அகலிகை–‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’: – கம்ப வாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகம் தழுவிய இராமகாதை என்னும் விரிந்த கடலுள்,
கம்பனால் அமைக்கப்பட்ட அற்புதப் பாத்திரங்கள் எனும் அரிய முத்துக்கள்,
பலப்பலவாய் சிதறிக் கிடக்கின்றன.
அம் முத்துக்களுள் சில பெரியவை, சில சிறியவை.
பெரியதான முத்துக்கள் நம்மைக் கவர்வது இயற்கையே.
அபூர்வமாய் சில சிறிய முத்துக்கள்,
பெரிய முத்துக்களை விட நம் மனதைக் கவர்ந்து விடுகின்றன.
அங்ஙனம், கம்பனால் அழகுற அமைக்கப்பட்டு,
நம் மனங் கவர்ந்து நிற்கும் ஒரு சிறிய முத்தாய்,
அகலிகை பாத்திரம் அமைந்து விடுகிறது.
♠♠♠♠♠
தமிழிலக்கியப் பரப்பில் அகலிகைக் காதை, பல புலவர்களாலும் பண்டு தொட்டுப் பயிலப்பட்டு வருகின்றது.
பலராலும் கையாளப்பட்ட அக் காதையை, மூல நூலான வான்மீகத்தின் வழி நின்று,
கம்பனும் தன் காவியத்துட் புகுத்துகிறான்.
இராம காதையின் விரிந்த பரப்பில், அகலிகைப் பாத்திரத்தின் அகலம் மிகச் சிறியது.
புருஷோத்தமனாக இராமனைக் காட்டும் புலவனின் நோக்கத்திற்கு, துணை செய்து நிற்பதோடு,
அகலிகைப்பாத்திரத்தின் தேவை, கம்பகாவியத்தைப் பொறுத்தவரை முடிந்து போகிறது.

அது தவிர,
கதைப் போக்கிலோ காவிய ஓட்டத்திலோ, இப் பாத்திரத்தின் பாதிப்பு, இல்லையென்றே சொல்லும்படியானது.
அகலிகையோடு தொடர்புடைய இரண்டு பாத்திரங்கள், இராமகாதையில் வந்து போகின்றன.
அகலிகையின் கணவரான, கௌதம முனிவர் எனும் பாத்திரம்,
ஜனகரின் குலகுருவாய்த் திகழும், அகலிகையின் புதல்வரான,
சதானந்த முனிவர் எனும் பாத்திரம் என்பவையே அவ்விரண்டு பாத்திரங்களுமாம்.
அகலிகைக் காதை மட்டுமன்றி, அதனோடு தொடர்புடைய மற்றைய இரு பாத்திரங்களுங்கூட,
பால காண்டத்தோடு நிறைவுறுகின்றன.

இவ் அகலிகையின் கதை, இருபத்தெட்டுப் பாடல்களில் அமைக்கப்பட்டு, அகலிகைப் படலமாய்,
கம்பராமாயணப் பாலகாண்டத்தில் இடம்பெறுகிறது.

இவ் இருபத்தெட்டுப் பாடல்களுள்,
ஆறு பாடல்கள் தனித்த வர்ணனைகளாய் அமைவன.

பதினைந்து பாடல்கள் இராம காவியத்தோடு அக் கதை இயையுமாற்றைக் கூறுவன.

சர்ச்சைக்குரியதான அகலிகையின் வரலாறு, விசுவாமித்திர முனிவனின் கூற்றாய்,
ஏழே பாடல்களில் கம்பனாற் சொல்லப்படுகிறது.
அவ்வேழு பாடல்களிற் கம்பன் செய்யும் நுட்பங்களை ஆராயுமுன்,
கம்பகாவியத்தில் அகலிகைப்படலம் கூறும், நிகழ்வுகளின் சுருக்கத்தை முதலிற் காண்பாம்.
♠♠♠♠♠
முதலில், இலக்கியப் பரிச்சயம் குறைந்த இளைஞர்க்காய், அகலிகையின் கதைச் சுருக்கம் ஒரு சில வரிகளில்.

கௌதம முனிவரின் மனைவியான அகலிகை,அழகிற் சிறந்தவள்.
அவள் அழகு உலகெங்கும் பேசப்படுகின்றது.-தேவேந்திரன் அவள் அழகு கண்டு மயங்குகிறான்.
பிறனில் விழையும் அறமற்ற பெருவிருப்பு உந்த, அகலிகையை அனுபவிக்கத் திட்டமிடுகிறான்.

ஒருநாள் அதிகாலை விடிவதன் முன், கௌதம முனிவர், நித்திய கருமங்கள் நிறைவேற்ற,
நீர் நிலை நோக்கிச் செல்கிறார்.
முனிவரில்லா அச் சூழ் நிலையைப் பயன் படுத்தி, கௌதமரின் வடிவம் கொண்டு,
ஆச்சிரமத்தினுள் நுழைகிறான் இந்திரன்.
வந்தது கணவனே என நினைந்து, இந்திரனின் வஞ்சனைக்குப் பலியாகி, தன்னை இழக்கிறாள் அகலிகை.

நீர்நிலை சென்ற கௌதமர் நிகழ்ந்தது உணர்ந்து, ஆத்திரத்துடன் ஆச்சிரமம் திரும்புகிறார்.
முனிவரின் வருகை யுணர்ந்து, இந்திரன் பூனையாய் மாறி ஓட, அவனைச் சபித்து,
கலங்கி நிற்கும் அகலிகையையும், கல்லாகச் சாபமிடுகிறார் அவர்.

அகலிகை வருந்தி வேண்ட,
‘தசரத குமாரனான இராமன் கழற் துகள் பட, மீண்டும்  பெண்ணாவாய்!’ என,
சாப விமோசனம் உரைத்துக் கௌதமர் செல்கிறார்.

பின்னாளில்,
வேள்வி காக்க விசுவாமித்திரரோடு இராமன் காடேகிறான்.
யாகம் முடிந்து, மிதிலை செல்லும் வழியில், அவன் கழற்துகள் பட்டு, கல்லாய்க் கிடந்த அகலிகை,
சாபம் நீங்கிப் பெண்ணாகின்றாள்.

பின், அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து, விசுவாமித்திரரும், இராம  இலக்குவரும் மிதிலை சேர்கின்றனர்.
இதுவே, கம்பன் தரும் அகலிகைக் காதையின் சுருக்கம்.
♠♠♠♠♠
மேற்சொன்ன அகலிகைக் காதையை, கம்பன், பின்னோக்கும் உத்தியால் உரைக்கத் தலைப்படுகிறான்.
தசரதனிடம், இராம லட்சுமணர்களை வேள்வி காக்க வேண்டிப் பெற்று, காடேகிறார் விசுவாமித்திரர்.
வழியில் இராமனால் தாடகை வதம் நிகழ்த்தப் படுகிறது.
பின், இராம லட்சுமணர்கள் அரக்கர்களை அழித்து முனிவரின் வேள்வி காத்து வெல்கின்றனர்.
அதன் பின், இராமலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு, ஜனகனின் வேள்வி காணப்புறப்படுகிறார் விசுவாமித்திரர்.

இவ்விடத்திலேயே, கம்பனின் அகலிகைப்படலம் ஆரம்பிக்கிறது.
சோனை நதிக்கரையிற் தங்கி, கங்கையைக் கண்டு மிதிலைநாடு சேரும் இவர்கள்,
மிதிலை நகரின் மதிற்புறத்தே, ஒளிரும் கல்லொன்றைக் காண்கின்றனர்.
அக்கல்லின்மேல் இராமன் கழற்துகள்பட, அது பெண்ணாகிறது.
ஆச்சரியமுற்ற இராமன், யாரிவள்? என விசுவாமித்திரரை வினவுகிறான்.
இவ்விடத்தில், அகலிகையின் வரலாறு,விசுவாமித்திரரால் விரித்துரைக்கப்படுகிறது.

அகலிகையை இந்திரன் விரும்பியமை ஒரு பாடலிலும்,
இந்திரன் கௌதம முனிவரின் வேடத்தில் வந்த செய்தி ஒருபாடலிலும்,
இந்திரனால் அகலிகை மாசுபடும் செய்தி ஒரு பாடலிலும்,
கௌதம முனிவர்வர, இந்திரன் பூனையாய் ஓடும் செய்தி ஒரு பாடலிலும்,
இந்திரற்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கு முனிவர் சொன்ன சாப விமோசனம் ஒரு பாடலிலுமாக,
மொத்தம் ஏழு பாடல்களில்,
அகலிகை வரலாறு கம்பனால் உரைக்கப்படுகிறது.

இதன்பின், சாபவிமோசனம் பெற்ற அகலிகையை அழைத்துச் சென்று, கௌதம முனிவரிடம் விசுவாமித்திரர் ஒப்படைக்க,
இராமன் கௌதமரை வணங்கி, முனிவரோடு மிதிலை செல்கிறான் என்பதோடு,
கம்பனின் அகலிகைப் படலம் முற்றுப் பெறுகிறது.
♠♠♠♠♠
நம் பழைய மரபுப்புலவர்களால் மட்டுமன்றி, நவீன இலக்கியக் கர்த்தாக்களாலுங்கூட,
அகலிகைக் கதை அழகுறக் கையாளப்பட்டுள்ளது.
பலபுலவர்களாலும் பயிலப்பட்ட அவ் அகலிகைக் காதை, அப்புலவர்களின் மனப்போக்கிற்கேற்ப,
விதவிதமாய் மாற்றியுரைக்கப்பட்டது.
இந்திரனை, அகலிகையின் முன்னைக் காதலனாய் உரைப்பர் ஒருவர்.
இந்திரனின் அழகு கண்டு அவன்பால் விருப்புற்று, அகலிகை, அவனை அணைந்ததாய் உரைப்பார் மற்றொருவர்.
இருளில் வந்தது யாரென்று தெரியாமலே, அகலிகை தன்னையிழந்ததாய் உரைப்பார் வேறொருவர்.
இங்ஙனம், அகலிகைக் கதை பலவிதமாய்ப் பேசப்பட்டிருக்கிறது.
இராமகாவியத்தின் அறநிலை வழுவாமல்,தனக்கென ஒரு தனிப்பாணி அமைத்து,
கம்பன் இக்கதையை அற்புதமாய்க் கையாள்கிறான்.
அவ்வற்புதம் காண்பாம்.
♠♠♠♠♠
கம்பனில் வரும் அகலிகை, தெரிந்தே கற்பிழந்தாளா? ஏமாற்றப்பட்டாளா?
கம்ப காவியத்தினூடு அகலிகையைக் கற்போர் மனதில், இக்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.
வந்தது இந்திரன் எனத் தெரிந்தே, அகலிகை கற்பிழந்தாள் என, ஒருசாரார் வாதிடுகின்றனர்.
அங்ஙனமன்றி,
அவள் தன்னையறியாமலே தவறிழைத்தாள் என, அடித்துப் பேசுகின்றனர் வேறு சில அறிஞர்கள்.
இவ்விருதிறத்தாரும், முரண்பட்ட தம் வாதத்திற்கு, கம்பன் கவிதையினையே சான்றாய்க் காட்டுவது,
வியப்புத்தருகிறது.
முரண்பட்ட இவ்விருதிறத்தார்க்கும், கம்பன் கவி சான்றாவது எங்ஙனம்?
ஆராய்வது அவசியமாகிறது.
மாறுபட்ட அவ்விருதிறத்தாரினதும், வாதங்களை முதலில் ஆராய்வோம்.
♠♠♠♠♠
அகலிகை தெரிந்தே கற்பிழந்தாள் என, வாதிடுவோரில் ஒரு சாரார்,
கம்ப காவியத்துட் புகாமல்,தம் அறியாமையே சான்றாக, அழுக்குகளை இரசிக்கும் தம் ஆழ்மன விருப்பினை வெளிப்படுத்தி,
கற்பனையான ஒரு வாதத்தினை முன்வைக்கின்றனர்.
அவ்வாதம் ஆராயப்படவேண்டிய ஒன்றன்று.
ஆயினும், இளையோர் மனதில் அவர்கருத்து பதியாதிருக்க, அவர்தம் வாதத்தையும் ஆராய்தல்கூட அவசியமாகிறது.
கற்பனையான அவர்தம் வாதம் தான் என்ன? காண்பாம்.

ண்மை ஒன்றைக் காண,
மூன்று பிரமாணங்களை நம் ஆன்றோர் ஏற்றுக் கொள்வர்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்,
அறிவுக் கருவிகளால் நேரே காண்பது அவற்றுள் ஒன்று. இது ‘காட்சிப் பிரமாணம்’ எனப்படும்.
தெரிந்தவை கொண்டு, தெரியாதவற்றை ஊகித்து அறிதல் மற்றொன்று.
இது ‘அநுமானப்பிரமாணம்’ எனப்படும்.
உயர்ந்தோர் கருத்தை ஏற்று, ஒன்றை ஒத்துக்கொள்வது இன்னொன்று.
இது ‘ஆகமப் பிரமாணம்’ எனப்படும்.
இவையே ஆன்றோர் ஏற்றுக் கொள்ளும் பிரமாணங்களாம்.
🌾  🌾  🌾
அகலிகை கற்புள்ளவள் என, வாதிடுவோர்தம் மேற் சொன்ன இரண்டு வாதங்களும்,
அநுமானப் பிரமாணத்தினை ஆதாரமாய்க் கொண்டு அமைந்தவை.
வாத நிலையில் அநுமானப் பிரமாணத்தினை, காட்சிப் பிரமாணத்தால் உறுதி செய்தாலன்றி,
ஒப்புதல் முடியாது.
எனவே, மேற்சொன்ன இருவாதங்களும், அகலிகையை, நல்லவளாய் உறுதி செய்ய முடியாது,
நலிவுற்று நிற்கின்றன.
🌾  🌾  🌾
இனி,
அகலிகையை நல்லவளாய் வாதிடுவோர்,
ஆகமப்பிரமாணம் ஒன்றினை எடுத்துக் காட்டி, அகலிகை நல்லவள் என உரைக்கின்றனர்.
அவ்வாகமப் பிரமாணம், விசுவாமித்திரர்; கூற்றாய் வெளிவருகிறது.
இராமனின் காற் துகள்பட்டு சாபவிமோசனமுற்ற அகலிகையை,
கௌதம முனிவரிடம் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
அவளைக் கௌதமரிடம் ஒப்புவித்து,
‘மனத்தினாற் பிழை செய்யாத இவளை ஏற்றுக்கொள்’ என, உரைக்கிறார் அவர்.
அச்செய்தியைச் சொல்லும் பாடல் இது.

‘அஞ்சன வண்ணத்தான் தன் அடித்துகள் கதுவா முன்னம்,
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக! என்ன,
கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும், கருத்துட் கொண்டான்.’

இப்பாடலில் அகலிகையை, ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரர் கூறுகின்றார்.
பிரம்ம ரிஷியாகிய விசுவாமித்திரர், நிதானத்துடன் உரைக்கும் இக்கூற்று,
ஆகமப்பிரமாணமாய்க் கொள்ளத் தக்கதேயாம்.
‘நெஞ்சினாற் பிழைப்பிலாள்’ என, விசுவாமித்திரரைச் சொல்ல வைத்ததன்மூலம்,
அகலிகையை இந்திரன் வஞ்சித்தே கெடுத்தான் என்பதையும்,
தான் தவறுவது தெரியாமல், உடலளவில் மாத்திரமே அகலிகை கெட்டுப்போனாள் என்பதையும்,
அதனாற்றான் அவளுக்கு இராமனால் சாபவிமோசனம் கிட்டியது என்பதையும்,
கம்பன் நமக்கு உணர்த்துகிறான் என உறுதிபட இவர்கள் உரைப்பர்.
அகலிகையை நல்லவளாய்க் காட்ட முயலும் இவ்வாதம், வலிமையானதாகவே தோன்றுகிறது.
🌾  🌾  🌾
அகலிகை,
தெரிந்தே தவறிழைத்தாள் என உரைப்போர், மேற்சென்ன வாதத்தினை ஏற்க முடியாதென்பர்.
தம்மறுப்புக்கு ஆதாரமாய், கவிக்கூற்றாய் அமையும் கம்பனின் பாடலொன்றை,
அவர்கள் எடுத்துக் காட்டுவர்.
அவர்தம் வாதத்தை வலிமையாக்கும், அக்கம்பன் கவியைக் காண்பாம்.
🌾  🌾  🌾
கௌதம முனிவர் வேடத்தில் வந்த இந்திரன், அகலிகையைத் தன் விருப்புக்கு ஆளாக்க,
அவளும் அவனாசைக்கு உடன்படுகிறாள்.
இந்நிலையில், நீர் நிலைக்குச் சென்ற கௌதமன், சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து,
தான் ஏமாற்றப்பட்டதறிந்து விரைந்து திரும்புகிறான்.
மேற்செய்திகள் கம்பனால் சொல்லப்படும் பாடல் இது.

‘புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும்,
‘தக்கது அன்று|’ என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.’

🌾  🌾  🌾
மாறு வேடத்தில் வந்த இந்திரன், அகலிகையை அனுபவிக்கும் செய்தியை,
இப்பாடலில் முதல் ஒன்றரை வரிகள் சொல்கின்றன.
புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்தலோடும்|,
இந்திரன், அகலிகையைச் சேர்ந்து,தன் நீண்டநாட் காமவேட்கையைத் தீர்க்க முனைகிறான்.
எல்லையற்ற இன்பநாட்டம் கொண்ட அவ் இந்திரன், தேவமாதரிடம் பெறாத புதிய இன்பத்தை,
அகலிகையிடம் காண்கிறான் எனும் கருத்தை, இவ் ஒன்றரை வரிகளும் நமக்கு உணர்த்துகின்றன.
இது, இப்பாடலூடு தெரியும் இந்திரனின் மனநிலை.
🌾  🌾  🌾
இனி, நாம் அகலிகையின் மனநிலையைக் காண்போம்.
கம்பன் பாடல் அவள் மனநிலையைத் தெளிவுபடப் பேசுகிறது.
‘உணர்ந்தனள்; உணர்ந்த பின்னும், ‘தக்கது அன்று|’ என்ன ஓராள்; தாழ்ந்தனள் இருப்ப,
தன்னைச் சேர்பவன் இந்திரன் என அகலிகை உணர்ந்தாள் என்றும்,
உணர்ந்த பின்பும் அது தக்கதான செயலல்ல என அறிந்து, அச்செயலை அவள் விலக்கினாளல்லளென்றும்,
இந்திரனின் விருப்புக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தனள் என்றும், இவ்வடிகளிற் தெளிவுபடச் செய்தி சொல்லப்படுகிறது.
இவையே இப்பாடல் தரும் செய்திகளாம்.
🌾  🌾  🌾
இப்பாடலை ஆதாரம் காட்டியே,தெரிந்தே அகலிகை கற்பிழந்தாள் என, உறுதிபட இப்புலவர்கள் வாதம் செய்வர்.
இவ்வாதமும் ஏற்கத் தக்க ஒன்றாகவே படுகிறது.
🌾  🌾  🌾
மேற்சொன்ன கம்பனின் கூற்றினால், அகலிகை தெரிந்தே கற்பிழந்தவள் என்பது உறுதிப்படுமேல்,
‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என, இவளை எங்ஙனம் விசுவாமித்திரர் உரைத்தல் கூடும்?
கேள்வி பிறக்கிறது.
ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும்,இவ்விரண்டு பாடல்களால், அகலிகை, தெரிந்து தவறினளா?
தெரியாது தவறினளா? எனும், கேள்விக்கு விடைகாணமுடியாமல், திகைத்து நிற்கிறது இலக்கிய உலகம்.
🌾  🌾  🌾
அறிவுச் சோம்பல் கொண்ட சில இலக்கியவாதிகள், கம்பனின் முரண்பட்ட இவ்விரு கூற்றுக்களையும்,
ஆராய்ந்து முடிவுகாண முயலாமல், வழமையான தம்பாணியில் இவ்விருபாடல்களில் ஒன்று,
பிற் சேர்க்கை என உரைத்துத் தப்ப முயல்கின்றனர்.
இன்று வரை வெளிவந்த எந்த இராமாயணப் பதிப்பிலும், இவ்விருபாடல்களில் எந்தவொன்றும்,
பிற்சேர்க்கையாய் ஒதுக்கப்படவில்லை.
கம்பகாவியத்திற்கு உரைசெய்த அறிஞர் பலரும், முரண்பாடான இப்பகுதிக்கு விடைகாணாது விட்டது,
இப்பகுதி பற்றிய சர்ச்சைகள் மேலும் வளரத் துணையாயிற்று.
முரண்பட்ட இவ்விருகூற்றுக்கள் கொண்டு மோதி நிற்பார்க்கு, கம்பன் தரும்விடைதான் என்ன?
கம்பசூத்திரத்துள் நுழைந்து தேடின் பதில் கிடைக்காமலா விடும்?
முயல்வோம்.
🌾  🌾  🌾
‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ என,விசுவாமித்திரர் சொல்லும் கூற்று,
வேறுகருத்துக்கு இடமின்றி, தெளிவுபடச் சொல்லப்பட்டிருப்பதால்,
அப்பாடலுள் நுழைந்து தேடும் அவசியமற்றுப் போகிறது.
அங்ஙனமாயின்,
அகலிகையின் நடத்தையைக் குறைகூறும் பாடல்வரிகளுக்குள்,
அவள் ‘நெஞ்சினால் பிழைப்பிலாள்’ எனும் முனிவர் கூற்றுக்காம்,
ஆதாரம் ஏதும் அகப்படுகிறதா என ஆராய்தல் அவசியமாகிறது.
அகலிகை,மனதால் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான ஆதாரத்தினை,
அவள் நடத்தையைக் கூறும் பாடல் வரிகளுக்குள் காண்போமாகில்,
இம்முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
🌾  🌾  🌾
இவ்வெண்ணத்தோடு, அகலிகை தவறிழைத்ததாய்க் கூறும் அப்பாடலுள்,
மீண்டும் புகுந்து தேட நம் நெஞ்சம் விழைகிறது.
அதனால் மீண்டும் ஒருதரம் அப்பாடலைக் காணப் புகுகிறோம்.

தீது இலா உதவி செய்த சேவடிக் கரிய செம்மல்.
கோது இலாக் குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு.
மாதவன் அருள் உண்டாக வழிபடு:படர் உறாதே.
போது நீ. அன்னை!’’ என்ன. பொன் அடி வணங்கிப் போனாள்.

அருந் தவன் உறையுள் தன்னை அனையவர் அணுகலோடும்.
விருந்தினர் தம்மைக் காணா. மெய்ம்முனி. வியந்த நெஞ்சன்.
பரிந்து எதிர்கொண்டு புக்கு. கடன் முறை பழுதுறாமல்
புரிந்தபின். காதி செம்மல் புனித மா தவனை நோக்கி.*

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*

குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத்தாள்கள்
வணங்கினன். வலம்கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க
அணங்கினை அவன்கை ஈந்து. ஆண்டு அருந்தவனோடும். வாச
மணம் கிளர் சோலை நீங்கி. மணி மதில் கிடக்கை கண்டார்.*

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.
இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.
இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.
முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.
அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

அஞ்சன வண்ணத்தான்தன் அடித் துகள் கதுவா முன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற

வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்

அடித் துகள் = திருவடி துகள்

கதுவாமுன்னம்.= படுவதற்கு முன் (அது ஏன் என்று தெரியவில்லை)

வஞ்சிபோல் = வஞ்சிக் கொடி போன்ற

இடையாள் = இடையை உள்ள அகலிகை

முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்

ஆகிநின்றாள்; = மாறி நின்றாள்

நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை

நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்

கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற

முனிவனும்.= கௌதமனும்

கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வான் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading