ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் –இரண்டாம் பத்து –

துக்கத்தை யுடையவர்கள் தங்களோடு ஒத்த துக்கத்தை யுடையவர்களைக் கழுத்தைக் கட்டிக் கொண்டு கிடந்து கூப்பிட்டு ஆற்றாமைக்குப் போக்கு விட்டுத் தரிக்குமாறு போன்று. இவளும் கண்ணுக்கு இலக்கான பொருள்கள் எல்லா வற்றோடும் கழுத்தைக் கட்டிக்கொண்டு கிடந்து, ‘நீ பட்டதோ, நான் பட்டதோ? என்று கூப்பிடுகிறாள்

ஆக, ஸ்ரீராமபிரான் தந்தை இறந்த துக்கத்தால் மிக வருந்தி, முழுமதியினைப் போன்ற திருமுகத்தையுடைய பிராட்டியருகிற்சென்று அவளைப் பார்த்துச் ‘சீதாய்! 1உன்னுடைய மாமனார் இறந்தார்,’ என்றும், ‘இலக்குமணா! நீ தந்தை இல்லாதவன் ஆனாய்,’ என்றும், கூறி,ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்து கூப்பிட்டாற் போன்று. கூப்பிடுகிறார் இங்கு.

வாயும்  திரை உகளும் கானல் மடநாராய் – பெரிய மலை போல வந்து கிட்டுகிற அலைகள் மேலே தாவிப் போகா நின்றாலும் நினைத்தது கைப்புகுமளவும் சலியாமல் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கின்ற நாரையே!பகவானைத் தியானிப்பவர்கள் சலியாமல் இருப்பது போன்று.சலியாமல் இருக்கிற நாரையே!’ என்கிறாள். அதாவது, 2‘அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி அகல்வான் உரிஞ்ச முதுகில், மலைகளை மீது கொண்டு வருமீனை’ மறவாது இருப்பார்க்குப் போலியாய் இராநின்றது

கிராமணிகள் பிறர்க்குத் துன்பம் செய்துகொண்டே யாகங்களும் பண்ணிப் பவித்திரங்களும் முடிந்திட்டுத் தார்மிகர் என்னும் படி திரிவது போன்று.நாரையும். 4நினைத்த பெரிய மீன் கைப்புகுமளவும் சிறிய மீன்கள் வந்தாலும் அவற்றில் விருப்பம் அற்று இருத்தலின், ‘மடநாராய்’ என்கிறாள். மடப்பமாவது, பற்றிற்று விடாமை.

இவளுக்கு ஈடாய் இருப்பான் ஒருவனைப் பெற்று அவன் கையில் காட்டிக்கொடுத்தோமாக வல்லோமே!’ என்று-‘எங்கள் ஐயர் கவலைக்கடலில் மூழ்கினவர் ஆனார்’ என்று பிராட்டி கூறியது போன்று.-இவளைப் பெற்ற தாயும் கண்ணுறங்காதே படும்படி? இமையோடு இமை கொட்டாதவர்களாய் எப்பொழுதும் இறைவனைப் பார்த்துக்கொண்டேயிருப்பவர்கள் நித்தியசூரிகள் ஆதலின், ‘அமர் உலகும் துஞ்சிலும்’ என்கிறாள்.

விரகதாபத்தின் வியசனம் பொறுக்கமாட்டாத மென்மையையுடைய நீயும். 1‘பகைவர்களுடைய பலத்தை ஒழிப்பவரான ஸ்ரீராமபிரான், பாணங்களாலே இலங்கையை அழித்து என்னைப் அழைத்துச்செல்லின், செல்லும் அச்செயல் அவ்விராமபிரானுக்கு ஒத்ததாக இருக்கும்’ என்று கூறி இருந்த பிராட்டியைப் போன்று இருக்க மாட்டாமைக்கு ‘இருவரும் ஒத்தோமோ?’ என்பாள் ‘எம்மேபோல் நீயும்’ என்கிறாள்.

புழுகிலே தோய்த்தெடுத்தாற்போன்று. பரிமளத்திலே தெரியும்6 ‘கலம்பகன் நாறும்; ஆதலின, ‘தண்துழாய்’ என்கிறாள்

எல்லே – இரவோடு பகலோடு வேற்றுமை அறக் கதறுகிறபடியைக் கண்டு, 2ஓதமும் நானும், உறங்காது இருந்தேனே’ என்கிறபடியே, தன் படிக்குப் போலியாய்’ இருக்கையாலே சிறையுறவு போன்று. (சிறைக்கூடத்தில் யாதானும் ஒரு காரணத்தால் சேரத் தங்கியிருக்க நேரின், அப்பொழுது
அங்கே உண்டாகும் உறவு.)தோழியை விளிக்குமாறு போன்று விளிக்கிறாள்

இலங்கை முற்றத் தீ ஊட்டினான்’ என்றல் எங்ஙனம் பொருந்தும்?’ எனின், அவன்–அவன் அவர்களுக்குக் கூட்டு இல்லாதாப் போலே.–அவன் அகமும் அவர்கள் அகத்துக்குக் கூட்டு இல்லை காணாய்; அவன் அகம் தாஸோகம் அன்றோ? ஆதலின், விபீஷண கிருஹம் இலங்கைக்குள் அன்று போலே இருந்தது.

காற்று என்று ஒரு 2வியாபகதத்வமாய், அதுதான் காதலனைப் பிரிந்த விரஹத்தால் உண்டான வியசனத்தால், 3இருந்த இடத்தில் இருக்கமாட்டாமல், மடல் ஊருவாரைப் போன்று. உடலிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய், 1சன்னிசுரம் வந்தவர்களைப் போன்று குளிர்ந்திருந்தது; அதனைப் பார்த்து, ‘நீயும் நான் பட்டது பட்டாய் ஆகாதே?’ என்கிறாள்-உள்ளில் வெதுப்பும், புறத்தில்  குளிர்ச்சியும் தோன்றுகைக்காக, ‘குளிர்ந்திருந்தது’ என்றது இவளுக்கு இப்படித்  தோன்றியது என்பதனைத் தெரிவித்தபடி .

காரார் திருமேனி காணு மளவும் போய்ச், சீரார் திருவேங்கடமே திருக்கோவ, லூரே ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை’ என்று வருதலால் தேடினால் என்க. ‘ஆயின், இங்குத் திருப்பாற்கடலும் பரமபதமும் கூறினாள் இலளே?’ எனின், அவையும் இறைவன் தங்கியிருக்கின்ற இடங்களேயாதலின், ‘ஊராய எல்லாம்’ என்றதனால் பெற வைத்தாள். ஆக, ‘திருப்பாற்கடலோடு திரு மலையோடு பரமபதத்தோடு வாசியறத் 3தேடுவார்க்குப் போலியாய் இருக்கின்றது’ என்றபடி.

இராம இலக்குமணர்கள் பிராட்டியைத் தேடித் திரிந்தது போன்று.வாடையும், கடலையும் மலையையும் விசும்பையும் துழாவிக்கொண்டு வந்தது

ஊழிதோறு ஊழி நீராய் நெகிழ்கின்ற வானமே’ என்க. உலகுக்கு நீர் கொண்டு – உலகம் அடங்க வெள்ளம் இடவேண்டும். படி நீரை முகந்துகொண்டு. உனக்கு நல்ல 2நிதரிசனம் உண்டு. தோழியரும் யாமும் போல்–என் இழவுக்கு எம்மின் முன் அவனுக்கு மாயும் தோழிமாரையும் என்னையும் போன்று. நீராய் நெகிழ்கின்ற கரைந்து நீராய் விழுகிற. வானமே -மேகமே! வானம் – மேகம்; 

பெருமாள் வரினும் 3‘இவ்வாஸ்ரயத்தை உண்டாக்க ஒண்ணாது’ என்னும்படி முதலிலே தாமரை குடி போன பொய்கை போன்றிருந்தவளும் போய்த் தேய்ந்தற்ற படிக்கும் பசலைக்கும் நிதரிசனமாகச் சொல்லும்படி இருந்தவளும், ‘நற்சரக்குக்கு வந்த அழுக்கு’ என்று தோற்ற இருந்தவளும், 4அம்பு வாய் உள்ளே கிடக்கப் புறம்பே சமாதானம் பண்ணினாற் போலே ‘அகவாயில் இழவு பெரிது’ என்று தோற்ற இருந்தவளும், 5பெருங்காற்றால் சிதற அடியுண்ட மேக துண்டங்கள் போல இருந்தவளும், ஆன சீதை’ என்றார் வால்மீகி

‘இப்படி, குறை அற்று இருக்கக்கடவ நீ, இக்காலத்தில் வந்தவாறே போக்கமாட்டுகின்றிலை’ என்பாள், ‘நாள் மதியே, நீ இந்நாள் அகன்றாய்’ என்கிறாள். ‘எதிரி எளியன் ஆனால் பகைவர்கள் கூட நின்று உருமுமாறு போன்று, மேலிடாநின்றது,’ என்றவாறு. இதனால், ‘இருளை ஒழிக்கவேண்டிய உன்னோடு அவ்விருளும் உடன் உள்ளததே!’ என்கிறாள்

தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று’ என்கிறபடியே, தமக்குப் பொய் சொல்ல ஒரு வாய் உண்டாகில், தம்மைச் சேர்ந்த படைக்கு ஐந்து வாய் உண்டு என்பாள், ‘ஐ வாய் அரவணை’ என்கிறாள். இதனால், அவனுக்குப் 2பள்ளித்தோழமை பலித்தமை தெரிவித்தபடி

பாசுரத்தில் ‘மெய்வாசகம்’ என்று இருக்க, பொய்வாசகம் என்று பொருள் கூறுவது என்னை?’ எனின், 5‘ஆழிப்பெருமானார் மெய் வாசகம்’ எனவே, ‘பொய்’ என்று பிரசித்தமாய் இருக்கும் போலேகாணும். ‘ஆயின்,’பொய்’ என்னாது ஒழிவான் என்?’ என்னில், ‘பொய்’ என்னில், நாட்டார் பொய்யைப் போன்று ஆகுமே? அதனினின்றும் வேறுபடுத்துதற்கு ‘மெய்வாசகம்’ என்கிறாள். ‘

பகைவர்களானாலும் நோவுபட்டாரை ‘ஐயோ!’ என்ன அன்றோ அடுப்பது? அது போன்று வேற்றோர் வகையின் கொடிதாய் – பகைவர்கள் நலிகின்ற வகையைக்காட்டிலும் கொடிதாக நலிகின்றாய்.

வாழி – 1காதுகரை ‘உடன் பிறந்தீர்’ என்னுமாறுபோன்று ‘வாழி’ என்கிறாள்

அவ் விருளுக்குப் பின்னடைந்து அங்கே இங்கே திரியா நிற்க, இருள் செறிந்தாற்போலே இருப்பதொரு கழியிலே சென்று இழிந்தாள்; அது மடல் எடுப்பாரைப் போன்று கெட்டு ஓடா நிற்றலைக் கண்டு, ‘பாவியேன், சகடாசுரனை அழித்த அச்செயலிலே நீயும் அகப்பட்டாயே?’ என்கிறாள்.

வெளிறான இருள் அன்றி, இருளின் புற இதழை வாங்கி வயிரத்தைச் சேரப் பிடித்தாற்போன்றிருக்கிறது இருள்’ என்பாள். ‘இருளின் திணி வண்ணம்’ என்கிறாள். திணி – வயிரம். இனி, 2‘அச்சமான இருள்’ என்று பொருள் கூறலுமாம்

நொந்து ஆராக் காதல் நோய் மெல் ஆவி உள் உலர்த்த – ‘நோவ’ என்று புக்கால், நொந்து தலைக்கட்டக் கூடியதல்லாமல் இருக்கிற காதல் நோயானது, மிருதுவாயிருக்கிற ஆத்துமாவைக் குருத்துவற்றாக உலர்த்த, தொட்டார் மேல் தோஷமாம்படி காற்றுப் படவும் பொறாதிருக்கின்றதாலின், ‘மெல் ஆவி’ என்கிறாள். ஆத்துமாவிற்கு மென்மை, பகவானுடைய குணங்களை அநுபவித்து நைந்திருத்தல்

வேவ ஆரா வேட்கை நோய் – ‘வேவ’ என்று தொடங்கினால், ஒருகால் வெந்து முடிவு பெறாது மேலும் மேலும் வெந்துகொண்டே இருத்தலின் ‘ஆரா வேட்கை நோய்’ என்கிறாள். ‘ஆயின்,  உலகத்தில் வெந்து முடிவு பெறவில்லையோ?’ எனின், 1 அல்லாது நெருப்பைப் போல அன்று; கேவல அக்நியாகில் 2அதாஹ்யமாயிருக்கும்; காதல் நோயாகிய நெருப்புக்கு உள்ளதொரு தன்மை இது. 3‘வணங்கத் தக்க பிராட்டியீர்! உம்மைப் பார்க்காத காரணத்தால், எரிகின்ற மிகப் பெரிய நெருப்பினால் நெருப்பு மலை எரிவது போன்று வருந்துகிறார். அவ்விராமபிரான்,’ என்றார் வால்மீகி பகவான்

உள்ளே பிடித்துப் புறம்பே வர வேவா நின்றதாதலின், ‘உள் உலர்த்த’ என்கிறாள். 4‘காட்டிலுள்ள மரத்தை அம்மரத்தினுள்ளே மறைந்திருக்கும் நெருப்பானது உள்ளே இருந்து எரிந்துகொண்டு வருவது போன்று, சோகமாகிற நெருப்பு, மனக்கவலையாகிற நெருப்போடு கூடி, ஸ்ரீபரதாழ்வானை எரித்தது,’ என்பது ஸ்ரீராமாயணம்.–ஓவாது இராப்பகல் – வேவ ஆராத வேட்கை நோய் போன்று, இராப்பகலும் ஓவாது ஒழிதலின் ‘ஓவாது இராப்பகல்’ என்கிறாள்

இனி எம்மைச் சோரேல்2 – கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும் போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள்.

திண்ணன் வீடு முன்னுரை–’மேல் திருவாய்மொழியில், இவருக்குப் பிறந்த ஆற்றாமை, பேச்சுக்கு நிலம் இல்லாததாய் இருந்தமையின், ‘கடல் வெதும்பினால் விளாவ நீரில்லை’ என்னுமாறு போன்று, ஆற்றாமையோட முடிந்துபோமித்தனை என்று இருந்தார். பின்னர், அவன் வந்து முகங்காட்டினவாறே ஆற்றாமை புக்க இடம் கண்டிலர்; ‘இதற்கு அடி என்?’ என்று பார்த்து ஆராய்ந்தவாறே, மற்றைப் பொருள்களினுடைய வேறு இழவுகளில் அளவு அல்லாத இறைவனுடைய வேறுபட்ட சிறப்பாய் இருந்தது; அதாவது, பிரிந்த போது தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதப்படியாய், கலந்து போதும் தன்னை ஒழிய வேறொன்று தோன்றாதபடியான இறைவனுடைய 2வைலக்ஷண்யமாய் இருந்தது என்றபடி

ஏஎ பாவம் – இரத்தினத்திற்கும் காட்டில் உலர்ந்து கிடக்கும் வரட்டிக்கும் வேறுபாடு உண்டு என்று சொல்ல வேண்டுவதே! மக்கள் சிற்றறிவினர்களாய் இருத்தலின், பகவானுடைய  பரத்துவத்தை விளக்கவேண்டி இருக்கின்றதே என்னும் இன்னாப்பாலே ’என்னே பாவம்!’ என்கிறார். பரமே –1‘பகவானுடைய குணங்களைஅநுபவிக்குமது ஒழிய, இது நமக்குக் கடமை ஆவதே! இதுநாம்செய்யக்கூடியதாக வந்து விழுவதே!’ என்றபடி.

அவனுடைய பெரிய பாவமானது அவனை விட்டு நீங்கும்படி. மற்றைத் தேவர்களைக்காட்டிலும் ஞானம் சத்தி முதலியவற்றால் ஓர் ஆதிக்கியத்தைப் படைத்த சிவனாற்செய்யப்பட்ட பாவமாதலின், ‘யானைக்கும் தனக்குத் தக்க வாதம்’ என்பது போன்று, அப்பாவத்தினை ‘மா பாவம்’ என்கிறார்.

 ஏறனை – சர்வேஸ்வரன் ‘கருடவாகனன்’ என்று இறுமாந்து இருக்குமாறு போன்று, ஓர் எருத்தைத் தேடிக் கைக்கொள் ஆண்டிகளைப்போன்று இறுமாந்து இருப்பவன்

தேவும் எப்பொருளும் படைக்கப் 1பூவில் நான்முகனைப் படைத்த தேவன் – தேவர்களுடைய கூட்டங்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும் உண்டாக்குவதற்காக, 2ஒரு பூவில் நான்கு பூக்கள் பூத்தாற் போன்று நான்கு முகங்களையுடைய பிரமனை உண்டாக்கினவன்.

ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள்  வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’ எனின், இராஜசேவை செய்வார் தத்தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு போன்று, இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள்.

கோலக் கூத்தனை – திருவுலகு அளத்தருளினபோது வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும், அப்போதைய வடிவழகின் மிகுதியினைக் கூறுவார், ‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச்செய்கிறார்.இதனால், இந்திரன் இழந்த தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியதுபோன்று, இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர் என்பதூஉம், அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதூஉம் போதரும்.

வாய்ந்த ஆயிரம் இத்தனைபோது இவர் கூறி வந்த பரம்பொருள் நேர்பட்டாற்போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி.

இராச்சியத்தை இழந்த இராஜபுத்திரனை ஒருவன் இராச்சியத்திலே பிரவேசிப்பித்தால், ‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்’ என்று, அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று, ‘கைங்கரிய சாம்ராச்சியத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க, இந்நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் தானும யானும் – தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் அவதரித்து, மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று, என்னுடன் கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப் போக்கி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த தானும்  கைங்கரியத்திற்கு விஷயமாக உள்ள யானும், இனி, ‘தானும் யானும்’ என்பதற்கு, ‘என்னைப் பெறுகைக்கு நெடுநாள் எதிர்சூழல் புக்கு விடாய்ப்பித்த தானும், ‘வாயுந் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில், ‘கண்ணாற்கண்ட பொருள்கள் அடங்கலும் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றனவாக நினைத்து விடாய்த்த நானும்’ என்றும், ‘கிருஷி செய்த தானும், கிருஷிக்கு விஷயமாக உள்ள நானும்’ என்றும் பொருள் கூறலும் ஆம்.

எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் –1‘ஆயிரத்தில் ஒன்றும், கடலிற்குளப்படியும் போலே, தானும் நானும் ஆன சேர்த்தியிலே எல்லா ரசங்களும் பிறக்கும்படி கலந்தோம்; நித்திய விபூதியிற் சென்று புகினும் இப்பேற்றை அசையிட்டு இருக்குமித்தனை; அங்கு ஏற்றமாகச் செய்யலாவது இல்லை; இதனுடைய பிரவின்மையே அங்குள்ளது,’ என்பார், ‘கலந்தொழிந்தோம்’ என்கிறார். இனி, பரமபதத்திற்குப் போகத் தேடுவது, உசாத்துணைக்காவும், இச் சேர்த்தி இடைவீடு இன்றி இருத்தற்குமாம்.

பிள்ளாய்! ஊமத் தங்காய் தின்று மயங்கினாரைப் போன்று, அசித்தில் சேர்ந்தவனாய் இருக்கிற என்னை அன்றோ இப்படிச் செய்தான்?’ என்பார், ‘அறியா மாயத்து அடியேனை’ என்கிறார். ‘

அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூ வடி என்று – நெஞ்சு அறியாதபடி காரியம் செய்வாரைப் போன்று, திருமார்வில் இருக்கிற நாய்ச்சியாருங்கூட அறியாதவாறு வாமன வேடத்தை மேற்கொண்டு, 1‘கொள்வன் நான் மாவலி மூவடி தா என்ற கள்வனே’ என்கிறபடியே, ‘நிலம் மாவலி மூவடி’ என்ற பொருத்தம் அற்ற வார்த்தைகளைக் கூறி பண்டும் இரந்து பழக்கம் உண்டாகில் அன்றோ பொருத்தம் உள்ள வார்த்தைகளைக் கூறுவது?

பொழில் ஏழும் உண்ட எந்தாய் -‘இயல்பாகவே அமைந்த சேஷியாய் இருக்குந்தன்மையைக் கொண்டு சொல்ல வேண்டுமோ? பிரளயாபத்திலே வயிற்றிலே வைத்து நோக்கின அது போதாதோ நீ சேஷி என்கைக்கு?’ இனி, ‘பிரளயாபத்திலே நசியாதபடி உலகத்தைப் பாதுகாத்தது போன்று, பிரிந்து நசியாதபடி என்னோடே கலந்து அடிமை கொண்டவன்’ என்பார், ‘பொழில் ஏழும் உண்ட எந்தாய்’ என்கிறார் எனலுமாம்.

தனியேன் வாழ் முதலே – தனியேனான என்னுடைய அனுபவத்துக்குப் பிரதம சுக்ருதம் ஆனவனே! பிராட்டி ஒற்றைக் கண்ணள், ஒற்றைக் காதள் முதலியவர்கள் நடுவே இருந்தாற் போன்று, இவரும் இவ்வுலக மக்களின் நடுவே இருந்தாராயினும், அவர்களோடு ஒட்டு இன்றி இருத்தலின், 4‘தனியேன்’ என்கிறார்.

 சேர்ந்தார் – 1‘இரண்டு துண்டுகளாக வெட்டுப்படக்கடவேன்; அப்படி வெட்டுப்பட்ட போதிலும் ஒருவனுக்கு வணங்கமாட்டேன்’ என்னும் நிர்ப்பந்தம் இல்லாதவர்கள்; ‘இவர்களைச் ‘சேர்ந்தார்’ என்கிறது என்?’ எனில், அநாதி காலம் பிறவிகளால் உழன்று திரிந்த ஆத்துமா சர்வேஸ்வரனைக் கிட்டுகையாவது கெடு மரக்கலம் கரை சேர்ந்தது போன்று இருத்தலின், ‘சேர்ந்தார்’ என்கிறார்; இவர்கள் 2இக்கரை ஏறினவர்கள் அன்றோ?

தீர்ந்தார்தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச் சோர்ந்தே புகல் கொடாச் சுடரை 1‘ஸ்ரீராமரே! உம்மால் நீக்கப்பட்ட பிராட்டி உயிர் வாழாள்; நானும் உயிர் வாழேன்: ஒருவாறு பிழைத்தோமானால், தண்ணீரினின்றும் மேலே எடுக்கப்பட்ட மீன் போன்று, ஒரு கணநேரமே பிழைத்திருப்போம்’ என்கிறபடியே, தன்னைப் பிரிய மாட்டாதே இருக்குமவர்கள் நெஞ்சை விட்டுப் போகமாட்டாதே, அவர்கள் உயிர், தன்னைப் பிரிந்து நீர்ப்பண்டமாக மங்கிப் போகக் கொடாதே, அது தன் பேறு என்னுமிடம் வடிவிலே தோன்ற இருக்குமவனை.

தீர்ந்தார் -உபாயத்தில் துணிவுடையார்; அவர்கள் ஆகிறார் –2பிராப்பிய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்குமவர்கள்; அவர்கள் தன்னைப் பிரிந்து நோவு படாதபடி அவர்கள் நெஞ்சிலே இருக்குமவன் என்று கூறலுமாம். அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை – பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாக நின்ற சூர்ப்பணகையைப் போக்கியது போன்று, அவர்களுடைய விரோதிகளைப் போக்கும்படி

சிற்றின்பம் துக்கமே ஆயது போன்று, பகவத் குணானுபவம் களிப்பே ஆதலின், ‘களித்தேனே’ எனத் தேற்றேகாரம் கொடுத்து ஓதுகிறார்.

துளிக்கின்ற வான் இந்நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி அளிக்கின்ற மாயப் பிரான் – மழையினைப் பெய்கின்ற ஆகாயம், அதனால் விளையக் கூடிய இந்தப் பூமி இவற்றைக் 1கடற்கரை வெளியில் நோக்கியது போன்று, திவ்ய ஆயுதங்களைத் தரித்து நோக்குகிற ஆச்சரியத்தையுடையவன். பரமபதத்தில் ஆபரணங்களாகக் காட்சி அளிக்கிற இவை இங்கு ஆயுதங்களாகக் காட்சி அளிப்பன ஆதலின், அளித்தற்குச் சுடர் ஆழியினையும் சங்கையும் கருவிகளாக ஒதினார்.

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ – ‘இவ்வாறு காக்கின்ற அக்காத்தல தொழிலுக்குத் தோற்றிருப்பராய், அவ்விறைவனைப் போன்றே அடையத் தக்கவருமாய், இறைவனுடைய நற்குணங்களுக்குத் தேசிகராய் இருப்பாருமாய், தம் அனுபவங்களை ஒருவர்க்கொருவர் உணர்த்திக்கொண்டு கலந்து பழகுவதற்குத் துணையாக இருக்கின்றவர்களுமாய் உள்ள நித்திய சூரிகளுடைய குழாங்களைச் சென்று சேர்வது எப்போதோ!’ என்கிறார். 2‘கலியர் கல அரிசிச் சோறு உண்ண வேண்டும்’ என்று நினைக்குமாறு போன்று, இவரும் ‘அத்திரளில் போய்ப்புகப்பெறுவது என்றோ!’ என்கிறார். ஆற்றாமையின் மிகுதி இங்ஙனம் கூறச்செய்கின்றது.

ஜனஸ்தானம் அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று, ‘வாயும் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காணவேண்டும் என்னும் பேரவாவோடு ஸ்ரீவைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’ என்கிறார்

 மேற்கூறிய இரண்டு திருவாய்மொழிகளிற் போந்த பிரிவுத்துன்பங்களைக் காட்டிலும் இத்திருவாய்மொழியில் பிரிவுத் துன்பம் மிகுந்து இருப்பதற்குக் காரணம் யாது?’ எனின், 2காசினை இழந்தவனுக்கும் பொன்னினை இழந்தவனுக்கும் இரத்தினத்தை இழந்தவனுக்கும் இழந்ததனால் உளதாய துன்பம் ஒத்ததாக இராது வேறுபடுவது போன்று, அங்கும் இங்கும் பிரிவுத் துன்பம் ஒன்றாயினும், துன்பத்தில் வேற்றுமை உண்டு என்க. ‘எவ்வாறு?’ எனின், அவதாரத்தில் 3‘பெருநிலம் கடந்த நல்லடிப் போதை’ அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையாலே வந்த ஆற்றாமை ‘அஞ்சிறைய மடநாரை’யில், 4‘நம்பியைத் தென்குறுங்குடி நின்ற’ என்ற அர்ச்சாவதாரத்தில் அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ‘வாயுந் திரையுக’ளில்; இங்கு, அவ்விறைவனுக்கும் உயிரான நித்தியசூரிகளை அனுபவிக்க ஆசைப்பட்டுக் கிடையாமையால் வந்த ஆற்றாமை ஆகையால், அவற்றைக் காட்டிலும் இதற்கு ஆற்றாமை விஞ்சி இருக்கும்.

நன்று; நித்தியசூரிகள் திரளிலே சென்று சேர்ந்து அனுபவிக்கப் பெறாமையால் நோவுபடுகின்றாராயின், பின்னே, அவர்கள் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடாமல், 5‘நரசிங்கா’ என்பது போன்ற இறைவன் திருப்பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுவது எற்றிற்கு?’ எனின், எங்கேனும் ஒரு காட்டில் இரத்தினங்கள் பறியுண்டால், நாட்டிலே அரசன் வாசலிலே சென்று அவ்வரசன் பெயரினைச் சொல்லிக் கூப்பிடுவது போன்று, நித்தியசூரிகள் திரளிலே தாம் சென்று சேர்வதற்கும் காரணமாக இருப்பவன் இறைவனே ஆகையாலே, அவ்விறைவனுடைய திருப்பெயரினைச் சொல்லிக் கூப்பிடுகிறார்.

இசை பாடிப் பாடி – ‘மனம் முன்னர் நினைக்க, பின்னர் வார்த்தை உண்டாகும்’ என்கிற நியதி இல்லை; ஆற்றாமையாலே கூப்பிடுகிற கூப்பீடுதான் பாட்டாய்த் தலைக்கட்டுகிறதிததனை-ஆயின், கூப்பீட்டைப் பாட்டு என்னலாமோ?’ எனின், ஆற்றாமை யாலே துடித்த துடிப்பு ஆடல் ஆனாற்போலே, 1‘பண்ணை வென்ற இன்சொல் மங்கை’ ஆதலின், ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழாநின்றது

கண்ணீர் மல்கி – உருகிய மனம் இசையாய்ப் பெருகி, மிக்கது கண்ணநீராய்ப் பெருகுகிறபடி. 3நெஞ்சு ஒழியப் பாய்கிற கண்ணீரே அன்றோ? மல்குதல் – மிகுதல். 4‘தாமரை இதழ்களினின்றும் விசேடமாகப் பாய்கிற தண்ணீர் போன்று, ஆனந்தக்கண்ணீர் பெருகும் படியான கண்களில் துக்கக் கண்ணீர் எதற்காகப் பெருகுகிறது?’ என்றார் ஸ்ரீவால்மீகி. இங்கு ‘ஆனந்தக் கண்ணீருக்குத் தகுதியான கண்களிலே சோகக் கண்ணீர் பெருகிறது

 பிரஹ்லாதனைப் போலே, ஒரு 4தம்பம் இல்லாதபடி இருக்கையாலே கொம்பை இழந்த தளிர் போலே வாடும். ‘முதல் வாட்டம் – தளிர்’ என்று கூறத் தக்கவாறு இருக்கிறது, அடுத்த கணத்தில் வாட்டம் என்பாள், ‘வாடி வாடும்’ என்கிறாள்.

 பிரஹ்லாதனைப் போலே, ஒரு 4தம்பம் இல்லாதபடி இருக்கையாலே(தம்பம், சிலேடை; ‘தூண், ஆதாரம்’ என்பன பொருள். ‘தம்பம் இல்லாமையாலே’
என்றது, தம்பத்தில் தோன்றியது போன்று, இங்குத் தோன்றாமையாலே என்றபடி.) கொம்பை இழந்த தளிர் போலே வாடும். ‘முதல் வாட்டம் – தளிர்’ என்று கூறத் தக்கவாறு இருக்கிறது, அடுத்த கணத்தில் வாட்டம் என்பாள், ‘வாடி வாடும்’ என்கிறாள்.

இந்நிலையில்  இவளை ‘வாணுதல்’ என்னக் கூடுமோ?’ என்னில், 7‘ஊனில் வாழுயிரில்’ கலவியால் உண்டான புகர் இன்னம் அழிந்தது இல்லை ஆதலின், கூறுகிறாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே அறியலாமாதலின், குணாதிக விஷய விரஹத்தாலே வந்த இழவு என்னுமிடம்  முகத்தின் எழிலிலே தெரியாநின்றது என்றபடி

வாணுதல் இம்மடவரல் நைகின்றாள் நீர் இரக்கம் இலீர் -இவ்வவயவ சோபை போகத்திற்குக் காரணமாதல் அன்றி நைகைக்கு உறுப்பாவதே! ஐனக மஹாராஜன் பிராட்டியினுடைய பேரழிகினை நினைந்து, 1‘இச்சீதை’ என்று சுட்டிக் கூறியது போன்று, பெற்ற தாயாகிய இவளும் பெண்ணின் பேரழகினை நினைந்து ‘இம்மடவரல்’ என்கிறாள். ‘பெற்ற எனக்கு 2ஆகர்ஷகத்திற்குக் காரணமான இது, கைப்பிடித்த உமக்கு உபேஷைக்குக் காரணம் ஆவதே!’ என்பாள், ‘நீர் இரக்கம் இலீர்’என்கிறாள்

உம்மைக் காண – உம்மை இவள் காண்கைக்கு ஈடாக. 2கருமுகை மாலை தேடுவார் சூடுவதற்காகவே தேடுவது; சும்மாட்டைக் கொள்ள அன்று. அது போன்று, உம்மை ஆசைப்படுவார் படுவது, காட்சிக்காக ஆயிற்று; 3‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண’ (நான்முகன் திருவந். 39.)என்றார் திருமழிசைப்பிரான். 4‘காரார் திருமேனி காணுமளவும் போய்’ (சிறிய திருமடல், 69.)என்றார் திருமங்கைமன்னன். 5‘கண்களால் காண வருங்கொல்?’ (திருவாய். 3. 8 : 5)என்று இவர்தாமே பின்னரும் அருளிச் செய்வர்

அரக்கும் மெழுகும், நெருப்பிற்குள் புகில் கரிந்து போம்; கடக்க இருக்கில் வலிக்கும்; அதனைச் சார்ந்து நின்றுழி உருகும்; அது போன்று, 4முடிந்து பிழைக்கவும் பெறாமல், தரித்திருக்கவும் பெறாமல், நோவுபடும்படி செய்கின்றீரே!’ என்பாள், ‘எரிஅணை அரக்கும் மெழுகும்’ என்கிறாள். இவள் நிலை இது.

அரக்கன் இலங்கை செற்றீருக்கு -‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான். 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே ஒன்று வாய்த்ததைக் கொண்டு 2‘அது அந்யார்த்தம்’ என்று இராமல் நோவுபடாநின்றாள்’ என்கிறாள்(மானத்து வண்டல் உழ ஒர் எழுத்தின் வடிவு உற்ற சீர் மான’ என்றார், திவ்வியகவி  ஐயங்கார்)

வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் – ‘மிடுக்கை யுடைய புள்ளாலே தாங்கப்பட்டவனே! என்கிறாள். ‘விடாயர் இருந்த இடத்தே 2சாய்கரகம் போலே உயர வைத்துக்கொண்டு வந்து காட்டும் பரிகரத்தை யுடையவனே!’ என்கிறாள் என்றபடி. அன்றி, ‘மிடுக்கையுடைய புள்ளைக் கொடியாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம்.

என வள்ளலே கண்ணனே என்னும் – விடாயர் கற்பூரத்திரள் வாயில் இடுமாறு போன்று, இவ்வளவான துன்பத்திற்கு இடையில் வந்து உன்னை எனக்குக் கையாளாகத் தருமவனே என்னாநின்றாள்.

வஞ்சனையே – பகலை இரவு ஆக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்ற கூறிப் பின்னர் எடுத்தும் செய்த செயல் போலே, இவளை வஞ்சித்தீர் இத்தனை.  அளவு படைக்குப் பெரும்படை தோற்பது வஞ்சனையால் அன்றோ?

உம்மைத் தஞ்சம் என்ற – 6தஞ்சமாகிய தந்தைதாயொடு தானுமாய்’ என்னும் சர்வ ரக்ஷகனைக் காதுகரைச் சொல்லுமாறு போன்று சொல்லுகிறாள். மகள் நிலையைப் பார்த்து. 7தஞ்சம் அல்லாதாரைத் ‘தஞ்சம்’ என்று இருந்தால் சொல்லுமாறு போன்று சொல்லுவதே! உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவளை எத்தனை படுத்த வேண்டும்? இனி, நீர் படுத்துவமவற்றைச் சொல்லில், ஒரு மஹாபாரதத்துக்குப் போரும் போலே’ என்கிறாள்

நுமது இட்டம் என் கொல் – 3இரா வணன் இரணியன் முதலியோர்களை முடித்தது போன்று, முடிக்க நினைக்கிறீரோ? நித்தியசூரிகளைப் போன்று, கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பிக்கிறீரோ? தன்னையும் மறந்து உம்மையும் மறந்து சம்சாரிகளைப் போன்று உண்டு உடுத்துத் திரிய வைக்கிறீரோ? இவள் பேற்றில் நீர் நினைத்திருக்கிறது என்? இவ்வேழைக்கே – சிறிதும் மனத்திட்பம் இல்லாதவளான 4இவள் விஷயத்தில் நீர் நினைத்திருக்கிறது என்?

தாமரையிலே முத்துப் பட்டாற் போன்று, இக்கண்ணும் கண்ணீருமாய் இருக்கிற இருப்பை, காட்டில் எறித்த நிலவு ஆக்குவதே!3 இவ்விருப்புக்குக் கிருஷி பண்ணிப் பல வேளையிலே இழப்பதே!4 பொன்னும் முத்தும் விளையும்படி அன்றோ கிருஷி பண்ணிற்று?’ என்று இப்போது இவள் இழவுக்கு அன்றியே, அவன் இழவுக்காக இவள் கரைகின்றாள்.

தமப்பன் செல்வம் புத்திரனுக்குக் கிடைக்க வேண்டியது முறையாமாறு போன்று, இவ்வாற்றாமையால் வந்த கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல், 1‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.

மடுவின் கரையிலே அரை குலையத் தலை குலைய வந்து உள்ளே போய்ப்புக்கு, யானையை ஒரு கையாலும் முதலையை ஒரு கையாலும் அணைத்து எடுத்துக்கொண்டு கரையிலே ஏறி, ‘திருவாழியாலே முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, குழந்தையின் வாயில்  முலையைக் கொடுத்துக் கிரந்தியைச் சிகிச்சை செய்வது போன்று, பெரிய பிராட்டியாரும் தானுமாக, 5இரண்டுக்கும் நலிவு வாராமல் திருஆழியாலே விடுவித்துச் சாத்தியருளின திருப்பரியட்டத்தின் தலையைச் சுருட்டித் தன் வாயிலே வைத்து அவ்யானையின் புண் வாயை வேதுகொண்டு திருக்கையாலே குளிரத் தீண்டிக்கொண்டு நின்றாற்போலே, இவ்வாழ்வாரும் 6’வலங்கொள் புள் உயர்த்தாய்’என்று கூப்பிட்ட துக்க ஒலியானது செவிப்பட, ‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று, பிற்பட்டதனால் உண்டாகும் 1நாணத்தாலும் பயத்தாலும் கலங்கினவனாய், தன்னுடைய 2சொரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும் வந்து கலந்து அத்தாலே மகிழ்ந்தவனாய், தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

என் – அவன் மேல் விழத் தாம் 5இறாய்த்தமை தோன்றுகிறது. இவர், முன் நிலையினை நினைந்து இறாய்நின்றார்; அதுவே காரணமாக அவன் மேல் விழாநின்றான். கமர் பிளந்து இடத்திலே நீர் பாய்ச்சுவாரைப் போன்று. 6‘உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து’ என்கிற ஆவியிலே வந்து சேர்கின்றான் ஆதலின், ‘என் ஆவி’ என்கிறார். ‘விடாயர் மடுவிலே சேருமாறு போன்று வந்து சேர்கின்றான்’ என்பார், ‘சேர்’ என்கிறார். ‘இப்படி மேல் விழுகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘அம்மான் ஆகையாலே’ என்கிறார் மேல்: அம்மானுக்கு – நித்திய விபூதியில் உள்ளாரைப் போன்று 7லீலா விபூதியில் உள்ளார்க்கும் வந்து முகங்காட்ட வேண்டும் சம்பந்தத்தை உடையவனுக்கு.

எம்பெருமானார், இவரோடு கலப்பதற்கு முன்பு இறைவனைப் போன்றே இவையும் ஒளி இழந்தவையாய்ச் சத்தை அற்ற பொருளுக்குச் சமமாய், இவரோடு கலந்த பின்பு ஒளிப்பொருளாகிச் சத்தை பெற்ற படையைச் சொல்லுகிறது’ என்று பொருள் அருளிச்செய்வர். ‘ஆயின், இறைவன் ஒளியிழந்தால் இவையும் ஒளியிழக்க வேண்டுமோ?’ எனின், கற்பகத்தரு  வாடினால் அதில் பூவும் தளிரும் வாடுவன அன்றோ?

வான்சுடர் – முதலிலே தேஜோ ரூபமான திருமேனி; மிகவும் ஒளி பெற்றது இவருடைய கலவியாலே. புறம்பு ஒளியாய் உள்ளும் மண்பற்றி இருக்கை அன்றி, நெய் திணுங்கினாற்போன்று ஒளிப்பொருளாகவே இருத்தலின், ‘வான் சுடர்’ என்கிறார்.

கண் பாதம் கை கமலம் – முகமறிந்து கோத்தவாறே முத்து விலை பெறுமாறு போன்று, இவரும் திவ்விய அவயவங்களைச் சேர்த்து அனுபவிக்கிறார்.

என்னுள் கலந்தவன் –‘அகஸ்தியர்க்கு உடன்பிறந்தவன்’ என்னுமாறு போன்று, நிரூபகம் இருக்கிறபடி. ‘நாராயணன், வாசுதேவன்’ என்பன போன்று, ‘என்னுள் கலந்தவன்’ என்று  காணும் அவனுக்குத் திருநாமம்

 ஆரா அமுதமாய்–எப்போதும் உண்ணாநின்றாலும் மேன்மேலென விருப்பத்தை விளைக்கும் அமிருதம் போன்று எல்லை இல்லாத இனியனாய். அல் ஆவி – ‘இப்படி, 2போக்யம் குறைவற்றால் போக்தாக்களும் அதற்குத் தகுதியாகப் பெற்றதோ? எனின், ‘ஒரு பொருளாக எண்ணா ஒண்ணாத என்னுடைய உயிரோடே அன்றோ வந்து கலந்தது? தன்னையும் அறிந்திலன், என்னையும் அறிந்திலன்’ என்பதாம்.

, 1சௌபரியைப் போலே பல வடிவு கொண்டு இவரை அனுபவிக்கிறான் ஆதலின், ‘பலபலவே வடிவு’ என்கிறார் எனலுமாம். முத்தன் தன்னை யனுபவிக்கும் போது படுமாறு போன்று, தான் என்னை அனுபவிக்கப் பல வடிவு கொள்ளாநின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்று ஆசைப்பட்டுப் பெறாது ‘ஆடியாடி’யாய் விசனபடாமல், இப் பாசுர மாத்திரத்தைச் சொல்லவே நான் பிரார்த்தித்துப் பெற்ற பேறு பெறுவார்கள். ‘ஆயின், இவரைப் போன்று, ஆற்றாமை இல்லாதவர்களும் பெறுதல் கூடுமோ?’ எனின் தமப்பனது தனம் கிடந்தால் புத்திரன் 1அழித்து ஜீவிக்குமத்தனை யன்றோ? 2அது போன்று, இங்கும் ஆழ்வார் பட்ட வியசனம் படவேண்டா; இவருடைய அனுபவத்தைப் பரம பதத்திலே அனுபவிக்கப் பெறுவர்.

வைகுந்தா – ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் ‘ஆர்யபுத்ர’ என்னு மாறுபோன்றும், திருவாய்ப்பாடியில் பெண்கள் ‘கிருஷ்ண’ என்னுமாறு போன்றும், ‘வைகுந்தா’ என்று அவனுடைய முதற்பெயரைச் சொல்லுகிறார். 1இதனால், ‘நித்திய விபூதியிலுள்ள இறைவன் தம்முடனே வந்து கலந்தான் என்று மகிழ்கின்றார்’ என்னுமிடம் தோன்றுகிறது

பாணத்தைக், கிருஷ்ணன் அருச்சுனனை மறைத்துத் தன் மார்பிலே ஏற்றுக்கொண்டான்’ என்கிறபடியே, 1பகதத்தன் விட்ட சத்தியை, அருச்சுனனைத் தள்ளித் தன் 2அந்தப்புரத்திலே ஏற்றாற்போலே, தாம் ஏறிட்டுக்கொண்டு அனுபவித்தல் செய்யுமித்தனை. 3பாவங்கள்தாம் – அசேதனமாய் இருப்பன சில கிரியா விசேடங்களாய் அவை செய்தபோதே நசிக்கும்; செய்தவன் அறிவில்லாதவன் ஆகையாலே செய்ததை மறப்பான்; முற்றறிவினனான சர்வேஸ்வரன் உணர்ந்திருந்து பலத்தை நுகர்விக்க நுகர்வான் இத்தனை. அவன் மார்பிலே ஏற்றுக்கொள்கையாவது. ‘பொறுத்தேன்’ எனத் தீர்தல். 4‘அபூர்வங்காண், சத்திகாண், பலாநுபவம் பண்ணுவிக்கிறது’ என்று கூறுவதைக் காட்டிலும், முற்றறிவினனான இறைவன் செய்விக்கிறான் என்கை அழகிதே அன்றோ?

 சிறிது ஓர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள் ஒக்கவே விழுங்கிச் சிக்கெனப் புகுந்தான் – மிகச்சிறியதாய் இருப்பது ஒரு பொருளும் தன் பக்கல்நின்றும் பிரிகதிர்ப்பட்டு நோவுபடாதபடியாகத் தன் நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே உலகங்களை ஒருகாலே வைத்து, இனிப் பேராதபடி புகுந்தான். ‘நாம் ஆழ்வாரை அனுபவிக்கும் போது, செருப்பு வைத்துத் திருவடி தொழப் புக்காற் போலே ஆக ஒண்ணாது’ என்று பார்த்து, உலகத்தைப் பாதுகாத்தற்கு வேண்டும் வியாபாரங்களை எல்லாம் செய்து முடித்து, வேறு ஒன்றில் நோக்கு இல்லாதவனாய் அனுபவித்துப் போக மாட்டாதே இருந்தான் என்றபடி. இராசாக்கள் அந்தப்புரத்திற்புகுவது, நாட்டுக் கணக்கு அற்ற பின்பே ஆதலின், ‘உலகுகள் ஒக்க விழுங்கிப் புகுந்தான்’ என்கிறார். இனி, ‘சிக்கெனப் புகுந்தான்’ என்பதற்கு, 2‘அநந்யப் பிரயோசனமாகப் புகுந்தான்’ என்று கூறலுமாம்.

ஐந்து பைந்தலை ஆடு அரவணை மேவிப் பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய் – பெரு வெள்ளத்துக்குப் பல 3வாய்த் தலைகள் போலே, பகவானுடைய அனுபவத்தால் வந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பல தலைகளை உடையவனாய், கட்குடியரைப் போலே ஆடுகின்றவனாய், 4சைத்திய சௌகுமார்ய சௌகந்தியங்களை உடையனான திருவனந்தாழ்வான்மேலே, திருப்பாற்கடலிலே, ‘எல்லாப்பிராணிகளும் கரைமரம் சேர்ந்தாம் விரகு என்?’ என்று யோகநித்திரையில் திருவுள்ளம் செய்த என் நாயன் ஆனவனே!

 மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து – ‘சம்பந்தி சம்பந்திகளோடு உம்மை ஏற்றுக்கொள்ளுவதற்கு நீர் செய்தது என்?’ என்ன, கடலுக்குள்ளே கிடந்த ஒரு துரும்பு திரைமேல் திரையாகத் தள்ள வந்து கரையிலே சேருமாறு போன்று, மாறிமாறிப் பிறந்து வாராநிற்க, திருவடிகளிலே கிட்டிக்கொண்டு நிற்கக் கண்டேன் இத்தனை. “பாவங்களை அனுபவித்து மீளுதல், பிராயஸ்சித்தம் பண்ணி மீளுதல் செய்யக் காலம் இல்லை’ என்பார், ‘மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறார்

இலங்கை செற்றாய்  – பிராட்டியுடைய சேர்க்கைக்கு விரோதியாயிருந்தவனைப் போக்கியதுபோன்று என்னுடைய சேஷத்துவ விரோதியைப் போக்கினவனே!

அவர் கேசவன் தமரே – அவர்கள் யாரேனுமாகவுமாம், 2குலம் சரணம் விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

விப்ரர்க்குக் கோத்ர சூத்ர சரண கூடஸ்தர், பராசர பாரா சர்ய போதாயநாதிகள்;  (பிரபந்நர்கட்கு) பிரபந்ந ஜந கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்’-(ஆசார்ய ஹ்ருதய சூத். 35) ‘கோத்ரமாவது,  அபத்ய சந்ததி; அந்த கோத்ரந்தான் அநேகமாய்த் தத்தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப  பரத்வாஜ வத்ஸப் பிரப்ருதிகள் பலரும் உண்டாகையாலே ‘பராசராதிகள்’ என்கிறது. சூத்ர  கூடஸத்தர், போதாயநாதிகள்; சூத்ரமாவது, கர்ம அநுஷ்டாந பிரதிபாதகமான கல்பம்:  அது தானும் பலவாய்த் தத்தத் கர்த்தாக்களான ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும்  உண்டாகையாலே, ‘போதாயநாதிகள்’ என்கிறது. சரணங்களாவன, வேதசாகைகள்; சர்வ  சாகைகளுக்கும் பிரதான பிரவர்த்தகன், பாராசர்யனாயிருக்கச்செய்தேயும், பின்பு தத்தத்  சாகைகளுக்குத் தனித்தனி பிரவர்த்தகரான கடக கலாப கண்வாதிகளும்  உண்டாகையாலே‘பாராசர்யாதிகள்’ என்கிறது’

நாராயணனாலே -தன் மேன்மையைப் பாராமல் உகவாதாரையும் விட மாட்டாதபடி வத்சலனாய் உள்ளவனாலே. 1சமிதை பாதி சாவித்திரி பாதியாக அன்றி, அவனுடைய நிர்ஹேதுக கிருபையாலேயே என்பார் ‘நாராயணனாலே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார். 2நாராயணனாலே என்ற இடம், மாசதிரினுடைய உபபாதனம்.-அதாவது, நாராயண சப்தத்துக்கு  அன்மொழித் தொகைப் பொருளில் வாத்சல்யம் சொல்லுகையாலே, ‘மாசதிர்’ என்பது,
பகவத் கிருபையைச் சொல்லுமிடத்தில் மாசதிருக்கு நாதராயணபதம் உபபாதமாயிருக்கும்  என்றபடி. உபபாதனம – விரிவு. இப்பொருளில் நாராயணனாலே என்னும் மூன்றாம்  வேற்றுமையை முதல் வேற்றுமையாகக் கொள்க. ‘நாாயணனாகிற மாசதிரைப் பெற்று  என்பது பொருள். ‘

அணைக்குக் கிழக்குப்பட்ட நீரைப் போன்றது அன்றோ கழிந்த காலம்? ஆதலால், இனி மேல் உள்ள காலமாகிலும், யாதவங்களும் சேர் கொடேன் என்று -‘உன்னை யாதொரு தவத்திலும் புக்குக் கிலேசப்படும்படி விடேன்’ என்று. இறைவனை விட்டு வேறு உபாயங்களைப் பற்றுதல் 2அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் ஆதலின், ‘யாதவங்களும் சேர்கொடேன் என்று’ என்கிறார்.

வாலி போன வழியை அடைத்து மஹாராஜர் குறும்பு செய்தாற்போலேயாம்’ என்று நிலையியற் பொருளாக இருந்து. இவரை வர நிறுத்த ஒண்ணாதே இவருக்குமாகத் தான் புகுந்து இருந்தான் ஆதலின், ‘புகுந்து இருந்து’ என்கிறார்.

குடக்கூத்தன்– பிராஹ்மணர் செல்வம் மிகுந்தால் யாகங்கள் செய்யுமாறு போன்று, ஆயர்கள் செல்வம் மிகுந்தால் செருக்குக்குப் போக்கு விடுவது ஒன்றாயிற்று குடக்கூத்தாவது

கைக்கொள்ளுதலாவது, ‘சேற்றிலே விழுந்த மாணிக்கத்தை எடுத்துக் கழுவி விநியோகம் கொள்ளுமாறு போன்று, என்னை அங்கீகரித்து’ என்றபடி.

எனைத்தோர் பிறப்பும் எதிர்சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால்’ என்கிறார்; அதாவது, ‘எதிர் சூழல் புக்கு ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன் போம் வரம்புக்கு எதிர் வரம்பே வருமாறு போன்று, இவர் பிறந்த பிறவி தோறும் தானும் எதிரே பிறந்து வந்தான்’ என்கிறார் என்றபடி

சூழல்’ என்று அவதாரத்தைச் சொல்லக் கடவது. ‘விதி’ என்றது, பகவானுடைய கிருபையை. ‘பகவானுடைய கிருபையை விதி என்பான் என்?’ என்னில், இறைவனுக்குத் தப்ப ஒண்ணாதது ஆகையாலே. அதாவது, நாம் நினைத்தவற்றைத் தலைகட்ட ஒட்டாத கர்மம் போன்று, ஈஸ்வரன் நினைத்த காரியங்களையும் கிருபைக்குப் பரதந்திரனாய்த் தலைக் கட்ட மாட்டானாகையாலே

இலங்கை 1அரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் – இலங்கையில் இராட்சச சாதியில் விபீஷணன் முதலியோரை வைத்து, முருடரான இராவணன் முதலியோர்களை அழித்தாற்போலே ஆயிற்று, இவருடைய 2அவஸ்தையைத் தவிர்த்தபடி

எம்மான் அமரர் பெம்மான் – இந்திரியங்களினுடைய இதர விஷயங்களில் உள்ள ஆசையைத் தவிர்த்த மாத்திரமே யன்றி நித்திய சூரிகளுக்குத் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமாறு போன்று எனக்குத் தன்னை அனுபவிக்கத் தந்தவன்.

எம்மானை என் ஆழி வண்ணனை – குளப்படியிலே கடலை மடுத்தாற்போலே, தான் குணக் கடலாய் இருக்கின்ற இருப்பை எனக்கு அறிவித்தவனை. ‘இப்படி, அவன் தானே காட்ட நான் கண்டாற்போலே காண்பார்க்குக் காணலாமித்தனை அல்லது தன் முயற்சியால் காண்பார்க்கு அறியப்போமோ?’ என்றபடி.

இப்படி இருக்கிற 1முக்தப் பிராப்பிய போகத்தைத் தமக்கும் தம் சம்பந்தம் உடையார்க்கும் அவன் கொடுப்பானாகப் பாரிக்கிறபடியைக் கண்டு,‘சம்சாரிகளையும்  இப்படிப்பட்ட இன்பத்தினை உடையவர்களாகச் செய்ய வேண்டும்’ என்று பார்த்து, அவர்களைக் குறித்து ஹிதம் அருளிச்செய்ய, அது கேட்ட பின்பும் அவர்கள் பழைய நிலையினின்றும் குலையாமல், 2மாலியவான் தொடக்கமானார் இராவணனுக்குச் சொன்ன ஹிதம் போலே அவர்கள் இதனை விரும்பாதிருக்க, ‘நாம் நம்முடைய அனுபவத்தை விட்டு இவர்களோடே துவக்குண்கிற இதற்குப் பிரயோஜனம் என்?’ என்று, வழி பறிக்கும் நிலத்தில் தம் கைப்பொருள்கொண்டு தப்பினார் மகிழ்ச்சியையுடையவர்கள் ஆமாறு போன்று, ‘நாம் முந்துற முன்னம் இவர்களைப் போன்று ஆகாது ஒழியப் பெற்றோம் அன்றோ?’ என்று 3தம் இலாபத்தை அநுசந்தித்து இனியராகிறார்.

இச்சேதனன் முக்தனாய்ச் சென்று கிட்டினால், 1‘அஹம் பிரஹ்மாஸ்மி – நான் இராஜ புத்திரன், பிரஹ்ம பிரகார பூதன்’ என்னக்கடவன்; ஆகில், ‘இங்ஙனே வாராய்’ என்றால், அவன் அங்கீகாரம் பெற்று, தாய் தந்தையர்கள் இருந்த படுக்கையிலே குழந்தை சென்று ஏறுமாறு போன்று ‘அவனை இவ்விதமாக அறிந்தவன், அவன்மேல் காலால் ஏறுகிறான்’ என்று ஏறக் கடவனாகச் சொல்லுகிற அப்பேற்றைச் சொல்லுகிறது.

மூவகைத் துன்பங்களாலே நொந்த சம்சாரி சேதனன், 3‘கோடைக்காலத்தில் குளிர்ந்த தடாகத்தை அடைவது போன்று, பரம்பொருளை அடைந்தவனாய் இருக்கிறான்’ என்கிறபடியே, அப்பெரிய மடுவிலே வீழ்ந்து தன் தாபம் எல்லாம் ஆறுமாறு போன்று, முதலிலே, 4இவை இல்லாதவன் திருவனந்தாழ்வான்மேலே அணைந்து, இவை உண்டாய்க் கழிந்தாரைப் போன்று இருக்கின்றான் ஆதலின், ‘அணைவது’ என்கிறார். விடாயர் மடுவிலே விழுமாறு போலே ஆயிற்று அணைவது. 5சேஷபூதன் அடிமை செய்து அல்லது தரியாதது போன்று, சேஷியும் சேஷபூதனோடே அணைந்தல்லது தரியாதானாய் இருக்கிறபடி.

புணர்த்த தன் உந்தியோடு மன்னிப் புணர்க்கும் அயன் ஆம் ஆகத்து மன்னி அழிக்கும் அரன் ஆம் – இவை தாம் இவர்கள் செய்ய வல்லராவது அவன் திருமேனியைப் பற்றி இருந்த போதாயிற்று; பால் குடிக்கும் குழந்தை வாயில் முலை வாங்கினால் தரியாதது போன்று, இவர்களும் திருமேனியை விட்டு விலகின், ஆற்றல் இல்லாதவர்கள் ஆவர்கள் என்றபடி. 1இத்தால், சாமாநாதிகர்ணயத்தாலே அந்தர்யாமித்துவம் சொல்லிற்று. ‘புணர்த்த தன் உந்தி’ என்கையாலே, 2காரணத்துவம் சொல்லிற்று; ‘ஆகத்து மன்னி’ என்கையாலே, திருமேனியைப் பற்றிப் பெற்ற சொரூபத்தினை உடையவர் என்னுமிடம் சொல்லிற்று.

சிலபொருள்களை 1வறை நாற்றத்தைக் காட்டி முடிக்குமாறு போன்று, புலன்களிலே மூட்டி நசிப்பிக்கையாலே, இந்திரியங்களைப் ‘பொறி’ என்கிறது. இத்தால், ‘ஓர் அளவிற்கு உட்பட்ட பொருள்களைப் பற்றுகின்ற இந்திரியங்கட்கு வசப்பட்டு இருத்தலைத் தவிர்ந்து’ என்றபடி.

செய்வதற்குச் சுக ரூபமாக இருக்கும், நினைத்த பலன்களைக் கொடுத்துத் தான் அழிவில்லாமல் இருக்கும்’ என்னும்படி அறுதி செய்யப்பட்ட விஷய 6சாரஸ்யத்தாலே, சாதன தசையே தொடங்கி இனியதாய் இருத்தலின் ‘பலம் முந்து சீர்’ என்கிறார். ஓவாதே – ‘பௌர்ணமி அல்லாத மற்றை நாள்களில் கடல் தீண்டலாகாது’ என்னுமாறு போன்று ஒரு நியதி இலை-இதற்கு; மாறாமல் அடைவதற்குப் பாருங்கோள்.

இப்படி, தன் நினைவைப் தப்பிப் போகச் செய்தேயும், கிருஷிகன் ஆனவன் ‘ஒருகால் பதர்த்ததே அன்றோ?’ என்று சோம்பிக் கைவாங்காதே மேலே மேலே கோலுமாறு போன்று, ‘ஒரு கால் அல்லா ஒருகாலாகிலும் ஆகிறது’ என்று படைத்துக் கொண்டே இருத்தல். 3‘சோம்பாது இப்பல் உருவை எல்லாம் படர்வித்தவித்தா’ என்றார் பெரிய திருவந்தாதியில்.

கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று பிறந்தாயிற்றுக் காப்பது’ என்கிறார் மேல். மா ஆகி – ஹயக்கிரீவமூர்த்தியாய் அவதரித்தபடி. ஆமை ஆய் மீன் ஆகி –5சாஸ்திரங்களுக்குக் காரணமான அவதாரங்கள். மானிடம் – இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்கள்

அவன் வீயத்தோன்றிய -‘தன் தோற்றரவிலே அவன் பிணமாம்படி தோன்றின; அதிர்த்துக் கொண்டு புறப்பட்டபோதை அட்டஹாஸமும், நாமடிக்கொண்ட உதடும், நெற்றியது கண்ணும் உச்சியது புருவமுமாய்க்கொண்டு தோன்றின போது பொசுக்கின பன்றி போல உருகினான் ஆயிற்றுப் பொன்னன் ஆகையாலே’ என்றபடி.

புயல் மழை வண்ணர் புரிந்து உறைகோயில் – மழை பெய்கிற மேகம் போன்று இருக்கிற வடிவழகையுடையவர் அவ்வடிவழகை முற்றிலும் அனுபவிக்கக் கொடுத்துக்கொண்டு வாழ்கின்ற கோயில் 2இனி, ‘மேகம் போன்று தண்ணீர், நிலம் என்ற வேற்றுமை இன்றி எல்லார்க்கும் முற்றிலும் அனுபவிக்கக் கொடுத்துக் கொண்டு வாழ்கிற கோயில்’ எனலுமாம். 3இதனால், பிராப்ய பிராபகங்கள் தமக்கு ஒருவனேயாய் இருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. பயனான விஷயந் தான் இருக்கிறபடி

 எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் – இனிக் கூறு இட ஒண்ணாதபடி சிறு கூறான மிகச்சிறிய காலத்திலும், நீ ஸ்வாமியான முறை தப்பாதபடி என் மனத்திலே வந்து புகுரப்பெறில். மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன் – 2இஃது ஒழிந்த எல்லாக் காலத்திலும் பின்னை இதுதானும் வேண்டேன். ‘ஆயின், அப்படி ஒரு கால் அனுபவிப்பித்தால் பின்னர் விரும்பாரோ?’ எனின், குளிர் சுரத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ‘ஒருகால் நாக்கு நனைக்க’ என்று கூறுமாறு போன்று கூறுகின்றார்.  ‘ஆயின், ‘கணநேரம் அனுபவிக்க அமையும்’ என்னும்படியான பொருள் உளதோ?’ எனின், ‘மிக்கார் வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே அன்றோ?’ என்கிறார்; அதாவது, பகவானுடைய அனுபவத்தில் மிக்காராய், ‘எல்லாவற்றையும் அறிந்தவர்கள், பழையராய் இருந்தும் புதியராகவே காணப்படுகின்றவர்கள்’ என்கிறபடியே, வேதத்திலே குற்றமற்றவர்களாகச் சொல்லப்பட்டுள்ள நித்திய சூரிகள் அனுபவிக்கின்ற அக்காரம் போலவும், கனி போலவும் உள்ள உன்னுடைய இனிமையின் மிகுதியை எனக்குப் பிரகாசிப்பித்தவனே! அன்றோ?’ என்கிறார்.

அக்காரக்கனியே’ என்பதற்கு, 1அக்காரம் என்னும் மரமானது 2கோட்புக்குப் பழுத்த பழம் போன்று நிரதிசய போக்கியன் ஆனவனே என்று பொருள் கோடலுமாம்.(கோட்புகுதல் – மரங்கள் பயன் கொள்ளும் பருவத்தனவாதல்;  ‘கோட்புகுகையாவது, பாலசூதாதிகள் அபிநவமாகப் பலவத்துகரைகை’ என்பது ஈடு.)‘அக்காரக் கனியே’ என்ற இது. நித்திய சூரிகளுக்கு எல்லா விதமான இனிய பொருள்களும் தானேயாயிருக்கிறான் என்னுமிடத்துக்கு உபலக்ஷணம்.

நான் எல்லாத் தொண்டுகளையும் செய்வேன்’ என்கைக்குச் சம்பந்தம் உண்டாய் இருக்க, ஒரு காரியமும் இல்லாதாரைப் போன்று கையொழிந்திருந்தேன்; ‘முடிந்தேன்’ என்றது போன்று இருக்கின்றது; ஒரு நாளை இழவே போந்ததாக இருக்க, அநாதிகாலம் இழந்து போந்தேன் என்பார், ‘ஒழிந்தேன்’ என்கிறார்.   

அவதாரங்கள் போன்று தீர்த்தம் பிரசாதியாமல் தங்கி இருக்கும் தேசமாதலின், ‘மருவிய கோயில்’ என்கிறார். .

மதி  தவழ் குடுமி மாலிருஞ்சோலை பதியது – சூற்பெண்டுகள் 2சுரம் ஏறுமாறு போன்று சந்திரன் தவழ்ந்து ஏறுகின்ற சிகரத்தையுடைய திருமலையாகின்ற பதியை. 

முராசுரன் பல ஆயிரம் பாசங்களாலே தன்னை மறைய வரிந்து கொண்டு இருந்தது போன்று, அறிவின்மை முதலியவைகளால் தன்னை மறைய வரிந்துகொண்டிருத்தலின் ‘கரும வன்பாசம்’ என்கிறார்.

 மறு இல் வண்சுனை சூழ் மாலிருஞ்சோலை புறமலை சாரப் போவது கிறியே – 2‘பெரியோர்களுடைய மனத்தைப் போன்று தெளிந்த தண்ணீரையுடையது’ என்கிறபடியே, மறு அற்று, ஆழ்வார் திருவுள்ளம் போன்று தெளிவையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய், ஊற்று மாறாத சுனைகளாலே சூழப்பட்ட மாலிருஞ்சோலைப் புறமலை சாரப் போகும் இதுவே பகவானை அடைதலை வேண்டியிருப்பார்க்கு வருத்தம் அற அடையக்கூடிய நல்விரகு.

வலஞ்செய்து நாளும் வலம் கழியாதே – சர்வேஸ்வரன் தன்னை அடைகைக்கு உறுப்பாகத் தந்த மனித சரீரத்தைக் கொண்டு வலிமையை உண்டாக்கிப் பின்னை அவனை அடையாமல் இதர விஷயத்தில் ஈடுபடுகைக்கு உடலாக்கிக் கெடாமல். ஆய மாயவன் வலம் செயும் கோயில் – திருச்சித்திரகூடமலையின் பக்கத்தில் பிராட்டியையுங் கூடக் கையைப் பிடித்துக்கொண்டு 1உலாவினாற்போன்று, பிராட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத்தோடே சஞ்சரிக்கிற தேசம். இனி, ‘வலஞ்செயும் மாயவன்’ என்பதற்கு, 2‘எவன் தன்னையும் கொடுத்துத் தன்னை அனுபவித்தற்குத் தக்க பலத்தையும் கொடுப்பவனோ’ என்கிறபடியே, 3‘தன்னையும் கொடுத்து, தன்னை நுகர்வதற்குத் தகுதியான சத்தியையும் கொடுக்கும் ஆச்சரியத்தையுடைய கிருஷ்ணன்’ என்று பொருள் கூறலுமாம்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading