ஸ்ரீ திருவாய்மொழி நூற்றந்தாதி 

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்களுக்குச்
சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான் –நல்ல
மணவாளமாமுனிவன் மாறன் மறைக்குத்
தணவா நூற்றந்தாதி தான்

இரவும் பகலும், இனிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் அறிய விரும்புபவர்களுக்காக, மணவாள மாமுனிகள் கருணையுடன் தமிழ் வேதமான திருவாய்மொழியின் அர்த்தங்களை, இச்சிறந்த ப்ரபந்தத்தில் நூறு பாசுரங்களாக அந்தாதி க்ரமத்தில் அருளியுள்ளார்.

மன்னுபுகழ்சேர் மணவாள மாமுனிவன்
தன் அருளால் உட்பொருள்கள் தன்னுடனே சொன்ன
திருவாய்மொழி நூற்றந்தாதியாம் தேனை
ஒருவாதருந்து நெஞ்சே! உற்று

நெஞ்சே! நித்யமான புகழை உடைய மணவாள மாமுனிகளால் திருவாய்மொழியின் ஆழ்ந்த அர்த்தங்களை வெளியிடுவதற்காகக் கருணையுடன் அருளப்பட்ட திருவாய்மொழி நூற்றந்தாதி என்கிற தேனைத் தொடர்ந்து பருகுவாயாக.

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும்.

இரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும் தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும் அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார் மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த “எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று அருளிச்செய்தார்.

மூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை) உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

நான்காம் பாசுரம். மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய், அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம் “நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து, தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார். இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

ஐந்தாம் பாசுரம். மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை) என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து – தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து

மிகுதியான ஐச்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும் தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார், அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்; ஸர்வேச்வரன் தன்னுடைய ஒளிவிடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

ஆறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார், எல்லா தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான ஸர்வேச்வரனின் தன்மைகளை “பூர்ணனான ஸர்வேச்வரன், அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக்கொள்வான்; மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி, இவ்வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கியருளினார்.

ஏழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் – அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்; மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்; அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி, அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

எட்டாம் பாசுரம். மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும் எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை

நேர்மை இல்லாதவர்களை, அதாவது தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை, ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேச்வரனின் குணத்தைப் பேசி எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம் தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஒன்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும் குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்

ஸர்வேச்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும் ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார், அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே, ஸர்வேச்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

பத்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத்தன்னை – திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்

திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக்கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான், இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து, தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்; என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.

பதினொன்றாம் பாசுரம். மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப்போலே துன்புறுவதாகச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் – ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து

தன்னடியார்களை அணுகும் ஸர்வேச்வரன் தன்னை மறைத்துக் கொள்ள, ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்; தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்; இப்படிப்பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

பன்னிரண்டாம் பாசுரம். மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல், திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த – வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார் ஸர்வேச்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச்செய்ததை அறிந்து, அவ்வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள், இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

பதிமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா – வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக்குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய ஸர்வேச்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க, பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

பதினான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் – வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!

ஆழ்வார் பரமபதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும் அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்; அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப்பட்டு, பேசப்பட்டார்; அந்தோ!

பதினைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து, திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அந்தாமத்தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் – சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை

ஸர்வேச்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு, திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து, உதாரகுணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

பதினாறாம் பாசுரம். மாமுனிகள், ஈச்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார் தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து – நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்

நித்யவிபூதிக்குத் தலைவனான ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்; அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

பதினேழாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த – வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன் ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச்செய்தார்; இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது; நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும் மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத்திருவடிகளில் சரணடைவாயாக.

பதினெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட – இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்யஸம்ஸாரிகளை நித்யஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்; எம்பெருமானின் இத்தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச்செய்து இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்; இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த – நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.  இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம். தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால், நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

இருபதாம் பாசுரம். மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக அனுபவிப்பதை அருளிச்செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி

முன்பு அருளிச்செய்த, மிகவும் ஒளிவிடும் புருஷார்த்தத்தை அடைய, ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்துவரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை, தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச்செய்தார்; இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

இருபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், திருமாலிருஞ்சோலை என்கிற திருமலையில் எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் வடிவழகை நன்கு அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்

முன்பு, ஆழ்வார் திடமாக இருந்து சிகரங்களை உடைய திருமலையை அனுபவித்து, அங்கே எழுந்தருளியிருக்கும் அழகர் எம்பெருமானின் திருமேனியை, அந்தத் திருமேனியில் அணிந்திருக்கும் திருவபிஷேகம் (கிரீடம்), சதங்கை மற்றும் ஏனைய ஆபரணங்களுடன் சேர்ந்து அனுபவித்தார்.

இருபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், “என்னுடைய கரணங்களின் குறையால் எம்பெருமானின் குணங்களை அனுபவிக்க முடியவில்லை” என்று கலங்க அதை எம்பெருமான் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்னவளவென்ன எனக்கரிதாய்த் – தென்ன
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து

முன்பு, ஆழ்வார் அழகர் எம்பெருமானின் வடிவழகில் மூழ்கினார்; கரணங்களின் குறையால் ஏற்பட்ட அஜ்ஞானத்தால் “எனக்கும் கூட, எம்பெருமானின் அழகை இவ்வளவு என்று அளவுபடுத்தி அனுபவிக்க முடியவில்லையே!” என்ற ஆழ்வாரை ஸமாதானப் படுத்தி, எம்பெருமான் ஆழ்வாரின் கலக்கத்தைப் போக்கினான்.

இருபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், கைங்கர்யம் செய்வதில் தனக்கு இருக்கும் ஆசையை வெளியிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒழிவிலாக் காலம் உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய மாலுக்கு – எழுசிகர
வேங்கடத்துப் பாரித்த மிக்க நலம் சேர் மாறன்
பூங்கழலை நெஞ்சே!  புகழ்

நெஞ்சே! உயர்ந்த சிகரங்களையுடைய திருமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடன் பிரியாமல் இருந்து எல்லாக் காலங்களிலும் குற்றமில்லாத கைங்கர்யங்களைச் செய்ய ஆசைப்பட்டு அதனால் பேரின்பத்தை அடைந்த ஆழ்வாரின் அழகிய திருவடிகளைக் கொண்டாடு.

இருபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் ப்ரார்த்தனைக்கு இணங்க எல்லாப் பொருட்களுக்கும் அந்தர்யாமியாக இருப்பதைக் காண்பிக்க, அதைக் கண்டு அனுபவித்து, வாசிக கைங்கர்யம் செய்யும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

புகழொன்று மால் எப்பொருள்களும் தானாய்
நிகழ்கின்ற நேர் காட்டி நிற்க – மகிழ்மாறன்
எங்கும் அடிமை செய இச்சித்து வாசிகமாய்
அங்கடிமை செய்தான் மொய்ம்பால்

தகுந்த பெருமைகளை உடைய ஸர்வேச்வரன், தான் எல்லா பொருட்களுக்கும் அந்தர்யாமியாய் இருக்கும் நேர்மை என்ற குணத்தை வெளிப்படுத்தினான். இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு எல்லா இடங்களிலும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்ட வகுளாபரணரான ஆழ்வார், மயர்வற மதிநலம் அருளப்பட்டதால் வந்த பெருமையுடன், வாசிக கைங்கர்யத்தைச் செய்தார்.

இருபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்களைக் கொண்டாடியும், அப்படிச் செய்யாதவர்களை நிந்தித்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மொய்ம்பாரும் மாலுக்கு முன் அடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் – அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்
தேடரிய பத்தி நெஞ்சே!  செய்

நெஞ்சே! மிகவும் சக்தி பொருந்திய ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்த ஆனந்தத்தால், அவனிடத்தில் பக்தியுடன் தொண்டு செய்பவர்களைக் கொண்டாடியும் அது செய்யாத மூடர்களை நிந்தித்தும் பேசிய ஆழ்வாரிடம் உயர்ந்த பக்தியைக் கொள்.

இருபத்தஆறாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சாவதாரம் வரை வந்துள்ள எம்பெருமானின் ஸௌலப்யம் (எளிமை) என்ற குணத்தை ஸம்ஸாரிகளுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் – எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று

சேதனர்களுடன் கூடி நன்றாக ஆராயப்படும் தமிழ் வேதத்தையே அடையாளமாகக் கொண்ட ஆழ்வார் “இவ்வுலகில் எம்பெருமானிடத்திலே சரணடைபவர்களுக்கு, உயர்த்தி பொருந்திய பரத்வம், சிறந்த வ்யூஹம், தூய்மையான அவதாரங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் எம்பெருமானின் அர்ச்சாவதாரமே அடைவதற்கு எளிது” என்று அருளிச்செய்தார்.

இருபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் அடியார்களே விரும்பத்துகுந்த குறிக்கோள் என்று பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பயிலும் திருமால் பதம் தன்னில் நெஞ்சம்
தயலுண்டு நிற்கும் ததியர்க்கு – இயல்வுடனே
ஆளானார்க்காளாகும் மாறன் அடி அதனில்
ஆளாகார் சன்மம் முடியா

ஆழ்வார் ச்ரிய:பதியான எம்பெருமானின் திருவடிகளில் மனதை வைத்துத் தொண்டு செய்யும் அடியவர்களுக்குத் தொண்டு செய்ய ஆசைப்பட்டார். இப்படிப்பட்ட ஆழ்வார் திருவடிகளுக்குத் தொண்டு செய்யாதவர்களுக்கு இவ்வுலகில் பிறவி முடியாமல் தொடரும்.

இருப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தானும் தன்னுடைய கரணங்களும் (எம்பெருமானை அனுபவிப்பதில்) மிகவும் ஆசையுடன் இருந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முடியாத ஆசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டு அவன் பால் படியா – ஒன்றொன்றின்
செயல் விரும்ப உள்ளதெல்லாம் தாம் விரும்பத்
துன்னியதே மாறன் தன் சொல்

ஆழ்வாரின் எல்லை இல்லாத அன்பு மேலும் பெருக, அவரின் எல்லாக் கரணங்களும் அடியார்களைவிட்டு ஸர்வேச்வரனை அடைந்தன; ஒவ்வொரு கரணமும் தன் அனுபவத்துக்கு மேல், மற்ற கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட, ஆழ்வார் எல்லாக் கரணங்களின் அனுபவத்தையும் ஆசைப்பட்டார்; இவ்வாறு, ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் நன்கு செறிந்தன.

இருபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடியார் அல்லாதவர்களுக்குத் தொண்டு செய்வது தாழ்ந்தது என்றும் எம்பெருமானுக்குத் தொண்டு செய்வது பொருத்தமானது என்றும் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சொன்னாவில் வாழ் புலவீர்! சோறு கூறைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால் – என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும் எனும் குருகூர்
மன்னருளால் மாறும் சன்மம்

நாக்கில் கவி பாடும் திறன் பெற்ற புலவர்களே! உணவு மற்றும் உடைக்காக, குறைந்த ஆயுளை உடைய மனிதர்களை உங்கள் கவிதைகளால் கொண்டாடுவதால் என்ன பயன்? எல்லோருக்கும் ச்ரிய:பதியைக் கொண்டாடும்படி உபதேசித்த திருக்குருகூரின் தலைவரான ஆழ்வாரின் அருளால், அவர்கள் பிறவி நீங்கும்.

முப்பதாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானுக்காகவே என்னுடைய கரணங்கள் இருப்பதால் எனக்கு ஒரு குறையுமில்லை” என்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சன்மம் பல செய்து தான் இவ்வுலகளிக்கும்
நன்மை உடை மால் குணத்தை நாள் தோறும் – இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை உலகீர்!
நாத்தழும்ப ஏத்தும் ஒரு நாள்

ஆழ்வார் “இவ்வுலகத்தில் வாழ்பவர்களே! பல அவதாரங்களைச் செய்து, இந்த உலகங்களைக் காக்கும் நன்மை உடைய ஸர்வேச்வரனின் கல்யாண குணங்களை எப்பொழுதும் கொண்டாடும் பேரானந்தத்தை இப்பிறவியில் பெற்றேன்” என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை ஒரு நாளாவது பாடி, உங்கள் நாக்கில் தழும்பேறும்படிச் செய்யுங்கள்.

முப்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், ஐச்வர்யம் முதலியவற்றின் தாழ்ச்சி மற்றும் அநித்யமாக இருக்கும் தன்மையினால் உள்ள தோஷங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒரு நாயகமாய் உலகுக்கு வானோர்
இரு நாட்டில் ஏறி உய்க்கும் இன்பம் – திரமாகா
மன்னுயிர்ப் போகம் தீது மால் அடிமையே இனிதாம்
பன்னி இவை மாறன் உரைப்பால்

ஆழ்வார் 1) உலகத்துக்கு ஏக சக்ரவர்த்தியாய் இருந்து பெறும் இன்பம் நிரந்தரமன்று 2) பரந்த ஸ்வர்கத்தில் தேவர்கள் அனுபவிக்கும் இன்பமும் நிரந்தரமன்று 3) நித்யமாக ஆத்மா தன்னையே அனுபவிப்பதும் தீது மற்றும் 4) எம்பெருமானுக்கு அடிமை செய்வது மிகவும் இனியது ஆகியவைகளை ஆராய்ந்து அருளிச்செய்தார்

முப்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெவ்வேறு காலத்தில் ஏற்பட்ட பல அவதாரங்களை அந்தந்த இடம் மற்றும் காலத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பாலரைப் போல் சீழ்கி பரன் அளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால் கை கழிந்த – சால
அரிதான போகத்தில் ஆசை யுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த கோ

ஆழ்வார்திருநகரியில் அவதரித்த தலைவரான ஆழ்வார், எம்பெருமானிடத்தில் இருந்த அன்பால் அவனுடைய முற்காலத்து அவதாரங்களை அனுபவிக்க ஆசைப்பட்டு, அவை வேறு காலம் மற்றும் தேசத்தில் ஏற்பட்டதால், அது கிடைக்காமையால் குழந்தையைப் போலே சிணுங்கினார்; மேலும் அவனுக்குக் கைங்கர்யம் செய்ய மிகவும் ஆசைப்பட்டு (அது கிடைக்காமையால்), மிகவும் வருத்தமுற்றார்.

முப்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் எப்படி காலத்தால் இருந்த தடையை நீக்கி அனுபவத்தைக் கொடுத்தான் என்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கோவான ஈசன் குறை எல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை – மேவிக்
கழித்தடையக் காட்டி கலந்த குண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்தது இந்த மண்

எல்லோருக்கும் தலைவனான எம்பெருமான் ஆழ்வாருடன் கூடி, காலம் கடந்திருந்தாலும், காலத்தால் வந்த தடையைப் போக்கி, தன்னுடைய பூர்வ சரித்ரங்களை ஆழ்வார் ஆசைப்பட்டபடி காட்டிக்கொடுத்து ஆழ்வாரின் துன்பத்தைப் போக்கினான்; இவ்வாறு ஆழ்வார் எம்பெருமான் தன்னுடன் கூடிய அந்த குணத்தைக் கொண்டாட, இவ்வுலகம் நிலை பெற்றது.

முப்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் போன்று இருக்கும், மற்றும் எம்பெருமானுடன் தொடர்புடைய பொருட்களைப் பார்த்து, அவை எம்பெருமான் என்று ப்ரமித்து, அவைகளை எம்பெருமானாகப் பாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மண்ணுலகில் முன் கலந்து மால் பிரிகையால் மாறன்
பெண் நிலைமையாய்க் காதல் பித்தேறி – எண்ணிடில் முன்
போலி முதலான பொருளை அவனாய் நினைந்து
மேல் விழுந்தான் மையல் தனின் வீறு

எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தில் ஆழ்வாருடன் கலந்து பின்பு பிரிந்தான்; அதனால் ஆழ்வார் ஒரு பெண் தன்மையை அடைந்து, அவனிடத்தில் இருந்த பக்தியால், மிகவும் கலங்கி, அவன் விஷயமான பேரன்பால், அவனைப் போன்ற பொருட்களை அவனாகவே நிர்ணயித்துப் பாடினார்.

முப்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், திவ்ய ஸ்தானமான பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பைக் கண்டு அடைந்த பேரின்பத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வீற்றிருக்கும் மால் விண்ணில் மிக்க மயல் தன்னை
ஆற்றுதற்காத் தன் பெருமை ஆனதெல்லாம் – தோற்ற வந்து
நன்று கலக்கப் போற்றி நன்குகந்து வீறு உரைத்தான்
சென்ற துயர் மாறன் தீர்ந்து

பரமபதத்தில் வீற்றிருந்தருளும் எம்பெருமான், இங்கே வந்து, தன்னுடைய சிறந்த குணங்கள், திருமேனிகள் ஆகியவற்றைக் காட்டி ஆழ்வாரின் கலக்கத்தை நீக்கி, ஆழ்வாருடன் நன்றாகக் கலந்தான்; இப்படி ஸர்வேச்வரனைக் கண்ட ஆழ்வார், அவனை வணங்கி ஆனந்தத்தை அடைந்து, தன்னுடைய துன்பங்கள் நீங்கப் பெற்றதால், தன்னுடைய பெருமையைத் தானே அறிவித்தார்.

முப்பத்தாறாம் பாசுரம். ஆழ்வாரிடத்தில் மிகுந்த காதல் கொண்ட எம்பெருமானை நேரில் கண்டு அனுபவிக்க முடியாமையால் ஆழ்வார் மோஹித்தார்; ஆழ்வாரிடத்தில் அன்பு கொண்டவர்கள் இதற்கு ஒரு தீர்வு காண முற்பட, நல்ல ஞானம் உள்ள ஆழ்வாரின் நலம்விரும்பிகள் ஆழ்வாருக்குச் சேராத விஷயங்களையும், இந்நிலைக்குக் காரணத்தையும் தீர்வையும் விளக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி மாமுனிகள் அருளிச்செய்கிறார்.

தீர்ப்பாரிலாத மயல் தீரக் கலந்த மால்
ஓர்ப்பாதும் இன்றி உடன் பிரிய – நேர்க்க
அறிவழிந்து உற்றாரும் அறக் கலங்க பேர் கேட்டு
அறிவு பெற்றான் மாறன் சீலம்

ஆழ்வாரின் தீர்க்கமுடியாத பேரன்பைத் தீர்க்க ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் கலந்து, ஆராயாமல் ஆழ்வாரை விட்டுப் பிரிந்தான்; இதைக் கண்ட உறவினர்கள், முன்பைவிட மிகவும் வருந்தி அறிவிழந்தார்கள்; எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்டு தன்னுடைய உணர்வை மீண்டும் பெற்றார்; இதுவே ஆழ்வாரின் தன்மை.

முப்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருநாமத்தைக் கேட்டுத் தன் உணர்வை மீண்டும் பெற்ற ஆழ்வார், அந்தத் திருநாமத்துக்கு உடையவனான எம்பெருமானை அனுபவிக்க முடியாமல் வாடிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சீல மிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து
மேலவன் தன் மேனி கண்டு மேவுதற்கு – சால
வருந்தி இரவும் பகலும் மாறாமல் கூப்பிட்டு
இருந்தனனே தென் குருகூர் ஏறு

ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், கல்யாண குணங்கள் நிறைந்த கண்ணனின் திருநாமங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்; உணர்ந்தபின் மிகவும் வருந்தி, கண்ணனின் திருமேனியைக் காண ஆசைப்பட்டு, அனுபவிப்பதற்காக அழைக்கிறார்.

முப்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தனக்கு உதவாததால், அவனுக்காக இல்லாத ஆத்மாவிலும் ஆத்மாவின் உடைமைகளிலும் தனக்கு இருக்கும் விரக்தியைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏறு திருவுடைய ஈசன் உகப்புக்கு
வேறு படில் என் உடைமை மிக்க உயிர் – தேறுங்கால்
என்தனக்கும் வேண்டா எனும் மாறன் தாளை நெஞ்சே!
நந்தமக்குப் பேறாக நண்ணு 

ஆழ்வார் “என்னுடைய ஆபரணங்கள் முதலியவையும் அவற்றைவிடச் சிறந்ததான ஆத்மாவும், பிராட்டி ஏறி வீற்றிருக்கும் திருமார்பை உடைய ஸர்வேச்வரன் திருவுள்ளத்துக்கு ஏற்புடையதில்லை என்றால், ஆராய்ந்து பார்த்தால், எனக்கும் அவை வேண்டாம்” என்று வெறுப்புடன் அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த குறிக்கோளாகக் கொள்.

முப்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளின் அநர்த்தத்தைக் கண்டு வெறுத்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நண்ணாது மால் அடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பம் உறும் இவ்வுயிர்கள் – தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமல் கண் கலங்கும் மாறன் அருள்
உண்டு நமக்கு உற்ற துணை ஒன்று

இவ்வுலகில் தங்கள் பாபங்களினாலே எல்லையில்லாத துன்பங்களை அனுபவிக்கும் ஆத்மாக்களின் தாழ்ச்சியையும் அவர்கள் எம்பெருமானிடத்தில் சரணடையாமல் இருப்பதையும் கண்ட ஆழ்வார், ஆறியிருக்க முடியாமல், கண்ணீருடன் இருந்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் கருணையே நமக்குத் தகுந்த துணை.

நாற்பதாம் பாசுரம். மாமுனிகள், ஸம்ஸாரிகளும் சரணாகதி செய்வதற்கு ஸௌகரியமாகப் பரத்வத்துடன் இருக்கும் அர்சாவதாரத்தைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஒன்றும் இலைத் தேவு இவ்வுலகம் படைத்த மால்
அன்றி என ஆரும் அறியவே – நன்றாக
மூதலித்துப் பேசி அருள் மொய்ம்மகிழோன் தாள் தொழவே
காதலிக்கும் என்னுடைய கை

எல்லோரும் புரிந்து கொள்ளும்படி, “இவ்வுலகங்களைப் படைத்த ஸர்வேச்வரனைத் தவிர வேறு தெய்வம் இல்லை” என்று நன்றாக நிர்ணயித்து அருளிய வகுளாபரணரின் திருவடிகளுக்கு அஞ்ஜலி செய்வதையே என் கைகள் விரும்பும்.

நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க
பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான
பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை
போற்றினனே மாறன் பொலிந்து

ஆழ்வார் பொலிவுடன் “என்னிடத்தில் சிறிதளவும் பக்தி இல்லாதபோதும் நான் அவனை ஏமாற்றும் வகையில் பேசினாலும், அவன் பெரும் கருணையுடன் எனக்கு உயர்ந்த பலனைக் கொடுத்தான்” என்று அருளிச்செய்தார்.

நாற்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய ஒன்றும் தேவும் (திருவாய்மொழி 4.10) பதிகத்தைக் கேட்டுத் திருந்தியவர்களுக்கு மங்களாசாஸனமாகவும் திருந்தாதவர்களைத் திருத்தும் உபதேசமாகவும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொலிக பொலிக என்று பூமகள் கோன் தொண்டர்
மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி – உலகில்
திருந்தாதார் தம்மைத் திருத்திய மாறன் சொல்
மருந்தாகப் போகும் மன மாசு

அடியார்களின் மிகப் பெரிய கோஷ்டியைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார் “பொலிக! பொலிக!” என்றார். இவ்வுலகில் திருந்தாதவர்களைத் திருத்தினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை மருந்தாகக்கொண்டால், மனதில் இருக்கும் தோஷங்கள் நீங்கும்

நாற்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், முன்பு பேசிய எம்பெருமானின் வடிவழகை நேரில் அனுபவிக்க முடியாததால் மடல் எடுக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால்
ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல் – ஏசறவே
மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்
உள் நடுங்கத் தான் பிறந்த ஊர்

குற்றமற்ற ஒளியை உடைய எம்பெருமானிடம் தனக்கு ஏற்பட்ட அளவு கடந்த அன்பினால், எம்பெருமான் தன்னுடன் வந்து கலக்காததால், தனக்கு ஏற்படும் பழியையும் ஊராரின் நிந்தனைக்கு அஞ்சும் நிலையையும் கடந்து, தான் அவதரித்த ஊரில் மக்கள் நடுங்கும்படி இவ்வுலகில் மடல் எடுக்க முற்பட்டார் ஆழ்வார்.

நாற்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானைப் பிரிந்து இரவின் நீட்சியால் மிகவும் வருந்தும் நாயகியின் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊர நினைந்த மடல் ஊரவும் ஒண்ணாதபடி
கூரிருள் சேர் கங்குலுடன் கூடி நின்று – பேராமல்
தீது செய்ய மாறன் திரு உள்ளத்துச் சென்ற துயர்
ஓதுவது இங்கு எங்ஙனேயோ?

ஐயோ! இருண்ட இரவும் அதன் துணைவர்களும் சேர்ந்து ஆழ்வாரை விடாமல் நலிந்து அவர் மடல் எடுக்க முற்படுவதைத் தடுப்பதையும், அவர் திருவுள்ளத்தை அடைந்த துன்பத்தையும் எவ்வாறு பேசுவது?

நாற்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், உருவெளிப்பாட்டைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்ஙனே நீர் முனிவது என்னை இனிநம்பி அழகு
இங்ஙனே தோன்றுகின்றது என் முன்னே – அங்ஙன்
உருவெளிப்பாடா உரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்

தமிழ் வேதமான ப்ரபந்தங்களை அருளிய ஆழ்வார், உருவெளிப்பாடு (மனக்கண்ணால் பார்த்து அனுபவிப்பது) என்னும் கவிதை முறையில் “என்னிடத்தில் நீங்கள் எல்லோரும் கோபம் கொள்ளலாமா? திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகு என் கண் முன்னே தோன்றுகின்றது” என்று அருளினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை த்யானிப்பவர்களுக்கு ஆழ்வாரே ஒரு ஆனந்தக் கடலாக இருப்பார்.

நாற்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், அனுகாரத்தின் மூலம் தன்னை தரித்துக் கொண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கடல் ஞாலத்தீசனை முன் காணாமல் நொந்தே
உடனா அனுகரிக்கல் உற்று – திடமாக
வாய்ந்தவனாய்த் தான் பேசும் மாறன் உரை அதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய்ய நோற்றார்

கடல் சூழ்ந்த இவ்வுலகில் எம்பெருமானை நேரில், தன் கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் வருந்தி, எம்பெருமானை அனுகரித்து (அவனைப் போலே இருந்து), திட விச்வாஸத்துடன் அவனைப் பற்றிப் பேசினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளின் பெருமைகளை அறிந்து, அதை அனுஸந்திப்பவர்கள், ஆழ்வாருக்குத் தொண்டு செய்யும் தபஸ்ஸைச் செய்தவர்கள் ஆவர்.

நாற்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், வானமாமலை எம்பெருமானை அன்புடன் வணங்கியும் அவன் திருவடிகளில் சரணாகதி செய்தும் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நோற்ற நோன்பாதி இலேன் உன்தனை விட்டாற்றகில்லேன்
பேற்றுக்கு உபாயம் உன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கென் நிலை என்னும் எழில் மாறன் சொல் வல்லார்
அங்கு அமரர்க்கு ஆராவமுது

அழகை அடைந்த ஆழ்வார், உபாய விஷயமாக “எனக்கு மோக்ஷத்துக்கு வழியான கர்ம யோகம் முதலிய உபாயங்களில் எந்த ஈடுபாடும் இல்லை; உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியவில்லை; என்னுடைய பேற்றுக்கு உன்னுடைய பெரிய கருணையே உபாயம்” என்று அருளிச்செய்தார். கருணை மிகுந்த இப்பாசுரங்களை அனுஸந்திக்க வல்லவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளுக்கு ஆராவமுதமாக இருப்பர்.

நாற்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய கைம்முதல் இல்லாத் தன்மையை அறிவித்து ஆராவமுதன் எம்பெருமானைச் சரணடைந்தும், எம்பெருமான் “இவர் நம் ஆழ்வார்” என்று தன் ஆசையை நிறைவேற்றாததால், கலங்கி வருத்தத்துடன் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக  – தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான்

ஆழ்வாரின் எதிர்பார்ப்பை ஆராவமுதன் கருணையுடன் நிறைவேற்றாததால் ஆழ்வார் நிறைவேற்ற முடியாத மிகவும் அதிகமான ஆசையை அடைந்து வருத்தமுற்றார். இப்படிக் கலங்கிய தன்னுடைய வருத்தத்தை வெளியிட்டார்; இப்படிப்பட்ட ஆழ்வாரே நம்முடைய குற்றமற்ற ஸ்வாமி.

நாற்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், திருவல்லவாழுக்குச் சென்று அதைச் சூழ்ந்திருக்கும் புறச்சோலைகளின் அனுபவத்தால் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாநலத்தால் மாறன் திருவல்லவாழ் புகப் போய்
தான் இளைத்து வீழ்ந்து அவ்வூர் தன் அருகில் – மேல் நலங்கித்
துன்பம் உற்றுச் சொன்ன சொலவு கற்பார் தங்களுக்கு
பின் பிறக்க வேண்டா பிற

மிகவும் அன்புடன் ஆழ்வார் திருவல்லவாழ் திவ்யதேசத்தை நோக்கிச் சென்றார்; ஆனால் அதை அடைய முடியாமல், அதைச் சூழ்ந்திருக்கும் சோலைகளில், தளர்ந்து கீழே விழுந்தார்; மேலும் கலங்கி, வருந்தி இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்பாசுரங்களைக் கற்பவர்களுக்கு, அவற்றைக் கற்றபின், எம்பெருமானின் திருவடிகளுக்கு வெளிப்பட்ட பிறவிகள் கிடையாது.

ஐம்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் “உன்னுடைய அவதாரங்களில் செய்த லீலைகளை அனுபவித்து நான் தரித்திருக்கும்படி அனுமதிக்க வேண்டும்” என்று ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறந்து உலகம் காத்தளிக்கும் பேரருள் கண்ணாஉன்
சிறந்த குணத்தால் உருகும் சீலத் – திறம் தவிர்ந்து
சேர்ந்தனுபவிக்கும் நிலை செய் என்ற சீர் மாறன்
வாய்ந்த பதத்தே மனமே! வைகு

ஸ்ரீ நம்மாழ்வார், இவ்வுலகில் அவதரித்து எல்லோரையும் ரக்ஷிக்கும், மிகவும் கருணை பொருந்திய கண்ணன் எம்பெருமானிடத்தில் “கண்ணா! என் ஹ்ருதயத்தின் உருக்கத்தை நிறுத்தி, உன்னை அடைந்து, உன்னுடைய குணங்களை நினைத்து அனுபவிக்கும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் வாழ்வாயாக.

ஐம்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என்
செய்கைதனைப் புள் இனங்காள்செப்பும் என – கை கழிந்த
காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே
மேதினியீர்! நீர் வணங்குமின்

உலகத்தீர்களே! மிகவும் அன்புடன் “பறவைக் கூட்டங்களே! திருவண்வண்டூரில் நித்ய வாஸம் செய்தருளும் சக்ரவர்த்தித் திருமகனுக்கு என் நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோள்” என்று பறவைகளைத் தூது விடும் ஆழ்வாருடைய திருவடிகளை வணங்குங்கள்.

ஐம்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஊடலினால் எம்பெருமானைப் புறம் தள்ளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன் நிலை போய்ப் பெண் நிலையாய்த் தான் தள்ளி – உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாள் தோறும் நெஞ்சமேநல்கு

ஆழ்வார் தன்னிலை மறந்து கோபிகைகளின் நிலையை அடைந்து, மின்னல் போன்ற இடையுடன் கூடிய பெண்களுடன் இருந்துவிட்டு நேரம் கழித்து வந்த கண்ணனிடம் கொண்ட ஊடலினால் “நான் உன்னுடன் கூட மாட்டேன்” என்று கூறிப் புறம் தள்ளினார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை தினமும் வணங்க நீ எனக்கு உதவி செய்.

ஐம்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விருத்த விபூதியை (மாறுபட்ட செல்வங்களை) பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று – எல்லை அறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர்

முன்பு இருந்த விரோதிகளைப் போக்கும் கண்ணன், நம்முடைய ஊடலையும் போக்கி, அவனுடன் நாம் கூடும்படிச் செய்தான். அந்தக் கண்ணன் விருத்த விபூதியை உடையவன். இப்படிப்பட்ட கண்ணனை முடிவில்லாமல் வாழும் ஆழ்வார் கொண்டாடினார். தமிழ் மொழியில் மன்னரான இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளைப் பாடுபவர்கள், நித்யஸூரிகளுக்குத் தகுந்த தலைவர்களாக விளங்குவர்.

ஐம்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே! துவள்

நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.

ஐம்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், பகவத் விஷயத்தில் தனக்கிருக்கும் பெரிய காதலைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னும் உவப்பால் வந்த மால்

ஒரு தோஷமும் இல்லாமல் கல்யாண குணங்கள் நிரம்பிய எம்பெருமானைப் பொருந்தி அனுபவித்ததால் ஏற்பட்ட ஆனந்தத்தால், ஆழ்வார் ஒரு குற்றமும் இல்லாமல் முதலிலிருந்தே பகவத் விஷயத்தில் மூழ்கி இருந்தார். இப்படிப்பட்ட ஆழ்வார் இயற்கையான பக்தியால், பகவத் விஷயத்தில் தனக்கு எப்பொழுதும் இருக்கும் விருப்பத்தை வெளியிட்டார்.

ஐம்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் தான் எல்லாவற்றையும் இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன் உடைமை தான் அடையக் – கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனம் அறு சீர் நெஞ்சே! உண்

எம்பெருமானுடன் கூடியிருக்க முடியாததால், மிகவும் தளர்ந்த ஆழ்வார் “என்னுடைய ஆத்மாவையும், ஆத்மாவின் உடைமைகளையும் நான் விடுவதற்கு முன்பு, அவை என்னை விட்டு விலகின” என்று அருளிச்செய்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் குற்றமற்ற கல்யாண குணங்களை அனுபவி.

ஐம்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், திருக்கோளூரை நோக்கிச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உண்ணும் சோறாதி ஒரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணிணைகள் – மண் உலகில்
மன்னு திருக்கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன் அடியே நந்தமக்குப் பொன்

ஆழ்வார், உண்ணும் சோறும் முதலிய தாரக, போஷக, போக்ய பதார்த்தங்கள் எல்லாம் எம்பெருமான் கண்ணனே என்று, தன் திருக்கண்களில் பெருகும் கண்ணீருடன், திருக்கோளூரில் பொருந்தி எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனை நோக்கிச் செல்லத் தொடங்கினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே நமக்கிருக்கும் ஒரே சொத்து.

ஐம்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், சோகத்தில் மூழ்கியதால் எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொன் உலகு பூமி எல்லாம் புள் இனங்கட்கே வழங்கி
என் இடரை மாலுக்கு இயம்பும் என – மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர்! போய் வணங்கும் நீர்

பறவைக் கூட்டங்களுக்கு நித்ய விபூதி (பரமபதம்) மற்றும் லீலா விபூதி (ஸம்ஸாரம்) ஆகியவற்றை முழுவதுமாக அளித்து “என்னுடைய துயரத்தை எம்பெருமானிடம் அறிவியுங்கோள்” என்று அருளிச்செய்த ஆழ்வார், ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களுக்கு ஆசையுடன் செய்தி அனுப்பினார். பரந்த உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஆழ்வாரையே நீங்கள் சென்று வணங்குங்கோள்.

ஐம்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படி எம்பெருமானைக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பரிதா – ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஓதிடவே உய்யும் உலகு

ஸர்வேச்வரன் அழகிய பரமபதத்தில் இருக்கமுடியாதபடியும், கேட்பவர்களின் நெஞ்சை உருக்கும்படியும், ஆழ்வார் ஆராத காதலுடன் எம்பெருமானை அழைத்தார். இந்த ஸ்ரீஸூக்திகளைச் சொல்ல, உலகமே உஜ்ஜீவனத்தை அடையும்.

அறுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவேங்கடமுடையான் திருவடிகளில் சரணடையும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் – மலர் அடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாள் இணையே
உன் சரணாய் நெஞ்சமே! உள்

இவ்வுலகத்துக்கு உஜ்ஜீவனம் அளிப்பதற்காக ஸர்வேச்வரன் அழகிய, உயர்ந்த திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான். ஆழ்வார், பெரியபிராட்டியார் புருஷகாரத்துடன் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் திருவடிகளைத் திடமாகப் பற்றினார். நெஞ்சே! இப்படிப்பட்ட வகுளாபரணரின் திருவடிகளையே உபாயமாகக் கொள்.

அறுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், க்ரூரமான இந்த்ரியங்களுக்கு அஞ்சும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உண்ணிலா ஐவருடன் இருத்தி இவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன்புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக்கங்குல்

இனிய பெருமைகளை உடைய ஆழ்வார், எல்லையில்லாத ஆச்சர்யமான லீலைகளை உடைய ஸர்வேச்வரன், தன்னை இவ்வுலகில் தன்னுள்ளே இருக்கும் விரோதிகளான இந்த்ரியங்களுடன், இவ்வுலகில் தன்னை இருக்க வைத்ததை எண்ணிக் கதறினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே, இந்த ஸம்ஸாரம் என்னும் இருண்ட இரவு நீங்கும்.

அறுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், துயரத்தினால் அழும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகம் உற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து – இங்கிவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னும் நிலை சேர் மாறன்
அஞ்சொல் உற நெஞ்சு வெள்ளையாம்

இரவும் பகலும் துயரம் அதிகமான பராங்குச நாயகி மோஹித்தாள். ஆழ்வார், பராங்குச நாயகியின் தாயார் நிலையை அடைந்து ஸ்ரீரங்கநாதனை “இங்கு இந்தப் பெண்பிள்ளை விஷயமாக நீர் என்ன செய்ய எண்ணி உள்ளீர்?” என்று முறையிட்டார். இந்த ஸ்ரீஸூக்திகளை எண்ணினவாறே, நெஞ்சம் தூயதாகும்.

அறுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தென்திருப்பேரில் தன் நெஞ்சை இழந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக – உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார்

தன் தாயார் சொன்ன பகவானின் இனிய திருநாமங்களைக் கேட்ட ஆழ்வார், உணர்த்தி பெற்று, தன்னுடைய நெஞ்சமானது தென்திருப்பேர்நகரில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் விஷயமாக மிகவும் ஈடுபட்டு இருப்பதையும், அங்கே செல்லத் தொடங்குவதையும் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருக்காகவே இருப்பவர்கள், ஆழ்ந்த நெஞ்சை உடையவர்கள்.

அறுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்

கடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து “இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து, அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள் உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர்.

அறுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், “எம்பெருமானின் வெற்றிகளுக்குக் காரணமான எம்பெருமானின் திருவவதாரங்களில் ஜனங்களுக்கு ஏன் ஆசை இல்லாமல் இருக்கிறது?” என்று வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை – உற்றுணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா

தசரதன், வஸுதேவன் முதலியவர்கள் சாஸ்த்ரத்தின் ஸாரத்தை உணர்ந்து, எம்பெருமானின் வெற்றிக்குக் காரணமான அவனுடைய விபவாவதாரங்களில் அன்பு செய்தார்கள். இதை ஆராய்ந்து அறிந்த ஆழ்வார், இவ்வுலகில் மக்கள் இந்த பகவத் விஷயத்தை இழப்பதைத் தகுந்த முறையில் அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் இனிய இசையை உடைய ஸ்ரீஸூக்திகள், தமிழில் அமைந்திருக்கும் சிறந்த சாஸ்த்ரம்.

அறுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆம் அழகு வேண்டற்பாடாம் அவற்றை – தூ மனத்தால்
நண்ணி அவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்

இங்கே சொல்லப்பட்ட எம்பெருமானை நேரில் அடைந்து, காண ஆசைப்பட்ட ஆழ்வார், நன்றாக உருகி, “ஓ” என்று சொல்லிக் கதறி, சந்தத்துடன் கூடிய வேதத்தில் இருந்து, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை அவனுடைய அழகு மற்றும் மேன்மையுடன் பெற்று தன் மனக்கண்ணால் கண்டு அனுபவித்தார். இப்படிப்பட்ட ஸ்வாமியான ஆழ்வாரைச் சென்று அடையாதவர்கள், ஏழைகள் (அஜ்ஞானிகள்).

அறுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் திருமுகத்தின் அழகு தன்னை ஒருபடிப்பட்டு நலிவதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மால் அழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க – ஆழு மனம்
தன்னுடனே அவ்வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னும் அவர் தீவினை போம் மாய்ந்து

எம்பெருமானின் வடிவழகு நிலையில்லாத நெஞ்சைக்கொண்ட ஸம்ஸாரிகளை உருக்கும். அதே அழகு ஆழ்வாரைச் சூழ்ந்து, எல்லா இடமும் இருக்க, ஆழ்வாரின் நெஞ்சமும் துக்கக் கடலில் ஆழ்ந்தது. அந்த நெஞ்சத்துடன் கூடி அந்த அழகை அனுபவித்து அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாருடன் கூடியிருப்பவர்களின் பாபங்கள் அழிக்கப்படும்.

அறுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் விசித்ரமான (பரந்த, பலவிதமாக இருக்கும்) விச்வரூபத்தை அனுபவித்து ஆச்சர்யப்பட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே
தீயா விசித்திரமாச் சேர் பொருளோடு – ஓயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளம் உரைத்த மாறனை நாம்
ஏய்ந்துரைத்து வாழு நாள் என்று?

ஆழ்வாரின் சேஷத்வத்தைக் காத்து, ஸர்வேச்வரன் தான் பரந்து, விரிந்து இருக்கும் தன்மையில், 1) தீ தொடக்கமான பஞ்ச பூதங்களுடனும், அவற்றின் பல்வேறுபட்ட உருவங்களுடனும் 2) பல்வேறுபட்ட சேதனர்களுடனும், அவற்றின் தோஷங்களைப் பார்க்காமல் கூடி இருந்தான். ஸர்வேச்வரனின் இப்படிப்பட்ட பரந்த சொத்துக்களை அருளிச்செய்தார் ஆழ்வார். எப்பொழுது நாம் ஆழ்வாரை அடைந்து அவரின் திருநாமங்களைச் சொல்லி வாழ்வோம்?

அறுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான் திருவாய்மொழி பாடவைத்த செயலை மிகவும் ஈடுபட்டுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

என்தனை நீ இங்கு வைத்தது ஏதுக்கென மாலும்
என்தனக்கும் என்தமர்க்கும் இன்பமதா – நன்று கவி
பாடவெனக் கைம்மாறு இலாமை பகர் மாறன்
பாடணைவார்க்கு உண்டாம் இன்பம்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எனக்குப் பொருத்தம் இல்லாத இந்த ஸம்ஸாரத்தில் என்னை ஏன் வைத்தாய்?” என்று வினவ, எம்பெருமான் “எனக்கும் என் அடியார்களுக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பாசுரங்களைப் பாட” என்று பதிலுரைத்தான். எம்பெருமான் செய்த நன்மைக்குத் தான் எந்த ப்ரத்யுபகாரமும் செய்ய முடியாது என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரை அடைபவர்கள் மிகவும் ஆனந்தமாக இருப்பர்.

எழுபதாம் பாசுரம். மாமுனிகள், திருவாய்மொழி பாடிக் கைங்கர்யம் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திருவாறன்விளையில் – துன்பம் அறக்
கண்டடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு

தன்னுடைய துன்பங்களைப் போக்கியருளுவதற்காக, தன்னை இனிய திருவாய்மொழியைப் பாடவைக்க, எம்பெருமான் பெரியபிராட்டியாருடன் திருவாறன்விளையில் ஆனந்தமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று அவர்களுக்கு தொண்டு செய்ய ஏங்கினார். ஆழ்ந்த விச்வாஸத்தை உடையவர்களுக்கு, இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளே பரதெய்வம்.

எழுபத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் குணங்களையும் உண்மை நிலையையும் ஸந்தேஹப்பட்டு, அந்த ஸந்தேஹங்கள் தீரப்பெற்ற ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தேவன் உரை பதியில் சேரப் பெறாமையால்
மேவும் அடியார் வசனாம் மெய்ந்நிலையும் – யாவையும்
தானாம் நிலையும் சங்கித்து அவை தெளிந்த மாறன் பால்
மாநிலத்தீர்! நங்கள் மனம்

திருவாறன்விளையில் இருக்கும் எம்பெருமானுடன் கூடி அவனுக்குத் தொண்டு செய்ய முடியாததால், எம்பெருமான் அடியார்களிடத்தில் அடிபணிந்திருக்கும் தன்மையையும், சேதனாசேதனங்கள் தான் என்று சொல்லும்படி இருக்கையையும், தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்ட ஆழ்வார், அந்த ஸந்தேஹங்கள் நீங்கப் பெற்றார். இப்பரந்த உலகில் வாழ்பவர்களே! நம் நெஞ்சம் அவ்வாழ்வாரிடத்தில் லயித்து இருக்கும்.

எழுபத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா மற்றும் ஆத்மாவின் உடைமைகளில் தனக்கு ஆசை இல்லாததை அறிவித்த ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நங்கருத்தை நன்றாக நாடி நிற்கும் மால் அறிய
இங்கிவற்றில் ஆசை எமக்குளதென்? – சங்கையினால்
தன் உயிரில் மற்றில் நசை தான் ஒழிந்த மாறன் தான்
அந்நிலையை ஆய்ந்துரைத்தான் அங்கு

முற்றும் உணர்ந்த எம்பெருமான், ஆழ்வாரின் நெஞ்சை நன்றாக ஆராய, ஆழ்வாரும் தனக்கு இவ்வுலகில் ஈடுபாடு இருக்குமோ என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட்டு, தன்னைப்பற்றியும் தன் உடைமைகளைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து, தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து, தான் உணர்ந்ததை அவனுக்கு அறிவித்து அருளிச்செய்தார்.

எழுபத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் எம்பெருமானுக்குப் பரிவுகாட்ட யாரும் இல்லை என்று வருந்த, எம்பெருமான் தனக்குப் பரிவு காட்டுபவர்கள் உள்ளனர் என்பதைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அங்கமரர் பேண அவர் நடுவே வாழ் திருமாற்கு
இங்கோர் பரிவரிலை என்றஞ்ச – எங்கும்
பரிவருளர் என்னப் பயம் தீர்ந்த மாறன்
வரிகழல் தாள் சேர்ந்தவர் வாழ்வார்

மங்களாசாஸனம் செய்யும் நித்யஸூரிகள் நடுவில் பரமபதத்தில் எழுந்தருளியிருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமானுக்கு இந்த ஸம்ஸாரத்தில் மங்களாசாஸனம் செய்பவர்கள் இல்லை என்று ஆழ்வார் பயந்தார். எம்பெருமான் “எனக்காகப் பரிவு காட்டுபவர்கள் எங்கும் உளர்” என்று சொல்ல, ஆழ்வாரின் பயம் நீங்கியது. வரிகள் பொருந்திய சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைபவர்கள் உஜ்ஜீவனத்தை அடைவர்.

எழுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வீரம், சௌர்யம் முதலிய குணங்களையும் சாபம் மற்றும் அனுக்ரஹத்தைக் கொடுக்கக்கூடியவர்களுடன் சேர்ந்து இருக்கும் தன்மையையும் அவன் காட்டக் கண்டு, பயமற்றுப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாராமல் அச்சம் இனி மால் தன் வலியினையும்
சீரார் பரிவருடன் சேர்த்தியையும் – பாரும் எனத்
தான் உகந்த மாறன் தாள் சார் நெஞ்சேசாராயேல்
மானிடவரைச் சார்ந்தது மாய்

ஆழ்வாருக்கு இன்னமும் இருக்கும் பயத்தைப் போக்க ஸர்வேச்வரன் தன் வீரம் முதலிய குணங்களையும், தான் சிறந்த அடியார்களுடன் இருப்பதையும் “பாரும்” என்று சொல்லிக் காட்ட, அவற்றைக் கண்ட ஆழ்வார் மிகவும் மகிழ்ந்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை அடைவாயாக; அடையவில்லை என்றால், ஸம்ஸாரிகளை அடைந்து, நசித்துப் போ.

எழுபத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுடைய வடிவழகை அனுபவிக்கமுடியாமல் மிகவும் வருந்திப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய் அதற விஞ்சி அழுது அலற்றும் – தூய புகழ்
உற்ற சடகோபனை நாம் ஒன்றி நிற்கும் போது பகல்
அற்ற பொழுதானது எல்லியாம்

ஸர்வேச்வரனின் திருமேனி அழகைக் கண்டு அனுபவிக்க முடியாததால் மிகுந்த துயரத்தை அடைந்த ஆழ்வார், அந்த வருத்தம் மிகவும் அதிகமாகி, அழுது, எம்பெருமானை ஒரு க்ரமமில்லாமல் கூப்பிட்டார். இப்படிப்பட்ட பரிசுத்தமான பெருமைகளை உடைய ஆழ்வாருடன் கூடி இருக்கும்பொழுது அது பகல், இந்த அனுபவத்திற்குத் தடை வந்தால் அது இருண்ட இரவு.

எழுபத்தாறாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வாரின் துயரத்தைப் போக்க, எம்பெருமான் ஆழ்வாருக்கு மிக அருகில் வந்து ஆழ்வாருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என – நல்லவர்கள்
மன்னு கடித்தானத்தே மால் இருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து

ஸர்வேச்வரன் மெதுவே வந்து, பல இரவுகளும் பகல்களுமாக ஆழ்வாருக்கு இருந்த வருத்தத்தைப் போக்குவதற்காக, சிறந்த வைதிகர்கள் வாழும் திருக்கடித்தானத்தில் எழுந்தருளினான். அதைக் கண்ட ஆழ்வார் நிலைபெற்று, எம்பெருமானைப் பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாரின் கருத்தைப் பின்பற்றி அவருடன் கலந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இருந்தவன் தான் வந்து இங்கு இவர் எண்ணம் எல்லாம்
திருந்த இவர் தம் திறத்தே செய்து – பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு

திருக்கடித்தானத்தில் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரன் ஆழ்வார் இருப்பிடம் வந்து, ஆழ்வாரின் ஆசைகளைப் பூர்த்தி செய்து, கருணையைப் பொழிந்து ஆழ்வாருடன் ஒரு நீராகக் கலந்தான். அதன்பின் எம்பெருமான் ஆனந்தமாக இருப்பதைக் கண்ட ஆழ்வார் அதைப்பற்றி அருளிச்செய்தார்.

எழுபத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருக்கு ஆத்ம ஸ்வரூபத்தின் பெருமையைக் காட்ட அதைக் கண்டு பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண் நிறைய வந்து கலந்த மால் இக்கலவி
திண்ணிலையா வேணும் எனச் சிந்தித்து – தண்ணிதெனும்
ஆருயிரின் ஏற்றம் அது காட்ட ஆய்ந்துரைத்தான்
காரிமாறன் தன் கருத்து

ஆழ்வாருடன் கலந்த எம்பெருமான், இந்தக் கலவி நிரந்தரமாக இருக்க ஆசைப்பட்டு, ஆழ்வாரின் கண்களை நிறைத்து இருந்து, அணு ஸ்வரூபத்தில் நுண்ணியதாய் இருக்கும் ஆத்மாவின் பெருமைகளைக் காட்டினான். அதை ஆராய்ந்த ஆழ்வார் தன் திருவுள்ளக் கருத்தை வெளியிட்டருளினார்.

எழுபத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், ஆத்மா எம்பெருமானைத் தவிர மற்றவர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பதை விலக்கிப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒருமா கலவி உரைப்பால் – திரமாக
அன்னியருக்கு ஆகாது அவன் தனக்கே ஆகும் உயிர்
இந்நிலையை ஓர் நெடிதா

ஆழ்வார் கண்ணனிடத்தில் ஈடுபாடு கொண்ட ஒரு பெண்ணின் (பராங்குச நாயகி) நிலையை அடைந்து, அவளின் தோழியின் பாவனையில் பராங்குச நாயகியின் திருமேனியில் கலவியின் அடையாளங்களைச் சொன்னாள். இந்நிலையில், ஆத்மாவின் நிலையை நன்கு ஆராய்ந்து, ஆத்மா எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் என்றும் அந்த சேஷத்வம் (அடிமைத்தனம்) தகுந்த தலைவனான எம்பெருமானுக்கு மட்டுமே, வேறு யவருக்கும் இல்லை என்றும் உணர்ந்துகொள்.

எண்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருப்பதன் உயர்ந்த நிலை பாகவதர்களுக்கு அடிமைப்பட்டு இருப்பது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை உடைய பத்தர்க்கு – அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறன் அது
கொல்லை நிலமான நிலை கொண்டு

ஆழ்வார் ஸர்வேச்வரனின் வடிவழகிலும் கருணை உள்ளம் ஆகிய சிறந்த குணத்திலும் ஈடுபட்டிருக்கும் பாகவதர்களிடம் அடிமை பூண்டிருந்தார். அது மட்டும் அன்று, எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்பதின் உயர்ந்த நிலையாக அவன் அடியார்களுக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கருதினார். ஏனெனில் அதுவே உயர்ந்த குறிக்கோளாகையாலே.

எண்பத்தோறாம் பாசுரம். மாமுனிகள், மற்றவர்களைப் பார்த்து ஒரு காரணத்தின் அடியாக வரும் தேஹ பந்துக்களை விட்டு இயற்கையான பந்துவான எம்பெருமானைப் பற்றச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கொண்ட பெண்டிர் தாம் முதலாக் கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே அவரை விட்டு – தொண்டருடன்
சேர்க்கும் திருமாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு

அஜ்ஞானிகளுக்கும் நன்மையே செய்யும் பெருமையை உடைய ஆழ்வார், கர்மம் என்னும் ஒரு காரணத்தின் அடியாக வந்த மனைவி மக்கள் முதலிய தேஹ பந்துக்களைவிட்டு, தன்னைச் சரணடைபவர்களைத் தன் அடியார்களுடன் சேர்க்கும் ச்ரிய:பதியிடம் சரணடையும்படி உபதேசம் செய்கிறார்.

எண்பத்திரண்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானுக்கு எல்லாவிதமான பந்துக்களும் செய்யும் செயல்களைச் செய்ய ஆசைப்படும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பண்டை உறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா உறவின் காரியமும் – தண்டற நீ
செய்தருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையை
உய்துணை என்று உள்ளமே! ஓர்

தன்னுடன் நித்யமான உறவைக்கொண்ட எம்பெருமானைத் திருப்புளிங்குடியில் கண்டு வணங்கி “எல்லாவிதமான உறவுகளின் செயல்களையும் நான் இடைவிடாமல் செய்யும்படி அருளவேண்டும்” என்று ப்ரார்த்தித்தார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஸ்ரீ சடகோபரின் இரு திருவடிகளையும் நம் உஜ்ஜீவனத்துக்கு வழியாக நினை.

எண்பத்துமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் சீலம் (எளிமை) என்னும் குணத்தில் மூழ்கியிருக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓரா நீர் வேண்டினவை உள்ளதெல்லாம் செய்கின்றேன்
நாராயணனன்றோ நான் என்று – பேருறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை

எம்பெருமான் “உம்முடைய ஆசைகளாக எவற்றை எல்லாம் நீர் ஆராய்ந்து வைத்துள்ளீரோ அவற்றை நான் நிறைவேற்றுகின்றேன். ஸர்வசக்தனான நாராயணன் அன்றோ நான்?” என்று சொல்லி ஆழ்வாருடன் தனக்கு இருக்கும் எல்லா உறவுகளையும் காட்டினான். ஆழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் சீல குணத்தில் மூழ்கினார். ஆழ்வாரின் கருணை நம் மனத்தில் இருக்கும் அறியாமையைப் போக்கும்.

எண்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், சிறந்ததான வடிவழகை உடைய எம்பெருமானைக் காண ஆசைப்பட்டுக் கூப்பிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மையார் கண் மாமார்பில் மன்னும் திருமாலை
கையாழி சங்குடனே காண எண்ணி – மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன்னுயிர்

கருநிற மையாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய பிராட்டியாரைத் தன் திருமார்பில் நிரந்தரமாக வைத்திருக்கும், திருக்கைகளிலே திருவாழி திருச்சங்கு ஆகியவைகளை வைத்திருக்கும் ச்ரிய:பதியை உண்மையான ஆசையுடன் கூப்பிட்டார் ஆழ்வார். தான் ஆசைப்பட்டபடி கண்ட ஆழ்வார் ஆனந்தத்தை அடைந்தார். இவ்வாழ்வாரின் திருநாமங்களைச் சொல்லவே சிறந்ததான ஆத்மா உஜ்ஜீவனத்தை அடையும்.

எண்பத்தைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை நினைவு படுத்தும் வஸ்த்துக்களால் தான் துன்புறுவதை அருளும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இன்னுயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்றவனைக் காண எண்ணி ஆண் பெண்ணாய் – பின்னை அவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும்

ஆழ்வார் தன்னை தரிக்கப் பண்ணும் ஸர்வேச்வரன் அவ்வாறே தன் நெஞ்சில் இருப்பதைக் கண்டு, நேரிலும் தன்னுடைய வெளிக் கண்களால் உடனே காண ஆசைப்பட்டு, ஆண் தன்மையை இழந்து பெண் தன்மையை அடைந்தார். மேலும் எம்பெருமானை நினைவுறுத்தும் மேகக் கூட்டங்கள் போன்ற வஸ்துக்களைக் கண்டு தளர்ந்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் க்ருபையை த்யானிப்பவர்களின் நெஞ்சம் உருகும்.

எண்பத்தாறாம் பாசுரம். மாமுனிகள், வருத்தத்துடன் எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை த்யானிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

உருகுமால் என்னெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை எனப் பேசி – மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்துரைத்த மாறன் சொல்
என்னாச் சொல்லாதிருப்பது எங்கு?

ஆழ்வார் “என் நெஞ்சம் உன்னுடைய லீலைகளை நினைத்து உருகும்; மேலும் என்னுடைய ஆசை மிகவும் அதிகமாக ஆனது” என்று வருத்தத்துடன், எம்பெருமான் காதலனாக இருக்கும் தன்மை, தன் நெஞ்சில் நிலைத்திருக்கும்படி அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை என்னுடை நாக்கு எவ்வாறு சொல்லாமல் இருக்கும்?

எண்பத்தேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வடிவழகை நம்பி எம்பெருமானுக்குத் தூதுவிடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எங்காதலுக்கடி மால் ஏய்ந்த வடிவழகு என்று
அங்காது பற்றாசா ஆங்கவன் பால் – எங்கும் உள்ள
புள்ளினத்தைத் தூதாகப் போக விடும் மாறன் தாள்
உள்ளினர்க்குத் தீங்கை அறுக்கும்

ஆழ்வார் “என்னுடைய காதலுக்குக் காரணம் ஸர்வேச்வரனின் இயற்கையான, தகுந்ததான வடிவழகு” என்று சொல்லி அந்நிலையில் அவனுடைய வடிவழகையே நம்பி, எங்கும் உள்ள பறவைக் கூட்டங்களைத் தூதுவராக அனுப்பினார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளை த்யானித்தவர்களின் தீமைகள் அழிக்கப்படும்.

எண்பத்தெட்டாம் பாசுரம். மாமுனிகள், அனுப்பிய தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல் “உடனே திருநாவாயைச் சென்று அடைய வேண்டும்” என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அறுக்கும் இடர் என்று அவன் பால் ஆங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் – அறப்பதறிச்
செய்ய திருநாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வறியாமல்

“அவன் நம் துயரங்களைப் போக்குவான்” என்று எம்பெருமானிடம் தூதுவர்களை அனுப்பினார் ஆழ்வார். ஆனால் அவருடைய திருவுள்ளமோ அந்தத் தூதுவர்கள் திரும்பி வரும் வரை பொறுக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கலங்கி, சிறந்ததான திருநாவாய்க்குச் செல்லலாம் என்று புறப்பட்டார்.

எண்பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், மாலை வேளையில் தன் விருப்பத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் – செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என்தன் மால்

ஆழ்வார் ஸர்வேச்வரனை “நான் உனக்கு முழுமையாகக் கைங்கர்யம் செய்யும் நாள் என்று?” என்று கேட்டு, இயற்கையான பக்தியால், எம்பெருமானின் பதிலுக்குக் காத்திருக்க முடியாமல், தன்னுடைய தரியாமையைப் பேசி வருந்தினார். என்னுடைய அறியாமைக்கு நேர் எதிரான இவ்வாழ்வாரின் கருணையால், என்னுடைய அறியாமை நீங்கும்.

தொண்ணூறாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடைய மோக்ஷத்துக்கு நாள் குறிக்கப்பட்ட பின் மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

மால் உமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து – மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள்

ஸர்வேச்வரன் “முழு மனதுடன், உம்முடைய விருப்பங்களை ஆத்மாவுடன் கூடியிருக்கும் இந்த சரீரத்தின் முடிவிலேயே நிறைவேற்றுவேன்” என்று ஆழ்வாருக்குச் சொல்ல, ஞானம் முதலிய குணங்களை உடைய ஆழ்வார், மிகவும் ஆனந்தித்து “திருக்கண்ணபுரம் சென்று அங்கிருக்கும் ஸர்வேச்வரனின் திருவடிகளைப் பணியுங்கோள்” என்றார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகள் நமக்குக் கருணையைப் பொழியாமல் இருக்குமோ?

தொண்ணூற்றொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானால் நாள் குறிக்கப்பட்டு, எம்பெர்ருமானுடன் சேர்ந்து பரமபதத்துக்குச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்

தன் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு எம்பெருமான் தானே இறுதிப் பயணத்தில் துணையாக இருக்கிறான். ஆழ்வார் அந்தக் காளமேகம் எம்பெருமானையே வழித்துணையாகக் கொண்டு, திரும்பி வரும் குற்றம் இல்லாத பரமபதத்தைச் சென்றடைய எண்ணினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே எவையெல்லாம் துயரங்கள் என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் நசிக்கும்.

தொண்ணூற்றிரண்டாம் பாசுரம். மாமுனிகள், பரமபதத்தில் செய்யும் கைங்கர்யத்தைத் திருவனந்தபுரத்தில் செய்ய ஆசைப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கெடும் இடர் வைகுந்தத்தைக் கிட்டினாற்போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் – பட அரவில்
கண்துயில் மாற்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண்தனில் உள்ளோர் வியப்பவே

சிறந்த பரமபதத்தில் இருக்கும் நித்யஸூரிகள் வியக்கும்படி ஆழ்வார் பணங்களுடன் கூடிய ஆதிசேஷனில் சயனித்துக்கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு, பரந்த திருவனந்தபுரத்தில், துக்கமே இல்லாத பரமபதத்தை அடைந்து செய்யும் கைங்கர்யத்தைச் செய்ய ஆசைப்பட்டார்.

தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை ஏன் தன் விருப்பத்து மாறாக ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறான் என்ற ஸந்தேஹத்தை ஸர்வேச்வரன் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு

ஸ்ரீமந் நாராயணன் வசிக்கும் திவ்ய லோகத்தை அடையாமல், பலம் வாய்ந்த மூங்கிலைப் போன்ற தோளை உடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வன், ஆழ்வாருக்கு ஏற்பட்ட தேவையில்லாத ஸந்தேஹமான “எம்பெருமான் இன்னும் என்னை ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறானே” என்பதைப் போக்கினான். இப்படித் தகுந்த புகழை உடைய ஆழ்வாரே நமக்குப் புகல்.

தொண்ணூற்றுநான்காம் பாசுரம். மாமுனிகள், முன்பு உபதேசித்த பக்தி யோகம் தன் பலத்துடன் சேர்வதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சார்வாகவே அடியில் தான் உரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை – சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாள் தோறும்
கண்டுகக்கும் என்னுடைய கண்

எல்லோராலும் கைக்கொள்ள வேண்டிய, திருவாய்மொழி 1.2 “வீடுமின்” பதிகத்தில் ஆழ்வார் முன்பு அருளிச்செய்த பக்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு, அது ப்ரபத்தியான சிறந்த பலத்துடன் சேர்வதை ஒன்று விடாமல் அருளிச்செய்தார். ஒவ்வொரு நாளும், என்னுடைய கண்கள் இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே ஆனந்தத்துடன் காணும்.

தொண்ணூற்றைந்தாம் பாசுரம். மாமுனிகள், அடியார்கள் எம்பெருமானுடன் செய்யும் பரிமாற்றங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே – மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கைத் தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்

பெருமை படைத்த ஆழ்வார், தன்னுடைய கருணையால் அடியார்கள் எம்பெருமானின் திருவடிகளை நோக்கிச் செய்யும் செயல்களைச் சுருக்கமாக அருளிச்செய்து, அது இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருக்கும்படிச் செய்து, தான் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை முடித்தருளினார்.

தொண்ணூற்றாறாம் பாசுரம். மாமுனிகள், தன் (ஆழ்வாரின்) ஆணைக்கிணங்கத் தன்னைப் பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல விரையும் எம்பெருமானைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து – இருவிசும்பில்
இத்துடன் கொண்டேக இவர் இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல்

முதலிலே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஸர்வேச்வரன் ஆழ்வாரை ஸம்ஸாரத்திலிருந்து எடுத்தருளினான்; ஆழ்வாருடைய பரிசுத்தமான ஸ்ரீஸூக்திகள் அவருடைய அஜ்ஞானத்தால் நிறைந்த இந்தச் சரீரத்துடன் அழைத்துப் போக அவரின் அனுமதியை நோக்கிக் காத்திருக்கும் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் சுத்தியை வெளியிடும்.

தொண்ணூற்றேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் சரீரத்தில் ஆசைகொண்டதையும் “என்னை விரோதியான இந்தச் சரீரத்தில் இருந்து விடுவிக்கவும்” என்று இதில் ஆசையை விடும்படிச் செய்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின் – விஞ்சுதலைக்
கண்டவனைக் கால்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண்திறல் மாறன் நம் திரு

வேதத்தின் குறிக்கோளான, நேர்மையான பேச்சுக்களை உடைய பரமபுருஷன் ஞானம் முதலிய குணங்களால் நிறைந்த ஆழ்வாரின் திருமேனியின் மேல் மிகுதியான, கள்ளத்தனமான ஆசை கொண்டிருந்தான். இதைக் கண்ட, திடமான பலம் பொருந்திய ஆழ்வார், எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்து, தன் சரீரத்தை விடுவித்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஆழ்வாரே நம் செல்வம்.

தொண்ணூற்றெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை “அநாதிகாலமாக என்னைக் கைவிட்ட நீ, இப்பொழுது என்னைக் கைக்கொண்ட காரணம் என்?” என்று கேட்க அதற்கு எம்பெருமான் பதிலற்று இருப்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அருமாயத்து அன்று அகல்விப்பானென்? – பெருமால் நீ
இன்றென்பால் செய்வான் என்னென்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து

ஸ்ரீமந் நாராயணன் தன் விஷயத்தில் கொண்டிருக்கும் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட, மிகப் பெருமை வாய்ந்த ஆழ்வார் எம்பெருமானை “எம்பெருமானே! அநாதி காலமாக என்னை ஏன் ஸம்ஸாரத்தில் வைத்து உன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாய்? இப்பொழுது என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன்?” என்று கேட்க, இதற்குப் பதில் இல்லாத எம்பெருமான் வருத்தத்துடன் பவ்யமாக இருந்தான்.

தொண்ணூற்றொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சிராதி மார்க்கத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை எம்பெருமான் காட்டிக் கொடுக்க, அதை அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து – வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி

எம்பெருமான் ஆழ்வாரைச் சூழ்ந்து நின்று, பரமபதத்தை அடைவிக்கும் பழையதான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க, திருமுடியில் வகுள மாலையைச் சூடியிருக்கும் ஞான முனியான ஆழ்வார், அங்கே ஆனந்த ஸாகரத்தில் மூழ்கியிருந்ததை முழுவதும் அனுபவித்து, அங்கே ஆனந்தமாக ஒரு பாரமும் இல்லாமல் கருடர் விஷ்வக்ஸேனர் முதலிய அடியார்களுடன் வாழ்ந்ததை அருளிச்செய்தார்.

நூறாம் பாசுரம். மாமுனிகள், பரமபக்தியால் உயர்ந்த குறிக்கோளை அடைந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து – நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத் தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து

முனிவரான ஆழ்வார், முன்பு கண்ட ஆனந்தங்களிலிருந்து விடுபட்டு, வருத்தத்துடன் தனியாக இருந்தார். நன்கு வளர்ந்த பரமபக்தியால் பரிபக்குவத்தை அடைந்து, ச்ரிய:பதியுடன் தன் திருவுள்ளத்தில் ஒன்றுபட்டு, நித்யஸூரிகளின் பெருமையை அதனால் அடைந்து, பிராட்டியும் எம்பெருமானும் ஆன சேர்த்தியை நேரில் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யப் பெற்றார்.

———————————————————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading