கடோ உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

கடோ உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம்

முகவுரை

நம்முடைய செயல்களின் மூலம் நாம் இரண்டு வகையான பொருட்களை அடைகின்றோம்.  அவைகள் நிலையான பொருட்கள் (நித்ய வஸ்து), நிலையற்ற பொருட்கள் (அநித்ய வஸ்து).  இவைகளின் விளக்கத்தை கீழே காண்போம்.

 

அநித்ய வஸ்து :     நிலையற்ற பொருளின் லக்‌ஷணம் இது முதலில் இல்லாமல் இருந்து, பிறகு இருப்புக்கு வந்து, அதற்கப்புறம் இல்லாமல் போவது.  இது மூன்று காலங்களிலும் இல்லாதது ( துச்சம் ). இவைகளை முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம்.  இதை கர்ம சாதனம் என்றும் கூறுவர்.  நம்முடைய உடல்கூட கர்மபலனத்தினால்தான் அடைந்திருக்கின்றோம். எனவே இந்த உடலும் நிலையற்றதாக இருக்கின்றது.  உணவையும், இருக்குமிடத்தையும் நாம் முயற்சி செய்து செயல் மூலம்தான் அடைகின்றோம் இவைகள் அநித்யம் என்று தெரிந்தும் இவைகளிலிருந்து நித்யமான சுகம் கிடைக்கும் என்று நினைக்கின்றோம். இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எவைகளெல்லாம் அடையப்பெறுகின்றதோ அவைகளெல்லாம் அழிவுக்குட்பட்டது, நிலையற்றது என்ற உண்மைதான்.

 

நித்ய வஸ்து:          நிலையானது, எப்பொழுதும் இருப்பது, இதை செயல் மூலம் அடைய முடியாததால் இது கர்ம சாதனமல்ல.  மேலும் இதை அடைய வேண்டிய அவசியமும் இல்லை.  இதன் இருப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே இதை ஞான சாதனம் என்று அழைக்கப்படுகிறது.  அநித்ய வஸ்தை அடைந்தாலும் அது அடையாததற்கு சமமானதே,  ஆனால் இதை அறிந்து கொண்டாலே முழு மன நிறைவை கொடுக்கக்கூடியது.  தர்மப்படி வாழ்பவனுக்கு இதை அடைய வேண்டும் என்ற வைராக்கியம் தானாகவே ஏற்படுகின்றது.  இதை அறிய வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பவர்களை முமுக்‌ஷூ ( அ ) ஜிக்னாஸூ என்று கூறுவர்.

 

இதை எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகின்றது.  எந்த அறிவும் தானாக ஏற்படாது அந்த அறிவை அடைய உதவும் ஒரு கரணம் ( கருவி ) தேவைப்படுகின்றது.  அறிவை அடைபவனை பிரமாதா என்று கூறுவர்.  எந்தப்பொருளைப் பற்றிய அறிவை அடைய விரும்புகின்றோமோ அந்தப் பொருளுக்கு பிரமேயம் என்று பெயர்.  அடையும் அறிவுக்கு பிரமா என்று பெயர்.  சாஸ்திரம் ஆறு வகையான பிரமாணங்கள் இருப்பதாக கூறுகின்றது.   அவைகள் 1. பிரத்யக்‌ஷ பிரமாணம் ( முதன்மையான பிரமாணம் ), 2. அனுமான பிரமாணம் ( யூகம் ), 3. அர்த்தாபத்தி பிரமாணம், 4. உபமான பிரமாணம், 5. அனுபலப்தி பிரமாணம், 6. சப்த பிரமாணம் ஆகியவைகளாகும்.

 

ப்ரத்யக்‌ஷம்:            இதை ஜேஷ்ட பிரமாணம் என்றும் அழைப்பர்.  ஐந்து ஞானேந்திரியங்கள் மூலமாக நேரிடையாக ஒன்றைப்பற்றி அறிந்துக் கொள்ளும் முறைக்கு ப்ரத்யக்‌ஷ பிரமாணம் என்று கூறப்படுகின்றது.  (உ-ம்) கண்கள் ஒரு பொருளின் வர்ணத்தை தெரிந்துக் கொள்வதற்கு பிரத்யக்‌ஷ பிரமாணமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

அனுமானம்             பிரத்யக்‌ஷ பிரமாண மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருப்போம்.  அதை ஆதாரமாக ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்வது. உதாரணமாக எங்கெல்லாம் புகை இருக்கின்றதோ அங்கேயெல்லாம் நெருப்பு இருக்கின்றது என்ற அறிவை அடைவது.  இவ்வாறு யூகத்தின் மூலமாக அறிவை அடைவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.

 

அர்த்தாபத்தி           காலையில் எழுந்து நீரினால நனைந்த தெருவை பார்க்கும் போது நேற்று இரவு மழை பெய்திருக்கின்றது என்று யூகித்து அறியும் முறைக்கு அர்த்தாபத்தி என்று பெயர்.

 

உபமானம்                ஒன்றைப்போல இன்னொன்று இருக்கின்றது என்று அறியும் முறையை இவ்வாறு அழைப்பர்.  உதாரணமாக வீட்டில் உள்ள எருமை மாடு போல காட்டெருமை இருக்கும் என்று கூறுவது.

 

அனுபலப்தி              நாமிருக்கும் அறையில் பூனை இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம்.  இது நாம் ஒன்றை நன்கு ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவை குறிக்கின்றது.

 

சப்த பிரமாணம்    இது இரண்டு வகையாக இருக்கின்றது.  அவைகள் லௌகீக பிரமாணம், வைதீக பிரமாணம்.  படித்தோ அல்லது மற்றவர்களின் வார்த்தைகள் மூலமாக ஒன்றை பற்றி தெரிந்து கொள்வது.  லௌகீக பிரமாணத்தின் மூலமாக ஒன்றை பற்றி அடையும் அறிவை வேறொரு பிரமாணம் கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் வேதத்தின் மூலமாக அடையும் அறிவை வேறொன்றின் மூலமாக உறுதி செய்ய முடியாது. அதை அப்படியே முழுமையாக நம்ப வேண்டும்.

 

நித்ய வஸ்துவை வேத பிரமாணத்தின் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடியும்.  வேதமானது இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது.  அவைகள் கர்ம காண்டம், ஞான காண்டம் ஆகும். கர்மத்தை ஸாதனமாக வைத்துக் கொண்டிருப்பது கர்ம காண்டம், ஞானத்தை ஸாதனமாக கொண்டிருப்பது ஞான காண்டம்.

கடோ உபநிஷத் கிருஷ்ண-யஜூர் வேதத்தில் இருக்கின்றது.  யஜூர் வேதம் இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது. 1. சுக்ல பகுதி, 2. கிருஷ்ண பகுதி.  சுக்ல பகுதியில் ஈஸாவாஸ்ய உபநிஷத்தும், ப்ருஹதாரண்ய உபநிஷத்தும் இருக்கின்றது.  கிருஷ்ண பகுதியில் கடோ உபநிஷத்தும், தைத்திரீய உபநிஷத்தும் இருக்கின்றது.  கடோ உபநிஷத் கட் என்ற முனிவரால் எழுதப்பட்டிருப்பதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

உபநிஷத் – வார்த்தை விளக்கம்:-
உபநிஷத் = உப + நி + ஷத் என்று பிரிக்கலாம்.
உப – அருகில் (குரு-சாஸ்திரத்தின் அருகில் செல்லுதல்)
நி  – அமர்தல் – கீழே அமர்தல்.  இது பணிவைக் குறிக்கின்றது.
ஷத் – நாசம் – இந்த வித்யாவானது சம்சாரத்தை நீக்கி விடுகின்றது. சுக-துக்கத்தை நீக்கி விடுகின்றது.
சாந்தி பாடம்
சாந்தி – இடையூறுகள் நீக்குதல் – விக்ன நிவிருத்தி
பாடம் – மீண்டும் மீண்டும் கூறுதல் – பிரார்த்தனை செய்தல்
உபநிஷத் படிக்க வந்திருக்கும் மாணவர்கள் இந்த பிரார்த்தனையை செய்கின்றார்கள்.

ஸஹ நாவவது |
ஸஹ நா பு4னக்து |
ஸஹ வீர்யங் கரவாவஹை |
தேஜஸ்வினாவதீ4த2மஸ்து மா வித்3விஷாவஹை |
ஓம் ஶாந்தி, ஶாந்தி, ஶாந்தி ||

ஸஹ – சேர்ந்து;  நௌ – எங்கள் இருவரையும்;  அவது– காப்பாற்றட்டும்.
ஸஹ = ஸ + ஹ = அவன் (ஈஸ்வரன்) + நிச்சயமாக
நௌ அவது – எங்களிருவரையும் (குரு, சிஷ்யன்) காப்பாற்றட்டும்.
ஸஹ நௌ பு4னக்து – அவன் நிச்சயமாக எங்களிருவரையும் காப்பாற்றட்டும்.
ஸஹ வீர்யங் கரவாவஹை – நாங்களிருவரும் சேர்ந்து தேவையான முயற்சி செய்வோமாக.
தேஜஸ்வி + நௌ + அதீதம் + அஸ்து – எங்களிருவருக்கும் வேதாந்த பாடமானது ஒளி பொருந்தியதாக இருக்கட்டும்.
மா வித்விஷாவஹை – நாங்கள் ஒருவரையொருவர் வெறுக்காமலிருப்போமாக.

விசாரம்:-
காப்பாற்று : எதிலிருந்து, யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.  அவரவர்கள் எதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றார்களோ அதிலிருந்துதான் காப்பாற்றப்படுவார்கள்.  இங்கு சிஷ்யர்கள் தங்களுடைய அறியாமையை போக்கி ஞானத்தை அடைய வந்திருக்கின்றார்கள்.  எனவே இந்த இடத்தில் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுத்து காப்பாற்று என்று பொருட்கொள்ள வேண்டும்.  ஞானத்தில் பலனை கொடுத்து காப்பாற்று, அடைந்த ஞானத்தில் நிலைத்தி நிற்க காப்பாற்று.
குரு செய்ய வேண்டிய முயற்சி

  • குருவானவர் தான் எப்படி தன்னுடைய குருவிடமிருந்து கற்றாரோ அதேமாதிரி கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி.
  • சிஷ்யனுடைய மனநிலை, மனப்பக்குவம் இவைகளை புரிந்து கொண்டு உபதேசிக்க வேண்டிய முயற்சி.
  • சிஷ்யன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுக்கும் முயற்சி,
  • சிஷ்யன் தெளிவில்லாமல் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டிய முயற்சி,
  • கிரமமாக உபதேசம் செய்ய வேண்டிய முயற்சி

 

சிஷ்யன் மேற்கொள்ள வேண்டிய முயற்சி:

  • சொல்வதை புரிந்து கொள்ளும் முயற்சி,
  • குரு-சாஸ்திர சிரத்தையுடன் இருக்க வேண்டிய முயற்சி
  • மன ஒருமுகப்பாட்டுடன் பாடத்தை கவனிக்க எடுக்க வேண்டிய முயற்சி
  • நிலைத்து நிற்க காப்பாற்று.

எங்களுடைய படிப்பானது ஒளிப்பொருந்தியதாக இருக்கட்டும்.  நாங்கள் கேட்கும் உபதேசம் எங்களுக்கு நன்கு புரியவும் வேண்டும், மறக்காமலும் இருக்க வேண்டும். எங்களிருவருக்குள் வெறுப்பு உண்டாகமலிருக்கட்டும்.
ஸ்லோகம்1
உஶன்ஹ வை வாஜஸ்ரவஸ: ஸர்வவேத3ஸ த3தௌ3 |
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ ||
முன்னொரு காலத்தில் அன்னத்தை தானமாக கொடுத்து புகழடைந்தவரின் மகன் வாஜஸ்ரவ என்பவர் கர்ம பலனை அடைய விரும்பி செய்கின்ற யாகத்தில் எல்லா பொருட்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நசிகேதன் என்ற பெயருடைய மகன் இருந்தான்.
ஸ்லோகம்2
தம் குமாரம் ஸந்தம் தக்‌ஷீணாஸூ நியமனாஸு ஸ்ரத்3தா4விவேஶ ஸௌ மன்யத ||
அவன் சிறு வயதுடைய குமாரனாக இருந்த போதிலும் சிரத்தையுடன் இருந்தான்.  தன் தந்தை தட்சணையை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவன் சிந்திக்கலானான்.
ஸ்லோகம்3
பீதோத3கா ஜக்3க4த்ருணா து3க்3த4தோ3ஹா நிரிந்த்3ரியா |
அனந்தா3 நாம தே3 லோகாஸ்தான்ஸ க4ச்ச2தி தா த3த3த் ||
இனிமேல் நீர் குடிக்கும் சக்தியில்லாத நிலையில் உள்ளதுமான, புல்லை மேய்ந்து முடித்த நிலையிலுள்ளதுமான. பால் கொடுக்கும் சக்தியை இழந்த நிலையிலுள்ள, கன்று ஈனும் சக்தியை இழந்த நிலையிலுள்ள இப்படிபட்ட பசுவை தானமாக கொடுப்பதன் மூலம்
அநந்தா (சுகமற்ற) என்ற பெயருடைய உலகத்தை தந்தை அடைந்து விடுவார் என்று எண்ணினான்..
ஸ்லோகம்4
: ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸிதி |
த்விதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா த3தா3மிதி ||
இவ்வாறு சிந்தித்து விட்டு நசிகேதன் தன் தந்தையை பார்த்து, “என்னை யாருக்கு தானமாக கொடுக்கப்போகிறீர்கள் என்று மூன்று முறை கேட்டான்”  பொறுமையிழந்த அவர் உன்னை யமனுக்கு தானமாக கொடுக்கின்றேன் என்று கோபத்துடன் கூறினார்.
ஸ்லோகம்5
பஹூனாமேமி ப்ரத4மோ பஹூனாமேமி மத்யம: |
கிம் ஸ்வித்3யமஸ்ய கர்தவ்யம் யன்மயாத்3ய கரிஷ்யதி ||
பலருக்கும் நான் உத்தமமான சிஷ்யனாக இருந்திருக்கின்றேன், சிலருக்கும் இடைநிலைப்பட்டவனாக இருந்திருக்கின்றேன். ஆனால் எதிலேயும் நான் கடைநிலையில் இல்லையே, பிறகு எதனால என்னை யமனுக்கு கொடுக்கின்றேன் என்று சொன்னார்.  எமனுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கின்றது? ஒன்றும் செய்ய வேண்டியதில்லையே!
என்னை கொடுப்பதன் மூலம் எதை அடையப்போகின்றார்.  நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.
ஸ்லோகம்6
அனுபஶ்ய யதா2 பூர்வம் ப்ரதிபஶ்ய ததா2பரே |
ஸஸ்யமிவ மர்த்ய: பச்யதே ஸஸ்யமிவஜாயத் புன: ||
நசிகேதன் இவ்வாறு சிந்தித்தான்.  முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நினைத்து பாருங்கள் இப்பொழுது இருக்கின்ற சான்றோர்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பதையும் சிந்தித்து பாருங்கள்.  மனிதர்கள், தாவரங்கள் அழிகின்றன, மீண்டும் தாவரங்களாகவே பிறக்கின்றார்கள்.  தன் தந்தையின் வாக்கு பொய்யாக்க் கூடாது என்று நசிகேதன் தந்தைக்கு உணர்த்துகின்றான்.  உங்கள் வாக்கு காப்பாற்றப்பட வேண்டும்.  ஆகவே தங்கள் வாக்குப்படி நான் எமலோகம் செல்கின்றேன்.
ஸ்லோகம்7
வைஶ்வனர: ப்ரவிஶத்யதிதி2ர்ப்3ரஹ்மணோ க்3ருஹான் |
தஸ்யைதா ஶாந்திம் குர்வந்தி ஹர் வைவஸ்வதோத3கம் ||
யமதர்ம ராஜா, நெருப்பைப் போல பிராமண விருந்தினர் நம் வீட்டை அடைந்திருக்கின்றார். அவருக்கு மனிதர்கள் இப்படிபட்ட உபசாரத்தை செய்கின்றார்கள்.  எனவே அவரை உபசரிக்க  நீரைக் கொண்டு வாருங்கள் என்று அங்கிருந்தவர்கள் அவரிடம் கூறினர்.

ஸ்லோகம்-8
ஆஶாப்ரதீஞே ஸங்க3தம் ஸூந்ருதாம் சேஷ்டாபூர்தே புத்ரபஶூம்ஶ்ச |
ஏதத்3வ்ருங்க்தே புரூஷஸ்யால்பமேத3ஸோ ய்ஸ்யானஶ்னன்வஸதி
ப்3ரஹ்மணோ க்3ருஹே ||
பிராமண விருந்தினரை சரியாக உபசரிக்காவிட்டால் ஏற்படும் நஷ்டங்களை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கின்றது.

எவருடைய வீட்டில் ஒரு பிராமண விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இருக்கின்றானோ அந்த அறிவற்ற மனிதனுடைய அனைத்து விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் ஸத்ஸங்கத்தினால் வந்த புண்ணியத்தையும் நல்ல சொற்களால் தேடிய புண்ணியத்தையும், யாகத்தாலும், சேவையாலும் அடைந்த புண்ணியத்தையும், மக்கட்செல்வத்தையும், பசுக்களையும் அந்த பிராமணன் அழிக்கின்றான்.

விருந்தோம்பலின் பெருமையை யமதேவரிடம் அங்கிருந்தோர் கூறுகிறார்கள், விருந்தினரை சரியாக உபசரிக்க விட்டால் என்ன இழப்பு ஏற்படும் என்று இங்கு கூறப்படுகின்றது.  விருந்தினராக வந்தவனே புண்ணியங்கள் அனைத்தையும் அழித்து விடுவான் என்று கூறப்படுகின்றது.

ஸ்லோகம்9
திஸ்ரோ ராத்ரீர்யத3வாத்ஸீர்க்3ருஹே மேனஶ்னன்ப்3ரஹ்மன்னாதிதி2ர்தமஸ்ய: |
நமஸ்தேஸ்து ப்3ரஹ்மன்ஸ்வஸ்தி மேஸ்து தஸ்மாத்ப்ரதி த்ரீன்வரான்வ்ருணீஷ்வ ||

ஓ பிராமணனே, போற்றத்தக்க விருந்தினராக உணவு உட்கொள்ளாமல் என்னுடைய வீட்டில் மூன்று இரவுகள் வசித்த காரணத்திற்காக முதலில் உனக்கு என்னுடைய வணக்கம் உரித்தாகுக.  பிராமணனே எனக்கு மங்கலம் இருக்கட்டும், எந்த குறையும் என்னை வந்து சேராமல் இருக்கட்டும்.  உணவின்றி மூன்று இரவுகள் எனக்காக காத்திருந்ததற்காக மூன்று வரங்களை கொடுக்கிறேன் அவைகளை கேட்பாயாக. என்று எமதர்மக் நசிகேதனை பார்த்து கூறினார்.

ஸ்லோகம்10
ஶாந்தஸங்கல்ப: ஸுமனா யதா2 ஸ்யத்3வீதமன்யுர்கௌ3தமோ மாபி4 ம்ருத்யோ |
த்வத்ப்ரஸ்ருஷ்டம் மாபி4வதே3த்ப்ரதீத ஏதத்ரயாணாம் ப்ரத2மம் வரம் வ்ருணே ||
யமதேவரே, என் தந்தை கௌதமர் கவலையற்ற மனதையுடையவராகவும், கோபமற்றவராகவும் என்னிடத்தில் அன்பான மனதை உடையவராகவும் எவ்விதம் ஆவாரோ அவ்விதம் அருள்வீராக. உங்களால் திருப்பி அனுப்பப்படும் என்னை அடையாளம் கண்டுகொண்டவராக என்னிடத்தில் பேச வேண்டும்.  இதை மூன்று வரங்களுக்குள் முதல் வரமாக தேர்ந்தெடுக்கின்றேன்.

ஸ்லோகம்11
யதா2 புரஸ்தாத்3ப4விதா2 ப்ரதீத ஔத்3யாலகிர்ருணிர்மத்ப்ரஸ்ருஷ்ட |
ஸுக2ம் ராத்ரீ: ஶயிதா வீதமன்யு: த்வாம் த3த்3ருஶிவான் ம்ருத்யுமுகா2த் ப்ரமுக்தம் ||
எமதர்ம ராசாவின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட உன்னைக்கண்டு உன் நினைவு பெற்றவராக முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார்.  ஆருணியின் மகனான உத்தாலகர் என்னால் திருப்பி அனுப்பப்பட்ட உன் மீது கோபமற்றவராக இரவில் சுகமாக உறங்குவார்.

ஸ்லோகம்12
ஸ்வர்கே3 லோகே ந ப4யம் கிஞ்சனாஸ்தி ந தத்ர த்வம் ந ஜரயா பி3பே4தி |
உபே4 தீர்த்வாஶனாயபிபஸே ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
சுவர்க்க லோகத்தில் பயம் சிறிதும் கூட இருக்காது. அங்கே நீங்கள் (மனிதர்கள்) இல்லை வயோதிக பயமும் கிடையாது.  பசி-தாகம் என்ற இந்த இரண்டும் இருப்பதே தெரியாமல் மக்கள் சோகத்தை கடந்து மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

ஸ்லோகம்13
ஸ த்வமக்3னிம்ஸ்வர்க்3யமத்3யேஷி ம்ருத்யோ ப்ரப்3ரூஹி த்வம்ஸ்ரத்3த3னாய மஹயம் |
ஸ்வர்க3லோகா அம்ருதத்வம் ப4ஜந்தே ஏதத்3 த்3விதீயேன வ்ருணே வரேண ||
எமதர்ம ராஜா சொர்க்கத்தில் இருப்பவர்கள் நீண்ட காலம் இன்புற்று இருக்கின்றனர் அந்த சொர்க்கத்தை அடைய உதவும் யாகத்தை பற்றி நீங்கள் அறிவீர்கள், அதை சாஸ்திரத்தில் சிரத்தையுடைய எனக்கு சொல்லுங்கள்.  இது என்னுடைய இரண்டாவது வரமாக இருக்கட்டும்.

ஸ்லோகம்14
ப்ர தே ப்3ரவீமி தது3 மே நிபோ3த4 ஸ்வர்க்3யமக்3னிம் நசிகேத: ப்ரஜானன் |
அனந்தலோகப்திமதோ2 ப்ரதிஷ்டாம் வித்2தி4 த்வமேதம் நிஹிதம் குஹாயாம் ||
நசிகேதனே, நான் இதை ஞாபகப்படுத்திக் கொண்டு பிறகு சொர்க்கத்தை அடைய உதவும் இந்த யாகத்தை செய்யும் முறையை உனக்கு தெளிவாக கூறுகிறேன். அதை என்னிடமிருந்து கவனமாக கேட்டு தெரிந்து கொள்.  இந்த யாகமானது நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியதும், எண்ணற்ற உலகங்களை அடைவதற்கான சாதனமாகவும், இந்த உலகத்திற்கு ஆதாரமானதாகவும் மேலும் உபாஸகர்களின் மனதிலும் இருப்பதாகவும் நீ அறிவாயாக.

எமதர்மர் உபாஸனையை சேர்த்தே இந்த யாகத்தை செய்யும் முறையை உபதேசித்தார்.  இங்கே உபாஸன தேவதையாக ஸ்தூல பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருக்கும் தேவதை (விராட்).  இந்த பிரபஞ்சமே விராட்டின் சரீரம்.  அதற்கு ஆலம்பனமாக சொர்க்க காம இஷ்டா யாகத்தில் உள்ள அக்னியை கொள்ள வேண்டும்.  ஆலம்பனமே தேவதையாக நினைத்து உபாஸனை செய்ய வேண்டும்.
சமுத்திரம் – சமஷ்டி;  அலைகள் – வியஷ்டி
சமஷ்டி – வியஷ்டிக்கு ஆதாரமாக இருக்கும்.
பிரதிஷ்டா – விராட் தேவதையை குறிக்கின்றது, அதற்கு ஆலம்பனமாக இருக்கும் அக்னியை குறிக்கின்றார்.

ஸ்லோகம்15
லோகாதி3மக்3னிம் தமுவாச தஸ்யௌ யா இஷ்டகா யாவதீர்வா யதா2 வா |
ஸ சாபி தத்ப்ரத்யவத3த்3யதௌ2க்த2மதா2ஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட: ||
அந்த யாகத்தை செய்யும் முறையை நசிகேதனுக்கு கூறினார்.  எப்படிபட்ட செங்கற்கள் எவ்வளவு இருக்க வேண்டும் எவ்வாறு அடுக்கி வைக்க வேண்டும் போன்ற விவரங்களை விளக்கினார்.  அவற்றை உன்னிப்பாக கேட்டு அவனும் அவர் கூறியபடி திருப்பி கூறினான்.
அதை கேட்ட எமதர்மராஜா மீண்டும் மனதிருப்தியுடன் பேசினார்.

ஸ்லோகம்16
தமப்3ரவீத்ப்ரீயமாணோ மஹாத்மா வரம் தவைஹாத்3யா பூ4ய: |
தவைவ நாம்தா ப4விதாயமக்3னி: ஸ்ருங்காம் வேமாமனேகரூபாம் க்3ருஹான் ||
மகிழ்ச்சியடைந்த எமதர்ம ராஜா மீண்டும் நசிகேதனை பார்த்து இதற்காக இன்னொரு வரமும் இங்கேயே இப்போதே தருகின்றேன் கேட்டு பெற்றுக்கொள் என்று கூறினார்.  இனிமேல் இந்த யாகமானது உன்னுடைய பெயரிலே அழைக்கப்படும் என்று கூறிவிட்டு பல்வேறு வடிவங்களையுடைய மிக சிறப்பான மாலையை பரிசாக பெற்றுக் கொள் என்று கூறினார்.

ஸ்லோகம்17
த்ரிணசிகேதஸ்த்ரிபி4ரேத்ய ஸந்தி4ம் த்ரிகர்மக்ருத்தரதி ஜன்ம்ம்ருத்யூ |
ப்3ரஹ்மஜக்3ஞம் தே3வமீட3யம் விதி3த்வா நிசாய்யேமாம் ஶாந்திமத்யந்தமேதி ||
இந்த யாகத்தை மூன்று முறை செய்தவன் (இதிலிருந்து இந்த யாகத்தை மூன்று முறை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்,) மூவர்களுடன் (தாய், தந்தை, ஆசிரியர்) நல்ல சம்பந்தத்தை அடைந்தவன். அதாவது தாயிடமிருந்து அன்பையும், தந்தையிடமிருந்து ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், குருவிடமிருந்து அறிவையும், அன்பையும் அடைந்திருக்க வேண்டும்.  மூன்று கர்மத்தை செய்தவன். யாகம், இறைவழிபாடு, சாஸ்திரத்தை படித்தல், தானம் செய்தல் ஆகிய மூன்று கர்மங்களையும் செய்தவன் தற்காலிகமாக பிறப்பு இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

சூட்சும பிரபஞ்சமாக இருக்கின்ற ஹிரண்யகர்ப்பனிடமிருந்து தோன்றிய, எல்லாமும் அறிகின்ற, அக்னியாக இருக்கின்ற விராட் ஸ்வரூபத்தை குறிக்கின்றது. ப்ரஹ்ம என்ற சொல் சூட்சுமமான பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக இருப்பதைக் குறிக்கின்றது.  அந்த ஈஸ்வரனை குறிக்கின்றது.  அவரே எல்லாவற்றையும் அறிபவர்.  ஒவ்வொரு சரீரத்திற்கு உள்ளேயிருந்து கொண்டு எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருப்பவர். வணங்கத்தக்கவராகிய அந்த ஈஸ்வரனை உபாஸனை தேவதையாக வைத்து தியானம் செய்பவன் இங்கேயே நிலையான சாந்தியை அடைகின்றான்.  சுவர்க்க லோகத்தில் மேலான அமைதியை அடைகின்றான்.

ஸ்லோகம்18
த்ரிணாசிகேதஸ்த்ரயமேதத்3விதி3த்வா ய ஏவ வித்3வம்ஸ்ரிசனுதே நாசிகேதம் |
ஸ ஸ்ருத்யுபாஶான் புரத: ப்ரணௌ த்3ய ஶோகாதிகோ3 மோத3தே ஸ்வர்க3லோகே ||
.யார் மும்முறை நாசிகேத யாகத்தை செய்திருக்கின்றார்களோ. இந்த மூன்றையும் இவ்வாறு முறையாக அறிந்த எந்த வித்வான் நான் கூறியபடி இந்த நாசிகேத யாகத்தை செய்கின்றானோ
அவன் மரணத்தினுடைய பிடியிலிருந்து உடல் விடும் முன்பே வென்று சோகத்தை கடந்தவனாக சுவர்க்கத்தை அடைந்து மகிழ்ச்சியாக இருப்பான்.  இதை உபாஸனையாக செய்தால் பிரஹ்மலோகத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இருப்பான்.

ஸ்லோகம்19
ஏஷ தேத்3னிர்நசிகேத: ஸ்வர்க்3யோ யமவ்ருணீதா2 த்3விதீயேன வரேண |
ஏதமக்3னிம் தவைவ ப்ரவஞ்யந்தி ஜனாஸஸ்த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருனீஷ்வ ||
நசிகேதா! எந்த வரத்தை இரண்டாவதாக கேட்டாயோ அதாவது சுவர்க்கத்தை அடைகின்ற யாகத்தை உனக்கு கூறிவிட்டேன். இந்த யாகமானது உன்னுடைய பெயராலே இனி மக்கள் அழைப்பார்கள். இனி நசிகேதா, மூன்றாவது வரத்தை கேட்பாயாக.

ஸ்லோகம்20
யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே |
ஏதத்3வித்3யாமனுஶிஷ்தஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்த்ருதீய: ||
எமதர்மராஜா இந்த உலகில் இறந்த மனிதர்களை பற்றி இப்படிபட்ட ஒரு சந்தேகம் இருக்கின்றது.  அவர்கள் இறந்த பிறகும் இருக்கின்றார்கள் என்று சிலர் கூறுகின்றார்கள். இல்லையென்றும் சிலர் கூறுகின்றார்கள்.  இதை நான் தங்களிடமிருந்து அறிய வேண்டும்.
இதுவே வரங்களுக்குள் மூன்றாவதாக வரமாகும்.

ஸ்லோகம்21
தேவைரத்ராபி விசிகித்ஸிஜம் புரா ந ஹி ஸுவிக்3ஞேயமணுரேஷ த3ர்ம: |
அன்யம் வரம் நசிகேதே வ்ருணிஷ்வ மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம் ||
ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தகுதி நசிகேதனுக்கு இருக்கின்றதா என்று சோதனை செய்ய நினைத்து இவ்வாறு கூறுகின்றார்.  நசிகேதனுக்கு முமுக்‌ஷூத்வம், வைராக்கியம் இருக்கின்றதா என்று சோதிக்கவும் விரும்புவது இந்த ஸ்லோகத்தில் தெரிகின்றது.

இந்த விஷயத்தில் தேவர்களும்கூட முன்பே சந்தேகம் அடைந்தார்கள்.  இது எளியதாக அடையக்கூடியதல்ல.  இந்த ஆத்ம தத்துவத்தை பற்றிய அறிவானது மிகவும் சூட்சுமமானது. எனவே வேறு ஏதாவது வரத்தை தேர்ந்தெடு. இதனை எனக்காக விட்டுவிடு. என்னை நிர்பந்தப்படுத்தாதே என்று எமதர்மராஜா நசிகேதனிடம் கூறினார்.

ஸ்லோகம்22
தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில த்வம் ச ம்ருத்யௌ யன்ன ஸுவிஞேயமாத்தா2 |
வக்தா சாஸ்ய த்வாத்3ருக்3ன்யோ ந லப்4யோ நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கஸ்சித் ||
இந்த ஆத்ம விஷயத்தில் தேவர்களுக்கும் கூட சந்தேகம் உள்ளதோ!  அதை நீங்களும் அறிந்து கொள்வது சுலபமல்ல என்று சொல்கிறீர்கள். எனவே இதற்கு வேறெந்த வரமும் சமமாகாது. இந்த ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதற்கு உங்களைத் தவிர வேறொருவர் எனக்கு கிடைக்க மாட்டார்

ஸ்லோகம்23
ஶதாயுஷ: புத்ரபௌத்ரான்வ்ருணிஷ்வ ப3ஹுன்பஶூன்ஹஸ்திஹிரராயமஶ்வான் |
பூ4மர்மஹதா3யதனம் வ்ருணிஷ்வ ஸ்வயம் ச ஜீவ ஶரதோ3 யாவதி3ச்ச2ஸி ||
நூறு வருடம் ஆயுளுள்ள புத்திரனையும், பௌத்திரனையும் கேள்.  நிறைய பசுக்கள் போன்ற செல்வத்தைக் கேள்.  தங்கம், யானைகள், குதிரைகள் இவைகளை கேட்டுப் பெற்றுக்கொள்.  இந்த பூமியில் பெரிய ராஜ்ஜியத்தை கேள்.  எவ்வளவு காலம் வாழ விரும்புகிறாயோ அவ்வளவு காலம் வரை வாழ்ந்து கொள். இவ்வாறாக பலவித போகப் பொருட்களை கொடுப்பதாக கூறுகிறார் எமதர்மராஜா.

ஸ்லோகம்24
ஏதத்துல்யம் யதி3 மன்யஸே வரம் வ்ருணீஷ்வ வித்தம் சிரஞ்ஜீவிகாம் ச |
மஹபூமௌ நஸிகேதஸ்த்வமேதி4 காமானாம் த்வா காமபா4ஜம் கரோமி ||
இதுவரை கொடுப்பதாக கூறியவற்றிற்கு இணையாக வேறு ஏதாவது இருக்கின்றது என்று நீ கருதினால் அதையும் கேள்.  நிறைய செல்வங்கள், இந்த பூமியின் பெரும் பகுதியை அடைவாய்.  இந்த பூமிக்கே அரசனாகவும் இருக்கலாம். நீ எவையெல்லாம் விரும்புகின்றாயோ அவையெல்லாம் தடையில்லாமல் அனுபவிப்பவனாக உனக்கு வரம் தருகின்றேன்

ஸ்லோகம்25
யே யே காம து3ர்லபா4 மர்த்யலோகே ஸர்வன்காமான்ஶ்ச2ந்த3த: ப்ரார்த2யஸ்வ |
இமா ராமா: ஸரதா2: ஸ்தூர்யா ந ஹீத்3ருஶா ல்ம்ப4னீயா மனுஷ்யை: |
அபி4ர்மத்ப்ரத்தாபி4: பரிசாரயஸ்வ நசிகேதோ மரனம் மானுப்ராக்3ஞீ: ||
எந்த வகையான போக இந்த உலகத்தில் அடைவதற்கு கடினமோ அவைகளையெல்லாம் விருப்பம் போல அனுபவிப்பாயாக.  இந்த தேவ லோகத்தில் உள்ள பெண்கள் ரதத்துடன் இசைக்கருவிகளையும் உடையவர்கள்.  இவர்களை மனிதர்களால் அடைய முடியாது.  அவர்களை உனக்கு பணிவிடை செய்ய கொடுக்கின்றேன் பெற்றுக்கொள்.  ஆனால் மரணத்தைப்பற்றி மட்டும் என்னிடம் கேட்காதே.

ஸ்லோகம்26
ஶ்வோபா4வா மர்த்யஸ்ய யத3ந்தகைதத்ஸ்ர்வேந்த்3ரியணாம் ஜரயந்தி தேஜ: |
அபி ஸர்வம் ஜீவிதமஸ்பமேவ தவைவ வாஹஸ்தவ ந்ருத்யகீ3தே ||
நசிகேதன் மூன்று காரணங்களினால் எமதர்மர் கொடுக்கும் எல்லாவற்றையும் நிராகரித்து விடுகின்றான்.  நீங்கள் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டவைகளில் உள்ள சுக-துக்கங்களை நான் நன்கு அறிவேன். இவைகள் 1. நிலையற்றவை, 2. என்னை பலவீனப்படுத்திவிடும், 3. மனநிறைவைக் கொடுக்காது.

இவைகள் இன்று இருப்பது போல் நாளை இருக்குமா என்று நிர்ணயித்து கூற முடியாத நிலையற்றவைகள்.  நிலையற்ற பொருட்களை அனுபவிப்பதனால் அதற்கு அடிமையாகி விவேகத்தை இழந்து விடுவோம், அனுபவிக்க அவைகள் இல்லாத போது துயரத்தை அடைவோம்.  மனிதர்களின் இறப்புக்கு காரணமான எமதர்ம ராஜா, இந்திரிங்களின் சக்தியை இந்த நிலையற்ற பொருட்களை கொஞ்ச கொஞ்சமாக இழக்க செய்து விடும்.  அதிக சுகம் உடல் பலத்தை குறைத்து விடும், மனமும் சக்தியை இழந்து விடும், அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.  புத்தியையும் சரியாக தீர்மானிக்கும் சக்தியை இழக்க செய்து விடும்.  நீங்கள் எவ்வளவு ஆயுளைக் கொடுத்தாலும் அவைகள் உண்மையில் சிறியதுதான்.  உங்களுடைய வாகனங்கள், குதிரைகள், ஆடல் பாடல்கள் அனைத்தும் உங்களிடமே இருக்கட்டும்.

ஸ்லோகம்27
ந வித்தேன தர்பணீயோ மனுஷ்யோ லப்ஸ்யாமகே3 வித்தமத்ரீக்ஷ்ம சேத்த்வா |
வீவிஷ்யாமோ யாவதீ3ஶிஷ்யஸி த்வம் வரஸ்த மே வர்ணீய: ஸ ஏவ ||
எந்தப்பொருளும் ஒருவனுடைய மனதை திருப்தி படுத்த முடியாது.  செல்வங்கள் மனிதனை திருப்திபடுத்த முடியாது.  உங்களை பார்த்ததினாலேயே எல்லா செல்வங்களையும் அடைந்ததற்கு ஈடாகும்.  நீங்கள் எவ்வளவு காலம் வரை வாழ்வீர்களோ அதுவரைதான் நாங்கள் வாழ முடியும்.  எனவே எனக்கு வேண்டிய வரம் நான் கேட்ட ஆத்ம தத்துவம்தான்.

ஸ்லோகம்28
அஜீர்யதமம்ருதானாமுபேத்ய ஜீர்யன்மர்த்ய: க்வத4:ஸ்த2: ப்ரஜானன் |
அபி4த்4யாயன்வர்ணரதிப்ரமோதா3னதிதீ3ர்கே4 ஜீவிதே கோ ரமேத ||
அழிவுக்குட்படாத, மரணமற்ற உங்களை நான் அடைந்திருக்கின்றேன்.  அழியக்கூடிய மனிதன்,  பூலோகத்தில் வாழ்கின்ற நான் இவைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்தித்து புரிந்து கொண்டேன்.  ஆடல் பாடல் போன்றவற்றிலிருந்து வரும் இன்பங்கள், நீண்ட கால வாழ்க்கை இவற்றில் யார் சுகத்தை அனுபவிப்பார்கள்.

ஸ்லோகம்-29
யஸ்மின்னித3ம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ யத்ஸாம்பராயே மஹதி ப்3ரூஹி நஸ்தத் |
யோயம் வரோ கூ3ட4மனுப்ரவிஷ்டோ நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே ||
ஓ எமதர்ம ராஜா! எந்த ஆத்ம தத்துவ விஷயத்தில் மனிதர்கள் இவ்விதத்தில் சந்தேகப்படுகின்றார்களோ, பரலோக விஷயத்தில் மோட்சப் பலனுடையதாக எது இருக்கின்றதோ அதை எனக்கு கூறுங்கள். எந்த வரமானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றதோ அதை விட வேறொரு வரத்தை நசிகேதன் கேட்கவில்லை.

இரண்டாம் பாகம்

ஸ்லோகம்01 – ஆத்ம ஞானத்தின் பெருமைப் பேசப்படுகிறது
அன்யச்சே2யோன்யுது3தைவ ப்ரேயஸ்தே உபே4 நானார்தே2 புருஶம் ஸினீத: |
தயோஜ் ஶ்ரேய ஆத3தா3னஸ்ய ஸாது4 ப4வதி ஹியதேர்தா2த்3ய உ ப்ரேயோ வ்ருணிதே ||
ஸ்ரேயஸ் – மேலானது, அடையத்தக்கது ( இது மோக்‌ஷத்தை குறிக்கின்றது)
ப்ரேயஸ் –  உலக விஷயங்களிலிருந்து அடையும் இன்பத்தை குறிக்கின்றது
இவையிரண்டும் மனிதனால் அடையக்கூடிய சாத்தியங்கள்.  சம்சாரம் என்பது மானஸதாபம் அதாவது காம, க்ரோதாதிகளுடன் கூடியது. இவைகளை விட்டுவிடுதல் மோட்சத்தைக் குறிக்கின்றது.  மேலும் தன்னிடத்திலே இன்பத்தை காணும் தன்மை உடையது, பூரண மனநிறைவை அடைந்துள்ள நிலையை குறிக்கின்றது.
ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை ஸ்ரேயஸ்பாதை என்றும், ப்ரேயஸுக்கு செல்லும் பாதைக்கு ப்ரேயஸ்பாதை என்றும் கூறுவதுண்டு.  ஒருவன் இதிலிரண்டிலொன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.  கர்மத்தினால் அடைவது ப்ரேயஸ், ஞானத்தினால் அடைவது ஸ்ரேயஸ்.

ஸ்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, ப்ரேயஸுக்கு செல்லும் பாதை வேறு, இவையிரண்டும் வெவ்வேறு பலனை கொடுக்கக்கூடியது.  இவற்றுள் ஸ்ரேயஸை தேர்ந்தெடுப்பவனுக்கு முக்தி கிடைக்கின்றது, முழு மனநிறைவை கிடைக்கின்றது.  இதை விடுத்து ப்ரேயஸை எவனொருவன் தேர்ந்தெடுக்கின்றானோ அவன் மோட்சத்தை அடைவதிலிருந்து விலகி விடுகின்றான்.  மோட்சத்திற்கு செல்லும் பாதையிலிருந்து விலகி விடுகின்றான்.  சம்சாரம் என்கின்ற பந்தத்தில் வீழ்ந்து விடுகின்றான்.

ஸ்லோகம்02
ஶ்ரேயஸ்ச ப்ரேயஸ்ச மனுஷ்யமேதஸ்தௌ ஸம்பரீத்ய விவினக்தி தீ4ர: |
ஶ்ரேயோ ஹி தீ4ரோபி4 ப்ரேயஸோ வ்ருணீதே
ப்ரேயோ மந்தோ3 யோக3க்ஷேமாத்3 வ்ருணீதே ||
ஸ்ரேயஸும், ப்ரேயஸும் மனிதனை அணுகுகின்றன. விவேகமுள்ளவன் ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.  மூடன் ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.  அறிவாளி இவையிரண்டையும் ஆழ்ந்து சிந்தித்து பாகுபடுத்துகின்றான்.  சுயமாக சிந்தித்து ஆராயும் புத்தியில்லாதவனுக்கு சாஸ்திரம் பயன்படாது.  குருடனுக்கு நிலை கண்ணாடியால் எப்படி பயனில்லையோ அது போல வேதாந்த சாஸ்திரம் பயன்படாது.  விவேகமற்ற மூடன் உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ப்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான். அறிவுடையவன் ப்ரேயஸை விட்டுவிட்டு ஸ்ரேயஸை தேர்ந்தெடுக்கின்றான்.
[ யோக ஷேமம் –  யோகம் என்பது இதுவரையில் அடையாததை அடைவது, ஷேமம் என்பது அடைந்ததை பாதுகாத்தல் ]

ஸ்லோகம்03
ஸ த்வம் ப்ரியான்ப்ரியரூபாம்ஶ்ச காமானபி3த்3யாயன்னசகேதோத்யஸ்ராக்ஷி: |
நைதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி ப3ஹகோ3 மனுஷ்யா: ||
நசிகேதா, நீ இன்பத்தை கொடுக்கின்ற, இன்பத்தின் வடிவமாக இருக்கின்ற, ஆசையை தூண்டுகின்ற பொருட்களை நன்றாக சிந்தித்து அதிலுள்ள குறைகளை நன்கு உணர்ந்து அவைகளை தியாகம் செய்து விட்டாய்,  ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டாய்.  இந்த விலை மதிப்பில்லாத மாலையையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  இந்த விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் மூழ்கி விடுகின்றார்கள், மூழ்கி இருக்கின்றார்கள்.

ஸ்லோகம்04
தூ3ரமேதே விபரீதே விஷூசீ அவித்3யா யா ச வித்3யேதி ஞாதா |
வித்3யாபீ4ப்ஸினம் நசிகேதஸம் மன்யே ந த்வா காமா ப3ஹவோலோலுபந்த ||

இவையிரண்டும் வேறுபட்டவை, வெவ்வேறு இலக்கை நோக்கி செல்லும் இரு பாதைகள். எது அறியாமை ( சம்சாரத்தில் இருத்தல்) எது ஆத்ம ஞானம் என்று அறியப்படுகிறதோ இவைகள்தான் ஒருவனை அந்தந்த இலக்கை நோக்கி செல்லும் பாதைக்கு அழைத்து செல்கின்றது.  ஸ்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை ஆத்ம ஞானத்தை அடைவதற்கு எடுக்கும் முயற்சி அதாவது குருவை அடைந்து வேதாந்த சாஸ்திரத்தை படித்தல் (சிரவணம்), மனனம், நிதித்யாஸனம் ஆகிய சாதனங்களை பயன்படுத்தி முக்தி அடைதல்.  ப்ரேயஸை அடைவதற்கு உதவும் பாதை செயலில் ஈடுபடுதல்.  ஆனால் ஞானத்தை அடைவதற்கு உதவும் பண்புகளை அடைவதற்கு செய்யும் செயல்கள் அனைத்தும் ஸ்ரேயஸ் பாதைக்கு கொண்டு செல்லும்.  கர்மத்தை அவித்யா என்று கூறக் காரணம் கர்த்தா என்ற புத்தி எப்பொழுதும் இந்த சரீரத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.  ஞானத்தை விரும்புபவனாக இருக்கும் உன்னை பலவித ஆசைகளும் சலனப்படுத்தவில்லை என்று கருதுகின்றேன்.

ஸ்லோகம்05
அவித்3யாயாமந்தரே வர்த்மானா: ஸ்வயம் தீ4ரா: பண்டி3தம்மன்யமானா: |
த3ந்த்4ரம்யமாணா: பரியந்தி மூடா4 அந்தேனைவ நீயமானா யதா2ந்தா4: ||
சரீரமே நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவனை அறியாமைக்குள் இருப்பவனாக கூறப்படுகின்றது.  இவர்கள் ஆத்ம ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கின்றார்கள்.  ஆனால் தன்னை அறிவுடையவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  இவ்வாறு நானே அறிவாளி, பண்டிதன் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கீழான நிலையை அடைகிறார்கள், சம்சாரத்திலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்.  மூப்பு, மரணம், நோய் என்ற துன்பத்தில் சிக்கி துன்புறுகின்றார்கள்.  இவர்களின் நிலை குருடனால் வழிநடத்தி செல்லப்படும் குருடர்களின் நிலைக்கு சமமாக இருக்கின்றது.

ஸ்லோகம்06
ந ஸாம்பராய: ப்ரதிபா4தி பா3லம் ப்ரமாத்3யந்தம் வித்தமோகே3ன மூட4ம் |
அயம் லோகோ நாஸ்தி பர இதி மானி புன: புனர்வஶாமாபத்3யதே மே ||
ஆத்ம ஞானம் என்ற ஒன்று இருப்பதை அறியாமல் இருப்பவர்கள் மனப்பக்குவம் இல்லாதவர்கள், அறியாமையிலுள்ளவர்கள் இவர்கள் வேத கர்மங்களை கடைப்பிடித்து வாழ்தல், தர்மநெறிப்படி வாழ்தல் ஆகிய சாதனங்களை அறியாமல் இருக்கின்றார்கள். கவனமின்மையுடனும், மூடர்களாகவும் இருக்கின்றார்கள்.  மேலும் பணத்தாசையினால் அறிவிழந்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இதுதான் உலகம், வாழ்க்கையென்ற அறியாமையிலும் இருக்கின்றார்கள். இதைத்தவிர வேறெதுவும் இல்லை என்ற கர்வத்துடனும் இருக்கின்றார்கள்.  இவர்கள் மீண்டும் மீண்டும் என்(எமதர்மர்) வசத்திற்கே வருகின்றார்கள்.

ஸ்லோகம்07
ஶ்ர்வணாயாபி ப3ஹுபி4ர்யோ ந லப்4ய: ஶ்ருண்வந்தோÅபி ப3ஹகோ3 யம் ந வித்4யு: |
ஆஶ்சர்யோ வக்தா குஶலோÅஸ்ய லப்3தா4ஶ்சர்யோ ஞாதா குஶலானுஶிஷ்ட: ||
மனிதரில் பலருக்கு ஆத்ம தத்துவத்தை பற்றி கேட்பதற்கே வாய்ப்பு கிடைப்பதில்லை. குருவை அடைந்து வேதாந்தத்தை கேட்பவர்களில் பலருக்கும் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.  ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருவானவர் ஆச்சரியமானவர், அபூர்வமானவர். ஆத்ம தத்துவத்தை உபதேசிக்கும் குருமார்களும் மிகக்குறைவாகவே இருக்கின்றனர்.  ஆத்ம ஞானத்தை அடைந்தவனும் மிகக்குறைவு. சாமர்த்தியமான, தகுதியான குருமூலம் உபதேசம் பெறுபவர்களும் மிகக்குறைவு.
ஸ்லோகம்08
ந நரேணாவரேணா ப்ரோக்த ஏஷ ஸுவிக்3ஞேயோ ப3ஹுதா4 சிந்த்யமான: |
அனன்யப்ரோக்தே க3திரன்ன நாஸ்த்யணீயான்ஹ்யதர்க்யமணூப்ரமாணாத் ||
தகுதியற்ற ஆசிரியர்களால் இந்த ஆத்ம ஞானத்தை உபதேசிக்கப்பட்டால் இதை நன்கு புரிந்து கொள்ள முடியாது. ஆத்மாவை பற்றி பலவிதமான கருத்துக்கள், சிந்தனைகள் இருப்பதால், இவைகளையெல்லாம் நீக்கி சரியான அறிவை புகட்ட தகுதியான ஆசிரியரால்தான் முடியும். இவர் எதை உபதேசம் செய்கின்றாரோ அதன்வழி வாழ்ந்து கொண்டிருப்பவர்.  ஆத்ம ஞானத்தை அடைந்து அதில் நிலைபெற்றிருப்பவர்., முறைப்படி உபதேசம் பெற்று ஞானத்தை அடைந்தவராக இருப்பவர்.  இப்படிபட்ட குருவிடம் படிப்பவன் ஆத்ம் ஞானத்தை சந்தேகம் இல்லாமல் புரிந்து கொள்வான்.  சம்சார கதியிலிருந்து விடுபடுவான்.  இவன் வேறெதையும் அடையத்தேவையில்லை.  இவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆத்மா என்பது அணுவைக்காட்டிலும் மிக மிக சூட்சுமமானது,, இதை தர்க்கத்தினாலும், வாதத்தினாலும், புத்தியினாலும் அடைய முடியாது.

ஸ்லோகம்09

நைஷா தர்கேண மதிராபனேயா ப்ரோக்தான்யேனைவ ஸுஞானாய ப்ரேஷ்ட |
யாம் த்வமாப: ஸத்யத்4ருதிர்னதாஸி த்வாத்3ருங்னோ பூ4யான்னசிகேத: ப்ரஷ்டா ||
இந்த ஆத்ம ஞானமானது தர்க்கத்தினாலும், வாதத்தினாலும் அடைய முடியாது. நம் புத்திக்கு அப்பாற்பட்ட நம்மை காட்டிலும் வேறான தகுதியான ஒருவரால் உபதேசிக்கப்பட்டால்தான் புரிந்து கொள்ள முடியும்.  என் அன்பிற்குரியவனே! எந்த ஆத்ம ஞானத்தை அடையப்போகின்றாயோ சத்யமான அதை அறியும் விஷயத்தில் நீ மிகவும் உறுதியாக இருக்கின்றாய்.

ஏன் இந்த அறிவை தர்க்கத்தினால் அடைய முடியாது என்றால் புத்தியின் துணைக்கொண்டு யூகத்தினால் சில அறிவை அடைய முடியும்.  உதாரணமாக மலையில் தெரியும் புகையைப் பார்த்தே அங்கு நெருப்பு இருக்கிறது என்று அறிகின்றோம்.  இந்திரியங்களின் துணையில்லாமல் மனதைக் கொண்டு அடையும் ஞானத்திற்கு அனுமான ஞானம்.  நேரிடையாக அடையும் அறிவுக்கு பிரதியக்‌ஷ ஞானம்.  நம் அனுபவத்திற்கும் வராததை வைத்து அனுமானம் செய்ய முடியாது.  ஆத்மா நம் அனுபவத்திற்கு வராதது, அதாவது பிரத்யக்‌ஷ ஞானத்திற்கு வரவே வராது எனவே அதை அனுமானத்தினால் அடைய முடியாது. ஆத்மாவை இல்லையென்றும் நிரூபிக்க முடியாது.  என்போன்ற குருவுக்கு உன் போன்ற சிஷ்யர்கள் கிடைக்கட்டும்.

ஸ்லோகம்10
ஜானாம்யதம் ஶேவத்4ட்ரித்யனித்யம் ந ஹ்யத்4ருவை: ப்ராப்யதே ஹி த்4ருவம் தத் |
ததோ மயா நசிகேதாஶ்சிதோÅக்னிரனித்யைர்த்3ரவ்யை: ப்ராப்தவானஸ்மி நித்யம் ||
கர்ம பலன்கள் நிலையற்றவை, அநித்யமானது என்றும், நிலையற்றவைகளைக் கொண்டு நிலையானதை அடைய முடியாது என்றுm நான் அறிவேன்.  ஆனாலும் என்னால் நசிகேத யாகம் செய்யப்பட்டது, அதன் பலனாக இந்த பதவியும் கிடைத்தது, நீண்ட காலம் வாழக்கூடிய நிலையையும் அடைந்தேன்.

ஸ்லோகம்11
காமஸ்யாப்திம் ஜக3த்: ப்ரதிஷ்டாம் க்ரதோரானந்த்யமப4யஸ்ய பாரம் |
ஸ்தோமமஹது3ருகா3யம் ப்ரதிஷ்டாம் த்3ருஷ்ட்வா த்4ருத்யா தீ4ரோ நசிகேதோÅத்யஸ்ராக்ஷி ||

இந்த தேவலோகம் ஆசைகளின் எல்லையாக இருக்கின்றது. இந்த பூலோகத்திற்கே ஆதாரமாக இருக்கின்ற உலகம், உபாஸனையில் அடையக்கூடிய முடிவான பலன் இந்த உலகம், பயமற்ற நிலையின் எல்லையாக இருக்கின்றது இந்த உலகம், பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கின்றது, பெருமைக்குரிய அனிமா போன்ற ஐஸ்வர்யங்களை உடைய உலகம், அதிகமாக வியாபிக்கப்பட்டிருக்கின்ற உலகம்,  அதிக ஆயுளைக் கொடுக்கும் உலகம்.  இப்படிபட்ட பெருமைகளை உடைய இந்த உலகத்தை நன்கு அறிந்தும் அதிலுள்ள குறைகளை, நிலையற்ற தன்மையையும் அறிந்து புத்திசாலியான நீ மனவுறுதியுடன் வேண்டாம் என்று துறந்து விட்டாய், மறுத்து விட்டாய்.

 

ஸ்லோகம்12

தம் து3ர்த3ர்ஶம் கூ3ட4மனுப்ரவிஷ்டம் கு3ஹாஹிதம் புராணம் |
அத்4யாத்மயோகா3தி4க4மேன தேவம் மத்வா தீ4ரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி ||
இந்த ஸ்லோகத்தில் மூன்று கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றது.  அவைகள்
1. ஆத்மாவின் லக்‌ஷணம்,
2. அதை அடையும் வழி ( எதைக்கொண்டு அதை அறிந்து கொள்ள முடியும்)
3. ஆத்மாவை அடைவதால் வருகின்ற பலன்.

இது அனுபவிக்கப்படுகின்ற ஒன்றாக இல்லாததால் அதை அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாது.  இதற்கு குணங்களும் கிடையாததால் மிகவும் சூட்சுமமாக இருக்கின்றது எனவே அறிந்து கொள்வது மிகக்கடினமாக இருக்கின்றது. இது மிகவும் ரகசியமாகவும், மறைக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கின்றது.  புத்தியில் பிரதிபலிக்கும் இந்த ஆத்மாவை சிதாபாசம் என்று கூறப்படுகின்றது, இதுவே ஆத்மாவை மறைத்து கொண்டிருக்கின்றது. வெள்ளைத்திரையில் பார்க்கும் காட்சியானது எப்படி அந்த திரையையே மறைத்துக் கொண்டிருக்கின்றதோ அதே போன்று புத்தியில் தோன்றும் அறிவானது உண்மையான அறிவை மறைத்துக் கொண்டிருக்கின்றது;  இது புத்தியில்தான் வைக்கப்பட்டிருக்கின்றது. குகையில் எப்படி எப்பொழுதும் இருட்டு இருக்கின்றதோ அதுபோல புத்தியில் எப்பொழுதும் அக்ஞானம் இருந்து கொண்டிருக்கின்றது ஆனால் இதன் துணைக் கொண்டுதான் ஆத்மாவை அறிய வேண்டும். இது சம்சாரத்தினுள்ளே இருக்கின்றது, துயரத்திற்குள்ளே ஆனந்த ஸ்வரூபமாக இருந்து கொண்டிருக்கின்றது.  எப்பொழுதும் மாறாமல் இருக்கின்றது.

அத்4யாத்மயோக3:       அனாத்மாவிலிருந்து ஆத்மாவை நோக்கி நம்முடைய கவனத்தை திருப்புதல், அதாவது நாம ரூபத்திலிருந்து அவைகளுக்கு ஆதாரமான பரம்பொருளை நோக்கி மனதை செலுத்துதல்.

அதிக3மன:                       குருமூலம் சாஸ்திரத்தை படிப்பதன் மூலம்,  ஆத்மாவை அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைந்து, அதில் நிலைப்பெற்று சுக-துக்கங்களை கடந்து விடுகின்றான்.

ஸ்லோகம்13
ஏதச்ச்2ருத்வா ஸம்பரிக்3ருஹ்ய மர்த்ய: ப்ரவ்ருஹ்ய த4ர்ம்யமணுமேதமாப்ய |
ஸ மோத3தே மோத3னீயம் ஹி லப்3த்4வா விவ்ருதம் ஸத்3ம நசிகேதஸம் மன்யே ||
ஆத்ம தத்துவத்தை கேட்டு (சிரவணம்), சந்தேகமில்லாமல் புரிந்து கொண்டு (மனனம்),  மனிதனானவன்  அனாத்மாலிருந்து ஆத்மாவை நன்றாக புரிந்து கொண்டு எப்பொழுதும் கவனம் முழுவதும் ஆத்மாவிலேயே நிலைத்து நிற்க வேண்டும் (நிதித்யாஸனம்).  ஆத்ம ஸ்வரூபம் மிக சூட்சுமமானது அதை அடைந்தவன் எப்பொழுதும் மனநிறைவுடன் இருக்கின்றான்.  சுகத்தின் காரணத்தை அடைந்து விட்டவனாக இருக்கின்றான்.  ஆனந்தம் நிறைந்த ஆத்மாவை அடைந்தவனுக்கு மோட்சத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது என்று நான் கருதுகின்றேன்.

ஸ்லோகம்14
அன்யத்ர த4ர்மாத3ன்யத்ராத4ர்மத3ன்யத்ரஸ்மாத்க்ருதாக்ருதாத் |
அன்யத்ர பூ4தாச்ச ப4வ்யாச்ச யத்தத்பஶ்யஸி தத்3வத்3 ||
தர்மத்தைக் காட்டிலும் வேறானதும், அதர்மத்திற்கும் வேறானதாகவும் உள்ளது.  அதாவது இருமைக்கும் அப்பாற்பட்டதாக உள்ள ஒன்றை இது சுட்டிக்காட்டுகின்றது.  இது காரண-காரியத்திலிருந்தும் வேறாக உள்ளது.  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் காரண காரியமாகவும் இருக்கின்றது. (உ-ம்) தந்தை – மகன் – பேரன்.  கடந்த காலத்திலிருந்தும், வருங்காலத்திலிருந்தும் வேறானதாகவும் உள்ளது.  இவ்வாறு எந்த ஒன்று உள்ளதோ அல்லது நீங்கள் அறிந்திருக்கின்றீர்களோ அதை எனக்கு கூறுவீர்களாக.

ஸ்லோகம்15
ஸர்வே தே3வா யத்பத3மாமனந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி |
யதி3ச்ச2ந்தி ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீம்யோமித்யேதத் ||
எல்லா வேதங்களும் எந்த லட்சியத்தைப் பற்றி உபதேசிக்கின்றதோ, அதை இறுதியாக அடைய வேண்டும் என்று கூறுகின்றதோ, எல்லா தவங்களும் எதை அடைவதற்காக கூறப்பட்டிருக்கின்றதோ, எந்தவொன்றை அடைய விரும்பி பிரம்மசர்யத்தை கடைப்பிடிக்கின்றார்களோ அந்த லட்சியத்தை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.  அந்த பதம் ஓம் என்பதுதான்.

ஸ்லோகம்16
ஏதத்3த்4யேவாக்ஷரம் ப்3ரஹ்ம ஏதத்3த்3யேவாக்ஷரம் பரம் |
ஏதத்3த்4யேவாக்ஷரம் ஞாத்வா யோ யதி3ச்ச2தி தஸ்ய தத் ||
ஓம் என்ற சொல் மாயையுடன் கூடிய ஈஸ்வரனையும் (சகுண பிரஹ்மன்), குணங்களற்றதாக உள்ள பிரஹ்மத்தையும் (நிர்குண பிரஹ்மன்) என்ற இரண்டையும் குறிக்கின்றது.  சப்த ரூபமாக இருக்கும் ஓம் சகுண பிரம்மத்தையும், ஓங்காரத்தை விசாரம் செய்யும்போது நிர்குண பிரம்மத்தையும் குறிக்கின்றது.  இந்த சகுண பிரஹ்மத்தை குறிக்கின்ற ஓங்காரத்தை தியானிப்பவன் எதை விரும்புகின்றானோ அதை அடைகின்றான்.  இந்த ஒங்காரத்தை பரம்பொருளாக விசாரம் செய்து அறிந்தவன் அதை அடைகின்றான்

ஸ்லோகம்17

ஏதத்3லம்ப3னம் ஶ்ரேஷ்டமேததா3ல்ம்ப3னம் பரம் |

ஏதத்3லம்ப3னம் ஞாத்வா ப்3ரஹ்மலோகே மஹீயதே ||

எதை வைத்துக் கொண்டு இந்திரியங்களுக்கப்பாற்பட்ட தேவதைகளை தியானிக்கின்றோமோ அதற்கு ஆலம்பனம் என்று பெயர்.  இது இருவகையாக இருக்கின்றது.

  1. பிரதிமா ஆலம்பனம்– குறிப்பிட்ட உருவத்துடன் கூடியது, சிவபெருமான், முருகர்
  2. ப்ரதீகம் ஆலம்பனம்– குறிப்பிட்ட உருவமில்லாதது. (உ.ம்) ஓம் என்ற சொல்

நாம் ஒங்காரத்தை தியானிக்கும் போது நமது மனம் ஒம் என்ற சப்தத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.  இந்த ஓங்காரம் பரபிரம்மத்தையும், சகுண பிரம்மத்தையும் குறிப்பதனால்தான் இதை தியானம் செய்தவன் இறந்த பிறகு பிரம்ம லோகத்திற்கு சென்று சிறப்புடன் இருக்கின்றான்.  இதை பரம்பொருளாக விசாரம் செய்து அடையும் அறிவினால் பிரம்மத்தையே அடைவன், அதன் ஸ்வரூபமாகவே தன்னை உணர்ந்து கொள்வான்.
ஸ்லோகம்18 (ஆத்ம தத்துவ விளக்கம் 18-22)
ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சின்னாயம் குதஶ்சின்ன ப3பு4வ கஶ்சித் |
அஜோ நித்ய: ஶாஶ்வதோÅயம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே ||
சைதன்ய ஸ்வரூபமான ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதும் இல்லை.  எதனிடமிருந்தும் தோன்றவில்லை, எதுவுமே இதனிடத்திருந்தும் தோன்றவில்லை.  இதற்கு காரணம் எதுவுமில்லை, காரியமாகவும் இல்லை.  இது பிறப்பற்றது, தேய்வற்றது, எல்லா காலத்திலும் இருப்பது, நிலையானது, வளர்ச்சியற்றது, பழமையானது, உடல் அழிந்தாலும் இது அழிவதில்லை.

ஸ்லோகம்19
ஹந்தா சேன்மன்யதே ஜந்தும் ஹதஶ்சேன்மன்யதே ஹதம் |
அபௌ4 தௌ ந விஜானீதோ நாயம் ஹந்தி ந ஹன்யதே ||
இது எந்தவிதமான செயலையும் செய்வதில்லை, அனுபவிக்கப்படும் பொருளாகவும் இருப்பதில்லை.  கொலைகாரன் நான் கொலை செய்கிறேன் என்று நினைப்பதும், கொலை செய்யப்படுபவன் நான் கொலை செய்யப்படுகின்றேன் என்று நினைப்பதும் அவர்களது அறியாமையை குறிக்கின்றது. உண்மையில் அவர்கள் ஆத்மாவை அறியவில்லை, இது அழிக்கப்படுவதுமில்லை, அழிவதுமில்லை.
ஸ்லோகம்20
அணோரணியான்மஹதோ மஹீயானத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ கு3ஹாயாம் |
தமக்ரது: பஶ்யதி வீதஶோகோ தா4து: ப்ரஸாதான்மஹிமானமாத்மன: ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.

  1. ஆத்மாவை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்,
  2. ஆத்மாவை புரிந்து கொள்கின்ற இடம்,
  3. எப்படிபட்டவர்களால் புரிந்து கொள்ளப்படுகின்றது
  4. ஆத்மாவை அடைவதால் அடையும் பலன்.

ஆத்ம லக்‌ஷணம்: இது அணுவைக்காட்டிலும் அணுவானது, சிறியதைக் காட்டிலும் சிறியது.  பெரியதைக் காட்டிலும் பெரியது.  இந்த கருத்து ஆத்மா பார்க்கப்படும் பொருளல்ல என்று உணர்த்துகின்றது.  இந்த லக்‌ஷணம் அனாத்மா விஷயங்களை நீக்கி விடுகின்றது.  குணங்களால் வரையறுக்கப்படாதது.  இதிலிருந்து எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பதாகவும் புரிந்து கொள்ள வேண்டும்.  எந்த ஒன்றையும் கால, தேச வஸ்து இவைகளால் வரையறுக்கப்படலாம். ஆனால் ஆத்மா இவைகளால் வரையறுக்கப்பட முடியாது.

ஆத்மாவானது எங்கும் இருக்கின்றது ஆனால் அதை புரிந்து கொள்கின்ற இடம் நம்முடைய புத்திதான். நாம் பார்க்கும் உயிரினங்களின் மனதிற்குள் அமர்ந்திருக்கின்றது, வெளிப்படுகின்றது.

இந்த ஆத்மாவை, ஆசையற்றவன் (சுகத்தை நாடும் ஆசைகள் இல்லாதவன்) தன்னுடைய உண்மையான ஸ்வரூபமாகவே அறிகின்றான்..  நம்முடைய இந்திரியங்களின் அமைதியினால் ஆத்மாவை அடைகின்றான்.  ஈஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் ஆத்மாவை அடைகின்றான்.

ஆத்மாவை அடைந்தவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான், துயரத்திலிருந்து விடுதலை அடைகின்றான்.  இந்த நிலை ஜீவன் முக்தியை குறிக்கின்றது.

ஸ்லோகம்21
அஸீனோ தூ3ரம் வ்ரஜதி ஶயனோ யாதி ஸர்வத: |
கஸ்தம் மதா3மத3ம் தேவம் மத3ன்யோ ஞதுமர்ஹதி ||
அறிவு ஸ்வரூபமான ஆத்மாவானது அனாத்மாவான இந்த சரீரத்தோடு இணைந்து இருக்கின்றது.  இதனால் ஜடமான நம் உடலும், மற்ற உறுப்புக்களும் செயல்படுகின்றன.  ஆத்ம தத்துவத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.  அதை தனியே பார்த்தல், உடலோடு சேர்ந்து பார்த்தல். ஆத்மா தன்னளவில் செயலற்று இருக்கின்றது.  ஆனால் அனாத்மாவுடன் சேரும்போது செயல்படுவதுபோல் இருக்கின்றது.  உதாரணமாக பானையானது ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்லும் போது அதிலிருக்கும் ஆகாசமும் செல்வது போல் தோன்றுகின்றது.  ஆனால் ஆகாசம் எங்கும் வியாபித்திருப்பதால் அது நகர்வதில்லை.
ஆத்மாவானது அமர்ந்து கொண்டே வெகுதூரம் செல்கின்றது. அதாவது அது தன்னளவில் அசையாமல் இருக்கின்றது, ஆனால் உடலோடு, மனதோடு சேர்ந்து பார்க்கும்போது அதுவும் வெகுதூரம் செல்வது போல் தோன்றுகிறது. உறங்கிக்கொண்டே வெகு தூரம் செல்கின்றது.  இதையும் உபாதிகளுடன் சேர்ந்து பார்க்கும்போது இதுமாதிரி தோன்றும்.  ஆனந்தமாகவும் அதற்கப்பாற்கப்பட்டதாகவும் இருக்கின்ற இந்த ஆத்மாவை என்னைத் தவிர வேறு யார் அறிய தகுந்தவர்.
ஸ்லோகம்22
அஶரீரம் ஶரீரேஷ்வனவஸ்தே2ஷ்வவஸ்தி2தம் |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
இது உடலற்றது, உடலுக்குள்ளே இருந்து கொண்டு உடலற்றதாக இருக்கின்றது.  அழியக்கூடியதில் அழியாததாக இருக்கின்றது.  மிகப்பெரியது, மேலானது, அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது, எங்கும் வியாபித்திருக்கின்றது.  இந்த ஆத்மாவை இவ்வாறாக உணர்ந்திருக்கும் சான்றோர்கள் துயரப்படுவதில்லை.

ஸ்லோகம்23
நாயமாத்ம ப்ரவசனேன லப்4யோ ந மேத4யா ந ப3ஹுனா ஶ்ரதேன |
யமேவைஷ வ்ருணுதே தேன லப்4யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம்ஸ்வாம் ||
இதில் ஆத்ம ஞானத்தை அடைய உதவும் இரண்டு சாதனங்களை கூறப்பட்டிருக்கின்றது. அவைகள்

  1. ஈஸ்வரன் அனுக்கிரகம்,
  2. முமுக்‌ஷுத்வம்(மோக்‌ஷ இச்சா).

வேத பாராயணத்தால் மட்டும், வேதத்தை உச்சரிப்பதால் மட்டும் இதை அடைய முடியாது. வேதத்தில் படித்ததை நினைவில் வைத்திருந்தாலும் அதை அடைய முடியாது.  அதை பலமுறை கேட்பதாலும் பயனில்லை.  ஆத்மா எந்த மனிதனை தேர்ந்தெடுக்கின்றதோ அவனால் மட்டும்தான் அடைய முடியும்.  அவர்களுக்கு ஆத்மா தன்னுடைய ஸ்வரூபத்தை விளக்கி காட்டுகின்றது, உணர வைக்கின்றது.  இங்கே ஆத்மா என்பதை மாயையுடன் கூடிய ஆத்மாவை (ஈஸ்வரனை) எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஈஸ்வரன் எதன் அடிப்படையில் மனிதனை ஆத்ம ஞானம் அடைவதற்கு தேர்ந்தெடுப்பார் என்றால் எவனொருவன் மோட்சத்தை அடைவதில் தீவிர வைராக்யத்துடன் இருக்கின்றானோ அவனைத்தான் தேர்ந்தெடுக்கின்றார்.  அவர்களுக்குத்தான் ஆத்ம ஞானத்தை அடைவதற்கு அனுக்கிரகம் செய்கின்றார்.
ஸ்லோகம்24
நாவிரதோ து3ஶ்சரிதான்னஶாந்தோ நாஸ்மாஹித: |
நாஶாந்தமானஸோ வாபி ப்ரஞனேனௌனமாப்னுயாத ||
இந்த ஸ்லோகத்தில் நான்கு விதமான சாதனங்கள் கூறப்பட்டிருக்கின்றது.
அதர்மமான வாழ்க்கை முறையிலிருந்து தன்னை விலக்கி கொள்ளாதவன், புலன்களில் அமைதியில்லாதவன், புலனடக்கம் இல்லாதவன், எடுத்துக்கொண்ட லட்சியத்தில் மனத்தை வைக்காதவன், மன ஒருமுகப்பாடு இல்லாதவன், மன அமைதியை அடையாதவன் இப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களால் ஞானம் வந்தாலும் அதில் நிலைபெற முடியாது. எனவே இவர்களால் ஆத்மாவை அடைய முடியாது
ஸ்லோகம்25
யஸ்ய ப்3ரஹ்ம ச க்ஷேத்ரம் சோபே4 ப4வத ஓத3ன: |
ம்ருத்யுர்யஸ்யோபஸேசனம் க இத்தா2 வேத3 யத்ர ஸ: ||
ஆத்மாவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றது.  பிரளய காலத்தில் அனைத்தும் அதற்குள் ஒடுங்கி விடுகின்றது.  இந்த அகில பிரபஞ்சமே ஆத்மாவுக்கு உணவாக இருக்கின்றது.  மரணத்தை ஊறுகாயாக பயன்படுத்தி உணவை உட்கொள்கின்றது.  பிறகு அதையையும் சாப்பிட்டு விடுகின்றது.

ஆத்மாவிற்கு பிராமணர்களும், சத்திரியர்களும் சாப்பிடும் அன்னமாகின்றது.  இது இந்த பிரபஞ்சமே சாப்பிடும் உணவாகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மரணம் இதற்கு ஊறுகாய் போன்று இருக்கின்றது.  இவ்விதமாக எங்கு இந்த ஆத்மா இருக்கிறது என்று யார் அறிவார்.

மூன்றாம் பாகம்

ஸ்லோகம்01
ரிதம் பிப3ந்தௌ ஸுக்ருதஸ்ய லோகே கு3ஹாம் ப்ரவிஷ்டௌ பரமே ப்ரார்த4 |
சா2யாதபௌ ப்3ரஹ்மவிதோ3 வத3ந்தி பஞ்சாக்3ரயோ யே ச த்ரிணாசிகேதா: ||
பரமார்த்தாவும், ஜீவாத்மாவும் நிழலும் ஒளியும் போல் கர்ம பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், தன்னால் செய்யப்பட்ட கர்மத்தால் அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடலில் உள்ள புத்தியில் நுழைந்திருக்கின்றார்கள்.  மேலானதாக இருக்கின்ற ஆத்மாவில் இருப்பிடம் புத்திதான்.  ஜீவனும், பிரம்மனும் நிழலும் ஒளியும் போல் இருக்கின்றார்கள் என்று பிரம்மத்தை அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.  இதை இல்லறத்தில் இருந்து கொண்டு ஐந்துவிதமான யாகங்களை செய்தவர்களும், மூன்று முறை நாசிகேத யாகத்தை செய்தவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இங்கு நுழைந்திருக்கின்றது என்பதை அவர்களுடைய இருப்பிடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  அங்கு சென்றால் அவர்களை தரிசிக்கிலாம். பிரவேசம் என்பது அறியப்படுகின்ற இடம் என்று பொருள் கொள்ள வேண்டும்.  ஜீவன் சம்சாரியாக இருக்கின்றான், அவன் அனுபவிப்பதை பிரம்மத்தில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.
ஸ்லோகம்02
ய: ஸேதுரீஜானானாமக்ஷரம்  ப்3ரஹ்ம யத்பரம் |
அப4யம் திதீர்ஷதாம் பாரம் நாசிகேதம் ஶகேமஹி ||
யாகத்தை செய்கின்றவர்களுக்கு இகலோக, பரலோகத்தை அடைய ஆசையுள்ளவர்களுக்கு நாசிகேத யாகம் பாலமாகவோ, மார்க்கமாகமோ இருக்கின்றது.  அதேபோன்று சம்சார கடலின் பயமற்ற அக்கரையை அடைய விரும்புபவர்களுக்கு அழிவற்ற, உயர்ந்த பிரம்மமானது மார்க்கமாக, பாலமாக அமைகின்றது.
ஸ்லோகம்03,04
ஆத்மானம் ரதி2னம் வித்3தி4 ஶரீரம் ரத2மேவ து |
பு3த்3தி4ம் து ஸாரதி2ம் வித்3தி4 மன: ப்ரக்4ரஹமேவ || 3 ||
இந்த்3ரியாணி ஹயானாஹுர்விஷயாம்ஸ்தேஷு கோ3சரான் |
ஆத்மேந்த்3ரியமனோயுக்தம் போ4க்தேஜ்யாஹுர்மனீஷிண: || 4 ||
வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஸ்தூல சரீரம் ரதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.  ரதத்தில் அமர்ந்திருப்பவராக ஜீவாத்மா கூறப்படுகின்றார்.  புத்தியானது தேரோட்டியாகவும் மனம் கடிவாளமாகவும், விஷயங்களே பாதையாகவும், ஐந்து இந்திரியங்கள் குதிரைகளாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.
சரீரம் ஜடமாக இருப்பதால், அதை இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி உள்ளே இருக்க வேண்டும்.  சரீரத்திற்கு உரிமையாளன் ஜீவாத்மா

எப்படி எஜமானன் போக விரும்பும் இடத்தை அடைய சரியாக செலுத்துவதற்கு சாரதி என்பவன் இருப்பானோ அதுபோல வாழ்க்கையில் நாம் அடைய நினைக்கும் லட்சியத்தை அடைவதற்கு உதவுவது புத்திதான். ரத சாரதிக்கு தன் எஜமானனை அவர் விரும்பும் இடத்திற்கு கொண்டு செல்ல குதிரைகள் தேவையாக இருக்கின்றது.  அதுபோல புத்திக்கு குதிரைகள் போன்று இந்திரியங்களின் துணை தேவைப்படுகின்றது.  குதிரைகள் தேரை இழுப்பது போல இந்திரியங்கள் சரீத்தை இயக்குகின்றது.  தேரோட்டிக்கு குதிரைகளை கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கு கடிவாளம் தேவைப்படுவது போல புத்திக்கு இந்திரியங்களை கட்டுபடுத்துவதற்கு மனம் தேவைப்படுகின்றது.  ரதம் செல்லும் பாதையானது நாம் அனுபவிக்கும் விஷயங்களுக்கு உவமானமாக கூறப்படுகின்றது.  ஜீவாத்மாவை ரதத்தின்  எஜமானனாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த உடலானது ரதத்திற்கு ஒப்பிடப்படுகின்றது. புத்தியை தேரோட்டியாகவும், மனதை கடிவாளமாகவும், இந்திரியங்கள் குதிரைகளாகவும், தேர் செல்லும் பாதையானது விஷயங்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஸ்தூல இந்திரியங்கள் மனதுடன் கூடிய போக்தாவாக இருக்கின்றது. இவ்விதம் ஞானிகள் கூறுகின்றார்கள்.

ஸ்லோகம்05
யஸ்த்வ்விக்ஞானவான்ப4வத்யயுக்தேன மனஸா ஸதா3 |
யஸ்யேந்த்3ரியாண்யவஶ்யானி து3ஷ்டாஶ்வா இவ ஸாரதே2: ||
எவனொருவன் புத்தியில் அறியாமையோடு இருக்கின்றானோ, கட்டுபடுத்த முடியாத மனதை உடையவனாக இருக்கின்றானோ அவனுடைய இந்த்ரியங்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் இருக்கும்.  தேரோட்டிக்கு அடங்காத குதிரைகள் போல் புத்திக்கு இந்திரியங்கள் கட்டுப்படாமல் இருக்கும்.

ஸ்லோகம்06
யஸ்து விக்ஞானவான்ப4வதி யுக்தேன மனஸா ஸதா3 |
ஹஸ்யேந்த்3ரியாணீ வஶ்யானி ஸத3ஶ்வா இவ ஸாரதே2: ||
எவனொருவனுடைய புத்தியில் அறிவுடனும், கட்டுபடுத்தபட்ட நெறிபடுத்தபட்ட மனதுடன் இருக்கின்றானோ அவனுக்கு இந்திரியங்கள் அவனது கட்டுக்குள், வசத்தில் இருக்கும்.  தேரோட்டிக்கு அடங்கிய குதிரைகள் போல இந்திரியங்கள் அவனுக்கு அடங்கியிருக்கும்.
ஸ்லோகம்07
யஸ்த்வக்ஞானவான்ப4வத்யுமனஸ்க: ஸதா3ஶுசி: |
ந ஸ தத்பத3மாப்னோதி ஸம்ஸாரம் சாதி4க3ச்ச2தி ||
யாரொருவன் விவேகமில்லாமலும், அடங்காத மனதுடனும், தூய்மையற்ற மனதுடனும் இருக்கின்றானோ அவன் ஆத்மாவை அடைய வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதில்லை, சம்சாரத்தைதான் அவன் அடகின்றான்.
ஸ்லோகம்08
யஸ்து விக்ஞானவான்ப4வதி ஸமனஸ்க: ஸதா3ஶுசி: |
ஸ து தத்பத3மாப்னோதி யஸ்மாத்3பூ4யோ ந ஜாயதே ||
எந்த ஒரு விவேகியானவன், கட்டுப்படுத்தபட்டு, தூய்மையாக வைத்திருக்கும் மனதுடன் இருக்கின்றானோ அவன் மேலான லட்சியத்தை அடைகின்றான் அதனால் மீண்டும் பிறப்பதில்லை.
ஸ்லோகம்09
விக்3ஞானஸாரதி2ர்யஸ்து மன: ப்ரக்3ர ஹவான்னர: |
ஸோத்4வன: ப்ர்ரமாப்னோதி த3த்3விஷ்ணோ: பரம் பத3ம் ||
எந்த மனிதன் புத்தியான சாரதியையும், கடிவாளம் போன்ற மனதை கட்டுக்குள் வைத்திருக்கின்றானோ அப்படிபட்டவன் பயணத்தினுடைய முடிவை அடைகின்றான். இறைவனின் மேலான இருப்பிடமான பர பிரம்மத்தை அடைகின்றான்..

ஸ்லோகம்10
இந்த்3ரியேப்4ய: பரா ஹ்யர்தா2 அர்தேப்4யஶ்ச பரம் மன: |
மனஸஸ்து பரா பு3த்3தி4ர்பு3த்3தே4ராத்மா மஹான்பர: ||
பஞ்சகோச விசாரம்:-

  1. அன்னமய கோசம்:    நான், என்னுடையது என்ற பற்றை விட்டுவிட வேண்டும்.
  2. பிராணமய கோசம்:  பசி, தாகம், இந்திரியங்களை பயன்படுத்தி ஏதாவது செய்து கொண்டிருத்தல்.
  3. 3.மனோமய கோசம்:             யாருடைய அன்பிற்காகவும் ஏங்கியிருக்கக்கூடாது, யாரையாவது நேசிக்க வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
  4. விக்ஞானமய கோசம்:      தன்னை மதிக்க வேண்டும்.மரியாதை கொடுக்க வேண்டும். தன்னிடத்திலுள்ள திறமையை போற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோடு இருத்தல்
  5. ஆனந்தமய கோசம்:           எதிலும் இன்பத்தை நாடிக்கொண்டிருத்தல்

 

பரம் என்ற சொல்லுக்கு நான்கு அர்த்தங்கள் கூறப்படுகின்றது.  அவைகள்,

  1. சூட்சுமம்– ஒவ்வொரு கோசமும் அதற்கு முன்னே உள்ளதை விட மிகவும் சூட்சுமமானது.
  2. வ்யாப்தி– ஒரு பொருள் சூட்சுமமாக ஆக அது வியாபிக்கும் இடமும் அதிகமாகும்.
  3. நியந்தா–  ஒன்று அதற்கு முன்னே உள்ளதை கட்டுப்படுத்தும்,
  4. ஆத்ம சமீபம்– ஒன்று அதற்கு முன்னே உள்ளதை விட ஆத்மாவுக்கு அருகில் இருக்கும்.

இந்திரியங்களைக் காட்டிலும் வெளியிலுள்ள விஷயங்கள் மேலானது.  வெளியிலுள்ள விஷயங்களை காட்டிலும் மனம் மேலானது..எந்த இந்திரியத்தை பயன்படுத்த வேண்டும் என்று வெளியிலுள்ள விஷயத்தை பொறுத்துத்தான் அமைகிறது.  எனவே வெளியிலுள்ள பொருட்கள் மேலானதாக கருதப்படுகின்றது.  விஷயங்கள் என்பது எண்ணங்களை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  மனதைக் காட்டிலும் புத்தி மேலானது, சூட்சுமமானது  வியஷ்டி புத்தியை காட்டிலும் சமஷ்டி விக்ஞானமய கோசம் (புத்தி) மிகவும் மேலானது, சூட்சுமமானது.
ஸ்லோகம்11
மஹத: பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷ: பர: |
புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா க3தி: ||
சமஷ்டி விக்ஞானமய கோசத்தை விட காரண சரீரம், ஆனந்தமய கோசம் மேலானது.  ஆனந்த மய கோசத்தைக் காட்டிலும் பரபிரம்மம் மேலானது.  புருஷனைக் காட்டிலும் மேலானது வேறெதுவுமில்லை.  அதுவே முடிவானது, மேலான இருப்பிடம், இறுதி லட்சியமாகும்.
ஸ்லோகம்12

ஏஷ ஸர்வேஷு பூ4தேஷு கூ3டோ4த்மா ந ப்ரகாஶதே |
த்3ருஶ்யதே த்வக்3ரயயா பு3த்3த்4யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத3ர்ஶிபி4: ||
இந்த ஜீவராசிகளுக்குள் இருந்தாலும் அது மறைக்கப்பட்டுள்ளதால் நம்மால் அதை உணர முடியவில்லை.  கயிற்றில் தெரியும் பாம்பை பார்க்கும்போது உண்மையில் நாம் கயிற்றைத் தான் பார்க்கின்றோம் ஆனால் பாம்புதான் கண்களுக்கு தெரிகின்றது.  இது பாம்பு இல்லை என்று தெரிந்தவுடன் பாம்பு மறைந்து ஆதாரமான கயிறு தெரிகின்றது.  இது பாம்பு என்று சொல்லும் போது கயிற்றைத்தான் காட்டுகின்றோம் ஆனால் பாம்பு என்று அறியாமையால் சொல்கின்றோம்.

இந்த ஆத்மா எல்லா உயிர்களிலும் மறைந்திருக்கின்றது.  அதனால் தெரிவதில்லை, வெளிப்படுவதில்லை ஆனால் சூட்சுமமான தத்துவத்தை அறிந்தவர்களால்.  ஒருமுகப்படுத்தப்பட்ட நுண்ணிய புத்தியால் மட்டும் உணரப்படுகின்றது, பார்க்கப்படுகின்றது/
ஸ்லோகம்13
யச்சே2த்3வாங்மனஸீ ப்ராக்ஞஸ்தத்3யச்சேஜ்ஜான ஆத்மனி |
ஞானமாத்மனி மஹதி நியச்சே2த்தத்3யச்சேசே2ந்த ஆத்மனி ||


சிரவணம்:-
நான் இந்த ஐந்து கோசங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மா என்ற அறிவை கேட்பதின் மூலம் அறிவது சிரவணம்.  சாஸ்திரம் உரைக்கின்ற கருத்தை கேட்டு புரிந்து கொள்வது சிரவணம். இந்த மூன்று சரீரமே நான் என்ற் அறியாமையில் இருப்பதால் இந்த சரீரத்திற்கு ஏதாவது தீங்கு வந்தால் துன்பமடைகின்றோம். அவமானபடுத்தினாலோ, தீய வார்த்தைகளால் திட்டினாலோ கோபம் வருகின்றது.  இந்த சரீரத்திலுள்ள அபிமானம் நீங்கி விட்டால், இதற்கு வரும் சுக-துக்கங்கள் நம்மால் அனுபவிக்கப்படமாட்டாது.  சாஸ்திரத்தை பல வருடங்களாக கேட்பதன் மூலம் நமக்கு நான் யார் என்ற உண்மை தெரிய வருகின்றது.  நான் பஞ்ச கோசங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற அறிவை அடைகின்றோம்.  ஆத்ம-அனாத்மா விஷய ஞானம் ஏற்படுகின்றது.  நான் ஆத்மா, மனம், புத்தி, பிராணன் இவைகளை சாட்சியாக பார்த்து கொண்டு இருக்கின்றேன்.  இவைகளுக்கு வரும் சுக-துக்கங்கள் என்னைச் சேர்ந்ததல்ல என்று அறிந்து கொள்வதுதான் சிரவணம்.

மனனம்:-
இந்த ஞானம் வந்தால் அதில் நமக்கு பலவிதமான சந்தேகங்கள் வரும்.  இந்த சந்தேகங்கள் அனைத்தையும் போக்க உதவும் சாதனம் மனனமாகும்.  சாஸ்திர அறிவானது அனுபவ அறிவுக்கு முரண்பாடாக இருக்கும் இதை குரு-சாஸ்திரத்தின் மூலமாக நீக்கி விட வேண்டும்.
இப்படி அடைந்த ஞானத்தினால் உடலுக்கு எந்த தீங்கு வந்தாலும், புகழ் வந்தாலும் அது என்னைச் சேர்ந்ததல்ல என்று உறுதியாக இருக்க வேண்டும், சாட்சியாக பார்த்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய மனநிலை எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும்.  தீய குணங்கள் நம்மை விட்டு நீங்கி இருக்க வேண்டும்.  ஆனாலும் பல நேரத்தில் நாம் அவ்வாறு இருப்பதில்லை. இதனை விபரீத பாவனை என்று கூறப்படுகின்றது.  அதாவது ஞானம் அடைந்தாலும் அதற்கேற்ற மாதிரி மனநிலை முன்பு இருந்ததை போன்று மாறி விடுகின்றது.  இந்த நேரத்தில்தான் நிதித்யாஸனம் என்ற சாதனம் தேவைப்படுகின்றது.  இது விபரீத பாவனையை நீக்க உதவும்.  அடைந்த ஞானத்தில் நிலைபெறுவதற்கு இந்த சாதனம் உதவுகின்றது.

மந்திர விளக்கம்:-

நம்முடைய இந்திரியங்கள் புத்தியில் உள்ள அறிவுப்படி செயல்படுவதில்லை. இந்திரியங்களை மனதில் ஒடுக்க வேண்டும். இந்திரியங்களின் மீதுள்ள அபிமானத்தை எடுத்து மனதில் வைக்க வேண்டும்.  அதனால் இந்திரியங்கள் நம் சொற்படி செயல்படும்.  தேவையான விஷயங்களுக்கு மட்டும் அவைகளை பயன்படுத்த பழக வேண்டும். மனதில் உள்ள அபிமானத்தை எடுத்து புத்தியில் வைக்க வேண்டும்.  மனதில் இருக்கின்ற சங்கல்ப-விகல்பங்களை நீக்கி புத்திக்கு வரவேண்டும்.   புத்தியில் உள்ள அபிமானத்தை எடுத்து அனைத்து ஜீவராசிகளின் புத்தியில் வைக்க வேண்டும், இந்த சமஷ்டி புத்தியை சத்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஆத்மாவில் ஒடுக்க வேண்டும்.  இவைகளுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கின்ற பரமாத்மாவே நான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்லோகம்14
உத்திஷ்டத ஜாக்3ரத ப்ராப்ய வரான்னிபோ3த4த் |
க்ஷுரஸ்ய தா4ரா நிஶிதா து3ரத்யயா து3ர்க3ம் பத2ஸ்தத்கவயோ வத3ந்தி ||
உத்திஷ்டத – எழுந்திருங்கள் ( ஆத்ம ஞானத்தை அடைய வாருங்கள் )
ஜாக்ரத – விழித்துக்கொள்ளுங்கள் ( ஆத்மா ஒன்று இருப்பதை தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்)
ஆத்ம ஞானத்தை அடைய விழித்துக் கொள்ள இரண்டு படிகள் தாண்டி வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  அவைகள்

  1. இந்த உலகத்தை துறக்க வேண்டியதற்கு காரணம் தெரியவில்லை.
  2. நாம் அடையும் துயரத்திற்கும், சுகத்திற்கும் இந்த உலகம்தான் காரணம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருத்தல்.

என்னுடைய அறியாமைதான் நான் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு காரணம் என்று அறிந்து கொள்ளுங்கள்.  இந்த அறியாமையிலிருந்து விடுபடுங்கள், இந்த அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். குருவை அடைந்து சரியான, நிச்சயமான அறிவை அடையுங்கள். இந்த ஞானத்தை அடையும் பாதையானது மிகக்கடினமானது, கூர்மையான கத்தியின் மீது நடந்து செல்வது போன்று கடினமானது  என்று ஞானிகள், ரிஷிகள் கூறுகின்றனர்.

ஸ்லோகம்15
அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம் ததா2ரஸம் நித்யமக3ந்த4வச்ச யத் |
அன்னத்3யனந்தம் மஹத: பரம் த்4ருவம் நிசாய்ய தம்ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யதே ||
ஆத்ம ஸ்வரூபம் இதில் கூறப்படுகின்றது.  ஆத்மா நிர்குணமாக இருப்பதால் அது மிகவும் சூட்சுமமானது, சப்தமற்றது எனவே காதுக்கு விஷயமாக இல்லை.  தொட்டுணரக்கூடியதல்ல, உருவமற்றது, சுவையற்றது, மணமற்றது, இவ்வாறு ஐந்து புலன்களுக்கும் விஷயமாக இல்லாமல் இருக்கின்றது.  இது மாற்றங்களற்றது, என்றும் இருப்பது ( காலத்திற்குட்படாதது), என்றும் மாறாமல் இருப்பது, எந்த காரணத்திடமிருந்து தோன்றவில்லை (அநாதி), இதிலிருந்தும் எதுவும் தோன்றவில்லை (அனந்தம்) சமஷ்டி பிரபஞ்சத்திற்கும் அப்பாற்பட்டது..  இப்படிபட்ட ஆத்மாவை உணர்ந்து கொள்வதால் மரணத்திலிருந்து விடுபடுகின்றான்.  அறியாமை, காமம், கர்ம பலன்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலையடைகின்றான்.

ஸ்லோகம்16
நாசிகேதமுபாக்2யானம் ம்ருத்யுப்ரோக்தம் ஸனாதனம் |
உஹத்வ ஶ்ருத்வா ச மேதா4வீ ப்3ரஹ்மலோகே மஹீயதே ||
இதில் விதேஹ முக்தியை பற்றி கூறுப்படுகின்றது.  ஆத்ம தத்துவ உபதேசத்தினால் நசிகேதனால் அடையப்பெற்ற ஆத்ம ஞானம், எமதர்ம ராஜாவினால் உபதேசிக்கபட்ட ஞானம், எப்பொழுதும், எங்கும் இருக்கின்ற ஞானம், பரம்பரையாக உபதேசிக்கபட்டு வருகின்ற ஞானம், அழிவற்ற ஞானம்.  இந்த ஞானத்தை கேட்டு புரிந்து கொண்டவர்கள் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.  இந்த ஞானத்தை உபதேசிக்கின்றவர்களும் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்கள்.

ஸ்லோகம்17
ய இமம் ப்ரமம் கு3ஹ்யம் ஶ்ரவயேத்3ப்3ரஹ்மஸம்ஸதி3 |
ப்ரயத: ஶ்ராத்3த4காலேவா ததா3னந்த்யாய கல்பதே ததா3னந்த்யாய கல்பத இதி2 ||
இந்த உபநிஷத்தை அர்த்தம் புரியாமல் பாராயணம் செய்பவர்கள் இறந்த பிறகு பிரம்மலோகத்திற்கு சென்று அங்கிருந்து முக்தியடைவதற்கு வாய்ப்பு உண்டு.  யாரொருவர் இந்த மேலான, ஆழமான, ரகசியமான ஆத்ம த்த்துவத்தை தன்னை நன்கு தூய்மைபடுத்திக் கொண்டு (உடல், மனம் இரண்டையும்), சிரார்த்தம் செய்கின்ற காலத்தில் பிராமணர்கள், சத்திரியர்கள் சபையில் மற்றவர்கள் கேட்பதற்காக சொன்னால் அப்பொழுதே அவர்கள் மோட்சத்தை அடைவதற்கு தகுதியடைகின்றார்கள்.

முதல் அத்தியாயம் முடிவடைகின்றது

இரண்டாவது அத்தியாயம் – முதல் வல்லி

முகவுரை:-

இந்த அத்தியாயத்தில் மூன்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது.  அவைகள்

  1. ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்,
  2. அதை அடைய சில சாதனங்கள்,
  3. ஆத்ம ஞானத்தினால் அடையும் பலன்கள்.

ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பற்றி புதிய முறையில் விளக்கப்படுகின்றது.  அவஸ்தாத்ரயம் (சரீராத்ரயம் ) விசாரமும் செய்யப்படுகின்றது.  ஆத்ம பலனை வெவ்வேறு வகையாக கூறப்பட்டுள்ளது.

ஸ்லோகம்01
பராஞ்சி கா2னி வ்யத்ருணத்ஸ்வயம்பூ4ஸ்த்ஸ்மத்பராங் பஶ்யதி நாந்தராத்மன |
கஶ்சித்3தீ4ர: ப்ரத்யகா3த்மானமைக்ஷதா3வ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ன: ||
நமது ஞானேந்திரியங்கள் இயற்கையாகவே வெளி விஷயங்களை நோக்கி செல்வதாகவே ஈஸ்வரன் படைத்துள்ளார்.  அதனால்தான் இவைகளை வெளியுலகை நாடியே செல்கின்றது.  பகவானே இவ்வாறு ஒரு கஷ்டத்தை ஜீவனுக்கு கொடுத்து விட்டார்.  இந்திரியங்களை பயன்படுத்திதான் ஆக வேண்டும் ஆனால் இவைகளுக்கு அடிமையாகி விடக்கூடாது.  அவைகள் கொடுக்கும் இன்பத்திற்கு மயங்கி விடக்கூடாது.  இவைகளை உள்முகமாக திருப்பினால், புத்தியில் ஒடுக்கப்பட்டால் புத்தியானது மிகவும் சூட்சுமமாகின்றது.  யாரோ ஒரு விவேகிதான் அந்தராத்மாவை பார்க்கின்றான்.  இவ்வாறு இந்திரியங்களை உட்புறமாக திருப்பியவன் மரணத்திலிருந்து விடுபட விரும்புபவன், சம்சாரத்திலிருந்து விடுதலைப் பெற விரும்புபவன், மோட்சத்தை அடைவதில் தீவிர நாட்டமுடையவனாக இருக்கின்றான்..
ஆத்மா என்ற சொல் நான்கு வினையடிகளிலிருந்து தோன்றியது.

  1. ஆப்னோதி இதி ஆத்மா– எது எங்கும் வியாபித்திருக்கின்றதோ அதுவே ஆத்மா
  2. ஆத4த்தே– எது எல்லவற்றிற்கும் ஆதாரமாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
  3. அத்3தி– எது ஜீவ-ஸ்வரூப விஷயத்தில் சாட்சியாக இருக்கின்றதோ அதுவே ஆத்மா
  4. அத்தே– மூன்று காலத்திலும் அழியாமல் எது இருக்கின்றதோ அதுவே ஆத்மா

 

ஸ்லோகம்02
பராச: காமனனுயந்தி பா3லாஸ்தே ம்ருத்யோர்யந்தி வித்தஸ்ய பாஶாம் |
அத2 தீ4ரா அம்ருதத்வம் விதி3த்வா த்4ருவமுத்4ருவேஷ்விஹ ந ப்ரார்த2யந்தே ||
குழந்தைத்தன்மையுடையவர்கள், விவேகமில்லாமல் வீணாக காலத்தை கழிப்பவர்கள், வெளியுலக இன்பம் தரும் பொருட்களை நாடுகின்றார்கள்.  அவர்கள் மரணத்தின் (அறியாமை, ஆசை, சம்சாரம்) பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள், சம்சாரம் என்னும் பிறப்பு-இறப்பு என்ற வலையில் விழுந்து விடுகின்றார்கள்  இந்த நிலையில் இருப்பவர்களின் மனம் போகத்திலே இருக்கும்.  வயதாக ஆக இந்திரியங்களின் சக்தி குறைந்து கொண்டே போகும் அதனால் அனுபவிக்கும் சக்தியும் குறைந்து கொண்டே போகும் எனவே மனதுயரத்தை அடைவார்கள்.  ஆனால் சான்றோர்கள் எங்கும் இருக்கின்ற, கால ஸ்வரூபியாக இருக்கின்ற நிலையான மனநிறைவை கொடுக்கின்ற மோட்சத்தை அறிந்து கொண்டு இவ்வுலகில் நிலையற்ற பொருட்களில் நாட்டம் கொள்வதில்லை, வேண்டுவதில்லை.

 

ஸ்லோகம்03
யேன ரூபம் ரஸம் க3ந்த4ம் ஶப்3தா3ன்ஸ்பர்ஶாம்ஶ்ச மைது2னான் |
ஏதேனைவ விஜானாதி கிமத்ர பரிஶிஷ்யதே ஏஜத்3வை தத் ||
த்ருக் த்ருஷ்ய விவேகம் – பார்ப்பவன் வேறு, பார்க்கப்படும் பொருள் வேறு என்ற அறிவு
உதாரணமாக இந்த உடலை நான் பார்க்கின்றேன் என்று சொல்லும் போது நான் பார்ப்பவனாக இருக்கின்றேன்.  இந்த உடல் பார்க்கப்படும் பொருளாக இருப்பதால் அது வேறாக இருக்கின்றது.  ஆகவே அறிகின்ற நான் வேறு அறியப்படும் விஷயங்கள் வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.  எந்த வெளி விஷயங்களில் எனக்கு அபிமானம் இருக்கின்றதோ அதற்கு வரும் நஷ்டம் எனக்கு துயரத்தை கொடுக்கின்றது.  அதேபோல இந்த உடலுக்கு ஏதாவது கஷ்டம் வரும்போது எனக்கு துயரம் உண்டாகின்றது.

எந்த சைதன்யத்தால் மட்டும் உருவம், சுவை, மணம், சப்தம், தொட்டுணர்தல் ஆகியவைகளெல்லாம் அறியப்படுகின்றதோ, இந்திரியங்கள் விஷயத்தில் சம்பந்தம் வைப்பதால் வருகின்ற சுகம், துக்கம் கூட எந்த சைதன்யத்தால் அறியப்படுகின்றது.  பிறகு அறிய எஞ்சியுள்ளது ஒன்றுமில்லை.  இதிலிருந்து ஆத்மாவால் அறியப்படாதது எதுவுமே இல்லை என்று அறியப்படுகின்றது.  இப்படிபட்ட சித் ஸ்வரூபம்தான் அந்த ஆத்மாவாகிய பிரஹ்மம்.  இதுவேதான் எல்லா பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது.

த்ருக் த்ருஷ்ய விவேக விசாரம்:-
எது என்னால் அனுபவிக்கப்படுகின்றதோ அது நானல்ல.  இந்திரியங்களின் செயல்கள் என்னுடையதாக நினைக்கப்படுகின்றது.  (உ-ம்) நான் பார்க்கின்றேன், நான் நடக்கின்றேன் என்ற இந்த வாக்கியங்களில் கண் பார்க்கின்றது, அது பார்க்கின்ற விஷயங்கள் என்னால் அறியப்படுகின்றது.  இந்திரியங்களின் செயல்கள் எனக்கு அனுபவமாகவும், அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளுவதாலும் அவைகள் நானல்ல.  நம் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம். நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்கள்தான். நான் விரும்புகின்றேன், கோபத்துடன் இருக்கின்றேன் என்பதெல்லாம் எண்ணங்கள்தான்.  இவ்வாறு என் மனதிலுள்ள எண்ணங்களை நான் அறிகின்றேன்.  எனவே த்ருக்-த்ருஷ்ய விவேகத்தின் நியதிப்படி அவைகள் வேறு என்று தெளிவாக அறியப்படுகின்றது.  தோன்றுகின்ற எண்ணங்களை வெளிப்படுத்தும் மனம் நானல்ல என்று தெரிகின்றது. புத்தியின் செயல்களும் நம்மால் அனுபவிக்கப்படுவதால் அதுவும் நானல்ல என்று அறிந்து கொள்ள முடிகின்றது.  இதிலிருந்து எல்லாவித அனுபவங்களுக்கும் சாட்சியாக இருக்கின்ற ஆத்மாதான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்ள முடிகின்றது
இந்த உடல் நானல்ல என்று சொல்லும்போது ஒரு சந்தேகம் எழுகின்றது.  இந்த உடலை நான் அனுபவிக்கின்றேன், இந்த உடலுக்கு ஏதாவது துன்பம் வந்தால் நான் பாதிக்கப்படுகின்றேன்.  பிறகு எப்படி நான் வேறாக இருக்க முடியும் என்ற ஐயம் வரும்போது இந்த அனுபவங்கள் எல்லாம் பொய், ஏனென்றால் அனுபவம் எப்பொழுதும் பொய்யாகத்தான் இருக்கும். நீலவானம், சூரியோதயம் இவை அனுபவத்தில் வானம் நீலவர்ணமாகவும், சூரியன் கிழக்கில் உதிப்பது போலவும் இருக்கின்றது ஆனால் நம் அறிவில் இவைகள் பொய் என்று தெரிகின்றது.  எனவே அறிவுதான் எப்பொழுதும் உண்மை என்று ஏற்றுக்கொண்டு அனுபவம் ஒரு அத்யாஸம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் பொய்யென்று எப்படி புரிந்து கொள்வது?  இந்த சரீரத்தில் நான் என்ற அபிமானம் வைப்பதனால் இது நான் என்று எண்ணிக் கொண்டு இதற்கு வரும் கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று உணர்கின்றோம். வெளி விஷயங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் உண்மையில் நம்மை பாதிக்கக்கூடாது ஆனால் நாம் அபிமானிக்கும் விஷயமாக இருந்தால் அதனால் பாதிக்கப்படுகின்றோம்.  உதாரணமாக நம்முடைய நெருங்கிய உறவினர்க்கோ, நண்பருக்கோ ஏதாவது துன்பம் வந்தால் நாமும் பாதிக்கப்படுகின்றோம், ஏனென்றால் அவர்கள் மீது நாம் அபிமானம் வைத்திருக்கின்றோம்.  ஆகையால் ஏதாவது ஒரு பொருள் மீது பற்று வைக்கும் போது அதற்கு வரும் நலம்-கேடு என்னைப் பாதிக்கின்றது.  நாம் நம் உடலின் மீது அபிமானம் வைத்திருப்பதால் அதனால் பாதிப்பை அடைகின்றோம்.  த்ருக்-த்ருஷ்ய விவேகம் முக்தியை கொடுக்காது, ஆனால் நம்மை இந்த சரீரத்திலிருந்து விடுவித்து விடும்.  அதேபோல மனம், புத்தி அனைத்தும் நானல்ல என்று நீக்க வேண்டும்.

ஸ்லோகம்04
ஸ்வப்னாந்தம் ஜாக3ரிதாந்தம் சோபௌ4 யேனானுபஶ்யதி |
மஹாந்தம் விபு4மாத்மானம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||

இந்த ஸ்லோகத்தில் அவஸ்தா த்ரயம் மூலம் ஆத்ம தத்துவம் விளக்கப்படுகின்றது.  நாம் ஒவ்வொருவரும் மூன்று விதமான அனுபவங்களை உடையவராக இருக்கின்றோம். அவைகள்

  1. விழிப்பு நிலை (ஜாக்ரத் அவஸ்தா) – வெளியே இருக்கும் உலகத்தை அனுபவிக்கின்றோம்.
  2. கனவு நிலை (ஸ்வப்ன அவஸ்தா) – இந்திரியங்களின் துணையில்லாமலே மனதினாலே ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அனுபவிக்கின்றோம்.
  3. ஆழ்ந்த உறக்கம் (சுஷூப்தி அவஸ்தா) – இந்த நிலையில் அறியாமையுமிருக்கின்றது, சுகத்தையும் அனுபவிக்கின்றோம்.

 

ஆத்மாவானது விழிப்புநிலை பதார்த்தங்களையும், கனவுநிலை பதார்த்தங்களையும் பார்த்து கொண்டு இருக்கின்றது.  இவைகளுக்கு சாட்சியாக இருந்து கொண்டு எந்தவிதமான அவஸ்தைகளையும் அனுபவிப்பதில்லை, அதற்கென்று எந்த அனுபவமும் கிடையாது.  கனவுலகில் அனுபவிக்கும்போது விழிப்புநிலை பொருட்கள் எதுவும் நமக்கு பயன்படாது, அதேபோன்று கனவுலகில் அனுபவிக்கும் எந்த விஷயமும் விழிப்புநிலையில் பயன்படாது.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது எது வந்து போகின்றதோ அது அநித்யம் என்றும் எது தொடர்ந்து இருக்கின்றதோ அதுதான் நித்யம் ( நிலையானது ) என்பதாகும்.  இந்த மூன்று நிலைகளிலும் வந்து போவது விழிப்புநிலை பிரபஞ்சமும், கனவுநிலை பிரபஞ்சமும்தான், தொடர்ந்து இருந்து கொண்டிருப்பது நான் என்கின்ற ஆத்மா என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

 

நாம் காலம், தேசம், வஸ்து இவைகளைக் கண்டு பயந்து கொண்டிருக்கின்றோம், நானேதான் ஆத்மா என்று புரிந்து கொண்டால் நமக்கு இவைகளால் எந்தவிதமான பயமும் வராது.

 

கனவுநிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள், விழிப்பு நிலையில் தோன்றுகின்ற காலம், தேசம், பொருட்கள் இந்த இரண்டும் எந்த சைதன்யத்தால் பார்க்கப்பட்டு கொண்டிருக்கின்றதோ அது எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும், பூரணமான ( தேச, கால, வஸ்து பரிச்சேத ரஹிதம்) ஆத்மாவாக விவேகிகள் அறிந்து கொண்டு துன்பத்தை அனுபவிப்பதில்லை.

ஸ்லோகம்05
ய இமம் மத்4வத3ம் வேத3 ஆத்மானம் ஜீவமந்திகாத் |
ஈஶானம் பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத் ||

இந்த ஸ்லோகத்தில் ஈஸ்வரனை பற்றிய விசாரம் செய்யப்படுகின்றது.  இரண்டு தத்துவங்களின் சேர்க்கைதான் ஈஸ்வரன் என்று அறிந்துள்ளோம்.  களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாவற்றிலும் களிமண் என்ற ஒன்றே இருப்பது போல ஈஸ்வரன் என்ற விஷயத்தில் ஸத்யமான ( என்றும் இருப்பது ) பிரம்மம் என்ற ஒன்றுதான் மித்யாவாக தோன்றி கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு காரணமாக இருக்கின்றது.  நாம ரூபங்களாக இருக்கும் இந்த பிரபஞ்சமே மித்யா, பொய்யான தோற்றம் என்று கூறப்படுகின்றது.  வெளித்தோற்றத்திற்கு வராத பிரபஞ்சமே மாயா என்றும், அதுவே காரண பிரபஞ்சம் என்றும் அழைக்கபடுகின்றது.  இந்த பிரம்மமானது காரண பிரபஞ்சத்தோடு சேரும்போது அது ஈஸ்வரன் என்று கூறப்படுகின்றது.  அதேபோன்று ஜீவனிடம் என்றும் இருப்பது ஆத்மாதான், அதுவே காரண சரீரத்தோடு சேர்ந்திருப்பதால் ஜீவன் என்று அழைக்கப்படுகின்றது.

பிரம்மம் + காரண பிரபஞ்சம் = ஈஸ்வரன்.
ஆத்மா   + காரண பிரபஞ்சம் = ஜீவன்
பொய்யான காரண பிரபஞ்சமும்,  காரண சரீரமும் நீக்கினால் பிரம்மமும், ஆத்மாவும் ஒன்றாகி விடுகின்றது.

ஸத்      – மூன்று காலத்திலும் இருப்பது
சித்       – அறிவு ஸ்வரூபமாக இருப்பது
ஆனந்தம் – பூரணமாக இருப்பது

இதுதான் பிரம்மத்தின் லக்‌ஷணம், இது அநாதி, அதேப்போன்று மாயாவும் அநாதி. இது இரண்டும் சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரன் என்று அறியப்படுகின்றது.  மூன்று விதமான பார்வையில் ஈஸ்வரனுக்கு மூன்றுவிதமான பெயர்கள் உள்ளது.

  1.      மாயையோடு இருக்கும் பிரம்மமான ஈஸ்வரனுக்கு அந்தர்யாமி என்று பெயர்.மாயைக்கு இருத்தல் என்ற தன்மையை கொடுப்பவர் ஈஸ்வரன்.
  2.    மாயைக்கு காரண பிரபஞ்சம் என்றும் கூறுவர். இதுவே இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கின்றது.  சூட்சும பிரபஞ்சம் முதலில் மாயையிலிருந்து தோன்றியது.  இதிலிருந்து நம்முடைய சூட்சும சரீரமும் தோற்றுவிக்கப்படுகின்றது.  இப்பொழுது சூட்சும பிரபஞ்சத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ஈஸ்வரனுக்கு ஹிரண்யகர்ப்பன் என்று பெயர்.
  3.     சூட்சும பிரபஞ்சத்திலிருந்து ஸ்தூல பிரபஞ்சம் தோன்றியது. சூட்சும பஞ்ச பூதங்கள் ஸ்தூலமாக மாற்றும் முறைக்கு பஞ்சிகரணம் என்று பெயர்.  ஸ்தூல பிரபஞ்சத்தோடு பிரம்மத்தை ஈஸ்வரனாக பார்த்தால் அதற்கு விராட் என்று பெயர்.

 

இதேபோன்று ஜீவனுக்கும் மூன்று சரீரத்தின் அடிப்படையில் மூன்று பெயர்கள் உண்டு. அவைகள்

  1.     ஆத்மா என்றழைக்கப்படும் பிரம்மமே மூன்று சரீரத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றது. காரண சரீரத்தோடு இந்த ஆத்மாவை பார்த்தால் அதற்கு ஜீவன் என்று பெயர். இதில் அறியாமை நிறைந்திருப்பதால் காரண சரீரத்தை அவித்யா என்றும் கூறுவர்.  ஆழ்ந்த உறக்கத்திலும் அறியாமை இருக்கின்றது, இந்த அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.
  2.     காரண சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் தோன்றுகிறது. இந்த சூட்சும சரீரத்தோடு பார்க்கும் போது அதற்கு தைஜஸன் என்று பெயர்.
  3.    ஸ்தூல சரீரத்தோடு ஆத்மாவை பார்த்தால் அதற்கு விஸ்வன் என்று பெயர்.

ஜாக்ரத் அவஸ்தையில் உள்ள ஜீவனுக்கு விஸ்வன் என்று பெயர். கனவு நிலையில் உள்ள ஜீவனுக்கு தைஜஸன் என்று  பெயர்.  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஜீவனுக்கு பிராக்ஞன் என்று பெயர்.  மூன்று நிலைக்கும் பொதுவாக இருப்பவன் ஜீவன்.

  • சமஷ்டி மாயைக்கு அந்தர்யாமி என்று பெயர், வியஷ்டி மாயைக்கு பிராக்ஞன் என்று பெயர்.
  • சமஷ்டி சூட்சும மாயைக்கு ஹிர்ண்யகர்ப்பன், வியஷ்டி சூட்சும மாயைக்கு தைஜஸன்
  • சமஷ்டி ஸ்தூல மாயைக்கு விராட், வியஷ்டி ஸ்தூல மாயைக்கு விஸ்வன்.

 

மந்திர விளக்கம்:
யாரொருவர் இந்த ஜீவனை ( கர்ம பலனை அனுபவிப்பவன் ) மூன்று காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனிடத்திலிருந்து வேறுபாடில்லாமல் அறிகின்றானோ அவர் இந்த அறிவுக்கு பிறகு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றான் ( ந விஜுகுப்ஸதே ).  இந்த ஆத்மாதான் அந்த ஈஸ்வரன்.
.
ந விஜுகுப்ஸதே – பலன் விசாரம்:-
எல்லோரும் தன்னுடைய பாதுகாப்பை நாடித்தான் எல்லா செயல்களையும் செய்கின்றார்கள்.  அதனால் தான் துயரத்தை அனுபவிக்கின்றார்கள். எல்லோரும் பயத்தின் நடுவில்தான் வாழ்கின்றோம் என்று சங்கரர் சொல்கிறார்.  நம்மால் எந்தப்பொருளை காப்பாற்ற முடியும்?  உலகத்திலுள்ள எல்லா பொருட்களும் அழிவை அடையக்கூடியது, எனவே அவைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சியால் எந்த பலனும் கிடைக்காது.  அழியாத பொருட்களை காப்பாற்றத் தேவையில்லை.  இந்த அறிவால் அழியப்போகும் இந்த உடலை காப்பாற்ற வேண்டும் என்ற பயம் நீங்குவதுடன், அதை காப்பாற்ற எடுக்கும் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்காது என்று உணர்ந்தவுடன், அதிலிருந்து வரும் துயரங்களிலிருந்து விடுபடுகின்றோம். நானே ஆத்மா என்று அறிந்தவுடன், நான் அழியாதவன் அதனால் என்னைக்காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயம் நீங்கயவனாக இருந்து கொண்டிருப்பேன்.  ஆத்மா ஒன்றுதான் எனவே எனக்கு பயமும் கிடையாது, துயரமும் கிடையாது.  இந்த ஞானம் வந்தவுடன் எந்தப் பொருட்களிடத்திலும் வெறுப்போ, அருவெறுப்போ வருவதில்லை.  நானே அனைத்துமாக இருப்பதால் யாரையும் வெறுக்க முடியாது, அருவெறுப்பு கொள்ள முடியாது.

ஸ்லோகம்06
ய: பூர்வம் தபஸோ ஜாத்மத்3ப4ய: பூர்வமஜாயத |
கு3ஹாம் ப்ரவிஶ்ய திஷ்தந்தம் யோ பூ4தேபி4ர்வ்யபஶ்யத ஏதத்3வை ||
அந்தர்யாமியின் தவத்தின் பலனாக ஸ்தூலமான நீர் போன்ற பஞ்ச பூதங்களுக்கு முன் ஹிரண்யகர்ப்பன் தோன்றினார்.  ஒவ்வொரு ஜீவராசியின் புத்தியில் நுழைந்து சூட்சும சரீர அங்கங்களில் இருக்கின்றார் என்று யார் அறிகின்றார்களோ அவர்களுக்கு.  இந்த ஹிரண்யகர்ப்பன்தான் அந்த பிரம்மம் என்ற அறிவும் கிடைக்கின்றது

ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் இவைகளின் ஒன்றுசேர்ந்த தொகுப்பையே சூட்சும சரீரம் என்று அழைக்கப்படுகின்றன. இதனை பிராண சரீரம் என்றும் கூறுவர்

ஸ்லோகம்07
யா ப்ரணேன ஸம்ப4வத்யதி3திர்தே3வதாமயீ |
கு3ஹாம் ப்ரவிஶ்ய தி2ஷ்டந்தீம் யா பூ4தேபி4ர்வ்யஜாயத ஏதத்3வை ||
யார் பிராண ரூபமாக தோன்றியுள்ளாரோ, அவரே ஞானேந்திரியங்களின் வழியாக உலகத்திலுள்ள விஷயங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்.  இவ்வாறு எல்லா சூட்சும சரீரங்களில் இருந்து கொண்டு இந்த உலகத்தை அனுபவிக்கும் ஹிரண்யகர்ப்பர் எல்லா தேவதைகளுமாக இருப்பவர்.  ஒவ்வொரு இந்திரியத்தையும் தேவதையாக எடுத்துக் கொண்டால் எல்லா தேவதைகளுமாக இவர் இருக்கின்றார் என்ற அறிவும் கிடைக்கின்றது.  இவர் ஒவ்வொரு ஜீவராசிகளின் இதயத்தில், புத்தியில், மனதில் வீற்றிருக்கின்றார். இந்த ஹிரண்யகர்ப்பனே அந்த பிரம்மம்.  ஐந்து சூட்சும பூதங்களிலிருந்து ஸ்தூல பூதங்கள் தோன்றுகின்றது.

ஸ்லோகம்08
அரண்யோர்நிஹிதோ ஜாதவேதா3 க3ர்ப4 இவ ஸுப்4ருதோ க3ர்பி4ணீபி4: |
தே3வே தி3வ ஈட3யோ ஜாக்3ருவத்3பி4ர்ஹவிஷ்மத்3பி4ர்மனுஷ்யேபி4ரக்3னி: ஏதத்3வை ||
அக்னியை விராட் என்று அழைக்கப்படுகின்றது, இதுதான் நம்மால் பார்க்கக்கூடிய பஞ்ச பூதங்களில் முதலில் இருப்பது. அரணி என்ற இரண்டு மரக்கட்டைகளுக்குள் இருக்கின்ற அக்னியானது கருவுற்ற பெண்களால் காக்கப்படுகின்ற கருவைப்போல உபாஸனை செய்கின்ற மனிதர்களால் யாகம் செய்கின்ற மனிதர்களால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வழிபடப்படுகின்றது. அரணி கட்டையும், வயிறும் விராட்டின் மறுபெயர்களாகும். இந்த விராட் பிரம்ம ஸ்வரூபமாகவே இருக்கின்றார்.  இதன் மூலம் இந்த உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளின் ஸ்தூல உடல்களிலும் நான் இருக்கின்றேன் என்ற ஸர்வாத்மா புத்தி ஏற்பட வேண்டும்.

ஸ்லோகம்09
யதஶ்சேதே3தி ஸூயோÅஸ்தம் யத்ர ச க3ச்ச2தி |
தம் தே3வா: ஸர்வேர்பிதாஸ்தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை தத் ||

இதில் ஹிரண்யகர்ப்ப தத்துவத்தை விளக்கி ஐக்கியம் கூறப்படுகின்றது. எந்த தத்துவத்திலிருந்து ( ஹிரண்யகர்ப்பன்) சூரியன் உதிக்கின்றானா, அஸ்தமனம் ஆகின்றானோ  எல்லா தேவதைகளும் அந்த தத்துவத்தையே சார்ந்திருக்கின்றார்கள்.  எந்த ஒன்றும் அந்த தத்துவத்தை மீறுவதில்லை.  அந்த ஹிரண்யகர்ப்ப தத்துவமே பிரம்மம் என்று தெரிந்து கொள்

ஸ்லோகம்10
யதேவேஹ தத3முத்ர யத3முத்ர தத3ன்விஹ |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யுமப்னோதி ய இஹ நானேவபஶ்யதி ||
இதில் ஜீவ-ஈஸ்வரன் ஐக்கியம் சொல்லப்படுகின்றது. எந்த ஒன்று இங்கு இருக்கின்றதோ அதுவே அங்கும் இருக்கின்றது. எது அங்கேயிருக்கின்றதோ அதுவே மிக அருகில் இங்கே இருக்கின்றது.

எந்த தத்துவம் ஜீவ சம்சாரத்தை அடைந்தது போல் இருக்கின்றதோ அதுவே சம்சாரத்தை கடந்ததாக இருக்கின்றது. சம்சாரியாக தெரிகின்ற ஜீவனும், சம்சாரமற்ற ஈஸ்வரனும் ஒன்று இங்கு சொல்லப்படுகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  எப்படி இருவரும் ஒன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழும் போது கடல்-அலை உதாரணத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம்.  அலைகள் கடலிலே தோன்றி பின்பு அதிலேயே அழிந்து விடுகின்றது. கடலில் இருப்பதும் நீர்தான், அலைகளில் இருப்பதும் நீர்தான். நீர் என்ற ஒன்று அலைகள் என்று கூறுவது வியஷ்டியை குறிக்கின்றது, கடலை குறிப்பிடும்போது சமஷ்டியை குறிக்கின்றது. ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் பிரம்மத்தின் அடிப்படையில் வேறுபாடில்லை, ஆனால் நாம-ரூபத்தில் வேறுபட்டிருக்கின்றது.  அலைகள் கடலில் தோன்றி அதிலேயே மறைந்து விடுவது போல ஜீவன் ஈஸ்வரனிட்த்திலிருந்து தோன்றி அவரிடமே லயமடைந்து விடுகின்றான்.  சரீரத்தில் அபிமானம் இருந்து கொண்டிருக்கும்வரை ஜீவ-ஈஸ்வரனுக்குமிடையே த்வைத புத்தி இருந்து கொண்டேயிருக்கும். அதாவது ஈஸ்வரன் படைப்பவன், நான் படைக்கப்பட்டவன் என்ற இருமை புத்தி இருந்து கொண்டேயிருக்கும்.

மந்திர விளக்கம்:
யாரொருவன் ஜீவ-ஈஸ்வர விஷயத்தில் வேறுபாடு இருப்பது போல் பார்க்கின்றானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றான்.  அதாவது எவனொருவன் ஈஸ்வரனை தனக்கு வேறாக பார்க்கின்றானோ அவன் சம்சார சுழலிலேயே இருக்கின்றான், பிறவி பெருங்கடலை கடக்காமல் இருக்கின்றான்.

ஸ்லோகம்11
மனஸைவேத3மாப்தவ்யம் நேஹ நானாஸ்தி கிஞ்சன |
ம்ருத்யோ: ஸ ம்ருத்யும் க3ச்ச2தி ய இஹ நானேவ பஶ்யதி ||
இந்த உலகம் சத்யம் என்ற எண்ணத்தை நீக்கி பிரம்மம் ஒன்றுதான் சத்யம் என்று அறிந்திட வேண்டும்.  இதில் ஈஸ்வரனுக்கு இந்த உலகத்திற்குமிடையே உள்ள வேறுபாட்டை நீக்குகின்றது.

நேஹ நானாஸ்தி கிஞ்சன:-. (விசாரம்)
இந்த உலகில் மிக சிறிதளவு கூட வேறுபாடு கிடையாது.  இந்த உலகம் நாம் அனுபவிக்கவில்லையென்றால் அது இல்லை என்று சொல்ல தேவையில்லை.  உலகமே இல்லையென்றால் அது இல்லை என்று சொல்லவும் தேவையில்லை.  இல்லாத ஒன்றில் இருக்கின்றது என்ற அறிவு இருக்கும்போதுதான் இல்லை என்று நீக்க முடியும். உதாரணமாக பிளாஸ்டிக் மலரை நிஜம் என்று நினைக்கும் போது அது நிஜமில்லை என்று  சொல்வது போல இருக்கிறது.  தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகம் உண்மையிலே வெறும் தோற்றமே உண்மையான தோற்றம் கிடையாது. பிரம்மம் மட்டும்தான் இருக்கின்றது என்ற அறிவை அடைந்திட வேண்டும். நான் மட்டும்தான் இருக்கின்றேன் என்ற உணர்வை அடைந்திட வேண்டும். தூய்மையான மனதினால்தான் இந்த அறிவை அடைந்திட முடியும்.

சில உபநிஷத்தில் மனதினால் ஞானத்தை அடைந்திட முடியாது என்று கூறப்பட்டிருக்கின்றது.  ஆனால் இங்கோ தூய்மையான மனதினால்தான் அடைய முடியும் என்று கூறப்படுகின்றது.  இந்த முரண்பாட்டை விசாரம் செய்து நீக்க வேண்டும். ஆத்ம ஞானத்திற்கு மனம் தேவையா இல்லையா என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்போம்.

சாதாரண அறிவு எப்படி ஏற்படுகின்றது என்றால் மனமானது கண் பார்க்கும் பொருளின் வடிவமாக மாறுகின்றது இதற்கு விருத்தி (எண்ணம்) என்று பெயர். எண்ணம் பார்க்கும் பொருளை  முழுவதுமாக வியாபித்தல் என்பதற்கு விருத்தி வியாப்தி என்று பெயர்.  நம்முடைய மனதில் உள்ள எண்ணங்களும் வெறும் ஜடம். சைதன்யத்தின் பிரதிபிம்பத்தால் (சிதாபாசம்) விருத்தியை வியாபிக்கும்போது நமக்கு அந்த விருத்தி வியாபித்த பொருளை பற்றிய அறிவு ஏற்படுகின்றது. இதற்கு பல-வியாப்தி என்று பெயர்.  விருத்தி வியாப்தியும், பல வியாப்தியும் சேர்ந்து நடைபெறுவதால்தான் நமக்கு அறிவு வருகின்றது.

ஆத்மாவை அறியும் விஷயத்தில் பல-வியாப்தி தேவையில்லை வெறும் வியாப்தி மட்டும் இருந்தால் போதும். உதாரணமாக இருட்டான அறையில் உள்ள புத்தகத்தை எடுப்பதற்கு கதவை திறக்க வேண்டும், பிறகு வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும்.  அப்போதுதான் புத்தகத்தை எடுக்க முடியும். ஆனால் எரிந்து கொண்டு இருக்கும் மெழுகு வர்த்தியை எடுப்பதற்கு கதவை திறந்தால் மட்டும் போதும், வெளிச்சம் தேவையில்லை, ஏனென்றால் அந்த மெழுகுவர்த்தியே வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கின்றது.  அதுபோல ஆத்ம விஷயத்தில் சிதாபாசத்தினுடைய பல வியாப்தி தேவையில்லை.

ஆகவே மனம் தேவையில்லை என்று சொல்லும் போது பல வியாப்தி தேவையில்லை என்றும், மனம் தேவை என்று சொல்லும்போது விருத்தி வியாப்தி தேவையென்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

மந்திர விளக்கம்:-
யார் இங்கு ஈஸ்வரனுக்கும், உலகத்திற்குகிடையே வேறுபாட்டை பார்க்கின்றார்களோ அவர்கள் மரணத்திலிருந்து மரணத்தை அடைகின்றார்கள். இது நம்மை துயரத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கும்.  இங்கு மரணம் என்பதற்கு காம, க்ரோதம், போன்றவற்றிலிருந்து அடைகின்ற துன்பத்தை குறிக்கின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஸ்லோகம்12
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ மத்4ய ஆத்மனி தி2ஷ்டதி |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ந ததோ விஜுகு3ப்ஸதே ஏதத்3வை தத்3 ||
இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தைத்தான் கட்டைவிரல் அளவுள்ள ஆத்மா என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.  இதயமே மனதின் இருப்பிடம், இதயத்திற்குள் இருக்கும் ஆகாசத்தில்தான் அந்தக்கரணம் இருக்கின்றது.  இந்த ஆகாசம் நமது கட்டைவிரலில் அளவு உள்ளது.  இப்படிபட்ட மனதை உபாதியாகவும், அதற்கு ஆதாரமாகவும் இருப்பதுதான்.ஆத்மா.

இந்த உடலின் மையப்பகுதியான இதயத்திற்குள் ஆத்மா இருக்கின்றது.  இந்த ஆத்மாவே எல்லா காலத்திலும் இருக்கின்ற ஈஸ்வரனாகவும் இருக்கின்றது. இந்த ஐக்கிய ஞானத்தை புரிந்து கொண்டபிறகு எதற்கும் கவலைப்பட தேவையில்லை, பாதுகாப்பை தேடிக் கொள்ள தேவையில்லை, எந்த ஜீவராசிகளையும் வெறுக்க மாட்டோம்.
ஸ்லோகம்13
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவாதூ4மக: |
ஈஶானோ பூ4தப4வ்யஸ்ய ஸ இவாத்3ய ஸ உ ஶ்வ: ஏதத்3வை தத்3 ||
கட்டைவிரல் அளவுள்ள ஆத்மாவானது ஒளியைப் போல இருக்கின்றது. இருளில் மறைந்துள்ள பொருட்களை அறிய உதவுவது போல உபநிஷத் அறியாமையை நீக்கி ஞானத்தை கொடுக்கின்றது. இந்த ஆத்மாவினால்தான் அனைத்துமே அறியப்படுகின்றது. நான் என்னை எதனுடைய உதவியில்லாமலே அறிகின்றேன். புகை நெருப்பை மறைக்கலாம், ஆனால் அறியாமை இந்த ஆத்மாவை மறைக்க முடியாது.  ஆத்மா அறியாமையையும், அறிவையும் பிரகாசிக்கின்றது  எல்லா காலத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற ஈஸ்வரனே இப்பொழுதும் இருக்கின்றார், நாளையும் இருப்பார். என்றும் இருப்பதும், எல்லாகாலத்திலும் இருப்பதுமான இந்த ஆத்மாதான் அந்த பிரம்மமேயாகும்.

ஸ்லோகம்13
யதோ2த3கம் து3ர்கே3 வ்ருஷ்டம் பர்வதேஷு விதா4வதி |
ஏவம் த4ர்மான்ப்ருத3க் பஶ்யம்ஸ்தானேவானுவிதா4வதி ||
இருமைதான் நம்மை சம்சாரத்தில் வைத்திருக்கின்றது.  மழை மலை உச்சியில் பொழியும் போது நீரானது மலைகளிலிருந்து கீழே ஓடி வந்து மறைந்து விடுகின்றது. அதுபோல ஜீவர்களை வேறுபாட்டுடன் யார் பார்க்கின்றார்களோ அவர்கள் அந்த தவறான அறிவினால் சம்சாரத்தில் வீழ்ந்து துன்பமடைகின்றார்கள்.  உடல், மனம் என்று யார் ஜீவர்களை பார்க்கின்றார்களோ அவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றார்கள்.  ஈஸ்வர புத்தியோடு இந்த உலகத்தை பார்த்தால் அது நமக்கு இன்பத்தை கொடுக்கும்.

ஸ்லோகம்14
யதோ2த3கம் ஶுத்3தே4 ஶுத3த4மாஸிக்தம் தாத்3ருகே3வ ப4வதி |
ஏவம் முனேர்விஜானத ஆத்மா ப4வதி கௌ3தம ||

எவ்வாறு தூய்மையான நீரானது தூய்மையான நீரில் கலந்தால் வேற்றுமையின்றி இருக்கின்றதோ அதுபோல  இந்த தத்துவத்தை அறிகின்ற முனிவனுக்கு ( சிரவணம், மனனம் இவைகளை தாண்டி நிதித்யாஸனத்தில் இருப்பவன்) ஆத்மாவாக எல்லாமும் இருக்கின்றது. தூய்மையான நீரோடு தூய்மையான நீரை சேர்க்கும்போது இரண்டும் ஒன்று சேர்ந்து விடுவது போல ஆத்மாவை அறிந்தவன் ஆத்மாகவே இருப்பதை உணர்கின்றான், அந்த பிரம்மமாகவே மாறி விடுகின்றான்.

 

இரண்டாவது அத்தியாயம் – முதலாவது வல்லி முடிவுற்றது.

இரண்டாவது அத்தியாயம் 2வது வல்லி

ஸ்லோகம்01

பரமேகாத3ஶத்3வாரமஜஸ்யாவக்ரசேதஸ: |
அனுஷ்டாயந ஶோசதி விமுக்தஶ்ச விமுச்யத தத்த்3வை தத் ||
இந்த உடலானது பதினொன்று வாயில்களை உடையதாக வருணிக்கப்படுகின்றது.  நாபியும், தலையுச்சியில் இருக்கின்ற இரண்டு துவாரங்கள் சேர்த்து ஏற்கனவே உள்ள ஒன்பது துவாரங்களான இரண்டு கண்கள், இரண்டு மூக்கு துவாரங்கள், இரண்டு காதுகள், ஒரு வாய், ஒரு ஆசன துவாரம், ஒரு மூத்திர துவாரம் ஆகியவைகள்.  சில துவாரங்கள் வழியே வெளி விஷயங்கள் உள்ளே தள்ளப்படுகின்றது, சில துவாரங்கள் வழியே விஷயங்கள் வெளியே தள்ளப்படுகின்றது.  கோளகம் என்பது இந்திரியங்களின் இருப்பிடமாக கூறப்படுகின்றது. உறங்கும் போது அவைகள் இருதயத்திற்கு சென்று விடுகின்றது.  உடலுக்கு அரசனாக இருப்பது ஜீவாத்மா.

வேறுபாடுகளற்ற சைதன்ய ஸ்வரூபமாக இருக்கின்ற பிறப்பு-இறப்புகளில்லாத இந்த உடல் ஆத்மாவினுடையது என்று நிதித்யாஸனம் செய்ய வேண்டும். அதாவது இந்த ஞானத்தை நன்கு தியானம் செய்வதனால் அடையப்பெறும் ஞானநிஷ்டையினால் துயரங்கள் வருவதில்லை.  இந்த நிலையே மோட்சம், இதை அடைவதினால் சம்சாரத்திலிருந்து விடுதலையடைந்து ஜீவன் முக்தனாகின்றான்.  ( சம்சாரம் என்பது ராக, துவேஷ, மத, மாச்சர்ய போன்ற குணங்கள் சேர்ந்த நிலையேயாகும் ).  மீண்டும் அவன் பிறப்பதில்லை, இறப்பதுமில்லை, பிறப்பு-இறப்புகளில்லாத நிலையை அடைகின்றான்.
ஸ்லோகம்02
ஹம்ஸ: ஶுசிஷத்3வஸுரந்தரிக்ஷஸத்3தோ4 விதி3ஷத3திதி2ர்து3ரோணஸத் |
ந்ருஷத்3வரஸத்3ருதஸத்3வ்யோமஸத3ப்3ஜா கோ3ஜா ரிதஜ ஆத்3ரிஜா ரிதம் ப்3ருஹத் ||
எல்லாவிடத்திலும், எல்லா சரீரங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றது ஆத்மா.  இதுவே சொர்க்கத்தில் சூரியனாகவும், சொர்க்கத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள ஆகாசத்தில் வாயுவாகவும், பூமியில் அக்னியாகவும் இருக்கின்றது. நம்முடைய வீட்டில் விருந்தினராக இருப்பது போல எல்லா மனிதர்களிடத்திலும், தேவர்களிடத்திலும் இருக்கின்றது..  யாகங்களிலும், ஸத்யத்திற்குள்ளும் இருக்கின்றது.  ஆகாசத்திலும், நீர்வாழ் பிராணிகளிடத்தில், நிலத்தில் உள்ள தாவரங்கள் அனைத்திலும், விதவிதமான யாகங்களின் அங்கங்களிடத்திலும், மலைகளிலிருந்து உருவாகும் நதிகளிலும் இருக்கின்றது.  மூன்று காலத்திலும் இருப்பது, மிகப்பெரியது, பூரணமானது இந்த ஆத்மா.
ஸ்லோகம்03
ஊர்த்4வம் ப்ராணமுன்னயத்யபானம் ப்ரத்யக3ஸ்யதி |
மத்3யே வாமனமாஸீனம் விஶ்வேதே3வா உபாஸதே ||
ஆத்மா இருப்பதினால் இந்த உடல் செயல்படுகின்றது.  அது இல்லாவிட்டால் உடல் ஜடமாகத்தான் இருக்கும்.
அன்வய-வ்யதிரக நியாயம்: எது இருந்தால் மற்றொன்றும் இருக்குமோ, எது இல்லாமலிருந்தால் மற்றொன்றும் இல்லாமல் இருக்குமோ அதுவே அதற்குக் காரணம்.
உதாரணமாக களிமண் இருந்தால் பானை இருக்கின்றது. அது இல்லையென்றால் பானையும் இருக்காது எனவே களிமண் பானைக்கு காரணமாக இருக்கின்றது/  அதுபோல ஆத்மா இருப்பதால்தான் பிராணன், மனம் ஆகியவை செயல்படுகின்றது, அது இல்லையென்றால் இவைகள் செயல்படுவதில்லை, எனவே ஆத்மாதான் இந்த உடலுக்கு காரணம் என்ற கருத்து இந்த மந்திரத்தில் விளக்கப்படுகின்றது.

பிராணனை மேல்நோக்கி இழுக்கின்றது, மேல் நோக்கி செல்ல காரணாமாக இருக்கின்றது, அபானனை கீழ்நோக்கி தள்ளுகின்றது. இதயத்தை இருப்பிடமாக கொண்டிருக்கின்ற , இதயத்தில் வெளிப்படுகின்ற, வணங்கதக்கதாகவும் இருக்கின்ற ஆத்மாவை, எல்லா இந்திரியங்களும் வணங்குகின்றன. எல்லா இந்திரியங்களும் அந்தந்த விஷயங்களை கிரகித்து ஆத்மாவிடம் சமர்ப்பிக்கின்றது என்பதையே வணங்குதல் என்ற சொல்லின் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்லோகம்04
அஸ்ய விஸ்ரம்ஸமானஸ்ய ஶரீரஸ்த2ஸ்ய தேஹின: |
தே3ஹாத்3விமுச்யமானஸ்ய கிமத்ர பரிஶிஷ்யத ஏதத்3வை தத் ||
இந்த உடலில் உள்ள உயிரானது, உடலை விட்டுப் பிரிந்து விட்டால், வெளியேறிய பிறகு அங்கு என்ன எஞ்சியிருக்கின்றது, ஒன்றுமில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. இதுவே அந்த பிரம்ம தத்துவம்.
ஸ்லோகம்05
ந ப்ராணேன நாபானேன மர்த்யே ஜீவதி கஶ்சன |
இதரேண து ஜீவந்தி யஸ்மின்னேதாவுபாஶ்ரிதௌ ||
பிராணன் இருக்கும் வரைதான் இந்த உடல் செயல்படுகின்றது. எனவே அனவய-வ்யதிரேக நியாயப்படி பிராணன்தானே இந்த உடலுக்கு காரணம் என்ற சந்தேகத்திற்கு பதிலாக அமைகின்றது இந்த மந்திரம்.

மனிதர்கள் ஒருகாலும் பிராணனாலும் வாழ்வதில்லை, அபானனாலும் வாழ்வதில்லை.  இவைகளுக்கும் வேறான ஒன்றினால்தான் வாழ்கின்றார்கள்.  ஆத்மாவை இந்த பிராணன்கள் சார்ந்திருக்கின்றது
விசாரம்:-
ஆத்மாவின் ஸத் ஸ்வரூபம் எல்லாவிடத்திலும் இருக்கின்றது.  அது இருக்குமிடம் ஜடமாகவும் இருக்கலாம், அறிவுள்ளதாகவும் இருக்கலாம்.  அதேபோல சித் ஸ்வரூபம் உயிரினங்களில் அறிவுபூர்வமாக இயங்குகிறது.  மனதில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற ஆத்மாதான் அவைகள் இயங்குவதற்கு உதவுகின்றது.  உடலிலிருந்து ஆத்மா வெளியேறுவது என்று குறிப்பிடுவது அதனுடைய பிரதிபிம்பமான சிதாபாஸத்தின் அழிவைத்தான்.  உயிரற்ற உடலிலும் ஆத்மா ஸத் ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஸ்லோகம்06
ஹந்த த இத3ம் ப்ரவக்ஷ்யாமி கு3ஹ்யம் ப்3ரஹ்ம ஸனாதனம் |
யதா2 ச மரனம் ப்ராப்ய ஆத்மா ப4வதி கௌ3தம ||
உனக்கு மிகவும் ரகசியமானதும், எப்பொழுதும் இருக்கின்ற இதைப்பற்றி மேலும் சொல்கிறேன்.  அறியாமையில் இருக்கின்ற ஒரு ஜீவன் மரணத்தை அடைந்தால் அவனிடத்தில் உள்ள ஆத்மா என்னவாகும் என்பதையும் உனக்கு நான் சொல்கிறேன்.

ஸ்லோகம்07
யோனிமன்யே ப்ரபத்3யந்தே ஶரீரத்வாய தே3ஹின: |
ஸ்தா2ணுமன்யேÅனுஸம்யந்தி யதா2கர்ம யதா2ஶ்ரதம் ||
சில ஜீவாத்மாக்கள் வேறொரு மனித உடலை எடுப்பதற்கு கர்ப்பத்தை அடைகிறது.  வேறு சில உயிர்கள் தாவரங்களாகவும், விலங்குகளாகவும் பிறப்பெடுக்கின்றன.  அவரவர்களுடைய வினைப்பயனுக்கேற்பவும், அவர்கள் செய்த உபாஸனைகளின் அடிப்படையிலும் அடுத்த ஜென்மத்தில் அதற்கேற்றாவாறு சரீரத்தை எடுக்கின்றான்.  கர்ப்பத்திலிருந்து பிறப்பவைகள், முட்டையிலிருந்து பிறப்பவைகள், வியர்வையிலிருந்து பிறப்பவைகள், பூமியை பிளந்து வரும் உயிர்கள் இவைகளில் ஏதாவது ஒரு வகையில் மறுபிறப்பையடைகிறான்.

ஸ்லோகம்08
ய ஏஷ ஸுப்தேஶு ஜாக3ர்தி காமம் காமம் புருஷோ நிர்மிமாண: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுர்யதே
தஸ்மின்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
ஆத்மா எந்தவிதமான அவஸ்தைகளுக்குள்ளும் வருவதில்லை.  மூன்று அவஸ்தைகளும் மனதை சார்ந்தது.  இது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கின்றது.  இந்திரியங்கள் உறங்கும்போதும் கூட ஆத்மாவானது விதவிதமான விருப்பமான பொருட்களை உருவாக்கியபடி விழித்துக் கொண்டிருக்கின்றது.  அதுவேதான் தூய்மையான பிரம்மம்.  ஆனால் இந்த அவஸ்தைகளோடு சம்மந்தப்படாமலிருப்பதையே தூய்மையானது என்று குறிப்பிடப்படுகின்றது.  அதுவே மரணமற்றதாகவும், எல்லாகாலத்திலும் இருக்கின்றதாகவும் உள்ளது.  எல்லா உலகங்களும் அதையே சார்ந்திருக்கின்றது. இதற்கு அப்பாற்பட்டு  வேறொன்றும் கிடையாது.

ஸ்லோகம்09
அக்3னிர்யதௌ2கோ பு4வனம் ப்ரவிஷ்டோ ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபுதாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எப்படி ஆத்மா பலவாக தெரிகின்றது என்ற கேள்வி எழும்போது விதவிதமான மண்பாண்டங்களுக்குள் தெரிகின்ற ஆகாசமும் அவைகளுக்கு வெளியேயுள்ள ஆகாசமும்  ஒன்றுதான் என்ற உதாரணத்துடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும். மண்பாண்டங்களின் கொள்ளளவு அவைகளுக்குள் உள்ள ஆகாசத்தின் அளவை பொறுத்து அமைகின்றது.  இப்போது ஆகாசமானது வெவ்வேறு அளவுடைய ஆகாசம் இருப்பது போல தோன்றுகிறது/  இந்த வேறுபாடு மண்பாண்டத்தினுடைய வேறுபாட்டால் தோன்றுகின்றது.  இங்கு இந்த மண்பாண்டத்தை உபாதி என்று கூறப்படுகின்றது.  இது ஆகாசத்தை பலவாக இருப்பது போல் தோற்றமளிக்க செய்கின்றது.  அதேபோல பலவாக இருக்கும் சரீரத்தின் இருக்கும் ஆத்மா பலவாக இருப்பது போல் காட்சியளிக்கின்றது.

இந்த மந்திரத்தில் இதை விளக்க அக்னியை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறார் எமதர்ம ராசா.  அக்னியானது எந்த பொருளை வியாபிக்கின்றதோ அதன் வடிவமாகவே காட்சியளிப்பது போல் ஆத்மாவும் எந்த சரீரத்தை வியாபிக்கின்றதோ அதனிடத்தில் இருப்பதாக நினைக்க தோன்றுகின்றது
உபாதி:-      எந்தவொன்று தன்னுடைய தன்மையை வேறொன்றிற்கு பொய்யாக கொடுக்கின்றதோ அதற்கு உபாதி என்று பெயர்.

உபஹிதம்:-   எந்தவொன்று பொய்யாக வேறொன்றின் தன்மையை பிரதிபலித்து அல்லது ஏற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றதோ அதற்கு இந்த பெயர்.

இந்த மூன்று சரீரங்களும் உபாதி, ஆத்மா உபஹிதம்.  சரீரம் த்வைதமாக இருக்கின்றது, சரீரத்தில் உள்ள குணங்கள் பொய்யாக ஆத்மாவுக்கு சென்று விட்டதால்,  ஆத்மா பலவாக காட்சியளிக்கின்றது.  ஆனால் அது ஒன்றாகத்தான் இருக்கின்றது.  எவ்வாறு ஒன்றாக இருக்கும் அக்னியானது உலகத்திலுள்ள பொருட்களை வியாபிக்கும் போது அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அவ்வாறு ஒன்றாக இருக்கின்ற ஆத்மா, எல்லா ஜீவராசிகளுடைய மனதிலும், சரீரங்களிலும் வெளிப்படுகின்ற ஆத்மா அந்தந்த சரீரத்தில் நுழைந்து அநதந்த சரீரத்தினுடைய ரூபத்தை அடைகின்றதோ அதுவேதான் சரீரத்திற்கு  வெளியிலும் இருக்கின்றது.

ஸ்லோகம்10
வாயுர்யதை2கோ பு4வாம் ப்ரவிஷ்டோ ரூபம் ப்ரதிரூபோ ப3பு4வ |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ரூபம் ரூபம் ப்ரதிரூபோ ப3ஹிஶ்ச ||
எவ்வாறு வாயுவானது உலகத்திலுள்ள பொருட்களில் நுழைந்து அந்தந்த பொருட்களின் வடிவத்தை அடைகின்றதோ அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா எல்லா ஜீவராசிகளின் மனதில் நுழைந்து அதன் வடிவத்தை அடைகின்றது.

ஸ்லோகம்11
ஸூர்யோ யதா2 ஸர்வலோகஸ்ய சக்ஷுர்ன லிப்யதே சாக்ஷுஷைர்பா3ஹ்யதோ3ஷை: |
ஏகஸ்ததா2 ஸர்வபூ4தாந்தராத்மா ந லிப்யதே லோகது3:கே2ன பா3ஹ்ய: ||
சூரியன் அனைத்து உலகிற்கும் கண்களாக  இருந்து கொண்டும், நம்முடைய கண்களின் அதிஷ்டான தேவதையாக இருந்து கொண்டும் அருள் கொடுக்கின்றான்.  நம்முடைய கண்களில் இருக்கும் குறைகளால் சூரியன் பாதிக்கபடுவதில்லை. வெளியே உள்ள பொருட்களின் குறைகள் அதை பாதிப்பதில்லை.  அதுபோல ஒன்றாக இருக்கும் ஆத்மா, எல்லா ஜீவராசிகளின் உடலில் நுழைந்திருந்தாலும், மனதிற்கு, உடலுக்கு வரும் துயரங்களினால் பாதிப்பதில்லை.  இவைகளையெல்லாம் கடந்திருக்கின்றது ஆத்மா.  இதிலிருந்து ஆத்மா வேறு, மனம் என்பது வேறு என்று புரிந்து கொள்ள முடிகின்றது.
ஸ்லோகம்12
ஏகோ வர்ஶீ ஸர்வபூ4தாந்தராத்மா ஏகம் ரூபம் ப3ஹுதா4 ய: கரோதி |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஸுக2ம் ஶாஸ்வதம் நேதரேஷாம் ||
ஒன்றாக இருப்பதும், அனைத்தையும் தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதுமான ஆத்மா எதையும் சார்ந்தில்லாதிருப்பதால் துயரங்களை அனுபவிப்பதில்லை. பரதந்திரம் என்பது ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்கும் நிலைமை, இந்த நிலையில் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.  சுதந்திரம் என்பது எதையும் சார்ந்தில்லாதிருக்கும் நிலைமை இந்த நிலையில் எதனிடமிருந்தும் துன்பத்தை அனுபவிக்க நேரிடாது.  ஆத்மா சுதந்திரமாக இருப்பதால் துயரங்கள் எதுவும் அது அனுபவிக்காது.  எல்லா அனுபவத்திற்கும் காரணம் இருமைதான்.  ஆத்மா ஒன்றாக இருப்பதால் எந்த அனுபவமும் அதற்கு கிடையாது அதனால் துயரமும், சுகமும் வருவதில்லை.

உத்க்ருஷ்டத்வம் என்பது என்னைக் காட்டிலும் மற்றவர்களிடத்தில் ஏதோ ஒன்று அதிகமாக இருக்கிறது என்று எண்ணி துயரப்படுவதை குறிக்கின்றது.  ஆத்மா எல்லாவிடத்திலும் சமமாக இருப்பதால் இந்தவிதத்தில் துயரங்கள் வருவதில்லை  இது ஒன்றாக இருந்து கொண்டு பலவிதமாக இருப்பதுபோல் தன்னை தோற்றுவித்து கொண்டிருக்கின்றது.

எந்தவொரு விவேகி ( சாதன சதுஷ்டய சம்பத்தியை அடைந்தவன் ) பிரம்மத்தை தன்னிடத்தில் இருப்பதாக ( குரு-சாஸ்திரத்தின் துணைக்கொண்டு ) பார்க்கின்றானோ அவனுக்கு நிலையான சுகம் கிடைக்கின்றது, அவனைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலையான சுகம் கிடைக்காது.

அறியாமையில் அடையும் சுகம்-துக்கம் ஏதோ ஒன்றின் காரணத்தால்தான் வருகின்றது.  அந்த ஒன்று மாற்றத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது.  எனவே இந்த சுக-துக்கம் மாறி மாறி வருகின்றது.  ஆனால் மாறாத ஆத்ம தத்துவத்தை உணர்வதால் அவன் எப்போதும் சுகமாக,  ஆனந்தமாக இருக்கின்றான்.

ஸ்லோகம்13
நித்யோÅநித்யானாம் சேதனஶ்சேதனானாமேகோ ப3ஹுனாம் யோ வித3தா4தி காமான் |
தமாத்மஸ்த2ம் யேÅனுபஶ்யந்தி தீ4ராஸ்தேஷாம் ஶாந்தி: ஶாஶ்வதீ நேதரேஷாம் ||
நிலையற்றவைகளில் நிலையானதாகவும், அறிவுக்கு அறிவாகவும், ஒன்றாகவும் இருக்கின்ற ஈஸ்வரன் (பிரம்மம்) எல்லோருக்கும் அவரவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார், கர்ம பலன்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  இப்படிபட்ட பிரம்மத்தை தானேயென்று எந்த விவேகிகள் உணர்கின்றார்களோ அவர்களுக்கு நிலையான மன அமைதி கிடைக்கின்றது.  மற்றவர்களால் இதை அடைய முடியாது.

ஸ்லோகம்14
ததே3ததி3தி மன்யந்தேÅநிர்தேஶ்யம் பரமம் ஸுக2ம் |
கத2ம் நு தத்3விஜானீயாம் கிமு பா4தி விபா4தி வா ||
அந்த பிரம்மம்தான் இந்த ஆத்மா என்று சொல்கிறார்கள்.  இது மேலான சுகமாக இருப்பது, நிலையான சுகமாக இருப்பது, இப்படிபட்ட தன்மையுடையது என்று வாக்கால் குறிப்பிட முடியாததாகவும், அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றது இந்த சுகம்.  நான் எவ்வாறு இதை தெரிந்து கொள்வது?  அது தானாகவே ஒளிர்கின்றதா?  தெளிவாக அறியக்கூடியதா அல்லது வேறொன்றால் ஒளிர வைக்கப்படுகின்றதாக இருக்கின்றதா?  சந்தேகமில்லாமல் அறியக்கூடியதாக இருக்கின்றதா?

ஸ்லோகம்15
ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம் நேமா வித்3யுதோ பா4ந்தி  கதோயமக்னி: |
தமேவ பா4ந்தமனுபா4தி ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி ||
இதை சூரியனும் விளக்காது, ஒளிர்விக்காது, சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் ஒளிர்விக்க முடியாது. இதை மின்னலாலும் ஒளிர்விக்க முடியாது. இந்த அக்னியானது எவ்வாறு ஒளிர முடியும்.  ஒரு பொருள் இருக்கின்றது என்றால் அது அனுபவத்திற்கு வந்து இருக்க வேண்டும்.  அந்த ஆனந்தமயமான ஆத்மா சுயபிரகாசமாக மற்றவர்களால் அறியப்படுகின்றது. அதனுடைய பிரகாசத்தினால்தான் உலகிலுள்ள அனைத்தும் பிரகாசிக்கின்றன.

அறிவை அடைய உதவுகின்ற ஞானேந்திரியங்களால் ஆத்மாவை விளக்க முடியாது.  ஆனால் ஆத்மாவினால்தான் அனைத்தும் செயல்பட்டு அறிவை அடைய உதவுகின்றது.

விசாரம்:-  ( நாம் அடையும் சுகம் எப்படி அடையப்படுகின்றது ).
நாம் கண்ணால், காதால் அடையும் இன்பம், அதை அடைய உதவும் விஷயத்தை பொறுத்து இருக்கின்றது என்று பொதுவாக சொல்வோம்.  ஆனால் அந்தப்பொருட்கள் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சுகத்தைக் கொடுக்காது. இதிலிருந்து பொருட்களிலிருந்து சுகத்தை நாம் அடைவதில்லை என்று புரிந்து கொள்ளலாம்.  பிறகு இந்த சுகம் எங்கிருந்து வருகின்றது என்ற கேள்விக்கு சாஸ்திரம் ஆத்மாவிடமிருந்து வருகின்றது என்று விடையளிக்கிறது.  நமது மனம் அமைதியுடன் இருக்கும்போது ஆத்மாவின் சுகம் அதில் பிரதிபலிக்கின்றது அதனால் சுகத்தை அடைகின்றோம்.  எல்லோரும் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்ளவே விரும்புகின்றார்கள்.  விரும்பியதை அடைந்ததும் அந்த ஆசையானது மறைந்து மேலும் பல ஆசைகள் வந்து சேர்ந்து விடுகின்றன.
இரண்டாவது அத்தியாயம் – 2வது வல்லி முடிவடைகிறது.

———-———-———-———-———-———-———-———-———-———-———-———-——–

இரண்டாவது அத்தியாயம்
3வது வல்லி 

ஸ்லோகம்01
ஊர்த்4வமூலோÅவாக்ஶாக2 ஏஷோÅஶ்சத்த2: ஸனாதன: |
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே |
தஸ்திம்ல்லோகா: ஶ்ரிதா: ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சன ஏதத்3வை ||
இந்த மந்திரத்தில் பிரஹ்ம ஸ்வரூபம் விளக்கப்படுகின்றது. சம்சாரம் என்பது நாம் மனதில் அனுபவிக்கும் சுக-துக்கமேயாகும்.  ஈஸ்வரனை வேராக கொண்டுள்ளது இந்த சம்சாரம்  என்கின்ற மரம்.  இந்த மரத்தின் கிளைகள் கீழ்நோக்கி செல்கின்றன.  இந்த அரசமரம் பிரபஞ்சத்தை குறிக்கின்றது.  மரத்திற்கு வேர் ஆதாரமாக இருப்பது போல சம்சாரத்திற்கு, பிரபஞ்சத்திற்கு ஈஸ்வரன் ஆதாரமாக இருக்கின்றார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
மரத்திற்கும், சம்சாரத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்:

  1.     மரம் நிலையாக இருப்பதற்கு அதன் வேர்கள் காரணமாக இருக்கின்றது அதுபோல சம்சாரத்தின் வேராக இருப்பவர் ஈஸ்வரன். வேர்கள் மறைந்து இருப்பது போல அவரும் நம் இந்திரியங்களுக்கு தெரியாமல் இருக்கின்றார்.
  2.     மரத்தின் நடுப்பகுதியானது ஹிரண்யகர்ப்பனுக்கு ஒப்பிடப்படுகின்றது.முதலில் தோன்றிய சூட்சும சரீரம் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர்.
  3.     மரத்தில் உள்ள இலைகள் வேதத்தினுடைய கர்ம காண்டத்திற்கு உதாரணமாக கூறப்படுகின்றது. மரம் நன்கு வளர்வதற்கு இலைகள் காரணமாக இருப்பது சம்சாரம்  நன்கு வளர்வதற்கு கர்ம காண்டம் உதவுகின்றது.  இதில் கர்ம பலன்களை அடைவதற்குரிய சாதனங்களைக் கூறி மனிதனை சம்சாரத்திலே வைத்திருக்கின்றது
  4.     மரம் வளர்வதற்கு உதவும் நீரானது,ஆசைகளுக்கு உவமையாக கூறப்படுகின்றது.  நம்மை சம்சாரத்தில் வைத்திருப்பதற்கு இந்த ஆசைகள்தான் காரணம்.
  5.     மரத்தினால் அடையும் பலன்கள் நாம் அனுபவிக்கும் சுக-துக்கங்களுக்கு உவமையாக கூறப்படுகின்றது
  6.     மரத்திலுள்ள பழங்களை முதலில் அனுபவிப்பது பறவைகள்,அதுபோல சம்சார பலனை அனுபவிப்பது ஜீவர்களான நாம்தான்.
  7.     இந்த பறவைகள் அந்த மரத்திலே கூடுகட்டி வாழ்வது போல நாமும் இந்த உலகத்தில் வீடுகட்டிக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
  8.     மரத்தை வெட்டி வீழ்த்தக்கூடிய பெரிய அரிவாளாக வைராக்கியம் கூறப்படுகின்றது.மரத்தை வெட்டுவதற்கு, முதலில் கிளைகளை வெட்டுவோம், பிறகு நடுமரத்தை வெட்டி கடைசியில் வேரோடு பிடுங்கி எறிவது போல நாமும் ஞானத்தால் சம்சார என்கின்ற மரத்தை வேரோடு நீக்க வேண்டும்.

 

நாளை இருக்குமோ என்ற சந்தேகத்தில் இருக்கின்ற அரசமரம். நதிக்கரையில் அமர்ந்து நீரை பார்க்கும் போது உண்மையில் சென்று கொண்டிருக்கும் நீரானது அசைவற்று இருப்பது போல தோற்றமளிக்கும்.  அதுபோல மாறிக்கொண்டிருக்கும் சம்சாரத்திலிருந்து விடுபட இரண்டு வழிகள் உபதேசிக்கப்படுகின்றது.  அவைகள்
1. வைராக்கியம்,
2. ஆத்ம ஞானம்.

பிரம்மமானது தூய்மையானது, மாயையோடு சம்பந்தப்படாதது.  ஏதாவது ஒரு சம்பந்தத்தால்தான் எதுவுமே அசுத்தமாகின்றது. மேலும் அது பூரணமானது, நிறைவானது, என்றும் மாறாமல் எப்பொழுதும் இருப்பது, மரணமற்றது, அழிவற்றது இவ்வாறு பிரம்மத்தின் ஸ்வரூபத்தை ரிஷிகளால், பிரம்மத்தை உணர்ந்தவர்களால் கூறப்படுகின்றது. கயிற்றின் மீது பொய்யாக தோற்றமளிக்கும் பாம்பு அந்த கயிற்றை சார்ந்திருக்கின்றதோ அதுபோல பிரம்மனிடத்தில் எல்லா உலகங்களும் சார்ந்து இருக்கின்றது..  இதை தவிர்த்து வேறொன்றுமில்லை, இதுதான் நீ கேட்ட அந்த உண்மை தத்துவம்.

 

ஸ்லோகம்02

யதி3தம் கிம் ச ஜக3த்யஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம் |
ஸஹத்3ப4யம் வஜ்ரமுத்3யதம் ய ஏதத்3விது3ரம்ருதாஸ்தே ப4வந்தி ||
எவையெல்லாம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றதோ அவையெல்லாம் தோற்றுவிக்கப்பட்டவைகள். படைக்கப்பட்ட உலகங்கள் அனைத்தும் பிரம்மத்திலிருந்து தோன்றியதால்தான் அவைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.  இதுவே எல்லோருக்கும் மிகப்பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  வஜ்ராயுதத்தை கையில் ஏந்தியிருப்பதுபோல் பய ஸ்வரூபமாக காட்சியளித்து கொண்டிருக்கும் ஈஸ்வரனை யார் பிரம்மன் என்று தெரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மரணமற்ற தன்மையை அடைகிறார்கள்.
ஸ்லோகம்03
ப4யாத3ஸ்யாக்3னிஸ்தபதி ப4யாத்தபதி ஸூர்ய: |
ப4யாதி3~ண்த்4ரஶ்ச வாயுஶ்ச ம்ருத்யுர்தா4வதி பஞ்சம: ||
ஈஸ்வரனிட்த்தில் கொண்டுள்ள பயத்தினால்தான் எல்லா சக்திகளும் அவருக்கு கட்டுபட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றன.  எல்லா தேவதைகளும் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பது ஹிரண்யகர்ப்பனைத்தான்.  ஈஸ்வரனிடத்தில் உள்ள பயத்தினால்தான் அக்னியானது உஷ்ணத்தை வெளிப்படுத்துகிறது, சூரியனும் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது, இந்திரனும் அவருக்கு பயந்து தன் வேலையை தவறாமல் செய்து கொண்டிருக்கின்றான்.  வாயு பகவானும், எமதர்மனும் தத்தம் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள்.  இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது எல்லா சக்திகளும் அவர் விதித்த நியமத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

ஸ்லோகம்04
இஹ சேத3ஶகத்3போ3த்3த4ம் ப்ராக்ஶரீரஸ்ய விஸ்ரஸ: |
தத:: ஸர்கே3ஷு லோகேஷு ஶரீரத்வாய கல்பதே ||
இந்த மனித சரீரத்தில் இருக்கும் போதே பரம்பொருளை அறிந்து கொண்டால் உடல் வீழ்வதற்கு முன்னே முக்தியை அடைந்து விடலாம்.  ஒருவேளை அறியவில்லையென்றால் இறந்த பிறகு படைக்கப்பட்ட இந்த உலகத்திற்குள் வேறு சரீரத்தை அடைய நேரிடும்.

ஸ்லோகம்05
யதா2த3ர்தே2 ததா2த்மனி யதா2 ஸ்வப்னே ததா2 பித்ருலோகே |
யதா2ப்ஸு பரீவ த3த்3ருஶே ததா2 க3ந்த4ர்வலோகே சா2யாதபயோரிவ ப்3ரஹ்மலோகே ||

மனித உலகத்தை தவிர வேறெந்த உலகத்திலும் ஆத்மஞானத்தை அடைய முடியாது.

  • மனித லோகத்தில் ஆத்ம ஞானம் அடையலாம். நம்மை கண்ணாடியில் பார்த்தால் நம் உருவம் தெளிவாகவும்,சரியாகவும் தெரிவது போல ஆத்ம, அனாத்ம விவேகத்தை மிகத்தெளிவாக அடையலாம்.
  • பித்ரு லோகத்தில் கனவில் காணும் தெளிவற்ற உலகத்தைப் போல ஆத்ம-அனாத்ம விவேகம் தெளிவற்று இருக்கும்.
  • கந்தர்வ லோகத்தில் அசைந்து கொண்டிருக்கும் நீரில் தெரியும் உருவத்தைப்போல இந்த விவேகம் வேறுபாடு தெளிவாக தெரியாமல் இருக்கும்.
  • பிரஹ்ம லோகத்தில் இந்த அறிவு தெளிவாக அறியப்படும். நிழலும்-நிஜமும் எவ்வாறு தெளிவாக தெரியுமோ அதுபோலதான் இருக்கும். இந்த லோகத்திற்கு செல்வது மிகவும் கடினம். அதிக உபாஸனை செய்தும், வேதாந்தம் படிக்க முடியாமல் போனவர்களால் அடையப்படும் உலகம்.

இவைகளைத் தவிர வேறெந்த உலகத்திலும் இந்த அறிவை அடைய முடியாது.  இந்த அறிவை அடைவதற்கு மனித லோகமே மிக மிக உயர்ந்தது.

எப்படி கண்ணாடியில் உருவம் தெளிவாக தெரியுமோ அவ்விதமாக நம் மனதில், புத்தியில் ஆத்மாவினுடைய தரிசனம் கிடைக்கும், ஆத்ம-அனாத்ம வேறுபாடு மிகத்தெளிவாக புரியும்.
எப்படி கனவில் உள்ள பொருட்கள் அனைத்தும் தெளிவற்றதாக இருக்கின்றதோ அதுபோல பித்ருலோகத்தில் தெளிவற்றதாக இருக்கும்.  எப்படி நீரில் தெரியிம் உருவம் தெளிவற்றதாக இருக்குமோ அதுபோல கந்தர்வலோகத்தில் இருக்கும்.  இதுவே பிரம்ம லோகத்தில் நிழலும், நிஜமும் போல தெளிவாக இருக்கும்.

ஸ்லோகம்06
இந்த்3ரியாணாம் ப்ருத2க்3பா4வமுத3யாஸ்தமயௌ ச யத் |
ப்ருத2கு3த்பத்3யமானானாம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ||
ஆத்மாவை இந்திரியங்களிலிருந்து வேறாக புரிந்து கொள்ள வேண்டும்.  நம்மை யாராவது முட்டாள் என்று யாராவது திட்டினால் நான் புத்தி என்று நினைத்தால் கோபம் வரும்.  ஆனால் நான் ஆத்மா என்று நினைத்தால் நமக்கு கோபம் வராது.  எல்லா இந்திரியங்களையும் அந்தக்கரணத்தையும் நான் என்ற ஆத்மாவிலிருந்து பிரித்து விட்டால் நமக்கு என்றென்றும் சோகம் கிடையாது.  இரண்டு யுக்திகள் மூலம் நாம் இந்திரியங்களல்ல என்று புரிந்து கொள்ளலாம்.  புலன்கள் ஆத்மாவிலிருந்து வேறுபட்டிருக்கின்றது ஏனென்றால் அவைகள் தனித்தனியாக தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது..  எது தோற்றுவிக்கப்படுகிறதோ அது நிலையற்றவை.  ஆத்மா என்றும் இருப்பது, அதிலிருந்து தோன்றியவைகள்தான் அனைத்தும். இவைகள் நானல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இந்திரியங்கள் எழுச்சியும் (விழிப்பு நிலை ) பெறுகின்றது, ஒடுங்கியும் (கனவு நிலை) இருக்கின்றது  நான் என்ற ஆத்மா இரண்டு நிலையிலும் சாட்சியாக இருக்கின்றேன்.  ஆகவே இவைகள் என்னிடமிருந்து வேறுபட்டவை என்று உணர வேண்டும்.  இவ்விதம் அறிந்த விவேகியானவன் துயரத்தை அடைவதில்லை.

ஸ்லோகம்07
இந்த்ரியேப்4ய: பரம் மனோ மனஸ: ஸத்த்வமுத்தமம் |
ஸத்த்வாத3தி4 மஹானாத்மா மஹதோÅவ்யக்தமுத்தமம் ||
புலன்களை விட மனம் மேலானது.  பரம் என்பதற்கு சூட்சுமமானது, எங்கும் வியாபித்துள்ளது என்று பொருட்கொள்ளலாம், ஆத்ம சமீபம் என்றும் பொருட்கொள்ளலாம்.  மனதை விட புத்தி மேலானது, புத்தியைக் காட்டிலும் சமஷ்டி புத்தி மேலானது.  ஹிரண்யகர்ப்பனை விட மாயை மேலானது.

ஸ்லோகம்08
அவ்யக்தாத்து பர: புருஷோ வ்யாபகோÅலிங்க3 ஏவ ச |
யம் ஞாத்வா முச்யதே ஜந்துரம்ருதத்வம் ச க3ச்ச2தி ||
மாயைக் காட்டிலும் ஆத்மா மேலானது.  எங்கும் வியாபித்திருக்கும் புருஷனே மாயை விட மேலானது.  ஆத்மா அடையாளமெதுவுமற்றது.  ஆத்மாவை யூகித்து அறிய முடியாது. இந்த புருஷனை உணர்ந்த ஜீவன் சம்சாரத்திலிருந்து விடுபடுகின்றான், ஜீவன் முக்தி அடைகின்றான்.  மரணமில்லா நிலையையும் அடைகின்றான். இறந்த பிறகு விதேக முக்தியை அடைகின்றான் பிறப்பு-இறப்பிலிருந்து விடுபடுகின்றான்.

ஸ்லோகம்09
ந ஸந்த்ருஶோ திஷ்டதி ரூபமஸ்ய ந சக்ஷுஶா பஶ்யதி கஶ்சனைனம் |
ஹ்ருதா3 மனீஷீ மனஸாபி4க்ல்ருப்தோ ய ஏதாத்3விது3ரஸ்ருதாஸ்தே ப4வதி ||
பிரம்மத்தினுடைய தன்மை இந்திரியத்தினுடைய வசத்துக்குள் வராது.  புலன்களால் பிரம்மத்தை அறியமுடியாது.  பிரம்மத்தை யாருடைய கண்களாலும் காணப்படுவதில்லை. தெளிவான சிந்தனையால், மனதினால் அறியப்படுகின்ற, இருதயத்திற்குள் இருக்கின்ற விழிப்புற்ற புத்தியால் எவர்கள் இந்த தத்துவத்தை அறிகின்றார்களோ அவர்கள் மரணமற்றவர்களாகின்றார்கள்.
ஸ்லோகம்10
யதா3 பஞ்சாவதிஷ்டந்தே ஞானானி மனஸா ஸஹ |
பு3த்3தி4ஶ்ச ந விசேஷ்டதி ஹாமாஹு: பரமாம் க3திம் ||

நிதித்யாஸன விசாரம்:-
நான் ஆத்மா என்ற நிலையில் முதலில் வாழ பழக வேண்டும்.  அதற்கு முதலில் உலக விவகாரங்களிலிருந்து விலகி கொஞ்ச நாள் தனிமையில் வாழ்ந்து பழக வேண்டும்.  இந்திரியங்கள் மனம், புத்தி இவைகளை துறந்து நான் ஆத்மா என்ற நிலையில் வாழ்ந்து பழக வேண்டும்.
சஜாதீய விருத்தி  – ஆத்ம தத்துவத்திற்கு உகந்த எண்ணங்கள்
வியாதீய விருத்தி – ஆத்ம தத்துவத்திற்கு முரண்பாடான எண்ணங்கள்
தியானம்         – மனப்போராட்டங்கள் இல்லாமல் செய்தல்

சஜாய விருத்தி நிலை அடைதல் என்பது முதிர்ந்த நிலை.  இதுவே சமாதானம், சமாதி யோகம் என்று சொல்லப்படுகின்றது.

எப்பொழுது ஞானேந்திரியங்கள் மனதோடு சேர்ந்து ஒருமுகப்பட்டு நிற்குமோ, அமைதியுடன் இருக்குமோ (சஜாதீய விருத்தி நிலை), அப்பொழுது புத்தியானது அமைதியடைந்துவிடும.  புத்தியில் ஏதாவது சந்தேகமிருந்தால் அது அமைதியடையாது.  எனவே மனனத்தின் மூலம் சந்தேகங்களை நீக்கி தெளிவடைந்துவிட வேண்டும்.  இந்த நிலையே மேலான நிலை என்று சொல்லப்படுகின்றது.

ஸ்லோகம்11
தாம் யோக3மிதி மன்யந்தே ஸ்தி2ராமி~ண்த்3ரியதா4ரணாம் |
அப்ரமத்தஸ்ததா3 ப4வதி யோகோ3 ஹி ப்ரப4வாப்யயௌ ||
இந்த நிலையில் இந்திரியங்கள் உறுதியாக ஒடுக்கப்பட்டிருக்கும். இதை யோகசமாதி, சமாதானம் என்றும் மனம் அமைதியடைந்திருத்தல் என்றும் சொல்லப்படுகின்றது.  நிதித்யாஸனம் செய்யும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இந்த யோகமானது மேலே செல்வதற்கும், கீழே வீழ்வதற்கும் காரணமாக இருக்கும்.  இந்திரிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  எந்த சமயத்தில் வேண்டுமானாலும் அவைகள் நம்மை வீழ்த்தி விடும்.  தியானம் செய்யும்போது தமோ குணத்தினால் தூக்கமும், ரஜோ குணத்தினால் மன சிதறல்களும் ஏற்படும்.

ஸ்லோகம்12
நைவ வாசா ந மனஸா ப்ரப்தும் ஶக்யோ ந சக்ஷுஷா |
அஸ்தீதி ப்3ருவதோÅன்யத்ர கத2ம் த3து3பல்ப்4யதே ||
வாக்கினால் அந்த பிரம்மத்தை அடைய முடியாது என்று சொல்லும்போது ஞானேந்திரியங்களால் பிரம்மத்தை அடைய முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதேபோன்று கண்களால் பிரம்மத்தை அறிய முடியாது என்பதை கர்மேந்திரியங்களாலும் அதை அறிய முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.  மனதாலும் அறிய முடியாது, அந்தக்கரணத்தின் உதவியாலும் அறிய முடியாது.  இந்த பிரம்மம் இருக்கிறது என்று மற்றவர்களால் சொல்லப்படுகின்றது அதை நாம் எப்படி உணர முடியும்.

ஸ்லோகம்13
அஸ்தீத்யேவொபலப்4த4வ்யஸ்தத்த்வபா4வேன சோப4யோ: |
அஸ்தீத்யேவொபலப்3த4ஸ்ய தத்த்வபா4வ: ப்ரஸீத3தி ||
பரோக்‌ஷ ஞானம் என்பது பிறர் மூலம் கேள்விபட்டு அடைந்த அறிவை குறிக்கிறது. பிரத்யக்ஷ ஞானம் என்பது நாமே நேரிடையாக அடைகின்ற அறிவாகும்.  வேத வாக்கியப்படி அடையும் ஞானம் பரோக்‌ஷ ஞானம்.  இதை பிரத்யக்‌ஷ ஞானத்தினால் அறிய முடியாது, ஏனென்றால் அது இந்திரியங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்கின்றது.  இந்திரியங்களின் மூலம் அடையும் அறிவுக்கு இந்திரியங்களே பிரமாணமாக இருக்கின்றது.  பிறகு வேதத்தின் உபதேசமான மகாவாக்கியமான ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தினால் அபரோக்‌ஷ ஞானத்தை அடைகின்றோம். அந்த பிரம்மத்தை நான் என்று புரிந்து கொள்ளும் போது அடையும் ஞானம் அபரோக்‌ஷ ஞானம்.  எனவே அந்த பிரம்மத்தை இருக்கின்றது என்று அறிய வேண்டும், ஆத்ம ஸ்வரூபமாக உணரப்பட வேண்டும், நான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உணர வேண்டும்.  இவ்விரண்டில் யார் இருக்கின்றது என்று புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் தான் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்ற ஞானத்தை அடையலாம்.

ஸ்லோகம்14
யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேÅஸ்ய ஹ்ருதி3 ஶ்ரிதா: |
அத2 மர்த்யோÅம்ருதோ ப4வத்யத்ர ப்3ரஹ்ம ஸமஶ்னுதே ||
எப்பொழுது மனதிலுள்ள ஆசைகளெல்லாம் நீங்குகின்றதோ அப்பொழுதுதான் பிரம்மஞானத்தை அடைகின்றான்.  ஞானியானவன் தன்னிடத்திலே நிறைவுடன் இருப்பவன். மனம் நிறைவுடன் இருக்கும்போது ஆசைகள் எதுவும் தோன்றாது.  ஆசைகள் இருவகையாக இருக்கின்றது. அவைகள் 1. பந்தப்படுத்துகின்ற ஆசை, 2. பந்தப்படுத்தாத ஆசை என்பதாகும்.,

ஒருவனுடைய மனதில் உள்ள ஆசைகளெல்லாம் எப்பொழுது நீங்குகின்றதோ , விடுபட்டு போகின்றதோ அப்பொழுதே சம்சாரியாக இருக்கும் மனிதன் மரணமற்றவனாகின்றான். நிலையான மனநிறைவை அடைகின்றான்.

ஸ்லோகம்15
யதா3 ஸர்வே ப்ரபி4த்3யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்3ரந்த2ய: |
அத2 மர்ஹ்யோÅம்ருதோ ப4வத்யேதாவத்3த்4யனுஶாஸனம் ||
மனதிலுள்ள அறியாமை எப்பொழுது நீங்குகின்றதோ அப்போதுதான் பிரம்மத்தை அடைவோம். அறியாமையிலிருந்து தோன்றுவது அத்யாஸம் (அனாத்மாவை ஆத்மாவாக பார்த்தல்). அத்யாஸத்திலிருந்துதான் ஆசைகள் பிறக்கின்றது.

எப்பொழுது ஒருவனுடைய இருதயத்திலுள்ள எல்லா முடிச்சுகளும் ( அறியாமையும், அத்யாஸமும், ஆசைகளும்) அவிழ்க்கபடுகின்றதோ, அதாவது அறியாமை நீங்குகின்றதோ அப்பொழுதே சம்சாரியான மனிதன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.  இதுவே நான் உனக்கு கூறும் ஆத்ம தத்துவ உபதேசங்கள்.

ஸ்லோகம்16
ஶதம் சைகா ஹ்ருத3யஸ்ய நாத3ஸ்யஸ்தாஸாம் மூர்தா4னமபி4னி:ஸ்ருதைகா |
தயோர்த்4வமாயன்னம்ருதத்வமேதி விஷ்வங்ஙன்யா உத்க்ரமணே ப4வந்தி ||
ஞானத்தை அடையாதவர்களின் மரணகதியைப் பற்றி இந்த மந்திரத்தில் கூறப்படுகின்றது.  இருதயத்திலிருந்து 101 நாடிகள் உடலிலிருந்து வெளியே செல்கின்றன,  அவற்றில் ஒன்று உச்சந்தலைக்குள் நுழைகின்றது. அதன் வழியாக மேலே செல்பவன் மரணமற்ற நிலையை அடைகின்றான்.  மற்ற நாடிகளின் வழியே செல்பவர்கள் மீண்டும் பிறப்பெடுக்கின்றார்கள்

ஸ்லோகம்17
அங்கு3ஷ்டமாத்ர: புருஷோÅந்தராத்மா ஸதா3 ஜனானாம் ஹ்ருத3யே ஸம்னிவிஷ்ட” |
தம் ஸ்வாச்ச2ரீராத்ப்ரவ்ருஹேன்முஞ்ஜாதி3வேஷீகாம் தை4ர்யேண |
தம் வித்3யாச்சு2க்ரமம்ருதம் தம் வித்3யாச்சு2க்ரம ம்ருதமிதி ||
இருதய ஆகாசத்தில் வெளிப்படுகின்ற ஆத்மாதான் நம்முடைய உண்மையான சைதன்ய ஸ்வரூபம், அந்தர்யாமி.  அது எல்லா ஜீவராசிகளின் இதயத்தில் எப்பொழுதும் வசிக்கின்றது.  அந்த ஆத்மாவை நம்முடைய சரீரத்திலிருந்து முஞ்சை புல்லிலிருந்து தண்டை பிரிப்பதை போல கவனமாக பிரித்தெடுக்க வேண்டும்,.  அப்படி பிரித்தெடுத்த ஆத்மாவானது தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருப்பதாக அறிந்து கொள்.

ஸ்லோகம்18
ம்ருத்யுப்ரோக்தோ நசிகேதோÅத2 லப்3த்4வா வித்3யாமேதாம் யோதவிதி4ம் க்ருத்ஸ்ரம் |
ப்3ரஹ்மப்ராப்தோ விரஜோபூ4த்3விம்ரித்யுரன்யோÅப்யேவம் யோ வித3த்4யாத்ம்மேவ ||
எமதர்மரால் சொல்லப்பட்ட, நசிகேதனால் கேட்கப்பட்ட இந்த ஆத்ம வித்யாவை, எவனொருவன் ஞானத்தை அடைய உதவும் சாதனங்களை முழுமையாக பயன்படுத்தி மனத்தூய்மையுடன் கேட்கின்றானோ அவன் பிரம்ம நிலையை அடைகின்றான, மரணமற்ற நிலையை அடைகின்றான்.  மற்றவர்களும் கூட இவ்வாறு அறிந்து பிரம்மத்தை அடைகின்றார்கள்.

                                இரண்டாவது அத்தியாயம் – 3வது வல்லி முடிவடைகிறது

———-———-———-———-———-———-———-———-———-———-———-———-——–

கடோபநிஷத்தின் சுருக்கம்:

1.1. நசிகேதன் தன் தந்தையிடம் தன்னை யாருக்கு தட்சணையாக கொடுக்க போகிறீர்கள் என்று கேட்க, அவர் எமனுக்கு கொடுக்கப்போகிறேன் என்று சொல்ல அவனும் எமலோகத்திற்கு செல்கின்றான்.  அங்கே எமதர்மராஜா இல்லாததால் 3 நாட்கள் காத்துக் கொண்டிருந்தான்.  அவன் தன்னை சந்திக்க 3 நாட்கள் காக்க வைத்தற்காக் 3 வரங்கள் தாம் தருவதாக அவர் கூறுகிறார்.

நசிகேதன் முதல் வரமாக தன் தந்தை தன் பிரிவால் வருந்தக்கூடாது எனவும், தான் திரும்பி செல்லும்போது என்னைக்கண்டு பயப்படாமல் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கேட்டான்.  இரண்டாவது வரமாக சொர்க்கலோகத்தை அடைய உதவும் யாகத்தை செய்யும் முறையை தனக்கு சொல்லித்தர வேண்டுமென்று கேட்டான்.  மூன்றாவது வரமாக ஜீவன் இறந்ததற்கு பிறகு எங்கு செல்கின்றான் என்பதை தனக்கு சொல்லுமாறு கேட்டான்.

எமதர்மராஜாவும் அவன் கேட்ட முதல் இரண்டு வரங்களையும் அளித்துவிட்டார்.  மூன்றாவது வரமாக அவன் கேட்டது ஆத்ம தத்துவத்தை பற்றியதாக இருப்பதால் அதற்கு அவன் தகுதியானவனாக இருக்கின்றானா என்று பரிசோதிக்கின்றார்.  இது புரிவதற்கு மிகமிகக்கடினம் என்று சொல்லிப்பார்க்கின்றார். ஆனால் நசிகேதன் அப்படியென்றால அதைத்தான் தாம் அறிய விரும்புவதாக கூறுகின்றான்.

பலபோகங்களை தருவதாக ஆசையை தூண்டுகின்றார், அவைகளை அனுபவிக்க நீண்ட ஆயுளும் தருகின்றேன் என்றும் கூறினார்.  ஆனாலும் நசிகேதன், நிலையற்ற  அந்த போகங்களை தாங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு தேவையில்லை என்றூ உறுதியாக கூறினான்.

1.2 இதில் 7 தலைப்புக்கள் பேசப்படுகின்றது அவைகள்

  1.     இரண்டுவிதமானமார்க்கத்தை கூறுகின்றார்,  அதற்கான சாதனத்தையும் கூறுகின்றார்.  அவைகள் ஸ்ரேயஸ் (மோட்சம்), ப்ரேயஸ் ( சம்சார போகம்) என்பதாகும்.
  2.     விவேகியானவன்ஸ்ரேயஸ் பாதையைத்தான் தேர்ந்தெடுக்கின்றான்.  ப்ரேயஸை தேர்ந்தெடுப்பவர்களின் துயர நிலையைக் கூறி அவர்களை நிந்திக்கின்றார்.  இவையிரண்டும் வெவ்வேறு பாதைகளை கொண்டிருப்பதால் ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் கூறுகின்றார்.
  3.     ஸ்ரேயஸ்சைதேர்ந்தெடுப்பவர்கள் வெகுசிலரே, அதை சொல்லி கொடுக்கும் குருவும் வெகு சிலரே என்று கூறுகிறார்.  குருவின் லட்சணமாக அவர் எதை சொல்லிக் கொடுக்கின்றாரோ அதுமாதிரியேதான் நடந்து கொள்வார் என்று விவரித்தார்.
  4.     சாஸ்திரத்தைகேட்டல், சிந்தித்தல், பிறகு அதை தியானித்தல் ஆகியவற்றை ஞானயோகம் என்று உரைத்தார்.
  5.     தர்ம-அதர்மத்திற்கும்காலத்திற்கும் அப்பாற்பட்ட ஆத்ம தத்துவத்தை நசிகேதன் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டினான்.
  6.     ஆத்மதத்துவத்தை உபதேசிக்க ஆரம்பிக்கின்றார். இந்த அத்தியாத்தில் இந்த பாகத்தில் உள்ள 18-22 மந்திரங்கள் மிக முக்கியமானவை. மனப்பாடம் செய்து அதை நிதித்யாஸனம் செய்ய வேண்டியவை.
  7.     சிலசாதனங்களை சொல்கின்றார். முமுக்‌ஷூத்வம் ஒரு மோட்ச சாதனம், தார்மீக வாழ்க்கையை வாழ்வதற்கு சம, தம போன்ற சாதனங்களை பரிந்துரைக்கின்றார்.

 

1.3 சரீரத்தை தேராக உருவகப்படுத்தி சில உபதேசங்களை சொல்கின்றார்.  மனத்தூய்மையை கொடுக்கும் விவேகம், சம, தம ஆகிய மூன்று சாதனங்களை முக்கியமாக கூறுகின்றார்.  புத்திக்கு ஸ்ரேயஸ், ப்ரேயஸ் இவைகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளையும் அதன் பலன்களையும் தெரிந்திருக்க வேண்டும்.  ஐம்புலன்களையும் அடக்கி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், மனதை கடிவாளமாக உருவகப்படுத்தி அதை நம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

 

ஆத்ம தத்துவத்தை பஞ்சகோசங்களை வைத்து விளக்குகின்றார்.  ஒவ்வொரு கோசத்திலும் நான் என்ற புத்தியை விட்டுவிட வேண்டும். இறுதியில் நானே ஆத்மா என்று உணர வேண்டும் என்றும் கூறுகின்றார்.  நம்முடைய பஞ்ச கோசங்களின் சமஷ்டியான பிரபஞ்சங்களையும் நீக்க வேண்டும்.  இதை அறிந்து கொள்வதற்கு இரண்டு சாதனங்கள் கூறப்படுகின்றது. இதை அறிவதற்கு நமது புத்தியானது மிகவும் சூட்சுமமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். நிதித்யாஸனத்தையும் விவரிக்கின்றார்.

 

2.1 மற்றொரு சாதனத்தை பற்றியும் கூறுகின்றார்.  இந்த பகுதியில் உள்ள எல்லா மந்திரங்களும் முக்கியமானது.  எதனால் சூட்சும புத்தியை இழக்கின்றான் என்று கேட்கும் போது படைப்பிலே இந்திரியங்கள் வெளியே செல்வதாக இருக்கின்றது.  வெகு சிலரே  இந்திரியங்களை உள்நோக்கி செல்லுமாறு பழக்கி வைத்திருகின்றார்கள்.  இதனால் சூட்சும புத்தியை அடைகின்றார்கள்.  விதவிதமான கோணங்களில் ஆத்ம தத்துவமானது விளக்கப்படுகின்றது;  த்ருக்-த்ருஷ்ய விவேகம் மூலம் ஆத்ம ஞானம் விளக்கப்படுகின்றது.  அறிபவன் – அறியப்படும்பொருள் இந்த தத்துவமும், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தையும் விளக்குகின்றது. இருமையானது நிந்திக்கப்படுகின்றது.  இருமை புத்தியை உடையவன் சம்சாரத்தில் சிக்கி பிறப்பு-இறப்பு என்ற சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பான் என்று எச்சரிக்கின்றார்.

2.2 ஆரம்பத்தில் ஆத்ம தத்துவம் விவரிக்கப்படுகின்றது. உடலை ஒரு நகரத்திற்கு ஒப்பிட்டு விவரிக்கப்படுகின்றது.  அன்வய-வியதிரேக தத்துவத்தின் மூலமாக இது விளக்கப்படுகின்றது. இறந்ததற்கு பிறகு அக்ஞானிகளினுடைய நிலை என்ன என்பதையும் கூறுகின்றார்.  உறங்கும்போது ஆத்மா உறங்குவதில்லை சாட்சியாக இருந்து கொண்டு எல்லா அவஸ்தைகளிலும் நடப்பதை பார்த்து கொண்டிருக்கின்றது. சரீரம் ஆத்மாவுக்கு உபாதியாக கூறப்படுகின்றது. ஸ்படிகத்தின் அருகின் உள்ள சிவப்பு மலரின் நிறம் அதில் பிரதிபலிப்பது போல சரீரத்தின் செயல்கள் அனைத்தும் ஆத்மாவிற்கு செல்கின்றதாக விளக்குகின்றார்.  ஆத்மா ஆனந்த ஸ்வரூபம் என்றும், சுயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்றும் விளக்குகின்றார்.

 

2.3 சம்சார வர்ணனை கூறப்பட்டுள்ளது. சம்சாரம் அரச மரத்திற்கு உதாரணமாக கூறப்பட்டு மரத்தைப்போல் அநித்யமானது என்றும் அதற்கு ஆதாரமாக எப்படி வேர் இருக்கின்றதோ அதுபோல சம்சாரத்திற்கு ஆதாரமாக பிரம்மம் இருக்கின்றது என்று தெளிவுபடுத்துகின்றார்.  ஈஸ்வரனே அனைத்துமாக இருக்கின்றார், அவருக்கு கட்டுபட்டுத்தான் எல்லா இயற்கை சக்திகளும் இயங்குகின்றன என்று சுட்டிக் காட்டுகின்றார்.

 

மனித சரீரத்தின் மேன்மையை கூறி இதன் மூலம்தான் ஆத்ம தத்துவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்று உறுதி கூறுகின்றார். ஆத்ம தத்துவத்தை மீண்டும் வேறு வகையில் விளக்குகின்றார்.  அதை அறிவதற்கு வேறு சில சாதனங்களையும் கூறுகின்றார்.

 

சூட்சுமான புத்தியின் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.  நிதித்யாஸனத்தை பற்றி கூறியிருக்கின்றார்.  அறிவை அடைந்தாலும் பழக்க தோஷத்தால் நம் மனம் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல தூண்டும் எனவே அடைந்த அறிவில் நிலைபெற்று இருக்க வேண்டும்.  எப்பொழுது மனமும், புலன்களும் அமைதியாக இருக்கின்றதோ அதுவே நாம் அறிவை அடைந்ததற்கான அறிகுறியாக சொல்கின்றார்.  மேலும்சிரத்தையை உடையவன்தான் மோட்சத்தை அடைவான் என்றும் உறுதிபடக் கூறுகின்றார்.   முதலில் இருக்கின்றது என்று உறுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  பிறகு இருக்கின்றேன் என்ற அறிவை அடைய வேண்டும்.

 

ஆத்ம பலன்களை கூறுகின்றார்.

நம்முடைய மனதிலுள்ள ஆசைகளெல்லாம் அழிந்துவிடும், புதிதான எந்த ஆசைகளும் தோன்றாது, அப்படி தோன்றினாலும் அது நம்மை பந்தப்படுத்தாது.

நம்முடையஅறியாமை நீங்கி விடும். மனிதன் அமரத் தன்மையை இங்கேயே, இப்போதே அடைகின்றான். பூரணமான ஆத்மாவை அறிகின்றான்.

தன்னிடத்தேயுள்ள அறியாமை, அத்யாஸம் இவைகள் நீங்கப் பெற்று ஆத்ம ஞானத்தை அடைகின்றான்

நசிகேதன் மட்டுமில்லாமல் மற்றவர்களாலும் இந்த ஞானத்தை அடையப்படும் என்று உபநிஷத் உறுதிகூறுகிறது –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading