பால் ஏய் தமிழர் – பால் போலே இனிய தமிழையுடையவர்கள். இசைகாரர் – இயலுக்கு இசைய இசையிட வல்லவர்கள். அவர்களாவார், ஸ்ரீமதுரகவிகளையும் நாதமுனிகளையும் போல்வார். பத்தர் – ‘கால் ஆழும் நெஞ்சு அழியும் கண்சுழளும்’ என்று இருக்குமவர்கள். ஆழ்வான் ஒரு முறை ‘ஸ்ரீ பராங்குச நம்பியைப் பாலேய் தமிழர் என்கிறது; இசைகாரர் என்றது, ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையரை; பத்தர் என்றது, பிள்ளை யுறங்கா வில்லி தாசரை’ என்று பணித்தார். ஸ்ரீ ஆளவந்தார் பாலேய் தமிழர் என்கிறது, முதலாழ்வார்களை; இசைகாரர் என்கிறது, திருப்பாணாழ்வாரை; பத்தர் என்கிறது, பெரியாழ்வாரை’ என்று அருளிச்செய்வர். ஆக, இயல் அறிவார் இசையறிவார், பகவானுடைய குணங்களில் ஈடுபட்டு இருப்பார் ஆகிற இவர்கள்,
—————-
இரண்டாந்திருவாய்மொழி – ‘வீடுமின்’
மோக்ஷசாஸ்திரம் இறைவன் தன்மையினைக் கூறுவதும் இறைவனை அடையும் வழியைப் பற்றிக் கூறுவதும் என இருபகுதிப்பட்டு இருக்கும். மோக்ஷசாஸ்திரமான வேதாந்த சூத்திரம் நான்கு அத்தியாயங்களாய், முன் இரண்டும் பரம்பொருளைக கூறுவனவாயும், பின் இரண்டும் அதனை அடையும் வழியினைப் பற்றிக் கூறுவனவாயும் இருத்தல் பற்றி இத்திருவாய் மொழியும் மோக்ஷசாஸ்திரமாதலின், முதல் இரண்டு பதிகங்களால் அவ்விரண்டனையும் அருளிச்செய்கிறார் என்பதாம்.
அவற்றுள், பரம்பொருளைப் பற்றிக் கூறுவேண்டுவன எல்லாம் மேல் திருவாய்மொழியிலே அருளிச்செய்தார். பரம்பொருளை அடையும் வழியினைப் பற்றிச் சுருக்கமாக இத்திருவாய் மொழியால் அருளிச்செய்கிறார். ‘
அவ்வழிதான் யாதோ? என்னில், இத்திருவாய்மொழியை ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பிரபத்தி விஷயமாக்கி நிர்வகித்துக்கொண்டு போருவர்.
எம்பெருமானாரும் அப்படியே அருளிச் செய்து கொண்டு போந்து, ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்த பின்னர், பத்தி விஷயமாக அருளிச் செய்து கொண்டு போந்தார், பத்தி விஷயமாக’ என்றது, சாத்திய பத்தி விஷயமாக என்றபடி, பிரபத்தி வேத குஹ்யமான ரஹஸ்ய உபாயம் ஆகையாலே முதலில் அதனை
வெளியிட ஒண்ணாது என்று திருவுள்ளம் பற்றிப் பிரபத்தியின் பர்யாயமான சாத்திய பக்தியாலே அருளிச்செய்தார் என்றபடி.பின்னர், எம்மாரும் அவ்வாறே பத்தி விஷயமாக அருளிச்செய்தார். ‘ஆயின், ஒன்று பத்தி விஷயமாகக் கூறுதல், இன்றேல், பிரபத்தி விஷயமாகக் கூறுதல் செய்யாது நினைந்தவாறு பொருள் கூறுதல் பொருந்துமோ?’ எனின், இவருடைய பத்தியும் பிரபத்தியும் விகற்பிக்கலாய் அன்றே இருப்பது?
இறைவனுடைய திருவருளே உபாயம் என்று அறுதியிட்டு இருக்கும் இவருடைய சித்தாந்தத்தைப் பார்த்தால், ‘பிரபத்தியே உள்ளது; பத்தி
இவர்க்கு இல்லை,’ என்றும், ஆர்த்தியின் மிகுதியாலே பிரபத்தியைப் பண்ணும் இவருடைய அநுஷ்டானத்தைப் பார்த்தால், ‘பத்தியே இவர்க்கு
உள்ளது; மற்றையது இல்லை,’ என்றும் நினைக்கும்படியாக இருக்கின்றது என்றபடி.
————–
உலகு இரந்த கள்வர் என்பதற்குத் தன் சங்கற்பத்தாலே உண்டாக்கின உலகத்தைக் ‘கொள்வன் மாவலி மூவடி’ -(திருவாய். 3. 8 : 9.)என்று இரந்த வஞ்சகர் என்று பொருள் அருளிச்செய்வர் திருமாலையாண்டான். எம்பெருமானார், ‘ஒன்றை நினைந்து ஒன்றைச் செய்தவர்க்கு’ என்று அருளிச்செய்வர். அதாவது, ‘மகாபலியை வஞ்சித்ததும் என்னை வசீகரிக்கைக்காக,’ என்றபடி, ‘ஆயின், இவள் அச்செயலுக்கு வசப்பட்டவளோ?’ எனின், மேல், ‘பெருநிலம் கடந்த நல் அடிப்போது’ (திருவாய். 1. 3 : 10.)என்று அன்றோ இவள் ஆசைப்பட்டாள்? மேலும், ‘உலகங் கொண்ட, அடியன அறிவருமேனி மாய்த்தனாகிலும், கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்’ (திருவாய். 5. 3 : 5.)என்றும், ‘அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் (திருவாய். 5. 4 : 10.)என்று, ஒன்று ஒரு கால் சொல்லாது உலகு’ என்றும் அன்றோ இவள் கிடப்பது? திருமங்கையாழ்வாரும், ‘முன்னங்குறளுருவாய் மூவடிமண் கொண்டு அளந்த, மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்!’ (பெரிய திருமொழி. 9. 4 : 2.)என்றார். ஆக, இவர்கள் எல்லாரும் ஈடுபடுவது இச்செயலுக்கேயாம்.
—————-
துயர் அறு சுடர் அடி – துயர் அறுக்குஞ் சுடர் அடி என்று முன்புள்ள முதலிகள் (முதன்மையினையுடையவர்கள்; பெரியோர்கள்.)அருளிச்செய்வர்; அதாவது, எல்லா ஆத்துமாக்களினுடைய எல்லாத் துன்பங்களையும் போக்குதலையே தம் இயல்பாகவுடைய திருவடிகள் என்பதாம். இனி, 4எம்பெருமானார், ஸ்ரீ ராமன், தன் கீழ் வாழும் மக்கட்குத் துன்பம் வருங்காலத்துத் தானும் துன்பத்தை அடைந்தவன் ஆகின்றான்’ ( ஸ்ரீராமா. அயோத். 2 : 42.)என்று கூறுகின்றது ஸ்ரீராமாயணம்; இதனால், துன்பத்தை நீக்குதலும் அவனதாக இருக்கும் என்பதும், மக்கள் இன்புறுங் காலத்துத் தானும் இன்புறுகின்றான் என்பதும் பெறப்படும். அது போன்று, இவர் துயர் அறத் தான் துயர் தீர்ந்தானாய் இருக்கை. இத்தால், இவர் மயர்வு அற அவன் துயர் அற்றபடி,’ என்று அருளிச் செய்வர்.
———–
கடையாநிற்கையில், பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல் ‘வெந்தது கொத்தையாக வாயில் இடுமாறு போன்று, கடை(வெந்ததும் வேகாததுமாக; கொத்தை வேகாதது.)வதற்குள் பொறுக்காமல் நடுவே அள்ளி அமுது செய்தபடியைச் சொல்லுகிறார்,’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பார். களவினில்-களவு செய்யும் சமயத்தில்; களவு செய்யத் தொடங்குஞ்சமயத்திலே அகப்பட்டானாதலின், ‘களவினில்’ என்கிறார். ‘கடைகிற காலத்தில் களவு காணும்படி யாங்ஙனம்?’ எனின், கடைகிற பராக்கிலே 2நிழலிலே ஒதுங்கிச் சாபலத்தாலே அள்ளி அமுது செய்தான்.
———–
பெருநிலம் கடந்த நல் அடிப்போது அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே – பரப்பையுடைத்தான பூமியை அளக்கிற இடத்தில் வசிஷ்டர் என்றும், சண்டாளர் என்றும் சொல்லுகிற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்தான். இதற்கு ‘மனம் வாக்குக் காயங்களால் அனுபவிக்கப் பெற்றேன்,’ என்று திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பார். ‘இவற்றால் அனுபவிக்கப் பார்க்கிறார்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.
———
அருளாத திருமாலார்க்கு-இதற்குக் ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்பாரும் (ந கச்சின் ந அபராத்யதி -ஸ்ரீராமா. யுத்த. 116 : 45.)அருகே இருக்க, எங்கள் குற்றம் பார்த்து அவள் பக்கல் முகம் பெற இருக்கிறாரோ!’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ‘நான் இப்படி நோவுபடுதற்குக் காரணம், அவனுக்கு அவள் முகங்கொடுத்து அங்கே துவக்குகையால் அன்றோ என்று இன்னாதாகிறாள்,’ என்று 1திருக்குருகைப் பிரான் பிள்ளான் பணிப்பர். ‘ஆயின், பிராட்டியின்மேல் வெறுப்பாக, பிள்ளான் இங்ஙனம் பணித்தல் தகுமோ?’ எனின், உறவு உள்ள இடத்திலேயன்றோ வெறுப்பும் உண்டாகும்? ஆதலால் தகும்.-திருமாலார்’ என்ற சொல்லுக்கு நஞ்சீயர் நிர்வாகத்தில், ‘திருவினிடத்தில் மாலார்’ என்பது பொருள், பிள்ளான் நிர்வாகத்தில், ‘திருவின் மாலுக்கு விஷயமாக இருப்பவர்’ என்பது பொருள்.
————
பின்னை யான் ஒட்டுவேனோ – ‘எவ்வகையிலும் இரேன்’ என்னுமாகில், பின்னை, நான் அவன் போக்கை இசைவேனோ? ‘நன்று; இறைவன் தனக்குத் தானே உரியவன் ஆதலின், போகானோ?’ எனின், என்னுடைய கர்ம பாரதந்திரியம் போலே, அவனுடைய ஆஸ்ரித பாரதந்திரியத்துக்கும் ஏதேனும் கண்ணழிவு(குறைவு.) உண்டோ? ஆதலால், என்னுடைய இசைவு இன்றிக்கே இருக்க, அவனாலே போகப்போமோ?’ என்பதாம். இனி, ‘ஒட்டுவேனோ’ என்பதற்கு, ‘நான் தொங்குவேனோ’ என்று (நான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டு இருத்தலைப் போன்று, இறைவன் அடியார்கட்குக் கட்டுபட்டவன் ஆதலின், அடியவனாகிய என்னுடைய அனுமதி இன்றி என்னை நீங்கான்,’ என்றபடி.)திருக்குருகைப்பிரான் பிள்ளான் பணிப்பர். தொங்குகை-திரிதல்.
———–
எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் – முக்காலத்திலும் ஒப்பு இல்லாதான். ‘சித்து, அசித்து, ஈஸ்வரன்’ என்னும் முப்பொருள்களே நம் மதத்தில் கூறப்பட்டுள்ளன; அவற்றுள், உயிர்ப்பொருள் உயிரல் பொருள் இவற்றின் தன்மையினின்றும் வேறுபட்டவன் இறைவன் என்பதை முன்னர் அருளிச்செய்தார்; ‘இங்குக் கூறுவது என்?’ என்னில், ‘திரள ஒப்பு இல்லையாகில், ஒரு வகையாலேதான் ஒப்பு உண்டோ?’ என்னில் அதுவும் இல்லை என்கிறார்,’ என்று அருளிச் செய்வர் இராமாநுசருக்கு முன்னர் இருந்த பெரியோர். அவ்வாறு அன்றி, 5‘சாதர்மிய திருஷ்டாந்தம் இல்லை என்றது முன்பு; இங்கு வைதர்மிய திருஷ்டாந்தம இல்லை என்கிறது,’ என்று பட்டர் அருளிச்செய்வார். ‘சிறந்த போர் வீரர்கள் பகைவர்கள் விஷயத்தில் திருடர்களைப் போன்று வஞ்சனையாகக் காரியங்களைச் செய்யமாட்டார்கள்,’ ( மாகம். 16 : 52.)என்பது வைதர்மிய திருஷ்டாந்தத்திற்கு உதாரணமாம்.
————
பூவில் கண் வைத்துத் தொடுக்கில் அதில் ஆசை பிறக்கும் என்று கண்ணை மாற வைத்துத் தொடுத்து, பூவிற்றுப் பிழைக்குமத்தனை வறியவரான ‘மாலாகாரர்’ (ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 16 : 21.)தண்ணளியே இவர்கட்கு விஞ்சியிருப்பது. மேன்மை கழற்ற ஒண்ணாமையாலே கிடந்தது இத்தனை; ‘இரண்டும் அவ்விறைவனிடத்தில் தங்கியிருக்க, தண்ணளியே உள்ளது என்று அறிந்தபடி என்?’ என்னில், சேஷிகளாய் இருப்பார்க்கு அடியார்களை அழைத்துக் காரியம் கொள்ளலாய் இருக்க, நெடுந்தெருவே போகிறவர்கள், ‘நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே தண்ணளியே விஞ்சியிருக்கும் என்னும்-இது பட்டர் நிர்வாஹம்
———-
எனிவரும் இயல்வினன் – எளிமையை இயல்பாகவுடையவன். ‘பத்துடை அடியவர்க்கு எளியவன்’ என்றார் மேல்; தன்னிடத்து அன்புடையார் மாட்டுத் தானும் அன்புள்ளவனாய் இருத்தல் ஒரு குணம் அன்று ஆதலின், அதனை மறுத்து, ஈண்டு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார். எல்லார்க்கும் ஒவ்வொரு காலத்தில் எளிமை கூடும்; இவனுக்கு எளிமை சொரூபம் என்பதனைத் தெரிவிப்பதற்கு ‘எளிவரும் இயல்வினன்’ என்கிறார் என்றபடி. நிலைவரம்பு இல – இன்ன அவதாரம் இன்ன செயல் என்பது இல்லை; ‘நிலை இல, வரம்பு இல’ என ‘இல’ என்பதனை ‘நிலை’ என்பதுடனும் கூட்டுக. இனி, பட்டர் இவ்விரு பொருளையும் ‘நிலை இல’ என்பதன் பொருளாகவே கொண்டு, ‘வரம்பு இல’ என்பதற்கு, வேறு பொருள் அருளிச்செய்வர். அதாவது, ‘அவதரித்து எளியனாய் நின்ற நிலை தன்னிலே பரத்துவம் தோற்ற நிற்கிலும் நிற்கும்,’ என்று. தேர்ப் பாகனாய்த் தாழ் நிற்கச் செய்தே ஸ்ரீவிஸ்வரூபத்தைக் காட்டியும், தான் புத்திரப் பேற்றின்பொருட்டுப் போகா நிற்கச்செய்தே கண்டாகர்ணனுக்கு மோக்ஷத்தைக் கொடுத்தும், ஏழு வயதிலே கோவர்த்தன மலையைத் தரித்துக்கொண்டு நின்றும் செய்தவை. இத்தாற்பெறப்படுவது, ‘ஒன்றிலும் ஒரு நியதி இன்று; காப்பதற்கு உறுப்பாம் அத்தனையே வேண்டுவது; ஏதேனுமாக அமையும் இவனுக்கு,’ என்கை.
————–
ஆயர் கொழுந்தாய் – ஆயர்கட்குப் பிரதாநனாய் இருக்கும் இருப்பை அருளிச்செய்தார் மேல்; இங்கு, அவர்களில் ஒருவனாய் இருக்கும்படியைச் சொல்லுகிறார். அதாவது, அவர்கள் வேராக தான் கொழுந்தாய் இருக்குமவன் என்கிறார். இதனால், வேரிலே வெப்பம் தட்டினால் கொழுந்து முற்படவாடுவது போன்று, காட்டிலே பசுக்களின் பின்னே திரிகின்ற ஆயர்கட்கு அடி கொதித்தால் ஸ்ரீகிருஷ்ணன் முகம் முதற்கண் வாடும் என்பதனைத் தெரிவித்தபடி. அவரால் புடை உண்ணும்-‘திருவாய்ப்பாடியில் உள்ள ஐந்து லட்சம் குடிகளிலும் ஸ்ரீ கிருஷ்ணனை நியமிக்க உரியர் அல்லாதார் இலர்’ என்பார், அவனால் அல்லது அவளால் என்று கூறாது, ‘அவரால்’ எனப் பன்மை வாசகத்தால் அருளிச் செய்கிறார். ‘மரத்தாலே ஓர் அடி அடிப்பார் போலேகாணும்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. மாயப் பிரானை – எல்லா விருப்பமும் முற்றுப்பெற்ற சர்வேஸ்வரன், தனக்கு ஒரு குறை உண்டாய் வந்து அவதரித்து, அடியார்கள் தீண்டிய பொருளால் அல்லது தரியாதானாய், அதுதான் நேர்கொடு நேர் கிடையாமையாலே களவு காணப் புக்குத் தலைக்கட்டமாட்டாதே வாயது கையது ஆக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலையை நினைத்து ‘மாயப்பிரானை’ என்கிறார்.
——–
இத்திருவாய்மொழி 4இறைவனுடைய பரத்துவத்தைக் கூறுகிறது என்பாரும், பரத்துவத்திற்கு உரிய இலக்கணங்களைக் கூறுகிறது என்பாரும், மேல் ‘பாடி இளைப்பிலம்’ என்றார், அப்படியே பாடி அனுபவிக்கின்றார் என்பாரும் உளர். இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘கண்ணாவான் என்றும் மண்ணோர்
விண்ணோர்க்கு’ என்பது முதலான திருப்பாசுரங்களை நோக்கிப் ‘பரத்துவத்தைக் கூறுகிறது’ என்பர். ‘ஓடும் புள் ஏறி’, ‘சங்கு சக்கரம்
அங்கையிற் கொண்டான்’ என்பன முதலான திருப்பாசுரங்களை நோக்கிப் ‘பரத்துவத்திற்கு உரிய இலக்கணங்களைக் கூறுகிறது, என்பர். ‘அம்மான் சீர்,
கற்பன் வைகலே என்ற திருப்பாசுரத்தை நோக்கிப் ‘பாடி அனுபவிக்கின்றார்’என்பர்.‘ஆயின்’ இறைவனுடைய ஆர்ஜவ குணத்தைச் சொல்லுகிறது என்பதுவே பட்டருடைய திருவுள்ளம். ‘யாங்ஙனம்?’ எனின், பத்தர் முத்தர் நித்தியர் என்னும் மூவகைச் சேதநரோடும் இறைவனாகிய தான் பரிமாறும் இடத்தில், அவர்களைத் தன் நினைவின் வண்ணம் வருமாறு செய்தல் இன்றி, நீர் ஏறா மேடுகளிலே விரகாலே நீர் ஏற்றுவாரைப் போன்று, தன்னை அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் என்னும் அம்முறையிலே அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச்செய்கிறார்.
————-
தோள் இணை மேலும் – ‘அன்பினால் கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்’ என்கிறபடியே, அணைக்க விரும்புகிற திருத்தோள்களிலும், நன்மார்பின்மேலும் – அணைப்பிக்குமவள் இருக்கிற திருமார்பிலும். சுடர் முடி மேலும் – அணைத்துக்கொண்டு நின்று மேல் நோக்கிப் பார்த்தவாறே தன்னுடைய தலைமைக்குப் பிரகாசமாயிருக்கிற திருமுடியிலும். தாள் இணைமேலும் புனைந்த தண் அம் துழாயுடை அம்மான் தன்னுடைய இறைமையை நிலை நிறுத்துகின்ற திருவடிகளிலும் சாத்தின திருத்துழாயினையுடைய சர்வேஸ்வரன். இனி, இவ்வடிகட்குப் பட்டர் மிக அழகாகவும் ரசோக்தியாகவும் விசேடப்பொருள் அருளிச்செய்வர்; அப்பொருள் வருமாறு: வீரராய் இருப்பார் முற்பட ஆயுதத்திற்கு இடுவார்கள்; அப்படியே திருத்தோள்களுக்கு இட்டான். காதலர்களாய் இருப்பவர்கள் அன்புக்குரிய காதலிக்கு இடுவார்கள்; அப்படியே பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் 2கோயில் கட்டணத்துக்குக் (கோயில் கட்டணம் – அந்தப்புரம்.)கொடுத்தான்; ஆயுதத்திற்கும் காதலுக்கு உரியவர்களுக்கும் இட்டால், பின்னைத் தாம் தாம் அணிந்துகொள்ளுவார்கள் இத்தனையன்றோ? ஆதலின், தான் சூடினான்; சேஷம் பின்னர் அடியார் அன்றோ கைக்கொள்ளுவார்? ஆகையால், திருவடிகளுக்குச் சாத்தினான்; ஆபத்துக்குத் துணை செய்வார் அடியார் அன்றோ? தளர்ந்தும் முரிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயப் பொருவார் அடியாரே அன்றோ? ‘ஆயின், நம்முடைய ஆபத்துக்கு ஒழிய இறைவனுடைய ஆபத்துக்கும் திருவடி துணையாமோ?’ எனின், நம்முடைய ஆபத்துகளுக்குத் திருவடிகளே துணையாயினாற்போலே காணும் அவனுடைய ஆபத்துகளுக்கும் திருவடிகளே துணையாயினபடி.
பத்தாந்திருவாய்மொழி – ‘பொருமாநீள்’–மேல் திருவாய்மொழியில், தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகின்றார் என்று மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்வர் முன்புள்ள பெரியோர்கள். 1இங்கு, மேல் எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்துப் பட்டர் அருளிச்செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது, மேல் திருவாய்மொழியில் ‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்? பேற்றில் இனி, ‘இதற்கு அவ்வருகு ஏற்றமாகச் செய்து கொடுக்கலாவது 2ஒன்றும் இன்று; இனி, இதனுடைய பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது; பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்; 3இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது; ‘ஏன இல்லையோ?’ எனின், இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும், வெறுப்பின்மை எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்; இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில், இத்தலையில் பரமபத்தி அளவாகப் பிறந்தாலும் பேற்றின் கனத்துக்கு இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே; என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம் கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே; மற்றும், சர்வேஸ்வரன் அடியாக வரும் பேற்றுக்கு இத்தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே? 1‘வரலாறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது? மற்றும், இவனை முதலிலே படைக்கிற போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்லவழி போக வேண்டும்’ என்று உறுப்புகளைக் கொடுத்துவிடுகையாலே, இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப் பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரமபத்தி முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனேயாவன்; ஆதலால், ‘நித்தியசூரிகள் பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான், அவன் திருவருள் இருக்கும்படி என்?’ என்று, மேல் திருவாய்மொழியில் தலைமுடிவாகப் பிறந்த சேர்க்கையாலாய சுவையை நினைத்து இன்புறுகிறார் என்பது.
மேல் திருப்பதிகத்தில், ‘ஆழ்வார், தம்முடைய எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகிறார்’ என்ற கருத்தில்,
முன்புள்ள பெரியோர்களுடைய திருவுள்ளத்தைப் பட்டர் அடி ஒற்றினாராயினும், ‘இறைவன், ஒருவிதக் காரணமும் பற்றாத திருவருளால்
தம்முடைய எல்லா அவயவங்களிலும் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகிறார்’ என்று பட்டர் அருளிச்செய்யும் அழகு அறிஞர் கண்டு
மகிழ்தற்குரியது. மேல் திருப்பதிகத்தில் பிறந்த ‘சர்வாங்க சம்ஸ்லேஷத்துக்கு ஏதுவாக, இத்திருப்பதிகத்தில் ஏதாவது ஒன்றைக் கூறியது உண்டோ?’ என்று
ஆராய்ந்து பார்த்து, காணாமையாலே பட்டர் இங்ஙனம் அருளிச்செய்கிறார்.
‘ஒன்றும் இன்று’ என்பது என்? பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்கிறது ஏற்றம் அன்றோ?’ என்ன, ‘அன்று’ என்கிறார் ‘இனி, இதனுடைய
பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது’ என்பதனாலே. ஆதலால் பேறு கனத்திருந்தது என்று கூட்டுக.
‘இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாதிருந்தது’ என்ற வாக்கியத்தை, ‘அங்ஙனமிருந்தும், நித்தியசூரிகள்
பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான்’ என மேல் வரும் வாக்கியத்தோடே கூட்டுக.
————–
நாடாத மலர் நாடி – ‘ஆத்தும புஷ்பத்தைச் சொல்லுகிறது’ என்பாரும் உளர் நஞ்சீயர், ‘எண்திசையும் உள்ள பூக்கொண்டு’ (திருவாய். 4. 7 : 8.)என்கிறபடியே, ‘தேட அரிய மலர்கள் எல்லாம் தேடி’ என்று அருளிச்செய்வர். நாடோறும்-இதுதான் ஒரு நாள் தேடி விடுதல் அன்றி இடைவிடாமல் என்றபடி. கிஞ்சித்கரித்துச் சொரூபத்தைப் பெறுகின்ற இவ்வாத்துமாவிற்கு, இடைவிடுதல் சொரூபத்திற்கு இழுக்கு ஆதலின், ‘நாடோறும்’ என்கிறாள். நாரணன்தன்-இடைவிடாமல் தொண்டுகளைச் செய்யத் தக்கவாறு எல்லாப்பொருள்கட்கும் சுவாமியானவன். வாடாத மலர் அடிக் கீழ்-செவ்வி மாறாத பூப்போன்று இருக்கிற திருவடிகளின் கீழே. சொரூபத்திற்கு இழுக்கு ஆனாலும் (சொரூபத்திற்கு இழுக்கு ஆனாலும்’ என்றதன் கருத்து, இவ்வுயிர்கள்
நாராயணனுக்கு உரிமைப்பட்டவை அல்லவாயினும் என்பது.)விட ஒண்ணாதபடி எல்லையற்ற இனிய பொருளாகவுமிருக்கிற திருவடிகள் ஆதலின், ‘வாடாத மலரடி’ என்கிறாள்
—————-
முன் செய்ய முயலாதேன் இனம் அகல்வதுவோ விதி-திருவடிகளிலே அடிமை செய்கைக்குத் தக்கது ஒரு சாதனத்தை என தலையால் பண்ணாத நான் அகன்றே போம் இத்தனையோ? இனம்-‘இன்னம்’ என்பதன் விகாரம். விதி-நியாயம். ‘எங்கள் அபிமதம் பெறுகைக்கு எங்கள் பக்கல் ஒரு நன்மை இல்லாத பின்பும் தாழ்க்கும் இத்தனையோ?’ என்கிறாள் என்று பிள்ளை திருநறையூர் அரையர் பணிப்பர்.
——–
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் – தன் திருவுள்ளத்தால் விஷயீகரிக்கப்பட்ட எல்லாப் பொருள்கட்கும் காரணமாய். ‘மேல் ‘மணஞ்செய் ஞானம்’ என்று 3சங்கல்ப ரூப ஞானத்தை அருளிச்செய்வதனால், ஈண்டு, ‘நினைந்த’ என்பறதற்குக் கருத்து என்?’ என்னில், காரியமாக வேறுபட்டு விரிந்த தேவர்கள் முதலான எல்லாப் பொருள்களும் அழித்து ‘ஸதேவ’ என்று கூறும்படி இருந்த அன்று, புத்திரர் பௌத்திரர் முதலானவர்களோடு வாழ்ந்தவன் அவர்களை இழந்து தனியன் ஆயின் தன் தனிமையை நினைந்து வெறுக்குமாறு போலவும், வேறு தேசத்தை அடைந்திருக்கிற புத்திரனைத் தாய் தந்தையர்கள் நினைக்குமாறு போலவும், இவற்றினுடைய இழவை நினைப்பதொரு நினைவு உண்டு; அதனை அருளிச்செய்கிறார். இனி, நினைத்தல் – கலத்தலும் கூடலும் ஆதலால், நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் என்பதற்கு, ‘‘சத்’ என்ற நிலையுள்ளதாய்த் தன்னுடனே கூடிக்கிடக்கிற எல்லாப் பொருள்கட்கும் காரணமாய்’என்று பொருள் அருளிச்செய்வர் பிள்ளையமுதனார்.
முதலில் சிதையாமே – அவற்றை உண்டாக்குமிடத்துத் தானான தன்மையில் குறை வாராதபடி இருப்பான். அதாவது – விசேடணங்களான சேதன அசேதனங்களினுடைய சொரூப சுபாவ விகாரங்கள் விசேடியமான பரம்பொருள் உருவத்தில் இல்லை என்றபடி.(சின்னூல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பி பின்னும், அந்நூல் அருந்தி விடுவது போல அரங்க ரண்டம், பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே, மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே’ என்றார் பிள்ளைப்பெருமாளையங்கார். சொரூப விகார மில்லாமலிருந்துகொண்டே சிலவற்றை உண்டாக்குதலும், அங்ஙனம் உண்டாக்கினவற்றை உட்கொள்ளுதலும் அற்பச்சத்தியையுடைய சிலந்திப் பூச்சிக்கு இயல்பாகும் போது, சொரூபத்திற்கு விகாரமில்லாமலிருந்து கொண்டே அண்டங்களைப் படைத்தலும் விழுங்குதலுமாகிய இயல்பு சர்வ சத்திகளான இறைவனுக்குக் கூடுதல் அரிதன்று என்பதாம். ‘ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசத்திக்குக் கூடாதொழியாதிறே,’ என்ற தத்துவத்திரயமும் ஈண்டுக் கருதுதல் தகும்.) ‘ஆயின், அப்படி உளதாமோ?’ எனின், மட்பிண்டமானது பானை, அகல் முதலிய பொருள்களாக மாறியவுடனே அம்மண் உருண்டையான உருவம் அழிந்துவிடும்; இங்கு அது இல்லை. ‘நாட்டில் காரியங்களை உண்டாக்குகிற காரணத்தின் படி அன்று இவன் படி,’ என்கிறார். மனம் செய் ஞானத்து உன் பெருமை – இப்படி இருக்கிற சங்கல்ப ரூப ஞானத்தையுடைய உன் பெருமை உண்டு. உன் வேறுபட்ட தன்மை அது ‘ஆயின், உலகிற்குக்காரணம், சங்கல்ப ரூப ஞானமோ?’ எனின், அன்று; ‘சூக்கும சித்து அசித்துகளுடன் கூடின இறைவனே உலகிற்குக் காரணம்; ஆயினும், இவ்விறைவன் காரணமாகும்போது சங்கல்பம் முன்னாக ஆதல் வேண்டும். ‘ஆயின் சங்கல்பத்தையுடைய அவ்விறைவன் காரணமாதல் வேண்டும், சங்கல்பம் காரணமாகாதே?’ எனின், 4நான் பல வகைப் பொருள்களாக விரிகிறேன்,’ என்கிற சங்கல்பத்தின் முக்கியத்துவத்தாலே ‘மனஞ்செய் ஞானத்தைக்’ காரணமாக அருளிச்செய்கிறார்.
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply