ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டு போய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சிக்கொடி முதலானவை வளைந்து பிழைக்கும்; அவை போல’இறைவனுடைய குணங்களின் எடுப்பு இருந்தபடி கண்ட நமக்கு எதிரே நான் என்று பிழைக்க விரகு இல்லை; அவன் திருவடிகளிலே தலை சாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே,’ என்கிறார்
——————–
உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன் – பகவானுடைய ஆனந்தத்தைப் பேசப்புக்க வேதங்கள் மனிதர்களுடைய ஆனந்தம் தொடங்கிப் பிரமானந்தத்து அளவும் சென்று பின்னையும் அதற்கு மேல் உத்பிரேக்ஷித்துக் கொண்டு சென்று (புனைந்துரைத்தல்; தற்குறிப்பேற்றம்.)பின்னையும் அளவிட்டு அறியமாட்டாது, 4அந்த ஆனந்த குணத்தினின்றும் மனத்தோடு வாக்குகள் திரும்புகின்றனவோ’ (தைத்திரீ. ஆன. 9 : 1)என்கிறபடியே மீண்டன; இவ்வாறு மீண்டமையும் ஆனந்த குணம் ஒன்றைப் பற்றியேயாம்; குணங்கள் எல்லாம் இப்படியே அன்றோ இருப்பன? இக்குணங்கள் எல்லாம் தமக்கு நிலையமாகப் பேசுகிறார் இவர்இறைவனின் வேறுபட்ட எல்லாப் பொருள்களிலும் எல்லா வகையாலும் வருகின்ற மேன்மையினை ஈண்டு ‘உயர்வு’ என்கிறார். அற – அம் மேன்மை இன்றியே ஒழிய; ஈண்டு ‘அற’ என்றது, மற்றைத் தெய்வங்கள் உயர்வே இல்லாதவர்கள் என்பதனைக் குறிக்க வந்தது அன்று; இறைவனுடைய மேன்மையினையும் பிற தெய்வங்களினுடையமேன்மையினையும் பார்த்தால்,
‘சூரியன்முன் நட்சத்திரங்கள் போலவும், மஹாமேரு மலையினுச்சியில் நின்றவனுக்குக் கீழுள்ள கடுகு முதலியவை போலவும்’ (உள்ளனவாக இருக்கச்செய்தே இல்லை என்னலாம்படி இருக்கையைத் தெரிவித்தபடி. இதனால், அவர்கள் உயர்வின் சிறுமையைத் தெரிவித்தபடி. இனி, 1‘உயர்வற’ என்பதற்கு, ‘எல்லோருக்கும் உயர்வு உண்டாகும் போது வருத்தமுண்டு; அப்படி வருந்த வேண்டுமோ?’ என்றால், ‘உயர்வற உயராநிற்கும்’ என்று உரைத்தலுமாம். உயர்வு – வருத்தம். இத்தைப் பற்றியே ஸ்ரீ ஆளவந்தாரும் 2‘ஸ்வாபாவிகம்’ என்று அருளிச்செய்தார்.).
‘கண்ட இடமெங்கும் பயிர்பட்டிருக்கும் நன்செய் நிலம் போன்று’ -. ‘கரை கட்டாக் காவிரி போன்று’(ஒரு காலத்தில் காவேரி கரை கட்டப்படாமல் இருந்ததையும், பின்னர்க் கரிகாற்பெருவளத்தானால் கரை கட்டப்பட்டமையும் இங்கு நினைவு கூர்க.)குணங்கள் பரந்திருந்தால் இவற்றுள் யாதாயினும் ஒன்று பயன் இல்லாமல் பாடு பட்டுக்கிடக்குமோ?’ என்னில், நலம் – கண்ட இடம் எங்கும் பயிர் பட்டு இருக்கும் நன்செய் நிலம் போன்று எல்லாக் குணங்களும் ஒக்கக் கொள்ளத் தக்கனவாக இருக்கும். இங்கு ‘நலம்’ என்றது, ஆனந்த குணம் ஒன்றனையே சொல்லுகிறது. அன்றி, குணங்களின் தொகுதியினைச் சொல்லுகிறது என்றும், ஆனந்தம் உண்டாவதற்குக் காரணமான விபூதிகளைச் சொல்லுகிறது என்றும் கோடலும் பொருந்தும். உடையவன் – இக் குணங்களை உள்ளவை என்று கூறுதலோடு அமையாது, இவற்றைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்படியாக இருப்பவன். இதனால், இக்குணங்கள் இடையில் தோன்றியவையல்ல; இறைவன் தன்மையோடு சேர்ந்தவைகளாய் இருப்பன என்பதனைத் தெரிவித்தபடி
—————–
மதிநலம் அருளினான் -பத்தியின் உருவத்தை அடைந்த ஞானத்தைத் தந்தான் என்கிறார்,’ என்று பட்டர் அருளிச்செய்வர். கர்மத்தாலும் ஞானத்தாலும் உண்டாகக் கூடியது பத்தி. அந்தப் பத்தியின் நிலையிலே இறைவனுடைய திருவருள் நிற்க, பின்னர்த் தொண்டு செய்வதற்குக் காரணமாய் முன்னே உண்டான பத்திதான் இவ்வாழ்வாருடைய பத்தி. ‘ஆழ்வார் 1பிரபந்நரோ, பத்தி நிஷ்டரோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, ‘ஆழ்வார் பிரபந்நர்; பத்தி இவர்க்கு தேக யாத்ரா சேஷம்,’ என்று அருளிச்செய்தார். ‘எவ்வாறு?’ எனின், ‘நாமனைவரும் பிரபந்நர்களாய் இருப்பினும், ஓராண்டிற்கு அல்லது ஆறு மாதங்கட்கு வேண்டும் உணவுப்பொருள்களைத் தேடிக்கொள்வது போன்று’உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’ யாவான் இவர்க்கு.
அருளினன் – ஒரு விதக்காரணமும் பற்றாமல் அருளிக்கொண்டு நிற்கக் கண்ட இத்தனை, இறைவன் திருவருள் புரிதற்கு முன்னர் ஆழ்வார் தம்மை இல்லாத பொருளுக்குச் சமமாக நினைத்திருந்தார் ஆதலின், ‘எனக்கு அருளினன்’ என்றிலர். இனி, தாம் விரும்பாமல் இருக்கவும், ‘மார்பின் கடுப்பாலே தரையிலே பாலைப் பீச்சுவாரைப்போன்று’ தானாகவே அருள் செய்துகொண்டு நின்றான் ஆதலின், ‘அருளினன்’ என்கிறார்
இப்படி இருக்கிற இவர்கள் பலராகத் தான் ஒருவனாக இப்பதனால், இவர்களைப் பின் பற்றிக்கொண்டு தன்னுடைய சேஷியாந்தன்மை ஆகும்படி இருக்கின்றானோ இறைவன்?’ என்னில், அதிபதி – அவர்களுக்கும் ‘தொட்டுக்கொள்’ ‘யானைக்குக் குதிரை வைத்தல் போன்று’– என்றது, பிடி கொடுக்குமாறு போன்று இருந்து பிடி கொடாமையைப் பற்ற. யானைக்குக் குதிரை வைக்கையாவது, யானையின் வேகத்தைப் பரீக்ஷிக்கின்றவர்கள், குதிரையை முன் நடத்தி யானையைப் பின் நடத்துவார்கள்; யானையும் துதிக்கையாலே குதிரையைத் தொடும்படி கிட்டச் சென்று பின்னையும் தொடமாட்டாதே ஒழியும். அப்படியே, நித்தியசூரிகட்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்றபடி.
————-
என் மனனே, இப்போதாயிற்று தம்மைக் கண்டது; ‘அருளினன்’ என்று நின்ற இத்தனையே முன்பு. இருவர் கூடப் பள்ளியில் ஓதியிருந்தால், அவர்களுள் ஒருவனுக்கு உயர்வு உண்டாயின், மற்றையவன் அவனோடே ஒரு சம்பந்தத்தைச் சொல்லிக்கொண்டு கிட்டுமாறு போன்று -‘மனமே மனிதர்கள் உலக பாசத்தாற் கட்டுப்படுவதற்கும், உலக பாசத்தினின்று நீங்குவதற்கும் காரணமாக இருக்கின்றது,’ என்கிறபடியே, (ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 : 28.)நெடுநாள் பிறப்பிற்குக் காரணமாகப் போந்தது இப்போது முந்துற்ற நெஞ்சாய் முற்பட்டு நிற்கிறபடியாலே அத்தோடு தமக்கு ஒரு சம்பந்தத்தை ஆசைப்பட்டு ‘என் மனனே’ என்கிறார்.
————–
உயர்வு அற உயர்நலம் உடையவன் யவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன்; மயர்வு அற மதி நலம் அருளினன் யவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி; அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்? அவன் துயரறு சுடரடி தொழுது எழு,’ என்று ஒரே தொடராகக் கொள்க. இனி, ‘உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன், துயரறு சுடரடி தொழுது எழு; மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன், துயரறு சுடரடிதொழுது எழு’ எனத் தனித்தனி தொடராகக் கோடலும் பொருந்தும் அங்ஙனம் கொள்ளுமிடத்து, ‘கிருஷ்ணரே! முன் பக்கத்திலும் வணக்கம்; தேவரீர்பொருட்டு பின்பக்கத்திலும் வணக்கம்,’ (பகவத்கீதை. 11 : 40.)என்று அருச்சுனன் பல முறை வணக்கங்கூறியது போன்று, இங்கும் பல முறை வணக்கங் கூறியதாகக் கொள்க. ஆயின், ‘உயர்வற உயர்நலம் உடையவன் அயர்வறு மமரர்கள் அதிபதி’ என்று இறைவனுடைய தன்மைகளை ஒரு சேரக் கூறி, பின் அவன் செய்த உதவியை ‘மயர்வற மதிநலம் அருளினன்’ என்ன வேண்டியிருக்க, ‘உயர்வற உயர்நலமுடையவன்’ என்ற பின்னர், ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று அவ்வளவும் போகமாட்டாமல் உபகாரத்தின் நினைவாலே ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்கிறார்.’
இப்பாட்டால், ‘இறைவனுக்குக் குணமில்லை; விக்கிரகம் இல்லை; விபூதி இல்லை’ என்று சொல்லுகின்றவர் எல்லாரும் மறுக்கப்பட்டவராவர், அவர்களை எதிரிகளாக்கிச் சொல்ல வேண்டா; தமது மதத்தை நிலை நிறுத்தவே, மற்றைய மதங்கள் மறுக்கப் பட்டனவாம். 3நெற்செய்யப் புல்தேயுமா போலே, தாமாகவே மறுக்கப்பட்டவர் ஆவர்கள் அவர்கள்.
‘உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று; ‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று; ‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது; ‘தொழுது எழு’ என்கையாலே 5பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று; ‘என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தை யுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
—————-
மனன் உணர்வு அளவு இலன்-இவ்வளவு மாத்திரமும் அல்லன்; இப்படிப்பட்ட பொருள் வேறு இல்லை,’ என்று அறிந்தால் அறியலாமன்றி, இப்படிப் பட்டது, இவ்வளவினையுடையது’ (பிரஹதாரண். 4. 6 : 62.)என்று அளவிட்டு அறிய முடியாது என்கை. ‘ஆயின், மனன் உணர்வு அளவு இலன் என்பதற்கு மன அறிவினால் அறிய முடியாதவன் என்று கூறின் வரும் குற்றம் உளதோ?’ என்னில், முதலிலே ஞான விஷயம் அன்று என்னில், பொருளே இல்லை என்று வரும் அன்றே? ஆதலால், அணு அளவினதான ஆத்துமாவை அறியுமாறு போன்று, எங்கும் பரந்திருக்கிற இறைவனை அறியப்போகாது என்கை.‘
பொறி உணர்வு அவை இலன்-‘பொறி’ என்பன கண் முதலிய உறுப்புகள். அவற்றால் அறியப்படும் பொருள்களின் தன்மையன் அல்லன், ‘எந்த இறைவனை உயிர் அறியாதோ, எந்த இறைவனைப் பூமி அறியாதோ’ என்று இறைவனை அறியமாட்டாமையில் உயிர்ப் பொருளையும் உயிரல் பொருளையும் ஒரு சேரக் கூறியிருத்தலைப் போன்று, ஈண்டும் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் இவ்விரண்டன் தன்மையிலும் வேறுபட்டவன் இறைவன் என்று அருளிச்செய்கிறார். அதாவது, ‘இறைவன் காணப்படுகின்ற உயிரல் பொருள்களின் தன்மையில் வேறுபட்டிருத்தலைப் போலவே, காணப்படாத உயிரின் தன்மையிலும் வேறுபட்டவன்’ என்றபடி. பிறவிக் குருடன் பொருள்களைப் பார்க்கின்றிலன் எனினும், தெளிந்த பார்வையினை யுடையவனும் பார்க்கின்றிலன் எனினும் பார்க்க மாட்டாமையில் இருவரும் ஒப்பு ஆவர் என்க.
—————
எனன் உயிர் – இப்படியிருக்கின்றவன் எனக்குத் தாரகன்; இனி, உபலக்ஷணத்தால், ‘எவனுக்கு உயிர்கள் அனைத்தும் சரீரமோ’ என்கிறபடியே, எல்லா உயிர்களுக்கும் தாரகன் என்று கோடலுமாம். ‘இறைவனுடைய தன்மையினைக் கூறும் இவ்விடத்தில் ‘என்னுயிர்’ என்று கூறவேண்டியது என்?’ எனின், இவ்வுயிர்களை எல்லாம் தனக்குச் சரீரமாகக் கொண்டு தான் ஆத்துமாவாய்த் தாரகனாய் இருப்பவன் என்னும் அர்த்தமும் சொல்லவேண்டுவது ஒன்றாதலின் சொல்லுகிறார்: மிகுநரை இலன் – ‘இறைவனாகிய தான் உயிர்களைச் சரீரமாகக் கொண்டு தாரகனாய் எல்லாரையும் ஏவுகின்றவனாய் இருப்பது போன்று, தன்னையும் ஏவக்கடவது ஒரு வேறு பொருள் உளதோ?’ எனின், மேம்பட்டாரை யுடையன் அல்லன். ‘இறைவனுக்கு ஒப்பானவனும் மேம்பட்டவனும் காணப்படுகின்றிலன்,’ (ஸ்வேதாஸ்வதர உபநிடதம்.)என்பது போன்று, இவரும் ‘இனன் இலன், மிகுநரை இலன்’ என்று அருளிச்செய்கிறார்.
———–
இவ்வுலகங்கள் இறைவன் உடைமை என்பதனை நாம் அறியுமாறு யாங்ஙனம்?’ எனின்,-அரசர்கட்கு நாடெங்கும் தமது ஆணை செல்லுமாயினும், தங்கள் தேவியரும் தாங்களுமாகப் பூந்தோட்டங்கள் சிலவற்றைக் குடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் விளையாட்டின்பம் தூய்க்குமாறு போன்று’
திருவிண்ணகர் சேர்ந்த பிரான், பெய்த காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே’ (திருவாய். 6. 3 : 5.)என்கிறபடியே, இறைவனும் இறைவியுமாகக் கண் குளிரப் பார்த்த போது உண்டாதலும், இல்லையாயின் இல்லையாதலுமாகி, அவர்கட்கு விளையாட்டு இன்பம் துய்த்தற்குக் காரணமாய் இருத்தலால் உடைமை என்பதனை அறிதல் கூடும்.
———
செல்வங்களைச் சேர்க்கின்ற தன்மையிலும் ஆபத்துகளைப் போக்குந்தன்மையிலும் புருடோத்தமனாகிய இறைவனைத் தவிர, ஆற்றலுடைய வேறு ஒருவன் காணப்படுகின்றான் இலன்,’ (ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 22 : 19.)என்றும், ‘காப்பாற்றுந்திறன் விஷ்ணுவைத் தவிர வேறு ஒருவர்க்கும் இன்று,’ (தைத்திரிய நாராய. 6. : 10.)என்றும் பிரமாணங்கள் இருத்தலால் எல்லா நன்மைகளையும் செய்து தர வல்லவனாய், பகையையும் போக்க வல்லவன் ஆனவனை ஒழிய வேறு ஒருவர் பக்கல் இந்தக் காக்குந்தொழில் கிடவாது-செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு, பின்னையும் அவ்வாபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று’
வேதங்களைத் தொடங்கும் போதும் முடிக்கும் போதும் கூறப்படுகின்ற பீஜாக்ஷரம் யாது ஒன்றோ, (ஓம்’ என்னும் பிரணவம். ‘ஓம் எனும் ஓரெழுத்து அதனின்
உள்ளுயிர், ஆமவன் அறிவினுக்கு அறிவும் ஆயவன்,’ என்ற கம்பராமாயணச் செய்யுள் (இரணியன் வதை, 76))அந்தப் பிரணவத்துக்குள் மறைந்துள்ளது அகரம். அது காக்கும் இறைவனைக் காட்டுவது ஒன்று; அதற்குப் பொருளாக உள்ளவன் யாவன் ஒருவன்? அவன் சர்வேஸ்வரன்,’ என்று உபநிடதம் புகலும்.
————-
அவன் அவன் அந்தப் பத்தியோடு அத்தேவர்களை ஆராதனை செய்கின்றான்; என்னால் கொடுக்கப்பட்ட பலனையும் அடைகின்றான்,’ (ஸ்ரீ கீதை. 7 : 22.)என்றும் இறைவன் ஸ்ரீ கீதையில் அருளிச்செய்தபடியே, அவ்விரு திறத்தார்களுடைய உயிர்களுக்குள் உயிராய் நின்றனர் என்று கூறலும் ஒன்று. இதனால், இறைவன் இராமடம் ஊட்டுவாரைப்போலே முகம் தோற்றாதே, அந்தராத்துமாவாய் நின்று நடத்துகையாலே, அவர்களும் அடைந்தவர்கள் ஆகின்றார்கள்; இவர்களும் பலத்தைக் கொடுக்கின்றவர்கள் ஆகின்றார்கள்; இறைவனை ஒழிந்த அன்று அவர்கள் பற்றவும் மாட்டார்கள்; இவர்கள் பலனைக் கொடுக்கவும் மாட்டார்கள் என்பது விளங்கும். அதாவது–(இரவில் சத்திரங்களில் தங்கியிருக்கும் தம் மக்களுக்கு உணவினை ஊட்டுதல்; இது தாயரின் செய்கை.(அய்யன் பாழியில் ஆனை போர்க்கு உரித்தாம் அன்றாயிற்று அவ்வத் தேவர்கட்குப் பலனைக் கொடுக்கும் ஆற்றல் உள்ளதாவது,’ என்றபடி
—————
நின்றனர்’ முதலிய சொற்களின் பன்மைகளால், இறைவனுக்கு வேறுபட்ட எல்லாப் பொருள்களினுடையவும் தொழில் செய்தல், செய்யாமைகளைச் சொல்லுகிறார். 1ஆகிருதியினைச் சொல்லுகின்ற சொல்லானது வடிவிலே சென்று முடிந்து நிற்குமாறு போன்று, (ஆகிருதி–சாதி; ‘சாதியினைக் காட்டும் ஒரு சொல், அச்சாதியினையுடைய பொருள்களைக் காட்டுவது போன்று’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள். அதாவது, ‘அரசச் சாதி’ என்று கூறின் அச்சொல் தனியே நில்லாது அச் சாதியினையுடைய ஒரு மனிதனையே காட்டி நிற்குமாறு போன்று என்பது கருத்து. அபர்யவசான விருத்தியாவது – ஒரு சொல் தனக்குரிய பொருள்களைக் காட்டி அவ்வளவில் முடிவு பெறாது, தொடர்ந்து மேலும் செல்வது.)தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்களும் அபர்யவசான விருத்தியால் இறைவனளவும் சென்று அல்லது நில்லா. இனி, ‘பொன்னிறக் கண்களையுடைய செந்நிறப் பொருளால் சோமம் என்னும் கொடியினை வாங்கக் கடவன்’ என்ற இடத்தில். ‘பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல’ தொழில் செய்தல் செய்யாமைகட்கு நிலைக்களமான பொருள்கள் அவன் அதீநம் என்று குணத்தோடு கூடிய பொருள் தோன்றா நிற்கவும், செந்நிறம் என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று’(குணத்தோடு கூடிய பொருள்’ என்ற இடத்தில், செந்நிறத்தையுடைய பசு என்ற பொருள் தோன்றினாலும், பசு என்னும் குணியைக் கொள்ளாது ‘செந்நிறம்’ என்னும் குணத்தையே முக்கியமாகக் கொள்வது போன்று)முன் சொல்லுகையாலே, இங்குத் தொழில் செய்தல் செய்யாமைகளில் நோக்கு என்று கூறுவாரும் உளர். அங்ஙனம் கூறின், சாமாநாதிகரண்யம் சித்தியாது. (எம் திடரே’ என்ற பதத்தினோடு பொருள் பொருந்தாது என்றபடி.)ஆக, தொழில் செய்தல் செய்யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக் களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை ஒழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, இறைவன் அளவுங் காட்டுகின்றன. ஆதலின், இச்சொற்கள் இவற்றோடு கூடி இருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன.
————–
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – இப்படிப் பல வகையினராக இருக்கையாலே காலம் உள்ள வரையிலும் ஆராய்ந்தாலும் இன்னபடிப்பட்ட தன்மையினையுடையவர் என்று நினைக்கவும் கூட அரியவர். என்றும் ஓர் இயல்வொடு நின்ற – ‘விருஷல விவாக மந்திரம் போலே என்றும் ஓர் இயல்வொடு நின்றவராவது என்?’ என்னில், (விருஷல விவாக மந்திரம்போலே நினைவு அரியவர்,’ எனக் கூட்டுக. விருஷல விவாக மந்திரம் – ஒரு சாதியினர் திருமணம் செய்யும் போது கூறும் மந்திரம். அவர்கள் கூறும் மந்திரம் முற்கூறியதற்குப் பிற்கூறுவது மாறுபாடுடையது என்பது தோன்றுகிறது.)என்றும் ஒருபடிப்பட்ட தன்மையினை யுடையவர் என்று நினைக்க அரிதான நிலை என்றும் ஒருபடிப்பட்டிருக்கும் என்கை. எம் திடர் – மனிதர்களால் செய்யப்படாத வேதங்களால் சொல்லப்பட்டவன் ஆகையால், வந்த திடத்தின் தன்மையைச் சொல்லுகிறார். இப்படி, சிறந்த திடமான பிரமாணத்தாற் சொல்லப் பட்டவரான நிலை தம்முடைய இலாபமாகத் தோற்றுகையால் ‘எம் திடர்’ என்கிறார்
————-
எல்லாம் தான் என்னலாம்படி இருப்பினும், ‘மண்ணே குடம்’ என்பது போன்று இராமல். ‘உயிர்களுக்குள் வியாபித்து அவ்வுயிர்களைக் கட்டளை இடுமவனாய், எல்லா வுயிர்கட்கும் ஆத்துமாவாய்,’ (தைத்திரீயம்)இவற்றை நியமிக்குமிடத்தில் இந்தச் சரீரத்துக்கு இவ்வாத்துமா தாரகனாய் நியாமகனாய், சேஷியாய் இருக்குமாறு போன்று ‘எவனுக்கு இவ்வுலகம் சரீரமாக இருக்கின்றது?’(பிரஹதாரண்யம்) 3‘எவனுக்கு இவ்வாத்துமாக்கள் சரீரமாய் இருக்கின்றன?’ (பிரஹதாரண்யம்)என்கிறபடியே, தான் இரண்டற்கும் தாரகனாய், நியாமகனாய், சேஷியாய் நின்று நடத்திக் கொண்டு போகின்றான் என்று மேல் சொன்ன சாமாநாதிகரண்யத்துக்குக் காரணம் சரீர ஆத்தும பாவம் என்கிறார். ஆயின், ‘மரத்திலே தேவதத்தன் நின்றான்,’ என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம் இல்லை. ‘சாதி குணங்கள் ஒரு வடிவிலே கிடந்தன,’ என்றால், அங்குச் சரீர ஆத்தும பாவம் இல்லை. தாரகமாகவும் நியாமகமாகவும் சேஷியாகவும் இருக்கின்ற ஒரு பொருளிலே ஆத்தும பாவத்தையும், தார்யம் நியாம்யம் சேஷம் இவற்றோடு கூடியிருக்கின்ற ஒரு பொருளிலே சரீர பாவத்தையும் கோடல் வேண்டும்.
தார்யமாவது, உயிர்ப்பொருள் உயிரல்பொருள் ஆகிய அனைத்தையும் இறைவன் தன் சொரூபத்தாலும் சங்கற்பத்தாலும் தரிக்கின்றான்; அவனுடைய
திவ்வியாத்தும சொரூபத்தையும் நித்தியசங்கற்பத்தையும் நீங்கின போது, தம்முடைய சத்துக்குக் கேடு பிறக்கும்படி இருக்கும் பொருள்.
நியாம்யமாவது, சரீரத்தினுடைய எல்லா வியாபாரங்களும் ஆத்துமாவினுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுமாறு போன்று, ஆத்துமாவினுடைய எல்லா வியாபாரங்களும் இறைவனுடைய அறிவிற்கு வசப்பட்டுத் தோன்றுதல்.
சேஷமாவது, சந்தனம் மலர் தாம்பூலம் முதலியவைகளைப் போன்று, இறைவனுக்கு விருப்பின்படி விநியோகங்கொள்ளுதற்குத் தகுதியாய் இருத்தல்.
————–
இவை மிசை படர்பொருள் முழுவதுமாய் – இவற்றை அடியாகக்கொண்டு மேலே பரந்து விரிந்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் உண்டாக்கி. ‘ஆய்’ என்றது ‘ஆக்கி’ என்கிறபடி. ‘பல பொருள்களாக விரிகின்றேன்’ (தைத்திரீய. ஆன. 6. 3.)என்கிற தனது மலர்ச்சியே உலகமாதலின், வைதிக நிர்த்தேசம் இருக்கிறபடி. (மறைமொழி.)அவை அவைதொறும்-அவ்வப்பொருள்கள் தோறும். அப்பொருள்களில் நிறைந்து நிற்குமிடத்துப் பல தூண்களில் ஓர் உத்திரம் கிடப்பது போல அன்றி ஒவ்வொரு பொருளிலும் அவ்வச் சாதித் தன்மை நிறைந்திருத்தல் போன்று எல்லாப் பொருள் களிலும் தனித்தனியே குறைவு அற நிறைந்து நிற்பான் என்பார், ‘அவை அவை தொறும்’ என்கிறார்.
————-
உளன் என்கிற சொல்லாலே சொன்னால். உனக்கு விருப்பமான இல்லாமை சித்திக்காதது போன்று, இல்லை என்கிற சொல்லாலும் உனக்கு விருப்பம் இல்லாத அர்த்தமே காண் சித்திப்பது; ஆன பின்னர், நீ இல்லை என்கிற சொற்கொண்டே அவன் உண்மையைச் சாதிப்பான். உலகத்தில் உண்மை இன்மைச் சொற்களுக்கு யாதொருபடி பொருள் கொள்ளுகிறோம்? அப்படிக் கொள்ளில், நீ நினைக்கிற பொருள் உன்னால் சாதிக்கப் போகாது; அங்ஙனம் கொள்ளாயாகில் வாதந்தன்னில் உனக்கு அதிகாரம் இல்லை.’
சர்வ சூந்யவாதம் சித்தியாது-எல்லாம் உள்ளவை’ என்று கூறின், எப்பொருள் தோன்றுமோ, அப்பொருளே ‘எல்லாம் இல்லவை’ என்று கூறினும் தோன்றுவதாம், உலகத்தில் ‘உள்ளது’ என்றும், ‘இல்லது’ என்றும் இரண்டு வகையாக வழங்குகிற சொற்களை ஆராய்ந்தால், உள்ளதான பொருளுக்கே
தோன்றுகிற நிலைமை வேறுபாடுகள் என்பது விளங்கும். ‘இங்கே குடம் இருக்கிறது,’ எனின், மண்ணினுடைய நிலைமை வேறுபாடு தோன்றும்:
அதாவது, முன்பு மண்ணாய் இருந்த பொருள் இப்பொழுது குடமாகிய வேறொரு நிலையைப் பெற்றுள்ளது என்றபடியாம். ‘குடம் உடைந்தது,’
எனின், குடம் என்னும் காரிய நிலைமையை விட்டு மண்ணாகிய காரண நிலையாய் மாறிவிட்டது என்றபடியாம். ஆகவே, எவ்வகையிலும் எவ்வகைச்
சொல்லாலும் அடியோடு இல்லாமை பெறப்படாது. ‘ஆயின், முயற் கொம்பு இல்லை,’ ‘ஆகாயத் தாமரை இல்லை’ என்ற இடங்களில் முழுதும் இன்மை
விளங்குகின்றனவே! இவ்விடங்களில் வேறொரு நிலைமையை யடையும் தன்மை கூற முடியாதே?’ எனின், இச்சொற்களாலும் முழுதும் இன்மை ஒரு
போதும் பெறப்படாது. ‘யாங்ஙனம்?’ எனின், ‘முயற் கொம்பு இல்லை,’ எனின், ‘முயல் இல்லை, கொம்பு இல்லை’ என்று பெறப்படுமோ? முயலுக்கும்
கொம்புக்கும் சம்பந்தமின்று என்பதே பெறப்படும்; அப்பொருள்களுள் ஒன்றற் கொன்று சம்பந்தம் இன்று என்று சம்பந்தம் இன்மை மாத்திரம்
பெறப்படுமே யன்றி அப் பொருள்களே அடியோடு இல்லை என்பது ஒரு போதும் பெறப்படாது அன்றே? ஆகவே, சர்வ சூன்ய வாதம் ஒரு போதும்
பெறப்பட வகையின்று என்பதாம்.
———————
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்து உளன் – பரந்து குளிர்ந்து இருந்துள்ள கடலில் நீரினது பரமாணுத்தோறும் நிறைந்து நிற்பான். நீரின் பரமாணுக்களின் கூட்டமே கடலாதலின், ‘நீர் தொறும்’ என்கிறார். ‘ஆயின், ஒன்றாகக் காணப்படுகின்றதே?’ எனின், நீர்ச்செறிவாலே திரண்டு தோன்றுகிறது, இத்தனையேயாம். ஈண்டு நீர் என்றது நீரின் பரமாணுக்களை. ஆகாயத்திலும் பெரியன் (சாந்தோக்கிய உபநிடதம்.)என்று கூறப்படுகின்ற பரம்பொருள், தண்ணீரின் பரமாணுக்களில் நிறைந்து நிற்பின், சிறிய இடத்தில் இருப்பவனாய் நெருக்குப்பட்டு இருப்பானோ?’ என்னில், பரந்த அண்டம் இது எனப் பரந்து உளன் – அந்த ஒவ்வொரு பரமாணுவும் பரந்த அண்டம் இது என்னும்படி அதற்குள் பரந்திருப்பன். ஓர் அண்டத்தைச் சமைத்து அவ் வண்டத்தில் ஒருவனைத் தனியாக வைத்தது போன்று இருப்பன்-
—————
இவை பத்தும் வீடே – இவை பத்தும் பரன் அடிமேல் சமர்ப்பிக்கப்பட்டன. இனி, ‘இச்செய் அடைய நெல்’ என்றால், நெல்லை விளைக்குமது என்று காட்டுமாறு போன்று, ‘இவை பத்தும் வீடு’ என்றது, வீட்டை விளைக்கும் என்றபடியாய், மோக்ஷத்தைக் கொடுக்கும் என்று பொருள் கூறலுமாம்.
வீடு’ என்பதற்கு இரு பொருள் கூறப்படுகின்றன; முதற் பொருள், ‘விடப்பட்டன’ என்பது. இரண்டாவது பொருள், ‘மோக்ஷம்’ என்பது;
இரண்டாவது பொருள் காரணத்தைக் காரியமாகக் கூறிய உபசாரம்.
————-
சிறு குழந்தை கையிலே பாம்பைப் பிடித்துக் கொண்டு கிடந்தால், போகடச் சொல்லி, பின்னர், ‘பாம்பு’ என்பாரைப் போலேயும், ஒருவன் வீட்டிற்குள்ளே கிடந்து உறங்கா நிற்க, நெருப்புப் பற்றிப் புறம்பே எரிந்தால், ‘வெளியே வா,’ என்று சொல்லி, பின்னர், ‘நெருப்பு’ என்பாரைப் போலேயும் முந்துற ‘விடுங்கோள்’ என்கிறார். ‘ஆயின், அத்தகைய தீய செயல் இவ்வுயிர்கட்கு யாது?’ எனின், பிறப்பு இறப்புகட்கு நடுவேயன்றே இவை தாம் நோவு படுகின்றன?
————-
முற்றவும் – சண்டாளர் இருப்பிடத்தை அந்தணர்க்கு ஆக்கும் போது அங்குள்ளவற்றுள் சிலவற்றைக் கொள்வதும் சிலவற்றைக் கழிப்பதும் செய்யார்; அது போன்று, யான் எனது என்னுஞ் செருக்கால் கெடுக்கப்பட்டு இருப்பனவற்றில் சில கூட்டிக் கொள்ள ஒண்ணாதே! ஆகையால், ‘முழுவதும் விடுங்கோள்,’ என்கிறார்.
வீடு செய்து-‘மேல் ‘வீடுமின் முற்றவும்’ என்றவர், மீண்டும் ‘வீடு செய்து’ என்னும் இதற்குக் கருத்து என்?’ என்னில், அரசகுமாரன் அழுகு சிறையிலே (அழுகுதற்குக் காரணமான சிறை.)கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறை விடுகை தானே பயனாக இருக்குமாறு போன்று, மேல் ஒரு பேறு பெறுவதிலும் இவற்றை விட்டு நிற்கும் நிலை தானே பேறாக இருக்கையாலே விடுகை யாகிற பேற்றைப் பெற்று என்றபடி.
—————-
வீடு செய்மின் – அவன் உடையவனாய் உங்கள் ஆத்துமாவை நோக்கிக் கொண்டிருக்கிறான்; ஆதலின், நீங்களும் ‘நான்’ ‘எனது’ என்று அகலப் பாராமல், உங்களை அவன் பக்கல் சமர்ப்பிக்கப் பாருங்கள்; அதாவது, அவன் உடையவனான பின்பு அவ்விறைவனோடு விவாதம் இல்லாமையே உங்களுக்கு வேண்டுவது என்பதாம். அவ் விவாதம் இல்லாமையையே ஈண்டு ‘வீடு செய்மின்’ என்கிறார். ‘இதனால் பேறு என்?’ என்னில், வேறு பிராயச்சித்தம் செய்ய வேண்டுவது இன்றாம். ‘அதற்குக் காரணம் என்ன?’ எனின், யான் எனது என்னுஞ் செருக்குக் கிடக்கப் பிராயச்சித்தம் செய்தல் என்பது, மிகத்தாழ்ந்த பொருளை உள்ளே வைத்து மெழுக்கு ஊட்டினதைப் போன்றது ஓன்றாம். மேலும், உடையவனுக்கும் உடைமைக்கும் தக்கபடி பிராயச்சித்தம் செய்தல் வேண்டும். உடையவன் சர்வேஸ்வரன்; இவன் ‘என்னது’ என்று கொண்ட பொருள், பொருள்களுள் மிகச் சிறந்ததான உயிர்ப் பொருள். மற்றும், போகடுகிற பொருள் தான் ஆகையாலே பிராயச்சித்தம் செய்வதற்கு வேறு அதிகாரியும் இல்லையே? ஆகையால், நீங்களும் உடையவன் பக்கல் ‘வீடுசெய்மின்’ என்றபடி வீடு-சமர்ப்பிக்கை; அதாகிறது, இசைகை-
—————
மன் உயிர் ஆக்கைகள் – உயிர் பொருந்தி யிருக்கின்ற சரீரங்கள் என்னுதல்; நிலையுள்ள உயிர் மேற்கொள்ளுகின்ற சரீரங்கள் என்னுதல், திறந்து கிடந்த வாயில்கள் தோறும் நுழைந்து திரியும் பொருள் போன்று, (திரியும் பொருள் – நாய்.)ஓர் உயிரே பல சரீரங்களை எடுத்தலின், ‘உயிர் யாக்கைகள்’ என்கிறார். ‘எங்ஙனம்?’ எனின், ‘மகிழ் அலகு ஒன்றே போல் மாறும்பல் யாக்கை’ என்கிறபடியே, ‘ஓரலகு தானே காணி நிலையிலே நிற்பது கோடி நிலையிலே நிற்பது ஆமாறு போன்று, (ஓர் அலகு – ஒரு விதை) ஓர் உயிர் தானே கர்மங்களின் வேறுபாட்டினால் தேவ சரீரம் முதலான சரீரங்கள் பலவற்றை மேற் கொள்ளுதல். இனி, உயிர் என்பதனைத் தொகுதி ஒருமையாகக் கொண்டு பல உயிர்கள் என்று கோடலுமாம்.
———–
இறை சேர்மின் – அடையத் தக்கன அல்லாதவற்றை நீக்கி வகுத்த சேஷியானவனைப் பற்றப் பாருங்கோள். சம்சாரி இறைவனை அடைதல், கெடு மரக்கலம் கரை சேர்ந்தாற் போன்று இருக்கையாலே ‘சேர்மின்’ என்கிறார்.
————–
புல்கு – குண ஞானமுடையவனுக்கு, குணங்களால் மேம்பட்ட இறைவனுடைய அனுபவம் அங்கநா பரிஷ்வங்கம் (பெண்ணின் கல்வி)போன்று போக ரூபமாய் இருக்குமாதலின், ‘புல்கு’ என்கிறார்
———-
பற்றிலன் ஈசனும் – ‘எங்கும் நிறைந்து எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாக இருத்தலின் வாசுதேவன் ஆகிறாய்,’ (ஸ்ரீ கீதை.)என்கிறபடியே, எல்லா நற்குணங்களோடும் கூடினவனாய், ஞானம் ஆனந்தம் குற்றம் இன்மை இவற்றையே வடிவாக உடையவனாய், ஏவப்படுகின்றவர்களான நித்தியசூரிகளை உடையவனாய்த் திரை மாறின கடல் போலே பரமபதத்தில் எழுந்தருளி இருக்கின்றவனும் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அல்லன். ‘ஆயின் அவர்கள் பக்கல் பற்றுடையவன் அன்றிக்கே இருந்தால் குறைபாடு இரானோ?’ என்னில,
முற்றவும் நின்றனன் – அவர்கள் எல்லாராலும் வரும் ஏற்றமும் இன்று வந்து அடைகிற இவனாலே ஆம்படி நின்றான்; ‘ஆயின், அப்படி நின்ற இடம் உண்டோ?’ எனின், ‘இன்று வந்து அடைந்த சுக்கிரீவனுக்கு ஒரு வாட்டம் வரில், பசுவானது அன்று ஈன்ற கன்றின் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றையும் கொம்பிலே கொள்ளுமாறு போன்று, நித்தியாஸ்ரிதையான பிராட்டியாலும் -எப்பொழுதும் ‘அகலகில்லேன் இறையும்’ என்று மார்பில் எழுந்தருளியிருக்கிற பெரிய பிராட்டியாராலும்.காரியம் இல்லை,’ என்றான் ஸ்ரீ ராமபிரான்.(ஸ்ரீராமா. யுத். 41 : 4.)
———-
அடங்க எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே – கட்டடங்க நன்றான செல்வத்தை எல்லாம் கண்டு, ‘நமக்கு வகுத்த ஸ்வாமியானவனுடைய செல்வம் இவை எல்லாம்,’ என்று நினைந்து, அவ்விபூதிக்குள்ளே தானும் ஒருவனாகச் சேரக்கடவன்; ‘சேரின் பயன் யாது?’ எனின், அப்போது சேஷிக்கு அதிசயத்தை விளைத்தான் ஆகலாம்; ‘சேஷிக்கு அதிசயத்தை விளைத்தால் இவ்வாத்துமாவுக்குப் பயன் யாது?’ எனின், அவனுக்குச் சேஷமாக இருக்கும் இவ்வாத்துமாவினுடைய சொரூப சித்தி, சேஷிபக்கல் கிஞ்சித்காரத்தாலேயாய் இருக்குமே? அதாவது, அடிமை சித்திப்பதே பலன் என்றபடி. ‘நன்று; லீலா விபூதியைக் கட்டடங்க நன்றான செல்வம் என்னலாமோ? இவ்விபூதி தாழ்ச்சியையுடையது அன்றோ?’ எனின், போகபூமியாய் இருக்கும் நித்திய விபூதி; கர்மங் காரணமாக அவனாலே ஏவப்படுவதாய் இருக்கும் இவ்வுலகம்; இதனை ‘அவன் உடைமை’ என்று நினைக்கப் புக்கவாறே இதில் கர்மங் காரணமான தன்மை தோன்றாது; அவன் உடைமை என்னும் தன்மையே தோன்றும்.
ஆயின், இன்று அடங்குகையாவது என்? தொன்று தொட்டே அவன் விபூதியில் சேர்ந்தேயன்றோ இருக்கின்றேன்?’ என்னில், உடைமை உடையவன் என்னும் சம்பந்த ஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியிலேயே ஒருவனாய்ச் சேர்தல் வேண்டும்; கடல்அளவிடக் கூடாததாக இருப்பினும், அதன் உள்ளில் மீன் முதலிய பொருள்களுக்கு வேண்டினபடி புகலாம்; அன்றே? அது போன்று, சம்பந்த ஞானம் அடியாகக் கிட்டலாம்;கடலிலே புக்க துரும்பானது இரண்டு தலையிலும் நினைவின்றிக்கே இருக்கவும், திரைமேல் திரையாகத் தள்ளுண்டு போந்து கரையிலே சேருகிறது இல்லையோ? சம்பந்த ஞானம் இல்லாத துரும்பையன்றே கடல் கரையிலே ஏறத் தள்ளுகிறது? ‘ஆயின், சம்பந்த ஞானத்தைப் பிறப்பித்தல் யாருடைய தொழில்?’ எனின், அது இருவரையுஞ் சேர்ப்பிக்கின்ற ஆசாரியனுடைய தொழில்.
———
உள்ளம் உரை செயல், உள்ள இம் மூன்றையும் உள்ளி – வெளிப்பொருள்களில் விருப்பத்தைச் செலுத்தும் மனத்தை உட்பொருளை நோக்கும்படி செய்தால், அது இறைவனை நினைத்தற்குக் காரணமாகும்; அந்நினைவு முதிர்ந்து வழிந்து, ‘பொங்கேழ் புகழ்கள் வாயவாய்’ (திருவாய். 8. 10 : 4.)என்கிறபடியே, சொல்லாகப் புறப்படுகைக்குக் காரணமாகும் வாக்கு; குணங்களால் அடிமை பூண்டு இருக்கிறேன்,’ என்கிறபடியே, திருவடிகளிலே விழுந்து எல்லாத் தொண்டுகளையும் செய்வதற்குக் காரணமாகும் உடல். (ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.)உள்ள இம்மூன்றையும் – இவைதாம் இன்றாக சம்பாதிக்க வேண்டாதே சேஷியான தான் இவற்றை உண்டாக்கிவைத்தான்; இவையும் வேறு சிலவும் தேடவேண்டா-தாம் உளரே,(இரண்டாந்திருவந். 21.)நா வாயில் உண்டே’(முதல் திருவந். 95..)–உள்ள இம் மூன்றையும் உள்ளி -ஆராய்ந்து; ‘இவற்றை எதற்காகப் படைத்தான்? இவைதாம் இப்போது இருக்கிறபடி என்?’ என்று ஆராய்ந்து பார்த்தால், அவை அடையத் தகாத பொருள்களில் அன்புடன் கூடியிருத்தல் விளங்கும். கெடுத்து – அவற்றினின்றும் மீட்டு. –இறை உள்ளில் ஒடுங்கு –பாழிலே மேட்டிலே பாய்கிற நீரைப் பள்ளத்திலே பயிரிலே பாய்ச்சுவாரைப் போன்று, அடையத் தக்க பொருளில் ஆக்கப் பார். அதாவது, கரணங்களை அவன் விஷயத்தில் அன்புடன் இருக்கச் செய் என்றபடி.
தாமுளரே – தந்தம்மைத் தேட வேண்டாவே. தம் உள்ளம் உள் உளதே – எனக்குச் சற்றுப்போது பகவத் விஷயத்தை நினைக்கைக்கு நெஞ்சு
தரல்வேண்டும் என்று தனிசு (கடன்) வாங்க வேண்டாவே. தாம் உளரானால் உண்டான நெஞ்சம் உண்டே என்றபடி.
தாமரையின் பூ உளதே – நைக்கு எட்டும் பூ உண்டாக்கி வைத்தானே. ‘தாமரையின் பூ உளதே’ என்றது, எல்லா மலர்களுக்கும் உபலக்ஷணம். ஏத்தும் பொழுது உண்டே – காலத்தை உண்டாக்கி வைத்தானே. அதனைத் தனிசு வாங்க வேண்டாவே. வாமனன், தன் உடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளன் ஆவான் ஒருவனாய் இருந்தானே. திருமருவுதாள் – அவனுடைய ஐஸ்வரியப் பிரகாசமான திருவடிகள். மருவு சென்னியரே – இப்படிப்பட்ட திருவடிகளில்
சேருகைக்குத் தலையாக்கி வைத்தானே. செவ்வே அரு நரகம் சேர்வது அரிது – இப்படி இருக்கச்செய்தே, இவர்கள் சம்சாரத்துக்கு விலக்கடித தேடிக் கொண்டு போகிறபடி எங்ஙனேயோ?
நா வாயில் உண்டே – இது முன்னம் புறம்பு தேடிப் போகவேண்டாவே. நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே – ஆயிரம்
எழுத்துக்களைக் கொண்டது ஒரு மந்திரம்போல அன்றி எட்டு எழுத்தாய் நடுவே பிரிவு இல்லாதே சொல்லலாந்திருப்பெய்ர உண்டாக்கி வைத்தானே.
மூவாத மாக்கதிக்கட் செல்லும் வகை உண்டே – மீண்டும் வருதல் இல்லாத மோக்ஷத்தை உண்டாக்கி வைத்தானே. என் ஒருவன் தீக் கதிக் கண் செல்லுந்
திறம் – இங்ஙனே இருந்த பின்பு இவர்கள் தண்ணிய வழி தேடிப் போகிறபடி எங்ஙனேயோ!
————-
இன்பத்தில் இச்சை யுடைய ஒரு பெண் தன் உடம்பில் அழுக்கினைப் போக்கித் தன் கணவனோடு இன்பம் நுகர்தற்குரிய காலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருத்தல் போன்று’
————-
‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ என்றார் முதல் திருவாய்மொழியில்; ‘உயர்ந்தவன் ஆகையாலே வழிபடத்தக்கவன்’ என்றார் இரண்டாந்திருவாய்மொழியில்; இத்திருவாய்மொழியில் அவனது 1சௌலப்யத்தை அருளிச்செய்கிறார். ‘யாங்ஙனம்?’ எனின், ‘வழிபாடு செய்யுங்கள் என்று பலகாலும் அருளிச்செய்கின்றீர்; இருகை முடவனை ‘யானை ஏறு’ என்றால் அவனாலே ஏறப்போமோ? அப்படியே, சர்வேஸ்வரனாய், எல்லா விருப்பமும் முற்றுப் பெற்றவனாய் இருக்கிறவனை இந்த அற்பனான 2சம்சாரி சேதனனால் பற்றப்போமோ? என்ன, ‘அவ்யானை தானே அவ்விருகை முடவனுக்கும் ஏறலாம்படி படிந்து கொடுக்குமன்று ஏறத் தட்டு இல்லையே? அப்படியே, இச்சம் சாரிசேதனனுக்கு வழிபடலாம்படி அவன் தன்னைக் கொண்டு வந்து தாழவிட்டு எளியனாமாகில், இவனுக்கு வழிபடத் தட்டு இல்லையே?’ என்று கூறுமுகத்தால் அவன் எளிமையை அருளிச்செய்கிறார்.
—————–
எளிமையே உய்வு பெறுவதற்கும் கேடு உறுவதற்கும் காரணம் என்பதற்கு எடுத்துக்காட்டும் மேற்கோள்,அறவோர் சிலர், ஏரி கல்லினால், சேற்றிலே தலையை நொழுந்திப் பட்டுப் போகாநிற்பர் சிலர்; விடாயர் அதிலே முழ்கி விடாய் தீர்ந்து போகாநிற்பார்கள்; விளக்கை ஏற்றினால் அதிலே விட்டில் முதலிய சில பொருள்கள் விழுந்து முடிந்து போம்; சிலர், அதன் ஒளியிலே உய்வு பெறுவார்கள். ‘ஆயின், இறைவன் தடாகமும் விளக்கும் ஆவனோ?’ எனின், ‘வாசத்தடம்’, (திருவாய். 8. 5 : 1.)‘மரகதமணித்தடம்’ (திருவாய். 10. 1 : 8.)என்றும், ‘வேங்கட மலைமேல் மேவிய வேத நல்விளக்கை’,(பெரிய திருமொழி, 4. 3 : 1.) ‘ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை’,(திருப்பாவை, 5.) ‘வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி’ (பெருமாள் திருமொழி, 10. 1.)-என்றும் -மருக்கிளர் தாமரை வாச நாண் மலர் நெருக்கிடு தடம் என இருந்த நீதியான்((கம். யுத். 475)”இறைவன் தடாகமாகவும் விளக்காகவும் கூறப்படுதல் காண்க
————
‘மேலான மோக்ஷத்தையுடையவன், பாவங்களை அழிக்கின்றவன், அழிவு அற்றவன், ஒளி உருவானவன், பிறப்பு இல்லாதவன், எங்கும் நிறைந்தவன்’(. ஸ்ரீகீதை. 10 : 12.) என்று இவை முதலாக இறைவனைப் பற்றி வீடுமன் முதலியோர் கூறிக் கொண்டிருத்தலைக் கேட்டு அறிவு மிக்கிருந்தான் ஆதலின், ‘நீ ஒருவன் பத்திக்கு எளியவன் ஆவது என்?’ என்று கேட்க, ‘அருச்சுனா! வேறு ஒன்றால் அன்றிப் பத்தியினால் மட்டும் அடையும்படி இவ்விதமாக இருக்கிறேன். அதாவது, ‘ஒருவன் கறுத்திருக்க ஒருவன் சிவந்திருக்கிறபடி கண்டாயே? அப்படியே எனக்கும் இது நிலை நின்ற தன்மை,’ ( ஸ்ரீகீதை. 11 : 54.)என்றான் அன்றே?’ என்றபடி
————–
ஸ்ரீராமாவதாரத்திலும் இராவணன் படைகளுடன் கூடினவனாய்க் கொண்டு எடுக்கப் புக்க இடத்தில் நெஞ்சிற் பகையாலே எடுக்க மாட்டிற்றிலன்; திருவடி தனியனாய் இருந்தும் நெஞ்சில் செவ்வையாலே கருமுகை மாலை போலே எடுத்து ஏறிட்டுக் கொண்டு போனான்; இங்ஙன் அன்றாகில் ‘இராவணனுக்குக் கனக்க வேண்டும்’ என்றும், ‘திருவடிக்கு நொய்தாக வேண்டும்’ என்றும் அன்றே? ஆதலால், பொருள் தன்மை இருக்கும்படி இது. இமயமலை மந்தரமலை மேருமலைகளையும், வசிக்கின்ற பொருள்களோடு மூன்று உலகங்களையும் இரு கைகளால் பெயர்த்து எடுக்க முடியும்; போர்க்களத்தில் பரதனுக்கு இளையவன் பெயர்த்து எடுக்கக் கூடாதவன்,’ (ஸ்ரீராமா. யுத். 59 : 111.)‘இராவணன் முதலிய பகைவர்களால் பெயர்த்து எடுக்கவும் கூடாதவனாக இருந்த இலக்குமணன், தூய்மையான மனமும் பத்தியும் பொருந்திய அனுமான் குரங்காய் இருந்தும் எளிதாக எடுக்கத் தக்கவன் ஆனான்,’ (ஸ்ரீராமா. யுத். 59 : )என்பன ஸ்ரீராமாயணம்.
உள்ளி வெம்பிணத் துதிரநீர் வெள்ளத்தின் ஓடி
அள்ளி யங்கைக ளிருபதும் பற்றிப்பண் டான்மா
வெள்ளி யங்கிரி எடுத்தனன் வெள்கினா னென்ன
எள்ளிப் பொன்மலை எடுக்கலுற் றானென எடுத்தான்.
‘அடுத்த நல்லுணர் வொழிந்தில னம்பரஞ் செம்பொன்
உடுத்த நாயகன் தானென உணர்தலின் ஒருங்கே
தொடுத்த எண்வகை மூர்த்தியைத் துளக்கிவெண் பொருப்போடு
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக் கிளையான்.’
‘தொகவொ ருங்கிய ஞானமென் றெவரினுந் தூயான்
தகவு கொண்டதோ ரன்பெனுந் தனித்துணை யல்லால்
அகவு காதலால் ஆண்டகை என்னினு மனுமன்
மகவு கொண்டுபோய் மரம்புகு மந்தியை நிகர்த்தான்.’ — என்னும் கம்பராமாயணச் செய்யுள்கள் நோக்கல் தகும்.
———–
எத்திறம்’ என்ற ஆழ்வார் ஆறு மாதம் மோஹித்துக் கிடந்தார் என்பது பிரசித்தம் அன்றோ? இவர் மோஹித்துக் கிடக்க, 1பெருமாளும் பிராட்டியும் பள்ளி கொண்டருளின இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் நோக்கிக்கொண்டு கிடந்தாற்போன்று, ஸ்ரீ மதுரகவி முதலான பெரியோர் அனைவரும் பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைக் கூட்டங்கள் மொய்த்துக் கொண்டு கிடக்குமாறு போன்று, இவரைச் சூழ்ந்து கிடந்தார்கள். பெருமாளும் பிராட்டியும் துயின்று இடத்தை நோக்கி இருந்த ஸ்ரீகுகப் பெருமாள் பசியர்க்குத் தாந்தாம் உண்ணும் உணவினைப் பகுந்து இடுவாரைப் போன்று, அங்கு வந்த ஸ்ரீ பரதாழ்வானுக்குத் தாம் நோக்கிக் கொண்டிருந்த இடத்தைக் காட்ட, அவ்விடத்தைக் கண்டவாறே ‘தொட்டால் முடிந்துவிடுவானோ!’ என்று சத்துருக்கனன் எண்ணும்படி மோஹித்துக் கீழே வீழுந்த ஸ்ரீ பரதாழ்வானைப் போன்று, (ஸ்ரீ ராமா. அயோத். 87 : 4.)மோஹித்துக் கிடந்த இவர், விசாலமான கண்களையுடைய பிராட்டி பல நாழிகைகள் கழித்து மூர்ச்சை தெளிந்து, பின்னர்ச் சிந்தித்தாள்,’ ( ஸ்ரீராமா. சுந். 38 : 8.)என்பது போன்று பெரியோர்களுடைய நல்வினைப்பயனால் காலம் உணர்த்த உணர்ந்து, ‘நான் இங்குச் சொல்லியது என்?’ என்று கேட்டார். ‘(ஸ்ரீ ராமா. அயோத். 87 : 4.)
காரெனக் கடிது சென்றான்; கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்; பருவரற் பரவை புக்கான்;
வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீ ராட்டுங் கண்ணான்.’–என்ற கம்பராமாயணச் செய்யுள் நினைத்தல் தகும்.
பெருமாளும் பிராட்டியும் துயின்ற இடத்தை ஸ்ரீ குகப்பெருமாள் காவல் புரிந்திருந்தார் என்பது ஸ்ரீ ராமாயணத்திற்கூறப்படவில்லையே?’ எனின்,
‘பொருந்திக் கிடக்கிற பொன்னின் துகள் அங்கே அங்கே காணப்படுகின்றனவே! ஆதலால், பிராட்டி ஆபரணங்களைக் கழற்றாமல்
இச்சிறந்த படுக்கையில் துயின்றிருத்தல் வேண்டும் என நினைக்கிறேன்,’ (அயோத். 88. 14.) என்று ஸ்ரீ பரதாழ்வான் கூறுகின்றான். பெருமாள், ஸ்ரீ
குகப் பெருமாள் ஆச்சிரமத்தினின்று நீங்கிச் சென்றதற்கும், ஸ்ரீ பரதாழ்வான் வந்ததற்கும் இடையே இருபத்திரண்டு நாள்கள் கழிந்தன; பொன்னிள் துகள்
மறைவுபடாமல் இத்துனை நாள்களும் அங்கே இருக்க வேண்டுமாயின், சிறந்த காவல் செய்திருத்தல் வேண்டுமன்றோ? ஆதலால், காவல் புரிந்தமை பெறுவதும்.
————–
அமைவுடை அற நெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து-ஒரு தருமத்தைச் செய்தால் தொடங்கும்போதே பயன் இன்றிக் கழியினும் கழியும்; இடையில் சிற்சில தடைகள் நேரினும் நேரும்; அங்ஙனம் அன்றி, சக்கரவர்த்தி நான்கு ஆஹூதி பண்ணி நான்கு இரத்தினங்களை எடுத்துக்கொண்டாற்போன்று, பலத்தோடே சேர்ப்பிக்கின்ற அறத்தின் வழிகள் எல்லாவற்றாலும் ‘உயர்வற உயர்நல முடையவன்’ என்று சர்வேஸ்வரன் குணங்களால் உயர்ந்திருக்குமாறு போன்று, ‘இவ்வறத்தில் இவனுக்கு அவ்வருகு ஒருவரும் இலர்,’ என்னும்படி சமைந்திருக்கை.
—————
தானாம் அமைவுடை நாரணன்’ என்பதற்கு, 4ஒருவன் ஒருவனை ‘உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்ன வேண்டும்?’ என்றால், தன் மனைவி மக்களையுங் கூட்டிக் கொண்டு ‘எனக்குக் கல நெல் வேண்டும்’ என்கிறான் அன்றே? அப்படியே, இவை அடங்கலும் தன் ‘அஹம்’ சொல்லுக்குள்ளே அடங்க, தான் இவற்றுக்கு அபிமானியாய் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் என்று பொருள் கோடலுமாம்.
————
அரி அயன் அரன் என்னும் இவரை உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து-தீயாரை அழித்து நல்லாரைக் காக்கின்றவனாதலின், அரி என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான் ஒருவன்; இருவன் திருநாபிக்கமலத்தில் நேராகத் தோன்றியவனாதலின், அயன் என்னும் பெயரையுடையனாய் இருக்கிறான்; ஒருவன் அழித்தல் ஒன்றுக்கே உரியவனாய் அரன் என்னும் பெயரையுடையவனாய் இருக்கிறான்; ஒரு உணர்த்தி, சொரூபத்தைப் பற்றியது; ஒரு உணர்த்தி, சுபாவத்தைப் பற்றியது; இவர்களைப் பற்றிக் கூறுகிற பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்து, அவை தம்மைப் பலகாலும் சொல்லிப் பார்த்து, மனப்பட்டது ஒன்று-1‘இலிங்கத்துக்கே உயர்வு தோற்றும்படியாய் இருப்பது ஒரு பிரபந்தம் செய்து தரவேண்டும்’ என்பாரைப் போன்று, ஓர் உருவத்திலே ஒரு சார்பாகச் சாயாது, இவர்கள் சொரூபங்களையும் சுபாவங்களையும் பலகாலும் ஆராய்ந்து பார்த்தால், கோல் விழுக்காட்டால்(தானாகவே விழுதல்.) ஒருவனே உயர்ந்தவன் என்பது உங்கள் மனத்திலே தோன்றும். உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்-தோன்றுகிற அவனைக் கேள்வி மனனம் முதலியவைகளால் உணர்ந்து, அவன் திருப் பெயர்களைப் பலகாலும் உச்சரித்து வணங்குங்கோள் என்பதாம்.
மற்றைப் புராணங்கள், ஒரு தெய்வத்தின் சிறப்புப் பெயரினைக் கூறி, ‘இத்தெய்வத்தின் பெருமைகளை எங்கட்குக் கூறவேண்டும்’ என்று
முனிவர்கள் கேட்க, அதற்கு ஏற்பக் கூறுகிறார் என்று தொடங்கப் பெறுவனவாம். ‘பரம்பொருள் யாவன்? அவனுடைய பெருமைகளை
எங்கட்குக் கூறவேண்டும்,’ என்று முனிவர்கள் கேட்க, அதற்கு விடை கூறுவதாகத் தொடங்கப் பெறுகின்றன, ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீ ராமாயணம்
முதலிய நூல்கள். இவற்றைத் திருவுள்ளத்தே கொண்டு தான் ‘இலிங்கத்துக்கே உயர்வு’ என்ற வாக்கியத்தை அருளிச்செய்கிறார்.
————-
நம்முடை நாளே – கெடுகின்றவர்களே! நம்முடைய வாழ்நாளின் நிலையை அறிவீர்கள் அன்றோ! விரைவில் அடைவதற்குப் பாருங்கள். ‘நம்முடை நாளே’ என்றதனால் ‘வாழ்நாளின் நிலையினை அறிந்தபடி என்?’ என்னில், முன்னர், 1‘மின்னின் நிலைஇல, மன்உயிர் ஆக்கைகள்’ என்றார் அன்றே? 2‘சூரியன் தோன்றுங் காலம் வந்தவாறே பொருள் தேடுங்காலம் வந்தது என்று உகப்பர்; அவன் மறைந்தவுடனே தத்தம் மனைவி மக்களோடு இன்பம் நுகருங்காலம் வந்தது என்று உகப்பர்; சாலில் எடுத்த நீர் போன்று தங்கள் ஆயுள் குறைகிறது என்று அறியாதிருக்கின்றார்கள்,’ என்று ஸ்ரீ ராமாயணமும் கூறும். இனி, ‘ஒருவன் இரண்டு கதவுகளையும் அடைத்துக்கொண்டு கிடந்து உறங்கும் போது, நெருப்புப் பற்றி எரியாநின்றால், ‘அவிக்கிறோம்’ என்று ஆறி இருக்கலாமோ?’ என்பார், ‘நம்முடை நாளே’ என்கிறார் எனலுமாம்.
நம்முடை நாளே’ என்பதற்கு இரண்டு வகையில் விசேடம் அருளிச் செய்கிறார். முதல் வகை, வாழ்நாளின் நிலை இன்மையைக் குறித்தது;
இரண்டாம் வகை, கேட்டின் மிகுதியைக் குறித்தது.
————-
நாளும் நின்று அடும்-நாள்தோறும் இடைவிடாமல் நின்று வருத்துகின்ற; பரமாணுவைச் சேர்ந்த பாரிமாண்டல்யம் (பாரிமாண்டல்யம்-பரமாணுக்களின் அளவு. நித்திய பரதந்திரம்-என்றும் உள்ளதாயும் பிறர்க்கு உரிமைபட்டதாயும் இருத்தல்.) முதலியவைகள் நித்தியமாக இருக்கவும் நித்திய பரதந்திரமாய் இருக்குமாறு போன்றும், இறைவனுடைய சொரூபத்தைப் போன்று அவன் குணங்களும் நித்தியமாக இருக்கவும் அக்குணங்கள் நித்திய பரதந்திரமாக இருக்குமாறு போன்றும் நித்தியமாயும் நித்திய பரதந்திரமாகவும் இருக்கிற உயிர்கட்கு, உடல்களின் சேர்க்கையும் நித்தியமாகவே வருகின்ற காரணத்தால், அவ்வுடலின் சேர்க்கையால் வருகின்ற வினைகளை ‘நாளும் நின்று அடும்’ என்கிறார். நம. ‘ஒருவர் செய்த வினைகளுள், அன்பர்கள் புண்ணியங்களையும், பகைவர்கள் பாபங்களையும் அடைகிறார்கள்’ என்கிறபடியே. அசல் பிளந்தேறிட வந்தன அல்ல; நெஞ்சு உணர நாமே பண்ணி வைத்தவை. அதாவது, ‘எனக்கு முன்பு அனுபவிக்காததாய், மேல் அனுபவிக்கக் கூடியதாய் இருப்பது ஒன்று உண்டோ? எல்லாம் பொறுக்க வல்லேன்; தன் காய் பொறாத கொம்பு உண்டோ? (ஸ்தோத்திர ரத்தினம், 25.)என்று கூறலாம்படி நாமே பண்ணி வைத்தவை என்பதாம். பழமை-அவை தாம் இன்று நேற்று அன்றிப் பழையவாய் இருக்கை. அம்-கொடுமையை நினைந்து சொல்லுகிறார். கொடுவினை-அனுபவித்தே தீர்க்க வேண்டியவைகள். உடே்ன மாளும்-பற்றின காலத்திலே அழியும்.
———
‘பருவமல்லாத காலங்களில் கடல் தீண்டலாகாது என்னுமாறு போன்று’ ஒரு நியதியில்லை
‘பால் குடிக்கும் குழந்தைகள், தாயின் மார்பினை அகலின் நாக்கு வரளுமாறு போன்று’ பிரமனும் திருநாபிக்கமலத்தை விடின் தன் சத்தை இல்லையாம்படி இருப்பான் ஆதலின், ‘உந்தித் தலத்தனன்’ என்கிறார்.
இவர்கள் எஞ்ஞான்றும் திருமேனியில் இருப்பார்களோ?’ என்னில், ஆபத்துகளிலே திருமேனியில் இடங்கொடுப்பான் இறைவன்; அது மகாகுணம் ஆகையாலே, ஆழ்வார்கள் எப்பொழுதும் அருளிச்செய்துகொண்டு செல்வார்கள். மற்றும் ‘சாமந்தர்கட்குப் (சிற்றரசர்கள். அமைச்சரும் ஆவர்.)புறம்பே நாடுகள் மிகுதியாக இருந்தாலும், மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்கட்கு மேன்மையாக நினைத்திருப்பதைப் போன்று’இவர்களும் திருமேனியில் பண்ணி வைக்கும் 2பிராப்தி விடார்கள். ‘எங்ஙனம்?’ எனின், வேற்று அரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் 3அடைய வளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து, கலகம் நீக்கியவாறே புறம்பே புறப்பட்டாலும் ‘இவ்விடம் இன்னார் பற்று’ என்று, பின்னும் தம் இடத்தைச் சொல்லி வைக்குமாறு என்க.
இப்பத்தைக் கற்ற போதே இவனை நித்தியசூரிகளில் ஒருவனாக நினைப்பன்; பின்னைச் சரீரத்தின் பிரிவு பிறந்தால் போய்ப் புகுவான் இத்தனை. அதாவது, சிறையிலே இருந்த இராசகுமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டி விடுவாரைப் போன்று’நித்தியசூரிகள் வரிசையைக் கொடுத்துப் பின்னைச் சம்சாரமாகிற அஞ்சிறையைக் கழிப்பான் இறைவன் என்றபடி. ‘ஏன்? சரீரத்தின் பிரிவை உடனே உண்டாக்க ஒண்ணாதோ?’ எனின், ஒண்ணாது; அரசன் ஒருவனுக்கு நாடு கொடுத்தால், முறைப்படி சென்று அந்நாட்டை அவன் அடைவது போன்று, இவனும் விதிப்படியே செல்ல வேண்டும்.
‘இது மற்றொரு காரகம் என்னுமாறு போன்று’மேல் போந்த நெறி வேறு; இங்குச் செல்லும் நெறி வேறு. முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், ‘பற்று அற்ற பரமஞானிகளும் போற்றத் தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு கூறுகின்றன,’ என்று இத்திருவாய்மொழி அளவும் பாடங்கேட்டு, இந்தத்திருவாய்மொழி வந்த அளவில், ‘இது காமுகர் வார்த்தையாய் இருந்ததே!’ என்று கைவிட்டுப் போனானாம்
சரணம் அடைந்த பகைவன் ஆர்த்தனாயினும் சரி, திருப்தனாயினும் சரி, அவன் இரட்சிக்கத் தக்கவன்,’ என்று கூறிய இறைவனை அனுபவித்த இவர்க்குப் பிரிவாலாய துன்பம் வருகைக்குக் காரணம் என்?’ என்னில், ‘ ‘பசியில்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம் எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள், ‘உணவு உண்ணலாகாது’ என்று விலக்குமாறு போன்று’-மேல் வரும் அனுபவங்களை இவர் பொறுப்பதற்காக, இப்பொழுது நுகரும் இன்பம் நீங்கும்படி நாலடி பெயர நின்றான்; பெயர நிற்கவே, இவர் கலங்கினார்.
பிராட்டியின் நிலை உண்டாகிறபடி எங்ஙனே?’ என்னில், 3அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்துவம், கூடி இருக்கும் போது தரிக்கை, பிரிந்திருக்கும் போது தரியாதொழிகை, அவனுக்கே இன்பத்தை அளிக்கை, அவன் காப்பாற்றுகின்றவனாகத் தாம் காப்பாற்றப்படும் பொருளாக இருக்கை ஆகிய இவ்வாறு குணங்களும் ஆழ்வார்க்கும் உள ஆதலின், பிராட்டியின் நிலை உண்டாகத் தட்டு இல்லை. ‘ஆயின், பிராட்டி தானாகப் பேசுவான் என்?’ என்னில், ‘தாமரை திருவடிகளுக்குப் போலியாக இருக்க, ‘வையங் கொண்ட தடந்தாமரை’ என்று தாமரையாகவே திருவடிகளைப் பேசுவது போன்று’-இங்குப் பிராட்டியாகவே பேசப்படுகிறது; 5முற்றுவமை இருக்கிறபடி. ‘ஆயினும், இவர் ஆடவர் ஆகையாலே ஆண் தன்மை பின் நாடாதோ?’ எனின், இராஜ இருடி பிரம இருடியான பின்னர் அரசருடைய தன்மை பின் நாட்டிற்றில்லை
‘சக்கரவர்த்தி திருமகள் திருவவதரித்த பின்பு வானரசாதி வீறு பெற்றாற்போன்று’ஆழ்வார்கள் திருவவதரித்துத் திரியக்குச் சாதி வீறு பெற்றபடி’ என்று பட்டர் ரஸோக்தியாக அருளிச்செய்வர்.
அம் சிறைய ‘குழந்தை தாயின் உறுப்புகள் எல்லாங்கிடக்க, மார்பிலே வாய்வைக்குமாறு போன்று’பறப்பதற்குச் சாதனமான சிறகிலே முற்படக் கண வைக்கிறாள்
‘ஆசாரியனுடைய ஞானத்தை உத்தேசித்துச் சிஷ்யன் வணங்குவது போன்று’இவளும் சிறகிலே கண் வைக்கிறாள்.
இச்சமயத்தில் இவள் நாரையைப் பார்த்தது யாங்ஙனம் இருந்தது?’ எனின், பிராட்டியைப் பிரிந்த ஸ்ரீராமன், ‘பம்பை நதிக்கரையில் அனுமானைச் சந்தித்தது போன்று இருந்தது’ என்பதாம். அச்சந்திப்பு ‘வழி பறிப்பார் கையிலே அகப்பட்டு நிற்கத் தாய் முகத்திலே விழித்தாற்போன்று’–வழி பறிப்பார் கையில் அகப்படுகையாவது-பிராட்டியினுடைய கண்ணிற்கும் முகத்திற்கும் போலியான நீலம் தாமரை முதலானவற்றால் நெஞ்சு பறியுண்கை.
இளையபெருமாள், தன் தமையனுடைய இரண்டு திருவடிகளையும் இறுகப் பிடித்தவராய், பிராட்டியை முன்னாகக் கொண்டு பேசினார்,’ என்கிறபடியே, ‘என்றும் சேவலைக் காரியங்கொள்ளுவார் பேடையை முன்னிட்டுப்போலேகாணும் காரியங்கொள்ளுவது’
அம் சிறைய சேவலுமாய்-அது இட்ட வழக்கான நீயும் நீ இட்ட வழக்கான சேவலுமாகி. ‘திருமகள் கேள்வன்’ என்பது போன்று, சேவலிடத்துத் தான் அன்பு செலுத்துவதற்குக் காரணம் பேடையே என்பாள், ‘நின் சேவல்’ என்கிறாள்.
வன்சிறையில்-காதலி பக்கல் நின்றும் வந்தவர்களைச் சிறையிடுவான் ஒரு மூர்க்கன் உளனோ? இரான் ஆதலால், ஈண்டுச் சிறையாவது – இவர்களுக்கு முகங்கொடாதே வேறு ஒன்றிலே நோக்குடையவனாய் இருத்தல். ‘ஆயின், இவ்வாறு இருத்தலைச் சிறை என்னலாமோ?’ எனின், ‘அரசகுமாரர்கட்கு உரிய அவ்வக்காலங்களில் வெள்ளிலை இடாத போது அவர்கள் வருந்துவார்கள்; அது போன்று’இவைகட்கும் முகங்கொடுத்து அவன் கேளாமையே துன்பத்தினை விளைப்பதாம்; அதனையே ஈண்டுச் சிறை என்றாள்.
என் தூதாய் – அவனோடே கலந்து பிரிந்து வெறுந்தரையாய் இருக்கின்ற எனக்குத் தூதாய். அதாவது, ‘கடலேறி வடிந்தாற் போலேகாணும் கிடக்கிறேன்,’ என்றபடி,
இச்சீற்றத்துக்கு நாம் முன்னிற்க ஒண்ணாது’ என்று தாரையைப் புறப்பட விட, அவள், கலவியால் உண்டான பரவசத் தன்மையடங்கலும் நடையிலே தோற்றப் புறப்பட்டாற்போன்று இராநின்றது இவற்றின் நடையழகும் என்பாள், பெடை மணக்கும், மென்னடைய அன்னங்காள்’ என்கிறாள் ‘
ஸா-ஒரு கலவியும் பிரிவும் வேண்டாதபடியான நடையழகையுடையவள். ப்ரஸ்க்கலந்தீ-புணர்ச்சியாலுண்டான துவட்சியால் தடுமாறி, அடிமேல் அடியாக இட்டுவந்தாள். மதவிஹ்வலாக்ஷீ-மது பானம் முதலிய வைகளாலே தழுதழுத்த நோக்கையுடைவளாய் இருந்தாள். ப்ரலம்ப காஞ்சீ குண ஹேம சூத்ரா-அரை தூல் வடம் இழுப்புண்டு வரும்படி படுக்கையிற்கிடந்தபடியே பேணாதே வந்தாள். ஸலக்ஷணா – புணர்ச்சிக்குறிகள் காணலாம்படி வந்தாள். லக்ஷ்மண சந்நிதாநம் ஐகாம-தாய்க்கு ஒளிப்பது உண்டோ என்று புறப்பட்டு வந்தாள். தாரா – தாரையானவள். நமிதாங்கயஷ்டி: உருகு பதத்தில் வளைந்தவை நிமிர்க்க ஒண்ணாதாப் போல இத்துவட்சி நிரூபகம் இவளுக்கு என்று தோற்றும்படி இருந்தாள். ஸ்ரீராமா. கிஷ். 33 : 37. அப்படிப்பட்ட நடையழகாலே அவரைத் துவக்கிக் காரியங்கொள்ளவற்று இவையும் என்று இருக்கிறாள்.
கோடியைக் காணியாக்கினாற்போன்று, பெரிய வடிவழகைக் கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி சிறுக்கினானாதலின் ‘குறள்’ என்கிறாள்.
’நாங்கள் சென்று கூறின் வாராது இரான்;’ என்ன, ‘நான் சொல்லி விட இருக்கிறவர், நீங்கள் சொல்லும் அளவையோ பார்த்திருக்கிறார்? 2‘திருமுகம் மறுத்தவன் கடையீட்டுக்குக் கேட்கப் போகின்றானோ?’ (பிரதானனான அரசன் ஓலையை மறுத்தவன், கணக்கன் ஓலை கேட்கப் போகின்றானோ?’ என்றபடி.)கண்டு இரங்காதவர்க்கு நான் எத்தைச் சொல்லுவது என்று ஆசை அற்றவளாய், பின்னையும் ஆசையின் மிகுதியினாலே, 3‘இக்கிருஷ்ணன் பிதற்று ஒழிய வேறு ஒன்று இல்லையோ!’ என்று கூறிய ஆய்ப்பெண்கள், ‘கலந்த நம்மை அன்றோ வேண்டான் அவன்? பெற்ற தாயைக் காணவாகிலும் இங்ஙனே ஒருக்கால் போதானோ?’ என்று ( ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 24 : 15.)கூறியது போன்று கூறுகின்றாள் மேல்
அவர் இவ்வாற்றாமையாலே 3உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடு அறுத்துக்கொண்டு வர,((நாய்ச். திரு. 11 : 7.))விடாயள் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று ஆக ஒண்ணாது என்று நோக்கியிட்டு வைத்தேன், அத்தனை; அவரைக் கண்ட பிற்றை தாள் இருந்தேனாகில் காண் நீ இவ்வார்த்தை சொல்லுவது,’ என்று கூறியது போன்று, ‘தலைவராகிய உம்பொருட்டுத் தங்கின் தங்கலாம்,’ என்ற படி ஒரு வாய்ச்சொல்-ஒரு சொல் சொல்ல அமையும்.
கடலிலே ஏற்றமிட்டுத் தண்ணீர் அரிதாம்படியான பாவத்தைப் பண்ணுவேனே?’ என்பாள், ‘வினையேன்’ என்கிறாள்.கடலிலே ஏற்றமிட்டு இறைத்தும் தண்ணீர் பெறாத ஒருவனைப் போன்று, சர்வ ரக்ஷகனைப் பற்றிவைத்தும் நான் விரும்பிய பொருள் கிடையாதபடியான பாவம்’ என்பது பொருளாம். இங்குத் தண்ணீரைப் போன்றது, ஜீவனம்.
நாரணனைக் கண்டக்கால்-உயிரக்கூட்டங்களினுடைய சொரூபம் நிலைபேறு முதலியவைகள் தனக்கு அதீநமாய், இவை பிரகாரமாகத் தான் பிரகாரியாய், இவற்றிலே ஒன்று குறையிலும் தன் இழவாம்படி இருக்கையாலே நாராயணன் என்று விருது ஊதிக்கொண்டு திரிகிறவரைக் கண்டால், இங்கு, ‘இப்பெயர் 1காரண இடுகுறியோ!’ என்றிருந்தோம்; ‘கள்ளிச்செடிக்கு மஹா விருக்ஷம் என்று பெயர் இருப்பதைப் போன்றது ஒன்றோ!’ என்று கேளுங்கள் என்ற தொனிப் பொருளும் தோன்றும் -காரண இடுகுறிப் பெயராவது – அவயவப் பொருள் நிறைந்ததாய் அச்சொல்லே அதற்கு அசாதாரணமான பெயராய் இருத்தல். கள்ளிக்கு மஹா விருக்ஷம் என்ற பெயர் இடுகுறி.
‘இராசாக்கள் இராசத் துரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாறு போன்று’
பால் குடிக்க நோய் தீருமாறு போன்று, இத்திருவாய்மொழியில் இனிய சொல்லாலே பெறலாம். அதாவது, ‘தானே பிரயோஜனமாயிருக்கிற இத்தால், சம்சாரத்தில் குறைவான நிலைபோய், பரமபதத்தில் சென்று, தன் சொரூபத்தைப் பெற்று விரிவையடைந்தவன் ஆகையாகிற எல்லை இல்லாத செல்வத்தைப் பெறலாம், என்றபடி.
இத் திருவாய்மொழியில் இறைவனுடைய சீலத்தை அருளிச் செய்தவாறு யாங்ஙனம்?’ எனின், மேல் திருவாய்மொழியில் தூது விடுகின்ற வியாஜத்தால் தம்முடைய ஆற்றாமையை அறிவித்த பின்னர், ‘இவரை இங்ஙனம் நோவு பட விட்டோமே!’ என்று பிற்பாட்டுக்கு நொந்து யானைக்கு உதவ வந்து தோன்றியது போன்று, அரை குலையத் தலை குலைய வந்து தோன்றினான்;
‘தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று, நித்தியசூரிகளுக்கு நுகரப்படும் பொருளாக உள்ள இறைவனை நாம் கிட்டிக் கெடுக்கப் பார்ப்போம் அல்லோம், அகலும் இத்தனை,’ என்று நினைத்தார். ‘அகன்றால், பிழைக்க வல்லரோ?’ என்னில், பிழையார்; முடியும் இத்தனையே. ‘ஆயின், அகலுவான் என்?’ என்னில், தலைவனுக்கு அதிசயத்தைத் தேடுமவர்கள் தத்தம் அழிவினைப்பாரார்கள் அன்றே? பெருமாளும் தேவ தூதனும் ஆலோசனை தொடங்கும் சமயத்தில், துர்வாசர் ‘என்னை உள்ளே புக விட வேண்டும்’ என்ன, இவனைத் தகைந்து பெருமாளுக்கு ஒரு தாழ்வினை விளைப்பதில் நாம் அகன்று முடிய அமையும்’ என்று நினைந்து, அவனைப் புகவிட்டு, ‘அரசர்க்கு அரசரே, உமக்கு என்னிடத்தில் அன்பு இருக்குமாகில், என்னிடத்து அருள் புரியவேணும் என்னும் கருத்து இருக்குமாகில், யாதொரு ஐயமும் இன்றி என்னை விட்டு விடும்; உம்முடைய சூளுறவைக் காப்பாற்றும்,’ என்று விடை கொண்டார் அன்றே இளைய பெருமாள்? (ஸ்ரீராமா. உத்தர. 106 : 4.)மேலும், இலக்குமணரே, என் நாயகரான இராகவருடைய வமிசத்தில் சந்தானம் இல்லாமல் இருக்க ஒண்ணாது என்று என் உயிரை இப்பொழுதே இக்கங்கையில் விடாமல் இருக்கிறேன்,’ என்று விடை கொண்டாள் அன்றே பிராட்டி? (ஸ்ரீராமா. உத்தர. 48 : 4.நான் உயிரை விட்டால் பெருமாளை உலகம் பழிக்கும்; பெருமாளுக்குப் பழியினை உண்டுபண்ணலாகாது என்று நான் பிழைத்திருக்கிறேன்,- என்பது கருத்து. இங்குப் பிழைத்திருத்தலே பிராட்டிக்கு அழிவு.)அப்படியே, இவரும், ‘ஊருணியிலே கள்ளியை வெட்டி எறிவாரைப் போலவும், அமிருதத்திலே விஷத்தைக் கலப்பாரைப் போலவும். நித்திய சூரிகள் அனுபவிக்கும் பொருளை நாம் புக்கு அழிக்கையாவது என்?’ என்று அகலப்புக்கார்.
நீர் தாழ்ந்தவர் என்று அகலுமதிலும் சேர்கிறது, ‘திருவாய்ப்பாடியில் வெண்ணெயினைப் போன்று’எனக்குத் தாரகங்காணும்; இனி, நீர் அகலில், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் விலக்கினார் புக்க உலகம் புகுதல் திண்ணம்; நீர் அகலுமது என்னுடைய இருப்புக்குக் கேடு,’
நட்பு உணர்ச்சியோடு வந்து சேர்ந்த இந்த விபீடணன் வஞ்சனையுள்ளவன் ஆகவுமாம்; நான் இவனை விடில் உளேன் ஆகேன்,’ என்று சேர்த்துக் கொண்டாற்போலவும், ‘உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்,’ என்ற அருச்சுனனை, 4கிருஷ்ணா, உனது அருளால் உண்மை ஞானத்தை அடைந்தேன்; திரிபு உணர்ச்சியானது என்னை விட்டு நீங்கிற்று; ஐயவுணர்வும் நீங்கினவள் ஆனேன்; ஆதலால், ‘இப்பொழுதே போரினைச் செய்’ என்று நீ கூறுகின்ற இச்செயலை நான் செய்கிறேன் என்று சொல்லப் பண்ணினாற்போலவும்,
வானோர் இறையைக் கள்வா என்பன்’ என்று கூற நினைத்தவர், தொடங்கின வாக்கியம் முடிப்பதற்கு முன்னே தம்மை நினைத்து, ‘அருவினையேன்’ என்கிறார். தார்மிகனாய் இருப்பான் ஒருவன், இராசத தாமத குணங்கள் மேலிடப்பட்டவனாய் வீட்டில் தீயினை வைத்து, சத்துவம் தலையெடுத்தவாறே வருந்துமாறு போன்று வருந்துகிறார்.
தளவு ஏழ் முறுவல்-காட்டுப் பசுவினைக் கண்டவாறே வீட்டிலுள்ள பசு நினைவிற்கு வருதல் போன்று, நப்பின்னைப் பிராட்டியினுடைய பற்களின் வரிசையைக் கண்டவாறே முல்லை அரும்பு நினைவிற்கு வருதலின், ‘தளவேழ் முறுவல்’ என்கிறார்
‘நெஞ்சால் நினைந்தும், வாயால் பேசியும், உடலால் நைந்தும், தவறு செய்தேன்,’ என்றார் மேல் பாசுரத்தில்; ‘தவறு செய்தேன் என்ற இடம் தவறு,’ என்கிறார் இப்பாசுரத்தில்; ‘யாங்ஙனம்?’ எனின், சண்டாளன் ‘வேதம் போகாது’ என்றுதான் சொல்லப் பெறுவனோ? அவ்வாறே அன்றோ நான் அயோக்கியன் என்று அகலுகையும்? அன்பினால் நனைந்த மனத்தையுடைய பிரமன் முதலியவர்கள் அன்றோ அதுதான் சொல்லப் பெறுவர்! ‘நான் தவறு செய்தேன்’ என்று அகலுமதில், கிட்டி நின்று பரிமாறுதல் நன்று அன்றோ?’ என்று, மேல் நின்ற நிலையையும் நிந்தித்துக்கொண்டு அகலுகிறார்.
அவன் இவைகொண்டு காரியங் கொள்ளுமதிலும் ‘சூட்டுநன் மாலைகள் தூயன ஏந்தி’ (. திருவிருத்தம், 21.)என்னுமாறு போன்று ‘அவனுக்கு என்று தரிக்குமதுவே’ இவர்களுக்குப் பேறாக இருக்குமாதலானும், பாவ பந்தம் இரண்டு தலைக்கும் உண்டு ஆதலின், அவன் தானும் இவை கொண்டு காரியங் கொள்ளுமதிலும் இவர்கள் தரித்துக்கொண்டு நிற்கக் காணுமதனையே பேறாக நினைத்திருப்பனாதலானும் ‘ஏந்தி வணங்கினால்’ என்கிறார்.
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார்
சிவன் இவர்களோடு கூடியிருப்பின் தனக்கும் அவர்கட்கும் வேற்றுமை இன்றித் தனது உயர்விற்குக் குறைவு வாராதோ?’ என்னில், இட்சுவாகு குலத்தினர் நடுவே வந்து அவதரித்து அவர்களோடே எண்ணலாம்படி இருக்குமாறு போன்றும், யாதவர்கள் நடுவே வந்து அவதரித்து அவர்களோடு ஒக்க எண்ணலாம் படி இருக்குமாறு போன்றும், பிரமன் சிவன் இவர்கள் நடுவே அவர்களோடு ஒக்கச் சொல்லலாம்படி அவதரித்து, தனது உருவமாய் நின்று அளித்தலைச் செய்து, அவர்களுக்கு அந்தராத்துமாவாய் நின்று படைத்தல் அழித்தல்களைச் செய்து போதரலால் உயர்விற்குக் குறை வாராது என்க.
அவன் என் நாயனே. 1உடைமை தப்பிப் போகப் புக்கால் உடையவர்கள் ஆறியிருப்பர்களோ? பெறுகைக்கு ஈடாக முன்னரே நோன்பு நோற்று வருந்திப் புத்திரனைப் பெற்ற தாயானவள், அவன் நடக்க வல்லனான சமயத்திலே, ‘வேறு தேசம் போவேன்’ என்றால் விட்டு ஆறியிராள் அன்றே? அப்படியே, நெடுநாள் தன் வாசி அறியாதே போந்த எனக்கு அறிவைத் தந்து தன்னை உள்ளபடி அறிவித்தவன், தான் தந்த அறிவைக்கொண்டு நான் அகன்று போகப் புக்கால், அவன் விட்டு ஆறியிருப்பனோ என்பார், ‘எம்பெருமானே’ என்கிறார்.
மான்ஏய் நோக்கி-மானோடு ஒத்த கண்களையுடையளாய். இனி, காரியப்பாடு அறக் கண்ணாலே அவனை ஒருக்கால் நோக்கினால், ஒரு பாட்டம் மழை விழுந்தாற் போலே குளிரச் செய்கின்ற கண்கள் என்று கூறலுமாம்-நோக்கி’ என்பதற்கு இரு பொருள்: ஒன்று, கண்களை யுடையவள்.- மற்றொன்று, கண். காரியப்பாடற-வேறு பயனின்றி, அதாவது, அன்புடன் என்பதாம்.
தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ’ என்கிறபடியே, எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப்போன்று இருக்கின்ற மென்மையினையுடையவள் என்று கூறலுமாம். மார்பிற் கொண்டாய் மாதவா-6‘விஷ்ணுவினுடைய திருமார்பில் எழுந்தருளியிருக்கின்ற பெரிய பிராட்டியார்’ (ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 : 104.)என்கிறபடியே, அவள், திருமார்பில் நித்தியவாசம் செய்கையாலே ‘மாதவன்’ என்னுந் திருநாமத்தையுடையவனே. மாம்பழத்தோடு ஒரு வித சம்பந்தம் இல்லாதிருக்கவும் ஒரு வகை வண்டு ‘மாம்பழ உண்ணி’ என்ற பெயரை அடைவது போன்று, ‘ஸ்ரீ’யோடு சம்பந்தம் இல்லாதிருக்கவும் ‘ஸ்ரீமான்’ என்ற பெயரைத் தரித்திருக்கின்ற பிறறைப் போல அல்லன் இறைவன் என்பார், ‘மார்பிற் கொண்டாய் மாதவா’ என்கிறார். மடவாளை மார்பிற் கொண்டவனாயிருப்பதனால், அருளுவிப்பாரும் அருகே இருக்க ‘எனக்கு அருளாய் என்று வேண்டுவது என்?’ என்றபடி.
கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா-வனவாசத்திற்குக் காரணமான குப்ஜையைச் சொல்லிற்றாய், இளமையில் சுண்டுவில் கொண்டு திரிகிற காலத்தில் பெருமாள் லீலாரசம் அனுபவித்தார் என்பது ஒன்று உண்டு; அதனை நோக்கிச் சொல்லுகிறார். அப்போது ‘கோவிந்தா’ என்றதற்குப் ‘பூமியைக் காப்பவன்’ என்பது பொருள். அவளுடைய மற்றை உறுப்புகட்கு ஒரு வாட்டம் வாராதபடி நிமிர்த்தானாதலின், ‘கூனே சிதைய’ என்கிறார். அன்றி, 1தீம்பு சேர்வது கிருஷ்ணனுக்கே ஆகையாலே போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்னுமாறு போன்று,கிருஷ்ணன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுகிறார் என்றலுமாம் இனி, சாந்து கொடுத்த கூனி தன்னையே சொல்லிற்றாய், வருத்தம் அறச் சுண்டுவில் நிமிர்க்குமாறு போன்று கூனை நிமிர்த்தவன் என்றலும் ஒன்று. ‘தெறித்தாய், நிமிர்த்தாய்’ என்றபடி. ‘ஆயின், கிருஷ்ணனுக்கு வில் உண்டோ?’ என்னில், வேலிக்கோல் வெட்டி விளையாட்டு வில் ஏற்றித் திரியுமவன் அன்றோ கிருஷ்ணன்? (பெரியாழ்வார் திருமொழி, 2. 6 : 1.)‘தருமம் அறியாக் குறும்பனைத் தன்கைச் சார்ங்க மதுவேபோல்’ என்று வில் உண்டாகவே அருளிச்செய்து வைத்தாள் அன்றே ஸ்ரீ ஆண்டாள்? (நாய்ச்சியார் திருமொழி, 14 : 6.)அவள் அருகில் இல்லாது ஒழியினும் உன்னைக் கிட்டினார்க்குத் தாழ்வு வருமோ என்கிறார் இதனால். கோவிந்தா-விலங்குகளோடும் பொருந்துமவன் அல்லையோ நீ?
போம்பழி எல்லாம் அமணன் தலையோடே’ என்றது, ஒரு கள்ளன் ஒரு பிராமணன் வீட்டில் கன்னம் இட, அது ஈரச்சுவராகையாலே
இறுத்திக்கொண்டு இறக்க, அவ்வளவில் அவன் உறவினர் வந்து பிராமணனைப் பழிதரவேண்டும் என்ன, இரண்டு திறத்தாரும் அரசன் பக்கல்
போக, அவ்வரசனும் அறிவற்றவனாய் மூர்க்கனுமாகையாலே, ‘பிராமணா, நீ ஈரச்சுவர் வைக்கையால் அன்றோ அவன் இறந்தான்? ஆகையால், நீ
பழிகொடுக்க வேண்டும்’ என்ன, ‘எனக்குத் தெரியாது; சுவர் வைத்த கூலியாளைக் கேட்கவேண்டும்’ என்ன, அவனை அழைத்து, ‘நீயன்றோ
ஈரச்சுவர் வைத்தாய்? நீ பழி கொடுக்க வேண்டும்,’ என்ன, அவனும் ‘தண்ணீர் விடுகிறவன் போரவிட்டான்; என்னாற் செய்யலாவது என்?’
என்ன, அவனையழைத்துக் கேட்க, அவனும் ‘குசவன் பெரும் பானையைத் தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று’ என்ன, அவனையழைத்துக் கேட்க,
அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேசி போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கிற பராக்கிலே பானை பெருத்தது’ என்ன, அவளை
யழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான் புடைவை தாராமையாலே போகவரத் திரிந்தேன்,’ என்ன, அவனையழைத்துக்கேட்க, அவனும், ‘என்னால் அன்று; துறையில் கல்லில் ஓர் அமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று,’ என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து ‘நீயன்றோ இத்தனையும் செய்தாய்? நீ பழி கொடுக்க வேண்டும்,’ என்ன, அவன் மௌனி ஆகையாலே பேசாதிருக்க, ‘உண்மைக்கு உத்தரம் இல்லை என்று இருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்,’ என்று, அரசன் அவன் தலையை அரிந்தான் என்பது கதை.
வான் ஆர் சோதி மணி வண்ணா-குப்பியில் மாணிக்கம் போன்று திரிபாத் விபூதியிலும் அடங்காதே விம்மும் படியான புகழ் படைத்த வடிவையுடையவனே! இதனால், ‘அடியார்களுக்காகவே வடிவு படைத்தவன் அல்லையோ நீ?’ என்கிறார். மதுசூதா-மதுவாகிற அசுரனைப் போக்கியது போன்று என் விரோதியைப் போக்கினவனே! இதனால், ‘அவ் வடிவை அனுபவிப்பார்க்கு வரும் விரோதியைப் போக்குவாயும் நீயன்றோ?’ என்கிறார். உன் தேனே மலரும் திருப்பாதம் – ‘இவை ஒன்றும் இல்லை யாயினும் அடியில் உன் இனிமையைப் பார்த்தால் தான் விடப் போமோ?’ என்கிறார்.
அருளாய் சேருமாறு வினையேன் – கலத்தில் இட்ட சோற்றை விலக்குவாரைப் போன்று, நீ வந்து கிட்டக்கொள்ள அகலுகைக்கு அடியான பாவத்தைப் பண்ணின நான் சேருமாறு அருளவேண்டும். தாம் இசைந்த பின்பும் கிடையாமையாலே ‘வினையேன்’ என்கிறார்.
அடியேன் சிறிய ஞானத்தன்-சம்சாரிகளில் அறிவு கேடர் முற்றறிவினர் என்னுமாறு போன்று’, என் அறிவு கேடு! ‘அல்லேன்’ என்று அகலும் இவர், ‘அடியேன்’ என்கிறது, வாசனையாலே. அன்றி, ‘அடியேன்’ என்கிறது, அடிமைக்கு இசைந்து அன்று; ஆத்துமாவிற்கு ஞான ஆனந்தங்களைப் போன்று அடிமையையும் நிரூபமாக நினைந்திருக்கையாலே. ‘நான்’ என்பது போன்று ‘அடியேன்’ என்கிறார் எனலுமாம். சிறிய ஞானத்தன் – மிகச் சிறிய அறிவினையுடையவன். அறிதல் ஆர்க்கும் அரியானை-எத்துணை வியக்கத் தக்க அறிவினை யுடையராய் இருப்பார்க்கும் அறியப் போகாதவன் இயற்கையிலேயே முற்றறிவினையுடைய தனக்கும் அறியப் போகாதவன்; 2‘தனக்கும் தன் தன்மை அறிவு அரியான்’ அன்றோ?
என்னைநீ இகழ்ந்தது என்றது எங்ஙனே! ஈச னாய உன்னைநீ உணராய்; நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை?’-கம்ப. யுத். 606)
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து – 2‘எள்ளில் எண்ணெய் போன்றும், மரங்களில் நெருப்புப் போன்றும்’ என்கிறபடியே பிரிக்க ஒண்ணாதபடி பொருந்திக் கிடக்கின்ற புண்ணிய பாப ரூப கர்மங்களையும் சரித்து. சர்வ சத்தியான தான் போக்கும் அன்றும் போக்க ஒண்ணாதபடி நூறு கிளைகளாகப் பணைத்த வினைகளை, விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாறு போன்று போக்கினான் என்பார், ‘சரித்து’ என்கிறார், மாயப் பற்று அறுத்து-ருசி வாசனைகளையும் கழித்து. –தீர்ந்து – தான் செய்ய வேண்டுவனவற்றை எல்லாம் செய்து முடித்தவனாய். இனி, தீர்ந்து என்பதனைத் ‘தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி’ என்று கூட்டி, ‘அல்லேன்’ என்று அகலாதே தனக்கே தீர்ந்து, தன் பக்கலிலே நெஞ்சை வைக்கும்படி திருத்தி என்று பொருள் கூறலும் ஆம்.
இறைவனும் ஆழ்வாரும் என்னும் இருவருடைய தொழிலாகவுங் கொண்டு ‘தீர்த்து’ என்பதற்கு இரு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்.
முதற்பொருளுக்கு, ‘தன்பால் மனம் வைக்கத் திருத்தித் தீர்ந்து வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக. இரண்டாவது பொருளுக்கு ‘தீர்ந்து
வைக்கத் திருத்தி வீடு திருத்துவானானான்’ எனக் கூட்டுக. முதற்பொருளில், இறைவன் தொழில்; இரண்டாவது பொருளில் ஆழ்வார் தொழில்.
நெடுமால்-இப்படி இருக்கிற நெடுமால் வீடு திருத்துவான் ஆனான். இறைவனுடைய வியாப்தியும் இவரைப் பெற்ற பின்பு அழகு பெற்றது ஆதலின், ‘நெடுமால் என்கிறார். இனி, ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வலைவாரைப் போன்று இவரைத் திருத்துகைக்காகப் பரந்திருப்பவனாய் இருந்தான் ஆதலின், ‘நெடுமால்’ என்கிறார் எனலுமாம்.
மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்-தன்னை முடித்துக் கொள்வதாகக் கழுத்திலே கயிற்றை இட்டுக்கொண்டவனை அறுத்து விழ விடுவாரைப் போன்று, அகன்று முடியப் புக்க இவரைப் பொருந்த விட்டுக் கொள்ள, அவன் அருளாலே பொருந்தின ஆழ்வார். 2பிடி தோறும் நெய் ஒழியச் செல்லாத சுகுமாரரைப் போன்று, ( பிடி-ஒரு பிடி சோறு)நின்ற நின்ற நிலைகள்தோறும் இறைவன் திருவருள் ஒழிய நடக்க மாட்டாதவர் ஆதலின், ‘மால் அருளால் மன்னு சடகோபன்’ என்கிறார்.
பால் ஏய் தமிழர் – பால் போலே இனிய தமிழை யுடையவர்கள். இசைகாரர் – இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீமதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார். பத்தர் – ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண்சுழளும்’ என்று இருக்குமவர்கள். ஆழ்வான் ஒரு முறை ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது; இசைகாரர் என்றது, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; பத்தர் என்றது, பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். ஸ்ரீ ஆளவந்தார் பாலேய் தமிழர் என்கிறது, முதலாழ்வார்களை; இசைகாரர் என்கிறது, திருப்பாணாழ்வாரை; பத்தர் என்கிறது, பெரியாழ்வாரை’ என்று அருளிச் செய்வர்
ஆயிரத்தின்பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு – ‘கடலிலே முத்துப்பட்டது’ என்னுமாறு போன்று, சிறப்பையுடைய ஆயிரத்தின் நடுவே பொருந்தி இருக்கிற இத்திருவாய்மொழியை வல்லார்க்கு. பரிவது இல்லை-‘அஞ்சிறைய மடநாராய்’ என்னும் திருவாய்மொழியில் தூது விட்டு, இறைவன் வந்து காட்சி அளித்தவாறே ‘தாழ்ந்தவன்’ என்று அகன்று படும் துக்கம் இல்லை.
தூய்மையான மனம் ஒன்றுமே வேண்டுவது என்பதும், அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் அபிமத விஷயத்தின் பரிமாற்றம் போலே உத்தேஸ்யமாய்த் தோற்றும் என்பதும், அவற்றில் ஒன்றையும் விடான் என்பதும், எல்லாருடைய தொழில்களையும் காலாலே கொள்ளப் பிறந்தவன், இவன் காலாலே போகட்டவற்றையும் அவன் தலையாலே சுமப்பான் என்பதும், செவ்வக் கிடப்பு உண்டாயினும் மஹிஷீ ஸ்வேதத்துக்கு ஆள் இட ஒண்ணாதது போன்று, அவ்வேலைகளைத் தானே செய்வான் என்பதும் போதருதல் காண்க.
இவற்றால், இறைவனை அடைதல் எளிது என்பது போதரும். ஆக, இப்படிகளாலே, இறைவன் எளிதில் ஆராதிக்கத் தக்கவன் என்பதனை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.
உயர்வு தாழ்வு பாராமைக்கு அடி என்?’ என்னில், ஈசனை – ‘வகுத்த சுவாமி ஆகையாலே’ என்கிறார். புறம்பே ஒருவனுக்கு ஒருவன் விருந்திடும் போது நெடுநாள் பச்சை தேடி விருந்திட்டால், ‘இவன் உண்டு என்ன குறை சொல்லப் புகுகிறானோ!’ என்று நெஞ்சாறலோடே தலைக்கட்டவேண்டி வரும்; மகன் தமப்பனுக்கு விருந்திட்டால், உண்டாகில் உள்ள குறை தமப்பனதாய் நெஞ்சாறல் படவேண்டாத இருக்கலாம் அன்றே? அப்படிப்பட்ட சம்பந்தத்தைப்பற்ற ‘ஈசன்’ என்கிறார் என்றபடி.
பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினான் – தாம் தாம் அகப்பட்ட குணங்களைச் சொல்லி, ‘நான் முந்துறச்சொல்ல, நான் முந்துறச்சொல்ல’ என்று பிணங்கி நித்தியசூரிகள் ஜன்னி சுரம் வந்தவர்களைப் போன்று அடைவு கெடக் கூப்பிடுகிற குணங்கள் வந்து சேருகைக்கு இருப்பிடமானவன். அதாவது, 1‘இரத்தினாகரம் போலே குணங்கள் சேருகைக்குக் கொள்கலமானவன்’ என்றபடி. இனி, ‘குணம் கெழு கொள்கையினான்’ என்பதற்கு, குணங்கள் வந்து கெழுமுகையைச் சுபாவமாக உடையவன்’ என்று பொருள் கூறலுமாம். கெழுமுகை-சேர்கை.
இனி, 2இத்திருப்பாசுரத்தால், முற்றறிவினர்கள் படுகிற பாடு என்னுடைய கரணங்களுக்கும் உண்டாகாநின்றது என்கிறார்’
தாள்கள் தலையில் வணங்கி-அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு திருவடியைப் போலே போது போக்கி. நாள் கடலைக் கழிமின் – இறைவனுடையஇனிமை நெஞ்சிலே பட்டால், அவனை அடைவதற்கு முன்பு இடையிலேயுள்ள நாள்கள் ஒருகடல் போன்று தோன்றும் ஆதலின், ‘நாள்கடல்’ என்கிறார். இனி, இதற்குச் ‘சக்கரவர்த்தி திருமகனை அடைந்து பிறவிப் பெருங்கடலைக் கழித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறலுமாம்.
கரும்பு தின்னக் கூலி போன்று ஒரு பலன் இன்றே யாயினும் தொழுகைதானே பலன் ஆதலின், ‘தொழுமின்’ என்றவர், மீண்டும் ‘தொழுதால்’ என்கிறார். இப்படிச் செய்தால், வழி நின்ற வல்வினை மாள்வித்து – இவ்வாத்துமாவுக்குச் சொரூபத்தோடு கட்டுப்பட்டதோ என்னும்படி பொருந்தியிருக்கிற கொடிய கர்மங்களை வாசனையோடே போக்கி. இனி, ‘வழிநின்ற வல்வினை’ என்பதற்கு ‘நடுவே நின்று, பகவானை அடைதலைத் தடை செய்கிற கர்மங்கள்’ என்று பொருள் கூறலுமாம். அழிவு இன்றி ஆக்கம் தரும் – ‘மறுபடியும் மீண்டு வருகின்றான் இலன்’ என்கிறபடியே, மீண்டு வரும் தன்மை இல்லாத மோக்ஷத்தைத் தருவான்.
பிறவாரே-ஆயிரத்திலும் இந்தப் பத்தையும் கற்க வல்லார் பிறவார். பிறக்கை சுட்டி அன்றே ‘மாதாவைப் பேணுதல் அழகிது’ என்னுமாறு போன்று, ‘பகவானை அடைதல் எளிது’ என்று உபதேசிக்கிறார்? இத் திருவாய்மொழியைக் கற்க வல்லார்கள் உபதேசம் இல்லாமலே சம்சார சம்பந்தம் அற்றுப் பகவானுடைய அனுபவமே யாத்திரையாம்படி இருக்கிறவர்களோடே கூடி அனுபவிக்கப்பெறுவர்கள் ஆதலின், ‘ஓத வல்லார் பிறவார்’ என்கிறார்.
ஆழிப்படை அந்தணனை-ஆத்தும அனுபவ விரோதியைப் போக்கைக்குக் கருவியான திருச்சக்கரத்தைக் கையிலே யுடையவன். அந்தணன்-பிராமணன். சாணிச்சாற்றைப் போன்று ‘சுத்தன்’ என்று கொண்டார்கள் இத்தனை; இனிமையில் நெஞ்சு சென்றது இல்லை. ‘சுத்தி குணத்தோடு கூடினவன்’ என்று ஆயிற்று அவர்கள் நினைப்பது. ‘கையுந்திருவாழியுமான அழகைக் கண்டால் அதிலே கால் தாழாதே, தங்கள் பிரயோஜனத்துக்கு உறுப்பான சுத்தி மாத்திரத்தையே பற்றுவதே!’ என்கிறார்-மறவியை இன்றி மனத்து வைப்பாரே – அவனுடைய இனிமையையுங் கண்டு வைத்து, தங்கள் யுருஷார்த்தத்தை மறவாதே அதனைப் பெறுதற்கு அவனை அடைகின்றார்கள்
வைப்பாம் – ஆடு அறுத்துப் பலியிட்டுப் பணப்பையாக்கி, தான் விரும்பிய காலத்தில் நுகர்தற்குச் சேமித்து வைக்கும் சேமநிதி போன்று, ஒருவன் நினைத்த வகைகள் எல்லாம் அநுபவிக்கலாம்படி இறைவன் தானே தன்னை இஷ்ட விநியோகத்திற்குத் தகுதி ஆக்கி வைப்பவன் ஆதலின், ‘வைப்பாம்’ என்கிறார். இதனால், 1பிராப்யத்வம் கூறியபடி. மருந்தாம் – ‘ஆயினும், சிறிய விஷயங்களையும் உண்டு அறுக்க மாட்டாத இவ்வுயிர்கட்கு அன்றோ சர்வாதிகனான தன்னை விஷயம் ஆக்குகிறான்? இவன் அவ்விறைவனை அனுபவிக்கும்படி என்?’ என்னில், அக்குறைகள் வாராதபடி அனுபவ விரோதிகளைப் போக்கித் தன்னை அனுபவிக்கைக்குத் தகுதியான சத்தி யோகத்தையுங் கொடுத்துத் தன்னையும் கொடுக்குமவன் ஆதலின், ‘மருந்தாம்’ என்கிறார். இதனால், 3பிராபகத்வம் கூறியபடி. ஆக ‘வைப்பாம் மருந்தாம்’ என்னும் இவ்விரண்டாலும் பிராப்யத்துவமும் பிராபகத்துவமும் அருளிச்செய்தார் ஆவர்
ஆயர் கொழுந்தாய் – ஆயர்கட்குப் பிரதாநனாய் இருக்கும் இருப்பை அருளிச் செய்தார் மேல்; இங்கு, அவர்களில் ஒருவனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறார். அதாவது, அவர்கள் வேராக தான் கொழுந்தாய் இருக்குமவன் என்கிறார். இதனால், வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்பட வாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற் கண் வாடும் என்பதனைத் தெரிவித்தபடி
செடி சீய்த்துக் குடி ஏற்றின படை வீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று, ‘புறம்பேயும் சேரத் தக்க இடம் உண்டு’ என்று தோற்ற இராமல் இருக்கின்றான் ஆதலின், ‘மனத்தே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார். ‘இப்படி இருந்து செய்கிறது என்?’ என்னில், உயர் வினையே தரும் – ஞான விஸ்ரம்ப பத்திகளைத் தாரா நின்றான். இனி, இதற்கு, ‘இயமன் முதலானோர் தலைகளிலே அடியிடும் படியான சிறப்பைத் தாரா நின்றான்’ எனலுமாம். தந்து சமைந்தானாய் இராது மேன்மேலும் தந்து கொண்டே யிருக்கின்றான் ஆதலின், ‘தந்து’ என்னாது ‘தரும்’ என்கிறார். ‘ஆயின், பத்தியை மேன் மேலும் தருவானோ?’ என்னில், ‘காதல் கடல்புரைய’, ‘காதல் கடலின் மிகப் பெரிதால்’, ‘நீள் விசும்பும் கழியப் பெரிதால்’, ‘சூழ்ந்தனிற் பெரிய என் அவா’ என்பன இவருடைய திருவாக்குகள்
என் விளக்கை – அறிவின்மையாகிற இருள் போகும்படி என்னிடத்து ஒரு விதக் காரணமும் இன்றி, தன்னுடைய சொரூபம் உருவம் குணம் உலகம் முதலான விபூதிகளை எனக்கு விளங்கச் செய்தவனை. விளக்காவது, தன்னையுங் காட்டிப் பொருள்களையுங் காட்டுவது ஒன்று அன்றோ? அது போன்று, இறைவனும் இவர்க்குத் தன்னையும் காட்டி, ஆத்தும சொரூபத்தையும் விரோதி சொரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார். ‘என் விளக்கை என்பான் என்? அல்லாதார்க்கும் ஒவ்வாதோ?’ என்னில் இவரைப் போன்று மற்றையோர்க்குப் பத்தி இல்லையே? பத்தி உண்டாகில் அன்றோ இவ்விளக்குப் பிரகாசிப்பது? ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார்
பிரான் – நிலா, தென்றல், சந்தனம் என்னுமிவை பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று, தன் படிகளை அடையப் பிறர்க்கு ஆக்கி வைக்குமவன். எல்லாப் பொருள்கள் விஷயமாகவும் அடியார்கள் விஷயமாகவும் செய்யும் உபகாரத்தை நினைத்துப் ‘பிரான்’ என்கிறார். அதனை விரிக்கிறார் மேல்: பெரு நிலம் கீண்டவன் – பிரளயம் கொண்ட பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று, சம்சாரப் பிரளயங் கொண்ட என்னை எடுத்தவன்-மராமரம் எய்த மாயவன் – மஹாராஜர், வாலி மிடுக்கையும் பெருமாள் மென்மையையும் நினைத்து, ‘நீர் வாலியைக் கொல்ல மாட்டீர்’ என்ன, ‘நான் வல்லேன்’ என்று மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ்செய்யும் அன்புடையவன். இது அடியார் விஷயமாகச்செய்த உபகாரம்.
தான் ஒட்டி வந்து ‘இக்கடலை முடித்தல், அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை,’ என்றது போன்று சூளுறவு செய்து வந்து புகுந்தான். ‘ஆழ்வீர்! உம்முடைய பக்கல் இருப்போம்’ என்றால், ‘ஒட்டேன்’ என்பரே? ‘ஆகில் இங்கே இருக்கக் கடவோம்’ என்று சூளுறவு செய்து வந்து புகுந்தான் ஆதலின், ‘தான் ஒட்டி’ என்கிறார்.
என் தனி நெஞ்சை-இறைவனாலும் திருத்த ஒண்ணாதபடி தனக்குத்தானே உரியதாய், பிறர்க்கு உரியது அல்லாததாய் இருந்த நெஞ்சை. வஞ்சித்து – தன்னுடைய சீலம் முதலிய குணங்களாலும் வடிவழகாலும் தனக்கு உரியதாம்படி செய்து. ‘பின்னைச் செய்தது என்?’ என்னில், ஊன் ஒட்டி நின்று என் உயிரிற்கலந்து இதற்குச் ‘சரீரத்தைப் பற்றி நிற்கிற என் உயிரிலே கலந்து என்கிறார்,’ என்பாரும் உளர்; அவ்வாறு அன்றி, ‘காதலி மாட்டு அழுக்கு உகப்பாரைப்போலே என்னுடைய சரீரத்தைப் பற்றி நின்று, பின்னர் என் பக்கல் விலக்காமை பெற்றவாறே ‘என் ஆத்துமாவோடே வந்து கலந்து’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை –தேனைக் குடிப்பதற்கு இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று உள்ளே உள்ளே இடங்கொண்டு குடித்தலை அன்றி, மது வற்றிக் கைவாங்க ஒண்ணாதபடி இருக்கிற திருத்துழாய் மாலையாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவனை–அடைந்த தென்குருகூர்ச் சடகோபன் அம் மதுவிலே படிந்த வண்டுகள் விடமாட்டாதவாறு போன்று, பகவத் விஷயத்தை விடமாட்டாத ஆழ்வார் ஆயிற்று அருளிச் செய்தார்
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஓடுவிக்கும் -பகவத் அனுபவத்தால் உண்டான அன்பினால் பிறந்தவையாய் இருப்பினும் 1சொற்கள் தாம் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆகவேண்டும்’ என்று ‘என்னைக்கொள், என்னைக்கொள்’ என்று மேல் விழுந்தன ஆதலின், ‘மிடைந்த சொல்’ என்கிறார். ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப் பத்தையும் கற்க வல்லவர்களுக்குச் செல்வமும் கைவல்யமும் உறுதிப்பொருள் என்கைக்கு அடியான பாபங்கள் ஓடிப்போம். (பாவங்களை ஒடுவிக்கும்’ என்ன வேண்டியவர், காரண காரிய
உபசாரத்தாலே ‘நோய்களை ஒடுவிக்கும்’ என்கிறார்)இவனை விட்டுப் போகும் போதும் திரளப் போகப் பெறாமல், ‘வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர், கள்ளர் போல் (பெரிய திருமொழி. 8. 10 : 7.)என்கிறபடியே, சிதறுண்டு தனித்தனியே ஓடச்செய்யும் என்பார், ‘உடைந்து ஓடுவிக்கும்’ என்கிறார். இனி, இப்பாவங்கள் வேறு இடத்திற் சென்று சேரினும் (அதாவது, அசல் பிளந்து ஏறிடினும் என்றபடி) தத்தம் பயன்களைக் கொடுப்பதற்குத் தகுதியுடையன’ அல்லாதனவாகக் கெடும் என்பார், ‘உடைந்த ஓடுவிக்கும், என்கின்றார் எனலுமாம்.
தாங்குதல் வாகனத்துக்குத் துக்கத்தைத் தருவது அன்றோ?’ என்னில், மனைவியை அணைதல் மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று, தன் மேல் இறைவன் எழுந்தருளி இருத்தல் விருப்பமாய் இருக்கும் வாகனத்துக்கு–காமத்தில் இச்சை யுடைய ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாய் இருத்தல் போன்று, திருவடிகள் உறுத்துகையால் வந்த தழும்பு இவனுக்குத் தாரகமாக இருக்கும். ‘திருவடிகளால் நெருக்கி அழுத்தின தழும்பு தன்மேல் இருக்கக் கண்டு மகிழ்ந்து’ என்றார்(ஸ்தோத்திர ரத்நம், 41.) ஸ்ரீ ஆளவந்தாரும்.
நித்யசூரிகள் தாவரம் திரியக்குகளாய் இருப்பதற்குக் காரணம் என்னை?’ எனின், ஒரு சிலர், துழாயாயும் புள்ளாயும் அங்குத்தைக்கு உறுப்பாக வசிக்கிறார்கள். ‘அங்ஙனமாயின், தாவரம் முதலியவற்றிற்கு உரிய அறிவு இன்மை முதலிய தன்மைகள் இவற்றிற்கும் இருக்க வேண்டாவோ?’ எனின், அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று, விரோதியாய் உள்ள அறிவுத் தன்மையே கழியப் பெறுவர். அதாவது, அவ்வவ்விடங்கட்குத் தடையாயுள்ள அறிவு மட்டும் நீங்கப் பெறுவர் என்றபடி. ஆயின், தடையாக வுள்ள அறிவுகள் மட்டும் இருத்தல் கூடுவதாமோ?’ எனின், கர்மம் காரணமாக வந்த சரீரங்கள் அல்லவே? இச்சையாலே மேற்கொண்டவைகள் ஆதலின், கூடுவதாம். ‘ஆயின், இச்சையாலே, விரும்பிய சரீரங்களைக் கோடல் கூடுமோ?’ எனின், இவ்வுலகத்தில் திரியக்குத் தாவரம் ஆமவை கர்மத்தாலேயாய் இருப்பனவாம்; பரமபதத்தில் மேற் கொண்ட சரீரங்கள், அவர்களுடைய இச்சைக்கு உரிமைப் பட்டவைகளாய் இருப்பனவாம்.-சொரூபத்திற்குத் தக்கனவான பரிமாற்றங்கள் இவைதாம்; ஆகையாலே, நித்தியமாயிருக்குமாதலின் ‘நீடு நின்று’ என்கிறார். இறைவன் இவர்களை ஒழியச் செல்லான்; இவர்கள் அவனை ஒழியச் செல்லார்கள் ஆதலின், ‘நின்று’ என்கிறார். அவை-‘புள்’ என்றும், ‘துழாய்’ என்றும் சொல்லுகையாலே ‘அவை’ என்ற அஃறிணைச் சொல்லால் அருளிச் செய்கிறார். ஆடும் – சர்வேஸ்வரனுக்கு அவர்களோடே அணைவது, விடாயர் மடுவிலே புக்கு ஆடியது போன்று இருக்கையாலே, அவற்றோடே ‘பரிமாறும்’ என்னாது, ‘அவை ஆடும்’ என்கிறார். அம்மானே-‘நித்திய சூரிகளோடு நித்திய சம்சாரிகளோடு வேற்றுமை அற எல்லாரினும் அறப் பெரியவனாய் இருந்தும் இப்படிப் பரிமாறுகிறான்’ என்பார், ‘அம்மான்’ என்கிறார்.
இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று, நித்தியசூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகங் கொடுக்கைக்காகத் திருமலையில் நிற்கின்ற நீர்மையை அருளிச் செய்கிறார்.-விண்ணோர் வெற்பன்-‘வானவர் நாடு’(திருவாய். 3. 9 : 9.) என்னுமாறு ‘விண்ணோர் வெற்பு’ என்கிறார். கானமும் வானரமுமான இவற்றிற்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற நீர்மையை நினைத்து, ‘இது என்ன நீர்மை!’ என்று ஈடுபட்டு இருக்கையாலே அவர்களுடையதே திருமலை என்கிறார். இதனால்,–சீர் கற்பன்-அவன் மலையை எடுத்துக் காப்பாற்றத் தக்க பொருள்களை நோக்கின நேர்மையை நினைத்து, ‘குணங்களால் அடிமைப்பட்டேன்’ என்று இளையபெருமாள் கூறியது போன்று, ( ஸ்ரீ ராமா. அயோத். 3 : 19.)அவனுடைய நற் குணங்களை அந்த நற் குணங்களாலே தூண்டப்பட்டவனாகிச் சொல்லுவன். –வைகலே-ஒருகால் இதனைச் சொல்லி, பின்னர் என் காரியத்திற்குப் போமவன் அல்லேன்; 3எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிற நித்தியசூரிகளைப் போன்று (இருக்கு வேதம்)நானும் இதுவே தொழிலாக இருப்பன்.
நீர் அவன் நற்குணங்களைக் கற்றீராகில், அவன் தான் செய்கிறது என்?’ என்னில், ‘நான் அவனை விட்டு அவன் குணங்களை விரும்புவது போன்று, அவனும் என்னை விட்டு எனது சரீரத்தை விரும்புகிறான்,’ என்கிறார்.எனக்கு அவன் குணங்கள் என்றும் தாரகமாக இருப்பது போன்று அவனுக்கும் அடியார்கள் தீண்டிய பொருள்கள் என்றும் ஒக்கத் தாரகமாக இருக்குமாதலின், ‘வைகலும்’ என்கிறார்.பொய் கலவாது என் மெய் கலந்தான்-‘அவ் வெண்ணெயில் செய்த விருப்பம் பொய் இல்லாதது போன்று, என் சரீரத்துடன் கலந்த கலவியிலும் பொய் இல்லை,’ என்கிறார். 4‘அழுக்குடம்பு’ (திருவிருத்தம், 1.)என்று யான் வெறுக்கும் இச்சரீரம் இறைவனுக்கு விரும்பத்தக்கது ஆவதே!’ என்பார், ‘என் மெய்’ என்கிறார். இதனால், அவன் மேல் விழ மேல் விழத் தாம் பின் வாங்குகின்றமை தோன்றுகிறது.
ஏழ் விடை கொண்டான்-நப்பின்னைப் பிராட்டியினுடைய சேர்க்கைக்குத் தடையாய் இருந்த இடபங்கள் ஏழனையும் வென்றான். ‘இன்ன படை வீட்டை வென்றான்’ என்று கூற வேண்டுவதனை ‘இன்ன படை வீட்டைக் கொண்டான்’ என்று கூறுவது போன்று 2‘ஏழ் விடை கொண்டான்’ என்கிறார்.-உண்டான் ஏழ் வையம்-பிரளய ஆபத்தில் பூமி தன் வயிற்றில் புகா விடில் தரியாதது போன்று, தான் என் பக்கலில் புகுந்து அல்லது தரியாதவன் ஆனான். இவற்றால் ‘தனக்குச் சிநேகிகளாய் இருப்பார்க்குச் செய்யுமதும் செய்தான்; தான் செய்யும் இரட்சணத்தை விலக்காதார்க்குச் செய்யுமதும் செய்தான்,’ என்பனவற்றைத் தெரிவித்தபடி. அதற்கு மேல், தண் தாமம் செய்து – குளிர்ச்சியை யுடைத்தான பரமபதத்தில் செய்யும் விருப்பத்தையும் என் பக்கலிலே செய்தான். இனி, ‘தண் தாமம் செய்து’ என்பதற்கு, 3இவ்வுலகில் இருக்கிற என்னைப் பரமபதத்தில் இருப்பவர்களுள் ஒருவனாக ஆதரித்து’ என்று பொருள் கூறலுமாம்
சங்கு சக்கரம் அம் கையில் கொண்டான் – 4சிலரை வசீகரிக்க நினைத்தவர்கள், (ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை’ என்கிறபடியே, அடிமை கொள்ளுதலைக் குறித்தது.) கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று, அவதாரங்கள் தோறும் திவ்விய ஆயுதங்களோடே வந்து அவதரிப்பான். ‘ஆயின், எல்லா அவதாரங்களிலும் திவ்விய ஆயுதங்கள் உளவோ?’ எனின், எல்லா அவதாரங்களிலும் உண்டு; அரசர்கள் கறுப்பு உடுத்துப் புறப்பட்டால், (நகரி சோதனைக்காக மாறுவேடங்கொண்டு புறப்படல்.)விரும்புகிற காலத்தில் முகங்காட்டுகைக்காக அந்தரங்கர் மறைந்து திரிவர்; அது போன்று, தோற்றாதேயும் நிற்பர்கள். ‘கூரார் ஆழி வெண்சங்கேந்தி வாராய்’ (திருவாய். 6. 9 : 1.)என்னும் இவர்களுக்கு அப்படியேயன்றே தோன்றுவது?’ வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங்கைகளில் திவ்விய ஆயுதங்களைத் தரித்தான்,’ என்பார், ‘அம் கையில் கொண்டான்’
ஒன்பதாந்திருவாய்மொழி – ‘இவையும் அவையும்’அருச்சுனன், ‘விபூதி 2சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான (ஸ்ரீ கீதை. 11 : 8.)விடாயைப் பிறப்பித்துப் பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி5 அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகிறானாய், அது தன்னையும் 1குளப்படியிலே கடலை மடுத்தாற் போன்று அன்றி, (மாடு முதலியவற்றின் குளம்பு படிந்த சுவடு. ‘என்னுடைச் சூழலுளான்’, ‘என்னருகலிலான்’ என்பன போன்று அருளிச் செய்கிறார்- ஆதலின் ‘பொறுக்கப் பொறுக்க’ என்கிறார்.)பொறுக்கப் பொறுக்கப் பரிமாற, இவரும் அவனை எல்லா இந்திரியங்களாலும் எல்லா உறுப்புகளாலும் தாம் விரும்பியவாறே நுகர்ந்து, அந்நுகர்ச்சியால் உண்டான பிரீதியாலே அவன் குணங்களைப்பேசி அனுபவிக்கிறார்-என் நெஞ்சினுளான்’, ‘என் கண்ணிலுளான்’ என்பன வற்றை நோக்கி, ‘எல்லா இந்திரியங்களாலும்’ என்கிறார், ‘ஒக்கலையான்’, ‘நெற்றியுளான்’ என்பன வற்றை நோக்கி, ‘எல்லா உறுப்புகளாலும்’ என்கிறார்.
பொருசிறைப் புள் உவந்து ஏறும் – சர்வேஸ்வரன் பெரிய திருவடியை மேற்கொள்ளுவதாக நினைத்து, ‘வா’ என்று அழைத்தால், அவனுடைய அங்கீகாரத்தால் உண்டான மகிழ்ச்சியினால், பெருக்காறு சுழித்தாற் போன்று தன்னில் தான் பொருகின்ற சிறகை யுடையவனாய்க் கொண்டு தோன்றுவான் ஆதலின், ‘பொரு சிறைப் புள்’ என்கிறார். இறைவனும் ‘நாம் இவனை மேற் கொள்ளப் பெற்றோமே!’ என்று திரு வுள்ளத்தில் பிரீதியோடே மேற்கொள்ளுவான் ஆதலின், ‘உவந்து ஏறும்’ என்கிறார்.- பூ மகளார் தனிக்கேள்வன்-மலரில் மணம் வடிவு கொண்டாற் போன்று இருப்பாராய், இன்ப வடிவினரான பெரிய பிராட்டியார்க்கு வல்லபன். என்றது, இப்படிப்பட்ட ஐஸ்வரியத்துக்கு 1இரண்டாம் விரலுக்கு ஆளில்லாதபடி இருக்கிறவன்’ என்றபடி
ஒக்கலை வைத்து – பரிவுடைய யசோதைப் பிராட்டியைப் போன்று தூக்கி எடுத்து மருங்கிலே வைத்து. முலைப் பால் உண் என்று தந்திட – ‘முலைக்கண் நெரித்து வருத்தப்படா நின்றேன்; உண்,’ என்று அதட்டிக் கொடுக்க; ‘இராமனைக் கொல்ல வருகின்றான்’ என்று கூறவேண்டிய இடத்தில், அவரைக் கொல்லுதலைத் தங்களைக் கொல்லும் கொலையாக நினைத்து, ‘நம்மைக் கொல்ல வருகிறான்’ என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று, ஈண்டும், கிருஷ்ணனுக்குக் கொடுத்த நஞ்சு தமக்குக் கொடுத்தது போன்று இருத்தலால் ‘தந்திட’ என்கிறார்
நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாக ஒக்கவும் தோற்றிய ஈசன் – தன் கூட்டத்துக்கும் உபகாரகனாய்ப் பிரசித்தனாய் இருக்கிற சிவனோடே கூட, அவனுக்கும் தந்தையான பிரமனும், அவனுக்கு இப்பால் உள்ள இந்திரன் தொடக்கமாக இங்கேயுள்ள எல்லாரையும், அத்திக் காயில் 5அறுமான் போன்று ஒன்றாக (அறுமான் – கொசுகு.)அரும்பிக்கும்படி ( தளிர் வெடிக்கும்படி.)பண்ணின சர்வேஸ்வரன். மாயன்-உண்டாக்கிய உலகத்திலே அநுப்பிரவேசம்(தொடர்ந்து புகுதல்.) முதலான ஆச்சரியமான செயல்களை யுடையவன்
‘நான் உகந்தபடியே அலங்கரித்துக் கொண்டு வந்து என் நாவிலே கலந்தான்’ என்கிறார். ‘ஆயின், இவர் உகந்தபடியே இறைவன் வருதற்குக் காரணம் யாது?’ எனின், தம்மால் காதலிக்கப்பட்டவர் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள், அவர்கள் விரும்புகிறவாறே பூசிப் புலர்த்தித் தம்மை அலங்கரித்துக் கொண்டு போமாறு போன்று, ஆழ்வார் இருக்கும் இடத்திற்குச் செல்லும் இறைவனும் ஆழ்வார் விரும்பிய வாறே திருத்துழாயால் தன்னை அலங்கரித்துக்கொண்டு சென்றான். இவர் உகப்பதும் திருத்துழாயே, அவன் கொடுப்பதும் திருத்துழாயே அன்றோ? 1புள்ஊர்தி கள் ஊரும் துழாய்க் கொயல்வாய் மலர் மேல் மனத்’ தையுடையராய் இருப்பர்.(திருவிருத்தம். 24.) ‘எங்ஙனம்?’ எனின், திருத்தாயார் கூறும் போதும் ‘வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர்’ என்பர். இவள் தானும் (திருவாய். 2. 4 : 5.)‘விரை மட்டு அலர் தண் துழாய் என்னும்’, (திருவாய். 2. 4 : 9. -இப் பாசுரம் தாயார் கூற்றே யாயினும், ‘என்னும்’ என்று மகள் ஆசைப் படுவதாகக் கூறுவதால் மகள் கூற்று என்னக் குறையின்று.)‘கண்ணன் கழல்துழாய் பொன்செய் பூண்மென் முலைக்கு என்று மெலியும்’, (திருவாய். 4. 2. : 10. இப்பாசுரமும் அத் தன்மையதேயாம்.)இறைவனும், ‘தன் மன்னு நீள்கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான்’ என்கிறபடியே, இவளுக்கு அன்றி நல்கான். (திருவாய். 6. 8 : 6. இது, ‘இறைவன் கொடுப்பதும் திருத்துழாயே’ என்பதற்கு எடுத்துக்காட்டு.)
பொரு படை ஆழி சங்கு ஏந்தும்-பணைத்துப் பூத்த கற்பகத் தருப் போலே யாயிற்று, போருக்குக் கருவிகளான திவ்விய ஆயுதங்களைத் தரித்தால் இருக்கும்படி. போர் செய்வதற்குக் கருவிகளாய் இருத்தலின், ‘பொரு படை’ என்கிறார்.
கமலக்கண்ணன் என் கண்ணினுளானே – திருமேனியின் அழகாகிய பெருவெள்ளத்திலே ஒரு சுழி போன்று திருக்கண்கள் இருத்தலின் ‘நன்மேனிக் கமலக் கண்ணன்’ என்கிறார். வெளிப் பொருள்களை நுகர்ந்து போந்த இவருடைய கண்களுக்கு இறைவன் தன்னை விஷயமாக்கினான் ஆதலின், ‘என் கண்ணினுளான்’ என்கிறார். இவர் கண் வட்டம் ஒழியப் புறம்பே போனால் 3கண் வட்டக் கள்ளனாம் ஆதலின், ‘கண்ணினுளானே’ என ஏகாரங்கொடுத்து ஓதுகின்றார்–
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண்ணுதலானொடும் தோற்றி அமலம் தெய்வத்தோடு உலகம் ஆக்கி-திருநாபிக் கமலத்தில் நேரே பிறந்து, எல்லாரிலும் வேறுபட்ட பிறவியை யுடையவனாய், தனக்கு இப்பால் உள்ளவற்றைப் படைக்குமிடத்தில் சர்வேஸ்வரனைக் கேள்வி கொள்ள வேண்டாதபடி ஞானம் நிறைந்த நான்முகனை நெற்றிக் கண்ணனான சிவபெருமானோடு உண்டாக்கி, அவ்வளவில் முடிவு பெறாமல், சத்துவகுணம் மிக்குள்ள தேவர்களோடே உலகங்களை உண்டாக்கினவன். ‘நெய்யுண்ணி’ என்னுமாறு போன்று ‘ஆக்கி’ என்றது, ‘ஆக்குந் தன்மையன்’ என்றபடி. என் நெற்றியுளானே – கர்மங்களுக்குத் தகுதியாக உலகத்தை உண்டாக்கி விட்டான். ‘பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல் (அவ்வருகு போக்கு இல்லாமையாலே பிரயோஜனத்தில் விருப்பம் இல்லாமல்’ என்கிறார்.)என் நெற்றியில் புகுந்து நின்றான்’ என்பார், ‘நெற்றியுளானே’ என ஏகாரம் கொடுத்து ஓதுகின்றார்.
எனது உச்சியுளான்-தேவர்கள் தன்னைப் பெறுகைக்கு இப்படித் தடுமாறா நிற்க, என்னைப் பெறுகைக்கு அவற்றை எல்லாம் தான் பட்டு வந்து, என் உச்சியிலுள்ளவன் ஆகின்றான். இராசாக்கள் அந்தப்புரத்தில் ஒரு கட்டினின்றும் மற்றைக் கட்டு ஏறப் போகா நிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியங்கொண்டு போமாறு போன்று, இறைவன் இவர் திருநெற்றியினின்றும் திருமுடி ஏறப் போகாநின்றால் பிரமன் முதலான தேவர்கள் நடுவே முகங்காட்டித் தங்கள் காரியம் கொண்டு போவர் ஆதலின், ‘அமரரும் எல்லாம் தொழாநிற்க வந்து எனது உச்சியுளான்’ என்கிறார்.
நீள் படை ஆழி சங்கத்தோடு – நீள் படையான ஆழி சங்கத்தோடே கூட. ‘ஆயிரங்காதம் பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும்’ என்னுமாறு, படைகள் சர்வேஸ்வரன் அதிகரித்த காரியத்திலே அவன் தன்னிலும் முற்பட்டு இருப்பவை ஆதலின் ‘நீள்படை’ என்கிறார்
நிமிர்ந்த அக் கரு மாணிக்கம் – நெய்தற்காடு அலர்ந்தாற்போலே ஆகாயம் முழுதையும் தன் வடிவழகாலே பாரித்தபடி. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற தம்மாலும் அளவிட்டு அறிய முடியாது இருத்தலின் ‘அக் கரு மாணிக்கம்’ என்று சுட்டுகிறார்.
நெஞ்சமே நல்லை நல்லை – சொன்ன காரியத்தைச் சடக்கெனச் செய்த நல்ல புத்திரர்களை மடியிலே வைத்துக் கொண்டாடும் தாய் தந்தையர்களைப் போன்று, இவரும் நெஞ்சை மார்விலே அணைத்துக் கொண்டாடுகிறார்.(நெஞ்சு இருப்பது மார்பிலேயாகையாலே ‘மார்விலேயணைத்து’ என்கிறார்.) 3‘என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவரிடை நீர், இன்னம் சொல்லீரோ?’ (திருவிருத்தம், 30. )என்கிறபடியே, இவர்தாம் இறைவன் பக்கல் தூது விடுமாறு போன்று, நெஞ்சாகிய தனக்கும் தூது விடும்படி இவர்தம்மை விட்டு இறைவன் பக்கலிலே நிற்க வல்ல நெஞ்சு ஆகையாலே ‘நல்லை நல்லை’ என அடுக்குத் தொடரால் கூறுகின்றார்
ஆரி ருக்கிலுமென் நெஞ்ச மல்லதொரு வஞ்ச மற்றதுணை இல்லையென்று
ஆத ரத்திவனொடு தூது விட்டபிழை யாரி டத்துரைசெய் தாறுவேன்?
சீரி ருக்குமறை முடிவு தேடரிய திருவ ரங்கரைவ ணங்கியே
திருத்து ழாய்தரில்வி ரும்பி யேகொடு திரும்பி யேவருதல் இன்றியே
வாரி ருக்குமுலை மலர்ம டந்தையுறை மார்பி லேபெரிய தோளிலே
மயங்கி யின்புற முயங்கி என்னையும் மறந்து தன்னையும் மறந்ததே’–( திருவரங்கக் கலம்பகம், 24)
நெஞ்சமே சொன்னேன் – ‘திருக்கோட்டியூர் நம்பியைப் போலே, பகவத் விஷயம் பிறர் அறியலாகாது என்று போலே காணும்’ இவர் இருப்பது. உபதேசித்துவிட்டு ‘இந்தக் கீதையின் பொருள் தவமில்லாதவனுக்கு ஒருபோதும் சொல்லத் தக்கது அன்று,’ என்றவனைப் போன்று படுகிறார்(ஸ்ரீ கீதை, 18 : 67.). ‘ஏன்? முதல் முன்னம் அதிகாரி சோதனை செய்து உபதேசித்தால் ஆகாதோ?’ எனின், திரௌபதி குழல் விரித்துக் கிடக்கிற படியைப் பார்த்து, செய்வது காணாமல் சொல்லிக்கொண்டு நின்றான்; பின்னர், பொருளின் கனத்தைப் பார்த்து, ‘கைப்பட்ட மாணிக்கத்தைக் கடலிலே போகட்டோம்’ என்று 4‘பதண் பதண்’ (பரிதபிக்கையைக் காட்டுவனவாம்; ‘பதறினேன், பதறினேன்’ என்றபடி.)என்றான் என்க. இனி, இதற்கு நெஞ்சே, சீரிய பொருளைச் சொன்னேன்; ஆதலால், உபதேசத்திற் குறை இல்லை; இனி, இதனை நினையாதார் இழக்குமித்தனை என்கிறார் எனலுமாம், இனி, தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் வாயும் மணி வண்ணனாய் எந்தையான ஈசன், நீயும் நானும் இந் நேர் நிற்கில் மேல் மற்று ஓர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன், 5‘சத்யம் சத்யம்’ என்கிறபடியே, இது மெய் என்கிறார் என்றலும் ஒன்று.(இது, வியாச பகவான் கூற்று. ‘வேத சாஸ்திரங்களைக் காட்டிலும் மேலான சாஸ்திரங்கள் இல்லை; அது போன்று, கேசவனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் பிறிது இல்லை; இது சத்தியம், மீண்டும் சத்தியம், மீண்டும் சத்தியம்’ என்பது அந்தச் சுலோகத்தின் பொருள்.)
நெஞ்சமே, சொன்னேன்’ என்பதற்கு மூன்று வகையில் கருத்து அருளிச்செய்கிறார். இம் மூவகைக் கருத்தையும் முறையே காண்க. ‘சார்கொடான்’ என்னுதலே போதியதாக இருக்க, மேல் ‘சொன்னேன்’ என்று அருளிச் செய்வதனால் இங்ஙனம் கருத்துக் கொள்ள வேண்டும்
தாயும் தந்தையும் ஆய் – தாய் தந்தையர்களைப்போன்று அன்புள்ளவனாய். இவ்வுலகினில் வாயும் ஈசன் – அவர்கள் அளவு அன்றிக்கே, குழந்தை கிணற்றில் விழுந்தால் ஒக்கக் குதிக்கும் தாயைப் போலே, சம்சாரத்திலே ஒக்க விழுந்து எடுக்குமவன். ‘அடையத் தக்கவன் ஆகையாலே ‘இங்கு வந்து அவதரிக்கிறான்’ என்பார். ‘ஈசன்’ என்கிறார். இனி, ‘இங்கு வந்து அவதரித்து ஈர் அரசு தவிர்க்கையாலே ‘ஈசன்’ ஆனான்’ எனலுமாம்.
நெஞ்சிலே வைத்தேன். சொல்லுவன்-நான் அறிந்ததாக நெஞ்சிலே வைத்துத் தூஷித்த அளவேயோ? பிறர் அறியும்படி வைத்தேன். பாவியேன் – 1விலக்ஷண போக்கியமான இப்பொருளை அழிக்கைக்கு நான் ஒரு பாவி உண்டாவதே! சத்துவ குணத்தையுடைய ஒருவன் தமோ குணத்தால் மேலிடப்பட்டவனாய் ஒரு வீட்டில் நெருப்பை வைத்து, சத்துவம் தலை எடுத்தவாறே வருந்துமாறு போன்று ‘பாவியேன்’ என்கிறார். ‘ஆயின், பகவானை நினைக்கையும் சொல்லுகையும் பாவத்தின் பயனோ?’ என்னில், புரோடாசத்தை (வேள்வித்தீயில் இடும் அரிசி மாவாலாகிய ஓமப் பொருள்.)நாய் தீண்டினாற்போன்று நித்தியசூரிகள் அநுபவிக்கும் பொருளை அழிக்கை பாவத்தின் பலம் அன்றோ? எந்தை எம்பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனை-நினையாவிடில் அரைக்கணம் தரிக்கமாட்டாத நித்தியசூரிகள் நினைத்து அநுபவித்து அவ்வநுபவம் வழிந்து ‘எங்களுக்குப் பரிவன் ஆனவனே! சுவாமியானவனே!’ என்று தங்கள் நெஞ்சிலே வைத்துச் சொல்லும்படியான செல்வத்தையுடையவனை நானும் சொன்னேன்; ஆதலால், இப்பொருளை ஒருவர் நம்பாதபடி அழித்தேன்,’ என்கிறார்.
அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை – உபமானம் அற்றதாய், ஓட்டு அற்ற செம்பொன் போன்று (உருக்கிச் சுத்தம் செய்த பொன்.)எல்லை அற்ற ஒளி உருவமாய், வாக்கு மனங்களால் அளவிட்டு அறிய முடியாத திவ்விய மங்கள விக்கிரகத்தை யுடையவனை. இதனால் ‘வடிவழகிலே குறையுண்டாய்த் தான் மறக்கவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி.
மறப்பனோ இனி யான் என் மணியையே-மறவாமைக்குக் கருவி அவன் கையிலே உண்டாய் இருக்க, இனி மறக்க உபாயம் உண்டோ? மேல் அநாதி காலம் நினைக்க விரகு இல்லாமல் கழிந்தமை போன்று, இனி மேல் வருகின்ற காலமும் மறக்க விரகு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி. 3‘மறந்தேன் உன்னை முன்னம்’ (பெரிய திருமொழி, 6, 2 : 2.)என்கிறபடியே, அநாதி காலம் மறந்தே போந்தவர் ஆதலின், அது தோன்ற ‘யான்’ என்கிறார். ‘பெரு விலையனாய் முடிந்து ஆளலாம்படி கைப் புகுந்து புகழை யுடைத்தான நீலமணி போலே இருக்கிற தன்னை எனக்கு அனுபவ யோக்கியமாம்படி செய்துவைத்தான்,’ என்பார் ‘என் மணியை’ என்கிறார்.
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை–முன்றானையிலே முடிந்து ஆளலாம்படி சுலபனாய் இருக்கிறவனை, நித்தியசூரிகள் தலைவனை, தனக்குத்தானே ஆபரணம் போன்ற அழகினையுடையவனை
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply