ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள் -ஸ்ரீ திருக்கரம்பனூர் என்னும் ஸ்ரீ உத்தமர் கோவில் –

மூலவர் -ஸ்ரீ புருஷோத்தமன்- புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
தாயார் —ஸ்ரீ பூர்வா தேவி- பூர்ண வல்லி
விமானம் — உத்யோக விமானம்
தீர்த்தம் -கதம்ப தீர்த்தம்
ஸ்தல வருஷம் -வாழை மரம்
மங்களா சாசனம் -திரு மங்கை ஆழ்வார்

பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா
லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு
காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்
ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே –பெரிய திருமொழி 5-6-2-

கரம்பனூர் உத்தமனை –
வழிக் கரையிலே திரு வாசலுக்கு ஒரு கதவு
இடாதே வந்து கிடக்கிறவனை-

முத்திலங்கு காரார் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழு உண்டும் ஆராது என்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே
முத்துக்கள் ஒளி விடா நிற்பதாய்
கருமை மிக்கு
தான் கரையை அதிக்ரமிக்க கடவது அன்றிக்கே
நிற்கிற நிலையை ஒருவரால்
கொலைக்க ஒண்ணாத படி
அதில் திண்ணியதாய் இருக்கிற கடல்கள் ஏழும்
பூமிக்கு ஆணி அடித்தால் போலே இருக்கிற மலைகள் ஏழுமான
இந்த லோகங்கள் ஏழையும்
தன் வயிற்றிலே வைத்து ரஷிக்கச் செய்தேயும்
ஒன்றும் செய்திலனாய் இருக்கையாலே
உபகாரம் கொண்டார்க்கு
பிரத்யுபகாரம் தேடி
நெஞ்சாறல் பட வேண்டாத படி
இருந்தவனை –

இத்தலம் திருச்சியிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது.
ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம்.

பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது.
பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார்.
பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் இத்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க
இதை யுணர்ந்தபிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க,
பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து
இவ்விடத்தே வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.
பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும்,
சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள
அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.

தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்குபிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில்திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர்.
ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.

மூலவர்–புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார்–பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.
தீர்த்தம்–கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய
அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.
விமானம்–உத்யோக விமானம்
காட்சி கண்டவர்கள்–பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள்,
ஸ்தல விருட்சம்– கதலீ (வாழை மரம்)

மும்மூர்த்திகளும், ஒரே கோவிலுக்குள் எழுந்தருளியுள்ள இக்காட்சி வேறெங்கும் கண்டற்கரியது. எனவே இது ஒரு த்ரிமூர்த்தி தலம்.
பிச்சையெடுத்து வந்த நிலையில் தனது பாத்திரம் (கபாலம்) நிறைந்ததால் பிட்சாடன மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.
எனவே பிட்சாண்டார் கோயில் என்ற மறுபெயரும் உண்டு.

ஜனகர் இங்குள்ள கதம்ப தீர்த்தக்கரையில் ஒரு யாகம் செய்தார்.
யாகத்தில் அவியுணவுகளை நாய் ஒன்று புசித்து மாசுபடுத்திவிட்டதால், அத்தோஷம் நீங்க கதம்ப மரத்தை பூஜிக்குமாறு ஜனகனிடம் முனிவர்கள் கூற,
மீண்டும் யாகத்தைத் துவக்கி கதம்ப மரத்தை பக்தி சிரத்தையோடு வழிபட அரவணையில் அறிதுயிலமர்ந்த கோலத்தில் தனது நாபியில் பிரம்மாவுடனும்,
அருகில் பிட்சாண்ட மூர்த்தியான சிவனுடனும் திருமால் ஜனகனுக்கு காட்சி கொடுத்தார்.
பக்தன் ஒருவனுக்கு மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்த ஸ்தலம் இது ஒன்றுதான்.
மும்மூர்த்திகளையும் ஒருங்கே கண்ட ஜனகர்தான், இங்கு மும்மூர்த்திகளுக்கும் ஆலயம் எடுத்தார் என்று வரலாறும் உண்டு.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம்.
பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

சில மாதவஞ் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பல மாநதியிற் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயனில்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல்-– என்பது பிள்ளை பெருமாளயங்காரின் பாடல்

ஸ்ரீ ரங்கநாதனே ஆண்டுதோறும் இங்கு எழுந்தருளி கதம்ப
தீர்த்தத்தில் தீர்த்தம் சாதிப்பது இன்றும் வழக்கமான விசேடத்திருவிழாவாகும்.

திருமங்கையாழ்வார் கரம்பனூரில் தங்கியிருந்துதான் ஸ்ரீரங்கத்தின் கோவில் மதில், மண்டபம், போன்றவற்றிற்குத் திருப்பணிகள் செய்தார்.
கதம்ப புஷ்கரணியின் வடக்கேயுள்ள தோப்பும், நஞ்செயும் எழிலார்ந்த சோலையும், திருமங்கை மன்னன்
தங்கியிருந்ததின் காரணமாகவே “ஆழ்வார்பட்டவர்த்தி” என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

கரம்பனூரில்” கோயில் கொண்டுள்ள உத்தமனை “தென்னரங்கத்தில்” கண்டேன் என்றார் திருமங்கையாழ்வார்.
இதற்கு வியாக்கியானம் செய்த பெரிய வாச்சான் பிள்ளை “வழிக்கரையிலே” திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்துகிடக்கிறவனை” என்றார்.
எல்லோரும் நடந்து செல்லக்கூடிய வழியாக இருப்பதனால் சேவிப்போர் எந்நேரமும் வரலாம் போகலாம் என்று எண்ணி
தனக்கு கதவு வைத்துக் கொள்ள அவகாசம் இல்லை என்று கதவிடாதே கிடந்து விட்டான் என்பது மற்றும் ஒரு
உரையாசிரியரின் கருத்து.-ஒரு காலத்தில் கதவு இல்லாமல் இருந்த இத்தலத்திற்கு இப்போது கதவு உண்டு.

இந்த ஆலயத்தில் மகாமண்டபத்தில் பிரமனுக்கு உள்ள கோயிலில் சரசுவதி தேவி எழுந்தருளியுள்ளாள்.

ஆண்டுதோறும் வரும் கார்த்திகை திருநாளன்று பெருமாளும் சிவனும் சேர்ந்தாற்போல் வீதி உலா வருவார்கள்.

தாயார் கடாக்ஷத்தால் கபால சாபம் தீர்ந்த இடம் –
இங்கு மும் மூர்த்திகளும் அவரவர் தேவரிமார்களுடன் சேவை சாதிக்கின்றனர் –
பகவான் கதம்ப மரமாக இருந்த போது பிரமன் திரு மஞ்சனம் செய்ய உடனே புருஷோத்தமனாக சேவை சாதித்தார் –
கதம்ப மரமாக இருந்து கதம்ப ரிஷிக்கு சேவை சாதித்த படியால் கதம்பானூர் என்ற பெயர் பெற்று -பின்னாளில் கரம்பனூர் ஆகியது –

கரம்பனூர் உத்தமனை -கலியன் –
சரஸ்வதி இருப்பதால் -கல்விக்கு பிள்ளைகள் கூட்டமாக வந்து சேவிப்பார்கள்
அன்னம் பூர்ணமாக அருளும் தாயார் -கைப்பிடி அன்னம் இட்டு கபால விமோசனம் -பிஷாண்டார் கோயில்
கார்த்திகை திரு நாள் -பெருமாள் ருத்ரன் சேர்ந்து எழுந்து அருளுவார் –
திருக் கண்ண புரத்தில் சிவன் திருக் கோலம் சாத்தி கொள்வார்
ஆழ்வார் பட்டவர்த்தி -அருகில் -இங்கே இருந்து திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் கைங்கர்யம்

தலபுராணம்:- இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன. ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. த‌ம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.

சிலமா தவம் செய்தும் தீ வேள்வி வேட்டும்
பலமா நதியில் படிந்தும் உலகில்
பரம்ப நூல் கற்றும் பயன் இல்லை நெஞ்சே
கரம்பனூர் உத்தமன் பேர் கல் -5-

நெஞ்சே-
சிலமா தவம் செய்தும் -சில பெரிய தவங்களை செய்தும்
தீ வேள்வி வேட்டும் -ஹோம அக்னி யுடைய யாகத்தை செய்தும்
பலமா நதியில் படிந்தும்
உலகில் பரம்ப நூல் கற்றும்
பயன் இல்லை
கரம்பனூர் உத்தமன் பேர் கல் -புருஷோத்தமன் திருநாம சங்கீர்த்தனம் செய்வாய்
புருஷோத்தமன் ஏக தேசம் உத்தமர் கோயில் -என்ற திருநாமம் –
கதம்ப மகரிஷிக்கு பிரத்யஷம் என்பதால் கரம்பனூர்

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading