நல்ல தமிழ் அறிந்தோருக்கு மிகவும் பரிச்சயமான மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றி அருளிய லக்ஷக்கணக்கான
தமிழ்ப் பாடல்களில் ஒன்று மதுரகவி திருவத்தியாள நல்லூர் ஸ்தல மான்மியம் என்பது.
திருவத்தியாள நல்லூர் எது? இதுவே மணவை என்றும் சொல்லப்படும் திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் வீரவ நல்லூரை அடுத்துள்ள ஒரு அழகான சிற்றூர்.
பொதியமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. என்ன சிறப்பு?
ஊரின் மற்றொரு பெயரையும் சொல்லிவிட்டால் படிப்பவர்களில் அநேகமாக அனைவருக்குமே தெரிந்துவிடும்.
ஆனை அழுங்குங்குளம் என்ற அழகான பெயர். அழுங்கும் என்றால் வருந்துதல், ஆனை வருந்திய குளம் அதாவது-மடு.
இது தான் அன்று ஆதிமூலமே என்று அழைத்த ஆனையின் குரலுக்கு அரக்கப் பரக்க நாராயணன் ஓடி வந்து
அபயம் அளித்த ஊர் என்று. கஜேந்திர மோக்ஷம் நிகழ்ந்த அந்த ஊரின் ஸ்தல மான்மியத்தை
தன் மதுர கவிகளால் சுவை சொட்டச் சொட்ட அருளி யிருக்கிறார் நம் ஸ்ரீ மதுர கவி ஸ்வாமிகள்
அவற்றுக்கு ஸ்ரீ கம்பன் திரு இராமன் ஸ்வாமிகள் அளித்துள்ள எளிமையான சிறு குறிப்புகளையும் சேர்ந்து பார்ப்போம்
காப்புகள்
சித்தி யாளத் தினம் முனி வோர் புகழ்
அத்தி யாள நல் லூரருண் மான்மியம்
பத்தி யாளர் பரவும் படி சொல
முத்தி யான முதலடி போற்றுவாம். –1-
சித்தி ஆள – மோட்ச நிலை அடைய;
தினம் – நாள்தோறும்;
முனிவோர் – ரிஷிகள்;
புகழ் – போற்றும்;
அத்தியாளநல்லூர் – அத்தியாள நல்லூர் என்ற தலத்தின்;
அருள் மான்மியம் – அருள்சேர் புராணம்;
பத்தியாளர் – பக்தர்கள்;
பரவும்படி சொல – படித்து வணங்கும்படி கூற;
முத்தியான – பரமபதநாதனான;
முதல் அடி – மூலப்பொருளின் திருவடி;
போற்றுவாம் – துதிப்போம்
நம்மாழ்வார் துதி
ஆறன் பாயணி வோன் அரன் ஆதியோர்
தேறன் பார் திரு வாய்மொழி செப்பு நா
வீறன் பார் புகழ் மேன்மைக் குருகை வாழ்
மாறன் பாத மலர்தினம் வாழ்த்துவாம். –2- .
ஆறு அன்பாய் அணிவோன் அரன் — கங்கையை அன்பாகச் சூடிய சிவன்;
ஆதியோர் – முதலாம் இறைவர்கள்;
தேறு அன்பார் — தெளிகின்ற அன்புசால்;
திருவாய்மொழி – திருவாய்மொழிப் பிரபந்தம்;
செப்பும் – கூறும்;
நா வீறன் – நா வண்மையன்;
பார் புகழ் – உலகு புகழும்;
மேன்மை – மேலான;
குருகை வாழ் மாறன் — குருகை நகர் வாழ் நம்மாழ்வார்;
பாத மலர் – திருவடித் தாமரை;
தினம் – நாள்தோறும்;
வாழ்த்துவாம் – போற்றுவோம்.
முத்திதரு மாநெறியை முன்னி அயல்நின்ற
அத்துவித பாசமற ஆங்குயிர்கள் எல்லாம்
சொத்தமல னுக்கெனல்வி ளக்குசுகு ணப்பேர்
வத்துமுனி யுத்தமனை மன்னும் உளம் வைப்பாம். .3.
முத்தி தரும் – வீடு பேற்றுக்கு;
மாநெறியை முன்னி – சிறந்த மார்க்கம் நினைந்து;
அயல் நின்ற – அண்மையில் இருந்த;
அத் துவித – அந்தத்துவைதம் (இருவகை) என்ற;
பாசம் அற – பற்று ஒழிய;
ஆங்குயிர்கள் எல்லாம் – ஜீவராசிகள் அனைத்தும்;
சொத்தமலனுக்கு எனல் — இறைவனின் சொத்து என்பதை;
விளக்கு – பொலியச் செய்;
சுகுணப்பேர் – நற்குணமென்ற பெயருடைய;
வத்து முனி – பொருளாம் முனிவன் (இராமாநுஜன்);
உத்தமனை – சிரேஷ்டனை;
மன்னும் உளம் வைப்பாம் – விளங்கும் மனத்தில் (வைப்போம்) துதிப்போம்.
ஆழி சூழ்தரும் அவனிஓர் குடைநிழ லளிக்கும்
ஆழி நாயகற்(கு) அன்புறு தூதனாய் அடல்கொண்(டு)
ஆழி தாயணி வீழிவாய் அழகுறும் சீதைக்(கு)
ஆழி நல்கும்எம் அனுமனைப் பரவியன் புறுவாம். .4.
ஆழிசூழ் தரும் அவனி — கடல்சூழ் புவியை;
ஓர் குடை நிழல் – ஒரே ஒரு வெண்கொற்றக் குடையின் கீழ்;
அளிக்கும் – ஆளும்;
ஆழி நாயகற்கு – சக்கரம் தரித்த திருமால் ராமனுக்கு;
அன்புறு தூதனாய் – பக்திசார் தூதனாக;
அடல் கொண்டு – வலிமையுடன்;
ஆழிதாய் – கடல் தாவி;
அணிவீழிவாய் அழகுறும் – அழகிய கொவ்வைச் செவ்வாய் எழில் சேர்;
சீதைக்கு – ஜானகிக்கு;
ஆழி நல்கும் – கணையாழி தரும்;
எம் அனுமனை – எங்களாஞ்சநேயனை;
பரவி – துதித்து;
அன்புறுவாம் – அவனன்பைப் பெறுவோம்.
பொய்கையொடு பூதம் பேய் மழிசை வேந்தன்
பொற்குருகை வரு மாறன் திருக்கோ ளூர்வாழ்
அய்யனருட் சேரலர்கோன் விண்டு சித்தன்
ஆண்டாள்மெய்த் தொண்டரடிப் பொடியார் பாணன்
மெய்யுறுசீர் வாட்கலியன் புரையில் கேள்வி
வேதாந்த தேசிகன்விண் மண்ணோர் போற்று
மையறுமா மணவாள முனிவன் பாத
மரைப்போதெப் போதுமுளம் வைத்து வாழ்வாம். .5.
திருக்கோளூர் வாழ் அய்யன் – மதுரகவி;
பொய்கை, பூதம், பேய் எனும் முதலாழ்வார்கள்,
திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி, குலசேகர ஆழ்வார்,
பெரியா.ழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி, திருப்பாணன், திருமங்கைமன்னன்
ஆகிய பன்னிரு ஆழ்வார்களுடன்,
புரையில் கேள்வி – குற்றமற்ற ஞானம் உடைய வேதாந்த தேசிகன்,
விண்ணும் மண்ணும் போற்றுகின்ற மணவாள மாமுனிகள்,
இவர்களது பாதமரைப்போது – திருவடி மலர்கள், எப்போதும் உளம் வைத்து, வாழ்வோம்.
வேரி யம்பொழில் வில்லிபுத் தூர்நலம் மேவ
சீரி யன்றமா மறையவர் தமக்கொரு திலகன்
பேரி யன்றமெய் வீரரா கவனெனப் பேசும்
ஆரி யன்கழல் அனுதினம் முடிமிசை அணிவாம். –6-
வேரி அம்பொழில் – எழிலும் மணமுமுள்ள சோலைசேர்,
வில்லிபுத்தூர் – ஸ்ரீவில்லிபுத்தூர்,
நலம் மேவ – நன்மை அடைய,
சீரியன்ற – சிறப்புப் பெற்ற,
மா மறையவர் தமக்கு — வேதியர்களுக்கு,
ஒரு திலகன் –ஒப்பற்ற திலகம் போன்றவன்,
பேர் இயன்ற – பெருமை சார்ந்த,
மெய் – உண்மையுள்ள,
வீரராகவனென – வீரராகவன் என்று,
பேசும் –கூறும்,
ஆரியன் கழல் – குரவன் (ஆசார்யன்) பாதம்,
அனுதினம் – தினந்தோறும்,
முடி மிசை அணிவாம் – தலை மேல் சூடுவோம்.
அவையடக்கம்
சித்தி யாடரு தேவர்மா தவர்தினம் வழுத்தும்
அத்தி யாளநல் லூரருள் மான்மிய மதனை
பத்தி யாற்றமிழ்ப் பாவினாற் பாடினன் சிறந்த
புத்தி யாளரென் புலமையை நகுவரோ புலவீர். .7.
சித்தி ஆள் தரு – மோட்சம் கைவந்த; தேவர் – வானவர்; மாதவர்—மகரிஷிகள்; தினம் வழுத்தும் – நாளும் துதிக்கும்; அத்தியாளநல்லூர் அருள் மான்மியமதனை – அத்தியாள நல்லூர்ப் புராணத்தை; பத்தியால் – அன்பால்; தமிழ்ப்பாவினால் – தமிழ்ப் பாடல்களால்; பாடினன் – இசைத்தனன்; சிறந்த புத்தியாளர் – பேரறிஞர்கள்; என் புலமையை – என் கல்வியறிவை; நகுவரோ—பழிப்பரோ; புலவீர் – அறிஞர்களே!
எண்ணும் எண்ணெயும் ஆமென எவற்றினும் உறையும்
கண்ணன் மாதவன் கரியவன் கசேந்திர வரதன்
அண்ண னாயிரம் பெயரவ னருளினால் இந்தப்
புண்ணியக் கதை சொற்றிடத் துணிந்தது போலாம். .8.
எண்ணும் எண்ணெயும் ஆம் என – எள்ளும் எண்ணெயும் போல; எவற்றினும் – அனைத்தினுள்ளும்; உறையும் – விளங்கும்; கண்ணன் மாதவன் கரியன் – மாதவப் பேருடைய கார்வண்ணக் கண்ணன்; கசேந்திர வரதன் – ஆனையரசுக்கு அருளியவன்; அண்ணன் – பெரியவன்; ஆயிரம் பெயரவன் – சகசிரநாமன்; அருளினால் –கிருபையால்; இந்தப் புண்ணியக் கதை – இந்தத்தரும காதை; சொற்றிடத் துணிந்தது – கூறத்துணிந்தது; போல் ஆம் – அசை.
எழுத்து சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைக்கும்
வழுத்(து) இலக்கண வகைசிறி(து) அறிந்திலன் மாட்சி
பழுத்த நுண்ணறி வாளர்முன் பாடிடத் துணிதல்
சுழுத்தி யிற்பரம் புருடனைத் தெரிந்துசொல் லுதலே. .9.
எழுத்து சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று – ஐந்திலக்கணம் என; இசைக்கும் – கூறும்; வழுத்திலக்கண வகை – சிறந்த இலக்கண வகை ; சிறிது அறிந்திலன்—கொஞ்சமும் தெரியாதவன்; மாட்சி – சிறப்பு; பழுத்த – கனிந்த; நுண்ணறிவாளர் முன் – கூர்மையான அறிஞர்முன்; பாடிட – இசைக்க; துணிதல் – தொடங்குவது; சுழுத்தியில் – புலன்கள் உறங்குகையில்; பரம் புருடனை – பரமாத்மாவை; தெரிந்து – அறிந்து ; சொல்லுதல் – கூறுதலாம்
நாட்டுச் சிறப்பு
மாம ணித்திர ளருவிசால் பொதியமால் வரையிற்
றேம லர்த்திரள் செந்திரு முகமெனச் செழிப்பப்
பூம ணிக்குளம் பொலிதர வருபெரும் பொருனைக்
காமர் பெற்றது பாண்டிய நாடெனக் கரைவார். .10.
.மாமணித் திரள் – பேரழகு திரண்ட; அருவிசால் – நீர்வீழ்ச்சிகளமைந்த; பொதியமால் வரையில் – பொதிகை மாமலையில்; தேமலர்த் திரள் – மிகுதியான மணம்நிறை புஷ்பங்கள்; செந்திரு முகமென – செய்ய இலக்குமி முகம்போல்; செழிப்ப – வளமுடன் விளங்க; பூமணிக்குளம் பொலிதர – பொலிவுள்ள அழகிய நெற்றிபோல் விளங்க; வருபெரும் பொருனை – வரும் பெரிய பொருனை நதியின்; காமர் –எழில்; பெற்றது – கொண்டது; பாண்டிய நாடென; கரைவார் – கூறுவார்கள்
வேறு
காவெலாம் மயிலின் ஈட்டம் கரைஎலாம் பணிலம் வாசப்
பூவெலாம் வண்டு செந்தேன் பொழிமதுத் தடத்துப் பொய்கைத்
தாவெலாம் அன்னம் பண்ணைத் தலனெலாம் தரளம் சார்ந்த
மாவெலாம் குயில்கள் அந்த வனமெலாம் மணியின் சும்மை .11.
காஎலாம் – சோலை எங்கும்; மயிலின் ஈட்டம் – மயிலின் கூட்டம்; கரை எலாம் – வரப்புகளில் எங்கும்; பணிலம் – சங்குகள்; செந்தேன் பொழி – செவ்விய தேன் சொரியும்; வாசப் பூ எலாம் – மணமுள்ள மலர்கள் எல்லாம்; வண்டு – தும்பிகள்; மதுத்தடத்து – இனிய தடாகத்தும்; பொய்கை – குளங்களின்; தா எலாம் – பள்ளங்கள் யாவிலும்; அன்னம் – அன்னப் பட்சிகள்; பண்ணைத் தலனெல்லாம் – வயல்களெல்லாம்; தரளம் – முத்துக்கள்; சார்ந்த – அருகுள்ள; மாஎலாம் – மாமரங்களிலெல்லாம்; குயில்கள் – கோகிலங்கள்; அந்த வனமெலாம் – அந்தக் காடுகள் முற்றும்; மணியின் – நவமணிகளின்; சும்மை – தொகுதி.
கரும்பொடு தென்னை பூகம் கதலிபால் வருக்கை காமர்
அரும்புதண் ஆதம் வானம் அளாவுகுங் குமங்கள் எல்லாம்
விரும்பிவந் தேற்போர்க்(கு) ஈயும் வித்தக ரென்னத் தோன்றச்
சுரும்பின மவர்பா லேற்கும் தீனரிற் பரந்து சூழும். .12.
கரும்பொடு – கன்னலுடன்; தென்னை –தென்னை மரம்; பூகம் –பாக்கு மரம்; கதலி – வாழை; பால் வருக்கை – பால்மர வர்க்கங்களான பலா போன்றவை; காமர் – அழகு; அரும்பு – விரியும்; தண் ஆதம் – குளிர்ந்த மாமரம்; வானம் அளாவு – வானம் முட்ட ஓங்கிய; குங்குமங்கள் – குங்கும மரங்கள்; எல்லாம் –யாவும்; விரும்பி வந்து – ஆசையுடன் உற்று; ஏற்போர்க்கு – இரப்பவர்களுக்கு; ஈயும் – அளிக்கும்; வித்தகர் என்னத் தோன்ற – அறிஞர் எனக் காட்சி தர; சுரும்பினம் – வண்டுகள்; அவர்பால் – அவ்வித்தகரிடம்; ஏற்கும் –இரக்கும்; தீனரில் – வறிஞர்போல்; பரந்து சூழும் – பரவலாகச் சுற்றி இருக்கும்.
திருவொடு செருக்கும் வல்ல செய்கையும் மறமும் கோளும்
பொருளும்புன் மதியும் பெற்ற பூரியர் தலைபோல் நின்று
மருளறு ஞானத் தோர்தம் முடிஎன வளைந்து பாரில்
இருளுற வானுற் றோங்கும் இரும்பணை யாவும் செந்நெல். .13.
திருவொடு – செல்வமுடன்; செருக்கும் – அகந்தையும்; வல்ல செய்கையும் – வலிய செயலும்; மறமும் – பாவமும்; கோளும் – புறங்கூற்றும்; பொருளும் – மக்களும்; புன்மதியும் – இழிந்த புத்தியும்; பெற்ற – கொண்ட; பூரியர் – கீழ்மக்கள்; தலைபோல் – சிரம்போல்; நின்றும் – நிமிர்ந்தும்; மருளறு – மயக்கமற்ற; ஞானத்தோர் – அறிஞர்; தம்முடி என – தங்கள் தலைபோல; வளைந்து – குனிந்து; பாரில் – பூமியில்; இருளுற – இருட்டுச் சார; வானுற்று – விண்ணையடைந்து; ஓங்கும் – உயரும்; இரும்பணை யாவும் – பெரும் பண்ணைகள் எல்லாம்; செந்நெல் – செம்மையான நெற்கள் நிலவும்.
—————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply