ஸ்ரீ ஈட்டில் வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள் –இரண்டாம் பத்து –

விண் தொழ வேறு இன்றித் தன்னுள் வைத்து – வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகிற பிரமன் சிவன் இவர்கட்கும், வேற்றிடத்து மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங்கொடுத்து வைக்கிற சீலத்தை நினைத்து விண்ணினுள்ளார் தொழாநிற்பார்கள்–பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பர்களோ?’என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள் அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்றருளிச் செய்தார். 

என்னையும் இசைவித்த சர்வேஸ்வரனைக் கொண்டாடீர்’ என்ன, கேட்ட ஆழ்வார், ‘ஒக்கும் ஆராயின், அதற்கும் அடி இறைவன் அன்றோ? நடுவே நெஞ்சைக் கொண்டாடினோமித்தனை ஆகாதே?’ என்று தம் திருவுள்ளத்தை விட்டு, சர்வேஸ்வரனைக் கொண்டாடுகிறார்.–எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த வளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த முதலிகளுட்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக்கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷணவர்’ என்றனர்; எம்பார், ‘அங்ஙனன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி ‘இசைவித்து’ என்கிறபடியே அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன் காண் பிரதமகுரு,’ என்றருளிச்செய்தார்.

திண்மதியைமுன்பே சேர்ந்திருக்குமவர்கட்குத் திண்ணிதான மதியைக் கொடுக்குமவனை. அதாவது, அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று, ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன, ‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன் காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே? உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றான்.0ஆக, இறைவன் தானே அழிக்கப் பார்க்கும் அன்றும் அழிக்க ஒண்ணாதபடியான திண்ணிய மதியைக் கொடுக்குமவன் என்பதாம்.

ஆடி-முதலில் ‘ஆடி’ என்றதற்கு அவ்வருகே ஒரு நிலை. இரண்டாம் ஆடி முதலில் ‘ஆடி’ என்றதனோடு அமையாது, இருகால் மட்டு ‘ஆடி’ என்கிறாள்; துன்பத்தின் மிகுதியைத் 3தாளங் கொண்டு அறியுமித்தனை. முதலிலே சஞ்சாரம் அரிதாய் இருக்கவும் ஆற்றாமையால் தூண்டப்பட்டுச் சஞ்சரிக்கிறாள்; ‘என்? முடிந்தாலோ?’ எனின்-குணாதிக விஷயமாகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; ‘ஸ்ரீபரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்விராமபிரானுடைய முகத்தில் விழிக்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக்கொண்டு கிடந்தான். 

திருத்தாயார்க்கு; 1‘இவளைப் பிரிந்து சமாதானம் பண்ணியிருந்த பெருமாள் சால அரிதாகச் செய்தார், இவளைப் பிரிந்து  தேகத்தைத் தரித்திருந்தார் என்பது யாது ஒன்று, அதனைச் சாலஅரிதாகச் செய்தார்; 2யானை ஏறவும் குதிரை ஏறவும் நாடு ஆளவும் கற்றாரித்தனை; பிரணய தாரையில் புதியது உண்டிலர்,’ என்பது திருவடி வார்த்தை-மால்யவானில் பெருமாள் இருந்த போது கார்காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு ‘வசிஷ்டசிஷ்யன் ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான், விரக்தன் ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. -இது ஏதேனும் 3இரவல் உடம்போ சுமந்து கொண்டு இருக்கைக்கு? இன்பத்திற்கு நிலைக்களம் அன்றோ? துக்கத்துக்கு நிலைக்களமோ இது? பிரிந்தால் கிரமத்திலே கூடுகிறோம் என்று தரித்திருக்க வல்லள் அல்லளே?’ என்கிறாள் என்றபடி.

திரு உடம்பு வான் சுடர் – அணைத்த போதை ஸ்பரிச சுகங் கொண்டு அருளிச்செய்கிறார்-ஈஸ்வரனுக்கு விக்ரஹமில்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர், ‘திருவுடம்பு வான்சுடர்’ என்னப் பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹமில்லை, குணமில்லை’ என்கிறவர்கள் செய்து வைக்கமாட்டாத பாவமில்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?” என்றருளிச்செய்வர் நஞ்சீயர்.-பலகாலும் விக்கிரத்தை வருணிக்கிறபடியை அனுசந்தித்து நம்பிள்ளை ஈடுபடுகிறார்.

“அப்பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாக இல்லை; பெண்ணாகவுமில்லை; அலியாகவுமில்லை; ஆணாகவுமில்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவுமில்லை; குணமாக இல்லை; மற்றைக் கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,” என்னும் வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகிருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி! நாட்டில் காணப்படுகின்ற மூன்றின் படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், ‘பிள்ளை இயலறிவுக்குப் போந்திருந்ததில்லையே! ‘ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கின்றாராதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?” என்றருளிச்செய்தார்.

எங்கும் பக்கம் நோக்கு அறியான் -‘ஆழ்வார் பக்கல் இறைவனுக்கு உண்டான 4அளவு கடந்த காதலைத் தவிர்க்க வேண்டும்’ என்று நாய்ச்சிமார் விரும்பி வார்த்தைகள் கூறினும் அவர்கள் பக்கல் கண் வைக்க மாட்டுகின்றிலன்.–ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச்செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை: – ‘அப்பன் ஸ்ரீபாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷமுண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய, அது கேட்கவேணும் என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்தேற, அப்பனும் அங்கே ஒரு குட்டிச்சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க, ‘இவரைச் சமாதி பங்கம் பண்ணவொண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க, அப்பனும் யோகத்திலே எழுந்தருளியிருக்கின்றவர் திரும்பிப் பார்த்து, ‘இங்கே சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள, ‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு, ‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச்செய்கைக்கு ஏது என்?’ என்ன, ‘நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும் அவர் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு மூன்றுதரம் அங்கே எட்டிப் பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக்குடியில் சிலர் வந்தார் உண்டாகவேணும் என்றிருந்தேன்காணும்’ என்றருளிச்செய்தார். 

சம்பந்தமுடையார் அளவும் பெருகினபடியைக் கண்டு, ‘இது இறைவன் என்பக்கல் செய்த பக்ஷபாத மிகுதி அன்றோ?’ என்று இனியராய், தம்மை அங்கீகரிக்கைக்கு ஈடான குணங்கள் செயல்கள் முதலியவற்றை அநுசந்தித்து, அவற்றிற்கு வாசகமான பன்னிரண்டு திருப்பெயர்களாலே அவனைப் பேசி அனுபவிக்கிறார்–‘சர்வேஸ்வரன் ஆழ்வாரை அங்கீகரித்தால், சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரிப்பான் என்?’ எனின்,–சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால், அது பின்னை அவன் அவளில் நில்லாதேயன்றோ? ‘இருடிகள் குடியிருப்பை அழித்தான் மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தான்; இவையெல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காதொழிவது காண்’ என்றிருந்தோம்; அந்நாளில் அது பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப்பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்கவேண்டுமோ? வேண்டுவன செய்யப்பாரும்; நீர் இறாய்த்திருந்தீராகில், குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனையன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் கடக்க நில்லீர்,’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது. ‘ஸ்ரீ மஹாராஜர்க்குச் சத்துரு’ என்று வாலியைக் கொன்ற பின்னர் மஹாராஜர் கண்ணநீர் பொறுக்கமாட்டாமல் தாமும் கண்ணநீர் விழவிட்டார். ‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது,’ என்கிறபடியே ஸ்ரீ மாலாகாரர் பக்கல் அங்கீகாரம், அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீ கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம், அவன் தம்பியளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில், அவன் முன்னாகப் போ’ என்றருளிச் செய்தான்.

இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.-எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பாராம். –ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்து வாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.–நெடுமாற்கடிமை’  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச் சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.

மா சதிர் இது பெற்று’ என்றார்; ‘இந்நன்மைக்கு அடி என்?’ என்ன, ‘நினைவு இன்றியே அந்தப்புரவாசிகள் சொல்லும் வார்த்தையைச் சொன்னேன்’ என்கிறார். ‘பிராட்டியே! ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக்கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகிறோம்,’ என்று அருளிச்செய்தார் பட்டர்

‘தனக்கேயாக எனைக்கொள்ளும் இஃதே–நம்முடைய பேற்றினை அறுதி இடுவோம்’ என்று பார்த்து, 1‘நீ இங்ஙனே நில்’ என்று அவனை நிறுத்தி வைத்துப் பேற்றினை அறுதியிடுகிறார்.-இது குஹ்ய தமம்’ என்பதற்கு ஐதிஹ்யம்-எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, குஹ்யமாகவாம் அருளிச்செய்வது.

ஞானக் கை தா’ என்பதற்கு இரு பொருள் அருளிச் செய்கிறார்; ஒன்று, ‘நான்  பெற்றேன் என்று தெளியும்படி செய்ய வேண்டும்’ என்று முன்னர்க்கூறியது. மற்றொன்று,  ‘பரபத்தி பரஞான’ என்று தொடங்கி இங்கு அருளிச்செய்வது. முன்னைய பொருளில்,  ‘ஞானம்’ பிரத்யக்ஷரூப ஞானம்; இரண்டாவது பொருளில், பத்திரூப ஞானம்.  இவ்விருபொருள்களினும் சங்கதி பேதம் ஒழிய அர்த்த பேதம் இல்லை.இங்கே எம்பார்க்கு ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை நினைவுகூர்வது. அதாவது, ‘கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் கைகொடுத்தால், எடுக்குமவர்களுக்கும் எளிதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்குமிறே; அப்படியே ஆகிறது,’ என்று.எம்பார்; ஆண்டான் திருவடிகளிலே ஆஸ்ரயித்த ஒருவரை அறியாமல் பகவச்  சம்பந்தத்தைப் பண்ணி, ஆண்டான் திருவடிகளில் ஆஸ்ரயித்தவர் என்று அறிந்த பின்  பயப்பட. அப்போது ஆண்டான் அருளிச்செய்த வார்த்தை என்றபடி.

இத்திருவாய்மொழியில், இவர் அறுதியிட்ட பிராப்பியமாவது, 2மலர்மாலை, சந்தனம் முதலியவைகளைப் போன்று ‘தனக்கேயாக என்னைக்கொள்ளும் ஈதே’ என்பதே அன்றோ? அதனை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். 3‘சர்வேஸ்வரன் மூன்று விதமான சேதநரையும் சொரூபத்திற்குத் தகுதியாக அடிமை கொள்ளுகின்றான்; நாமும் அப்படியே சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெறுவோமே!’ என்று அருளிச்செய்கிறார் என்று இவ்விடத்திலே எம்பார் அருளிச்செய்வர். 4‘முத்தரும் நித்தியரும், தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப்பிப்பார்கள்;-முத்தரும் நித்தியரும் ‘அஹமந்நம் அஹமந்நம்’ என்று  அவனை ஆனந்திப்பித்து, அவன் உகந்த அவ்வழியாலே ‘அஹமந்நாத’ என்று  தாங்களும் ஆனந்திப்பர்கள் என்றபடி.  பத்தர், தாங்கள் ஆனந்தியாமல் அவனை ஆனந்திப்பிப்பர்; ‘இன்புறும் இவ்விளையாட்டு உடையான்’ அன்றே? பத்தர், ‘அறிவில்லாத சம்சாரிகள் தங்களுடைய  சுக துக்கங்களுக்குத் தாம் காரணர்  அல்லர்; ஈஸ்வரனாலே ஏவப்பட்டே  சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடைகிறார்கள்;’ என்கிறபடியே, தாங்கள்  ஆனந்தியாமல் அவனுக்கு லீலா விஷயமாய்க்கொண்டு அவனை ஆனந்திப்பிப்பர்கள்  என்றபடி. -மயர்வு அற மதி நலம் அருளப் பெற்றவர்கள், ‘இறைவன் திருவுள்ளமானபடி செய்கிறான்’ என்று இராமல் ‘தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே’ என்று பிரார்த்திப்பான் என், திருவுள்ளமானபடி செய்கிறான் என்றிராதே?’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் எம்பாரைக் கேட்க, ‘அது கேளீர், முன்பு பிரிந்தன்று; பின்பு பிரிவுக்குப் பிரசங்கம் உண்டாயன்று; இரண்டும் இன்றி இருக்கத் திருமார்விலே இருக்கச்செய்தே, ‘அகலகில்லேன், அகலகில்லேன்’ என்னப்பண்ணுகிறது விஷய ஸ்வபாவமிறே; அப்படியே பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது,’ என்றருளிச்செய்தார். 

 பிரபந்நர்கள் வலஞ்செய்யலாமோ? வலம் செய்தல் உபாய கோடியில் சேராதோ?’ எனின்-‘பிள்ளை திருநறையூர் அரையரும், பட்டரும் பிரதக்ஷணம் பண்ணாநிற்கப் பின்னே சேவித்துக்கொண்டு போனேன்; அல்லாதார் கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப்போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading