அவதாரிகை –
இதில்-இந்த்ரிய பயாக்ரோசத்தை அருளிச் செய்த ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
உலகமுண்ட பெரு வாயனிலே ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே ஆர்த்தி பரவசராய்-பூர்ண பிரபத்தி பண்ணினவர்
தொடங்கின கார்யம் தலைக் கட்டினால் அல்லது கார்யம் செய்யோம் -என்று இருக்கும் நிரந்குச ஸ்வதந்த்ரனான ஈஸ்வரன்
பழையபடியே தம்மை சம்சாரத்திலே வைக்கக் கண்டு சம்சாரம் ஆகிற சிறைக் கூடத்திலே புண்ய பாபங்கள் ஆகிற இரு விலங்கை இட்டு
இந்த்ரியங்கள் ஆகிற படர் கையிலே கண் பாராமல் நலியுங்கோள் என்று காட்டிக் கொடுத்து
நம் எளிவு கண்டு சிரித்துக் கொண்டு
ஸ்ரீ திரு நாட்டிலே தானும் நித்ய சூரிகளுமாக இருக்கிறான் என்று அனுசந்தித்து
தம்முடைய ஆர்த்தி அதிசயத்தையும்-ரஷகத்வ உபாய யோகியானவன் குணங்களையும்
அவன் திரு முகத்தைப் பார்த்து சொல்லா நின்று கொண்டு கேட்டார்க்கு தரிப்பு அரிதாம் படி கூப்பிடுகிற
உண்ணிலாவிய -யின் அர்த்தத்தை உண்ணிலா ஐவர் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————————–
உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில்
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான்
என்று நினைந்து ஓலமிட்ட இன் புகழ் சேர் மாறன் என
குன்றி விடுமே பவக் கங்குல்—61-
——————————————————-
வியாக்யானம்–
உண்ணிலா வைவருடன் யிருத்தி யிவ்வுலகில் –
இவ் வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-இருள் தரும் மா ஞாலமான சம்சாரத்திலே ஆந்த்ர சத்ருக்களாய் வர்த்திக்கிற
ஐந்து இந்த்ரியங்களோடே இருக்கப் பண்ணி –
ஐம் புலன் இவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் -என்றத்தைப் பின் சென்ற படி –
எண்ணிலா மாயன் எனை நலிய -எண்ணுகின்றான் –
எண்ணிலா மாயன்-இவ்வுலகில் -உண்ணிலா வைவருடன் யிருத்தி-எனை நலிய -எண்ணுகின்றான் –
அசங்க்யாதமான ஐஸ்வர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்-தமோபிபூதமானஇவ் விபூதியிலே
அஹம் அர்த்தமான ஆத்மாவை-அறிவு அழியப் பண்ணுமதான ஐந்து இந்த்ரியங்களும்
ஆத்மானுபந்தி என்னலாம் படி பொருந்தி இருக்கும்படி ஆக்கி துர்பலனான என்னை
அவற்றைக் கொண்டு விஷயங்களிலே தள்ளி பாதிக்கைக்கு கார்ய விசாரம் பண்ணா நின்றான்-
அதாவது
உண்ணிலாவிய வைவரால் குமை தீற்றி என்னை யுன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றும்
ஓர் ஐந்து இவை பெய்தி இராப்பகல் மோதிவித்திட்டு -என்றும்
ஐவரால் வினையேனை மோதுவித்து -என்றும்
ஓர் ஐவரைக் காட்டி -என்றும்
ஐவரை நேர் மருந்குடைத் தாவடைத்து -என்றும்
ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த -என்றும்
சுமடு தந்தாய் -என்றும்
அவன் இப்படி ஐவரைக் கொண்டு செய்வித்தான் என்று–அவன் மேலே பழி இட்ட படி -என்கை
எண்ணிலா மாயன் என்னை நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து –
சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருக்கிற ஸ்ரீ ஈஸ்வரன்
அஜ்ஞனாய்-அசக்தனாய்-சரணம் புகுந்த என்னை நலிந்தது போராமல் இன்னும் நலிய எண்ணுகின்றான் என்று எண்ணி
நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் எண்ணிலா பெரு மாயனே -என்றத்தைக் காட்டுகிறது-
நலிய எண்ணுகின்றான் என்று நினைந்து ஓலமிட்ட –
ஸ்ரீ பரமபத யதாவானவன்-நிர்த்த்தயரைப் போலே தமிப்பிக்க யத்னம் பண்ணா நின்றான் என்று எண்ணி ஓலமிட்ட –
எண்ணிலா பெரு மாயனே -என்றும்
கார் முகில் வண்ணனே -என்றும்
சோதி நீண் முடியாய் -என்றும்
வினையேன் வினை தீர் மருந்தே -என்றும்
விண்ணுளார் பெருமானேயோ -என்றும்
பத்தியின் உள்ளாய் பரமீசனே -என்றும்
கொடியேன் பருகு இன்னமுதே -என்றும்
என் அம்மா என் கண்ணா -என்றும்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்றும்
இப்படி இந்த்ரிய பயத்தாலே ரஷகத்வாதி குணங்களுக்கு வாசகமான அவன் திரு நாமங்களைச் சொல்லி –
சாகாம்ருகா ராவண சாயகர்த்தா -என்றும்
ஹா ராம சத்யவ்ரத தீர்க்க பாஹோ பூர்ண சந்திர ப்ரதிமா ந்வக்த்ர-என்றும்
சாகா மிருகங்களைப்போலே இவரும் கண்வாளிக்குடைந்தடைந்தும்-கண் என்னும் வாளி -அம்புக்கு உடைந்து அடைந்து
ம்ருகீ சிம்ஹை ரிவாவ்ருதா -என்னும்படி ம்ருகசாபாஷி யானவள் ராஷசிகள் மத்யம் அசஹ்யமாய்
அவர் குளிர்ந்த முகத்திலே விழிக்க ஆசைப் பட்டு கூப்பிட்டால் போலேயும் கூப்பிட்டபடி-
இன் புகழ் சேர் –
நாடடைய இந்த்ரிய கிங்கராய்-தத் லாபத்தாலே கூப்பிட
இவர் இந்த்ரிய பய குரோசம் பண்ணுகை யாயிற்று-இவருக்கு இன் புகழ் சேர்ந்தது
காமாத்மதகல்வபி நப்ரசச்தா -என்னக் கடவது இறே –
பாதம் அகலகில்லாத் தம்மை அகற்றுவற்றின் நடுவே இருத்தக் கண்டு -நலிவான் – சுமடு தந்தாய் -ஒ -என்று
சாதன பலமான ஆக்ரோசத்தோடே-பழி இட்டு – என்று இறே ஸ்ரீ அழகிய பெருமாள் நாயனார் அருளிச் செய்தது
இன் புகழ் சேர் மாறன் என –
கேட்க்கைக்கு இனியதாய் ஸ்லாக்கியமான யஸஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்று அனுசந்திக்க –
குன்றி விடுமே பவக் கங்குல் –
இவ் உக்தி மாத்ரத்தாலே-சம்சாரம் ஆகிற காளராத்ரி நசித்து விடும்
இது நிச்சயம் –
குன்றுதல் -குறைதல்
ஸ்ரீ ஆழ்வாரைப் போலே-அமுதம் கொண்ட மூர்த்தியோ -என்று கூப்பிடுகை அன்றிக்கே
அவர் திரு நாமத்தைச் சொல்லவே-விடியா வென்னரகான சம்சாரத்துக்கு விடிவு பிறக்கும் —
————————————————————————————–
அவதாரிகை –
இதில்-அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி-மோஹித்து-இவர் கிடக்க-பார்ஸ்வத்தரான பரிவர் ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை
ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————————
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-
அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-
தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -சுவீகாரமும் உபாயம் இல்லை
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே
—————————————————–
வியாக்யானம்–
கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பஸ்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்-இத்யாதிப்படியே-திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –இப்படி அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-
அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –
ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
இங்கு இவள் பால் –
இத்தசையில்-இவள்-இடையாட்டமாக –
என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ-ஒன்றும் தெரிகிறது இல்லை
எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு – உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –
என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே திருத் தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-
அஞ்சொலுற –
அஞ்சொல் உற-அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –
நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் –
கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக ஓர் ஸ்ரீ அரங்கரைப் பார்த்து-ஒருகிற ஸ்ரீ அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
ஸ்ரீ திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
ஸ்ரீ அரங்கநகர் மேய அப்பனாய்-மந்தி பாய் -இத்யாதிப் படியே பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் – என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
அறலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-
அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி –
துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –
இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –
———————————————
அவதாரிகை –
இதில்-ஸ்ரீ தென் திருப் பேரிலே அபஹ்ருத சித்தர் ஆனபடியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ் –
தம் தசை தாம் வாய் விட்டு பேச மாட்டாதே மோஹித்துக் கிடந்தவர்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு நாம பிரசங்கமே-சிசிரோப சாரமாக-அத்தாலே ஆஸ்வச்தராய் யுணர்ந்து
தத் வைலஷ்ய அனுசந்தானத்தாலே அப்ருஹ்ய சித்தராய்
ஸ்ரீ பெரிய பெருமாள் எழுந்து அருளி இருக்கிறது
ஸ்ரீ தென் திருப் பேரிலே போவதாகப் பதறிப் புறப்பட இப்படி பதறுகை நம் ஸ்வரூபத்துக்கு சேராது
அவர் தாமே வரக் கண்டு
நம் சேஷத்வத்தை நோக்கிக் கொண்டு-பாடாற்றிக் கொண்டு இருக்க வேண்டாவோ என்று பரிசர வர்த்திகள் நிவாரிக்க
சர்வதா நான் அங்கே போய் சேருகை தவிரேன் -என்று தம் துணிவை அவர்களுக்கு சொல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-வெள்ளிச் சுரி சங்கில் அர்த்தத்தை
வெள்ளிய நாமம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————
வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —63-
———————————————
வியாக்யானம்–
வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் -மோகம் –
வெள்ளிய நாமம் கேட்டு -மோகம் -விட்டகன்ற பின் –
பாவநத்வ-போக்யத்வ-தாரகத்வாதி குணங்களை யுடைய முகில் வண்ணரான
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு –
தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக –
ஆஸ்ரித ரஷணத்திலே விவேகஜ்ஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற ஸ்ரீ தென் திருப் பேரிலே
தென் திருப் பேரையில் சேர்வன் நானே -என்றும்
திருப் பேரையில் சேர்வன் சென்றே -என்றும்-சென்று புகுவதாக ஒருப்பட இவ் வதிபிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க –
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் –
திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நானக் கருங்குழல் தோழி மீர்காள் அன்னைமீர்காள் அயர் சேரி யீர்காள்
நான் இத்தனை நெஞ்சம் காக்க மாட்டேன் -என்று தொடங்கி
கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே -என்றும்
செங்கனி வாயின் திறத்ததாயும்-என்று தொடங்கி –
நாங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே -என்றும்
இழந்த எம்மாமைத் திறத்து போன என் நெஞ்சினாறும் அங்கே ஒழிந்தார் -என்று தொடங்கி
அன்னையார்கள் என்னை என் முனிந்தே -என்றும்
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் —
காலம் பெற என்னைக் காட்டுமினே –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் -என்றும்
பேரையிற்கே புக்க என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -என்றும்
நெஞ்சு நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே-என்றும்
இப்படி தாம் அங்கே பத்த பாவரான படியை-பத்தும் பத்தாக அருளிச் செய்தவை -என்கை –
அச்யா தேவயா மனஸ் தஸ்மின் -என்னக் கடவது இறே-
அன்றிக்கே
வெள்ளிய நாமம் கேட்டு விட்டு அகன்ற பின் மோகம் தெள்ளியமால் தென் திருப் பேர் சென்று புகுந்து
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் -என்று ஏக வாக்யமாக யோஜிக்கவுமாம் –
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் –
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-
தாம் –
இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –
ஆழியார் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –
—————————————————
அவதாரிகை –
இதில் -விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை ஆழி வண்ணன் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————————–
ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-
—————————————————————
வியாக்யானம்–
ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிந்து நிற்க –
அதாவது –
கீழ்-ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –
சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
ஆழி எழ -என்று தொடங்கி-அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று ஸ்ரீ த்ரிவிக்ரமணத்தையும்-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி – அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று
அம்ருத மதன வைசித்ரதையும்
நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தாரண சக்தியையும்-
நாளும் எழ -என்று தொடங்கி அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி – அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி – அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
நேர் செரிந்தான் -என்று -தொடங்கி அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
ஸ்ரீ கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து-குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –
நந்தாமி பஸ்யன் நபிதர்ச நேன -என்னக் கடவது இறே –
ஊழிலவை தன்னை –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-
இன்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –
தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –
பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-
———————————————
அவதாரிகை –
இதில் விஜயங்களுக்கு அடியான விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
————————————————-
கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-
———————————————–
வியாக்யானம்–
கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
ஸ்ரீ சக்கரவர்த்தி-ஸ்ரீ வசுதேவர் -ஸ்ரீ ஜாம்பவான்-ஸ்ரீ மகா ராஜர் -ஸ்ரீ திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள் ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்-தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –
அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கன்னற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-
மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –
வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-
—————————————————
அவதாரிகை –
இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -தழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –
—————————————————-
பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-
—————————————————-
வியாக்யானம்–
பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –
தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –
அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –
நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகலோடே கூப்பிட்ட –
அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணகங்கள் –
அவைதான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகதவம் ஆகிற
யுபகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –
பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்
காத எம் கூத்தாவோ -என்று தொடங்கி உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
எங்குத் தலைப் பெயவன் நான் என்று தொடங்கி என்னுடைக் கோவலனே -என்றும்
என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி என் திரு மார்பனை -என்றும்
என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-
ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –
இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்
பற்ப பாதாவோ தாமரைக் கண்ணாவோ தாமரைக் கையாவோ செய்ய திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்
காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும்
பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்
என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்
என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-
அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்
மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்
அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்
அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –
தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து
ஏவம் வித்னனவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட
அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-
இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –
———————————————————
அவதாரிகை –
இதில் அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று கீழே பிரஸ்துதமான
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –
———————————————–
ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-
—————————————–
வியாக்யானம்–
ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் –
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய் பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற முதல் பாட்டின் அடி ஒத்தின படி-
ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்–இப்படித் தனித் தனியும் –
கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே ஒரு முகமாயும்
அதுக்கு மேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் -என்றும் சொல்லும்படியாய்
மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –
இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –
தீ வினை -துஷ்கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆனபோது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –
————————————————
அவதாரிகை
இதில் ஸ்ரீ எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-
—————————————————
மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-
மாயாமல் தன்னை வைத்த-தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் தம்மை வைத்த
——————————————————
வியாக்யானம்–
மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது-சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க
அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று-இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக
அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று-தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி-இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்-ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –
ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –
வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –
புரா பூத்வாம்ரு துர்த்தாந்த நகரோ தவசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய் இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-
மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –
நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –
————————————————————
அவதாரிகை –
இதில் அவன் திருவாய் மொழியை பாடுவித்த படியை அனுசந்தித்து ஈடுபடுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க –
உம்மைக் கொண்டு நமக்கும் நம்முடையாருக்கும் அனுபவிக்கலாம் படி விலஷணமான
ஸ்ரீ திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று
நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய –
ஸ்ரீ வேதங்கள் -ஸ்ரீ வ்யாசாதிகள்-ஸ்ரீ முதல் ஆழ்வார்கள் இவர்கள் யுண்டாய் இருக்க
அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத தன் வைபவத்ததுக்கு தகுதியாக
விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட இந்த மகா உபகாரத்துக்கு
உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு பிரத்யுபகாரம் இல்லை என்று தலை சீய்த்துப் படுகிற
என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை-என்தனை நீ -இத்யாதியால் அருளிச் செய்கிறார் -என்கை-
—————————————————-
என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் —69-
——————————————————-
வியாக்யானம்–
என்தனை நீ யிங்கு வைத்தது எதுக்கு என –
அவன் காட்டினதாகையாலே விசித்திர விபூதியை அனுபவித்து மீளவும் பூர்வ பிரக்ருதமான தம்முடைய சங்கையை
பாசங்கள் நீக்கி என்னை யுனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடியானே அருளாய் -என்று கேட்க –
என்தனை நீ –
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ –
சம்சாரத்தில் பொருந்தாதாரை ஏற விடுகைக்கு சர்வ சக்தி உக்தனான நீ —
இங்கு –
இருள் தரும் மா ஞாலமான-இவ் விபூதியிலே
வைத்தது ஏதுக்கு என –
பிரயோஜன நிரபேஷமாய் இருக்க-என்ன பிரயோஜனத்தைப் பற்ற வைத்தது -என்ன –
மாலும் -என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி பாட வெனக் –
ஸ்ரீ திருமாலான எனக்கு இனிதாகவும்
ஸ்ரீ திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்- கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட வைத்தோம் என்ன –
தன்னை கவி பாடுகைக்கு
ஸ்ரீ வேதங்களும் அத்தைப் பின் சென்ற வைதிகரான ஸ்ரீ வியாச ஸ்ரீ வால்மீகி பரபருதிகளான பரம ருஷிகளும்
செந்தமிழ் பாடுவாராய் பெரும் தமிழன் அல்லேன் பெரிது – -என்று
பிரசம்சிப்பாருமான ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் யுண்டாய் இருக்க –
கவி பாட என கைம்மாறிலாமை –
கவி பாட வைத்தோம் என்ற இந்த யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லாமையை –
பகர் மாறன் –
அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
அதாவது –
என்றைக்கும் –என் சொல்லி நிற்பேனோ -என்றும்
என் சொல்லி நிற்பன் –என் முன் சொல்லும் மூவுருவா முதல்வன -என்றும்
ஆ முதல்வன் இவன் என்று –என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -என்றும்
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டு —அப்பனை என்று மறப்பன் -என்றும்
சீர் கண்டு கொண்டு –பார் பரவின் கவி பாடும் பரமரே -என்றும்
இன்கவி பாடும் பரம கவிகளால் தன கவி தான் தன்னைப் பாடுவியாது -வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே -என்றும் –
வைகுந்த நாதான் -எந்நாள் சிந்தித்து ஆர்வனோ -என்றும்
ஆர்வனோ –சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே-என்றும்
திறத்துக்கு –உறப்பல இன் கவி சொன்ன உதவிக்கே -என்றும்
உதவிக் கைம்மாறு என்னுயிர் –எதுவும் ஒன்றும் செய்வது இல்லை இங்கும் அங்கும் -என்றும்
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே ஈடுபட்டு அருளிச் செய்தவை -என்கை —
என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும் என்கிற வதில்
உபகார ஸ்ம்ருதியோடே-என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது –
சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்த வான்ருஷீ -என்னும்படி –
பாலோடு அமுதம் அன்னவான இங்கனே சொன்ன ஓர் ஆயிரமான
உறப்பல வின் கவிகளை பாடுவிக்கையாலே இவர்க்கு ஈடுபாடாய் இருக்கிறது –
கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் –
இப்படி க்ருதஞ்ஞாரான ஸ்ரீ ஆழ்வார் பரிசர வர்த்திகளாம் படி கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-
————————————————
அவதாரிகை –
இதில்-திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பாரித்த ஸ்ரீ திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து
நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே
ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் -என்கை –
—————————————————
இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-
————————————————-
வியாக்யானம்–
இன்பக் கவி பாடுவித்தோனை –
இன் கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-
இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-
திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு –
அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான கைங்கர்யம் செய்கையிலே மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப் பெற வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில் கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-
உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –
————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply