ஸ்ரீ திருவாய் மொழியைக் காத்த குணவாளர் அருளிச் செய்த-ஸ்ரீ பஞ்ச வ்யாக்யானங்கள்-5-10-5-

ஸ்ரீ ஆறாயிரப்படி –5-10-5-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-இந்திரன் க்ருபனாய் வர்ஷிக்க நாநா வர்ணமான
பெரிய மலையை எடுத்து மழை காத்ததும்
ஜகத் ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணினதும் இப்படிச் செய்து அருளின ஆச்சர்யங்களை அநுஸந்திக்கும் தோறும்
என்னுடைய மனஸ்ஸூ நெருப்பிலே புக்க மெழுகு போலே ஒரு காலே முடியாதே நின்று உருகா நின்றது என்கிறார்

———

ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –5-10-5-

ஆஸ்ரித விஷயமாக செய்த சேஷ்டிதங்களும் அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அற வழியா நின்றது என்கிறார் –

உண்ண  வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

ஒருப்படுத்த -சமைத்த
இந்திரன் க்ருத்தனாய் வர்ஷிக்க நாநா வர்ணமான பெரிய மலையை எடுத்து மழை அவர்கள் மேல் படாமே காத்ததும் –
ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளை பண்ணுவதும் செய்து ஜகத் அபிமானியான பிராட்டியோடு சம்ச்லேஷித்து இப்படி செய்து அருளின ஆச்சர்யங்களை அநுஸந்திக்கும் தோறும் என்னுடைய மனஸ் ஸூ நெருப்பிலே புக்க மெழுகு போலே ஒரு காலே முடியாதே நின்று உருகா நின்றது –

———

ஸ்ரீ பன்னீராயிரப்படி –5-10-5-

அநந்தரம் அதி மானுஷ சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் தோறும் என் நெஞ்சு
அக்னி சகாசத்திலே மெழுகு போலே யோகா நின்றது என்கிறார்

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-சபரிகரனான இந்திரனுக்கு புஜிக்கைக்காக பசு ரக்ஷண
தத் பரரான இடையர் சோத்யாகராய்ச் செய்த அடிசிலை கோவர்த்தன ரூபியாய்க் கொண்டு அமுது செய்ததும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்-தாதுக்களால் நாநா வர்ணமாய் பெருத்து இருக்கிற மலையை எடுத்து
ஆராதன பங்கத்தாலே க்ருத்தனான இந்திரன் ப்ரவர்த்திப்பித்த மழையை எடுத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்-இப்படி விசேஷ விஷயம் இன்றியே பூமி உபலஷிதமான
ஜகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து – பிரளயம் வந்தவாறே திரு வயிற்றிலே வைத்து நோக்கி வனாந்தரத்திலே உமிழ்ந்து
அந்நிய அபிமானம் தீர்க்கும்படி அளந்து -அவாந்தர பிரளயத்தில் ஸ்ரீ வராஹ ரூபியாய் இடந்து
பிரளய உத்ருத்தையான பூமியோடு ஸம்ஸ்லேஷித்த ஆச்சர்ய குண சேஷ்டிதங்களுமான இவை
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–இத்தை அநுஸந்திக்கும் காலம் தோறும் என் நெஞ்சானது
ஒருபடிப்பட்ட அக்னியிடத்தில் மெழுகு போலே த்ரவியா நின்றது –

————————————-

ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -5-10-5-

ஆஸ்ரித விஷயமாகவும் சர்வ விஷயமாகவும் பண்ணின சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அழியா நிற்கும் என்கிறார் –

உண்ண வானவர்  கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
சபரிகரனான இந்திரனுக்கு ருஜுக்களான கோபர் சமைத்த வடிசிலை -கோவர்த்தனோ அஸ்மி என்று அமுது செய்ததும் -முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும் -மஹிஷியை பிறருக்கு கொடுத்தால் போலே யாயிற்று ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்துக்கு தேவதாந்த்ர ஸ்பர்சம் -இந்திரன் க்ருத்தனாய் வர்ஷித்தான் -அனுகூலனுக்கு காதா சித்தகமாக வந்தது ஆகையாலே ராவணாதிகளை போலே அழியச் செய்திலன்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
தாதுக்களாலே நாநா வர்ணமான பெரிய மலை–இவர் தாம் அதிலே ஈடுபடுகிறார் -பசிக்ரஹத்தாலே வர்ஷித்தான் ஆகில் -தானே விடுகிறான் -என்று ஆன்ரு சம்சயத்தாலே மலையை எடுத்து ரஷ்ய வர்க்கம் நோவுபடாமல் காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
வேண்டா என்றாலும் தேவதாந்த்ர ஸ்பரிசமும் தவிர அறியாதவர்கள் விஷயத்தில் செய்யுமவை சொல்லுகிறது -அர்த்தித்வாதி நிரபேஷமாக ஜகத்தை பிரதமத்திலே ஸ்ருஷ்டித்து -பிரளய ஆபத்து வந்தவாறே எடுத்து திரு வயிற்றிலே வைத்து நோக்கி -வெளி நாடு காண உமிழ்ந்து -மஹாபலி அபகரிக்க எல்லை நடந்து மீட்டுக் கொண்டு -பின்பு அவாந்தர பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்து -அது எல்லாம் பூமிக்கு அபிமானியான பிராட்டிக்கு ஆகையாலே அவன் விரும்பி அணைக்க அவளோடு சம்ச்லேஷித்து -இப்படி செய்து அருளின ஆச்சர்ய சேஷ்டிதங்களை
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.
எண்ணப் புகுவது -முடிய அனுசந்திக்க மாட்டாது ஒழிவதான பரிவ்ருத்தி தோறும் -நாட்டார் இது அடங்க அனுசந்தித்து உண்டு உடுத்து திரிய -நினைத்தவாறே சிதிலமான நெஞ்சானது அக்னியை அணைந்த மெழுகு போலே நின்று உருகா நின்றும் -முடிவதும் செய்யாதே தரிப்பதும் செய்யாதே நிற்கை -எண்ணுகைக்கு அவசானம் இல்லாமையால் வருகைக்கும் அவசானம் இல்லை –

———

ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி –5-10-5-

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5-

அதி மானுஷ சேஷ்டிதங்களை அனுசந்திக்கும் -சீல வ்ருத்திகள் -அக்னி சகாயம் மெழுகு போலே நெஞ்சு உருகா நின்றது
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-அட்டு குவி சோற்று -அன்ன கூட உத்சவம் -மலைக்கு திரை
உங்கள் கண்ணை மூடுவதே -அஹம் கோவர்த்தநோச்மி
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்-ஏழு நாள்கள் -ஆயர் அஞ்ச அஞ்சா முன் -கல் மாரி-ரஷிக்கும் கோவர்த்தனம் என்று காட்டி –
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்-விசேஷ உபகாரம் முன்பு சொல்லி -மேல்
உலகத்துக்காக சாமான்யமான -உபகார பரம்பரைகள் -அன்யாபிமானம் தீரும் படி அளந்து -அவாந்தர பிரளயத்தில் இடந்து
நைமித்திக்க பிரளயம் -மூன்று லோகங்கள் -அழிந்த -ஆச்சார்யமான குண சேஷ்டிதங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.-நினைக்கும் தோறும் மனஸ் அழியா நின்றதே

தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் உண்ணுவதற்கு ஆயர்கள் சித்தம் செய்த உணவினைப் புசித்ததும், பல நிறங்களையுடைய
பெரிய கோவர்த்தன மலையை எடுத்து மழையைக் காத்ததும், பூலோகத்தை முன்னே உண்டாக்கிப் பிரளய காலத்தில் புசித்து
மீண்டு உமிழ்ந்ததும், திரிவிக்கிரமனாய் அளந்ததும், வராகமாகி இடந்து சேர்ந்ததுமான ஆச்சரியம் பொருந்திய செயல்களை
நினைக்குந்தோறும் என் மனம் அவற்றிலே நிலைபெற்று நெருப்பில் அகப்பட்ட மெழுகினைப் போன்று உருகா நிற்கும்.
வானவர்கோன் உண்ணற்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் என்க. வண்ணம்-வர்ணம். மணந்த-பூமிப் பிராட்டியோடுங்கூடிய:
நெஞ்சு நின்று எண்ணுந்தோறும் எரிவாய் மெழுகு ஒக்கும் என்க.

அடியார்களுக்காகவும் பொதுமையில் எல்லார்க்குமாகவும் செய்த செயல்களை நினைக்குந்தோறும்
என் மனமானது மிகவும் அழியா நின்றது என்கிறார்.

வானவர் கோனுக்கு உண்ண ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-
தான் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் மழையின் பொருட்டு இந்திரனுக்குச் சமைத்த அடிசிலைத் தான் புகுந்து உண்ட அதுவும்.
“நாம் பிறந்து வளருகிற ஊரிலே வேறேயும் ஓர் அடையத் தக்க பொருள் உண்டாகையாவது என்?” என்று,
பொறாமையாலே “வாரீர் கோள், இந்திரனாகிறான் எவன், கண்டறியாதான் ஒருவனோ நமக்கு உதவி செய்யப் புகுகின்றான்;
ஆன பின்பு, மேகங்களும் வந்து பணியும் படிக்குத் தக்கதாய்ப் புல்லும் தண்ணீருமுடைத்தாய்
பசுக்களுக்கும் இடம் கொடுத்து நிற்கிற மலை யன்றோ நமக்கு எல்லாம் கடவது!’ என்று சொல்ல,

ஆயர்கள் ஆகையாலே சொல்லிற்றுக் கேட்பார் சிலரே;
இனி இவன் தானே சொன்னவை மறுக்க ஒண்ணாதபடியாயிருக்குமே;
இம்மலையின் முன்னே இடுங்கோள்” என்ன, அங்கே கொடுவந்து குவித்தார்கள்;
அதனைத் தான் புக்கிருந்து அமுது செய்தான். தனக்கே உரியராயிருப்பாருடைய பொருளை வேறே சிலர்க்குக் கொடுக்கையாவது,
மஹிஷீ ஸ்வேதத்தைப் பிறர்க்குக் கொடுத்த அளவே யன்றோ. அவன் தன் பரிகரத்தோடுங்கூட இதனைக் கொண்டு
திருப்தனாக இருக்க, இதனைத் தான் கைக் கொண்டானாயிற்று.

அவன் குரோதத்தாலே மழை பெய்யும்படி செய்தான்.
வண்ணமால் வரையை எடுத்து மழை காத்ததும் –
அடை கொண்டு பாழ் போக்குவான் ஒருவன் அன்றே.
அடை கொண்டு பாழ் போக்குவான்-ரஷிக்கிறேன் என்று சொல்லி கை விட மாட்டான் -என்றும்
க்ஷேத்ரம் பெற்று பாழாக விட மாட்டானே -என்றுமாம்
“நாம் விரும்பிய பொருளைப் பெற்றோமாகில் என் செய்தால் நல்லது” என்று பொகட்டுப் போகாதே,
பலவிதமான தாதுக்களையுடைத்தாய், ஒருவரால் கணிசிக்க ஒண்ணாத பெரிய மலையை,
சுகுமாரமான கையைக் கொண்டு ஏழு நாள் ஒருபடியே தரித்து,
ஒரு பசுவின் மேலேயாதல் ஓர் ஆயன் மேலேயாதல் ஒரு துளி விழாத படி காத்தும்.
அவனைக் கொல்ல வேண்டியதாய் இருக்கச் செய்தேயும், ‘தேவ சாதியினனான இவனை நலிகிறது என்,
பசிக் கோவத்தாலே செய்தானாகில் தானே கை ஓய்ந்து விடுகிறான், அவ்வளவும்
நம்முடைய பொருளை நாம் கடகிட்டு நோக்குவோம்’ என்று கருணை காரணமாக அவனைக் கொல்லாதே விட்டான்.
‘நம் விபூதியை இவன் நோக்க வல்லன், இவன் கண்ணுடையன்,’ என்றே யன்றோ இவனைத் தான் இங்குத்தைக்கு இட்டது;
கண்ணுடையன்-ரக்ஷணம் செய்பவன் ஆயிரம் கண் உடையவன்
இப்படி இருக்கச் செய்தேயும் இவன் கண்ணறையர் -கண் இல்லாதவன் -செய்வதனைச் செய்தான்.
21 மைல் பரிக்ரமம் துரோணாச்சலம் பிள்ளை கிரி ராஜம் கோவர்த்தன கிரி – கீழே வைக்காமல் போக வேண்டும்
அனுபவித்து உள்ளம் கனக்க கீழே வைக்க -இங்கேயே இருந்தது என்பர் –ஒவ் ஒரு வருஷமும் குறைந்து வருமாம் –

மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள்
‘வேண்டா’ என்றாலும் வேறு தெய்வங்களை வணங்குதல் தவிராதார் ஓர் ஊரார் அளவன்றிக்கே,
இருக்கிற பூலோகத்திலுள்ளார் விஷயத்திற் செய்யுமவற்றைச் சொல்லுகிறது.
விரும்பாமல் இருக்கவே இவற்றை உண்டாக்கி, பிரளய ஆபத்துக்கள் வர இவை நோவு படாதபடி வயிற்றிலே வைத்து நோக்கி,
‘உள்ளே கிடந்து மறைந்து போக ஒண்ணாது’ என்று பார்த்து வெளி நாடு காணப் புறப்பட விட்டு,
பின்பு மஹாபலி போல்வார் கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக் கொடுத்து, பின்பு
அவாந்தர பிரளயங்கொண்ட பூமியை மஹா வராஹமாய் எடுத்துக் கொண்டு ஏறி, இவையெல்லாம்
பிராட்டிப் படுக்கைப் பற்றாகையாலே அவளுக்குப் பிரியமாகச் செய்து அவளோடே கலந்த ஆச்சரியமான செயல்களை.
மணந்த மாயங்கள்-மணத்தல்-கலத்தல்.

எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே –
அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே இவருடைய பாரிப்பு.
எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன் சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி.
தரிக்க எண்ணுவார் -எண்ண சிதிலம் ஆவாரே அதனால் எண்ண மாட்டார் -மாறி மாறி அன்றோ இவர் நிலை –
இதனை நினைத்தே நாட்டார் உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’ என்கிறார்.
அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இரா நின்றதாதலின் ‘நின்றே’ என்கிறார்.

——————————————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி- கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading