ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –மூன்றாம் பத்து –

உன் சுடர் சோதி மறையாதே – இருந்தவிடத்தேயிருந்து சங்கற்ப ரூப ஞானத்தாலே பாதுகாத்தாயாகில், ‘யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய உணர்த்தி அற்று வந்து விழுந்தான்,’ என்கிற நிரவதிக தேஜஸ்ஸானது இழந்ததேயன்றோ!  சிற்றாட்கொண்டான் என்பார் ‘மறையாதே’ என்பதற்கு ‘மறையும் மறையும்’ என்று அருளிச் செய்வர் 

ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் இத்திருவாய் மொழி பாடப்புக்கால் ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல் அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்.

அழகர், கிடாம்பியாச்சானை அருள்பாடிட்டு, ‘நீ  ஒன்று சொல்’ என்ன, ‘அபராத ஸஹஸ்ர பாஜனம்’ என்று தொடங்கி‘அகதிம்’ என்ன, ‘நம் இராமாநுஜனையுடையையாயிருந்து வைத்து, அகதி  என்னப் பெறாய்’ என்று அருளிச்செய்தாராம். அனந்தாழ்வான் ‘அமர்யாத:’  என்ற சுலோகத்தை ஆளவந்தார் அருளிச்செய்தார் என்னக் கேட்டு ‘எனக்கு  அது சொல்ல வேண்டா’ என்றான்‘இது ஆளவந்தார் அருளிச்செய்ததேயாகிலும், நான் என் வாயால் இப்பாசுரம் சொல்ல மாட்டேன்’ என்பராம் அனந்தாழ்வான்.

நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்றதனால், ஆத்துமாவிற்குத் தகுதியில்லாத குணங்களே என் பக்கல் உள்ளன; ஆத்தும குணங்கள் ஒன்றுமில்லை என்பதனைத் தெரிவித்தபடி. ‘என் தண்மையும் நிறைவு இல்லாமையுமன்றோ நான் 2இவ்வார்த்தை சொல்லிற்று என்கிறார்’ என்பராம் பிள்ளை திருநறையூர் அரையர்.

பண்டு தலை மயிர் இல்லாதான் ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று, ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’ என்ன, ‘வந்தது என்?’ என்ன, ‘ஒன்றும் இன்று; கண்டு போக வந்தேன்’ என்ன, ஆகில் ‘ஒரு கோட்டையைக் கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட, அவன் அதனைக் கொண்டு வருகின்ற காலத்தில் எதிரே ஒருவன் வந்து, ‘இது பெற்றது எங்கே?’ என்ன, ‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்ன, ‘அவன் சென்று அங்கேயுள்ள அவனைக் கண்டு, ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற, ‘அடா! என் நெல்லையும் கொண்டு என்னையும் வைது போவதே! என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப் பார்த்து, ‘ஏன்தான்! குழல்கள் அலைய அலைய ஓடி வாரா நின்றீர்!’ என்ன, ‘ஒன்றும் இன்று;’ இன்னம் ஒரு கோட்டை கொண்டு போகச் சொல்ல வந்தேன்,’ என்றானாம் என்பர் பட்டர்.

நம் முதலிகளுள் ஒருவரை ஒருவன், ‘எனக்கு எம்பெருமானை நினைக்க விரகு சொல்ல வேணும்’ என்ன, ‘நான் உனக்கு அதுசொல்லுகிறேன்; நீ எனக்கு அவனை மறக்க ஒரு விரகு சொல்லவல்லையே?’ என்றாராம்.

எம்மானை – யானைக்கு உதவியவதனால் அதன் சிறை விட்டது; அந்நீர்மையிலே தாம் சிறைப்படுகிறார்2ஒரு ஜன்மமாதல், ஒரு ஞானமாதல், ஒரு ஒழுக்கமாதல் ஒன்றும் இன்றியே ருசிமாத்திரமே யுடைய ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவினபடியை அநுசந்தித்து, ‘இது என்ன நீர்மை!’ என்று அதனாலேயாயிற்று இவர் அவனுக்கே உரியவர் ஆயிற்று-பட்டர், இவ்விடத்தை அருளிச் செய்யும் போது மேலும் இயலைச் சொல்லச் செய்து, ‘அவன் நூறாயிரம் செய்தாலும் விக்ருதராகாதிருக்கும் போதும் நாமே வேணும்; நமக்கு ஓர் ஆபத்து உண்டானால் இருந்த இடத்தில் இருக்க மாட்டாமல் விக்ருதராம் போதும் அவனே வேணும்’ என்று அருளிச் செய்தார்.

தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே – ‘கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு உகட்டு உண்டு உழலுகிறவர்கள் நடுவே இவர்கள் பிறந்த இத்தால் இவர்கள் தாம்கொண்ட பிரயோஜனம் என்? வைஷ்ணவர்கள் நடுவே இவர்கள் மனித சரீரம் எடுத்தது என்ன பிரயோஜனத்துக்காக?’ என்கிறார் என்றபடி-திருப் புன்னைக் கீழ் ஒருவர் இருக்குமிடத்திலே நம் முதலிகள் பத்துப் பேர் கூட நெருக்கிக் கொண்டு இருக்கச் செய்தே, கிராமணிகள், மயிர் எழுந்த பிசல்களும் பெரிய வடிவுகளும் மேலே சுற்றின இரட்டைகளுமாய் இடையிலே புகுந்து நெருக்குமாறு போலே காண்’ என்று பிள்ளைப் பிள்ளை அருளிச் செய்வர்.

ஈசுவரன், தன்னையும் தன் விபூதியையும் அடியார்களுக்கு உடைமையாக்கியன்றோ வைப்பது–ஆயிரத்தளியிலே ராஜா இருக்கச்செய்தே, பெரியநம்பியையும் ஆழ்வானையும் நலிந்தானாய், ஆழ்வான் மடியிலே சாய்ந்து கிடக்கச் செய்தே, பெரிய நம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்; அவ்வளவிலே ‘ஒருவரும் இல்லாதாரைப் பிரதிபத்தி பண்ணக்கடவோம்’ என்று திரிகிறார் சிலர், அங்கே வந்து ஆழ்வானைக் கண்டு, ‘ஒருவன் உண்டிறே’ என்று போகப் புக, ஒருவரையும் ஒரு குறை சொல்லி அறியாதவன், ‘வாரிகோள் மாணிகாள்! வைஷ்ணவனுமாய் ஒருவனும் இல்லாதான் ஒருவனைத் தேடிப் பிரதிபத்தி பண்ண இருக்கின்றீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவனுக்குக் கிஞ்சித்கரிக்க இருக்க, வைஷ்ணவனுமாய் அறவையுமாய் இருப்பான் ஒருவனை நீங்கள் எங்கே தேடுவீர்கள்?’ என்றானாம்.

மி்ளகாழ்வான் வார்த்தை: இராஜா அகரம் வைக்கிறானாய் அங்கே செல்ல, ‘உமக்குப் பங்கு இல்லை’ என்ன, ‘அது என்? வேத பரீட்சை வேணுமாகில் அத்தைச் செய்வது; சாஸ்திரப் பரீட்சை வேணுமாகில் அத்தைப் பரீட்சிப்பது,’ என்ன, ‘உமக்கு அவையெல்லாம் போரும்; அதற்கு உம்மைச் சொல்ல ஒண்ணாது,’ என்ன, ‘ஆனால், எனக்குக் குறை என்?’ என்ன, ‘நீர் வைஷ்ணவர் அன்றோ? ஆகையாலேகாண்,’ என்ன, புடைவையை முடிந்து ஏறிட்டுக் கூத்தாடினான் ஆயிற்றுத் தன்னை அவர்கள் கை விட்டதற்கு; ஆதலால், வைஷ்ணவர் அல்லாதாரான மற்றையோரால், ‘இவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்’ என்று தள்ளப்படுவதே வேண்டுவது.-துள்ளி ஆடினால் உலகத்தார் சிரியாரோ?’  என்ன, அதற்கு விடையாக, ‘மிளகாழ்வான் வார்த்தையை நினைப்பது’  என்கிறார். இதனால், ‘உலகத்தாருடைய நகையே பூஷணமாய்விடும்,’ என்பது  கருத்து.

இக்ஷ்வாகு வமிசத்திலே யுவநாஸ்வான் என்பான் ஒருவன் மந்திரத்தாலே சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க, அவன் வயிற்றிலே கர்ப்பம் உண்டாயிற்றேயன்றோ ஒரு சத்தி விசேஷத்தாலே? அங்கு ஆணும் பெண்ணுமாய்க் கலந்து பிறந்தமை இல்லையே? அப்படியே, இங்கும் சர்வ சத்தி யோகத்தாலே இவ்வர்த்தம் பொருத்தமாகத் தட்டு இல்லையேயன்றோ? இதற்குப் பிரமாணம் 1‘அஜாயமாந:’ என்ற சுருதியேயன்றோ?

சீற்றத்தோடு அருள் பெற்றவன்–இரணியன் பக்கல் சீற்றமும் செல்லாநிற்க, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வானுக்குக் கிட்டலாய் இருந்தபடி எங்ஙனே?’ என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்க, ‘சிம்ஹம் யானைமேலே சீறினாலும் குட்டிக்கு முலையுண்ணலாம்படி இருக்கும் அன்றோ?’ என்று அருளிச்செய்தார். அடியாரிடத்துள்ள அன்பினாலே அவர்கள் விரோதி மேலே சீறின சீற்றமானால், பின்னை அவர்களுக்கு அணைய ஒண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச்செய்தார் என்றபடி.

அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே–இவ்விடத்தைப் பட்டர் அருளிச்செய்யாநிற்க, நஞ்சீயர், ‘இவர் புக்க இடமெங்கும் இப்படியே சொல்லுவர்; இவர்க்கு இது பணியே அன்றோ?’ என்ன, ‘இவர் மற்றோர் இடத்திலே தலை நீட்டுவது பாவனத்தைப் பற்ற; இவர் தஞ்சமாக நினைத்திருப்பது சக்கரவர்த்தி திருமகனையே’ என்று அருளிச்செய்தார்.ஸ்ரீராமா, நீதான் எல்லா உலகங்களிலுள்ள எல்லா உயிர்கட்கும் பாவத்தைப் போக்குகின்றவனாய் இருக்கிறாய்,’ என்கிறது இல்லையோ இவரையும்?’ என்ன, 5‘அவனும் இவரோடு ஒத்தான் ஒருவன்; இவர் ‘இனிய பொருள் வேறில்லை’ என்றிருக்குமாறு போன்று, அவன் ‘பாவநத்துக்கும் இவர் ஒழிய வேறில்லை’ என்றிருப்பான் ஒருவனாயிற்று.’ 6பட்டர் இராமாவதாரத்தில் பக்ஷபாதத்தாலே அருளிச்செய்யுமது கேட்கைக்காக, சிறியாத்தான், ‘பெருமாளுக்கு எல்லா ஏற்றங்களும் அருளிச்செய்ததேயாகிலும், பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலை கட்டித் தூது போன கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தி திருமகனுக்கு? என்ன, ‘அதுவோ! பெருமாள் தூது போகாமை அன்றுகாண்; இக்ஷ்வாகு குலத்தாரைத் தூது போக விடுவார் இல்லாமைகாண்,’ என்று அருளிச் செய்தார்.  ‘அவ்வவதாரத்தில் அக்குறை தீருகைக்காக அன்றோ கிருஷ்ணனாக அவதரித்துத் தூது போயிற்று? 7‘முன்னோர் தூது வான ரத்தின் வாயில் மொழிந்து–பின்னோர் தூது ஆதிமன்னர்க்காகிப் பெருநிலத்தார், இன்னார் தூதன் என்ன நின்றான் எவ்வுட் கிடந்தானே, (பெரிய திருமொழி, 2. 2 : 3.)

எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க்காடும் பிள்ளையாய் இருக்கும். இங்ஙனமிருக்கவும், ஒரு நாள் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் சக்கரவர்த்தி திருமகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாராய் அவரைப் பார்த்து, இந்த ‘என் ஒருவனையே சரணமாகப் பற்று’ என்று தேவையிடாதார் எழுந்தருளினார்,’ என்றாராம்

ஆபிமுக்யத்தாலே பெறலாம் என்றால், அவ்வாபிமுக்கியந்தானும் பரமபத்தியைப் போன்று அரிதாய் இருக்கும் அன்றோ இம்மக்களைப் பார்த்தால்? ‘இத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா,’ என்று சொல்லுகிறவை எல்லாம், பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது; இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக்கால் ‘மஹாவிஸ்வாச பூர்வகம் – மஹாவிசுவாசம் முன்னாக’ என்ன வேண்டும்படியாய் இருக்கும்-ஒரு சிறாயை நம்பி ஆறு மாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணீரும் ஏற்றிக்கொண்டு கடலிலே இழியாநின்றான்; அதைப் போன்ற விஸ்வாசமாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுகிறவர்களுக்கு?’ என்று அருளிச் செய்வர் எம்பெருமானார்.

பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளி இருக்கும்போது அனந்தாழ்வான் கண்டு, ‘பரமபதத்தில் சர்வேஸ்வரன் நாற்றோளனாயோ, இரு தோளனாயோ எழுந்தருளியிருப்பது?’ என்ன, ‘ஏகாயனர் ‘துவிபுஜன்’ என்னாநின்றார்கள்; நம்முடையவர்கள் ‘சதுர்புஜன்’ என்னாநின்றார்கள்,’ என்ன, ‘இரண்டிலும் வழி ஏது?’ என்ன, ‘துவிபுஜனாய் இருந்தானாகில் பெரிய பெருமாளைப் போலே இருக்கிறது; சதுர்புஜன் என்று தோன்றிற்றாகில் பெருமாளைப் போலே இருக்கிறது’ என்று அருளிச்செய்தார்.

நிலாத்துக்குறிப் பகவர், பட்டரை நோக்கி, ‘ஸ்ரீ வைகுண்டத்தில் சதுர்புஜனாயிருக்கும் என்னுமிடத்துக்குப் பிரமாணம் உண்டோ?’ என்ன, ‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே உள்ள ஸ்ரீ வைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம் கதை இவற்றைத் தரித்திருப்பவர், போஷகர்’ என்று உண்டாய் இருந்ததே?’ என்ன, வேறு பதில் சொல்ல முடியாமையாலே வேறுபட்டவராயிருக்க, ‘பிரமாணப்போக்கு இதுவாயிருந்தது. பொறுத்தலாகாதோ?’ என்று அருளிச்செய்தார்.

பிள்ளையாத்தான் என்று போர நல்லனாய் இருப்பான் ஒருவன், நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே வந்து, ‘எனக்கு ஓர் உரு திருவாய்மொழி அருளிச்செய்யவேணும்,’ என்ன, ‘உனக்கு விளக்கமாகத் தெரிவது நம்பிள்ளையோடே கேட்டாலாயிற்று; அங்கே கேள்,’ என்ன, ‘அவரைத் தண்டன் இடவேணுமே?’ என்ன, ‘அது ஒன்று உண்டோ? வேணுமாகில் செய்கிறாய்’ என்று என்னை அழைத்து ‘இவனுக்குப் பாங்கானபடி ஓர் உரு திருவாய்மொழி சொல்லும்’ என்ன, இவ்வளவும் வரக் கேட்டவாறே, என்னை மிகவும் அநுவர்த்திக்கப் புக, நான் ஒட்டாதொழிய, சீயர்பாடே சென்று ‘இவ்வர்த்தத்தினுடைய சீர்மை அறியாமையாலே முன்பு அப்படிச் சொன்னேன்; இனி, நான் இங்கு வணங்குவதற்கு இசையும்படி செய்ய வேணும்,’ என்று சீயரையிட்டு நிர்ப்பந்தித்து அநுவர்த்தித்தான் என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை

வீரப்பிள்ளையும், பாலிகை வாளிப்பிள்ளையும் என்ற இருவர், நஞ்சீயர் ஸ்ரீபாதத்திலே ஏகாந்தராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப்புண்டாய்த் தங்களிலே வார்த்தை சொல்லாதே இருக்க, இவர்களைப் பார்த்துப் பிள்ளைகாள்! பொருள் இன்பங்கள் தியாச்சியமல்லாமையோ, பகவத்விஷயம் அராட்டுப் பிராட்டாயோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவனும் ஸ்ரீ வைஷ்ணவனும் வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?’ என்ன, இருவரும் எழுந்திருந்து தெண்டனிட்டுச் சேர்ந்தவர்களாய்ப் போனார்கள்.

இவ்வாறு ‘சண்டாள சண்டாளர்களாகிலும் – எம் அடிகளே’ என்று கூறுதல் உலக நடைக்கு மாறுகோடல் அன்றோ?’ எனின்,இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது உலக மரியாதைக்குச் சேராதிருந்ததாகில் ஆழ்வார் விரும்பியதை நம்பினவர்கள் ஆகிறோம்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

ஸ்ரீ குகப்பெருமாளோடே கூட, பெருமாளைப் பிரிந்த இடத்தினின்றும் கால் வாங்க மாட்டாதே நின்றான் ஆயிற்றுச் சுமந்திரன்; அங்கு நின்றது ஒன்று இரண்டு நாளாய் இருக்கச்செய்தே, ‘பலநாள்’ என்னா நின்றான் ஆயிற்று; பிரிவாலே காலம் நெடுகினபடி.-ஸ்ரீ குகப்பெருமாளோடே நிற்க, காலம் நெடுகுவான் என்?’ என்று மிளகாழ்வானைக் கேட்க, ‘ஸ்மாரக சந்நிதியில் ஆற்றாமை இரட்டிக்குமன்றோ? என்று அருளிச்செய்தாராம்.

‘வேறுபட்டவள் ஆக மாட்டேன்’ என்கிற பிராட்டியினுடைய வார்த்தை எல்லார்க்கும் சொல்லலாம்படி அன்றோ சொரூபத்தை உணர்ந்தால் இருப்பது? ‘ஆயின், ஈசுவரனோடு ஐக்கியமாக ஈசுவர கோடியாகச் சொல்லாநிற்க, பிராட்டியை உயிர்கள் கூட்டத்தோடு சொல்லுதல் என்?’ எனின், ஈசுவரனில் பிராட்டிமார்க்குப் பேதம் சொல்லுகிற பிரமாணங்கள் எல்லாம், அல்லாதாரைப் போன்று பிரிவு உண்டு என்னுமிடம் சொல்லுகின்றன; ஐக்கியம் சொல்லுகிற இடம் எல்லாம் பாரதந்திரிய எல்லையைப் பற்றச் சொல்லுகின்றன’ என்று பிராசங்கிகமாக ஓர் உருவிலே அருளிச்செய்தார்.

கல்பிரஹ்மதேசத்திலே கரிகாற்சோழ பிரஹ்மராயன் ‘திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தேன்’ என்று சீயர்க்குக் காட்ட, அவன்பக்கல் உண்டாகும் சில பயன்களை நினைத்து, பிள்ளையை ‘நீர் இதனைக் கேட்டுச் சம்பாவியும்’ என்று அருளிச்செய்ய, அவரும் கேட்டு, ‘ஆழ்வார் திருவுள்ளத்தை அடி ஒற்றி அவர் போன வழியே போம் படியே!’ என்ன, ‘ஆஆ! பிள்ளை, ஆழ்வார்க்கும் எனக்கும் வாசி புத்தி பண்ணிற்றிலீரே? கிராம கார்யம்செய்து இடையிலே இதுவும் செய்ய வேண்டிற்றே எனக்கு’ என்றான்

‘எல்லா உலகும் தொழும்’ என்கிறார். 3‘பிரஹ்மம் அறியத் தக்கது,’ என்று கூறி, ‘அறியத் தக்கதானபிறஹ்மத்துக்கு லக்ஷணம் யாது?’ என்ன, 1எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால் உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும் சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல் முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது. ‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன, 2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும், 3‘எவன் உலகங்களையெல்லாம் படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’ என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே, இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.

ஆதிமூர்த்தியாகையாலே – காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும்  தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே உபாஸ்யம்
என்கைக்குச் சூத்திரத்தையும், சுருதியையும் அருளிச்செய்கிறார், ‘பிரஹ்மம்  அறியத் தக்கது’ என்று தொடங்கி. நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர்
மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே, ‘ஈஸ்வர பரத்துவத்தை  அநுசந்திக்கையாவது, ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’  என்றருளிச்செய்தாராம், ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை யாது?’   என்று கேட்டருள, ‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக் குணங்களையும் அநுசந்தித்ததாம்’ என்றருளிச்செய்தாராம்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading