தைத்திரீய உபநிஷத் அத்தியாயம்-1-2-3-(சீக்ஷாவல்லி)-அத்தியாயம்-1-2-3(ப்ரஹ்மானந்தவல்லி)-அத்தியாயம்-1(பிருகுவல்லி)-

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி )

முகவுரை
மனனம்
சிரவணத்தை தொடர்ந்து செய்வது மனனம் என்ற சாதனம்.  சிரவணம் செய்தவன் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை நன்கு புரிந்து கொண்டு, ஆத்மாவாகிய நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன், ஸத் ஸ்வரூபமானவன், ஞான ஸ்வரூபமானவன் என்ற நிலையில் இருப்பான். இந்த உலகமும் மித்யா என்ற அறிவும் ஏற்பட்டிருக்கும்.

  • யுக்திபூர்வமாக சிந்தித்தலே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  சிரவணத்தில் அடைந்த அறிவில் இருக்கும் சந்தேகங்களை நீக்கிக் கொள்வதற்காக செய்யப்படும் விசாரமே இதுவாகும்.
  • இதை ஏன் செய்ய வேண்டுமென்றால், சிரவணத்தால் அடைந்திருக்கும் அறிவில் நிச்சயமாக சில சந்தேகங்கள் இருக்கும்.  இவைகளை நீக்கி அடைந்த அறிவில் உறுதியாக இருக்க இந்த சாதனம் உதவும். எப்பொழுதும் சந்தேகங்களில்லாத அறிவே நிலையான, மாறாத, சரியான அறிவாக இருக்கும்.
  • சந்தேகம் எப்படி எழுகின்றதென்றால், ஒரு விஷயத்தில் ஒரு பிரமாணத்தின் மூலமாக அடையும் அறிவும், அதே விஷயத்தில் வேறொரு பிரமாணம் மூலம் வேறொரு அறிவை அடைவதன் மூலம் சந்தேகம் எழுகின்றன.  உபநிஷத் பிரமாணம் நான் பூரணமானவன், ஆனந்த ஸ்வரூபமானவன் என்று கூறுகிறது, ஆனால் நம்முடைய அனுபவ பிரமாணம் மூலமாக துக்க ஸ்வரூபமாகவும், அழிவுக்குட்பட்டவனாகவும் இருக்கின்ற நிலையை அறிந்திருக்கின்றோம்.  ஜகத் மித்யா என்பது உபநிஷத் ஞானம், நம்முடைய பிரத்யக்‌ஷ பிரமாணம் ஜகத் உண்மை என்று உணர்த்துகின்றது.  இந்த முரண்பாட்டை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
  • சங்கராச்சாரியார் ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்றுதான் என்று உபதேசிக்கின்றார் ஆனால் வேறு சில ஆச்சார்யார்கள் ஜீவனும் ஈஸ்வரனும் வேறு என்று உபதேசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் உபநிஷத்தைத்தான் பிரமாணமாக கொண்டு இவ்வாறு கூறுகின்றார்கள். இந்த முரண்பாட்டை இந்த சாதனத்தின் மூலமாகத்தான் தீர்த்துக் கொண்டு, அடைந்த அறிவில் நிலைப்பட முடியும்

சாஸ்திர அறிவுக்கு விரோதமாக அனுபவ அறிவு இருப்பதை பற்றிய விசாரம்:
உபநிஷத் நாம் ஏற்கனவே சம்சாரியாக இருக்கிறோம் என்று தெரிந்தே நீ பூரணமானவன் என்று சொல்கின்றது.  அவ்விதம் சொல்லும்போது மூன்று சரீரத்தை நீக்கித்தான் நமக்கு உபதேசிக்கின்றது.  ஆனால் நாம் இந்த சரீரத்தைத்தான் நான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  உபநிஷத் நம்மை இந்த மூன்று சரீரங்களை நீக்கி விட்டு, நீ யார் என்று புரிந்து கொள் என்று உபதேசிக்கின்றது.  இவ்விதம் இந்த முரண்பாட்டை நீக்கி கொள்ள வேண்டும்.

இந்த உலகம் மித்யா, நாம-ரூபமானது.  நம்முடைய அனுபவத்தில் எல்லாமே நன்றாக ஸ்தூலமாக தெரிந்து கொண்டிருக்கின்றது.  இவைகள் எனக்கு எப்படி நிறைவை கொடுக்க முடியாது?  என்னால் அனுபவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது, சுக-துக்கங்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.  அனுபவத்தில் சத்யமாக தெரிகின்றது.  இந்த சந்தேகத்தை இரண்டு விதத்தில் நீக்கி கொள்ளலாம்.  சாஸ்திரம் உலகம் இல்லை என்று சொல்லவில்லை, இருப்பது போல் தோன்றி கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றது., அதை விசாரம் செய்துதான் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நம் இந்திரியங்களை உண்மையை உரைக்கும் பிரமாணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  உபநிஷத்தைத்தான் பிரமாணமாக இந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு பிரமாணம் கொடுக்கும் அறிவை வேறொரு பிரமாணத்தால் நிரூபிக்க முடியாது.  கண்ணால் பார்ப்பவைகளை காதால் நிரூபிக்க முடியாது.  மாற்ற முடியாது.  அல்லது கண்ணுக்கு துணை புரியவும் முடியாது.  ஒரு பிரமாணத்திற்கு, வேறொரு பிரமாணம் ஆபாஸமாக இருக்கும் போது சந்தேகம் வரும்.  எனவே விசாரம் செய்து பிரமாண ஆபாஸத்தை கண்டுபிடித்து தெரிந்து கொள்ள வேண்டும்.  உபநிஷத்தான் உண்மையான பிரமாணம், ஞானேந்திரியங்கள்தான் பிரமாண ஆபாஸம் என்று விசாரம் மூலமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானேந்திரியங்கள் உண்மையான பிரமாணம்தான்.  கண் ஒரு பொருளை பார்க்கின்றது.  அதன் வடிவம் மனதில் பதிவாகின்றது.  கண் பொருளின் இருப்பை காட்டுகின்றது.  நம் மனம் அதை தீர்மானிக்கின்றது.  அது சத்யமா, மித்யாவை என்பதை மனம்தான் தீர்மானிக்கின்றது..  கண் கானல் நீரையும், உண்மையான நீரையும் காட்டுகின்றது.  எது உண்மையான நீர், எது பொய்யான நீர் என்பதை மனம்தான் புத்தி துணைக்கொண்டு தீர்மானிக்கிறது.  எனவே ஞானேந்திரியங்கள் உலகத்தை வெறும் காட்சியாகத்தான் காட்டுகின்றது.  மனம் காண்பது சத்யம் என்று சொல்வதை சாஸ்திரம் பொய் என்று நிரூபித்து அவைகளை நீக்குகின்றது.  இதிலிருந்து நாம் நம் அனுபவத்திற்கும் சாஸ்திர உபதேசத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

நிதித்யாஸனம் (விபரீதபாவனா நிவிருத்தி)
அடைந்த ஞானம் சந்தேகமற்றதாக இருந்தாலும், நம்முடைய ஸம்ஸ்காரங்கள் இதில் நிலைபெறவிடாமல் தடுக்கும்.  மனதை எப்படி புத்தி பழக்கி வைத்திருக்கின்றதோ அதன்படிதான் மனமானது செயல்படும்.  ஆனால் புத்தியால் மனதை அடக்கியாள முடியாது.  புத்தியின் சொற்படி நடக்காது.  புத்தியானது மனதை சம்சாரத்தில் இருக்குமாறு காலம் காலமாக பழக்கி வைத்திருக்கின்றது;  மனமானது காம, க்ரோதங்களால் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.  சாதன சதுஷ்டயத்தை அடைந்தவர்களுக்கு நிதித்யாஸனத்தை சிறிது காலம் செய்தாலே போதும்.

இந்த சாதனையை செய்யும்போது மனதை பக்குவப்படுத்தவேண்டும்.  அடைந்த ஞானத்தில் மனம் இருக்குமாறு பழக்கப்படுத்த வேண்டும்.  பண்புகளில்லாத ஞானம் மோட்சத்தைக் கொடுக்காது.  பண்புகளை நமது சுபாவமாக மாற்ற வேண்டும்.  ஞானத்திற்கு முரண்பாடாக செயல்படுவது விபரீத பாவனை என்று கூறப்படுகிறது.  பிரஹ்மமே எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஆத்மாவாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த உடல்தான் நான் என்று திடமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். சில சூழ்நிலைகளினால் நான் சுகமாக இருக்கின்றேன் என்று வரையறுக்கக்கூடாது.  இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.  சூழ்நிலைகள் மாறினாலும் நம் மனம் பாதிக்க கூடாது.

உபநிஷத் என்ற சொல்லின் பொருள் விளக்கம்:
உப + நிஷத் = மிக அருகில் + இருக்கின்றது (அமர்ந்துள்ளது)  எதற்கு மிக அருகில் இருக்கின்றது என்ற கேள்வி எழும்போது எனக்கு அருகில் இருக்கின்றது. அதுவே ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும்.,  ஆத்மா மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கின்ற மூன்று சரீரங்களும் அதற்கும் இடைவெளியே கிடையாது.  இந்த ஆத்ம ஞானத்தை கொடுப்பதே உபநிஷத் என்ற நூலாகும்

தைத்தரீய உபநிஷத்தின் முகவுரை:
இது யஜூர் வேதத்தின் ஆரண்ய பாகத்தின் இறுதியல் இருக்கின்றது.  முழு வேதமானது மந்திரம், பிராமனம், ஆரண்யம், உபநிஷத் என்று நான்காக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  முதன் மூன்று பாகங்கள் கர்ம காண்டம் என்றும், நான்காவது பாகம் ஞான காண்டம் என்று அழைக்கப்படுகின்றது.  உபநிஷத் இந்த நான்கு பாகங்களிலும் இருக்கும். இந்த உபநிஷத் ஆரண்ய பாகத்தின் இறுதியில் அமைந்திருக்கின்றது. இது மூன்று அத்தியாயங்களை (வல்லி) கொண்டது.  முதல் பகுதியில் விதவிதமன உபாஸனைகள் கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு சீக்‌ஷாவல்லி என்று பெயர். முதல் மந்திரம் சீக்‌ஷா என்று தொடங்குவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  இரண்டவது பகுதிக்கு பிரஹ்மவல்லி என்று பெயர்.  இது பிரம்ம வித்யாவை உபதேசிக்கின்றது. இதில். ஆனந்த ஸ்வரூபத்தை பற்றி விரிவாக உபதேசிப்பதால் இதற்கு ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் மிகத்தெளிவாக பஞ்சகோச விவேகம் விசாரம் செய்து பிரஹ்மமானது விளக்கப்படுகின்றது.  மூன்றாவது பகுதி ப்ருகு என்று தொடங்கும் மந்திரத்தை உடையதால் இதற்கு ப்ருகுவல்லி என்று பெயர்.  இதில் சில தியானங்கள், பண்புகள் விளக்கப்படுகின்றன.

இந்த உபநிஷத் உரைநடையில் இருப்பதால், இதை பத்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பத்திகளை அனுவாகம் என்று அழைக்கப்படுகின்றது;
————————————————————————

அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)


அனுவாகம்01 ( சாந்தி பாடம்)
ஶன் நோ மித்ர: ஶன் வருண: |
ஶன் நோ ப4வத்வர்யமா |
ஶன் நோ இந்த்3ரோ |
ஶன் நோ விஷ்ணுருக்ரம: நமோ ப்3ரஹ்மணே |
நமஸ்தே வாயோ |
த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்மாஸி
  த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்3ரஹ்ம வதி3ஷ்யாமி ரிதம் வதி3ஷ்யாமி |
ஸத்யம் வதி3ஷ்யாமி தன்மாமவது |
தத்3வக்தாரமவது | அவது மாம் | அவது வக்தாரம் ||
ஓம் ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

குரு சிஷ்யர்களான எங்களுக்கு மித்ரன் என்கின்ற தேவதை மங்கலத்தைக் கொடுக்கட்டும், சுகத்தை கொடுக்கட்டும்.  மித்ரன் என்பவர் வெளியே விடும் காற்றான பிராணனுக்கும், பகல் நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.  வருண தேவன் இவர் உள்ளே செல்கின்ற பிராணனனுக்கும், இரவு நேரத்திற்கும் அதிஷ்டான தேவதையாக இருப்பவர்.  இவரும் எங்களுக்கு மங்கலத்தையும், சுகத்தையும் கொடுக்கட்டும்.  கண்ணுக்கும், சூரியனுக்கும் அதிஷ்டானமான தேவதையாக இருக்கும் அர்யமா என்பவர் எங்களுக்கு நன்மையை தந்தருளட்டும்.  இந்திரதேவன், கைகளின் பலத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், ப்ருஹஸ்பதி, வாக்கு, புத்தி இவற்றிற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், விஷ்ணு, பாதத்திற்கு அதிஷ்டான தேவதையாக இருப்பவர், இவர்களும் எங்களுக்கு நன்மையை கொடுக்கட்டும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ப்ராண சக்திதான் காரணம்.  எனவே பிராணனின் அதிஷ்டான தேவதையை துதிக்கின்றார்கள்.  பிறகு அரியமாவிடமிருந்து எல்லா ஞானேந்திரியங்களும் நலமாக இருக்கட்டும் என்றும், நல்ல புத்திக்கும், நல்வாக்குக்கும் பிருஹஸ்பதியை வேண்டுகின்றார்கள்.  கர்மேந்திரியங்களின் நலத்திற்கு விஷ்ணுவை வேண்டுகின்றார்கள்.

எல்லா சூக்‌ஷும பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருப்பவர், எல்லா தேவதைகளுக்கும் ஆதாரமாகவும் இருப்பவர், முதன்முதலில் ஈஸ்வரனிடமிருந்து தோன்றியவர் ஹிரண்யகர்ப்பன் என்றும், சகுண பிரம்மன் என்றும் அழைக்கபடுகின்றார். இவருக்கும் நமஸ்காரம் செய்கின்றனர்.  வாயுவாகவும் இருக்கும் ஹிரண்யகர்ப்பனுக்கு நமஸ்காரம் செய்கின்றனர்.  எல்லா சூட்சும சரீரங்களுக்கும் முக்கியமானதாக கருதப்படுகின்றது வாயு.  எனவே அவரை வாயு ஸ்வ்ரூபமாக அழைக்கின்றார்கள்.

த்வமேவ ப்ரதியக்‌ஷம் பிரஹ்ம அஸி – நீங்களே நேரிடையாக அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள்.
த்வமேவ பிரத்யக்‌ஷ பிரஹ்மன் வதிஷ்யாமி – நீங்களே நேரிடையாக தெரிகின்ற பிரம்மனாக இருக்கின்றீர்கள் என்று அழைக்கின்றோம்.
ரிதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி – சரியான ஞானத்தை கொடுக்க கூடியவர் என்றும், ஸத்யமாக இருப்பவர் என்றும் உங்களை அழைக்கின்றோம்.

ஹிரண்யகர்ப்பர் கர்ம பலனை தந்து கொண்டிருப்பவர்.
ரிதம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொள்ளும் திறமை என்று பொருள்.
ஸத்யம் என்ற சொல்லுக்கு சரியாக புரிந்து கொண்டதை வாக்கில் சொல்வது என்று பொருள்.

சாஸ்திரத்தை படிக்கும் நான் அது போதிக்கின்ற சரியான அறிவை அடைய வேண்டும். அவ்வாறு அடைந்த அறிவு என்னிடத்தில் நிலை பெற வேண்டும். அதை வாக்கினாலே சரியாக சொல்ல வேண்டும்.  ஹிரண்யகர்ப்பன் அருள் இருந்தால்தான் நம்மால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.

தத் மாம் அவத். தத் வக்தாரம் அவத் – என்னை காப்பாற்று, என் குருவையும் காப்பாற்று என்று ஹிரண்ய கர்ப்பனிடம் வேண்டுகின்றனர்.  இங்கே என்னை காப்பாற்று என்பது ஞானத்தை அடைவதற்கு இடையூறாக இருப்பவகளை நீக்கி அதை அடைவதற்கும், சாதன சதுஷ்டய சம்பத்தியையும் அடைந்திட அருள் புரிய வேண்டும் என்று வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்,. அதேபோன்று குருவுக்கு நீண்ட ஆயுளை கொடுத்தும், அடைந்த அறிவை சரியாக உபதேசிக்கும் திறமையை கொடுத்தும் காப்பாற்று என்று வேண்டுகின்றான்.

அனுவாகம்02
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம: வர்ண: ஸ்வர: மாத்ரா
  ப3லம் ஸாம ஸந்தான: இத்யுக்த: ஶீக்ஷாத்4யாய:
வேதத்தை படிக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.
ஸீக்ஷாம் ஓயாக்யாஸ்யாம – எழுத்துக்களை உச்சரிக்கும் முறையை சொல்கின்ற  சீக்‌ஷா சாஸ்திரத்தை நாங்கள் சொல்கின்றோம்.
வர்ண: – எழுத்து – சரியாக உச்சரிக்க வேண்டும்.
ஸ்வரம்: – மூன்று விதமாக எழுத்தை உச்சரித்தல், உயர்த்தி படித்தல் (உதாத), கீழே இறக்கிப் படித்தல் (அனுதாத்த), சமமாக படித்தல் (சொரிதஹ)
மாத்ர – மாத்திரை – உச்சரிக்கும் கால அளவு (குறில், நெடில், ப்லுதம்)
3லம் – அழுத்தம்,
ஸாம – படிக்கும் வேகம்;
ஸந்தானம் – இடைவெளி
இதி உக்த – ஆகியவை கூறப்பட்டுள்ளது.
ஶீக்ஷாத்4யாய – சீக்‌ஷா அத்தியாயத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அனுவாகம்3.1
இங்கு தியானம் ஒன்று கூறப்படுகின்றது.  இதற்கு ஸம்ஹிதா தியானம் என்று பெயர். முதலில் சிஷ்யனின் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது

ஸஹ நௌ யஸ: ஸஹ நௌ ப்3ரஹ்மவர்சஸம் அதா2த:
உபநிஷத3ம் வ்யாக்2யாஸ்யாம: பஞ்சஸ்வதி4கரணேஷு
அதி4லோகமதி4ஜ்யௌதிஷமதி4வித்3யமதி4ப்ரஜமத்4யாத்மம்
தா மஹாஸம்ஹிதா இத்யாசக்ஷதே ||

இந்த உபாஸனையானது சிஷ்யனால் உபாஸிப்பதால், குருவால் உபதேசிக்கப்படுவதால் வரும் புகழ் எங்களை அடையட்டும், தேஜஸ் இருக்கட்டும்.  வேதாந்த படிக்க வந்த மாணவன் இங்கு தனக்கு புகழ் என்று குறிப்பிடுவது ஸ்வாத்யாயம்- வேதாந்தத்தை படித்தல், ப்ரவசனம் – கற்றதை சொல்லிக் கொடுத்தல் என்பதையும், குருவினுடைய புகழால் அவரது உபதேசத்தை கேட்டு பயனடைவதற்கு சீடர்கள் வெவ்வேறு பகுதியிலிருந்து வருவார்கள் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சீடன் தான் கற்றதை பிறருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், தான் பெற்ற அறிவை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அதனால் அவன் பெற்ற அறிவு மென்மேலும் வளரும், நிதித்யாஸனத்திற்கு பயன்படும்.  குரு-சிஷ்ய பரம்பரை (சம்பிரதாய ரக்‌ஷணம்) தொடர்ந்து வரும்.  ரிஷிகளுக்கு நாம் கடன்பட்டிருக்கின்றோம். அந்த கடனை அடைப்பதற்கு இந்த புகழ் உதவி புரியும்.

ஸம்ஹிதா என்ற பெயருடைய உபாஸனையை ஐந்துவிதமான விஷயங்களுடன் தெளிவாக விளக்கப்படுகின்றது.  அவைகளாவது இந்த உலக சம்பந்தப்பட்ட நான்கு தேவதைகளைக் குறித்து தியானித்தல், ஒளி சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, அறிவு சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை, இனபெருக்கம் சம்பந்தமான தேவதைகளைப்பற்றியதான உபாஸனை , உடல் சம்பந்தமான தேவதைகளைப் பற்றியதான உபாஸனை. இவைகள் யாவும் மேலான ஸம்ஹிதா என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.

விசாரம்:-
ஸம்ஹிதா – இரண்டு எழுத்துக்களுக்கிடையே இடைவெளியில்லாமல் இருப்பது.

உபாஸனை மூன்று பகுதிகளை உடையது.

  1. உபாஸகன்          – உபாஸனை செய்பவன்,
  2. உபாஸன தேவதை   – எந்த தெய்வத்தை குறித்து தியானிக்கின்றோமோ அதை குறிக்கின்றது,
  3. ஆலம்பனம்          – ஏதாவது ஒரு உருவத்தை (அ) குறியை வைத்துக்கொண்டு அதன் மூலமாக கண்ணுக்கு தெரியாத அந்த தேவதையை தியானித்தல்.

இந்த உபாஸனையில் நான்கு எழுத்துக்களை ஆலம்பனமாக வைத்து நான்கு தேவதைகளை உபாஸனை செய்யப்படுகின்றது. சந்தி என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாகும். நம்மை, சார்ந்தது என்ற இந்த இரண்டு வார்த்தைகளை சேர்க்கும்போது “நம்மைச்சார்ந்தது” என்று ஒரு சொல்லாக வருகின்றது.  முதல் சொல்லின் கடைசி எழுத்து பூர்வ ரூபம், இரண்டாவது சொல்லின் முதல் எழுத்து உத்தர ரூபம்.  இதற்கிடையில் உள்ள இடைவெளி சந்தி என்றும், இரண்டையும் சேர்க்கின்ற எழுத்து சந்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இஷேத்த்வா – இஷே + த்வா
இஷே என்ற சொல்லின் கடைசி எழுத்து ” ஏ “ – பூர்வ ரூபம்
த்வா என்ற சொல்லின் முதல் எழுத்து “ த் ”   – உத்தர ரூபம்

இரண்டிற்குமிடையே உள்ள இடைவெளி சந்தி என்று பெயர்.
த் என்ற எழுத்து இரண்டையும் இணைக்கும் இதுவே சந்தானம்.
ஒவ்வொன்றிலும் ஆலம்பனமாக வைத்து ஒவ்வொரு தேவதைகளை உபாஸிக்க வேண்டும்.  இதுபோல ஐந்து விதமான உபாஸனைகளைப் பற்றி விளக்கப்படுகின்றது.

அத2 – பிறகு (வர்ண, ஸ்வர முதலியவற்றை உச்சாடனம் செய்த பிறகு )
அத  – ஆகவே 1. உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படும், 2. மேலே குறிப்பிட்ட சப்தங்களை பயிற்சி செய்வதற்கு சப்தக்ரகணம்.

ஞானத்தை அடைவதற்கு இரண்டு படிகள் 1. சப்தக்ரகணம், 2. அர்த்தக்ரகணம்.  முதலில் சொல்லைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.  சப்த ஞானத்தை உபாஸனை செய்த பிறகு அர்த்த ஞானத்திற்கு சென்றால் விரைவாக அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
அனுவாகம்3.2
அதா2தி4லோகம் |
ப்ருதி2வீ பூர்வரூபம் |
த்3யௌரூத்தரரூபம் |
ஆகாஶ: ஸந்தி4: :
வாயு: ஸந்தா4னம் |
இத்யாதி4லோகம் ||

இப்பொழுது உலக சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில் நிலத்தை வைத்து தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சுவர்க்கத்தை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் ஆகாசத்தை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் வாயுவை தியானிக்க வேண்டும். இவ்வாறு உபாஸனை செய்வதால் மனம் ஒருமுகப்படுவதோடு-மட்டுமல்லாமல் விரிவடையவும் செய்கின்றது,

அனுவாகம்3.3
அதா2தி4ஜ்யௌதிஷம் |
அக்3னி: பூர்வரூபம் |
ஆதி3த்ய உத்தரரூபம் |
அப: ஸந்தி4: வைத்3யுத: ஸந்தா4னம் |
இத்யதி4ஜ்யௌதிஷம் ||
இப்பொழுது ஒளி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  நெருப்பை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சூரியனை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் மழைநீரை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் மின்னலை தியானிக்க வேண்டும். இவ்விதம் ஒளி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.4
அதா2தி4வித்3யம் |
ஆசார்ய: பூர்வரூபம் |
அந்தேவாஸ்யுத்தர்ரூபம் |
வித்3யா ஸந்தி4: ப்ரவசனம் ஸந்தா4னம் |
இத்யாதி4வித்3யம் ||
இப்பொழுது அறிவு சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  குருவை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் சிஷ்யனை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் அறிவை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் உபதேசித்தலை தியானிக்க வேண்டும். இவ்விதம் அறிவு சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.5
அதா2தி4ப்ரஜம் |
மாதா பூர்வரூபம் |
பிதோத்தர்ரூபம் |
ப்ரஜா ஸந்தி4: ப்ரஜனனம் ஸந்தா4னம் |
இத்யதி4ப்ரஜம் ||
இப்பொழுது சந்ததி சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில் தாயை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் தந்தையை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் குழந்தையை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் புணர்ச்சியை தியானிக்க வேண்டும். இவ்விதம் சந்ததி சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.6
அதா2த்4யாத்மம் |
அத4ரா ஹனு: பூர்வரூபம் |
உத்தரா ஹனுருத்தர்ரூபம் |
வாக் ஸந்தி4: |
ஜிஹ்வா ஸந்தா4னம் |
இத்யத்4யாத்மம் ||

இப்பொழுது உடல் சம்பந்தமான உபாஸனை துவங்குகின்றது.  பூர்வ எழுத்தில்  கீழ்வாய்க்கட்டையை தியானிக்க வேண்டும்.  உத்தர எழுத்தில் மேல்வாய்க்-கட்டையை தியானிக்க வேண்டும்.  இடைவெளியில் பேசும்திறனை தியானிக்க வேண்டும்.  சேர்க்கும் எழுத்தில் நாக்கை தியானிக்க வேண்டும். இவ்விதம் உடல் சம்பந்தமான இரண்டாவது வகை தியானம் முடிவடைகின்றது

அனுவாகம்3.7
இதீமா மஹாஸம்ஹிதா: |
ய ஏவமேதா மஹாஸம்ஹிதா ஓயாக்2யாதா
  வேத3 ஸம்தீயதே ப்ரஜயா பஶுபி4: |
ப்3ரஹ்மவர்சஸேனான்னாத்3யேன ஸுவர்க்3யேண லோகேன ||

இவ்விதம் இந்த மேலான உபாஸனைகள் விளக்கப்பட்டிருக்கின்றது. யாரொருவன் மேலே விளக்கிய முறைப்படி இந்த மேலான உபாஸனைகளை செய்கின்றானோ அவனுக்கு இந்த உலகில் செல்வங்களையும், ஒளிபொருந்திய தேகத்தையும், வயிறார உணவும் கிடைக்கப்பெற்றவனாக இருப்பான். இறந்தபிறகு சுவர்க்கம் போன்ற உயர்ந்த லோகத்தை அடைந்து சுகித்து இருப்பான்.


oo000oo—-

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01(சீக்ஷாவல்லி)-பகுதி-2

அனுவாகம்4.1
யஶ்ச2ந்த3ஸம்ருஷபோ4 விஶ்வரூப: |
ச2ந்தோ3ப்4யோÅத்4யம்ருதாத்ஸம்பூ4வ |
ஸ மேந்த்3ரோ மேத4யா ஸ்ப்ருணோது |
அம்ருதஸ்ய தே3வ தா4ரணோ பூ4யாஸம் |
ஶரீரம் மே விசர்ஷணம் |
ஜிஹ்வா மே மது4மத்தமா |
கர்ணாப்4யாம் பூ4ரி விஶ்ருவம் |
ப்3ரஹ்மண: கோஶோÅஸி மேத4யா பிஹித: |
ஶ்ருதம் கோ3பாய ||

இது ஒரு பிரார்த்தனை, மேதா பிரார்த்தனை என்று அழைக்கப்படுகின்றது. வேதாந்த மாணவர்களுக்கு இது மிக முக்கியமான பிரார்த்தனை. இது ஓங்காரத்தை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனிடம் சில வேண்டுதல்களை அடைவதற்காக செய்யப்படுகின்ற உபாஸனை. ஓங்காரம் ஏன் உயர்ந்ததாக கருதப்படுகின்றது என்றால் இது எல்லா சப்தத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, வேதத்திற்கே ஆதாரமாக இருக்கின்றது.  பதார்த்தமில்லாமல் பதங்கள் கிடையாது. எனவே இது பதார்த்தத்திற்கும் ஆதாரமாகவே இருக்கின்றது.  ஓம் = அ + உ + ம் இவைகள் முறையே தோற்றம், ஸ்திதி, லயம் இவைகளை குறிக்கின்றது.

  1. ஓங்காரம் வேத மந்திரங்களில் சிறந்தது மேலும் அனைத்துமாகவும் விளங்குகின்றது.
  2. இதை ஆலம்பனமாக கொண்டு தியானிக்கும் ஈஸ்வரன் எனக்கு அடைந்த அறிவில் நிலைப்படுத்துவதன் மூலம் வலிமைப்படுத்து,காப்பாற்று.  கற்றதை நினைவில் வைக்கும் சக்தி, ஞாபக சக்தியை கொடு.
  3. ஒங்கார ரூபமாக இருக்கும் இறைவா,மரணமில்லா பெருவாழ்வு தரும் பிரம்ம ஞானத்தை உடையவனாக இருப்பேனாக. என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பிரம்மஞான முயற்சிக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு சக்தியுடையதாக இருக்கட்டும்.
  4. என்னுடைய நாவிலிருந்து வெளி வரும் வாக்கானது இனிமையாக,மிருதுவாக இருக்கட்டும்.  நாம் நம்மையறியாமல் மற்றவர்களை சொல்லால் துன்புறுத்திவிடுகின்றோம். என் நாவிலிருந்து வரும் வார்த்தைகள் யாரையும் துன்புறுத்தாத வகையில் இருக்கட்டும். மனதில் இருக்கும் அறிவை தெளிவாக மற்றவர்களுக்கு வாக்கின் மூலமாக சொல்லும் திறமை வேண்டும்.
  5. என்னுடைய இரண்டு செவிகளினால் வேத சாஸ்திரத்தை பலமுறை எனக்கு புரியும் வரை,சரியான அறிவு அடையும் வரை கேட்க வேண்டும்.
  6. பிரம்மத்திற்கு உறையாக இருக்கும் ஒங்காரமே!நான் உன்னை விசாரம் செய்வதன் மூலம் மறைத்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தை நான் அறியும் வகையில் மறைப்பை எடுத்து விடு.  ஓங்காரமே ஆலம்பனமாக இருப்பதால் அது பிரம்மத்தை மறைத்துக்கொண்டிருக்கும் உறையாக கூறப்படுகின்றது.
  7. குருமுகமாக நான் பெற்ற வேத சாஸ்திர உபதேசம் என்னிடமே நிலையாக இருக்கட்டும்.

 

இந்த பிரார்த்தனைகளை ஜபம் மூலமாக ஈஸ்வரனிடம் கேட்க வேண்டும்.  இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து பிறகு பலமுறை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்ய வேண்டும்.  இதை விரதமாகவும் எடுத்துக்கொண்டு இவைகளை அடையும் வரை ஜபத்தை செய்து கொண்டிருக்க வேண்டும்.

அனுவாகம்4.2
அவஹந்தி விதன்வானா |
குர்வாணாசீரமாத்மன: |
வாஸாம்ஸி மம கா3வஶ்ச |
அன்னபானே ச ஸர்வதா3 |
ததோ மே ஶ்ரியமாவஹ |
லோமஶாம் பஶுபி4: ஸஹ ஸ்வாஹா ||
இது ஸ்ரீகாமாஸ்ய ஹோமம் என்றும் ஆவஹந்தி ஹோமம் என்றும் அழைக்கப்படும்.
முன்பு சொல்லப்பட்ட பிரார்த்தனையின் பலனை அடைந்த பிறகு, நற்பண்புகளை அடைந்தபிறகு எனக்கு நிறைய செல்வங்களையும், செழிப்பையும் அடைய அருள் புரிவாயாக.  ஜீவனின் உண்மையான லட்சியத்தை அறிந்த பிறகு ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு இந்த செல்வங்கள் அலங்காரமாக இருக்கும்.  ஆத்ம ஞானத்தை அடையாமல் வரும் செல்வங்கள் அவனை அழித்து விடும்.  எல்லா காலங்களிலும் எனக்கு ஆடைகளையும், பசுக்களையும், செல்வங்களையும், உணவையும், நீரையும், ரோமங்களுடன் கூடிய ஆடுமாடுகளையும் என்னிடம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதிக காலம் இருக்க வேண்டும் அதுவும் உடனே கிடைத்திட வேண்டும்.

எதற்காக இந்த செல்வங்களை கேட்டு பெற வேண்டும்?

  • கர்மத்தை செய்வதற்காகத்தான் இவைகளை பயன்படுத்த வேண்டும், தன்னுடைய போகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.  உபாஸனம் சுதந்திரம், கர்மம் தனதந்திரம்.  தியானம் செய்ய வேண்டுமென்றால் எதுவும் தேவை கிடையாது.  ஆனால் யாகம் செய்ய வேண்டுமென்றால் பணமும், மற்றவர்கள் உதவியும் தேவைப்படுகின்றது.  சத்துவகுண பிரதானமுடையவர்களால்தான் தியானம் செய்ய முடியும். இந்த மனத்தூய்மையை அடைவதற்காக கர்மம் செய்ய வேண்டும். இந்த கர்மத்தை செய்வதற்காகத்தான் செல்வத்தை வேண்டுகின்றான்.
  • கர்மம் எதற்கு செய்ய வேண்டும்?  மனத்தூய்மையை அடைவதற்கு கர்மம் செய்தாக வேண்டும். போகத்திலிருந்து விடுபட தானம் செய்ய வேண்டும், இவைகளுக்காக செல்வம் தேவை. பணமிருந்தும் தானம் செய்யாதவனையும், பணமில்லாமல் இருந்து செய்யாதவனையும் கல்லைக்கட்டி நீரில் போட வேண்டும்.
  • மனத்தூய்மை எதற்காக பயன்படும்?  இது ஆத்ம ஞானத்தை அடைவதற்காக தேவை.  குருவின் உபதேசம் ஞானமாக மாற வேண்டுமானால் மனத்தூய்மை வேண்டும்.

 

அனுவாகம்4.3
ஆ மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
வி மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ப்ர மா யந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
த3மாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
ஶமாயந்து ப்3ரஹ்மசாரிண: ஸ்வாஹா |
யஶோ ஜனேÅஸானி ஸ்வாஹா |
ஶ்ரேயான் வஸ்யாஸோÅஸானி ஸ்வாஹா |
யதா2ப: ப்ரவதா யந்தி |
யதா2 மாஸா அஹர்ஜரம் |
ஏவம் மாம் ப்3ரஹ்சாரிண: |
தா4தராயன்து ஸர்வத: ஸ்வாஹா |

வேதம் படிக்க விரும்பும் மாணவர்கள் என்னை நோக்கி வரட்டும்.  விதவிதமான தேசத்திலிருந்து, விதவிதமான தகுதிகளை உடையவர்கள் என்னிடன் வர வேண்டும். புத்திக்கூர்மையுடைவர்கள், அறிவுத்திறமையுடைவர்கள் என்னிடம் வரட்டும். இந்திரிய ஒழுக்கமுடையவர்கள், மனக்கட்டுபாடுடையவர்கள் என்னிடம் வரட்டும். .புகழ் பெற்ற ஆசிரியனாக இருப்பேனாக.  செல்வந்தர்களுக்குள் மேலானவனாக இருப்பேனாக.  எப்படி நீரானது கீழேயுள்ள பிரதேசத்தை நோக்கி இயற்கையாக ஒடுகின்றதோ அதுபோல மாணவர்கள் விரும்பி, வேகமாக ஓடிவர வேண்டும்.  எவ்விதம் மாதங்கள் வருடத்தை நோக்கி ஓடுகிறதோ, அதுபோல மாணவர்கள் என்னைத்தேடி வரவேண்டும்.  இறைவா எல்லா திசைகளிலிருந்து என்னிடம் வரட்டும்.

இதுவரை பார்த்த பிரார்த்தனைகள் அனைத்தும் சாதனா பிரார்த்தனை என்று கூறப்பட்டுள்ளது.  ஏனென்றால் இவைகள் வெறும் சாதனங்கள்தான் இதைக்கொண்டுதான் சாத்தியத்தை அடைய வேண்டும். இவைகளை சாத்தியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அனுவாகம்4.4
தம் த்வா ப4க3 ப்ரவிஶனி ஸ்வாஹா |
ஸ மா ப4க3 ப்ரவிஶ ஸ்வாஹா |
தஸ்மின்த்ஸஹஸ்ரஶாகே2 |
நி ப4காஹம் த்வாயி ம்ருஜே ஸ்வாஹா |
ப்ரதிவேஶோÅஸி ப்ர மா பாஹி ப்ர மா பத்3யஸ்வ ||

இது சாத்திய பிரார்த்தனை: நாம் அடைய வேண்டியதை பிரார்த்திக்கப்படுகின்றது.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கிய பிரார்த்தனையாக கருதப்படுகின்றது.  சாதனங்கள் அடைந்தாலும் அவைகளை பயன்படுத்தி சாத்தியத்தை அடைவதற்கு மிகவும் கடினம்.  எனவே சாத்தியத்தையையும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.  ஆத்மஞானம் சாதனம் என்றால், சாத்தியம் என்பது மோட்சம் (ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்)
கர்மஜ தாதாத்மியம் – கர்மவசத்தினால் நான் என்ற அகங்காரம்
மோகஜ தாதாத்மியம் – மோகவசத்தினால் நான் என்ற அகங்காரம்

ஓங்கார ரூபமாக இருக்கின்ற இறைவா நான் உங்களிடத்தில் நுழைந்து விடுவேனாக, கலந்துவிடுவேனாக, அப்படிபட்ட நீங்களும் என்னிடத்தில் கலந்து விடுவீர்களாக, நுழைந்து விடுவீர்களாக.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை வேண்டுவதாக புரிந்து கொள்ள வேண்டும்.  ஆயிரக்கணக்கான ரூபங்களாகவும், அனைத்து ரூபங்களாகவும் உள்ள உங்களிடத்தில் இறைவா, நான் தூய்மையடைய வேண்டும்.  இந்த பிரார்த்தனையால் உலகத்தின் மீதுள்ள ராக-துவேஷம் நீங்கிவிடும். (ஈஸா வாக்கியம் இதம் ஸர்வம்).  நீங்கள்தான் நான் ஓய்வெடுக்க உதவும் இடமாக இருக்கின்றீர்கள். என்னுடைய லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது தோல்வியுற நேர்ந்தால், உங்களிடம் வந்து மீண்டும் சக்தி பெற வேண்டும், நம்பிக்கை குறையும் போது உங்களிடம் வந்து புதிய சக்தி பெற்று திரும்ப வேண்டும்.  எனக்கு உங்களைப்பற்றி விளக்குங்கள், உங்கள் ஸ்வரூபத்தை விளக்குங்கள். நீங்கள் என்னிடத்தில் வர வேண்டும்.

அனுவாகம்5.1
பூர்பு4வ: ஸ்வரிதி வா ஏதாஸ்திஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தாஸாமு ஹ ஸ்மைதாம் சதுர்தீ2ம் |
மாஹசமஸ்ய: ப்ரவேத3யதே |
மஹ இத |
தத்3ப்3ரஹ்ம |
ஸஹ ஆத்மா |
அங்க3ன்யன்யா தே3வதா: ||

இது ஒரு வகையான உபாஸனையை கூறுகின்றது. இதற்கு வ்யாஹிருதி என்று பெயர்.  இந்த உபாஸனையில் தேவதை ஹிரண்யகர்ப்பர், ஆலம்பனமாக வ்யாஹிருதிகள் வைத்துக் கொள்ளப்படுகின்றது.  பிரம்ம தேவர் மூன்று சப்தங்கள் எழுப்பினார்.  அவைகள் பூ, புவ, ஸுவ இவைகளே மூன்று வ்யாஹிருதிகள்.  மஹாசமஸ்யர் என்ற ரிஷி மஹ என்ற நான்காவது வ்யாஹிருதியை வெளிப்படுத்தினார்.

வ்யாஹிருதி என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் உண்டு.  அவைகள்:

  1. உச்சாரணம் – பிரம்மாவின் வாயினால் உச்சரிக்கப்பட்ட்தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
  2. விதவிதமான கர்மங்களில் உபயோகப்படுத்தபட்டிருக்கும்.
  3. ஹரதி பாபானி – இதை உச்சரிப்பதால் நமது பாவங்கள் நீங்கி விடுகின்றது
  4. பொருளற்ற மங்கல சப்தம்.

மந்திர விளக்கம்:-
பூ, புவ, ஸுவ என்ற இந்த மூன்று வ்யாஹிருதிகள். இவைகளுடன் நான்காவதாக ஒரு வ்யாஹிருதியை மஹாசமஸ்யர் என்ற ரிஷி வெளிப்படுத்தினார்.  ”மஹ” என்பதே அந்த வ்யாஹிருதி, இது மிகப்பெரியதாக இருக்கின்றது., ஆத்மாவை வியாபித்திருக்கின்றது, மற்றவைகள் அதனுடைய அங்கங்களாக இருக்கின்றது.

அனுவாகம்5.2

பூ4ரிதி வா அயம் லோக: | பு4வ இத்யந்தரிக்ஷம் |
ஸுவரித்யஸௌ லோக: மஹ இத்யாதி3த்ய: |
ஆதி3த்யேன வாவ ஸர்வே லோகா மஹீயந்தே ||
இது அதிலோக தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் இந்த உலகத்தையும்,  புவ என்பதில் இடையிலுள்ள உலகங்களையும், ஸுவ என்பதில் சுவர்க்க லோகத்தையும், மஹ என்பதில் சூரியனையும் தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.3
பூரிதி வா அக்3ன: | பு4வ இத வாயு: | ஸுவரித்யாதி3த்ய: |
மஹ இத சந்த3மா: | சந்த்3ரமஸா வாவ ஸர்வாணி ஜ்யோதீம்ஷி மஹீயந்தே ||
இது அதிதெய்வ தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் அக்னியையும்,  புவ என்பதில் வாயுவையும், ஸுவ என்பதில் சூரிய தேவதையையும், மஹ என்பதில் சந்திரனையும் தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.4
பூ4ரிதி வா ரிச: |
பு4வ இத ஸாமானி |
ஸுவரிதி யஜும்ஷி |
மஹ இதி ப்3ரஹ்ம |
ப்3ரஹ்மணா வாவ ஸர்வே வேதா3 மஹீயந்தே ||

இது அதிவேத தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் ரிக் வேதத்தையும்,  புவ என்பதில் சாம வேதத்தையும், ஸுவ என்பதில் யஜுர் வேதத்தையும், மஹ என்பதில் பிரம்மத்தையே ஓங்காரமாக அங்கியாக தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.5
பூ4ரிஹி வை ப்ராண: |
பு4வ இத்யபான: |
ஸுவரிதி வ்யான: |
மஹ இத்யன்னம் ||

இது அதிப்ராண தியானம்.  பூ என்ற வ்யாஹிருதியில் பிராணனையும் (வெளியே செல்லும் காற்று),  புவ என்பதில் அபானனையும் (உள்ளே செல்லும் காற்றையும்), ஸுவ என்பதில் வியானனையும் (ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்து செல்லும் காற்று), மஹ என்பதில் அன்னத்தையே அங்கியாக தியானிக்க வேண்டும்..

அனுவாகம்5.6
அன்னேன வாவ ஸர்வே ப்ராண மஹீயந்தே |
தா வா ஏதாஶ்சதஸ்ரஶ்சதுர்தா4 |
சதஸ்ரஶ்சதஸ்ரோ வ்யாஹ்ருதய: |
தா யோ வேத3 |
ஸ வேத3 ப்3ரஹ்ம |
ஸர்வேÅஸ்மை தே3வா ப3லிமாவஹந்தி ||

இவைகளெல்லாம் நான்கு வியாஹிருத்திகள் நான்கு விதமாக அமைந்துள்ளது.  ஒவ்வொரு தியானத்திலும் நான்கு வ்யாஹிருதிகள் நான்கு விதமாக தியானிக்கப்படுகின்றது.  இங்கே எந்த வரிசைப்படி சொல்லப்பட்டிருக்கின்றதொ அதே வரிசையில்தான் தியானம் செய்ய வேண்டும்.
எந்த உபாஸகர்கள் இந்த வ்யாஹிருதிகளை அறிந்து உபாஸனை செய்கின்றார்களோ அவர்கள் ஹிரண்யகர்ப்பனை அறிவார்கள்.  இந்த உபாஸனைகளோடு அடுத்த உபாஸனையும் சேர்த்து செய்ய வேண்டும்.  அப்போதுதான் இது முழுமையடையும். இந்த உபாஸகனுக்கு எல்லா தேவதைகளும் பொருளைக் கொடுப்பார்கள்.  ஏனென்றால் இவன் உபாஸனை முடிவில் ஹிரண்யகர்ப்பனிடத்தில் ஐக்கியமாகி விடுகின்றான்.  ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுக்கும் தலைவனாக இருப்பதால் அவருக்கு எல்லா தேவதைகளும் பொருட்களை கொடுப்பார்கள்.

அனுவாகம்6.1
ஸ ய ஏஷோந்தரஹ்ருத3ய ஆகஶ: |
தஸ்மின்னயம் புருஷோ மனோமய: |
அம்ருதோ ஷ்ரிண்மய: |
அந்தரேண தாலுகே |
ய ஏஷ ஸ்தன இவாவலம்ப3தே |
ஸேந்த்3ரயோனி: |
யத்ராஸௌ கேஶாந்தோ விவர்த்தே |
வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே ||

இது ஹிரண்யகர்ப்ப உபாஸனையை விளக்குகின்றது. இதற்கு அந்தர்ஹ்ருதய உபாஸனை, அஹங்கிரக உபாஸனை என்றும் அழைக்கப்படுகின்றது.  மாயையுடன் கூடிய பிரம்மம் ஈஸ்வரன், சூக்‌ஷூம பிரபஞ்சத்திற்கு ஆதரமானவராக இருப்பவர் ஹிரண்யகர்ப்பர்.  இந்த உபாஸனைக்கு இவரே தேவதையாக இருக்கின்றாr. இது மனதை ஆலம்பனமாகக் கொண்டது.

விசாரம்:
இருமையில்தான் பயம் ஏற்படும். இதுவரை செய்த உபாஸனைகள் அனைத்தும் பேத உபாஸனம்.  இதில் உபாஸகனும், உபாஸ்ய தேவதைகளும் வெவ்வேறாக இருக்கின்றது.  இந்த உபாஸனைக்கு அபேத உபாஸனை என்று பெயர்.  இதில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றது.  உபாஸகனே ஆலம்பனம், பிறகு அவனே ஹிரண்யகர்ப்பனாக உபாஸிப்பான். இதில் ஹிரண்யகர்ப்பனின் லட்சணம், ஆலம்பனம், உபாஸகன் இறந்த பிறகு எந்த வழியாக ஹிரண்யகர்ப்பனை அடைவான், உபாஸனையின் பலன் ஆகியவைகள் கூறப்பட்டிருக்கின்றது.

நம்முடைய இதயத்திற்குள் இருக்கின்ற ஆகாசமே ஆலம்பனமாக கொள்ள வேண்டும். அதில் ஹிரண்யகர்ப்பன் இருப்பதாக பாவித்து தியானிக்க வேண்டும்.  இவரே எல்லா தேவதைகளுக்கும் தலைவராக இருக்கின்றார்.  அத்தகையவர் நம் இதயத்திற்குள் இருக்கின்றார் என்று பாவிக்க வேண்டும்.  இவர் நம்முடைய மனதில் வெளிப்படுபவர், மனதாலே அறியப்படுபவர், எல்லா  ஜீவராசிகளுக்குள்ளும் இருக்கின்றார். எல்லா உலகங்களையும் வியாபித்திருப்பவர்.  அறிவு ஸ்வரூபமானவர், எல்லா மனங்களையும் தன்னுடையாதாக அபிமானம் கொண்டிருப்பவர். மனதாலே அறியப்படுபவராக இருப்பவர்.  அதிக காலம் இருப்பவர், இந்த ஸ்ருஷ்டி இருக்கும்-வரை இருப்பவர்.  பிரளயத்தின் போதுதான் ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவார்.  இவர் ஞான ஸ்வரூபமாகவும் இருக்கின்றார்.  இப்படிபட்ட ஹிரண்யகர்ப்பனை நம்முடைய இதயத்திற்குள் இருப்பதாக நினைத்து உபாஸிக்க வேண்டும். தொண்டை பகுதியில் பசுவின் பால்காம்பு போல் மாமிச பிண்டமானது தொங்கிகொண்டு இருக்கின்றது.  அதன் நடுவே ஸூஷும்னா நாடி செல்கிறது. இது தலையில் உள்ள ஒரு முடியின் அடிப்பகுதி வரை சென்று மண்டை ஓட்டை துளைத்து வெளியே வருகின்றது.  இந்த நாடியானது ஹிரண்யகர்ப்பனை அடைவதற்கு மார்க்கமாக இருக்கின்றது.

அனுவாகம்6.2
பூரித்யக்3னௌ ப்ரதிதிஷ்த்தி |
பு4வ இதி வாயௌ |
ஸுவரித்யாதி3த்யே |
மஹ இதித ப்3ரஹ்மணி |
ஆப்னோதி ஸ்வாராஜ்யம் |
ஆப்னோதி மனஸஸ்பதிம் |
வாக்பதிஶ்சக்ஷுஷ்பதி |
ஶ்ரோத்ரபதிர்விக்3ஞானபதி: |
ஏதத்ததோ ப4வதி |
ஆகஶ்ஶ்ரிரம் ப்3ரஹ்ம |
ஸத்யாத்ம ப்ராணாரமம் மன ஆனந்தம் |
ஶாந்திஸம்ருத்3த4மம்ருதம் |
இதி ப்ராசீனயோக்3யோபாஸ்ஸ்வ ||

பூ என்ற வ்யாஹிருதியில் அக்னி தேவதையை உபாஸிப்பவன் அந்த தேவதையுடன் கலந்து விடுகின்றான்.  புவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட வாயு தேவதையுடன் கலந்து விடுகின்றான்.  ஸுவ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்பட்ட சூரிய தேவதையுடன் கலந்து விடுகின்றான். மஹ என்ற வ்யாஹிருதியில் உபாஸிக்கப்-பட்ட ஹிரண்யகர்ப்பனாக மாறி விடுகின்றான். தனக்குத் தானே அதிபதியாக இருக்கும் நிலைமையை அடைகின்றான்.  அனைத்துக்கும் அதிபதியாகின்றான்.  எல்லா மனங்களுக்கும் அதிபதியாக இருக்கும் நிலையை அடைகின்றான்.  எல்லா வாக்கிற்கும் தலைவனாகின்றான்.  எல்லோருடைய கண்களுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய செவிகளுக்கும் தலைவனாகின்றான். எல்லோருடைய புத்தியிலும் இருந்து கொண்டு அறிவை அடைகின்றான்.  இறந்ததிற்குப்பிறகு மேலும் சிலவற்றை அடைகின்றான்.  ஹிரண்யகர்ப்பனின் லட்சணங்களனைத்தும் இந்த சாதகனுக்கு வந்து விடுகின்றது.  ஆகாசத்தைப் போல சூக்‌ஷூமமான உடலையடைகின்றான், எங்கும் வியாபித்து இருப்பான். உருவமாகவும் அருவமாகவும் இருக்கின்றான்.  இந்திரியங்கள் விளையாட்டு மைதானமாக இருக்கின்றது.  எல்லா இந்திரியங்களும் இவனை சார்ந்து இருக்கின்றது.  எல்லா மனங்களையும் தனக்கு ஆனந்தம் தருவதாக வைத்திருக்கின்றார்.   அமைதியாகவும், செழிப்பாகவும் இருக்கின்றான். இருமைகளற்றவனாகவும், செழிப்பை உடையவனாகவும் இருக்கின்றான்.  மன அமைதியால் செழிப்பான அந்த பிரம்மத்தை அடைகின்றான்.  நீண்ட காலம் இருப்பான். பிரளயம் வரும் வரை இருப்பான். இவ்வாறு உபாஸனை செய்வீராக.

அனுவாகம்7
ப்ருதி2வ்யந்தரிக்ஷம் த்3யௌர்தி3ஶோÅவாந்தரதி3ஶா: |
அக்3னிர்வாயுராதி3த்யஶ்சந்த்3ரமா நக்ஷத்ராணி |
அப ஒஷத3யோ வனஸ்பதய ஆகஶ ஆத்மா |
இத்யதி4பூ4தம் |
அத2த்4யாத்மம் |
ப்ராணோ வ்யானோÅபான உதா3ன: ஸமான: |
சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாக் த்வக் |
சர்ம மாம் ஸம் ஸ்ராவஸ்தி2 மஜ்ஜா |
ஏதத3தி4விதா4ய ரிஷரவோசத் |

பாங்கம் வா இத3ம் ஸர்வம் |
பாங்கேனைவ பாங்கம் ஸ்ப்ருணோதீதி ||

இது ஒரு பாங்க்தம் உபாஸனம்.  இதுவும் அபேத உபாஸனம்.  சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய உபாஸனம்.  இதில் மூன்று வெளிவிஷயங்கள் சரீரத்திலுள்ள விஷயத்திற்கும் ஐக்கியப்படுத்தி உபாஸனை சொல்லப்பட்டு இருக்கின்றது.
பாங்கம் – ஐந்து வகையானவைகளின் சேர்க்கை, யாகங்களையும் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.  யாகத்திற்கு ஐந்து விஷயங்கள் உண்டு அவைகள் எஜமானன், பத்தினி, புத்திரன், மானுஸ வித்தம் (செல்வம்), தெய்வ வித்தம் (மந்திரங்கள்).
லோக பாங்கம் – ஐந்து விதமான உலகங்கள்
தேவதா பாங்கம் – ஐந்து விதமான தேவதைகள்
பூதா பாங்கம் – ஐந்து விதமான பூதங்கள்
ப்ராண, இந்திரிய, தாது பாங்கம் என்பவைகளும் உண்டு.

ஐந்து லோக பாங்கம் – பிரபஞ்சம், ஆகாசம், சுவர்க்க லோகம், திசைகள், திசைகளுக்கு இடையே உள்ள திசைகள்.
தேவதா பாங்கம் – அக்னி, வாயு, சூரியன், சந்திரன், நட்சத்திரம்
பூத பாங்கம் – தண்ணீர், தாவரங்கள், மரங்கள், ஆகாசம், விராட், பிறகு உடல் சம்பந்தப்பட்டவைகள்
பிராண பாங்கம் – பிராணன், வியானன், அபானன், வியானன், உதானன்
இந்திரிய பாங்கம் – கண், காது, மனது, சொல், தோல்
சர்ம பாங்கம் – உள்தோல், சதை, தசைகள், எலும்பு, எலும்புக்குள் உள்ள திரவம்
இவைகளை ரிஷி ஒருவர் எடுத்து சொல்லிவிட்டு மேலும் கூறலானார்.  இவைகள் அனைத்தும் ஐந்து அங்கங்களின் சேர்க்கையாக இருக்கின்றன.  வியஷ்டி பாங்கம் மூலம் சமஷ்டி பாங்கத்தை தியானிக்க வேண்டும் என்று கூறினார். இதன் பலனாக மனம் விரிவடைகின்றது, பொதுநோக்கு பார்வை வருகின்றது.  பிறகு ஹிரண்ய-கர்ப்பனோடு ஐக்கியமாகி விடுவான்.

அனுவாகம்8 – (ஓங்கார உபாஸனை)
ஓமிதி ப்3ரஹ்ம |
ஓமிதித3ம் ஸர்வம் |
ஓமித்யேதத3னுக்ருதிர்ஹ ஸ்ம வா
   அப்யோ ஶ்ரவயேத்யாஶாவயந்தி |
ஓமிதி ஸாமானி கா3யந்தி |
ஓம் ஶோமிதி ஶஸ்த்ராணி ஶஸ்த்ராணி ஶம்ஸந்தி |
ஓமித்யத்4வர்யு: ப்ரதிக3ரம் ப்ரதிக்3ருணாதி |
ஓமிதி ப்3ரஹ்ம ப்ரஸௌதி |
ஓமித்யக்3னிஹோத்ரமனுஜானாதி |
ஓமிதி ப்3ரஹ்மண: ப்ரவக்ஷ்யன்னாஹ
   ப்3ரஹ்மைவோபாப்னோதி ||

உபாஸ்ய தேவதை ஹிரண்யகர்ப்பன் அல்லது ஈஸ்வரன்.  ஓம் என்ற சொல்லில் பிரம்மத்தை தியானம் செய்ய வேண்டும்.  இங்கு பிரம்ம என்பது ஹிரண்யகர்ப்பனையோ அல்லது ஈஸ்வரனையோ உபாஸன தேவதையாக கருதப்படுகின்றது.  ஓம் என்ற சொல்தான் முக்கியம்.  இந்த ஒங்காரத்திற்கும் பிரம்மத்திற்கும் ஒரு ஒற்றுமை சொல்லப்படுகின்றது.  ஏன் இதை ஆலம்பனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றது என்றால் அது மேலானதாகவும், சிறப்பானதாகவும் கருதப்படுவதால்தான்.  மேலும் இந்த சொல் எல்லா சொற்களையும் வியாபித்திருக்கின்றது.  ஈஸ்வரனே எல்லா பொருட்களிலும் வியாபித்திருக்கின்றார்.  எல்லாப் பொருட்களையும், சொற்களால் அழைக்கப்படுகின்றது.  எனவே சொற்களை வியாபித்திருக்கும் ஒங்காரம் ஈஸ்வரனையே குறிக்கின்றது.  இந்த உலகமே ஓங்காரமாக கருதப்படுகின்றது; ஓம் இதம் ஸர்வம்.

இந்த அனுவாகத்தில் மற்ற சொற்களெல்லாம் ஒங்காரத்தின் பெருமையை எடுத்து உரைக்கின்றது.

  • ஓம் இத்யேத் அனுக்ருதி – இது நமக்கு அனுமதியை குறிக்கின்றது
  • அபி ஓம் ஸ்ராவய – மேலும் ஓம் நீ தெரிவிப்பாயாக, ( தேவர்களுக்கு அவிஸ் கொடுக்க வேண்டிய காலம் வந்தவுடன்) இவ்வாறு ஆணையிடப்படுகின்றது.
  • ஓம் இதி ஸாமானி கா3யந்தி – சாம வேதத்தை உச்சரிப்பவர்களும் ஓம் என்று சொல்லித்தான் உச்சரிக்கின்றார்கள்.
  • ஓம் ஶோமிது ச2ம்ஸந்தி – ரிக் மந்திரங்களை ஓதுபவர்களும் ஒம் என்றும் சோம் என்ற சொல்லை உச்சரிக்கின்றார்கள்.
  • ஓம் இதி அதி3வாயு – யஜூர் வேதம் ஒதுபவர்களும் இந்த சொல்லின் மூலம் தங்கள் அனுமதியை குறிக்கின்றார்கள்.
  • அதர்வண வேதம் ஒடுபவர்களும் ஓம் என்று சொல்லித்தான் ஆணையிடுகின்றார்கள்.
  • அக்னிஹோத்ர யாகத்தை செய்யலாம் என்று அனுமதி அளிப்பதையும் ஓம் என்ற சொல்லினால் குறிப்பிடுகின்றார்கள்..
  • வேதத்தை படிக்க ஆரம்பிக்கின்ற பிராமணன் ஓம் என்று சொல்லிய பிறகுதான் தொடங்குகின்றான்.  வேதத்தை நான் அடைவேனாக என்ற குறிக்கோளுடன் வேதத்தை உச்சரிக்கின்றான்.  அவன் கண்டிப்பாக அடைவான் என்று வேதமே உறுதி செய்கின்றது.

பிரம்மத்தை அடைய வேண்டும் என்று விரும்பும் சாதகர்கள் ஓம் என்று சொல்லித்தான் அதை அடைய முயற்சிக்கின்றார்கள்.  அவன் பிரம்மத்தை அடைவான் என்று வேதம் உறுதி கூறுகின்றது.

—-oo000oo—-

தைத்திரீய உபநிஷத்
அத்தியாயம்-01 (சீக்ஷாவல்லி)-பகுதி-3
அனுவாகம்9
ரிதம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தபஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
3மஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஶமஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
அக்னயஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
அக்3னிஹோத்ரம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
தித2யஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
மானுஷம் ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜா ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜனஶ்ச ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ப்ரஜாதி ஸ்வாத்4யாயப்ரவசனே ச |
ஸத்யமிதி ஸத்யவசா ராதீ2தர” |
தப இத தபோநித்ய: பௌருஶிஷ்டி: |
ஸ்வாத்4யாயப்ரவசனே ஏவேதி நாகோ மௌம்ல்ய: |
தத்3தி4 தபஸ்தத்3தி4 தப: ||

இதில் சில பண்புகளும், கர்மங்களும் சொல்லப்பட்டிருக்கின்றது.  மேலே கூறிய உபாஸனைகளனைத்தும் நற்பண்புகளுடனும், செயல்களுடனும் செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

வேதத்தை கற்றல், பிறருக்கு கற்றுக்கொடுத்தல், கற்றதை சரியாக புரிந்து கொள்ளுதல், உண்மையை பேசுதல், தவம், விரதம், போகத்தை அனுபவிக்காதிருத்தல், உணவில் கட்டுப்பாடு, உடலுக்கும், மனதுக்கும் நன்மையை கொடுக்கக்கூடியதை சாப்பிடவேண்டும்.  அளவுடன் சாப்பிட வேண்டும்.  புதியதாக சமைத்து சாப்பிட வேண்டும், புலனடக்கம், மனவடக்கம், யாகத்திற்கு பயன்படுத்தும் அக்னியை பாதுகாத்தல், இல்லறத்தில் இருப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட யாகங்களை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.  அக்னிஹோத்ரம் காலையும், மாலையும் செய்ய வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும், மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும், சந்ததியை வளர்த்தல், தன் புத்திரனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாது செய்தல், சந்ததி உற்பத்திக்கு கணவன்-மனைவி சேர்தல், பேரக்-குழந்தைகளை அடைவதற்கு புத்திரர்களுக்கு மணம் செய்வித்தல் போன்ற விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.  மேலும் ராதீதரன் என்ற ரிஷி வாய்மையே மேலானதாக கருதுகின்றார் என்றும், தவத்தில் ஈடுபட்டுள்ள பௌருஷ்டி என்ற ரிஷி தவத்தை மேலானதாக கூறுவதாகவும் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.  நாக என்கின்ற ரிஷி வேதத்தை கற்றலும், கற்பித்தலும்தான் மேலான தவமாக கருதுவாக சொல்லப்பட்டிருக்கின்றது.

அனுவாகம்10
அஹம் வ்ருக்ஷஸ்ய ரேரிவா |
கீர்தி: ப்ருஷ்டம் கி3ரரிவ |
ஊர்த்4வபவித்ரோ வாஜினீவ ஸ்வம்ருதமஸ்மி |
த்3ரவிணம்ஸவர்சஸம் |
ஸுமேதா4 அம்ருதோக்ஷித: இதி த்ரிஶங்கோர்வேதா3னுவசனம் ||

ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு திரிசங்கு என்ற ரிஷி கூறியவைகள் இந்த அனுவாகத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஜபம் செய்ய நல்ல ஸம்ஸ்காரங்கள் மனதில் வந்து சேரும்.  த்வைத வாஸனைகள் மீது அத்வைத வாஸனைகள் எழுதப்படும்.  நம்மிடத்தே இருக்கின்ற சம்சார பாவனைகள் நீங்கி திரிசங்கு வசனங்கள் நமக்கு ஆத்ம ஞான பாவனைகள் வந்து சேரும்.  பிறகு இது கண்ணுக்கு தெரியாத பாவங்களையும் நீக்கிவிடும்.  இந்த பாவங்கள் வேதாந்தம் தொடர்வதற்கு தடையாக வந்து சேர்ந்திருக்கலாம்.  இதை சிரத்தையுடன் ஜபம் செய்வதால் நமக்கு வரும் தடைகள் நீங்கும். அர்த்தத்தை புரிந்து கொண்டு ஜபம் செய்ய வேண்டும்.

  • நானே அனைத்து பிரபஞ்சத்திற்கும், சம்சாரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றேன்.  நான் சம்சாரத்தை நாசம் செய்தவன், வைராக்கியம், ஆத்மஞானத்தினால் இதை செய்திருக்கின்றார்.
  • என்னுடைய புகழானது மலை உச்சி அளவுக்கு ஓங்கி இருக்கின்றது.  தேவலோகம் வரை என்னுடைய புகழ் வளர்ந்த்திருக்கின்றது.  இது இவரிடத்தில் உள்ள மனநிறைவை எடுத்துக் காட்டுகின்றது.  எவனொருவன் தன்னையே நேசிக்கின்றானோ அவனுக்கு மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்ற எண்ணமே வராது. உதாரணமாக கர்ணன் தான் சத்திரியன் என்று குந்திதேவி மூலம் அறிந்து கொண்டபின் மற்றவர்கள் அவனை தேரோட்டி என்று சொல்லும் போது அவனுக்கு வருத்தமேற்படவில்லை.
  • நான் முழுமையானவனாகவும், தூய்மையானவனாகவும் இருக்கின்றேன்.
  • சூரிய தேவதைபோல நான் அழியாத ஆத்ம தத்துவமாக இருக்கின்றேன்.
  • ஒளிப்பொருந்திய பிரம்ம தத்துவமாக இருக்கின்றேன், அதை அடைந்தவனாக இருக்கின்றேன்.
  • நான் பிரம்ம ஸ்வரூபம் என்ற அறிவுடனே செயல்படுகின்றேன்.  எப்பொழுதும் பிரம்ம ஞானத்தில் நிலைபெற்று இருக்கின்றேன்.
  • மரணமற்றவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கின்றேன்.
  • நான் மரணமற்ற நிலையில் ஆழ்ந்திருக்கின்றேன்.

அனுவாகம்11.1
வேத3மனுச்யாசார்யோÅந்தேவாஸினமனுஶாஸ்தி |
ஸத்யம் வத3 |
4ர்ம சர |
ஸ்வாத்3யாயன்மா ப்ரமத3: |
ஆசார்யாய ப்ரியம் த4னமாஹ்ருத்ய ப்ரஜாதந்தும் மா வ்யவச்சே2த்ஸீ: |
ஸத்யான்ன ப்ரமதி3தவ்யம் |
4ர்மான்ன ப்ரமதி3தவ்யம் |
குஶலாஜ்ஜ ப்ரமதிதவ்யம் |
பூ4த்யை ந ப்ரமதி3தவ்யம் |
ஸ்வாத்4யாயப்ரவசனாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
தேவாபித்ருகார்யாப்4யாம் ந ப்ரமதி3தவ்யம் |
மாத்ருதே3வோ ப4வ |
பித்ருதேவ ப4வ |
ஆசார்யதே3வோ ப4வ |
அதிதி2தே3வோ ப4வ ||

இதில் சில பண்புகள், கடமைகள் கூறப்பட்டிருக்கின்றன்.  இந்த பண்புகள் இருந்தால்தான் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆசையே மனதில் எழும். வேதத்தை ஓதும் முறையை புகட்டியபின் மாணவனிடத்தில் கீழ்க்கண்டவாறு உபதேசிக்கின்றார்.

உண்மையை பேசு, தர்மத்தை பின்பற்று, வேதத்தில் கூறப்பட்டுள்ள தர்மத்துடன் வாழ்ந்து கொண்டிரு. அதர்மத்தை செய்யாதே. வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய், நிஷித்த கர்மங்களை செய்யாதே.  சாஸ்திரம் படிக்கும்போது கவனக்குறைவாக இருக்காதே.  குருவிடம் கேட்ட சாஸ்திரத்தை கவனக்குறைவாக கூட படிக்காமல் இருந்து விடாதே.  குருவுக்கு தேவைப்படும் பொருட்களை கொடுக்க வேண்டும். வம்சத்தொடரை அறுத்துவிடாதே.  உண்மை பேசுவதிலும் கவனக்குறைவாக இருந்து விடாதே.  வேதத்தில் விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து விலகி விடாதே.  உன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனக்குறைவாக இருந்து விடாதே.  வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிரு.  வாழும் வாழ்வின் தரத்தை உயர்த்தி கொண்டிரு.  சாஸ்திரத்தை கற்பதிலிருந்தும், கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்காமலும் இருந்து விடாதே.  தேவர்களுக்கும், பித்ருகளுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை தவறாமல் செய்ய வேண்டும்.  தாயையும், தந்தையையும், ஆசிரியரையும், விருந்தினரையும் கடவுளாக கருதுபவனாக இரு.  இவர்களிடன் என்ன குறைகள் இருந்தாலும் அவைகளை கவனத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் எந்தவித நிபந்தனையின்றி இவர்களை தெய்வமாக வணங்க வேண்டும். இவர்களிடமிருந்துதான் பலவிதமான பலன்களை அடைகின்றோம். சொல்லாமல் வரும் விருந்தினர்களையும் தெய்வமாக கருத வேண்டும்.

அனுவாகம்11.2
யான்யதவத்3யானி கர்மாணி |
தானி ஸேவிதவ்யானி |
நோ இதராணி |
யான்யஸ்மாகம்ஸுசரிதானி |
தானி த்வயோபாஸ்யானி நோ இதராணி |
யே கே சாஸ்மச்சே2யாம்ஸோ ப்3ரஹ்மணா: |
தேஷாம் த்வயாஸனேன ப்ரஶ்வஸிதவ்யம் ||

எது தர்மம், எது அதர்மம் என்பதை அறிந்து கொள்ள மூன்று வழிகள் உண்டு. அவைகள்,

  1. வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது
  2. ரிஷிகளால் எழுதப்பட்ட ஸ்மிருதிகள், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள், இவைகளில் சொல்லப்பட்டது
  3. இப்பொழுது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சான்றோர்களின், மகான்களின் வாழ்க்கை முறை என்ற இந்த மூன்று வழிகளாலும் தர்ம அதர்ம நெறிகளை அறிந்து கொள்ளலாம்.
  • எந்தச் செயல்கள் குற்றமற்றதாக இருக்கின்றதோ, மேற்கூறிய மூன்று பிரமாணங்களினாலும் நிந்திக்கபடாததாக இருக்கின்றதோ அவைகளை மட்டும் பின்பற்ற வேண்டும், மற்றவற்றை பின்பற்ற கூடாது.
  • பெரியோர்களிடத்தில், சான்றோர்களிடத்தில் காணப்படும் நல்ல விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்றவற்றை பின்பற்ற கூடாது.
  • நம்மை காட்டிலும் வயதிலும், அனுபவத்திலும்,, அறிவிலும் பெரியோர்கள், பண்பாளர்கள் வந்தால், அவர்களுக்கு அமர இருக்கை கொடுத்து, அவர்கள் களைப்பை போக்க வேண்டும்.
  • அவர்களோடு அதிகம் பேசாமல், அவர்கள் கூறும் நல்ல விஷயங்களினால் அறிவை அடைய வேண்டும்.

அனுவாகம்11.3
ஶ்ரத்3த4யா தேயம் |
அஶ்ரத்3த4யாதே3யம் |
ஶ்ரியா தே3யம் |
ஹ்ரியா தே3யம் |
ஸம்விதா3 தே3யம் ||

இல்லறத்தில் இருப்பவர்கள் எப்படி தானம் செய்ய வேண்டும் என்று இங்கு கூறப்படுகின்றது.

  • சிரத்தையுடன் தானம் செய்ய வேண்டும், மனமுவந்து கொடுக்க வேண்டும்.
  • சிரத்தையில்லாமல் தானம் செய்யக்கூடாது.
  • அதிகமாக கொடுக்க  வேண்டும்.
  • வெட்கத்துடன் கொடுக்க வேண்டும், இவ்வளவுதான் கொடுக்க முடிகின்றது என்ற சங்கோஸத்துடன் கொடுக்க வேண்டும்,
  • அக்கறையுடன், பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.
  • சரியான அறிவுடன் தானம் செய்ய வேண்டும்.  அதாவது தேவைப்படும் இடத்தில், காலத்தில், தகுதியுடையவருக்கு தானம் செய்ய வேண்டும்.,

அனுவாகம்11.4
அத2 யதி3 தே கர்மவிசிதித்ஸா வ வ்ருத்தவிசிகித்ஸா வா ஸ்யாத் |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |யுக்தா ஆயுக்தா: |
அலூக்ஷா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தத்ர வர்கே3ரன் |
ததா2 தத்ர வர்கே3தா2 |
அதா2ப்4யாக்2யாதேஷு |
யே தத்ர ப்3ரஹ்மணா: ஸம்மர்ஶின: |
யுக்தா ஆயுக்தா: அலூக்ஶா த4ர்மகாமா: ஸ்யு: |
யதா2 தே தேஷு வர்தேரன |
ததா2 தேஷு வர்தேதா2: |
ஏஷ ஆதே3ஶ: |
ஏஷ உபதேஶ: |
ஏஷா வேதோ3பநிஷத் |
ஏதத3னுஶாஸனம் |
ஏவமுபாஸிதவ்யம் |
ஏவமுசைத்து3பாஸ்யம் ||

ஒருவேளை கடமையைப் பற்றிய சந்தேகம் வந்தால், வாழ்க்கையில் கையாளும் விஷயத்தில், விவகாரத்தில் சந்தேகம் வந்தால், அந்த நேரத்தில் சான்றோர்கள், சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள், கற்றதை தமது வாழ்வில் கடைபிடிப்பவர்கள், எப்பொழுதும் நடுநிலைமையோடு வாழ்பவர்கள், தீய பண்புகள் இல்லாதவர்கள், மென்மையான மனதையுடையவர்கள், தர்மத்தில் நிலை பெற்றவர்கள், தர்மத்தை பின்பற்றுபவர்கள், இப்படிப்பட்ட குணங்களையுடையவர்களிடம் அந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வர்களோ அவ்விதம் நீ நடந்து கொள்ள வேண்டும். மேலும் அதர்மப்படி வாழ்பவர்களிடத்திலும் மேற்கூறிய பண்புகளையுடையவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதேமாதிரி நடந்து கொள்.  உதாரணமாக நம்மை உதாசீனப்படுத்து-பவர்களை நாமும் உதாசீனப்படுத்த நினைப்போம், நமக்கு தீமை செய்பவர்களுக்கு நாமும் தீமை செய்ய நினைப்போம் இந்த நிலையில் நம்முடைய எண்ணத்தை நீக்கி, சான்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதேபோல நடந்து கொள்ள வேண்டும்.  இதுதான் வேதத்தினுடைய கட்டளை (ஆதேஷம்).  இதுவே ஸ்மிருதியின் உபதேசம்.  இதுதான் வேதத்தினுடைய ஸாரம் (சுருக்கமான நீதி).  இது (அனுசாஸனம்) இறைவனுடைய கட்டளை.  இவ்விதத்தில் நம்முடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

அனுவாகம்12
இது முதலில் கூறப்பட்ட சாந்தி பாடமே கடைசியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது.  இது நம் நன்றியை தெரிவிக்கின்றது போல வந்திருக்கின்றது

—————————————————————————————-

சீக்‌ஷாவல்லி முடிவுற்றது.

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 – பகுதி-1

ப்ரஹ்மானந்தவல்லி

சங்கரரின் விசாரம்: (பரம புருஷார்த்த ஸாதன விஷய சிந்தா)
பரம புருஷார்த்தமான மோட்சத்தை அடையும் ஸாதனத்தை பற்றிய விசாரம்.  கர்மம், வித்யா இரண்டைப்பற்றிய விசாரம்.
கர்ம காண்டத்தில் கர்மமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
ஞான காண்டத்தில் ஞானமே சாதனமாக சொல்லப்படிருக்கின்றது
இந்த இரண்டிலும் சாத்தியம் என்ன?
கர்மம் செயலில் ஈடுபட தூண்டுவது, செய்யாதே என்று தடுப்பது.  கர்மம் என்ற சாதனத்தின் மூலமாக ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்தப்படுகிறது. ஞானத்தின் சாத்தியம் நேரடியாக மோட்சத்தையடைவது.  இதுதான் சங்கரர் விளக்க வருகின்ற சித்தாந்தம்.
கேள்வி : காம்ய, நிஷித்த கர்மங்கள் செய்யாமல் இருந்தாலே பாவ-புண்ணியங்கள் வராது. விதிக்கப்பட்ட கர்மங்கள் செய்வதனால் பிராரப்த கர்மபலன்களை தீர்த்து விடலாம் அல்லவா?

பதில்     சஞ்சித கர்மபலன்களை எவ்வாறு தீர்க்க முடியும்.  கர்மங்கள் பாவ-புண்ணியத்தை கொடுக்க கூடியது.  ஞானத்தில் மட்டும்தான் புண்ணியங்களை சேர்க்காமல் இருக்கலாம், மோட்சத்தை அடையலாம்.

கேள்வி   முழு வேதமே கர்மத்திற்காகவே எழுதப்பட்டிருக்கின்றது.  முழு வேதத்தையும் படிக்க வேண்டும் என்ற நியமம் இருக்கின்றது.  வித்துவான் யாகம் செய்விக்கின்றான்.  எனவே முழு வேதத்தையும் படித்தவன் யாகத்தின் மூலமாக மோட்சத்தை அடைய முடியும்.  உபநிஷத் மூலமாகத்தான் மோட்சத்தை அடையலாம் என்றால், வேதத்தை முழுமையாக படி என்று சொல்லாமல், கர்ம காண்டத்தை மட்டும் படி என்று சொல்லியிருக்கலாமே?

பதில்     வேதம் மேலும் மனனம், நிதித்யாஸனம் என்ற இரண்டு சாதனங்களை சொல்லியிருக்கின்றது.  கர்மத்தை மட்டும் செய்து மோட்சத்தை அடையலாம் என்றால் இந்த இரண்டும் பயனற்றதாகி விடும்.  வேதம் பயனற்ற எதையும் உபதேசிக்காது. மேலும் கர்மம் நிலையற்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படுவது.  இதனால் எப்படி நிலையான நித்யமான மோட்சத்தை அடைய முடியும்.

கேள்வி   கர்மத்துடன் ஞானத்தையும் சேர்த்துக்கொண்டு மோட்சத்தை அடையலாம்’

பதில்     செய்யப்பட்டது என்றால் அது அநித்யம்.  எது செய்யப்பட்டதோ அது அழியக் கூடியது.  வேதாந்தம் இருப்பதைத்தான் சொல்லும் புதியதாக ஒன்றை தோற்றுவிக்காது. ஞானம் எதையும் தோற்றுவிக்காது, இருப்பதைத்தான் காட்டும்.

கேள்வி   விதவிதமான உபாஸனைகள் மூலமாக பிரம்மலோகத்தை அடையலாமே?

பதில்     இதன்மூலம் சகுண பிரம்மனை அடையலாம், நிர்குண பிரம்மத்தை அடைய முடியாது.

கேள்வி   ஞான-கர்ம ஸமுச்சயத்தின் மூலமாக மோட்சத்தை அடையலாமே?

பதில்     ஞான-கர்ம ஸமுச்சயமே நடக்க முடியாது. இந்த இரண்டையும் சேர்க்கவே முடியாது.  கர்மத்தின் ஸ்வரூபம் வேறு, ஞானத்தின் ஸ்வரூபம் வேறு.  ஞானத்தின் ஸ்வரூபம் அகர்த்தா, இது பேதத்தை ஏற்படுத்திவிடும். அதனால்தான் கர்மத்தை விட்டுவிட்டுதான் ஞானத்திற்கே செல்ல வேண்டும்.  எனவே ஞான-கர்ம ஸமுச்சயம் ஒரே நேரத்தில் நடக்க முடியாது. கர்ம காண்டம் அக்ஞானிகளுக்கு பயன்படும், முமுக்‌ஷுகளுக்கு மனத்தூய்மையை கொடுக்கும்.

கேள்வி   ஞானத்தோடு கர்மத்தையும் துணையாக வைத்துக் கொள்ளலாமே?

பதில்     மோட்சத்திற்கு தடையாக இருப்பது அக்ஞானம்தான்.  இந்த அக்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் மட்டும் போதும்.  கர்மத்தின் துணை தேவையில்லை.  உலகில் அனாத்மாவை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு ஆசை வரும், அதை நிறைவேற்றுவதற்கு கர்மத்தை செய்வான்.  ஆத்மாவை பார்ப்பவனுக்கு ஆசையே எழுவதில்லை அதனால் கர்மத்தை செய்ய வேண்டிய தேவையில்லை.

வேதாந்தத்தை படிக்க வந்து விட்டால், கர்மத்தை விட்டுவிட்டு, சிரவணம், மனனம், நிதித்யாஸனம் மூலம் மோட்சத்தை அடைந்து விடலாம்.  கர்ம காண்டம் ஒருவனை ஞான காண்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிறகு அந்த சாதகன் கர்மத்தை விட்டு விட்டு ஆத்ம விசாரம் செய்து மோட்சத்தை அடைய வேண்டும்.

 

முகவுரை:

ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் அடிப்படையில் விளக்கபடுகின்றது. ஆனந்தமானது விசாரம் செய்யப்படுகின்றது. எனவே இந்த வல்லியில் எல்லா அனுவாகங்களும் முக்கியமானவை. இதில் ஆத்ம விசாரம் செய்யப்படுவதால் இன்னொரு சாந்தி-பாடத்துடன் தொடங்குகிறது

சாந்தி பாடம்:
ஸஹ நாவவது |
ஸஹ நௌ பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்விநாவதீ4தமஸ்து வா வித்3விஷாவஹை |
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

அந்த ஈஸ்வரன் உறுதியாக குரு-சிஷ்யனான எங்கள் இருவரையும் காப்பாற்றட்டும். இங்கு காப்பாற்று என்பது சிஷ்யனான என்னை அக்ஞானத்திலிருந்து விடுவித்து ஆத்மஞானத்தை கொடு என்றும்,  குருவுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடு என்று பொருள் கொள்ள வேண்டும்,
அந்த ஈஸ்வரன் எங்களிருவரையும் காப்பாற்றட்டும். இங்கே காப்பாற்று என்பது ஞானத்தை அடைந்து அதன் பலனை அனுபவிப்பவனாக இருக்க வேண்டும், அதாவது ஞான நிஷ்டை அடைந்திட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்.

நாங்கள் இருவரும் சேர்ந்து முயற்சி செய்வோமாக.  இங்கே சிஷ்யனின் முயற்சி என்பது வித்யாவை கவனமாக கேட்டல், சிந்தித்தல் பிறகு நன்கு புரிந்து கொள்வது, குருவின் முயற்சி பிரம்ம வித்யாவை சரியாக உபதேசித்தல், சிஷ்யர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் உபதேசித்தல்.
எங்கள் இருவரால் படிக்கப்பட்டது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும், நினைவில் நன்றாக பதிய வேண்டும்.

நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக.  சிஷ்யனின் வெறுப்பு படிப்பில் கவனக்குறைவை கொடுக்கும்.  குருவின் வெறுப்பு சிஷ்யர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும்.
ஓம்! ஶாந்தி: ஶாந்தி: ஶாந்தி:

அனுவாகம்-1.1
பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் |
ததே3ஷாப்4யுக்தா |
ஸத்யம் ஞானமனந்தம் ப்3ரஹ்ம |
யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் வ்யோமன் |
ஸோஶ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதேதி ||
 

பிரஹ்மவித்3 ஆப்னோதி பரம் – பிரஹ்மத்தை அடைந்தவன் மேலானதை அடைகின்றான்.”, இது இந்த உபநிஷத்தின் மையக்கருத்து. எனவே இதற்கு சூத்ர வாக்கியம் என்று கூறலாம்.  முழு உபநிஷத்தின் சாரமாக இருக்கின்றது

இதில் மூன்று கருத்துக்கள் இருக்கின்றது. அவைகள்

  1. விஷயம்– இது எதை குறித்து பேசுகின்றதோ,
    2. சாதனம்  – அந்த விஷயத்தை அறிய உதவும் கருவி,
    3. பலன்    – விஷயத்தை அறிவதனால அடையும் பலன்
    ஆகியவைகளாகும்.

இந்த அனுவாகத்தில்

  1. விஷயம் – பிரம்மம் – பெரியது என்று பொருள், வரையறுக்கப்படாதது. நிரதிஸய வ்ருத்தி – எதனோடும் வரையறுக்கபடாத பெரிய ஒன்று.
  2. சாதனம் – வித் (வேதனம்) – அறிதல், அந்த பெரிய ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.
  3. பலன் -பரம் ஆப்னோதி – பிரம்மத்தை அடைகின்றான்

ஒரு இடத்தை அடைவதற்கு அதை அடையும் வழி மட்டும் தெரிவதால் அடைய முடியாது, ஏனென்றால் அது வரையறுக்கப்பட்டது.  ஆனால் பிரம்மம் வரையறுக்கப்படாததாக இருப்பதால் அதை அறிந்தவுடனே அதை அடைந்து விடுவோம்.  ஞானத்திற்கும், மோட்சத்திற்கும் சாதன-சாத்தியம் சம்பந்தம் பேசப்படுகின்றது.

 

கேள்வி-1. பிரம்மம் என்பது எது, அதன் லட்சணம் என்ன>
கேள்வி-2. அதை எப்படி அறிந்து கொள்வது?
கேள்வி-3. பலன் என்றால் அது எத்தகையானது?

இந்த கேள்விகளுக்கு ஒரு ரிக் மந்திரத்தின் மூலமாக பதிலளிக்கப்படுகின்றது.

பதில்-1 சத்யம், ஞானம், அனந்தம் ப்ரஹ்ம என்ற இந்த வாக்கியம் பிரம்ம லட்சணத்தைக் குறிக்கின்றது. சத்யம் என்றால் என்றும் இருப்பது, ஞானம் என்பது அறிவு ஸ்வரூபம், அனந்தம் என்பது எல்லையற்றது. இந்த லட்சணம் அனாத்மாக்களிலிருந்து பிரம்மத்தை பிரித்துக் காட்டுகின்றது.

 

இரண்டு விதத்தில் ஒரு பொருளை பிரித்துக் காட்ட முடியும்.

  1. தடஸ்த லட்சணம் ஒருபொருளை அறிவதற்கு துணைப்புரியும் வேறொரு பொருளை கொண்டு அறிதல், ஆனால் அது அறியும் பொருளை சார்ந்ததல்ல. உதாரணமாக காகம் அமர்ந்துள்ள வீடுதான் ராமன் வீடு, என்று சொல்லுதல், காகம் பறந்து சென்றாலும், இருந்தாலும் அந்த வீட்டை அடையாளம் கண்டு கொள்வது.
  2. ஸ்வரூப லட்சணம்எதாவதொரு பொருளை கூறி அதன் மூலம் மற்றொன்றை விளக்குதல், அந்தப் பொருள் அறியப்படும் பொருளிடத்தே இருக்கின்றது.  அதன் தன்மையாகவே இருக்கின்றது. இங்கு பிரமத்தை விளக்கக்கூறும் லட்சணம் ஸ்வரூப லட்சணம்.

ஸத்யம் பிரம்மஹ:
வாச்யார்த்தம் என்பது ஒரு சொல்லை கேட்டவுடனே மனதில் தோன்றும் அர்த்தம்.  எல்லா விவகாரங்களும் இதன் அடிப்படையில்தான் இருக்கும். சில சமயம் வாச்யார்த்தம் பயன்படாமல் போகலாம் அந்த நேரத்தில் அதற்கு சம்பந்தபட்ட வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு புரிந்து  கொள்கின்றோம்.  இதையையே லட்சியார்த்தம் என்று கூறப்படுகின்றது;  ஸத்யம் பிரஹ்ம என்ற வாக்கியத்தில் வாச்யார்த்தத்தை எடுத்து கொள்ளக்கூடாது, லட்சியார்த்தத்தை வைத்து புரிந்து கொள்ள வேண்டும்.  எல்லா பொருட்களிடத்தும் ஸத்+நாமரூபம் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளது.  மாற்றமடையும் பொருட்களின் நாமரூபங்கள் மாறிக் கொண்டிருந்தாலும் இருத்தல் என்ற அம்சம் என்றும் நிலையாக இருக்கும்.  ஆகவே இந்த வாக்கியத்தின் அர்த்தம் நிலையாக இருத்தல் என்று லட்சியார்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இங்கு ஸத்யம் என்பது ஸத்-இருத்தல் என்பதைக் குறிக்கின்றது.  காரணம் எப்போதும் ஸத்யம், காரியம் மித்யா. களிமண்ணிலிருந்து உருவான பொருட்கள் அனைத்தும் மித்யா, களிமண் ஸத்யமாக, காரணமாக இருக்கின்றது.  அதேபோல இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருப்பது பிரம்மன், எனவே அது ஸத்யமாக இருக்கின்றது.

ஞானம் பிரம்மஹ:-
பிரம்மன் ஸத்யமாகவும் இருக்கின்றது அதே சமயம் அறிவு ஸ்வரூபமாகவும் இருக்கின்றது.  வாச்யார்த்தமாக பார்க்கும் போது ஞானம் என்பது மனதில் வரும் ஒன்றைபற்றிய அறிவு.  இதற்கு விருத்தி ஞானம் என்று அழைக்கப்படும்.  மனதில் தோன்றும் ஒரு பொருளைப்பற்றிய எண்ணம்.  நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் இரண்டு அம்சங்களாக உள்ளது.  1. அறிவு (சித்) 2. நாம-ரூபங்கள்(பொருட்கள்) (அ) எண்ணங்கள்(விஷயங்கள்).  இதில் அறிவானது எல்லா நிலைகளிலும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கின்றது.  எனவே இதுவே பிரம்மத்தின் ஸ்வரூபமாக லட்சணமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லா எண்ணங்களுக்கும் சாட்சியாக இருப்பது, எல்லா அறிவுக்கும் அறிவு ஸ்வரூபமாக இருக்கின்றது.

அனந்தம் பிரம்மஹ:-
அனந்தம் என்பது எல்லையற்றது, பூரணமானது, வரையறுக்கப்படாதது என்று பொருட்கொள்ளப்படுகிறது.  இந்த வாச்யார்த்தமே அதன் ஸ்வரூபத்தை உறுதிபடுத்துகிறது.  ஒரு பொருள் மூன்று விதத்தில் வரையறுக்கப்படலாம். அவைகள் இடம், காலம், மற்றும் வஸ்து.

  1. தேச பரிச்சேதஹ – ஒரு பொருள் தேசத்தினல் வரையறுக்கப்படும். அதாவது ஒரு பொருள் ஒரே நேரத்தில் வெவ்வேறிடத்தில் இருக்க முடியாது
  2. எல்லாப்பொருட்களுக்கும் தோற்றம்-மறைவு இருப்பதால் அவைகள் காலத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றது
  3. ஒரு பொருளுக்கு குணங்கள் கொடுக்க கொடுக்க அதனுடைய வியாபிக்கும் விஸ்திரம் குறைந்து கொண்டே போகும்.  உதாரணமாக வெறும் மனிதர்கள் என்று கூறும்போது உலகிலுள்ள எல்லா மனிதர்களை குறிக்கும்.  இந்தியர்கள் என்று சொல்லும் போது இந்தியாவில் வசிக்கும் மக்களை மட்டும் குறிக்கின்றது. தமிழர்கள் என்று சொல்லும்போது தமிழ்நாட்டில் வசிப்பவர்களை மட்டும் குறிக்கின்றது.  இவ்வாறு எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது.

பிரம்மத்தை தவிர வேறொரு பொருள் இருந்தால் அது வரையறுக்கப்பட்டதாகி விடும். அது வரையறுக்கப்படாதது என்றால் அதைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்று நிரூபிக்க வேண்டும்.  ஸத்துக்கு வேறாக இருக்கின்றது என்றாலே அதை அஸத் என்று எடுத்துக் கொண்டால் அது மாதிரி ஒன்றில்லை புரிந்து கொள்ளலாம்.  ஸத்தும் அல்ல, அஸத்தும் அல்ல என்ற நிலையையே மித்யா என்று கூறப்படுகின்றது. இந்த பிரபஞ்சம் மித்யா அது இருப்பது போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் இந்த பிரம்மத்தை ஒன்றும் செய்ய முடியாது எப்படி கயிற்றில் தோன்றும் பாம்பினால் கயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லையோ அது போல.

 

இந்த மூன்று குணங்களை உடையதாக இருப்பது இந்த பிரம்மம்.  அனந்தம் என்பது முடிவற்று இருத்தலையே குறிக்கின்றது.  நாம் அடைய வேண்டிய அறிவுதான் இந்த அனந்தம்.  இதை தெளிவாக உறுதியுடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனந்தம் முழு மன நிறைவு என்றும் புரிந்து கொள்ளலாம்.

 

பிரம்மத்தை எப்படி, எங்கே, எதுவாக அறிய வேண்டும். என்ற வினவினால் அதை ஸத்யம், ஞானம், அனந்தமாக அறிய வேண்டும், தன்னுடைய புத்தியில், மனதில் அறிய வேண்டும், நானாக அறிய வேண்டும் என்று பதிலளிக்கப்படுகின்றது

யோ வேத நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமன் ஸோஷ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்சிதேத்

எவனொருவன் பிரம்மத்தை மேலான ஹ்ருதய ஆகாசத்திற்குள் இருக்கின்ற அந்தக்கரணத்திற்குள் இருப்பதாக அறிகின்றானோ அவன் ஆசைப்படுகின்ற எல்லா பொருட்களையும் அடைந்தவனாகின்றான்.  இவன் அறிவு ஸ்வரூபமான பிரம்மனாக இருந்து உடனடியாக எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டவனாகின்றான்.  பிரம்மத்தை அறிந்தவன் அதுவாகவே இருப்பதால், எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பதால் ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாகின்றான்

மனதில் இருப்பிடமாக நம்முடைய ஹ்ருதயத்திலுள்ள ஆகாசம் இருக்கின்றது.  புத்திக்கு குஹா என்று கூறக்காரணம், அந்தக் காலத்தில் மனிதான் புதையலை குகைக்குள் ஒளித்து வைத்திருந்ததை போல, போகமும், மோட்சமும் இந்த புத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

பிரம்மத்தை அறிபவனாக (பிரமாதாவாக) அறிய வேண்டும் அறியப்படும் பொருளாக (பிரமேயமாக) அறியக்கூடாது.  நம் புத்தியில் பிரம்மத்தை தவிர எல்லாவற்றையும் அறியப்படும் பொருளாகத்தான் அறிகின்றோம்.  பிரம்ம அறியப்படும் பொருளாக இல்லாததற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றது.  அவைகள்

  1. அது எதனாலும் வரையறுக்கப்படாதது.
  2. அது இருமையற்றதாக இருப்பதால்,பிரமேயமாக அறிய முடியாது. இருமை முதலில் அறிபவன், அறியப்படும்பொருள் என்பதிலிருந்துதான் தொடங்குகிறது.  நேஹ நானாஸ்தி கிஞ்சன என்ற உபநிஷத் வாக்கியம் இதை புரிய வைக்கின்றது.
  3. இதன் ஸ்வரூபம் அறிபவனாக இருப்பதால் அது அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.
  4. சேதனவாத்-அறிவு ஸ்வரூபமாக இருப்பதால் அறியப்படும் பொருளாக இருக்க முடியாது.  எப்பொழுதும் எது அறியப்படுகின்றதோ அது ஜடமாகத்தான் இருக்க முடியும்

 

கேள்வி  பிரம்மன் ஏன் இரண்டாக இருக்க கூடாது? நான் என்னையே (ஸ்தூல உடலை) பார்க்கின்றேனே!!!

பதில்    இந்த உடல் நீயல்ல என்று தெரிந்துக்கொள், பிரம்மன் அவயங்களற்றது எனவே சாத்தியமல்ல.  மேலும் பிரம்மன் அறியப்படும் பொருளல்ல என்ற திடமான அறிவை அடைய வேண்டும்.

 

கேள்வி  பிரம்மன் அறிபவனாக (பிரமாதாவாக)  இருக்க முடியாதா?

பதில்    அறிபவன் என்றும் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதில் குறையுண்டு. அறிபவன் விதவிதமான பொருட்களை அறியும் போது அவனிடத்தில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். எனவே இது மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது.

 

சாஸ்திரத்தில் இரண்டு வகையான அறிபவன்கள் கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. நம்முடைய புத்தி – இதுதான் எண்ணங்களினால் மாற்றங்கள் அடைந்து அறிவை அடைகின்றது.  சிதாபாசத்தின் உதவியால் இது நடைபெறுகின்றது.
  2. சாஸ்திரத்தின் உபதேசப்படி புத்தியும் ஜடம்தான், ஆனால் அறிவுடன் எப்படி செயல்படுகின்றது.  இந்த புத்தியை அறிந்து கொண்டிருப்பவன் இன்னொரு பிரமாதா. இந்த ஆத்மா என்ற பிரமாதாவிற்கு புத்தியானது அறியப்படும் பொருளாகின்றது. புத்தியானது விகாரமடைந்து பிரமாதாவாக இருக்கின்றது.  ஆத்மாவானது நிர்விகாரமாக இருந்து கொண்டு பிரமாதவாக இருக்கின்றது. எனவே அறிபவன் நான் என்று சொல்லும்போது புத்தியை புரிந்து கொள்ளாமல் அதை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாதான் அறிபவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

விசாரம்:-

கேள்வி  எங்கும் இருக்கின்ற பிரம்மத்தை எப்படி அடைய முடியும்?

பதில்    ஒன்றை அறியாமலிருந்தால் அதை அடையாமல் இருத்தலாகும், அதே சமயம் அதை அறிந்து கொண்டால் அதை அடைந்தவனாகின்றான். உதாரணமாக பத்தாவது மனிதனை தெரிந்தவுடன் அவனை அடைந்தவனாகின்றான்.

 

  • எல்லா பொருட்களையும் அடைந்து விட்டான் என்பதற்கு அவன் முழு மனநிறைவை அடைந்து விட்டான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  நானேதான் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருந்து கொண்டு எல்லா ஆசைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். நம்மிடத்தே இருக்கும் பொறாமை, கோபம் நமக்கே தெரியாமல் இருக்கும்.  வெளிப்பட வேண்டிய நேரத்தில் நம்மையும் மீறி வெளியே வந்து நம்மை துயரத்தில் ஆழ்த்தி விடும், மூடனாகி மாற்றி விடும், தகாத செயலுக்கு தூண்டி விடும்.
  • அவனுடைய மனதிலிருக்கும் எல்லா ஆசைகளும் நீக்கப்படுகின்றது. உதாரணமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை அதை வாங்கியவுடன் அதன் மீதுள்ள ஆசை நீங்கி விடுகின்றது.  அதேபோல பணத்தை அடைய வேண்டும் என்ற ஆசை அதை அடைந்ததும் நீங்கிவிடுகின்றது.  இவ்வாறு எல்லா பொருட்களும் அவைகளை அடைந்தவுடன் நீங்கிவிடுகின்றன.
  • ஆத்ம ஞானத்தால் எல்லா ஆசைகளும் நீங்கி விடும்.
  • ஆசை எழுவதற்கு காரணம் மனதிலுள்ள நிறைவற்ற நிலை.  இந்த மனநிறைவற்ற தன்மைக்கு காரணம் நம் உடல், மனம், புத்தியில் இருக்கின்ற நான் என்ற அபிமானத்தினால்தான்.  இந்த சரீரத்தின் தேவைகள், மனதின் தேவைகள் என்னுடையதாகின்றது.  இந்த தேவைகள் எப்பொழுதும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்.  இதனால்தான் நம் மனம் எப்பொழுதும் நிறைவின்மையுடன் இருக்கின்றது.  ஆத்மாவை பற்றிய அறியாமை இந்த மனநிறைவற்ற நிலையில் வைத்திருக்கின்றது, மனநிறைவற்ற நிலை ஆசைகளை உருவாக்குகின்றது.  எனவே ஆசைகளின் மூலமான அறியாமை நீங்கிவிட்டால் அவைகளும் நீங்கிவிடும்.  பசியானது சாப்பிட்டவுடன் நீங்கிவிடுவது போல, ஆசையானது ஆத்ம ஞானம் வந்தவுடன் நீங்கிவிடும்.
  • ஆசைகள் இரண்டு வகை 1. பந்தப்படுத்துகின்ற ஆசைகள், 2. பந்தப்படுத்தாத ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறாவிட்டால் நாம் துயரம் அடைகின்றோமோ அவைகள் பந்தப்படுத்துகின்ற ஆசைகள். எந்த ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் மனநிறைவுடன் இருக்கின்றோமோ அவைகள் பந்தப்படுத்தாத ஆசைகள்..
  • பிராரப்த கர்மமானது சரீர அபிமானத்தில் வைத்திருக்கும், ஆனால் சரீரத்திற்கு வரும் நலம், கேடு அவனை பாதிப்பதில்லை
  • ஞானியிடத்து வரும் ஆசையானது ஈஸ்வரனின் சங்கல்பமாக இருக்கும்.

 

இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.  சூத்திரம் என்பது சுருக்கமான வாக்கியம், விருத்தி என்பது சுருக்கமான விளக்கம், வியாக்யானம் என்பது விரிவான விளக்கம்.

அனுவாகம்-1.2
தஸ்மாத்3வா ஏதஸ்மதா3த்மன ஆகாஶ: ஸம்பூ4த: |
ஆகாஶத்3வாயு: |
வாயோரக்3னி: |
அக்3னேராப: |
அத்3ப்4ய: ப்ருதி2வீ |
ப்ருதிவ்யா ஔஷத4ய: |
ஔஶதீ4ப்4யோÅன்னம் |
அன்னாத் புருஷ: ||

இதில் பிரம்மத்தை பற்றி விரிவாக விளக்கப்படுகின்றது.  அத்யாரோப அபவாத நியாயம் என்ற முறையில் சிஷ்யர்களுக்கு விளக்கப்படுகின்றது.  அத்யாரோபம் என்பது தெரிந்தே ஒன்றின் மீது வேறொன்றை ஏற்றி வைத்தல், அபவாதம் என்பது ஏற்றி வைத்ததை இல்லையென்று நீக்கி விடுதல்.  அத்யாஸம் என்பது அறியாமையினால் ஒன்றின் மேல் வேறொன்றை பார்த்தல். அத்யாரோபம் ஏன் செய்ய வேண்டும் என்றால், ஒரு பொருள் ஏற்கனவே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதால் அதை விளக்க வேண்டுமென்றால் முதலில் தவற்றை புரிய வைக்க வேண்டும், பிறகு சரியானதை அறிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றில் பாம்பை பார்த்து கொண்டிருப்பவனுக்கு முதலில் பார்த்து கொண்டிருக்கும் பாம்பு உண்மையானதல்ல என்று புரிய வைக்க வேண்டும், பிறகு அது கயிறு என்று அறிய வைக்க வேண்டும்.  அதாவது பாம்பை இருப்பதை ஏற்றுக் கொண்டு பிறகு அது பாம்பு காட்சியளிக்கும் கயிறு என்று என்று உபதேசிக்க வேண்டும்.  ஒருவனிடத்தில் இருக்கும் விபரீத ஞானத்தை போக்குவதற்கு இந்த முறையை தவிர வேறொன்றும் இல்லை.

அதேபோல நாம் அனுபவிக்கும் இந்த பிரபஞ்சத்தை இருக்கின்றது என்று ஒத்துக் கொண்டு அதை பிரம்மத்தில் ஏற்றி வைத்து பிறகு அதை நீக்குகின்றது;  பிரம்மம் பிரஞ்சத்திற்கு ஆதாரம் என்று முதலில் ஏற்றி வைக்கின்றது அதாவது முதலில் இவ்வாறு அத்யாரோபம் செய்கின்றது.  பிரபஞ்சத்திற்கு காரணமாக பிரம்மத்தை சொல்கின்றது.  அதனால் அடையும் பயன்கள் கீழே கொடுக்கபட்டுள்ளன.

  1. பிரம்மன் சத்யம் என்பது நிலை நாட்டப்படும். சத்யமாக இருப்பது மூன்று காலத்திலும் இருக்கும்.  களிமண்-காரணம்-ஸத்யம்.  பானையின் தோற்றத்துக்கு முன்னும், இருக்கும்போதும், உடைந்த பிறகும் களிமண் இருந்து கொண்டு இருக்கும்.
  2. பிரம்மன் அனந்தம் என்று நிலை நாட்டப்படும். தேச, கால, வஸ்துவினால் வரையறுக்கபடாதது.
  3. தேசத்தினால் வரையறுக்கப்படாதது – பிரம்மத்திலிருந்து முதலில் தோன்றியது ஆகாசம், இதிலிருந்து பிரம்மன் தேசத்தினால் வரையறுக்கப்பட முடியாதது என்று புரிந்து விடும்.
  4. காலமும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால், அதனாலும் வரையறுக்கப்பட முடியாதது.
  5. குணங்கள் அதிகமாகும்போது அதன் வியாபிப்பு குறைகின்றது.  குணங்கள் உள்ள பொருட்கள் எல்லாம் வரையறுக்கப்படலாம்.
  6. காரண காரியம் என்று சேரும்போது காரணத்தை மட்டும்தான் இருக்கின்றது என்று கூறமுடியும்.  பிரம்மன் காரணம், பிரபஞ்சம் காரியம் இரண்டும் ஒன்று புரிந்து கொண்டால் அங்கு பிரம்மன் மட்டும்தான் இருக்கும்.  அதற்கு வேறாக ஒன்றும் இல்லை. எனவே வஸ்துவால் வரையறுக்க முடியாது.
  7. அத்யாரோப முறையை பயன்படுத்துவதற்கு உதவும்
  8. அத்வைதமானது நிலை நாட்டப்படுகின்றது. உதாரணமாக பானைகள் பலவாக இருந்தாலும் அவைகள் மித்யாவாக இருப்பதால் அதற்கு ஆதாரமான களிமண் மட்டும் இருப்பது போல, ஜகத் மித்யாவாக இருக்கின்றது, பிரம்மன் ஒன்றுதான் இருக்கின்றது.

 

பிரம்மமானது மாற்றமடையாமல் இந்த ஜகத்திற்கு காரணமாக இருப்பது மாயையின் சக்தியால்தான். இந்த மாயை இல்லாத ஒன்றை இருப்பதாக காட்சியளிக்க செய்கிறது. அதன் சக்தி.  இது பிரம்மத்தின் சக்தியாக இருக்கின்றது. மாயையுடன் கூடிய பிரம்மம்தான் ஈஸ்வரன் என்று அழைக்கப்படுகின்றது.

காரணம் இரண்டு வகையாக இருக்கின்றது. அவைகள் 1. உபாதான காரணம், 2. நிமித்தக் காரணம்.  இங்கே பிரம்மனானது உபாதான காரணமாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஸ்ருஷ்டி முதலில் சூட்சுமமாக வரும் பிறகு அதிலிருந்து ஸ்தூலமான படைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்.  இங்கு இரண்டும் சேர்ந்து தோன்றுவதாக கூறப்படுகின்றது.

மந்திர விளக்கம்

பிரம்மத்தினிடமிருந்து, ஆத்மாவாக அறியப்படுகின்ற இதனிடமிருந்து ஆகாசம் தோன்றியது.  மாயையுடன் சப்த குணத்தை சேர்த்து ஆகாசமாக தோன்றுகிறது. இங்கு ஈஸ்வரனே ஆகாசமாக காட்சியளிக்கின்றார். உபாதான காரணமே காரியமாக காட்சியளித்து கொண்டிருக்கும்,  ஆகாசத்துடன் ஸ்பர்சம் என்ற குணத்தை சேர்த்தவுடன் வாயு உருவாகின்றது. இப்போது ஈஸ்வரன் வாயுவாகவும் காட்சியளிக்கின்றார்.  வாயுவிடமிருந்து அக்னியானது தோன்றியது, உருவம் என்ற குணம் இதனுடன் சேர்ந்திருக்கின்றது.  அக்னியிடமிருந்து நீர் தோன்றியது, இதனுடன் சுவை என்ற குணம் இருக்கின்றது. நீரோடு மணம் என்ற குணம் சேர்ந்தவுடன் நிலமாக தோன்றியது. நிலத்திலிருந்து தாவரங்கள் தோன்றியது, தாவரங்களிலிருந்து உணவு தோன்றியது. உணவிலிருந்து ஜீவராசிகளின் ஸ்தூல சரீரம் தோன்றியது. ஈஸ்வரனே ஜீவராசிகளின் ஸ்தூல உடலாக காட்சியளிக்கின்றார்.  தன்னுடைய ஸ்வரூபத்தை இழக்காமல் மாயையின் சக்தியால் இவ்வாறெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

 

அனுவாகம்-1.3
ஸ வா ஏஷ புருஷோÅன்னரஸமய: |
தஸ்யேத3மேவ ஶிர: |
அயம் த3க்ஷிண: பக்ஷ: |
அயமுத்தர: பக்ஷ: |
அயமாத்மா |
இத3ம் புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஶ ஸ்லோகோ ப4வதி |

இதில் அபவாதம் செய்யப்பட்டுள்ளது. அபவாதம் என்றால் நிராகரித்தல், நீக்குதல், ஒடுக்குதல்.  அத்யரோபம் : காரணம் + நாமரூபம் = காரியம். சூக்‌ஷூமத்திலிருந்து ஸ்தூலமாக மாறுதல்.  அபவாதம் : காரணம் = காரியம் –  நாமரூபம், ஸ்தூலத்திலிருந்து சூக்‌ஷூம நிலைக்கு மாற்றுதல். ஸத்தை ஒரிடத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றுதல். உதாரணமாக பஞ்சுàநூல்àதுணிàஆடை.  ஆடை இருக்கின்றது என்பதில் உள்ள இருத்தலை துணிக்கு கொடுத்து விட்டால் துணி இருக்கின்றதாகி விடும், நூல் இருக்கின்றது—பஞ்சு இருக்கின்றது.

அதேபோல பிரம்மன்àஆகாசம்àவாயுàஅக்னிàநீர்àப்ருதிவி, இவைகளிலுள்ள இருத்தல் கடைசியில் பிரம்மத்தை அடைகின்றது. இந்த அபவாதம் மனதில்தான் நடக்கும்.  காரியம் இருக்கின்றது என்று சொல்வதை விட்டுவிட்டு காரணம் இருக்கின்றது என்று சொல்வதுதான் அபவாதம்.  காரியமான ஆடையில் இருக்கும் ஸத்தை துணிக்கு கொடுக்கும்போது ஆடையில் இருத்தலை நிஷேதம் செய்யப்படுகின்றது.  இப்படியே அந்த இருத்தல் கடைசியில் மூலக்காரணமான பஞ்சுக்கு சென்று விடும்.  அதுபோல கிரமமாக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஸ்ருஷ்டியை அதே கிரமத்தில் நிஷேதம் செய்துக் கொண்டு சென்றால் பிரம்மத்தை அடைவோம்.

 

இந்த அபவாதம் பஞ்ச கோசங்களை வைத்து செய்யப்படுகின்றது.. ஸ்தூல சரீரம் அன்னமய கோஷம் என்றும், சூட்சும சரீரம் ப்ராணமய, மனோமய, விக்ஞானமய கோஷங்கள் என்றும், காரண சரீரம் ஆனந்தமய கோஷம் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறது,  ஆத்மாவானது இந்த கோஷங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது;  இந்த ஐந்து நிலைகளில் நான் என்று புத்தியானது அபிமானம் கொண்டு ஆத்மாவை அறிய விடாமல் செய்கின்றது.

 

ஏன் பஞ்சபூதங்கள் வழியாக அபவாதம் செய்யாமல் ஐந்து கோஷங்களின் மூலமாக அபவாதம் செய்யபட்டு பிரம்ம ஞானமானது கொடுக்கப்படுகின்றது.?

பஞ்ச பூதங்களை வைத்து அபவாதம் செய்தால் வெளியே உள்ள விஷயமாக அறிந்து கொள்ள நேரிடும்.  பிரம்மத்தை தன்னிடத்திலுள்ள ஆத்மாவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதால் இவ்வாறு பஞ்ச கோஷத்தின் வழியாக அபவாதம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடத்தில் நான் என்ற அபிமானம் இருக்கின்றதோ அவைகளை நீக்கித்தான் நமக்கு அறிவை புகட்ட வேண்டும் என்பதால் இந்த முறையை உபநிஷத் கையாண்டிருக்கின்றது.  இவ்வாறு செய்யும் போது எவ்வளவு ஸ்தூல சரீரங்கள் இருக்கின்றதோ அவ்வளவு ஆத்மாக்கள் இருக்கின்றதா என்ற சந்தேகம் வந்துவிடும்.

 

அன்னமய கோஷமும், அன்னமய பிரபஞ்சமும் ஒன்றுதான் என்ற அறிவை கொடுத்து நம்முடைய ஸ்தூல சரீரத்தை நீக்கும்போது ஸ்தூல பிரபஞ்சத்தை நீக்கி விடுவோம். இவ்வாறு ஒவ்வொரு கோஷத்திற்கும் ஸமஷ்டி கோஷத்திற்கும் உள்ள ஐக்கியத்தை எடுத்துக்காட்டி இந்த சந்தேகமானது நீக்கப்படுகின்றது;.

 

சமஷ்டி-வியஷ்டி ஐக்கிய விசாரம்:

இந்த இரண்டுமே ஒன்றுதான்.  பலமரங்கள் உள்ள இடத்திற்கு வனம் என்று கூறப்படுகின்றது.  இந்த மரங்கள் அழிந்து விட்டால் வனம் இல்லாது போகும். அதுபோல மரம் போன்ற ஸ்தூல சரீரத்தை நீக்கினால் அதிலுள்ள அபிமான நீங்கி விடும்.  பிறகு சமஷ்டி பிரபஞ்சம் இல்லாமல் போய்விடும். கனவு நிலையில் இந்த ஸ்தூல சரீரத்தின் மேல் உள்ள அபிமானம் நீங்கி விடுவதால் இந்த பிரபஞ்சமே மறைந்து விடுகின்றது.  ஆனால் சூட்சும ஸரீர அபிமானம் காரணமாக சூட்சும பிரபஞ்சம் தோன்றி விடுகின்றது. ஒரு விஷயம் புரியவில்லையென்றால், அதையே திரும்ப திரும்ப விசாரம் செய்யும் போது கொஞ்ச கொஞ்சமாக நமக்கு புரிய தொடங்கும். இதற்கு உபாஸனம் என்று பெயர்.  இந்த முறையையும் உபநிஷத் விளக்குகின்றது.  இந்த உபாஸனைக்கு ஆலம்பனமாக ஸ்தூல சரீரத்தை எடுத்துக் கொண்டு இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை (விராட் புருஷனை) தியானிக்க வேண்டும்.  இதேபோல ஒவ்வொரு கோஷமும் ஆலம்பனமாக இருக்கும் அதன் சமஷ்டியை தியானித்து இரண்டுக்குமுள்ள ஐக்கியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

 

அனுவாக விளக்கம்:

ஸ வா எஷ புருஷோ அன்னரஸமய: இது அன்னமய கோஷத்தை ஆத்மாவாக அறிமுகப்படுத்துகின்றது.  இந்த ஆத்மாதான் அன்னமய கோஷமாக இருக்கின்றது. அன்னத்தை சுவைப்பதினால் அடைகின்ற ஸ்தூல உடல், அன்னமயமான மனித உடல் இதையை ஆத்மாவாக கற்பனை செய்யப்படுகின்றது.

 

ஆலம்பனத்தை தயார் செய்வதற்குதான் இந்த உடலை ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமயமான இவனுக்கு தலையே தலைப்பாகம், வலது கை வலதுபாகம், இடது இடது பாகம், கழுத்திலிருந்து வயிறு வரை உள்ள பாகம் மத்திய பாகம், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள பாகம் இந்த உடலைத் தாங்கும் பாகம் என்று ஐந்தாக பிரிக்கப்படுகின்றது. அன்னமய விஷயத்தில் இனி வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி 

அனுவாகம்-2.1
அன்னத்4வை ப்ரஜா: ப்ரஜாயந்தே |
யா: காஶ்ச ப்ருதி2வீம் ஶ்ரிதா: |
அதோ2 அன்னேனைவ ஜீவந்தி |
அதை2ந்த3பியந்த்யந்தத: |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
ஸர்வம் வை தேÅன்னமாப்னுவந்தி |
யேÅன்னம் ப்3ரஹ்மோபாஸதே |
அன்னம் ஹி பூ4தானாம் ஜ்யேஷ்டம் |
தஸ்மாத்ஸர்வௌஷத4முச்யதே |
அன்னாத்3பூ4தானி ஜாயந்தே |
ஜாதான்யன்னேன வர்த4ந்தே |
அத்3யதேÅத்தே ச பூ4தனி தஸ்மாத3ன்னம் தது3ச்யத இதி ||

இதில் முதலில் அன்னமய வியஷ்டியும், சமஷ்டியும் ஒன்றுதான் என்று கூறுகின்றது. இந்த உடலும் மற்றனைது உடல்களும் ஒன்றுதான் என்று உபாஸனை செய்ய வேண்டும் என்று உபதேசிக்கப்படுகின்றது. இங்கு அன்னம்-சமஷ்டி, அன்னமயம்-வியஷ்டி. அன்னத்திலிருந்து (விராட்) தனித்தனி அன்னமய கோஷம் தோன்றியது அதாவது இந்த பூமியை சார்ந்திருக்கின்ற அனைத்து விதமான உயிரினங்களூம் தோன்றியது. அவைகள் உணவினாலேயே காக்கபட்டு வருகின்றது.  வாழ்வின் முடிவில் இந்த சமஷ்டி அன்னத்தையே அடைகின்றது.  இந்த சமஷ்டி உடலும், வியஷ்டி உடலும் ஒன்றுதான் என்ற கருத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  ஈஸ்வரன் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் தானாகவே இருக்கின்றார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

அனுவாக விளக்கம்:-
விராட், இந்த ஸ்தூல பிரபஞ்சம் எல்லா ஜீவராசிகளுக்கும் காரணமாக, முதன்மையாக இருக்கின்றது.  எனவே உணவே எல்லா ஜீவராசிகளுக்கும் மருந்தாக சொல்லப்படுகின்றது. யார் உணவை பிரம்மனாக உபாஸிக்கின்றார்களோ அவர்களுக்கு அனைத்து விதமான உணவுகளையும் அடைகின்றார்கள். நிஷ்காம பலனானது இந்த உடலின் மீதுள்ள அபிமானம் சென்றுவிடும்.  உணவினால் தோன்றி, அதனாலே காக்கப்பட்டு கடைசியில் அதினிடத்தே லயம் அடைகின்றது, உணவாகவே மாறி விடுகின்றது.  அன்னம் என்ற சொல் அப்படி வந்தது என்று இப்போது விளக்கப்படுகின்றது. எவைகள் எல்லாம் நம்மால் சாப்பிடப்படுகின்றதோ அவைகள் அன்னம் என்று கூறப்படுகின்றது.  இறந்தபிறகு இந்த ஸ்தூல சரீரத்தை பூதங்களால் சாப்பிடப்படுதல் அன்னம் என்று சொல்லப்படுகின்றது.  இவ்வாறு ரிக் மந்திரத்தால் விளக்கப்படுகின்றது.

அனுவாகம்-2.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத3ன்னரஸமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா ப்ராணமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித: |
தஸ்ய ப்ராண ஏவ ஶிர: |
வ்யானோ தக்ஷிண: பக்ஷ: |
அபான உத்தர: பக்ஷ: |
ஆகாஶ ஆத்மா |
ப்ருதி2வி புச்ச2ம் ப்ரதிஷ்ட |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||
முன்னே சொல்லப்பட்ட அந்த அன்னமயத்திலிருந்து வேறாகவும் ஸ்தூல சரீரத்திற்கும் உள்ளேயும் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா.

விசாரம்:-
சமஷ்டியாக இருக்கின்ற வியஷ்டியாகவும் இருக்கின்ற அன்னமயத்திலிருந்து வேறாக
ஸ்தூல உடலுக்குள் இருக்கின்ற பிராணமயம்தான் ஆத்மா என்று சொல்லும்போது
அன்னமய கோஷம் ஆத்மா இல்லையென்றாகின்றது, அது மித்யாவாகவும், காரியமாகவும், அனாத்மாவாகவும் உள்ள நிலைக்கு சென்று விடுகின்றது.  அன்னமயம் ஆத்மாவல்ல என்று உறுதி செய்து அதைக்காட்டிலும் வேறாக ஒன்றை சொல்லுகின்றது.  இது அன்னமயத்தை விட ஆத்மாவுக்கு அருகிலும், சூட்சுமமாகவும், அதிகமாகவும் வியாபித்து இருக்கின்றது.  ஒரு பொருள் சூட்சுமமாகும் போது அதிகமான இடத்தை வியாபிக்கும். இது அன்னமயத்தைக் கட்டுபடுத்தும் நிலையில் இருக்கின்றது.  ஸ்தூல உடல் சரியில்லையென்றால் பிராணனை சரி செய்தால் அது உடலை நல்ல நிலைக்கு கொண்டு வரும்.

ஆத்மா என்ற சொல் தோன்றிய விதம்.  இது அத3 என்ற வினையடியிலிருந்து வந்திருக்கின்றது.  ஆத்மா என்றால் வியாபித்தல், ஆதாரமாக இருத்தல், பார்த்துக் கொண்டிருத்தல் (சாக்‌ஷி), என்றும் இருத்தல் என்று பல அர்த்தங்களை குறிக்கின்றது.  அன்னமய கோஷம் ஆத்மாவல்ல என்று சொல்லும்போது அன்னத்தை அதாவது இங்கு எல்லா ஸ்தூல சரீரங்களையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்,.  அதேபோல நம்முடைய பிராணமயமும், சமஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த அறிவு ஏற்படவில்லையென்றால் இதை உபாஸனை செய்து அடைய வேண்டும். ஆலம்பனமாக இந்த உபாஸனையில் இருப்பது பிராணமயம், ஆனால் இது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் இதற்கு உருவத்தைக் கொடுக்கின்றது உபநிஷத்.

பிராணன் உடலுக்கு செல்வதால் அது உடலின் உருவத்தை அடைவதாக எண்ணிக் கொள்ள வேண்டும், பிராணன் ஐந்துவகையாக இருக்கின்றது. பிராணமயம் உடலாக இருக்கின்றது. இதில் வெளியே விடும் மூச்சுக்காற்றான பிராணன் தலைப்பாகமாகவும், வியானன், (சக்தியை, ரத்தத்தை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்ற காற்று) உடலின் வலதுபாகம், அபானன் (உடலிலிருந்து வெளியேறும் காற்று) உடலின் இடது பாகமாகவும், சமானன் (சாப்பிடுகின்ற உணவை செரிக்க உதவுவது) நடுப்பாகமாகவும், உதானன் (எதிர்மறையாக வேலை செய்வது, வாந்தி வருவது, கண்ணில் நீர் வருவது, இறந்த பிறகு சூட்சும உடலை வெளியே எடுத்துச் செல்வது) வாலைப்போல பிராணமய உடலுக்கு ஆதாரமாக இருக்கின்றது.  இவ்வாறு உபநிஷத் சொல்வதை சிரத்தையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த பிராணமய  கோஷத்தை பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

அனுவாகம்-3.1
ப்ராணம் தே3வா அனு ப்ராணந்தி |
மனுஷ்யா: பஶவஶ்ச யே |
ப்ராணோ ஹி பூ4தானாமாயு: |
தஸ்மாத்ஸர்வாயுஷமுச்யதே |
ஸர்வமேவ த ஆயுர்யந்தி |
யே ப்ராணம் ப்3ரஹ்மோபாஸதே |
ப்ராணே ஹி பூ4தானாமாயு: |
தஸ்மத்ஸர்வாயுஷமுச்யத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

சமஷ்டி பிராணனும், வியஷ்டி பிராணமயமும் ஒன்றுதான் என்று கூறுகின்றது.  நம்மிடத்து இருக்கும் பிராணமயமும் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளில் இருக்கும் பிராணமயமும் ஒன்றுதான்.என்று உணர்ந்து செயல்பட வேண்டும். பசி-தாகம் பிராணனின் செயல்பாடுகள்.  நமக்கு ஏற்படும் இவைகளே அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்படுகின்றது.  இந்த ஐக்கியத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால், இதை மனதில் தியானம் செய்ய வேண்டும். இந்த தியானத்தின் பலன் இந்த ஐக்கியத்தை உணர்ந்து கொள்ளுதல், அனுபவமாக இருக்க வேண்டும், நடைமுறையில் இது நம்முடைய சுபாவமாகவே மாறிவிடும். சகாம பலன் விதிக்கப்பட்ட முழு ஆயுளையும் அடைகின்றார்கள், துர்மரணம் ஏற்படாது.  இவ்வாறு ரிக் மந்திரம் விளக்கத்தை முடிக்கின்றது. இந்த பிராணமயத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  எவனொருவன் இதற்கு முன் உள்ள அன்னமய கோஷத்தினுடைய சாரீர ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே பிராணமயன்.

அனுவாகம்-3.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்ப்ராணமயாத் |
அன்யோ
அன்யோÅந்தர ஆத்மா மனோமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய யஜுரேவ ஶிர: |
ரிக்3 த3க்ஷிண: பக்ஷ: |
ஸாமொத்தர: பக்ஷ: |
ஆதே3ஶ ஆத்மா |
அத2ர்வாங்கி3ரஸ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட பிராணமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மா மனோமயம். .  இதன் மூலம் பிராணமய அனாத்மா என்று நீக்கப்படுகின்றது. அதனால் மனோமய கோஷத்தினால் பிராணமயமானது வியாபிக்கப்படுகின்றது.  இந்த மனோமயம் ஸ்தூல உடலை போன்றவன். அந்த பிராணமயனுடைய உடலமைப்பை ஒட்டியே இந்த மனோமயனுடைய உடலும் அமைகின்றது.  யஜீர்வேதமே தலைப்பாகம், ரிக்வேதம் வலதுபாகம், சாமவேதம் இடதுபாகம், வேதத்தின் கட்டளைகள் நடுப்பாகம், அதர்வண வேதம் உடலை தாங்கும் பாகமாக அமைகின்றது.  பின்வரும் ரிக்மந்திரம் இதை விளக்குகின்றது

அனுவாகம்-4.1
யதோ வாசோ நிவர்தந்தே |
அப்ராப்ய மனஸ ஸஹ |
ஆனந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வான் |
ந பி3ப்4தி கதா3சனேதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூரவஸ்ய ||

வியஷ்டி மனோமயமும் சமஷ்டி மனோமயமும் ஒன்றுதான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால் உபநிஷத் இதை மறைமுகமாகத்தான் கூறுகிறது.

வாக்கானது மனதுடன் சென்று ஹிரண்யகர்ப்பனை அடையமுடியாமல் திரும்பி வந்து விடுகின்றது.  சூட்சும பிரபஞ்சத்தின் உருவமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனை விளக்க முடியாமல் வியஷ்டி மனமானது திரும்பி வந்து விட்டது.  இதிலிருந்து வியஷ்டியானது சமஷ்டியை விளக்க முடியாது என்று தெரிகின்றது.  தனிமரம் தோப்பாகாது என்பது போல இது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து இரண்டும் ஒன்றுதான் என்ற அறிவு புகட்டப்படுகின்றது.  எனவே உபாஸகன் ஹிரண்யகர்ப்பனை ஆனந்த ஸ்வரூபமாக தியானிப்பதனால், அவனுக்கு எப்பொழுதும், எதனிடத்திலும் பயமில்லை. அதாவது பயமற்ற நிலையை அடைந்திடுவான்.  நிஷ்காம பலனானது மனோமயம் ஆத்மாவல்ல என்று புரிந்து கொண்டு அடுத்த கோஷ விசாரத்திற்கு செல்வான்.  முன் சொன்ன பிராணமயத்திற்கு யார் ஆத்மாவாக உள்ளே இருக்கின்றானோ அவனே இந்த மனோமயன்.  இத்துடன் ரிக் மந்திரம் முடிவடை-கின்றது

அனுவாகம்-4.2
தஸ்மாத்3வா ஏதஸ்மான்மனோமயாத் |
அன்யோÅந்தர ஆத்மா விக்3ஞானமய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ஶ்ரத்3தை4 ஶிர: |
ரிதம் தக்ஷிண: பக்ஷ: |
ஸத்யமுத்தர: பக்ஷ: |
யோக்3 ஆத்மா |
மஹ: புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட மனோமயத்திலிருந்து வேறாகவும் உள்ளேயும் உள்ள ஆத்மா விக்ஞானமயன்.  இதனால் மனோமயமானது முழுவதுமாக வியாபிக்கப்பட்டுள்ளது.  எனவே இது மனித உடலைப் போன்றது. அந்த மனோமயன் உடலமைப்பை ஒட்டியே இந்த விக்ஞானமயனின் உடலமைப்பும் அமைகின்றது.  இதனுடைய தலைப்பாகம் சிரத்தை, இது புத்தியை குறிக்கின்றது ஆதலால் அறிவை அடைவதற்கு தலையாக இருக்கும் சிரத்தை அவசியமாகின்றது.  சரியான அறிவு வலதுபாகம், சரியாக புரிந்ததை செயல்படுத்துதலான வாய்மையே இடது பாகம். மனவொருமுகப்பாடு நடுப்பாகம். ஹிரண்யகர்ப்பன் வாலைப் போல் ஆதாரமாக இருக்கின்ற பாகம். இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் கூறப்படுகின்றது.

காரண சரீரம் –  ஆனந்தமய கோஷம்
ஸ்தூல சரீரம் –  அன்னமய கோஷம்
சூட்சும சரீரம் –  பிராண, மனோ, விக்ஞானமய கோஷங்கள்.
சூட்சும சரீரத்தில் ஐந்துவகை பிராணன்கள், ஐந்துவகை ஞானேந்திரியங்கள், ஐந்துவகை கர்மேந்திரியங்கள், மனம், புத்தி போன்றவைகள் அங்கங்களாக இருக்கின்றன.
பிராணமய கோஷம்    – 5 பிராணன்கள், 5 கர்மேந்திரியங்கள்
மனோமய கோஷம்    – மனமும் 5 வகை ஞானேந்திரியங்கள்
விக்ஞானமய கோஷம் – புத்தியும் 5 வகை ஞானேந்திரியங்கள்

விசாரம்:-

நான் என்று நாம் குறிப்பிடும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது. 1. சாஸ்திரம் கொடுக்கும் அர்த்தம், 2. நாம் புரிந்து கொண்டிருப்பது.

  1. சாஸ்திரம் நான் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்கிறது. இந்த ஆத்மாவானது ஸத்யம், ஞானம், அனந்தம் என்ற குணங்களை உடையது.  இந்த நிலையில் எப்பொழுதும் மனநிறைவுடனும், முழுமையாகவும் இருக்கின்றாய் என்று சாஸ்திரம் உரைக்கிறது
  2. நாம் புரிந்து கொண்டிருக்கும் இந்த நான் கீழே விளக்கப்படுகின்றது
  3. அறிவு ஸ்வரூபத்துடனும் உணர்வுடனும் உள்ள இருக்கின்ற ஒன்றைத்தான் குறிப்பிடுகின்றோம்.
  4. இந்த அறிவுடன் மூன்று சரீரங்களையும் சேர்த்து நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.  உதாரணமாக நான் நடக்கின்றேன் என்று சொல்லும் போது ஸ்தூல சரீரத்தையும், நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன் என்று சொல்லும் போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
  5. இவ்வாறு ஸ்தூல சரீரத்தையொட்டி செய்யும் செயலின் போது ஸ்தூல சரீரத்தையும், மனதுடன் கூடிய இந்திரியங்களை பயன்படுத்தும்போது சூட்சும சரீரத்தையும் குறிக்கின்றோம்.
  6. எப்பொழுதெல்லம் மூன்று சரீரத்தில் அபிமானம் வைக்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அவைகளின் குணங்கள் நான் என்பதின் குணங்களாகின்றன.
  7. ஸ்தூல சரீரம் பல மாற்றங்களையுடையது, அழிவிற்குட்பட்டது ஆகவே அதனுடன் சம்பந்தம் வைக்கும் இந்த நான் அழிவிற்குட்பட்டதாகின்றது.
  8. ஸூக்‌ஷும சரீரம் பல குணங்களையுடைதாக இருப்பதால், இந்த நான் என்ற சொல்லிலும் பல குணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
  9. சாஸ்திரம் சொல்லும் நான் நிலையானது, குணங்களற்றது எனவே இதை அசம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது
  10. நாம் குறிப்பிடும் “நான்” அழிவுடையதாகவும், குணங்களுடையதாகவும் இருக்கின்றது.  இதனால் நாம் பலவித சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம். எனவே இதை சம்சாரி என்று குறிப்பிடப்படுகின்றது.
  11. தேவையில்லாமல் நாம் சேர்த்து புரிந்து கொண்டிருக்கும் இந்த மூன்று சரீரங்களையும் நீக்கி சரியான அறிவை நமக்கு கொடுப்பதுதான் சாஸ்திரத்தின் நோக்கம். சாஸ்திரம் இந்த மூன்று சரீரங்களை ஐந்து கோசங்களாக பிரித்து பிறகு நீக்குகின்றது.  ஒவ்வொரு கோசமாக எடுத்துக்கொண்டு அது ஆத்மா என்று முதலில் ஏற்றுக்கொண்டு பிறகு அதிலுள்ள தோஷங்களை எடுத்துக்காட்டி அதை நீக்கி விடும். இவ்வாறாக ஒவ்வொன்றாக நீக்கி இறுதியில் நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை நமக்கு புரிய வைக்கின்றது
  12. நாமும் சாஸ்திரத்தை பின்பற்றி ஒவ்வொரு கோஷத்தின் மீதுள்ள அபிமானத்தை நீக்கி வர வேண்டும்.  இது அவ்வளவு சுலபத்தில் நடக்காது, முழு முயற்சியுடன் இடைவிடாமல் விசாரம் செய்து இந்த நிலையை அடைய வேண்டும்.
  13. முதலில் நமக்கு எந்த கோஷத்தின் அதிக அபிமானம் இருக்கின்றது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்., அதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த கோஷத்திற்கு செல்ல முடியும்.
  14. சாதாரணமாக நாம் எல்லா கோஷத்திலும் அபிமானம் வைத்துக் கொண்டிருப்போம்.  ஆனால் அதிகமாக எந்த கோஷத்தின் அபிமானம் வைத்திருக்கின்றேன் என்பதை சிந்தித்து பார்த்து கண்டு பிடிக்க வேண்டும்.  இதற்கு இரண்டு வழிகள் உண்டு.
  15. நம் மனம் எதைக்குறித்து அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.
  16. எனக்கு வருகின்ற சுக-துக்கங்கள் எங்கிருந்து வருகின்றது என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும், உதாரணமாக உடலைச் சார்ந்து வருகின்றதா, மனதைச் சார்ந்து வருகின்றதா, பிராணன் மூலமாக வருகின்றதா ( நல்ல உணவு கிடைக்காததால் வரும் துன்பம் ) அறிவு சம்பந்தமாக வருகின்றதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதை தெரிந்து கொண்ட பின்னர் அதிலிருந்து விடுபட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
  17. அன்னமய கோஷம் – உடல் அலங்காரம், உடலுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்களால் வருத்தத்தை அடைபவன், உடலின் தோற்றத்தில் வயதாகும் போதும், நோயினால், விபத்தினால் ஏற்படும் மாற்றத்தினால் வருந்துபவன்
  18. பிராணமய கோஷம் – உணவில் யாருக்கு அதிக கவனம் இருக்கின்றதோ அவர்கள் இந்த கோஷத்தில் இருப்பவர்கள். விரதங்களை மேற்கொண்டு இந்த அபிமானத்தை நீக்க வேண்டும்.  ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று நிலையை உடையவர்களும் இந்த கோஷத்தின் இருப்பவர்கள்தான்.
  19. மனோமய கோஷம் – மற்றவர்கள் என்னை நேசிக்க வேண்டும், அன்பாக நடத்த வேண்டும், தான் அன்பு செலுத்துவதற்கு யாராவது வேண்டும் என்று நினைப்பவர்கள்  இந்த கோஷத்தில் இருப்பவர்கள்
  20. விக்ஞானமய கோஷம் – மனம் மிக நுண்ணியதாக சிந்திக்கும்.  யாராவது சிறிது திட்டினாலோ, அறிவில் குறை கண்டாலோ வருத்தைமடைபவர்கள் இதில் இருப்பவர்கள்
  21. ஆனந்தமய கோஷம் –  நான் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

இவ்விதம் நம் மனம் விதவிதமான நிலையில் இருக்கின்றது.  அதை தெரிந்து கொண்டு அதை நீக்குவதற்கு சாஸ்திரம் உபதேசிக்கும் வழிமுறைகளை கடைப்பிடித்து ஒவ்வொரு கோஷமாக நீக்கி அடுத்த நிலைக்கு சென்று விட வேண்டும்.  கடைசியில் ஆனந்தமய கோஷத்தையும் தாண்டி ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும்.

அனுவாகம்-5.1
விக்3ஞானம் யக்3ஞானம் தனுதே |
கர்மாணி தனுதேÅபி ச |
விக்3ஞானம் தே3வா: ஸர்வே |
ப்3ரஹ்ம ஜ்யேஷ்டபுமாஸதே |
விக்3ஞானம் ப்3ரஹ்ம சேத்3வேத3 |
தஸ்மாச்சேன்ன ப்ரமாத்3யதி |
ஶரீரே பாப்மனோ ஹித்வா |
ஸர்வன்காமன்ஸமுஶ்னுத இதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய ||

விக்ஞானமய கோஷமானது (புத்தி – கர்த்ரு ஆத்மா) யாகங்களை, வைதீக கர்மங்களை சிரத்தையுடன் செய்வது, மற்ற லௌகீக கர்மங்களையும் செய்வது. இந்த கருத்தின் மூலம் வியஷ்டி, சமஷ்டி விக்ஞானமயங்கள் ஒன்றுதான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  எல்லா தேவர்களும் விக்ஞானமய கோஷத்தை முக்கியமாகவும், முதன்மையாகவும் உள்ள பிரஹ்மனாக (ஹிரண்யகர்ப்பனாக) உபாஸனை செய்கின்றார்கள்.  நாமும் இவ்வாறு உபாஸனை செய்ய வேண்டும்.  நிஷ்காம பலன் இது நம்மை அடுத்த கோஷத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த உபாஸனம் கடினமானது, இதில் தோல்வியடைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.  நம்மையறியாமலே பலனை பெற முடியாமல் போய்விடும்.

விக்ஞானமய கோஷத்தை ஹிரண்யகர்ப்பனாக ஒருவன் தியானித்தால் அவன் தவறு எதுவும் செய்யாமல் இருந்தால் அதாவது நமது அபிமானம் வெவ்வேறு கோஷத்திற்கு சென்று விடாமல் இருந்தால் அவனுக்கு பின்வரும் பலன்களை அடைவான் என்று சொல்லப்படுகிறது.  சரீர சம்பந்தபட்ட பாவங்கள் நீங்கப்பெற்று, எல்லா ஆசைகளையும் அடைகின்றான்.  இத்துடன் ரிக் மந்திரம் முடிவடைகின்றது.

நாம் எப்பொழுதெல்லாம் பாவம் செய்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அன்னமய கோஷத்திற்கு வந்து விடுகின்றோம்.  எனவே சரீர சம்பந்தத்தில் இருக்கும்போது பாவங்கள் செய்ய நேரிடுகின்றது. இதையே சரீர சம்பந்தபட்ட பாவங்கள் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.  புண்ணியத்தினால் இவ்வுலகில் இருக்கும் போது எல்லா இன்பங்களையும் அடைகின்றான்.  இறந்த பிறகு ஹிரண்யகர்ப்பனின் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விடுவான்.  மீண்டும் சம்சாரியாக பிறக்க மாட்டான். இந்த விக்ஞானமய கோஷத்தை சாரீர ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த கோஷம் மனோமயத்திற்குள் இருப்பதால் அதனுடைய உடலாக ஆத்மா கூறப்படுகின்றது.

அனுவாகம்-5.2
தஸ்மாத்3வா ஏதஸ்மாத்3விக்3ஞானமயாத் |
அன்யோÅந்தர ஆத்மாÅÅனந்த3மய: |
தனைஷ பூர்ண: |
ஸ வா ஏஷ புருஷவித4 ஏவ |
தஸ்ய புருஷவித4தாம் |
அன்வயம் புருஷவித4: |
தஸ்ய ப்ரியமேவ ஶிர: |

மோதோ3 தக்ஷிண: பக்ஷ: |
ப்ரமோத3 உத்தர: பக்ஷ: |
ஆனந்த3 ஆத்மா |
ப்3ரஹ்ம புச்ச2ம் ப்ரதிஷ்டா |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

முன் சொல்லப்பட்ட விக்ஞானமயத்திலிருந்து வேறாகவும், உள்ளேயும் உள்ள ஆத்மாவே ஆனந்தமயன். இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கலாம்.  ஆனந்தமய கோஷத்திற்கு வியஷ்டி, சமஷ்டி கிடையாது, உபாஸனையும் கிடையாது. ஆனந்தமய கோஷம் காரண சரீரத்தை சார்ந்தது.  காரண நிலையில் வேற்றுமைகள் கிடையாது அதனால் ஐக்கியமும், உபாஸனையும் கிடையாது.

இதுவரை முன்னேயுள்ள கோஷத்தை நீக்கித்தான் அடுத்த கோஷத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆனால் இங்கு அதுபோல செய்யவில்லை.  எனவே இந்த கோஷத்தை நீக்காமல் அதை வைத்துக்கொண்டே ஆத்மாவை அறிமுகப்படுத்துகின்றது.  ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவுடன் தானாகவே இந்த கோஷத்திலிருந்து வெளியே வந்து விடுவோம். ஆகாசத்தை விளக்குவதற்கு குடத்திலுள்ள ஆகாசத்தை காட்டி இதுதான் எங்கும் நிறைந்திருக்கின்றது என்று புரிய வைக்கலாம்.  ஆகாசம் புரிந்தவுடன் இனி இந்தப் பானை தேவையில்லை.  அதுபோல ஆத்மாவை விளக்குவதற்கு ஆனந்தமய கோஷம் உபயோகப்படுத்தப்படுகின்றது.  ஆத்மாவை உணர்ந்தவுடன் இந்த கோஷம் தானாகவே மறைந்து விடுகின்றது.  ஆத்மாவிற்கு குறிப்பிட்ட குணமும் எதுவும் இல்லாததால் அதை விளக்க முடியாது. ஆதலால் இந்த கோஷம் ஆத்மாவை விளக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

ஆனந்தமய என்பது ஆனந்த விகாரத்தை குறிக்கின்றது.  இதை போக்த்ரு ஆத்மா என்றும் அழைக்கப்படுகின்றது.  மனதில் எழும் உணர்ச்சிகளுடன் கூடிய எண்ணங்கள் மனோமயத்தைக் காட்டுகின்றது.  இந்த எண்ணங்களில் எது நான் செய்தேன் என்று உபயோகிக்கும்போது அது விக்ஞானமய கோஷத்தை குறிக்கின்றது.  சில எண்ணங்களால் நான் சுகத்தை அனுபவிக்கின்றேன் என்று உணரும்போது அது ஆனந்தமய கோஷத்தில் இருப்பதை குறிக்கின்றது.  இதிலிருந்து எண்ணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது. கரண ரூபமாக இருக்கும் எண்ணங்கள் மனோமயத்தில் இருப்பதையும், கர்த்துரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் விக்ஞானமய கோஷத்தில் இருப்பதையும், போக்த்ரு ரூபமாக இருக்கும் எண்ணங்கள் ஆனந்தமய கோஷத்தில் இருப்பதையும் குறிக்கின்றது.  மனதிற்கு ஆத்மாவை பிரதிபலிக்கும் குணம் உடையது.  அதனால்தான் ஜடமான மனது உணர்வுடன் செயல்படுவது போல தோன்றுகின்றது. நிலைக்கண்ணாடியில், தூய நீரில் பிரதிபலிக்கும் சூரியனைபோல ஆத்மா மனதில் பிரதிபலிக்கின்றது.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. இந்த ஆனந்த ஸ்வரூபம் மனதில் பிரதிபலிக்கும்போது நாம் இன்பத்தை அனுபவிக்கின்றோம், ஆனந்தமய கோஷத்தில் இருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள முடிகின்றது.

நாம் பார்த்து அனுபவிக்கும் பொருளில் உண்மையிலெ சுகம் கிடையாது. அதேப்பொருள் வேறொரு சூழ்நிலையில் துக்க ஸ்வரூபமாக மாறிவிடுகின்றது.  உலகத்திலுள்ள எந்தப் பொருளிலும் சுகம் என்பது கிடையாது. பிறகு சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற ஆராய்ந்து பார்த்தால், ஏண்ணங்கள் சூட்சுமமாகும் போது மனது ஆத்மாவினுடைய ஆனந்தஸ்வரூபத்தை  பிரதிபிம்பிக்கின்றது. நாம் அடையும் சுகத்தில் ஏற்றத்-தாழ்வையும் பார்க்கின்றோம்.  இதற்குக் காரணம் மனதில் எழும் சுகத்தைக் கொடுக்கும் எண்ணங்கள்தான்.  ஆத்மாவின் ஆனந்த ஸ்வரூபம் எண்ணங்களை பொறுத்து ஏற்றத்-தாழ்வுடன் பிரதிபலிக்கின்றது.  உதாரணமாக தூசிபடிந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியைவிட தூய்மையான கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஒளியின் பிரகாசம் அதிகமாக இருப்பதைப் போல மனத்தூய்மையை பொறுத்து பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தஸ்வரூபம் இருக்கின்றது.

மனதின் சூட்சுமத்தன்மை மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றது.
அவைகள் 1, ப்ரியவ்ருத்தி, 2. மோத வ்ருத்தி, 3. பிரமோத வ்ருத்தி ஆகும்.

ஒன்றைவிட ஒன்று மிக சூட்சுமமானது.  எண்ணங்கள் சூட்சுமம் அதிகமாகும்போது ஆனந்த நிலையும் அதிகரிக்கும்.

  1. ப்ரிய வ்ருத்தி    – விருப்பமான பொருளைப் பார்ப்பதினால் தோன்றும் எண்ணம்
  2. மோத வ்ருத்தி- விரும்பிய பொருளை அடையும்போது தோன்றும் எண்ணங்கள்
  3. பிரமோத வ்ருத்தி– அடைந்த பொருளை அனுபவிக்கும்போது எழும் எண்ணங்கள்

இந்த மூன்று விதமான சூட்சுமமான எண்ணங்கள் (வ்ருத்திகள்) பிரதிபிம்ப ஆனந்தத்துடன் சேரும்போது அதுவே ஆனந்தமய கோஷம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் உலகத்தில் உள்ள பொருட்களிலிருந்துதான் இந்த எண்ணங்கள் எழுகின்றது.  எனவே பொருட்களில் சுகமில்லை என்று புரிந்து கொள்ள முடியும்.  ஆழ்ந்த உறக்கத்தில் நாம் அனுபவிக்கும் சுகம் எந்தப் பொருட்களினாலும் வருவதில்லை.  ஆழ்ந்த உறக்கத்தில் மிகவும் சூட்சுமமான எண்ணங்கள் தோன்றுகின்றது அதில் ஆத்மாவில் ஆனந்த ஸ்வரூபம் அதிகமாக பிரதிபலிப்பதால் அதிகமான சுகத்தை அனுபவிக்க முடிகின்றது.  இதிலிருந்து ஆனந்தமய கோஷம் என்பது மனதில் இருக்கின்ற சூட்சுமமான எண்ணங்கள் அதில் பிரதிபலிக்கின்ற ஆத்மானந்தம். மனதில் எழும் இந்த எண்ணங்களுக்கு சுகம் கொடுக்கும் சக்தி கிடையாது, ஏனென்றால் அவைகள் வெறும் ஜடம்தான் என்று சாஸ்திரம் கூறுகின்றது.  இதில் பிரதிபலிக்கும் ஆத்மாவின் ஆனந்தம்தான் நாம் அனுபவிக்கின்றோம். ஆனால் ஆத்மாவில் இருக்கும் ஆனந்தத்தில் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகள் கிடையாது, இது பூரணமானது, முழுமையானது.

ஆனந்தமய கோஷத்தினால் விக்ஞானமய கோஷம் வியாபிக்கப்பட்டிருக்கின்றது.  இந்த ஆனந்தமயன் மனிதனைப்போல உடலை உடையவன்.  அந்த விக்ஞானமய உடலமைப்ப ஒட்டி இந்த ஆனந்தமயனின் உடல்வடிவம் அமைகின்றது.  இந்த சரீர கற்பணை உபாஸனைக்காக கூறவில்லை. ஆனந்தமயத்தின் தலைப்பாகம் பிரிய விருத்தியாகவும், வலதுபாகம் மோதமாகவும், இடதுபாகம் பிரமோத விருத்தியாகவும், ஆனந்தமே நடுப்பாகமாகவும், பிரஹ்மமே வாலைப்போல் அதை தாங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனந்தமய கோஷத்தில் உள்ள ஆனந்தமானது மூன்றுவிதமான ஏற்றத்தாழ்வுகளை உடையது என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறு சொல்லப்படுகின்றது.  எங்கிருந்து ஜடமான இந்த எண்ணங்களில் ஆனந்தமானது வருகின்றது. இந்த ஏற்றத்தாழ்வான ஆனந்தத்திற்கு உபாதான காரணமாக இருப்பது ஆனந்த ஸ்வரூபமான ஆத்மாதான் என்றும் பூரணமானதும், முழுமையானதுமான, இருமையற்ற பிரம்மன் தான் இதற்கு ஆதாரமாக உள்ளது. இதை விளக்குவதற்கு பின்வரும் ரிக் மந்திரம் சொல்லப்படுகின்றது.

அனுவாகம்-6.1
அஸன்னேவ ஸ ப4வதி |
அஸத்3 ப்3ரஹ்மோதி வேத3 சேத் |
அஸ்தி ப்3ரஹோதி சேத்3வேத3 |
ஸந்தமேனம் ததோ விது3ரிதி |
தஸ்யைஷ ஏவ ஶாரீர ஆத்மா |
ய: பூர்வஸ்ய |

ஒருவன் பிரம்மத்தை இல்லையென்று கருதினால் அவன் இல்லாதவன் போல் ஆகின்றான்.  இவன் சம்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். எப்பொழுதும் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான்.  பிரம்மம் இருக்கின்றதென்று ஒருவன் கருதினால் அவனை ஸத்புருஷனாகவும், மேலோனாகவும், புருஷார்த்தத்தை அடைந்தவனாகவும் ரிஷிகள் கருதுகின்றார்கள்.  இவ்வாறு ரிக் மந்திரம் சொல்லுகிறது.  முன் சொன்ன விக்ஞானமயத்திற்கு உள்ளேயுள்ள ஆத்மாவாக இருக்கின்றானோ அவனே இந்த ஆனந்தமயன்.

அனுவாகம்-6.2
அதா2தோÅனுப்ரஶ்னா: |
உதாவித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சன க3ச்ச2தி |
ஆஹோ வித்3வானமும் லோகம் ப்ரேத்ய |
கஶ்சித்ஸமஶ்னுதா உ |
இவ்விதம் உபதேசம் செய்ததற்கு பிறகும் சந்தேகம் இருப்பதனால் அதை ஒட்டிய கேள்விகள் எழுகின்றன.  அவைகள்
1. பிரம்மன் இருக்கின்றதா அல்லது இல்லையா?
2. ஞானி பிரம்மத்தை அடைகின்றானா, இல்லையா?
3. அக்ஞானி பிரம்மத்தை அடைகின்றானா இல்லையா?

ஞானியும், அக்ஞானியும் இருக்கும்போதும், இறந்தப்பிறகும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள். எனவே இந்த இரண்டு கேள்விகளும் தவறு.  இவர்கள் அடைவதற்கு தேவையே இல்லை. ஆத்ம ஞானத்தை அடைந்தவன் ஆத்மாகவே இருந்து கொண்டு ஆனந்தமாக இருக்கின்றான்.  ஆத்ம ஞானத்தை அடையாதவன் அறியாமையில் இருந்து கொண்டு கர்ம பலன்களான சுக-துக்கங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.  ஞானியானவன் பஞ்ச கோஷத்தை கடந்து பிரம்மத்தை அறிகின்றான்.  அக்ஞானி பஞ்ச கோஷத்திலேயே அபிமானம் கொண்டு அறியாமையில் இருந்து கொண்டு பிரம்மத்தை அறிவதில்லை.

அனுவாகம் 6.3லிருந்து அனுவாகம் 7 வரையுள்ள பகுதிகளில் சங்கரர் ஏழு காரணங்களால் இதை விளக்குகின்றார்.

அனுவாகம்-6.3
ஸோÅகாமயத |
ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி |
ஸ: தபோÅதப்யத |
ஸ: தபஸ்தப்த்வா |
இத3ம் ஸர்வமுஸ்ருஜத |
யதி3தம் கிஞ்ச ||

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு பிரம்மன் நிமித்த காரணமாக இருப்பதால் அது இருக்கின்றது என்ரு உணர்த்தப்படுகின்றது.

காரணம்1 (ஜகத் காரணத்வாத்)
பரம்பொருள் ஈஸ்வரன் (மாயையுடன் கூடிய பிரம்மன்) ஆசைப்பட்டார். நான் பலவாக  பிறப்பேனாக என்று தவம் செய்தார். அவர் தவத்தை செய்து எவைகள் முன்பு இருந்ததோ அவைகள் அனைத்தையும் தோற்றுவித்தார்.
அகாமயத  – ஆசைப்படுவதிலிருந்து சேதன தத்துவம்தான் நிமித்தக்காரணம் என்பதை நாம்  புரிந்து கொள்ளலாம்.  இங்கு ஆசை என்பது அவரிடமிருந்து ஒரு எண்ணம் தோன்றியது என்பதுதான்.
பஹூஸ்யாம் – என்னையே பலவாக பிறப்பித்துக்கொள்வேனாக என்று சங்கல்பம் செய்து கொண்டார்.
ஸஹ தப அதப்யஹ – அதற்கு அவர் தவம் செய்தார்.  இது எப்படி படைக்கலாம் என்று சிந்தித்தார்.  இது அவருடைய ஞானமய தவம், ஈஸ்வரன் மனது மாயா, ஸ்ருஷ்டிக்கு தயாராக இருக்கும் நிலை.  ஈஸ்வரனின் சங்கல்பமே செயலாகி விடும்.

காரணம்2 (ஜீவரூபேனே பா4ஸமானவாத்)
தத்ஸ்ருஷ்டவா | ததே3வானுப்ராவிஶத் |

ஜீவ வடிவத்தில் வெளிப்படுவதால் பிரம்மன் உபாதான காரணம், ஈஸ்வரன் நிமித்த காரணம்.  ஜடமான மாயை இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக சொல்லலாம்.  இது ஈஸ்வரனிடமிருந்து பிரிக்க முடியாதது, மூன்று குணங்களை உடையது.  இதிலிருந்து தோன்றியது பஞ்ச பூதங்கள் கொண்ட பிரபஞ்சம்.  மாயை ஜடமாக இருப்பதால், இதிலிருந்து தோன்றியவைகள் அனைத்தும் ஜடமாகத்தான் இருக்க வேண்டும்.  உதாரணமாக மனித உடல், கல், மலை போன்ற அனைத்தும் ஜடமானவை. ஆனால் மனித உடல் அறிவு பூர்வமாக இயங்குவதற்கு காரணம் அதில் பிரதிபலிக்கும் சேதனமான பிரம்மத்தின் இருப்பை புரிந்து கொள்ளலாம்.

தத் ஸ்ருஷ்ட்வா – இந்த பிரபஞ்சத்தை படைத்து,
தத்3 ஏவ அனுப்ரவிஶஸ்ய – அதற்குள் நுழைந்தார்.
இதை ப்ரவேச ஸ்ருதி என்று அழைக்கப்படுகின்றது.  இதைப்பற்றி சுருக்கமான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஈஸ்வரன் எந்த ரூபத்தில் ஜீவனுக்குள் நுழைந்தார்?

இந்த பிரபஞ்சமாகவே ஈஸ்வரன் மாறியிருக்கும்போது எப்படி இதற்குள் நுழைய முடியும்! எனவே தன்னுடைய ஸ்வரூபமாக உள்ளே சென்றிருக்க முடியாது.  பிறகு எப்படி சென்றிருக்கலாம் என்று கேள்வி எழும்போது அதைப் பற்றி இவ்வாறு விசாரம் செய்யப்படுகின்றது.

  • பிரம்மனுக்கு இரண்டு உருவம் அவைகள் ஈஸ்வரன், ஜீவன்.  ஈஸ்வரன் பிரபஞ்சமாக இருக்கின்றார், ஜீவன் அதற்குள் நுழைந்தது என்று எடுத்துக் கொண்டால், .பிரம்மன் இரண்டற்றது எனவே இது சாத்தியமில்லை.
  • இரண்டு அவயங்கள் உடையது என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனெனில் இது நிரவ்யமாக இருப்பதனாலும், எல்லாவிடத்திலும் வியாபித்து இருப்பதாலும் இதுவும் சாத்தியமில்லை.
  • ஈஸ்வரன் ஜீவ ரூபமாக பரிணாம அடைந்தார் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு விசாரித்து விட்டு பிரம்மன் புத்தியில் வெளிப்படுகின்றார், புத்தியில் அறியப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தாய் சமையலறையை நோக்கி போய் கொண்டிருப்பதை பார்த்த மகனிடம், உன் தாய் எங்கே இருக்கின்றாள் என்று கேட்டால், சமையலறைக்கு போனதை பார்த்தேன் என்று கூறுவான், இதிலிருந்து அங்கு இருக்கின்றாள் என்று புரிந்து கொள்ளலாம் அல்லவா.

காரணம்3   ( ஜகத்ரூபேனே பா4ஸமானவாத்)
ஸச்ச த்யச்சாப4வத் |
நிருக்தம் சாநிருக்தம் ச |
நிலயனம் சாநிலயனம் ச |
விக்3ஞானம் சாவிக்3ஞானம் ச |
ஸத்யம் சாந்ருதம் ச ஸத்யமப4வத் |
யதி3தம் கிஞ்ச |
தத்ஸத்யமித்யசக்ஷதே |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

ஜகத் வடிவத்தில் தோன்றி கொண்டிருப்பதால் பிரம்மன் இருக்கின்றதை அறிந்து கொள்ள முடியும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக ஈஸ்வரன் இருந்து கொண்டிருக்-கின்றார்.  இது போ4க்ய பிரபஞ்சம், அதாவது அனுபவிக்கப்படும் பிரபஞ்சமாக கருதப்படுகின்றது.

பிரம்மன் புத்தியில் வெளிப்படுபவராக இருந்து கொண்டு, உருவமுடைய, நம்மால் பார்க்கக் கூடிய மூன்று பூதங்களாகவும் (நீர், நிலம், நெருப்பு) தோன்றி கொண்டிருக்கின்றது. உருவமற்ற மற்ற இரு பூதங்களாகவும் ( வாயு, ஆகாசம் ) தோன்றி கொண்டிருகின்றது. தெளிவாக விளக்க கூடியததாகவும், விளக்க முடியாததாகவும், தாங்குவதாகவும், தாங்கப்படுவதாகவும், அறிவுடையதாகவும் (சேதனம்), அறிவற்றதாகவும் (ஜடம்), உண்மையாகவும் (வியாவஹார சத்யம் – எல்லோராலும் அனுபவிப்பது) பொய்யானதாகவும், (பிராதிபாஸிக சத்யம் – கனவு – ஒருவனுக்கு மட்டும் உண்மையாக இருப்பது, கயிற்றில் தோன்றும் பாம்பு ), இவ்வாறெல்லாம் பிரம்மன் மாறியிருக்கின்றது.  எவைகளெல்லாம் இருக்கின்றதோ அவைகளெல்லாம் மாறியது.  ஆகவே பிரம்மனை சத்யம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இந்த விஷயத்தை பின்வரும் ரிக் மந்திரம் மேலும் விளக்குகின்றது.

அனுவாகம்-7
அஸத்3வா இத3மக்3ர ஆஸீத் |
ததோ வை ஸத3ஜாயத |
ததா3த்மானம் ஸ்வயமகுருத |
தஸ்மாத்தத்ஸுக்ருதமுச்யத இதி |

காரணம்4
சாஸ்திரத்தில் பிரம்மத்திற்கு பிரசித்தமான ஸுக்ருதம் ( சுயம்பு ) என்ற வேறொரு பெயரும் உண்டு.
அஸத்3வா இத3ம் அக்3ர ஆஸீத் – நாம் பார்த்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அஸத்தாக இருந்தது, அதாவது வெளித்தோற்றத்திற்கு வராத நிலையில் இருந்தது.  வெளித்தோற்றத்திற்கு வந்த நாமரூபங்கள் எதையாவது ஒன்றை சார்ந்துதான் இருக்கும்.  வெளித்தோற்றத்திற்கு வராத நாம ரூபங்கள் (அஸத்) பிரம்மத்தை சார்ந்து இருக்கும். நாமரூபத்தை வெளிப்படுத்தாத பிரம்மன் என்பது இறுதியான பொருள்.

அப்படிபட்ட பிரம்மனிடமிருந்து வெளித்தோற்றத்திற்கு வந்த விதவிதமான நாமரூபங்கள் கூடிய ஜகத்தானது தோன்றியது. அது தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்டது.  அதே பிரம்மன் தானே தோற்றுவிப்பவர் என்று சொல்லப்படுகின்றது. இவ்விதம் ரிக் மந்திரத்தின் விளக்கம் முடிவடைகின்றது. இதிலிருந்து பிரம்மனே இந்த உலகமாக காட்சியளித்துக் கொண்டிருப்பதால், பிரம்மன் இருக்கின்றது என்று நிரூபணமாகின்றது.

காரணம்5
யத்3வை தத்ஸுக்ருதம் |
ரஸோ வை ஸ: |
ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வானந்தீ ப4வதி |

பிரம்மத்திற்கு ரஸஹ (ஆனந்தம்) என்ற வேறொரு பெயராலும் வேதம் குறிக்கின்றது.  மனிதன் இந்திரியத்தின் துணைக்கொண்டு விஷயங்களிலிருந்து அதனோடு சம்பந்தம் வைப்பதால் ஆனந்தத்தை அடைகின்றான்.  ஆனால் ஆழ்ந்த உறக்கத்திலும் சுகம் இருக்கின்றது.  இந்த இரண்டு நிலைகளிலும் சுகத்தை அனுபவிக்கின்றான் ஞானி.  இவ்வாறாக சுகம் மூன்று விதமாக இருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டது. ஆழ்நிலை உறக்கத்தில் சுகத்தோடு ஒப்பிடும்போது வெளி விஷயங்கள்தான் சுகத்தைக் கொடுக்கும் என்ற கருத்து பொய்யாகிவிடும். ஏனெனில் ஆழ்நிலை உறக்கத்தில் விஷயங்கள் எதுவும் இல்லை ஆனால் சுகத்தை அனுபவிக்கின்றோம்.  ஞானி எந்த விஷயங்களோடும் சம்பந்தம் இல்லாமல் திருப்தியுடன் இருக்கின்றான். இந்த நிலைக்கு காரணம் அவன் அடைந்த ஆத்ம ஞானத்தினால்தான்.  இதிலிருந்து அறிந்து கொள்வது பிரம்மன்தான் திருப்திக்கு காரணமாக இருக்கின்றது எனவே பிரம்மன் இருக்கின்றது என்று நிலை நாட்டப்பட்டது.

யத்4வை தத் ஸுக்ருதம் | ரஸோ வை ஸஹ |
எந்த ஒன்று ஸக்ருதம் என்று அழைக்கப்படுகின்றதோ அதுவே ஆனந்த ரஸம் என்றும் அழைக்கப்படுகின்றது
ரஸம் ஹி ஏவ அயம் –இந்த பிரம்மத்தை (ரஸத்தை)
லப்த்வானந்தீ ப4வதி – அடைந்து திருப்தியுடன் இருக்கின்றான்.
இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது பிரம்மன் என்ற ஒன்று இருக்கின்றது என்பதாகும்..

காரணம்6
கோ ஹ்யேவான்யத்க: ப்ராண்யாத் |
யதே3ஷ ஆகாஶ ஆனந்தோ3 ந ஸ்யாத் |
 

நமது மனம், உடல், இந்திரியங்கள் செயல்படுவதிலிருந்து பிரம்மத்தின் இருப்பை நிலைநாட்டலாம்.  பல பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரதமானது அதன் எஜமானனுக்குத்தானே தவிர  அந்தப்பொருட்களுக்காக அல்ல.  அதுபோல பல உறுப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடல் வேறு ஒன்று பயன்படுத்தத்தான் என்று புரிந்து கொண்டால் அந்த வேறு ஒன்று என்பது அறிவுடைய பிரம்மம்தான் என்று அறிந்து கொள்ள முடியும்.  பிரம்மத்தின் இருப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டது.

யாரால் மூச்சுக்காற்றை உடலுக்குள்ளே இழுக்க முடியும்,  யாரால் மூச்சுக்காற்றை வெளியே விட முடியும். இந்த ஆனந்த ரூபமான பிரம்மன் மட்டும் ஆகாசத்தில் இல்லை என்றால், இங்கே ஆகாசம் என்பது ஹ்ருதய ஆகாசத்தைக் குறிக்கின்றது.  இந்த பிரம்மம்தான் ஒருவனை மகிழ்விக்கின்றது, திருப்திபடுத்துகின்றது.

காரணம்7
யதா3 ஹ்யேவைஷ ஏஜஸ்மின்னத்3ருஶ்யேÅனாத்ம்யேÅநிருக்தேÅநிலயனேÅப4யம் ப்ரதிஷ்டாம் விந்த3தே |
அத2 ஸோப4யம் ததோ ப4வதி |
யதா3 ஹ்யேவைஷ ஏதஸ்மின்னுத3ரமந்தரம் குருதே |
அதா2 தஸ்ய ப4யம் ப4வதி |
தத்த்வேவ ப4யம் விது3ஷோÅமன்வானஸ்ய |
தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி |
 

4ய-அப4ய ஹேதுத்வாத் – பயத்திற்கும்-அபயத்திற்கும் காரணமாக இருப்பது பிரம்மன்தான்.

கயிற்றில் தோன்றும் பாம்பை பார்த்து பயப்படுகின்றோம்.  அதற்குக் காரணம் கயிறுதான், இதுதான் பாம்பு தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றது.  கயிற்றை அதுவாக பார்க்கும்போது பயம் ஏற்படுவதில்லை அதற்கும் கயிறுதான் காரணமாக இருக்கின்றது.  அதேபோல பிரம்மனை புரிந்து கொண்டால் பயம் ஏற்படுவதில்லை, ஞானி அபயத்தை அடைவதற்கு காரணம், அவர் பிரம்மத்தை அறிந்து கொண்டதால்தான். பிரம்மத்தை புரிந்து கொள்ளாதவனுக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு விஷயத்தில் பயந்து கொண்டிருக்கும்.  அத்யாஸம், அக்ஞானம் இரண்டும் சேர்ந்து நமக்கு பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும்.  நாமே நம்முடைய பயத்திற்கும், அபயத்திற்கும் காரணமாக இருக்கின்றோம்.

நம்முடைய பயத்திற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்கும் என்றால் அது பிரம்மனாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த ஜகத்தில் உள்ள அனைத்தும் பிரம்ம ஸ்வரூபமாக இருக்கின்றது.  அதுபோல அபயத்திற்கு காரணமாக இருப்பதும் பிரம்மன்தான்.  ஏனென்றால் பிரம்மனாக நம்மை உணர்ந்து விட்டால் எதற்கும் நாம் பயப்படமாட்டோம்.

ஒருவன் எந்தக்காலத்தில் பிரம்மனிடத்தில் நிலைப் பெறுகின்றானோ, அந்தக்காலத்தில் பிரம்மத்தில் பயமற்ற ஆத்ம பாவத்தை அடைகின்றான் அல்லது உறுதியான ஆத்ம பாவத்தை, பிரம்ம நிஷ்டையை அடைகின்றான்.  பார்க்கப்படாத தன்மையுடையதும், மாற்றமடையாததும், பிரதியக்‌ஷ பிரமாணத்திற்கு விஷயமாக இல்லாததும், சரீரமற்றதும், அனுமான பிராமானத்தினால் அறிய முடியாததும், ஆதாரமற்றதும், எதையும் சார்ந்தில்லாமல் இருப்பதாகவும் உள்ள பிரம்மத்தை உறுதியாக அறிந்தவன் பயத்திலிருந்து நீங்கியவனாகின்றான்.  எப்பொழுது இந்த அக்ஞானி பிரம்மனிடத்தில் சிறிதளவாவது வேற்றுமையை பார்க்கின்றானோ அவனுக்கு பயம் வந்தடைகின்றது. சாஸ்திரங்களை கற்றறிந்தும் ;ஆத்ம ஞானத்தை அடையாவிட்டால் அவனுக்கும் பிரம்மன் பயத்தை கொடுக்கின்றது. இந்த விஷயத்தில் பின்வரும் ரிக் மந்திரம் விளக்குகின்றது.

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-02 – பகுதி-3

ப்ரஹ்மானந்தவல்லி

அனுவாகம்-8.1
பீ4ஷாஸ்மாத்3வாத: பவதே |
பீ4ஷோதே3தி ஸூரய: |
பீ4ஷாஸ்மாத3க்3னிஶ்சேந்த்3ரஶ்ச |
ம்ருத்யுர்தா4வதி பஞ்சம் இதி |

பிரம்மனிடத்தில் கொண்ட பயத்தினால் காற்று வீசுகின்றது.  சூரியனும் உதிக்கின்றது. அக்னியும், இந்திரனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். யமதர்மனும் பயந்து தன் வேலையை செய்வதற்கு ஓடுகின்றார். இவ்வாறு கூறி ரிக் மந்திரம் முடிக்கின்றது.
ஸைஷானந்த3ஸ்ய மீமாம்ஸா ப4வதி |
கீழ்கண்ட பகுதியில் ஆனந்தத்தைப் பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.
சுருக்கம்:-

  1. இந்த விசாரம் எதற்காக செய்யப்படுகின்றது?
    2.இதன் மூலம் எதை சொல்ல விரும்புகின்றது!
    3. இதனால் அடையும் பலன்கள்.
  2. ஆனந்தம்– பிரஹ்ம ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம் என்ற அறிவை அடைவோம்
  3. வைராக்கியத்தின் முக்கியத்துவத்தை,மேன்மையை அறிந்து கொள்வோம்.
  4. ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிந்து கொள்வோம்

 

ஆனந்தம் பிரஹ்ம ஸ்வரூபம்:

அக்னி உஷ்ண ஸ்வரூபம் என்ற வாக்கியத்தின் பொருள் அது உஷ்ணமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை.  அதுபோல ஆத்மா ஆனந்தமாக இருப்பதற்கு எதையும் சார்ந்திருக்க தேவையில்ல.  நானே ஆத்மாவாக இருப்பதால், நான் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை.

 

நாம் எதற்காக இந்த விசாரம் செய்ய வேண்டுமென்றால், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியே உள்ள பொருட்களிலிருந்து வருவதாக உணர்ந்திருக்கின்றோம்.  அதனால் அந்தப் பொருட்களைச் சார்ந்திருக்கின்றேன்.  நான் சுபாவமாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று உணரவில்லை.  இதை உணர்த்துவதற்குத்தான் இந்த விசாரம் தேவைப்படுகின்றது.

ஸுபாவத்தை நிரூபித்தல்:

  • நான் ஆனந்தத்தை ஏற்றத்தாழ்வுகளுடன் அனுபவிக்கின்றோம்.
  • இந்த ஏற்றத்தாழ்விற்கு காரணம் எது என்று வினவும்போது விஷயங்கள்தான் இதை உருவாக்குகின்றது என்று புரிந்து கொள்ளலாம்.
  • சுகத்தின் ஏற்றத்தாழ்வு விஷயத்தின் நிமித்த காரணமா அல்லது உபாதான காரணமா, பொருளின் காரணமா அல்லது பொருளின் நிமித்தமாக உண்டாகின்றதா என்று வினவினால், பொருளே காரணம் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் பொருள் எல்லோருக்கும் ஒரே அளவுள்ள சுகத்தை கொடுக்க வேண்டும்.  ஆனால் அனுபவத்தில் அப்படி இல்லை.  எனவே பொருளின் நிமித்தமே வேறுபாட்டிற்கு காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
  • நம்முடைய மனம்தான் உபாதியாக இந்த ஏற்றத்தாழ்வான சுகத்திற்கு காரணமாக இருக்கின்றது.  நம் மனதில் அமைதி அதிகரிக்கும்போது சுகமானது அதிகரிக்கிறது. மனம் சூட்சுமத்தன்மை அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது.
  • எப்பொழுது மனம் அமைதியடையும், சூட்சுமமாகும்? இதற்கென்ன வழி என்று கேள்விகளுக்கு உபநிஷத் இரண்டு உபாயங்கள் கூறுகின்றது. அவைகள் அறிவு, வைராக்யம். மனதில் ஆத்மஞானம் வளர வளர மனம் சூட்சுமாகின்றது, அமைதியும் அடைகின்றது. அதற்கேற்றவாறு சுகத்தின் அளவும் அதிகரிக்கின்றது.
  • மனம் சூட்சுமமாகும்போது மிக மிக நுண்ணிய விஷயங்களை கிரகிக்கின்றது. இது அடையும் அறிவினால் நிகழ்கின்றது
  • மனம் அமைதியாக இருக்கும்போது, சூட்சுமமாக இருக்கும்.  வைராக்கியம் அதிகரிக்கும்போது மனம் அமைதியடைகின்றது.
  • இந்த ஆனந்தம் எங்கிருந்து வருகின்றது என்று கேட்கும்போது நம் மனதிலிருந்து தான் வருகின்றது என்று சொன்னால் தவறு..  மனம் சுகத்தின் உற்பத்தி ஸ்தானம் கிடையாது. மனம் ஒடுங்கி செயல்படாமல் இருக்கும்போது ஆனந்தம் வரக்கூடாது, ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் மனம் ஒடுங்கிய நிலையில் ஆனந்தத்தை அனுபவிக்கின்றோம். எனவே மனம் ஆனந்தத்தின் உற்பத்தி ஸ்தானமல்ல என்று நிரூபணமாகின்றது
  • இவ்வாறு எல்லாவற்றையும் நீக்கிக் கொண்டு வந்தால், அதை பார்த்துக் கொண்டு இருப்பவன்தான் ஆத்மா. என்றும், மனமானது ஆனந்தத்தை பிரதிபிம்பிக்கின்ற தன்மையுடன் இருக்கின்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  உதாரணமாக நிலைக்கண்ணாடிக்கு அதன் எதிரே வரும் பொருளை பிரதிபிம்பிக்கும் தன்மையுடையது.  தூசிபடிந்த கண்ணாடியில் பிம்பம் தெளிவாக இருக்காது. சுத்தப்படுத்திப் பார்க்கும்போது அதுவே தெளிவாக தெரியும்.  இதிலிருந்து நாம் அறிய வேண்டியது மனதின் சூட்சும தன்மை அதிகரிக்கும் போது அதில் பிரதிபலிக்கும் ஆனந்தமும் அதிகரிக்கும்.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதால், மனமானது அதை பிரதிபிம்பிக்கும்போது ஆனந்தம் ஏற்படுகின்றது.  இதிலிருந்து நம்மால் ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

வைராக்கியத்தின் பெருமை:-

மனதில் அனுபவிக்கும் ஆனந்தத்தின் ஏற்றத்தாழ்வு வைராக்கியத்தின் அளவை பொறுத்திருக்கின்றது.  ஆசைகள் குறைய குறைய ஆனந்தம் அதிகரிக்கின்றது.  காமத்தியாகம் இரண்டு விதத்தில் ஏற்படுகின்றது. எப்படி ஆசைகளை மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டால், விரும்பிய பொருளை அடையும் போது அதிலுள்ள குறையை ஆராய்ந்து அறிந்து அந்த ஆசையை நீக்கி விடுதல்.

  • அடையும் பொருள் கொடுக்கும் சுகத்தைவிட அதை விலக்குவதால அடையும் இன்பம நூறுமடங்காக இருக்கும்.
  • வைராக்கியத்தினல் இரண்டுவிதமான பலன்களை அடையலாம். அவைகள்

o லௌகீக வாழ்க்கையிலே அதிக இன்பத்தை அனுபவிக்கலாம், பிரதிபிம்பானந்தத்தை அனுபவிக்கலாம்.  வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது இன்பமும் அதிகரிக்கின்றது. இதனால் மனம் அதிகமாக அமைதியடையும், சூட்சுமமடைகின்றது.

o வைராக்கியத்தின் அளவு அதிகரிக்கும்போது மோட்சத்தை அடைவதற்கு தகுதியை கொடுக்கின்றது.

பிரம்மானந்தம் : நானே சுபாவமாக பிரம்மனாகவே இருக்கின்றேன் என்ற நிலையை அடையும்போது அனுபவிக்கின்ற இன்பம்.  இந்த இன்பத்தை அனுபவிக்க எதையும் சார்ந்திருக்கத்தேவையில்லை. ஏனென்றால் ஆத்மாவின் ஸ்வரூபமே ஆனந்தமாக இருக்கின்றது. தன்னிடத்திலே திருப்தியுடன் இருப்பவன் தான் நிலையான இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான் என்று பகவான் கீதையில் கூறியிருக்கின்றார். இந்த பிரம்மானந்த்த்தை அடைவதற்கு வைராக்கியம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

அனுவாகம்-8.2
யுவா ஸ்யாத்ஸது4யுவாத்4யாயக: | ஆஸிஷ்டோ த்3ருடி4ஷ்டோ ப3லிஷ்ட: \
தஸ்ய்யேயம் ப்ருதி2வீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் | ஸ ஏகோ மானுஷ ஆனந்த: |
தேயே ஶதம் மானுஷா ஆனந்தா: |
ஸ ஏகோ மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் மனுஷ்யகந்த4ர்வாணாமானந்த3 | ஸ ஏகோ தேவகந்த4ர்வாணாமானந்த3: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வகந்த4ர்வாணாமானந்த3 |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் பித்ருணாம் சிரலோகானாமானந்த3 |
ஸ ஏக ஆஜானஜானாம் தே3வனாமானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதமாஜானஜானாம் தே3வனாமானந்த: | ஸ ஏக கர்மதே3வானாம் தே3வனாமானந்த: |
யே கர்மணா தேவானபியந்தி | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் கர்மதே3வானாம் தே3வனாமானந்த: | ஸ ஏகோ தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதம் தே3வனாமானந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய | தே யே ஶதமிந்த்3ரஸ்யானந்தா: |
ஸ ஏகோ ப்3ருஹஸ்பதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்3ருஹஸ்பதேரானந்த: |
ஸ ஏகோ ப்ரஜாபதேரானந்த: | ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |
தே யே ஶதம் ப்ரஜாபதேரானந்த: | ஸ ஏகோ ப்3ரஹ்மண் ஆனந்த: |
ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய |

மனித லோகத்தில் அடையக்கூடிய அதிக சுகங்களை கற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் அடைந்தால் அனுபவிக்கும் ஆனந்தத்தைவிட நூறு மடங்கு ஆனந்தத்தை இந்த சுகங்களை நீக்குவதால் அடையலாம்.

இளம்வயதுடைய ஒருவன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை செய்பவன், நன்னெறியை பின்பற்றுகின்றவன், நன்கு சாஸ்திரங்களை கற்றவன், விரைவில் செயல்படும் திறமையுடையவன், மூவரிடம் நன்கு முறையாக உபதேசத்தை பெற்றவன் அவர்களுடைய அனுக்கிரகத்தைப் பெற்றவன், உறுதியான உள்ளமுடையவன், மனோ தைரியமுடையவன், நிச்சயமாக முடிவெடுப்பவன், உடல் வலிமையுடையவன், ஆரோக்கியமாக இருப்பவன் அவன் செழிப்பான இந்த முழு பூமியே அடைந்தவனாக இருக்கின்றான். இதுதான் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஆனந்தம். இது ஒருபங்கு ஆனந்தம் என்று வைத்து கொள்வோம்.

மனிதனுடைய நூறுபங்கு ஆனந்தம் எவையோ அவை மனித கந்தர்வர்களுடைய ஒரு பங்கு ஆனந்தம்.  ஸ்ரோத்ரியஸ்ய, அகாமஹதஸ்ய – மனிதர்களாக பிறந்து சாஸ்திரங்களை கற்றறிந்து மனித லோகத்தில் வைராக்கியம் உடையவனுக்கும் இதே நூறு மடங்கு இன்பத்தை அனுபவிக்கின்றான்.
மனித கந்தர்வனுடைய நூறுமடங்கு ஆனந்தம் தேவகந்தர்வனுடைய ஒரு மடங்கு ஆனந்தம். மனித கந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கு அதே அளவு ஆனந்தத்தை அனுபவிக்கின்றான்.
தேவ கந்தர்வனுடைய நூறு மடங்கு ஆனந்தம் = பித்ரு லோகத்தில் இருக்கின்றவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். தேவகந்தர்வ லோகத்தில் வைராக்கியமுடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பித்ருக்களுடைய 100 ஆனந்தம் = ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். பித்ரு லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். ஸ்மார்த்த தேவலோகத்தில் உள்ள  100 ஆனந்தம் = கர்ம தேவலோகத்தில் உள்ளவர்களின் ஒரு பங்கு ஆனந்தம். ஸ்மார்த்த தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
தேவ லோகத்தில் உள்ள 100 மடங்கு ஆனந்தம் = இந்திரனின் ஆனந்தம், தேவ லோகத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
இந்திரனின் நூறு மடங்கு ஆனந்தம் = பிருகஸ்பதியின்  ஆனந்தம். இந்திரனின் ஆனந்தத்தில் வைராக்கியம் உடைய மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.
பிருகஸ்பதியின் நூறு மடங்கு ஆனந்தம். பிரஜாபதியின் (விராட் புருஷன்) ஆனந்தம்.  பிருகஸ்பதியில் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம். பிரஜாபதியின் நூறு மடங்கு ஆனந்தம் = பிரம்மாவின் (ஹிரண்யகர்ப்பன்) ஆனந்தம் =
பிரஜாபதியின் ஆனந்தத்தில் வைராக்கியம் உள்ள மனிதனுக்கும் இதே அளவு ஆனந்தம்.

அனுவாகம்-8.3
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவாதி3த்யே | ஸ ஏல” | ஸ ய ஏவம்வித் |
ஸ்மால்ல்லோகாத்ப்ரேத்ய | ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதம் மனோமயமாத்மானுமுபஸங்க்ராமதி | ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ராமதி |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ராமதி | தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ||

ஆனந்த மீமாம்ஸத்தின் மூலமாக பிரதிபிம்பானந்தம் எடுத்துரைக்கப்பட்டது  ஜீவ-ஈஸ்வர ஐக்கியம் ஆனந்தத்தின் மூலமாக நிரூபிக்கபட்டிருக்கின்றது.

மனிதனிடத்தில் இருக்கும் ஆனந்தமும், ஹிரண்யகர்ப்பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றே. இந்த ஆனந்தத்திற்கு காரணம் ஆனந்த ஸ்வரூபமாக இருக்கும் ஆத்மாவேதான். அது இரண்டற்றது என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  இந்த ஞானத்தை அடைந்தவனுக்கு வரும் மனநிறைவே மோட்சம் என்று கூறப்படுகின்றது. இங்கே ஆனந்தம் அனுபவமாக இருக்காது, ஸ்வரூபமாக இருக்கும்.  ஹிரண்யகர்ப்பனின் ஆனந்தத்தை வைராக்கியத்தோடு ஒதுக்கி விட்டால் அடைவது பிரம்ம ஞானம், இதுவே ஜீவன் முக்தி என்றும் கூறப்படுகின்றது.

மனிதனின் இதயக்குகையில் இருக்கின்ற ஆத்மா, நம்முடைய அனுபவத்தில் இருக்கின்ற நான் என்ற ஆத்மா, உடலுக்குள் நுழைந்து இருக்கின்ற ஆத்மா.  இதுவும் மாயைக்கு ஆதாரமாக இருக்கின்றதும், இந்த ஜகத்துக்கு ஆதாரமாக இருக்கின்றதும், ஹிரண்ய-கர்ப்பனிடத்திலும் இருக்கின்றதுமான ஆத்மாவும் ஒன்றுதான் என்று ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

எவனொருவன் இவ்விதம் ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அறிகின்றனோ, அவன் இந்த உலகத்திலிருந்து விலகி, அதன் மீது வைராக்கியம் அடைந்து, உலகத்து விஷயங்களை சார்ந்தில்லாமல் என்னுடையது என்ற புத்தியை விட்டுவிடுகின்றான். தான் உபயோகிக்கும் பொருள் என்னுடையது என்ற புத்தியில்லாமல் அனுபவிக்கின்றான்.; இந்த ஸ்தூல சரீரத்தை ஆத்மா என்று நினைத்துக் கொண்டிருந்த அகங்காரத்தை துறக்கின்றான். ஸ்தூல பிரபஞ்சத்தையே துறக்கின்றான். இது மித்யா என்று புரிந்து கொள்கின்றான், இந்த ஜகத் உண்மைபோல் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது என்ற அறிவுடன் இருக்கின்றான்;.  மேலும் பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம் ஆனந்தமயம் இவைகளிலுள்ள அகங்காரத்தை விட்டவனாக இருக்கின்றான்.  இறுதியில் பிரம்மத்தையே அடைகின்றான், பிரம்மனாகவே இருக்கின்றான்.  இந்த விஷயத்தில் ரிக் மந்திரம் பின்வருமாறு விளக்குகின்றது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஞானிதான் பிரம்மத்தை அடைகின்றான். அக்ஞானி பிரம்ம ஸ்வரூபமாக இருந்தாலும் அதை அறியாமையிலிருப்பதால் பிரம்மத்தை அடைவதில்லை.

எல்லோரும் உலகத்தை இரண்டாக பிரித்திருக்கின்றனர். அவைகள் 1. என்னுடையது, 2.என்னுடையதல்ல என்பதாகும்.. இதில் இரண்டாவதுதான் மிகப்பெரியதாக இருக்கின்றது.  இந்த பிரிவினால்தான் நாம் துயரத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றோம்.

அனுவாகம்-9.1
யதோ வாசோ நிவர்தந்தே | அப்ராப்ய மனஸா ஸஹ |
ஆனந்தம் ப்3ரஹ்மணோ வித்3வான் | ந பி3பே4தி குதஶ்சனதி |

வாக்கும் மனமும் பிரம்மத்தை அடைய முடியாமல், விளக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது.  இதிலிருந்து நாம் அறிவது வாக்காலும், மனதாலும் இதை அடைய முடியாது என்பதாகும். வாச்யார்த்தம் என்பது நேரிடையாக புரிய வைக்கும், லட்சியார்த்தமானது மறைமுகமாக புரியவைக்கும்.  பிரம்மத்தினுடைய ஆனந்த ஸ்வரூபத்தை அறிபவன், ஆத்மாவிலிருந்து வேறுபடாத தன்னுடைய ஆனந்த ஸ்வருபத்தை அறிந்தவன், பயத்தைக் கொடுக்கும் காரணம் சென்று விடுவதால் எதைக்கண்டும் பயமில்லாதவனாகவும், பயம் என்பதே இல்லாதிருப்பவனாகவும் இருப்பான்.  இவ்விதம் ரிக் மந்திரம் முடிவடைகின்றது

அனுவாகம்-9.2
ஏதம்ஹ வாவ ந தபனி கிமஹம் ஸாது4 நாகரவம் |
கிமஹம் பாபமகரவமிதி | ஸ ய ஏவம் வித்3வானேதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |

உபே4 ஹ்யேவைஷ ஏதே ஆத்மானம் ஸ்ப்ருணுதே |
ய ஏவம் வேத3 | இத்யுபநிஷத் ||

ஞானியானவன், நான் ஏன் நல்லது செய்யவில்லை, நான் ஏன் பாவத்தை செய்தேன் போன்ற எண்ணங்களால் வருகின்ற துயரங்கள் வாட்டுவதில்லை.  இவன் தன்னிடத்திலே திருப்தியாக இருப்பவன், தன்னிடத்திலே குறையை பார்க்காமலிருப்பவன்.  பாவ-புண்ணியங்களை தன்னிடமிருந்து வேறாக பார்ப்பதில்லை. த்வைத ஞானம் அவனிடத்தில் இல்லாததால் அவனால் இவ்வாறாக நினைக்க முடிகின்றது.  அதனால் எந்த துயரத்தையும் அனுபவிப்பதில்லை.  நாம் நம்மையே நேசிக்க ஆரம்பித்துவிட்டால் யாருடைய அன்பையும் எதிர்ப்பார்க்கமாட்டோம், கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியோ, வருத்தமோ அடைய மாட்டான். அவன் அடைந்த ஞானத்தில் நிலைத்து நிற்கும் அளவுக்கு மனோபலத்தை அடைந்திருக்கின்றான்.

ஞானியின் அந்தக்கரணம் ராக-துவேஷங்களால் பாதிக்கப்படுவதில்லை.  மேலும் அப்படி வெளிப்படும் இவைகள் தன்னுடையதல்ல, அது அந்தக்கரணத்தைச் சார்ந்தது, நான் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கின்றேன் என்ற மனநிலையில் இருப்பான். எப்படி வேறொருவன் மனிதில் வெளிப்படும் ராக-துவேஷங்கள் நம்மை பாதிப்பதில்லையோ அதேப்போன்று இருக்கும் ஞானியின் மனநிலை.
முடிவுரை:

  • பிரஹ்மவித் ஆப்னோதி பரம் என்ற சூத்திர வாக்கியம் கூறப்பட்டது.
  • விருத்தி வாக்கியமான “ஸத்யம், ஞானம், அனந்தம் பிரஹ்ம….ப்ரஹ்மனா விபஸ்சிதா” விளக்கப்பட்டது.
  • அத்யாரோப-அபவாதம் முறையில் பிரம்மம் விளக்கப்பட்டது.

o    ஸ்ருஷ்டியானது பிரம்மத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டது.

o    ஏற்றி வைத்ததையெல்லாம் ஒவ்வொன்றாக பஞ்சகோஷம் விவேகம் மூலமாக நீக்கப்பட்டது.  இதில் சமஷ்டி-வியஷ்டி இரண்டையும் நீக்குதலையும் உபதேசிக்கபட்டது.

o    இந்த பிரபஞ்சத்தை நீக்கி நிர்குண பிரம்மத்தை உபதேசித்தது.

o    ஜகத் மித்யா என்பதையும் பிரம்மம் ஸத்யம் என்பதையும் நிரூபிக்க இந்த முறையை கையாளப்பட்டது.

  • பிரம்மன் இருக்கின்றது என்பதை ஏழு விதத்தில் உபதேசிக்கப்பட்ட்து.
  • ஆனந்த மீமாம்ஸா அதாவது ஆனந்த விசாரம் செய்யப்பட்ட்து.

o    ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்று நிலை நாட்டுவதற்கும், நம் அனுபவத்தில் ஆனந்தம் வெளியேயிருந்து வருகின்றது என்று தெரிவதால் இந்த விசாரம் செய்யப்பட்ட்து

o    வைராக்கியத்தின் பெருமையை உணர்த்துவதற்காக மனதில் ஆசைகள் நீங்க நீங்க அமைதியும் அதிகரிக்கும், அதனால் ஆனந்தம் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட்து.  ஆனந்தமே விஷயானந்தம், வைராக்கியானந்தம், ஆத்மானந்தம் என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டது

o    ஜீவ-ஈஸ்வர ஐக்கியமும் உபதேசிக்கப்பட்ட்து.

  • இதன் பலனாக எதைக் கண்டும் பயப்படுவதில்லை.  பயமும் அதற்கான காரணமும் சேர்ந்து நீங்கி விடுகின்றது.

ப்ரஹ்மானந்தவல்லி முடிவுற்றது


oo000oo—-

தைத்திரீய உபநிஷத்

அத்தியாயம்-03

பிருகுவல்லி

அனுவாகம்-01
ப்4ருகு3ர்வை வாருனி: | வருணம் பிதரமுபஸஸார | அதீ4ஹி ப4வதி ப்3ரஹ்மேதி |
தஸ்மா ஏதத்ப்ரோவாச | அன்னம் ப்ராணம் சக்ஷு: ஶ்ரோத்ரம் மனோ வாசமிதி |
தம் ஹோவாச | யதோ வா இமானி பூ4தானி ஜாயந்தே |
யேன ஜாதானி ஜீவந்தி | தத்3விஜிக்3ஞாஸஸ்வ தத்3 ப்3ரஹ்மேதி |
ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

வருணரின் மகனான வாருணி என்கின்ற ப்ருகு ரிஷி, தந்தையாகிய வருணரை அணுகினார். இறைவா, எனக்கு பிரம்மத்தை உபதேசியுங்கள் என்று கேட்டார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வேதாந்தம் படிப்பதற்கு குரு மிகவும் அவசியம், ஞானத்தின் பெருமையும் உணர்த்தப்படுகின்றது, தவத்தில் சிறந்த ரிஷியான இவரே ஞானத்தை அடைவதற்கு விரும்பினார் என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். சில சாதனங்களை இந்தக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.  தந்தையையே குருவாக பாவித்து, அவரை இறைவா என்று அழைத்தது அவரிடம் உள்ள பணிவை காட்டுகின்றது.

ப்ருகுவுக்கு சில தத்துவங்களை உபதேசித்தார்.  ஜீவாத்மாவை அடைய சில வழிகளை உபதேசித்தார், த்வம் பதத்தை அறிந்து கொள்ள சில உபாயங்களை உபதேசித்தார். அவைகள் அன்னமயகோசம், பிராணமயகோசம், கண், காது, மனம், வாக்கு (மனோமயகோசம்).  எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றியுள்ளதோ, எதனால் இவைகள் வாழ்கின்றனவோ, எதனிடத்தில் இறந்ததும் சென்றடைகின்றனவோ அதை தெளிவாக அறிய முயற்சிப்பாயாக, அதுவே பிரம்மன் என்ற் கூறினார்.

இவ்விதம் கேட்டபிறகு ப்ருகு தவத்தை மேற்கொண்டார். தவத்தை செய்துவிட்டு மீண்டும் குருவை அடைந்தார்.

விசாரம்:

  • அவரே ரிஷியாக இருப்பதால் இதை தவம் செய்துதான் அறிந்து கொள்ள முடியும் என்று அறிந்திருக்கின்றார்,  எதை அடைய வேண்டுமென்றாலும் தவம் செய்து முயற்சிக்க வேண்டும். நாம் செய்யும் தியாகங்களையும் தவத்தில் சேர்க்கலாம்.  எனவே அவர் தவத்தை மேற்கொண்டார்.
  • தவம் என்றால் என்ன?  ஒவ்வொரு ஆசிரமத்திலும் அவரவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கர்மங்கள் சொல்லப்பட்டிருகின்றது.  இவைகளையே தவம் என்று அழைக்கப்படுகின்றது.
  • பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் – ஸ்வாத்யாயம் – சாஸ்திரங்களை படித்தல்
  • கிருஹாஸ்ரமம் – தானம் செய்வதுதான் தவம்.
  • வானப்ரஸ்தாசிரமம் – விரதம் இருப்பதைக்காட்டிலும் பெரிய தவம் வேறெதுவும் இல்லை.
  • சந்நியாசம் – மனம், இந்திரியங்கள் கட்டுப்பாடு மேலான தவம்.

இந்த கதையில் ப்ருகு ரிஷி இந்திரியங்கள் மனம் இவைகளைக் கட்டுபடுத்தும் தவத்தில் ஈடுபட்டார். மீண்டும், மீண்டும் சிந்தித்தார், விசாரத்தில் ஈடுபட்டார்.

அனுவாகம்-02
அன்னம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
அன்னாத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
அன்னேன ஜாதானி ஜீவந்தி |
அன்னம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய  | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

அன்னம்தான் பிரம்மனென்று முடிவு செய்தார். இங்கே அன்னம் என்பதை விராட் தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்..  இந்த ஸ்தூல பிரபஞ்சத்தை அவர் குறிபிட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  உணவிலிருந்துதான் இந்த ஜீவராசிகளின் சரீரங்கள் தோன்றுகின்றன.  உணவினால் தோன்றி வாழ்கின்றன.  உணவிடத்தில் இறுதியாக லயத்தை அடைகின்றன. இவ்விதமாக பிரம்மத்தை அன்னமாக கருதினார். பிறகு அதையே மீண்டும் விசாரம் செய்து அன்னத்திற்கு இந்த பிரம்ம ஸ்வரூப லக்ஷணம் பொருந்தவில்லை என்று உணர்ந்தார்.  அன்னமானது மாற்றத்தை அடைவதை உணர்ந்தார். இது வரையறுக்குட்பட்டது ஆகவே இது பிரம்மனாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார், மீண்டும் தந்தையான குருவை அடைந்தார்.  பகவானே, மீண்டும் பிரம்மனை உபதேசிப்பீர்களாக என்று வேண்டினார். அவரும் தவத்தை செய்து தெரிந்து கொள்.  தவமே பிரம்மத்தை அடைய உதவும் சாதனம் என்று உணர்த்தினார். இங்கே தவம் என்ற சொல் மனக்கட்டுப்பாட்டை குறிக்கின்றது, வெளியே செல்கின்ற மனதை உட்புறமாக திருப்ப வேண்டும்.  ப்ருகு தவத்தை மேற்கொண்டார்.

அனுவாகம்-03
ப்ராணோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ப்ராணத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ப்ராணேன ஜாதானி ஜீவந்தி |
ப்ராணம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

பிராணனே (சூட்சும சரீர அபிமானி ஹிரண்யகர்ப்பன்) பிரம்மன் என்று முடிவுக்கு வந்தார். பிராணனிலிருந்து ஜீவராசிகள் தோன்றுகின்றன.  பிராணனினால் வாழ்கின்றன, இறுதியில் பிராணனை அடைகின்றன. என்ற ஸ்வரூப லட்சணை விசாரம் செய்தார்.  இந்த லட்சணம் பிராணனில் பொருந்தவில்லை எனவே இது பிரம்மன் அல்ல என்ற முடிவுக்கு வந்தார். எனவே மீண்டும் தந்தையை அணுகினார். மீண்டும் உபதேசம் செய்யுமாறு கேட்க, அவரும் மீண்டும் தவம் செய்து அறிந்து கொள் என்பதையே அவரும் சொல்லியனுப்பினார்.

அனுவாகம்-04
மனோ ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
மனஸோ ஹ்யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
மனஸா ஜாதானி ஜீவந்தி |
மன: ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

மனமே பிரம்மன் முடிவுக்கு வந்தார். பிரம்ம தடஸ்த லட்சணத்தை பொருத்திப் பார்த்து இதுவல்ல என்ற முடிவுக்கு வந்தார்.  மீண்டும் விசாரம் செய்து இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார்.

அனுவாகம்-05
விக்3ஞானம் ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
விக்3ஞானத்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
விக்3ஞானேன ஜாதானி ஜீவந்தி |
விக்3ஞானம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
தத்3விக்3ஞாய | புனரேவ வருணம் பிதரமுபஸஸார |
அதீ4ஹி ப4கவோ ப்3ரஹ்மேதி |
தம் ஹோவாச |
தபஸா ப்3ரஹ்ம விஜிக்3ஞாஸஸ்வ |
தபோ ப்3ரஹ்மேதி | ஸ தபோÅதப்யத | ஸ தபஸ்தப்த்வா ||

விக்ஞானமயமே பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். இவ்வாறு மீண்டும் உபநிஷத் சொல்வதற்குக் காரணம், தவத்தின் பெருமையை எடுத்துரைப்பதற்கு இந்த முறையில் உபதேசிக்கபடுகின்றது. இதேபோல ஆனந்தமயத்தை தவத்தின் மூலம் பிரம்மன் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் இது போக்தாவாக இருப்பதால் இதுவும் பிரம்மனல்ல என்று அறிந்து கொண்டார். போக்தாவும் விகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் பிரம்மனல்ல என்று தெரிந்து கொண்டார்.

அனுவாகம்-06
ஆனந்தோ3 ப்3ரஹ்மேதி வ்யஜானாத் |
ஆனந்தா3த்3த்4யேவ க2ல்விமானி பூ4தானி ஜாயந்தே |
ஆனந்தே3ன ஜாதானி ஜீவந்தி |
ஆனந்த3ம் ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தீதி |
ஸைஷா பா4ர்க3வி வாருணீ வித்3யா |
பரமே வ்யோமன் ப்ரதிஷ்டிதா |
ஸ ஏவம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன |
மஹான்கீர்த்யா |

ஆனந்தமே பிரம்மன் என்று புரிந்துக் கொண்டார்.  இந்த ஜீவராசிகள் ஆனந்தத்திலிருந்து தோன்றின.  அதிலேயே வாழ்கின்றன.  இறுதியில் அதிலேயே லயமடைகின்றது, ஒடுங்குகின்றது.  இவ்விதம் ப்ருகு புரிந்து கொண்டார்.  இந்த ப்ரஹ்மஞானம் ப்ருகு என்பவரால் புரிந்து கொள்ளப்பட்டது.  வருணரால் உபதேசிக்கபட்டது.  மனிதனின் ஹ்ருதயத்தில் உள்ள மேலான ஆகாசத்தில் இருக்கின்ற பிரஹ்மத்தினிடத்தில் பிரம்ம வித்யாவானது அறிந்தவுடன் முடிவடைகின்றது.  யாரொருவன் ப்ருகு புரிந்து கொண்டதைப்போல அறிகின்றார்களோ அவர்கள் ப்ரம்மனிடத்தில் நிலைபெறு-கின்றார்கள், தன்னிடத்திலே நிலைபெறுகின்றார்கள்.  அவனுக்கு நல்ல உணவு வேண்டிய அளவு கிடைக்கும். உணவை நன்கு உட்கொள்ளும் சக்தியுடையவனாகவும் இருக்கின்றான்.  மேன்மையை அடைகின்றான்.  நல்ல சந்ததிகளினாலும், சிஷ்யர்களாலும் பெருமையடைவான். செல்வங்களை உடையவனாகவும், தேஜஸ் உடையவனாகவும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.
அனுவாகம்-07
அன்னம் ந நிந்த்3யாத் | தத்3 வ்ரதம் | ப்ராணே வா  அன்னம் |
ஶரீரமன்னாத3ம் | ப்ராணே ஶரீரம் ப்ரதிஷ்டிதம் |
ஶரீரே ப்ராண: ப்ரதிஷ்டித: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

அக்ஞானிகளுக்கான உபாஸனையும், சில நல்ல பண்புகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. உணவை அவமதிக்கக்கூடாது.  அதை விரதமாக பின்பற்ற வேண்டும்,  அன்னம் என்பது விராட் ஸ்வரூபம், ஸமஷ்டி ஸ்தூல சரீரத்தையுடைய ஈஸ்வரன்.  அன்னத்தின் உதவியால்தான் அன்னமயகோசம் இருக்கின்றது.  இந்த கோசம் பிரம்மத்தை அடைவதற்கு ஒரு படியாக இருக்கின்றது.

உபாஸனை:
இந்த உலகத்திலுள்ள அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது. எந்தவொரு தத்துவமும் சுதந்திரமாக இருக்க முடியாது.  உதாரணமாக சரீரமானது பிராணனை சார்ந்திருக்கின்றது, அதேபோல பிராணனானது சரீரத்தை சார்ந்திருக்கின்றது என்று தியானிக்க வேண்டும்,.  இந்த உலகத்தின் மித்யாத்வம் உணராதவர்களுக்கு இந்த ஞானம் பயன்படுகின்றது.  இந்த தியானத்தின் மூலம் இந்த பிரபஞ்சம் மித்யா என்று உணர்ந்து கொள்வான்.  எது ஒன்றை சார்ந்திருக்கின்றதோ அது மித்யாவின் லக்‌ஷணம். இந்த நிலை அடைந்ததும் வேதாந்தம் புரிய ஆரம்பிக்கும்.  இது நிஷ்காம உபாஸகன் அடையும் பலன்.  காம்ய உபாஸகனுக்கு வேறு வகையான பலன்கள் கிடைக்கின்றது.  நல்ல உணவு கிடைக்கும், உணவு உட்கொள்ளும் சக்தி கிடைக்கும், தேஜஸ், புகழ் கிடைக்கும்.

அன்ன-அன்னாத உபாஸனை:
அன்னம் – எது சாப்பிடப்படுகின்றதோ – உணவு
அன்னாத – எது சாப்பிடுகின்றதோ – சாப்பிடுபவர்,
இதில் இரண்டு தத்துவங்கள் எடுத்துக்கொண்டு விளக்கப்படுகின்றது. அவைகள் சரீரம்-பிராணன்.

பிராணன் என்பது அன்னம், சரீரம் அன்னாதம், உடலானது பிராணனை சாப்பிடுகின்றது, இதற்கு பொருள் சரீரம் பிராணனை சார்ந்திருக்கின்றது.  பிராணனை தனக்குள்ளே வைத்திருப்பதால் சரீரம் ஒரு பாத்திரமாக இருக்கின்றது, பிராணன் அதில் வைக்கப்படும் பொருளாக இருக்கின்றது.

சரீரம் என்பது அன்னம், பிராணன் அன்னாதம், பிராணன் உடலை சாப்பிடுகின்றது, பிராணன் உடலை சார்ந்திருக்கின்றது. இதில் பிராணன் ஒடுக்குபவராகவும், சரீரம் ஒடுங்குகின்ற பொருளாகவும், இருக்கின்றது.  இதனால் பிராணமயகோசம் அன்னமய கோசத்தை நீக்கி விடுகின்றது.

ஒரு பொருள் இருக்கும்போதும், இல்லாதபோதும் நம்முடைய மனமானது எந்த பாதிப்பும் அடையாமலிருந்தால் அந்தப்பொருளின் மித்யாத்வத்தை உணர்ந்துள்ளோம் என்று அறிந்து கொள்ளலாம்.

பிரதிஷ்டா – பிரதிஷ்டித உபாஸனை:
பிராணத்தினால் சரீரம் தாங்கப்படுகின்றது. பிராணனானது உடலுக்கு உயிரூட்டுகின்றது. எனவே இது பிரதிஷ்டா, சரீரம் உயிரை அடைவதால் அது பிரதிஷ்டிதம்.

சரீரத்தினால் பிராணன் தாங்கப்படுகின்றது.  சரீரமானது பிராணன் இருப்பதற்கு பாத்திரமாக இருப்பதால் அது பிரதிஷ்டா, பிராணனானது சரீரத்திற்குள்ளே இருப்பதால் அது பிரதிஷ்டிதம்.

இவ்விதம் சரீர ரூபமாக இருக்கின்ற அன்னம், பிராண ரூபமாக இருக்கின்ற அன்னத்தினால் தாங்கப்படுகின்றது. யார் இந்த அன்னம் அன்னத்தை சார்ந்திருக்கின்றது என்பதை அறிகின்றார்களோ, அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். நிஷ்காமமாக இந்த உபாஸனை செய்தால் இந்த ஜகத் மித்யா என்ற அறிவை அடையலாம். காம்யமாக செய்பவர்களுக்கு அதிகமான உணவு கிடைக்கும், அதை சாப்பிடும் சக்தியும் கிடைக்கும்,  நல்ல சந்ததிகளாலும், செல்வங்களாலும், புகழினாலும் மேன்மையை அடைகின்றான்.

அனுவாகம்-08
அன்னம் ந பரிசக்ஷீத | தத்3 வ்ரதம் | ஆபோ வா அன்னம் |
ஜ்யோதிரன்னாத3ம் | அப்ஸ ஜ்யோதி: ப்ரதிஷ்டிதம் |
ஜ்யோதிஷ்யாப: ப்ரதிஷ்டிதா: | ததே3தத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

உணவை வீணாக்கக்கூடாது அதை ஒரு விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீரானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது. நெருப்பானது அன்னாதமாக (சாப்பிடுபவராக) இருக்கின்றது.  பிரளய காலத்தில் நீரானது நெருப்பினால் விழுங்கப்படுகின்றது. நெருப்பானது அன்னமாக (சாப்பிடப்படுகின்ற உணவாக) இருக்கின்றது, நீரானது அன்னாதமாக ( சாப்பிடுபவராக ) தியானிக்கபடுகின்றது;  வயிற்றில் பசி எடுக்கும்போது தோன்றும் நெருப்பானது நீரினால் அமைதிப்படுத்தபடுகின்றது. நீரினால் நெருப்பானது கட்டுப்படுத்தப்படுகின்றது. அப்போது நீர் பிரதிஷ்டாவாகவும் (கட்டுபடுத்துபவர்), நெருப்பு பிரதிஷ்டிதமாகவும் ( கட்டுப்படுத்தபடுவதால்) இருக்கின்றது. நெருப்பினால் நீர் கட்டுபடுத்தப்படுகின்றது. இதில் நெருப்பானது பிரதிஷ்டாகவும், நீரானது பிரதிஷ்டிதமாகவும் இருக்கின்றது.

இவ்வாறு தியானம் செய்வதால் முன் அனுவாகத்தில் சொல்லப்பட்ட பலன்களையே அடைவார்கள்.

அனுவாகம்-09
அன்னம் ப3ஹு குர்வீத | தத்3 வ்ரதம் | ப்ருதி2வீ வா அன்னம் |
ஆகாஶோÅன்னாத: | ப்ருதி2வ்யாமாகாஶ: ப்ரதிஷ்டித: |
ஆகாஶே ப்ருதி2வீ ப்ரதிதிஷ்டதா |
ஸ ய ஏதத3ன்னமன்னே ப்ரதிஷ்டிதம் வேத3 ப்ரதிதிஷ்டதி |
அன்னவானன்னாதோ3 ப4வதி |
மஹான்ப4வதி ப்ரஜ்யா பஶுபி4ர்ப்3ரஹ்மவர்சஸேன | மஹான்கீர்த்யா |

உணவுப் பொருட்களை அதிகமாக சேகரித்து, அதிகமாக சமைக்க வேண்டும்.
இங்கு நிலமும், ஆகாசமும் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

நிலம்   – அன்னம்    – ஒடுங்குபவர் – பிரளய காலத்தில் நிலம் ஆகாசத்தில்
ஆகாசம் – அன்னாதம் – ஒடுக்குபவர்  –  ஒடுங்குகின்றது
ஆகாசம் – அன்னம்   – ஒடுங்குபவர் – வயிற்றுக்குள் இருக்கும் ஆகாசம்
நிலம்   – அன்னாதம்  – ஒடுக்குபவர் –  நிலத்தினால் தாங்கப்படுகின்றது

நிலம்     பிரதிஷ்டா   – தாங்குபவர்
ஆகாசம்   பிரதிஷ்டிதம் – தாங்கப்படுவது
நிலம்     பிரதிஷ்டிதம் – காரியம்
ஆகாசம்   பிரதிஷ்டா    – காரணம்

இப்படி தியானிப்பதால் அனுவாகம்-7 ல் கூறப்பட்ட பலன்களையே அடைவர்.

அனுவாகம்-10.1
ந கஞ்சன வஸதௌ ப்ரஜ்யார்சக்ஷீத | தத்3 வ்ரதம் |
தஸ்மாத்3யய கயா ச வித்4யா ப3ஹ்வன்னம் ப்ராப்னுயாத் |
அராத்4யஸ்மா அன்னமித்யாசக்ஷதே | ஏதத்3வை முக2தோÅன்னம் ராத்3த4ம் |
மத்4யதோÅஸ்மா அன்னம் ராத்4யதே | ஏதத்3வா அந்ததோÅன்னம்ராத்3த4ம் |
அந்ததோÅஸ்மா அன்னம்ராத்4யதே | ய ஏவம் வேத3 ||

ஒருவர் நம்மிடம் இருப்பிடம் நாடி வந்தால் நாம் மறுக்காமல் அவருக்கு உதவ வேண்டும். இதை விரதமாக கொள்ள வேண்டும், அவருக்கும் தங்க இடமும், சாப்பிட உணவும் கொடுக்க வேண்டும்.  ஆகவே ஏதாவது ஒரு விதத்தில் தர்மப்படி அதிகமான உணவை சேகரிக்க வேண்டும்.  இவருக்கு உணவு தயாராக உள்ளது என்று இல்லறத்தோர் கூறுகிறார்கள்.  உயர்ந்த வித்த்தில் உணவை தயாரித்து கொடுத்தால் அவனுக்கும் உயர்ந்த வித்த்தில் உணவானது கிடைக்கின்றது.  இடைநிலை தரத்தில் தயாரித்து கொடுத்தோமானல் அதே தரத்தில்தான் உணவும் திரும்ப கிடைக்கும். ஒருவேளை மோசமாக உணவை தயாரித்து கொடுத்தோமானால் நமக்கும் மோசமான உணவே கிடைக்கும். இங்கு உணவு ஒரு உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளது.  இந்த கருத்தை எல்லாவற்றிற்கும் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.  யார் இந்த உண்மையை அறிந்து அவ்விதம் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் புண்ணியத்தை அடைகின்றார்கள்.

இந்த உலகத்திற்கு நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதை இந்த உலகம் நமக்கு திருப்பிக் கொடுக்கும். எப்படி கொடுத்தோமோ அப்படியே திருப்பி கொடுக்கும். உணவைக் கொடுத்தால் நமக்கு உணவு கிடைக்கும், அன்பைக் கொடுத்தால் நமக்கும் அன்பு கிடைக்கும்.

அனுவாகம்-10.2 – பிரஹ்ம உபாஸனம்
க்‌ஷேம இதி வாசி | யோகஷேம இதி பிராணாபானயோ: |
கர்மேதி ஹஸ்தயோ: | க3திரிதி பத3யோ: |
விமுக்திரிதி பாயோ | இதி மானுஷீ: ஸமாக்3ஞா |
அத2 தை3வீ: | த்ருப்திரிதி வ்ருஷ்டௌ |
3லமிதி வித்3யுத | யஸ இதி  பஶுஷு |
ஜ்யோதிரிதி நக்ஷத்ரேஷு |
ப்ரஜாபதிரம்ருதமனந்த3 இத்யுபஸ்தே2 |
ஸர்வமித்யாகாஶே ||

மாயையுடன் கூடிய பிரம்மன் சகுணபிரம்மன் என்றும், ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகின்றது.  உபாஸனை வரும் இடத்தில் பிரம்மன் என்பதை ஈஸ்வரன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்வொரு சக்தி இருக்கின்றது. இந்த சக்திகள் என்னைச் சார்ந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவையனைத்தும் ஈஸ்வரனுடைய சக்தி என்று தியானிக்க வேண்டும்.

  1. க்‌ஷேம இதி வாசி:நம்முடைய வாக்கில் தூய்மை ரூபமாக ஈஸ்வரன் இருக்கின்றார் என்று தியானிக்க வேண்டும்.  ஒரு மனிதனுடைய உயர்வும், தாழ்வும் அவனுடைய சொல்லில்தான் இருக்கின்றது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
  2. யோகஷேம இதி பிராண-அபானயே:பிராணன் – அபானன் இவைகளில் யோகஷேமமாக இருப்பதாக தியானிக்க வேண்டும். யோகம் என்பது பொருள் ஈட்டுதல், ஷேமம் என்பது சேர்த்தை பாதுகாத்தல்
  3. நமது இரண்டு கைகளில் செயல் வடிவமாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்.
  4. நமது இரண்டு கால்களில் நடக்கின்ற சக்தியாக ஈஸ்வரன் இருப்பதாக தியானிக்க வேண்டும்,
  5. மலத்தை வெளியே தள்ளும் இந்திரியத்தில் வெளித்தள்ளும் சக்தியாக தியானிக்க வேண்டும்,
  6. கருவாயில் உற்பத்தி செய்யும் சக்தியாகவும்,அம்ருதமாகவும், சந்ததி உருவாகுவதற்கு காரணமாகவும், சரீர ஆனந்தத்தை தருகின்ற சக்தியாகவும் தியானிக்க வேண்டும்.

இவ்விதம் மனிதர்களுடைய உறுப்புக்கள் சம்பந்தமான உபாஸனைகள் சொல்லப்பட்டு உள்ளது.

அனுவாகம்-10.3
தத்ப்ரதிஷ்டித்யுபாஸீத | ப்ரதிஷ்டாவான் ப4வதி |
தன்மஹ இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்மன் இத்யுபாஸீத | மஹான்ப4வதி |
தன்னம் இத்யுபாஸீத | நம்யந்தேÅஸ்மை காமா: |
தத்3ப்3ரஹ்மேத்யுபாஸீத | ப்3ரஹ்மவான் ப4வதி |
தத்3 ப்3ரஹ்மண: பரிமர இத்யுபாஸீத |
பர்யேணம் ம்ரியந்தே த்3விஷந்த: ஸபத்னா: |
பரி யேÅப்ரியா ப்4ராத்ருவ்யா: ||

பிரம்மனை மழையில் திருப்தியாகவும், மின்னலில் சக்தியாகவும், செல்வத்தில் புகழாகவும், நட்சத்திரங்களில் (சூரியன், சந்திரன் இரண்டும் நட்சத்திரங்களுடன் சேர்த்து பார்க்க வேண்டும்) ஒளிவடிவமாக இருக்கின்றதாகவும், ஆகாசத்தில் பிரம்மத்தை அனைத்துமாக இருக்கின்றதாகவும் தியானிக்க வேண்டும்.

நாம் எதை, எப்படி உபாஸிக்கின்றோமோ அது சம்பந்தமான பலனை அடைவோம். யாரோடு உறவு வைத்திருக்கின்றாயோ, யாராக உயர விரும்புகின்றாயோ அவராக நாம் மாறுவோம்.  இது இயற்கையின் விதி.
*   ஆகாசத்திலிருந்து வேறுபடாத பிரம்மன் (ஈஸ்வரன்) அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றார் என்று தியானித்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான எல்லாமும் கிடைக்கும், எல்லாவிதத்திலும் உதவி கிடைக்கும்.

*   பிரம்மத்தை மேன்மையானதாக உபாஸித்தால் மகானாக உயர்கின்றான்

*   பிரம்மத்தை சிந்திக்கும் சக்தியாக உபாஸித்தால் சிந்திக்கும் திறனுடையவனாகின்றான்

*   பிரம்மத்தை வணங்கத்தக்கதாக தியானிப்பதாலும், வசீகரிக்கும் தன்மையுடையதாக தியானித்தாலும் ஆசைப்படும் பொருட்கள் யாவும் வந்தடையும்

*   மிகவும் பெரியதாக தியானித்தால் உயர்ந்த நிலைக்கு செல்கின்றான்

*   அழிக்கக்கூடிய சக்தியாக தியானித்தால், தன்னை அழிக்க நினைக்கும் பகைவர்கள் அழிந்து போவார்கள்

மேற்கூறிய தியானங்களை நிஷ்காமமாக செய்தால் இந்த உலகம் மித்யா என்று புரிந்து கொள்ளப்படும்

அனுவாகம்-10.4
ஸ யஶ்சாயம் புருஷே | யஶ்சாஸவதி3த்யே | ஸ ஏக: |
ஸ ய ஏவம்வித் | அஸ்மால்லோகாத்ப்ரேத்ய |
ஏதமன்னமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் ப்ராணமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் மனோமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதம் விக்3ஞானமயமாத்மானமுபஸங்க்ரம்ய |
ஏதமானந்த3மயமாத்மானமுபஸங்க்ரம்ய ||

எந்தவொரு. ஆனந்தம் மனிதனிடத்தில் இருக்கின்றதோ அதுவும், ஹிரண்யகர்ப்-பனிடத்தில் இருக்கும் ஆனந்தமும் ஒன்றேயாகும்.  யார் இவ்வாறு அறிகின்றார்களோ அவர்களுக்கு வெளியே உள்ள பொருட்களிலிருந்து பற்றை விட்டுவிட்டு ஒவ்வொரு கோசத்திலிருக்கும் அபிமானத்தை நீக்கி விடுவான்.  இந்த அன்னமயம்தான் ஆத்மா என்ற அபிமானத்தை விட்டு, பிராணமயத்திலிருந்தும் இந்த அபிமானத்தை விட்டு, மனோமய, விக்ஞானமய, ஆனந்தமயத்திலிருந்தும் அபிமான்ங்களை விட்டுவிடுவான்.

அனுவாகம்-10.5 –  ( மோட்ச பலன் – ஜீவன்முக்த நிலை )
இமாம்ல்லோகான்காமான்னி காமரூப்யனுஸஞ்ச்ன் |
ஏதத்ஸாஸ் கா3யன்னஸ்தே | ஹா(3) வு ஹா(3) வு |
அஷ்மன்னமஹமன்னமஹமன்னம் |
அஷ்மன்னதோ3Å(3)மன்னதோ3(3)ஹமன்னத3: |
அஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருதஹம் ஶ்லோக்க்ருத் |
அஷ்மஸ்மி ப்ரத2மஜா ரிதா(3)ஸ்ய |
பூர்வம் தேவேப்4யோÅம்ருதஸ்ய நா(3)பா4யி |
யோ மா த3தா3தி ஸ இதே3வ மா(3)வா: |
அஷ்மன்னமன்னமத3ந்தமா(3)த்3மி |
அஹம் விஶ்வம் பு4வனமப்4யப4வா(3)ம் |
ஸுவர்னஜ்யோதீ: | ய ஏவம் வேத3: | இத்யுபநிஷத் ||

ஜீவன் முக்தன் இந்த உலகத்தில் திரிந்து கொண்டும், உலவிக் கொண்டும் இருக்கின்றான்.  விருப்பப்படி உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றான்.  ஏதோ ஒரு பாடலை இசையுடன் பாடிக் கொண்டிருக்கின்றான்.

  • நாம் சாப்பிடும் உணவு அந்தக்கரணத்தைப் பாதிக்கின்றது.  ஞானிக்கு இந்த நிலை கிடையாது.  உணவு விஷயத்தில் அவனுக்கு எந்த நியமமும், நிஷேதமும் கிடையாது
  • ஞானியானவன் உலகமே நான் என்ற பாவனையில் இருப்பவன்.  எனவே நானே எல்லா உருவமாக இருக்கின்றேன் என்று கருதுவான்.  தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்வான். பிராரப்தத்தின் செயலை ஏற்றுக் கொள்வான்.
  • பிரம்மத்தை பாடிக் கொண்டும், உபதேசித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பான்
  • இந்த உலகத்தை அவன் ஆச்சரியமாக பார்க்கின்றான்.  நடக்க முடியாத விஷயத்தை பார்த்து ஆச்சரியத்தை அடைவது போல இருக்கும் அவனது பார்வை.  இந்த உலகில் நான் ஒருவன் மட்டும்தான் இருக்கின்றேன். நானே உணவாகவும், உணவை உட்கொள்பவனாகவும் இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பான்.
  • நானே சாப்பிடும் பொருளாக இருக்கின்றேன் என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்
  • நானே உணவை சாப்பிடுபவனாகவும் இருக்கின்றேன் என்றூ ஆச்சரியத்துடன் பார்க்கின்றான்.
  • நானே இந்த இரண்டையும் சேர்த்து வைக்கின்றேன் என்றும் எண்ணிக் கொள்வான்

 

இது ஞானியிடத்திலுள்ள ஸர்வாத்ம பாவத்தை குறிக்கின்றது என்று சங்கரர் கூறுகின்றார்.

உலகத்திற்கு நானே ஹிரண்யகர்ப்பனாக இருக்கின்றேன். தேவர்களுக்கு முன் தோன்றிய விராட் ஸ்வரூபமாகவும் இருக்கின்றேன். அம்ருதத்தின் மையமாக இருக்கின்றேன்.  பிரம்மத்தை அடைய விரும்பும் முமுக்‌ஷுக்களுக்கு ஆதாரமாக இருக்கின்றேன். உணவு ரூபமாக இருக்கின்ற என்னை யார் கொடுக்கின்றார்களோ அவர்களை நான்  காப்பாற்றுகின்றேன்.அவர்கள் உணவு தொடர்ந்து கிடைக்கப்பெற்று வாழ்வார்கள்..  அன்னரூபமான என்னை பகிர்ந்து உண்ணாதவர்கள் அழிந்து விடுவார்கள். சூரியனின் ஒளியைப் போல நான் அனைத்துலகத்தையும் வியாபிக்கின்றேன்.  ஞானியானவன் எப்பொழுதும் முழு மனநிறைவுடன் இருக்கின்றான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

யார் இவ்விதம் அறிகின்றானோ அவன் முக்தியடைந்தவனாக கருதப்படுகின்றான்.  இத்துடன் உபநிஷத் உபதேசம் முடிவடைகின்றது.

பிருகுவல்லி முடிவுற்றது
ஓம் தத் ஸத்

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading