ஸ்ரீ 108 திவ்ய தேச எம்பெருமான் ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி பாடல் —
திருவரங்கன் கோயில் திருவரங்கேசன்
திருமகள் அழகிய மணவாளன் உறையூர்
திருத் தஞ்சை நீல மேக நரஸிம்ஹம்
திரு அன்பில் அமர் வடிவு அழகிய நம்பி
மருத மகிழ் சோலை கதம்பனூர் உத்தமன்
மலர் மகள் வெள்ளறை புண்டரீகாக்ஷன்
திருப் புள்ளம் பூதங்குடி அமர் வேந்தே
திருப் பள்ளி உணர்த்தருள் புரிந்திடுவாயே
வார் புனல் பேரில் -அரவணைக் கிடந்தான்
வரம் திகழ் ஆதனூர் அளந்தருள் ஐயன்
பார் புகழ் தொல் நிறை நாதன் அழுந்தூர்
மணி துயில் உரு மகள் திரு சிறு புலியூர்
கார் மலி தண் சேறை திருச்சேறை நாதன்
கார் கடல் மல்லை தலைச் சங்கம் நாண் மதியே
ஏர் திகழ் குடந்தைக் கிடந்த என் அமுதே
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
கண்டியூர் ராமர் சாப விமோசனர்
கருணை பொழிந்திடும் விண்ணகர் அப்பன்
எண் திசை புகழ் கமழ் ஊர் சவுரி ராஜன்
எழில் மிகு திருவாலி வயலாலி அப்பன்
கண்டம் கமழ் சோலை இந்தளூர் மைந்தா
காசினியில் உயர் திருச்சித்ர கூடம்
அந்தணர் தேவன் அரன் அயன் காழி
யரும் தவ முனி தொழும் தில்லைக் கோவிந்தர்
சிந்தை கவர்ந்திடும் ஸ்ரீ ராமா விண்ணகர்
சீராக அளந்திடும் தாடாளன் அம்மா
நந்தருக்கு அருள் கூடலூர் ஜகன்னாதா
நாராயணா பள்ளி எழுந்தருளாயே
மாதவன் மகிழ்ந்து உறை தேவானார் தோகை
மறை திகழ் வண் புருஷோத்தமத் தானே
ஸ்ரீ நாதன் அருள் நாதன் செம் பொன் செய் கோயில்
திருக்கச்சி அம்பல செங்கண் மாலே
போது அலர் பொழில் சூழும் மணிக் கூடல் நாதன்
புகழ் காவளம்பாடி வேணு கோபாலன்
சீர் மலி சோலை வெள்ளக்குளத்து அண்ணா
ஸ்ரீ தரா சீர் பள்ளி எழுந்தருளாயே
தாமரையாள் கேள்வன் பார்த்தன் பள்ளி
கருணா வளம் தரு சோழ நன் புவியில்
மா மகள் கோன் உறை நாற்பது பதிகள்
மறை ஒலி புகழ் கமழ் மா நகர் என்பர்
காமனைப் படைத்த தோர் மா மேனி அழகர்
மாலிருஞ்சோலையில் மால் அலங்காரர்
சேமமுடை சவும்ய நாராயணான் கோஷ்ட்டி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே
மெய்யத்து உறைகின்ற சத்ய கிரீஸ்வரன்
தெய்வச் சிலை நாதன் திகழும் புல்லாணி
வையத்து உயர் திருத் தண் காலில் அப்பன்
வழித்துணையாம் காள மேக ஸ்ரீ மோகூர்
வைகை நதி தீரம் தென் கூடல் அழகர்
வள நகர் ஸ்ரீ வில்லி புத்தூர் அரங்கர்
ஐயன் திருக்குருகூரில் பொலிந்தார்
அன்பனே திருப்பள்ளி எழுந்தருளாயே
தென் உயர் திருக்குறுங்குடி வைஷ்ண நம்பி
நிக்ஷேப மா நிதி நிறை திருக்கோளூர்
பொங்கும் பொருநல் சூழ் பாண்டிய நாட்டில்
புகழ் பெரு பதினெட்டு திருப்பதி என்பர்
பங்கஜ நாதன் அனந்த புரம் தன்னில்
வண் பரிசாரத்தில் திரு வாழும் மார்பன்
தங்கும் பெரும் புகழ் காட்கரை அப்பா
தாமோதரா பள்ளி எழுந்தருளாயே
செல்வம் திகழ் திரு மூழிக் களத்தான்
சேர் திகழ் மாயப்பிரான் திருப்புலியூரில்
நல் திருச் செங்கனூரில் மெய்ய வரை யப்பன்
நாரணன் அமர்ந்திடும் தென் திரு நாவாய்
வல்லவள் வாழ்ந்திடும் வல்லி மணாளா
வண்டூர் உறையும் என் பாம்பணை அப்பா
அல்லல் தவிர்ந்திடும் திரு வட்டாத்தில் ஆதி
கேசவனே பள்ளி எழுந்தருளாயே
பக்தர் தொழும் திரு வித்துவக் கோடு
வண் குல சேகரன் பாடிடும் அம்மான்
அற்புதன் நாரணன் அமர் திருக்கடித்தானம்
அணி பொழில் விரலாழி வேய் குறள் அப்பன்
செப்புடை மலை நாடு ஓர் பதின்மூன்றும்
தெய்வ நாதன் திரு ஹரி நாதன் நகரே
முத்துடை பெண்ணை நிறை புவியில் திரு
விக்ரமாப் பள்ளி எழுந்தருளாயே
ஹரி ஹரி உறைந்திடும் அருளாள வரதா
கடு வினை களைந்திடும் அழகிய சிங்கா
நெடு பொழில் கச்சியில் அஷ்ட புஜத்தான்
தீபப் பிரகாசன் விளக்கொளி தண்கா
விரி பொழில் வேளுக்கை ஆளரி நாதன்
ஜெய் தூதன் பாடகம் சேர்வை விளங்கும்
நீள் கருணாகரன் திருக்காராகத்தாள் நிலையிலா
மணி மாட கார்வானக் கள்வன் விமல வராஹன்
திருக்கள்வனூரே மலி புகழ் பரமேஸ்வர நகர் நாதா
பவள வண்ணா திருப்பள்ளி எழுந்தருளாயே
புள்ளுக்கு அருள் செய்த புட் குழி ராமா
புனிதன் உறைகின்ற ஊர் பத்தராவி
உள்ளம் கவர் கின்ற வீர ராகவன் எவ்வுள்
உத்தம நீர் மலி நீர் வண்ணன் எம்மான்
துள்ளும் இடவெந்தை நித்ய கல்யாணர்
திரை கடல் மல்லை தலை சங்கம் நாண் மதியே
தெள்ளிய யோகத்தில் அமர் திருக்கடிகை
சிங்கப்பிரான் பள்ளி எழுந்தருளாயே
சீராரும் வேத வல்லி மணாளா
செல்வம் திகழ் திருவல்லிக்கேணி மன்னாதா
பார் புகழ் ருக்மிணி பார்த்தன் ஸஹாயன்
பக்தருக்கு அருள் புரியும் சக்ரவர்த்தி குமாரன்
வாரணம் துயர் தவிர் தேவப் பெருமான்
வல்வினை தீர்த்திடும் தெள்ளிய சிங்கா
ஏர் தொண்டை நாடும் ஓர் நாலாறும் மூவாறும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
அண்டர் தொழும் திரு வேங்கடத்து அப்பன்
அரியா ஒண்ணாத நர சிங்க வேள் குன்றம்
தொண்டர்கள் வாழும் திரு ராமன் அயோத்யா
தொல் வன ரூபன் வாழ் நைமிசாரண்யம்
கொண்டல் தவழ் திரு சாளக்கிராமம்
குரு நர நாராயணன் பதரி உறை கோயில்
மண்டலம் தாம் தொழும் கண்டம் கடி வாழ்
மாதவனே பள்ளி எழுந்தருளாயே
அண்டர் தொழும் கொண்டல் தவழ் திருப் ப்ரிதி
பார் புகழ் ருக்மிணி துவராகா தீசன்
கோபிகள் கொண்டாடும் ஆய்ப்பாடி நாதன்
குன்று குடையாக எடுத்த கோவர்த்தன நேசா
நாச்சியார் உகந்து அருளும் வட மதுரையார் மைந்தன்
தேவர்கள் குறை தீர்க்கும் பாற் கடல் நாதா
வைகுந்தக் குட்டன் மகிழ்ந்து உறையும் பரம பத நாதா
உடையவர் போற்றிடும் சம்பத் குமாரா
ஸ்ரீ தரனே பள்ளி எழுந்து அருளாயா
மாதவன் பூ மகள் சேனையர் கோன் அருள் பெற்ற
மறைத் தமிழ் கூறும் மகிழ் மாறன்
முனி நாதன் புண்டரிகாஷர் மணக்கால் நம்பி
ஸ்ரீ யமுனா ஸ்ரீ மஹா பூர்ணர் பூதூரில் எதிராஜர்
பொருநல் குருகூரில் வந்தார் மணவாள மா முனி
முதலார் ஆதாரத்தோடும் உன்னைத் தொழ வந்தோம்
அந்த அச்யுதனே பள்ளி எழுந்தருளாயே
வேதம் தமிழ் செய்த மாறன் கொள் ஈசன்
விமலர்களாம் பொய்கை பூதம் பேயாழ்வார்
கோதை விஷ்ணு சித்தன் தொண்டர் அடிப்பொடி
குறையல் கலி கன்றி மா மழிசைப் பிரான்
நாதன் திருப்பாணான் நம்மாழ்வார் தம் கவி
நல் தமிழ் பாசுரம் பல்லாண்டு இசைப்பார்
ஏதங்கள் வாராது உலகினில் வாழ்வார்
எம்பெருமான் உன் தன கிருபையினாலே
ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி ஸ்ரீ ஹரி
————-
108 எண்ணின் பெருமை
இது மிகமிக முக்கியமான ஆன்மிக எண்ணாகும். ஆபத்துக்கு உதவும் எண் 108. அதனால், ஆம்புலன்சுக்கு 108 எண் கொடுத்திருக்கிறார்கள். சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே, இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது.
ஆகவே, பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது. நட்சத்திரங்கள் 27. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பாதங்கள் 4. ஆக மொத்த நட்சத்திர பாதங்கள் (4×27=108) வைணவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடப்பட்ட திருத்தலங்களின் எண்ணிக்கை 108. பகவானுக்கு அர்ச்சனை செய்கின்ற பொழுது 108 என்ற எண்ணிக்கையில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வார்கள். அதற்கு `அஷ்டோத்திரசத நாமாவளி’ என்று பெயர்.
இதை அஷ்டம் + ஸ்தோத்திரம் + சதம் + நாமம் + ஆவளி என்று பிரிக்க வேண்டும். அஷ்டம் என்றால் எட்டு. சதம் என்றால் நூறு. ஆக இரண்டும் சேர்ந்து 108. ஸ்தோத்திரம் என்பது நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வது. நாம ஆவளி என்பது நாமங்களின் வரிசை. அநேகமாக எல்லா தேவதைகளுக்கும் இந்த 108 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.
பெரும்பாலான நூல்கள், நூறு என்கிற எண்ணிக்கையில் முடிவதில்லை. 108 என்ற எண்ணிக்கையில்தான் முடியும். உதாரணமாக; “ராமானுஜ நூற்றந்தாதி’’ என்கிற நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 108. நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவதாண்டவத்தின் சிவனின் தாண்டவபேதங்கள், கரணங்கள் 108தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாளசாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும், இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன.
“சாணிலும் உளன்; ஓர் தன்மை,அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன்……”
இறைவன் சாணிலும் இருக்கிறான். அணுவினை நூறு கூறுகளாகப் பிளந்தால், அதற்குள்ளும் கடவுள் இருக்கிறான். பிரிக்கப்பட்ட அணுவுக்கு `கோண்’ என்று பெயர். அணுவைப் பிளக்க முடியும் என்பதை இருபதாம் நூற்றாண்டில்தான் Earnest Rutherford கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்பே கம்பர் அதைச் சொல்லி இருக்கிறார்.
தமிழில் எண்களின் எண்ணிக்கையை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.
1. 100 நூறு – Hundred.
2. 1000 – ஆயிரம் – Thousand.
3. 10000 – பத்தாயிரம் – Ten thousand.
4. 100000 – நூறாயிரம் – Hundred thousand.
5. பத்துநூறாயிரம் – Million.
6. கோடி – Ten million.
7. அற்புதம் – Hundred million.
8. நிகற்புதம் – Billion.
9. கும்பம் – Ten billion.
10. கணம் – Hundred billion.
11. கற்பம் – Trillion.
12. நிகற்பம் – Ten trillion.
13. பதுமம் – Hundred trillion.
14. சங்கம் – Quadrillion.
15. வெள்ளம் – Ten quadrillion.
16. ஆம்பல் – Hundred quadrillion.
17. மத்தியம் – Quintillion.
18. பரார்த்தம் – Ten Quintillion.
19. பூரியம் – Hundred Quintillion.
நிறுத்தல் அளவுகள்
4 நெல் எடை – 1 குன்றிமணி.
2 குன்றிமணி – 1 மஞ்சாடி.
2 மஞ்சாடி – 1 பணவெடை.
5 பணவெடை – 1 கழஞ்சு.
8 பணவெடை – 1 வராகனெடை.
10 வராகனெடை – 1 பலம்.
40 பலம் – 1 வீசை.
6 வீசை – 1 தூலாம்.
8 வீசை – 1 மணங்கு.
20 மணங்கு – 1 பாரம்.
நீள அளவுகள்
10 கோன் – 1 நுண்ணணு.
10 நுண்ணணு – 1 அணு.
8 அணு – 1 கதிர்த்துகள்.
8 கதிர்த்துகள் – 1 துசும்பு.
8 துசும்பு – 1 மயிர்நுணி.
8 மயிர்நுணி – 1 நுண்மணல்.
8 நுண்மணல் – 1 சிறுகடுகு.
8 சிறுகடுகு – 1 எள்.
8 எள் – 1 நெல்.
8 நெல் – 1 விரல்.
12 விரல் – 1 சாண்.
2 சாண் – 1 முழம்.
4 முழம் – 1 பாகம்.
6000 பாகம் – 1 காதம்.
4 காதம் – 1 யோசனை
காதமும் யோசனையுமே இலக்கியங் களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத தூரம் என்பது 8 முதல் 16 கிலோ மீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது
———————————-
மூலவர் பெயர் – ஊர் பெயர்
- நரநாராயணன் – பத்ரிநாத்
- நரசிங்க பெருமாள் -ஜோஷிமட்
- அத்புத நாராயணன் -திரிகோடித்தனம்
- வைகுண்ட நாதர் – திருநாங்கூர்
- லக்ஷ்மி நரசிம்மர்- திருவாலி திருநகரி
- த்ரிவிக்ரமன் – -திருக்கோவிலூர்
- லோகநாத பெருமாள் -திருவாரூர்
- ஸ்ரீ ஸ்ரீனிவாசன் -திருவெள்ளக்குளம்
- திருவண் புருஷோத்தமன் – திருநாங்கூர்
- குடமாடு கூத்தன் – திருஅரிமேய விண்ணகரம்
- உலகளந்த பெருமாள் – காஞ்சிபுரம்
- அஷ்ட புஜ பெருமாள்- காஞ்சிபுரம்
- சொன்ன வண்ணம் செய்த பெருமாள் -திருவெஃ கா
- வரதராஜ பெருமாள் -காஞ்சிபுரம்
- யோக நரசிம்மசுவாமி – வேலூர்
- பால சயனக் கோலம்- சிறுபுலியூர்
- தேவாதி ராஜ பெருமாள் -தேரழுந்தூர்
- நீலமேக பெருமாள் -திருத்தஞ்சை மணிக்கோவில்
- பக்தவத்சல பெருமாள்- திருக்கண்ணமங்கை
- தல சயன பெருமாள் – மாமல்லபுரம்
- திரு சாரநாத பெருமாள் – திருச்சேறை
- உப்பிலியப்பன் – கும்பகோணம்
- வையம் காத்த பெருமாள்- திருக்கூடலூர்
- ஜெகன்னாத பெருமாள் – கும்பகோணம்
- கஜேந்திர வரத பெருமாள்- திருக்கண்டியூர்
- வல்வில் ராமன் -திருப்புள்ளம்
- சாரங்கபாணி -கும்பகோணம்
- ஆண்டளக்கும் ஐயன் – திருஆதனூர்
- கோலவில்லி ராமர் -திரு வெள்ளியங்குடி
- நித்திய கல்யாண பெருமாள்- சென்னை
- ஹர சாப விமோசன பெருமாள்- திருக்கண்டியூர்
- அப்பக்குடத்தான்- தஞ்சாவூர்
- அன்பில் சுந்தரராஜ பெருமாள்- திருச்சி
- புண்டரீகாட்சன் – திருச்சி
- புருஷோத்தமன் -திருச்சி
- ரங்கநாதர்- திருவரங்கம்
- பக்த வத்சல பெருமாள்- திருநின்றவூர்
- வீர ராகவ பெருமாள்- திருவள்ளூர்
- விஜய ராகவ பெருமாள்- காஞ்சிபுரம்
- நீர் வண்ண பெருமாள் -திருநீர் மலை
- விளக்கொளி பெருமாள்- தூப்புல்
- அழகிய சிங்க பெருமாள்- திருவேளுக்கை
- ஆதி வராக பெருமாள்- காஞ்சிபுரம்
- நிலா துண்ட பெருமாள்- காஞ்சிபுரம்
- பாண்டவ தூத பெருமாள் -காஞ்சிபுரம்
- பவள வண்ண பெருமாள் -காஞ்சிபுரம்
- பரமபத நாதர் – காஞ்சிபுரம்
- கருணாகர பெருமாள்- திருகாரகம்
- பார்த்தசாரதி – சென்னை
- பேரருளாளன் -நாகப்பட்டினம்
- வரதராஜ பெருமாள்- நாகப்பட்டினம்
- கோபாலகிருஷ்ணன் -காவளம்பாடி
- பரிமள ரங்கநாதர்- மாயவரம்
- கோவிந்தராஜ பெருமாள்- சிதம்பரம்
- அழகிய மணவாளர் -உறையூர்
- திருநறையூர் நம்பி -நாச்சியார் கோவில்
- நாவாய் முகுந்தன் -திருநாவாய்
- உய்யவந்த பெருமாள்- பாலக்காடு
- நீலமேக பெருமாள்- திருக்கண்ணபுரம்
- சவுந்தர ராஜ பெருமாள்- நாகப்பட்டினம்
- நாண்மதியப் பெருமாள் – தலச்சங்காடு
- திரிவிக்ரம நாராயணர் – சீர்காழி
- தாமரைக் கண்ணன் -வைகுண்ட விண்ணகரம்
- செங்கண் மால் ரங்கநாதர் – திருத்தெற்றியம்பலம்
- தாமரையாள் கேள்வன்-பார்த்தன் பள்ளி
- தேவநாத பெருமாள்- திருவகிந்திபுரம்
- காட்கரையப்பன்- எர்ணாகுளம்
- லெட்சுமண பெருமாள்- திருமூழிக்களம்
- திருவாழ் மார்பன் – பந்தனம்திட்டா
- இமையவரப்பர்-ஆலப்புழா
- மாயப்பிரான்- திருப்புலியூர்
- திருக்குறளப்பன்- பந்தனம் திட்டா
- பாம்பணையப்பன் – ஆலப்புழா
- அனந்த பத்மநாபர் -திருவனந்தபுரம்
- ஆதிகேசவ பெருமாள்- கன்னியாகுமாரி
- திருவாழ்மார்பன்- திருப்பதிசாரம்
- அழகிய நம்பியார் – திருக்குறுங்குடி
- தோத்தாத்ரி நாதன் – நாங்குனேரி
- வைகுண்ட நாதர்- ஸ்ரீ வைகுண்டம்
- விஜயாசனர்- நத்தம் தூத்துக்குடி
- வைத்தமாநிதி பெருமாள்- திருக்கோளூர்
- பூமி பாலகர் – திருப்புளியங்குடி
- ஆதி நாதன் – ஆழ்வார் திருநகரி
- மகர நெடுங்குழைக்காதர் – தூத்துக்குடி
- வேங்கட வாணன் – பெருங்குளம்
- ஸ்ரீனிவாஸன் தொலைவில்லி மங்கலம்
- தெய்வ நாயகர் – திருத்தேவனார் கோவில்
- அரவிந்த லோசனர் – தொலைவில்லி மங்கலம்
- நின்ற நாராயணப் பெருமாள்- விருது நகர்
- வடபத்ரசாயி -திருவில்லிபுத்தூர்
- கூடலழகர் – மதுரை
- கள்ளழகர் – திருமாலிருஞ்சோலை
- காளமேக பெருமாள்- திருமோகூர்
- சவுமிய நாராயணன்- சிவகங்கை
- ஆதி ஜெகந்நாதர்- திருப்புல்லாணி
- சத்திய மூர்த்தி – திருமயம்
- ரகுநாயகன் – அயோத்தி
- கோவர்த்தநேசன்- மதுரா
- கிருஷ்ணன்- துவாரகா
- பிரகாலத்தவரதன் -அஹோபிலம்
- வெங்கடாஜலபதி -மேல் திருப்பதி
- முக்திநாத் -நேபால்
- நைமிசாரண்யம் – உத்திரபிரதேசம்
- நவமோகன கிருஷ்ணா – ஆயர்பாடி
- ரகுநாத் -ஜம்மு காஷ்மீர்
- திருவல்லவாழ் திருவாழ்மார்பன்- எர்ணாகுளம்
- நாராயணா – திருப்பாற்கடல்
- மகாவிஷ்ணு – பரமபதம் வைகுண்டம்
————–
ஸ்ரீ நர நாராயணன்- ஸ்ரீ பத்ரிநாத்-
இமயத்து திருப்பிரிதி இதுவென்று கண்டு
நமக்களித்த பெரியாழ்வார் நற்பாசுரம் உண்டு
நாலாயிரப் பிரபந்தத்தில் நவின்ற கோவிலே
காலால் அளந்த காவியமான பெருமாளே
நரநாராயண வடிவமே! நந்தாநதி யோகமே
வரமாய் பெற்றாலே வைகுண்டம் தெரியுமே
சங்குடன் கையில் சக்கரம் ஏந்தியவனே
பொங்கும் அழகில் பூத்திடும் பத்மமே
புராண தெய்வமே புதுப்பொலிவு உருவமே
விராட புருஷனே விளையாட்டுக் கண்ணனே
பத்ரிநாத் நாராயணனே பரவசம் தருவாயே
உத்தம நாயகனே உண்மை தெய்வமே
ஆதியாகி அந்தமாகி அண்டம் நிறைந்தவனே
வேதியர் வணங்கிடும் விஷ்ணுவே! விமலனே!
ஓதியே உன்புகழை ஓயாது பாடுவேன்
சோதியாய் நீயும் சுடரொளி தருவாய்
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே.
————–
2-ஸ்ரீ நரசிங்க பெருமாள்- ஸ்ரீ ஜோஷிமட்
பத்ரிக்கு சென்றிட பாதையாய் நிற்கும்
உத்தரவு தந்து உயர்வழி காட்டும்
ஆதிசங்கர் மடமே ஆலய மருந்தே
ஜோதியாய் இமயத்தில் ஜோஷிமட் கோவிலே
வாயிலாய் நமக்கு வழிகாட்டி பெரும்
கோயிலாய் நம்முள் கொலுவிருக்கும் தெய்வத்தை
உள்ளுக்குள் இருக்கும் உண்மை அத்வைதத்தை
தெள்ளத் தெளிவாய் தெரிந்திட வைக்கும்
நரனாய் பிறந்த நமக்குள்ளும் இருந்து
நரசிம்மமாய் மறைந்து நாடியவர்க் கருளி
குளிரிலும் பத்ரியை கும்பிட வைக்கும்
கலியிலும் நமக்கு கதியைக் காட்டும்
மலைகள் ஜெயவிஜய மகிமையைச் சொல்லும்
அலைகள் ஓயாது அடிமனதில் புரளும்
விலையில்லா பக்தியே வேராய் உரமிடும்
சிலையான விஷ்ணுவும் சிந்தையில் தெரியும்
வடநாட்டு திருப்பதியே பூவுலக வைகுண்டமே
தடங்கல் இல்லாது தாரணியின் கல்பவ்ருக்ஷமே
வழிபாட்டுத் தலமே வைராக்கிய ஏற்றமே
அழிவில்லா மார்க்கமே! அருமறை அனுபவமே !
மறங்கொளாளரியுருவெனவெருவர ஒருவனது அகல்மார்வம்
திறந்து வானவர் மணிமுடிபணிதர இருந்த நலிமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவிசும்
பிறங்கு மாமணியருவியொடிழிதரு பிருதிசென்றடை நெஞ்சே!
—————
3-அத்புத நாராயணன்- ஸ்ரீ திருக் கடித்தனம் -கேரளா
திருக்கடித் தனத்து திருஅவதாரத் திருமாலே
அரிதாய் கிடைத்த அத்புத நாராயணனே
பக்தன் சகாதேவன் பாங்காய் வேண்டிட
அக்னியில் எழுந்தருளிய அத்புத நாராயணனே
புரியாத புதிராய் புவனத்தில் பூத்தவனே
அறியாத பக்தனையும் அரவணைக்கும் பெருமாளே
ருக்மாங்கதன் தோட்டத்து ரூபங்களாய் பூத்து
தக்க தருணத்தில் தலப்பெருமை காத்தவனே
சாகாவரம் பெற்ற சகலதேவரும் சக்தியிழக்க
ஏகாதசி விரதபலன் ஏழைப்பெண் அளித்தாளே
ஆகாதுபோன சக்திகள் அற்புதமாய் கிடைக்க
ஏகாதசி மகிமையை ஏற்றமாய் சொன்னவனே
எங்கும் நிறைந்து எதிலும் கலந்தவனே
பொங்கும் அருளைப் பொலிவாய் தருபவனே
தங்கு தடையின்றி தருமத்தை மறுபடிமறுபடி
இங்கும் அங்கும் எங்கும் காப்பவனே
பூணவேண்டி ஆண்டாள் பூமாலை சூட்டிட
காணவேண்டி மனங்கள் காத்து நிற்குமே
நம்மாழ்வார் பாசுரத்தில் நலமாய் பாடிட
இம்மைக்கும் மறுமைக்கும் ஈஸ்வரன் ஆனவனே
—————-
ஸ்ரீ வைகுண்ட நாதர்- ஸ்ரீ திருநாங்கூர்
திருநாங்கூர் தலத்து தெய்வத் திருமாலே
திருமுகம் கிழக்கே திருக்கோலத் திருமாலே
ஆதிசேடன் தலைமேல் அணிந்த திருமாலே
சேதிகேட்டு சிவனின் சினம்குறை திருமாலே
விழுந்திடும் கேசம் வீறுகொண்ட சிவனாக
எழுந்தருளி சிவனின் இதயம்குளிர வைத்தவனே
பதினோரு சிவனுருவம் பார்வதிக்காக ஆடிட
பதினோரு திருப்பதிகளில் பள்ளிகொண்ட பெருமாளே
ஆடும் சிவனின் ஆங்காரம் தணிந்திட
கேடும் விளையாது குலம் காத்தவனே
வைகுண்ட நாதராய் பூலோகம் வந்தவரே
வைகுண்ட விண்ணகரம் வைகறையில் தெரியுமே
திருமங்கை ஆழ்வார் திருப்பாசுரம் பத்தும்
திருமணிமாடத் திருக்கோயிலில் திருமாலையாய் சூட்டிட
கருடசேவைக் கோலம் கண்கவர் திருக்கோலம்
செருக்கடுத்து எந்தன் சிந்தையில் பூண்டிடுக !
—————-
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்- ஸ்ரீ திருவாலி திருநகரி
திருவாலி திருநகரி திருலக்ஷ்மி நரசிம்மரே
கருட சேவையில் காத்தருளும் தெய்வமே
தஞ்சாவூர் மண்ணில் தாயாருடன் அமர்ந்தவரே
அஞ்சிய அடியாருக்கு அருளிய ஆலிங்கனமே
உக்கிரம் குறைந்து உஷ்ணம் தணிய
பக்கத்தில் அமர்ந்த பத்மத்தின் நாயகனே
பதினோரு திருப்பதிகளில் பாங்காய் அமைந்தவரே
மதியினால் அறியமுடியா மாயஒளி விளக்கே
அரசருக்கும் முனிவருக்கும் அறிவை ஊட்டி
பூவரசக் குப்பத்தில் வாகை சூட்டியவரே
குமுதவல்லி நாச்சியாருடன் கும்பிட்ட ஆழ்வாருக்கு
அமுதவல்லி தாயாருடன் அமுதமான கருணையே
கொஞ்சும் அன்னையின் குளிர்ந்த பார்வையில்
பஞ்சநரசிம்ம ஷேத்ரத்தில் பளிங்காய் மின்னுபவரே
தஞ்சமென வந்தோரை தாங்கி அரவணைத்து
பஞ்சாய் கவலைகளை பறக்கச் செய்பவரே
——————-
ஸ்ரீ த்ரிவிக்ரமன் – ஸ்ரீ உலகளந்த பெருமாள் -ஸ்ரீ திருக்கோவிலூர்
உலகை அளக்க ஒருகாலைத் தூக்கியவனே
குலத்தைக் காக்கும் கோபால பெருமாளே
தலத்தின் பெருமை த்ரிவிக்ரம உருவமே
வலக்கை சக்கரம் வையத்தைக் காக்குமே
இடக்கை சங்கு இடர்களை நீக்குமே
இடம் மாறி இக்கோவிலில் இரண்டுமே
தடம்மாறா வாழ்வில் தாலாட்டி நிற்குமே
திடமான நம்பிக்கை திலகமாய் ஜொலிக்குமே
இருக்கஇடம் இல்லாது ஆழ்வார்கள் மூவர்
முறுவலுடன் உன்புகழை முத்தமிழில் பாட
பொய்கை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார்
மெய்யறிந்து உன்னை முழுதாய்க் காண்பாரே
நடப்பதும் நாளில் நடக்காது போவதும்
கிடப்பதும் உடுப்பதும் கீர்த்தியைப் பாடுவதும்
உண்பதும் உறங்குவதும் உடலால் செய்வதும்
கண்கள் பார்ப்பதும் கால்தூக்கிய உன்னாலே
ஐயம் இல்லாது அப்பனை நாம்கண்டுவிட
வையத்துள் வாழ்ந்திட வகைகளை கற்றிட
அள்ளஅள்ள உணரலாம் அத்வைத அறிவைநம்
உள்ளத்தை அளப்பானே உலகளந்த பெருமாள் !
————
ஸ்ரீ லோகநாத பெருமாள் -ஸ்ரீ திருக் கண்ணங்குடி
உருகாத வெண்ணெய் உருவத்தில் நின்றவனே
பெருகிடும் கருணை பேரானந்த பெருமையே
மகிழத்தில் கட்டிய மதுசூதன மகிழ்வே
அகிலம் காத்திடும் அற்புத விஷ்ணுவே
வசிஷ்டரின் தவத்தில் வையகம் வந்தவனே
உசிதமாய் உரலில் உறையும் தாமோதரனே
உள்ளத்தில் பக்தி உயர்வாய் கொண்டால்
அள்ளஅள்ள குறையாது ஆனந்தம் தருவாயே
வெள்ளமென அன்பை வேணுவில் பொழிவாயே
கள்ளமில்லாது உலகை காத்து நிற்பாயே
திருக் கண்ணங்குடி தலத்தில் திருக்கோல லோக நாதனே
அருளிய மந்திரம் அந்தமில்லா நிறைவே
குருவாய் முனிவருக்கு கோலாகலன் வந்தாயே
பெருமாளாய் இங்கே பெரிதான சியாமளனே
————–
ஸ்ரீ ஸ்ரீனிவாசன் –ஸ்ரீ திருவெள்ளக்குளம்
தென் திருப்பதி என்று திருப் பெயர் கொண்டு
வெண் நிறக் குளத்தருகே வீற்றிருக்கும் வேங்கட நாதனே!
கண் கொள்ளா அழகோடு காட்சி அளித்து
மண்ணில் தவமான மங்கை அலர் மேலவளே
பதினோரு திருப்பதி பதினோரு விஷ்ணு
பதினோரு சிவனுக்காய் பதவிசாய் எழுந்திட
அண்ணல் அவனே ஆகிய படியால்
பண்ணாயிரப் பாடல் பாடி தினம் தொழுதாரே
மங்கை ஆழ்வார் மலரோடு அன்னத்தில்
இங்கே பவனி இனிதே வந்திட
கருட சேவையில் காத்தருளி பவனிக்க
வருடத்தில் தவறாது வந்திடும் தைவிழாவே
மரணத்தை எண்ணி மன்னன் அஞ்சிட
மருத்துவ முனிவரை மன்றாடிக் கேட்டிட
ம்ருத்யுஞ்ச மந்திரம் மன்னருக்கு ஓதிட
கருத்துடன் சிவனை கண்கள் தியானித்தனவே
ஹரனை வேண்டினால் ஹரியும் வந்திட
இறப்பை தள்ளி இங்கிவனைக் காத்திட
நாராயணன் அருளிய நல்லதொரு திருத்தலத்தில்
மாறாது மாதவன் மண்ணினைக் காப்பாரே
முப்பது நாளும் முத்தான தமிழில்
தப்பாது செப்பிய தளிரான மாலை
வலையில் சிக்கிய வலைப்பூ மாலை
அலைபோல் ஓயாது அவனருளால் வளரட்டும் !!!
———–
ஸ்ரீ திரு வண் புருஷோத்தமன் – ஸ்ரீ திருநாங்கூர்
திருப்பாற் கடலின் தீர்த்தம் திகழ்ந்திட
திருமாலை குணமாக்க திரு மூலிகை சஞ்சீவியே
திருமகள் நாயகி திருவோடு இணைந்தவனே
திருப்பதிகள் பதினொன்றில் திருத்தமாய் நின்றவனே
நின்ற கோலத்தில் நிலைத்த புருஷனே
அன்றலர்ந்த தாமரை அழகு மணாளனே
திருமங்கை ஆழ்வாரின் திருப்பாசுர உத்தமனே
கருத்தைக் கவர்ந்திடும் காருண்ய சீலனே
சீலனாம் இராமனை சிறப்பாகப் பாடுவோமே
கோலமாய் அழகை கொண்ட கோதண்டனே
மாலையாய் பாடிய மங்களாசன மூர்த்தியே
சோலையில் பூத்திட்ட சுந்தர விஷ்ணுவே
விஷ்ணுவின் உருவத்தில் வியந்திடும் திருநாங்கூரே
கஷ்டங்கள் போக்கிடும் கருணை வெள்ளமே
சிறப்பினை பெற்ற சீர்காழி தலமே
பிறப்பினை அறுத்து பேறும் தருமே
தருவாய் பாலினை தாயாய் மாறியே
வருவாய் அமுதளிக்க வண்புருஷ உத்தமனாய்
பசியினைப் போக்க பாற்கடலை அளித்தவனே
கசிந்து உருகும் இக் கவிதையின் திருவே
——————
ஸ்ரீ குடமாடு கூத்தன் கோவில் – ஸ்ரீ திருஅரிமேய விண்ணகரம்
குடையாய்த் தாங்கி கோவர்த்தனம் காத்தவனே
விடையாய் கீதையை விவரித்த கண்ணனே
அடைய முடியா அதிசய ஆனந்த உருவமே
தடைகளை அகற்றிடும் தாமோதரக் கண்ணனே
குடத்தில் வெண்ணெய் குதித்தாடி உண்பவனே
குடத்தில் அமுதை குணமாய் மறைத்தவனே
இடையனாய் உதங்கருக்கு இனியமுது ஈந்தவனே
மடை திறந்த வெள்ளமாய் மாயங்கள் செய்தவனே
அக்னி உஷ்ணத்தை அமுதால் குறைத்தவனே
உக்கிர சிவனையும் உருக வைத்தவனே
பக்தரைக் காணப் பறந்தோடி வருபவனே
அக்கரை சேர்க்க அவதாரம் எடுப்பவனே
திருநாங்கூர் தேசத்தை திவ்யமாய் ஆக்கியவனே
திருப்பதிகள் பதினொன்றிலும் திருஉருவம் கொண்டவனே
திருஅரிமேய விண்ணகரத் திருமாலாய் நின்றவனே
திருமங்கை ஆழ்வார் திருப்பாசுர திருஉருவமே
———
ஸ்ரீ உலகளந்த பெருமாள் – ஸ்ரீ காஞ்சிபுரம்
வலக்கால் ஊன்றி வானுயர தூக்கி
உலகை அளக்க உயர்ந்து நின்றவனே
சுலபத்தில் ஆணவம் சுருங்கிய மகாபலி
தலப் பெருமை அறிந்து தலை வணங்கி நிற்போமே
கச்சியின் கோவிலில் கண்டிடும் அதிசயமே
உச்சிவரை இடக்கால் உயரே நின்றிடுமே
பச்சை மாமலை பவழவாய் செங்கண்
இச்சைகள் அகற்றி இச்சகம் காப்பவனே
திருநீரக திருஊரக திருகாரக திருகார்வானமே
திருஉருவே திருமாலே திருமகள் தலைவனே
உருவாய் வருவாய் உலகை அளப்பாய்
அருவாய் மறைவாய் ஆகாயம் நிறைப்பாய்
பாதாள உலகமும் பாதம் காட்டுமே
ஆதாரம் உன்னிடமே அடைக்கலம் ஆகுமே
காதால் கேட்டிட கண்ணால் கண்டிட
கோதாவும் பாடிட கோவிந்த நாதமே
—————-
ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள்- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள்
அட்டபுயக் கரம் கொண்டு அபயம் தருவாயே
எட்டாத முக்தியை எளிதில் தருவாயே
கட்டிய வீட்டைக் காத்து அருள்வாயே
தட்டாமல் யானைக்கும் தயாளம் காட்டுவாயே
அக்கரத்தில் சக்கரம்கத்தி அம்புடன் புஷ்பமே
இக்கரத்தில் சங்குகதை ஏந்தியவில்லுடன் கேடயமே
முக்காலம் உணர்ந்த முனிவருக்கும் மோட்சமே
மக்களைக் காக்க மங்களமான கோலமே
மகாசந்தன் யானையாகி மலரால் வழிபட
மகாவிஷ்ணுவே ஆதிமூலமாகி மனமிரங்கி வந்தாயே
யாகத்தை தடுத்திட யாராலும் முடியாதே
யோகத்தை அருளிய யாதர்குல மாணிக்கமே
அலமேல் மங்கையுடன் அஷ்டபுஜ ஆதிகேசவனே
தலப்பெருமை அறிந்து தாளடி பணிவோமே
வலம்வந்து உன்னை வணங்கி நிற்போமே
உளமகிழ்ந்து தினமும் உன்னருள் பெறுவோமே
—————
ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (ஸ்ரீ யதோத்தகாரி பெருமாள்) ஸ்ரீ திருவெஃகா –
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே -ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
திருமழிசை ஆழ்வார் திருஅருட் பாலில்
உருவத்தில் இளமை உடனே பெற்றாளே
பதுமையை மன்னன் பாராட்டி மணந்து
இதுபோன்ற இளமை எனக்கும்தா என்றானே
மன்னனுக் கிசைய மறுத்த ஆழ்வாரை
தன்நாடு கடந்து தாண்டச் சொன்னானே
தன்சீடர் தன்மக்கள் தன்பொருள் இதனுடன்
தன்பெருமாள் உன்னையும் தன்னோடு அழைத்தாரே
மன்னனின் ஆணையில்திரு மழிசை ஆழ்வார்கனி
கண்ணன் துணையோடு காலாற நடக்க
என்னோடு நீயும் எழுந்து வாவென்றுசொல்ல
அண்ணலும் அன்று ஆழ்வாருடன் சென்றீரே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே- ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
தன்தவறு உணர்ந்து தாளடி பணிந்து
மன்னிப்பு கேட்டு மன்னன் வந்திட
தன்னோடு கனிகண்ணன் தானாக திரும்பிட
உன்பக்தன் பின்னாலே உளமாரச் சென்றீரே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே-ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
கோபத்தில் சரஸ்வதி கொந்தளிக்கும் வேகவதி
ஆபத்தை நீக்கவே ஆதிசேட வேகசேது
திருவெஃக நகருக்கு திரும்பி வந்தவனே
திருமாலாய் வந்திங்கு திரும்பிப் படுத்தவனே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே-ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
வலமிருந்து இடமான வைகுண்ட பெருமாளே
தலத்தில் திசைமாறி தலையும் வைத்தவனே
கோமள நாச்சியுடன் கோயில் கொண்டவனே
தாமரை மணாளனே தளிர்மேனி வண்ணனே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே -ஆழ்வார்
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்
கணி கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணி வண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக் கொள்.
————–
ஸ்ரீ தேவராஜப் பெருமாள்
நான்முகன் யாகத்தை நலமாக்கிய பெருமாளே
வான்வெளி படுத்த வரதராஜ பெருமாளே
நாற்பது ஆண்டுக்கொரு நற்கதி பெருமாளே
ஆர்ப்பாட்ட விழாவில் அத்திவரத பெருமாளே
பிரம்மனின் அக்னியில் பிறந்த பெருமாளே
பிரம்மாண்ட கோவிலில் படுத்த பெருமாளே
சூழும் உலகிற்கொரு சுதர்சன பெருமாளே
வீழும் பழிகளை விலக்கிடும் பெருமாளே
படிகளிரு பன்னிரண்டு பாதை பெருமாளே
அடிகளில் பாடிய ஆழ்வாரின் பெருமாளே
மலையாள நாச்சியார் மனம்கவர் பெருமாளே
மலையேற காயத்ரி மந்திர பெருமாளே
சக்கரத் தாழ்வார் சந்நிதி பெருமாளே
அக்கரை ஆசார்ய ஆச்சர்ய பெருமாளே
ஒருவினாடி மறைந்து ஓங்கிடும் பெருமாளே
கருட சேவையில் காத்திடும் பெருமாளே
தங்க பல்லியாய் தாங்கிடும் பெருமாளே
தங்க மழைபொழியும் தாயார் பெருமாளே
மங்காத ஆபரணம் மார்பிடை பெருமாளே
சங்கு சக்கரமுடன் சயனித்த பெருமாளே
வையம் கண்டிடும் வைகாசி பெருமாளே
ஐராவதம் தாங்கிடும் அத்திகிரி பெருமாளே
பொய்யை அகற்றிடும் பொலிவான பெருமாளே
மெய்யை உணர்த்த மேவிய பெருமாளே
————
ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்- ஸ்ரீ சோளிங்கர்
யோகத்தில் ஆழ்ந்த யோகியே போற்றி
யாகங்கள் காத்த யாதவனே போற்றி
மாயங்கள் செய்த மாதவனே போற்றி
காயங்கள் போக்கும் குணசீலா போற்றி
சிறுவன் பிரகலாதன் சொல்காத்தவனே போற்றி
உருவத்தில் நரசிம்ம உக்கிரமே போற்றி
சப்தரிஷிகளுக்கும் காட்சியான சத்தியமே போற்றி
அப்படியே யோகத்தில் ஆழ்ந்தவனே போற்றி
தொட்டாச் சாரியரின் துணையே போற்றி
தட்டாது தரிசனம் தந்தவனே போற்றி
கடிகாசல மலையின் காவலே போற்றி
கடிகை நாழிகையில் கோலமே போற்றி
முக்தியை அளித்திடும் மூலவனே போற்றி
பக்தியில் காட்டிடும் பாதையே போற்றி
சக்கர சங்கோடு சந்நிதியே போற்றி
அக்கறை பலத்துடன் ஆஞ்சநேயா போற்றி
ஏறிய படிகளில் இரங்கிடுவாய் போற்றி
கோரிய வேண்டுதலுக்கு குழைந்திடுவாய் போற்றி
முனிவருக்கு பிரம்மரிஷி முனைந்தவனே போற்றி
மனிதனுள் சிம்மமாய் மாறியவனே போற்றி
—————
ஸ்ரீ சிறுபுலியூர்-பால சயன கோலம்
ஆதிசேடன் மடியினில் அனந்த சயனனே தாலேலோ
ஓதிய மறைகளில் ஒய்யார சயனமே தாலேலோ
பால சயனக் கோலத்தில் படுத்தவனே தாலேலோ
காலத்தால் அழியாத கருடசேவை பெருமாளே தாலேலோ
அகந்தை அழித்த அரங்க சயனனே தாலேலோ
அகத்தினை திறந்து அமர்ந்த அண்ணலே தாலேலோ
இகபர சுகத்தினை இவ்வுலகில் அளிப்பவனே தாலேலோ
சுகமான பேரின்பம் சுகித்திட தருபவனே தாலேலோ
அவனியைக் காத்த அலுப்பில் படுத்தவனே தாலேலோ
சிவனின் சொல்லால் சேவித்த பாலகனே தாலேலோ
புலிக்கால் முனிவருக்கு புரிந்த அருளோனே தாலேலோ
கலியுலகம் வந்ததென்று களைத்து போனாயோ தாலேலோ
திருவனந்தபுர இடவலமான தீர்க்க பெருமாளே தாலேலோ
திருக்கண்ண மங்கையில் திடமான கீழ்மேலானவனே தாலேலோ
திருஅரங்கத்தில் படுத்த திருக்கோல நாயகனே தாலேலோ
சிறுபுலியூரில் சிந்தைகவர் சின்ன பாலகனே தாலேலோ
—————–
ஸ்ரீ தேவாதி ராஜ பெருமாள்-ஸ்ரீ தேரழுந்தூர்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழியே
அல்லும் பகலும் அலுப்பின்றி காப்பாய் வாழியே
தேவாதிதேவ ராஜாதிராஜ தேவனே வாழியே
பாவாய் ஆண்டாள் பாடிய அரங்கனே வாழியே
பத்தடிஉயர கம்பீர பரமனே வாழியே
சித்திர அழகில் சிந்தை கவர்பவனே வாழியே
அருகிலே பிரகலாதன் அண்டையில் மார்கண்டேயன் வாழியே
கருடனின் அருகில் கதையுடன் நின்றவனே வாழியே
காலிலே காவேரி கடிமலராய் வணங்கிட வாழியே
ஆலிலை கண்ணனே ஆங்கேஉயர் விஸ்வமே வாழியே
அழுந்திய தேரினை அசைத்த ஆண்டவனே வாழியே
கொழுந்தாய் பசுக்களை கோகுலத்தில் காத்தவனே வாழியே
அரிதிலும் அரிதான அரிநாரயண வடிவமே வாழியே
கரிகால் வளவனின் காலத்து தலமே வாழியே
கம்பன்பிறந்த கடிமணல் காவேரி கரை வாழியே
செங்கமல வல்லியுடன் சேர்ந்த திருமாலே வாழி வாழியே!
————
ஸ்ரீ திருத்தஞ்சை மாமணிக்கோவில்-மூன்று தலங்கள் – ஸ்ரீ நீலமேக பெருமாள் / ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் / ஸ்ரீமணிக்குன்றர்
அஞ்சலென்ற பராசரருக் கருளிய அரியே
தஞ்சகனை அழித்த தாமரை அரியே
கெஞ்சிய கஜமுகனை திருத்திய அரியே
தஞ்சம் அளித்த தஞ்சாவூர் அரியே
தண்டகனை வராகமாய் அழித்த அரியே
அண்டம் பாதாளம் அதனுள்பாய்ந்த அரியே
தாடகனை அழித்த தாண்டவ அரியே
பாடலில் ஆடிவிடும் பாலக அரியே
வெண்ணாற்றுக் கரையில் வீற்றிருக்கும் அரியே
மண்ணிலே ஒளிரும் மணிக்குன்ற அரியே
நிலத்தில் கமழும் நீலமேக அரியே
தலத்தில் திகழும்வீர நரசிம்ம அரியே
மூன்று கோவிலிலும் முகுந்த அரியே
சான்றாய் அமைந்த சாத்திர அரியே
அறிய முடியாத அளவில்லா அரியே
அரிதான மாயையின் ஆக்கமான அரியே
அடிமுதல் முடிவரை அளக்கமுடியா அரியே
மடிமேல் பிளந்த மகாநரசிம்ம அரியே
கொடியாய் செங்கமல கோதையுடை அரியே
வடிவாய் அம்புஜ வல்லியின் அரியே
——–
ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் – ஸ்ரீ திருக்கண்ண மங்கை
புண்ணியம் ஏழு புவியில் பெற்றதலமே
மண்ணிலே மங்கையை மணந்த தலமே
பாற்கடல் பள்ளிகொண்ட பரந்தாமன் தலமே
கார்முகில் வண்ணன் கண்ணன் மங்களதலமே
சந்திரன் பெற்ற சாபம் தீர்த்ததலமே
மந்திர தீர்த்தம் மகாலக்ஷ்மி அபிஷேகமே
சித்திரா பௌர்ணமியில் சிந்தைகவர் திருவிழாவே
சித்தம் குளிர்ந்து சிங்காரம் பொங்குமே
பத்திரமாய் காக்கும் பக்தரை பத்தராவியே
பத்திரமாய் கூடாகும் பணிவான தேனிக்களே
பண்ணிலே வந்திடும் பக்தவத்சல பெருமாளே
கண்ணிலே கருத்திலே கலந்திடு பெருமாளே
திருமகளை திருக்கண்ண மங்கையில் திருமணம் செய் திருமாலே
திருக்கண்ண திருத்தலத்தில் திகழும் திருமாலே
————-
ஸ்ரீ தல சயன பெருமாள்-ஸ்ரீ திருக்கடல் மல்லை
பள்ளி கொண்ட நாராயணா பாற்கடல் பரந்தாமா
அள்ளிவிட முடியாத ஆழ்கடல் அனந்த சயனா
புண்டரீக மகரிஷி பூக்களை சுமந்த பத்மநாபா
அண்டம் காத்த அச்சுதா கேசவா மதுசூதனா
பன்னிரண்டு நாமங்கள் பாசுரத்தில் ஆழ்வார் பாடிட
மன்னுபுகழ் நாலாயிரம் மகிழ்வோடு உன்புகழ் சொல்லிட
தென்னிலங்கை காத்து தேவருலகம் காத்து
சொன்ன சொல் காத்திடும் வாமனா கோவிந்தா
மாமல்ல புரத்தில் மாயமாய் வந்த யோகியே
தாமதம் செய்யாது தலத்தில் சயனித்த பெருமாளே
வற்றாத கடலில் வைகுண்ட கோலத்தில் படுத்தவனே
எற்றைக்கும் என்தன்னோடு எழுபிறவிக்கும் அருள்வாயே
சூடிய மலரோடு சூத்திரம் பலசெய்வாய்
பாடிய பாட்டில் பாற்கடலில் படுத்திடுவாய்
ஓடிய வாழ்க்கையில் ஒய்யாரமாய் ஒளிந்திடுவாய்
தேடிய விழிகளுக்கு திகட்டாது தெரிந்திடுவாய்
———-
ஸ்ரீ திருச் சார நாத பெருமாள் – ஸ்ரீ திருச்சேறை
மணவாள நாயக்க மன்னனின் மனமாற்றி
குணமான நரசபூபாலன் கோயிலைக் கட்டிட
மணமான திருச்சேறை மண்ணிலே தங்கி
அணங்கோடு அண்ணல் அழகாய் நின்றதென்ன!
கங்கை பெரியதா காவேரி பெரியதா
மங்கைகள் வாதிட மாலும் தீர்ப்பளிக்க
சங்கும் சக்கரமும் சாரநாத பெருமாளும்
தங்கிய திருச்சேறை தலத்தின் அழகென்ன!
அஞ்சியே பிரம்மன் அங்குமிங்கும் அலைய
மிஞ்சிய வேதத்தை மறைக்க முயன்றிட
தஞ்சமென்று உன்னிரு தாளடி பணிந்திட
பஞ்சலக்ஷ்மி நாயகிகள் பக்கத்தில் நின்றதென்ன
மண்ணிலே அழியாத மகாபிரளய சாரமாய்
விண்ணிலே வைகுண்டம் வேதத்தின் சான்றே
மண்ணிலே கடத்தை மகத்தாய் செய்து
கண்ணிலே படாது காத்த வேதமென்ன
———
ஸ்ரீ உப்பிலியப்பன் – ஸ்ரீ திருவிண்ணகரம்
எட்டடி உயர என்னருமை அப்பனே
எட்டாத உயரத்தில் எழுந்தருளும் அப்பனே
உப்பில்லா பண்டம் உளமார உண்பவனே
அப்பனாய் அரியாய் அண்டம் காப்பவனே
விதியை மாற்றி விலையில்லா பெருவாழ்வை
பதினாறு வயதையவன் பருவமாய் பெற்றானே
பெற்றவன் பெற்ற பிராட்டி பூமாவை
உற்றவன் நீயும் உகந்து பெற்றாயே
முதியவராய் வந்து மூத்தவராய் நின்றாய்
அதிசயமாய் மாறி அழகனாய் நின்றாய்
உணவை சமைக்க உத்தமி அறியாதுநிற்க
குணமே பெரிதென்று கோயிலில் நின்றாய்
அன்பே சுவைக்கும் அறுசுவையாய் இனிக்கும்
என்பதை உரைக்க எப்போதும் உப்பின்றி
அன்னம் உண்டு அருளிக் காப்பாய்
எண்ணத்தில் வேரூன்றி எங்களைக் காப்பாய்
பார்வையில் கருணை பரந்தாமன் சொரிய
மார்பிலே மகாலக்ஷ்மி மணத்திலே துளசி
திரு ஒப்பில்லா அப்பனாய் திகழும் பெருமாளே
திருவிண்ணகரதத்தின் திவ்யதேசப் பெருமாளே!
————–
ஸ்ரீ வையம் காத்த பெருமாள் -ஸ்ரீ திருக்கூடலூர்
கூடலூர் தலத்தில் கோலமிட்ட பெருமாளே
பாடலில் பாடிட பரவசம்தரும் பெருமாளே
வையகம் காத்த வைகுண்ட பெருமாளே
கையிலே சக்கரம் கொண்டிடும் பெருமாளே
ஏந்திய சக்கரத்தை ஏவிடும் பெருமாளே
வேண்டிய அம்பரீஷனுக்கு வீசிய பெருமாளே
சினந்த துர்வாசர் சீற்றமடக்கிய பெருமாளே
மனத்தால் பின்பு மன்னித்த பெருமாளே
வராக வடிவிலே வந்திடும் பெருமாளே
அராஜகம் அழிக்க ஆணையிடு பெருமாளே
கூடிடும் நதிகள் கும்பிடும் பெருமாளே
ஓடிடும் காவிரி தொழுதிடும் பெருமாளே
கிளிக்கு தரிசனம் கொடுத்த பெருமாளே
விளியில் ஹரியாய் வந்திடும் பெருமாளே
ஒலித்த சங்கில் ஓங்கிடும் பெருமாளே
கலியிலே எங்களை காத்திடு பெருமாளே
—————————
ஸ்ரீ ஜெகன்னாத பெருமாள் – ஸ்ரீ நந்திபுர விண்ணகரம்-
திருமகள் தவத்திற்கு திருவருள் திருமாலே
திருமகளை கொண்ட திருமார்பு திருமாலே
நந்தியின் சாபம் நீக்கிய திருமாலே
நந்திபுர விண்ணகர நற்கோவில் திருமாலே
தன்னையே தியாகம் தந்தவனின் திருமாலே
உன்னையே நினைத்தவர் உள்ளத்து திருமாலே
ஜகத்தை காத்திடும் ஜெகன்னாத திருமாலே
அகத்தில் அமர்ந்த அரங்கத்து திருமாலே
எங்கும் வீற்றிருக்கும் எழிலான திருமாலே
பொங்கும் அழகுடன் பொலிவான திருமாலே
நலம்தரும் நாமமான நாராயண திருமாலே
வளம்தரும் வாசலான வைகுண்ட திருமாலே
ஆழ்வாரின் பாசுரத்தில் அழகான திருமாலே
ஊழ்வினை அகற்றிடும் உயரிய திருமாலே
—————
ஸ்ரீ கஜேந்திர வரத பெருமாள் – ஸ்ரீ கபிஸ்தலம்–
அபயம் கொடுக்க ஆதிமூலமே வந்திடு
உபயமாய் சக்கரம் உதவிட வந்திடு
பிறவியின் பாவம் பறந்தோட வந்திடு
துறவியின் கோபம் தூரஓட வந்திடு
பிடிபட்ட கஜேந்திரன் பிணியினை நீக்கிடு
அடிபட்ட காலை அன்பிலே தோய்த்தெடு
காலை பந்தங்கள் கவ்விட காத்திடு
சோலை கானமாய் சுகமாய் வந்திடு
துயரக் கடலில் தோணியாய் வந்திடு
உயரிய மோட்சம் ஊட்டமாய் தந்திடு
அனுமனைக் காண அழகனாய் வந்திடு
மனுவின் நீதியை மண்ணில் காத்திடு
எங்களைக் காத்திட எழிலாய் வந்திடு
மங்காது மாறாது மானுடம் காத்திடு
———-
ஸ்ரீ வல்வில் ராமன் – ஸ்ரீ திருப்புள்ளம் பூதங்குடி
ராம ராம ராகவா நமோநம
ராம சந்த்ர ரூபா நமோ நம
ராஜ கம்பீர தேவா நமோ நம — ரகு ராமா
ஓடி வந்த தோழா நமோ நம
வாடி விழும் ஜடாயு நமோ நம
பாடி மகிழும் பாரில் நமோ நம — தேவதேவா
நாம தசரத குமாரா நமோ நம
பூம சுந்தரி தேவா நமோ நம
ஈமக் கடன் செய்தாய் நமோ நம – ஹரிகேசவ
பள்ளி கொண்ட ராமா நமோ நம
புள்ளிற்கு அருளும் புண்யா நமோ நம
கொள்ளை அழகு கொண்டாய் நமோ நம …. கோதண்டா
நேர்ம நியதி புருஷா நமோ நம
சீர்ய வாழ் சுந்தரா நமோ நம
சோர்வு தீர் ஸ்வரூபா நமோ நம …. அருள் தாராய்
ராம ராம ராகவா நமோநம
ராம சந்த்ர ரூபா நமோ நம
ராஜ கம்பீர தேவா நமோ நம — ரகு ராமா
—————-
ஸ்ரீ சாரங்கபாணி -ஸ்ரீ திருக்குடந்தை
திருக்குடந்தை கோவிலில் திருசயனம் பூண்டவனே
திருமகளை மணந்து திருவருள் புரிந்தவனே
வில்லேந்தி நின்றபடி வேந்தனாய் வந்தவனே
சொல்லுக் கழகாய் சுந்தரத்தேரில் வந்தவனே
எழுந்த சயனமாய் எழிலாய்ப் படுத்தவனே
தொழுது வணங்க தூமலர் மாலனே
பொற்றாமரை குளத்தில் புதிதாய் பூத்தவனே
கற்றறிந்த ஆழ்வார் கருத்தில் நின்றவனே
ஓராயிரத்துள் இப்பத்தும் ஓங்காரமாய் இசைத்தவனே
ஆராவமுத ஆழ்வாராய் அழியாது நின்றவனே
நாலாயிர பிரபந்தத்தை நாதமுனிக் களித்தவனே
கோலாகல உற்சவமாய் கொண்டாடப் படுபவனே
வடக்கும் தெற்கும் வகையாய் வாசலிருக்க
இடக்கின்றி பரமபதம் எமக்கிங்கு அளிப்பவனே
வீட்டுடன் மாப்பிள்ளை விளையாடி இருந்திட
மேட்டு சீனிவாசனாய் மெத்தனமாய் நிற்பவனே
சேவிக்கும் பக்தருக்கு சேவை செய்பவனே
ஆவிக்கும் ஆன்மாவிற்கும் அமைதி அளிப்பவனே
தேரிலே வந்த தென்னாட்டு மன்னவனே
பாரிலே மணந்த பாற்கடல் பெருமாளே
———-
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் – ஸ்ரீ திருஆதனூர்
படி அளக்கும் பாற்கடல் பெருமாளே
படி காட்டி பாதைக்காட்டும் பெருமாளே
ஏடும் எழுத்தாணியும் ஏந்திய பெருமாளே
ஈடு இணை இல்லாத பெருமாளே
வணிகனாய் வந்து வையகம்காத்த பெருமாளே
அணிகலனாய் திருமகளை அணிந்த பெருமாளே
காமதேனு அகந்தை கலைத்த பெருமாளே
வாமன அவதாரம் வடித்த பெருமாளே
மரக்கால் அளக்க மண்டலம் பெருமாளே
மரக்கால் துளசியின் மகத்துவ பெருமாளே
ஆஅவள் காலடியில் அணைத்த பெருமாளே
ஆதவன் வாயிலாய் அண்டம்நோக்கும் பெருமாளே
படைத்த களைப்பில் படுத்த பெருமாளே
குடையாய் சேடனைக் கொண்ட பெருமாளே
தூணிலும் இருந்து துரும்பான பெருமாளே
தூணிலே முக்திக்குத் துடுப்பான பெருமாளே
எங்கும் நிறைந்த எழிலான பெருமாளே
பொங்கும் அழகாய் பூத்திடும் பெருமாளே
—————-
ஸ்ரீ கோலவில்லி ராமர்- ஸ்ரீ திருவெள்ளியங்குடி
கருமை நிறக் கண்ணனின் வடிவமே
காருண்ய சீல காண்டீப வடிவமே
கிருபை கூர்ந்திடும் கிருஷ்ண வடிவமே
கீர்த்தி வாய்ந்திடும் கேசவ வடிவமே
குடையால் கோவர்த்தனம் காத்த வடிவமே
கூர்ம அவதார கோலாகல வடிவமே
கெஞ்சிய மயனக்கு கோலமான வடிவமே
கேடுகளை அகற்ற கோவிலான வடிவமே
கையிலே வில்லேந்தி காத்திடும் வடிவமே
கொஞ்சும் அழகுடன் குழந்தை வடிவமே
கோலவில்லி ராமராய் கொலுவிருக்கும் வடிவமே
கௌசல்யா புத்திரனாய் குலம்காக்கும் வடிவமே
சக்கரம் கருடனுக்கு சங்குடனளித்த வடிவமே
சாப விமோசனம் சாத்தியமாக்கும் வடிவமே
சிந்தை கவர்ந்திடும் சிருங்கார வடிவமே
சீரும் சிறப்புடன் செருக்ககற்றும் வடிவமே
சுக்கிரன் விழியை சுடராக்கும் வடிவமே
சூத்திர தாரியாய் சுகமளிக்கும் வடிவமே
செங்கதலி வாழை செழிக்கஅருளும் வடிவமே
சேங்கானுர் அருகில் சேர்ந்தருளும் வடிவமே
சைன்யம் இல்லாது சாரதிவென்ற வடிவமே
சொக்க வைக்கும் சுந்தர வடிவமே
சோபிக்கும் முகமுடன் சுகந்த வடிவமே
சௌபாக்யம் அருளும் சௌந்தர்ய வடிவமே
—————
ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள்- ஸ்ரீ திருவிடஎந்தை
நாயகன் ஒருவனாய் நல்லுலகில் நின்றவனே
நாயகி பலரை ஒன்றாக்கிய நாயகனே
பலியின் தவத்திற்கு பறந்து வந்தவனே
கலியிலும் எங்களை காத்து அருள்பவனே
வராக முகமாய் வந்தருள் புரிபவனே
தகாது செய்யாது தடுத்தாட் கொள்பவனே
குனிக்கு முக்தியை குன்றாது தந்தவனே
முனிவரின் பத்தினிக்கு முன்னின்று அருளியவனே
நித்தியம் கல்யாணம் நிலத்தில் நடத்துபவனே
சத்திய வேத சரித்திர நாயகனே
உத்தமி லக்ஷ்மி உட்காரத் தாங்கியவனே
மெத்தன சேடன் மேலே நின்றவனே
அகிலவல்லி தாயாரை அண்டக் கொடுத்தவனே
சகியாய் கோமளவல்லி சந்நிதி தந்தவனே
திருமகள் இடமாக திருக்கோவிலில் நின்றவனே
திருவிடந்தைக் கோவிலில் திருவருள் புரிபவனே
————–
ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் -ஸ்ரீ திருக்கண்டியூர்
சிவனின் சாபத்தை சிதைத்த பெருமாளே
அவனியைக் காத்திடும் ஆனந்த பெருமாளே
கபாலம் விழுந்த காலடி பெருமாளே
அபார அழகுடன் அமைந்த பெருமாளே
கோமள வல்லியுடன் கொலுவிருக்கும் பெருமாளே
தாமரை மலரினைத் தாங்கிடும் பெருமாளே
கண்தான தேசமாய் கண்டியூர் பெருமாளே
மண்ணிலே உறைந்த மதுசூதன பெருமாளே
பஞ்சகமல நிலமாய் பாரினில் பெருமாளே
கொஞ்சிடும் வதன கோபால பெருமாளே
கண்டியூர் தலத்தில் கால்வைத்த பெருமாளே
அண்டம் காத்திடும் அதிசய பெருமாளே
———–
ஸ்ரீ அப்பக்குடத்தான் – ஸ்ரீ கோவிலடி -ஸ்ரீ திருப்பேர் நகர்
அப்பத்தை குடத்துடன் ஆர்வமாயுண்ட அப்பனே
ஆபத்தில் கைகொடுக்கும் ஆண்டவ ரங்கனே
இம்மையிலும் மறுமையிலும் எங்களைக் காப்பவனே
ஈரேழு உலகிலும் இணையில்லா அழகனே
உபமன்யு சாபத்தை ஒருநொடியில் நீக்கியவனே
ஊருக்கென்று செய்த உணவை உண்டவனே
எழிலாய் சயனித்த எளிய அந்தணரே
ஏற்றமிகு கோவிலடி ஏறிய பெருமாளே
ஐயமின்றி மார்க்கண்டேயன் அச்சம் போக்கியவனே
ஒயிலாய் திருப்பேர் ஊரிலே படுத்தவனே
ஓங்கார வடிவமாய் நம்மாழ்வார் தொடர்ந்தவனே
ஔடதமும் இனிக்க அருளைப் பொழிபவனே
ரங்கா ரங்கா !
————-
ஸ்ரீ அன்பில்- ஸ்ரீ சுந்தர்ராஜ பெருமாள்(ஸ்ரீ வடிவழகிய நம்பி)
கொள்ளை அழகை கொள்ளை கொண்டவனே
பள்ளியறையில் அழகாய் பள்ளி கொண்டவனே
நிலையில்லா அழகு நிலைக்காது என்றவனே
விலையில்லா உண்மை விளங்க வைத்தவனே
ஆணவம் அழிக்க ஆணாய் பிறந்தவனே
காணக் கண்கோடி கணத்தில் தந்தவனே
தவமாமுனிவர் சுதபா தவத்திற்கு வந்தவனே
தவமாமுனிவர் துர்வாசவாக்கு தவறாது காத்தவனே
நிலத்திலும் நீரிலும் நிலையாய் நின்றவனே
சுலபத்தில் அன்பை சொற்பமாய் பொழிபவனே
ஆண்டு அவளை ஆண்ட ஆண்டவனே
ஆண்டாள் தன்னை அண்டத்தில் மணந்தவனே
வடிவில் அழகிய வடிவழகிய நம்பியே
மடியில் வல்லியை மடித்த அழகனே
அன்பில் கோவிலில் அன்பில் அமைந்தவனே
அன்பால் அணைத்து அன்பரில் அமர்ந்தவனே
———————-
ஸ்ரீ புண்டரீகாட்சன்- ஸ்ரீ திருவெள்ளறை
வெண்மை பாறையில் வெள்ளறை வாசனே
கண்ணைக் கவரும் கலியுக வண்ணனே
புண்டரீக துளசிக்குப் பூத்த தாமரையே
மண்டலம் காத்திடும் மகா விஷ்ணுவே
படிகள் பதினெட்டு பாங்காய் அமைந்திட
படிக்க பதினெட்டு அத்தியாய கீதையே
படிகள் நான்கும் பரிசுத்த வேதமே
படிகள் ஐந்தும் பஞ்ச பூதங்களே
பலிபீட திருமஞ்சன படையல் பொங்கலே
கலியிலே வேண்டுதலை கணத்தில் நடத்துமே
சிபியின் அன்புக்கு சிரித்துவந்த வராகமே
சுபிட்ஷம் தழைக்க சுந்தர உருவமே
திருப்பணி செய்யவே திரண்ட மக்களில்
திருமாலும் ஒருவராய் திருவருள் செய்தாரே
திருமகள் செண்பகவல்லி திருவிழா காலத்தில்
திருவருள் புரிந்திட திறம்பட எழுவாளே
————
ஸ்ரீ விளக்கொளி பெருமாள்–ஸ்ரீ திருத்தண்கா – ஸ்ரீ தூப்புல்
யாகம் காக்கவந்த யௌவன ஒளியே
சோகம் போக்கிடும் சுவர்க்க பூமியே
பிரம்மன் வேண்டிடவந்த பிரம்மாண்ட ஒளியே
வரத்தை வழங்கிடும் வரதராஜ பெருமாளே
இருளைப் போக்கிடும் இதமான விளக்கே
அருளைச் சொரியும் ஆதி கேசவனே
வைணவத் தாயின் வேதாந்த மணியே
வைணவ மதத்தின் வேதமான ஒளியே
எங்கும் பரவிய என்னருமை பெருமாளே
சங்கு சக்கரமுடன் சன்னதி பெருமாளே
செல்லும் இடத்திற்கு சொல்லாமல் வந்திடு
அல்லும் பகலும் அலுக்காது காத்திடு
நாடுவிட்டு நாடுவந்திடு நாளும் உன்னைப்
பாடும் பாக்கியம் பாவைக்குத் தந்திடு
———————-
ஸ்ரீ அழகிய சிங்க பெருமாள் – ஸ்ரீ திருவேளுக்கை –
அழகிய சிங்கவடிவ ஆனந்த பெருமாளே
ஆழமாய் சிந்திக்கவைக்கும் அத்வைத பெருமாளே
இன்னல் களைய இனிதேவந்த பெருமாளே
ஈன்ற அருளில் இவ்வுலகம்தழைக்கும் பெருமாளே
உன்னருள் பெறவே உரைத்தநாம பெருமாளே
ஊனுடல் மறந்து உவகைதரும் பெருமாளே
எங்கும் இருக்கும் எதிலுமிருக்கும் பெருமாளே
ஏங்கும் பிரகலாதன் எதிரில்வந்த பெருமாளே
ஐயம் அகற்றிட அகிலம் காத்திட பெருமாளே
ஒய்யார வடிவில் ஒருயாகம்காத்த பெருமாளே
ஓங்கார வடிவ உத்தமநாயக பெருமாளே
ஔடத அமுதாய் வாழ்வளிக்கும் பெருமாளே
சரஸ்வதி இலக்குமி சண்டைபோக்கிய பெருமாளே
பரலோக வாழ்வில் பாதைகாட்டும் பெருமாளே
ஆசையுடன் இவ்விடத்தில் அமர்ந்த பெருமாளே
ஓசையாய் இதயத்தில் ஒலிக்கும் பெருமாளே
—————-
ஸ்ரீ கள்வப் பெருமாள் -ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் –
நூறுநாள் பாடவைத்த நூதனப் பெருமாளே
மாறுதலே இல்லாத மகத்தான பெருமாளே
ஆதியாய் அமைந்து அந்தமில்லா பெருமாளே
ஓதிய வேதங்களில் ஒளிரும் பெருமாளே
கள்வனாய் வந்திங்கு கருத்தினில்நின்ற பெருமாளே
உள்ளுக்குள் அழகாய் ஒளிந்த பெருமாளே
உருவத்தின் அழகு உண்மையில்லை பெருமாளே
அருவத்தில் உணர்த்தி அருளிய பெருமாளே
தங்கையின் கோவிலில் தங்கிய பெருமாளே
மங்கை வணங்கிய மதிமயக்கும் பெருமாளே
உலகை அளக்கும் ஓங்கார பெருமாளே
சுலபத்தில் அணுவாய் சுருங்கும் பெருமாளே
மீனாய் வந்தெங்களை மீட்ட பெருமாளே
தானாக பூத்திடும் தாமரை பெருமாளே
கூர்ம வடிவம் கூறும்உண்மை பெருமாளே
பார்த்தனின் சாரதி பாருக்களித்த பெருமாளே
வராக வடிவத்தில் வந்துகாத்த பெருமாளே
அராஜகம் நீக்கி அகிலம்காத்த பெருமாளே
நரகரி ரூபத்தில் நலம்தரும் பெருமாளே
கரம் கூப்பி கும்பிடுவோம் பெருமாளே
மூன்றடி பெறவே முன்வந்த பெருமாளே
அன்று உலகை அளந்த பெருமாளே
பரசுராமனாய் அவதரித்த பரிசுத்த பெருமாளே
சிரம் தாழ்த்தி சிந்தைவணங்கும் பெருமாளே
ஏகபத்தினி விரதனாய் எழுந்தருளிய பெருமாளே
மோகத்தை கொல்லும் முழுமுதற் பெருமாளே
கருமேனி கண்ணனாய் கண்கவர் பெருமாளே
சிறுபாலக வடிவில் சிந்தைகவர் பெருமாளே
புத்தராய் வந்திங்கு புவிகாத்த பெருமாளே
சித்தரும் அறியா சிறந்த பெருமாளே
கல்கியாய் வருவாயென காத்திருக்கிறோம் பெருமாளே
அல்லும் பகலும் அனுதினமருளும் பெருமாளே
பள்ளிகொண்டு காக்கும் பரமசுக பெருமாளே
அள்ளிய அழகில் அண்டம்நிறை பெருமாளே
நின்ற கோலத்தில் நிறையும் பெருமாளே
என்றும் காக்கும் எழிலான பெருமாளே
இருந்த கோலத்தில் இதமளிக்கும் பெருமாளே
கருத்தனில் கலந்த கள்வப் பெருமாளே
கிடந்த கோலத்தில் கிருபையளிக்கும் பெருமாளே
நடக்கும் செயல்களை நல்லதாக்கும் பெருமாளே 20
வரதராஜனாய் வடிவுகொண்ட வல்வில்ராம பெருமாளே
ஹரசாப விமோசன ஹரிநாராயண பெருமாளே
புண்டரீகாட்சனாய் நின்ற புருஷோத்தம பெருமாளே
விண்ணகர பெருமாளான விஜயராக பெருமாளே
சொன்ன வண்ணம் செய்த பெருமாளே
நின்ற வண்ணம் நித்யகல்யாண பெருமாளே
ஆதிகேசவ அற்புத நாராயண பெருமாளே
ஓதியவேத ஆதனூர் ஒய்யார பெருமாளே
திருவரங்கக் கோவிலில் திருவருள் பெருமாளே
திருக்கண்ண மங்கை திருபக்தவதசல பெருமாளே
அழகிய சிங்கமாய் அருளிய பெருமாளே
பழகிய பாலகனாய் பாம்பணை பெருமாளே
ஆழ்வார் பாடிய ஆதிநாத பெருமாளே
ஆழ்கடல் நீரவண்ண அழகிய பெருமாளே
திருவள்ளூர் தலத்தில் திருசயன பெருமாளே
திருநின்ற ஊரில் திருநின்ற பெருமாளே
உத்தம கோவிலின் உத்தம பெருமாளே
சத்தமில்லா திருச்சேறை சாரங்கநாத பெருமாளே
அப்பக்குடத்தால் எங்களை அளக்கும் பெருமாளே
ஒப்பிலி அப்பனாய் உப்புநீக்கிய பெருமாளே30
விளக்கொளி பெருமாளாய் வீற்ற பெருமாளே
அளக்கும் அடியில் அண்டமிகுந்த பெருமாளே
உறையூர் மணவாள ஒய்யார பெருமாளே
உறையும் அன்பில் உள்ளத்து பெருமாளே
வையம் காத்த வைகுண்ட பெருமாளே
ஐயம் நீக்கிடும் அழகியசிங்க பெருமாளே
நாச்சியார் கோவிலில் நம்பிய பெருமாளே
ஆச்சியர் அன்பில் ஆடிய பெருமாளே
திருக்கண்ண புரத்தில் திருசவுரிராஜ பெருமாளே
திருச்சிறு புலியூர் திருக்கோவில் பெருமாளே
தேவாதி ராஜனாய் தேரழுத்திய பெருமாளே
தேவாதி தேவனாய் தெய்வநாயக பெருமாளே
கோலவில்லி ராமனாய் கொலுவிருக்கும் பெருமாளே
காலத்தை அழித்த காவளம்பாடி பெருமாளே
திரிவிக்ரம திருக்கோவில் திவ்யதேச பெருமாளே
பரிமள ரங்கநாத பத்ரிநாராயண பெருமாளே
செம்பொன் பேரருள் செய்கோவில் பெருமாளே
செங்கண்மால் திருக்கோவில் செல்வ பெருமாளே
வெள்ளக்குளக் கோவிலில் வீற்ற பெருமாளே
அள்ளமுடியா அழகுடை அண்ணன் பெருமாளே 40
பார்த்தன் கேட்ட பள்ளித்தாமரையாள் பெருமாளே
சார்ந்த திருச்சேறை சாரநாத பெருமாளே
கோவிந்த ராஜனாய் கோவில்கொண்ட பெருமாளே
ஆவினன் குடியில்பிறந்த ஆண்டவ பெருமாளே
திருநீரக பெருமாளாகி திருவருள்தரும் பெருமாளே
திருப்பாடக தூதனாகி திருப்பாண்டவருள் பெருமாளே
நிலவளந்து நீரளந்த நிலாதுண்ட பெருமாளே
உலகளந்து ஊரளந்த உத்தம பெருமாளே
மகாபலிக் கருளிய மகாவிஷ்ணு பெருமாளே
மகாபலிக் கோவிலில் மடிசாய்ந்த பெருமாளே
யோக நரசிம்மராய் யௌவன பெருமாளே
யாகம் காத்த யாதவ பெருமாளே
பவள வண்ணத்து பாற்கடல் பெருமாளே
கவர்ந்து இழுக்கும் கள்ளப் பெருமாளே
வேங்கட வண்ணனாய் வீற்ற பெருமாளே
ஏங்கிய நெஞ்சுக்குள் எழுந்தருளும் பெருமாளே
வடபத்ர சாயியாய் வரமளித்த பெருமாளே
இடர்களை போக்கிடும் இனியரகுநாத பெருமாளே
நூறடி பூவினை நூலிலே கோத்தேன் பெருமாளே
சாரதி நீயாகி சாட்சியாய் காப்பாய் பெருமாளே 50
————————–
ஸ்ரீ நிலா துண்டப் பெருமாள்
ஆலகால விடத்தை அழித்த நிலவே
மாலனின் நிறத்தை மாற்றிய நிலவே
விஷ்ணுவின் நோயை விலக்கிய நிலவே
உஷ்ணத்தை குறைத்த உல்லாச நிலவே
பார்வதி தவமிருக்க பரசிவன்தலை நிலவே
கார்மேனி நிறமாற காரண நிலவே
நிலவைச் சுமந்த நீலமேக நிலவே
நிலமகள் நாபியில் நின்ற நிலவே
காலத்தால் அழியாது காத்திடும் நிலவே
சாலச்சிறந்த அழகுடை சந்திர நிலவே
அண்ணன் தங்கை அன்புவளர் நிலவே
மண்ணில் வெறுப்புகள் மறைதேய் நிலவே
சைவ வைணவ சேர்க்கை நிலவே
கைவல்யம் தந்து காக்கும் நிலவே
———–
ஸ்ரீ பாண்டவ தூதப்பெருமாள் – ஸ்ரீ திருப்பாடகம் –
பாண்டவனின் தூதாக பறந்துவந்த கண்ணனே
ஆண்டவனாய் லீலைகள் அவதரித்து செய்தவனே
பத்மாசன கோலத்தில் பதிந்த கண்ணனே
மத்தினால் கடைந்து மனத்திலமர்ந்த கண்ணனே
நிலவறை துகளாக நிறைந்த கண்ணனே
உலகளந்த உருவத்தை உட்கார்ந்து காட்டியவனே
திருப்பாடக திருத்தலத்தில் திருவருள் கண்ணனே
திருத்தலத்தில் ஜனமேஜயருக்கு திருஉருவம் தந்தவனே
உயரமாய் உன்னுருவம் உள்ளத்தில் அமர்ந்திட
துயரங்கள் யாவும் தொலைந்து போகுமே
இங்கிருந்த படியே உன்னைநான் கண்டிட
எங்கும்பரவி நிற்கும் ஏகாந்த உருவமே
செல்லும் இடமெல்லாம் சிந்தையில் கண்டேன்
அல்லும் பகலும் அகத்தினில் கண்டேன்
வழித்துணையாய் சாரதி வந்திடுவான் நம்முடன்
அழியாத அருளில் ஆனந்தம் கொள்வோம்
—————-
ஸ்ரீ பவள வண்ண பெருமாள்-
செந்நிற வண்ணனாய் சிந்தைகவர் கண்ணனே
பொன்னிற மங்கை பூமார்பில் கொண்டவனே
பவள வண்ணனாய் பாவங்கள் போக்குபவனே
குவளை மலர்வாய் கோபால பாலனே
பச்சை மாமலையாய் பாதை காட்டுபவனே
கச்சியில் இச்சுவை கனிவாய் தருபவனே
கோபத்தில் காலுதைத்த குறையைப் பொறுத்தவனே
ஆபத்பாந்தனாய் கால்தடவிய அன்பு சகாயனே
பார்வதிக்கு பாங்காய் பவள நிறத்தவனே
ஆர்வமூட்டும் பச்சையில் அழகாய் நின்றவனே
ஒருபுறம் பசுமையாய் ஒருபுறம் பவளமாய்
இருவண்ண அழகாய் இத்தலத்தில் நின்றவனே
பச்சையாய் நீலமாய் பவளமாய் ஆனவனே
உச்சத்தில் தெரியும் உயரிய வெண்மையே
சீதையின் இராமனாய் சிந்தை கவர்ந்தவனே
ராதையின் கண்ணனாய் ரமித்து நின்றவனே
எத்தனை ரூபங்கள் எத்தனை அவதாரங்கள்
அத்தனையும் கண்டேனென் அகத்தினில் கண்டேன்
கண்ணைத் திறந்திட கஸ்தூரி திலகனைக் கண்டேன்
கண்ணை மூடிட கார்மேக வண்ணனைக் கண்டேன்
தேசங்கள் பலவற்றில் திவ்யமாய் கண்டேன்
வாசமிகு வைகுண்டம் வையத்தில் கண்டேன்
—————
ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம்–ஸ்ரீ பரமபதநாதர் –
நூற்றியெட்டு நாளாயென்னுள் நுழைந்த கருவே
நூற்றியெட்டு தேசங்களில் நிறைந்த உருவே
முத்தேவியர் பூவுலகில் முக்கிய தவமிருக்க
இத்தலம் உருவாக ஈசனாய் வந்தாய்
ஆயகலைகள் அனைத்தும் அழகாய் கற்பித்து
மாயலீலை புரிந்து மண்ணில் பிறந்தாய்
பக்தனைக் காக்க வடக்கில் படுத்தாய்
சக்தியை அளித்து சாகாவரம் கொடுத்தாய்
பல்லவ வம்சத்தில் பரமேஸ்வர வர்மன்
நல்லவனாய் பிறந்து நாடும் ஆண்டான்
வென்று வாகை சூடிய பறையொலி
நன்றாய் விண்ணதிர நாடும் செழித்திட
கற்பித்த ஆசானுக்கு கல்லிலே கோவில்
நற்செயல் புரிந்து நலமாய் கட்டினான்
மூன்று கோலத்தில் முதன்மையாய் உன்னை
சான்றாய் இத்தலத்தில் சங்குடன் வைத்தான்
நின்றும் அமர்ந்தும் கிடந்தும் இத்தலத்தில்
இன்றும் அன்றும் என்றும்நீ எழுந்தாய்
எண்ணத்தில் எழுந்து எழுத்தாய் மாறி
என்னுள் தினமும் எழிலாய் வருவாய்
நூற்றியெட்டு நாளாயென்னுள் நுழைந்த கருவே
நூற்றியெட்டு தேசங்களில் நிறைந்த உருவே
———————-
ஸ்ரீ கருணாகர பெருமாள் – ஸ்ரீ திருகாரகம் –
உள்ளுக்குள் உள்ளாய் உறையும் கடவுளே
அள்ளிடும் கருணை அருளும் கடவுளே
எல்லாம் கடந்து எங்குமுள்ள கடவுளே
சொல்லி மாளாத சுந்தர கடவுளே
கோவிலின் உள்ளே கோவில்கொண்ட கடவுளே
ஆவியின் உள்ளே ஆன்மாவான கடவுளே
பாவிக்கும் பரகருணை பாரிலருளும் கடவுளே
தாவியே கடந்து தாரணிஅளந்த கடவுளே
சில்லென்று தென்றலாய் சிலிர்ப்பூட்டும் கடவுளே
கல்வியை கற்பிக்கும் கருணாகர கடவுளே
துல்லிய உண்மை தூயமலர் கடவுளே
அல்லும் பகலும் அணைக்கும் கடவுளே
நான்கு தலமாய் நாற்புறம்சூழ் கடவுளே
நான்மறை சொல்லிடும் நாராயண கடவுளே
வான்வரை விரிந்த வாசுதேவ கடவுளே
ஏனென்ற கேள்விக்கு எழிலானவிடை கடவுளே
——————-
ஸ்ரீ திருநீரகத்தான்- ஸ்ரீ ஜெகதீச பெருமாள் – ஸ்ரீ திருநீரகம்
ஜெகத்தை காத்திடவரும் ஜெகதீச பெருமாளே
அகத்தினை தொட்டிடும் ஆலிலை கண்ணனே
திருஊரக தலத்து திருவருள் திருமாலே
திருஊரக தலத்து திருக்கோவில் திருமாலே
திருகாரக தலத்து திருமண் திருமாலே
திருகார்வன தலத்து திருதிவ்ய திருமாலே
நீரிலே காத்திட நீர்மீனான பெருமாளே
பாரிலே காத்திடும் பாற்கடல் பெருமாளே
வலதுகால் தூக்கி வளர்ந்துநின்ற பெருமாளே
உலகத்தை அளந்து ஊரைக்காக்கும் பெருமாளே
குலங்களை காத்திடும் குருவாயூர் பெருமாளே
தலத்தில் நான்கு தலமான பெருமாளே
———————
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் -ஸ்ரீ திருவல்லிக்கேணி
பக்தனுக் கருளும் பார்த்த சாரதியே
பக்கத்தில் நிற்கும் பரந்தாம சாரதியே
தருமம் நிலைத்திட தேரோட்டிய சாரதியே
கருமம் கண்ணாக கண்ணனான சாரதியே
கம்பீரம் வழிந்திட கருமீசை சாரதியே
அங்கத்தில் வடுவாங்கி அழகூட்டும் சாரதியே
சர்க்கரை பொங்கலில் சங்கமிக்கும் சாரதியே
தற்கால தருமத்தை தந்துநிற்கும் சாரதியே
சத்தமில்லா மணியுடன் சங்குமுழங்கும் சாரதியே
சக்கரமில்லா நண்பனாய் சரித்திரமான சாரதியே
முனிவரும் யோகியரும் முன்வணங்கிய சாரதியே
இனிவரும் காலத்தில் எல்லையில்லா சாரதியே
பாரதியும் பாரதிர பாடிய சாரதியே
மாறாத கோலத்தில் மனம்கவர் சாரதியே
சென்னை மாநகர் சேவிக்கும் சாரதியே
அன்னை வேதவல்லியுடன் அருள்தரும் சாரதியே
குடும்ப சகிதமாய் கோலம்கொண்ட சாரதியே
விடுவித்து பற்றறுக்கும் வினயமான சாரதியே
கீதையை அருளிய கிருஷ்ண சாரதியே
சீதைக்கருகில் ராமனாய் சிறந்த சாரதியே
——————————-
ஸ்ரீ பேரருளாளன் – –ஸ்ரீ செம் பொன் செய் கோயில்
அருள்விழி கண்டதில் அன்றுஅரனும் மயங்கிட
உருவம் பதினொன்றாய் உருவான அதிசயமே
திருநாங்கூர் தலங்களில் திருவருள் தருபவனே
திருப்பதி பதினொன்றாய் திக்கெங்கும் வீற்றவனே
செம்பொன் செய்கோவில் செம்மலர் ரங்கனே
தம்பழி தான்அகல தவமிருந்த ராமனே
பொன்னால் செய்த பேரெழில்பசு தயாளனே
அந்தணர் பெற்றிட அருளிய பேரருளாளனே
இராது இருந்தருளும் இனிய அண்ணலே
இராவணன் இல்லாதழித்த இராம பிரானே
இல்லாது வாடுவோருக்கு எடுத்துக் கொடுப்போனே
சொல்லினால் துதித்தால் செல்வம் அளிப்போனே
மூன்று தினங்களில் முப்பத்திரெண்டாயிர நாமமே
சான்றாய் நிற்கும் சங்குசக்கர நாராயணனே
——————
ஸ்ரீ வரதராஜ பெருமாள் -ஸ்ரீ திருமணிக்கூடம்-
மணிக்கூட நாயகனே மணிமண்டப பெருமாளே
அணிகலன் பூண்டவனே அருமறை பெருமாளே
கோவிலின் உள்ளே கொலுவான பலிபீடமே
சோபிக்கும் அழகுடன் சுந்தர மண்டபமே
கிழக்கு நோக்கிய கீர்த்திமிகு பெருமாளே
முழங்கு சங்குடன் முன்னின்று நின்றாயே
அபயம் காட்ட அருளுமுன் கரங்களே
உபய வரதராஜர் உள்ளுக்குள் நின்றாயே
வலப்புறம் ஶ்ரீதேவி இடப்புறம் பூதேவியாய்
மலரும் தாமரை மணாள வடிவனே
சந்திரன் தேய்ந்திட சாபம் கொண்டானே
அந்தியில் தினமும் அவனும் தேய்ந்தானே
சாபத்தை போக்கிட சரணம் அடைந்தானே
ஆபத்தை நீக்கிய ஆண்டவ பெருமாளே
மணிக்கூட நாயகனே மணிமண்டப பெருமாளே
அணிகலன் பூண்டவனே அருமறை பெருமாளே
—————–
ஸ்ரீ காவளம்பாடி –ஸ்ரீ கோபால கிருஷ்ணன் – ஸ்ரீ திருநாங்கூர்
காவளம்பாடியில் கால்வைத்த கருமேனி கிருஷ்ணனே
பாவளம் பொருந்தி பாடவைக்கும் கிருஷ்ணனே
கோவிலில் குடிகொண்ட கோபால கிருஷ்ணனே
தாவி குதித்தாடிடும் தாண்டவ கிருஷ்ணனே
பாரிஜாதப் பூவினை பாரினில்நட்ட கிருஷ்ணனே
தேரிலே விஜயனுக்கு தெளிவுதந்த கிருஷ்ணனே
பாமாவின் அன்பனாய் பக்தர்காண கிருஷ்ணனே
பூமாவின் நாயகன் பொற்றாமரை திருமாலே
விஷ்வக்சேனர் கண்டிட விண்ணவர் மன்னனே
விஷ்வரூபம் எடுத்த விளையாட்டு கண்ணனே
சினம் கொண்ட சிவனுக்காய் வந்தவனே
இனம் காத்து இதமாய் நின்றவனே
ஆடும் நெற்கதிரில் ஆழ்வாராய் வருபவனே
பாடும் பாடலுக்கு பாலகனாய் வருபவனே
தேடும் விழிகளுக்கு திவ்யமாய் தெரிபவனே
வாடும் மனதிற்கு வசந்தம் தருபவனே
—————-
ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோவில் –ஸ்ரீ திரு இந்தளூர்
பாற்கடலில் பள்ளி கொண்ட பரிமளமே
போற்றி பாடும் புகழுடை பாரிஜாதமே
விரதம் காத்திடும் வெண்ணிற தும்பையே
துறவியும் நடுங்கி துதித்த தாமரையே
அன்றாடம் பூத்திடும் அல்லி மலரே
துன்பங்கள் போக்கிடும் தூயதொரு துளசியே
அம்பரீஷன் ஏகாதசிக்கு அருளிய குறிஞ்சியே
இம்மைக்கும் மறுமைக்கும் ஏகாந்த குவளையே
வித்தாய் புதைந்து விரிந்த ஞாழலே
சித்தத்தில் அமர்ந்த சிருங்கார சிந்துவே
நித்தம் பூத்திடும் நிர்மல நெய்தலே
புத்தம் புதிதாய் பூரிக்கும் புன்னையே
மூடிய கண்ணுக்குள் முளைத்திடும் கருவிளையே
பாடிய பாடலில் பரவசமான பகன்றையே
என்னவென்று அழைப்பேன் எப்படி பாடுவேன்
கண்ணில் தெரிவதெல்லாம் கடிமலர் காஞ்சியே
——————-
ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் – ஸ்ரீ தில்லை திருச்சித்ர கூடம்
நடனமாடும் சிவபார்வதி நந்த்தனம்கண்ட பெருமாளே
சுடராய் எழுந்தருளிய சித்திரகூடப் பெருமாளே
பாற்கடலில் பள்ளிகொண்ட பால்வண்ண பெருமாளே
தேர்மேல் பவனிவந்த கார்வண்ண பெருமாளே
சித்திரகூடத்தை தெற்கிலமைத்த நீலவண்ண பெருமாளே
பத்திரமாய் படுத்த பச்சை மாமலைபெருமாளே
நாபியில் பிரம்மன் நிற்பதால் சிவந்தபெருமாளே
சோபிக்கும் வானவில்லாய் சௌந்தர்ய பெருமாளே
மண்டபத்து வாயிலில் முத்தேவர் பெருமாளே
கண்கொள்ளா காட்சியை காண்போம் பெருமாளே
கால்தூக்கி சிவனாட காணும் பெருமாளே
தாள்பணியும் எமக்கு தாரும் காருண்யபெருமாளே
கோவிலில் கொலுவிருக்கும் கோவிந்தராஜ பெருமாளே
தேவியின் சகோதரன் தெய்வீக பெருமாளே
அழகிய மணவாளர் -உறையூர் தஞ்சாவூர்
————————-
உறையூரில் உறைகின்ற உத்தமா போற்றி
மறைகள் போற்றும் மாதவா போற்றி
நங்க சோழ மன்னனின் நங்கை மணவாளா போற்றி
மங்காத வீரத்துடன் மாகுதிரையில் வந்தவா போற்றி
கமலவல்லித் தாயாரை கடிமணம் செய்தவா போற்றி
விமலனாய் உலகை விரிந்து அளந்தவா போற்றி
திருமணத் தடைகளை தகர்த்திடும் தேவா போற்றி
திருமகளை மண்ணில் திருமணம் செய்தவா போற்றி
பங்குனி மாதத்தில் பார்க்கவரும் ரங்கா போற்றி
அங்கத்தில் திருமகளை அணியாய் அணிந்தவா போற்றி
மாப்பிள்ளை கோலத்து மணவாளா போற்றி
காப்பதை கடனாய் கொண்டவா போற்றி
நினைவாய் என்னுள் நிற்கும் உண்மையே போற்றி
வினையாய் மறதியையும் விதைக்கும் வித்தகா போற்றி
எடுத்த காரியம் எல்லாமாய் ஆனவனே போற்றி
தடுக்காது என்னுள் தமிழாக வருவாய் போற்றி
———-
ஸ்ரீ திருநறையூர் நம்பி – ஸ்ரீ நாச்சியார் கோவில்
நம்பினார்க் கருளி நாடினாரைக் காப்பவனே
அம்பலத்தில் முத்ராதானம் ஆழ்வாருக் களித்தவனே
முன்தள்ளி சக்கரம் முத்ராதான ஆசார்யனே
பின்திரும்பிய சங்குடன் பீதாம்பர அழகனே
திருமங்கை ஆழ்வாரை திருக்கோலத்தில் வந்து
திருவைணவ உருவ திருவருள் தந்தவனே
சாவிக்கொத்துடன் தாயார் சாரமுடன் நின்றாளே
கோவிலில் இடம்கொண்டு குலங்களைக் காப்பவளே
கல்கருட சேவைக்கு காத்திருக்கும் பலரே
எல்லார் தோளிலும் எழிலாய் வருபவரே
அரியும்அரனும் ஒன்றேயென்று ஆங்கே சொன்னவனே
அரியவைகுண்டம் நாயனாருக்கு அருளித் தந்தவனே
வஞ்சுளா தேவியை வையத்தில் மணந்தவனே
அஞ்சல் என்றே அனைவரையும் காப்பவனே
நம்பினார்க் கருளி நாடினாரைக் காப்பவனே
அம்பலத்தில் முத்ராதானம் ஆழ்வாருக் களித்தவனே
—————-
ஸ்ரீ நாவாய் முகுந்தன் நாராயணன்- ஸ்ரீ திருநாவாய்
நாவால் நான்பாடிட நாவாய் நாராயணா
பூவால் அர்ச்சிக்கபட்ட பூலோக நாராயணா
கஜேந்திரனுக் கருள கருணைகொண்ட நாராயணா
மகேந்திரனாய் மண்தின்ற மதுசூதன நாராயணா
பூப்பறிக்க வேண்டாமென பூமகளிடம் சொன்ன நாராயணா
காப்பதே கடனென்று காவல் புரியும் நாராயணா
பக்தனுக்காய் தாமரையை மகாலக்ஷ்மிவிட நாராயாணா
சக்கரத்தால் காத்த சங்குமுழங்கும் நாராயணா
நவயோகி தவமிருக்க நலம்தரும் நாராயணா
சுபயோக தனமாய் சுகம்தரும் நாராயணா
நலம்தரும் சொல்லாய் நாவில்அமர் நாராயணா
குலம்காத்து குறைநீத்து கோவில்கொள் நாராயணா
நாராயணா நாராயணா நாராயணா நாராயணா
————–
ஸ்ரீ உய்யவந்த பெருமாள்- ஸ்ரீ திருவித்துவக் கோடு –
உய்ய வந்த பெருமாளே ஓங்காரதார பெருமாளே
அய்யனாய் நின்ற பெருமாளே அகிலம் காக்கும் பெருமாளே
பஞ்ச பாண்டவ பெருமாளே பாஞ்ச ஜைன்ய பெருமாளே
பஞ்ச மூர்த்தி பெருமாளே பாஞ்சாலி அன்பு பெருமாளே
அஞ்ஞாதவாச தல பெருமாளே ஆரண்ய வாச பெருமாளே
அஞ்ஞானம் போக்கும் பெருமாளே அசைந்தாடு மயில் பெருமாளே
காசி விஸ்வநாத பெருமாளே கால் நடந்து வந்த பெருமாளே
மாசில்லாத ஏக வடிவ பெருமாளே மாறுபாடில்லாத பெருமாளே
அரியாகி அரனான பெருமாளே அறிந்தவரும் அறியாத பெருமாளே
விரிந்த வானான பெருமாளே விளையாட்டாய் காணாத பெருமாளே
பாலக்காடு பாதைகாத்த பெருமாளே பார்க்கும் இடமெல்லாம் ஆன பெருமாளே
ஆலவிழுதாய் உருவாகும் பெருமாளே ஆதியந்தமான ஆச்சார்ய பெருமாளே
என்னுள் உள்ள பெருமாளே எண்ணத்தில் வரும் பெருமாளே
எண்ணிக்கை இல்லா பெருமாளே எழில்வடிவ ஏகாந்த பெருமாளே
————————–
ஸ்ரீ நீலமேக பெருமாள் – ஸ்ரீ திருக்கண்ணபுரம்
மன்னருக்கு சூட்டிய மாலையில் தலைமுடியிருக்க
கண்ணபுர நாயகனை காத்திட வேண்டினாரே
பக்தனைக் காக்க பரந்தாமன் தன்தலையில்
சிக்கென்று முடிதாங்கி சிகையுடன் நின்றாரே
அழகான கேசத்துடன் அமாவாசை ஊர்வலமே
பழகிய கோலத்தில் பிரயோக சக்கரமே
கருடனின் கர்வத்தை கணநேரத்தில் அழித்தவரே
தருணத்தில் அருளி தரணியைக் காப்பவரே
வறுமையில் வாடி வரிகட்ட மறந்த பக்தர்
கருணா மூர்த்திக்கு கைங்கர்யம் செய்தாரே
குறுநில அம்மன்னரை கோவிலில் காத்தவரே
பருப்புடன் செய்த பொங்கலை உண்டவரே
அனைவரையும் காக்கும் ஆண்டவ உருவமே
முனையதரன் பொங்கலை முன்னின்று செய்வோமே
நெற்றியில் தழும்புடன் நின்றெழுந்த உருவமே
வெற்றியை அளிக்கும் வீரஅஷ்டாச்சர மந்திரமே
ஓம் நமோ நாராயணாவே
ஓம் நமோ நாராயணாவே
ஓம் நமோ நாராயணாவே
ஓம் நமோ நாராயணாவே
————————
ஸ்ரீ சவுந்தர ராஜப் பெருமாள்- ஸ்ரீ நாகை
அழகுக்கு அழகு சேர்க்கும் அழகே
அழகுக்கு அணியாகி அசையும் அழகே
எழிலாய் எழுந்தருளும் எண்ணிலா எழிலே
மயிலாட மனம்கவரும் மந்தகாச எழிலே
துருவன் கண்டிட துயர்துடைக்கும் தளிரே
உருவத்தைக் கண்டதும் உள்ளமும் உருகுமே
வரங்களை மறந்து வணங்கி நின்றானே
கரங்கள் கூப்பி கண்குளிர கண்டானே
பேரழகை எப்போதும் பார்க்கும் வரமே
தாரணி காத்திட தரிசனம் தருவாயே
சுந்தர உருவமான சவுந்தர ராஜனே
மந்திர குழலூதி மயக்கும் மாயனே
அவதார கதையை அணியாக்கிய அணியே
அவதார புருஷனாய் ஆதியான அந்தமே
—————
ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் – ஸ்ரீ தலைச்சங்காடு
திருமகளுக்கு முன்னதாக தோன்றிய சந்திரனே
உருவத்தில் அழகாக உதித்த சந்திரனே
குருவின் மனைவியை கூடிய தோஷமே
உருவத்தைக் குலைக்க உருவான குஷ்டமே
ரோகிணி மீதுமட்டும் ரம்மியம் அதிகமாக
ஆகிவந்த சாபத்தில் அனுதினம் தேயுமே
தேகத்தின் சோபை தினமும் குறையவே
மோகத்தின் சாபம் முடியசெய் தவமே
சந்திரன் தவத்திற்கு சக்தியுடை தலமே
மந்திரங்கள் ஓதும் மறைபுகழ் மாலனே
மதியைத் தலையில் மலராய் சூடியவனே
கதியாய் எங்களைக் காத்து நிற்பவனே
சங்கோடு சக்கரம் சாரங்க நாதனே
மங்காத ஒளியே மாறாத ஒலியே
விரிந்த வெண்சுடரே விண்ணின் ஒளிச்சுடரே
புரியாத தத்துவமே புன்னகை பாலனே
—————-
ஸ்ரீ திரிவிக்கிரம நாராயணர் – ஸ்ரீ காழிச் சீராம விண்ணகரம்
வலக்கை தானம்பெற இடக்கை குடைபிடிக்க
உலகை காத்த உத்தம வராகவதாரமே
காலிலே தண்டையுடன் கையில் வேலுடன்
பாவிலே குறளுடன் பாடிய திருமங்கையாழ்வாரே
நிலத்தினைக் காத்திட நிம்மதி பெற்றிட
உலகை அளந்த உத்தம திரிவிக்ரமனே
இடதுகால் தலைமேல் இருக்க, வலக்கை
தடயமாய் பெறும் தானங்கள் சுமக்க
இடதுவிரல் எங்கே இன்னொரு அடியென
திடமாய் கேட்டுநிற்கும் திவ்ய புருஷனே
தவிட்டுப் பானையில் தாடாளன் இருக்க
கவிபாடும் ஆழ்வார் கனவிலே வந்தவரே
திருஞான சம்பந்தர் திருமங்கை ஆழ்வார்
திருவாத விளையாட்டை திருத்தலத்தில் நடத்தியவரே
முனிவர் உரோமசர் முன்னின்று கண்டிட
கனிவாய் பிரம்மனின் கர்வம் போக்கியவரே
இதுவேண்டும் அதுவேண்டும் எல்லாம் வேண்டுமென
மதிகெட்டு திரியும் மானுடம் உணரவே
தாள்ஆண்டு தரணியாண்டு தலைக்கனம் போக்கியவனே
கால்தூக்கி கரம்உயர்த்தி கர்வம் அடக்குபவரே
தூக்கிய பாதம் தொய்வடையா திருக்க
ஆக்கும் புருஷனை அங்கத்தில் தாங்கியவளே
மகாலக்ஷ்மி அன்னையின் மார்பிலே திருமாலே
சுகானுபவ சங்கமத்தில் சுந்தர நாயகனே
———————
ஸ்ரீ வைகுண்ட விண்ணகரம் –
விண்ணகர வைகுண்டம் வையத்தில் உண்டு
கண்கவர் தேவியருடன் கடவுளும் உண்டு
அன்பான தம்பதிகள் ஆண்டவனைத் தேடியதுண்டு
தன்பல வலிமையில் தவமும் இருந்ததுண்டு
நாட்டை ஆண்டுவிட்டு நற்காரியம் செய்ததுண்டு
காட்டிலே தீமூட்டி கடுந்தவம் செய்ததுண்டு
பூதவுடல் களைந்து பொன்னகரம் வந்ததுண்டு
மாதவனைக் காணாது மனமுடைந்து போனதுண்டு
அரசன் ஸ்வேதகேது ஐராவதேஸ்வரனை அணுகியதுண்டு
கரம்கூப்பி நாராயணனைக் காணவே நின்றதுண்டு
உதங்க முனிவரும் உடன் வந்ததுண்டு
வதனம் கண்டிட வாய்ப்பும் பெற்றதுண்டு
தேவியர் இருவரும் தெய்வத்துடன் தோன்றியதுண்டு
கோவிலில் விஷ்ணுவின் கோலம் கண்டதுண்டு
தானங்கள் யாகங்கள் தருமங்கள் பெருகியதுண்டு
வானமே மண்ணில் வரைபடமாய் வந்ததுண்டு
விண்ணகர வைகுண்டம் வையத்தில் உண்டு
கண்கவர் தேவியருடன் கடவுளும் உண்டு
—————-
ஸ்ரீ செங்கண்மால் ஸ்ரீ ரங்கநாதர் – ஸ்ரீ திருத்தெற்றியம்பலம்
கண்சிவந்து களைப்பில் கண்ணயரும் ரங்கனே
மண்செழிக்க சயனித்து மனம்கவரும் ரங்கனே
அசுரனை அழிக்க அவதாரமெடுத்த ரங்கனே
பசுவின் உருவான பத்தினிகாத்த ரங்கனே
வராக வடிவில் வையம்காத்த ரங்கனே
அராஜகம் அழிக்க அடிக்கடிவரும் ரங்கனே
தனியே இலக்குமி தவிக்காதிருக்க ரங்கனே
இனிதே தவமிருக்கவைத்து இத்தலம்வந்த ரங்கனே
பக்தர்கள் கண்டிட பள்ளிகொண்ட ரங்கனே
முக்தியைத் தந்திடும் முகுந்த ரங்கனே
அம்பலம் வந்தெம்மை ஆண்டுவிடும் ரங்கனே
இம்மைக்கும் மறுமைக்கும் இனிதான ரங்கனே
திருத்தெற்றி அம்பல திருமால் ரங்கனே
திருமகள் துணையுடன் திருவருள் ரங்கனே
——————
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்- ஸ்ரீ பார்த்தன் பள்ளி
தண்ணீர் வேண்டியே தவத்தை கலைத்தானே
கண்களை அகத்தியர் கனிவுடன் திறந்தாரே
கமண்டலம் திறக்க காணாத தண்ணீரே
விமலன் உன்னையே வேண்ட சொன்னாரே
கண்ணனை வேண்டி கண்களை மூடவே
கண்எதிரே தோன்றினான் காட்சியும் தந்தான்
மண்ணை எங்கு மனமார தோண்டினாலும்
தண்ணீர் கிடைக்க தந்தான் கத்தியை
மண்ணை தோண்டிட மகத்தான கங்கை
விண்ணில் இருந்தே விழுந்து புரள
தாகமும் தீர்ந்து தளிரடி பணிவானே
சோகங்கள் தீர்க்கும் சுந்தர கண்ணனே
மகனாய் பிறப்பது மகானே என்று
அகத்தில் அறிந்தான் அரசன் தசரதன்
சோதிக்க யாகமும் சுகமாய் நடத்த
ஆதியாய் தோன்றிய அதிசய ராமனே
தேவியர் இருவருடன் தோன்றிய ராமனே
மேவிய உருவில் மேன்மை பொங்குமே
யுகங்கள் கடந்து யோகங்கள் கடந்து
அகத்தில் தெரிந்திடும் அத்வைத ரூபனே
இராமனாய் கண்ணனாய் இராசங்கள் செய்பவனே
கோமளக் கேள்வனாய் குலக்கொழுந்தாய் ஆனவனே
பார்த்தன் பள்ளியில் பார்ப்பதற்கு நின்றவனே
கோர்த்த மாலையில் கோலமிடும் தேவனே
———————
ஸ்ரீ தேவநாத பெருமாள் – ஸ்ரீ திருவகிந்திபுரம்
கருடன் கொணர்ந்த கருடநதி பெருமாளே
கருவத்தை அழித்துதேவர் காத்த பெருமாளே
ஆதிசேடன் வாலால் அடித்தஆழ்கிணறு பெருமாளே
ஓதிடும் மறைகள் உன்புகழ்பாடும் பெருமாளே
தேசிகன் வாழ்ந்த திருமாளிகை பெருமாளே
பூசிடும் சிவப்பில் பொங்கியநதி பெருமாளே
உடல்நோய் தீர்க்கும் ஒய்யாரமூலிகை பெருமாளே
கடலூரில் விழுந்த சஞ்சீவமலை பெருமாளே
வேண்டுதல் தாங்கிடும் வாசக்கிணறு பெருமாளே
ஆண்டவ மூர்த்தியாய் ஹயக்ரீவ பெருமாளே
வலதுதொடையில் லக்ஷ்மியை வாகாய்கொண்ட பெருமாளே
உலகத்தை காத்திட ஊரில் வாசம்செய் பெருமாளே
உருவத்தில் மும்மூர்த்திகளை உணர்த்திய பெருமாளே
திருவகிந்தி புரத்து தேவநாத பெருமாளே
—————-
ஸ்ரீ காட்கரையப்பன் –
உருவத்தில் பாலகனாய் ஓங்கி வளர்ந்தவனே
தருணத்தில் வந்து கர்வத்தை அடக்கியவனே
குழந்தை வடிவில் குலம்காத்த அப்பனே
அழகிய வாமனனாய் அரசனை அளந்தவனே
பகைவரின் கொடுமை படாதுகுடை பிடித்தவனே
வகையாய் தண்டத்தை வாகாய் ஏந்தியவனே
எழிலான மூன்றடியில் எழுந்த விஸ்வரூபமே
அழியாத பாதங்கள் அண்டம் அளந்ததுவே
அங்கே வளர்ந்த அதிசய உருவமே
எங்கே மூன்றாவதடி என்றே வினவ
இங்கே என்தலை என்றவன் சொல்லிட
மங்காத பெருமை மன்னனும் கொண்டானே
மகாபலியின் சிவபக்திக்கு மகேசனுக்கு கருவறையே
மகாபலி திருவோணத்திற்கு மறுபடிவரும் திருநாளே
சிவனும் திருமாலும் சேர்ந்தருள் தலமே
அவனியில் பழம்பெரும் ஆலய தலமே
—————–
ஸ்ரீ லெட்சுமண பெருமாள் – ஸ்ரீ திருமூழிக்களம் –
கரங்கள் நான்குடன் கருணை பொழிபவனே
வரங்கள் பலவுடன் வளங்கள் தருபவனே
சகோதரர் நான்குடன் சரித்திரம் படைத்தவனே
மகோன்னதம் பலவுடன் மாளிகை துறந்தவனே
பரதனைக் கண்டு பரிதவித்த லட்சுமணன்
சிரம்தாழ வணங்கிய சிறந்த பெம்மானே
கண்ணன் வணங்கிய காணாத விக்ரகமே
கனவிலே வந்து கரையோரம் பதித்தனரே
திருச்சூர் இராமர் திருப்பறையார் கோவிலே
இருக்கும் தலத்து இரிஞ்சிலாக்குடா பரதனே
பாயமல் கோவிலில் பார்போற்றும் சத்ருக்னனே
ஓயாத உலகின் ஒய்யார எர்ணாகுளலட்சுமணனே
எல்லோரும் உனையடைய எளிதாய் வழிகூற
சொல்லாய் ஹரிதருக்கு சொன்ன திருமொழியே
திருமொழிக் களத்தான் திருமூழிக் களத்தானாக
ஒருமொழியில் உன்புகழை உரைக்கத்தான் இயலுமோ
எர்ணாகுள இறைவனை என்நாபுகழ் பாடுமே
எர்ணாகுள இறைவனே என்குலம் காப்பானே
—————-
ஸ்ரீ திருவாழ்மார்பன் –
திருவை மார்பில் தாங்கிய திருவே
திருமார்பு தரிசனம் ஆதிரை திருவே
பிரம்மச்சாரி விரதம்கடை பிடிக்கும் திருவே
வரங்களை அள்ளி வழங்கும் திருவே
சங்கரமங்கல அம்மைக்கு சங்கடம் தீர்த்த திருவே
மங்கல விசுவுக்கு மங்கையர் காணும் திருவே
பெண்களை அனுமதிக்காத பெரியகோவில் திருவே
கண்குளிர திருமார்பு காணஅனுமதிக்கும் திருவே
திருவாதிரை நாளிலும் திருவிசுநாளிலும் திருவே
திருநடன கதகளி திருஉற்சவ திருவே
உப்பு மாங்காயை உண்ட அழகு திருவே
தப்பாது பக்தர்களை தாங்கும் திருவே
உன்னைக் காணசிவன் ஓடிவந்த திருவே
சந்தனத்துடன் விபூதி தந்திடும் திருவே
பந்தன திட்டாவில் பாதுகாக்கும் திருவே
சொந்தங்களைக் காத்து சுகம் தருவாய் திருவே
——————
ஸ்ரீ இமையவரப்பர் – ஸ்ரீ திருச்சிற்றாறு –
ஊரிலே தருமர் ஒருபொய் சொல்லிவிட
போரிலே துரோணர் புத்ரசோகம் கொண்டார்
இறந்த யானையின் இனிய பெயரை
உரக்க சொல்ல உண்மை மறைந்ததே
தான் செய்த தவற்றினால் தருமர்வாட
வான்வெளி தேவர் வாழ்த்திய இத்தலத்தை
கண்டு கொண்டு கண்மூடி தவமிருந்தார்
மண்ணிலே திருமாலை மனம்குளிர வேண்டினார்
திருச்சிற்றாறு அருகே திருச்செங்குன்றூர் அமைய
திருமாலே இவ்விடத்தில் திருவருள் புரிய
ஆலப்புழா ஊரிலே அமைந்த அதிசயமே
கோலமாய் வீற்ற குருவாயூர் கோவிந்தா
எத்தனை தேசங்கள் எத்தனை உருவங்கள்
பித்தனாய் மாற்றியே பிறவியை காப்பாயே
உத்தமன் உன்புகழை ஓயாது நான்பாட
நித்தம் எனக்கருளி நிம்மதி தருவாயே
———–
ஸ்ரீ மாயப்பிரான் – ஸ்ரீ திருப்புலியூர் –
மாயமாய் வந்து மாயைகளை நடத்துபவரே
மாயப் பிரானாய் மாட்சிமையுடன் நின்றவரே
தீராத நோய்களைத் தீர்க்கும் நாதரே
கோரிய முனிவர்களுக்கு கோலமாய் வந்தவரே
சப்த ரிஷிகளை சாபத்தால் அவமதிக்க
தப்பிதவழியில் கொன்றிட தேவதை உருவாக்க
தானம் செய்யாது தவமுனிவரை வருத்த
வானத்து இந்திரன் வந்தானே புலிவடிவில்
பீமன் கட்டிய பெரிய கோவிலே
பீமன் தூக்கிய பெரிய கதையே
குட்ட நாடு தலத்தில் கோவில் கொண்டவரே
எட்ட முடியா உருவத்தை எழிலாய் கொண்டவரே
எல்லாமே மாயையாய் எல்லாமாய் இருப்பவரே
இல்லாத பொருளிலும் இருந்து ஜொலிப்பவரே
உருவமாய் அருவமாய் உள்ளதாய் இல்லாததாய்
கருத்தாய் புத்தியாய் கல்வியாய் ஆனவரே
————————–
ஸ்ரீ திருக்குறளப்பன் –
வேதங்களை தொலைத்த வேளையில் காத்தவரே
வேதங்களை மீட்டு விரைவில் தந்தவரே
நன்றியில் பிரம்மன் நாடியுன்னை தொழுதிட
அன்று அருளிய அப்பன் சாரதியே
சக்கரம் அழுந்தியதால் தரையிறங்கிய கர்ணனை
அக்கணமே அர்ஜுனன் அம்புதாக்கி கொல்ல
போரின் தருமத்தில் பெரும்பாவம் செய்தேன்என்று
பாரில் வருந்தியவனுக் கருளிய பார்த்தசாரதியே
ஆயுதங்கள் மறைத்த அந்த வன்னிமரமே
பாயும் ஒளியைப் பாரினில் பரப்புமே
நோய்களை அகற்றும் நெடிய மரமே
காய்களை சுற்றி அடிக்க மருந்தாகுமே
வாழ்வென்னும் வழியில் வளைவும் சுளிவும்
தாழ்வும் உயர்வும் தடுமாற வைக்குமே
என்றும் ஏறியிறங்கும் ஏணிப்படிகளே இவ்வுலகில்
உன்நினைவு மட்டுமே ஓயாத உண்மையே
—————————-
ஸ்ரீ பாம்பணையப்பன் – ஸ்ரீ திருவண்வண்டூர்
பாம்பணைமேல் பள்ளிகொண்ட பாற்கடல் வாசனே
பாம்பணை அப்பனாய் பம்பைகரை நேசனே
நகுலனால் புதுபிக்கப்பட்ட நல்லதொரு கோவிலே
மகுடமாய் திருவண் வண்டூரில் நின்ற மதுசூதனே
பிரம்மனும் நாரதரும் பேச்சிலே சண்டையிட
பிரம்மன் நாரதரை சபித்துவிட்ட சாபமே
சாபங்கள் போக்கவே சரித்திரம் படைக்கவே
கோபங்கள் தணியவே கோவிலுக்கு செல்வோமே
ஞானத்தை கேட்டு ஞாலத்தில் தவமிருக்க
வானத்து விண்ணவனை வாழ்த்தி பாடினாரே
நாலாயிரப் பாடல்களை நாரதரும் நவின்றிட
நாலாயிர பாடல்கள் நாரதீயப் புராணமே
காளிங்க நர்த்தன கண்ணனும் கண்குளிர
ஆலிங்கம் செய்யும் ஆண்டவ ஆலப்புழாவே
சுடராய் ஒளிகாட்டும் கருவறை வட்டமே
இடர்களை போக்கிடும் இனியதொரு தலமே
——–
ஸ்ரீ அனந்த பத்மநாபர் -ஸ்ரீ திருவனந்தபுரம்
அனந்தகோடி மக்களுக்கு ஆனந்தம்தரும் பத்மநாபனே
அனந்த சயனத்தில் ஆதிசேடன் மடியில் அயர்ந்தவனே
இலுப்பையில் செய்யப்பட்ட இயல்பான விக்ரகமே
உலுக்கிடும் நெருப்பில் உதிரியான அதிசயமே
கடுசர்க்கரை யோகத்தில் கல்லாலான சாளக்கிராமமே
சுடும்வெயிலிலும் உருகாத சுவைவெண்ணெய் கலவையே
பதினெட்டடி நீளமுடைய பத்மநாப சுவாமியே
பதித்த தங்கத்தில் பத்திரமான ஸ்வரூபமே
வில்வமங்கலத்து சாமியாரிடம் விளையாடிய சின்னக்கண்ணனே
எல்லாம் அறிந்தும் எளிதில் மறைந்த உண்ணிக் கண்ணனே
துறவுக்கும் பக்திக்கும் தூய்மையான பொறுமை தேவை
உறவாடி உரையாடி உணர்த்திய உயரிய தேவனே
தேடித்தேடி உன்னைக்காண தினம் சுற்றி அலைந்தாரே
சூடிய மலருடன் சுந்தரதேவியுடன் காற்றினில் பள்ளிகொண்டீரே
அனந்தன் காட்டிலே அரவணைத்த அண்ணல் கேசவனே
கனத்த காட்டிலே கருணை வடிவமாய் கோவில் கொண்டவனே
————–
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் -ஸ்ரீ திருவட்டாறு –
கேசனை அழித்து கேசியின்மேல் கிடந்தவனே
வாசமிகு பத்மத்தில் வாகாய் அமைந்தவனே
கேசியின் மனைவிசொல் கேட்டிறங்கி நதிகள்ஓடிவர
ஆசியுடன் இலக்குமி ஆங்கே தரைமேடாக்க
கங்கையும் தாமிரபரணியும் கைகட்டி சுற்றிநிற்க
சங்குடன் படுத்த சக்ராயுத மன்னனே
மாலையாய் இருநதியும் மணாளனைத் தழுவிட
சோலைவன அழகனே சோர்வுகளை நீக்குபவனே
பன்னிரண்டு கரங்களிலும் பன்னிரண்டு ருத்திராட்சம்
எண்ணிவைத்து கேசியை எழவிடாது செய்தவனே
வட்டாறை சுற்றியே வளைத்த சிவாலயங்களே
பக்தியுடன் சிவராத்திரியில் பாதசிவனை வணங்குவோமே
தெற்கே தலைவைத்து வடக்கே திருவடியே
இடக்கை தொங்கிவிட வலக்கையில் முத்திரையே
ஆதிகேசவனே அனந்தனே ஆயர்பாலனே ஆனந்தரூபனே
சோதிவடிவமே பிறப்பறுக்கும் சுந்தரனே எம்பெருமானே
——————–
ஸ்ரீ திருவாழ்மார்பன் – ஸ்ரீ திருப்பதிசாரம் –
சங்கு சக்கரத்துடன் சப்தரிஷிகளுடன் இருப்பவரே
பொங்கும் அழகுடன் புவனம் காப்பவரே
ஒன்பது அடியில் ஒய்யாரமாய் அமர்ந்தவரே
எண்ணங்கள் யாவையும் எழிலாய் நடத்துபவரே
குழந்தை வேண்டி குறுநாட்டரசன் கேட்டிட
அழகான குழந்தையாய் அவதரித்த நம்பியே
நம்மாழ்வார் அவதரித்து நாராயணனை தியானிக்க
எம்பெருமான் அருளிட எழுந்தருளிய தலமே
சிவவடிவில் வந்தவரை சிந்தித்து நின்றனரே
தவமுடிவில் திருமால் தனிவடிவில் கண்டனரே
கல்லும் சுண்ணாம்பும் கடுகும் சர்க்கரையோகமே
அல்லும் பகலும் அனுதினம் நம்மைக்காக்குமே
திருவாழ் மார்பன் திருவண்பரிசார திருவருள்தலமே
திருநகரி தலத்து திருஞான முத்திரையே
——————
ஸ்ரீ அழகிய நம்பிராயர் – ஸ்ரீ திருக்குறுங்குடி
அழகிய நம்பிராயர் அருளிடும் திருத்தலமே
பழகிய ஆழ்வார்கள் பாடிய திருத்தலமே
மோட்சம் வேண்டுமென முன்னின்று கேட்டிட
காட்சிக்கு இத்தலத்தில் கால்வைக்க சொன்னாரே
ஆழ்ந்த கருத்தினை அழகாய் சொல்லிடவே
தாழ்குல நம்பாடுவானுக்கு தரிசனம் தந்தாரே
கொடிமரம் விலகவே கிடைக்கும் தரிசனமே
அடிமுதல் சிரம்வரை ஆளுயர வராகமே
பெரிய வராகம் சிறிதாய் சுருங்கிட
அரிய இத்தலம் ஆனதே குறுங்குடி
குரங்கம் காத்திடவே கோவிலில் எழுந்தானே
அரங்கத்து பெருமாளே அழகிய நம்பியாரே
இசையினால் தினமும் இறைவனைக் காணலாமே
அசையும் பொருள்யாவும் அடையும் மோட்சமே
ஏகாதசி மகிமையில் எழிலாய் ஒருகதையே
ஆகாய சிலம்பாறு அளந்த திருவடியே
அதிசய உருவமே ஆனந்த வடிவமே
மதிக்கு புரியுமோ மதிக்கவும் தெரியுமோ
உன்னைப் பாடவே ஒருநாள் போதுமோ
இன்னமும் பாடிட இருபத்திநாலு மணிபோதுமோ
உண்பதும் உரைப்பதும் உறங்குவதுமாய் ஒருவாழ்வே
எண்ணத்தில் கலையாது என்றும் இருப்பாயே
—————
ஸ்ரீ தோத்தாத்ரி நாதன் – ஸ்ரீ நாங்குனேரி
ஒன்பது சுயம்பு ஒன்றான தலமே
கண்குளிர கண்டுவிட களிப்பபூற்றும் தலமே
மச்சமுதல் கல்கிவரை மாறிடும் அவதாரமே
உச்சிமுதல் உள்ளங்கால்வரை உயரிய அவதாரமே
தேவியர் இருவருடன் தோத்தாத்ரி அவதாரமே
கோவிலில் தாயாருடன் கொலுவிருக்கும் தெய்வமே
நான்கு ஏரிகளால் நாங்குனேரி ஆகுமே
ஆன்மீக அறிவை அண்டமெங்கும் பரப்புமே
மரித்துவிட்ட அசுரரால் மாசுபெற்ற நிலத்தை
அரிதான உருவில் அழகாக்கிய தலமே
என்னப்பன் கண்ணனே என்னை ஆள்பவனே
மண்டபத்தில் எழுந்த மதுசூத வண்ணனே
மாசில்லா அழகனே மதிமயக்கும் பாலனே
ஆசிகள் தருவாயே ஆனந்தம் அளிப்பாயே
—————
ஶ்ரீ வைகுண்டம் வைகுண்ட நாதர் – நவதிருப்பதி -1
நின்றும் இருந்தும் கிடந்தும் நிமிர்ந்த பெருமாளே
அன்றும் இன்றும் என்றும் அணைத்த பெருமாளே
கள்ளனாய் வந்து கவர்ந்த பெருமாளே
உள்ளத்தை அள்ளும் உயரிய பெருமாளே
காலதூஷகன் பிடிபடாமல் காத்த பெருமாளே
கோலத்தைக் காட்டி கோவில்கொண்ட பெருமாளே
மன்னன் மனம்திருந்த மண்டபம்வந்த பெருமாளே
கண்ணைக் கவரும் கள்ளபிரான் பெருமாளே
வைகுண்ட தரிசனம் வையத்தில் பெருமாளே
வைகுண்டத்தில் கைலாயமும் வந்திடும் பெருமாளே
மணித்துளி தரிசனம் மனமறியும் பெருமாளே
தனித்து நின்றால் தன்னுள்தெரியும் பெருமாளே
குடையாய் ஆதிசேடன் கூடவே பெருமாளே
விடையாய் தெரியும் வேங்கட பெருமாளே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி பெருமாளே
கும்பிட்டோர் குலத்தைக் காத்திடும் பெருமாளே
—————
ஸ்ரீ விஜயாசனர் – நவதிருப்பதி 2 – ஸ்ரீ நத்தம்
நத்தம் என்ற நல்லூரில் குடிகொண்டவனே
நித்தம் என் குறைகளை நீக்கி நிற்பவனே
வரகுணமங்கை வேதவித்துக்கு வகையாய் அருளியவனே
வரங்களை தந்து வையகம் காப்பவனே
வெற்றிகளை தந்திடும் விஜயாசன பெருமாளே
குற்றங்கள் பொறுத்திடும் குறையில்லா குணவானே
சந்திர கிரகமாய் சங்கடம் தீர்ப்பவனே
மந்திர வேத மறைபொருள் நாயகனே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி பெருமாளே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் பெருமாளே
——————
ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள்- நவ திருப்பதி 3 -ஸ்ரீ திருக்கோளூர் –
குபேரன் சாபத்தால் குமித்த நிதிதொலைந்ததே
குபேரன் நவநிதியை குறைவின்றி காத்தவனே
வைத்தமா நிதியால் வையகம் காத்தவனே
சாத்திரங்கள் ஓதிடும் சத்திய நாதனே
திருக்கோளூர் கோவிலில் திருவருள் வேந்தனே
திருசெவ்வாய் கிரகமாய் தினமும் காப்பவனே
பார்வதி சாபம் போக்கவந்த நாராயணனே
பாரமுழுதும் காக்கும் பாற்கடல் நாராயணனே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே
————–
ஸ்ரீ பூமி பாலகர் – ஸ்ரீ திருப்புளியங்குடி – நவ திருப்பதி 3
திருப்புளியங்குடியில் பள்ளிகொண்ட திருமால் அழகனே
திருநாபிக் கொடியும் திருக்கமலம் சேரும்அழகே
நாபிக்கொடி இணையும் நாயக அழகனே
சோபிக்கும் உன்நாபியின் சுந்தர அழகே
பூமியை பாதுகாக்கும் பூமிபாலக அழகனே
பூமியை வலம்வரும் பூலோக அழகே
சாபங்கள் தீர்த்து சாத்திரம் படைக்கும் அழகனே
பாவங்கள் போக்கிடும் பாற்கடல் அழகே
வருணன் வணங்கிய வைகுண்ட அழகனே
கருணை மழைபொழியும் கடிமலர் அழகே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே
——————–
ஸ்ரீ ஆதிநாதன் – ஸ்ரீ ஆழ்வார் திருநகரி–நவ திருப்பதி -4
சொல்லால் பாடிய செம்புலவர் ஆழ்வார்
கல்லைப் போட்டு கண்விழித்த தலமே
இடர்கள் போக்கிட இன்னல்நீக்கும் இத்தலமே
சடகோபர் நம்மாழ்வாராகிய சத்திய புளியமரமே
மதுரகவி ஆழ்வார் மங்காளாசனம் செய்திட
பதுமராக நாதன் பாதங்கள் பதித்த தலமே
தாந்தனுக்கருளி தாழ்குலம் உயர்குலம் ஆக்கியவரே
பாந்தமாய் மகிழமாலை பத்தினிக் களித்தவரே
மணக்கோல பெருமாளை மணமார வேண்டவே
குணக்குன்று கோவிந்தனை கும்பிட்டு நிற்போமே
எத்தை தின்றால் இப்பித்தம் தெளியுமோ
அத்தை தின்று அங்கே கிடக்கும் ஆன்மாவே
உறங்காப்புளி காத்திட உன்னை வேண்டுமே
குரங்குப்பிடி பிடித்து கும்பிட்டு நிற்குமே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே
———————
ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் – ஸ்ரீ தென்திருப்பேரை –நவ திருப்பதி 5
மகரநெடுங் குழைக்காதர் மங்காத மூலவராக
நிகரில் முகில்வண்ணன் நிலையான உற்சவராக
தென்திருப்பேரை ஊரில் திருப்பதியாய் நிற்க
அன்போடு எங்களை அரவணைக்கும் அண்ணலே
துர்வாசர் மந்திரம் துதித்த பூதேவி
கர்வங்கள் அழிந்திட கரங்களில் குண்டலங்கள்
மூழ்கிய தாமிரபரணியில் முத்தாய் பெற்றிட
வாழ்ந்திடும் திருப்பேரை வளமாய் பெற்றாள்
குண்டலங்களை அவள் குணவானுக் களித்திட
மண்டலம் காக்கும் மங்கள நாயகனே
வருணன் பூஜிக்க வளர்பிறை நிலவாகி
தருணத்தில் மழையாய் தரையிறங்கும் பெருமாளே
சொல்லின் நாயகனாய் சுவைக்கும் பெருமாளே
அல்லும் பகலும் அனைவரையும் காப்பவரே
நம்பினோரைக் கைவிடாத நவதிருப்பதி தலமே
கும்பிட்டோர் குலத்தைக் காக்கும் தலமே
——————
ஸ்ரீ வேங்கட வாணன் – நவதிருப்பதி 7 – ஸ்ரீ பெருங்குளம்
வேங்கட வாணனை வேண்டி தினம் பாடுவோமே
ஓங்கியே உலகளந்த உத்தமன் புகழ் பாடுவோமே
பெருங்குளத்து நாயகன் பேர்சொல்லிப் பாடுவோமே
கருமை மேனியனை கருத்தில் கொண்டு பாடுவோமே
வேதாசரன் மகளாகி வேங்கடனை மணப்போமே
கோதாவின் நாயகனை கும்பிட்டு நினைப்போமே
கமலாவதி தவத்திற்கு கருணையுடன் வருவானே
கமலத்து மணாளனுடன் கண்மூடி ஆடுவோமே
பாலிகை வனத்திலே பாற்கடல் வேந்தனே
காளிங்க அஸ்மாசரன்மேல் களிப்புடன் நடனமே
மாயக்கூத்தன் நடனத்தில் மயங்கியே ஆடுவோமே
ஆயர்பாலனை இராசத்தில் ஆலிங்கனம் செய்வோமே
அண்டமே இராசமாட ஆனந்த நிலையே
கண்டு களிக்கும் கண்ணிலே பிருந்தாவனமே
—————–
ஸ்ரீ தொலைவில்லி மங்கலம் -ஸ்ரீ ஸ்ரீனிவாசன் – நவ திருப்பதி 8
தொலைவிலே இருந்தாலும் தொல்லைகள் தீர்ப்பவரே
மலையிலே நின்றருளும் மங்கல ஸ்ரீனிவாசரே
அலையும் மனத்தை அடக்கி ஆள்பவரே
விலையில்லாக் குந்துமணி விரிமார்பு மணாளனே
கலையும் மேகமாய் கண்ணாமூச்சி ஆடுபவரே
சிலையிலே தெரிந்து சிந்தை குளிர்பவரே
அலமேலு மங்கையுடன் அருள்தரும் சீலரே
உலகத்தைக் காக்க ஓங்கி வளர்ந்தவரே
சலசலக்கும் மனதில் சங்கடம் தீர்ப்பவரே
குலத்தைக் காக்கும் கோவிந்த ரூபனே
தலப்பெருமை இரண்டாக தாமரை வடிவனே
பலவித அவதார பாற்கடல் நாதனே
மங்களம் தந்திடும் மங்கல ஸ்வரூபனே
பொங்கிடும் அழகில் புவனம் சிவக்குமே
சங்கும் சக்கரமும் சத்தியம் பேசிடுமே
மங்காத ஜொலிப்பில் மகிழ்வை தந்திடுமே
அங்கும் இங்குமான அழகான நவதிருப்பதியே
எங்கும் பரவிய எழில்வடிவ மூர்த்தியே
—————-
ஸ்ரீ தெய்வ நாயகர் – ஸ்ரீ திருத்தேவனார் கோவில்
துர்வாசர் மாலையை துச்சமாக நினைத்து
கர்வத்துடன் யானையின் கழுத்தில் இட்டுவிட
தன்வினை சுட்டுவிட தரித்திரம் பெற்றானே
இந்திரன் கர்வம் இழந்து நின்றானே
பிரம்மனும் கைவிட பெருமாளை சரண்புக
இரங்கிய தெய்வமே இத்தலத்தில் இறங்கிய தெய்வமே
பக்தர் வாக்கு பலித்துவிட வந்தவரே
முக்தி அளிக்க முதலாய் நின்றவரே
பாற்கடல் கடைந்திட பாருக்குள் வந்தவரே
மார்பில் அழகிய மகாலக்ஷ்மி தாங்கியவரே
அற்புதம் பலபுரிந்து அருளைப் பொழிபவரே
பொற்பாதம் பணிந்து பூமாலை சாத்துவோமே
இங்கும் அங்கும் எங்குமாய் இருப்பவரே
இன்னபெயர் என்னபெயர் எங்கு தேடுவேனே
சொன்னபெயர் யாதோ சொல்லாதவர் யாரோ
மண்ணிலும் விண்ணிலும் மாறாத நாயகரே
—————
ஸ்ரீ அரவிந்தலோசனர் – ஸ்ரீ தொலைவில்லி மங்கல- நவ திருப்பதி 9
இருந்து இருந்த அரவிந்த லோசனரே
கருத்து கருத்த கண்ணான கண்ணனே
சிவந்து சிவந்த செந்தாமரைக் கண்ணனே
உவந்து உவந்த உற்சவ மூர்த்தியே
மருந்து மருந்தான மாமறை வேதமே
அருந்தும் அருமறை ஆயூளைக் காக்குமே
கவர்ந்து கவர்ந்த கருந்தடங் கண்ணியே
தவழ்ந்து தவழ்ந்த தளிர்மேனி தாமோதரனே
மங்கலத்தில் மலியாத மாமகளின் மங்களமே
செங்கமல செழிப்பில் சேரும் நவதிருப்பதியே
இரட்டையில் இரட்டிப்பான இனிய திருப்பதியே
பரந்து விரிந்த பாரினில் நவதிருப்பதியே
———–
ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் – ஸ்ரீ திருத்தங்கல்
திருத்தங்கலில் தங்கிய திருமகளின் திருமாலே
திருக்கோவிலில் நின்றபடி திருவருளும் திருமாலே
திருத்தேவியர் நால்வரை திருமணந்த திருமாலே
திருத்தங்கல் அப்பனாய் திகழும் திருமாலே
திருமகள் ஶ்ரீதேவி திருவழகு திருமாலே
திருச்செல்வி பூதேவி திவ்யமான திருமாலே
திருதேவதை நீளாதேவி திருச்செல்வ திருமாலே
திருநங்கை ஜாம்பவதி திருமணத் திருமாலே
திருக்கரங்கள் நான்குடன் திருகருடன் திருமாலே
திருவாசுகி ஏந்திய திருக்கோலம் திருமாலே
திருக்கதிரவன் தோஷத்தை தீர்த்த திருமாலே
திருஆலை மலைமேலே திருப்பள்ளி திருமாலே
திருமணத் தடைநீக்கும் திருவருள் திருமாலே
திருப்பேரனுக்கு திருக்கரத்தால் திருமணம் திருமாலே
திருமாலை சாற்றினேன் திருவருளால் திருமாலே
திருதினம் ஒருபாடலே திருமஞ்சனம் திருமாலே
————–
ஸ்ரீ வடபத்ரசாயி – ஸ்ரீ திருவில்லிபுத்தூர்
ஆண்டாளை ஆண்ட ஆண்டவனே
ஆண்டாண்டு காலமாய் அழியாதவனே
சூடிக் கொடுத்ததை சூடியவனே
சூடிய சூடாமணியால் இணைந்தவனே
வில்லிப்புத்தூரில் வில்லாளனாய் வந்தவனே
வில்லுடன் கோலுடன் வீற்றஇராஜனே
கோவிந்தனாய் கோதையை மணந்தவனே
கோவினை மேய்த்த கோலாகலனே
கள்ளழகர் அருளியதால் கல்யாணமே
கள்ளழகர் புடவை நிலமையை கணிக்குமே
சொன்னதை சொல்லிடும் சிறுகிளியே
சொன்னசொல் காத்த செங்கோலனே
அரசுக்கு சின்னமான அரசனே
அரசனாய் எங்களை ஆண்டவனே
————
ஸ்ரீ கூடலழகர் – மதுரை
பல்லாண்டு பாடலை பாடவைத்த கூடலழகே
கல்லிலே கலையாய் காட்சிதரும் கூடலழகே
கூடுதல் அழகுடன் குடிகொண்ட கூடலழகே
ஊடுருவி உள்ளத்தை உருக்கிடும் கூடலழகே
மீனாய் வடிவெடுத்து மின்னிடும்கூடலழகே
வானாய் விரிந்த விஸ்வரூப கூடலழகே
அஷ்டாங்க விமான அதிசய கூடலழகே
கஷ்டங்கள் போக்கிடும் கருணைமிகு கூடலழகே
பஞ்சபூத தத்துவமான பாஞ்சஜைன்ய கூடலழகே
தஞ்சமென வந்தவரை தாங்கிடும் கூடலழகே
எட்டெழுத்து மந்திரமாய் எழிலான கூடலழகே
கட்டழகு சீமானாய் கள்ளமிகு கூடலழகே
நான்மாடக் கூடலாய் நறுமண கூடலழகே
வான்மழை காத்த வகைமேக கூடலழகே
முக்கோல முகுந்தனாய் முன்னின்ற கூடலழகே
இக்கோலம் காணவே இனியதவம் கூடலழகே
நின்றும் இருந்தும் கிடந்த கூடலழகே
அன்றும் இன்றும் என்றுமான கூடலழகே
—————-
ஸ்ரீ கள்ளழகர்- ஸ்ரீ திருமாலிருஞ்சோலை –
கண்ணை மயக்கி கருத்தையள்ளும் கள்ளழகு
விண்ணை அளந்த விஸ்வரூப பாதங்களழகு
மண்டூக சாபத்தை மாற்றும் அழகரழகு
தண்ணென குளிரும் தாமரை வல்லியழகு
கையை வைத்ததில் வைகை வந்ததழகு
மாயை விலக்கிடும் மாமயன் தானழகு
சேயைக் காத்திடும் செல்லத் தாயழகு
வாயைத் திறந்து வானையளந்த சேயழகு
குண்டோதரன் பசியை குறைத்த கங்கையழகு
கண்ணிமையில் தெரியும் கல்யாணக் கோலமழகு
தர்மதேவன் வேண்டிய தலத்தில் தங்கியதழகு(எம)
தர்மனும் பூஜிக்கும் தலமானது தரணியிலழகு
அம்மை அப்பனாய் அகிலம் காப்பதழகு
எம்மை காக்கவே எழுந்தருளிய எழிலழகு
ஏறிய வாகனங்கள் ஏழில் வருவதழகு
கோரிய வேண்டுதலை கொடுக்கும் கருணையழகு
————
ஸ்ரீ காளமேகப் பெருமாள் – ஸ்ரீ திரு மோகூர்
பெண்ணாகி இன்னமுதை பெறும்பேற்றை தருபவனே
வண்ணங்கள் பலவாகி வடிவங்கள் கொண்டவனே
கள்ளத் தூக்கத்தில் கண்மூடி கிடப்பவனே
உள்ளத்தை கொள்ளை உறங்கியே கொள்பவனே
வீடுபேறு தந்திட வீடுகள் வருபவனே
காடுமலை யாவிலும் காட்சியாய் ஆனவனே
நண்பனாய் இருந்திட நடுநிசியில் பிறந்தவனே
மண்ணினைத் தின்று மாயங்கள் செய்தவனே
காளமேகமாய் தன்னுள் கருணை கொண்டவனே
ஆளவந்த நாயகனாய் ஆண்டாளை ஆண்டவனே
நித்திரை போக்கிடும் நிறைந்த விழிப்பானவனே
முத்திரையாய் சக்கரம் முன்னின்று கொண்டவனே
சக்கரத்து ஆழ்வாராய் சதுரங்கம் ஆடுபவனே
அக்கரை செல்லவே ஆடிவரும்தோணி ஆனவனே
இருநூறு பாடல்கள் இனிதாய் பாடியவனே
இருக்கும் இடமெல்லாம் இனிமை தருபவனே
——————-
ஸ்ரீ சவுமிய நாராயணன் திருக்கோவில் -ஸ்ரீ திருக்கோஷ்ட்டியூர்
இருதேவியர் உடன் இருக்கும் நாராயணா
இருக்கும் இடத்தில் எல்லாமிருக்கும் நாராயணா
தொட்டிலில் குழந்தையாய் தவழ்ந்திடும் நாராயணா
கொட்டிய அழகில் கொஞ்சும் நாராயணா
புத்திர பேற்றினை புவனத்தில்தரும் நாராயணா
அத்தியில் பூக்கும் அழகான நாராயணா
விளக்காய் வாழ்வில் வெளிச்சம்தரும் நாராயணா
குளத்தில் வந்த குலவிளக்கு நாராயணா
கிணற்றில் கங்கையாய் கிளம்பிய நாராயணா
மணத்தில் மனதை மகிழ்விக்கும் நாராயணா
நம்பியிடம் ராமானுஜர் நாடிவந்த நாராயணா
நம்பிக்கை கொடுத்த நாமம் நாராயணா
நரகமே கிடைத்தாலும் நாஉரைத்த நாராயணா
கரமதை கூப்பி காவியம்படை நாராயணா
கதம்ப மகரிஷிக்கு கதம்பகோலம் நாராயணா
விதவித கோலத்தில் விளையாடு நாராயணா
—————
ஸ்ரீ ஆதி ஜெகந்நாதர் – ஸ்ரீ திருப்புல்லாணி
ஆதியும் ஜோதியும் ஆன பொருளே
போதிமர வடிவான புண்ணிய பொருளே
சேதுக்கரை ஓரத்தில் சயன பொருளே
ஓதும் மறைகளின் ஒய்யார பொருளே
நினைத்தது நடக்க நிறைந்த பொருளே
அணைத்த அணையான அருமை பொருளே
தர்ப்பையில் சயனித்த தாமரை பொருளே
அரத்தங்கள் புரியும் ஆண்டவ பொருளே
சீதையை மீட்கவந்த சிறந்த பொருளே
கீதையை உரைத்த கிருஷ்ண பொருளே
புத்திரனை தந்திடும் புத்திர பொருளே
ரத்தனமாய் ஜொலிக்கும் ஶ்ரீராம பொருளே
நாகரின் வடிவில்வரும் நாயகப் பொருளே
போகமும் பொன்னும் பொருளும்தரும் பொருளே
அரசமர வடிவான ஆனந்த பொருளே
கரங்கள் தொழுதிடும் காட்சி பொருளே
இரவா பகலா அறியேன் பொருளே
உறவா பிரிவா உணர்வேன் பொருளே
என்னமணி என்னபொழுது ஏதுமறியேன் பொருளே
உன்னை மட்டும் உள்ளமறிவேன் பொருளே
—————–
ஸ்ரீ சத்திய மூர்த்தி- ஸ்ரீ திரு மெய்யம்
சத்திய வாக்கினை சாத்தியம் ஆக்கின சத்தியனே
நித்தம் காத்து நிறைவை தரும் நித்தியனே
சங்குடன் காத்து சக்கரம் ஏந்திய சங்குசக்கரனே
மங்கல வாழ்வு தரும் மங்கள நாயக மங்கலனே
ஆதிசேடன் அஞ்சிட அனல் கக்கி தள்ளிய ஆதிநாநகனே
ஜோதி வடிவில் சுந்தரம் படைத்த ஜோதிஸ்வரூபனே
மெய்யான உடலுடன் உயிரையும் காத்த உயிரமெய்யே
மெய்யத்தில் அமைந்த மாதவ நாயக மய்யனே
ஐயங்கள் அகற்றி அகத்தை தூய்மை ஆக்கியவனே
கைவல்யம் அளித்து காத்து கரங்கள் அருள்பவனே
————–
ஸ்ரீ ரகுநாயகன் – ஸ்ரீ திரு அயோத்தி
தந்தை சொல் தவறாத ரகுநாயகா
சுந்தர வடிவ சுபிட்ச ரகுநாயகா
ஒருமனைவி ஒருவாக்கு ரகுநாயகா
கருத்தினைக் கவரும் ரகுநாயகா
தசரத புத்திர தரும ரகுநாயகா
அசராத வீர அழகு ரகுநாயகா
வாக்கினை காத்த விஜய ரகுநாயகா
ஏக்கத்தை தீர்த்து சீதைமீட்ட ரகுநாயகா
சுக்ரீவனுக் கருளிய சூரியவம்ச ரகுநாயகா
பக்தருக் கருளும் பாற்கடல்நாதா ரகுநாயகா
அமைதியின் வடிவம் அன்னையின் ரகுநாயகா
சுமைகள் சோகங்கள் போக்கிய ரகுநாயகா
அன்பின் வடிவம் அழகு ரகுநாயகா
துன்பத்தை இன்பமாக்கும் தூய ரகுநாயகா
சீதா ராமஜெயம் சீதா ராமஜெயம் ரகுநாயகா
சீதா ராமஜெயம் சீதா ராமஜெயம் ரகுநாயகா
—————–
ஸ்ரீ கோவர்த்தநேசன் – ஸ்ரீ வட மதுரா
மதுவனத்து மன்னனே மதுராவின் கண்ணனே
மதுரமான பாலனே மதுசூதன அழகனே
மாமனை வதம்செய்ய மாற்றாந்தாய் மகனே
தாமரை கண்ணனே தாயின் மைந்தனே
தேவகியின் மகனே தேவர்கள் நண்பனே
காவல் புரிபவனே கருநீல வண்ணனே
ஆயர் பாலனே ஆய்ச்சியர் நேசனே
மாயங்கள் செய்பவனே மனதை மயக்குபவனே
விளையாடி களிப்பவனே வேடிக்கை இனியோனே
கலைகள் தருபவனே கருத்தினை கொள்பவனே
மண்ணை உண்டவனே மண்டலம் காத்தவனே
வெண்ணை உண்பவனே வெற்றியை தருபவனே
—————–
ஸ்ரீ ருக்மிணி தேவி ஸமேத ஸ்ரீ கிருஷ்ணன் – ஸ்ரீ திருத் துவாரகா
கம்சனை வதம் செய்த கண்ணனே
வம்சத்தை வளரச் செய்த கண்ணனே
அரசனாய் ஆண்டு வந்த கண்ணனே
தரமான சாரதியாய் தேரோட்டிய கண்ணனே
ஆசானாய் உபதேசித்த அருள்மிகு கண்ணனே
வாசமிகு பாரிஜாத வசந்த கண்ணனே
உக்ரசேனனை அரசனாக்கி உயர்த்திய கண்ணனே
ருக்மிணியை மணந்த ரத்தின கண்ணனே
பக்தருக் கருளும் பார்த்தசாரதி கண்ணனே
சக்தியை அளிக்கும் சாகச கண்ணனே
கடலை குடைந்த கடிநிலத்து கண்ணனே
படரும் கொடியென பாசமூட்டும் கண்ணனே
கோபியர் நெஞ்சில் குடிகொண்ட கண்ணனே
சோபிக்கும் அழகுடன் ஜொலிக்கும் கண்ணனே
உலகெங்கும் பரவிய உயர்திரு கண்ணனே
குலத்தைக் காக்கும் கோபால கண்ணனே
———–
ஸ்ரீ பிரகலாதவரதன் – ஸ்ரீ அஹோபிலம்
தூணிலும் இருந்து துரும்பிலிருக்கும் தூயவனே
பேணிக் காக்கும் பெரியநரசிம்ம மாயவனே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
பாரினை தினம்காக்கும் பார்கவ நரசிம்மரே
ஊரினைப் பேணிடும் யோகானந்த நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
சக்கரம் சங்குடன் சக்ரவட நரசிம்மரே
பக்தருக் கருளும் அஹோபில நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
வாழ வைக்கும் வராக நரசிம்மரே
மகிழ வைக்கும் மாலோலா நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
ஜொலிக்கும் பிழம்பான ஜ்வால நரசிம்மரே
ஒலிக்கும் வேதமான ஒய்யாரபாவன நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
காட்சி தரும் காரஞ்ச நரசிம்மரே
மாட்சிமை பெற்ற மகாநவ நரசிம்மரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
இராமனுக்கு சீதையை இரம்மியமாய் தந்தவரே
வாமனனுக்கு முன்னதாய் வையத்தில் வந்தவரே
நாராயணா என்றே நாவினிக்க பிரகலாதன்பாடிட
வாராய் என்றவுடன் வாகாய் தூணில் வந்தவரே
—————–
ஸ்ரீ வெங்கடாஜலபதி – ஸ்ரீ திருமலை
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கோவிந்தா
நிறையாய் நாளும் நிறைவாய் கோவிந்தா கோவிந்தா
பறை சாற்றி பாடுவேன் கோவிந்தா கோவிந்தா
மறையோதும் மலைவாசா கோவிந்தா கோவிந்தா
கடன்பட்ட மாலா கோவிந்தா கோவிந்தா
உடன்வருவாய் உலகம் யாவும் கோவிந்தா கோவிந்தா
பத்மாவதி மணந்த பாற்கடல் வாசா கோவிந்தா கோவிந்தா
சத்தியசீலன் சாந்தமூர்த்தி கோவிந்தா கோவிந்தா
மார்பிலே உதைத்தாலும் மாறாதபுன்சிரிப்பு கோவிந்தா
மார்பிலே திருமகளை மலராய்கொண்ட கோவிந்தா
கோடிகோடி பணம் குபேரனுக்களிக்கும் கோவிந்தா
மாடியும் கீழுமாய் மண்மணக்கும் கோவிந்தா
மலையேறி வருவோம் மார்க்கம் காட்டு கோவிந்தா
விலையில்லா விரிமார்பு வேந்தனே கோவிந்தா
தினமுன் புகழ் திகட்டாது பாடுவேன் கோவிந்தா
மனதிலே அகலாது மாறாதிருப்பாய் கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கோவிந்தா
நிறையாய் நாளும் நிறைவாய் கோவிந்தா கோவிந்தா
——————-
ஸ்ரீ முக்திநாத் –
முக்தியை தரும் மோகன கண்ணனடி தோழி
பக்தியில் திளைத்தால் பரவசம் தானடி தோழி
சக்தியை தந்திடும் சாளிக்கிராமமடி தோழி
அக்கரை செல்ல ஆடிவரும் தோணியடி தோழி
தவமிருந்த விஷ்ணுவும் தன்னில் சேர்க்குமடி தோழி
அவனியில் மோட்சம் அருளிடும் தலமடி தோழி
உவகை பொங்கும் உற்சாகம் பிறக்குமடி தோழி
பவனிவரும் பாற்கடல் பரந்தாம திருவடி தோழி
திவ்யமாய் தேசங்கள் திகழும் பூமியடி தோழி
பவ்யமாய் நாமும் பாடிவரும் அழகடி தோழி
எவ்விடம் நோக்கினும் எழிலாய் தெரியுமடி தோழி
இவ்விடம் அவனே இருக்குமிடம் இதயமடி தோழி
கண்ணனின் கோபியராய் கருத்தினில் கலப்போமடி தோழி
மண்ணிலே மணம்தரும் மகிழம்பூ சரமடி தோழி
விண்ணகர கோபுரம் விரித்தாடும் அரங்கமடி தோழி
பண்ணிலே பாட்டாய் பாதை காட்டுமடி தோழி
உன்னையும் என்னையும் ஊரையும் சேர்க்குமடி தோழி
தன்னிலே அடக்கமாக்கி தளிராய் காக்குமடி தோழி
மன்னவன் வந்திட மங்கையர் மகிழ்வோமடி தோழி
சின்னமாய் நெஞ்சிலே சேவித்து சேர்வோமடி தோழி
—————-
ஸ்ரீ நைமிசாரண்யம் –
சக்கர வடிவிலே சத்திய தலமே
பக்தரை காக்கும் பரிசுத்த சக்கரமே
தர்பை சக்கரமாகி தரையிலே விழுமே
கர்வத்தை அடக்கிடும் கையடக்க தர்பையே
ஆரண்ய நடுவிலே அழகான ஆலயமே
காரண மூர்த்தியின் கருணை ஆரண்யமே
உத்தம நாயகனின் உகந்த ஆலயமே
உத்திர பிரதேசத்து உயரிய உத்தமனே
முனிவர்களை காத்திட முன்வந்த இறையே
இனிவரும் காலத்தை இனிதுகாக்கும் முனிவரே
பாரத புராணம் பாரம்பரிய காவியமே
சாரமாய் வியாசருக்கு சரளமான பாரதமே
முழுநிலவு வேளையில் மூழ்கிடும் தீர்த்தமே
முழுதான பூரணத்தின் முக்திதரும் முழுநிலவே
————-
ஸ்ரீ நவமோகன ஸ்ரீ ராதா ஸமேத ஸ்ரீ கிருஷ்ணா – ஸ்ரீ ஆயர்பாடி-ஸ்ரீ கோகுலம்
கோகுலத்தில் பாலகனாம் கோபாலன் தாலேலோ
கோகுலத்து மோகன கோலாகலனே தாலேலோ
சத்யபாமா நாயகன் சாரதியே தாலேலோ
நித்ய மங்களரூப நிர்மலனே தாலேலோ
கண்ணனாய் அக்ரூரர் கணநேரம் தாலேலோ
கண்களை அதனால் கொய்தாயோ தாலேலோ
பத்தினியை சாந்தபடுத்திய பக்தன்புகழ் தாலேலோ
மத்தினால் கடைந்த மன்மதனே தாலேலோ
ஸுரதாஸர் கண்மலர சுந்தரனே தாலேலோ
பூரண பொலிவான புதல்வனே தாலேலோ
ஆயர்பாடி மாளிகையின் ஆனந்தனே தாலேலோ
மாயங்கள் செய்த மன்னவனே தாலேலோ
ஆவினை மேய்த்த ஆ நந்தகுமாரனே தாலேலோ
கோவிந்த மூர்த்தி கோவர்தன கிரியே தாலேலோ
எப்போதும் என்னுடன் இருப்பவனே தாலேலோ
தப்பாது காத்திடும் தாமோதரனே தாலேலோ
———-
ஸ்ரீ ரகுநாத் கோவில்
ஜம்முவில் அமர்ந்து ஜகத்தை காப்பவனே
இம்மைக்கும் மறுமைக்கும் இனிய ராகவனே
மகனாக பிறந்து மண்ணிலே வாழ்ந்தவனே
அகத்தினுள் புகுந்து ஆணவம் அழிப்பவனே
தந்தை சொல்லை தட்டாத இராமனே
மந்திரமாய் ஏற்று மண்ணாசை விட்டவனே
பத்தினியை பிரிந்து பரிதவித்து சென்றவனே
நித்திய சீலனாய் நேசித்து இருந்தவனே
அனுமனின் துணையோடு அலைகடல் தாண்டியவனே
அனுமானிக்க முடியாத ஆற்றல் உடையவனே
ஏழுபிறவிக்கும் இறைகாட்டும் ஏழுதிருக் கோவிலே
வாழும் வழிகாட்டும் வைகறை தேசங்களே
நாற்புற தூணில் நற்திசை காட்டுமே
பார்போற்றும் கோவிலாய் பாதை காட்டுமே
எல்லைகள் இல்லாத எழில்திரு தேசமே
தொல்லைகள் இருந்தாலும் துணிவைத் தந்திடுமே
எங்கும் நிறைந்த எழிலான இறையே
பொங்கும் அழகில் புவனம் நிறைபவனே
இரண்டு எழுத்தில் இனிமை தருபவனே
கரங்கள் கூப்பிட கண்ணுக்குள் வருபவனே
——-
ஸ்ரீ திருவல்லவாழ் ஸ்ரீ திருவாழ் மார்பன் –
கோலமாய் கொலுவிருக்கும் கோலப்பிரான் திருவுருவே
காலத்தைத் தாண்டிய கருநிறமேனி திருவுருவே
திருவாழ் மார்பாய் திகழும் திருவுருவே
திருவல்லப நாயகன் திருவருள் திருவுருவே
சங்கர மங்கலத்தம்மை சரணமென்ற திருவுருவே
சங்கடம் தீர்த்திடும் சுதர்சன திருவுருவே
ஏகாதசி விரதத்தின் ஏகாந்த திருவுருவே
ஆகாயம் அளந்த அற்புத திருவுருவே
தோலாகசுரன் அழித்த தொய்வில்லா திருவுருவே
பாலாபிஷேகம் பெற்றிடும் பாலக திருவுருவே
கண்டா கர்ணன் காதிலொலிக்கும் திருவுருவே
கண்ணனாய் பிறந்த காருண்ய திருவுருவே
பொன்மணிகள் கீதம்பாடி போற்றிய திருவுருவே
கிண்கிணி ஆடிட களிப்புட்டும் திருவுருவே
கருணையை சிந்திடும் கண்ணன் திருவுருவே
அருளிட அஷ்டமியில் அவதரித்த திருவுருவே
————-
ஸ்ரீ திருப்பாற்கடல் –
திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணா திருக்கோல அவதார நாரயணா
திருப்பாடல் வடிவிலே நாராயணா தினம்வலம் வந்த நாராயணா
கடலிலே மீனாய் நாராயணா காட்சி அளித்த நாராயணா
உடலை சுருக்கி நாராயணா உள்ளுக்குள் அணுவான நாராயணா
மந்திர மலையுமன்று நாராயணா மத்தாக மாறிய நாராயணா
தந்திர கூர்மமாய் நாராயணா தாங்கிய அவதார நாராயணா
இரண்யாட்சன் கொடுத்த நாராயணா இன்னலை களைந்த நாராயணா
வரங்கள் தந்த நாராயணா வராக அவதார நாராயணா
சிம்மத்தின் வடிவில் நாராயணா சினந்து எழுந்த நாராயணா
இம்மைக்கும் மறுமைக்கும் நாராயணா இதங்கள் தருவாய் நாராயணா
வடிவத்தில் சிறுவனாய் நாராயணா வாமன அவதார நாராயணா
அடியெடுத்து ஆகாயம் நாராயணா அளந்து எழுந்த நாராயணா
தாயை வதம்செய்த நாராயணா தனயனாய் பரசு நாராயணா
மாயைகள் செய்து நாராயணா மயக்கும் நாயக நாராயணா
தந்தை சொல்காத்த நாராயணா தனயன் ராம நாராயணா
தந்த சோகங்கள் நாராயணா தாங்கிய சீமானே நாராயணா
பலங்கள் பெற்ற நாராயணா பலராம வடிவமே நாராயணா
உலகை காத்த நாராயணா உத்தம புருஷ நாராயணா
கண்ணனாய் வந்திங்கு நாராயணா கவர்ந்த குழந்தையே நாராயணா
மண்ணைத் தின்று நாராயணா மாயங்கள் புரிவாய் நாராயணா
கலியுகத்து அவதிநீக்க நாராயணா கல்கியாய் வருவாய் நாராயணா
சலிப்பின்றி காக்கும் நாராயணா சங்கு சக்கர நாராயணா
தசைகளை இயக்கும் நாராயணா தசாவதார நாயகனே நாராயணா
அசையும் அசையா நாராயணா அகிலத்துப் பொருளான நாராயணா
தேவர்கள் அமுதம் நாராயணா தேடிய நேரத்தில் நாராயணா
தேவனாய் பாற்கடல் நாராயணா திருமாலாய் சயனித்த நாராயணா
இந்திரன் கடைந்திட நாராயணா இயக்கிய படைகளே நாராயணா
மந்திர மலையும் நாராயணா மத்தாக கடைந்த நாராயணா
வாசுகி கயிறாக நாராயணா வளைந்த அழகென்னே நாராயணா
வீசும் புயலும் நாராயணா வினையும் செயலும் நாராயணா
கசிந்த விடத்தை நாராயணா கடலும் தாங்குமோ நாராயணா
புசித்த சிவனும் நாராயணா புவனம் காத்த நாராயணா
கணத்தில் நீலமான நாராயணா கண்டத்தில் தாங்க நாராயணா
குணமான உன்னருமை நாராயணா குலம் காக்கும் நாராயணா
மோகம்தரும் வடிவிலே நாராயணா மோகினி உருவமே நாராயணா
யாகங்கள் வணங்கும் நாராயணா யாதவ குலத்து நாராயணா
ஆணாகி பெண்ணான நாராயணா அகிலத்து திருநங்கை நாராயணா
காணாத காட்சியாகி நாராயணா கண்ணுக்குள் மறைந்த நாராயணா
அணுவாகி அண்டமாகி நாராயணா அறிவியல் புதிரான நாராயணா
நுணுக்க அறிவாகி நாராயணா நூதன தொழிலான நாராயணா
எண்ணமாகி என்னுள் நாராயணா எழுத்தாகி பாடலான நாராயணா
எண்ணிக்கை இல்லாத நாராயணா எண்ணிலடங்கா எழில் நாராயணா
எதிலும் அடங்காது நாராயணா எதிலுமடங்கி மறையும் நாராயணா
பதிலாகி கேள்வியான நாராயணா பாரில் பரந்துவிரிந்த நாராயணா
அன்னையாகி தந்தையாகி நாராயாணா அன்பாகி அணைக்கும் நாராயணா
உண்மையாகி நிற்கும் நாராயணா உத்தம சீலனே நாராயணா
ஒன்றாகி இரண்டாகி நாராயணா ஓங்கி உலகளந்த நாராயணா
கன்றாகி பசுவாகி நாராயணா கண்கவர் கண்ணனே நாராயணா
மூன்றடி மண்ணளந்த நாராயணா முன்னின்று காக்கும் நாராயணா
தோன்றிய உருவத்தில் நாராயணா துயர்கள் துடைக்கும் நாராயணா
நாற்கர ஆயுதம் நாராயணா நலம்தரும் சத்தியம் நாராயணா
பாற்கடல் பெருமாள் நாராயணா பஞ்சபூத பிரபஞ்ச நாராயணா
பெருகிய ஆறுகள் நாராயணா பேணிக் காத்திடும் நாராயணா
கருத்தினில் ஏழுமலையான நாராயணா கார்வண்ண மேனியனே நாராயணா
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா!
————–
பிறந்த பயனை இன்று பெறுவேனே
சிறந்த தேசத்தை நின்று பாடுவேனே
குறை இல்லா நிறை கோவிந்தனே
பறை சாற்றி உன்புகழ் பாடுவேனே
செருக்கினை அழிக்கும் சிங்காரச் செம்மலே
கருத்தினைக் கவரும் கார்மேனி கண்ணனே
சறுக்கி ஏறிடும் சம்சார சாகரமே
வருத்தங்கள் யாவும் வருடாது விலகிடுமே
பரமபத விளையாட்டின் இறுதி நிலையே
அறங்கள் மிகுந்த அழிவில்லா நிலையே
கரங்கள் கூப்பியே கண்கள் மூடுமே
சிரம்தாழ உன்னை சிந்தை வணங்குமே
வாசுதேவன் வைகும் இடமான வைகுண்டமே
மாசுகள் இல்லாத மாறா பேரின்பமே
சத்திய ஜீவனுக்கு சாத்திய முக்தியே
நித்திய ஸூரியாய் நிம்மதி பெறுமே
நூற்றியெட்டுப் பாடல்களை நூலாய்க் கோத்திட
போற்றியுன் திருநாமம் புகழ்ந்து பாடிட
சாற்றிய பாமாலை சாராங்கனைச் சேருமே
காற்றினில் இரண்டற கலந்து செல்லுமே
ஓம் நமோ நாராயணா !
ஓம் நமோ நாராயணா !
ஓம் நமோ நாராயணா !
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
February 11, 2024 at 12:50 am |
அருமையான பதிவு. 108 திவ்ய தேசத்தின் தாயார் திருநாமத்தையும் இணைந்திருந்தால் மகுடம் சூட்டியது போல இருந்திருக்கும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து