ஸ்ரீ பராசரர் மஹிமை —

ஸ்ரீவிஷ்ணு புராணத்தை அளித்து உபகாரம் செய்த ஸ்ரீ பராசர பகவானை ஆளவந்தார் வணங்குகிறார்.

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராண ரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||–ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 4 –-

ரிஷிகளில் தலை சிறந்தவரான, உதார குணத்தை உடையவரான பராசர ரிஷிக்கு என் வணக்கங்கள்.
இவரே சித் (ஆத்மாக்கள்), அசித் (அசேதனப் பொருட்கள்), ஈச்வரன், இவர்களுடைய தன்மைகள்,
இவ்வுலக இன்பங்கள், மோக்ஷம், இவ்வுலக இன்பம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றை அடையும் வழி,
ஆத்மாக்களால் அடையப்படும் குறிக்கோள் ஆகியவற்றை உள்ளபடி, புராணங்களில் ரத்னமான
ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் அருளிச் செய்தவர்.

வியாஸம் வஸிஷ்ட நப்தாரம் ஸக்தே :  பௌத்ர மகல்மஷம் Iபராஸராத்மஜம் வந்தே ஸுகதாதம் தபோநிதிம் I 

மத்ஸ்ய அவதாரம் வேதங்களை மீட்க -வ்யாஸ அவதாரம் வேதார்த்தங்களை மீட்க அவதாரம்

497. கோபதயே நமஹ (Gopathaye namaha)

வசிஷ்டரின் மகன்கள் மீது ஓர் அரக்கனை ஏவி இருந்தார் விஸ்வாமித்திரர். அவன் வசிஷ்டரின் எல்லா மகன்களையும் அழித்துவிட்டான். வசிஷ்டரின் மகன்களுள் ஒருவரான சக்தி என்ற முனிவருக்குப் பராசர முனிவர் குழந்தையாகப் பிறந்திருந்தார். விவரம் அறியாக் குழந்தையான பராசரரிடம் அவருக்குத் தந்தை இல்லை என்ற செய்தியைச் சொல்ல வசிஷ்டருக்கு மனம் இல்லை. அதனால் பராசரரைத் தனது மகனாகவே கருதிப் பாட்டனாரான வசிஷ்டர் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வளர்த்து வந்தார்.

பராசரரை உரிய வயதில் குருகுலத்துக்கு அனுப்பி வைத்தார் வசிஷ்டர். அந்தக் குருகுலத்தில் உள்ள சிறுவர்களுள் சிலர், ஒருநாள் பராசரரிடம், “எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்தை இருக்கிறார்! ஆனால் உனக்குத் தந்தை கிடையாதாமே!” என்று கேட்டார்கள். “ஏன் இல்லை? வசிஷ்டர்தான் என் தந்தை!” என்று விடையளித்தார் பராசரர். “இல்லை! நாங்கள் விசாரித்துவிட்டோம்! உன் தந்தை பெயர் சக்தி, அவர் இறந்து விட்டார். வசிஷ்டர் உனக்குப் பாட்டனார்!  இதுவே உனக்குத் தெரியாதா?” என்று ஏளனமாகச் சொன்னார்களாம் மற்ற சிறுவர்கள்.

சிறுபிள்ளையான பராசரரின் பிஞ்சு மனம் இவர்கள் பேசிய இந்த வார்த்தைகளால் மிகவும் வேதனைப்பட்டது. வசிஷ்டரிடம், அழுதுக்கொண்டே ஓடி வந்து நடந்தவற்றைச் சொன்னார் பராசரர். இனியும் உண்மையை மறைக்க வேண்டாம் எனக் கருதிய வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஏவிய அரக்கனால் சக்தி மற்றும் அவரது சகோதரர்கள் இறந்தமையைக் குறித்து விரிவாகப் பராசரரிடம் கூறினார். அதைக் கேட்டுக் கோபம் கொண்ட பராசரர், தன் தந்தையைக் கொன்ற அரக்கனைப் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அத்தோடு நில்லாமல், அரக்கர்கள் என்ற ஓர் இனம் இருப்பதால்தானே, அவர் களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் மூலம் கொலைகளைச் செய்யப் பிறரும் ஏற்பாடு செய்கிறார்கள்? அரக்கர்களையே மொத்தமாக அழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு வேள்வியைத் தொடங்கினார் இளம் பராசரர்.

இதைக் கேள்விப்பட்ட புலஸ்திய முனிவர், பராசரர் ஓர் இனத்தையே அழிக்க முற்படுகிறாரே! ஒருவர் தவறு செய்தால், அத்தவறுக்கான தண்டனையை அவருக்குக் கொடுக்கலாமே ஒழிய, அதற்காக அவர் சார்ந்த இனத்தையே அழிப்பது என்பது பெருந்தவறு ஆயிற்றே! இதைத் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துப் பராசரரிடம் வந்தார்.

பராசரரிடம் புலஸ்தியர், “குழந்தாய்! இப்படி ஓர் இனத்தை அழிப்பதற்காக வேள்விசெய்யாதே! உலகில் பலப்பல விதமான உயிர்களை இறைவன் படைத்திருக்கிறான். ஒவ்வொன்றைப் படைத்தமைக்கும் அவன் திருவுள்ளத்தில் ஒரு காரணமும் வைத்திருக்கிறான். பாம்போ, தேளோ, ஈயோ, எறும்போ, செடியோ, கொடியோ அனைத்துமே உலகில் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் உள்ளது. அவற்றுள் ஏதோ ஓர் இனத்தை அழிப்பது என்று நாம் இறங்கினால், அது மொத்த உலகின் இயல்பையும் பாதிக்கும்! யாராவது தீமை செய்தால், நீ பகவானிடம் பிரார்த்தனை செய்! அவர்களைத் திருத்துவதோ தண்டிப்பதோ எதுவோ அதை இறைவன் பார்த்துக் கொள்வான்!” என்றார்.

பெரியவரான புலஸ்தியரின் அறிவுரையைக் கேட்டுத் தனது வேள்வியை நிறுத்திவிட்டார் பராசரர். தன் சொல்லுக்கு மதிப்பளித்த பராசரருக்கு ஜடப்பொருட்களான அசேதனங்கள், அறிவுள்ள ஜீவாத்மாக்கள், இவர்களை ஆளும் இறைவன் ஆகிய மூவிதத் தத்துவங்களைக் குறித்த தெளிந்த ஞானம் ஏற்படும் என்று புலஸ்தியர் ஆசீர்வாதம் செய்தார். புலஸ்தியரின் ஆசீர்வாதம் அப்படியே பலிக்கட்டும் என்று வசிஷ்டரும் பராசரரை ஆசீர்வதித்தார்.

இந்த இரண்டு மகான்கள் ஒரே நாளில் செய்த ஆசீர்வாதத்தின் விளைவினால், பராசர முனிவரின் நாவிலே ஹயக்ரீவர் வந்து அமர்ந்துவிட்டாராம். அதனால்தான் பின்னாளில் பராசர முனிவர், இந்த மூவகைத் தத்துவங்களின் இயல்பைத் தெளிவாக விளக்கி, புராணரத்னம் எனப்படும் ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றி வழங்கினார். ஸ்ரீவிஷ்ணு புராணத்தை ராமானுஜரின் பரமகுருவான ஆளவந்தாரும், ராமானுஜரும் பலவாறு போற்றி உள்ளார்கள்.

இப்படி மகான்களின் அருளைப் பெற்றோர்களின் நாவிலே ஹயக்ரீவர் அமர்ந்து, நல்ல வாக்கு வன்மையை அவர்களுக்கு அருள்கிறார். அதனால், ஹயக்ரீவர் ‘கோபதி:’ என்று அழைக்கப்படுகிறார். கோ என்றால் வாக்கு, பதி என்றால் தலைவர். “கோபதி:” என்றால் வாக்குக்குத் தலைவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 497-வது திருநாமம்.“கோபதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, நல்ல வாக்கு வன்மை ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

———-

வசிஷ்ட மகரிஷியின் குமாரர் சக்தி மகரிஷி. சக்தி மகரிஷியின் குமாரர் பராசரர். பராசரரின் தாயார் அத்ருஷ்யந்தி. பராசரர் தம் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் பொழுதே, சக்தி மகரிஷி கல்மாசபாதன் என்னும் அரக்கனால் கொல்லப்பட்டார். பராசரர் பிறந்து தம் தாயின் மடியில் இருக்கும் போது தம் தாய் அமங்கலியாக இருக்கக் கண்டு காரணத்தைக் கேட்டார். உதிரன் என்னும் அரக்கனால் உன் தந்தை இறந்தார் என அவள் கூறக் கேட்டு அரக்க இனத்தையே அழிப்பதற்காகச் சத்திர யாகம் செய்தார்.

யாகத்தின் பயனாய் அரக்கர் யாக குண்டத்தில் வந்து விழுந்து இறக்கலாயினர். பின் சிவபிரானும், புலஸ்திய, பிரம்மாவும் வந்து வேண்டிக் கொள்ள யாகத்தை நிறுத்தினார். அதனால் மகிழ்ந்த புலஸ்திய மகரிஷி பராசரருக்குப் பூர்ண ஸம்ஹிதை”என்ற நூலை எழுத அருள் செய்தார்.

இவர் தன் தாயின் கர்ப்பத்திலேயே வேதங்களைச் சொன்னவர். இவரது புதல்வர் தான் வேத வியாசர். பராசரரின் மனைவியின் பெயர் சத்யவதி.

பராசரரின் மக்கள் தத்தன், அநந்தன், நந்தி, சதுமுகன், பருதிபாணி, மாலி என்னும் அறுவரும் சரவணப் பொய்கையில் முதலையுருக் கொண்டு விளையாடினர்.

இவ்விளையாட்டினால் பொய்கையில் இருந்த மீன்கள் செத்து மிதந்தன. பொய்கையில் நீராட வந்த பராசரர் இதனைப் பொறுக்காமல் அறுவரும் தன் மக்கள் என்றும் பாராமல் சபித்தார்.

சரவணப் பொய்கையில் ஆறு திருமேனிகள் கொண்டு விளங்கினான் ஒரு திருமுருகன்.இவ் ஆறு திருமேனிகளையும் ஆர்வத்துடன் அம்பிகை கட்டியணைத்தாள். ஆறு திருமேனிகளும் ஒன்றாக இணைந்து முருகன், கந்தன் என்னும் திருநாமம் பெற்றான்.

இக்கந்தப் பெருமானுக்கு அன்னை தன் திருமுலைப் பாலை ஊட்டினாள். அந்த சிவ ஞானப்பால் சரவணப் பொய்கையிலும் பெருகியது. அதனை உண்டு மீன்களாய் இருந்த பராசரரின் குமாரர் அறுவரும் சாபவிமோசனம் பெற்றனர்.

நட்சத்திரம், திதி முதலியன அனைத்தும் குறிப்பிட்ட ஒருநாளில் நல்ல நிலையில் உச்சத்தில் இருக்கும்போது, மனைவியின் வழி ஒரு குமாரனைப் பெற்றால் அவன் உலகம் போற்றும் உத்தமன் ஆக இருப்பான் என்பதனை உணர்ந்தார்.

அத்தகைய புனிதமான நாள் வர, அந்நாளில் தம் மனைவியை அடையப் பராசரர் தவத்தில் இருந்து தம் பர்ணசாலைக்குப் புறப்பட்டார். வழியில் யமுனை நதி குறுக்கிட்டது. தாசராஜனின் வளர்ப்பு மகள் யமுனையில் படகு விட்டுக் கொண்டு இருந்தவள், படகுத்துறையில் படகுடன் இருந்தாள்.

பராசரர் படகை அக்கரைக்கு விடுமாறு கூறினார். ஸ்வாமி! படகுக்குத் தேவையான பாரம் வேண்டுமே! தாங்கள் ஒருவர்தான் இருக்கின்றீர்! இன்னும் சிலர் வந்தால் படகினை ஆற்றில் இறக்கி விடலாம் என்றாள் மச்சகந்தி.

பெண்ணே! படகினுக்குத் தேவையான பாரமாக நான் ஒருவனே இருப்பேன். படகினை நதியில் விடு என்று அவசரப்படுத்தினார் முனிவர். யாரோ ஒரு மகானுபாவர் என்று எண்ணிய மச்சகந்தி படகினை விடச் சம்மதித்தாள். படகு யமுனைக்குள் சென்றது. முனிவர் வானை ஆராய்ந்தார். நட்சத்திரம் உச்சத்தினை அடைந்தது. தாம் கணித்த நேரம் வந்து விட்டதனை உணர்ந்தார். இனி தம் ஆசிரமம் செல்லுவதற்குள் குறிப்பிட்ட காலம் கடந்து விடும் என உணர்ந்தார். மச்சகந்தியிடம் செய்தியைத் தெரிவித்து அவள் சம்மதத்துடன் அவளைப் பரிமளகந்தியாக ஆக்கி நதியின் நடுவே ஒரு த்வீபத்தை (தீவை) உண்டாக்கி அங்கே அவளிடமாக ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அக்குழந்தை த்வீபத்தில் பிறந்ததால் துவைபாயனர் எனப்பட்டது. அக்குழந்தை தான் வேத வியாசர்.

ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளினார் பராசரர். இவர் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு ஆண்டுகள் கர்ப்ப வாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களையும் சரங்களையும் பராஜயம் (தோல்வி) அடையச் செய்தமையின் பராசரர் எனப்பட்டார்.மன்மதனின் பஞ்ச பாணங்களையும் பராஜயம் அடையச் செய்தமையாலும் (காமத்தை வென்றவர் என்று பொருள்) பராசரர் எனப்பட்டார்.

இவர் எழுதியது ஸ்ரீ விஷ்ணு புராணம். இது இவர் உலகுக்கு வகுத்துக் கொடுத்த பக்தி மார்க்கம். ஸ்ரீமத் பாகவதத்திற்கு மூலநூல் ஆகும். ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் வேதாந்த கருத்துகள் பின்னிப் பிணைந்து இருக்கும்,

இவர் கர்ம நெறிகள், வாழ்க்கை முறைகள். சமூகக் கோட்பாடுகள், தனிமனித நியாயங்கள். தர்ம சாத்திரமாக “பராசரர் ஸ்மிருதி’ என்று எழுதியுள்ளார்.

பகைவர்களிடத்தும் கோபம் கொண்டு எதிரம்பு செலுத்தாமையாலும் பராசரர் எனப்பட்டார்.

தாயின் கர்ப்பகத்தில் இருந்து மந்திர உச்சாடனம் செய்து வயிற்றை பீறிக் கொண்டு வந்ததாலும் பராசரர் எனப்பட்டார்.

தேவர்க்குக் கொடுத்தது போக மீதமான அமுதத்தை விஷ்ணு மூர்த்தி இவரிடம் கொடுத்தார். பராசரர் அதனை அசுரர்க்கு அஞ்சிப் பூமியில் புதைத்தார்.

வக்ராசூரன், தண்டாசூரன், வீராசூரன் என்ற மூவரும் அமுதத்தைக் கவர முயல்கையில் பராசரர் சிவமூர்த்தியை வேண்டினார்.உடனே சிவபிரான் பராசக்தியிடமாக சண்டகாதினி, வீரை, சயந்தி, சயமர்த்தினி என்னும் நான்கு துர்க்கைகளைப் படைத்து அவர்கள் மூலமாக அசுரரைக் கொல்வித்தார்.

புதைத்த அமுதகுடம் அமுதநதி என்னும் நதியாகப் பெருகியது. பவாநி கூடலில் உள்ள நதி இதுவாம்.

பராசரர் முனிவர் மகாராஸ்டிர மாநிலத்தில் பிறந்தவர் என்று நம்பப்படுகிறது. “பன்ஹலா கோட்டை” கோலாபூர் ஜில்லாவில் உள்ளது. அந்தக் கோட்டையில் உள்ள ஒரு குகை பராசரர் வாழ்ந்த இடம் என்று மக்கள் கருதுகின்றனர். இந்தியாவின் புராணங்களால் ஒரு மிகச் சிறந்த முனிவராக போற்றப்படுபவர் பராசரர். பீஷ்மரை அம்பு படுக்கையில் பார்த்தவர்.

பராசரர் ஜோதிட சாஸ்திரத்தை உலகிற்கு அளித்தவர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

———————

அது வசந்த காலமாகையால், மன்னன் {உபரிசரன்} சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், சம்பகங்களும் {செண்பகங்களும்}, சுதங்களும் {மாமரங்களும்}, அதிமுக்தங்களும் {தினிசமரங்களும்} நிறைந்திருந்தன. அங்கே புன்னாகம் {புன்னை}, கர்ணீகரம் {கொன்றை}, வாகுலம் {மகிழம்}, திவ்யபாதாளம் {பாதிரிமரங்கள்},பாதாளம் {பலா}, நாரிகேளம் {தென்னை}, சந்தனம், அர்ஜுனம் {மருதமரம்} போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.
அந்த முழுக் கானகமே கோகிலப் பறவைகளின் {குயில்களின்} இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மன்னன் {உபரிசரன்} மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு,அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.
துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று, “இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது” என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.
அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.
அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.
இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.
உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.
வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.
சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.
அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.
அவர்கள் {மீனவர்கள்}, “ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்” என்றனர்.
ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.
அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.
அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.
அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.
அந்த அப்சரஸின் மகளும், மீன் நாற்றம் கொண்டவளுமான அக் குழந்தையை மன்னன் {சேதி நாட்டு மன்னன் உபரிசரன்} மீனவர்களிடம் {செம்படவர்களிடம்} கொடுத்து, “இவள் உங்கள் மகளாக இருக்கட்டும்” என்றான்.
அந்தப் பெண்குழந்தை சத்தியவதி என்ற பெயரால் அறியப்பட்டாள். மிகுந்த அழகைக் கொடையாகக் கொண்டு, அனைத்து அறங்களையும் தன்னகத்தே கொண்டு, இனிய புன்னகை உடையவளாய், மீனவர்களின் தொடர்பால், சிறிது காலம் மீன் நாற்றத்தோடே இருந்தாள்.{அதனால் அவள் மச்சகந்தி என்றும் அறியப்பட்டாள்}.
தனது (வளர்ப்புத்) தந்தைக்குச் சேவை செய்வதற்காக, யமுனையின் நீரில் அவள் ஓடம் செலுத்திக் கொண்டிருந்தாள். இந்த வேலையை அவள் {சத்தியவதி} செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள், யாத்திரை செய்து கொண்டிருந்த பெரும் முனிவர் பராசரரால் சத்தியவதி பார்க்கப்பட்டாள்.
பேரழகைக் கொடையாகக் கொண்டவளும், துறவிகளுக்கும் ஆசையைத் தரும் வடிவம் உடையவளும், இனிய புன்னகையை உடையவளுமான அவளைக் கண்டதும் ஞானியான முனிவர் {பராசரர்} அவளை அடைய விருப்பம் கொண்டார்.
திரஸரேணு எனப்பட்ட சிறு அணுவளவான உன் பிதிர்கள், “அஞ்சாதே” என்று சொன்னதால் ஆகாயத்திலேயே நின்றாய். அதன் பின் அவர்கள் “யோக சக்தியற்று விழுகிறாய். தேவர்களுக்குச் செய்த கர்மம் அப்போதே பலிக்கும். மனிதருக்கோ செய்த கர்மங்கள் வேறு பிறவியில் பலிக்கும். அடுத்தப் பிறவியில் இதன் பலனை அனுபவிப்பாய். கங்கையில் பிறந்திருக்கும் அத்ரிகையின் கருவில் நீ மகளாகப் பிறப்பாய். பராசரருக்கு ஒரு மகனை ஈன்றெடுப்பாய். அவன் வேதங்களை நான்காக வகுப்பான். மஹாபிஷக்கின் மகனாகிய சந்தனுவிடம் சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையும் பெறுவாய். அதன் பிறகு மீண்டும் உன் உலகத்திற்குத் திரும்புவாய். இந்த மன்னனுக்கே {உபரிசரனுக்கு} அத்திரிகையிடம் நீ மகளாகப் பிறப்பாய். இருபத்தெட்டாவது சதுர்யுகத்தைச் சேர்ந்த துவாபர யுகத்தில் நீ மீனின் யோனியில் உயிரை அடைவாய்” என்று சொன்னார்கள்.
அத்திரிகை, பிரம்மாவின் சாபத்தினால் மீனாகப் பிறந்து, உன்னைப் பெற்ற பிறகு சொர்க்கம் சென்றாள். அந்த அச்சோதையாகிய நீ வசுவென்ற மன்னனின் வீரியத்திற்கு, மீனாக இருந்த அப்சரஸிடம் பிறந்தாய். ஆதலால், வசுவின் மகளே, உனக்கு மங்கலமுண்டாகட்டும். வம்சவிருத்திக்காக ஒரு மகனை நான் வேண்டுகிறேன். அழானவளே, என்னுடன் சங்கமிப்பாய்” என்று நயமாகப் பேசினார் பராசரர். என்று இருக்கிறது.
முனிவர்களில் காளையான அந்த முனிவர் {பராசரரால்}, தெய்வீக அழகும், சீராக மெலிந்த தொடைகளையும் கொண்ட வசுவின் {உபரிசரனின்} மகளிடம் {சத்தியவதியிடம்}, “ஓ அருளப்பட்டவளே! எனது அணைப்பை ஏற்றுக் கொள்வாயாக” என்றார்.
அதற்குச் சத்தியவதி, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நதியின் இருபுறமும் முனிவர்கள் இருப்பதைப் பாரும். அவர்களால் பார்க்கப்படும்போது, உமது ஆசையை நான் எப்படி நிறைவேற்றுவது?” என்றாள் {சத்தியவதி}.
அவளால் {சத்தியவதியால்} இப்படிக் கூறப்பட்ட துறவி {பராசரர்}, அங்கே (அதுவரை இல்லாத) மூடுபனியை உண்டாக்கினார். அது {மூடுபனி} அந்தப் பகுதியையே இருளில் மூழ்கடித்தது.
முனிவரால் {பராசரரால்} உண்டாக்கப்பட்ட அந்த மூடுபனியைக் கண்ட அந்தப் பெண் {சத்தியவதி} பெரிதும் ஆச்சரியப்பட்டாள். உதவியற்றவளும், நாணமும் வெட்கமும் கொண்டவளுமான அந்த மங்கை {சத்தியவதி}, “ஓ புனிதமானவரே! {பராசரரே} நான் எனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண் என்பதை மனத்தில் கொள்வீராக. ஓ பாவங்களற்றவரே! {பராசரரே} உமது அணைப்பை நான் ஏற்றால், எனது கன்னித் தன்மைக்குக் களங்கமேற்படும்.
ஓ பிராமணர்களில் சிறந்தவரே, ஓ முனிவரே {பராசரரே}, எனது கற்பைக் களங்கப்படுத்திக்கொண்டு, நான் எப்படி வீடு திரும்ப முடியும்? அதன்பிறகு என்னால் எனது உயிரைத் தாங்க முடியாது. இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக” என்றாள்.
அந்த முனிவர்களில் சிறந்தவர் {பராசரர்}, அவள் {சத்தியவதி} சொன்னதையெல்லாம் கேட்டு மனநிறைவுகொண்டு, “எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்.
ஓ அச்சங்கொண்டவளே, ஓ அழகான மங்கையே {சத்தியவதியே}, நீ விரும்பும் வரத்தைக் கேட்பாயாக. ஓ அழகான புன்னகைக் கொண்டவளே, எனது அருள் எப்போதும் கனியற்றதாக (பலனற்றதாக) இருந்ததில்லை” என்றார்.
இப்படிச்சொல்லப்பட்ட அந்த மங்கை {சத்தியவதி}, தனது உடல், (அப்போது கொண்டிருந்த மீன் நாற்றத்திற்குப் பதிலாக) இனிமையான நறுமணத்தை வெளியிட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவரும் {பராசரரும்}, அவளது இதயத்தில் இருந்த விருப்பத்தை நிறைவேற்றினார்.
கேட்ட வரத்தைப் பெற்றுக் கொண்டு, பெரும் மனநிறைவை அடைந்த அவளுக்கு {சத்தியவதிக்கு} உடனே பருவ காலமும் வந்தது. அற்புதமான செயல்கள் பல செய்த அந்த முனிவரின் {பராசரரின்} அணைப்பை அவள் {சத்தியவதி} ஏற்றாள்.
அதுமுதல் அவள் {சத்தியவதி} மனிதர்களால் கந்தவதி ({பரிமளகந்தி}, நறுமணம் கொண்டவள்) என்று அழைக்கப்பட்டாள். ஒரு யோஜனைக்கு அப்பாலிருந்த மனிதர்களுக்கு அவளது நறுமணத்தை நுகர முடிந்தது.
இதனால் அவள் {சத்தியவதி} யோஜனகந்தா (ஒரு யோஜனைக்கு அப்பாலும் நறுமணத்தைக் கொடுப்பவள்) என்ற மற்றுமொரு பெயராலும் அழைக்கப்பட்டாள். அந்தச் சிறப்பு வாய்ந்த பராசரர், அதன்பிறகு தனது ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.
வரத்தினால் இனிய நறுமணத்தை அடைந்த சத்தியவதி மனநிறைவை அடைந்தாள். பராசரரால் அணைக்கப்பட்டுக் கருவுற்றாலும், அவள் கன்னித்தன்மைக் கெடவில்லை. யமுனையின் தீவு ஒன்றில், அன்றே {கருக்கொண்ட அந்நாளிலேயே} பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட பராசரரின் குழந்தையை {வியாசரைப்} பெற்றெடுத்தாள்.
அந்தக் குழந்தை {வியாசர்}, தனது தாயின் {சத்தியவதியின்} அனுமதியைப் பெற்று, தவத்தில் தனது மனதைச் செலுத்தினான்.
அவன், “சமயம் வரும் போது, நீ என்னை நினைத்தவுடன் நான் உன் முன் தோன்றுவேன்” என்று சொல்லிவிட்டு {வியாசர்} சென்றுவிட்டான். இப்படியே வியாசர் சத்தியவதிக்கு, பராசரர் மூலம் பிறந்தார்.
அவர் {வியாசர்} தீவு ஒன்றில் பிறந்ததால், துவைபாயனர் (தீவில் பிறந்தவர்) என்று அழைக்கப்பட்டார். அனைத்தும் கற்ற துவைபாயனர் {வியாசர்}, ஒவ்வொரு யுகத்திலும் அறமானது, தனது கால்களில் ஒன்றை இழப்பதையும், வாழ்வுக்காலமும், மனிதர்களின் பலமும் யுகங்களைப் பொறுத்தே அமைவதையும் கண்டு, பிரம்மன் மற்றும் பிராமணர்களின் அருளைப் பெறுவதற்காக வேதங்களைத் தொகுத்தார்.
அதனால் அவர் வியாசர் (தொகுப்பாளர் (அ) சீர்படுத்துபவர்) என்று அழைக்கப்பட்டார். அந்த வரமளிக்கும் சிறந்த மனிதர் {வியாசர்}, சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், வைசம்பாயனர் {நான்} ஆகியோருக்கு மஹாபாரதத்தை ஐந்தாவதாகக் கொண்ட {நான்கு} வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.
பாரதம் என்னும் தொகுப்பு அவர்கள் {சீடர்கள்} மூலமாக {அவர்கள் மூலமாகவும்), வைசம்பாயனர் மூலமாகவும் வெளிப்பட்டது.
சூரியன் ஆகாயத்தில் எழுந்து கொண்டிருந்த நேரத்தில் பராசர முனிவர் காலையில் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். அப்பொழுது அவ்விடத்திற்கு மைத்ரேய முனிவர் தனது குருநாதரை காண்பதற்காக வந்திருந்தார். தன்னுடைய குருநாதரை கண்டதும் அவரை வணங்கி நின்றார்.
குருநாதரான பராசர முனிவர், அதிகாலைப் பொழுதில் தன்னுடைய சீடன் தன்னை காண வந்திருக்கின்றார் என்றால் அவருடைய மனதில் பலவிதமான எண்ணங்களும், ஐயங்களும் ஏற்பட்டிருக்கும் என்பதை அவரை வணங்கிய விதத்திலிருந்து கண்டறிந்தார். பின்பு குருநாதர் தனது சீடனை நோக்கி மனதில் என்ன குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றாய். ஏதேனும் ஐயம் உள்ளதா? என்று வினாவினார்.
மைத்ரேய முனிவரும் தனது குருநாதரை வணங்கி ஆம் குருநாதரே! அனைத்து வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும், வேதாந்தங்களையும் தங்களிடமிருந்து நான் கற்றறிந்தேன். இன்று பல சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிஞர்கள் பலர் எம்மை பாராட்டுவதற்கு முதன்மை காரணமே தங்களிடம் நான் கற்றதே ஆகும் என்று கூறினார்.
குருவும் தனது சீடனை நோக்கி சாஸ்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும், யாமறிந்த செய்திகளையும் உமக்கு எடுத்து கூறினோம். ஆயினும் அவைகள் உண்மை வந்தடைய வேண்டும் என்பது இருந்ததினால் மட்டுமே உம்மால் அதை முழுமையாக கற்றறிய முடிந்தது என்று கூறினார்.
சீடரும் தமக்கு கலைகளை கற்றுக்கொடுத்த குருவை வணங்கி பின்பு குருவே எமக்கு ஒரு சந்தேகம் இருக்கின்றது அதை பற்றி தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று கூறினார்.
குருவும் உமது சந்தேகங்களை எடுத்துரைப்பாயாக! எம்மால் முடிந்த அளவு அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றேன் என்று கூறினார்.
குருவே! தர்மங்கள் பல அறிந்தவரே! நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த உலகம் எவ்விதத்தில் உண்டாகியது?
இனி வரப்போகின்ற நாட்களில் இந்த உலகம் தன்னை எவ்விதத்தில் மாற்றிக்கொள்ள இருக்கின்றது? என்பதையும்
இந்த உலகம் எதன் சொரூபமாக விளங்குகின்றது?
உலகம் எப்படி உருவாயிற்று?
எங்கே இருக்கின்றது?
பஞ்சபூதங்கள் எப்படி உருவானது?
அவைகள் எவ்விதத்தில் நம்மை கட்டுப்படுத்துகின்றன?
மேலும் தேவதைகள், உயிரினங்கள் முதலியவற்றின் உற்பத்திகளையும், படைப்பு தொழிலானது எப்படி தோன்றியது? என்பதையும்
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய கடல்கள், மலைகள் எவ்விதத்தில் தோன்றி இருக்கின்றன? என்பதையும்
அவைகள் பூமியில் இருக்கக்கூடிய நிலைகளை பற்றியும்..
பூமிக்கு வெளிச்சத்தை அளிக்கக்கூடிய சூரியன் மற்றும் சந்திர கோள்களின் நிலைகளை பற்றியும்..
அவர்களுடைய அளவுகளை பற்றியும்..
தேவர்களுடைய அம்சங்களை பற்றியும்..
மனுக்கள், மனுவந்தாரங்ளையும், மகா கல்பங்களையும், நான்கு யுகங்களின் பிரிவுகளையும், அவைகளுடைய முடிவு நிலைகளையும், ஒவ்வொரு யுகத்திலும் செய்ய வேண்டிய தர்மங்களையும் நான் அறிந்துகொள்ள மிகுந்த ஆவல் கொண்டிருக்கின்றேன்.
“பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்?” என்று மைத்ரேயர் கேட்டார்.
பராசர மகரிஷி கூறலானார், “மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அதுபோலவே, எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான்.
ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்துகொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா?! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.
இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன்.”
“மைத்ரேயரே! நிமிஷகள் 15 கூடியது 1 காஷ்டை; அந்தக் காஷ்டை 30-தானால் அது ஒரு கலை, அந்தக் கலைகள் 30-தானால் 1 முகூர்த்தம், அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு 1 அகோராத்திரம்; அதாவது 1 நாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் 2 பக்ஷங்களோடு கூடிய 1 மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் (12) தட்சணாயனம் உத்திராயணம் என்ற 2 அயனங்கள் சேர்ந்து 1 வருஷமாகும்.
தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் 12000 ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம் (4). அதில் கிருதயுகம் நாலாயிரமும் (4000) சந்தி, சந்தியம்சங்கள் 800 திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட 3600 ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட 2400 தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு 1000 சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறு(200)-மாக இருக்கும்
சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்தியகாலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது, கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் (1000 x) திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் 14 மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன், கேட்பீராக!”
“மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும், இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் 71 மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி 100 தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே, 30 கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும்.
இப்படிப் 14 மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள், அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள்.
அதன் பிறகு, சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன், திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி, அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால், ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய், முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன்.
இதுபோல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் 50 ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீ வராக கல்பம்!”
தரணீதராய நமஹ…..!!!
பிரம்மதேவர் உலகைப் படைப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, பூமியின் நிலப்பரப்பு அனைத்தும் ஊழிக் கடலுக்குள்
மூழ்கி இருப்பதை உணர்ந்தார். அந்த நிலத்தை நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து நிறுத்தினால் தானே அவரால் உயிர்களைப் படைக்க முடியும்? அதனால் ஊழிக் கடலுக்குள் மூழ்கி இருக்கும் பூமியை உயர்த்துமாறு திருமாலிடம் பிரார்த்தனை செய்தார் பிரம்மா.
கடலுக்குள் மூழ்கிப் பூமியை மீட்டெடுப்பதற்கு ஏற்றபடி மிகப்பெரிய பன்றி வடிவில் தோன்றினார் திருமால். அதைத் தான் வராக அவதாரம் என்கிறோம். வேதமும் யாகங்களும் உலகைத் தாங்கி நிற்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் உலகைத் தாங்கிப் பிடிக்கப் போகும் வராகப் பெருமாள் வேதம், யாகம் இவற்றையே தனக்கு உடலாகக் கொண்டு அவதரித்தார்.
கடலுக்குள் அழுந்திக் கிடந்த பூமிதேவி, “தாமரைக் கண்ணனே! மாதவனே! நீர் தான் அடியேனைக் காத்தருள வேண்டும். நான் உன்னால் உருவாக்கப்பட்டவள். உன்னிடத்தில் நிலைநிற்பவள். உன்னையே சரணமாகப் பற்றியவள். மாதவனாகிய உன்னையே சார்ந்திருப்பதால் நான் மாதவி என்றழைக்கப்படுகிறேன். உடைமையை மீட்க வேண்டியது உடையவனின் பொறுப்பன்றோ?” என்று வராகப் பெருமாளிடம்
வேண்டினாள்.
நிலமடந்தையின் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்த வராகப் பெருமாள், பன்றிகளைப் போல் குர் குர் என்ற ஒலி எழுப்பினார். அந்த ஒலி சாம வேத கானதைப் போல் இனிதாக இருந்தது. அந்த ஒலியோடு கடலுக்குள் மூழ்கினார். கோரைக் கிழங்கைப் பன்றிகள் கொத்தி எடுப்பது போல், பூமியை இடந்தெடுத்தார். கடலில் இருந்து ஒரு நீல மலை, இரண்டு பிறை சந்திரன்களைத் தன் மேல் ஏந்தியபடி வந்தால் எப்படி இருக்கும்? அதுபோல் பிறைச் சந்திரனைப் போன்ற தனது இரண்டு கோரைப் பற்களுக்கு நடுவிலே பூமியை ஏந்தியபடி, நீல மலைபோல் கடலில் இருந்து மேலே வந்தார் வராகப் பெருமாள்.
“நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!”
என்று நம்மாழ்வார் இதை அனுபவிக்கிறார்.
அப்போது பூமி தேவி, “சுவாமி! இந்த ஊழிக் கடலில் இருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். ஆனால் பிறவிப் பெரும் கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் துன்பப் படுகிறார்களே! அவர்களைக் காக்க என்ன வழி?” என்று கேட்டாள்.
அப்போது அனைத்து ஜீவராசிகளும் பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடியை அடைவதற்குரிய எளிய வழிமுறைகளைச் சொல்லும் வராக புராணம் என்ற புராணத்தைப் பூமிதேவிக்கு வராகப் பெருமாள் உபதேசித்தார்.
அதில் முக்கியமாக, “ஒருவன் இளம் வயதில், உடலும் மனதும் வலிமையோடு இருக்கும் காலத்தில், எனக்குப் பூமாலை சமர்ப்பித்து, என் நாமங்களைப் பாமாலையாகப் பாடினால், அந்த பக்தன் முதுமைக் காலத்தில் என்னை மறந்தாலும் நான் அவனை மறக்காமல் அவனைக் காத்தருள்வேன்!” என்று வராகப் பெருமாள் வாக்களித்தார்.
பூமியை மீட்டுக் கொண்டு மேலே வந்த வராகரைத் தரிசித்த முனிவர்கள் யக்ஞவராகனாக அப்பெருமாளைக் கண்டு துதி செய்தார்கள். “இறைவா! யாகத்தின் அங்கங்கள் அனைத்தும் உனது திருமேனியின் அங்கங்களாக உள்ளன. உனது இரு கரங்களும் இரு திருவடிகளும் சேர்ந்து நான்கு வேதங்களாகும். உனது தலையே வேதத்தின் தொடக்கமாகிய பிரணவமாகும். உனது கோரைப் பல்லே யாகத்தில் பயன்படுத்தப்படும் யூபஸ்தம்பம் ஆகும். உனது மற்றைய பற்களே யாகங்கள். உனது நாக்கே அக்னி ஆகும். உனது ரோமங்களே தர்ப்பைப் புற்கள். யாகத்துக்குரிய காலங்களாகிய காலை, மாலை இரண்டும் உனது இரு கண்கள். உனது மூக்கே யாகக் கரண்டி!” என்றெல்லாம் வர்ணித்தார்கள் அம்முனிவர்கள்.
மேலும், “எங்களை எல்லாம் பூமி தேவி தாங்குகிறாள். நீயோ அந்த பூமியையே தாங்கிப் பிடித்து மீட்டெடுத்துள்ளாய்!” என்று சொல்லி வராகனைத் துதித்தார்கள் முனிவர்கள். வராகர் பூமியைக் கடல் மட்டத்துக்கு மேல் நிலைநிறுத்தியவாறே பிரம்மா படைப்புத் தொழிலை நடத்தியதாக வரலாறு.
(மேற்கூறிய வரலாறு விஷ்ணு புராணத்தை அடியொற்றிக் கூறப்பட்டுள்ளது. இரணியனின் தம்பி இரணியாக்ஷன் பூமியைக் கடலுக்குள் அழுத்தி வைத்ததாகவும், அவனைக் கொன்று பூமியை வராகர் மீட்டதாகச் சொல்லும் வேறு புராணங்களும் உண்டு.)
‘தாரணம்’ என்றால் தாங்குதல் என்று பொருள். அவ்வாறு தாரணம் செய்வதால், பூமி தேவியைத் ‘தரணீ’ என்று அழைக்கிறோம். அந்தத் தரணீயையே தரிப்பதால் (தாங்குவதால்), திருமால் ‘தரணீதர:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 237-வது திருநாமம்.
“தரணீதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் படி, பூமியை உயர்த்திக் காத்த வராகர் அருள்புரிவார்.

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading