ஸ்ரீ அருளிச் செயல்களில் ஸ்ரீ காவேரி
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம் – நாலாயி:245/1
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – நாலாயி:408/4
கை பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் – நாலாயி:612/1
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:728/3
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே – நாலாயி:805/4
கடந்த கால் பரந்த காவிரி கரை குடந்தையுள் – நாலாயி:812/3
கங்கையில் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டு – நாலாயி:894/1
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி – நாலாயி:1246/2
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1378/3,4
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1380/3,4
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/3,4
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/2,3
காரகத்தாய் கார் வானத்து உள்ளாய் கள்வா காமரு பூம் காவிரியின் தென்-பால் மன்னு – நாலாயி:2059/3
———-
ஸ்ரீ காவேரி ஆற்றின் பெருமையைப் போற்றும் சங்க காலப் பாடல்கள்
மக்கள் காவிரி ஆற்றைப் பெண்ணாகவும் தீர்த்தமாகவும் போற்றி வந்ததும்
காவிரிக்கு உயர்ந்த மதிப்பளிப்பதும் மரபாக இருந்து வருகிறது.
பழந்தமிழ் இலக்கியத்தில் காவிரியின் வளம், செழிப்பு, சிறப்பு பற்றிப் புலவர்கள் பலரும் பல பாடல்கள் பாடி யுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் ஒன்றான பட்டினப் பாலையில்,
வான் மழை பொழியாமல் பொய்த்து விட்டாலும் காவிரி பொன் கொழிக்கும் அளவிற்கு வளம் செய்யும் என்பதினை,
“வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன்கொழிக்கும்” (பட்டினப் – 17) என்று இப்பாடல், செழிப்பினை விளக்குவதாக அமைந் துள்ளது.
“வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்
தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்
தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி”—(பட்டினப்பாலை:1-6)
எட்டுத்தொகை நூல்களான அகநானூற்றிலும் புற நானூற்றிலும் பெரும்பாலான பாடல்கள் காவிரியின் செழிப்பு வளம் இவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந் துள்ளன.
“கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் ஆகம் அடைதந்தோளே” (அகம். 62: 9-12)
நீர்ப்பெருக்கு அதிகம் கொண்ட காவிரி பல சுழிகளைக் கொண்டுள்ளது என்று வெள்ளப் பெருக்கைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
“தலை நாள் மாமலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று (அகம் : 126.4-5)
மலையில் பிறந்து கடலின் கரையினைக் கரைத்திடும் அளவிற்குக் காவிரி விரைந்து செல்லும் நீர்ப்பெருக்கைக் கொண்டது என அதன் வளமையைப் பறைசாற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சங்ககாலத்தில் காவிரி வளமாக இருந்ததை விளக்குகிறது இப்புறநானூற்றுப் பாடல்,
“புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்” (புறம் : 68-8-10)
குழந்தை பிறந்து பல திங்கள் கடந்த பின்னும் பால் சுரக்கும் தாயைச் சான்றாக்கிக் காவிரி தாயாகவும் அதனால் உலக உயிர்கள் காக்கப்படுவதாகவும் இப்பாடல் கூறுவது சிறப்பானதாகும்.
“அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த்
ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்…”—புறநானூறு (பாடல் 35)
காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரத்தில் காவிரி பற்றி உயர்வாகப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
“பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகு அசைய நடந்தாய்! வாழி காவேரி” (சிலம்பு 7-8)
பூக்கள் மலிந்த சோலையில் மயில்கள் ஆடும்;
குயில்கள் விரும்பி இனிதாக இசை பாடும்:
விருப்பம் விளைவிக்கும் மாலைகள் அருகிலே அசையும்;
இவற்றி னூடே காவிரியும் நடந்ததாகவும்,
காவிரி நெடுநாள் வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்பாடலில் காவிரி பாயும் பகுதி செழிப்பாக இருந்துள்ளதை விளக்குகிறது.
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப
குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை”—சிலப்பதிகாரம் (காதை 10:103-108)
“வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி”—சிலப்பதிகாரம் கானல்வரி 152-55
“பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி
கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை” (மணிமேகலை: 5.25)
————-
காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
அது கருநாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த
தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது.
இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும்
தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப்பெயர் பெற்றது.
(கா- காடு, சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை)
தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன.
அவை காரணமாகவே ‘பொன்னி’ என்ற பெயர் காவிரிக்கு வந்திருக்கக்கூடும் எனலாம்.
அந்த ஆறு சோழ நாட்டை செழிக்கச் செய்கிறது..
பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் பொன்னி என்னும் பெயர் வந்தது.
துணை ஆறுகள்
கபினி, ஏமாவதி, ஆரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி
ஆகியவை கருநாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள்.
பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.
இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது.
‘பொன்படு நெடுவரை’ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர்.
சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.
அணைகள்
மேட்டூர் அணை, கிருட்டிணராச சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை
ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும்.
பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
அருவிகள்
கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும்
தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.
ஒகேனக்கல் அருவியை தாண்டி செல்லும் காவிரி
தீவுகள்
கருநாடக மாநிலத்தில் சிரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும்
தமிழகத்தில் சிரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது.
இந்த மூன்றில் சிரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது,
இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது.
இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்குக் கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு.
சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும்
சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும்
திருவரங்கத்தில் (சிரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
மேகதாது என்னும் ஆடுதாண்டு காவிரி
குடகு மாவட்டத்திலுள்ள
பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது.
ஆரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து
மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராசசாகர் அணையை அடைகிறது.
கிருட்டிணராச சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது.
ஏமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் அணையால்
ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன.
கிருட்டிணராச சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி சிரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது.
பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.
பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது.
இங்கு இரு பிரிவுகளாகப் பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி அருவியாகவும்
மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது.
வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல் நீர் மின் உற்பத்தி நிலையம்
அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன.
அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது.
பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால்,
இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர்.
தமிழகத்தில் காவிரியின் போக்கு
பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது
பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது.
பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து சிடான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது.
இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது.
மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது.
ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது.
அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்குப் பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர்.
முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது.
இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது.
வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது.
கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும்.
கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே சிரீரங்கம் (திருவரங்கம்) தீவை
உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது.
கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.
காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மாவட்டங்கள்,
புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.
காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி
கருநாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாகப் பாய்கிறது.
நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம்
காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும்,
கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும்
அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.
கருநாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
கருநாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ
———————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply