ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள் -ஸ்ரீ திருவெள்ளறை-

(ஶ்வேதகிரி)
மூலவர் ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன்
தாயார் ஸ்ரீ செண்பக வல்லி, ஸ்ரீ பங்கஜவல்லி
தீர்த்தம் திவ்ய கந்தக்ஷீர தீர்த்தம்
விமானம் விமலாக்ருதி விமானம்
மண்டலம் சோழ நாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் திருச்சி
நாமாவளி ஸ்ரீ பங்கஜவல்லீ ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நமஹ

மூலவர் -ஸ்ரீ புண்டரீகாக்ஷன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம் –
தாயார் -ஸ்ரீ பங்கயச் செல்வி -செண்பக வல்லி –
விமானம் -விமலாக்ருதி விமானம்
தீர்த்தம் -குசா மணி கர்ணிகா சக்ர புஷ்கல வராஹ கந்த ஷீர பத்ம -ஆகிய 7 தீர்த்தங்கள்
மங்களா சாசனம் -பெரியாழ்வார் -திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ தேவி நாச்சியாருக்கு ஏற்றம் தரும் இடம் -சிபி சக்கரவர்த்தி படையுடன் இங்கு தண்டு இறங்க -பகவான் ஒரு
வெள்ளைப் பன்றி வடிவத்தில் போக்கு காட்டி புற்றுக்குள் மறந்தார் –
மார்க்கண்டேய ரிஷி சொன்ன படி சிபி சக்கரவர்த்தி பாலால் அபிஷேகம் செய்ய புற்றுக்குள் இருந்து ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள் வெளிப்பட்டார் –
இங்கு இருக்கும் பூங்கிணற்றில் தாயார் தவம் இருந்து பெருமாளைத் திருக் கல்யாணம் பண்ணிக் கொண்டார் –
இங்கு தஷிணாயணம் உத்தராயணம் இரண்டு வாசல்கள் உண்டு -இங்குள்ள ஸ்வஸ்திகா குளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது
திருச்சி துறையூர் மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 20 கிமி தூரம் –

ஸ்வேத கிரி –மலைக்கட்டு க்ஷேத்ரம் / நாச்சியார் பல்லக்கு முன்னே -/ திரு வீதி தட்டு பிரசாதமும் இவளுக்கு /
பூம் கிணற்றில் தவம் இருந்த போர் கொடி வாழியே
கர்ப்ப க்ருஹத்தில் ஆதி சேஷன் கருடன் ஸூர்ய சந்திரர்கள் சேவை
உய்யக் கொண்டார் எங்கள் ஆழ்வான் அவதாரம் இங்கே
3700 பக்தர்கள் குடி ஏற்றி -ஒருவர் குறைய -பெருமாளே உருவம் கொண்டு பக்தர்களில் ஒருவன்
பலி பீடத்தில் திரு மஞ்சனம் பிரசித்தம்
காப்பிட்டார் பெரியாழ்வார் -இந்த திவ்ய தேச மங்களா சாசனம் —
7 புண்ய தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே –
ஸ் வஸ்திகா குளம் வெளியில் சேவிக்க வேண்டும்

தலபுராணம்:- ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம் என்கிறார். அதற்கு லட்சுமி, தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம், நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன் என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர், உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

ஸ்ரீரங்கத்திற்கும் முந்தியதான இதன் தொன்மையைக் குறிக்கவே ஆதிவெள்ளறை என்று இது அழைக்கப்படுகிறது.
திரு என்பது உயர்வைக் குறிக்கும். வெள்ளறை என்பது வெண்மையான பாறைகளாலான மலை என்பதைக் குறிக்கும்.
வடமொழியில் ஸ்வேதகிரி என்றும், உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம் என்றும் பெயர் பெறுகிறது.

அயோத்திக்கு அதிபதியாய் விளங்கிய சிபிச் சக்ரவர்த்தி ஒரு சமயம் தன் படை பரிவாரங்களுடன் வந்து
திருவெள்ளறையில் தங்கி இருக்கும் போது, அங்கு தோன்றிய ஒரு வெள்ளைப் பன்றியைத் (ஸ்வேத வராம்) துரத்த
அது பக்கத்தில் உள்ள ஒரு புற்றில் சென்று மறைந்து விட்டது. இதனைக் கண்டு ஆச்சர்யமுற்ற சிபி
அங்கே தவம் செய்து கொண்டிருந்த மார்க்கண்டேயரை அணுகி வினவ, அவர் சொற்படி பன்றி மறைந்த
அப்புற்றுக்குப் பாலால் திருமஞ்சனம் செய்து வழிபட உடனே பகவான் சிபிச் சக்கரவர்த்திக்கும்,
மார்க்கண்டேயருக்கும் நின்ற திருக்கோலத்தில் காட்சியருளியதாகவும், அதனாலேயே
ஸ்வதே வராஹத் துருவாய் தோன்றினான் வாழியே” என்ற திருப்பெயரும் இப்பெருமாளுக்கு உண்டாயிற்று.

மூலவர்–புண்டரீகாட்சன் (தாமரைக் கண்ணன்) நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தாயார்– செண்பகவல்லி, பங்கயச் செல்வி, உற்சவருக்கும் பங்கயச் செல்வி என்றே திருநாமம்.
விமானம்– விமலாக்ருதி விமானம்
காட்சி கண்டவர்கள்– சிபி, பூதேவி, மார்க்கண்டேயர் ப்ரஹ்மா, ருத்திரன்.
தீர்த்தம்– கோவில் மதிலுக்குள்ளேயே 7 தீர்த்தங்கள் உள்ளன.

1. திவ்ய தீர்த்தம்
2. வராஹ தீர்த்தம்
3. குசஹஸ்தி தீர்த்தம்
4. சந்திர புஷ்கரிணி தீர்த்தம்
5. பத்ம தீர்த்தம்
6. புஷ்கல தீர்த்தம்
7. மணிகர்ணிகா தீர்த்தம்.

மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி வடநாட்டில் வாழ்ந்து வந்து-3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை இங்கே
கொண்டுவந்து குடியேற்றி கோவிலையுங் கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார் சிபிச் சக்கரவர்த்தி.
பிரதிஷ்டை செய்ததும் ஒரு வைஷ்ணவர் காலமாகிவிடவே மிகவும் மனம் வருந்தினார்.-சிபி. சிபிச் சக்கரவர்த்தியின் வேதனையைத் தீர்க்க பகவான்
ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் வேடங்கொண்டு மன்னனிடம் வந்து வேதனைப் படாதே,-என்னையும் சேர்த்தே 3700 என கணக்கிட்டேன் என்று
ஸ்ரீவைஷ்ணவர்களின் மேன்மைக்கு அடையாளமிட்ட திவ்ய தேச இதனால்தான்
“பாங்குடன் மூவாயிரத்து எழுநூற்றாள் வாழியே” என்று தாயாருக்கு திருமொழி உண்டாயிற்று.

இங்குள்ள பூங்கிணற்றில் பகவானை நோக்கி தவம் செய்த பிராட்டிக்கு (பங்கயச் செல்வி) பெருமாள் செந்தாமரைக் கண்ணனாய் காட்சியளித்தார்.
எனவே கிருஷ்ணா வதாரத்தை மறைமுகமாக உணர்த்தும் ஸ்தலம். இதனால்தான். பெரியாழ்வாரும் இங்குள்ள பெருமாளை ஓடிவிளையாடும் கண்ணனாகப் பாவித்து பூச்சூட்டி, நீராட்டி காப்பிட்டு மகிழ்கிறார் தமது பாசுரங்களில்.

பூங்கிட ங்கில் தவம் செய்யும் பொற் கொடியாள் வாழியே
பொரு நீலி வனத்தில் வந்த பூ மகளார் வாழியே
தேங்கு சுனை சூழ்ந்த திரு வெள்ளறையாள் வாழியே
செல்வத்தில் வளர்கின்ற திரு மகளார் வாழியே
பாங்குடன் மூவாயிரத்து எழு நூற்றான் வாழியே
பத்ம தள பர்வதத்தின் மேல் அமர்ந்த பங்கயத்தாள் வாழியே
ஏங்கும் நம்மை ஈடேற்ற இனிது அமர்ந்தான் வாழியே
எழில் பங்கயச் செல்வி இணை அடிகள் வாழியே

இங்கு எழுந்தருளியுள்ள ஜீயர் சுவாமிகளுக்கும் பங்கயச் செல்வி ஜீயர் என்னும் அழகு தமிழ்ப் பெயரே பிராட்டியின் நினைவாக இலங்குகிறது.

இக்கோவிலுக்கு அருகில் “நீலிவனம்” (திருப்பைஞ்ஞீலி) என்னும் கிராமம் உள்ளது.
சிவன் தன்கையில் ஒட்டிக் கொண்ட கபாலம் நீங்குவதற்காக இப்பெருமாளை வழிபட்டதால்,
நீலி வனத்தில் இப்பெருமாளை வழிபட்ட வண்ணமான சிவஸ்தலம் இன்றும் உள்ளது.
பிரம்மனுக்கும் இத்தலத்தில் காட்சி கொடுத்தமையால் மும்மூர்த்திகளும் (மறைமுகமாக) ஒருங்கிட்ட ஸ்தலம்.

இங்கு ஸ்வஸ்திக்குளம் என்று சொல்லப்படும், சக்ரகுளம் ஒன்று உள்ளது. இதில் ஒரு துறையில் குளிப்பவர்களை
இன்னொரு துறையில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

உத்ராயணவாசல், (தை முதல் மார்கழி வரை திறந்திருக்கும்) வழியாகவே பெருமாளை வழிபட வேண்டும்.
6 மாதத்திற்கு ஒரு முறை வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே சென்று எம்பெருமானை வழிபடும் நடைமுறை இங்கு தவறாமல் பின்பற்றப்படுகிறது.

ஸ்ரீதேவி, பூதேவி, சூரிய, சந்திரன், ஆதிசேடன் இவர்கள் மானிட உருவில் இங்கு நின்று பெருமாளை வழிபடுவதாக ஐதீஹம்,
இவ்வமைப்பில் இங்குள்ள திருக்கோலம் கண் கொள்ளாக் காட்சி,
இந்திரனோடு, பிரமன், ஈசன், இமையவரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு வந்து மறைந்தவராய் வந்து நின்றார்,
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை” என்பது பெரியாழ்வாரின் பாசுரம்.

திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களாசாசனம், (மொத்தம் 24 பாசுரம்)
ஸ்ரீ நாதமுனிகளின் சீடரான உய்யக் கொண்டார் என்ற வைணவ மேதாவியும், முற்றுப் பெறாமல் இருந்த
ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்த விஷ்ணு சித்தர் என்ற எங்களாழ்வான், (இவரது மேதா விலாசத்தைக் கண்டு
எம்பெருமானேரே இவரை எங்களாழ்வான் என்று சொன்னதாக ஐதீஹம்)-மேற் குறிப்பிட்ட இருவரும் அவதரித்த ஸ்தலம்

————

ஸ்ரீ பெரியாழ்வார் -1o பாசுரங்கள் மங்களாசாசனம்

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி
உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும் *
கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்
கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி *
மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள் சூழ்
சோலை மலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! *
என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுக ஆடுகவே. –பெரியாழ்வார் திருமொழி -1-5-8-

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம் *
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய்வந்து நின்றார் *
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் *
அந்தியம் போது இதுவாகும் அழகனே! காப்பிட வாராய். –பெரியாழ்வார் திருமொழி -2-8-1-

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம் *
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய்! *
மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திருவெள்ளறை நின்றாய்! *
நன்று கண்டாய் என் தன் சொல்லு நான் உன்னைக் காப்பிடவாராய். பெரியாழ்வார் திருமொழி -2-8-2-

செப்போது மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு *
அப்போது நானுரப்பப் போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய்! *
முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்! *
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய். -பெரியாழ்வார் திருமொழி -2-8-3

கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை யென்றென்று *
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் *
கண்ணனே! வெள்ளறை நின்றாய்! கண்டாரோடே தீமை செய்வாய்! *
வண்ணமே வேலைய தொப்பாய்! வள்ளலே! காப்பிடவாராய்.-பெரியாழ்வார் திருமொழி -2-8-4-

பல்லாயிரவர் இவ் வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் *
எல்லாம் உன் மேலன்றிப் போகாது எம்பிரான்! நீ இங்கே வாராய் *
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச்சுடரே! உன்மேனி *
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்–பெரியாழ்வார் திருமொழி -2-8-5-

கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கரு நிறச் செம்மயிர்ப் பேயை *
வஞ்சிப்பதற்கு விடுத்தானென்பது ஓர் வார்த்தையும் உண்டு *
மஞ்சு தவழ் மணி மாட மதிள் திருவெள்ளறை நின்றாய்! *
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே! காப்பிட வாராய். பெரியாழ்வார் திருமொழி -2-8-6-

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த *
பிள்ளை யரசே! நீ பேயைப் பிடித்து முலை யுண்ட பின்னை *
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்! *
பள்ளி கொள் போது இதுவாகும் பரமனே. காப்பிட வாராய்.–பெரியாழ்வார் திருமொழி -2-8-7-

இன்பமதனை உயர்த்தாய்! இமையவர்க்கு என்றும் அரியாய்! *
கும்பக் களிறட்ட கோவே! கொடுங் கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே! *
செம் பொன் மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால் வளர் பிள்ளாய்! *
கம்பக் கபாலி காண் அங்குக் கடிதோடிக் காப்பிடவாராய்.–பெரியாழ்வார் திருமொழி -2-8-8-

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் *
தருக்கேல் நம்பி! சந்தி நின்று தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் *
திருக் காப்பு நான் உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்! *
உருக் காட்டும் அந்தி விளக்கு இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய். –பெரியாழ்வார் திருமொழி -2-8-9-

போதமர் செல்வக் கொழுந்து புணர் திரு வெள்ளறையானை *
மாதர்க் குயர்ந்த அசோதை மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் *
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் சொன்ன மாலை *
பாதப் பயன் கொள்ள வல்ல பத்தருள்ளார் வினை போமே. -பெரியாழ்வார் திருமொழி -2-8-10-

————

ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்–13 பாசுரங்கள் மங்களாசாசனம் –

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே -பெரிய திருமொழி–5-3-1-

வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய்
இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த்
திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2-

வெய்யனாய் உலகு ஏழு உடன் நலிந்தவன் உடலம் இரு பிளவாகக்
கையில் நீள் உகிர் படையது வாய்த்தவனே எனக்கு அருள் புரியே
மையினார் தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள்
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-3-

வாம்பரி யுக மன்னர் தம் உயிர் செக ஐவர் கட்கு அரசளித்த
காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப நின் காதலை யருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேனது நுகர் திரு வெள்ளறை நின்றானே-5-3-4-

மான வேல் ஒண் கண் மடவரல் மண் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில்
ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள் புரியே
கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு குக்கும் திரு வெள்ளறை நின்றானே –5-3-5-

பொங்கு நீண்முடி யமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான்
அங்கு ஒர் ஆமையதாகிய வாதி நின்னடிமையை யருள் எனக்கு
தங்கு பேடை யோடூடிய மதுகரம் தையலார் குழல் அணைவான்
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே-5-3-6-

ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறு வேறு உக வில்லது வளைத்தவனே எனக்கு அருள் புரியே
மாறில் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த
தேறல் மாந்தி வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-7-

முன் இவ் யெழ் உலகு உணர்வு இன்றி இருள் மிகு யும்பர்கள் தொழுது ஏத்த
அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன வென்று வண்டு இன்னிசை முரல் திரு வெள்ளறை நின்றானே –5-3-8–

ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் முழுதினையும்
பாங்கினில் கொண்ட பரம நின் பணிந்து எழுவன் எனக்கு அருள் புரியே
ஓங்கு பிண்டியின் செம்மலர் ஏறி வண்டுழி தர மா வேறித்
தீங்குயில் மிழற்றும் படைப்பைத் திரு வெள்ளறை நின்றானே —5-3-9-

மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு வுருவனை யாதியை யமுதத்தை
நஞ்சுலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐ இரண்டும்
எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசர் ஆவர்களே -5-3-10-

துளக்கமில்சுடரை அவுணனுடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பிலாரமுதை அமரர்க்கு அருள் விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே. 10-9-4-

மதிட்கச்சியூரகமே பேரகமே பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே –சிறிய திருமடல் – 70

மின்னை யிருசுடரை வெள்ளறையுள் கல்லறை மேற் பொன்னை மரதகதைப் புட்குழி யெம் போரேற்றை –பெரிய திருமடல் – 117-

கல் இருந்தான் தந்தை கமலத்தோன் அக்கமலத்
தில் இருந்தான் தந்தை அரங்கேசன் என்றே தொல்லை மறை
உள் அறையா நின்றமையால் உள்ளமே கள்ளம் இன்றி
வெள்ளறையான் தானே விரும்பு –6-

உள்ளமே
கல் இருந்தான் தந்தை கமலத்தோன் -கைலாச மலையில் இருக்கும் சிவபிரான் உடைய தந்தை பிரமதேவன்
அக்கமலத் தில் இருந்தான் தந்தை
அரங்கேசன்
என்றே தொல்லை மறை உள் அறையா நின்றமையால் கள்ளம் இன்றி வெள்ளறையான் தானே விரும்பு —
ஸ்வேதாத்ரி –

————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

—————

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading