ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –ஏழாம் பத்து –

ஆண்டாள் ஒருநாள் ஆழ்வானுக்குப் ‘பிள்ளைகள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள்; இவ்விடையாட்டம் ஒன்றும் ஆராயாது இருக்கிறது என்?’ என்ன, ‘பகவத் குடும்பத்துக்கு என்னை இன்று இருந்த கரையச் சொல்லுகிறாயோ? நாளை நான் வாசித்துச் சமையக்கொள்ள அங்கே வரக் காட்டு,’ என்ன, பட்டரையும் சீராமப் பிள்ளையையும் கொடுத்துப் போகவிட, வாசித்துச் சமைந்து பெருமாள் திருவடிகளிலே நிற்க, ‘ஒன்று சொல்லுவாய் போலே இருந்தாயே!’ என்று திருவுள்ளமாக, ‘இவர்கள் விவாகம் செய்வதற்குத் தக்க பருவத்தை அடைந்தார்கள் என்னாநின்றார்கள்,’ என்று விண்ணப்பம் செய்ய, ‘எல்லாம் செய்கிறோம்,’ என்று திருவுள்ளமானர்; பிற்றை நாளே மன்னியைக் கொடு வந்து கொடுத்தார்கள்

அகளங்க பிரஹ்மராயர் அடையவளைந்தான் செய்யாநிற்கச் செய்தே மதிள்போக்குகைக்காக இளையாழ்வான் அகத்தை வாங்கப்புக, பட்டர் அதனைக் கேட்டருளி, ‘வாரீர் பிள்ளாய்! நீர் செய்கிற மதிள் பெருமாளுக்கு இரட்சகம் என்று இராதே கொள்ளீர்; இங்குக் கிடக்கும் நான்கு குடிகளுங்காணும் பெருமாளுக்குக் காவல்; ஆன பின்பு நீர் செய்கிறவை எல்லாம் அழகிது; இவை எல்லாம் நாம் செய்கிறோம் என்றிராதே, பெருமாள்  செய்விக்கிறார் என்று இரீர்; உமக்கு நல்வழி போக உடலாங்காணும்’ என்று அருளிச்செய்தார்.

என் திருமகள் சேர் மார்பனே என்னும் –அனந்தாழ்வான் தான் பெண் பிள்ளையை ‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான். பட்டர் பெருமாளிடத்தில் ‘அடியேனை ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும், நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே ‘அழகிய மணவாளப்பெருமாள்’ என்று நினைத்திருக்கவும் வேணும்,’ என்று வேண்டிக்கொண்டார்

 பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுதுசெய்யாநிற்க, இப்பாட்டளவிலே வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே! என்னும்,’ என்று இயலைச் சேர்த்து அருளிச்செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீ ரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர் என்று அருளிச்செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைகிறது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சி இருந்தேன்’ என்று சீயர் அருளிச்செய்வர்–இவர்க்குப் பிராணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. 1இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?–நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப்பிரான் பிள்ளானைக் கண்டு, ‘ஈஸ்வரனுக்குச் சொரூப வியாப்தியோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, ‘பாஷ்யகாரர் தோற்ற அருளிச்செய்துகொண்டு போந்தது சொரூப வியாப்தியாய் இருக்கும்; ஆகிலும், எம்பார் ஒரு நாள், ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்ததற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோடே வியாபித்திருக்கும்,’ என்று அருளிச்செய்யக் கேட்டேன்,’ என்று பணித்தார்.

ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’-என்பது, ஸ்ரீராமா.-மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும், ‘மனத்தில் இருப்பவரும் புராணபுருஷரும்’ என்றும், ‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து’ என்றும், ‘எவர்களுடைய மனத்தில் கருநெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும், ‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

ஸ்ரீவிதுராழ்வான்? ‘மஹாபுத்திமானான அந்த விதுரர் கண்ணனுடைய படுக்கையைத் தடவிப் பார்த்தார்,’ என்கிறபடியே, கடல் கலங்குவது தன்னளவிலே அன்றோ? 3பிள்ளையுறங்காவில்லிதாசர் ‘மஹாமதி என்றது, மதிகேடர் என்றபடியோ?’ என்றார், 4பிள்ளைதாம், ‘பெருமாள் எழுந்தருளும் போது எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் நம் பிராணனை விடுமத்தனை’ என்று சொட்டையை உருவிப் பிடித்துக்கொண்டு சேவிப்பாராம். நம்முதலிகள் அதனைக் கண்டு, இவரை ‘மஹாமதிகள்’ என்று அழைப்பார்கள். 5அறிவு உண்டாகையாவது, பகவத் விஷயத்தில் அறிவு கெடுகை அன்றோ?

ஆழ்வான் ஒருகால், இத்திருவாய்மொழி பத்துப் பாசுரங்களையும் இராமாவதார விஷயமாக்கி நிர்வஹித்தாராம். 2அதற்குக் காரணம்: ஆயிரத்தில் ஒன்றும் கடலில் குளப்படியும் போலே, பெருமாளுடைய குணத்தில் ஒரு பகுதியே அன்றோ? அல்லாத அவதாரங்கள் எல்லாவற்றிலும் உள்ளது ஆதலின். 3‘பேரெயில் சூழ்கடல் தென்னலங்கை செற்ற பிரான்’ என்றும், ‘மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள்’ என்றும், மேலே சொல்லிப் போந்த இராமாவதாரத்தினுடைய செயலை அநுசந்தித்து, அவ்வழியாலே அன்றோ அவதாரங்களை அநுசந்திக்கிறது? மற்றைய அவதாரங்களிலே ஈடுபட்டவர்களும் இராமாவதாரம் பிராசங்கிகமாகச் சொல்ல வேண்டி வந்தால், 4‘மனத்துக்கு இனியானை’ என்றே அன்றோ சொல்லுவது?-பட்டர் இராமாவதாரத்தில் போர பக்ஷபதித்திருபர்,’ என்று அவர் அருளிச்செய்யுமது கேட்கைக்காகச் சிறியாத்தான் ஒருநாள், ‘பெருமாளுக்கு எல்லா நன்மைகளும் உளவாகிலும், கழுத்திலே ஓலைக் கட்டித் ‘தூது போ’ என்ன, தூது சென்ற கிருஷ்ணன் நீர்மை இல்லையே!’ என்ன, ‘அது அங்ஙன் அன்றுகாண்; கழுத்திலே ஓலை கட்டித் ‘தூது போ’ என்பார் இல்லாமையாலே தவிர்ந்தாரத்தனை காண்,’ என்று அருளிச்செய்தார்.

ஆளவந்தார் ‘சிசுபாலன் பெற்றிலன்காண்’ என்று அருளிச்செய்வர்; ‘அது என்?’ என்னில், ‘இதற்கு அடியாகச் சொல்லலாவது ஒரு சாதனம் இவன் கையில் இல்லாமையாலே, நாட்டை நலியாமைக்குக் கொற்றவன் வாசலுக்குள்ளே சுழற்றி எறிந்தானத்தனைகாண்,’ என்று அருளிச்செய்வர்-‘காகம, திருமுன்பே எய்த்து விழுகையாலும், இவன் திருநாமத்தைச் சொல்லித் துவங்கரிக்கையாலும், அவன் குணங்கள் நினைத்தபடி விரிவாகப் பெறாதே குறைந்தவகள் ஆயிற்றன’ என்றே அன்றோ சொல்லுகிறது?–பலிபுஜி சிசுபாலே தாத்ருக் ஆகஸ்கரே வா    குணலவ ஸஹவாஸாத் த்வத்க்ஷமோ ஸங்குசந்தீ’-என்பது, ஸ்ரீரங்கராஜஸ்தவம், 3:97. 5‘காகாசுரனிடத்திலும் சிசுபாலனிடத்திலும் சிறிது குணமாயினும் இருந்ததனால் குறைவுபட்டதான் தேவரீருடைய பொறுமை’ என்கையாலே. 6பலபல நாழம் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை, அலைவலைமை தவிர்த்த அழகன்’ என்றார் அன்றோ பெரியாழ்வாரும்? ‘வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும்’ என்றார் திருமழிசையாழ்வார்.

அருச்சுனன் தான் எம்பெருமானைப் பெற்றானோ, இல்லையோ?’ என்று நம்பிள்ளை சீயரைக் கேட்க, ‘உமக்கு அதுகொண்டு காரியம் என்? இது சொன்னவன் எல்லார்க்கும் பொதுவானவனாகில், பகவானுடைய வார்த்தை என்னுமிடம் நிச்சயமாகில், தங்கள் தங்களுடைய கர்மங்கட்குத் தகுதியாகவும் ருசிக்குத் தகுதியாகவும் பெறுகிறார்கள்; பெற்றவர்களை ஆராய்ந்து பார்த்து அதனாலே அன்றே நாம் பற்றப் பார்க்கிறது?’ என்று அருளிச்செய்தார்–சேர்ந்து குளிர்ந்த தண்ணீர் இருந்தால், அது குடித்துத்தாகம் கெட்டவனைக் கண்டு அன்றே தாகம் கொண்டவன் தண்ணீர் குடிப்பது?

அம்மங்கி அம்மாள், ‘இத்திருவாய்மொழி (ஆறாந்திருவாய்மொழி-‘பாமரு’)பாடக் கேட்டு அனுபவித்துப் போருமிதற்கு மேற்பட, இதில் ஓடுகிற ஆர்த்திக்கு நம்மாற்பாசுரம் இட்டுச் சொல்லப் போகாது என்று பணிக்கும்,’ என்று அருளிச்செய்வர்-ஆர்த்தியாலே இத்திருவாய்மொழியில் கூப்பிடுகிறார் என்பதற்கு ஆப்த வசனம்  காட்டுகிறார்

என் முன் சொல்லும் – அவன் முன்னே சந்தையிடப் பின்னே நான் சொன்னேன். 2தான் சொன்னான் ஆகில் ஸ்ரீகீதையைப் போன்று வறுமுறுகலாய்ப் போம் அன்றோ-நம்பி திருவழுதிநாடு தாசர், ஸ்ரீ கீதை போவான் ஒருவன் சந்நியா சதஸ்ஸிலே வந்து கண்டால், பின்னை இவனுக்கு உழக்கு அரிசியைக் கொடுப்பித்து விடுமத்தனை போக்கி அங்கு அவர்கள் உள்ளிடம் கொடார்கள்; திருவாய்மொழி கற்றவன் ஒரு விண்ணப்பம் செய்வான் சென்றால், சர்வேஸ்வரன் கிராமத்தில் உள்ளாரும் புறப்பட்டு எதிர்கொண்டு தங்கள் இருப்பிடத்தை ஒழித்து அவனுக்குக் கொடுத்து ஆதரியாநிற்பார்கள்,’ என்று அருளிச்செய்வர்.

ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி-‘முதல்வன் ஆம் இவன்,’ என்று தன் பக்கலிலே எனக்குத் தெளிவு உண்டாம் படியாகச் செய்து-திருப்புற்றுக்குக் கிழக்கே கரியமாணிக்காழ்வார் திருமுன்பின் படிக்கட்டிலிலே ஆளவந்தார் எழுந்தருளியிருக்க, உடையவர் திருப்புற்றுக்குக் கிழக்காக எழுந்தருளி நிற்கிறவரைக் கண்டு ‘ஆம் முதல்வன் இவன்’ என்று அருளிச்செய்தாராம்

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading