ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-4-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
கண்டாருடைய நெஞ்சை அபகரிக்கும் படியான அழகிய வேஷத்தைக் கொண்டு திரிபுரத்திலே புக்க படியும்
அஸூரரோடே சேர்ந்து வைதிக ஸ்ரத்தைகளைப் போக்கி அவர்களுக்கு பிராண ஹானி பண்ணின விரகுகளும்
கங்கையை தரித்த ருத்ரன் த்வதநீதன் என்று ப்ரஸித்தமாம்படி நின்றதுவும்
அந்த கரணத்தை யுள்ளே புக்குக் குடைந்து என் ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –5-10-4-
புத்த அவதார வ்ருத்தாந்தம் என்னை மிகவும் நலியா நின்றது என்கிறார்-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
கண்டாருடைய நெஞ்சை அபஹரிக்கும் படியான அழகிய வேஷத்தை கொண்டு த்ரிபுரத்திலே புக்க படியும் -அஸூரரோடே சேர்ந்து வைதிக ஸ்ரத்தைகளைப் போக்கி அவர்களை பிராண ஹானி பண்ணின விரகுகளும்
கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த பிரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா -இத்யாதி பிரகிரியையாலே த்வத் அதீனம் என்னும் இடமும் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும்
அந்தக்கரணத்தை உள்ளே புக்கு குடைந்து என் ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன –
——
ஸ்ரீ பன்னீராயிரப்படி –5-10-4-
அநந்தரம் திரிபுர வாசிகளான அஸூர வர்க்கத்தை அந்தர் பேதாதிகள் பண்ணி முடித்த பிரகாரம்
என் ஆத்மாவை சிதிலமாக்கா நின்றது என்கிறார்
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை-வேதைக வேத்யனாய்க் கொண்டு
வேத பாஹ்ய அஸூத்த ரூபமான க்ருத்ரிம வேஷத்தை கொண்டு
அழகாலும் பக்வதையாலும் ஆப்த புத்தி பிறக்கும்படி போய் த்ரிபுரத்திலே புக்க பிரகாரமும் அங்குத்தை அஸூரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்–உட்புக்குச் செறிந்து சித்த பேதத்தை பண்ணி அவர்களுக்கு உபாஸ்யனான
ருத்ரன் தன்னாலே அவர்கள் பிராணனை அபஹரித்த விரகுகளும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்-சம்ருத்தமான கங்கா ஜலத்தை ஜடையிலே யுடைய ருத்ரனும்
உன் பக்கல் சரீராத்மா பாவத்தால் அப்ருதக் சித்த பிரகாரமானபடி பிராமண பிரசித்தமாக நின்றதுவும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–என் நெஞ்சுக்குள்ளே ஞான விருத்திகள் தோறும் அவஹாகித்து
என் ஆத்மாவை நீராக உருக்கி க்ரஸித்து நின்றன
——
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -5-10-4-
புத்த அவதார வ்ருத்தாந்தம் என்னை மிகவும் நலியா நின்றது என்கிறார் -அனுகூல விஷயத்தில் களவு சொல்லிற்று -இனி பிரதிகூல விஷயத்தில் தன்னை களவு கண்டபடி சொல்லுகிறது
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும்
யதா ஹி சோரஸ் சததா ஹி புத்த -என்கிறபடியே க்ரித்ரிம வேஷத்தை கொண்டு – வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய-என்று வேதார்த்த தத்வ ஞானனானவன் வேத அபிராமாணிக வாதிகள் வேஷத்தை கொள்ளுகை-பாகத்தாலும் அழகிய சந்நிவேசத்தாலும் சென்று புக்க போதே ஆப்தன் என்று விஸ்வஸிக்கும் படி புக்க படியும்
வைதிக ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையோபாதி யாக்கப் புகுகிறவன் ஆகையாலே -பசும் புல்லுச் சாவ மிதியாதே கூசி யடியிட்டுப் புக்க படி
கலந்த சுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
அஸூரர்களோடு சேர்ந்து வைதிக சிரத்தை போம்படி புத்திகளை பேதித்து அவர்களை பிராண ஹானி பண்ணி பிணமாக்கி -இன்னார் கொன்றார் என்று விருது பிடிக்கும் படி நின்ற விரகுகளும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
கங்கையினுடைய நீர் வெள்ளத்தை ஜடையிலே தரித்த ப்ரபாவத்தை யுடைய ருத்ரனும் விஷ்ணுராத்மா என்கிறபடியே சரீரவத் பரதந்த்ரன் என்னும் இடம் ப்ரஸித்தமாம்படி நின்றதுவும் -ருத்ரனையும் தன்னையும் சமமாக சொல்லலாம் படி திரிமூர்த்தி மத்திய ஸ் தியைச் சொல்லிற்று ஆகவுமாம் –
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–
ஞான பிரசரண த்வாரமான மனசிலே புகுந்து அச்சேத்யோயம் அதாஹ்யோயம் என்கிற ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன –
————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –5-10-4-
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4-
திரி புர வாசிகள் -அசுரர்களை -அந்தர் பேதம் செய்து -சாம தான பேத தண்டம் -பிரகாரம் என் ஆத்மாவை சிதிலம் ஆக்கி
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை -பொருந்தாத வேஷம் -வேத வேத்யன் –
ஏறிட்டுக் கொண்டு கிருத்ரிம வேஷம் -அழகாலும் -பேச்சாலும் –
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்-அங்குத்த அச்ய்ரர்கள் இடம் உள் புக்கு கலந்து உள்ளம் பேதம் செய்து -உபாச்யன் ருத்ரனைக் கொண்டே
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்-கங்கை நீர் -கங்காதரன் -விஷ்ணுராத்மா பகவதோ
சரீரி சரீர ஆத்மபாவம் அப்ருதக் சித்த பிரகாரம் பிரமாண சித்தம்
உள்ள முள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.-நெஞ்சுக்குள்ளே -ஞான வ்ருத்திகள் தோறும் அவஹாகித்து உருக்கும்
வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு சென்று திரிபுரத்திலே புகுந்த விதமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர்களுடைய
மனங்களை வேறுபடுத்தி உயிர்களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையையுடைய சிவபிரானும் உன் பக்கல் வேறு
அல்லாதபடி விளங்க நின்றதும், என் மனத்திற்குள்ளே புக்கு என் உயிரை உருக்கி முடிக்கின்றன.
கள்ள வேடம் – புத்த வேடம். அசுரர் – திரிபுரவாசிகள். உள்-ஞானம். புக்கவாறும் உபாயங்களும் விளங்க நின்றதும்
உள் குடைந்து உயிரை உருக்கி உண்ணும் என்க.
பௌத்தாவதாரச் செயல் மிகவும் என்னை நலியா நின்றது என்கிறார்.
அநுகூலர் விஷயத்தில் களவு சொல்லிற்று மேற்பாசுரத்தில்;
பிரதி கூலர் விஷயத்தில் களவு கண்டபடி சொல்லுகிறது இப் பாசுரத்தில்.
கள்ள வேடத்தைக் கொண்டு –
“திருடன் எப்படி ஊரை விட்டுத் துரத்தத் தகுந்தவனோ வேத பாஹ்யனாய்ப் பிரசித்தனாயிருப்பவனும் அப்படியே துரத்தத் தக்கவன்,
“யதாஹி சோர: ஸ ததாஹி புத்த: ததாஆகதம் நாஸ்திகம் அத்ர வித்தி தஸ்மாத்திய: சங்க்யதம: ப்ரஜாநாம் ந நாஸ்திகேந
ஸ்யாத்” என்பது, ஸ்ரீராமா. அயோத். 109 : 34.
இவ்வுலகில் நாஸ்திக்யமானது புத்தனுக்குச் சமானம் என்று அறிந்து கொள்ளவும்;
ஆகையினால், எவன் மனிதர்களுக்குள் அவைதிகன் என்று சந்தேகப் படத்தக்கவனோ
அந்த நாஸ்திகனோடு எதிர் முகமாக இருக்கக் கூடாது” என்கிறபடியே,
வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு
“எல்லா வேதங்களாலும் அறியப்படுமவனும் நானே” என்று வேதப் பொருளாய் விளங்கும் சர்வேச்வரன்,
வேத அப்ராமாணிக வேடத்தைக் கொண்டு. கண்டார் மனங்கள் அடங்கலும் கொள்ளை கொள்ளும்படி
கறுத்து நெய்த்த வடிவும் வடிந்த காதும் இடுக்கின புத்தகமுமாய் நின்ற நிலையைக் காணும் நினைக்கிறது.
‘இவன் சொன்னதற்கு மேற்பட அர்த்தம் இல்லை’ என்று கேட்டார் நெஞ்சிலே தேறும்படி யன்றோ வடிவை இட்டு மயக்கினபடி.
போய் –
‘காலுக்குட்பட்ட அற்பப் பிராணிகள் நோவு படுகின்றன’ என்னும் அச்சம் தோன்றப் பொய்க்க
அடியிட்டுக் கொண்டு போனபடி. என்றது, அவர்கள் தாம் சாஸ்திரங்கட்கு விரோதமானவற்றில் நடக்கச் செய்தேயும்,
முகப்பில் நின்று ஒன்று போலே இருக்க, ‘பர ஹிம்சை செய்யலாகாது, கள் உண்ணலாகாது, பொய் பேசலாகாது,
சிற்றின்பத்தில் ஆசை கூடாது’ என்றாற்போலே சில சொல்லுவர்களாயிற்று,
அவை யெல்லாம் தோற்றும்படிக்குத் தகுதியாகப் போனபடி.
பெருமாள் ‘வனத்திற்கு எழுந்தருள’ என்று புறப்பட, ஜாபாலிகன் மீண்டு புகுரும்படிக்குத் தகுதியாகச் சில வார்த்தைகளைச் சொல்ல,
பெருமாள் சிவிட்கு என்று செவியைப் புதைத்து, ‘வாராய், என்முன்னே நின்று தர்மத்தில் ருசி குலையும் படிக்குத் தகுதியாக
நாஸ்திக வாதம் செய்வதே, உன்னை வெறுக்கிறது என், உன்னைக் கொண்டு காரியம் கொண்ட ஐயரை யன்றோ வெறுப்பது’ என்ன,
‘நாயன்தே! நீர் மீண்டு எழுந்தருளித் திருவபிடேகம் பண்ணி யருளி, ஸ்ரீ பரதாழ்வான் கண்களிலே கண்ணநீரை மாற்றினவாறே,
நான் நாஸ்திகனாகை தவிர்ந்து ஆஸ்திகனாம்படி பாரீர்’ என்ன, அவ்வளவிலே இவனை “ஜாபாலி பிராஹ்மணோத்தமன்” என்றார்கள் அன்றோ.
“ஆஸ்வாஸயந்தம் பரதம் ஜாபாலி: ப்ராம்மணோத்தம: உவாச ராமம் தர்மஜ்ஞம் தர்மாபேதம் இதம் வச:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 108 : 1.
நாங்களும் எல்லாம் நூல் இட்டு இருக்கையாலே, பிராஹ்மணர்கள் என்று கொள்ளுகிறோம் இத்தனை.
பிராஹ்மணனாகிறான் பிரஹ்ம சம்பந்தியானவன் அன்றே; அது உள்ளது இவனுக்கே அன்றோ,
இவ்வளவிலே உலோகாயத மதத்தை உபந்யசித்தான் ஒருவன் அன்றோ.
புரம் புக்கவாறும்-
ஊரைக் கிட்டினவாறே செய்த நியதிகளை யெல்லாம் நினைக்கிறது. என்றது,
விதித்த ஹிம்சையையும் சாமான்ய ஹிம்சையைப் போன்று ஆக்கப் புகுகிறவனாகையாலே,
பசும் புல்லும் சாவமிதியாதே கூசி அடியிட்டுப் புக்கபடி.
கலந்து-
இவர்களிலே ஒருவனாய்ப் புக்கு நின்று இவ் வர்த்தத்தை உபந்யசித்தபடி.
தன் வார்த்தையை நம்புகைக்காக இவர்களோடே ஒரு நீராகக் கலந்து பரிமாறினபடி.
அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு –
அசுரத் தன்மை வாய்ந்தவர்களான இவர்களுக்கு அவைதிக மதத்தை உபந்யசித்து வைதிக சிரத்தையைப் போக்கினானாயிற்று.
ஆயின், இவர்களுக்கு வைதிக சிரத்தை உண்டோ? என்னில்,
“இராக்கதர்களுடைய வீடுகள் தோறும் அக்நி ஹோத்ரங்களும் வேதாத்யயனங்களும் இருக்கின்றன.
கருணை சத்தியம் ஆசாரம் இவைகள் இராக்கதர்களுக்குக் கிடையாது” என்கிறபடியே,
“அக்நி ஹோத்ரா: ச வேதா: ச ராக்ஷஸாநாம் க்ருஹேக்ருஹ தயா ஸத்யம் ச ஸௌசம்ச ராக்ஷஸாநாம் நவித்யதே”-என்பது.
எல்லார்க்கும் சில உண்டாகை தவிரா. தர்ம ருசியுள்ளவை யுண்டாகிலும் குலைந்து போம்படி மதி பேதங்களைச் செய்தானாயிற்று.
உயிர் உண்ட உபாயங்களும் –
இவர்களுடைய உயிர்களைப் போக்கின உபாயங்களும். என்றது,
இவர்களுடைய வைதிக சிரத்தையைப் போக்கிப் பிணத்தினைப் போன்றவராகும்படி பண்ணி,
நின்றான் ஒரு பிக்ஷுகனுக்குங்கூட-பிரம கபாலம் கொண்ட ருத்ரனும் அடிக்கும் படி – மேல்விழலாம் படி அவர்களை அடி அறுத்து,
‘நான் செய்தேன்’ என்று கவி பாடுவித்துக் கொள்ளலாம்படி செய்தபடி.
‘அவன் செய்தான்’ என்று சொல்லா நிற்கச் செய்தேயும் இந்தச் செயல் ஒன்றும் அவன் தலையிலே
சேராதபடி சொன்னபடி பாரீர்;
“அளவிட முடியாத பராக்கிரமத்தை யுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர்
அந்தர்யாமியாக இருக்கிறார்;
“விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ: தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:-என்பது, பாரதம் கர்ண பர்வம்.
“மலை போற் பொறுத்தாரும் தாஅம், பணிவில் சீர்ச் செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல் புகழ் தந்தாரும் தாம்”-என்பது, பரிபாடல்.
அப்படி இருப்பதனாலே, அந்தச் சிவன், திரிபுரங்களை அழிக்குங்காலத்தில் வில்லை வளைத்து
நாணை ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தை மிகவும் பொறுத்துக் கொண்டான்” என்கிறபடியே யன்றோ.
சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக் கொண்டு காரியங் கொண்டதோடு வாசி இல்லை இவனுக்கு.
சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு.
காரண நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று.
முன்பு அவன் தானே செய்வானாகக் கொண்டு எடுத்துப் பார்த்தான் அன்றோ;
அது முடியாதொழிய, பின்னர் இவன் உள்ளீடாய் நிற்கையாலன்றோ செய்து தலைக் கட்ட வல்லனாயிற்று.
பண்டு ஓர் அரசன் “சிவனே பரம் பொருள்” என்று எழுதி, ‘எழுத்திட்டுத் தாருங்கோள்’ என்ன,
அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச் செய்தே,
ஒருவர் வாராய், நீ இந்த ஓலை கெடாமே நோக்கி வைத்தால் அன்றோ இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது;
நீ நினைக்கிற தேவதைக்கு உண்டாவ உயர்வுகள்‘சர்வேச்வரனாலே’ என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன;
ஆன பின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுந்திட்டுப் போகிறேன்;
நாளை ஒரு விவக்ஷிதன் தோன்றி ‘இவன் அறிவீனனாயிருந்தானே!’ என்னக் கேட்பதில்
இன்று நீ நினைத்ததைச் செய்துகொள்ள மாட்டாயோ” என்றார்.
உபாயங்களும் –
அப்போது இருந்து சிந்தித்தவற்றை யெல்லாம் நினைக்கிறது.
‘சர்வேச்வரன் அந்தராத்மாவாய் நிற்கையாலே செய்தான்’ என்றதனால் பலிதமான சிவனுடைய உயர்வு
பகவானுக்கு அதீனப்பட்டது என்றதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘பண்டு ஓர் அரசன்’ என்று தொடங்கி.
‘ஒருவர்’என்றது, கூரத்தாழ்வானை. விவக்ஷிதன்-அறிவுடையவன்.
இங்கு
அவத்தப்புன் சமயச்சொற் பொய்யை மெய்யென்று அணிமிடறு புழுத்தான்தன் னவையின் மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண் டென்று தீட்டும் திருக்கூர வேதியர்கோன் செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணிநீங்க நரகந் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மேனி நம்பெருமாள் அரங்கேசர் ஆடி ரூசல்.-என்ற திருப்பாசுரம் நினைத்தல் தகும்.
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் –
“பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது ஒரு முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று
ஆளவந்தார் அருளிச் செய்ததாகத் திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, -மத்யே விரிஞ்சக்ரீசம் பிரதம -விஷ்ணு அவதாரம் –
சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி மத்திய நிலையைச் சொல்லுகிறது என்றபடி.
இதனை எம்பெருமானார் கேட்டருளி, “அழகிது, அத்தனை தூரம் தேடிப் போக வேணுமோ,
இவன் தன் விஷயத்திலே, முன்பு செய்த உபகாரத்துக்கு ஓர் அளவு உண்டோ,
இதுதானே அமையாதோ” என்று அருளிச் செய்தார்.
கங்கையைத் தன் சடையில் ஏகதேசத்திலே தரித்த பிரபாவத்தை யுடைய சிவனும் உன் பக்கல்
வேறு அல்லாதபடி தோற்ற நின்றமையும். என்றது,
‘சரீரமாக இருப்பவன்’ என்னுமிடம் தோன்ற நின்றபடி.
இங்ஙன் சொல்லுகிறது என்? இதனை ஐக்கியமாகக் கொண்டாலோ? என்னில்,
அங்ஙன் கொள்ளுமன்று
“விஷ்ணு: ஆத்மா – விஷ்ணு அந்தர்யாமியாக இருந்தார்” என்கிற பிரமாணத்திற்கு விஷயமின்றிக்கே ஒழியுமே.
“நலந்திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்,
கலந்திழி புனலால் புகர் படு கங்கை”-பெரியாழ்வார் திருமொழி. 4. 7 : 2.
அவனுடைய சேஷத்வத்துக்கும் இவனுடைய சேஷித்வத்துக்கும் பிரமாணம் ஒரு வெள்ளம் என்கிறார் காணும்.
சிவன் சடையில் கொன்றையும் சர்வேச்வரன் அடியில் திருத்துழாயும் கூடி வந்து இழிகிறபடி.
அலகனந்தா பாகீரதி இரண்டும் கலக்கும் -முடி மலரும் திருவடி துழாயும் கலந்து இரண்டு நிறங்களில் வரும்
கண்டம் என்னும் கடி நகரே பிரமாணம்
அண்டகோளகைக் கப்புறத்ததா யகிலமன் றளந்த-
புண்ட ரீகமென் பதத்திடைப் பிறந்துபூ மகனார்
கொண்ட தீர்த்தமாய் அரன் கொளப் பகிரதன் கொணர-
மண்ட லத்து வந் தடைந்த திம்மாநதி மைந்த.-கம்பராமாயணச் செய்யுள் இங்கு ஒப்பு நோக்குதல் தகும்.
உள்ளம் உள் குடைந்து –
என் மனத்திலே புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் –
“சேதிக்க முடியாதது, எரிக்க முடியாதது” –ஸ்ரீ கீதை. 2 : 24.-என்கிற ஆத்மாவைப் புக்கு அழித்து நோவு படுத்தா நின்றன.
ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.
புத்த அவதார விருத்தாந்தம்
கள்ள வேடம் கொண்டு பொய் புறம் புக்கவாறும் -கதையை அரும் பதத்தில் அருளிச் செய்கிறார்
சில அசுரர்கள் ருத்ரனை நோக்கி தபஸ் பண்ணி -மூன்று பட்டணங்கள் -பெற்று -சஞ்சரிக்கும் -தன்மை –
மூன்றும் கூடினால் பேர் ஆபத்து வரும் என்றான் –
யஜூர் வேதம் -அயஸ்மை-இரும்பால் – ரஜத-பொன் கோட்டை -வெள்ளிக் கோட்டை –
தேவர்களை அந்தணர்களை அழித்து -யாகாதிகள் நடக்காமல் தேவர்களுக்கு பல ஷயம் பிறந்தது –
பட்டணங்கள் -கிட்டவும் போக முடியாமல் -தேவார்கள் ருத்ரன் இடம் பிரார்த்திக்க -நச்சு மரம் ஆகிலும் நட்ட மரங்களை வெட்டுவார் உண்டோ
எனக்கு செய்யப் போகாது என்ன -கூப்பீடு இடம் சென்று விண்ணப்பம் செய்ய
பெரிய திருவடி மேல் ஆரோஹித்து –அசுரர்கள் தர்ம சரத்தை கொண்டு இருப்பதால் தேவர்கள் தங்களால் அழிக்கப் போகாது என்ன
ஒரு அம்சம் மட்டும் கைக் கொண்டு -அசுரர்கள் பலம் பெற்று இருக்க -வ்ருத்த புத்தனாகக் கொண்டு புறப்பட்டு
ஏட்டையும் இடுக்கி கையில் புல்லையும் -தர்பம்
தர்ம நிஷ்டன் வார்த்தை சொல்லி -அவர்கள் இவனை விஸ்வசித்து யாகம் பண்ண -என்ன பலன்
சமித்து எதற்கு -ஹோமம் பண்ண -என்ன -தத்வரம் காஷ்டம் தின்ன பிறக்கும் -புல்லை தின்னும் பசுவே தேவலை -ஹவுஸ் எதுக்கு கேட்டு
தேவர்களுக்கு -கட்டிப் போகும் சோற்றை அங்கு உள்ளார்க்கு கொடுக்க -அவர்கள் உண்ண நம் பசி தீருமோ
எங்கோ ஆஹூதி கொடுத்து அவர்கள் திருப்தி பெற்று உங்களுக்கு பலன்
ஆடுகள் எதுக்கு -ஹோமம் -ஆட்டு வாணிகன் பரம தார்மிகன் காணும் என்று
இப்படி கிருத்ரிம உக்திகளால் பிரமிக்கப் பண்ணி -வார்த்தையை விஸ்வசித்து யாகம் பண்ணினதை விட்டு தர்ம சிந்தனை விட்டு ருத்ரனை சபிக்க
அவன் இடம் இவர்கள் உன்னை தூஷிக்கிறார்கள் -பூமி தேர் -மேரு வில் சர்வேஸ்வரன் அம்பு -சம்ஹரித்தான் –
——————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply