பல்லவி
ஆருடம் ஒன்று சொல்லடி — என்
அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின
நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க (அ)
அனுபல்லவி
பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே
பச்சைப் பிள்ளைத் தனம் போக வில்லையே மானே
ஆரோடு சொல்வேனோ அந்தரங்கம் தானே
அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம் தானே
(மத்யமகாலம்)
அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ
அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ
ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ
உள்ளதைச் சொல்லப் போனால் உனக்கென்ன சிரிப்போ. (ஆ)
சரணம்
அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான்
ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான்
மிச்சம் மீதி இல்லாது வெண்ணைகளவாடுவான்
வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான். (ஆ)
——–
பல்லவி
இன்னமுது அன்ன உன் வண்ணமுகம் கண்டு
சொன்னபடி யாடுது மனமே – இங்கு
துள்ளித் துள்ளிப்பாடுது முன்னமே
அனுபல்லவி
பின்னலும் சாயக் கொண்டையும் சூழ மயில்
பீலிஒன்று நிரந்தரம் வாழ
மின்னலொளி கடைக் கண்ணில் தாழ – நீல
மேனிமுழுதான வனமலர் மாலைகள் மிருந்து தாழ கடைதலிராத (இ)
சரணம்
மெய்யுணர்ந்த மறைமாதவர் ஆனவர்
மெய்ப்பொருள் இதென்று உனைநாட — நீல
மேனிபடும் சுதமானதை ஒரு ஆவினம்
மிக்க அருகில் அணைந்து கூட
ஐயன் உன் முக வண்ணனை ஆராரோ சொல்லக் கேட்டு
அரம்பையர்கள் மண்ணுலகம் நாட –
அருந்ததியும் கூட தன்னிலை இழந்து
ஆவட்டமிட தூது – பா – ட … … …
மத்யமகாலம்
அதிலுமிதுவென்று தகுதிமியெனவொரு ஆடக மயில் நடமாட
அங்கிங் கெனாது தங்கி உறவாடும் தென்றலும் வந்து குழல் கூட
பொதுவில் நடமாடும் புனத நற் சுடலை பூத்துக் குலுங்கி வனமாக
பொங்கு கடலரவு மலையென இலாது பொரும்
எனாது ஒருபோதும் கடையாத (இ)
—
பல்லவி
கள்ளமே அறியா – த – கண்ணனை
கானக்குழல் எதிரொலி மாதுளப கானத்திடையுலவு நீல ஒளிதனைக்
கண்டபடி சொல்லப் போகாதே – அது அந்தரங்க மாகவும் ஆகாதே.
அனுபல்லவி
மெள்ள மறைபாடும் தேவனை……… வேணது தரும் கற்பக கா…வி…னை..
தெவள்வே குழலூதும் தேவாதி தேவனை
மெள்ள மனைசென்று உள்ளதயிர்கண்டு அள்ளிமிகவுண்ட கள்ளத்தனமன்றி (க)
சரணம்
தென்றல் ஊறவரும் சின்னக் குழலிசையில்
சிந்தை வழி…கா…ட்ட சென்றோமே அங்கு
நின்ற அழகினிலே நெஞ்சாரத் தந்திங்கு
சிந்தைகவர்கள்வன் என்றோமே.
கன்றோடு பசுவெல்லாம் காக்கும் அருளாளன்
கருணையினால் வந்த தென்றோ…மே…
கைக்கொள்ளும் வெண்ணையுண்ட கருணையை மனமார
கள்ளம் கள்ளம் கள்ளம் என்றோமே.
தொன்று முதல் வந்த தொரு கோடிபிறவி
தூயதென வாக ஆனதே
சொல்லழகிலும் பண்ணழகிலுமாக
சொன்னதொரு உறவும் ஆனதே
கதியெனவானதும் துதியெனவானதும்
காளீய நடனமும் ஆனதே
கண்கண்ட தெய்வம் பண்கொண்ட தெய்வம்
கைகொண்ட வெண்ணை அது உண்டதன்றி (க)
—–
பல்லவி
அலைபாயுதே–கண்ணா! என்மனம் மிக
அலைபாயுதே–உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அனுபல்லவி
நிலைபெயராது சிலைபோல நின்ற
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதராமனம் (அ)
சரணம்
தெளிநத நிலவு பட்டப்பகல்போல் எரியுதே–உன்
திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உறுத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா–ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனைகடலலையினில் கதிரவன் ஒளியென இணையிருக் கழலெனக் கனித்தவா
கதறிமனமுருக நானழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ – இது முறையோ – இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு (அ)
———–
பல்லவி
ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே (ஆடாது)
அனுபல்லவி
ஆடலைக் காணதில்லை – அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே – ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ (ஆடாது)
சரணம்
சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று – தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே – குழல்
பாடிவரும் அழகா – உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே (ஆடாது)
————
பல்லவி
நீலவானம்தனில் ஒளி வீசும் –
நிறைமதியோ உன் முகமே – கண்ணா (நீ)
அனுபல்லவி
கோல வண்ணம் காட்டி – குழலிசையைக் கூட்டி
மோன நிலையில் எம்மை – ஆட்டி வைத்த எங்கள்
இறைவா! என் மனமதிலே நிறைவாகி ஒளிமிளிர இன்பம் தர வந்
தவனே ப்ருந்தாவனம் நின்றவனே – காளிங்கனை வென்றவ –
னே-தித்தஜம் தஜம் தரி தாம் – தித் தஜம் தஜம் தரி தாம் – த
தாகிட குந்தரி – தரிஜகணம்தரி – ததீங்கிணதொம் – நீதாபதம மகாரிஸநி
சரணம்
நதிக்கரை ஓரத்திலே – யமுனை
நதிக்கரை ஓரத்திலே – அன்று ஒரு –
நாள் இந்நேரத்திலே – அன்
றலர்ந்த நறுமணமலரோ – மலரிதழோ உன் மதிமுகமென்றதும்
மதிமயங்கி வசமிழந்த என்னிடம் மனமிறங்கி அருள் புரிந்து சென்றதும்
மறவேனே – கணம் தரியேனே – தித்
தரிகுத ரிகுதீம் தததரிதீமித ஜணுத ஜணுததிம் தகததிங்கிணதொம் தத்தித்
தகதணக ஜம்தரி தித்தகணகஜம்தரி – தகணகஜம்தரி களங்கமிலா – த (நீ)
——
பல்லவி
யாரென்ன சொன்னாலும் அஞ்சாத நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு – ராக
ஆலாபனமுடனும் பாடு – முடிந்தால்
அடவோடும் ஜதியோடும் ஆடு –
அருமையென வந்தப் பிறவிகளோ – பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் (ஆ)
அனுபல்லவி
நாரத நாதமும் வேதமும் நாண
நாணக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட – கோபியரும் பாட
நேர் நேர் எனச் சொல்லி – தானாடுவான் அந்த (ஐ)
சரணம்
தோலை யறிந்து கனி தூர எறிந்து
வெறுந் தோலைத் துணிந்தொருவன்
தந்தானல்லவோ –
மேலைப்பிடி அவலை – வேணுமென்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ –
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி –
கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ – இந்த
ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை
நமக் கெதற்கு என்று தள்ளி – நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி (ஐ)
———
பல்லவி
வந்ததுவும் போனதுவும் இமைப்பொழுது ஆனானும்
மனமன்றோ களவானதே தயிரொடு நவனீதம் களவிட (வ)
அனுபல்லவி
நந்தகோபன் செய்ததவம் நல்வதொரு பயனாகி
இந்த விதமாக வந்து இன்பமுழுக் காட்டுதடி (வ)
சரணம்
காலினில் வழிந்த தயிர் கமலமலர்க் கோலமிட
கையில் வழி வாரும் வெண்ணைக் கானக் குழல் மூடியிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட (வ)
———-
பல்லவி
நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் எங்கள்
நீல நிறமேனி மாதவன் செய்வது
நிமிஷம் போவது யுகமாய் ஆகுது
அனுபல்லவி
காதாரக் குழலூதி கன்றோடு விளையாடி
கண்முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி
ஏதேதோ ஜாலங்கள் செய்வதும் ஓடி ஓடி
எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து
களவாடிடும் எனதாருயிர் மகனை (நீ)
சரணம்
செய்யும் துஷ்டத்தனத்திற்கு எல்லையே இல்லை
தேடிப் பிடிக்க என்றால் சக்தியும் இல்லை
கையும் களவுமாக்க காலமும் வல்லை –
காலம் தவறாது கோள் சொல்ல வந்து நின்ற
மாதர்க்கு விடை சொல்ல நேரமுமில்லை (நீ)
கட்ட எண்ணிக் கயிற்றைத் தேடியும் காணோம்
கைக்கான கயிறெல்லாம் அளவாகக் காணோம்
மட்டமென உரலொடு கட்டிடத் தோணும் ஆனால்
மட மட வெனும் ஒலி செவிபுக வந்தால்
மருத மரமிரண்டைக் காணவே காணோம் (நீ)
——–
பல்லவி
ஆடும் வரை அவர் ஆடட்டும்
அறிந்து கொண்டேனடி……மயங்கேனடி குறையேனடி
அனுபல்லவி
தேடும் வரை எனைத் தேடட்டும்
தெறிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்றமட்டும் (ஆ)
சரணம்
இங்கித மென்றாலே வீசை என்ன விலை
என்று கேட்பாரந்த மன்னன் – அதை
எடுத்துச் சொல்லவந்து நின்றாயே பெண்ணே நீ
ஏற்குமோடி எந்தன் எண்ணம்
ஸங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக
தவிக்குதே என் சொல்ல இன்னும
ஸரளி வரிசை முரளிக்காச்சு
ஜண்டை வரிசை கொண்டைக் காச்சு
அலங்கார பாம்பு மேலே
ஆடியாச்சு பாடியாச்சு
காவடிச்சிந்து
மாஞ்சி
1) கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிடையானத்தரம்
ஆனக் குழலிசைக் கேளும் – போன
ஆவியெல்லாம் கூட மீளும்.
2)
சல்லச் சலனமிட்டோடும் நதி பாடும்
வனம் தங்கித் தங்கி சுழன்றாடும் – நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோல்என
துள்ளித் துள்ளிக் குதித்தோடும் – புகழ்ச்
சொல்லிச் சொல்லி இசைபாடும்.
3)
கண்ணன் நகைபோலும் முல்லை இணை இல்லை
என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை – இது
கனவோ அல நனவோ என கருதாதிரு மனமே
ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன்.
4)
தாழைமடல் நீத்து நோக்கும் முல்லைப் பார்க்கும்
என்ன சௌக்கியமோ என்று கேட்கும் – அட
மொழிபேசிட இதுவோபொழுதெனவோ அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்.
சரணம்
பா பா – பா பா – பா பா மாத ப – பமகரி – கஸரீ
இங்கி – த மென் – றா லே வீசை – என்ன .-வி.லை
ரிக மாபம – காரீ – காரீ ஸா; – ஸா; – ஸா ஸா
என் . று ..- கேட் பா ரந்த மன் — னன் .- அதை
ஸஸ பா – பா பா – பநிதா மா தநி – ஸர்ரிஸ் நீதா பா; பாநித – மா
எடுத் துச் – சொல்ல – வந் .- து நின் .- றா .. யே – பெண்.ணே…நீ
பா பா – பாமா – காரீ பம கரீம கரி ஸா ;; ||
ஏற் கு – மோடி – எந்தன் எண் . .. ணம் … … . ||
பா பா – பா ப ப – பாநித தம நிதநீ – ஸாஸா – ஸா ஸா
சங்கீ – தம் அவர் – கை … யில் கோ.விற் – குரங் – காக
ஸ்ரி .ரீபம க்ரி ஸா – ஸாஸா தாரிஸ் நித – ஸா :-;; ||
தவிக்கு … தே . என் – சொல்ல இன் … … னும் .-… ||
ரிரிரிரி – க்ரி ஸ்க்ரி ஸர்ஸ் ஸா ஸ் நி தி – ஸா ஸ் ஸா ஸ்
சரளிவ ரிசை முரளிக் காச்சு ஜண்டைவரிசை-கொண்டைக் காச்சு
பபாபா க்ரி ஸா ஸ் பா ப பா ப பதம – மபம – காரி ||
அலங்கா ர – பாம்பு மேலே ஆடி யாச்.சு பாடி – யாச்சு || (ஆடும்)
——–
பல்லவி
அவராக வருவாரோ வரமாட்டார் இதில்
அதிசய மென்னடி அன்னமே கண்ணன் (அவ)
அனுபல்லவி
எவருக்கும் மேலான இன்னருளாளன் யமுனாவனம் பூத்த இனமலர் தாளன்
புவனம் மயக்கும் புல்லாங்குழல் இசையாளன் புண்ணிய மிகுந்த எங்கள் ராதை மணவாளன்
மத்யமகால ஸாஹித்யம்
தவமிருந்த காளியன் தலமிசை இருந்து தாண்டவ மாடிய பதங்கொண்டு
தமால மரநிழல் இருந்து என்னிடம் தனியாக பேசி அதை நினைவு கொண்டு
குவளை நீல திருமேனி கொண்டன்று கோவர்த்தனம் சுமந்தது போல – இன்று
குவலய முழுதுள கவலையை ஒருங்கு கொண்டவரங்கிருந்திங்கு நேராக
சரணம்
தூது சென்ற உந்தன் வாயாடி தனம் கண்டு தொல்லை என்றெண்ணி விட்டாரோ
நாத குழலிசையில் நவநவமாக ராகம் இணைத்து விட்டாரோ
ஆதவன் அஞ்சி அஞ்சி அங்கே நிற்க ஆனந்தமாக நினைந்தாரோ
அடியேனையுந் சைரந்திரி போலவே எண்ணி ஆகட்டும் என்று விட்டாரோ.
(மத்யமகால ஸாஹித்யம் பாடி பல்லவியை எடுக்கவும்)
———
பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்! – நம் –
அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)
அனுபல்லவி
இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த –
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் –
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
மத்யமகாலம்
எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – ஒரு –
– பதம் வைத்து மறு பதம்தூக்கி – நின்றாட – மயிலின் இறகாட – மகர குழையாட
– மதிவதனமாட – மயக்கு விழியாட – மலரணிகளாட – மலர்மகளும் – பா…ட –
இது “கனவோ நனவோ!” – என – மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட –
(அசைந்தாடும் மயில்)
சரணம்
அசைபோடும் ஆவினங்கள் கண்டு – இந்த –
அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு
நிசமானசுகம் என்று ஒன்று – இருந்தால்
நீளுலகில் இதையன்றி – வேறெதுவும் அன்று!
இசையாரும் கோபாலன் இன்று – நின்று –
எழுந்தெழுந்து நடம்ஆட – எதிர்நின்று ராதைபாட -,
எங்………………………………….. கொண்டாட (அ)
—–
பல்லவி (ராகம்: தர்பார்)
இப்படியும் ஓர்பிள்ளை எங்கேயும் இல்லை
இன்பம் தரும் தொல்லை இதற்கீடிணையும் இல்லை (இப்படியும்)
அனுபல்லவி
பொற்புயத்தே வனமலரும் பூப்புனையும் பலராமா
தப்பிதமாகாத உன்தன் தம்பி என்றால் அறமாமோ
இப்போதே நீ சென்று எங்கள் மொழி ஈதென்று
எந்த விதமோ இதை யசோதையிடம் போய் சொல்லு (இப்படியும்)
சரணம் (ராகம்: தன்யாஸி)
எப்படியும் உறிக்கலயம் எட்ட முடியா உயரம்
கட்டி ஒரு வகை செய்து காவல் வைத்துப் போன பின்னர்
(ராகம்: வஸந்தா)
யாரென்று வினவ எம்மை அஞ்சுவோம் என்று கண்டுன்
பேர்சொல்லி உன்னுடனே பிறந்தோன் என்றான்
பார் இங்கே வந்து தயிர் பானையுள்ளேது எனில்
கார் ஒன்றைத் தவிர்த்த இளங்கன்றொன்றை காணுமென்றான் (இப்படியும்)
(ராகம்: மத்யமாவதி)
இத்தனையும் செய்து பின்னர் எங்கள் மனம் நோகு மென்று
முத்தம் ஒன்று ஈந்து நாங்கள் மயங்கி நின்ற வேளையிலே
கத்தைக் குழல் பற்றி எழில் மிக்க மயில் பீலி வட்டம்
சுற்றி ஒரு கையில் குழல் பற்றி விரைந்தோடினான் (இப்படியும்)
——–
பல்லவி
ஏனிங்கே வந்து வந்திருந்தென்னென்னமோ கண்ணனை
வண்ணனைப் பாடுராய் எல்லமறிந்த விளிவண்டே வண்டே (ஏ)
அனுபல்லவி
வானோடு மண்ணை அளந்தானை என் மனமோடு உறாவாடி களவாடினானை
வானரக் கொடியோன் தோழனானை
மத்யகால ஸாஹித்யம்
மனைவாசல் என்ற எல்லாம் துறந்து
அறியாது நின்ற அடியோங்கள் முந்தி
சரணம்
வடமாமதுரை நகர் வழி இதோபாரு மதுகர வாயிசை நிதமுரவாகிட
வண்டே வண்டே பறந்தோடு அங்கேபாடு மட நல்லார் அங்காயிரம் ஆயிரம்
மாதவன் உறவெனும் காதலியருண்டு வண்டே வண்டே பறந்தோடு அங்கே பாடு
மலரணிந்தேனை வனமளித்தானை மனமறிந்தானை வாயாரப் பாடு – அந்த
மங்கையர் இங்கிதம் அறிந்து உனக்கானது செய்வாரது பாரு (ஏனிங்கே வந்து)
———
பல்லவி
ஒய்யாரமாக ஒய்யாரமாக
ஒய்யாரமாக யமுனை நதி ஓரமாக வெகு
நேரமாக வந்தாரவாரமாக
மெய்யாக குழலொன்று ஊதிடுங் கண்ணா
நீலமேனி வண்ணம் கண்டு மனம் ஆடிடுங் கண்ணா(ஒய்யார)
அனுபல்லவி
கையார மலர் கொண்டு தூவினும் ஆகாதே – இரு
கண்ணார கண்டு கொண்டு நின்றாலும் ஆகாதே
மெய்யான நிலைவந்து மேவினும் ஆகாதே
மென்மேலும் மேலும் பேராசை கொள்வதும் தீராதே
மத்யமகாலம்
என்ன சொல்லியும் சொல்லியும் மனமதில் ஏறாதே
என் இறைவா நீதரும் புன்னகையில் தோயும்
நெஞ்சம் மறுமொழி கூறாதே மாறாதே
மன்னவனே மாதவனே மலர்முக ராதை மகிழ் மணவாளனே
கன்னல் எனஓடி முன்நிலவில் கூடி
நன்னயமொடு ஒரு புன்னை நிழலாடி
சரணம்
முத்தார மணி துள்ளி மொய்யுவன மாலை ஆட
மோன குறும்பு நகை முன்உதடு வந்து கூட
வித்தாரமான பண்ணில் வேணுமென்று இசைபாட
வேதங்கள் எல்லாம் தேட ப்ருந்தாவனம் வந்து கூடகூட
சரணம் (அதிமத்யமம்)
நாநாவிதமான புலந்தரு தொழில்
நான் எங்கென அகல் சரியை கிரியையும்
ஞானங்களொடு பரமும் பரஸுகமும்
நான் இங்கென வரு கருணை முகங்காட்டி
வேறெங்கிலும் இயலாதேன் தொழுதேன்
விழுந்து தஞ்சமென்றடைந்தேன் எனக்
கானந்த நிலை காட்டி அருள்கூட்டி
விண்மதியென ஒளிகாட்டி எனக் கெதிரில் (ஒய்யார)
——
பல்லவி
கண்ணல்லவோ ஸ்வாமீ
கார்மேனி கட்டழகா நீ என் (கண்)
அனுபல்லவி
வண்ண மலர் போலும் சின்னஞ்சிறு பெண்கள்
வந்து வந்து நகைப்பதைப் பாராய்
பண்ணுரு குழல் ஊதிடும் பிள்ளாய்
இங்கிதமோ தகுமோ சொல்லாய்
எண்ணமொடும் சினமானது தள்ளாய்
என்னெதிரில் முத்தம் தர நில்லாய்(கண்)
சரணம்
கொய்யுமலர் நீலக்குவளை விழியாலே வையாது வைகின்ற கண்ணா
சின்னகையளவு வெண்ணை தந்தால் மெய்யவும் போதா தென்று
பையப்பைய வாதாடுகிறாய் அய்யய் யய்யய்ய அய்ய என் (கண்)
ஓச்சலொழி வில்லாது – உன் காவல் செய்தால்
ஊராரென்ன சொல்வாரோ கண்ணா
ஆச்சியர்கள் இங்கே வந்து கூச்சலிட்டுப் போனார்கள்
பேச்சென்ன இனிமேலே – சேச் சேச் சேச்சே (கண்)
2வது சரணம் முதல் சரணம் போல்
——-
பல்லவி
கண்கண்ட தெய்வமே – எங்கள்
கதி நீயே குருநாதா கழலே துணை என்ன
கைமேல் பலன் ஆகுமே இதுவே மெய்மெய் எனலாகுமே (கண்)
அனுபல்லவி
பண்கொண்ட குழலூதும் பரமனடி காட்டி
பக்தியில் முக்தியில் பாட்டினில் ஆசையூட்டி
கண் என்ற குரல் காட்டி காலில் சதங்கை மாட்டி என்
எண்ணமெல்லாம் ப்ருந்தாவனத்திடை யோட்டும் (கண்)
சரணம்
சிந்தை கடலாடி விந்தை மிகவான பேரின்ப முத்து ஒன்று பெற்றேனே உடனே
பாடும் பணி செய்ய கற்றேனே
நந்தகோபன் மனை வந்து பிறந்தவனை நாதா என்று சொல்ல பெற்றேனே உடனே
ஆதியந்தம் எல்லாம் அற்றேனே
மத்யமகால ஸாஹித்யம்
இத்தனைக்கும் யாரென மிகையாகா
எங்கள் குருநாதனருள் அல்லவோஹ இதை
எத்தனையும் சொன்னாலும் அத்தனை அமுதூறும்
ஆனந்த நிலை என்று சொல்லவோ. (கண்)
——–
பல்லவி
காணீரே!……………..கஞ்சமலர்க்
கண்ணன் வந்து நின்றதுவும், கை வெண்ணையைத் தின்றதுவும் (காணீரே!)
அனுபல்லவி
தூணிறுத்ததாண நடு தொங்கும் உறுமேலே
துப்புக் கண்டு கொண்டான்! – யாரோ சொல்லி வைத்தாற் போலே!
நாணிக்கோணி நின்ற ஒரு – நங்கையவள் மேலே
நல்ல மணங்கமழ்ப்பதம் கொண்டேறி மெல்ல உரியாடி விந்தைக்களவாடக் (காணீரே!)
சரணம்
ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் – கண்ணன்
ஆனாலும் வெண்ணை வெண்ணை வெண்ணை என்றான் இவனுக்கு
அப்படித்தான் வெண்ணை என்ன சுவையோஹ
அன்னை இவனைப்பெற என்ன தவம் செய்தாளோ!
ஆனாலும் இனிமேலும் குறையோஹ
போனாலும் வந்தாலும் …. கண்ணன்
– போனாலும் வந்தாலும் – முன்னழகைக் காட்டிப்
– போனாலும் வந்தாலும் – பின்னழகைக் காட்டிப்
– போனாலும் வந்தாலும் – தன்னழகைக் காட்டி என்
– புத்தியை மயக்குறான்! – இதென்னவோஹ
மத்யமகாலம்
புதுமலர் வண்டு-கருவிழியாகப் புன்னகை தண்ணொளி நிலவென்று ஆகக்
“கருகரு” வென்ன குழலலைந்து ஆடி-கார்முகிலோ என- ஒளியதுமாக
குளிர்மதி நீலத் தடநுதல் வந்து – குடிபுகுந்ததெனத் திலகமாக
கொற்றவன் செய்த களவை – “நற்றவம்” எனக் கருதிகூட நீ பாட – கோவிந்தனும் ஆடக் (காணீரே)
———
பல்லவி
தாயே! யசோதே! – உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)
அனுபல்லவி
தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே – இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)
சரணம்
1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க – முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் – கையசைவும் – தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! – அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் – வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் – ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல – நாணமிக வாகுதடீ! (தாயே)
2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே – கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை – அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் – அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி – நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)
3. எங்கள்மனை வாழவந்த – நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே – கண்ணன்
சங்கையுமில்லாதபடி – பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
“உங்கள்மகன் நான் என்றான்! – சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள – நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி – எண்ணித் தவிக்கின்றார்! – நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)
4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து – எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் – மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு – “அம்மே” என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் “அம்மா” என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் “உன் செல்வமகன்!”
பட்டியில் கறவையிடம் – பாலை யூட்டுறானடீ! (தாயே)
5. சுற்றி சுற்றி என்னை வந்து – அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து – மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)
6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி – மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! – கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து – வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த – புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி – கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)
7. முந்தாநாள் – அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை – தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் – அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு – சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு – எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)
———-
பல்லவி
தவமொன்றும் அறியாத பாமரத்தி பதத்
தாமரைக்கே நமஸ்காரம்
(மத்யமகாலம்)
தானாகி தன்னருளொடு தராதல மெங்கும் உள்ளம் புறமொடு துலங்கும்
தருணா மழை போலு வந்த தயாநிதியே உன் சன்னதியே பெரும் (தவ)
அனுபல்லவி
குவளை நீலமலர் கோலக் கண்ணா
கோவிந்த தாமோதரானந்த கண்ணா – எனக்
(மத்யமகாலம்)
கூவி குறை துறந்த அடியவர் தம்மொடு
குணங் கலந்திடு திருவே கண்டு கொள்ளா திருக்க
மாயை எனும் திரை மூடி மறைந்திடும் உருவே என்
ஆவி உடல் பொருள் சுமந்த பரமானந்த கற்பகத் தருவே
ஆதியந்த நடுவிலாது நின்றிடும் ஆனந்த நிறைவே அறவே (தவ)
சரணம்
புனைந்தான் ஒருவனை வேடமை நீங்கி புத்தி அற்றாரங்கு காணார் அது
போலே உன் மாயையை தாண்ட இயலாது புண்ணியத்தாரும் மயங்கி போனார்
முனைந்தார் தவநிலை முனிவரும் யோகியரும் முற்றும் துறந்தவைந்து ஆனார் உன்
மோகன புன்னகைக்கு தாகமும் மேலிட்டு
மோர் கடைந்து விற்கும் நிலை கோபியர்கள் ஆனார்
(மத்யமகாலம்)
புரியாத மாயை யுந்தன் லீலை யல்லவோ
புத்தியற்ற நானுமதை கண்டு கொள்ளவோ
சரியான தத்துவங்கள் உன்னை யல்லவோ
தானாக கொண்ட தென்றால் நானென்ன சொல்லவோ.
———–
பல்லவி
தேடி அருள வந்தான் தேவி திருவேதவல்லி முகங்காண
தேவதேவன் திருவல்லிக்கேணி கரை (தேடி)
அனுபல்லவி
நாடி தவமுறும் பார்க்கவ முனிக்காக நல்ல திருவேதவல்லி தனக்காக
பாடிப்பரவும் தொண்டர் பக்தி தனக்காக பக்தி இல்லாதவரை சுத்தி வளைத்தாக
பக்குவமான மனதறிந்தொரு கணம் பாதமலரினையும் காதலுறவாக
பண்ணார பற்றிய தவநிலையது முனம் ஒண்ணாத நிலைபெறும் புண்ணியந்தனக்காக (தேடி)
சரணம்
கள்ள மறியாத தன்னைக் காட்டிக் கொடுக்க வந்த
கான முனி நாரதரைக் காண வந்தானோ
காதல் வலை விரித்து கத்து மாட்டையும் வைத்து
கட்டிப் பிடித்தானவனை காண வந்தானோ
பிள்ளைக்கறி முகத்தன் பெற்றவன் பித்தானான்
பெண்ணைக் கண்டழைக்கவும் காண வந்தானோ
தேவாதி தேவன் தெள்ளிய சிங்கன் தேடித்தேடி இந்த திருத்தலம் காண
திரைகடவிடைமுனம் அலைந்தது போக சிகரமந்தரந்தனை சுமந்ததுபோக
அரனயன் அமரரும் பணிந்ததுபோக அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக (தேடி)
——
பல்லவி
நல்லதல்ல வென்று சொல்லடி (சென்று) நந்தவனந்தனில் அந்த
நடமிடும் நந்த முகுந்த கோவிந்தனிடம் சென்று (நல்லதல்ல)
அனுபல்லவி
அல்லும் பகலும் நான் அடியிணைக்கே ஏங்க
ஆரவாரம் நிறையும் ராஸ நடனம் ஓங்க
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதோம் கிடதகதோம்
அனந்த வ்ரஜயுவதிகளின் நடமிடும் ஆட்டம் நிறையும் அரவமுடன்
தளாங்கு தகதக திக ததிங்கிணதோம் தித்தாம் கிடதொம் கிடதஹஹஹம்
மலர்ந்த நறுமலருடன் வண்டினமிடும் கூட்டம் இசையும் இசைபலவும்
தளாங்கு தகதக திக ததிங்கிமதோம் தித்தாம் கிடதோம் கிடதகதொம்
கலந்த நறுமண துளபமணியவரும் தோற்றம் முறுவல் தவழ வரும்
முகமும் மகர குண்டலுமும் கனக அம்பரமும் களப சந்தணமும் அணிபணியும்
அகமும் புறமும் தவமிருந்து நான் வர மறந்து ப்ருந்தாவனந்தனில் அலைந்திடவும்
——-
பல்லவி
பார்வை ஒன்று போதுமே! – கள்ளப் –
பார்வை ஒன்று போதுமே! – சங்கப் –
-பதுமநிதி இரண்டும் – வலியத் தந்தாலன்ன கள்ளப் (பார்வை)
அனுபல்லவி
கார்முகில் போல் வண்ணக் கதிரென்ன மதியென்னக் –
கருவிழி கடலிணை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் – கள்ளப் – (பார்வை)
சரணம்
அன்னை யசோதை – அருகினிலே சென்று – இவன்
-வெண்ணை திருடிவந்த விந்தை சொல்லப் போனால்-
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று-
-“சொல்லாதே !” என்று கண்ணால் சொல்லிடும் – கள்ளப் (பார்வை)
——-
பல்லவி
பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்-
பரவச மிக வாகுதே!………………..கண்ணா! – (பால்)
அனுபல்லவி
நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் –
நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் –
எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் – (பால்)
சரணம்
வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்-
-மோனமுகம் வந்து தோணுதே – தெளி-
-வான தெண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்-
சிரித்த முகம் வந்து காணுதே – சற்று-
கானக் குயில் குரலில்- கருத் தமைந்திடினும் – அங்கு -உன்
கானக் குழலோசை மயக்குதே –
மத்தியம காலம்
கறுத்த குழலொடு நிறத்த மயிலிற கிறுக்கி அமைத்த திறத்திலே -,
கான மயிலாடும் – மோனக் குயில் பாடும்- நீல நதியோடும் வனத்திலே-,
குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே-
கதிரும் மதியும் என- நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-,
காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி –
கனவு நனவினொடு- பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்)
——
பல்லவி
முன் செய்த தவப்பயனே! – எங்கள் –
முக்தி தரும் மாதவனைப் – பக்தி செய்யக் கிடைத்தது (முன் செய்த)
அனுபல்லவி
முன்னொரு காலடியில் மூவுல களந்தோன்! – இப்போ
மூவுலகும் வாழக் – கான மழை பொழிந்தோன்!
புன்னகை சிதறாமே – புள்ளின் வாய் பிளந்தோன்! – சின்னப்
-புல்லாங் குழலைக் கொண்டு – எல்லா உலகாள – வல்லானிவனைப் பாட-
வாயாறத் தோனூற (முன் செய்த)
சரணம்
நினைந்தாலும் ஒரு சுகமே! கண்ணணை – நினைந்தாலும் ஒரு சுகமே!
நினைந்து நினைந்து – மனம் கசிந்து கண்ணீருருக நனைந்தாலும் ஒரு சுகமே!!
1. ஞானமெனும் – ஆயர்வாழ் மனையில் வந்து – ,
தானுமுறவாகும் – தன்மையது சொல்லி (நினைந்தாலும்)
2. ஆடுவர் – ஆடாதவர்-புகழ்சொல்லிப் பாடுவர்-பாடாதவர் மறை வழி புகத்-
தேடுவர்-தேடாதவர்-யாவருளமும் அறிந்து அருள் மழை பொழிந்து நின்றதை (நினைந்து)
3. அரைக்கிசைந்த ஞாணொடு-புலிநகம் அசைந்தாட-கிண்கிணி சதங்கை ஒலிக்-
-கறவைகள் அணி-மணி-நாதமொடு காதல் மடவார் தரு-கரவளை யொலிகளும்-,
-கன்று குளம்பொலியும்-, மலரின்மது வண்டு நுகர்ந்திடு வண்டொலியும்- கலம்-
கொண்டிடையும் -சிறுவர்கள் பலருடன்-வனம் நின்று குழலோதும் பண்ணிசையும்-இங்கு (நினைந்து)
4. சங்கொடு, சாரங்கமும், ஆழியும்-குடை கமண்டலமும்-கோடரி கோதண்டமும்-,
இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் – பொன் துகிலும்-மா-மயிலிறகும்-,
தங்கிய மரகத மேனியும்-ஆவரிக் கொம்பொடு-குழலும்-குஞ்சித பதமும் -,
எங்கெங்கு நோக்கினும் – பொங்கு குறு நகையும் – மங்கள முகமொடு மான்மதத் திலகமும் (நினைந்து)
5. மறை முதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு
பரந்த தொரு வெளியும்
அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் தானே என
பிறை மதி வந்தார்க் கொடு சமரிடையினில் பெரும் பவமகனார்க் கொடி நிழலும்
திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என (நினைந்து)
6. எனையாளும் – ஈரெழு உலகாளும் – அடியவர்
மனமாளும் யதுகுலம் தனையாளும் – கண்ணனை
முனைந்தோடும் – யமுனைத்துறைவனை – எவ்வுயிர்க்கும்-
இறைவனே – என் மன நிறைவோனைப் – பாடப் பாட (முன்செய்த தவப் பயனே!)
——-
பல்லவி
வந்தே பிறந்தான்! – கண்ணன் வந்தே பிறந்தான் – மாதவன்
தேவகியோடணைந் தந்தே இருந்தான் (வந்தே)
அனுபல்லவி
மந்தமாருதம் மெல்லெனவீச – வானவர் மெதுவாய் வர்ணனைபேச
நந்தன் மனையெல்லாம் – சகுனங்கள் பேச
நம்முடை வஸுதேவன் கண்களும் கூசக்கூச (வந்தே)
சரணம்
1.
வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க –
மற்றவை சங்க சக்கரம் ஏற்க –
தலையை நீட்டி – வசுதேவனும் பார்க்க – அங்கே
சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க (வந்தே)
2.
தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை –
சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை
கலைசொல்லி – ஜாதகம் கணிப்பாரும் இல்லை – எங்கள்
கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை (வந்தே)
3.
கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க
கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க –
பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப்
பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க (வந்தே பிறந்தான்)
—–
பல்லவி
வையம் அளந்து வானளந்த ஓ மாதவா
வரதா பயகரம் தரு கருமுகில் வர்ண
அனுபல்லவி
செய்யத் தாமரை சீரடி கொண்டு சீரிய காளீயன் மேலாடியது கண்டு
உய்ய தானாசை கொண்டு உள்ளம் கண்டு
உரிமை பெற தானுமாடியது உண்டு
உலகீரேழையும் உண்டு உளமாயையற தரிசனம் அது தரும்
ஜதி
தாம் திஜ்ஜணு திகி தஜ்ஜணு திமிதிமி திர்ரீ தைய
ணந்தம் ணந்தம்பாரி ஜாத கந்தம்
கிடதகதிரி ஜமுணந்தரி குகுகுந்தம் ஜந்தரி திரி திலானா
தித்தளாங்கு தையததையத தித்ஜையத கஜ்ஜையத
திரி சையத்தைய புவனங்களும் உய்ய (வையம்)
——–
பல்லவி
கொஞ்சும் மழலை பேசி குறுநகையை வீசி
குற்றந்தனை மறைக்க பாராதே நான்
கோபங் கொண்டால் கொஞ்சத்தினில் மாறாதே (கொஞ்சும்)
சரணம்
1.
கெஞ்சினால் மிஞ்சும் கண்ணா மிஞ்சினால் கெஞ்சுவாய்
கிட்ட கிட்ட வந்த போது அஞ்சுவாய்
பஞ்சமோ இங்கு என்ன பாலுக்கும் வெண்ணைக்கும்
பாய்ந்தோட பாராதே ஆய்ந் தோய்ந்து பாராய் (கொஞ்சும்)
2.
செய்ததை செய்து விட்டு சிற்றன்னை பின்னாலே
செல்லங் கொண்டு மறைந்தாலே போதுமா
மெய் யெல்லாம் வெண்ணை பூச்சு வெட்ட வெளிச்சமாச்சு
வேணு கானம் ஊதி விட்டால் போதுமா கண்ணா (கொஞ்சும்)
3.
ஒன்றிரண்டு எண்ணுவேன் எட்டினுக்குள்ளே
ஓடோடி வந்தால் உன்னை ஒன்றும் செய்வதில்லை
பன்றி என்றும் ஆமை என்றும் பாதி மிருக மென்றும்
பற்பல வாய் வைய என்றால் பாழும் மனம் வல்லை (கொஞ்சும்)
——
பல்லவி
அகணித மஹிமாத்புத லீல ஸதா
கர்ஷித ரஜஸாதி சத்யாத்மக ப்ரபஞ்ச பரிபால
அனந்த பர்யங்க சயன நமோ நமஸ்தே (அகணித)
அனுபல்லவி
ககதுரங்க கருணால வால மது கைடபாதி ஸூரரிபு குலகால
கமலாமுக கமலசிலீமுக ஸூரகண முனிகண ஸஜ்ஜன நத்*ரங்க்ரியுக (அகணித)
சரணம்
நமோ நமஸ்தே புருஷோத்ம நமோ நமஸ்தே நாராயண புருஷோத்தம
நமோ நமஸ்தே புனரபி புனரபி நாராயணா அனந்த லோகபதே
1.
ஸ்ருத ஜன கலி கல்மஷ ஹரதானவ*ருல பஞ்ஜன ரமா ரமண (நமோ)
2.
மனஸாம்ருக நானாவித முக்தி வி*நாயக சரா சராத்மக ரூப (நமோ)
3.
விதூர குயோகிநாம் பத பங்கஜ வினுத ஜனாவன ரமித பரமீஸ (நமோ)
4.
தான ஸௌ மனதபோயசா*த்ய தந்த்ர மந்த்ர பல தாயக மங்கள
கான ஸம்பத நாரதாதி முனிகீய மானவர கீர்த்தி விதாரண (நமோ)
5.
க்ஷீர பாராவார தரங்க ம்ருதுதரள பங்கஜா பதயே
க்ஷிதி ஜா பதயே க்ஷிதிபதயே தினகர சந்த்ர பதயே பதயே
ஸாது ஜனாம்பதயே வ்ரஜபதயே தான யோக ஜபதப சாதன
சங்கீத பரமோத விதாயக பதயே மதுமுர ஹரயே (நமோ)
சரணம்
6.
திவ்ய மங்கள விக்ரஹ சோபமான ஜலத வர்ண கம்பீர ஸூபாங்க
தீர தரோன்னத விலாஸ பாஸூர தேவ தேவ மஹனீய உத்துங்க
பவ திமிர கோர ஹரமிகிர கோடி விஜித கமலதள கருணா பாங்க
பாவித வீஹித நிமித்த ஸத் ப்ரேம பாகவத ஜன ஹருதாயாந்த ரங்க (நமோ)
7.
சந்த்ர ஜடாதர பகவான்னத தைத்ய வர்ய மனு குடும்ப வேன
ஜனகாங்கத்ருவ மு*ககுந்த விதேஹ காதி ரகு நாருஷா மாந்தா தானு
சந்தனு ப*லி நந்திதேவ பிப்பிலாத பூரிஷேண திலீப
உதங்கதேவல ஸாரஸ்வத சகர பராசர விஜய விதுர அதூர்த்
தரயாம்பரீக்ஷ விபீஷண அதிசய மஹிமோத்தம சித்த பாவ
மாருத தனய ப்ரமுகாதி பாகவத வினுத நிரந்தர மனோ ரமண (நமோ)
***
ஸாமோத கோபீஜன ப்ருந்தாரக ஸரஸாங்க ஸூந்தர ராதாபதே
ஸர்வதாபரித கோகண ** தரண புஜங்க சிரஸீநடன (1)
—-
பல்லவி
வாஸூதேவாய நமோ நமஸ்தே (ஸ்ரீ)
ஸர்வபூதக்ஷயாய
(மத்யமகாலம்)
வனமாலாதர ஸூந்தர கந்தராய மணிகண பூஷண பூஷிதாய
மாதவாய மது ஸூதனாய வர நாரதாதி முனி பூஜிதாய பர (வா)
அனுபல்லவி
ஆஸூர மத ஹரணா க்ருஷ்ணாய
அனந்த சக்த்யாய நமோ நமஸ்தே
பாஸ*த பாஸகாய வ்ரஜேசாய
பவபய ஹரண அருண சரணாய
(மத்யமகாலம்)
வாஸித கனகாம்பராய நிதுவன வரரஸமதுகர ப்ரமுதிதமுகாய
ராஸலோக வ்ரஜயுவதி ஜனமுக நவதள ஸௌரப ஸங்கதுங்காய (வா)
சரணம்
சரதுதஞ்சித பாடலீ-தள-ஸௌரப் பரிவாதிலோசனாய
ஸகலவேத வேதாந்தாடவீ – சரிதாபாவ்ருத பாதாம்புஜாய
பரம கருணாரஸமய விகஸித
பங்கேருஹ ப்ரஸன்ன வதனாய
பாவராக முரளீ-ரவ நிநாத
பக்த மனோஹரணாய க்ருஷ்ணாய
பரிமள உலப லவங்க ஸதனாய பாகதேய ஜன மதனமதனாய
புஜக பணமணி தரள பதாங்குளி பூஷண நடவர வேஷணாய பர (வா)
——-
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ண சரணகதம் க்ருஷ்ணா (மாமவ)
மதுகர ஸதன – ம்ருது வதனா – மது ஸூதன இஹ (ஸ்வாகதம்)
அனுபல்லவி
போக தாப்த ஸூலபா – ஸூபுஷ்பகந்த களபா – கஸ்த்
தூரிதிலக மஹிபா – மமகாந்தநந்த கோபகந்த (ஸ்வா)
சரணம்
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத மதுஸூதனா
முஷ்டிகாசூர சாணூர மல்ல மல்ல விசாரத குவலயாபீட
மர்த்தன – காளிங்கநர்த்தன – கோகு*லாக்ஷண – ஸகலஸூலக்ஷண தேவ
சிஷ்ட ஜனபால ஸங்கல்பகல்ப கல்ப சதகோடி அஸமபராபவ
தீரமுனிஜன விஹார மதனஸூகு – மார தைத்ய ஸம்ஹார – தேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜயுவதீ ஜனமானஸ பூஜித
*ஸா,த – பா, க ரீ , பகரிஸத ஸா ; தத்தித்தகஜணுதாம் திக்தகஜணதாம்
தக்ஜணுதாம்
தகதரி குருதண கிடதகதீம் – தகதரிகுகுதணகிடதகதீம்
தகதரி குகுதண கிடதக (ஸ்வா)
——–
பல்லவி
என்னதான் இன்பம் கண்டாயோ-
இணையில் எழில் காண விழையும் என்னிலும்
மிகவும் அதிகமோ அதிசயமோ – குழலிசையில் (என்)
அனுபல்லவி
புன்னகையாடும் புல்லென்ற குழல் ஊதும்
புனிதனே – எங்கள் – புண்ணியனே –
முன்னழகைக் கண்டால் மோகமிகும் என்று சொல்லி
பின்னழகை அருளும் பெம்மானே –
சரணம்
அலைஅலையாய்ப்பறந்து குழல் ஆடவே – காற்றில்
அணிஅணியாய் சரிந்து இடை மூடவே
தலையணிக் கம்பளம் புயம் கூடவே கண்டு
தரிசித்தபோது நாணம பறந்தோடவே (என்)
———
பல்லவி
எப்படித்தான் என்னுள்ளம் புகுந்து
என்னையடிமை கொண்டீரோ – ஸ்வாமி
இசைதரு குழலொடும் குண்டலம் ஒளிர இவைதரு சுவையினில் வண்டினமுரல (எ)
அனுபல்லவி
ஒப்புயரில்லாத உத்தமனே – ஒரு
உரக நடமாடும் வித்தகனே
உலகிருந்த வாய்திறந்த படியோ – உரலொடு பிணைந்து இருந்தபடியே (எ)
சரணம்
வெளியில் சொல்லமனம் துள்ளுதே – சொல்ல
வேணும் வேணும் என்ற ஆசை கொள்ளுதே – ஆனால்
குளிரொளி முகம் கண்டு நாணி நாணம் உன்
கொய்மலர் பதத்திலென்னைத் தள்ளுதே
இனியொருமுலகம் உனைத்தவிர எனக்கொருசுகம் இலை எனத் தந்தவா
தனியொருமுடிமேல் இளமயிலானது தருதோகையணியத் தந்தவா –
உறியேறி களவாடி தோழருடன் உனக்கு எனக்குஎனத் தின்றவா –
ஊரறி*யயுமுன்பு அன்னையிடம் சென்று ஒன்றுமறியாது நின்றவா – (எப்)
———
பல்லவி
குழலூதி மனமெல்லாம் – கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ – ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ –
அனுபல்லவி
அழகான மயிலாடவும் – (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் –
மத்யம காலம்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே – தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடிமிக – இசைந்தோடிவரும் – நலம்காண ஒரு மனம் நாட
தகுமிது எனஒரு – பதம்பாட – தகிடததிமி என – நடம் ஆட
கன்று பசுவினொடு – நின்றுபுடைசூழ – என்றும் மலருமுக இறைவன் கனிவோடு (குழ)
சரணம்
மகர குண்டலம் ஆடவும் – அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ……..
மிகவும் எழிலாகவும் ……. காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ….
அகமகிழ்ந் …………………………….இறைவன் கனிவோடு (குழ)
———
பல்லவி
மஞ்சனமாடநீ வாராய் – கண்ணா
மஞ்சனமாடநீ வாராய் – எங்கள்
மலர்*மகமது மாதவ யாதவகுல தாமரை நாயக (மஞ்)
அனுபல்லவி
கொஞ்சும் கிளி அன்னமே – எங்கள்
கோகுலம் ஆள – வந்த தெய்வமே – உன்னைக்
கெஞ்ச வேணுமோ – இன்னமே – ஆயர்
குலம் வாழ வந்து நின்ற நலம்தேறும் செல்வமே
மத்யம காலம்
கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும்
வெம்புனலும் வர தண்ணென்றாகுது
பொன்பெறுமாடையளாவி எடுத்தது
போதுமுனக்கொரு புண்ணியமாகுது (மஞ்)
சரணம்
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி – நான்
கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி – எங்கும்
காணாத ராஜ கோபால ஸ்வாமி – கதை
எதையும் சொன்னால் எனக்கு அதுவும் தெரியும் என்றாய்
இனிமேலே என்கதை ஒன்றுதான் ஸ்வாமி.
மத்யம காலம்
இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி
இதுவரையறியாதொரு மாதவ மாமுனிகளும் மா மலரடிபணி மாதவ
நிதியறிந்து நீதியறிந்து நின் இளமுக ஸன்னிதியறிந்தமா
சுந்தரமுகமொடு மந்த நகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு (மஞ்)
———–
பல்லவி
எத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை
ஏனோ – இப்படியாச்சே – – – –
இன்னிசையங்குழலூதி யதுகுலமொடு உறவாடும்
தன்னிகரில்லாத ராஜகோபால – ஸ்வாமி – உன்புகழ் (எத்)
அனுபல்லவி
முத்தாரமணியாடி – மோனஎழிலைக் கொள்ளும்
முன்னோடும் கன்று – கூட தன்னை மறந்து துள்ளும்
அத்தைக் கண்ட மனமோ – ஆனந்தக்கடல் *ள்ளும்
ஆனாலு*முன் கதையால் – ஆகாத தெது சொல்லும்
மத்யம காலம்
அறிவெனும் நந்த வனமலர்ந்த மாமலரே அருளுகந்த
நறுமணமே …….. மணமலைந்து மகரந்தந்தனை
நா-டி வரும் பண்ணுகர்ந்த கரு வண்டெனும் தீங்குழலே – குழ
லிசையே – அரவேறி – நடமாடும் – அரசே – என் உயிரே உன்புகழ் (எத்)
சரணம்
கண்ணைத் திறந்தால் ரூபம் –
காதைத் திறந்தால் – கானம்
காற்றை – யுகந்தால் – துளபகந்தம் – ஆனந்தம்
விண்ணை நோக்கினால் வண்ணம் – விண்
மதியை நோக்கினால் கன்னம்
வேறெங்கும் போகாது என் எண்ணம் – இது திண்ணம்
மண்ணையுகந்து உண்டாய் – பொன்னை அணிந்து கந்தாய்
மாற்றார் மயங்க எழில் கொண்டாய்.
(அறிவெனும் …………….உன் புகழ்) (எத்தனை)
————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply