அவதாரிகை –
இதில்-ஆற்றாமையாலே தூது விடுகிற ஆழ்வார் பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
அடி விடாமல்-நோற்ற நாலிலும் அமோகமாய் இருக்கிற சரண வரணம் ஆகிற ப்ரஹ்மாஸ்திரம் பண்ணி இருக்கச் செய்தேயும்
அவன் ஜகத் ரஷண ஹேதுவாக கார்யம் செய்யாது ஒழிய
அத்தாலே-தம் அபேஷிதம் கிடையாமையாலே
மிகவும் தளர்ந்து-ஆர்த்த ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவன் ஆகையாலே நம் ஆர்த்தியை அறிவிக்கவே தப்பாமல் நம் கார்யம் செய்யும்
ஸ்ரீ திரு வண் வண்டூரில் ஐஸ்வர்யத்தில் கால் தாழ்ந்து நம்மை மறந்தான் இத்தனை -என்று அனுசந்தித்து
கடகரை இட்டு
நத்யஜேயம் -என்ற ஸ்ரீ தசரதாத் மஜனுக்கு தம் தசையை அறிவித்துச் சொல்லுகிறபடியை
ஸ்ரீ நாயகன் வரும் அளவும் கண்டு ஆறி இருக்க மாட்டாமல் ஆற்றாமையாலே ஸ்ரீ நாயகனைக் குறித்து
தூது விடுகிற ஸ்ரீ நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்கிற
வைகல் பூம் கழி வாயில் அர்த்தத்தை-வைகல் திரு வண் வண்டூர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் -என்கை –
———————————————–
வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு என்
செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் -கை கழிந்த
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே
மேதினியீர் நீர் வணங்குமின் —51-
————————————————-
வியாக்யானம்–
வைகல் திரு வண் வண்டூர் வைகும் ராமனுக்கு –
தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர்
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -என்றத்தை நினைக்கிறது
இரண்டாம் தூதுக்கு விஷயம் ஸ்ரீ விபவம் இறே
வ்யவசாயஞ்ஞர் ரஷணச்தைர்யம் பம்போத்தர தேசச்தம் –என்றார் இறே
ஸ்ரீ திரு வண் வண்டூரிலே பிற்பட்டாரை ரஷிக்கைக்கு சர்வ காலமும் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு
ஜனக குல சுந்தரி ஜீவந்தீம் -என்று ஆள் விட்டதும்
பம்பா பரிசர பர்வதத்திலே வர்த்திக்கிறவரைக் குறித்து ஆயிற்று –
ஸ்தைர்யம் ஹிமவான் போலே -ஸ்ரீ ராமன் – உத்தர -கிஷ்கந்தை -அங்கு ஸ்ரீ சீதை ஆள்விட்டாள்
என் செய்கை தனைப் புள்ளினங்காள் செப்புமின் –
என் தசையைப் பஷ பாதம் உடையவர்களே தாழாமல் சொல்லும் என
அதாவது –
குருகினங்காள் -வினையாட்டியேன் காதன்மையைக் கைகள் கூப்பிச் சொல்லீர் -என்றும்
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே -என்றும்
திறங்களாகி எங்கும் செய்கலூடு ழல் புள்ளினங்காள் -அடியேன் இடரை இறங்கி நீர் தொழுது பணியீர் -என்றும்
மட வன்னங்காள் உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே -என்றும்
உடன் மேயு மட வன்னங்காள் -அடியேனுக்கும் போற்றுமினே -என்றும்
புன்னை மேலுறை பூங்குயில்காள் மாற்றம் கொண்டு அருளி உரையீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே -என்றும்
அடையாளம் திருந்தக் கண்டு எனக்கு ஓன்று யுரை ஒண் கிளியே -என்றும்
கரும் திண் மா முகில் போல் திருவடிகளை –திருந்தக் கண்டு எனக்கு ஓன்று உரையாய் ஒண் சிறு பூவாய் -என்றும்
அடிகள் கை தொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறு கொண்டே -என்றும்
இப்புடைகளிலே அத்யார்த்தியை அனைவருக்கும் அறிவித்தவை -என்கை –
கை கழிந்த காதலுடன் தூதுவிடும் –
என்னையும் உளன் என்மின்களே -என்று தாம் வந்து நோக்கா விடில் சத்தை இல்லை –
இப்போது வந்து நோக்குகைக்கு ஈடான சத்தா மாதரமும் கிடக்கிறது என்னுங்கோள் என்கையாலே
கை கழிந்த காதல் உடன் தூது விட்ட படி இது வாயிற்று —
காதலுடன் தூதுவிடும் காரி மாறன் கழலே மேதினியீர் நீர் வணங்குமின் –
ஆற்றாமையோடு தம் பேற்றுக்கு கடகரை அர்த்திக்கிற ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளை
உங்கள் பேற்றுக்கு பூமியில் உண்டானவர்களே நீங்கள் வணங்கி வழி படுங்கோள்
அவர் -மாநிலத்து எவ் உயர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் –என்னுமா போலே
இவரும் இருந்ததே குடியாக உபதேசிக்கிறார் –
———————————————————————————————-
அவதாரிகை –
இதில்
பிரணய ரோஷத்தாலே யூடின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
தம் ஆற்றாமையாலே-நோற்ற நாலிலும் சரணம் புக்கு-தூது விட்டு
இத்தனையும் செய்த விடத்தும் அவன் வரக் காணாமையாலே
பிரணய ரோஷம் தலை எடுத்து
அவன் வந்தாலும் இனி அவனோடு கலப்போம் அல்லோம் -என்று
பரிவார வர்திகளான ஸூக்ருத்துக்களோடு தாம் துணிந்து இருக்க
அவனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலான ஆஸ்ரிதர் ஆபத்தில் முற்பாடானாய் சென்று
ஆபத்தைப் போக்கி ரஷித்த நாம் -ஸ்ரீ ஆழ்வாருக்கு பிற்பாடர் ஆனோமே
என்று பிற்பாட்டுக்கு தாம் போர நொந்து-தம்முடன் கலப்பதாக பதறி-நடந்து வந்து
வடிவு அழகாலும்
சேஷ்டிதையாலும்
தன் செல்லாமையாலும்-தம்மூடலைத் தீர்த்து-தம்முடன் கலந்த படியை –
ஸ்ரீ கிருஷ்ணன் வரவு தாழ்க்கையாலே அவனோடு ஊடி
இனிக் கூடோம் என்று இருந்த இடைப் பெண்களை
தன்னுடைய சௌந்தர்யாதிகளாலும்
செல்லாமையாலும்-ஊடலைத் தீர்த்து ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடன் சேர்த்துக் கொண்ட
வ்ருத்தாந்தத்தின் மேல் வைத்து அருளிச் செய்த-மின்னிடை மடவாரில் அர்த்தத்தை
மின்னிடையார் சேர் கண்ணன் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
———————————————————
மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
தன்னிலை போய்ப் பெண்ணிலை யாய்த் தான் தள்ளி -உன்னுடனே
கூடேன் என்றூடும் குருகையர் கோன் தாள் தொழவே
நாடோறும் நெஞ்சமே நல்கு—52-
———————————————————–
வியாக்யானம்–
மின்னிடையார் சேர் கண்ணன் மெத்தென வந்தான் என்று
மின்னிடை மடவார் உடன் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் அங்குத்தையில் அந்ய பரதையாலே
ஆற்றாமைக்கு உதவ வராமல் ‘ மந்த கதியாய் வந்தான் என்று – அவன் தங்கள் இடத்தில் பண்ணும் அபி நிவேத்தை
அந்யதாகரித்து தங்கள் ஆற்றாமையாலே அவன் பதற்றத்தையும் அசத் கல்பம் ஆக்குகிற –
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் -என்றத்தை
கடாஷித்து அருளிச் செய்தபடி –
தன்னிலை போய்ப் பெண்ணிலையாய்த்-
அதாவது –
ஸ்ரீ குருகூர் சடகோபன் -என்கிற ஆகாரம் குலைந்து ஸ்ரீ கோபிமார் உடைய ஆகாரத்தை யுடையராய் –
தான் தள்ளி –
தங்கள் கழகம் இருக்கிற சங்கேத ஸ்தலத்திலே புகுருவதாக அவன் அருகே வர
போகு நம்பி -என்றும்
குழலூது போய் இருந்தே -என்றும்
போய் இருந்து உன் புள்ளுவம் அறியாதவற்கு உரை நம்பி -என்றும்
எம்மை நீ கழரேலே -என்றும்
எம் குழறு பூவையோடும் கிளியோடும் குழகேலே -என்றும்
கழகம் ஏறேல் நம்பி -என்றும் –
கன்மம் அன்று எங்கையில் பாவை பறிப்பது -என்றும்
உனக்கேலும் பிழை பிழையே -என்றும்-அவனுக்கு அவகாசம் அறும்படி
ப்ரண யாச்சா பீமா நாச்சா பரிசிஷே பராகவம் -என்று ஊடும் படியையும்-
அவனும்
உன் தாமரை புரை கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய -என்றும்
நின் செய்ய வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள் -என்றும்
வன்மையே சொல்லி எம்மை நீ விளையாடுதீ -என்றும்
உகவையால் நெஞ்சமுள் உருகி உன் தாமரத் தடம் கண் விழிகளில்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் -என்றும்-என்னும்படி
ஸ்மித
வீஷணங்களாலும்
பாவ கர்ப்பமான யுக்திகளாலும்
சேஷ்டிதங்களாலும்- ‘ஊடலைத் தீர்த்து சேர விட்டு
கூத்த வப்பன் தன்னைக் குருகூர் சடகோபன் ஏத்திய தமிழ் மாலை -என்னும்படி
கூடின படியையும் அருளிச் செய்கையாலே –
உன்னுடனே கூடேன் என்று ஊடும் குருகையர் கோன் -என்று
அருளிச் செய்த இதிலே கூடின முடியும் இவர்க்கு விவஷிதம்
மேலே-நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் -என்று இறே அருளிச் செய்யப் புகுகிறது –
அதுக்குச் சேர இங்கே கூட வேணும் இறே
ஊடும் குருகையர் கோன் தாள் தொழவே நாடோறும் நெஞ்சமே நல்கு
அவன் அல்ப்பம் தாழ்த்துக் கூடும்படியான பிரேமத்தை உடைய ஸ்ரீ ஆழ்வார்
திருவடிகளை நித்ய சேவை பண்ணும் படி மனசே நீயும் நித்யமாக சஹகாரியாய் யுபகரி –
நல்குதல் -கொடுத்தல்
மன ஏவ – இறே –
—————————————————
அவதாரிகை –
இதில் விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழே
அல்லோம் -என்று இருந்த தம்மை ஆவோம் -என்னப் பண்ணினவனுடைய அகடிகதடநா சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விஸ்மிதரான இவருக்கு-இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மிதர் ஆகிறது
நாட்டில் தன்னில் தான் சேராத பதார்த்தங்கள் எல்லாவற்றையும் நம்முடனே சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படி பாரீர்-என்று அவன் தன் வ்ருத்த விபூதி யோகத்தைக் காட்ட
அத்தை அனுசந்தித்து ஹ்ருஷ்டராய்ச் செல்லுகிற -நல் குரவும் செல்வமும் – அர்த்தத்தை
நல்ல வலத்தால் இத்யாதியால் அருளிச் செய்கிறார் –
——————————————————
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் முன் நண்ணாரை
வெல்லும் விருத்த விபூதியன் என்று -எல்லை யறத்
தான் இருந்து வாழ்த்தும் தமிழ் மாறன் சொல் வல்லார்
வானவர்க்கு வாய்த்த குரவர் —53-
——————————————————-
வியாக்யானம்–
நல்ல வலத்தால் நம்மைச் சேர்த்தோன் –
அதாவது
லீலா உபகரணங்களை எடுத்தும்
பறித்தும்
கழகம் எறியும்
வழி மறித்தும்
சிற்றில் அழித்தும்
முற்றத்தூடு புகுந்து முறுவல் செய்து வார்த்தை சொல்லியும்-சங்கேத ஸ்தானம் இவள் முற்றம்
கிட்டே வந்து முகம் காட்டி -முறுவல் செய்து -சாவிக்கும் அந்தராத்மா -கட்டி முடித்த பின்பு அழித்த-
லோகவத்து லீலா கைவல்யம் –வீட்டைப் பண்ணி விளையாடும் -விமலன் தன்னை குற்றம் இல்லாதவன்
வைஷம்யம் நைர்குண்யம் இல்லாதவன் -அநாயாசேனே மோஷம் அளிப்பான் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்
பிரயோஜ நாந்தரம் போகக் கூடாதே என்றே அழித்தான்
இப்படி யாயிற்று
இவர் ஊடலைத் தீர்த்து கூட விட்டது –
இவர்
இது ஓர் அகடிதகடநா சாமர்த்திய சக்தி இருந்தபடி என்-என்று பார்த்து
முன்- நண்ணாரை வெல்லும் -என்று -அத்தை மூதலிக்கிறார்
அதாவது
பும்ஸாம் சித்த திருஷ்டி அபஹாரியாய் -சாஷான் மன்மத மன்மதனான தன் சந்நிதியிலே
கிட்டோம் -என்றிருந்த தம்மை-ஸ்த்ரீத்வ அபிமானத்தைக் குலைத்து ஊடுகையைத் தவிர்த்து கூடப் பண்ணின படி -என்கை-
முன் நண்ணாதாராய் -கிட்டா தாராய் இருக்கிற நம்மை நல்ல வலத்தால் சேர்த்தோன் -என்று அந்வயம் ஆகவுமாம்
அன்றிக்கே
முன் நண்ணாரை வெல்லும்- -என்று
பூர்வ சத்ருக்களாய்-அவர்களை நின்று இலங்கு முடியனா -இத்யாதிப்படியே வென்றால் போலே
நம்மை நல்ல வலத்தால் சேர்த்தது -என்றாகவுமாம்-
இப்படி சேராததைச் சேர்ப்பதே -என்று இவர் ஈடுபட இது ஓன்று கண்டோ நீர் ஆச்சர்யப் படுகிறீர்
லோகத்தில் பரஸ்பர விருத்தங்களாய் இருக்கிற விபூதியைச் சேர்த்துக் கொண்டு
ஸ்ரீ திரு விண்ணகரிலே நிற்கிற படியைப் பாரீர் -என்று விருத்த விபூதி உக்தனாய் இருக்கிற படியைக் காட்ட –
விருத்த விபூதியன் என்று –
அதாவது –
நல் குரவும் செல்வும் –
கண்ட வின்பம் துன்பம் –
நகரமும் நாடுகளும் –
புண்ணியம் பாவம் –
கைதவம் செம்மை –
மூவுலகங்களும் அல்லனாய்-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் –
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் –
நிழல் வெய்யில் – இத்யாதி பாட்டுக்களிலே
அக்னி கோப பிரசாதஸ்தே சோம -என்னும் படியான விருத்த விபூதிகத்வத்தைப் பரக்கப் பேசி-
எல்லை யறத் தான் இருந்து வாழ்த்தும் –
அதாவது –
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை -என்றும்
கண்டு கொள்வதற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் -என்றும்
திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான் புகர்கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியம் -என்றும்
கண்ண நின்னருளே கண்டு கொண்மின்கள் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் வரன் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரண்-என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பன் -என்றும்
என் அப்பன் எனக்காய் -என்று தொடங்கி –திரு விண்ணகர் சேர்ந்த என் அப்பன் தன் ஒப்பாரில் அப்பன்
தந்தனன் தான தாள் நிழல் -என்றும்
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலோம் -என்றும்
இப்படி இதுக்கு என்று சமைந்து இருந்து நிரவதிக ஸ்தோத்ரங்களால் ஸ்துதித்து அருளும் –
தமிழ் மாறன் சொல் வல்லார் –
சர்வ ஸூலபமான திராவிட பாஷைக்கு தேசிகரான ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியான இத் திருவாய்மொழியை
அப்யசிக்க வல்லார் –
வானவர்க்கு வாய்த்த குரவர்
அவனுடைய விபூதியை-ததீயத் ஆகாரண அனுபவிக்கிற நித்ய சூரிகளுக்கு அவ் வநுபவ விஷயமான
இத் திருவாய்மொழியை இவர்கள் இங்கேயே இருந்து அனுசந்திக்கையாலே அவர்களுக்கு அனுரூபமான ஆதரணீயர் ஆவார் –
திரு விண்ணகர் பத்தும் வல்லார் கோணை இன்றி
விண்ணோர்க்கு என்றும் ஆவார் குரவர்கள் -என்றத்தை அருளிச் செய்த படி –
———————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில திவ்ய சேஷ்டிதங்களை அனுபவித்து
அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மாசறு சோதி
மானேய் நோக்கு
பிறந்தவாறு-என்கிற திருவாய் மொழிகளிலே
சேணுயர் வானத்து இருக்கும் –
நாராயணன் நாமங்களே தொல் அருள் நல் வினையால் சொலக் கூடும் கோல் –
உருக்கி உண்டிடுகின்ற உன் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்–என்று
தூரஸ்தன் என்றும்
நா நீர வரத் திரு நாமம் சொல்லக் கூடவற்றே -என்றும்
தரித்து நின்று குண அனுபவம் பண்ண வல்லேனாம் படி பண்ண வேண்டும் என்றும்
தாம் ஆசைப் பட்ட வகைகள் எல்லாம் சித்திக்கும் படி தான் ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திரு வவதரித்து
செய்து அருளின நிகில சேஷ்டிதங்களையும்-தத் ஹேதுவான திவ்ய குணங்களையும்
அனுபவ விஷயமாக காட்டிக் கொடுக்க-அவற்றைக் கட்டடங்க தரித்து நின்று மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற குரவை ஆய்ச்சியில் அர்த்தத்தை
குரவை முதலாம் இத்யாதியாலே-அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————————-
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள்
இரவு பகல் என்னாமல் என்றும் பரவு மனம்
பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன்
சொல் தேனில் நெஞ்சே துவள் —54-
———————————————————
வியாக்யானம்–
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் –
அதாவது –
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் -என்றும்
கேயத் தீங்குழல் ஊதிற்றும் -என்றும்
நிகரில் மல்லரைச் செற்றதும் -என்றும்
நோவ ஆய்ச்சி உரலொடு ஆர்க்க இரங்கிற்றும் -என்றும்
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் -என்றும்
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் -என்றும்
மனப்பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டதும் -என்றும்
நீணிலத் தொடுவான் வியப்ப நிறை பெரும் போர்கல் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்ததும் -என்றும்
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழியக் கடாயுலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் -என்றும்
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மாய பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்தது
முதலாக எல்லா வற்றையும் நினைக்கிறது
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் -என்று
முந்துற குரவை முதலாகக் காட்டினது திருக் குரவையில்
ஆரவாரத்தை அனுபவித்து தரிக்கைக்காக –
வேண்டித் தேவர் இரக்க -வந்து பிறந்த வ்ருத்தாந்தத்தை
முந்துற முன்னம் காட்டாது ஒழிந்தது
பிறந்த வாற்றில் ஆழம் கால் பட்டு ஆறு மாசம் மோஹித்தால் போலே மோஹிப்பர் -என்று –
கண்ணன் கோலச் செயல்கள் –
ஸ்ரீ வால்மீகி -காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம்-என்று ஸ்ரீ ரகுவர சரித்ரத்தையே
முழுதும் அனுபவித்தால் போலே
இவரும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிகில -சேஷ்டிதங்களை அனுபவித்த படி –
ஸ்ரீ தேவக் கோலப் பிரான் -செய்கை -இறே-
இரவு பகல் என்னாமல் –
ராத்திரி பகல் என்னாமல்-கால நியதி இன்றிக்கே
என்றும் பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் –
சர்வ காலத்திலும் ஸ்துதிக்கும் படியான-மனசைப் பெற்றேன் என்று ஹர்ஷ பாரவச்யத்தாலே கர்வித்துப் பேசும் –
அதாவது
மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிர்கிலம் என்ன குறை எனக்கே -என்றும்
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ்வுலகம் நிகரே -என்றும்
நுகர வைகல் வைக்கப் பெற்றேன் எனக்கு இனி நோவதுவே -என்றும்
மேவக் காலங்கள் கூடின எனக்கு என் இனி வேண்டுவதே -என்றும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உள்ளதே -என்றும்
பகல் இராப் பரவப் பெற்றேன் எனக்கு என்ன மனப்பரிப்பே -என்றும்
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி யார் நிகர் நீணிலத்தே -என்றும்
என் அப்பன் தன் மாயங்களே காணு நெஞ்சுடையேன் இனி என்ன கலக்கம் உண்டே -என்றும்
மால் வண்ணனை மலைக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே -என்றும்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -என்றும்–பேசின இவை -என்கை –
உருகாமல் தரித்ததும்-நண்ணி வணங்கப் பலித்தவாறே என்று இறே ஸ்ரீ நாயனாரும் அருளிச் செய்தது-
களித்துப் பேசும் பராங்குசன் தன் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவையுடை மால் வண்ணனை மலைக்கு நா யுடையேன் -என்கையாலே
சர்வ ஸ்மாத் பரனை வசீகரிக்கும் அங்குசமாய் யுள்ளவர் என்கிறதைப் பற்றச் சொல்கிறது –
கவீசம் சக்ர ஹஸ்தேப சக்ரம் -என்றது இறே
ஸ்ரீ திரு நா வீறுடைய பிரான் தாசர் குமாரர் ஆகையாலே அடி அறிந்து ஸ்ரீ பராங்குசன் -என்கிறார் –
பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே துவள் –
வால்மீகேர்வாத நாரவிந்த களிதம் ராமாணாக்யம் மது -என்றும்
ஸூ கமுகாதம்ருதத்ரவசம் யுதம்பிபாத பாகவதம் ரசம் -என்றும் சொல்லுமா போலே-
அமுத மென்மொழி யாகையாலும்- தேனே இன்னமுதே -என்று பேசப் படுமவன் விஷயம் ஆகையாலும்
தேன் போலே இனிதாய் இறே இத் திருவாய்மொழி தான் இருப்பது
மனசே
அல்ப சாரமானவற்றில் புக்கு அலமாவாதே-சார க்ராஹியாய்-சார தமமான இதில் சக்தமாய்ப் போரு
என் நெஞ்சம் என் பொன் வண்டு -என்னக் கடவது இறே-
—————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ பகவத் விஷயத்தில் ப்ராவண்யத்தை அருளிச் செய்த படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
கீழ் தம்முடைய த்ருஷ்ணையாலே ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அனுபவிக்க புக்க இடத்தில்
குடிக்கின்ற தண்ணீர் விக்கிப் பாரவஸ்யத்தை விளைவிக்குமா போலே-அவை சைதில்யத்தை விளைக்க
அத்தாலே கலங்கி-அடியே பிடித்து-தமக்கு ஸ்ரீ பகவத் விஷயத்தில் கரண த்ரயத்திலும் யுண்டான
பிராவண்ய அதிசயத்தை-அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-துவளில் மா மணி மாடத்தில் அர்த்தத்தை
துவளறு சீர் -என்று தொடங்கி அருளிச் செய்கிறார் –
——————————————————
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான் -துவளறவே
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் அதில்
மன்னு முவப்பால் வந்த மால்—55-
———————————————————–
வியாக்யானம்–
துவளறவே முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன்–மன்னு முவப்பால் வந்த மால்
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்- என்று அந்வயம்
துவளறவே –
மயர்வற மதி நலம் அருளப் பெறுகையாலே –என்னுதல்
அந்ய பரதை யாகிற குற்றம் அறுகையாலே-என்னுதல் –
முன்னனுபவத்தில் மூழ்கி நின்ற மாறன் -மன்னு முவப்பால் வந்த மால்
முந்துற முன்னம்
பொய் நின்ற ஞானம் தொடங்கி–இவ்வளவும் அனுபவத்தில் அவஹாகித்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நிகரிலவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே -என்றும்
பரமன் பவித்திரன் சீர் செடியார் நோய்கள் கெட படிந்து குடைந்தாடி அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்
சீரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று இராப் பகல் வாய் வெரீஇ -என்றும்
துயரமில் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் -என்றும்
வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன் -என்றும்
தக்க கீர்த்தி குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் -என்றும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் நுகர வைகல் வைக்கப் பெற்றேன் -என்றும்
இப்படி யாயிற்று
அந்நாள் தொடங்கி இந்நாள் தோறும்–இணை அடிக்கே அன்பு சூட்டி-அன்பு பாலே போல் சீரில் பழுத்த படி –
இப்படி குண அனுபவத்தாலே தமக்கு–மாறும் நிகரும் இன்றி-நித்ய மத முதிதராய்-மால் ஏறி
துவளறு சீர் மால் திறத்துத் தொன்னலத்தால் –
ஆஸ்ரிதர்க்கு அனுபாவ்யம் ஆகையாலே–குற்றம் அற்று-ஹேய பிரத்ய நீகனான
கல்யாண குண யுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்திலே ஸ்வாபாவிக பக்தியாலே –
நாளும் துவளறு தன் சீலம் எல்லாம் சொன்னான்-
நாள் தோறும் தாம் அவ் விஷயத்தில் பிராவண்யத்தை உற்று இருக்கிற தம்முடைய ஸ்வபாவம் எல்லாம் அருளிச் செய்தார் –
ராமேதி ராமேதி சதைவ புத்யா விசிந்தய வாசா ப்ருவதீ -என்றும்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமமேவா நுபஸ்யதி -என்றும் சொல்லுமா போலே
தாமரைத் தடம் கண் என்றும் குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமிறுமே -என்றும்
தேவ தேவ பிரான் என்றே நிமியும் வாயோடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே -என்றும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண்ணீர் மல்க கிற்குமே -என்றும்
கண்ணபிரான் என்றே ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உண் மகிழ்ந்து குழையுமே -என்றும்
அன்று தொட்டு மையாந்திவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அத்திசை நோக்கியே -என்றும்
வைகல் நாடொறும் வாய்க்கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் –என்றும்
அவள் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே -என்றும்
இருந்து இருந்து அரவிந்தலோசன் என்று என்றே நைந்து இரங்குமே -என்றும்
துலை வில்லி மங்கலம் என்று தன் கரங்கள் கூப்பி தொழும்அவ் ஊர் திரு நாமம் கற்றதர் பின்னையே -என்றும்
துலை வில்லி மங்கலம் சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்றும்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும்தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் -என்றும்
இப்படி இவருக்கு த்ரிவித கரணத்தாலும் யுண்டான-பிராவண்ய ஸ்வபாவத்தை எல்லாம் அருளிச் செய்தார் -என்கை –
இத் திருவாய்மொழி ஆழ்வார் பிரகிருதி சொல்கிறது என்று நம் முதலிகள் எல்லாரும் போர விரும்பி இருப்பார்கள் –என்று
இறே ஸ்ரீ ஈட்டிலே அருளிச் செய்தது –
————————————
அவதாரிகை –
இதில்-தமக்கு உள்ளது அடையக் கை விட்டு போன படியைப் பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ் பிறந்த சம்ஸ்லேஷம் மானச சம்ஸ்லேஷ மாத்ரமாய்-பாஹ்ய கரண யோக்கியம் அல்லாமையாலே
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திரு நாமம் கேட்பது சிந்தையே -என்கிறபடி மிகவும் அவசன்னராய்
அத்தாலே மோஹித்துக் கிடக்க
ஏறாளும் இறையோனில் தாம் விடப் பார்த்த ஆத்மாத்மீய பதார்த்தங்கள் அடங்கலும் தன்னடையே விட்டுக் கழன்று
சிதிலமாய்ச் செல்லுகிறபடியை-திருத் தாயார் தன் மகள் வளையாதிகள் போயிற்று என்று
அவனுரிச் சூறை கொண்ட பிரகாரத்தை பேசின பாசுரத்தாலே சொல்லிக் கூப்பிடுகிற
மாலுக்கு வையத்தில் அர்த்தத்தை-மாலுடனே தான் கலந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————————-
மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால்
சால நைந்து தன்னுடைமை தானடையக் -கோலியே
தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன்
ஊனமறு சீர் நெஞ்சே உண்—56-
தான் கோலி -அங்கே-ஏறாளும் இறையோனும் — -இங்கே -அவை முற்கோலி -தன்னடையே போயின –
———————————————–
வியாக்யானம்–
மாலுடனே தான் கலந்து வாழப் பெறாமையால் –
ஆஸ்ரித வ்யாமுக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ச்லேஷித்து சத்தை பெற்று உஜ்ஜீவியாமல்
கீழ்-அடிமை செய்வார் திருமாலுக்கு -என்றார் இறே-அத்தை அடி ஒற்றின படி
சால நைந்து –
மிகவும் அவசன்னராய் –தம் தசை தாம் பேச மாட்டாதே-திருத் தாயார் பேசும்படியாக தளர்ந்து –
தன்னுடைமை தானடையக் -கோலியே தான் இகழ வேண்டாமல் –
ஏறாளும் இறையோனில் அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாத்மீயங்கள் அடையத் தாம் உத்யோகிக்க
வேண்டினால் போல் அன்றிக்கே
தன்னை விடல் சொல் மாறன் –
தன்னடையே அவை முற்கோலித்து- தம்மை கட்டடங்க விட்டகலும் படியை அருளிச் செய்த ஆழ்வார் –
அதாவது –
உத்தரீயம் தயாத்யக்தம் ஸூபாந் யாபரணான் யபி -என்னும் படி
ஏலக் குழலி இழந்தது சங்கே -என்றும்
என் மங்கை இழந்தது மாமை நிறமே -என்றும்
என் பிறங்கிரும் கூந்தல் இழந்தது பீடே -என்றும்
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே -என்றும்
என் கண் புனை கோதை இழந்தது கற்பே -என்றும்
என் விற்புருவக் கொடி தோற்றது மெய்யே -என்றும்
என் தையல் இழந்தது தன்னுடைச் சாயே -என்றும்
என் வாசக் குழலி இழந்தது மாண்பே -என்றும்
என் பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே -என்றும்
என் கற்புடை யாட்டி இழந்தது கட்டே -என்றும்-அருளிச் செய்தவை என்கை –
தன்னை விடல் சொல் மாறன் –
கட்டெழில் தென் குருகூர் சடகோபன் சொல் -என்று அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் உடைய –
ஊனமறு சீர் நெஞ்சே உண் –
சீருக்கு ஊனம் ஆவது-ஸ்வாரத்தமாய் இருக்கை-
அப்படி அன்றிக்கே-பர அனுபவ யோக்யமாய் இருக்கை -ஊனம் அற்று இருக்கை –
இப்படி நிரவத்யமான கல்யாண குணத்தை நெஞ்சே உண் –
ஓவாத் தொழில் சாரங்கன் தொல் சீரை நன்னெஞ்சே
ஒவாத ஊணாக உண் -என்று ஸ்ரீ ஆழ்வார் அவன் குணங்களை புஜிககுமா போலே
நீயும் ஸ்ரீ ஆழ்வார் உடைய பக்த்யாதி குணங்களையே புக்தமாக புஜி-
—————————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனபடியை அருளிச் செய்ததை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
திருத் தாயார் –
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு -என்று தொடங்கி
பொற்பமை நீண் முடி பூம் தண் துழாயற்கு -என்று
ஆபாத மௌலி பர்யந்த பர்யவசிதங்களானவன் திரு நாமங்களைச் சொல்லிக் கூப்பிட்டு-பரவசையாய்க் கிடந்து உறங்க
ம்ருத சஞ்ஜீவிநீ யான திருநாமத்தைக் கேட்டு பெண் பிள்ளை யுணர்ந்து எழுந்திருந்து
அவன் இருக்கிற ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போக
அநந்தரம்
திருத் தாயார் உணர்ந்து பெண் பிள்ளையைப் படுக்கையிலே காணப் பெறாமையாலே
தன் வயிற்றில் பிறப்பாலும்-இவள் தன் ஸ்வபாவத்தாலும்-ஸ்ரீ திருக் கோளூர் ஏறப் போனாள்-என்று
சோகிக்கிற அந்த திருத் தாயார் பாசுரத்தாலே ஸ்வ தசையை அருளிச் செய்கிற
உண்ணும் சோற்றில் அர்த்தத்தை உண்ணும் சோறாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை —
————————————————————
உண்ணும் சோறாதி யொரு மூன்றும் எம்பெருமான்
கண்ணன் என்றே நீர் மல்கிக் கண்ணினைகள் -மண்ணுலகில்
மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன்
பொன்னடியே நந்தமக்குப் பொன்–57-
————————————————————–
வியாக்யானம்–
உண்ணும் சோறு-பருகும் நீர்-தின்னும் வெற்றிலை-எல்லாம் கண்ணன்-என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
அத்தைப் பின் சென்று அருளிச் செய்தபடி –
உண்ணும் சோறாதி யொரு மூன்றும் –
அன்னாதியான தாரகாதி த்ரயமும்
ஒரு மூன்றும் –
அத்விதீயமாய் இருக்கிற மூன்றும் –
எம்பெருமான் கண்ணன் என்றே –
எனக்கு ஸ்வாமியான ஸ்ரீ கிருஷ்ணன் என்றே அனுசந்தித்து –
நீர் மல்கிக் கண்ணினைகள் —
பாவனா பிரகர்ஷத்தாலே கண் இணைகள் நீராலே நிறைந்து ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணை
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்தாலே இறே சமிப்பது –
மண்ணுலகில் மன்னு திருக் கோளூரில் மாயன் பால் போம் மாறன் –
இவ் விபூதியிலே ஸ்ரீ திருக் கோளூரிலே நித்ய வாசம் பண்ணுகிற சௌந்தர்ய சீலாதிகளால்
ஆச்சர்ய பூதனான-வைத்திய மா நிதி பால் போம் ஸ்ரீ ஆழ்வார் –
இறந்தால் தங்குமூர் விண்ணூர் ஆகையாலே விசேஷிக்க வேண்டா
நாட்டார் பொருந்தி இருக்குமூர் இவருக்கு நெருப்பாய் இருக்கையாலே
மண்ணினுள் புகுமூர் திருக் கோளூர் -என்று இறே விசேஷிக்க வேண்டுவது –
சர்வான் போகான் பரித்யஜ்ய -இத்யாதிவத்
தான் உகந்த ஊர் இறே இவருக்கு மண்ணினுள் புகுமூர்
ஸ்ரீ திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டால் இறே-இவர் ஆவி உள் குளிருவது –
பாலை கடந்த பொன்னே –கண்ணன் வெக்காவுது –எப்பாலைக்கும் சேமத்ததே -என்னக் கடவது இறே
மன்னு திருக் கோளுரிலே மாயன் பால் போகையாவது –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே-அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற போரும் கொல் -என்றும்
திருமால் திரு நாமங்களே கூவி எழும் என் பாவை போய் -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினாள் -என்றும்
ஆவியுள் குளிர எங்கனே உகக்கும் கொல் -என்றும்
தென் திசை திலதம் அனையத் திருக் கோளூர்க்கே சென்று -என்றும்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து -என்றும்
கசிந்த நெஞ்சினளாய் கண்ணநீர் துளும்பச் செல்லும் கொல் -என்றும்
என் கண்ணனுக்கு என்றே யீரியாய் இருப்பாள் இதுஎல்லாம் கிடக்க இனிப் போய் -என்றும்
திருக் கோளூர்க்கே நேரிழை நடந்தாள் -என்றும்
மனைக்கு வான் பழியும் நினையாதே செல்ல வைத்தபடி இது வாயிற்று
இத்தால்
வழியில் உள்ளவர்களையும் வாழ்வித்து-அவனையும் வாழ்வித்து-தானும் வாழும்படி போனாள்
என்றது ஆயிற்று –
இப்படி எல்லாரையும் வாழ்வித்து ஸ்ரீ வைத்த மா நிதியை நாடி நடந்து போம்
ஸ்ரீ மாறன் பொன்னடியே நந்தமக்குப் பொன்
அவருக்கு ஸ்ரீ வைத்த மா நிதி அடியாய் இருக்கும்– நமக்கு வைத்த மா நிதி ஸ்ரீ ஆழ்வார் அடியாய் இருக்கும் –
கைம்முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூரிலே சம்ருத்தம் —என்று இறே
ஸ்ரீ ஆச்சார்யா ஹிருதயத்திலே ஸ்ரீ நாயானார் அருளிச் செய்தது –
——————————————————
அவதாரிகை –
இதில் ஆர்த்தி பாரவச்யத்தாலே தூது விட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
உண்ணும் சோற்றில் ஆற்றாமையோடு
ஸ்ரீ திருமாலான ஸ்ரீ வைத்தமா நிதி திருக் கண்ணும் செவ்வாயும் கண்டு அனுபவிக்க வேணும்
என்று த்வாரா பரவசராய்ப் புறப்பட்டு முட்டுப் போக மாட்டாமல்
எங்கனே புகும் கொல் -என்றதுவே பலித்து-விழுந்து நோவுபடுகிற தசையை
அவன் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ பரம பதாதிகளிலே போய் அறிவியுங்கோள் என்று
பரிசர வர்த்திகளான கடகரை தாம் அர்த்திக்கிற பிரகாரத்தை
தூத பரேஷண வ்யாஜத்தாலே அருளிச் செய்கிற – பொன்னுலகு ஆளீரோவில் அர்த்தத்தை
பொன்னுலகு இத்யாதியாலே அருளிச் செய்கிறார் என்கை-
——————————————————–
பொன்னுலகு பூமி எல்லாம் புள்ளினங்கட்கே வழங்கி
என்னிடரை மாலுக்கு இயம்பும் என -மன்னு திரு
நாடு முதல் தூது நல்கி விடும் மாறனையே
நீடுலகீர் போய் வணங்கும் நீர்–58-
—————————————————
வியாக்யானம்–
பொன்னுலகு பூமி எல்லாம்- புள்ளினங்கட்கே வழங்கி
முதல் பாசுரத்தை முடியக் கடாஷித்து அருளிய படி –
பொன்னுலகு பூமி எல்லாம்-
கச்ச லோகன் -என்னும்படி-நித்ய விபூதி லீலா விபூதி எல்லாவற்றையும் –
புள்ளினங்கட்கே வழங்கி –
பஷ பாதமுடைய பஷி சமூஹங்களுக்கே தம்முடைய ரஷண அர்த்தமாக வுபகரித்து –
வண் சடகோபன் -ஆகையாலே-மோஷாதி புருஷார்த்தங்களை வழங்க வல்லராய் இருக்கை-
வழங்கி -என்னிடரை மாலுக்கு இயம்பும் என –
உபய விபூதியையும் உபஹார அர்த்தமாக உபகரித்து பிரிவால் உண்டான என்னுடைய பரிவை
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு அறிவியுங்கோள் -என்று
என் இடரை –
என்னுடைய துக்கத்தை -அதாவது –
என்நிலைமை -என்றும்
மெய்யமர் காதல் -என்றும்
பாசறவெய்தி -என்றும்
பேர்த்து மற்று ஓர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றும் இலேன் -என்றும்
இன்னவாறு இவள் காண்மின் -என்றும்-சொன்ன இவை -என்கை –
என்னிடரை மாலுக்கு இயம்பும் என-
அதாவது –
எந் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை யுரைத்து -என்றும் –
மெய்யமர் காதல் சொல்லி -என்றும் –
யாமிதுவோ தக்கவாறு என்ன வேண்டும் -என்றும் –
எனக்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே -என்றும்
கற்பியா வைத்த மாற்றம் சொல்லி சென்மின்கள் -என்றும்
மது சூதற்கு என் மாற்றம் சொல்லி -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனை கண்டு ஏசறு நும்மை அல்லால் மறு நோக்கிலள் என்று சொல் -என்றும்
விண்ணவர் கோனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் -என்றும்
மந்திரத்து ஓன்று உணர்த்தி உரையீர் -என்றும்-அருளிச் செய்தவை -என்கை –
மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் –
ஸ்ரீ திரு நாடு முதலா வது – மூன்றாம் தூதுக்கு விஷயம் பரத்வ த்வயம் -என்கையாலே
ஸ்ரீ திரு நாடும்-ஸ்ரீ நெஞ்சு நாடும்-விஷயம் –
மா மதுவார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு -என்றும்
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு -என்றும்
எனக்குச் சென்றிலும் கண்டு -என்றும்
ஸ்ரீ பரத்வ-ஸ்ரீ அந்தர்யாமித்வ-விஷய தூது ப்ரேஷணமாய் இருக்கும் -இத் திருவாய் மொழி –
தூது நல்கி விடுகை யாவது –
விருப்பத்தோடு விடுகை – தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -என்று
ஐக ரஸ்யம் பற்றாசாக விடுகை -என்றபடி-
மன்னு திரு நாடு முதல் தூது நல்கி விடும் -மாறனையே –
நித்யமான ஸ்ரீ திரு நாடு முதலான ஸ்தலங்களிலே ஆதாரத்தோடு தூது விடும் ஸ்ரீ ஆழ்வாரையே –
நீடுலகீர் போய் வணங்கும் நீர் –
பிரவாஹ ரூபேண-நித்யமான சகத்திலே வர்த்திகிறவர்களே நீங்கள் தூது விடுகை ஆகிற வருத்தம் இன்றிக்கே
நீங்களே நடந்து போய் சேவியுங்கோள் –
ஸ்ரீ திருநாடு போலே நெடுகி இராதே
ஸ்ரீ திரு நாட்டில் ஸ்ரீ திரு நகரி கிட்டிற்றாய் இறே இருப்பது –
நீங்கள் புருஷகார நிரபேஷராக ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயிங்கோள் –
———————————————
அவதாரிகை –
இதில்-கேட்டார் அடைய நீராம்படி கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
தம் ஆர்த்த த்வனி கேட்டு கடகர் கால் நடை தந்து போக மாட்டாமல் தரைப் பட்டுக் கிடக்கிற படியைக் கண்டு
அறிவிலிகளான இவர்கள் ஈடுபட்ட படி கண்டால் ஸ்ரீ சர்வஞ்ஞன் கேட்டால் பொறுக்க மாட்டாமல்
சடக்கென வந்து முகம் காட்டும் -என்று அறுதி இட்டு
ஸ்ரீ திரு நாட்டு இருப்பும் அடி கலங்கும் படி முழு மிடறு செய்து கூப்பிடுகிற
நீராய் நிலனாயில் அர்த்தத்தை நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய -என்று தொடங்கி
அருளிச் செய்கிறார் -என்கை –
——————————————————————–
நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-
—————————————–
வியாக்யானம்–
நீராகிக் கேட்டவர்கள் -நெஞ்சு அழிய-
கேட்டவர்கள் நீராய் -நெஞ்சு அழியும்படி யாகவும் அசேதனங்களோடு -சைதன்ய லேசம் யுடையாரோடு
பரம சேதனனோடு-வாசி அற கேட்டார் எல்லாம் நீர்ப்பண்டமாய்-நெஞ்சு அழியும்படியாக –
பாவைகளோடு – பஷிகளோடு – ரஷகனோடு வாசி அற-எல்லாரும் த்ரவ்ய த்ரவ்யமாய்
ஹ்ருதய சைதில்யம் பிறக்கும் படி –
மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதா –
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கும் அந்தாமமான ஸ்ரீ பரமபதத்தில் இருப்புப் பொருந்தாத படியாகவும்
விண் மீது இருப்பு அரிதாம் படி –
ஆராத காதலுடன் கூப்பிட்ட-
க்ரோசந்தீம் ராம ராமேதி -என்னும்படி-சமியாத அபி நிவேசத்துடன் ஆக்ரோசம் பண்ணின –
அதாவது –
வாராய் -என்றும்
நடவாய் -என்றும்
ஒரு நாள் காண வாராய் -என்றும்
ஒளிப்பாயோ -என்றும்
அருளாயே -என்றும்
இன்னம் கெடுப்பாயோ -என்றும்
தளர்வேனோ -என்றும்
திரிவேனோ -என்றும்
குறுகாதோ -என்றும்
சிறு காலத்தை உறுமோ யந்தோ -என்றும்-ஆர்த்தியுடன் கூப்பிட்டவை என்கை –
ஆராத காதலுடன் கூப்பிட்ட-காரி மாறன் சொல்லை –
அத்யபிநிவேசத்தாலே-ஆர்த்தியை தர்சிப்பித்த அபிஜாதரான ஸ்ரீ ஆழ்வார் உடைய திவ்ய ஸூக்தியை-
ஒதிடவே யுய்யும் யுலகு –
இத்தை அப்யசிக்கவே–ஜகத்து உஜ்ஜீவிக்கும்
ஜகத்தில் யுண்டான-சேதனர்களும் உஜ்ஜீவிப்பார்கள் -என்றபடி –
———————————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புக்க பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கீழ்
ஆர்த்தி பாரவச்யத்தாலே கூப்பிடுகிற இவர்-பிராப்யாந்தரமான ஐஸ்வர்ய கைவல்யங்களை காற்கடைக் கொண்டு
ஸ்ரீயபதிகளின் திருவடிகளிலே பண்ணும் அடிமையே பரம பிராப்யம் என்று அறுதி இட்டு
அந்த பிராப்யத்தை பெறுகைக்காக-தேச காலாதி விப்ர க்ருஷ்டங்களான ஸ்தலங்களை விட்டு
கானமும் வானரமும் வேடும் ஆனவருக்கு முகம் கொடுத்துக் கொண்டு
சௌலப்ய சாம்ராஜ்யம் பண்ணுகிற ஸ்ரீ திரு வேங்கடமுடையான் திருவடிகளிலே
ச பிராது -இத்யாதிப் படியே ஸ்ரீ பிராட்டியை முன்னிட்டு
சரண்ய குண பூர்த்தியையும்-சரண வரண உத்யுக்தரான தம் வெறுமையையும் அனுசந்தித்துக் கொண்டு
பூர்ண பிரபத்தி பண்ணுகிற உலகமுண்ட பெருவாயனில் அர்த்தத்தை
உலகு உய்ய மால் நின்ற -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
——————————————————
உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே
அலர் மகளை முன்னிட்டு அவன் தன் -மலரடியே
வன் சரணாய்ச் சேர்ந்த மகிழ் மாறன் தாளிணையே
உன் சரணாய் நெஞ்சமே உள்—60-
——————————————————-
வியாக்யானம்–
உலகுய்ய மால் நின்ற உயர் வேங்கடத்தே –
சென்னி யோங்கு தண் திரு வேங்கடமுடையான் யுலகு தன்னை வாழ நின்ற நம்பி -என்று சொல்லுகிறபடியே
லோகமாக உஜ்ஜீவித்து வாழும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் நின்று அருளின ஸ்ரீ திரு மலையிலே
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே –என்றதிலே நோக்கு-
அலர் மகளை முன்னிட்டு –
திரு மா மகள் கேள்வா -என்றும்
அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றும்-ஸ்ரீ பெரிய பிராட்டியாரை புருஷகாரமாக முன்னிட்டு-
அவன் தன் -மலரடியே –
ஸ்ரீ திரு வேங்கடத்தானானவன் பூவார் கழல்களான- நாண் மலர் அடித் தாமரையையே –
அதாவது –
குலதொல் அடியேன் உனபாதம் -என்றும்
ஆறாவன்பில் அடியேன் உட் அடி சேர் வண்ணம் -என்றும்
அண்ணலே உன் அடி சேர -என்றும்
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு -என்றும்
திண் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் -என்றும்
எந் நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே -என்றும்
உன பாதம் காண -என்றும்
நோலாதாற்றே னுன பாதம் -என்றும்
அந்தோ அடியேனுன பாதம் அகலகில்லேன் -என்றும்
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் இப்படி-அடியே தொடங்கி-அடியைத் தொடர்ந்த படி-
அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த –
ஸ்ரீ திரு வேம்கடத்தனான-அவன் மலரடியே
இத்தால்
நிகரில் புகழாய் -என்று தொடங்கி அனுசந்திக்கிற வாத்சல்யாதிகளும் ஸூசிதம்
அவன் தன் மலரடியே வன் சரணாய்ச் சேர்ந்த -மகிழ் மாறன் –
திரு வேங்கடத்தானே புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும்
தம் வெறுமையை முன்னிட்டு-அவன் திருவடிகளிலே நிரபேஷ உபாயமாக
ஸ்வீகரித்த ஸ்ரீ ஆழ்வார் உடைய திருவடிகளே உனக்கு உபாயமாக ஸ்வீகரீ –
அகலகில்லேன் என்று பூர்வ வாக்கியம் அனுசந்தித்தார்-என்னும்படி
சக்ரமமாக-சரண வரணம் பண்ணுகையாலே சாத்தின திரு மகிழ் மாலையும் சம்ருதம் ஆயிற்று –
சரண்யன்-தண் துழாய் விரை நாறு கண்ணியனாப் போலே
சரணாகதரான இவரும் மகிழ் மாலையினரானார்
அது சேஷித்வ உத்தியோகம்
இது சேஷத்வ உத்தியோகம்
அவர் பூம் துழாயன் அடியைச் சேர்ந்தால் போலே
இவரும்-மகிழ் மாறன் தாளிணையே உன் சரணாய் நெஞ்சமே உள்-என்கிறார்
நெஞ்சே
வகுளாபிராமமான திருவடிகளை உனக்கு உபாயமாக அத்யவசித்துப் போரு-என்கிறார்
————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply