ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்.-ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகள்-

ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரிய ஸ்வாமிகளவர்கள் ப்ரம்ஹசாரியாயிருந்து வரும் பொழுது துவாதசீ திதி யன்று ஒரு ஏழைப் பிராம்ஹணன் கிருஹத்துக்குப் பிக்ஷை வாங்குவதற்காகச் சென்றனர்.அங்குச் சென்று ஸம்பிரதாயப்படி ” பவதி பிக்ஷாம் தேஹி” என்று சொன்னார்-இதைக் கேட்டு- அந்த வீட்டுக்குச் சொந்தக்காரியும் மஹா பதிவிரதையுமரன ஸ்திரீ வெளியில் வந்து ப்ரஹ்ம தேஜஸ்ஸினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் நமது ஆசார்யாளைப் பார்த்து,தனக்கு பிஷை போடுவதற்குக் கூட சக்தி யில்லாமையை நினைத்து மிகவும் வருந்தி தெய்வ ஸங்கற்பத்தால் தற்சமயம் கையிற் கிடைத்த ஒரு நெல்லிக் கனியை ஆசாரியாளின் பிக்ஷா பாத்திரத்தில் போட்டாள். இதைக் கவனித்த ஆசாரியாள் உடனே கருணையை யடைந்து எவ்விதத்திலாவது இந்த உத்தமியின் தாரித்திரியத்தை விலக்க வேண்டுமென்று திருடமாய்ச் சங்கற்பித்துக் கொண்டு ஸ்ரீ தேவியை ஸ்துதி செய்தனர். அந்த ஸமயத்தில் நமது ஆசாரியாளின் முகார விந்தத்தினின்றும் வெளி வந்த ஸ்லோகங்களுக்கே கனகதாரா ஸ்தோத்திரம் என்று பெயர். இந்த 16 ஸ்லோகங்களைப் படித்தவுடன் ஸ்ரீ தேவி நேரில் பிரஸன்னையாகி வந்து என்ன வேண்டுமென்று கேட்டாள். நீ என் விஷயத்தில் பிரஸன்னையாயிருப்பது நிச்சயமானால் எனக்கு இன்றைய தினம் பிக்ஷா தானஞ்செய்த இந்த உத்தமியின் தாரித்திரியம் விலகுமாறு அருள் புரிய வேண்டு மென்று ஆசாரியாள் பிரார்த்தித்தவுடன், நெல்லிக்கனிப் பிரமாணமுள்ள தங்கக் கட்டியை ஒரு முஹூர்த்த காலம் அவ்வுத்தமியின் கிருஹத்தில் வர்ஷிக்கும்படிச் செய்தாள் என்று சங்கர திக் விஜயம் முதலியவைகளிற் கூறப்பட்டிருக்கிறது.

அங்கம் ஹரே: புளக பூஷண மாஸ்ரயந்தி
ப்ருங்காங்க நேவ முகுளாபரணம் தமாலம்
அங்கீ க்ருதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கள்ய தாஸ்து மம மங்கள தேவ தாயா : ! (1)

மொட்டுகளை அலங்கார மாயுடைய-தமாலம் என்ற மரத்தை பெண் வண்டு போல உரோமாஞ்சத்தை அலங்கார மாயுடைய : நினைத்த மாத்திரத்தால் எல்லாப் பாபங்களையுமப ஹரித்துக் கொள்ளுகிற ஸ்ரீமந் நாராயணனுடைய தோள், மார்பு, கை, முதலிய அங்கங்களை அடைகிறதாயும் அங்கீகாரம் செய்யப்பட்ட ஸகல விதமான ஐஸ்வர்யங்களை யுடையதாயு மிருக்கிற கல்யாணம், மங்களம்,க்ஷேமம்,என்று சொல்லக் கூடியதற்கு அபிமானி தேவதையான ( யஜமானி யான) ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய கடைக்கண்ணின் லீலையானது (பார்வையானது) எனக்கு மங்களத்தைக் கொடுப்பதாக இருக்கட்டும்

ஹே ஸ்ரீ தேவியே ! தாங்கள் ஸ்ரீமந்நாராயணனுடைய அங்க ஸௌந்தர்யத்தைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக, வெட்கத்துடன் கடைக் கண்ணால் பார்க்கின்றீர்கள்
கருவண்டு போல் கருத்ததாயும், குளுமை பொருந்தியதாயுமிருக்கிற தங்களது கடாக்ஷம் நீருண்ட மேகம் போல் கருத்த பகவானுடைய திருமேனியிற் பட்டதும் அவரது சரீரமெல்லாம் ரோமாஞ்சமடைந்து முன்னிலும் அதிக சோபை வாய்ந்ததாயாகிறது. அதில் மறுபடியும் தங்கள் கடாக்ஷம் ஸஞ்சரிக்கின்றது.இவ்விதம் ஒவ்வொரு அங்கத்திலும் ஸஞ்சரிக்கும் தங்கள் கடாக்ஷமானது மொட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட கருநிறமுள்ள தமாலம் என்ற மரத்தில் ஆங்காங்கு பறந்து சென்று கொண்டிருக்கும் பெண் வண்டுக்குச் சமானமா யிருக்கின்றது,அஃதுடன் தன்னை உபாஸிப்பவர்களுக்கு ஸகல விதமான ஸம்பத்தையும் கொடுப்பதில் திருடமான ஸங்கற்பமுள்ளதாயு மிருக்கிறது. அந்தத் தங்களது கடைக்கண்பார்வை யானது எனக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்..

முக்தா முஹுர் விதததீ வதநே முராரே
ப்ரேமத்ர பாப்ரணி ஹிதா நி கதாகதாநி 1
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா : (2)

அழகு வாய்ந்ததாயும் நாராயணனுடைய முகத்தில் ஸ்நேஹம், லஜ்ஜை இவைகளால் உண்டான போக்குவரத்துக்களை லீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல செய்கின்ற தாயுமிருக்கிற ஷீர ஸமுத்திரத்தினின்றும் ஆவிர்ப்பவித்த ஸ்ரீதேவியினுடைய எந்த கண்களுடைய வரிசை யுண்டோ -அந்த வரிசை -எனக்கு ஸம்பத்தைக் கொடுக்கட்டும்.

ஹே ஸ்ரீ தேவியே! மலர்ந்த நீலோத் பல புஷ்பம் போலுள்ள பகவானுடைய முக மண்டலத்தின் அழகைப் பார்த்து ஸந்தோஷிப்பதற்காக தங்களால் அனுப்பப்பட்ட கடாக்ஷமானது மத்தியில் பகவானின் கடாக்ஷத்தைச் சந்தித்து வெட்கத்துடன் திரும்பி விடுகிறது. கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பகவன் முகத்தில் ஸஞ்சரிக்கின்றது. பகவத் கடாக்ஷத்தை மறுபடியும் ஸந்தித்து வெட்கத்தால் திரும்பி விடுகிறது. இவ்விதம், மலர்ந்த நீலோத் பல புஷ்பத்தில் பெண் வண்டு போல் பகவன் முக மண்டலத்தில் சஞ்சரிக்கும் தங்களுடைய கடாக்ஷ பரம்பரையானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

விஸ்வா மரேந்திர பதவிப்ரமதா தக்ஷ
மாநந்த ஹேது ரதிகம் முரவி த்விஷோபி 1
ஈஷந் நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீ வரோதர ஸஹோதர மிந்திராய : (3)

எல்லா தேவ ஸ்ரேஷ்டர்களுடைய ஸ்தானத்தையும் விளையாட்டாகவே கொடுப்பதில் திறமை வாய்ந்ததாயும் அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீமந் நாராயணனுக்கும் மிகவும் ஸந்தோஷத்திற்குக் காரணமாயும் நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகத்திற்குச் சமானமாயு மிருக்கிற ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கடாக்ஷத்தின் பாதியானது என்னிடம் க்ஷண காலம் கொஞ்சம் உட்காரட்டும்.

ஹேஸ்ரீ தேவியே ! எந்த தங்களது கடாக்ஷமானது இந்திரன், வருணன், குபேரன், பிரம்ஹா, முதலிய தேவ ஸ்ரேஷ்டர்களின் ஸ்தானங்களை விளையாட்டாகவே கொடுப்பதற்குச் சக்தி வாய்ந்ததோ, அவாப்த ஸமஸ்த காமனான ஸ்ரீ மந் நாராயணனுக்கும் அதிகமாய் ஆனந்தத்தைப் பெருக்கக் கூடியதோ, நீலோத்பல புஷ்பத்தின் மத்ய பாகம் போல்
கருத்ததான அந்தக் கடாக்ஷத்தின் ஏக தேசமானது கொஞ்ச காலம் அடியேன் மேல் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ஆமீலிதாக்ஷ மதிகம்ய முதா முகுந்த
மாநந்த கந்தம நிமேஷம நங்கதந்திரம்
ஆகேகரஸ்திக நீநிகபஷ்ம நேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:1 (4)

ஸந்தோஷத்தால் (சுக விசேஷத்தினால்) கொஞ்சம் மூடப்பட்ட கண்களை யுடைய ஸ்ரீ மந் நாராயணனை அடைந்து இருக்கிறதாயும் ஸந்தோஷத்தின் கிழங்காயும்- அதாவது ஸந்தோஷத்தை விளைவிக்கின்றதாயும் இமைக்கொட்டுத லில்லாததயும் மன்மதனைப் பிரதானமா யுடையதாயும் (மன்மதனை விருத்தி செய்கின்றதாயும்) கொஞ்சந் திறந்த கடைக் கண்ணில் இருக்கிற கருவிழியுடன் கூடின இமைமயிரை யுடையதாயும் ஆதி சேஷன் மேல் சயனித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்ணானது எனக்கு ஸம்பத்தின பொருட்டு ஆக வேண்டும்.

ஹே லக்ஷ்மீ தேவியே ! ஸ்ரீ நாராயணன், மன்மதனை விருத்தி செய்கிறதாயும் சுக விசேஷத்தைப் பெருக்குகிற தாயுமிருக்கிற தங்களது கடாக்ஷாமிருதத்தில் முழுகி ஆதிசேஷ தல்பத்திற் படுத்து நிரதிசயமான சுகத்தை அனுபவிக்குங்கால் அவரது இரண்டு கண்களும் தானாகவே மூடிக் கொண்டு விடுகின்றன. அப்பொழுது எந்த தங்களது கடாக்ஷமானது எவ்வித தடையுமில்லாமல் இமைக் கொட்டுதலைக் கூட விலக்கி பகவானுடைய ஒவ்வொரு அவயவங்களிலும் யதேச்சமாய் சஞ்சரிக்கின்றதோ, அந்தக் கடாக்ஷமானது எனக்கு ஸம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

பாஹ் வந்தரே மது ஜித : ஸ்ரித கௌஸ்துபே யா
ஹாராவளிவ ஹரி நீல மயீ விபாதி
காம ப்ரதா பகவதோபி கடாக்ஷ மாலா
கல்யாண மாவஹது மே கமலாலயாயா : 1 (5)

கௌஸ்துபம் என்ற சிறந்த ரத்தினத்துடன் கூடின ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு
மார்பில் எந்த கடாக்ஷமாலை யானது இந்திர நீல ரத்தின மயமான மாலைகளின் வரிசை போல விளங்குகின்றதோ ஸமக்கிரமான ஐஸ்வர்யம் வீர்யம், யசஸ் முதலிய ஆறு குணங்களுடன் கூடின ஸ்ரீமந் நாராயணனுக்கும் காமனைக் கொடுக்கிறதாயும் (அபீஷ்டங்களைக் கொடுக்கிறதாயும்) இருக்கிற ஸ்ரீ லஷ்மீ தேவியினுடைய அந்தக் கடாக்ஷங்களுடைய வரிசையானது எனக்கு கல்யாணத்தை அல்லது ஸ்வர்ணத்தை கொடுக்கட்டும்.

ஹே லக்ஷ்மீ தேவியே ! தங்களுடைய இந்திர நீலம் போல் கருத்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கெஸ்துபம் என்ற ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மந் நாராயணனுடைய திரு மார்பில் விழுகிறது.இவ்விதம் விழுந்த கடாக்ஷங்களுடைய வரிசையானது கௌஸ்துப ரத்தினத்தை நடு நாயகமாய் வைத்து இந்திர நீல ரத்தினத்தாற் கட்டப்பட்ட ஹாரங்கள் போல் விளங்குகின்றது. அவாப்த சமஸ்த காமனான பகவானுக்கும் காமனைக் கொடுக்கக் கூடிய அந்தத் தங்களது கடாக்ஷமானது எனக்குக் கல்யாணத்தைக் கொடுக்கட்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.
(காம என்ற பதத்திற்கு அபீஷ்டம் என்றும், மன்மதன் என்றும் இரண்டு விதமான பொருள் உண்டு. இவ் விரண்டு அர்த்தங்களும் இவ் விடத்தில் சிலேடையால் கூறப்பட்டிருக்கின்றன.ஸ்ரீமந் நாராயணனுக்கு ஏற்பட்ட வைபவங்க ளெல்லாவற்றிற்கும் தங்களது கடாக்ஷமே காரணமென்று ஒரு அர்த்தம்.தங்களது கடாஷ பாதத்தால் பகவானுக்கும் மன்மத விருத்தி(போகேச்சை) உண்டாகிறது என்று மற்றுமோர் அர்த்தம்.)

காலாம்புதாளி லலிதோரஸி கைடபாரேர்
த்தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
மாதுஸ் ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்திர்
ப்பத்ராணி மேதி ஸது பார்க்கவ நந்தநாயா (6)

ஸ்ரீ தேவியினுடைய எந்த ஸ்ரீ மூர்த்தியானது ஸ்ரீ மந் நாராயணனுடைய கருத்த மேகங்களுடைய வரிசை போல் அழகான மார்பில் நீருண்ட மேகத்தில் மின்னலாகிற ஸ்திரீ போல பிரகாசிக்கின்றதோ எல்லா லோகங்களுக்கும் மாதாவான ஸ்ரீ தேவியினுடைய அந்த அழகு பொருந்திய ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு க்ஷேமங்களைக் கொடுக்கட்டும்

ஹே ஸ்ரீ லக்ஷ்மீ தேவியே! கருத்த மேகம் போல் அழகு வாய்ந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருமார்பில் எந்த தங்களது திருமேனியானது நீருண்ட மேகத்தில் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதோ அந்த ஸ்ரீ மூர்த்தியானது எனக்கு ஷேமங்களைக் கொடுக்க வேண்டும்.தாங்கள் ஜகந் மாதாவா யிருப்பிதால் எங்களது பிரார்த்தனையை அசட்டை செய்வது நியாயமல்ல. பாலர்களான நாங்கள் மாதாவான தங்களைத் தவிற வேறு யாரிடம் அபீஷ்டங்களை யாசித்துப் பெற்றுக் கொள்வது.ஆதலால் தாங்கள் தாமதமின்றி அருள் புரிய வேண்டு மென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ப்ராப்தம் பதம் பிரதமத : கலு யத் ப்ரபாவாத்
மாங்கள்ய பாஜி மது மாதி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ச மகராலய கந்யகாயா : l (7)

எந்த கடாக்ஷத்தின் மஹிமையால் கல்யாணத்தை யடைந்த வராயாகிய மதுவைக் கொன்ற பகவானிடம் எந்த கடாக்ஷ பலத்தாலேயே மன்மதனால் இடமானது முதலில் அடையப்பட்டதோ மெதுவாய் ஸஞ்சரிக்கிறதாம் வேறு விஷயத்தை யடைவதற்கு விருப்ப மில்லாததாயும் வெட்கத்தால் அபீஷ்ட வஸ்துவினிடமிருந்து திரும்புகிறதாயு மிருக்கிற அந்த சமுத்திர ராஜ குமாரியான ஸ்ரீ தேவியினுடைய நேத்திரத்தின் பாதியானது (கடாக்ஷமானது ) இந்த என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும்.

ஹே ஸ்ரீ தேவியே! மதுவைக் கொன்றவரா யிருப்பதால் பயமடைந்த மன்மதன் எந்த தங்களது கடாக்ஷத்தால் ஸ்ரீ மந் நாராயணனையும் ஜயித்தானோ, மங்களமான வஸ்துக்களுக்கும் மங்களத்தைக் கொடுப்பவர் என்றபடி பரம மங்களமாயிருக்குந் தன்மையானது ஸ்ரீ நாராயணனுக்கு எந்த தங்களது கடாக்ஷ விசேஷத்தால் ஏற்பட்டதோ, அந்தத் தங்களுடைய கடாக்ஷமானது என்னிடம் கொஞ்சம் விழ வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது-( மது என்ற பதத்திற்கும் வஸந்த ருது என்றும் மது என்று பெயர் கொண்ட அசுரன் என்றும் அர்த்தம். மது என்ற அசுரனை பகவான் கொன்றவரா யிருந்த போதிலும் சிலேடையால் வசந்தனையும் சம்ஹரித்தவர் என்ற அர்த்தத்தையும் எடுத்துக் கொண்டு,அதனால் தனது சுஹிருத்தான வசந்தனை பகவான் கொன்றிருப்பதால் அவனது சுஹிருத்தான நம்மையும் கொன்று விடுவார் என்று மன்மதன் பயந்து வெகுகாலம் வரையிலும் நாராயண னிருக்குமிடம் செல்லாமலிருந்தான், ஸ்ரீலக்ஷ்மீ கடாஷ பலத்தால் பிறகு ஐயித்தான் என்ற கருத்தைக் கொள்ள வேண்டும்.)

தத்பாத் தயாநுபவநோ த்ரவிணாம்புதாரா
மஸ்மிந் நகிஞ்ச விஹங்க ஸிஸவ் விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநீ நயநாம்புவாஹ : 1 (8)

தயையாகிற அனுகூலமானகாற்றை யுடையதாய் இருக்கிற ஸ்ரீ மந்நாராயணனின் பத்னியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியினுடைய கண்களாகிற நீருண்ட மேகமானது கஷ்டப்படுகின்ற இந்த ஏழையான சாதகக் குஞ்சினிடத்தில் வெகு காலமாய்(இருந்து வருகின்ற) பாபங்களாகிற கோடையை வெகு தூரத்தில் விலக்கி சம்பத்தாகிற மழையைக் கொடுக்க வேண்டும்-

ஹே ஸ்ரீ தேவியே! அனுகூலமான காற்றினால் தூண்டப்பட்ட நீருண்ட மேகம் அதிகமாய் மழையைப் பொழிந்து தாகத்தைப் பொருத்துக் கொள்ள சக்தி யற்ற சாதக சிசுவிற்கு நீண்ட கோடைக் காலத்தால் ஏற்பட்ட தாஹத்தைத் தீர்த்து எவ்விதஞ் சுகத்தைக் கொடுக்குமோ
அவ்விதம் தங்களுடைய கடாக்ஷமானது ஏழையான என் விஷயத்தில் தயையால் ஏவப்பட்டதாய்க் கொண்டு அதிகமான ஸம்பத்தை வர்ஷித்து வெகு காலமாய் அனுபவிக்கப்பட்டு வருந் தாரித்திரிய கஷ்டத்தை விலக்கி சுகத்தைக் கொடுக்க வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

இஷ்டா விஸிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
தருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா : (9)

பூஜை செய்வதின் முறையை நன்றாய் யறியாத புத்தியை யுடையவர் களாயினும் உனது பக்தர்கள் எந்த தயா ரஸத்தால் நனைந்த கடாக்ஷத்தால் ஸ்வர்க்கத்தை (பரம பதத்தை) –
சிரமமின்றியே அடைகிறார்களோ நன்றாய் மலர்ந்த தாமரைப் புஷ்பத்தினுடைய மத்தியின் சோபையை யுடையதும் தாமரைப் புஷ்பத்தை ஆஸனமாயுடைய ஸ்ரீ தேவியினுடையதுமான அந்த கடாக்ஷமானது எனக்கு விரும்பிய புஷ்டியை செய்யட்டும்-

ஹே ஸ்ரீ தேவியே ! சாஸ்திரங்களிற் சொல்லிய முறைப்படி ஆராதனஞ் செய்யத் தெரிந்து கொள்ளாமல், அவரவர்களுக்குத் தோன்றியபடி பூஜை செய்யும் பக்தர்களுக்கும் தயா ரஸத்தால் நனைக்கப்பட்ட எந்த தங்களது கடாக்ஷமானது ஸ்வர்க்காதி போகங்களைக் கொடுக்கின்றதோ அத்தகைய மஹிமை வாய்ந்ததும் மலர்ந்த தாமரைப் புஷ்பம்
போலிருப்பதுமான அந்த அழகிய கடாக்ஷமானது தனம் தான்யம் ஸந்தானம் முதலியவைகளின் ஸமிருத்தியைச் செய்யட்டுமென்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

கீர்த்தேவதேதி கருட த்வஜ ஸு ந்தரீதி
ஸாகம்பரேதி ஸிஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நம: த்ரி புவநைக குரோஸ் தருண்யை ( 10)

எந்தப் பரா சக்தியான ஸ்ரீ லக்ஷ்மீ தேவியானவள் படைப்பது, காப்பது,அழிப்பது என்ற லீலையைச் செய்யுங் காலத்தில் ( முறையே) ஸரஸ்வதி தேவி என்றும் நாராயணனின் பார்யை என்றும் சாகம் பரை என்று பெயர் கொண்ட பரமேஸ்வரனின் பார்யை என்றும் வெவ்வேறு நாம ரூபங்களுடனிருக்கிறாளோ அந்த மூன்று லோகத்திற்கும் பிதாவான பகவானுடைய யுவதியான (பத்நியான ) ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்-

எந்த துரீயையான ஸ்ரீ தேவியானவள் உலகங்களைப் படைக்கும் ஸமயத்தில் ஸரஸ்வதீ என்ற பெயருடனும், பரிபாலிக்கும் ஸமயத்தில் ஸ்ரீ லஷ்மீ என்ற பெயருடனும்,ஸம்ஹரிக்குங் காலத்தில் சாகம்பரை என்ற பெயருடனும் விளங்கி படைப்பது காப்பது அழிப்பது என்ற லீலைகளைச் செய்து கொண்டிருக்கிறாளோ அந்த பர ப்ரும்ஹத்தின் மஹிஷியான (சக்தியான) ஸ்ரீ தேவிக்கு மூன்று கரணங்களாலும் நமஸ்காரம் செய்கிறேன் என்று இதனால் கூறப்பட்டது.

ஸ்ருத்யை நமோஸ்து ஸூப கர்ம பல ப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
ஸக்த்யை நமோஸ்து ஸத பத்ர நிகேததாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
–11-

கர்மங்களை அனுஷ்டிக்கும்படி உபதேசித்து, அதன் மூலம் நல்ல பலனை உண்டு பண்ணுகிற வேத மாதாவாய் இருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கூட்டும்-ரூபம்,லாவண்யம், மாதுர்யம் முதலிய நல்ல குணங்களுக்கு ஸமுத்திரமா யிருப்பவளான ரதி தேவியின் உருவமா யிருக்கிற ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சக்தியின் வடிவமாயிருப்பவளும் தாமரைப் புஷ்பத்தை வீடாக வுடையவளுமான ஸ்ரீதேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -புஷ்டியின் ரூபமாயிருப்பவளான ஸ்ரீ மந் நாராயணனின் பத்நியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் –

நமோஸ்து நாளீக நிபாநந்நாயை
நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை 1 (12)

தாமரைப் புஷ்பத்திற்குச் சமானமான முகத்தையுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்காட்டும்-சமுத்திரத்தைப் பிறப்பிடமாயுடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-சந்திரன், அமுதம் இவைகளைச் சஹோதரர்களாக உடைய ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும் -ஸ்ரீ நாராயணனின் பத்னியான ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம் இருக்கட்டும்-
திருமேனியின்-அழகும், உத்தம குலப் பிரஸுதியும், சிறந்த ஸஹோதரர்களுடன் கூடி இருக்குகையும் , அதன் மூலம் அவர்களுடைய திவ்ய ஸ்வபாவாதிகளுடன் கூடி யிருக்குகையும் என்றதால் பதி மூல முண்டான கௌரவமும் தெரிவிக்கப்பட்டதா யறிய வேண்டும்.

ஸம்பத்கராணி ஸகலேந்த்ரி யந்தநாநி
ஸாம்ராஜ்ய தாந விபவானி ஸரோருஹாஷி
த்வத் வந்தநாநி துரிதாஹரணோந் யதாநி
மாமேவ மாதர நிஸ்ரம் கலயந்து மாந்யே
!(13)

அனைவராலும் பூஜிக்கத் தகுந்தவளும் தாமரைப் புஷ்பம் போலுள்ள கண்களை யுடையவளும் ஜகன் மாதாவுமான ஹே ஸ்ரீதேவியே ஸம்பத்தைக் கொடுக்கின்றவைகளும்
எல்லா இந்திரியங்களையும் ஸந்தோஷப்படுத்தக் கூடியவைகளும் சக்கிரவர்த்தியா யிருக்குந் தன்மையைக் கொடுப்பதில் ஸாமர்த்ய முள்ளவைகளும் பாபங்களை நாசம் செய்வதில் தயாராக இருக்கின்றவைகளுமான தங்களை வணங்குவதற்குரிய முயற்சிகள் என்னை எப்பொழுதுமே அடையட்டும்-

ஹே ஸ்ரீ தேவியே ! தங்களை எவன் மூன்று கரணங்களாலும் நமஸ்கரிக்கின்றானோ அவனுக்கு அதிகமான ஸம்பத்து உண்டாகும். எந்த இந்திரியத்திற்கும் கெடுதல் ஏற்படாது. அந்தந்த இந்திரியங்கள் வாயிலாக அனுபவிக்க வேண்டிய ஸூகங்களை அனுபவிக்கலாம். பாபங்கள் விலகிவிடும். சக்ரவர்த்தியாய்க் கூட ஆகி விடலாம். தங்களை நமஸ்கரிப்பதால் இவ்வளவு உத்கிருஷ்ட பலன்கள் ஏற்படுவதாயிருந்த போதிலும் தங்கள் தூண்டுதலில்லா விடில் தங்களை நமஸ்கரிப்பதில் பிரவிருத்தி உண்டாகாது. ஆதலால் ஜகந் மாதாவாக யிருப்பது பற்றி என்னிடம் கிருபை கூர்ந்து நமஸ்காரம் செய்வதில் பிரவிருத்தியை உண்டு பண்ண வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
தவள தராம் ஸூக கந்த மால்ய ஸோபே
பகவதி ஹரி வல்லபே மநோஜ்ஞே
த்ரிபுவந பூதிகரி ப்ரஸீத மஹ்யம் (14)

தாமரைப் புஷ்பத்தை வீடாக உடையவளே ! தாமரைப் புஷ்பத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பவளே மிகவும் வெளுத்ததான வஸ்திரம், சந்தனம், மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற அழகை யுடையவளே நிறைந்த ஐஸ்வரியம், முதலிய ஆறு குணங்களுடன் கூடினவளே விஷ்ணுவுக்குப் பிரியமாயிருப்பவளே! (பத்னியாயிருப்பவளே ) மனதைக் கவருகின்றவளே! மூன்று உலகத்துக்கும் ஸம்பத்தைக் கொடுப்பவளே =என்னையும் பொருட்டு பிரஸன்னையாக ஆக வேண்டும்.

திக்கஸ்திபி : கநக கும்பமுகாவ ஸ்ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமல சாருஜலாப்லு தாங்கீம்
ப்ராதர் நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதி நாத க்ருஹிணீ மம்ருதாப்தி புத்ரீம்
(15)

திக் கஜங்களினால் தங்கக் குடத்தினுடைய முகத்தினால் கொட்டப்பட்ட ஆகாச கங்கையினுடைப்பதும் – சுத்தமானதும் -மனோ ஹரமானதுமான தீர்த்தத்தினால் நனைக்கப்பட்ட அங்கங்களை யுடையவளும் லோகங்களுக்கு மாதாவா யிருப்பவளும் பாற்கடலின் பெண்ணாக அவதரித்தவளும் எல்லா லோகங்களுக்கும் நாதனான ஸ்ரீ நாராயணனுடைய பத்தினியுமான ஸ்ரீ தேவியை காலையில் நமஸ்காரம் செய்கிறேன்

காலையில் எழுந்தவுடன் ஸ்ரீ தேவியை திக் கஐங்கள் தனது துதிக்கையில் தங்க மயமான குடத்தைத் தாங்கி ஆகாச கங்கையின் சுத்தமான தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வதாகவும், ஸர்வ ஜகந் மாதாவாகவும், சமுத்திரத்தின் பெண்ணாகவும், சர்வ ஜகத் பாலகனான ஸ்ரீ நாராயணனுடைய பார்யையாகவும் தியானம் செய்து நமஸ்கரிக்க வேண்டு மென்று இதனால் உபதேசிக்ப்பட்டது-

கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்
கருணா பூர தரங்கிதைர பாங்கை:
அவலோக்ய மாமகிஞ்சநாநாம்
பிரதமம் பாத்ரம க்ருத்ரிமம் தயாயா : (16)

செந்தாமரைக் கண்ணனான நாராயணனுடைய பாரியையான ஓ ஸ்ரீ தேவியே-தயா ரஸப் பிரவாஹத்தால் அலையுள்ள(நிறைந்த) கடாக்ஷங்களால் ஏழைகளுக்குள்ளே சிறந்தவனாயும் தயைக்கு பொருத்தமான பாத்திரமாயுமிருக்கிற என்னைப் பார்க்க வேண்டும்-

ஹே ஸ்ரீ தேவியே! தயையுள்ளவர்களுக்குள் தங்களை முதலாவதாகவும் தீனர்களுக்குள் என்னை முதலாவதாகவும் கணிக்க வேண்டி யிருப்பதால் உண்மையில் மிகவும் ஏழையான என்னிடம் தயா ரஸம் நிறைந்த தங்களுடைய கடாக்ஷத்தைச் செலுத்தி அருள் புரிய வேண்டும் என்று இதனால் பிரார்த்திக்கப்பட்டது.

ஸ்துவந்தி யே ஸ்துதி பிரமீ பிரந்வஹம்
த்ரயீ மயீம் த்ரி புவந மாதரம் ரமாம் !
குணாதிகா குரு தர பாக்யபாஜிநோ
பவந்தி தே புவி புத பாவிதாஸயா : (17)

எவர்கள் இந்த ஸ்தோத்திரங்களால் மூன்று வேத ஸ்வரூபையாயும் மூன்று லோகங்களுக்கும் தாயாயுமிருக்கிறகின்ற ஸ்ரீ தேவியை தினந்தோறும் துதிக்கின்றனரோ ( அவர்கள்) பூலோகத்தில் நல்ல குணங்களால் அனைவர்க்கும் மேலானவர்களாகவும் . –
அதிகமான பாக்கியத்தைப் பெற்றவர்களாகவும் வித்வான்களால் பூஜிக்கத் தகுந்த அபிப்பிராய முள்ளவர்களாகவும் ஆகின்றனர்

எவர்கள் இந்த ஸ்லோகங்களால் ஸ்ரீதேவியைத் தினந்தோறும் ஸ்துதிக்கின்றனரோ அவர்கள் நல்ல ஓழுக்கத்தால் எல்லோருக்கும் மேலாக இருக்கும் தன்மையையும்,
தனம், தான்யம், ஸந்தானம் முதலிய பாக்கியங்களையும், வித்வான்களாற் போற்றத் தக்க புத்தி வலிமையையும் ஸ்ரீ தேவியின் பிரஸாதத்தால் பெற்று இம்மையில் சுகமாய் வாழ்ந்து
மறுமையிலும் ஸ்வர்க்காதி போகங்களை யனுபவிப்பார்கள் என்று இதனால் உபதேசிக்கப்பட்டது.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் அவர்களால் செய்யப்பட்ட கநக தாரா ஸ்தோத்திரம் முற்றிற்று.

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாசர்ய ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –


Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading