ஸ்ரீ ஆளவந்தார் :
‘கடன்கள் வேம்’
சரீர சம்பந்தங்காரணமாகத் தொன்றுதொட்டு நாம் செய்து வைத்த, பகவானையடைவதற்குத் தடையாகவுள்ள கர்மங்கள் செய்வன என்?’ என்ன, ‘நாம் இதிலே துணியவே அவையெல்லாம் தாமாகவே நசிக்கும்,’ என்கிறார்.-கடங்கள் வேம் – 2‘ஒருவன் மூன்று கடனுள்ளவனாக வந்து பிறக்கிறான்; பிரஹ்மசர்யத்தாலே முனிவர் கடனையும், யாகத்தாலே தேவர் கடனையும், பெறுகின்ற புத்திரனாலே பிதிரர் கடனையும் தீர்க்கக் கடவன்,’ என்றும், 3‘மூன்று கடன்களையும் தீர்த்து மனத்தை மோட்சத்திலே வைத்தல் வேண்டும்; இக்கடன்களைத் தீர்க்காமல் மோட்சத்தையடைய விரும்புகிறவன் கீழே விழுகிறான்,’ என்றும் சாஸ்திரங்களாலே விதிக்கப்படுகின்ற கடன்கள்வேம். ‘கடங்கள்’ என்றது, ‘கடன்கள்’ என்றபடி. மெய்ம்மேல் வினை முற்றவும் – சரீரத்தின் சம்பந்தங்காரணமாக வருகின்ற பாவங்களைச் சொல்லுகிறது. ஆக, கடன்கள், மெய் மேல் வினைமுற்றவும் வேம் – நசிக்கும் என்றபடி. 1இங்ஙனம் ஆளவந்தார் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார் கேட்டருளி, ‘இதற்கு, வேதாந்தத்திற்சொல்லுகிற கட்டளையிலே பொருள் சொல்ல அமையாதோ?’ என்று இங்ஙனம் அருளிச்செய்வர். அதாவது, 2‘ஞானத்தையடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும் உண்டாகும்’ (பிரஹ்ம சூத்திரம், 4. 4 : 13.)என்றும், 3‘இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப் பாவங்களும் நெருப்பிற்போடப்பட்ட துய் போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ (சாந்தோக்கிய உபநிட. 5 : 25.)என்றும் சொல்லுகிறபடியே ‘வேம்’ என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற்போய்விடுகையும் சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற்போதலைச் சொல்லிற்றாகவுமாம்.
ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடனைக் குறித்தது; ‘மெய் மேல் வினை முற்றவும்’ என்றது, பூர்வோத்தராகங்களைக் குறித்தது;
மெய் – சரீரம்.
எம்பெருமானார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடன் போலே அவசியம் அனுபவிக்கத் தக்கவைகளைச் சொல்லி, ‘மேல் வினை முற்றவும்’ என்றது, உத்தராகத்தைச் சொல்லுகிறது. மெய் – சத்தியம் என்பது பொருளாம். எம்பெருமானாருடைய நிர்வாகம் இரண்டு வகை: ‘அதாவது,
ஞானத்தையடைந்தவுடன்’ என்றது முதல் ‘சம்பந்தியாமற் போய்விடுகையும் சொல்லுதல’ என்றது முடிய ஒரு வகை. ‘பூர்வாகத்துக்குச் சொன் அழிவுதானே’ என்றது முதல் ‘சம்பந்தியாமல் போதலைச் சொல்லிற்றாகவுமாம்’ என்றது முடிய இரண்டாவது வகை.
எம்பெருமானார் :
‘இனி வந்து கூடுவனே’
இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். யான் – நீ தந்த கரணங்களை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினைச் சூழ்த்துக் கொண்ட யான். உன்னை – ‘நான் விளைத்துக்கொண்ட கேட்டிற்குப் போக்கடி சொல்லாய்’ என்று வளைக்கலாம்படியாயிருக்கிற உன்னை. இனி – நீ தந்த கைம்முதலை அழித்துக்கொண்ட பின்பு. இனி வந்து கூடுவனே – ‘இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.
எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்; ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் செய்தானாக அமையும்’ என்று அருளிச்செய்வர். 1ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம் என்பது.
இப்பாசுரத்தின் நான்காமடிக்கு எம்பெருமானார் நிர்வாஹமும், முன்புள்ள முதலிகள் நிர்வாஹமும் என இரண்டு நிர்வாஹங்கள் அருளிச்செய்கிறார்.
‘அவற்றுள் எம்பெருமானார் நிர்வாஹம், ‘என் கணவன்’ என்றது முதல் ‘ஒருநாளிட்டுத்தர அமையும்’ என்றது முடியவுள்ள பகுதி. வியாக்கியானத்தின்
ஈற்றிலுள்ள ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்’ என்ற பகுதியும் இதன் விவரணமேயாகும். ‘இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருளுண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார் என்றது, முன்புள்ள முதலிகள் நிர்வாஹம். ‘உன் திருவடிகளை நான் என்று
கிட்டுவன்? அந்த நாளைச் சொல்ல வேண்டும்,’ என்பது எம்பெருமானார் நிர்வாகத்தின் கருத்து. இனி, கிட்டுவதற்கு வழியில்லை என்பது முன்புள்ள
முதலிகள் நிர்வாகத்திற்குக் கருத்து.
கடன்கள் வேம்’
ஆவிசேர் உயிரி னுள்ளால் ஆதுமோர் பற்றி லாத
பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே’
வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்’ என்றும், ‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றும் வேறு வேறு வகையாகவும் பொருள் அருளிச்செய்வர். இவ்வுரை விகற்பங்களை எம்பெருமானார் கேட்டருளி, ‘முன்னிரண்டு அடிகளில் எங்கும் பரந்து நிறைந்திருத்தலை அருளிச்செய்தாராதலின், இனி வியாபிக்கப்படுகின்ற பொருள்களினுடைய தோஷங்கள் எங்கும் பரந்து நிறைந்திருக்கிற இறைவனுக்குத் தட்டமாட்டா என்னுமிடம் அவசியம் சொல்ல வேண்டும்; ஆன பின்னர், 1இத்தையே சொல்லிற்றாக அமையும்,’ என்று அருளிச்செய்வர்.
இங்கு, ஆவி – உயிர்; உயிர் – பரமாத்துமா. பாவனை – பத்தி. ‘புறம்பேயுள்ள வேறு உபாயங்களில் உண்டான பற்று முழுதையும் விட்டு, அவனையே பற்றில் அவனைக் கூடலாம்,’ என்றது, இரண்டாவது யோஜனை; இது, பிரபத்தி பரமாக அருளிச்செய்தது; இங்கு யாதுமோர்பற்றிலாத பாவனையாவது, வேறு உபாயங்கள் ஒன்றிலும் ஒரு சிறிதும் பற்று இன்றி இருக்கும் பாவனையாம்; ‘களைவாய் துன்பம் களையா தொழிவாய் களைகண் மற்றிலேன்’ என்றிருப்பது. ‘மரண காலத்தில் நம்பிக்கை உண்டாகில் அவனைக் கூடலாம்’ என்றது, மூன்றாவது யோஜனை; இது, அந்திம ஸ்மிருதி பரமாக அருளிச்செய்தது; இங்கு, யாதுமோர் பற்றிலாத பாவனையாவது, வேறுபட்ட பொருள்கள் ஒன்றிலும் ஒரு சங்கமில்லாத அந்திம ஸ்மிருதியாகும்; ‘உயிர் உடம்பின் நீங்கும் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது? அஃது அதுவாய்த் தோன்றும்,’ என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின், வீடெய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டும்: அதனான், அதனை முன்னே பயிறலாய இதனின் மிக்க உபாயமில்லை என்பது அறிக,’ என்று பரிமேலழகருரை இங்கு ஒப்பு நோக்கலாகும்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
இத்தையே சொல்லிற்றாக அமையும்’ என்றது, ‘சரீரத்துக்கு உண்டாகும் பால்யம், யௌவனம் முதலானவைகள் ஆத்துமாவைச் சாரமாட்டாத தன்மையைப் போன்று, உடல் உயிர் என்னும் இவ்விரண்டின் தோஷங்களும் இறைவனைச் சாரமாட்டா என்னும் இதனையே சொல்லிற்றாக அமையும்,’ என்றபடி. ஆக, ‘ஆதுமோர் பற்றிலாத’ என்பதற்கு, ‘அநுசந்தான பரமான போது சரீரத்திற்குண்டாகின்ற பால்யம் முதலிய தோஷங்கள் ஒன்றிலும் ஒரு சம்பந்தமில்லாத’ என்றும், பத்தி பரமான போது ‘பிரயோஜநாந்தரங்களில் பற்றில்லாத’ என்றும், பிரபத்தி பரமானபோது ‘உபாயாந்தரங்களில் பற்றில்லாத’ என்றும், அந்திம ஸ்மிருதி பரமான போது ‘வேறுபட்ட விஷயங்களில் சங்கமில்லாத’ என்றும் நான்கு வகையாகப் பொருள் அருளிச்செய்யப்பட்டமை காணலாம்.
பயிலும் சுடரொளி’ முன்னுரை :
சமுசாரமாகிற விஷமரத்துக்கு அமிருதத்திற்குச் சமானமான இரண்டு பழங்கள் உண்டு; அவை ஒரே காலத்தில் கிருஷ்ணனிடத்தில் பத்தியும் அவன் அடியார்களிடத்திலேயே எப்பொழுதும் கூடியிருத்தலுமாம்,’ என்னும் பொருளையுடைய சுலோகத்தில் ‘தத்பக்தைர்வா ஸமாகம: பத்தர்களிடத்திலேயே கூடியிருத்தல் ‘என்கிற இடத்தில் ‘வா’ என்றதனை தேற்றேகாரத்திலே ஆக்கி, ‘உத்தேஸ்யந்தானே இங்கே சித்திக்குங்காண்’ என்று எம்பெருமானார் அருளிச்செய்வர். பெறத்தக்க பேற்றிக்கு முதல் எல்லை பகவானுக்கு அடிமை என்ற அளவிலே நிற்றல்; முடிவின் எல்லை, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமை அளவும் வருகை.
கச்சதா – போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும் ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்’ என்று அருளிச்செய்வர். 4இவ்வர்த்தத்துக்கு அடி திருமந்திரம் ஆயிற்றே; அது மூலமாக அநுஷ்டிக்கவே, இத் திருவாய்மொழியிற் சொன்னதைச் செய்தது ஆம். 1ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட அவதாரமாய், அதில் பெருமாள் ‘பிதா சொல்லிற்றுப் புத்திரன் செய்யக்கடவன்,’ என்கிற மரியாதை குலையாதே அதனை நிலைநிறுத்துகைக்காகப் பித்ருவசன பரிபாலனம் முதலான சாமாந்ய தருமத்தை அநுஷ்டித்தார்; 2’இதுதான் செய்யத்தக்க விஷயத்தில் செய்யக்கடவது’ என்னுமிடத்தை அநுஷ்டித்துக் காட்டினார் இளையபெருமாள்; ‘அது செய்யுமிடத்தில் அவன் உகந்த அடிமை செய்யக்கடவது,’ என்னுமிடத்தை ஸ்ரீ பரதாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்; ‘அதுதான் பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமையை முடிவாகக் கொண்டு இருக்கும்,’ என்னுமிடத்தை ஸ்ரீ சத்ருக் நாழ்வான் அநுஷ்டித்துக் காட்டினான்.
ஸ்ரீ சத்ருக்நாழ்வான் அநுஷ்டிக்கைக்கு அடி திருமந்திரமாகையாலேயும், ஆழ்வார் அருளிச்செய்ததும் திருமந்திரார்த்தமாகையாலேயும், இவர் அருளிச்செய்த அர்த்தத்தை அநுஷ்டித்தான் என்னக் குறையில்லை என்றபடி.
ஆண்டான் :
‘அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல’
‘பகவான் கைவிட்ட பின்னர் யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ? அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.
முதலியாண்டான் நிர்வாஹத்துக் கருத்து, ‘ஸ்வதந்திரனான சர்வேஸ்வரன் உபேக்ஷித்தால் யமபாதை உண்டாம்,’ என்பது. இதனை, நித்திய சூரிகளைப் போன்ற நித்தியானுபவ யோக்கியதை இவருக்கு உண்டாயிருக்கவும், பிரிவு இடையிடையே வருதலைப் போன்று கொள்க. இதனை ஸ்ரீ பரதாழ்வான்
பக்கலிலே கண்டோம்.
கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி
நடுங்கிநான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமிசா ரணியத்துள் எந்தாய்!’– என்பது, திருமங்கைமன்னன் திருவாக்கு.
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும் நீள்கடல் வண்ணன்’
இனி, 3‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி, ‘அங்குத்தைக்கு உகந்தருளின இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்குஅவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான். 1‘அருச்சுனா! எவர்கள் எவ்விதமாய் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே இருந்து நான் அருள் புரிகிறேன்,’ (ஸ்ரீ கீதை, 4 : 11.)என்றும், 2‘சலனம் அற்ற மனத்தினால் செய்யத்தக்கவன்’ ( தைத்திரீய நாராயண உபநிடதம்)என்றும், 3‘சங்கற்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ (ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.)என்றும், 4‘பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படுகின்ற திருமேனி’ (ஸ்ரீ விஷ்ணு தர்மம்)என்றும், பிரமாணங்கள் கூறாநிற்கும். ‘ஆயின், இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின், அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே? அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே? ‘ஆயின், அசாதாரண விக்கிரஹத்தைப் போன்று அர்ச்சாவதாரத்தில் அவன் விரும்பி எழுந்தருளியிருப்பானோ?’ எனில், முதல்தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும் 5‘பக்தாநாம் – பத்தர்களுக்காகவே’ (ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.)என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ? அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது? ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.
ஆண்டான் நிர்வாகத்தில் அர்ச்சாவதாரத்துக்குப் பிராதாந்யம். முன்னே கூறிய யோஜனையில் பரமபதநாதனுக்குப் பிராதாந்யம். அங்குத்தை – பரமபத நாதன். உகந்தருளின இடம் – அர்ச்சாவதாரம். விபூதியாக – ஸேஷமாக. இங்குத்தைக்கு – அர்ச்சாவதாரத்துக்கு. குணாதிக்யத்தாலே வஸ்துவுக்குப் பிராதாந்யமாகையாலே குணாதிக்யமுள்ள அர்ச்சாவதாரத்திற்கே பிரதாநம் என்பது ஆண்டான் நிர்வாஹத்துக்குக் கருத்து.
எம்பார் :
ஆக்கையின் வழி உழல்வேன் – 1நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் சரீரத்தின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வழியே சென்று கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினை விளைத்துக்கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார். வெந்நாள் – சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தாற்போன்று தோற்றாநின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார்.
‘ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’
ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார். ‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவசரம் இல்லை,’ என்னுமாறு போன்று, 5‘இந்திரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் நன்மை பார்த்திலேன்,’ என்கிறார்
‘அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல’
நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ’
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ – உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப் பாருங்கோள். இதற்கு, 2‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’ என்று எம்பார் அருளிச்செய்வர். ‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக் கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன, அது ஆகுமே அன்றோ, பெற்றால்?– இம் மன் உலகில் செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும் ஸ்ரீமான்கள் இல்லை
வீடும் தரும் நின்று நின்றே’
நின்று நின்றே – 2‘இப்படி முழுக்கக் கொடுத்தாலும் ‘இவனுக்கு நாம் ஒன்றும் செய்யப் பெற்றிலோம்’ என்று 3திரௌபதியானவள் நீண்ட தூரத்தில் வசிக்கின்ற என்னை நினைத்துக் ‘கோவிந்தா!’ என்று அழுதாள் என்பது யாது ஒன்று உண்டோ, அது வட்டியின்மேல் வட்டி ஏறின கடன் போலே என்னுடைய மனத்தினின்றும் நீங்கவில்லை,’ என்கிறபடியே, திருவுள்ளத்திலே மிறுக்குப்பட்டிருக்கும்,’ என்று நம் ஆசாரியர்கள் நிர்வஹிப்பார்கள். அன்றியே, ‘சொன்னவற்றை அடைவு அடைவே தரும்’ என்று கூறுவாறும் உளர். என்றது, ‘முதலில், இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பித்துப் பின்பு ஒரு தேச விசேஷத்தைக் காட்டிக் கொடுத்துப் பின்பு கைங்கரிய சுகத்தைக் கொடுக்கும்,’ என்றபடியாம். அன்றியே, ‘இவ்வுலகத்தில் தன் அனுபவத்தின் நிறைவையும், பேறாகிய பரமபதத்தையும், அங்கே கைங்கரிய சுகத்தையும் தருமிடத்தில், பொறுக்கப் பொறுக்கத் தரும்’ என்னலுமாம்.
அனந்தாழ்வான் :
‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிற 1அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி வைலக்ஷண்யமும் செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி ‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான். ‘நன்று; ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்கிறது, இவர்களை 2எங்ஙனேயாக நினைத்து?’ எனின், வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கே – ‘வேங்கடத்துறைவார்க்கு’ இதனால், நான்காம் வேற்றுமையின் அர்த்தம் சொல்லப்படுகிறது; ‘நம:’ – எனக்கு அன்று, அவனுக்கு என்றபடி. என்னல் – இது தான் நெஞ்சில் உண்டாக வேண்டா; சொல்லளவே அமையும்; ‘இதுதான் சிறியதாய் இருப்பினும் இவன்தனக்குச் செய்தற்கு அருமையாக இருக்குமோ?’ எனின், ஆம் – மிக எளிதான காரியம். ‘எளிது எனின் சொரூபத்தோடு சேராததாயிருக்குமோ?’ என்னில், கடமை – செய்யத்தக்கது. அது சுமந்தார்கட்கு – பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப்போன்று ‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார். இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும் அறிந்திருக்கிற இவர்தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்; இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும் இறைவன் கருத்தாலே சொல்லுகிறாராதல். ‘ஆயின், அவன் நினைவு அப்படியிருக்குமோ?’ எனின், 1‘நம:’ என்ற சொல்லைக் கனக்க நினைத்திருக்கும் பகவானுடைய கருத்தாலே சொல்லுகிறோம் என்னும்படியன்றோ அவன் இருப்பது?
வேங்கடத்துறைவார்க்கு நம என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கு, கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் வேம்; ஆகையால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ எனக் கூட்டுக.
பட்டர் :
தந்த; அதாவது, ‘இவை விரும்பாமலிருக்கவும் தனது அருளாலே தந்த இத்தனை,’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ படைத்தல் இருப்பது?’ என்னில், 1படைப்பது கர்மங்களை நோக்கியேயாயினும், யௌகபத்யம் அருளின் காரியம்; 2ஒவ்வொரு கால விசேடங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை. 3‘வரதனே! பிரளய காலத்தில் அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்துமாக்களை இந்திரியங்களோடும் சரீரங்களோடும் சேர்ப்பதற்கு விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கற்பத்தின் வசப்பட்டு மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன, ‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளை யுடையதாம்படி செய்தாய்,’ என்றார் பட்டர்.-ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், 2 : 41. இது, ‘நிர்ஹேதுக கிருபையாலே படைத்தான்’
என்பதற்கும், ‘யௌகபத்யம் அருளின் காரியம்’ என்பதற்கும் மேற்கோள்.
‘வாழ்த்துவார் பலராக’
வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே? அவர்கள் நம்மை ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு,’ என்கிறார்.-வாழ்த்துவார் பலராக – வாழ்த்துவார் பலர் ஆயிடுக; ‘ஆனால் தான் வந்தது என்? வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்று 2பட்டர் அருளிச் செய்வர்.
நின்னுள்ளே நான்முகனை மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்; அதனால், வாழ்த்துவார் பலரும் உண்டாயிடுக; ஆனால் தான்
வந்தது என்? அவர்களாலே தாம் ஏத்தப் போமோ? வேதங்களைக் காட்டில் இவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்பது பட்டருடைய திருவுள்ளம். ‘வைதிக புருஷர்கள்’ என்றது, வியாசர் முதலியோரை.
மாசூணாச் சுடருடம்பாய்’
மேற்பாசுரத்தில், சிவன் தொடக்கமானார் ஏத்தமாட்டார்கள் என்றார்; இப்பாசுரத்தில், ‘சிவன் தனக்குங்கூடத் தந்தையான பிரமன் துதித்தாலும் அதுவும் உனக்குத் தாழ்வாம்,’ என்கிறார் என்பாருமுளர். ‘அவனையும் மேற் பாசுரத்திலே அருளிச்செய்தாராய், இப்பாசுரத்தில் 2உபய பாவனையுமுடைய அப்பிரமனைப் போலன்றிக் கேவலம் பிரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு பிரஹ்மாவைக் கற்பித்து,(மாசூணா வான் கோலத்து அமரர்கோன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிப் ‘பிரஹ்மாவைக் கற்பித்து’ என்கிறார்.)அத்தகைய பிரமன் ஏத்தினாலும் தேவர்க்குத் தாழ்வாமித்தனை யன்றோ?’ என்கிறார் என்று பட்டர் அருளிச்செய்வர்.
இரண்டாந்திருவாய்மொழி முன்னுரை
பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த காலத்தில் 1சீராமப்பிள்ளை, (பட்டருடைய திருத் தம்பியார்.)‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேசவிசேடத்திலே சென்றால் அனுபவிக்கக் கூடியதாகையாலே அதனைப் பெறாமல் நோவுபடுகிறாரல்லர்; அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்; உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்; அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க ஆசைப்பட்டார்; பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் 2காரணம் என்?’ என்று கேட்க,(மேல் திருவாய்மொழியில் அழகருடைய அழகினை அனுபவித்தவர் மேலும் மேலும் அனுபவியாமல் இத்திருவாய்மொழியில் வருந்துவது என்?’ என்பது அப்பெரியாருடைய ஐயம்–அர்ச்சாவதாரத்தில் போக்யதை முதலான குணபூர்த்தி போராமையாலேயோ? காரணம் என்?’ என்று கேட்க’ என்று பொருளை விரித்துக்கொள்க. .) ‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே விஷயம் எங்கும் ஒரே தன்மையவாக நிறைந்திருக்கும். குறைந்து தோன்றுகிற இடம் நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலேயாயிருக்கும். கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவே காணுதல் கூடும்; அப்படியே, அழகருடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கக் கூடியனவாக அவையில்லை; பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது துடிக்குமாறு போன்று, விஷயமும் அண்மையிலிருந்து விடாயும் மிக்கிருக்கச்செய்தே, அளவிற்கு உட்படாத விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்க வொண்ணாதொழிய நோவுபடுகிறார்
அவ்வினாவிற்கு நேர் விடை, ‘பரத்துவம்’ என்றது முதல் ‘நிறைந்திருக்கும்’ என்றது முடிய. ‘ஆயின், சமுசாரிகளுக்கு அங்ஙனம் தோன்றவில்லையே?’ என்ன, அதற்கு விடை, ‘குறைந்து தோன்றுகிற’ என்றது முதல் ‘தோஷத்தாலேயாயிருக்கும்’ என்றது முடிய. ‘ஆனால், நோவுபடுகைக்குக்காரணம் என்?’ என்ன, என்றதற்கு விடை, ‘கடலருகே’ என்றது முதல் ‘அனுபவிக்கக் கூடியனவாக அவை இல்லை’ என்றது முடிய. ‘ஆயின், அனுபவிக்க முடியாவிட்டால் விட்டுப்பிடிக்க ஒண்ணாதோ?’ என்ன, என்றதற்கு விடை, ‘அவனை அனுபவிக்க வேணும் என்னும் ஆசையாலே விடமாட்டுகின்றிலர்,’ என்னுமதனை உவமை முகத்தால் அருளிச்செய்கிறார், ‘பெருவிடாய்ப்பட்டவன்’ என்றது முதல் ‘நோவுபடுகிறார்’ என்றது முடிய.-
வைதிகன் பிள்ளைகளை உடலொடும் கொண்டு கொடுத்தவனை’
வைதிகன் பிள்ளைகளை – பிரமாணனுடைய புத்திரர்களை. 1உடலொடும் கொண்டு கொடுத்தவனை – காலத்தால் உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன். அன்றிக்கே, ‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’ என்னுதல். ‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’ என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள் ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே பிறப்பர் காணும்’ என்று அருளிச்செய்தார்.
உடலொடும்’ என்பதற்கு இரண்டு வகையில் பொருள் அருளிச் செய்கிறார்: ‘இங்கு இருந்த இளமைப் பருவத்தோடே’ என்பது, முதல் வகை. இரண்டாவது, ‘இட்ட ஆபரணங்களோடே’ என்பது. உடல் – சரீரமாதல்; ஆபரணமாதல். சவடிப் பூணுநூல் – ‘பொன்னாற்செய்த பூணுநூல்’ என்னுதல்; ‘சவடியும் பூணுநூலும்’ என்னுதல்
பிள்ளை திருநறையூர் அரையர் :
‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’
‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார். 3‘பிரஹ்மம் அறியத் தக்கது,’ என்று கூறி, ‘அறியத் தக்கதானபிறஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன, 1எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது. ‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, 2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும், 3‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.
ஆதிமூர்த்தியாகையாலே – காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும் தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே உபாஸ்யம்
என்கைக்குச் சூத்திரத்தையும், சுருதியையும் அருளிச்செய்கிறார், ‘பிரஹ்மம் அறியத் தக்கது’ என்று தொடங்கி. நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர்
மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை அநுசந்திக்கையாவது, ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’ என்றருளிச்செய்தாராம், ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’ என்று கேட்டருள, ‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply