ஸ்ரீ ஆறாயிரப்படி –1-9-2-
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-
இப்படி என்னுடைய சூழலிலே வந்து புகுந்து தன்னுடைய திவ்ய சேஷ்டிதங்களையும் ப்ரஹ்மாதி வாங்மனஸாபரிச்சேதயமான தன்னுடைய
கல்யாண குணங்களையும் எனக்கு காட்டி என்னை வசீகரித்து பின்னை என் அருகே எழுந்து அருளினான் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-9-2-
ப்ரஹ்ம ஈஸ நாதிகள் உடைய வாங்மனஸ் ஸூ களுக்கும் அபூமியாய் இருந்து வைத்து -அவர்களுக்காக ஷீரார்ணவ சாயியாய்
தன்னுடைய திரு வவதாரங்களாலும் குண சேஷ்டிதங்களாலும் வசீகரித்து என்னைத் தனக்கு அடிமை யாக்கிக் கொண்டவன்
எனக்கு தன்னோட்டை சம்ச்லேஷ ரஸம் தருகைக்காக என்னருகே வந்து நின்றான் என்று திருப்தராகிறார் –
சூழல் பல பல வல்லான் தொல்லை யங்காலத்து வகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஓசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகிலானே–1-9-2-
சேதனரை எல்லாம் தன் பக்கலிலே அகப்படுத்திக் கொள்ள வல்லவான பல திரு வவதாரங்களை பண்ண வல்லனாய்
வராஹ கல்பத்துக்கு முதலாய் தான் திருவவதரிக்கப் பட்டவன் ஆகையால் -அழகிதான காலத்திலே பிரளய ஆர்ணவ மக்நமான பூலோகத்தை
அதி விலக்ஷணமான அழகை உடைய ஸ்ரீ வராஹமாய் அநாயாசேன எடுத்து அருளி –
ஆர்த்தமாய் அதி ஸூ ந்தரமான கேச பாசத்தை உடையவன் -குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன பிடுங்கினவன் –
——————
ஸ்ரீ பன்னீராயிரப்படி -1-9-2-
அநந்தரம் -அவதார முகத்தாலே ஆஸ்ரித உபகாரகனானவன் என் அருகே யானான் -என்கிறார் –
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-
சூழல் பல பல வல்லான் –ஆஸ்ரிதரை வசீகரிக்கைக்கு ஈடான சூழ்ச்சியை யுடைய அவதாரங்களை -பலவும் -தன் இச்சையாலே -பண்ண வல்லனாய் –
தொல்லை யம் காலத்து உலகை-பழையதாய் -அவதார உபயுக்தமாகையாலே அழகியதான வராஹ கல்பத்தின் முதலிலே பிரளய ஆர்ணவ மக்நமான-லோகத்தை –
கேழல் ஒன்றாகி இடந்த -அத்விதீய வராஹமாய்க் கொண்டு இடந்து எடுத்து
கேசவன் என்னுடை யம்மான்-பிரளய ஜலத்திலே நனைந்த மயிர் அழகை யுடைய என் ஸ்வாமியாய்
வேழ மருப்பை ஒசித்தான் –பிரதிபந்தகமான குவலயா பீடத்தை ஸ்ருங்க பங்கம் பண்ணினவனாய் -இவ்வுபகாரம் –
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்-அதிசயித ஞானரான தேவர்களுக்கும் நினைக்க அரியனாய் -பின்னையும் ஆஸ்ரிதர்க்கு உதவுகைக்காக-
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –அகாதமாய் பெருத்த ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்து அருளினவன் -என்னருகான இடத்திலே ஆனான் –
அருகலில் -என்று ஏழாம் வேற்றுமை
—————
ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -1-9-2-
பர்யந்தத்திலே வந்து நின்ற நிலை சாத்மித்தவாறே என் அருகே வந்து நின்றான் என்கிறார் –
சூழல் பல பல வல்லான் தொல்லை யங்காலத்து வகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஓசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகிலானே–1-9-2-
சூழல் பல பல வல்லான் –
சூழல் என்று அவதாரம் -அத்தை சூழல் என்கிறது சேதனரைத் தப்பாமல் அகப்படுத்திக் கொள்ளுகையாலே
பல பல -ஜாதி பேதமும் -அவாந்தர பேதமும் –
வல்லான் -அஹேதுகமாக பிறக்க வல்லான்
தான் அகப்பட்ட தொரு சூழலைச் சொல்லுகிறார் மேல்
தொல்லை யங்காலத்து வகை
தொல்லை -பழைமை -வராஹ கல்பாதியிலே -அம் காலம் -தன் வடிவை கண்ணுக்கு இலக்காக்கின காலம் –
உலகை -விமுகமான ஜகத்தைப் பற்றக் கிடீர் தன்னை அழிய மாறிற்று
கேழல் ஒன்றாகி-
அத்விதீயமான வராஹமாய் -பின்பு தானே இவ்வடிவு கொள்ள வேணும் என்றாலும் கொள்ள ஒண்ணாத படி அத்விதீயமாய் இருக்கை –
இடந்த-
ஜாதி உசிதமான செருக்கு -பூர்வ அவஸ்தையும் ஸ்ரீ யபதியே இ றே
கேசவன் –
தத் காலத்திலே நனைந்த உளை மயிரும் தானுமாய் இருந்த படி -அதி ஸூ ந்தரமான கேச பாசத்தை உடையனாய் இருக்கை –
என்னுடை யம்மான்-
லோகம் அடங்க ரக்ஷண தர்மத்துக்கு கர்மீ பவித்தது அத்தனை –
இவர் ஒருவருமே அச்செயலுக்குத் தோற்று எழுத்து வாங்கினார்
பிரளயம் கொண்ட பூமியை எடுத்தால் போலே சம்சார ஆர்ணவம் கொண்ட என்னை எடுத்தவன் –
வேழ மருப்பை ஓசித்தான் –
குவலயா பீடத்தின் கொம்பை அநாயாசேன முறித்தால் போலே என் விரோதியைப் போக்கின படி –
இப்படி தனித்தனியே குவலயா பீடத்தின் கையிலே அகப்பட்டு இருக்கிறவன் தான் ஆர் என்னில்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்-
ப்ரஹ்மாதிகள் உடைய வாங்மனஸ் ஸூக்களுக்கு எட்டாதவன்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் –
ப்ரஹ்மாதிகள் ஆபன் நிவ்ருத்திக்காக ஷீரார்ணவத்திலே கண் வளர்ந்தவன்
ஆழம் -உறுத்தாமைக்காக
நெடுமை -தாளும் தோளும் முடிகளும் -என்கிறபடியே கண் வளர இடம் போந்து இருக்கை
அவன் என் அருகிலானே–
அத்தேவர்களுக்கு போலே அதூர விப்ரக்ருஷ்டன் அன்றிக்கே என் அருகே வந்து நின்றான் –
——————
ஸ்ரீ ஈடு முப்பத்தாறாயிரப்படி -1-9-2-
என் பரிசரத்தில் சுற்றுப் புறத்தில் வசித்தவன், அது சாத்மித்தவாறே பொறுத்தவாறே
என் அருகே வந்து நின்றான்,’ என்கிறார்.
——————
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
சாத்மிக்க சாத்மிக்கப் பரிமாறும் என்றதையும் இங்கேயும் ஸூசிப்பியா நின்று கொண்டு –
என் அருகிலான் -என்ற பாதத்தை கடாக்ஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –
————————
சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவன் என் அருகலிலானே–1-9-2-
சூழல் பல பல வல்லான் –
இங்குச் சூழல் என்றது, அவதாரத்தை.
சேதநரை அகப்படுத்திக் கொள்ளுமது ஆகையாலே அவதாரத்தைச் ‘சூழல்’ என்கிறார்.
ஜாதி பேதத்தையும் அவாந்தர பேதத்தையும் நோக்கிப் ‘பல பல’ என்கிறார்.
கர்மம் செய்ய வல்லது அன்று, அனுக்கிரகம் செய்ய வல்லது;
ஆதலின், கர்மம் காரணமாகப் பிறக்குமவனுக்கும் முடியாத பிறவிகளை எடுப்பவன் ஆதலால்,‘வல்லான்’ என்கிறார்.
அவற்றுள், ஒரு சூழல் சொல்லுகிறார் மேல்:
தொல்லை அம் காலத்து உலகைக் கேழல் ஒன்றாகி இடந்த கேசவன்-
ஸ்ரீ வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார்.
‘ஒரு ஸ்ரீ திருவடி, ஸ்ரீ திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ!
உலகை-
சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்;
கேழல்-
தன் மேன்மையோடு அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’என்கிறார்.
ஒன்றாகி-
பின்னர், சர்வ சத்தியான தானே ‘இவ் வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி
இரண்டு அற்றதாய் இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார்.
அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே, நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்;
அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி.
‘பன்றியாம் தேசு’ என்பர் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியார்.
பன்றியின் ஜாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச் செருக்கு.
இடந்த-
ஸ்ரீ யபதி -திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின், ‘இடந்த’ என்கிறார்.
அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு ஏறினான்,’ என்பதாம்.
கேசவன்-
அப்போதைத் திருமேனியும் உளை மயிருமாய் நின்ற நிலையினை நினைந்து. ‘கேசவன்’என்கிறார். கேசம் – மயிர்.
என்னுடை அம்மான் –
சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்தவன்.
வேழம் மருப்பை ஒசித்தான் –
குவலயாபீடத்தினுடைய தந்தங்களை வருத்தம் இன்றி முறித்தவன்.
அப்படியே, என்னுடைய மத களிறுகளாகிய ஐம் பொறிகளையும் சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி.
விரோதி நிரசன சீலன் என்றபடி
விண்ணவர்க்கு எண்ணல் அரியான் –
தனியே குவலயாபீடத்தோடே போர் செய்தவன், பிரமன் சிவன் இவர்கள் மனத்தின் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவன்.
ஆழம் நெடுங்கடல் சேர்ந்தான் –
அந்தப் பிரமன் முதலாயினாருடைய கூக் குரல் கேட்கத் திருப் பாற் கடலிலே சாய்ந்தருளினவன்.
உறுத்தாமைக்கு ஆழமும்,
‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி’ வேண்டினபடி கண் வளர்ந்தருளுகைக்கு நெடுமையும் கூறுவார்,
‘ஆழ நெடுங்கடல்’ என்கிறார்.
அவன் என் அருகலிலான் –
‘பிரமன் சிவன் முதலானவர்கட்குப் போல, அதூர விப்ரக்ருஷ்டமாயும் -சேய்மையும் அணிமையும் இல்லாத
நடுவிடத்திலும் நிற்கின்றான் இலன், அருகில் இருக்கின்றான்’ என்பார், ‘அருகலிலான்’ என்கிறார்-
‘வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ’ (முதல் திருவந். 47.)
—————–
ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை –
சேதனரை சூழ்ந்து கொள்ளுமவை சூழல்-என்றபடி -கீழ் போலே சூழல் என்றது பரிசர வாசி அன்று –
கேழல் ஒன்றாகி -என்று அவதாரத்தைச் சொல்லுகிற பிரகரணம் ஆகையால் அவதார வாசகம் –
இப்போது ஹர்ஷ தசை ஆகையால் தம்மைச் சூழ்த்துக் கொள்ளுகிற இதுக்கு உபபாதகமாக
அவதாரங்களை அருளிச் செய்கிறார் –
நிர்வேத தசையில் -மம மாயா துரத்யயா -பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ –
நெறி காட்டி நீக்குதியோ இத்யாதிகளை சொல்லுமே –
வல்லான் -புத்தி பூர்வ கரண சாமர்த்தியம் -இச்சா நிபந்தம் -கர்மா நிபந்தம் இல்லையே –
அனுக்ரஹம் நித்யமாமாம் போலே தத் கார்யமான இச்சையும் நித்யம் –
பரார்த்தமாக அநேக அவதாரங்கள் உண்டு என்றபடி –
தோற்றிற்று ஒன்றான வடிவைக் கொண்டாலும் அத்விதீயமாக இருக்குமே –
பன்றியாம் தேஜஸ்ஸூ ஆஸ்ரித அர்த்தமாகத் தன்னை அழிய மாறுகையாலே வந்த தேஜஸ்ஸூ
உலகை இடந்த கேசவன் என்னுடை அம்மான் -என்று கூட்டி பாவம் –
அருகலிலான்-அருகான இடத்திலே யானான் -என்றபடி -அருகல் -அந்திகம் –
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே ஸ்வாமிகள் சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
Leave a Reply