19. திருநாகையென்னும் நாகப்பட்டினம்
காவிரியின் தென்கரை தொடங்கி திருமறைக்காடு வரை தென்வடல் கீழ்மேலாக பரந்துபட்ட காட்டின் 50 யோஜனை அளவுக்கு கிருஷ்ணாரண்யம்
(கிருஷ்ணனின் காடு) என்று பெயர். இதன் கீழ்த்திசையில் 5 மைல் தொலைவுக்கு உள்ள பகுதியே சௌந்தர்ய ஆர்ணயம். மிகப்பழஞ்சுவடிகள்
சுந்தராரண்யம், என்றே இப்பகுதியைப் பற்றிப் பேசுகின்றது.
இத்தலம் நான்கு யுகங்களில் பெருமை பெற்றுத் திகழ்ந்தது.
கிரேதாயுகத்தில் இங்குள்ள ஸார புஷ்கரணி அருகாமையில் நாகங்களுக்குத் தலைவன் ஆதிசேடன் எம்பெருமானைக் குறித்து தவமிருந்து எம்பெருமான்
காட்சி கொடுத்து, ஆதிசேடனை எப்போதும் தான் சயனமாக ஏற்றுக் கொள்வதாக அருளிய ஸ்தலம்.
ஆதிசேடன் ஆகம விதிப்படி அஷ்டாங்க விதான முறையில் பெருமாளை ஆராதித்ததால் அவன் பெயராலேயே நாகன்பட்டினமாகி நாகப்பட்டினமாயிற்று.
திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க் கண்டேயனும் பகவானைக் குறித்து தவமிருந்த ஸ்தலம்.
இந்தச் சௌந்த்ரா ரண்யத்தைப் பற்றியும் (ஸாரம் என்றால் பாம்பு, பாம்பாகிய நாகராஜனால் உண்டாக்கப்பட்ட) ஸார புஷ்கரிணி பற்றியும்,
யப்பிரயஸ்தி கிருஷ்ணாதி சௌந்தர் ஆரண்ய பூதலே தரவு பௌ புண்ய கர்மாணௌ பேத்தா ரென்ன சூர்யமண்டலம்” என்றும்
“சாரபுஷ்கரிணி தீரமத்ஸே சுந்தர்கான(க)ம் ஆவிர்ப்ப பூவ, பகவான் லட்சுமி ஷீர சாகராத்”என்றும்
அதாவது இப்பெருமானை மனசுத்தியோடு வழிபட்டு இங்குள்ள ஸார புஷ்கரணியில் தீர்த்தமாடினால் அவர்கள் சூர்யமண்டலத்தை அடைவார்கள்
என்று இந்த ஸ்தலத்தின் மகிமையை எல்லாம் நாரதர் மூலம் கேட்ட துருவன் என்னும் சிறுவன் (உத்தானபாத மகாராஜனின் குமாரன் இவன்) இந்த உலகு
முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டுமென்று திருமாலைக் குறித்து இவ்விடத்தே கடுந்தவம் செய்து, தவத்தில் உண்டான எண்ணற்ற
இடையூறுகளை எல்லாம் கடந்து நிற்க, இறுதியில் எம்பெருமான் கருடாழ்வார் மீது பேரழகு பொருந்தியவராகக் காட்சி கொடுக்க, அப்பேரழகில் மயங்கி
துருவன் தான் கேட்க வந்த வரத்தை (நிலஉலக ராஜயோகம்) வெறுத்து இறைவனது இப்பேரழகில் எப்போதும் திளைக்கும் மோட்சம் வேண்டுமென்று அவ்விதமே மோட்சமளித்து, அவனுக்கு காட்சி கொடுத்த சௌந்தர்யமான திருக் கோலத்திலேயே இவ்விடம் காட்சி தருகிறார்.
இக்கலியுகத்திலேயே பக்தியில் சிறந்த சாலிசுகன் என்னும் சோழன் இப்பெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள் அம்மன்னன் இவ்வனத்தில்
உள்ள ஒரு சுருங்கை (சுரங்கம் அல்லது குகை) வழியே வந்து போகும் மூன்று கொங்கைகளோடு கூடிய ஒரு பெண்ணைக் கண்டான். இம்மன்னனின் பார்வை பட்டதும் ஒரு கொங்கை மறைய அப்பெண்ணும் திகைத்து நின்று இவனைக் காண ஒருவரையொருவர் காமுற்று காதல் கொண்டு இப்பெருமான் மீது பேரன்பு கொண்டு நித்ய கைங்கர்யங்கள் செய்து சிறந்த புத்திரப் பேற்றினையும் பெற்று இப்பெருமானுக்கு பிர்ம்மோத்ஸ்வமும் நடத்தி வைத்தார்கள்.
இச்சாலிசுக சோழனை துந்துமான் என்று புராணங் கூற, தொண்டைமான் என்று தமிழிலக்கியங்கள் பகர்கின்றன. மேற்சொன்ன வரலாற்றை (சாலிசுக
சோழன் கதையை) பெரும் பாணாற்றுப் படை நூலுக்கான நச்சினார்க்கினியாரின் உரைநூலும் விளக்குகிறது.
மூலவர்–நீலமேகப் பெருமாள் – கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
உற்சவர்–சௌந்தர்ய ராஜன்
தாயார்- சௌந்தர்ய வல்லி
உற்சவர்– கஜலெட்சுமி
தீர்த்தம்– ஸாரபுஷ்கரிணி
விமானம்– சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)
காட்சி கண்டவர்கள்– நாகராஜன் (ஆதிசேடன்) துருவன், திருமங்கை, சாலிசுக சோழன்
நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலச் சேவையும் இங்குண்டு. மூலவர் நின்ற திருக்கோலம். “வீற்றிருந்த பெருமாள்” என்று
அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும்
எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர்.
கண்டன், சுகண்டன் என்ற இரண்டு அந்தண உடன் பிறப்பாளர்கள் எண்ணற்ற கொடுஞ்செயல்கள் செய்து இறுதியில் ஒரு நாள் இங்குள்ள சார
புஷ்கரிணியில் தமது உடலை நனைத்து வைகுந்தம் பெற்றனர். இவ்விருவரின் சிற்பங்களும் (இந்நிகழ்ச்சியின் நினைவாக) இங்குள்ள அரங்கநாதனின்
சன்னதியில் கைகூப்பிய நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்புத் தகட்டாலான மாலையொன்று இப்பெருமானின் இடையை அலங்கரிக்கிறது.
இங்குள்ள அரங்கனின் சன்னதியில் உள்ள நரசிம்ம அவதாரத்தினை விளக்கும் வெண்கலச் சிலை மிகவும் அபூர்வமானதாகும். ஒரு கையால்
பிரஹலாதனை தாங்கி ஆசீர்வாதம் செய்வது போலவும், ஒரு கையை அபய முத்திரையாகவும் வைத்துக்கொண்டு, மற்ற எல்லாக் கைகளாலும் இரண்யனை வதம் செய்வது போலவும் அமைந்துள்ளது.
திருமங்கையாழ்வாரால் அறம்பாடி தங்கத்தாலான புத்தர் சிலையை எம்பெருமானின் கைங்கர்யத்திற்காக கொண்டு வந்தது இந்த
நாகப்பட்டினத்திலிருந்துதான். இக்கோவிலிலிருந்து புத்தர் சிலை இருந்த இடம் சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. நாகப்பட்டினம் கோர்ட்டுக்கு
சமீபத்தில் உள்ளது.
————–
20. திருத்தஞ்சை மாமணிக் கோயில்
இத்தலம். தஞ்சை நகரைத் தாண்டியதும்-அமைந்துள்ள வெண்ணாற்றங்கரை மீது அமைந்துள்ளது.
கிரேதாயுகத்தில் மது என்னும் அரசனது மரபில் தஞ்சகன், தண்டகன், கஜமுகன் என்னும் அசுரர் மூவர் பிறந்து சிவனைக் குறித்து கடுந்தவம் செய்ய
சிவன் தோன்றி என்ன வரவேண்டுமெனக் கேட்க அதற்கம்மூவரும் சாகா வரம் வேண்டுமென்று கேட்டனர். சாகா வரமளிக்கும் வல்லமை திருமால்
ஒருவருக்கே உண்டு என்றும், என்னால் உங்கள் மூவருக்கும் மரணமில்லை என்றும் சிவன் அருளி மறைந்தார்.
இதனால் இம்மூவரும் மிகவும் செருக்குற்று இந்திரலோகத்தையும்அச்சுறுத்தி, முனிவர்களின் தவத்தையும் சிதைத்து கொடுமைகள்
புரிந்துவந்தனர். அப்போது பராசுரர் என்னும் முனிவர் இவ்விடத்தில் தவம் செய்து வந்தார். அப்போது நாடெங்கும் கடும் பஞ்சம் உண்டாகி குடிப்பதற்கும் நீரின்றிப் போனது.
ஆனால் பராசர முனிவர் தவமிருக்கும் இடத்திற்கு அருகில் மட்டும் ஒரு சுனையில் நன்னீர் இருந்தது. இம்மூவரும் வந்து அந்த தண்ணீரைப்
பருகிக் கொண்டு அவ்வனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் பராசரரின் தவத்தைக் கண்டதும் அவரைத் துன்புறுத்தி அழிக்கலாயினர்.
பராசரர் ஹரி, ஹரி என்று அரியை அழைக்க, பக்தருக்கு இரங்கும் பரந்தாமன் தனது வாகனமான கருடனை அனுப்ப அம்மூவருக்குத் துணை
நின்ற அரக்கர்களையெல்லாம் கருடன் அழித்துவிட அம்மூவர் மட்டும் எஞ்சி நின்றனர். இந்நிலைகண்ட எம்பெருமான் தானே நேரில் வந்து தஞ்சகன்
என்னும் அரக்கனை தனது சக்ராயுதத்தால் தலையைச் சீவினார். தவறுணர்ந்த தஞ்சகன் தன்னை மன்னிக்குமாறு வேண்டி தன் பெயரிலேயே இந்நகரம்
திகழவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான் (எனவே தஞ்சகனூர் ஆகி தஞ்சகூராகி, தஞ்சாவூராயிற்று)
இதன் பிறகு கஜமுகன் என்னும் அரக்கன் யானை வடிவம் கொண்டு திருமாலைத் தாக்க அவர் நரசிம்ம ரூபமெடுத்து அவனைக் கொல்ல இறக்கும்
தருவாயில் தனக்குத் திருநாடு வேண்டுமெனக் கேட்க அவனுக்கும் திருநாடருளினார். இந்த தஞ்சையில் யாளியாகிய நரசிம்ம ரூபத்தில் நின்றதால்
தஞ்சையாளி என்றே பெயராயிற்று.
இவ்வாறு இரண்டு சகோதரர்களும் மாண்டுவிட்டதைக் கண்ட தண்டகாசுரன் மிக்க சினத்துடன் திருமாலுடன் பொருதி பாதாளத்திற்குள்
புகுந்து மறைந்து கொண்டான். திருமால் உடனே வராக உருவங்கொண்டு பூமியைக் கீண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்று தன் முகக் கோட்டால்
அவனது தலையைக் கிழித்து எறிந்தார். அவனும் தனது இறுதிக் காலம் வந்துற்றதையெண்ணி எம்பெருமானின் பாதங்களில் வீழ்ந்து இவ்விடமும் தன்
பெயரால் வழங்கப்படவேண்டுமென வேண்டிக்கொள்ள அவ்வனம் “தண்டகாரண்யம்” ஆயிற்று.
அதன் நடுவே திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) என்னும் திவ்ய ஷேத்திரத்தில் நிலத்தினின்று எழுந்த வண்ணம் ஸ்ரீபூவராகப் பெருமாள் சுயம்பு வடிவாய் காட்சி தந்தார்.
1. தஞ்சை மாமணிக் கோயில்
மூலவர்–நீலமேகப் பெருமாள், கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்
தாயார்–செங்கமலவல்லி
தீர்த்தம்– கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு
விமானம்– சௌந்தாய விமானம்
காட்சி கண்டவர்கள்– பராசர முனி
2. மணிக்குன்றம்
மூலவர்– மணிக்குன்றப் பெருமாள், கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்- அம்புச வல்லி
தீர்த்தம்– ஸ்ரீராம தீர்த்தம்
விமானம்– மணிக்கூட விமானம்
காட்சி கண்டவர்கள்– மார்க்கண்டேயர்
3. தஞ்சையாளி நகர்
மூலவர்– நரசிம்மன், கிழக்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்– தஞ்சை நாயகி
தீர்த்தம்– சூர்ய புஷ்கரணி
விமானம்– வேதசுந்தரவிமானம்
காட்சி கண்டவர்கள்– மார்க்கண்டேயர்
ஸ்ரீநீலமேகன், ஸ்ரீமணிக்குன்னன், ஸ்ரீவீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து
பக்தர்கட்கு அருளுவதாகவும் மரபு.
இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.
இம்மூன்று ஸ்தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும்,
மணிக்குன்னப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் ஸ்ரீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள
சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.
பரமபதத்தில் ஓடக்கூடிய விரஜாநதியே இங்கு ஓடுவதாகவும் விண்ணிலிருந்து வந்த தன்மையால் விண்+ஆறு – விண்ணாறு ஆயிற்று
என்றும் சொல்வார்கள்.
பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய மூன்று ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமிது.
தஞ்சையைப் பார்த்த வண்ணம் விக்ரஹங்கள் அமைந்திருப்பதால் தஞ்சையைக் காத்தருளும் தெய்வம் என்றும் தஞ்சை மாமணி யென்றும்
போற்றப்படுகிறது.
—————-
21. நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்
பாற்கடலில் எம்பெருமானின் பாதாரவிந்தங்களையே பற்றிக் கொண்டிருந்த பிராட்டிக்கு தேஜஸ் பொருந்திய எம்பெருமானின் திருமார்பைக்
கண்டு, அவ்விடத்திலேயே எப்போதும் நித்ய வாசம் செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டு
திருப்பாற்கடலின்றும் புறப்பட்டு, செண்பகாரண்யம் என்னும் இவ்விடத்தில் கடுந்தவம் செய்ய, தேவியின் பிரிவாற்றாமையைத் தாங்க முடியாத பெருமாள்
ஒரு ஐப்பசி மாதம் சுக்கில பட்ச வெள்ளிக்கிழமை அன்று தேவிக்குப் பிரத்யட்சமாகி எண்ணப்படியே நெஞ்சில் திருமகளை ஏற்றுக் கொண்டார்.
கிழக்கு நோக்கி தவஞ்செய்த நிலையிருந்த பிராட்டியை பெருமான்எதிர்கொண்டு ஏற்றுக்கொண்டமையால் இத்தலத்தில் எம்பெருமான் மேற்கு
நோக்கி எழுந்தருளியுள்ளார். செண்பகாரண்யத்தில் தேவி தவம் செய்தபடியால் செண்பகவல்லி என்றே திருநாமம். உற்சவரின் பெயர் ஜெகந்நாதன்.
எனவேதான் உற்சவரின் பெயரைவைத்தே இவ்வூர் நாதன் கோவில் என்றாயிற்று. திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில்
ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீனிவாசன் என்பது பெயர்.
அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா விஷ்ணுவைக்கான
வைகுண்டத்திற்கு வந்தபோது காவலில் நின்ற துவார பாலகர்களையுங் கேளாது உள்ளே புக முயன்றபோது துவார பாலகர்கள் தடுத்து, தங்கள்
அனுமதி பெறாமல் செல்ல எத்தனித்த காரணத்தால், காரணம் காணா அளவுக்கு உன் உடம்பில் உஷ்ணம் எரிந்துகொண்டிருக்கக்கடவது என்று
சபித்துத் திருப்பியனுப்பினர்.
தன்நிலையை சிவபிரானிடம் நந்தி உரைக்க, விஷ்ணுவின் துவார பாலகர்கள் இட்ட சாபம், விஷ்ணுவின் சாபத்திற்குச் சமமானதாகும். இதைத்
தீர்ப்பதற்கு ஒரே உபாயந்தான் உண்டு.–யாரும் காணவியலா மஹாவிஷ்ணுவின் நெஞ்சில் இடம் பிடிக்க
திருமகள் தவம் புரிந்த செண்பகாரண்யம்தான் காரணம் காணா இவ்வியாதியைப் போக்க நீ தவமிருக்க சிறந்த இடமாகும். எனவே அங்கு
சென்று திருமாலைக் குறித்து தவமிருந்து சாபத்தைப் போக்கிக்கொள் என்றுரைக்க, அவ்விடம் யாண்டுளது என நந்தி வினவியதற்கு,
அச்செண்பகாரண்யம் என்பது பூலோகத்தில் சக்ரபடித் துறைக்கு (குடந்தைக்கு) தென்பால், மன்னார்குடிக்கு வடபாலும், விண்ணகரத்திற்கு
(உப்பிலியப்பன்) மேற்கேயும், அரங்கத்திற்கு தெற்கேயும் உள்ளதெனத்தெரிவிக்க நந்தியும் அவ்விடத்தே வந்து நெடுங்காலம் கடுந்தவம் செய்ய
உடனே மஹாவிஷ்ணு தோன்றி சாபந்தீர்த்து வேண்டிய வரம் கேள் என்று சொல்ல இத்தலம் எனது பெயராலேயே விளங்க வேண்டும் என்று சொல்ல அன்று முதல் நாதன் கோவிலாய் இருந்த இத்தலம் நந்திபுரவிண்ணகரமாயிற்று.
மூலவர்-நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம், ஜகந்நாதன் என்றும் சொல்வர்.
தாயார்– செண்பகவல்லி
உற்சவர்– ஜெகந்நாதன்
தீர்த்தம்- நந்தி தீர்த்த புஷ்கரிணி
விமானம்– மந்தார விமானம்
காட்சி கண்டவர்கள்– நந்தி, சிபிச் சக்கரவர்த்தி
மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர்.
விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய் மாதிரி)
நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா
அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்)
கோலம் மிகவும் அழகானதாகும்.
இந்த ஊர் காளமேகப் புலவரின் பிறப்பிடம். இப்பெருமான் மீது அபாரமான பக்தி கொண்டவர் இவர்.
இத்தலம் வானமாமலை ஆதிக்கத்திற்கு உட்பட்டது.
ஐப்பசி வெள்ளிக் கிழமையில் இங்கு தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் சர்வகாரிய சித்தியை உண்டு பண்ணுகிறதென்று புராண
காலத்திலிருந்து இன்றும் உள்ள நம்பிக்கை.
இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து
ஆயுதங்களைப் பெற்றுள்ளார்-வாளும் வில்லும் வளை யாழி கதை சங்கமிவை யங்கை யுடையான்” திருமங்கையாழ்வார்
————-
22. திருவெள்ளியங்குடி
தன்னைக் குறித்து தவமிருந்த (சுக்கிரனுக்கு) வெள்ளியாருக்கும் அருள் பாலித்தவன்
க்ருதே பிரம்மபுத்திரம் நாமா
திரேதாயந்து பரா சரம்
த்வாபரே சைந்திர நகரா
கலௌ சேஷத்திரந்து பார்க்கவம்
கிரேதா யுகத்தில் பிரம்மபுத்திரம் என்னும் பெயருடனும், திரேதா யுகத்தில் பராசரம் என்னும் திருநாமத்துடனும், துவாபர யுகத்தில் சைந்திர
நகரம் என்னும் நாமத்துடனும், கலியுகத்தில் பார்க்கவ புரம் என்றும் குறிக்கப்படுகிறது. பார்க்கவன் என்றால் சுக்கிரன் என்று பொருள்.
சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ அச்சோ-அசுர குல குருவான சுக்கிரபகவான்,-சுக்ராச்சாரியார் – இவ்விடத்து தவமிருந்து பெற்றதால் இவர் பெயராலே வெள்ளியங்குடியென அழைக்கப்படுகிறது. சுக்கிரனுக்கு பெருமாள் இவ்விடத்தில் அருளியதைத் தான் வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் என்று திருமங்கையாழ்வார் சுட்டிக் காட்டுகிறார்.
தேவர்களுக்கு சிற்பியாகத் திகழ்ந்த விஸ்வகர்மா இறைவன் எழுந்தருளியுள்ள எண்ணற்ற திவ்ய தேசங்களைக் கட்டி முடித்ததாயும், தனக்கு
அது போன்ற பாக்கியம் யாதும் கிடைக்கவில்லையே என்று அசுரர்களுக்குச் சிற்பியாகத் திகழ்ந்த மயன் மிகவும் மனம் வருத்தமுற்று பிரம்மனிடம் வேண்ட கலியுகத்தில் தனக்கு காட்சி கொடுப்பதாக கொடுத்த வாக்குறுதியும் நினைவுக்குவர மயன்
அவ்விதமே செய்து கடுந்தவமியற்ற இறைவன் அவனுக்கு சங்கு, சக்ரதாரியாக, மஹாவிஷ்ணு கோலத்தில் காட்சியளித்தார்.
தனக்கு இந்தவிதமான திருக்கோலக்காட்சி வேண்டாமென்றும், இராமாவதாரத் திருக்கோலத்தையே தான் தரிசிக்க விரும்புவதாய் மயன் கூற,
தம் கரத்திலிருந்த சங்கு, சக்கரங்களைக் கருடனுக்கு கொடுத்துவிட்டு வில், அம்புகளுடன், அலங்காரக் கோலத்துடன் கோலவில் ராமனாக
காட்சியளித்தார். எனவேதான் இப்பெருமானுக்கு கோலவில்லி ராமன் என்னும் பெயர் உண்டானது.- 108 திவ்ய தேசங்களிலே இங்குதான் கருடாழ்வாருக்கு 4 கரங்கள் உள்ளது.-சங்கு சக்கரங்களைப் பெற்றதால் பெருமாளின் சக்தியே தன்னிடம் வரப்பெற்றவராய்த் திகழ்கிறார் இந்த கருடாழ்வார்.
மூலவர்–கோலவில்லி ராமன், புசங்க சயனம் கிழக்கு திருமுக மண்டலம்.
உற்சவர்- சிருங்கார சுந்தரன், (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு விருப்பம் அதிகம்)
தாயார்- மரகதவல்லி
தீர்த்தம்- சுக்ரதீர்த்தம், ப்ரஹமதீர்த்தம், பரசுராமதீர்த்தம், இந்திர தீர்த்தம்.
ஸ்தல விருட்சம்- கதலீ (வாழை)
விமானம்- புஷ்கலா வர்த்தக விமானம்
காட்சி கண்டவர்கள்- சுக்கிரன், பிரம்மா, இந்திரன் பராசுரர், மயன்
இங்கு கோவிலில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்துவரும்
காட்சியை இன்றும் காணலாம். இவ்வாழையே ஸ்தலவிருட்சமாகவும் ஆகிறது.
வெள்ளியங்குடிக்கு அருகாமையில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இதுதான் வைணவமேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம்.
நவக்கிரகங்களுக்கு நடுநாயகமாகத் திகழ்கிறது. இத்தலம்.-இவ்விடத்தைச் சுற்றியே 9 நவக்கிரக ஸ்தலங்கள் உள்ளன.
சூரியன் – சூரியனார் கோவில்
சந்திரன் – சந்திரன். இந்தளூர் (மாயவரம்)
செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோவில்
புதன் – திருவெண்காடு
வியாழன் – ஆலங்குடி
சுக்கிரன் – வெள்ளியங்குடி
சனி – திருநள்ளாறு
ராகு, கேது – வாஞ்சியம்
——————
23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)
இத்திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் – கும்பகோணம் பாதையில்
இரண்டாவது ரயில் நிலையம்)
கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை
நதிக்குச் சென்றிருந்த போது, அப்பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக் கண்ணன். உடனே
அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ள
வேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக
இங்குள்ள உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ள பேரழகும் எழுத்தில் அடக்கும் தன்மை பெற்றதல்ல.
மூலவர்-மூலவரின் திருநாமம் தேவாதிராஜன் என்பதாகும். வட மொழியில்கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர்.
கோசகன் என்பதின் தமிழாக்கமே ஆமருவியப்பன் என்பதாகும். இப்பெயரும் மூலவருக்குண்டு.
தாயார்- செங்கமல வல்லி
உற்சவர்- ஆமருவியப்பன்.
விமானம்– கருட விமானம்
தீர்த்தம்– தர்சன புஷ்கரிணி, காவேரி
காட்சி கண்டவர்கள்– தர்மதேவதை, உபரிசரவசு, காவேரி, கருடன், அகத்தியர்,
மூலவர், உற்சவர், தாயார், மூவரும் கிழக்கே திருமுக மண்டலம்.
ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் விழுகையில் இங்குள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர்
என்ற பெயருடயதுயாயிற்றென்பர். கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) என்பது புராணம் சூட்டும் பெயர்.
கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர் கும்பமுனி சாபம் குலைந்தவூர்
செம்பதுமத் தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”
பிரகலாதன் நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயந்து பெருமானின் சாந்த சொரூபத்தைக் காட்ட வேண்டுமென்று வேண்டிய போது, சினம்
அடங்கப்பட்ட சிங்கமாகப் பெருமாள் காட்சி தந்தும், பிரகலாதனின் அச்சம் குறையாதிருக்க இத்தலத்தில் அமர்ந்துள்ள ஆமருவியப்பனாக காட்சி தந்தார்
என்பதும் ஒரு பெருஞ் சிறப்பு நிகழ்ச்சியாகும். இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான்.
அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரித் தாயை அணுகி தன்னை மணந்து கொள்ள விண்ணப்பிக்க, காவிரி மறுக்க, இதனால் கோபமுற்ற
அகத்தியர் காவிரியைக் குடத்திலடைக்க, ஒரு சமயம் தரையில் வைக்கப்பட்ட அக்குடத்தைக் காகம் சாய்க்க, காவிரி வழிந்தோடியது.
இதனால் மீண்டும் சினமுற்ற முனிவர் காவிரியால் வளம் பெறும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்புற்று வறுமையுறட்டும் என்று சாபமிட,
இச்சாபத்தை போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து காவிரி சாபம் துடைத்தாள் என்பதும் வரலாறு. இப்பெருமானை நோக்கித்
தவமிருந்த நிலையில் காவிரித் தாயாரும் இச்சந்நிதியில் இடம் பெற்றுள்ளாள்.
தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து, ஒரு வைர முடியினையும் ஒரு விமானத்தையும் தந்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு
உகந்தவைகளோ அவ்வவரிடம் சேர்ப்பிக்குமாறு வேண்ட, திருநாராயண புரத்தில் உள்ள (மைசூர்) செல்லப் பிள்ளை பெருமாளுக்கு வைரமுடியினையும்,
இந்த தேவாதிராஜனுக்கு விமானத்தையும் அளித்தார். இதனால் இப்பெருமாள் கருடனைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.
“திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத் திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும்
மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.
———————
24. திருச்சிறுபுலியூர்
மயிலாடுதுறையிலிருந்து (மாயவரம்) நகரப்பேருந்தில் ஏறிச்சென்று கொல்லுமாங்குடி என்ற சிற்றூரில்
இறங்கி 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்
ஒருகாலத்தில் கருடனுக்கும், ஆதிசேசனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் யுத்தத்தில் வந்து நிற்க இவர்களைச்
சாமாதானப்படுத்துவதற்காகப் பெருமாள் “ பாலசயனத்தில்” எழுந்தருளிய ஸ்தலம் இதுவென்பது வரலாறு.
வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர்
மகாவிஷ்ணுவே என்று நடராஜன் கூற, அவ்வாறாயின் அதற்குரிய ஸ்தலத்தை எனக்கு காண்பியும் என்று முனிவர் வேண்ட நடராஜர் சிவலிங்க ரூபமாக
வழிகாட்ட அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து
முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என பெயர் வந்ததென்பர்.
மூலவர்– சலசயனப்பெருமாள், தெற்கே திருமுக மண்டலம், புஜங்க சயனம்.
உற்சவர்- க்ருபா ஸமுத்திரப் பெருமாள் (அருள்மாகடல்)
தாயார்– திருமாமகள் நாச்சியார்,
உற்சவர்– தயாநாயகி
தீர்த்தம்–மானஸ புஷ்கரிணி
விமானம்– நந்தவர்த்தனம்
காட்சி கண்டவர்கள்- வியாஸர், வியாக்ர பாதர்.
புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாயிருந்ததைக்கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட உமது குறைதீர நமது மிகப்பெரிய
உருவை திருக்கண்ணமங்கையில் காணும் என்று பெருமாள் அருளிச் செய்த ஸ்தலம்.
கருடனுக்கு அபயமளித்த இடம்.
இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேடனுக்கும் சன்னதி உள்ளது.
ஸ்ரீரங்கத்தைப் போன்றே தெற்கு நோக்கிய சயனம்.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.
இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுண்டம் அடைந்த வியக்ர பாதரை பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிட்டை செய்துள்ளனர்.
அவருக்கும் இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.
————–
25. தலைச்சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு)
தலைச்சங்காடு என்ற பெயரே தற்போது பிரதானமாய்த் திகழ்கிறது.
திருச்சீரங்கநாதன் பள்ளி திருச்சிராப்பள்ளியாகி திருச்சியானது போலவும்,
துலை, வில்லி, மங்கலம் என்பது பொருள் காணவியலாத அளவிற்குத் தொலைவில்லிமங்கலம் ஆனது போலவும்.
காழிச்சீராம விண்ணகரம் என்பது நிலைதடுமாறி (தடம்புரண்டு) சீர்காழியானது போலவும்,
திருத்தண்கால் என்பது திருத்தங்கல் ஆனது போலவும்,
திருமெய்யம் என்பது திருமயம் ஆனது போலவும்,
தலைச்சங்க நாண்மதியம் என்பது தலைச்சங்காடு ஆயிற்று.
இரவில் நமக்கு ஒளிதரும் நாள் மதியாகிய சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர்ந்தமையால் இங்குள்ள பெருமாளுக்கு நாண்மதியப்பெருமாள் என்ற
திருநாமம் ஏற்பட்டது. இதையேதான் வடவானரும் “சந்திரசாப ஹரப்”பெருமாள் என்றழைத்தனர். விலை மதிப்பற்ற சங்கு ஒன்றை இப்பெருமாள்
ஏந்தியிருப்பதாலும் தலைச்சங்கானம் ஆயிற்றென்பர்.
சங்ககாலத்தில் இப்பகுதி தலைச்சங்கானம் என வழங்கப்பட்டு காலப்போக்கில் அது மருவி தலைச்சங்கமாயிற்று என்று தமிழாய்வாளர்
பகர்வர்
மூலவர்–நாண்மதியப் பெருமாள், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– தலைச்சங்க நாச்சியார்
உற்சவர்– வெண்சுடர்ப் பெருமாள்
தாயார்– செங்கமலவல்லி
விமானம்– சந்திர விமானம்
தீர்த்தம்– சந்திர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள்– சந்திரன், தேவப்பிருந்தங்கள்.
சங்க காலத்திலேயே இப்பகுதி பெரும் புகழ் பெற்றிருந்தது. அப்போது இந்நகரில் தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்டன. இன்றைய காவிரி
பூம்பட்டிணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூர் பண்டைய நாளில் சங்கு வாணிகத்தில் தலைசிறந்திருந்தது. இங்கு சங்குகள் குவித்துவைத்து
விற்கப்பட்டதை சங்க நூல்கள் பரக்கப் பேசுகின்றன. இவ்விடத்தைச் சுற்றிலும் புரசமாக விளங்கியதால் (பலாச
மரக்காடுகள் இருந்தமையை) இவ்விடத்தைக் காடு என்று சுட்டினர்.
தலைசிறந்த சங்குகள் விற்கப்பட்ட இடமும் காடும் சேர்ந்து தலைச்சங்காடு ஆயிற்று. இவ்வூருக்கு அருகில் திருவெண்காடும் இருப்பதால் காடு என்னும்
பெயர் ஊருக்கு வருதல் வழக்கமாயிற்று, எனலாம். காடு என்னும் ஈற்றடி வரப்பெற்ற திவ்யதேசம் இதுஒன்றுதான்.
(காட்டில் வேங்கடம், கண்ணபுரநகர் என்று திருவேங்கடம் இருந்த இடத்தையும் காடு என்று குறித்ததை ஈண்டு நோக்கத்தக்கது)
தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நாண்மறை முற்றிய நலம்புரிக் கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங்கொண்டு
குமரியம் பெருந்துறைக் கொள்கையிற் படிந்து
தமர்முதல் பெயர்வோன்” – சிலப்பதிகாரம் இவ்வூரின் தொன்மை பெயரைச் சுட்டுகிறது
இவ்வூரில் இருந்த மாடலன் என்னும் மறையோன் ஒருவன் அகத்திய முனிவனின் பொதிய மலையை வலங்கொண்டு குமரியாற்றில் முறைப்படி
தீர்த்தமாடி மீண்டும் தன் கிளைஞர் (உறவினர்) வாழும் சொந்த ஊரான தலைச் சங்கானத்திற்கு மீள்கிறார் என்று இவ்வூரைப்பற்றிச் சிலப்பதிகாரம்
கூறுகிறது.-தலைச் செங்காணமும் தலைச்சங்காடும் ஒன்றுதான்.
இத்தலத்தில் பெருமானின் கையில் உள்ள சங்கு மிகவும் பேரழகு வாய்ந்தது. வெண்சுடர்ப் பெருமாள் (மூலவர் நாண்மதியராகிறார், உற்சவர்
வெண்சுடர் பெருமாள் ஆகிறார்) நீளா தேவியுடனும் நிலமகளுடனும் பேரழகுடன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள செப்புச் சிலைகள் மிக்க கலை
நுணுக்கம் வாய்ந்தவை.
தலைச்சங்க நாண்மதியத்தைப் பற்றிக் கீழ்காணும் அருமையான பாடல் ஒன்று காணப்படுகிறது.
செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்
அப்புங் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்
அலைச்சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்
தலைச்சங்க நாண் மதியத்தான்.
————-
26 திருஇந்தளூர் (மயிலாடுதுறை)
இந்தளூர் என்றால் பலருக்குத் தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால் எல்லோருக்கும் தெரியும்
இப்பகுதிக்கும் சுகந்தவனம் என்று பெயர் எனவே பெருமாளுக்கும் சுகந்தவன நாதன் என்ற திருநாமமும் உண்டானது. வடமொழி நூல்கள்
சுகந்தவனநாதன் என்றே இப்பெருமானைக் குறிக்கின்றன. இப்பெயர்தான் தூயதமிழில் பரிமள ரெங்கன் என்றாயிற்று.
சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு தோஷம் நீங்கப்பட்ட இத்தலம் தனது பெயராலேயே
வழங்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்டிக்கொள்ள இந்தளூர் ஆயிற்றென்பர்.
மூலவர்–பரிமள ரெங்கநாதன், சுகந்தவன நாதன் மருவினிய மைந்தன், 4 புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனம். கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்– பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி,
தீர்த்தம் — சந்திர (இந்து) புஷ்கரிணி
விமானம்– வேத சக்ர விமானம்
காட்சி கண்டவர்கள்- சந்திரன்.
4 புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத் தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர். ஐப்பசி மாதம்
முழுதும் இங்கே விழாக் கோலமாக இருக்கும். சமுத்திரத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நீராட இந்தியா முழுவதிலுமிருந்து இங்கு பக்தர்கள்
வருவர்.
திருமங்கை யாழ்வார் பெருமானை “ வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே-என்று வசை வாழ்த்துக் கூறினார்.
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்” – என்றார்
நும்மடியோம், நுமக்கே என்பன போன்ற அழகு தமிழ்ச் சொற்களை திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் எடுத்தாண்டுள்ளனர். நம்மாழ்வார்,
“நுமக்கடியோ மென்றென்று நொந்துரைத்தேன், மாலார்
தமக்கவர்தாம் சார்வரியரானால் — எமக்கினி
யாதானு மாகிடு காண் நெஞ்சே, அவர்திறத்தே
யாதானும் சிந்தித்திரு”– பெரியதிருவந்தாதி) என்று சொல்லியிருப்பதும் இங்கு பொருளமைதியில் மிகவும் வியந்து போற்றத்தக்கதாகும்.
————-
திருநாங்கூர் 11 திவ்ய தேசம்
திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்ய தேசம் உள்ளது.
1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோவில்
5. திருமணிமாடக்கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
இவ்வூரைச் சுற்றி சுமார் 1/2, 1, 1 1/2 மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்ய தேசம் என்றே வழங்குவர்.
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன் பள்ளி
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருட சேவைக்கு இந்த 11 பெருமாள்களும் எழுந்தருள்வர். இந்த
11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் வந்து ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வர். இந்த கண்கொள்ளா காட்சியான கருட சேவையை காண்பதற்கு இந்தியா வெங்கிலும் உள்ள
பக்தர்கள் கூடுவர்.
புரசங்காடு எனவும், பலாசவன சேத்திரம் எனவும், மதங்காச்சரமம் எனவும் நாகபுரி எனவும் பல பெயர்களில் வழங்கப்படும் இந்த
திருநாங்கூர் பகுதிக்கு உபய காவேரி மத்திமம் என்றும் ஒரு பெயர் உண்டு. தெற்கே காவேரிக்கும் வடக்கே மண்ணியாறுக்கும் இடைப்பட்ட இப்பகுதி
உபயகாவேரி மத்திமம் ஆகும்
ஒரு சமயம் பூலோகத்தில் பராசக்தியின் தந்தையாக இருந்த தட்சன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே
பார்வதி சிவனைநோக்கி தட்சனுக்கு புத்திமதி கூறி தங்களை அழைக்கச் செய்கிறேன் என்று சென்று தட்சனுக்கு புத்திமதிகள் கூற அவன் சிவனை
மேலும் இகழ்ந்து பேசி அனுப்பினான். இதனால் கோபமுற்ற பார்வதி தட்சனை சபித்து அவன் யாகத்தை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வர, சிவன்
ஏற்றுக்கொள்ள மறுத்து கோபம் அடங்காமல் ருத்ர தாண்டவம் ஆடினார் என்ற கதை எல்லோருக்கும் தெரியும். சற்றேனும் கோபம் தணியாத சிவன்
இவ்வுலகமே அழியும்படியாக கொடூர நடனத்தில் இந்த உபயகாவேரி மத்திமத்தில் வந்து ஆடியதாகவும் அப்பொழுது சிவனின் தலையில் உள்ள
சடாமுடித் தரையில் பட்ட உடன் அதில் இருந்து ஒரு சிவன் தோன்றி கொடூர நடனம் ஆட, இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிவனுடைய தலைமுடி
தரையில் அடிபட அதிலிருந்து ஒவ்வொரு சிவனாக தோன்ற தேவர்களும், ரிஷிகளும் பேரழிவு வந்துவிடுமோ என்று எண்ணி உலகை காக்குமாறு
மகாவிஷ்ணுவிடம் வேண்ட பரமபதத்தில் இருந்து மகாவிஷ்ணு புறப்பட்டார். இதற்குள் இந்த உபயகாவேரி மத்திமத்தில் 11 சிவன்கள் (சிவரூபங்கள்)
தோன்றி கொடும் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க பரமபதத்திலிருந்து வந்தஎம்பெருமான் இவ்விடத்திற்கு எழுந்தருளினான். நாராயணனை பரமபத
நாதனாக கண்டதும் சிவன் தனது கொடூரமான தாண்டவத்தை நிறுத்தினான். என்னைப்போல் தாங்கள் 11 திருமால்களாக காட்சி அளிக்கவேண்டும் என்று
சிவன் வேண்ட பூலோகத்தில் அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10 பெருமாள்களை பரமபதநாதன் நினைத்த மாத்திரத்தில் 10 பெருமாள்களும்
இங்கு எழுந்தருளினர். பேராச்சரியம் உற்ற சிவன் ஏகாதச மூர்த்தியாக காட்சி தரவேண்டும் என்று விண்ணப்பிக்க, அவ்வண்ணமே செய்வதாக பெருமாள்
அருள்பாலித்தார்.
11 பெருமாள்கள் நின்ற இடந்தான் உபயகாவேரி மத்திமத்தில் அமைந்துள்ள இந்த திருநாங்கூர் 11 திருப்பதிகள் ஆகும்.
இதன்பின் பதினொரு சிவரூபங்களை திருமாலின் அவதார மூர்த்திகளாகிய பதினொருவரும் அழைத்து ஒரு சிவனுக்குள் ஒரு சிவனாகச்
செலுத்தி பார்வதியையும் ஏற்றுக் கொள்ள வைத்ததாக ஐதீகம்.
இந்த பதினொரு திவ்ய தேசங்களை சேவித்த வகையில் இங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது.
சிவன் பதினொரு வடிவம் கொண்டதை
ஸ்வமயம் பூதஸத் யானே
த்வாதச விபத்வானே
ஏகாதசனாம் ருத்தரனாம்
பூதஸ் ஸண்யானே. – என்று வடமொழி கூறும்.
11 பெருமாள்களாக வந்தவர்கள் யார் யார் எனில் பத்திரிநாத்தில் உள்ள நாராயணப் பெருமாளே
அதே பெயரில் வந்து மணிமாடக்கோவில் இருந்த இடத்தில் எழுந்தருளினார்.
1. மணிமாடக்கோவில் – நாராயணப்பெருமாள் – பத்ரி
2. அரிமேயவிண்ணகரம் – குடமாடு கூத்தர் – கோவர்த்தனகிரி
3. வைகுந்தவிண்ணகரம் – ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
4. வெண்புருடோத்தமம் – அயோத்தி
5. செம்பொன்செய் கோயில் – அழகிய மணவாள- உறையூர்
6. திருவெள்ளக்குளம் – அண்ணன்கோயில் – திருப்பதி
7. திருதெற்றியம்பலம் – பள்ளிகொண்ட பெருமாள் – ஸ்ரீரங்கம்
8. திருத்தேவனார்த் தொலை – கீழச்சாலை – திருவடந்தை
9. திருக்காவளம்பாடி – கோபாலகிருஷ்ணன் – ருக்மணியுடன் – துவாரகை
10. திருமணிக்கூடம் – வரதராஜப்பெருமாள் – கச்சி
11. பார்த்தன்பள்ளி – பார்த்தசாரதி – குருசேஷ்த்திரம்
இந்த பதினொரு திருநாங்கூர் திருப்பதிகளிலும் உள்ள பெருமாள்கள் தான். ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூருக்கு
எழுந்தருளுவர். மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்த கருடசேவை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த 11 பெருமாள்களை கருடசேவையில் சேவிப்பது 11 திவ்ய தேசங்களுக்கு சென்று வந்ததற்கு ஒப்பாகும்.
ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர்
சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தை கேட்ட உடன்
திருமங்கையாழ்வார் பிரேவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும் திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும்
என்று மக்கள் நம்புவதும் இப்பகுதியில் நிலவும் ஒரு திவ்யமான பக்தி நம்பிக்கையாகும்.
27. திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை
அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன்
இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங் கொண்ட கண்ணன் அவனோடு பொருது அவனது காவளத்தை
(பூம்பொழிலை) அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் (சிவனை ஒன்றாக்கி முடிந்தபின்)
தான் இருக்க காவளம் போன்ற பொழிலைத் தேடினான். இந்தக் காவளம்பாடியில் நின்றுவிட்டான்.
மூலவர்-கோபாலகிருஷ்ணன், (ராஜகோபாலன்) ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார் (சன்னதி இல்லை)
தீர்த்தம்– தடமலர்ப் பொய்கை
விமானம்– ஸ்வயம்பு விமானம்
காட்சி கண்டவர்கள்– சேனைத்தலைவர், ருத்ரன்
காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது.
இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான“மடவரல் மங்கை” என்பதாகும்.
படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தினானே–திருமங்கை மங்களா ஸாஸனம்
———-
28. சீர்காழி என்னும் காழிச்சீராம விண்ணகரம்
இத்தலம் இருந்த பகுதிக்கு பாடலீக வனம் என்றும், சேத்திரத்திற்கு “உத்தம ஷேத்திரம்” என்றும் உரோமசர் என்னும் மகாமுனிவர் இங்கு
தவமியற்றியதாகவும், முனிவரின் வேண்டுகோளுக்கு இசைந்து எம்பெருமான் அவருக்கு திரிவிக்ரம அவதாரத்தைக் காட்டியருளியதாகவும் இத்தல வரலாறு பேசப்படுகிறது.
பிரம்மனுக்குத் தன் ஆயுளைப்பற்றிக் கர்வம் இருந்ததாகவும் அதனை அடக்க உரோமசர் என்னும் முனிவர் மகா விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம்
இருக்கலானார். உரோமச முனிவரின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு உன் உடம்பில் உள்ள (தலையில் உள்ள) ஒரு உரோமம் உதிர்ந்தால் பிரம்மனின்
ஆயுளில் ஒருவருடம் குறையும் என்று கூறி இன்னும் யாதுவேண்டுமென்று கேட்க எம்பெருமான் எடுத்த திரிவிக்ரம அதாரத்தை இவ்விடத்தே எனக்கு
காட்டியருளவேண்டுமென்று வேண்ட அவ்வண்ணமே எம்பெருமான் தனது இடதுகாலைத் தூக்கி திரிவிக்ரம கோலத்தில் நின்றருளியதாக புராண வரலாறு இவ்விதம் வரம் பெற்ற உரோமச முனிவர் பிரம்மனை நோக்கி “உன் ஆயுளும் என் ஒருரோமும் சரி” என்று கூறி அவனது கர்வத்தை அடக்கியதாகவும் கூறுவர்.
புராணமும்,
பாடலீக வனம் நாம ஷேத்ர நாம உத்தமஷேத்ரா
ரோமஸ்ய மஹாத்ம நகரி
……………………………………………..
த்ரி விக்ரம முகம் வந்தே ஸதா ஸர்வாங்கம் சுந்தரம்— என்று விவரித்துப் பேசும்,
இதன் எல்லைகளைக் கூட,
உதகே பச்சிம பாகே காவிரி யாற்ச உத்ரதடே
பூர்வேஸ்ய உத்ர ரங்கஸ்யே நூபுராயஸ்த தக்ஷ்ணே-(உதகே – கடல், பச்சிம் – மேற்கு, உத்ர – வடக்கு, பூர்வ -கிழக்கு)
பாடலிக வனம் முடியும் இடத்தே மேற்கு எல்லை கடல் காவிரிக்கு வடக்கு, நூபுர கங்கையென்னும் கொள்ளிடத்திற்குத் தெற்கு,
உத்திரரங்கம் என்னும் கோயிலுக்கு கிழக்கு என்று இதன் எல்லைகளையும் கோடிட்டு காட்டுகிறது.
தாளாளன் – தாடாளன்-என்பதே திருநாமமாயிற்று. தாடாளப் பெருமானை வைத்து திரேதாயுகத்தில் கட்டப்பட்டிருந்த கோவில் இப்போதுள்ள இடத்தைவிட்டு சற்று தொலைவில் இருந்ததாகவும், அக்கோவில் வெள்ளப்பெருக்கால் சிதைபாடுற்ற பின்னே அதே பெருமாளை பிரதிட்டை செய்து இப்போதுள்ள இடத்தில் இத்தலம் எழுப்பப்பட்டதென்பர். ஆயினும் இக்கோவிலும் பழங்காலத்தே எந்த மன்னரால் அல்லது யாரால் கட்டப்பட்ட தென்று அறியுமாறில்லை.
மூலவர்–திரி விக்ரமன், தாடாளன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய நிலை.
தாயார்- லோக நாயகி
உற்சவர்– திரிவிக்ரமன், தாயார் மட்டவிழ்குழலி
தீர்த்தம் — சங்க தீர்த்தம், சக்ர தீர்த்தம்
விமானம்– புஷ்கலா வர்த்தம்
காட்சி கண்டவர்கள்– உரோமசர், அஷ்டகோண மஹரிஷி
108 திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை திருமங்கை ஆழ்வார் விண்ணகரம் என்று குறிக்கின்றார். விண்ணகரம் என்றால் விண்ணில்
உள்ள பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம் என்பது பொருள். அந்த விண் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.
1. பரமேச்சுர விண்ணகரம்
2. காழிச்சீ ராம விண்ணகரம்
3. அரிமேய விண்ணகரம்
4. வைகுந்த விண்ணகரம்
5. நந்திபுர விண்ணகரம்
6– திரு விண்ணகரம்
ஒரு சமயம் இத்தலம் அழிவுற்றபோது உற்சவப் பெருமாளை மட்டும் ஒரு மூதாட்டி தவிட்டுப் பானையில் வைத்துக் காத்து தினமும் திருவாராதனம்
முடித்து மீண்டும் தவிட்டுப் பானைக்குள்ளேயே வைத்துக் காத்துவந்தாள்.
திருமங்கை யாழ்வார் இவ்வூருக்கு வந்த சமயம் அந்த மூதாட்டியின் கனவில் வந்த எம்பெருமான் தன்னை திருமங்கையிடம் ஒப்புவிக்குமாறு கூற
அவ்விதமே திருமங்கையிடம் கொடுக்க அவர் இங்கே பிரதிஷ்ளடை செய்தார் என்பர். எனவே எம்பெருமானுக்கு “தவிட்டுப் பானைத் தாடாளன்” என்ற
பெயரும் உண்டு.
திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வரும்போது ஞானசம்பந்தர் வாதுக்கழைத்ததாகவும், அப்போதுதான் சுயமாக கவிபாட ஆராதன விக்ரக
வேண்டுமென்று திருமங்கையாழ்வார் தெரிவிக்க அவரது சீடர்கள்மூதாட்டியிடம் தாடாள விக்ரகப் பெருமாள் இருப்பதை அறிந்து அதனைப்
பெற்று வந்து கொடுத்ததாகவும் கூறுவர்.
ஆற்காடு நவாபின் ஆட்கள் இவ்வூருக்குத் தண்டாலுக்கு (வரி வசூலுக்கு) வரும்போது தாடாளப் பெருமாளைத் தூக்கிச் சென்று நவாபின்
மகளிடம் கொடுக்க அவளும் படுக்கையறையிலும், உப்பரிகையிலும் வைத்து விளையாட, சீர்காழியில் உள்ள சிதம்பர படையாச்சி கனவிலும், அர்ச்சகரின்
கனவிலும் வந்து தாம் இருக்குமிடத்தை தெரிவிக்க, நாங்கள் வந்து எப்படி உம்மைக் கொணர்வது என்று கேட்க காவல்கட்டுகளை கடந்து மதிற்சுவர்
அருகே வந்து வெண்ணெய் உண்ட தாடாளா வா, தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று அழைக்க நான் வந்துவிடுவேன் என்று கூறினார்.
அவ்விதமே அவ்விருவரும் வரும்போது காவலர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க மதிற்சுவரை அடைந்து.
தாடாளா வா தாடாளா வா வெண்ணெய் உண்ட தாடாளா வா
தாடாளா வா தாடாளா வா தவிட்டுப் பானைத் தாடாளா வா என்று கூற-உப்பரிகையில் நவாபின் மகள் அப்பெருமானைத் தூக்கிப்போட்டு
விளையாடிக்கொண்டிருக்க சரேலென்று சாளரத்தின் வழியாகப் பாய்ந்து இவர்களின் கரத்தில் சேர, ஓட்டமும் நடையுமாகக் கொண்டுவந்து
அப்பெருமானை ஊர் சேர்த்ததாகக் கூறுவர்.
இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் சிதம்பரப் படையாச்சியின் வம்சத்தாருக்கு இக்கோவிலில் தனி மரியாதைகள் உண்டு.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தா(அ)யது எல்லாம் ஒருங்கு – குறள் 610
தா அயது – தாவிய பரப்பு முழுவதும்
அடி அளந்தான் – அடியால் உலகளந்த திருமால்
திருமாலின் காலடிக்கீழ் உலகடங்கியது போல் சோம்பலற்ற மன்னனின் கீழ் உலகு தங்கும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
திருமங்கையாழ்வாரின் மேன்மைக்கும் புகழுக்கும் இத்தலம் ஒரு உந்துகோலாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ஞானசம்பந்தரை
வாதில் வென்று அவரது வேலை திருமங்கையாழ்வார் பரிசாகப் பெற்றது இந்த தலத்தில்தான்.
ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி உலகனைத்தும் ஈரடியா லொடுக்கி –முதலடியாகக் கொண்டு,
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எண் வரிசையிலும் பாடி தொடர்ந்து வரும் பத்துப் பாடல்களில் திருமாலின் பத்து அவதாரங்களை விளக்கி நிற்க,
இத் திறன் கண்டு வியந்த ஞான சம்பந்தர் நாலுகவிப்பெருமாள் என்பது உமக்கே செல்லும், விருதோதிச் செல்லும்,
விருதோதிச் செல்லும் என்று கூறி கையிலிருந்த வேலினையும் பரிசாகக் கொடுத்து திருமங்கையின் கால்களுக்கு தண்டை அணிவித்து மகிழ்ந்தார்.
தமது பட்டப் பெயர்கள் 1.ஆலிநாடன் 2. அருள்மாரி 3. அரட்டமுக்கி 4. அடையார் சீயம் 5.கொங்குமலர் குழலியர்வேள் 6. மங்கை வேந்தன் 7. பரகலான் 8.கலியன்.
கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக் கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம் அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
படியுண்ட பெருமானைப் பறித்து பாடி பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே— என்பது ஞானசம்பந்தரின் தாய்ப்பேச்சு
அதாவது தன்னைத் தாயாக நினைத்துக் கொண்டு தன் மகளின் நிலை கூறுகிறார்.
ஏ மங்கை மன்னா, பரம்பொருளாம் திருமாலை வழிப்பறி செய்தீர்.-உமது பவனியைக்காண என் மகள் ஒருநாள் வந்தபோது அவள் உள்ளத்தையும் வழிப்பறி செய்தீர்.-இதுமுறையோ, எனது ஒரே மகள் உள்ளமிழந்து உயிர் ஒன்றுடன் வருந்த நிற்கிறாளே, என்று கூறும் வகையில்
திருமங்கையாழ்வார் தனது உள்ளத்தையும் திருடி விட்டதாய் (வழிப்பறி செய்து விட்டதாய்) ஞானசம்பந்தர் கூறினார்.
இதனைக் கேட்ட திருமங்கை, தன்னைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு, தலைவி படும் துயரத்தைச் சொல்லும்முகமாய் தலைவிப் பேச்சுப்
பேசுகிறார்.–திருஞான சம்பந்தர் மயிலையில் அனலில் வெந்த ஒரு பெண்ணை உயிர்ப்பித்துக் கொடுத்தார். இச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு
தலைவிப் பேச்சில் திருமங்கை கூறுகிறார்.
ஞானசம்பந்தரே நானும் ஒரு பெண். பெண் என்றால் அபலை என்பர் பெரியோர். நான் தங்களையே நினைந்து நினைந்து காணாக் காதலுற்று
பிரிவாற்றாமையால் வருந்தி நிலவொளி கூட அனலாக வேகும்படி நிலவில் வெந்திருக்கிறேன். தாங்கள் மயிலாப்பூரில் அனலில் வெந்த ஒரு பெண்ணை
பிழைக்கச் செய்தீரே அது என்ன விந்தை, சித்து விளையாட்டால் கூட இதனைச் செய்ய முடியுமன்றோ, ஆனால் தங்களைக் காண விரும்பி நிலவில்
வெந்த இந்தப் பெண்ணுடன் கூடி உயிர்ப்பித்தாலன்றோ தங்கள் பெருமை நிலைக்கும் என்றார்.
வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே
பக்திச் சோலையிலே திளைத்து பாசுரங்களைத் தமிழன்னைக்கு வாரித்தெளித்த இவ்விரு கவி வள்ளல்களும் கண நேரத்தில் (தாய்ப்பேச்சு,
தலைவிப்பேச்சு என்று) இரண்டு காதற்பூக்களைத் தமிழன்னைக்குச் சொருகி விட்டுச்சென்று விட்டனர்.
—————-
29. திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
அரிமேய விண்ணகரம் என்றால் அனைவருக்கும் தெரியாது.-குடமாடு கூத்தர் கோவில் என்றால் யாவருங் கூறுவர். கோவர்த்தன
மலையைக் குடையாக எடுத்தாடிய ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.
மூலவர்–குடமாடு கூத்தன். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்– அம்ருத கடவல்லி
உற்சவர்– சுதுர்புஜங்களுடனான கோபாலன் குன்றம் குடையாக எடுத்த கோபானல்லவா
தீர்த்தம்– கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம்– உச்சருங்க விமானம்
காட்சி கண்டவர்கள்– உதங்க முனிவர்
உதங்க முனிவர் என்பார் எம்பெருமானைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைச் சேவித்ததாக ஒரு வரலாறும்
உண்டு.
குடமாடு கூத்தர் என்பது இப்பெருமானின் திருநாமம்–பரஞ்சோதியை குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை”குன்றைக் குடையாக எடுத்த கோவர்த்தன நாதனே–வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.- குடங்கள் எடுத்து ஆடினானா அல்லது குடை கொண்டு ஆடினானா
நந்திபுரவிண்ணகரத்தை மங்களாசாசனம் செய்யும்போது
தாய்செற உளைந்து தயிருண்டு குட மாடு தட மார்வர் தகைசேர் ….… என்று குடங்களில் தயிருண்டதை கூறுகிறார்.
இத்தலத்திற்கு அளித்த பாடலில்,
காமரூசீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன் குலவுமிடம் என்று
குன்றை குடையாய் பிடித்த காட்சியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.
எனவே இங்கிருப்பவனுக்கு கூறப்பட்ட குடமாடு கூத்தன் என்ற சொல் குடங்களையெடுத்து ஆடவல்ல கூத்தனல்ல
“குன்றத்தைக் குடையாய் எடுத்த கோவிந்தன் தான்” என்பதில் சான்றோர் மருட்சி கொள்வாரா,
மேலும் குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாடுவது லீலாவிநோதம்
குன்றத்தைக் குடையாய்க் கொண்டு காப்பது அவன் வாத்ஸல்யம். பகைவனுக்கு அருளும் பண்பினனாக
இங்கு எழுந்தருளியுள்ளவன் குடங்கள் எடுத்து ஆடுபவனன்று குடையாக குன்றத்தை எடுத்தவனே என்று தலைக்கட்டுவதற்கு தடையாது முளதோ,
எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு குறிப்பிட்டது குன்றைக் குடையாகப் பிடித்ததைத்தான் குறிக்குமென்பது துணிவு.
மேலும் பாடல் 207இல்
குன்றத்தாய் என்றும், குடமாடு கூத்தன் என்றும் பிரித்துச்
சொல்லப்பட்டுள்ளதும் இங்கு சீர்தூக்கிப் பார்க்க வல்லதொன்றாகும்.
குன்றத்தை குடையாக எடுத்து கோபாலர்களையும்,ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன நாதனே
இங்கு எழுந்தருளிய 11 பெருமான்களுள் ஒருவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியை குடையாகப்
பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளதால் குடமாடு கூத்தன் என்று திருமங்கையாழ்வார் குறிப்பது குடைபிடித்த நிகழ்ச்சியேயாகும்.
எனவே குடமாடு கூத்தன் என்று இங்கு எடுத்தாளப்பட்ட இச்சொல் குடைக் கூத்தினையே குறிக்கிறது என்பதில் யாதும் ஐயமில்லை.
———–
30. திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
தமிழ்நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் புருஷோத்தமன் என்ற பெயரில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுந்தான்.
புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை மன்னன்.
மூலவர்–புருடோத்தமன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– புருடோத்தம நாயகி
தீர்த்தம்– திருப்பாற்கடல் தீர்த்தம்
விமானம்– சஞ்சீவி விக்ரஹ விமானம்
காட்சி கண்டவர்கள்– உபமன்யு, வ்யாக்ரபாத முனிவர்
அயோத்தி எம்பெருமானே இங்கு பதினொருவரில் ஒருவராக எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா அயோத்தியில்
உள்ளவன்தான் புருடோத்தமன் என்பதை திருமங்கையாழ்வார் மட்டுமல்ல, பெரியாழ்வாரும்,-வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரைஅயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை
வ்யாக்ர பாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு
மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி
தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி
தந்தார் என்பதும் இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.
———-
31. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
நன்னடுவுள்–திருநாங்கூரின் மத்தியில் அமைந்துள்ளது.
இராவண சம்ஹாரம் முடிந்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த த்ருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு
தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு பிராம்மணர்க்குத் தானம் செய்தார். அதைக் கொண்டு இந்தக்
கோவிலை (அப்பிராம்மணர் தற்போதுள்ளவாறு) கட்டியபடியால் இதற்கு செம்பொன்செய் கோவில் என்று பெயர் வந்ததாயும் கூறுவர்.
மூலவர்-செம்பொன்ரங்கர்
தாயார்- அல்லிமாமலர் நாச்சியார்
தீர்த்தம்– ஹேம புஷ்கரணி, கனக தீர்த்தம்
விமானம்– கனக விமானம்
காட்சி கண்டவர்கள்– ருத்ரன்
செம்பொன் ரங்கர் என்றும் ஹேமரங்கர் என்றும் பேரருளாளன் என்றும் இப்பெருமாளுக்குத் திருநாமங்கள். பெருமாள் பரமபதத்தில்
இருப்பதால் அருளாளன். அதைவிடுத்து இங்குவந்து நம்மோடு இருப்பதால் பேரருளாளன்.
காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த காஸ்யபன் என்னும் அந்தணன் மிக்க வறுமையில் வாடிக்கொண்டிருந்தான். அவன் வறுமையைப் போக்க
எவ்வளவோ முயன்றும் தவம்பல செய்தும் பயனில்லை. பின்னர் பக்தர்களால் இத்தலத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அவன் இங்கு வந்து திருமந்திரத்தை 3
தினங்களில் 32000ம் தடவை உச்சரித்து ஜபம் செய்ய பெருமாள் திருவருளால் பெருஞ்செல்வம் பெற்றான் என்பதுமோர் கதையுண்டு. எனவே இழந்த
செல்வத்தை பெற விரும்புவோருக்கு இத்தலத்தின் எம்பெருமானை சேவிப்பது மிக்க பயனும் வெற்றியும் தரும் என்பதில் ஐயமில்லை.
திருநாங்கூர் வந்த எம்பெருமான்களில் இவர் உறையூரின் (திருக்கோழி) அழகிய மணவாளப் பெருமான் ஆவார். இவரே பேரருளாளன்
என்னும் திருநாமத்தோடு இங்கே எழுந்தருளியுள்ளார். எனவேதான் உறையூரில் உள்ளதைப் போன்றே இங்கும் பெருமாளுக்கு இரண்டு
பிராட்டிகள். இதனைத் திருமங்கையாழ்வாரும்,
பேரணிந் துலகத்தவர் தொழுதேத்தும் பேரருளா ளனெம் பிரானை
வாரணி முலையாள் மலர் மகளோடு மண்மகளுடன் நிற்ப
சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம்பொன் செய் கோயிலினுள்ளே-என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
உறையூரில் கமலவல்லி நாச்சியார், பூமாதேவியுடன் எழுந்தருளியுள்ளார்
இங்கு அல்லி மாமலர் நாச்சியாரும் பூமாதேவியும் எழுந்தருளியுள்ளனர்.
————
32. திருமணிமாடக்கோவில் (திருநாங்கூர்)
ஸ்தயம் ஞானம் அநந்தம் பிரஹ்மம்’ -நந்தா விளக்கே, அளத்தற் கரியாய் -மெய் மதிக்கடல்
அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள்நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணி
மாடக்கோயில் எனப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.
மூலவர்– நாராயணன், நந்தாவிளக்கு கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்- புண்டரீகவல்லித் தாயார்
உற்சவர்–அளத்தற்கரியான்
தீர்த்தம்– இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள்– இந்திரன், 11 சிவன்கள்
விமானம்– ப்ரணவ விமானம்
பத்ரிகாச்ரமத்தில் இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே இங்கு 11 திருமால்களில் ஒருவராக வந்து நின்றார். பத்ரியிலும் நாராயணன் என்ற
பெயரிலேயே அமர்ந்த திருக்கோலம், இங்கும் அதே நிலை. பத்ரிகாஸ்ரமத்தில்தான் ஸ்ரீமந்நாராயணன் திருமந்திரத்தை உபதேசித்
தருளினார். எனவேதான் எமக்கும் அந்த மந்திரத்தை யருளாயென தேவர்கள் இங்கு வந்து வேண்டுகின்றனர். என்பது ஐதீகம். திருமந்திரம் உபதேசித்த
பெருமாளே இங்கு எழுந்தருளியிருப்பதால் இது பத்ரிக்குச் சமமான ஸ்தலம்.
எம்பெருமான், சிவனின் நடனத்தை நிறுத்த, திருநாங்கூரில்பிரவேசித்தபோது இந்த ஸ்தலத்தினருகில் சிவன் நடனம் புரிந்துகொண்டு
இருந்ததாகவும், ஸ்ரீமந் நாராயணனைப் பரமபத நாதனாகக் கண்டபரமேஸ்வரன் தன்னைப்போல் 11 உருக்கொண்டு பெருமாள் காட்சி தர
வேண்டுமென விண்ணப்பம் செய்ய, அவ்விதமே எம்பெருமான் 11 திருக்கோலங்களில் காட்சி தந்து ஒரு சிவனை அழைத்து ஒரு சிவனுக்குள்
செலுத்தி பிறகு இன்னொரு சிவனை அழைத்துச் செலுத்தி இந்த விதமாக 11 சிவன்களை ஒன்றாக்கி நிறுத்தினார் என்பது ஐதீஹம்.
இந்த மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாளே பத்து திருமேனிகளை எடுத்துக் கொண்டு தாம் ஒரு திருமேனியாக வந்ததாயும் கூறுவர்.
திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்த ஸ்தலத்திற்கு முன்புதான் நடைபெறுகிறது
திருக்கோட்டியூர் நம்பி இங்கு விஜயம் செய்துள்ளார். திருமந்திரத்தை உபதேசித்த பத்ரி நாராயணன் இருக்கும் இடமல்லவா இது. திருமந்திரத்தை
இராமானுஜருக்கு உபதேசித்த திருக்கோட்டியூர்நம்பி இங்கு எழுந்தருளியிருப்பது முறைதானே.
—————–
33. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவிடம் (திருநாங்கூர்) வந்தனர்.
பரமபதத்தில் இருந்து வந்ததால் அங்கு எவ்விதம் நித்ய ஸூரிகட்கு காட்சி கொடுக்கிறானோ அதே போல் இங்கும் எழுந்தருளியுள்ளார்.
மூலவர்-வைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான். உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்- வைகுந்த வல்லி
உற்சவர்- மூலவருக்குரைத்த அதே பெயர்கள்
தீர்த்தம்– லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா
விமானம்– அனந்த ஸத்ய வர்த்தக விமானம்
காட்சி கண்டவர்கள்-உபரிசரவசு, உதங்கமஹாரிஷி
பரமபதத்தில் உள்ள விரஜா நதியே இங்கு விரஜை தீர்த்தமாக உள்ளது
——–
34. திருவாலி – திருநகரி
திருவாலி-
ஒரு காலத்தில் ஆலி நாடு என்று ஒரு குறுநிலப் பகுதி மிகப் புகழ் வாய்ந்ததாக இருந்தது. பில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட ஆரண்யத்தை
ஒட்டியதாக இப்பகுதி அமைந்திருந்தது.
திருமால் நரசிம்ம அவதாரம் செய்தபோது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருக்கக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பூலோகம்
மேலும் அழியாது காக்கப்படவேண்டும்
திருமால் நரசிம்ம அவதாரம் செய்தபோது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருக்கக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பூலோகம்
மேலும் அழியாது காக்கப்படவேண்டும் என்று பிராட்டியை வேண்ட, பிராட்டி எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். அமர்ந்த தேவியை எம்பெருமான் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதால் திருவாலி (திருவாகிய இலக்குமியை ஆலிங்கனம் செய்தமையால்) ஆயிற்று.
குலசேகராழ்வார் ஆலி நகர்க்கதிபதியே அயோத்தி யெம்மரசே ராகவனே தாலேலோ என்று மங்களாசாசனம்
இந்த ஆலிநாட்டைத் தலைநகரமாகக் கொண்டுதான் திருமங்கை குறுநில வேந்தனாய்த் திகழ்ந்தார். எனவேதான் அவருக்கும் ஆலிநாடான்
என்றும் பெயருண்டாயிற்றுஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும்,சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலுமே இப்போது
திருவாலியில் உள்ள அடையாளங்களாகும்
மூலவர்-அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர்- திருவாலி நகராளன்
தாயார்– பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தீர்த்தம்- இலாக்ஷ்ண புஷ்கரணி
விமானம்– அஷ்டாச்சர விமானம்
காட்சி கண்டவர்கள்– திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் வளர்க்கப்பட்ட இடம்.
இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம ஷேத்ரம் என்று பெயர் லட்சுமி தேவியுடன் நரசிம்ம ரூபமாய் எழுந்தருளியிருப்பதால் இப்பெயருண்டாயிற்று.
இதனையும் சேர்த்து இவ்விடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள் உண்டு. அவைகள் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள் என்று இன்றும்
வழங்கப்படுகின்றன.
1. குறையலூர் – உக்கிர நரசிம்மன்
2. மங்கை மடம் – வீர நரசிம்மன்
3. திருநகரி – யோக நரசிம்மன்
4. திருநகரி – ஹிரண்ய நரசிம்மன் (திருநகரியில் இரண்டு நரசிம்மர்கள் சன்னதிகள் உள்ளன)
5. திருவாலி – லட்சுமி நரசிம்மன்
திருமங்கைக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று பிராட்டி எம்பெருமானுக்கு விடாது வேண்டுகோள் விடுக்க அவ்வாறாயின் திருவாலியில்
தவஞ்செய்து கொண்டிருக்கும் பூர்ணமஹரிஷியின் புத்திரியாகப் போய் அவதாரஞ்செய் நான் வந்து திருமணக் கோலத்தில் உன்னை ஏற்றுக்கொள்ளும்
போது திருமங்கைக்கு அருள் பாலிப்போம் என்றார்.0 பூர்ண மஹரிஷி தவம் புரிந்தமையால் பூர்ண புரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.
எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை
மணம் புரிந்து கொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது திருமங்கையாழ்வார் மறித்து
வழிப்பறி நடத்த, எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தை உபதேசம் செய்தார்.
எம்பெருமான் பத்ரியில் (பதிரகாசிரமத்தில்) தானே ஆச்சாரியனுமாய் தானே சீடனுமாய் நின்று திருமந்திர உபதேசம் செய்தார். அந்தக் குறைதீர
ஸ்ரீபதரியின் நாராயணப் பெருமாளே ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமாளாக இங்கு எழுந்தருளி திருமங்கை மன்னனுக்கு திருமந்திர உபதேசம் செய்து
அதற்கு எல்லை நிலமான அர்ச்சாவதாரங்களையும் காட்டிக்கொடுத்து திருமங்கை யாழ்வாரையும் ஆட்கொண்டார்.
எட்டிழையாய், மூன்று சரடாய், இருப்பதொரு மங்கள சூத்திரத்தை (ஓம் நமோ நாராயணா என்று 8 எழுத்தாக) ஓம், நமோ, நாராயணாய என்று
மூன்று சரடாய் திருமங்கையாழ்வாருக்கு காட்டின இடமாகையால் இதனைத் திருமணங்கொல்லை என்று பெரியோர் அருளிச் செய்வர். இதன் பெருமையை
மணவாள மாமுனிகளும் இதுவோ திருமணங்கொல்லை. இங்கேதான் வெட்டுங் கலியன் வாள் வலியால் வெறுட்டி நெடுமாலை எட்டெழுத்தும் தட்டிப் பறித்த இடம் என்று ஈடுபட்டு அனுபவிப்பர்.
இங்கு (வேதராஜபுரத்தில்) ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல் நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து
திருவேடுபறி நடத்தி திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வேடுபறி மண்டபம் என்று வேடுபறி (எம்பெருமானிடம்
திருமங்கை கொள்ளையிட்ட இடத்தில்) நடந்த இடத்தில் ஒரு மண்டபமும் உள்ளது.
பத்ரிகாச்ரமத்துக்கு அடுத்தபடியாக எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இவ்விடத்து திருமந்திர உபதேசம் செய்ய
எழுந்தருளியதால் இத்தலம் (திருவாலி) பத்ரிகாச்ரமத்துக்கு சமமானதாய்க் கருதப்படுகிறது.
———-
திருநகரி
திருநகரி அமைந்துள்ள இடம் பில்வாரண்யம் என்று புராணம் கூறுகிறது. பில்வாரண்யத்தின் எல்லைகள் கீழ்க்கண்டவாறு பேசப்படுகிறது.
காவிரிக்கு வடக்கு, நூபுர கங்கை என்னும் கொள்ளிடத்திற்கும் உரோமச ஷேத்ரமாகிய சீர்காழிக்கும் சமுத்திரத்திற்கும் மத்தியில் பில்வாரண்யம்
அமைந்துள்ளது.
காவேர்யாற்ச் சேத்தர தீரே நூபுராயஸ்ச தட்சிணே
ரோமஸ் சோரு தன்வதார் மத்யே பில்வாரண்ய மிதிச்ருதம்
பில்வ முலஸ்திதளொ பூத்வா நரசிம்மஸய சன்னிதென
ஐ யேதஷ்டாஷரம் மந்தரம் மந்திரசித்தம் அவாப்துயாது – என்பது கருட புராணம்.
பில்வாரண்யம் அல்லது வில்வாரண்யம் என்று அழைக்கப்படும் இப்பகுதி பஞ்ச நரசிம்ம ஷேத்ரங்களுள் ஒன்றாகும். இங்கு யோக நரசிம்ம
மூர்த்தி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீபுரி யென்றும் ஆலிங்கன புரி யென்றும் பில்வாரண்ய ஷேத்ரம் என்றும் இதற்குப் பெயர்.
கிரேதாயுகத்தில், பிரம்மாவின் 5வது புத்திரனான கர்த்தம பிரஜாபதி திருமாலின் ஸாயுஜ்யம் (மோட்சம்) வேண்டுமென இவ்விடத்து
திருமாலைக்குறித்து கடுந்தவம் செய்தார். இவருக்கு அருள்வதில் எம்பெருமான் அதிகமான கால தாமதம் காட்டவே பக்தனுக்கு விரைவில் காட்சி கொடுக்க
வேண்டும் என்று பிராட்டி எம்பெருமானை வேண்ட, அவரோ அதற்குச் சற்றும் செவி சாய்க்காவண்ணம் மேலும் பொறுமை காட்டி நின்றார். இதைக்
கண்டு சினந்த பிராட்டி (பக்தனுக்கு அருள்வதில் தான் கொண்டுள்ள பரிவு என்னும் தாய் மனோபாவத்தில்) வைகுண்டத்தை விட்டு பூவுலகுவந்து
இவ்விடத்து அமைந்திருந்த ஒரு அழகிய தாமரைப் பொய்கையில் ஒரு அழகிய தாமரை மலருக்குள் தன்னை மறைத்துக் கொள்ள திருமகள் இல்லாத
வைகுந்தம் பொலிவு குன்றியது.
திருமால் திருமகளைத் தேடி எங்கும் அலைந்து காணாமல் இவ்விடம் வந்து சேர்ந்தார். லட்சுமிக்குத் தாமரை மிகவும் உவப்பாதலால் ஒரு வேளை
இங்கு மறைந்திருக்கலாமென்று தாமரைகளை உற்று நோக்கினார்.
எல்லாத் தாமரைகளும் இதழ் விரிக்காது ஒரே மாதிரி மொட்டாக இருக்கக்கண்ட எம்பெருமான் தனது வலது கண்ணை மூடி இடது கண்ணைத்
திறந்தார். (திருமாலின் வலது கண் சூரியன் இடது கண் சந்திரனல்லவா) எல்லா தாமரைகளும் சந்திரன் வந்துவிட்டது. சந்திர ஒளி வந்துவிட்டது என்று
எண்ணி அலர்ந்துவிட்டது. அதில் ஒரேயொரு தாமரை மட்டும் மலராது நிற்க இதில்தான் ஸ்ரீஇருக்க வேண்டுமென நினைத்த எம்பெருமான் ஓடி வந்து
தாமரை புஷ்பத்திற்குள் இருந்த ஸ்ரீயை ஆலிங்கனம் செய்துகொண்டார்.
எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. தமிழில் திருநகரியானது. (ஏற்கனவே ஒரு ஆலிங்கனம் நடந்ததும்
இவ்விடத்தில்தான் (திருவாலியில்) எனவே இரண்டும் சேர்ந்து வரலாற்றுப் பின்னணியில் ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி என்றாயிற்று.
இத்திருக்கோலத்தைக் கண்ட கர்த்தம ப்ராஜாபதி இதுதான் தருணம் என்று இருவரையும் விடாதே பற்றிக்கொண்டு மோட்சமளிக்க வேண்டினார்.
எம்பெருமான் ப்ரம்ம புத்திரனை நோக்கி உனக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்றும், அருளி
வேறுயாதாகிலும் வேண்டிக்கொள் என்று சொல்ல, இதே திருக்கோலத்தில் இங்கேயே எழுந்தருளியிருக்குமாறு வேண்ட அஷ்டாச்சர விமானத்துடன்
எழுந்தருளினார்.
திரேதாயுகத்தில் இவரே உபரி ஸர வஸு என்னும் மன்னனாக பிறந்தார். (வசு என்பது பெயர். ஸரம் – என்றால் அலைதல் உபரியென்றால் ஆகாய
மார்க்கம். ஆகாய சஞ்சாரம் செய்பவர் என்பது பொருள்) இவர் மிகச்சிறந்த தபஸ்வியாகவும், கடுமையான பக்தனாகவும், பெரிய
பராக்ரமசாலியாகவும் விளங்கி தேவர்களுக்காக இந்திரனுக்கு போரில் உதவி அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்து இந்திரனிடமிருந்து தர்சனம் என்னும்
சக்தியினையும், அங்கஜம் என்னும் தோள்வளையினையும் பரிசாகப் பெற்றார்.
இவர் ஒரு சமயம் விமானத்தில் பறந்து வரும்போது இந்த ஸ்ரீபுரிக்கு மேலாக வரும்போது மேற்கொண்டு செல்லமுடியாமல் விமானம் தடைபட்டு நிற்க
இவ்விடத்தின் மகிமையினையும், விமானம் பறக்காது தடைபட்டமைக்கான காரணத்தையும் அறியுமாற்றான் இவ்விடத்திலேயே திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்யலாயினார். எம்பெருமான் பிரத்யட்சமானதும் இவருக்குப் பூர்வ ஜென்மம் புலப்படவே, எம்பெருமானைப் பலவாறு போற்றித் துதித்து முக்தியளிக்க வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். இதன் பிறகு உபரி ஸர வசு இக்கோவிலுக்கு பல கைங்கர்யங்களை செய்து நெடுங்காலம் இங்கு தங்கியிருந்து சென்றார்.
துவாபுரயுகத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ககூஸ்தபட்டினம் என்னும் நாட்டையாண்ட வஜ்ரகோஷன் என்னும் மன்னனுக்குப் புத்திரப்
பேறில்லை. இவருக்குச் சங்க பாலன் என்னும் ஒரு மந்திரி இருந்தார். அவருக்கு வைரமேகன், நிதிபாலன் என்ற இரண்டு புத்திரர்கள் இருந்தனர்.
வஜ்ரகோஷன் தனக்குப் புத்திரனில்லாமையால் சங்க பாலனின் முதல் புத்திரன் வைரமேகனை நாட்டின் இளவரசனாக்கி, நிதிபாலனை
மந்திரியாக்கினான். இவ்விதம் ராஜ்ய பரிபாலனப் பொறுப்புகளைத் தமது புதல்வர்கள் ஏற்றுக் கொண்டபடியால் சங்கபாலன் திக்விஜயம்
மேற்கொண்டான்.
திக் விஜயத்தின் போது இந்த லட்சுமிபுரியாகிய வில்வாரண்ய மகாத்மியத்தைக் கேள்விப்பட்டு இங்கு தங்கி இவ்விடத்தே மஹாரிஷிகளை
வைத்து பெரிய யாகம் செய்ய, யாகத்தின் அவிர்ப்பாகத்தை ஏற்க திருமால் நேரில் தோன்ற சங்கபாலன் தனக்கு (ஸாயுஜ்யம்) மோட்சம் வேண்டுமென்று
கேட்க அது கலியுகத்தில்தான் என்று எம்பெருமான் கூற அவ்வாறாயாயின் இதே கோலத்தில் எம்பெருமான் இங்கு நித்யவாஸம் செய்ய வேண்டுமென்றும்
இவ்விடத்தில் ஊரும், நாடும், நகரமும் உண்டாக வேண்டும் என்று பிரார்த்திக்க, அவ்வாறே ஆகட்டும் என்று கூறி கூப்பிடு தூரத்தில் கடல்
இருந்தமையால் எம்பெருமான் மேற்கு நோக்கி நின்றருளினார்.
இந்த கலியுகத்தில் திருநகரிக்கு அருகாமையில் உள்ள குறையலூரில் சோழனின் ஆளுகைக்குட்பட்ட சேனைத் தலைவனுக்கு ஒரு புத்திரன்
பிறந்தார். இவரது திருமேனி நீலவண்ணமாயிருந்ததால் இவருக்கு நீலமேகன் (நீலன்) என்றே பெயரிட்டழைத்தனர்.
இளம் வயதில் காமவேட்கையில் ஈடுபட்டுத் திரியும் ஸ்திரிலோலராக இருந்து வருங்காலையில், திருவெள்ளக்குளத்தில் அப்சரஸாக வந்து
திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைக் கேள்விபட்டு அவரைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேட்க, குமுதவல்லியோ திருவிலச்சினை
பெற்றுதுவாதச திருநாமங்கள் அணிந்த பாகவதனுக்கேத்தான் வாழ்க்கைப்பட முடியும் என்று சொல்ல, அவ்விதமே பரமபாகவதனாக மாறி வர, இவரை நோக்கிய குமுதவல்லி எனக்கு ஒரு விரதமுண்டு, அதாவது ஒரு வருட காலத்திற்கு தினமும் ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கட்கு அன்னதானம் (ததியாரதனம்) செய்ய வேண்டுமென்றும் இவ்விதம் முடிந்த பின்னரே நான் தங்களுக்கு பத்தினியாக முடியும் என்று கூற நீலமேகனும் அதற்கியைந்து ததியாரதனத்தின் பொருட்டு பொருள் எல்லாஞ்செலவு செய்து கப்பம் கட்ட பணமில்லாதபோது சோழனால் நறையூரில் (நாச்சியார் கோவிலில்) சிறைவைக்கப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வாரும், மாதனம் தருகிறோம் என்று சொல்லி அவ்வண்ணமே வேகவதி நதிக்கரையில் தனம் கண்டெடுத்து மன்னனுக்கு கப்பம் கட்டிவிட்டு, மீண்டும் ததியாரதனம் செய்து வரும்போது மீண்டும் பொருளின்றிப் போகவே, வழிப்பறியில் இறங்கலானார்.
இந்நிலையில் வைகுண்டத்தில், தனது பக்தன் படும்பாட்டைக் கண்டு மனமிரங்கி பிராட்டி எம்பெருமானை நோக்கி நீலனுக்கு உடனே
அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்க, சரி என்று ஒப்புக் கொண்டு, திருமகளை பூர்ண மஹரிஷியின் புத்திரியாக வளரக் கட்டளையிட்டு
திருமணப் பருவம் வந்துள்ளபோது ஆலிநகருக்கு மணவாளனாகவந்து திருமணம் முடித்து பொற்குவியல்களுடன் திருநகரி நோக்கிச் சென்று
கொண்டிருக்க ஏதோ பெரிய திருமணக் கோஷ்டி செல்வதைக் கேள்வியுற்று திருமங்கை வேதராஜ புரத்திற்கே வந்து எம்பெருமானை வழி மறித்து
பொருட்களைக் கொள்கையிட்டு அதை ஒரு மூட்டையாகக் கட்டித் தூக்க முயன்றபோது, தன் சக்தி முழுவதும் பிரயோகித்ததில், தூக்க முடியாமல்
போக, இவன் ஏதோ மந்திரம் போட்டுவிட்டான் என்று தன் வாளினை உருவி, இம்மூட்டையைத் தூக்க முடியாமல் போனதற்கான மந்திரத்தை
எனக்கு கூறு என்று கேட்க, வா சொல்கிறேன் என்று அழைத்து நீலமேகனின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தைக் (எட்டெழுத்து மந்திரத்தை) கூற
அவருக்கு ஞானமும் பூர்வ ஜென்மமும் புலப்பட திருமங்கை ஆழ்வாராகி (குமுதவல்லி என்னும் மங்கையால் எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்தமையால்
மங்கையாழ்வாரானார்) திக்விஜயம் மேற்கொண்டு, திவ்ய தேசங்களைச் சேவித்து மங்களாசாசனம் செய்து இறுதியில் திருக்குறுங்குடி சென்று திருவரசு
எய்தினார்.
வயலாலி மணவாளனும், திருமகளும் பக்தனின் பொருட்டு இவ்விரண்டு ஸ்தலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டமையால் திருமங்கையின்
வரலாறும் இவ்விரண்டு திவ்ய தேசங்களுடன் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி ஆயிற்று.
மூலவர்–வேதராஜன் (வயலாலி மணவாளன்) வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகம்.
உற்சவர்- கல்யாண ரங்கநாதன்
தாயார்- அம்ருத வல்லி
காட்சி கண்டவர்கள்- திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வாரால் பூஜிக்கப்பட்ட சிந்தனைக்கினியான் என்னும் விக்ரகம் இராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு
இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம்
என்றே அழைக்கப்படுகிறது.
திருமங்கையாழ்வார் திருக்குறுங்குடியிலிருந்தபோது தம்மைப் போலவே ஒரு பிம்பம் (தங்கத்தால் விக்ரகம்) செய்து தான் அப்பிம்பத்தின்
நேரில் நின்று கொண்டு வா என்று அழைக்க, அப்பிம்பம் நடந்து வர அதனைக் கட்டித் தழுவி தம் சக்தி முழுவதையும், அப்பிம்பத்தில்
செலுத்திவிட்டு அதன் பிறகே திருமங்கையாழ்வார் திருவரசு (மோட்சம்) எய்தினார். இப்பிம்பம்தான் இப்போது திருநகரியில் வைக்கப்பட்டு நித்ய
பூஜைகளும் நடைபெறுகின்றன.
குமுதவல்லியாரின் கோரிக்கைப்படி ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தினந்தோறும் ததியாரதனம் செய்த இடம் இன்றும் மங்கை மடம் என்றே
அழைக்கப்படுகிறது. திருக்குறையலூரிலிருந்து வெகு அருகாமையில் உள்ளது
நம்மாழ்வாரின் அவதாரஸ்தலம் ஆழ்வார் திருநகரியாயிற்று இவரின் அவதாரஸ்தலம் திருவாலி திருநகரியாயிற்று.
ஆண்டாள் மனத்துக்கினியானிடம் ஈடுபட்டார். இவரோ சிந்தனைக்கினியானிடம் ஈடுபட்டார்.
————–
35. திருத் தேவனார்த் தொகை (திருநாங்கூர்)
இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர்-ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க (ஸ்ரீமந் நாராயணன் 11 மூர்த்திகளாக
திருநாங்கூருக்கு வந்தபோது) தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் சபை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.
மூலவர்-தெய்வநாயகன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்– கடல் மகள் நாச்சியார்
உற்சவர்- மாதவப் பெருமாள்
தாயார்- மாதவ நாயகி
தீர்த்தம்– சோபன புஷ்கரணி, தேவஸபா புஷ்கரணி
விமானம்-சோபனவிமானம்
காட்சி கண்டவர்கள்- வசிஷ்டர்
திருநாங்கூருக்கு எழுந்தருளின 11 எம்பெருமான்களில் இவர் திருவிடவெந்தை எம்பெருமான் ஆனார்.
உற்சவ மூர்த்தியின் பெயரால் மாதவப்பெருமாள் கோவில் என்றே இத்தலம் அழைக்கப்படுகிறது. மூலவருக்குண்டான தெய்வநாயகன் என்னும்
திருநாமம் 108 திவ்யதேச எம்பெருமான்களில் நடுநாட்டுத் திருப்பதியான் திருவஹிந்திரபுரத்துக்கும் பாண்டிநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான
வானமாமலைக்கும் (திருச்சீரவரமங்கை) உண்டு.
இதனால்தானோ என்னவோ இத்தலத்து மூலவர் திருநாமத்தினின்றும் உற்சவரின் திருநாமமான மாதவப் பெருமாள் பெயராலேயே இத்தலம்
வழங்கப்படுகிறது. திருமங்கையும் தமது பாசுரத்தில் தடமண்ணி தென்கரை மேல் மாதவன்றானுரையுமிடம் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
வசிட்டர் இத்தலத்து எம்பெருமானை குறித்து தவமிருந்து பெருமாளைக் கண்டதாக ஐதீஹம்.
கடல் மகள் நாச்சியார் என்று அழகிய செந்தமிழ் சொல்கொண்ட நாச்சியார் ஆவார், இத்தலத்துப் பிராட்டி.
————————
36. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
திருத்தெற்றியம்பலம் என்றால் இங்கு பலருக்கும் தெரியாது.-பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்றால் அனைவருக்கும் தெரியும்.
மூலவர்-செங்கண்மால் ரங்கநாதர். லட்சுமிரங்கர் நான்கு புஜங்களுடன் சயன திருக்கோலம். கிழக்கு நோக்கிய சயனம்.
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்– சூர்ய புஷ்கரணி
விமானம்– வேதவிமானம்
காட்சி கண்டவர்கள்- நாச்சியார், அனந்தாழ்வார்
நான்கு புஜங்களுடன் ஆதிசேடன் மீது சயன திருக்கோலத்தில் இருக்கும் இப்பெருமான் பார்ப்பதற்கு மிகவும் பேரழகு வாய்ந்தவர்.
செங்கண்மால் என்ற பதத்திற்கு ஏற்ப கண்ணழகு மிக்கவர் இந்தப் பெருமாள்.
திருநாங்கூர் வந்த பதினொரு எம்பெருமான்களில் இவர் ஸ்ரீரங்கத்து ரெங்கநாதனாவார். அதனாற்றான் அரங்கனைப்போல (ஆதிசேடன் மேல்
சயனித்து) பேரழகு வாய்ந்தவராகக் காணப்படுகிறார்.
இந்தக் கோயிலின் புராணக்கதை, அருகிலுள்ள திருமணிகூடம் கோயிலின் புராணக்கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள் ஒரு பொதுவான புராணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.கடல் கடைந்த பிறகு, அசுரர்களுக்கு அமிர்தம் கொடுக்காமல் இருக்க, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை விநியோகிக்க ஆரம்பித்தார். என்ன நடக்கிறது என்பதை அசுரர்கள் உணர்ந்தபோது, அசுரர்களில் ஒருவன் (அசுரப் பெண் சிம்ஹிகாவின் மகன்) தேவர் வேடமிட்டு அமிர்தத்திற்காக தேவர்களுடன் அமர்ந்தான். இதை கவனித்த சூர்யனும் சந்திரனும் இதை மோகினியிடம் சுட்டிக் காட்ட, அவள் பானையில் இருந்த கரண்டியைத் தட்டினாள். இதன் விளைவாக, அசுரனின் தலை மற்றும் உடல் பிளவுபட்டு, ராகு மற்றும் கேதுவாக மாறியது. இதற்கு சூரியனும் சந்திரனும் காரணம் என்பதால், இன்றுவரை ராகு கிரகணங்களை ஏற்படுத்தி அவர்களை பழிவாங்குவதாக கருதப்படுகிறது!சூரியனும் சந்திரனும் பயந்து, அவர்கள் உருவாக்கிய இரண்டு குளங்களில் ஒளிந்து கொண்டனர் – சூரிய புஷ்கரிணி மற்றும் சந்திர புஷ்கரிணி – (அவை இந்த கோவில் மற்றும் அருகிலுள்ள திருமணிகூடம் கோவில்.) விஷ்ணு இங்கு வந்து சூரியனை ஆசிர்வதித்தார்.தசாவதாரத்தின் ஒரு பகுதியாக, வராஹ அவதார காலத்தில், காலகேயபுரத்தில் ஹிரண்யாக்ஷனை வதம் செய்வதற்காக விஷ்ணு வைகுண்டத்தை விட்டு வெளியேறினார். ஆனால், ஸ்ரீதேவியும், பூதேவியும் அவரை விட்டு பிரிந்ததை எண்ணி கவலைப்பட்டனர். எனவே இறைவன் இங்கு ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் படுத்து, தேவிகளை தன் பக்கத்தில் உட்கார வைத்து, ஹிரண்யாக்ஷனைக் கொல்லும் போது அவர்களை இங்கே இருக்கச் சொன்னார்.11 நாங்கூர் கோவில்களில் பெருமாள் சயன கோலத்தில் இருக்கும் ஒரே கோவில் இதுதான். மேடை மற்றும் கோயில் (மலையாளத்தில்) என்று பொருள்படும் “அம்பலம்” என்ற பட்டம் பெற்ற தமிழ்நாட்டின் ஒரே பெருமாள் கோயிலும் இதுதான். தேற்றி என்பது உயர்ந்த இடத்தைக் குறிக்கிறது. இக்கோயில் மேடு போன்ற உயர்ந்த மட்டத்தில் அமைந்திருப்பதால் இத்தலம் திருத்தேற்றியம்பலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், பொதுவாக சயன கோலத்தில் பெருமாள் இரண்டு கரங்களுடன் மட்டுமே காட்சி தருகிறார். இக்கோயிலில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்-தமிழ் மாதமான தையில் (ஜனவரி-பிப்ரவரி), நாங்கூரில் உள்ள பத்ரிநாராயணப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது, இங்கு 11 நாங்கூர் திவ்ய தேசத்தின் ஒவ்வொரு பெருமாள் மற்றும் கருடன் இங்கு வந்து சேரும். ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய திருவிழா இது.நாங்கூரில் தங்கும் வசதிகள் இல்லை. ஒழுக்கமான பட்ஜெட் மற்றும் இடைப்பட்ட தங்குமிடங்களுக்கு அருகிலுள்ள இடம் மயிலாடுதுறை ஆகும். சமீபத்தில், சீர்காழியைச் சுற்றி சில ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகள் வந்துள்ளன. தொடர்பு கொள்ளவும் : ஆர். நாராயணன் பட்டர்/ ராஜகோபாலன் பட்டர்: 04364 275689/ 94439 85843/87789 87034
—————-
37. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
மூலவர்-வரதராஜப்பெருமாள் (கஜேந்திரவரதன்) மணிக்கூட நாயகன் என்றும் சொல்வர். கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) பூ தேவி
தீர்த்தம்- சந்திர புஷ்கரணி
விமானம்- கனகவிமானம்
காட்சி கண்டவர்கள்- பெரிய திருவடி, சந்திரன்
திருநாங்கூருக்கு வந்த 11 எம்பெருமான்களில் இவர் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆவார்.
பெரிய திருவடி, சந்திரன், இவ்விருவருக்கும் பெருமாள் இங்கே காட்சி கொடுத்ததாக ஐதீஹம்.
—————
38. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)
திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணியால் உண்டாயிற்று. ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே
ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று.
முன்னொருகாலத்தில் சூர்ய வம்சத்தைச் சார்ந்த துந்துமாரன் என்னும் மன்னனுக்கு சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு 9 வயதில்
மரண கண்டமென்றும் அதிலிருந்து மீள முடியாதென்றும் சாஸ்திர வாதிகளால் தெரிந்த மன்னன் அதற்குப் பிராயசித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுகினான். அவர் இவ்விடத்திற் சென்று (ஆயுள் விருத்தி) மந்திரஞ் ஜெபித்து மரண கண்டத்தை வெல்லுமாறு கூறினார்.
எனவே இவ்விடம் வந்த சுவேதன், இங்கு தவம் செய்து கொண்டிருந்த மருத்த முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து மந்திரப் பயிற்சிப் பெற்று
தடாகத்தின் தெற்கில் வில்வ மரத்தடியில் வடக்கு முகமாயமர்ந்து ஆயுள்விருத்தி மந்திரத்தை ஜெபித்து (ஐப்பசிமாதம் வளர்பிறை தசமி முதல்,
கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி வரை ஒரு மாதம்) கடுந்தவமியற்றசிறுவனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு அவனுக்கு காட்சி கொடுத்து மரண
கண்டத்தை இல்லாததாக்கி மார்க்கண்டேயனைப் போல நீடித்த ஆயுளை நல்கினார்.
இவ்விதம் சுவேதன் பகவானின் அருள் பெற்றதால் ஸ்வேத புஷ்கரணி என்றாகி தமிழில் வெள்ளக்குளம் ஆயிற்று.
ஸ்வேத வத்ஸ சிரஞ்சீவிந் ஜிதோ ம்ருத்யுஸ்தவயா அதுநா
ம்ருக்யுஞ்ஜயேன மந்த்ரேண ப்ரிதோஸ்மி தவஸி வ்ரத
தீர்க்கமாயு ப்ரதாஸ்யாமி கல்பாந்தஸ் தாயி தேந்நாப
விநோசோ ந பவேத்தாத மார்க்கண்டேயே ஸமோவ – என்பது புராணம்.
முதலில் திருமலைவேங்கடவனை அண்ணா என்று விட்டு அதற்குப் பிறகு இப்பெருமாளை அண்ணா என்றதால் அவருக்கு இவர் அண்ணனானார். அதாவது வேங்கடவனை அண்ணா என்றழைத்த இவர் அதற்குப் பிறகு தமது மங்களாசாசனம் முற்றிலும் வேறு எவரையும் அண்ணா என்றழைக்கவில்லை.
திருவேங்கடத்திற்குப் பிறகு இவரை மட்டுமே அண்ணா என்றதால் அந்த அண்ணாவுக்கு இவர் அண்ணனானார்.
அண்ணன் குடி கொண்ட கோவில் அண்ணன் கோவிலல்லவா.அதனால் தான் திருவெள்ளக்குளத்திற்கு அண்ணன் கோவில் என்றும் பெயருண்டாயிற்று.
அண்ணன் கோவில் என்னும் சொல்லே இங்கு பிரதானமாக விளங்கி வருகிறது.
அவர்மேல் மங்கையுறை மார்பா என்று நம்மாழ்வார் வேங்கடவனை விழிக்கிறார்.
திருமங்கையாழ்வார் இப்பெருமானை பூவார் திருமகள் புல்கிய மார்பா என்றழைக்கிறார்.
அதாவது வேங்கடத்து ஸ்ரீனிவாசனுக்கும் பிராட்டிக்கும் உள்ள தொடர்பை வெள்ளக்குளத்து அண்ணாவுக்கு வழங்குகிறார்.
அம்மட்டுமன்றி இப்பெருமாளைத் திருமங்கையாழ்வார் வேடார் திருவேங்கடமேய விளக்கே என்று விளித்து வேங்கடவனுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பை விரிவுபடுத்துகிறார்.
மேலும் வேங்கடவனை மங்களாசாசனம் செய்து முடிக்கும்போது“கலியன் சொன்ன மாலை வல்லாரவர் வானவராகுவார் தாமே” என்று சொல்லி முடித்தார்.
இவ்வூரிலிருக்கும் அண்ணாவைச் சொல்லும்போது
“கலியன் சொன்ன மாலை வல்லரென வல்லவர் வானவர் தாமே” என்று கூறி அவருக்கிவர் அண்ணா என்றே தலைக்கட்டி விடுகிறார்.
மூலவர்-அண்ணன் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார்- அலர் மேல் மங்கை
உற்சவர்- ஸ்ரீனிவாசப் பெருமாள்
உற்சவர் பத்மாவதித் தாயார் பூவார் திருமகள்
விமானம்- தத்வத் யோதக விமானம்
காட்சி கண்டவர்கள்- சுவேதன்
திருமலையில் பெருமாளுக்குரிய திருநாமமான ஸ்ரீனிவாசன் என்பதும் பிராட்டியின் திருநாமமான அலர்மேல் மங்கைத் தாயார் என்பதும். அதே
பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்ய தேசம் 108 இல் இது ஒன்றுதான்.
வேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது ஐதீஹமாவதால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு
மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் பகர்வர்.
இந்த ஸ்வேத புஷ்கரணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து செல்ல தேவகுலப் பெண்கள் இங்குவருவது ஒரு காலத்தில்
வழக்கமாயிருந்ததாம். அவ்வாறு ஒரு சமயம் வந்த தேவகுலப்பெண்களில் மானிடப் பார்வைக்கு இலக்காகி இங்கேயே நின்று விட்ட
குமுதவல்லியைத்தான் திருமங்கையாழ்வார் திருமணம் செய்ய விழைந்தார்.
எனவே இத்தலம் குமுதவல்லியாரின் அவதார ஸ்தலம் என்பதோடுமட்டுமின்றி திருமங்கையாழ்வாரை இவ்வுலகிற்கு அளித்தமைக்கும் எல்லை நிலமாயிற்று.
அதாவது நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாகத் திகழ்ந்த திருமங்கை குமுதவல்லியைப் பற்றிக் கேள்விப்பட்டு பெண் கேட்டு வர,
குமுதவல்லியார் ஒவ்வொரு நிபந்தனையாக விதித்து நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் திருமணம் என்று சொல்ல இவரும் நிபந்தனைகளை
நிறைவேற்ற ஈடுபட்டு, இறுதியில் ஆழ்வாரானார். ஒரு மங்கையினால்ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.
திருமலையைப் போன்றே இங்கும் பிரம்மோத்ஸ்வம் புரட்டாசி மாதமே நடைபெறுகிறது.
இப்பகுதி பலாசவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
——————–
39. திருப்பார்த்தன் பள்ளி
அர்ஜூனன் இவ்விடத்திற்கு வந்தபோது அதிகமான தாக வேட்கை யுண்டாக இங்கே தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்தை நோக்க அதில் இருந்த நீரும் வற்றிப்போனது.
இவ்வாறு தண்ணீர் வற்றிப்போவதற்கு என்னவென்று அகத்தியர் ஆராய்ந்து ஞான திருஷ்டியில் இது கண்ணனுடைய வேலையென்று தெரிந்து
கொண்டு, அர்ஜூனனை நோக்கி அர்ஜூனா நீ எப்போதும், எந்த உதவி வேண்டுமானாலும் உன் ஆபத்பாண்டவனான கண்ணனையல்லவா அழைக்க
வேண்டும் என்று கூற, அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம்
கொடுத்தான்.
அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது. தாகந்தீர்த்த விஜயன் கண்ணனால் இவ்விடத்து
சிறிது ஞானோபதேசமும் பெற்றான்
பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.-பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.
மூலவர்–தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர்– பார்த்த சாரதி
தாயார்- தாமரை நாயகி
தீர்த்தம்– கட்க புஷ்கரணி
விமானம்– நாராயண விமானம்
காட்சி கண்டவர்கள்- அர்ஜூனன், வருணன், பதினொரு வடிவமெடுத்த சிவன்.
வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால்
பார்த்த சாரதி பள்ளியென வழங்கி பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.
அகத்தியர், கௌதமர், பரத்வாஜர் போன்றவர்கள் இவ்விடத்தே தவம் செய்தனர்.
கண்ணனிடமிருந்து கத்தியைப் பெற்றுக் கீறி தீர்த்தம் உண்டாக்கியதால் (கட்க-கத்தி) கட்க புஷ்கரணியாயிற்று.
அர்ஜூனனுக்கும் இவ்விடத்து ஒரு கோவிலிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.
அகத்தியமுனிவர் நடந்தாய் வாழி காவேரி என்று காவிரித்தாயைத் தரிசித்துக்கொண்டே அதன் பாதையில் நடந்து வந்தவர் இந்த இடத்தைத்
தாண்டிச் செல்லாது இங்கேயே காவிரி தரிசன பயணத்தை முடித்துக் கொண்டு தங்கிவிட்டார். ஆங்காங்கே அகத்தியருக்கு சிறிய சிறிய கோவில்கள்
அமைந்திருந்தாலும் இங்கிருப்பதுதான் கடைசியானதாகும்.
பார்த்த சாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன்
உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார்.
யாக்ஞவல்ய ஸ்ம்ருதி” என்ற வடநூலும் இத்தலத்தைப் பற்றி பேசுகிறது
இத்தலம் பலாசவனச்ஷேத்திரம், புரசங்காடு என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
பலாசவனம் என்பதும் இத்தலம் உள்ள பகுதியோடு முடிவடைகிறது.
இங்குள்ள கட்க புஷ்கரணி கங்கா தீர்த்தம் என்றும், விஷ்ணு பாத தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
தசரதன் இவ்விடத்தில் ஒரு யாகஞ்செய்ததாகவும் ஐதீஹம்.
பதினொரு பெருமாள்களில் ஒருவராக இங்கு எழுந்தருளிய இப்பெருமாள் குருக்ஷேத்திரத்திலிருந்து வந்தவரென்றும், திருவல்லிக்கேணி
பார்த்தசாரதியே இங்கு வந்தாரென்றும் சொல்வர். திருவல்லிக்கேணி பெருமாளே இங்கு வந்ததாகக் கொள்வர். ஏனெனில் திருவல்லிக்கேணியில்
இருப்பவர் குருஷேத்ர போரை நடத்திய பார்த்த சாரதியல்லவா?
மூலவர், உற்சவர், இருவருக்குமே ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவி மார்கள் புடை சூழ இருப்பது 108 திவ்ய தேசங்களில்
இங்கு மட்டும்தான். இவர் பார்த்தசாரதியான கண்ணபிரானல்லவா? எனவே தேவிகள் புடைசூழ இருப்பதில் அதிசயமென்னவுள்ளது.
இங்குள்ள மற்றொரு உற்சவருக்கு கோலவில்லிராமன் என்ற ஒரு பெயரும் உண்டு. சங்கு, சக்கரம், கதை இவற்றுடன் வில்லும், அம்பும்,
கொண்டு திகழ்கிறார் இவர். இவருக்கும் ஒரு தனி மூலவர் இருக்கிறார்.
அவரது கோவில் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு தோப்பில் இருக்கிறது. தை மாதம் பூச நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் தீர்த்தவாரி
மிகச்சிறப்பான விழாவாகும். சரம சுலோகார்த்தம் விளங்கிய இடமும் இதுதான்.
இந்த உற்சவரான கோலவில்லி ராமன் என்னும் பெயரே திருவெள்ளியங்குடி திவ்ய தேசத்து மூலவருக்கும் அமைந்திருப்பது
ஆராய்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.
—————
40. சிதம்பரம் என்னும் திருச்சித்ர கூடம்
கிருஷ்ணாரண்யம் என்று அழைக்கப்படும் ஆரண்யத்தின் மத்தியப்பகுதியில் அழகுற அமைந்துள்ள இத்திருத்தலத்தின்
எல்லைகளைக் கீழ்க்கண்டவாறு பிர்ம்மாண்ட புராணம் கூறுகிறது.
காவிரிக்கு வடக்கு, வெள்ளாற்றுக்குத் தெற்கு, கீழ்கடலுக்கு மேற்கு, ஸ்ரீமுஷ்ணத்திற்கு கிழக்கு.
முனிவ, எவ்வுலகிலுஞ் சிறந்தது பூவுலகம். அதில் நாவலந்தீவு என்னும் பரதக்கண்டஞ்சிறந்தது. அதில் தமிழ்நாடு சிறந்தது. அதில் வடகாவேரியில்
வடதிசை சிறந்தது. அதில் தில்லைவனஞ்சிறந்தது. அதில் புண்டரீகபுரம் சிறந்தது. அதில் சித்ரகூடஞ் சிறந்தது. அந்தச் சித்திரக் கூடத்தில் திருவனந்தன் மேல் அறிதுயிலமர்ந்த தேவாதி தேவனை நானும் சிவபெருமானும் இந்திரனுள்ளிட்டோரும் போற்றி இஷ்டசித்திகள் பெற்றுள்ளோம்.- என்று பிரம்மன் நாரதருக்குச் சொல்கிறான் (பிர்ம்மாண்ட புராணம்)
தகரவித்தை, மதுவித்தை, புருஷோத்தம வித்தை ஆகியன அகர வித்தைக்குள்ளேயடங்கும் (அகரவித்தையென்பது சிருஷ்டியின் தொடக்கத்தை
உணர்த்துவது) அந்த அகர வித்தையின் சிகரத்திற்கு சிற்சபை எனப்பெயர்.
அதில் அட்டாக்கரப்படியின் (அஷ்டாச்சர மந்திரத்தின்) சிகரத்தில் எம்பெருமான் சயனங் கொண்டுள்ளார். (பிர்ம்மாண்ட புராணம்)
கலிங்க நாட்டு மன்னன் கவேரன் என்பவனுக்கு நெடுங்காலம் புத்திரபாக்கியமின்றியிருக்க, கவேரனும் அவனது மனைவியும் கடுந்தவம்
மேற்கொண்டு அதன் பயனால் காவேரியே அவர்களுக்கு குழந்தையாகப் பிறந்தாள். பிறகு காவேரி அகத்தியனால் நதியாக ஆன பின்பு காவேரியின்
தாயும் தந்தையும் அதில் நீராட வரும்போது, உன்னைப்போல் நாங்களும் சாகா வரம் பெற்று எந்நாளும் வாழும் பேறு வேண்டுமென்று கேட்க அதற்கு
வரமளிக்கும் சக்தி திருமால் ஒருவனுக்குத்தான் உண்டெனவும், எனவே அருகாமையில் இருக்கும் தில்லைவனஞ் சென்று கோவிந்தா, கோவிந்தா
என்று கூறி தவமிருக்குமாறு காவேரி கூறியனுப்பினாள்.
அவ்வண்ணமே தவமிருக்க எம்பெருமான் பிரதயட்சமாகி அவ்விருவருக்கும் மோட்சமளித்தார். அஷ்டாச்சர மந்திரத்தை விட கோவிந்தா
என்னும் நாமத்தால் இவ்விடத்தே பக்தர்கட்கு மோட்சம் கிட்டியமையால் எம்பிரானுக்கும் கோவிந்தராஜன் என்னும் திருநாமமே எல்லை கட்டி நின்றது.
இஃதிவ்வாறிருக்க, பராசரன் என்னும் ஒரு முனிவர் திருமாலைக் குறித்து தவஞ் செய்கையில் தஞ்சகன், கஜமுகன், தண்டகாசுரன் என்னும் 3
அரக்கர்கள் அத்தவத்தைக் கலைக்க, முனிவரின் வேண்டுதலின்படி மகாவிஷ்ணு கருடப்பறவை மீதேறி வந்து தஞ்சகன், கஜமுகன் ஆகிய
இருவரையும் சம்ஹாரம் செய்ய தண்டகாசுரன் மட்டும் அங்கிருந்த பிலத்தின் வழியாக ஓடி பாதாளத்தில் ஒளிய அவனைப் பின்தொடர்ந்த எம்பெருமான்
தனது முகக்கோட்டால் அவனைக் கீறிக்கிழித்துப் போட்டு பாதாளத்திலிருந்து பூமியைப் பிளந்து கொண்டு (ஸ்ரீமுஷ்ணத்தில் பூமியைப் பிளந்து கொண்டு
வந்த வராகனாக) பூவராகப் பெருமாளாக எழுந்தருளினார். (மூன்று அரக்கர்களை வதம் செய்ததை தஞ்சை மாமணிக்கோயில் ஸ்தல வரலாற்றில் விரிவாய்ப் பார்த்தோம்
இவ்வரக்கர்களுக்கு சில்லி, தில்லி என்னும் இரு சகோதரிகள் இருந்தனர். அவ்விருவரும் தம் சகோதரர்களை சம்ஹாரம் செய்த பூவராகப் பெருமானை
சரணடைந்து எங்களுக்கு நல்வழி காட்டுங்கள் என்று கேட்க, நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் அவ்வண்ணமே தருகிறேன் என்றார் பூவராகன்.
சில்லியானவள் உமக்கே யான் காவல் பூணக் காத்துள்ளேன் என்று சொல்ல அவ்வண்ணமே ஆகுக என்று சொல்ல சில்லி ஸ்ரீமுஷ்ணத்தில்
கோவிற்கடையில் காவல் காத்து வருகிறாள்.
தில்லி திருநாடு கேட்க, அவ்வண்ணமாயின் அருகில் உள்ள (இரண்டு யோசனை தூரமுள்ள) புண்டரீகபுரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி
தன்னைக் குறித்து தவமிருக்குமாறு சொல்ல அவ்வண்ணமே செய்தாள். அவ்விடத்தே புள்ளேறி வந்த எம்பெருமானைத் தரிசித்த தில்லி தானும் தன்
சகோதரியைப் போல எம்பெருமானின் வீட்டிடத்தே மரமாக இருப்பதாகச் சொல்ல எம்பெருமானும் சரியென்றார். (புண்டரீகபுரத்தைச் சுற்றி) தில்லி
அழகான தில்லைக் காந்தார விருட்சமாக விரிந்து பரந்து நின்றாள். திருமால்தில்லைக் கோவிந்தனாகப் பள்ளி கொண்டார்.
இஃதிவ்வாறிருக்க பரமசிவனும் பார்வதியும் ஒரு சமயம் மிக்க மனக்களிப்புடன் ஒருவரையொருவர் விஞ்சி நடனம் புரிகையில் அங்கிருந்த
முருக விநாயகரை நோக்கி யாரின் நடனம் சிறப்பாக இருந்தது என்று வினவ அவ்விருவருடன் அங்கு குழுமியிருந்தோறும் சேர்ந்து உமையவளின் நடனமே
மிகவும் சிறந்ததாய் இருந்தது என்று கூற சிவன் மிகவும் கோபமுற்று நீவிர் இருவரும் சிறுவர்கள் உமக்குத் தீர்ப்புச் சொல்ல தகுதி போதாது என்று கூறி
பிரம்மனிடம் சென்று நடந்த வ்ருந்தாந்தத்தைச் சொன்னார்.
உடனே பிரம்மன், அவ்வாறாயின் திருவேங்கடத்திற்கு தெற்கில் 3யோசனை தூரத்தில் காஞ்சிபுரத்திற்கு வாயு திசையில் ஆலங்காட்டில்
(திருவாலங்காடு) வந்து நடனமிடுங்கள் நான் வந்து தீர்ப்பளிக்கிறேன் என்றார்.
அவ்விதமே அவ்விடத்தில் பரமசிவனும், பார்வதியும் பயங்கர நடனம் புரிந்து நிற்க, நாமகளுடன் வந்த பிரம்மனும் பிற தேவர்களும் என்ன
சொல்வது எவ்வாறு தீர்ப்பளிப்பது என்று புரியாமல் இருவரின் ஆட்டத்தையும் வியந்து வியந்து பேசி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் இருந்தனர்.
சபை நடுவே எழுந்த பிரம்மன் இதற்குத் தீர்ப்பு சொல்லும் சக்தி தனக்கு இல்லையென்றும், திருமால் ஒருவரால் தான் இதற்குத் தீர்ப்பளிக்க
முடியுமென்று சொல்ல எல்லோரும் வைகுந்தம் சென்று நடந்ததை விளம்பி நின்றனர்.
திருமால் (தன் மனதுக்குள் உகந்த) தில்லை வனத்திற்கு வந்து நடனமாடுமாறும் அப்போது தீர்ப்பு வழங்குகிறேன் என்று சொல்லித்
தெய்வத்தச்சனான விஸ்வகர்மாவை நோக்கினார்.
உடனே விஸ்வகர்மா அரக்கர்களின் தச்சன் மயனையும் உடனழைத்துக்கொண்டு தில்லைவனத்தில் நடுமையத்தே சித்ர கூடத்தை
அமைத்தான். ஐந்து பூதங்களை ஐந்து கலசமாக்கி நான்கு வேதங்களையும் நான்கு கோபுரமாக்கினான். 36 ஸ்மிருதி சூத்ரங்களை 36 வாயில்களாகவும் 5
எக்கியங்களை 5 மதில்களாகவும், ஆறு அங்கங்களை 6 வாயில்களாகவும் 6தரிசனங்களை 6 கதவுகளாகவும், மூன்று வியாகிருதிகளை மூன்று
மாடங்களாகவும், நூறு யாக யூபத்தம்பங்களை நூற்றுக்கால் மண்டபமாகவும், அமைத்து சித்ரக்கூடத்தை கனகசபை, ரத்தின சபை, நாகசபை, தேவசபை,
ராஜசபை, ஆகியன சூழ தோற்று வித்தான்.
அமைப்புப் பொருந்திய சபையில் நடனம் ஆரம்பித்தது யார் நன்றாடினார், யார் வெண்றாடினார் என்று கூறமுடியா வண்ணம் தேவகணங்களும், தேவருலக நடன மாதரசிகளும், சர்வ லோகமும் திகைத்து மெய்மறந்து நினைவிழந்து நிற்க உக்கிரமடைந்த ருத்ரன் தனது இடதுகாலைத்
தரையில் ஊன்றி வலதுகாலைத் தலைமேல் தூக்கி நிறுத்தி நிற்கலுற்றான்.
பெண்மைக்குரிய நாணத்தால் தான் அவ்வாறு செய்ய இயலாது வெட்கித்தலை குனிந்து நின்றாள் உமையவள். நடராசனே வென்றான், என்று
சபையோரனைவரும் தீர்ப்புக் கூற, திருமாலும் அதற்கு இசைவு தெரிவித்து மாயப்புன்னகை புரிய உமையவள் காளியாக மாறி தில்லைவனத்தைச் சுற்றித்
தாண்டவமாடி அந்த வனத்திற்குத் தென்பாற்போய் அதற்கே ஒரு காவல்தெய்வமாய் நின்றாள். சிவன் திருமாலை நோக்கித் தாங்களும் இதே
திருக்கோலத்தில் இவ்விடத்தே எழுந்தருளி பக்தர்கட்கு அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்க அவ்வண்ணமே ஒப்புக்கொண்டார் திருமால்.
மூலவர்–கோவிந்தராஜன், யோகசயனம், கிழக்கு நோக்கிய திருக்கோலம்
உற்சவர்-தேவாதி தேவன், சித்ரகூடத்துள்ளான் என்றொரு உற்சவருண்டு.
தாயார்- புண்டரீகவல்லி
தீர்த்தம்– இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு
விமானம்- ஸாத்வீக விமானம்
காட்சி கண்டவர்கள்- தில்லை மூவாயிரவர், சிவன், உமையவள், பாணினி, வ்யாக்ரபாதர்.
பதஞ்சலி, கண்ணுவர், ஆகிய முனிவர்களும் இங்கு பெருமானைக் குறித்து தவம் செய்தனர்.
இங்கு 12 தீர்த்தங்கள் உண்டு.
1. புண்டரீக தீர்த்தம்
2. அமுத கூபம்(எம்பெருமான் நடனம் காண வந்தபோது எம்பெருமான் உண்பதற்காக கருடன்அமுதங்கொணர்ந்து வைத்த இடம்)
3. திருப்பாற்கடல்,
4. சேஷ தீர்த்தம்
5. கருட தீர்த்தம்
6. காவேரி தீர்த்தம்
7. சுவேத நதி தீர்த்தம்
8. இயமபாகச் சேதன தீர்த்தம்
9. இந்திர தீர்த்தம்
10. அக்கினி தீர்த்தம்
11. நிர்ஜரா தீர்த்தம்
12. சாமி தீர்த்தம்
முன்னொரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் தனித்தனியே இருந்தது.
தில்லைத் திருச்சித்ரக்கூடம் என்று பெருமாள் கோவிலை ஆழ்வார்களும்.
சிற்றம்பலம் என்று நடராஜர் கோவிலை சைவர்களும் வழங்குவதிலிருந்து முற்காலத்தே இவையிரண்டும் தனித்தனியே இருந்தன என்பது தெளிவு.
சிறு அம்பலம் (சிறுகோவில்) என்பதே சிற்றம்பலமாயிருக் கையில் நடராஜர் கோயில் சிறிய கோவிலாகவும், சித்ரக்கூடம் எனப்பட்ட பெருமாள்
கோயில் பெரிய கோவிலாகவும் இருந்திருக்கின்றன என்றும், நடராஜர் கோவிலை விரிவுபடுத்துவதற்காக சோழவரசன் பெருமாள் கோவிலை இடித்து
வளைத்துக் கட்டிய பின்பே பெருமாள் கோயில் பிற்காலத்தே (கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில்) சிவன் கோவிலுக்குள் அகப்பட்டுவிட்டதென்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்.
தில்லையில் திருமாலும் சிவனும் ஒரு சேரக் கோவில் கொண்டிருப்பதைக் கண்ட சைவ விருப்பும் வைணவ வெறுப்பும் கொண்ட
சோழன் ஒருவன் திருமாலை நீலக்கடலுக்கே அனுப்பிவிட எண்ணினான். –
மூன்றில் கிடந்த தடங்கடல் போய் முன்னைக் கடல்புக
பிள்ளைத் தில்லை மன்றிற்கு இடங்கொண்ட கொண்டல்–அனுப்பியதாகவே ஒட்டக்கூத்தர் பாடுகிறார்.
சோழ மன்னன் ஒருவனால் கடலில் எறியப்பட்ட பெருமாள் மீண்டும் தில்லை மன்றத்தில் இடம் கொண்ட இந்நிகழ்ச்சியை
(சோழன் கடலில் அமிழ்த்திய பிறகு அதனால் சீற்றமுற்றவர்கள் அப்பெருமானை எழப் பண்ணி
இப்போதிருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும்
பிற்காலத்தே இவ்விரண்டும் சேர்ந்து ஒரே கோவிலாக பிறிதொரு சோழனால்கட்டப்பட்டதென்றும் கூறுவர்.)
தில்லை நகர், திருச்சித்ர கூடம், புண்டரிக புரம், என்பதுவும் இத்தலத்திற்கு அமைந்த திருப்பெயர்கள்.
முதலாம் நந்திவர்மனை (சைவ, சமண மதங்களின் மேல் பற்றாயிருந்தவனை) திருமங்கையாழ்வார் வைணவத்தின் பால் ஈர்த்தார்.
இந்த நந்திவர்ம பல்லவனைத்தான் பைம்பொன்னும் முத்தும் கொணர்ந்து பணிந்த பல்லவன் என்று திருமங்கையாழ்வார் தம் பாடலில்
குறிக்கின்றார்.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் பராந்தகசோழன் தில்லைக் கோவிலுக்கு பொன் வேய்ந்தான்.
தன் எதிரில் நடராஜப் பெருமான் நடனமாடியதை பெருமாள் ரசித்ததாகவும், எம்பெருமான் பள்ளிகொண்ட அர்ச்சா விக்ரகத்திற்கு அருகில்
இன்றும் நடராஜன் நடனமாடும் கோலத்தில் இருப்பது காண்டற்குரியதாகும்.
இங்கு ஆண்டுதோறும் பெருமாள் சன்னதியில் ப்ரஹ்ம உத்ஸ்வம்நடைபெற்றது, இதனை,
“கைதொழ வீதி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
தெய்வ புள்ளேறி வருவான் சித்திரக் கூடத்துள்ளானே
தெருவில் திளைத்து வருவான் சித்திரக் கூடத்துள்ளானே– என்று திருமங்கையாழ்வாரின் ஸ்ரீ ஸூ க்திகள் உணர்த்துகின்றன.
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply