவில் இன்னும் எள்ளளவிருக்கையில் திரும்பியடித்தது. அப்போது, துரியோதனராஜன் கைவிற்பிடியை விட்டதனால் வன்முயுள்ள அந்த வில்லினால் அடிக்கப்பட்டு அண்ணாந்து விழுந்தான். வில்லினால் அடிக்கப்பட்ட அந்த அரசன் வெட்கத்துடன் சென்றான்” என்றிருக்கிறது.)இறுதியாக, உயர்ந்த மதிப்பிற்குரிய மக்கள் கூடியிருந்த அந்த சபையில், ஏகாதிபதிகள் அனைவரும் ஏளனப் பேச்சுக்கு உட்பட்ட போது, வீரர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான ஜிஷ்ணு {அர்ஜுனன்}, அந்த வில்லுக்கு நாணேற்ற விரும்பி, நாண்கயிற்றில் கணைகளைப் பொருத்தினான்” {என்றார் வைசம்பாயனர்}.(29)
குறியை அடித்த அர்ஜுனன்! – ஆதிபர்வம் பகுதி 190-(சுயம்வர பர்வம் – 05)-வில்லில் நாண் பொருத்த அர்ஜுனன் எழுந்தது பற்றி பிராமணர்கள் விவாதித்ததும்; அர்ஜுனன் வில்லில் நாணேற்றி குறியை அடித்ததும்; திரௌபதி அர்ஜுனனுக்கு மாலையிட்டதும்…
வைசம்பாயனர் தொடர்ந்தார், “ஏகாதிபதிகள் அனைவரும் நாணேற்றுவதைக் கைவிட்டதும், அந்தச் சபையில் பிராமணர்கள் கூட்டமாக அமர்ந்திருந்த இடத்திலிருந்து உயர் ஆன்ம ஜிஷ்ணு {அர்ஜுனன்} எழுந்தான்.(1) இந்திரனின் கொடி போன்ற நிறத்தைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} வில்லை நோக்கி முன்னேறுவதைக் கண்ட முக்கியமான பிராமணர்கள், தங்கள் மான் தோல்களை உயர்த்தி ஆட்டியபடி, சத்தமாக ஆர்ப்பரித்தனர்.(2) சிலர் இதை விரும்பவில்லை எனினும், வேறு சிலர் இதை மிகவும் விரும்பினார்கள்.
புத்திசாலித்தனமும், முன்யோசனையும் கொண்ட இன்னும் சிலர், ஒருவருக்கொருவர்,(3) “பிராமணர்களே, வலிமைகொண்டவர்களும், ஆயுத அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களுமான சல்லியன் மற்றும் பிறரைப் போன்ற கொண்டாடப்படும் க்ஷத்திரியர்களாலேயே அந்த வில்லில் நாணேற்ற முடியவில்லையென்றால், ஆயுதப் பயிற்சியில்லாதவனும், பலவீனனும், சிறுவனுமான ஒரு பிராமணனால் எவ்வாறு முடியும்?(4,5) உறுதியற்ற குழந்தைத்தனமான ஊக்கத்தால் இன்னும் முயற்சிக்கப்படாத இப்பணியில் ஈடுபடும் இவன் வெற்றியடையவில்லையென்றால், இங்கே கூடியிருக்கும் ஏகாதிபதிகளின் கண்களுக்கு மொத்த பிராமணர்களும் ஏளனமாகக் காட்சியளிப்போம்.(6) எனவே, குழந்தைத்தனமான துணிவினாலோ, உறுதியற்ற நிலையாலோ, வெற்றுச் செருக்காலோ வில்லில் நாணேற்ற இந்தப் பிராமணன் செல்லாதவாறு இவனை நாம் தடுப்போமாக” என்றனர்.(7)
அதற்கு மற்றவர்கள், “நாம் கேலிப் பொருளாக்கப்படவும் மாட்டோம், எவரிடமும் அவமதிப்பையும் அடையமாட்டோம், அரசுகளின் வெறுப்புக்கும் ஆளாகமாட்டோம்” என்றனர்.(8)
வேறு சிலர், “ஒரு வலிமைமிக்க யானையின் துதிக்கையைப் போலத் தெரிபவனும், நன்றாகக் கட்டமைக்கப்பட்ட தோள்கள், கரங்கள், தொடைகள் ஆகியவற்றுடன் கூடியவனும், பொறுமையில் இமயத்தைப் போலத் தெரிபவனும், சிங்கத்தைப் போன்ற நடையைக் கொண்டவனும், மதங்கொண்ட யானையின் ஆற்றலுடன் காணப்படுபவனும், தீர்மானத்துடன் கூடியவனுமான இந்த அழகிய இளைஞன், இந்த அருஞ்செயலை நிறைவேற்றக் கூடும்.(9,10) அவனிடம் பலமும் உறுதியும் காணப்படுகின்றன. அவனுக்கு இவையில்லையென்றால், தானாக இக்காரியத்திற்குச் செல்லமாட்டான். மேலும், அழிவை அடையக்கூடிய மனிதர்களால் முடியாததைப் பிராமணர்களால் சாதிக்க முடியாது எனச் சொல்ல மூவுலகங்களிலும் எதுவும் இல்லை.(11)
உணவைத் துறந்து, வெறும் காற்றையோ அல்லது வெறும் பழங்களையோ உண்டு, தங்கள் தவத்தைச் செய்து, இளைத்துப் போய்ப் பலவீனமாக இருக்கும் பிராமணர்கள், தங்கள் சக்தியைப் பொருத்தமட்டில் மிகப் பலவான்களே ஆவர். ஒரு பிராமணன் செய்யும் செயலை இது சரி, இது தவறு என்றும், இந்தப் பெரும் காரியத்தை இவனால் செய்ய முடியாது என்றும், இஃது அருளுடையது, இஃது அருளற்றது என்றும் ஒருபோதும் குறைத்து மதிக்கக் கூடாது. ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமர்}, போரில் அனைத்து க்ஷத்திரியர்களையும் தோல்வியுறச் செய்திருக்கிறார்.(12-14) அகத்தியர் தனது பிரம்மசக்தியின் மூலம் அடியற்ற கடலை முழுவதுமாகக் குடித்திருக்கிறார். எனவே, ‘இந்த இளைஞன் அந்த வில்லை வளைத்து, எளிதாக நாண் ஏற்றட்டும்’ என்று சொல்வீராக” என்றனர். (அதற்குப் பலர்), “அப்படியே ஆகட்டும்” என்றனர். பிறகும் அந்த பிராமணர்கள் இதையும், இன்னும் பிற வார்த்தைகளையும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்தனர்.(15,16)
பிறகு, அர்ஜுனன் அந்த வில்லை அணுகி, அந்த இடத்தில் ஒரு மலையைப் போல நின்றான். அந்த வில்லை வலம் வந்து, வரங்களைக் கொடுப்பவனான ஈசானனை வணங்கி, மனத்தில் கிருஷ்ணனையும் நினைத்துக் கொண்டு வில்லைக் கையிலெடுத்தான்.(17,18) ஆயுதங்களின் அறிவியலிலும், பயிற்சியிலும் சாதித்தவர்களான, ருக்மன், சுநீதன், வக்ரன், ராதையின் மகன் {கர்ணன்},[1] துரியோதனன், சல்லியன் மற்றும் இன்னும் பிற மன்னர்கள், பெருமுயற்சி செய்தும் நாணேற்ற முடியாத அந்த வில்லில், இந்திரனின் மகனும், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமையில் இந்திரனின் தம்பியை {விஷ்ணுவைப்} போன்றவனுமான அந்த அர்ஜுனன், கண் இமைப்பதற்குள் நாணேற்றினான்.(19,20) அங்கே இருந்த ஐந்து கணைகளையும் எடுத்துக் குறியை அடித்து, மேலே பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் துளை வழியாக அக்குறியைத் தரையில் விழச் செய்தான்.(21)(வில்லில் நாணேற்ற முயன்று தோல்வியுற்றோர் பட்டியலில் கர்ணனும் இருப்பது கவனத்திற்குரியது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் 19ம் ஸ்லோகத்தில் கர்ணன் நாணேற்ற முடியாமல் தோல்வியுற்றோர் பட்டியலில் இருக்கிறான்.)
அப்போது ஆகாயத்தில் பேரராவராம் எழுந்தது, அந்த அரங்கமும் பெருங்கூச்சலை எதிரொலித்தது.(22) தேவர்கள், எதிரிகளை அழிப்பவனான அந்தப் பார்த்தனின் {அர்ஜுனனின்} தலையில் தெய்வீக மலர்களைப் பொழிந்தனர். ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் மேலாடையை எடுத்து மகிழ்ச்சியுடன் அசைக்கத் தொடங்கினர்.(23) சுற்றிலும் இருந்தவர்களும், வெற்றியடையாதவர்களுமான ஏகாதிபதிகள் துன்பத்துடனும், தளர்ச்சியுடனும் சோகமாகப் பேசினர். வானிலிருந்து அந்த அரங்கமெங்கிலும் மலர்மாரி பொழிந்தது.(24)
இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை ஒலிக்கத் தொடங்கினர். (சாதனை செய்தவனான அந்த வீரனை) சூதர்களும், மாகதர்களும் இனிய குரலில் வாழ்த்தினார்கள்.(25) எதிரிகளைக் கொல்பவனான துருபதன், அர்ஜுனனைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். அந்த ஏகாதிபதி, சந்தர்ப்பம் நேர்ந்தால், அந்த வீரனுக்குத் தன் படைகளின் உதவியைக் கொடுக்க விரும்பினான்.(26)
ஆரவாரம் அதன் உச்சத்தில் இருந்தபோது, அறவோர் அனைவரிலும் முதன்மையான யுதிஷ்டிரன், மனிதர்களில் முதன்மையான இரட்டையர்கள் துணையுடன் தன் தற்காலிக இலத்திற்குத் திரும்ப அந்த அரங்கத்தை விட்டகன்றான்.(27) கிருஷ்ணை {திரௌபதி}, குறி அடிக்கப்பட்டதையும், அக்குறியை அடித்தவனான, இந்திரனைப் போன்ற பார்த்தனையும் கண்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, வெள்ளுடையுடனும், மலர்மாலையுடனும் அந்தக் குந்தியின் மகனை {அர்ஜுனனை} அணுகினாள்.(28) அரங்கத்தில் அடைந்த வெற்றியால், திரௌபதியை வென்று, செயற்கரிய அருஞ்செயலைச் செய்த அர்ஜுனன், பிராமணர்கள் அனைவராலும் மரியாதையுடன் வணங்கப்பட்டான். அந்த அரங்கத்தை விட்டு அகன்ற அவன், இவ்வாறு தனக்கு மனைவியானவளால் பின்தொடரப்பட்டான்” {என்றார் வைசம்பாயனர்}[2].(29)(கும்பகோணம் பதிப்பில், “அடிக்கப்பட்ட லக்ஷியத்தையும், இந்திரனுக்கொப்பான பார்த்தனையும் பார்த்த கன்னிகையாகிய கிருஷ்ணை, எப்போதும் வழக்கமாகப் பார்ப்பவர்களுக்குப் புதியவள் போலிருந்தாள். நகைக்காமலிருக்கும்போதே நகைப்பவள் போலவும், மதுமதமிலாமலே ஸ்ருங்கார விலாஸங்களினால் மயங்கினவள் போலவும் வாக்கினாலல்லாமல் பார்வையினாலேயே பேசுகிறவள் போலவும் வெண்மையான உயர்ந்த புஷ்ப மாலையையெடுத்துக் கொண்டு புன்னகையுடன் அர்ஜுனனிடம் சென்றாள். க்ஷத்திரிய வீரர்களின் மத்தியிலிருந்த கிருஷ்ணை, அச்சமின்ற அவர்களுக்குப் பின்னே சென்று பிராம்மணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும் அர்ஜுனனது மார்பில் மாலையை அணிந்து, தேவேந்திரனை இந்திராணி போலவும், அக்கினியை ஸ்வாகாதேவி போலவும், விஷ்ணுவை லக்ஷ்மி போலவும், ஸூர்யனை உஷையென்னும் காலைஸந்தி போலவும், மன்மதனை ரதிதேவி போலவும், மஹேஸ்வரனைப் பார்வதி போலவும் வரனாக வரித்தாள். நினைத்தற்கரிய செய்கையுள்ள அந்த அர்ஜுனன் ஸபாமண்டபத்தில் ஜயித்து அந்தப் பிராம்மணர்களால் கொண்டாடப் பெற்று அந்தத் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, அவளால் பின்தொடரப்பெற்று ஸ்வயம்வர மண்டபத்தினின்றும் புறப்பட்டான்” என்றிருக்கிறது.)
பாண்டவர்களை அடையாளம் காட்டிய கிருஷ்ணன்! – ஆதிபர்வம் பகுதி 191-(சுயம்வர பர்வம் – 06)மன்னர்கள் கோபம் கொண்டு துருபதனைக் கொல்லத் துணிவதும்; பீமனும், அர்ஜுனனும் போருக்குத் துணிந்து நிற்பதை அறிந்து, கிருஷ்ணனும் பலராமனும் பேசிக் கொள்வதும்…
வைசம்பாயனர் சொன்னார், “(குறியை அடித்த) பிராமணனுக்குத் தனது மகளை அளிப்பதற்கு மன்னன் (துருபதன்) தன் விருப்பத்தை வெளியிட்ட போது, அந்தச் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, பெரும் கோபம் நிறைந்தனர்.(1)
அவர்கள் {அம்மன்னர்கள்}, “நம்மைக் கடந்து, நம் கூட்டத்தைப் புல்லென மதித்துப் பெண்களில் முதன்மையானவளான அவனது மகளை {திரௌபதியை} இந்த பிராமணனுக்கு அளிக்க விரும்புகிறான் இந்தத் துருபதன்.(2) ஒரு மரத்தை நட்டு வைத்து, அது கனி கொடுக்கும் சமயத்தில் அதை வெட்டுகிறான். இந்தப் பாவி நம்மை மதிக்கவில்லை; எனவே நாம் இவனைக் கொல்வோம்.(3) அவனது வயதின் காரணமாக நாம் கொடுக்கும் பெரு மதிப்பையோ, வணக்கத்தையோ பெறும் தகுதி இவனுக்கில்லை. இப்படிப்பட்ட தீய குணங்களுக்காக, அனைத்து மன்னர்களையும் அவமதித்த இந்தப் பாவியை, அவனுடைய மகனுடன் சேர்த்துக் கொல்வோம்.(4) அனைத்து ஏகாதிபதிகளையும் அழைத்து, அவர்களுக்கு அற்புதமான உணவு கொடுத்து உபசரித்துவிட்டு, இறுதியாக நம்மை மதிக்க மறுக்கிறான்.(5)
தேவ சபை போன்ற இந்த மன்னர்கள் கூட்டத்தில், தனக்கு இணையான ஏகாதிபதியாக ஒருவனைக் கூடவா இவன் காணவில்லை?(6) சுயம்வரம் க்ஷத்திரியர்களுக்கானது என்ற வேதத்தின் முடிவு நன்கு அறியப்பட்டது. ஒரு க்ஷத்திரியப் பெண்ணால் கணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட பிராமணனுக்கு எந்த உரிமையும் இல்லை.(7) மன்னர்களே, இந்தக் கன்னிகை நம்மில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை எனில், இவளை நெருப்பில் தூக்கிப் போட்டுவிட்டு தத்தமது நாடுகளுக்கு நாம் திரும்புவோம்.(8) இந்த பிராமணனைப் பொறுத்தவரை, இவன் விரும்பாமலோ, பேராசையாலோ {விரும்பியோ விரும்பாமலோ} ஏகாதிபதிகளான நமக்குக் காயத்தை ஏற்படுத்திவிட்டான். இருப்பினும் இவனைக் கொல்லக்கூடாது.(9) நமது நாட்டின் உயிர்கள், செல்வங்கள், மகன்கள், பேரன்கள் இன்னும் என்னென்ன செல்வமெல்லாம் உண்டோ அவை அனைத்தும் இந்த பிராமணர்களுக்காகவே இருக்கின்றன.(10) இருப்பினும் (இவனுக்கு) ஏதாவது செய்தாக வேண்டும். பழிக்கு அஞ்சியோ, ஒவ்வொரு வர்ணத்திற்கும் தனிப்பட்டவையான சிலவற்றைச் சரியாகப் பராமரிக்க எண்ணியோ, இனி நடக்கப் போகும் சுயம்வரங்களில் இது போன்ற முடிவு ஏற்படக் கூடாது” என்றனர்.(11)
ஒருவருக்கு ஒருவர் இப்படிச் சொல்லிக் கொண்ட அந்த ஏகாதிபதிகளில் புலிகள், துருபதனைக் கொல்ல விரும்பி, இரும்புக் கதாயுதங்கள் போன்ற பெரும் ஆயுதங்களுடன் அவனை நோக்கி அங்கும், இங்குமாக விரைந்தனர்.(12) கோபத்துடன் கூடியவர்களான அந்த ஏகாதிபதிகள் அனைவரும், விற்கள் மற்றும் கணைகளுடன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட துருபதன், அச்சமடைந்தவனாக பிராமணர்களிடம் {அர்ஜுனன் மற்றும் பீமனிடம்} பாதுகாப்பை வேண்டினான்.(13) ஆனால், எதிரிகளைத் தண்டிக்கவல்லவர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தப் பாண்டவர்கள் (பீமனும், அர்ஜுனனும்), விரைந்து வரும் அந்த ஏகாதிபதிகளை நோக்கி மதங்கொண்ட மூர்க்கமான யானைகளைப் போல முன்னேறிச் சென்றனர்.(14) விரல்களுக்குக் கையுறை அணிந்த ஏகாதிபதிகள், அந்தக் குரு வம்ச இளவரசர்களிடம் பெரும் கோபம் கொண்டு, பீமனையும், அர்ஜுனனையும் கொல்லத் தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு விரைந்து சென்றனர்.(15)
செயற்கரிய சாதனைகள் புரிந்தவனும், பலம் வாய்ந்தவனுமான பீமன், வஜ்ரத்தைப் போன்ற பலத்துடன் கூடியவனாகப் பெரும் யானையொன்றைப் போல, அருகிலிருந்த ஒரு மரத்தைப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான்.(16)
வலிய கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைக் கலங்கடிப்பவனும், பிருதையின் மகனுமான அந்தப் பீமன், கதாயுததாரியான யமனே தனது கடுந்தண்டத்துடன் நிற்பதைப் போல, அம்மரத்துடன், மனிதர்களில் காளையான அர்ஜுனனின் அருகில் நின்றான்.(17) நினைத்துப்பார்க்க முடியாத சாதனைகளைச் செய்தவனும், இயல்புக்குமீறிய நுண்ணறிவைக் கொண்டவனுமான ஜிஷ்ணு, தனது அண்ணனின் அருஞ்செயலைக் கண்டு மிகவும் வியந்தான். இந்திரனுக்கு நிகரான சாதனைகளைச் செய்த அவன், அச்சமனைத்தையும் உதிர்த்துவிட்டு, தங்களைத் தாக்குபவர்களைத் எதிர்கொள்ளத் தயாராக வில்லுடன் நின்றான்.(18)
தெய்வீகப் புத்திக்கூர்மையும், புத்திக்கெட்டாத அருஞ்செயல்களையும் செய்த தாமோதரன் (கிருஷ்ணன்}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} மற்றும் அவனது அண்ணன் {பீமன்} ஆகியோரின் அருஞ்செயலைக் கண்டு, தனது அண்ணனான பெரும் சக்தி கொண்ட ஹலாயுதனிடம் (பலதேவனிடம் {பலராமனிடம்}},(19) “பெரும்பலம் வாய்ந்த சிங்கத்தின் நடையைக் கொண்டு, கையில் முழுமையாக நான்கு முழ நீளத்திற்குப் பெரும் வில்லை வைத்திருக்கும் அந்த வீரனே அர்ஜுனன். ஓ சங்கர்ஷணரே {பலராமரே} நான் வாசுதேவனாக {வசுதேவரின் மகனாக} இருந்தால், இந்த எனது கணிப்பில் ஐயமேதுமில்லை.(20) வேகமாக மரத்தைப் பிடுங்கி ஏகாதிபதிகளை விரட்டத் தயாராயிருக்கும் மற்றொரு வீரரே விருகோதரர் {பீமர்}. இன்று, இவ்வுலகில் விருகோதரரைத் தவிர வேறு யாரும் போரில் இது போன்ற அருஞ்செயலைச் செய்ய முடியாது.(21) முழுமையாக நான்கு முழ உயரமும், சிங்க நடையும், அடக்கமான நடத்தையும், அழகான நிறமும், பளபளக்கும் நீண்ட மூக்கும் கொண்டு, தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடைய அந்த மற்றொரு இளைஞர், சற்று நேரத்திற்கு முன் அரங்கத்தை விட்டுச் சென்றாரே, அவர் தான் தர்மனின் மகன் {யுதிஷ்டிரர்}.(22) கார்த்திகேயனைப் {முருகனைப்} போன்று இருந்த மற்ற இளைஞர்கள் இருவரும் அஸ்வினி இரட்டையர்களின் மகன்கள் என்று நினைக்கிறேன். பாண்டுவின் மகன்கள் தங்கள் தாய் பிருதையுடன் {குந்தியுடன்}, அந்த அரக்கு மாளிகையில் இருந்து தப்பி விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்” என்றான்.(23)
பின்பு, நீரில்லா மேகம் போன்ற {வெண்மையான} நிறம் கொண்ட ஹலாயுதன் {பலராமன்}, தனது தம்பியிடம் {கிருஷ்ணனிடம்}, “இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குக் கிட்டிய நற்பேறினாலேயே, நமது தந்தையின் {வசுதேவரின்} சகோதரியான பிருதை {குந்தி},இந்தக் கௌரவ இளவரசர்களில் முதன்மையானவர்களுடன் (மரணத்திலிருந்து) தப்பினாள்” என்றான் {பலராமன்}.(24)
அர்ஜுனனுடன் போர் புரிவதிலிருந்து விலகினான் கர்ணன்! – ஆதிபர்வம் பகுதி 192-(சுயம்வர பர்வம் – 07)-கர்ணனைப் பின்வாங்கச் செய்த அர்ஜுனன்; பீமன் சல்லியனை வென்றத பீமன்; துரியோதனாதிகள் தோற்றதும்; மீண்டும் யுத்தத்துக்குத் தயாரான ஏகாதிபதிகள் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அவரவர் இருப்பிடம் திரும்பியது; திரௌபதியுடன் பீமனும், அர்ஜுனனும் தாங்கள் தங்கியிருந்த குயவனின் வீட்டுக்குச் சென்றது…
வைசம்பாயனர் சொன்னார், “பிராமணக் காளையரில் சிலர் தங்கள் மான் தோலையும், தேங்காய் ஓட்டினாலான நீர்க் கமண்டலங்களையும் ஆட்டிக் கொண்டு, “அஞ்சாதீர், எதிரிகளிடம் நாங்கள் போரிடுவோம்” என்றனர்.(1) இதைக் கேட்ட அர்ஜுனன், அப்படிச் சொன்ன அந்த பிராமணர்களைப் பார்த்துப் புன்னகைத்து, “சற்று ஓரமாக நின்று (இப்போரைப்) பார்வையாளர்களாக இருந்து பாருங்கள்.(2) கூர்முனை கொண்டவையும், நேரானவையுமான எனது நூற்றுக்கணக்கான கணைகளை மழையெனப் பொழிந்து, சீறும் பாம்புகளை அடக்கும் மந்திரத்தைப் போல அந்தக் கோபக்கார ஏகாதிபதிகளைத் தடுப்பேன்” என்றான்.(3)
பெரும் பலம்வாய்ந்த அர்ஜுனன், இப்படிச் சொல்லிவிட்டு, தான் மணக்கொடையாகப் {சீதனமாகப்} பெற்ற வில்லைத் தனது கரத்தில் ஏந்தி, தனது அண்ணன் பீமன் அருகினில் நிற்க, மலையென அசையாது இருந்தான்.(4) போரில் எப்போதும் மூர்க்கமாக இருப்பவர்களான அந்த க்ஷத்திரியர்கள், கர்ணனைத் தங்கள் முன்னணியில் கொண்டிருப்பதைக் கண்ட அந்த வீரச் சகோதரர்கள், பகை யானையை எதிர்த்து விரையும் இரு யானைகளைப் போல அச்சமில்லாமல் அவர்களை எதிர்த்து விரைந்தனர்.(5) போரிட விரும்பிய ஏகாதிபதிகள், “போரிட விரும்புபவனைக் கொல்வது அனுமதிக்கப்பட்டதே” என்று கடுமையாகக் கூவினார்கள்.(6) இதைச் சொன்ன அந்த ஏகாதிபதிகள் திடீரென பிராமணர்களை எதிர்த்து விரைந்தார்கள். பெரும் சக்தி வாய்ந்தவனான கர்ணன், ஜிஷ்ணுவிடம் {அர்ஜுனனிடம்} போரிட விரைந்தான்.(7) பெரும் பலம் வாய்ந்த மத்ர மன்னன் சல்லியன், வெப்பத்தில் இருக்கும் பெண்யானைக்காக ஒன்றையொன்று எதிர்த்து விரையும் யானையைப் போல பீமனை எதிர்த்து விரைந்தான்;(8) அதே வேளையில், துரியோதனனும், பிறரும், மெதுவாகவும் அசட்டையாகவும் பிராமணர்களுடன் போரிட்டனர்.(9)
சிறப்புமிக்க அர்ஜுனன், விகர்த்தனனின் {சூரியனின்} மகனான கர்ணன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு, வில்லை எடுத்துத் தனது கூரிய கணைகளால் அவனைத் துளைத்தான்.(10) கூராக்கப்பட்டவையும், பெரும் சக்தியுடன் கூடியவையுமான அந்தக் கணைகளின் மூர்க்கம் ராதேயனை (கர்ணனை) மயக்கமடையச் செய்தது. பிறகு சுயநினைவு மீண்ட கர்ணன், முன்பைவிடப் பெருங்கவனத்துடன் அர்ஜுனனைத் தாக்கினான்.(11) அப்போது, வெற்றிகரமான வீரர்களில் முதன்மையான கர்ணனும், அர்ஜுனனும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள நினைத்து, வெறித்தனமாகச் சண்டையிட்டார்கள். அவர்கள் இருவரும் (ஒவ்வொருவரும் அடுத்தவரின் கணைகளில் மூழ்கி, அம்மோதலைக் கண்டுவந்த பார்வைகயாளர்களின்) கண்களுக்குத் தெரியாமல் மறைந்து போகுமளவுக்கு அவர்கள் இருவரும் தங்கள் கரநளினத்தை வெளிப்படுத்தினர்.(12) “எனது கரங்களின் பலத்தைப் பார்”, “உனது சாதனைக்கு எதிரான எனது எதிர்வினையைக் குறித்துக் கொள்வாயாக”, என வீரர்களுக்கு மட்டும் தெரிந்தவையும், அவர்கள் பரிமாறிக் கொண்டவையுமான வார்த்தைகள் இவைதான்.(13) சூரியனின் மகனான கர்ணன், அர்ஜுனனுடைய கரங்களின் பலம், சக்தி ஆகியவை உலகத்தில் இணையில்லாதவையாக இருப்பதைக் கண்டு கோபமடைந்து, பெரும் வீரத்துடன் போரிட்டான்.(14) அந்தக் கர்ணன், அர்ஜுனனால் தன் மீது ஏவப்பட்ட மூர்க்கமான கணைகள் அனைத்தையும் தடுத்து உரக்க முழங்கினான். போர்வீரர்கள் அனைவரும் அவனது இந்தச் சாதனையைப் பாராட்டினார்கள்.(15)
அப்போது தன் எதிராளியிடம் பேசிய கர்ணன், “ஓ பிராமணர்களில் முதன்மையானவரே, போரில் ஓய்வறியாத உமது கரங்களின் சக்தியையும், வெற்றியை அடையத் தகுந்த உமது ஆயுதங்களையும் கண்டு நான் நிறைவு கொள்கிறேன்.(16) நீர், உடல் கொண்டு வந்த ஆயுத அறிவியலா? பிராமணர்களில் சிறந்தவரான ராமரா {பரசுராமரா}? இந்திரனா? இந்திரனின் தம்பியும், அச்யுதன் என்றும் அழைக்கப்படுபவனுமான விஷ்ணுவா?(17) உம்மை {உமது உண்மையான வடிவை} மறைத்துக் கொள்வதற்காக இந்தப் பிராமண வடிவத்தை ஏற்றுக் கொண்டு, இவ்வளவு ஆயுத சக்தியையும் திரட்டிக் கொண்டு என்னிடம் நீர் போரிடுகிறீரா?(18) சச்சியின் கணவனான இந்திரனையோ, பாண்டுவின் மகனான கிரீடியையோ தவிர, போர்க்களத்தில் கோபமாக இருக்கும் என்னிடம் வேறு எவனும் போரிடவல்லவனல்ல” என்றான்.(19)
இந்த வார்த்தைகளைக் கேட்ட பல்குனன், “ஓ கர்ணா, நான் உடல் கொண்டு வந்த ஆயுத அறிவியலோ, மனிதகர்களுக்கு மீறிய சக்திகளைக் கொண்ட ராமரோ அல்ல.(20) நான், ஆயுததாரிகள் அனைவரிலும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனான ஒரு பிராமணன் மட்டுமே. என் ஆசானின் அருளால் பிரம்ம மற்றும் பொண்டர ஆயுதங்களை நான் அடைந்திருக்கிறேன். போரில் உன்னை வெல்வதற்காகவே நான் இங்கிருக்கிறேன். எனவே, ஓ வீரா, சற்றுப் பொறுப்பாயாக” என்றான்”.(21) வைசம்பாயனர் தொடர்ந்தார், “(அர்ஜுனனால்) இப்படிச்சொல்லப்பட்டதைக் கேட்ட ராதையின் தத்து {சுவீகரிக்கப்பட்ட} மகனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான கர்ணன், பிரம்ம சக்தி வெல்ல முடியாதது என்று எண்ணியதால், அந்தப் போரில் இருந்து விலகினான்[1].(22)(ஆதிபர்வம் பகுதி 140ல் துரோணரின் குருதட்சணையைக் கொடுக்கும்பொருட்டு பாஞ்சாலத்தின் துருபதனைக் கைப்பற்றச் செல்கையில் கர்ணன் இருந்த அணி தோற்றது. அர்ஜுனனின் அணி வென்றது. இப்போதோ, நேருக்கு நேரான முதல் மோதலில், கர்ணன் அர்ஜுனனிடம் இருந்து பின்வாங்கினான். இருப்பினும் கர்ணனுக்கு இவன் இன்னான் என்பது தெரியாது.)
அதே நேரத்தில், களத்தின் வேறு பகுதியில், போரில் திறனும், பெரும் பலமும், திறமையும் பெற்ற பெரும் பலம் வாய்ந்த வீரர்களான சல்லியனும், விருகோதரனும் {பீமனும்} ஒருவரையொருவர் அறைகூவியழைத்தபடியே, மதம் பிடித்த இரு பெரும் யானைகள் போலத் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இறுகப் பற்றிய கை மற்றும் கால் முட்டிகளுடன் ஒருவரை ஒருவர் பலமாக அடித்துக் கொண்டனர்.(23,24) சில வேளைகளில் ஒருவரையொருவர் முன்னுக்குத் தள்ளியும், சில வேளைகளில் அருகே இழுத்தும், சில வேளைகளில் ஒருவரையொருவர் தலைகுப்புறத் தூக்கியெறிந்தும், சில வேளைகளில் பக்கங்களில் தூக்கி வீசியும், தங்கள் உள்ளங்கைகளால் உறுதியாகப் பற்றித் தாக்கிக் கொண்டும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.(25) இரு பாறைத்திரள்கள் மோதிக் கொள்வதைப் போல கடும் அடிகளுடன் ஒருவரோடொருவர் மோதிக்கண்ட அவர்கள் பேரொலியை எழுப்பினர்.(26) இவ்வாறு சில நொடிகள் ஒருவரோடொருவர் போரிட்டு வந்த போது, குருவீரர்களில் முதன்மையானவனான பீமன், சல்லியனைத் தன் கரங்களில் தூக்கிச் சுழற்றி தொலைவாகத் தூக்கி எறிந்தான். மனிதர்களில் காளையான அந்தப் பீமசேனன், சல்லியனைத் தரையில் தூக்கி வீசினாலும், அவனுக்கு அதிக காயத்தை ஏற்படுத்தாததால் (தனது கரவேக சாதனையால்) அனைவரையும் ஆச்சரியப்படுத்தினான்.(27,28)
இவ்வாறு சல்லியன் தரையில் வீசப்பட்டபோது, கர்ணன் அச்சத்தால் பீடிக்கப்பட்டான், பிற ஏகாதிபதிகள் அனைவரும் பீதியடைந்தனர். அவர்கள் விரைவாகப் பீமனைச் சூழ்ந்து கொண்டு,(29) “உண்மையில் இந்தப் பிராமணர்கள் சிறந்தவர்கள் (போர்வீரர்கள்). இவர்கள் என்ன குலத்தவர் என்பதையும், எங்கு வசிக்கிறார்கள் என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.(30) ராமன் {பரசுராமன்}, துரோணர், பாண்டுவின் மகன் கிரீடி ஆகியோரைத் தவிர, வேறு யாரால் ராதையின் மகனான கர்ணனை எதிர்கொள்ள முடியும்?(31) தேவகியின் மகன் கிருஷ்ணன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோரைத் தவிர, போரில் யாரால் துரியோதனனை எதிர்கொள்ள முடியும்?(32) வீரர்களான பலதேவன் {பலராமன்}, பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, வீரத் துரியோதனன் ஆகியோரைத் தவிர யாரால் பெரும் பலம் கொண்ட சல்லியனைத் தூக்கியெறிய முடியும்? எனவே இந்த பிராமணர்களுடனான போரிலிருந்து நாம் விலகுவோம்.(33,34) உண்மையில், இந்தப் பிராமணர்கள் குற்றம் புரிந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எக்காலத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும். முதலில் இவர்கள் யார் என்பதை அறிவோம்; அதைக் கண்டறிந்துவிட்டால் நாம் உற்சாகமாகப் போர் புரியலாம்” என்றனர்”.(35)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பீமனின் இந்த அருஞ்செயலைக் கண்ட கிருஷ்ணன், இவர்கள் இருவரும் குந்தியின் மகன்களே என்று நம்பினான். அப்போது அவன், அங்கு கூடியிருந்த ஏகாதிபதிகளிடம், “இந்தக் கன்னிகை நியாயமான முறையிலேயே (இந்த பிராமணனால்) அடையப்பட்டிருக்கிறாள்” என்று சொல்லி, ஏகாதிபதிகளிடம் போரைக் கைவிடுமாறு வற்புறுத்தினான்.(36) அந்த ஏகாதிபதிகள் சண்டையிலிருந்து விலகியதால் போர் நிறைவு பெற்றது. பிறகு அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவர்கள், மிகவும் ஆச்சரியமடைந்தவர்களாகத் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர்.(37) அங்கே வந்திருந்தவர்கள், “பிராமணர்களின் வெற்றியோடு விழாக்காட்சிகள் முடிவடைகின்றன. பாஞ்சால இளவரசி ஒரு பிரமாணனுக்கு மணமகளானாள்” என்று சொல்லிச் சென்றனர்.(38) மான் மற்றும் மற்ற விலங்குகளின் தோலாடைகளை உடுத்தியிருந்த பிராமணர்களால் சூழப்பட்ட பீமனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்தக்கூட்டத்திலிருந்து மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தனர்.(39) எதிரிகளால் சிதைக்கப்பட்டவர்களும், மனிதர்களில் வீரர்களுமான அவர்கள் கிருஷ்ணனால் பின்தொடரப்பட்டார்கள்.(40)
அதே வேளையில், பிச்சையெடுத்துத் திரும்ப வேண்டிய நேரம் கடந்தும் தனது பிள்ளைகள் வராததால் குந்தி மிகவும் மனக்கலக்கம் அடைந்து இருந்தாள். தனது மகன்களுக்கு ஏதும் தீமை நேர்ந்திருக்குமோ என எண்ணத் தொடங்கினாள்.(41) ஒரு நேரம், அவள் தனது பிள்ளைகளைத் திருதராஷ்டிரனின் மகன்கள் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களைக் கொன்றுவிட்டனரோ என்று நினைத்தாள்.(42) அடுத்து, ஏதேனும் தீய ராட்சசர்கள் தங்கள் மாய சக்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றி அவர்களைக் கொன்றுவிட்டனரோ என்று நினைத்தாள். தன் பிள்ளைகள் மீதிருந்த பாசத்தால், அவள் தனக்குத் தானே, “இப்படி வழிகாட்டிய (பாஞ்சாலத்திற்குத் தனது மகன்களை வழிநடத்திய) சிறப்பு மிகுந்த வியாசர் குறைந்த புத்தியுடையவரா?” என்றெல்லாம் நினைத்துப் பார்த்தாள்.(43) பின்னர் தாமதமாக, பிற்பகலின் அமைதியான வேளையில், பிராமணர்கள் சூழ வந்த ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மேகமூட்டமான நாளில், மேக மறைவில் இருந்து வெளிவரும் சூரியனைப் போல அந்தக் குயவனின் வசிப்பிடத்தில் நுழைந்தான்” {என்றார் வைசம்பாயனர்}.(44,45)
அம்மா பிச்சை கொண்டு வந்தோம்! – ஆதிபர்வம் பகுதி 193-(சுயம்வர பர்வம் – 08)பிச்சை கொண்டு வந்தோம்’ என்று சொல்லிய பீமன் மற்றும் அர்ஜுனனின் வார்த்தைகளைக் கேட்ட குந்தி ‘அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்’ என்று சொன்னது; யுதிஷ்டிரனும், அர்ஜுனனும் திரௌபதியைக் குறித்து பேசிக் கொண்டது; வியாசர் சொன்னதை நினைவு கூர்ந்து, சகோதரர்கள் அனைவருக்கும் திரௌபதி பொது மனைவி என்று யுதிஷ்டிரன் தீர்மானித்தது; குயவன் வீட்டிற்கு வந்தது கிருஷ்ணன்…
வைசம்பாயனர் சொன்னார், “பிருதையின் {குந்தியின்} அந்தச் சிறப்புவாய்ந்த மகன்கள், குயவனின் வசிப்பிடத்திற்குத் திரும்பியதும், தங்கள் தாயை அணுகினர். மனிதர்களில் முதன்மையான அவர்கள், தங்கள் தாயிடம் யக்ஞசேனியை {திரௌபதியை} அன்று தாங்கள் அடைந்த பிச்சை என்று கூறினர்.(1) அறையின் உள்ளே இருந்த குந்தி, தனது மகன்களைப் பாராமல், “(நீங்கள் அடைந்ததை) அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்” என்றாள். சிறிது நேரம் கழித்துக் கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்டு, “அய்யோ, நான் என்ன சொல்லிவிட்டேன்?” என்று பாவம் குறித்த அச்சத்தால் துயர்கொண்டாள் {குந்தி}.(2) அச்சூழ்நிலையில் இருந்து ஒவ்வொருவரையும் விடுவிப்பது எப்படி என்று நினைத்து, மகிழ்ச்சியுடன் இருந்த யக்ஞசேனியின் {திரௌபதியின்} கரங்களைப் பற்றி, யுதிஷ்டிரனை அணுகி,(3) “மன்னன் யக்ஞசேனனின் {துருபதனின்} மகளை {திரௌபதியை} உனது தம்பிகள், “பிச்சை கொண்டு வந்தோம்” என்று அறியாமையால் என்னிடம் சொன்னார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதற்குச் சரியாக, ‘நீங்கள் கொண்டு வந்ததை அனைவரும் சேர்ந்து அனுபவியுங்கள்’ என்றும் சொல்லிவிட்டேன்.(4) ஓ குருகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, எனது பேச்சு எதனாலும் பொய்யாகாது {எனது சொல் பொய்யாகக்கூடாது} என்பதையும், பாஞ்சால மன்னனின் மகள் எதைச் செய்தால் அவளைப் பாவம் அணுகாது என்பதையும், அவள் எப்படி அமைதியற்ற நிலையை அடையாமல் இருப்பாள் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றாள் {குந்தி}”.(5)
வைசம்பாயனர் தொடர்ந்தார், இப்படித் தனது தாயால் கேட்கப்பட்டவனும், மனிதர்களில் வீரனும், குருகுலக் கொழுந்துகளில் முதன்மையானவனும், புத்திக்கூர்மை உடையவனுமான மன்னன் (யுதிஷ்டிரன்), சிறிது நேரம் சிந்தித்து, குந்தியைத் தேற்றி, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(6) “ஓ பல்குனா {அர்ஜுனா}, உன்னால் யக்ஞசேனி {திரௌபதி} வெல்லப்பட்டாள். எனவே, நீ அவளைத் திருமணம் செய்து கொள்வதே முறையாகும். ஓ எதிரிகளை நிலைத்து எதிர்ப்பவனே, புனித நெருப்பை மூட்டி, முறையான சடங்குகளுடன் அவளது கரத்தைப் பற்றுவாயாக” என்றான் {யுதிஷ்டிரன்}.(7)
இதைக் கேட்ட அர்ஜுனன், “ஓ மன்னா, பாவத்தில் என்னைப் பங்குகொள்ள வைக்காதீர். உமது விருப்பம் அறவிதிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. அது பாவிகள் பின்பற்றும் வழியாகும். முதலில் நீரும், அதன்பிறகு செயற்கரிய சாதனைகள் செய்பவரான பலம் வாய்ந்த கரங்களும் கொண்ட பீமரும் திருமணம் செய்ய வேண்டும்.(8) அதன்பிறகே நான் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, நகுலனும், இறுதியாகப் பெரும் செயல் புரியும் சகாதேவனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரனே}, விருகோதரரும் {பீமரும்}, நானும், இரட்டையர்களும், ஏன் இந்தக் கன்னிகையும் கூட உமுது கட்டளைக்காக என்றும் காத்திருப்போம்.(9) நிலைமை இப்படி இருக்கும் போது, எதையும் சிந்தித்த பிறகு செய்தல் நலம். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிபவர்களே. நீர் விரும்பியவாறு எங்களுக்குக் கட்டளையிடுவீராக” என்றான் {அர்ஜுனன்}”.(10)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “மரியாதையும், பாசமும் நிறைந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சால இளவரசியின் மீது தங்கள் பார்வையைச் செலுத்தினர்.(11) அந்தப் பாஞ்சால இளவரசியும் அவர்கள் அனைவரையும் கண்டாள். அந்த இளவரசர்கள் அனைவரும் அந்தச் சிறப்பு மிகுந்த கிருஷ்ணையைப் {திரௌபதியைப்} பார்த்த பிறகு, தங்கள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டனர். பிறகு அனைவரும் அமர்ந்து திரௌபதியை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தனர்.(12) உண்மையில், அளவில்லாச் சக்தி கொண்ட அந்த இளவரசர்கள் அனைவரும் திரௌபதியைப் பார்த்த போது, காமதேவன் அவர்களது இதயத்தின் மேல் படையெடுத்து, அவர்களது உணர்வுகளைக் கலங்கடித்தான்.(13) பகட்டான அழகைக் கொண்டவளான அந்தப் பாஞ்சாலியைப் பூமியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மேலாகப் படைப்புக் கடவுள் வடித்திருந்தான். அவளது அழகு அனைத்து உயிர்களையும் கொள்ளையடித்தது.(14) குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தனது தம்பிகளைக் கண்டு, அவர்களின் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்து கொண்டான். அந்த மனிதக் காளை கிருஷ்ண துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தான்.(15) அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தம்பிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரிவை எண்ணி அஞ்சி, அவர்களிடம், “இந்த அதிர்ஷ்டம் கொண்ட திரௌபதி, நம் அனைவருக்கும் பொது மனைவியாக இருப்பாள்” என்றான் {யுதிஷ்டிரன்}”.(16)
வைசம்பாயனர் தொடர்ந்தார், “பாண்டுவின் மகன்கள், தங்கள் அண்ணன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவற்றை மனத்தில் போட்டுச் சுழற்றி பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர்.(17) (கிருஷ்ணன், தான் சுயம்வரத்தில் கண்ட ஐவரும் குரு குல வீரர்களாக இல்லாமல் இருக்க முடியாது என ஐயம் கொண்ட) விருஷ்ணி குலத் தலைவன், ரோஹிணியின் மகனுடன் (பலதேவனுடன் {பலராமனுடன்}) அந்தமனிதர்களில் முதன்மையானவர்கள் வசித்திருக்கும் குயவனின் இல்லத்திற்கு வந்தான்.(18) கிருஷ்ணனும், பலதேவனும் அங்கே அந்தக் குயவனின் இல்லத்திற்கு வந்ததும், நல்ல உடற்கட்டும், நீண்ட கரங்களும் கொண்ட அஜாதசத்ருவை (யுதிஷ்டிரனைச்) சுற்றி அவனது தம்பிகள் நெருப்பின் பிரகாசத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டனர்.(19)அப்போது, வாசுதேவன் {கிருஷ்ணன்} அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான, அஜமீட குலத்தில் வந்த குந்தி மைந்தனின் {யுதிஷ்டிரனின்} பாதங்களைத் தொட்டு, “நான் கிருஷ்ணன்” என்றான்.(20) யுதிஷ்டிரனை அணுகிய ரோஹிணியின் மகனும் {பலராமனும்} அதையே செய்தான் {பாதம் பணிந்தான்}. கிருஷ்ணனையும், பலதேவனையும் கண்ட பாண்டவர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.(21) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அதன்பிறகு, அந்த யது குலத் தலைவர்கள், தங்கள் தந்தையின் சகோதரியான குந்தியின் பாதத்தையும் தொட்டனர்.(22) குருகுலத்தின் முதன்மையான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணனைக் கண்டு நலம் விசாரித்த பிறகு, “ஓ வாசுதேவா {கிருஷ்ணா}, மாற்றுருவில் வாழ்ந்து வரும் எங்களை நீ எவ்வாறு கண்டுபிடித்தாய்?” என்று கேட்டான்.(23)
அதற்கு வாசுதவேன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, “ஓ மன்னா, நெருப்பை மறைத்தாலும், அஃதை எளிதில் அறிய முடியும். பாண்டவர்களைத் தவிர இத்தகு வலிமையை வேறு எவரால் வெளிப்படுத்த முடியும்?(24) எதிரிகள் அனைவரையும் தாக்குப்பிடிப்பவர்களே, பாண்டுவின் மகன்களே, உங்களது நற்பேறால் மட்டுமே நீங்கள் அந்தக் கடும் நெருப்பிலிருந்து தப்பினீர்கள். உங்களது நற்பேறால் மட்டுமே திருதராஷ்டிரனின் தீய மகனும், அவனது ஆலோசகர்களும், அக்காரியத்தில் வெற்றியடைய முடியவில்லை.(25) அருளப்பட்டிருப்பீராக! குகையில் இருக்கும் நெருப்பானது படிப்படியாக வளர்ந்து, சுற்றிலும் பரவுவது போல வளமையைப் பெருக்கிக்கொள்வீராக. எந்த ஏகாதிபதியும் உம்மை அடையாளம் காணாதபடி, நாங்கள் எங்கள் முகாமுக்குச் செல்கிறோம்” என்று சொல்லி, யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, குன்றாத வளமையுள்ள கிருஷ்ணன், தன்னுடன் பலதேவனையும் அழைத்துக் கொண்டு, குயவனின் வசிப்பிடத்தில் இருந்து விரைவாக வெளியேறினான்” {என்றார் வைசம்பாயனர்}.(26)
ஒளிந்திருந்தான் திருஷ்டத்யும்னன்! – ஆதிபர்வம் பகுதி 194-(சுயம்வர பர்வம் – 09)பாண்டவர்கள் வசிக்கும் குயவன் வீட்டில் ஒளிந்திருந்த திருஷ்டத்யும்னன்; பாண்டவர்கள் கொண்டு வந்த பிச்சையை குந்தியின் வழிகாட்டுதல்படி பிரித்துக் கொடுத்துப் பரிமாறிய திரௌபதி; காரியத்தை அறிந்து கொண்டு துருபதனிடம் திரும்பிய திருஷ்டத்யும்னன்; துயரத்துடன் பிதற்றிய துருபதன்..
வைசம்பாயனர் சொன்னார், “குருகுல இளவரசர்கள் (பீமனும், அர்ஜுனனும்) குயவனின் வசிப்பிடத்தை நோக்கி நடந்து செல்கையில், பாஞ்சால இளவரசனான திருஷ்டத்யும்னனும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான்.(1) தனது பணியாட்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, அந்தக் குயவனின் இல்லத்திற்கு அருகில் ஏதோ ஒரு பகுதியில் பாண்டவர்களுக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டான்.(2) பிறகு, எதிரிகளை அழிப்பவர்களான பீமனும், அர்ஜுனனும், சிறப்புமிகுந்த இரட்டையர்களும், மாலை நேர பிச்சையை முடித்துக் கொண்டு திரும்பி, அனைத்தையும் மகிழ்ச்சியுடன் யுதிஷ்டிரனிடம் கொடுத்தனர்.(3) அப்போது, அன்பான இதயம் கொண்ட குந்தி, துருபதனின் மகளிடம் {திரௌபதியிடம்}, “ஓ இனிமையானவளே, நீ ஒரு பகுதியை முதலில் இதிலிருந்து எடுத்து, தேவர்களுக்கு அர்ப்பணித்து, பிராமணர்களுக்குக் கொடுத்துவிடுவாயாக.(4) உண்ண விரும்புபவர்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக, நமது விருந்தினர்களாக வருபவர்களுக்குக் கொடுப்பாயாக. மீதத்தை இரு பங்காகப் பிரித்து, ஒரு பங்கை பீமனுக்குக் கொடுப்பாயாக. ஓ இனிமையானவளே, இந்த அழகான நிறம் கொண்ட இளைஞன் {பீமன்} யானைகளின் மன்னனுக்கு நிகராக பெரும் தீனி தின்பவனாவான். மறு பாதியை ஆறு பங்குகளாக இட்டு, இந்த நான்கு இளைஞர்களுக்கும், ஒன்றை எனக்கும் கொடுத்துவிட்டு, ஒன்றை உனக்கும் எடுத்துக் கொள்வாயாக” என்றாள்.(5,6)
அப்போது, தனது மாமியாரின் இந்த அறிவுரைகளைக் கேட்டுக் கொண்ட அந்த இளவரசி, அவள் வழிகாட்டியபடி அனைத்தையும் மகிழ்ச்சியுடன் செய்தாள். அந்த வீரர்கள் அனைவரும் கிருஷ்ணையால் {திரௌபதியால்} தயாரிக்கப்பட்ட {சமைக்கப்பட்ட} உணவை உண்டனர்.(7) பெரும் செயல்புரிபவனான மாத்ரியின் மகன் சகாதேவன், தரையில் குசப் புல்லினால் {தர்ப்பைப் புல்லினால்} படுக்கை அமைத்து, அதில் படுத்துக் கொண்டான். மற்றவீரர்கள் அங்கிருந்த மான் தோலில் தங்களைக் கிடத்திக் கொண்டு உறங்கினர்.(8) குரு இளவரசர்களில் முதன்மையானவர்கள் தங்கள் தலைகளைத் தெற்கே வைத்து படுத்திருந்தனர்.குந்தி அவர்களின் தலைமாட்டில் படுத்துக் கொண்டாள். கிருஷ்ணை {திரௌபதி} அவர்களது கால்மாட்டில் படுத்துக் கொண்டாள்.(9) கிருஷ்ணை, பாண்டுவின் மகன்களுடன் குசப் புல்லில் {தர்ப்பைப் புல்லில்} அவர்களின் கால் மாட்டில் தலையணையில்லாமல் படுத்துக் கிடந்தாலும் அவளது இதயத்தில் துயர் கொள்ளவில்லை. அந்தக் குருகுலக் காளைகளைக் குறித்து மரியாதைக் குறைவாக எண்ணவுமில்லை. (10)
அப்போது, அந்த வீரர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்கினர். ஒரு படையைத் தலைமை தாங்கும் தகுதியுடன் இருந்த ஒவ்வொருவரும், தேவலோக தேர்களைக் குறித்தும், ஆயுதங்களைக் குறித்தும், யானைகள், வாட்கள், கணைகள், போர்க்கோடரிகள் ஆகியவற்றைக் குறித்தும் மிகவும் உற்சாகமாகப் பேசிக் கொண்டனர்.(11) பாஞ்சால மன்னனின் மகன் (தனது மறைவிடத்திலிருந்து) அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டான். அவனுடன் இருந்த அனைவரும், கிருஷ்ணையை {திரௌபதியை} அந்த நிலையிலேயே கண்டனர்.(12) காலை வந்ததும், இளவரசன் திருஷ்டத்யும்னன் தனது மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டுக் குயவனின் வசிப்பிடத்தில் நடந்தது குறித்தும், இரவில் அந்த வீரர்கள் பேசிக் கொண்டதைக் குறித்தும் துருபதனிடம் விரிவாகத் தெரிவிக்க மிக விரைவாகச் சென்றான்.(13) பாண்டவர்கள்தான் தனது மகளை அடைந்தனர் என்பதை அறியாத பாஞ்சால மன்னன் மிகவும் துயருற்று இருந்தான்.
திருஷ்டத்யும்னன் திரும்பியதும் அந்தச் சிறப்புமிகுந்த ஏகாதிபதி {துருபதன்}, “எனது கிருஷ்ணை எங்கே சென்றாள்? யார் அவளைத் தூக்கிச் சென்றது?(14) ஒரு சூத்திரனோ, இழிந்த பிறவியோ, கப்பம் கட்டும் வைசியனோ எனது மகளைத் தூக்கிச் சென்று, தனது அழுக்கான பாதத்தை எனது தலையில் வைத்துவிட்டனரா? ஓ மகனே, சுடுகாட்டில் பூக்குவியல் இறைக்கப்பட்டதா?(15) உயர்ந்த குல க்ஷத்திரியனோ அல்லது அதனினும் உயர்ந்த குலத்தானோ {பிராமணனோ} எனது மகளை அடைந்தானா? இழிந்த குலத்தைச் சேர்ந்த எவனும் கிருஷ்ணையை {திரௌபதியை} வென்று அவனது இடது காலை எனது தலையில் வைத்துவிட்டானா?(16) ஓ மகனே, மனிதர்களில் முதன்மையான பார்த்தனிடம் என் மகள் சேர்ந்திருந்தாள் என்றால் நான் நிச்சயம் மகிழ்வேன், துயருற மாட்டேன். ஓ உயர்ந்தவனே, உண்மையைச் சொல், இன்று எனது மகளை வென்றவன் எவன்?(17) குருக்களில் முதன்மையான விசித்திரவீரியனின் மகனின் {பாண்டுவின்} மகன்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா? வில்லை எடுத்துக் குறியை அடித்தவன் பார்த்தனா {அர்ஜுனனா?}” என்று கேட்டான் {துருபதன்}”.(18)
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply