மொபைல் வேண்டுமானால் அதற்கு ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டு வேண்டும்.
அந்த சிம்கார்டுக்கு ஒரு பத்து/பன்னிரண்டு அல்லது பதினைந்து (அரசு உத்தரவு போட்டாச்சு) இலக்க எண்கள் வேண்டும்.
அதாவது 965432178567 என்பது போல்.
அப்படி இருந்தால் தான் ஒருவர் தான் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் தான் பேச விரும்பும் நபரிடமே நேரில் பேசலாம்.
சரி அப்படியான நம்பர் ஒன்று பகவானிடம் இருந்தால் எப்படி இருக்கும்
இதோ அப்படியான ஒரு நம்பர் தான் 666555237685 என்ற பன்னிரண்டு இலக்க எண் உள்ளது.
இந்த நம்பரில் பகவானா என எண்ண தோன்றுகிறதல்லவா?
ஆம் இந்த எண்ணால் பகவானின் குணநலன்களை திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்த விருத்தத்தின் முதல் திருமொழியில் அழகான பாசுரமாக பாடியுள்ளார்.
அந்த நான்கு வரி பிரபந்த பாசுரத்தால் பகவானின் அறுபத்து நான்கு குணங்களை அதில் வெளிப்படுத்தி காண்பிக்கிறார்
பகவானுக்கான எண் 666555237685
என சொன்னேன் அல்லவா!
அதை பாசுரமாக காண்போம்.
ஆறுமாறு மாறுமா யோரைந்துமைந்து மைந்துமாய் (666555)
ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய் (23768)
வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய்
ஊறொடோசை யாயவைந்து (5) மாய ஆய மாயனே என பாடியுள்ளார்.
அறுபத்து நான்கு குணங்கள் எப்படி எனில்
6+6+6+5+5+5+2+3+7+6+8+5=64
சரி முதல் 6 ஆறு கருமங்களை அதாவது பிரமாணன் மட்டுமல்ல எல்லா மனிதர்களும்
1)ஓதுதல்
2)பிறருக்கு ஓதுவித்தல்
3)தான் வேள்வி செய்தல்
4) பிறருக்கு வேள்வி செய்வித்தல்
5) தான் பிறருக்கு தான தர்மம் கொடுத்தல்
6) பிறர் நமக்கு தானமாக தர்மமாக கொடுப்பதை ஏற்றுக்கொள்தல்
என அவரவர்கள் செய்பவைகளை எல்லாம் கவனமாய் நிர்வாகம் செய்து கொண்டு உள்ளவன் என்றும்,
இரண்டாவது 6 என்பது ஒரு வருடங்களின் ஆறு ருதுக்களை
அதாவது
1)வசந்த ருது
2)கிரீஷ்ம ருது
3)வருஷ ருது
4)சரத் ருது
5)ஹேமந்த ருது
6)சிசிரருது
ஆகியவைகளை தானே தன்வசமாய் வைத்து கொண்டு நிர்வாகம் செய்துகொண்டும்.
மூன்றாம் 6 என்பது
ஆறுவகை யாகங்களாலே, அதாவது
1)ஆக்நேயம்
2)அக்நீஷோமீயம்
3)உபாம்சுயாஜம்
4) ஐந்த்ரம்
5&6) இரண்டு ஐந்த்ராக்கம்
என கொண்டு நம்மால் ஆராதிக்கத் தகுந்தவனாய் உள்ளான் என்றும்
முதல் 5 என்பது
ஐந்து மஹா யஜ்ஞங்ககளை
அதாவது நாம் செய்யும்
1) தேவ யக்ஞம் ( பகவத் ஆராதனம்)
2)பித்ரு யக்ஞம் (தர்ப்பணம் ச்ரார்த்தம்)
3) பூத யக்ஞம் ( குல தெய்வம் மற்றும் காவல் தெய்வங்கள் ஆராதனம்)
4)மனித யக்ஞம் ( தாய் தந்தை உற்றார் பெற்றாருக்கு செய்யும் கைங்கர்யம்)
5)பிரம்ம யக்ஞம் (ஹோமம் ஆயுஷ்சாந்தி மற்றும் உள்ள சாந்திகள் பூஜைகள்) ஆகியவைகளை ஏற்றுக் கொள்பவனாகவும்
இரண்டாம் 5 என்பது
ஐந்து பஞ்சாஹுதிகளை நம் உடலில் உள்ள
1)ப்ராண
2)அபாந
3)ஸ்வாந
4)உதாக
5)ஸாமநங்களென்கிற
ஐந்துக்கும் செய்யப்படுகிற பஞ்சாஹுதிகளை ஏற்றுகொள்ள தகுந்தவனாகவும்
மூன்றாம் 5 என்பதை
ஐந்து பஞ்சாக்நிகளை அதாவது 1)கார்ஹபத்யம்
2)ஆஹவநீயம்
3)தக்ஷிணாக்கி
4)ஸப்யம்
5)ஆவஸத்யம்
ஆகியவைகளை தன்னுடத்தே சரீரமாகக் கொண்டவனாகவும்
அடுத்த எண் 2
அதாவது உயிர்களுக்கு ஞானம் விரக்தி ஆகிய இரண்டையும் அளிக்க வல்லவனாகவும்
அடுத்த எண்ணான 3
அதாவது மூன்றுவிதமான பக்திகளை அதாவது
1)பரபக்தி
2)பரஞானம்
3)பரம பக்தி
என்ற பக்திகளை கொடுக்க வல்லவனாக
முதலாவதான பரபக்தி என்பது நாம் எம்பெருமானை நேரில் காணவேண்டும் என்கின்ற ஆவல்.
அப்படியே அவனை நேரில் கண்டால் இரண்டாவதான பரஞானம் கிட்டும்.
பின்பு அந்த ஞானத்தையே மேன்மேலும் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல்.
மூன்றாவதான பரமபக்தி ஆக உயிர்களுக்கு இம்மூன்றையும் கொடுப்பவனாகவும்
அடுத்த எண்ணான 7
என்பது உயிர்களின் ஏழு விவேகாதிகளான ஏழுக்கும்
அதாவது
1)விவேகம்
2)விமோகம்
3)அப்யாசம்
4)க்ரியை
5)கல்யாணம்
6)அநவஸாதம்
7) அநுத்தர்ஷம்
குணங்களையும் நிர்வாகம் செய்துகொண்டிருப்பவனாகவும்
அடுத்த எண்ணான 6
உயிர்களுக்கு ஏற்படும் ஆறு குணங்களை
1)ஞானம்
2) பலம்
3)ஐச்வர்யம்
4) வீர்யம்
5) சக்தி
6)தேஜஸ்
ஆகியவைகளை கொடுப்பவனாகவும் அவைகளை நிர்வாகம் செய்துகொண்டு இருப்பவனாகவும்
அடுத்த எண்ணான 8
எட்டு விதமான உயிர்களுக்கு ஏற்படும் குணங்கள் இல்லாதவன் அதாவது
1) அபஹதபாப்மா-பாபஸம்பந்தமற்றவன்
2)விஜர -கிழத்தனமற்றவன்
3)விம்ருத்யு – மரணமற்றவன்
4)லிசோக – சோகமற்றவன்
5)விஜிகத்ஸ -பசியற்றவன்
6)அபிபாஸ -தாஹமற்றவன்
7)ஸத்யகாம -ஆச்ரிதர்க்கு அநுபாவ்யமான குண விபூதிகளையுடையவன்
8)ஸத்யஸங்கல்ப – ஒன்றிலும் வீணாகாத ஸங்கல்பத்தையுடையவன் என பல குணங்களை கொண்டிருப்பவனாய்
உலகில் மனிதர்களால் பலபலவாகச் சொல்லப்படுகிற சமயங்கட்கு காரண கர்த்தாவாய்
அவனை உணர்ந்த அவனை கண்ட ஞானிகளுக்கு மெய்யனாய்
அவனை ஏற்காத அல்லது உணராத அல்லாதார்க்குப் பொய்யனாய்
அடுத்த கடைசி எண்ணான 5
ஐந்தும் ஆய குணங்களால் அதாவது
1)ஒலி
2)தொடுஉணர்வு
3)உருவம்
4)சுவை
5) நாற்றம்/மணம் போன்ற
பஞ்ச குண விஷயங்களுக்கு அப்பாற்பட்டவனாய் அவைகளை நிர்வாகம் செய்துகொண்டு இருப்பவானக இருந்து கொண்டுள்ளவனே
அப்படியான மாய ஆய மாயவனே
அப்படியான 64?
மாயங்களை செய்து கொண்டே ஆயர்குலத்தில் வந்து பிறந்தவனே கண்ணா என பாசுரத்தை ஆரம்பித்து சரண்டைகிறார்.
அன்பர்களே பகவானின் இந்த அறுபத்து நான்கு குணங்களை எண்ணி அவனை இடைவிடாது பக்தி செய்தால் கண்டிப்பாக நம்முள் வந்து நம்மிடம் பேசுவான்
என்ன இந்த நம்பரை திருமழிசை ஆழ்வாரை முன்னிட்டு கொண்டு பகவானை சரணடைவோமாக
இரண்டாம் பாட்டு -அவதாரிகை
சஹ யஜ்ஞ்ஞைஸ் பரஜாஸ் ஸ்ரஷ்ட்வா –(ஸ்ரீ கீதை -3) என்கிறபடியே காரண பூதனான உன்னாலே
ஸ்ரேஷ்டமான சேதனருக்கு கர்ம யோகம் முதலாக பரம பக்தி பர்யந்தமான பகவத்
சமாராதநத்துக்கும் -சுபாஸ்ர்யம் ஆகைக்கும் –அந்த பரபக்தி உக்தருக்கு சர்வவித
போக்யம் ஆகைக்கும் கிருஷ்ணனாய் வந்து ரஷிக்கும் உன்னுடைய நீர்மையை யார் நினைக்க
வல்லர் -என்கிறார்-
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞாநமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய் வாய மாயனே –2-
பொழிப்புரை:
ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களில் கூறப்பட்டுள்ள பல வஸ்துக்களைக் குறிப்பிட்டு
இந்த பாசுரம் அவற்றின் காரணகர்த்தா நாராயணனே என்று ஸ்தாபிக்கிறது .
ஆறு வகை நியமனங்களான (1) அத்யயனம் (2)அத்யாபனம் (3) யஜனம் (4) யாஜனம் (5) தானம் (6) பிரதிக்கிரஹம் ,
மற்றும் ஆறு வகை காலங்களான (1) வசந்தம் (2) கிரீஷ்மம் (3) வர்ஷம் (4) ஸரத் (5) ஹேமந்தம் (6) ஸிஸிரம் ,
மற்றும் ஆறுவகை யஞ்ஞங்களான (1) ஆக்ஞேயம் (2) அக்நீஷோமியம் (3) உபாம்சுஜாயம் (4) ஐந்த்ரம் ததி,
(5) ஐந்த்ரம் பய (6) ஐந்த்ரோஞ்ஞயம் என்றவாறு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாவையும் நீயாக இருக்கிறாய் .
ஐவகை ப்ரீதிவஸ்துக்களாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ள (1) தேவ (2) பித்ரு (3) பூத (4) மானுஷ்ய (5) பிரம்மம் ஆகியவைகளாயும் ,
மற்றும் மனித உடலினில் காணப்படும் ஐவகை வாயுக்களான (1) பிராண (2) அபான (3) வ்யான (4) உதான (5) சமான வாயுக்களாயும்
மற்றும் யாகங்களில் இருக்கவேண்டிய ஐவகை தீ ஜ்வாலைகளான (1) கார்ஹபத்யம் (2) ஆஹாவநீயம் (3) தக்ஷினாக்னி (4) ஸப்யம் (5) ஆவஸ்த்யம் என்ற இப் பொருள்களுக்கேல்லாம் உள்ளுறைபவனாக நீயே இருக்கின்றாய் .
சிறந்த குணங்களாக கூறப்பட்டுள்ள (1) இறையறிவு (2) விஷய வைராக்கியம் என்ற இரண்டையும்
உன்னை அடையும் உபாயமான (1) பர பக்தி (2) பரஞ்ஞான பக்தி (3) பரம பக்தி என்ற மூன்றையும் அளிப்பவனாக இருக்கிறாய் .
இந்த உபாயங்களின் முதல் படியை அடைய வேண்டுமென்பார் முதலில் பெறவேண்டிய ஏழு சாதனங்களான
(1) விவேகம், (2) விமோஹம் (3) அப்யாசம் (4) க்ரியா (5) கல்யாணம் (6) அனவசாதனம் (7) அனுத்தர்ஷம்
என்றவற்றையும் கற்ப்பிப்பவன் நீயே.
இவ்வாறு உன்னை அடைபவர்களுக்கு குனாதிசயங்களாக (1) ஞாநம் , (2) பலம், (3) ஐஸ்வர்யம், (4) வீர்யம் (5)சக்தி, (6) தேஜஸ்
ஆகியவைகளையும்
இவர்களது பேற்றின் பிரதி பலன்களாக
(1 & 2)பாவபுண்ணிய மின்மை, (3)சாவின்மை (4) துக்கமின்மை (5) பசியின்மை (6) தாகமின்மை (7) வேட்கையின்மை (8) தோல்வியின்மை
ஆகியவற்றையும் நீயே அளிக்கின்றாய்.
இவ்வகை பேற்றை பெற முடியாத யாவர்க்கும் நீயே பொய்ஞ் ஞானமாகவும் மெய்ஞ் ஞானமாகவும் விதவிதமாக அருளுகிறாய்.
இவ்வாறு கண்டு, கேட்டு, உற்று முகர்ந்தது, உண்டு அறியப்படும் எல்லா வித ரசங்களாகவும் இருக்கும் மாயனே நீ!
வியாக்யானம்
ஆறும் -அத்யயநாதி ஷட் கர்மங்களும்
முதல் ஆறு அந்தணர்களின் ஆறு கர்மங்கள்
அத்யயனம் தானே ஓதுதல்
அத்யாபனம் -ஓதுவித்தல்
யஜனம்-தான் வேள்வி செய்தல்
யாஜனம் -வேள்வி செய்வித்தல்
தானம் -தான் கொடுப்பது
ப்ரதிக்ரஹம் -பிறர் கொடுப்பதை தான் வாங்கி கொள்வது .
ஆறும் -அத்யயநத்தால் ஜ்ஞாதவ்யமான கர்ம அனுஷ்டானத்துக்கு யோக்யமான வசந்தாதி ருதுக்கள் ஆறும்
ஆறுமாய் -அனுஷ்டேயமான ஆக்நேயாதி ஷட் யாகங்களும்
ஆக்நேயம் -அக்நி ஷோமேயம்-வுபாம்ஸு யாஜம் -ஐந்த்ரம் -இரண்டு ஐந்த்ராஞ்ஞம் –
இது சர்வ கர்மங்களுக்கும் உப லஷணம்
இவை ஆறு -என்றது -இவற்றோடு ஈஸ்வரனை சமாநாதிகரித்து –
அத்யயநாதிகளிலே -ததாமி புத்தியோதந்தம் -என்கிறபடியே சேதனரை மூட்டியும்
அவற்றுக்கு ஏக அங்கங்களான காலத்துக்கு நிர்வாஹனாகவும்
அனுஷ்டேய கர்மங்களுக்கு ஆராத்யானும் இருக்கையாலே சமாநாதிகரித்து சொல்லுகிறது
ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
கீழ் சொன்ன கர்மத்துக்கு அதிகார சம்பத்துக்கு உடலாய்
பிரதானமான பஞ்ச மஹா யஞ்ஞத்துக்கும் -பஞ்ச ஆஹூதிக்கும் ஆராத்யனாய் –
பஞ்ச அக்நிக்கும் அந்தராத்மாவாய் இருக்குமவன்
பஞ்ச மஹா யஞ்ஞம் ஆவது -தேவ யஞ்ஞம் -பித்ரு யஞ்ஞாம் -பூத யஞ்ஞம் -மனுஷ்ய யஞ்ஞம் -ப்ரஹ்ம யஞ்ஞம் –என்கிறவை
பஞ்ச ஆஹூதிகள் -ஆவன ப்ராணாத்யாதி ஆஹூதிகள்-.பிராண அபான வ்யான வுதான சமான-
பஞ்ச அக்நிகள் ஆவன -கார்ஹ பத்யாஹவநீய தஷிண அக்நிகளும் சப்யாவசத்யங்களும்-கார்கபத்யம் -ஆகவநீயம் –தஷிணாக்னி-சப்யம் -ஆவஸ்த்யம் –
ஏறு சீர் இரண்டும் –
தர்மேண பாபமப நுததி -என்னும்படியே -விஹித கர்ம அனுஷ்டானத்தாலே -மோஷ விரோதி பாபம் போனால்
இவன் பக்கலில் பிறக்கும் உபாசன ரூப பகவஜ்ஞ்ஞாநமும் –
தத் கார்யமான இதர விஷய வைராக்யம் என்கிற இரண்டு -குணமும்
மாற்பால் மனம் சுழிக்கையும் -மங்கையர் தோள் கை விடுகையும்
மூன்றும் -உபாசன பலமான ஐஸ்வர்ய -கைவல்ய -பகவத் ப்ராப்திகள் –
அன்றிக்கே
ஜ்ஞான வைராக்ய சாத்யமான -பரபக்தி -பரஞான -பரம பக்திகள் மூன்றும் –
ஏழும்
உக்தமான கர்ம யோகாதி பரபக்தி பர்யந்தமான அளவுகளை பலிக்கக் கடவ மநோநை மல்யத்துக்கு
அடியான விவேகாதி சப்தகமும்
-அதாகிறது விவேக -விமோக -அப்யாச க்ரியா கல்யாணா நவசா தா நுத் தர்ஷங்கள்
அதாகிறது -மநோநை மல்ய ஹேதுவான விவேகாதி சப்தக உக்தமாகிய -க்ரியா சப்த
வாசியமான விஹித கர்ம அனுஷ்டானத்தாலே உபாசன நிஷ்பத்தியை சொல்லுகிறது
விவேகம் -*அன்ன சுத்தி காய சுத்தி )கார்ய சுத்தி
விமோகம் -காமம் குரோதம் இல்லாமை-பற்று இல்லாமை
அப்யாசம்
க்ரியை
கல்யாணம் (உண்மை பேசுதல் கொடை கருணை அஹிம்சை போன்றவை )
அநவசதம் -சோக நிமித்தம் -மனஸை மழுங்காது இருப்பது
அனுதர்ஷம் -சந்தோஷத்தில் தலை கால் தெரியாமல் பொங்காது இருப்பது
எம்பெருமானை சிந்திக்க வேண்டிய மனசுக்கு இவை எல்லாம் தேவை
ஆறும்
உக்த பக்தி வர்த்தகமாய் ஸ்வயம் ப்ராப்யமான ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆறும்
எட்டுமாய் –
அபஹத பாப்மத்வாதி குணாஷ்டகமுமாய் -ஸ்வேன ரூபேண பி நிஷ்பத்யதே -என்கிறபடியே
அபகதபாப்மா -பாப சம்பந்தம் அற்று இருப்பவன்
விஜரக -கிழத் தன்மை அற்று நித்ய யுவாவாக இருப்பவன்
விம்ருத்யக -மரணம் அற்றவன்
விசோக -சோகம் அற்றவன் –
விஜிகத்சக -பசி அற்றவன்
அபிபாசாக -தாகம் அற்றவன் –
சத்ய காம
சத்ய சங்கல்ப
தம்மை தொழும் அடியாருக்கு தம்மையே ஒக்கும் அருள் தருவானே
இது ப்ராப்ய அந்தர்கதம் இறே
வேறு வேறு ஞாநமாகி
நிர்மல அந்தகரணர் அல்லாத பாக்ய ஹீநருக்கும் பாக்ய குத்ருஷ்டி ச்ம்ர்திகளுக்கும் ப்ரவர்தகனாய்-
வணங்கும் துறைகள் பல பல வாக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு புறம் புக்க வாறும்-
மெய்யினோடு பொய்யுமாய்
கீழ் சொன்ன முமுஷுக்களுக்கு மெய்யனாய்
பிரயோஜனாந்த பரரான ஷூத்ரர்களுக்கு பிரயோஜனங்களைக் கொடுத்து தான் அகல
நிற்கையாலே பொய்யனாய்
மெய்யர்க்கே மெய்யனாகும் விதி இல்லா என்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புள் கொடி உடைய கோமான்
ஊறோடு ஓசையாய ஐந்துமாய்
பரமபத்தி உக்தராக இருப்பருக்கு சர்வவித போக்யமாய் இருப்பவன்
ஊறோடு ஓசை என்றது சப்தாதிகள் ஐந்துக்கும் உப லஷணம் –
உண்ணும் சோறு பருகும் நீர் -என்றும்
கண்டு கேட்டு வுற்று மோந்து உண்டு உழலும் ஐம் கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் -என்னக் கடவது இறே
ஆய மாயனே
கோப சஜாதீயனாய் அவதரித்த ஆச்சர்ய பூதனே -அதாவது
தான் நின்ற நிலையிலே நின்று ஆஸ்ரிதருக்கு உபகரிக்கை அன்றிக்கே
திவ்ய மங்கள விக்ரஹத்தை சம்சாரி சஜாதீயம் ஆக்கி வந்து அவதரித்து
உபா சகருக்கு சுபாஸ்ரயமாய் –
ஸித்த உபாய பரிக்ரஹம் பண்ணினாருக்கு விஷயாந்தரங்களில் நின்றும் மீட்டு தானே போக்யமாய்
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து இருக்கும் பரம பக்தி உக்தருக்கு
சர்வவித போக்யமும்
ஆனவன் என்கை
அவதாரம் தான் சாது பரித்ராணத்துக்கும் தர்ம ஸம்ஸ்தாபநத்துக்கும் ஆக விறே
——————————
—————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply