ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-9-7-2-

ஸ்ரீ ஆறாயிரப்படி –9-7-2-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

அவருக்குச் சொல்லும் வார்த்தையை என்று குருகுகளை அழைத்து வைத்து
நடுவே தன் நோவாலே தம்மால் உபேஷிதையாய் என் பந்துக்களாலும் கர்ஹிதையாய் இருக்கும் இவ்விருப்பு என் செய்ய
இவ்விருப்பில் முடிக்கையே நன்று -என்று தன்னிலே சொல்லி இன்னாதாய் –
பின்னையும் அவனை விட மாட்டாமையாலே தாமும் தம் பரிஜனங்களுமாய் இருந்த இருப்புக்கு காண்கைக்கு
நான் அநர்ஹையாய் இழந்து போம் இத்தனையோ என்று கேளீர் என்று கொண்டு
தான் சொல்லப் புக்க வார்த்தையை அவற்றுக்குச் சொல்லி முடிக்கிறாள் –

————

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-7-2-

சில குருகுகளைக் குறித்து திரு மூழிக் களத்து எம்பெருமானுக்கு தாமும் தமக்கு நல்லாருமாய் இருந்த இருப்பை நான் இழந்தே போம் அத்தனையோ -என்று அறிவியுங்கோள் -என்கிறாள் –

நுமரோடும்  பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

உங்களுடைய பந்துக்களோடும் பிரியாதே நீங்களும் உங்களுடைய சேவல்களும் சம்ஸ்லேஷியா நிற்பதும் செய்து பரஸ்பரம் காதலை யுடைய குருகினங்காள் -குருகினங்களைக் குறித்து வார்த்தை சொல்லுகிறவள்-அர்த்த உக்தியிலே அத்தைத் தவிர்ந்து -பந்துக்களாலும் இகழப் பட்டு திரு மூழிக் களத்திலே உறைகிற தம்மாலும் உபேக்ஷிக்கப் பட்டு இருக்கும் இவ்விருப்பில் முடிகையே நன்று என்று தன்னிலே விஷணையாய் மீளவும் அவற்றைக் குறித்து -தாம் தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய ஸம்ஸ்லிஷ்டர் ஆனவர்க்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள் என்று தொடங்கின வார்த்தையை முடியச் சொல்லுகிறாள் –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –9-7-2-

அநந்தரம் -அசாதாரண பரிஜனங்களோடே அனுபாவ்யராய் இருக்கிற தமக்கு நாங்கள் அனுரூபம் அல்லோமோ
என்று கேளுங்கோள் என்று சில குருக்களைப் பார்த்துச் சொல்லுகிறாள் –

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் -அமர் காதல் குருகினங்காள் -சந்த அனுவர்த்திகளான பந்து ஜனங்களோடும்
பிரியாதே சேவலை அணுவிதானம் பண்ணும் நீங்களும் உங்களை அணுவிதானம் பண்ணும் சேவலுமாய் ஸம்ஸலேஷித்து
வர்த்திக்கும்படியான ப்ரணயத்தை யுடைய குருகினங்காள்
அணி மூழிக் களத்து உறையும் எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு–தர்ச நீயமான திரு மூழிக் களத்திலே
நித்யவாஸம் பண்ணுகிற தம்மாலே காதாசித்க சம்ச்லேஷ அநந்தரம் உபேக்ஷிக்கப்பட்டு
அது அடியாக என்னோடு அனுபந்தயம் யுடையவராலும் பழிக்கப்பட்டு
இங்குத்தை இருப்புக்கு என்ன பிரயோஜனம் யுண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –அசாதாரண பரிஜனத்தோடே அங்கே நித்ய வாசம் பண்ணுகிற
தமக்கு நாங்கள் ஆகாமோ -கேளுங்கோள் –

————

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -9-7-2-

சில குருகுகளைக் குறித்து திரு மூழிக் களத்து எம்பெருமானுக்கு தாமும் தமக்கு நல்லாருமாய் இருந்த இருப்பை நான் இழந்தே போம் அத்தனையோ -என்று அறிவியுங்கோள் -என்கிறாள் –

நுமரோடும்  பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

நுமரோடும் பிரியாதே--தமரோடு அங்கு உறைவார்-என்றாய்த்து ப்ராப்ய வஸ்துவைச் சொல்ல நினைக்கிறது -அதுக்கு ஈடாக இவையும் குறை யற்று இருக்கிறபடி -குறைவாளர் கார்யம் குறைவற்றார்க்கு தீர்க்க வேண்டாவோ –
நீரும் நும் சேவலுமாய்-சேவலின் நினைவு அறிந்து பரிமாறும் நீரும் உம்முடைய கருத்து அறிந்து பரிமாறும் சேவலுமாய் -சம்ச்லேஷ ரசம் அறியும் நீங்கள் பிரிந்தாருடைய செல்லாமையும் அறிய வேண்டாவோ -உண்டார்க்கு உண்ணாதார் பசி தீர்க்க வேண்டாவோ –
அமர் காதல் குருகினங்காள் -பரஸ்பரம் பொருந்தின காதல் -ஆசையில் விஸ்லேஷத்தை பலிப்பியாத ஆசை யுண்டாகாதே-ஆசையிலும் குறைவற்று -விஸ்லேஷமும் இன்றியிலே கருத்து அறிந்து பரிமாறவும் கடவதாய் இருக்கப் பெறுவதே நீங்கள் -குருகினங்காள்-என்று தொடங்கின சம்போதித்து வைத்து தொடங்கின வார்த்தை முடியச் சொல்ல மாட்டாத பல ஹானியாலே அர்த்த உக்தியாலே அத்தை முடித்து தான் இருக்கிற இருப்பில் விஷணை யாகிறாள் –
அணி மூழிக் களத்து உறையும்எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு–காதாசித்க சம்ச்லேஷமே ஹேதுவாக பந்துக்கள் கை விட்டார்கள் –காதாசித்கமாக சம்ச்லேஷித்த அளவிலே தாமும் உபேக்ஷித்தார் –பந்துக்கள் கை விட்டதே ஹேதுவாக கைக்கொள்ள வேணும் -பிற்பட்டார்க்கும் காட்டிக் கொடுக்க வந்து நிற்கிற நிலையாகையாலும் கைக் கொள்ள வேணும் -இரண்டும் என்னளவில் உபேஷா ஹேது வாவதே –இங்கு என்-இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் உண்டு -சரீர சமனந்தரத்திலே ஒரு தேச விசேஷத்தில் பெற வேண்டித்தான் ஆறி இருக்கிறேனோ -என்று தன்னில் விஷணை யாய் -பின்னையும் தன் செல்லாமையாலே அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள்
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –தம் பரிஜனங்களோடே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிற தமக்கு நாங்கள் ஆகோமோ என்று கேளுங்கோள்–தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு -அடியார்கள் –குழாங்களை –உடன் கூடுவது என்று கொலோ-என்று இருப்பார் ஆகாரோ -என்று கேளுங்கோள் —

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –9-7-2-

நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2-

அடியார்களுக்கு -உடன் கூடுவது என்று கொலோ என்று அன்றோ பிரார்த்தனை –
அசாதாரண பரிஜனங்கள் உடன் -கூட சேர அர்ஹதை இல்லோமோ
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்–சந்தான வர்த்திகள் -திரு உள்ளபடி -உங்களை அநு விதானம் பண்ணும் -சேவல் –
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்-அமர்ந்த காதல் நித்தியமான காதல் -ஸம்ஸலேஷித்து –
கூடி அமர்ந்த காதல் -தர்ச நியாமான திவ்ய தேசம்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு–எமர்கள் கை விட்ட பின்பும் -பழித்து விலகிய பின்பும்
தம்மால் இழிப்புண்டு-காதா சித்க சம்ச்லேஷம் பண்ணி உபேக்ஷித்த பின்பு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே–தமரோட்டை சகவாசம் -நாங்கள் ஆகாமோ -கேளீர் –

சில குருகு இனங்களைக் குறித்து
தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கும் இருப்பை –தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே – கேளீர் –
நான் இழந்தே போம் இத்தனையோ –என்று அறிவியுங்கோள்-என்கிறாள் –

நுமரோடும் பிரியாதே –
தமரொடும் அங்கு உறைவார் -என்று ஆயிற்று –அடையத் தக்கவனான இறைவனைப் பற்றி சொல்ல நினைக்கிறது –
அப்படியே இவையும் குறைவற்று இருக்கிறபடி –
குறைவாளர் கார்யத்தை குறைவற்றவர் தீர்க்க வேண்டாவோ –உண்டார்க்கு பட்டினி கிடந்தார் பசியினை நீக்குதல் செய்யத் தக்க கார்யம் அன்றோ –

ஸ்ரீ பூமி நீளா நாயகனாய் ஸர்வ மங்கள விக்ரஹாய ஸமஸ்த பரிவாராய  ஸ்ரீ மத் ராமாநுஜாய நம–அவனுக்கும் –நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் -ஆச்சார்யருக்கும்

நீரும் நும் சேவலுமாய் –
சேவல் நினைவு அறிந்து கலக்கும் நீரும்
உம்முடைய கருத்து அறிந்து கலக்கிற சேவலும் -என்றது
கலவியின் இன்பத்தை அறியும் நீங்கள்-பிரிந்தார் உடைய செல்லாமையும் அறிய வேண்டாவோ -என்றபடி –

அமர் காதல் குருகினங்காள் –
ஒன்றுக்கு ஓன்று பொருந்தின காதலை உடைய குருகு இனங்களே -என்றது
ஆசையிலே பிரிவினை உண்டாக்காத ஆசை உண்டே -அன்றோ
ஆசையிலும் குறைவு அற்று-பிரிவு இன்றிக்கே-கருத்து அறிந்து கலக்கவும் கூடியவர்களாய் இருப்பதே-நீங்கள் என் முன்னம் –என்கிறாள் –
குருகு இனங்காள் -என்று விளித்து வைத்து-தொடங்கின வார்த்தையை முடியச் சொல்ல மாட்டாத
பலக் குறைவாலே பாதி வார்த்தையில் அதை முடித்து –தான் இருக்கிற இருப்பிலே துக்கிக்கிறாள் –

எமராலும் பழிப்புண்டு -அணி மூழிக் களத்து உறையும் -இங்கு என் தம்மாலும் விழிப்புண்டு –
ஒரு காலத்தில் உண்டான கலவியின் காரணமாக-உறவினர்கள் கை விட்டார்கள் –
ஒரு காலத்திலேயே உண்டான கலவி அளவிலே தாமும் விரும்ப வில்லை -என்றது –
உறவினர்கள் கை விட்டதே காரணமாக தாம் கைக் கொள்ள வேண்டும்-
பிற்பாடர்க்கு காட்சி கொடுக்க வந்து நிற்கிற நிலையில் ஆகிலும் தாம் கைக் கொள்ள வேண்டும் –
இவ் விரண்டும் என் அளவில் விரும்பாமைக்கு காரணம் ஆவதே -என்கிறார் -என்றபடி –

இங்கு என் –
இவ்விருப்புக்கு என்ன பிரயோஜனம் -என்றது –தம்மைப் பெற்று இருக்கிறேனோ
பந்துக்களைப் பெற்று இருக்கிறேனோ -என்றபடி –
இங்கு உள்ளார் கை விட்டால் பின்பு தம் எல்லைக்குள்-ஆக்கிக் கொள்ள வேண்டாவோ –
சர்வேஸ்வரன் இடத்தில் உட்புக உட்புக -அன்று தொடங்கி-கை விடுவார்கள் அன்றோ இவ் உலகத்தார் –

அவ்வளவில் அதனை விட்டு
பின்னையும் தன் செல்லாமையாலே-அவற்றைக் குறித்து வார்த்தை சொல்லுகிறாள் -மேல்

தமரோடு அங்கு உறைவார்கு –
தம் பரிஜனங்களோடு நித்யவாசம் செய்கிற தமக்கு –

தக்கிலமே கேளீரே –
நாங்கள் ஆகாமோ -என்று கேளுங்கோள் -என்றது-தாமும் தமக்கு நல்லாருமாய் இருக்கிற இருப்புக்கு
அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -2-3-10-என்று-இருப்பார் ஆகாதோ என்று கேளுங்கோள் -என்றபடி –-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading