அசித்தாகிறது, முக்குணங்களோடு கூடியதாய் என்றும் உள்ளதாய், எங்கும் நிறைந்ததாய், எப்பொழுதும் வேறு பாட்டினை அடையக்கூடியதாய், விடத்தக்கது என்று அறியத்தக்கதாய் இருக்கும். இப்படியிருக்கின்ற அசித்தில் இனிமை இருப்பதாக நினைத்துச் சம்சாரத்தை உறுதியாக்கிக்கொள்ளவேண்டும் என்று இருக்குமவனும் சர்வேஸ்வரனைப் பற்றல் வேண்டும்; இது விடத்தக்கது என்னும் நினைவு உண்டாகி, இதனைக் கழித்துக்கொள்ளல் வேண்டும்: ‘என்னை?’ எனின், ‘சம்சாரத்தில் கட்டுப்பட்டு இருப்பதற்கும் விடுபட்டு மோக்ஷத்தை அடைவதற்கும் காரணமாக நிற்கின்றான் சர்வேஸ்வரன்,’ என்று கூறும் சுவேதாஸ்வதர உபநிடதம். ‘என்னுடைய முக்குண ரூபமான இந்தப் பிரகிருதியானது என்னால் உண்டுபண்ணப்பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின், என்னையே சரணமாக அடைகின்றவர்கள் இதனைத் தாண்டுகிறார்கள்,’ ( ஸ்ரீ கீதை 7 : 14.)என்கிறபடியே, ‘நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது; என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ள வேண்டும்,’ என்றான் இறைவன். அதுதன்னையே இவ்வாழ்வாரும் ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா, சொல்லாய் யான் உன்னைச் சார்வதுஓர் சூழ்ச்சி,’ என்று அருளிச்செய்தார்(திருவாய். 3. 2: 3.) பிள்ளைதிருநறையூர் அரையர் : “ஒரு குருவி பிணைத்தபிணை ஒருவரால் அவிழ்க்கப் போகிறதில்லை; சர்வசக்தி கருமானுகுணமாகப் பிணைத்த பிணையை அவனையே கால் கட்டி யவிழ்த்துக் கொள்ளுமித்தனை காண்.”
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்’– என்ற தனிப்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.
—————-
உடையவன் – இக்குணங்களை உள்ளவை என்று கூறுதலோடு அமையாது, இவற்றைக் கொண்டு நிரூபிக்கவேண்டும்படியாக இருப்பவன். இதனால், இக் குணங்கள் இடையில் தோன்றியவை யல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத் தெரிவித்தபடி —ஆழ்வான், பிள்ளைப் பிள்ளையைப் பார்த்து, ‘நிர்க்குணம் என்பார் மிடற்றைப் பிடித்தாற்போலே ஆழ்வார் ‘நலமுடையவன்’ என்றபடி கண்டாயே!’ என்று பணித்தான். 3அந்த இறைவன் எல்லா நற்குணங்களையும் இயற்கையாக உடையவன்’;(ஸ்ரீ விஷ்ணுபு. 6. 5 : 84.) ‘எங்கும் நிறைந்து இருக்கின்ற கண்ணபிரானுடைய கல்யாண குணங்கள் எல்லா உலகங்களும் சேர்ந்து பதினாயிரம் வருடங்கள் கூறினும், கூறுதற்கு முடிவு பெறுவன அல்ல;(வியாசபார. வீடுமபருவம்.)’ ‘மகாத்துமாவாகிய ஸ்ரீ ராமன், தாதுக்களுக்கு எல்லாம் இருப்பிடமாய் இருக்கும் இமயமலையினைப் போன்று, எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாய் இருக்கின்றான்’; (ஸ்ரீ ராமா. கிஷ். 15 : 20.) ‘அரசனே, உன்னுடைய மகனான ஸ்ரீ ராமனுக்குப் பல நற்குணங்கள் இருக்கின்றன,’ என வருவனவற்றை இங்கு உணர்தல்தகும். ( ஸ்ரீ ராமா. அயோத். 2 : 26.) ‘இயற்கையில் அமைந்தனவாய், எல்லை அற்றனவாய், மேன்மையினையுடையனவாய், எண் இல்லாதனவாய் உள்ள கல்யாண குணங்களின் கூட்டத்தையுடையவன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தாரும்.(ஸ்தோத்திரரத்தினம். 11.)
‘இப்படி, குணங்கள் கரை புரண்டு இருந்தால் இக்குணங்களாலே தனக்கு நிறமாகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அங்ஙன் இரான்; தன்னைப் பற்றிக் குணங்கள் நிறம் பெறவேண்டும்படி இருக்கின்றான் இறைவன் என்பதனை அருளிச் செய்கிறார் ‘யவன்’ என்ற சொல்லால். ’உப்புக்கட்டி உள்ளும் புறமும் உப்புச்சுவையே ஆயினாற்போன்று, இறைவன் உள்ளும் புறமும் ஞானமயமாய் இருக்கின்றான்,’ (பிரஹதா. உபரி. 6. 5 : 23.)
————
மதி நலம் அருளினன் -பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச் செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பத்தி. அந்தப் பத்தியின் நிலையிலே இறைவனுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய்வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பத்திதான் இவ்வாழ்வாருடைய பத்தி. ‘ஆழ்வார் பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார்.(உடல் உயிரோடு கூடி நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருப்பது. அதாவது, நாம் உடலோடு கூடி வாழ்ந்து இருப்பதற்கு உணவு இன்றியமையாதது போன்று, ஆழ்வார், தம் உடலோடு கூடி வாழ்ந்து இருப்பதற்குப் பத்தி இன்றியமையாதது என்பதாம். ‘பத்தி’ என்றது, பத்தி காரணமாகச் செய்யப்படும் கைங்கரியங்களை.) ‘எவ்வாறு?’ எனின், ‘நாம் அனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓர் ஆண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப் பொருள்களை முன்னரே தேடிக் கொள்ளுகின்றோம் அன்றோ? அது போன்று, உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ யாவான் இவர்க்கு.(திருவாய். 6. 7 : 1.)
அருளினன் – ஒரு விதக் காரணமும் பற்றாமல் அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின், ‘எனக்கு அருளினன்’ என்றிலர். இனி, தாம் விரும்பாமல் இருக்கவும், மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப் போன்று, தானாகவே அருள் செய்துகொண்டு நின்றான் ஆதலின், ‘அருளினன்’ என்கிறார் எனலுமாம்.
————–
நின்றிலர் இருந்திலர் -தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங்காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன. ‘ஆயின், தொழில் செய்வதற்காயின் இறைவன் திருவருள் வேண்டும்; தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘சுவர்க்கத்தினின்றும் விழுகிற திரிசங்குவைச் சத்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே! அப்படியே, 1நிவர்த்திக்கும் அவன் வேண்டுங்காண்,’ என்று அருளிச் செய்தார்.
—————
தாம் நுகர்ந்த நுகர்ச்சியின் இன்பப் பெருக்கு இருக்கிறபடி. தாம் நுகர்ந்த பொருள் தனியே நுகருமது அன்றிக்கே இருந்தது; ஆதலால், ‘நாம் ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ என்று நினைந்து சம்சாரிகள் பக்கல் கண்வைத்தார்; தாம் இறைவன்பால் காதல் கரை புரண்டு நிற்பது போன்று அவர்கள் ஐம்புல ஆசையில் அறிவு மயங்கியிருந்தார்கள்; கண்டதும் அவர்கள் கேட்டினை நீக்கியல்லது நிற்க ஒண்ணாத நிலையினை அடைந்தார். ‘என்னை?’ எனின், ‘வைஷ்ணவதர்மம்’ அதுவாதலின், ‘ஒருவனுக்கு வைணவத்துவமுண்டு, இல்லை என்னும் இடம் தனக்கே தெரியுங்காண்’ என்று சீயர் பலகாலும் அருளிச்செய்வர்; அதாவது, பிறர் அநர்த்தம் கண்டால் ‘ஐயோ!’ என்று இரங்குவானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தம் உண்டு’ என்று இருக்க அடுக்கும்; ‘இத்தனையும் வேண்டும் பட்டிடுவானுக்கு’ என்று இருந்தானாகில், அவன் ‘நமக்குப் பகவத் சம்பந்தமில்லை’ என்று இருக்க அடுக்கும் என்றபடி. ‘ஆயின், அவர்களை இவர் மீட்கப் பார்க்கிற வழிதான் என்?’என்னில், இவர்கள் அறிவு உள்ளவர்களாய் இருக்கிறார்கள்; ஐம்புல இன்பங்களுள் வாசியறிந்து, தீயவை கழித்து, நல்லவை பற்றி அனுபவிக்கும் தன்மை இவர்களிடத்தில் இருக்கிறது; ஆதலால், அவர்கள் பற்றியிருக்கும் பொருள்களின் தாழ்வினையும், பற்றத்தக்க இறைவனுடைய மேன்மையினையும் இவர்களுக்கு அறிவித்தால், அவற்றை விட்டு இறைவனைப் பற்றக்கூடும் என்று பார்த்து, இறைவனுடைய நன்மையினையும், இவர்கள் பற்றியுள்ள பொருள்கள் அற்பம், நிலையின்மை முதலிய குற்றங்களால் கேடு அடைந்தவை என்பதனையும், பற்றுமிடத்தில் வரும் இடையூறுகளை நீக்குந் தன்மையினையும், பற்றுமிடத்தில் இன்று புதிதாகச் செய்ய வேண்டுவது ஒன்று இல்லை, பழைய சம்பந்தத்தை உணர அமையும் என்பதனையும், பற்றுவார்க்கு நினைக்கத் தகும் மந்திரம் இன்னது என்பதனையும், அவனை வணங்கும் தன்மையினையும் அருளிச்செய்து கொண்டு மற்றைப் பொருள்களில் வைராக்கியத்தை முன்னிட்டு இறைவனிடத்தில் பத்தியைச்செய்து அடையுங்கோள் என்று பரோபதேசம் செய்ய மூளுகிறார்.
இத்திருவாய்மொழியில் வந்துள்ள ‘எல்லையில் அந் நலம்’ என்றதனைப் பற்றி, ‘இறைவனுடைய நன்மையினை’ என்கிறார். ‘மின்னின் நிலையில்’
என்றதனைப்பற்றி, ‘இவர்கள் பற்றியுள்ள பொருள்கள். . .கேடு அடைந்தவை’ என்கிறார். ‘அது செற்று’ என்றதனைப்பற்றி, ‘பற்றுமிடத்தில் வரும்
இடையூருகளை நீக்குந் தன்மையினையும்’ என்கிறார்.
அடங்குக உள்ளே’ என்றதனைப்பற்றிப் ‘பழைய சம்பந்தத்தையுணர அமையும்’ என்கிறார். ‘வண் புகழ் நாரணன்’ என்றதனைப்பற்றி, ‘மந்திரம்
இன்னதென்பதனையும்’ என்கிறார். ‘இறை சேர்மின்’ என்றதனைப்பற்றி, ‘வணங்குந்தன்மையினை’ என்கிறார். ‘வீடுமின் முற்றவும்’ என்றதனைப் பற்றி,
‘வைராக்கியத்தை முன்னிட்டு’ என்கிறார். ‘அந்நலம் புல்கு’ என்றதனைப் பற்றிப் ‘பத்தியைச் செய்து’ என்கிறார்.
—————
இனி, இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும்படி: பற்றிலன் ஈசனும் – 1‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’ (ஸ்ரீ கீதை.)என்கிறபடியே, எல்லா நற்குணங்களோடும் கூடினவனாய், ஞானம் ஆனந்தம் குற்றம் இன்மை இவற்றையே வடிவாக உடையவனாய், ஏவப்படுகின்றவர்களான நித்தியசூரிகளை உடையவனாய்த் திரை மாறின கடல் போலே பரமபதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபாடு இரானோ?’ என்னில,
முற்றவும் நின்றனன் – அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்; ‘ஆயின், அப்படி நின்ற இடம் உண்டோ?’ எனின், ‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில், பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று, (ஸ்ரீராமா. யுத். 41 : 4.) நித்தியாஸ்ரிதையான பிராட்டியாலும் காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்.
பற்றிலையாய் – விட ஒண்ணாதாரை நீ ஒரு தலையாக விட்டான் அவன்; அவன் ஒரு தலையானால் விடலாமவற்றை விடத்தட்டு என் உனக்கு? அவன் முற்றில் அடங்கு – அவனையே எல்லாமாகப் பற்றப் பார்: ஆயின், அவன் எல்லாமாக இருப்பனோ? எனின், 4எல்லாப் பொருளும் வாசுதேவனே’ என்றும்,(ஸ்ரீ கீதை. 7 : 10.) ‘தாயும் தகப்பனும் உடன் பிறந்தோனும் வீடும் காப்பாற்றுமவனும் நட்டோனும் கதியும் நாராயணனே ஆவன்,’ என்றும், ‘சுற்றத்தார்களில் ஒவ்வொருவர் ஒவ்வொரு பயன்பொருட்டு,’ என்றும் வருவனவற்றால் அவன் எல்லாமாக இருப்பான் என்பது ஓர்தல் தகும்.(சுபால உபநிடதம்.)
பட்டர் : சம்பந்த ஞானமே வேண்டும் என்றார்; ‘எங்ஙனம்?’ எனின், ஒரு வணிகன் தன் மனைவி கருவுற்றிருக்குங்காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளி நாடு சென்றான்; அவளும் கருவுயிர்த்தாள்; மகனும் தக்க வயது அடைந்து தனக்கும் தகப்பனாருடைய வாணிகமே தொழிலாய்ப் பொருள் தேடப் போனான்; இருவரும், தத்தமக்கு வேண்டிய சரக்குப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு பந்தலில் தங்கினார்கள்; அஃது, அவ்விருவருக்கும் இடம் போதாமையால் அம்பறுத்து எய்ய வேண்டும்படி விவாதமுண்டான சமயத்தில், இருவரையும் அறிவான் ஒருவன் வந்து, ‘இவன் உன் தமப்பன்; நீ இவன் மகன்,’ என்று அறிவித்தால், கீழ் இழந்த நாள்களுக்குச் சோகித்து, இருவர் சரக்கும் ஒன்றாய், அவன் காப்பாற்றுகின்றவனாய், இவன் காப்பாற்றப்படும் பொருளாய்க் கலந்துவிடுவார்களன்றோ? அது போன்று ‘சீவான்மாவும் பரமான்மாவும் சரீரமாகிற ஒரு மரத்தினைப் பற்றியிருந்தால் ஒருவன் இருவினைப் பயன்களை நுகராநிற்பவன்; நாம் ஏவப்படும் பொருள் என்னும் முறையறியவே பொருந்தலாமன்றே!
ஓர் அரசகுமாரன் பூங்காவொன்றினைக் கண்டு புக அஞ்சினால், ‘இது உன் தமப்பனதுகாண்’ என்னவே, நினைத்தபடி நடந்து கொள்ளலாமன்றோ! ஆன பின்னர், ‘அவனுடைய உடைமை இவையெல்லாம்’ என்னும் நினைவே வேண்டுவது, தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம்,’ என்கிறார்.
———–
எம்பெருமானார் : ஓர் அயநத்தினன்று குன்றத்துச் சீயர் எம்பெருமானார் ஸ்ரீபாதத்திலே புக, அவருடைய சிறு பெயரைச் சொல்லி, ‘சிங்கப்பிரான்! இன்று அயநங்காண்’ என்ன, திருவுள்ளத்தில் ஓடுகிறது இன்னது என்று அறியாமையாலே அவர் பேசாதிருக்க, ‘உயிர் உடலை விட்டு நீங்கும் அந்திம காலத்தில் பலம் கண்ணழிவற்ற பின்பு நடுவு விரோதியாய்ச் செல்லுகிற நாளில் ஓராண்டு கழியப்பெற்ற இது உனக்கு ஒன்றாய் இருந்ததில்லையோ!’ என்றருளிச்செய்தார்.
எம்பார் ஒரு முறை, ‘பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே,’ என்பதற்கு ‘இங்ஙனே காரணமானது கழிந்த போதே காரியமும் தன்னடையே கழிந்ததே அன்றோ! பலமும் இனிக் கைப்புகுந்ததே அன்றோ! இனி, சிந்தாவிஷயம் உண்டோ?’ என்று அருளிச்செய்தார்.
—————
வழிபாடு இயற்றுதற்குப் பற்றுக்கோடான மந்திரம் யாது?’ என்ன, அது இன்னது என்றும், அதனுடைய பொருள் நினைத்தற்கு உரியது என்றும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், மந்திரம் மாத்திரம் அமையாதோ? அர்த்தமும் அருளிச்செய்ய வேண்டுமோ?’ எனின், இம்மந்திரத்தைப் புறம்புள்ளார் ஜபம் ஹோமம் முதலியவைகளாலே காரியங்கொள்ளாநிற்பர்; நம் ஆசாரியர்கள், ‘ஆத்தும சொரூபம் இன்னபடி என்பதற்கு ஏற்றதாயுள்ள இதனுடைய பொருள் நினைவு மோக்ஷத்திற்குச் சாதனம்’ என்று தாங்களும் நினைந்து, தங்களைக் கிட்டினார்க்கும் உபதேசித்துக்கொண்டு போந்தார்கள். மற்றும் வேதங்களுக்கும் இவ்வாழ்வார்க்கும் இம்மந்திரம் சொல்லச் சமயம் வாய்த்த போது முன்னர் மந்திரத்தைச் சொல்லி, பின்னர் அர்த்தத்தைச் சொல்லுதல்; அன்றி முன்னர் அர்த்தத்தைச் சொல்லி, பின்னர் மந்திரத்தைச் சொல்லுதல் செய்யக் கடவது ஒரு நிர்ப்பந்தம் உண்டாய் இருக்கும்; அதற்குக் காரணம், பொருளின் நினைவு இன்றியமையாதது ஆகையாலே. 1‘யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன்,(திருவாய். 1. 3 : 3.)’ 2‘நாரணன் மூவேழ் உலகுக்கும் நாதன்’ (திருவாய். 2. 7 : 2.)என்பன தமிழ் மறை. 3‘உள்ளும் புறமும் நிறைந்து நாராயணன் இருக்கின்றான்,’ ‘பரஞ்சோதியும் நாராயணனே; பரமாத்துமாவும் நாராயணனே,’ என்பன வடமொழி மறை.(தைத்திரீய நாராயண உபநிடதம், 11 : 8.)
ஆழ்வான் : ஆழ்வான் இப் பாட்டளவு வரப் பணித்து,(எண்பெருக்கு அந்நலத்து, ஒண்பொருள் ஈறுஇல வண்புகழ் நாரணன், திண்கழல் சேரே). இப் பாட்டு வந்தவாறே ‘இத்தையும் நும் ஆசிரியர் பக்கல் கேட்டுக் கொள்ளுங்கள்,’ என்ன, பட்டரும் சீராமப்பிள்ளையும் எழுந்து போகப் புக்கவாறே, அவர்களை அழைத்து, ‘இன்ன போது இன்னார் இருப்பார், இன்னார் போவார் என்று தெரியாது. இருந்து கேளுங்கள்,’என்று திருமந்திரத்தை உபதேசித்து, இப்பாட்டைக் கூறி, ‘இப்பாட்டை இதற்கு அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தார்.
ஆழ்வானுடைய முந்தின வார்த்தை, கௌரவத்திலே நோக்கு; பிந்தின வார்த்தை, இனிமையிலே நோக்கு.
———–
பத்துடையடியவர்’ –எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்; ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத்தக்கவன்’ என்றார் இரண்டாந்திருவாய்மொழியில்; இத்திருவாய்மொழியில் அவனது 1சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின், ‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச்செய்கின்றீர்; இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப்போமோ? அப்படியே, சர்வேஸ்வரனாய், எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை இந்த அற்பனான -பிறவிப்பெருங்கடலில் நன்றாக உழன்று சஞ்சரிக்கின்ற ஆத்துமா.-சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன, ‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே? அப்படியே, இச்சம் சாரிசேதனனுக்கு வழிபடலாம்படி அவன் தன்னைக் கொண்டு வந்து தாழவிட்டு எளியனாமாகில், இவனுக்கு வழிபடத் தட்டு இல்லையே?’ என்று கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச்செய்கிறார்.
‘ஆயின், அனைவரும் அவனை வழிபட்டு உய்வு பெறாமைக்குக் காரணம் யாது?’ எனின், நல்வினை அற்ற மக்கள் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைத் தமது பிறவினைப் போன்ற பிறவியாம் என நினைந்து கேடுறுதற்கும், நல்வினை வாய்ந்த பெரியோர்கள், அரியன் எளியனாகப் பெற்றோமே!’ என்று நினைந்து அடைந்து உய்வு பெறுதற்கும் பொதுவாக அவதாரங்கள் இருத்தலால் என்க
எம்பெருமானார் : சர்வேஸ்வரன் அரியன் என்றால் சம்சாரத்தில் ஆள் பற்றாது என்று அவன் எளிமையை விவரமாகச் சொல்லிக் கொண்டு போந்தோம்; அதுதானே இவர்களுக்கு ‘இத்தனை எளியனோ?’ என்று விடுகைக்கு உடலாயிற்று; அவ்வெளிமைதானே பற்றுகைக்கு உடலாயிற்று உமக்கு ஒருவருக்குமே! என்று எம்பாரைப் பார்த்து உடையவர் அருளிச் செய்தார்
—————-
நம் திருவுடை அடிகள்தம்-திருமகள் கேள்வனான சுவாமியினுடைய இதனால், நித்திய யோகத்தை அருளிச்செய்கிறார்.பட்டர் : ‘சர்வேஸ்வரனை அடைந்தானாகில் அவன் பலனைக் கொடுக்கிறான்; பிராட்டியைத் துணையாகப் பற்ற வேண்டுகிறது என்?’ என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘அவனையடையுமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனை வைத்து, அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்றல் வேண்டும்’ என்று கூறி, ‘நாளும் நந்திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி,’ என்னாநின்றது கண்டீரே!’ என்றருளிச்செய்தார்.நலம் கழல்-அவள் முன்னாகப் பற்றினாருடைய குற்றங்களைப் பாராதே கைக்கொள்ளுந் திருவடிகள்.
————-
நான்காந்திருவாய்மொழி – ‘அஞ்சிறைய’–மேல் மூன்று திருவாய்மொழிகளால், இறைவனுடைய முதன்மையினையும் அவனை வழிபடுந்தன்மையினையும் அவனுடைய எளிமையினையும் அனுபவித்து மகிழ்ந்தவராய்த்தாமான தன்மையில் நின்று பேசினார்; இத்திருவாய்மொழி, தாமான தன்மை அழிந்து, ஒரு பிராட்டி நிலையை அடைந்தவராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய், ஆற்றாமையாலே கூறும் பாசுரமாய்ச் செல்லுகிறது. இது மற்றொரு காரகம்’ என்னுமாறு போன்று, (இது ‘மகாபாஷ்ய வாக்கியம்’ என்பர் அரும்பதவுரைகாரர். வேற்றுமைகள் வினை கொண்டு முடியின் அதனைக் ‘காரகம்’ என்பர். இங்கு,
‘லிளிகுறை இரண்டையும் விட்டவேற் றுமைகள் வினையான் முடியின் காரகம் எனப்பெறும். குறையும் வினைகொளின் ஒரோவழிக் கூடும்.’(சூ. 14.))என்ற இலக்கணக்கொத்து நினைவிற்கு வருகின்றது. இந்தவாக்கியம் மேற்கூறிய மூன்று திருப்பதிகங்கட்கு இத்திருப்பதிகம் நெறியால் வேறுபட்டது என்பதற்கு மேற்கோள். )மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு.
முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்றற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இத்திருவாய்மொழி வந்த அளவில் ‘இது காமுகர் வாக்கியமாக இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்; ‘இறைவன் கேட்கத்தக்கவன், நினைக்கத்தக்கவன், தியானம் செய்யத்தக்கவன், பார்க்கத்தக்கவன்’ என்று விதிக்கிற பகவத் காமம் என்று அறிந்திலன், நல்வினை அற்றவனாதலாலே.
——————
இவை கடுகப்போய் நங்காரியம் செய்யவல்லன்,’ என்று பறப்பதற்குச் சாதனமான பக்ஷபாதமே பற்றாசாக, இராவண மாயையால் வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணாலே கண்டவற்றை எல்லாம் தூதுவிடுகிறாள்.-அபராதஸஹத்வத்தையே பற்றாசாகக் கொண்டு தூது விடுகிறாள்.
பட்டர் : ‘சக்கரவர்த்தி திருமகன் திருவவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற்போலே காணும், ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு திரியச் சாதி வீறு பெற்றபடி,’ என்று ரசோக்தியாக அருளிச் செய்வர்.
—————-
அத்தகைய தீவினைகளையுடைய நீர் இறைவனைச் சார்தல் எவ்வாறு முடியும்?’ எனின், இறைவனால் அத் தீவினைகளைப் போக்க ஒண்ணாது ஒழியின் அன்றோ நான் இழக்க வேண்டுவது?
தெற்காழ்வான் : ‘ஒரு முழுக்காலும் இரண்டு முழுக்காலும் போகாதுகாண்: தெற்காழ்வார் கையில் திருவாழியாலே (திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர். திருவாழி – அவர் கையிலுள்ள சக்கரம்.)வினையை அறுத்துக்கொண்டு போகில் போகும் அத்தனை ஒழிய, ஒன்றிரண்டு முழுக்கால் போகாதுகாண் நான் பண்ணின பாவம்!’ என்று திருக்கோட்டியூரிலே தெற்காழ்வான் கோளரியாழ்வானுக்குத் தீர்த்தத் துறையில் சொன்ன வார்த்தையை நினைவு கூர்வது.
இவ்வைதிஹ்யம்-புண்ணிய தினத்தில் பாவங்கள் போகும்பொருட்டுப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடல் வேண்டாவோ என்று கேட்ட கோளரியாழ்வான் என்ற ஒருவர்க்குத் தெற்காழ்வான் என்ற ஒருவர் கூறும் விடை.
—————-
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-என் நீர்மை கண்டு-என் மென்மைதனைக் கண்டு அருள் செய்து, நாம் பிரியுமது தகாது’ என்னாதே போகட்டுப் போனவர்க்கு
பட்டர் : பட்டரை ஒரு தமிழ்ப் புலவர், ‘கேட்டிரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன, ‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்றிருக்க வேண்டாவோ?’ என்றருளிச்செய்தார்; கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதுமுளதோ?’ என்ன, ‘புல்லிக் கிடந்தேன்,’ ‘காதலர் தொடுவுழித் தொடுவுழி’ என்பன போன்ற தமிழ்ப்பாக்களை நீ அறியாயோ?’ என்றருளிச்செய்தார்.
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’-திருக்குறள், 1187.
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’-குறுந்தொகை, 399.
—————-
‘ஓர் வாசகம்’ என்கிறாள். ‘ஆயின், மறுக்கும் வார்த்தை இவளுக்கு உத்தேஸ்யம் ஆமோ?’ எனின், தாரான் தரும்– என்ற இடத்தில் ஒன்றதனை, ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்னக்கால்’ (சிறிய திருமடல்.)என்றார் பரகால நாயகியார். 2செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒரு ஞான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே!’ (நாய்ச்சியர் திருமொழி, 13 : 9.)என்றார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார். 3கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால், பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே’ (திருவாய். 4. 7 : 3.)என்றார் இவ்வாழ்வார் நாயகியும். தான் ஜனக குல சுந்தரியாயிருந்தும், பறவைகளைப் பார்த்து, ‘அருளாய்’ என்கிறாள்; அப்பறவைகளால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே.
பட்டர் : ‘நம்பியேறு திருவுடையான் தாசர் திருநாட்டுக்கு நடந்தார்,’ என்று பட்டர்க்கு விண்ணப்பஞ்செய்ய, பட்டர் துணுக்கென்று எழுந்து நின்று, ‘அவர் ஸ்ரீவைஷணவர்களுடன் பரிமாறும், படிக்குத் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்ன வேண்டுங்காண்,’ என்றருளிச்செய்தார்.
—————-
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் – சமுதாய சோபையோடு நிறத்தில் நிறைவையும் இழந்தேன். ‘இனிச் சென்று அறிவிக்கிறேன்,’ என்று விரைந்தது; ‘தண்ணீர் சென்ற பின் அணை கட்டுவாரைப் போன்று, இனி அறிவித்தால் என்ன இலாபம் உண்டு?’ இனி உனது வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-‘இனி, உன்னைக் காப்பாற்றுகின்றவர்களைத் தேடப் பாராய்,’ என்கிறாள். இதனால் ‘அவன் வந்தாலும் போன நிறத்தை மீட்கப் போகாது,’ என்று இருக்கிறாள்
பெரிய திருமலைநம்பி : பெரிய திருமலை நம்பி, தமது இறுதிக் காலத்திலே, தமக்கு வெண்ணெய்க்காடும் பிள்ளையாயிற்றுத் திருவாராதனம்; அவர் திருமுன்பு திருத் திரையை வாங்கச் சொல்லி, ‘சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், இனியுனது, வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே,’ என்றாராம்.
————–
பட்டர் : புகைபூவே – அகிற்புகை, கருமுகைப்பூ என்று விசேடித்துச் சொல்லாமையாலே ஏதேனும் புகையும், ஏதேனும் பூவும் அமையும். இவ்விடத்தில், பட்டர் ‘செதுகையிட்டுப் புகைக்க அமையும், கண்டகாலி இடவும் அமையும்’ என்றருளிச்செய்வர். இங்ஙனம், பட்டர் அருளிச்செய்தவாறே, ‘இறைவனுக்குக் கண்டங்கத்தரிப்பூவை அருச்சித்தல் கூடாது’ என்று சாஸ்திரங்கள் விதிக்கின்றனவே!’ என்று நஞ்சீயர் கேட்க, ‘அவனுக்கு ஆகாது என்கிறதன்று; பறிக்கிற அடியார் கையில் முள் பாயும் என்பதற்காகத் தவிர்த்தனகாணும்! ‘கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும் ஆம்பலும்முன் கண்டக்கால்’ (பெரிய திருமொழி. 11. 7 : 6.)என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் திருமங்கை மன்னன் அருளிச்செய்கிறது கண்டீரே! இதனால், இறைவன் பொருளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது இன்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்த மில்லாத பொருள்தான் வேண்டும் என்றிருந்தானாகில், ‘புள்ளாய் ஓரேனமுமாய்’ (பெரிய திருமொழி. 11. 7 : 6.)அவதரிப்பானோ? ஸ்ரீவைகுண்டத்தில் இரானோ?’ என்றருளிச்செய்தார்.
பின்னர் ‘நஞ்சீயர்’ வராக புராணம் பார்த்துக்கொண்டு வரும்போது ‘ஸ்ரீவராக நாயனார்க்கு முத்தக்காசை (கோரைக் கிழங்கு.)அமுது செய்விப்பது’ என்று அதில் கூறப்பட்டிருத்தலைக்கண்டதும் ‘இது என்ன மெய்ப்பாடுதான்!’ என்று மிகவும் ஈடுபட்டவரானார்.
————–
அமுதிலும் ஆற்ற இனியன்-தேவர்கள் வாசி அறிவார்களாகில் இவனை அன்றோ பற்றுதல் வேண்டும்? ஆற்ற இனியன்-மிகவும் இனியன்
நம்பி திருவழுதி நாடு தாசர் : நம்பி திருவழுதி நாடு தாசர், ‘இத்தேவசாதி வெறுமரையோ, உப்புச்சாறு கிளருவது எப்போதோ?’ என்று பார்த்துக் கிடப்பதே இவன் அழகையும் இனிமையும் விட்டு!’ என்பராம்.நிமிர் திரை நீள் கடலானே – ‘அண்மையில் இலன்’ என்றுதான் விடுகிறார்களோ! அவ்வமிருதம் உண்டாகிற கடலிலே அன்றோ அவன் சாய்ந்தருளினான் என்பார், ‘கடலான்’ என்கிறார். ‘தன் வாசி அறியாது இருப்பார்க்கும் எழுப்பிக் காரியங் கொள்ளலாம்படி கண் வளர்ந்தருளுகிறான் என்றபடி. 1‘தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி’ (திருவாய். 8. 10 : 8.)என்கிறபடியே, கண் வளர்ந்தருளுகைக்குத் தகுதியான பரப்பை யுடைத்தாய், தனது ‘சம்பந்தத்தாலே அலைகள் கொந்தளிக்கிற கடல் என்பார், ‘நிமிர் திரை நீள் கடலான்’ என்கிறார். 2‘மாலும் கருங்கடலே என் நோற்றாய்?’ (முதல் திருவந். 19.)என்பது பொய்கையார் திருவாக்கு.
————-
எண்ணிலும் வரும் ‘கடம்’ படம், ஈஸ்வரன்’ என்றால், ‘நம்மை ‘இல்லை’ என்னாமல், இவற்றோடு ஒக்க எண்ணினான் அன்றே?’ என்று வரும்.
அன்றிக்கே, ‘இருபத்து நான்காவது தத்துவம்-அசித்து, இருபத்தைந்தாவது தத்துவம்-ஆத்துமா, இருபத்தாறாவது தத்துவம் ஈஸ்வரன்’ என்றால், ‘நம்முடைய உண்மையையும் இவற்றைப்போன்று இசைந்தான் அன்றே?’ என்று வந்து முகங்காட்டுவான் என்று கூறலுமாம்.
அன்றிக்கே, ‘இருபத்துநான்கு, இருபத்தைந்து, இருபத்தாறு’ என்று எண்ணினால், ‘இருபத்தாறு யானே’ என்று வருவான் என்று பொருள் கூறலும் ஒன்று.
அன்றிக்கே, நம்முடைய எண்ணை மிஞ்சி வரும் என்று கோடலுமாம். வந்தால் நிற்குமது இல்லை; இவன் ‘போ’ என்ற போதும் அதற்கும் தகுதியாக வரும் என்பார் ‘வரும்’ என்கிறார்.
என் இனி வேண்டுவம்-‘பரமபத்திக்கும் எண்ணுதற்கும் ஒக்க முகங்காட்டுவானான பின்னர் எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்கிறார். ‘இறைவன், இவ்வாத்துமாப்பக்கல் வெறுப்பின்மைக்குக் காலம் பார்த்திருந்து முகங்காட்டுவானான பின்பு, இவனுக்கு நன்மை தரும் காரியங்களில் இவன் செய்ய வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்றபடி. இப்படி இருக்கிற பகவானுடைய சொரூபத்தைப் புத்தி பண்ணுகையே, இவன் பிரபந்தன் ஆகையாவது. இறைவன், தன்னுடைய சொரூபத்தை உபதேசித்து, ‘உன்னால் வரும் இழவுக்கு அஞ்சவேண்டா ‘மாசுச:’ என்றது ( ஸ்ரீகீதை. 18 : 66 )போன்று, இவரும் இறைவனுடைய சொரூபத்தை நினைந்து, ‘என் இனி வேண்டுவம்?’ என்கிறார். இவற்றால், வெறுப்பின்மை ஒன்றுமே பேற்றுக்கு வேண்டுவது, அதற்குப் புறம்பான யோக்கியதை அயோக்கியதைகள் பயன் அற்றவை என்பது பெறுதும்.
பட்டர் : பட்டர் திருவோலக்கத்துக்குச் சாஸ்திரியாயிருப்பார் ஒரு பிராமணர் பல காலும் செல்வர்; அவரைக் கண்டால் பட்டர் ‘வந்தாயோ, போனாயோ’ என்று சாமான்யமாக வியவஹரித்து அருளிச்செய்வர்; ஒரு ஸ்ரீவைஷ்ணவர், பலகாலும் சேவிக்க எழுந்தருளுவர்; அவரைக் கண்டால் மிகவும் கிருபை பண்ணி ஆதரித்துக் கொண்டு எழுந்தருளியிருப்பார். இதனைப் பல காலும் கண்டிருப்பார் ஒருவர் வந்து, பட்டரைச் சேவித்து, ‘ஸ்வாமீ’ தேவரீர் திருவோலக்கத்துக்கு வருகிற சாஸ்திரி பிரசித்தராயிருக்கிறவர்; அவர் வந்தால் சாமான்யமாக வியவஹரித்தருளுகிறது, ஒரு சாது ஸ்ரீவைஷ்ணவர் வந்தார் என்றால் அவரை மிகவும் பிரதிபத்தி பண்ணி அருளுகிறது காரணத்தை எனக்கு அருளிச்செய்ய வேண்டும்,’ என்ன, ‘ஆனால், எப்போதும் போலே நாளையும் அவ்விரண்டு பேர்களும் வருவார்கள்; அப்போது நீயும் எப்போதையும் போலே பார்த்திரு; காரணம் சொல்லுகிறோம்’ என்ன, அவரும் அப்படியே பார்த்திருக்க, அவரை எப்போதையும் போலே வினவியருளி, ‘நீர் ஆரைத்தான் பரதத்துவம் என்று நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சில பிரமாணங்கள் பிரஹ்மாவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் விஷ்ணுவே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; சில பிரமாணங்கள் சிவனே பரதத்துவம் என்று சொல்லுகின்றன; ஆகையினாலே, நம்மாலே நிச்சயிக்கப் போமோ?’ என்ன, ‘நன்று’ என்று இருந்து, அவர் போனவாறே, ஸ்ரீவைஷ்ணவர் எழுந்தருளிச் சேவிக்க, அவரையும் கிருபை செய்தருளி, ‘தேவரீர் யாரைத்தான் பரதத்துவம் என்றிருப்பீர்?’ என்ன, ‘தேவரீர் ஸ்ரிய:பதி நாராயணனே பரதத்துவம் என்றருளிச்செய்யுமே! அஃதொழிய அடியேன் வேறு ஒன்றறியேன்,’ என்ன, ‘இன்னம் உமக்குத் தஞ்சமாக நினைத்திருப்பது என்?’ என்ன, ‘எம்பெருமானார் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று பிரசாதித்தருளுமே, அத்தையே தஞ்சமாக நினைத்திருப்பேன்,’ என்ன, திருவுள்ளம் உவந்து, ‘அபசாரத்தை க்ஷமித்தருள்க! திருமாளிகைக்கு எழுந்தருள்க!’ என்றருளிச்செய்து பார்த்திருந்தவரைப் பார்த்து, ‘கண்டீரே இருவர்க்கும் உண்டான தாரதம்யம்? ஆகையாலே, இவரை வணங்கவோ, அவரை வணங்கவோ? இப்படியன்றோ ஸ்வரூப ஸ்திதி இருந்தது?’ என்றருளிச்செய்ய, அவரும் கிருதார்த்தரானார் என்ற ஐதிஹ்யம் ‘துயக்கன் மயக்கன்’ (பா. 95) என்ற பாசுரத்தில், ஜீயர் அரும்பதத்தில் காணப்படுகின்றது.
வேல்வெட்டி நம்பியார் : வேல்வெட்டி நம்பியார், நம்பிள்ளையைப் பார்த்து, ‘பெருமாள் கடலைச் சரணம் புகுகிற காலத்தில் கிழக்கிருத்தல் முதலிய சில நியமங்களோடே சரணம் புக்கார்; ஆதலின், இப்பிரபத்தி உபாயம், வேறு சாதனங்களைப் போன்று, சில நியமங்கள் வேண்டியிருக்கிறதோ?’ என்று கேட்க, ‘அரசரான இராகவர் கடலைச் சரணம் அடைவதற்குத் தக்கவர்’ என்று பெருமாளுக்கு உபதேசித்தான் ஸ்ரீ விபீஷணாழ்வான்; அவன் தான் பெருமாளைச் சரணம் புகுகிறவிடத்தில், கடலில் ஒரு முழுக்கிட்டு வந்தான்’ என்றில்லை; ‘ஆக இத்தால் சொல்லிற்றாயிற்று என்?’ என்னில், ‘பெருமாள், இட்சுவாகு குலத்தராய் ஆசாரத்தில் மேம்பட்டவராகையாலே சில நியமங்களோடே சரணம்புக்கார்; ஸ்ரீவிபீஷணாஷ்வான் இராக்கதர் குலத்தனாகையாலே, நின்ற நிலையிலே சரணம் புக்கான்; ஆகையாலே, யோக்கியனுக்கு அயோக்கியதை சம்பாதிக்க வேண்டா; அயோக்கியனுக்கு யோக்கியதை சம்பாதிக்க வேண்டா; ஆகையாலே, சர்வாதிகாரம் இவ்வுபாயம்,’ என்றருளிச் செய்தார்.
பகவானுடைய பிரபாவத்தை அறிந்த நன்ஞானமுடையார்க்கு ‘இதுவே பொருள்’ என்று தோன்றும்: ‘கேவலம் கிரியாமாத்திரத்துக்கே பலத்தைக்கொடுக்கும் ஆற்றலுள்ளது’ என்று இருப்பார்க்கு ‘இப்பொருள் பொருத்தம் அன்று’ என்று தோன்றும்.
எம்பிரான்-கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில், எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்?’ ‘தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும் தன் சங்கல்பத்தைப்பற்றி உளவாம்படி இருக்கிற சர்வேஸ்வரன், (இங்கு ஐம்பெரும்பூதங்களை அருளிச்செய்ததனால், எல்லாப் பொருள்களையும் உபலக்ஷணத்தாற்கொண்டு, ‘தன்னை ஒழிந்த எல்லாப் பொருள்களும்’ என்று தொடங்கும் வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.)தன் பக்கல் ஆசை சிறிதுடையார் சங்கல்பத்தைப் பற்றித் தான் உளனாம்படி இருப்பானான பின்பு, இவ்வாத்துமாவிற்கு ஒரு குறையுண்டோ?’ என்கிறார்.
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply