ஸ்ரீ திருமயிலை ஸ்ரீ பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியம்

ஸ்ரீ தேவ விஜயீ பவ
உத்யத்ப அநு ஸஹஸ்ர பாஸ்வர தநும் ஸூப்ர ஊர்த்வ புண்ட்ர உஜ்ஜ்வலம்
கௌஸேய அம்பர ஸோபிநம் ஸூரு சிரஸ் வச்சோபவீத அந்விதம்
முக்தஸ்மேரமுகம் தயாஞ்சி தத்ருசம் பத்தாஞ்சலிம் பாஸ்வரம்
ஸ்ரீ மந்தம் மஹாதாக்க்ய ஸூரி மநகம் ஸம்ஸேவி ஷீயா நிசம்

1- நல்லார் நவில்கின்ற நன் மயிலை மா நகரில் நலமாக நாமுய்ய வந்த பெருமாள்
2- நன்னாரணன் நீங்க மற்றாரும் உற்ற துணை அன்றே நமக்கு என்று உரைத்த பெருமாள்
3-கல்லாத வாதிகளும் அல்லாத மாயிகளும் நில்லாது நீக்கி யருள் நல்ல பெருமாள்
4-கலை வலவர் பலர் வாழும் மயிலை எனும் மா நகரம் தழைத்து ஒங்கக் காதலித்து வந்து உதித்த நற் பெருமாள்

5-எல்லாரும் உய்ய என நல்லான நான் மறையை சொல்லால் தொகுத்து அருள வல்ல பெருமாள்
6-ஏரார்ந்த மணி முடி மேல் சீரார்ந்த துளவணியும் கேசவனார் புகழ் மாலை ஏத்தி யுகந்தருள் பெருமாள்
7-மல்லாண்ட திண் தோளன் மஹிமை சொல்லும் மழிசையர் கோன் மதி பெற்று வாழ்ந்திடவே அருள் செய்த மாண் பெருமாள்
8-மதி பெற்ற ஞானியர்கள் துதி சொல்லி யனு தினமும் தொழுது ஏத்தி உய்ந்திடவே மயிலை நகர் வந்து உதித்தோய்

9-என்னாழி வண்ணன் பால் திருக்கண்டேன் திரு மேனி நிறம் கண்டேன் ஆழி கண்டேன் என்று உரைத்த நா வலவா
10- எம்பிரான் தன் கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
வரு நரகம் தீர் மருந்து கண்டேன் என்று உரைத்த பிரான்
11-மா கடலின் நீருள்ளான் மனத்துள்ளான் மா மலராள் தனத்துள்ளான் என்று உரைத்த தனி ஞானப் பெருங்கடலே
12-மூ உலகும் உண்டு உமிழ்ந்து நீரேற்று மூ வடியால் தாவடி யிட்டு யளந்த பிரான் தாளிணையே யடைந்து உயந்தோய்

13-திருந்திய சீர்ச் செங்கண்மால் திருக்குணமே தாரகமாய் மருந்துமது பொருளுமது அமுதுமதும் என்று உரைத்தாய்
14-அலர் மேலோன் கால் கழுவக் கங்கை நீர் கான்ற கழல் தொழு நெஞ்சே வா வென்று துணை தேடி நின்ற பிரான்
15- மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டுறையும் தண் துளபக் கண்ணனையே காண எண்ணிக் காதலித்த கற்பகமே
16-கரு மா முகில் வண்ணன் கார்க்கடல் நீர் வண்ணன் திரு மா மணி வண்ணன் தேசுரைத்த தேசுடையோய்

17-நால் வேதத்துள்ளானே பாற் கடல் நீருள்ளானே பாம்பணையான் மேலானே என்று என்று போற்றிடுவோய்
18-ஆகாயமூடறுத்து அண்டம் போய் நீண்ட வொரு மா காயப்பெருமானை மதித்து இறைஞ்சும் மாண்புடையோய்
19-வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதமே பணிந்து உய்ந்த பரஞ்சோதி
20-அநந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன் மனம் தனை அணைக் கிடக்குமிது காணீர் என்று உகந்து உரைத்த உத்தமனே

21- ஒரு வல்லித் தாமாரையாள் ஒன்றிய சீர் மார்பனுறை திருவல்லிக்கேணி சென்று தொழுதுகந்த தூ மனத்தோய்
22- எந்தை பெருமான் தன் இணை அடிக்கே யாளாகி மறவாது வாழ்த்தியிடும் மாண்புடைய பெருமானே
23-வாமனனாய் மா வலி பால் மூவடி மண் இரந்து அளந்த நெடுமால் தன் இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளானோய்
24-தெருளாய பிள்ளையாய் யாலிலை மேல் சேர் குழவி யருளாலே யிருளற்ற நெஞ்சுடைய நின்மலனே

25-என் தன் திருமாலே செங்கண் நெடியானே எங்கள் பெருமானே என்று உருகும் எழில் மனத்தோய்
26-தேசுடைய சக்கரத்தாய் சங்கினாய் சார்ங்கத்தாய் வாச மலர்த் துழாய் மாலை முடியான் என்று உகந்து உரைத்தோய்
27-சுடர் ஆழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும் தொடராழி நெஞ்சே என்று உகந்து உரைத்த தூய் மதியோய்
28-விழுதுண்ட வாயானை மால் விடை ஏழ் செற்றானை
வானவர்க்கும் சேயானை வணங்கி உய்ந்த பெருமானே

29- வேங்கடமும் வெக்காவும் வேளுக்கைப் பாடியுமே
உகந்து உறையும் எந்தை கழல் அடைந்து உய்ந்த வேதியனே
30-மறை முடியும் பாற் கடலும் பாடகமும் என் மனமும் குடந்தையுமே குடி கொண்டாய் என்று உரைத்த குணக்கடலே
31-மந்த்ரத்தால் மா கடலைக் கடைந்து அமுதம் அந்தரத்தார்க்கு ஈந்த பிரான் அருளாய் என்று இரந்து ஏத்தும் எழில் மதியோய்
32-கனலாழி வெண் சங்கம் கதை சார்ங்கம் வெஞ்சுடர் வாள் இவை ஏந்தும் பெருமானை இறைஞ்சி உய்ந்த பெருமானே

33- எரி சுடரும் மால் வரையும் எண்டிசையும் அண்டத்து இரு சுடரும் இறையே என்று உகந்து ஏத்தும் உயர் மதியோய்
34-விண் ஒடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான் உள்ளுவார் உள்ளத்தே யுளன் கண்டாய் என்று உரைத்தோய்
35-குன்றம் குடையாக ஆ காத்த கோவலனே குழலூது மணி வண்ணா என்று உரைத்த குணக்கடலே
36-மத களிற்றின் மருப்பு ஓசித்து மேதினியை இடந்து எடுத்த பேரகலப் பேரார மார்வனையே உகந்து உரைப்போய்

37-பல கதிர்கள் பாரித்த பொன் முடியான் அடி இணைக்கே பூரித்துத் துதி மாலை இட்டு அருளும் பூரணனே
38-துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் நரக வாயது கீண்ட நாரணனே என்று அழைப்போய்
39-மா வா யுரம் பிளந்து மா மருதினூடு போய்த் தேவாசுரம் பொருத தேவனையே ஸ்துதி செய்வோய்
40-மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கோள் விடுத்த அணி நீல வண்ணத்தன் அடி பணிந்த அற்புதனே

41- வெக்காவே சேர்ந்தானை மெய் மலர்த் தூய்க் கை தொழுதால் அக்காவே தீவினை என்று ஆய்ந்து உரைத்த அருள் முகிலே
42-விரையார் நறும் துழாய் வீங்கோத மேனி நிரையார மார்வனையே நினைந்து உருகி நின்றானே
43- கொங்கு அணைந்து வண்டறையும் தண் துழாய்க் கோமானை எங்கு அணைந்து காண்டும் இனி என்று நைந்து பெருமானே
44-சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழல் இணையே நிறை செய்து நெஞ்சார நினைந்து உகந்த நின்மலனே

45-உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்தவனை நாடி வலைப்படுத்த வள்ளலே
46-நரகத்தை நம்மை நணுகாமல் காப்பவனாம் நாராயணன் கழலே நாடி நின்ற நா வலவா
47-தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்ட புய கரத்தனை யடைந்து உய்ந்த ஆரமுதே
48-கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே சார் வென்று சதிர் கண்ட கற்பகமே

சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள் காரார் கரு முகிலைக் கண்டு உகந்த கலை வலவா
அல்லன்ன குழலும் அகன்ற முகமும் வில்லன்ன புருவமும் விசால நயனமும்
எள்ளுப் பூ நாசியும் இணை வள்ளக் காதும் சொற் ப்ரணவ மொழியும் சிவந்த அதரமும்
வெள்ளென்ன வேட்டியும் விளங்கு மணி அஞ்சலியும் நேரான புண்டரமும் நிறைந்த மணி வடமும்
கதித்த துடையும் கணை முழந்தாளும் பல்லவப் பவழத்தைப் பழித்த விரலடியுமாய்

தேவரீர் திருமஞ்சனம் கண்டருள வீற்று இருக்கும் இவ்வழகு
ஏதேனும் ஜகன் மோஹனமோ -ஸ்ரீ வைஷ்ணவ ஸர்வ ஸ்வமோ
வேள்வியின் பயனோ வேதாந்த விழுப்பொருளோ
நாங்கள் ஈதென்று அறியா இவ்வழகுடன்
ஊழி தொறும் ஊழி தொறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
முனி ஸார்வ பவ்மனே

1- கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கழல் இணையே
நாள் தோறும் துதித்து இறைஞ்சி நின்ற களை தானோ
2-சென்று குறளுருவாய் முன்னிலம் கைக்கொண்ட முதல்வனையே முப்போதும் மொழிந்து நின்ற களை தானோ
3-திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி இணையே துதித்து நின்ற களை தானோ
4-கற்றுக் குணிலை விளங்கனிக்கு கொண்டு எறிந்தான் வெற்றிப் புகழ்களையே மொழிந்து நின்ற களை தானோ

தேவரீர் திருமஞ்சனம் ஆடி அருள்வதே

ஸ்நாநீயம் கந சார குங்கும லவங்கை லாதிபிர் வாஸிதம்
ஸுவர்ணேஷு கடேஷு ஸுத்த சலிலம் பூர்ணம் புரஸ் திஷ்டதி
கௌஸே யஞ்ச

ஸரஸ் ச ஸாங்க தவளம் சித்தாவயம் கிங்கராஸ்
காருண்யம் கருணா நிதிர் விதநுதாம் ஸ்ரீ மாந் மஹா யோகிராட்

அருளப்பாடு சங்க தாரை பத்ம தாரை ஸஹஸ்ர தாரை உபய வேத கீத மங்கள வாத்யம்

————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading