அவதாரிகை –
இதில் சகல பதார்த்தங்களையும் சம துக்கிகளாக எண்ணி துக்கிக்கிற படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
(துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியனவல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே –1-3-10-)
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன்
அலற்றுவன்
தழுவுவன்
வணங்குவன் (1-3-10)-என்று
இவர் பாரித்த படியே அனுபவிக்கப் பெறாமையால் -ஷட் குண சாம்யத்தாலே தாமான தன்மை குலைந்து
ஸ்ரீ பிராட்டியான தன்மையைப் பஜித்து தூது விட ஷமர் ஆனார் அஞ்சிறைய மட நாரையில்-
இங்கு ஸ்ரீ நம்பியை தென் குறுங்குடி நின்ற -இத்யாதிப் படியே
மேன்மை நீர்மை வடிவழகு மூன்றும் குறைவற யுண்டாய் அவதாரத்தில் பிற்பாடரும் இழக்க வேண்டாத படி
முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற ஸ்தலமான அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப் பட்டு
கிடையாமையாலே கண்ணாஞ்சுழலை இட்டு
நாரை
அன்றில்
கடல்
வாடை
வானம்
மதி
இருள்
கழி
விளக்கு
துடக்கமான லௌகிக பதார்த்தங்களுக்கும் தம்மைப் போலே ஸ்ரீ பகவத் விரஹத்தாலே நோவு படுகிறனவாகக் கொண்டு
அவற்றுக்குமாக தாம் நோவு பட்டுச் செல்லுகிற படியை அன்யாபதேசத்தாலே பேசிச் சொல்லுகிற
வாயும் திரை யுகளில் அர்த்தத்தை வாயும் திருமாலால் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
——————————————-
வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் -ஆய
அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –11-
வாயும் -திருமால் –வாயும்-வாய்க்கும் –
அடியார் அனுபவிக்கலாம்படி அடியாரை கிட்டுகையே ஸ்வ பாவமாக யுடைய ஸ்ரீ யபதி யானவன் –
ஆய அறியாதவற்றோடு –
அசேதனங்கள் ஆகையால்- தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றை
செறிவாரை திணிந்து நோக்கும் –
ஆஸ்ரிதர்களை த்ருடமாக கடாஷித்து அருளுவார்-
—————————————-
வியாக்யானம்–
வாயும் திருமால் மறைய நிற்க –
அனுபவ யோக்யமாம்படி கிட்டுகையே ஸ்வபாவமாக இருக்கிற ஸ்ரீ யபதியானவன் –
போக சாத்ம்ய ஹேதுவாக விஸ்லேஷித்து அத்ருஸ்யனாய் நிற்க –(சாத்ம்ய போகம் பொறுக்க பொறுக்க -போக சாத்ம்யம் -போகம் தரிக்க )
கீழே -மைந்தனை மலராள் மணவாளனை -என்றத்தை அனுபாஷித்த படி
அன்றிக்கே-நீயும் திருமாலால் -என்றதாகவுமாம் –
மணியை வானவர் கண்ணனை தன்னதோர் அணியை -என்று
மேன்மையையும் நீர்மையையும் வடிவு அழகையும் யுடையவன் விஸ்லேஷிக்கையாலே –
(சொல்லும் பொருளும் தொகுத்து உரைக்கிறார் ஆதலால் அங்கு உள்ள சொல்லைக் காட்டி அருளுகிறார்)
ஆற்றாமை போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் –
ஆராத காதல் -என்னும்படி விஸ்லேஷ வ்யசனம் ஆவது கை கழியப் போய் மிக்கு
சீதே ம்ருதஸ் தேஸ்வ ஸூர பித்ராஹீ நோசி லஷ்மண-என்னும்படி-மிக்க பிரலாம்பராய்
ஆய அறியாத வற்றோடு அணைந்து அழுத மாறன் –
அசேதனங்கள் ஆகையாலே தம்முடைய துக்கத்தை ஆராய அறியாத வற்றைக் கட்டிக் கொண்டு
ஆற்றாமை சொல்லி அழுவோமை -என்று சம துக்கிகளாக அழுத ஸ்ரீ ஆழ்வார் –
காற்றும் கழியும் கட்டி அழ -என்றார் இறே ஸ்ரீ நாயனார் –
செறிவாரை நோக்கும் திணிந்து
அநந்ய பிரயோஜனராய்-அந்தரங்கமாக ஆஸ்ரயிக்கும் அவர்களை த்ருடமாக கடாஷிப்பர் –
தம்மைப் போலே அசேதனங்களைக் கட்டிக் கொண்டு அழாமல் ஸ்ரீ பகவத் சம்ஸ்லேஷம் யுண்டாய்
ஆநந்திக்கும் படி கடாஷித்து அருளுவர் –
————————————————————————————
அவதாரிகை –
ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான பரத்வத்திலே -அவதாரத்திலே அனுசந்தித்து
பரோபதேசம் பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
பிரிந்தாரை கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும் அளவன்றிக்கே
கூடினாலும் பிரிவை மறக்கும்படி பண்ணவற்றான விஷய வைலஷண்யம்
அதுக்கு ஈடான குண வைலஷண்யம்
அதுக்கு அடியான சர்வேஸ்வரத்வம்–இவற்றை அனுவதித்து
இப்படி ப்ராசங்கிகமாக பிரஸ்துதமான சர்வேஸ்வரத்தை இதிஹாச புராண பிரக்ரியையாலே
பிறரைக் குறித்து உபதேசித்துச் செல்லுகிற
திண்ணன் வீட்டில் அர்த்தத்தை – திண்ணிதாம் மாறன் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
——————————————-
திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —-12-
———————————
வியாக்யானம்-
திண்ணிதா மாறன் –
கீழே-மூவா முதல்வா இனி வெம்மைச் சோரேல் – என்ற அநந்தரம் –
சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி -என்கிற
காரணத்வத்தால் வந்த பரத்வத்தைக் காட்டி சமாதானம் பண்ண
அத்தாலே தரித்த தார்ட்ட்யத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் -என்னுதல்
எல்லாருக்கும் ஸூ த்ருடமாம்படி பரத்வத்தை அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் -என்னுதல் –
திருமால் பரத்துவத்தை –
ஸ்ரீ யபதியான ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய பரத்வத்தை நீயும் திருமாலால் -என்று இறே அருளிச் செய்தது –
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -திருமால் பரத்வத்தை அவதாரத்தே நண்ணி நன்குரைத்த
முதல் திருவாய் மொழியிலே ஸ்ருதி சாயலிலே
பரத்வே பரத்வத்தை அருளிச் செய்தால் போல் அன்றிக்கே இதிஹாச புராண பிரக்ரியையாலே
அதி ஸூலபமான அவதாரத்திலே பரத்வத்தை ஆஸ்ரயணீயமாம்படி நன்றாக அருளிச் செய்த
அன்றிக்கே –
ஸ்ரீ திருமால் பரத்வத்தை தாம் நண்ணி அவதாரத்திலே நன்கு உரைத்த -என்றாகவுமாம்-
நன்கு உரைத்த வண்ணம் அறிந்து –
நன்கு உரைத்த வண்ணம் அறிகையாவது –இப்படி அவதாரே பரத்வத்தை ஸூஸ்பஷ்டமாம் படி
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே -என்றும்
கோபால கோளரி ஏறு அன்றி ஏழுலகும் ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் யார் -என்றும்
அருளிச் செய்த பிரகாரத்தை அறிகை –
மற்றும் தத் சேஷமாக-
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -என்றும்
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகுஞ்சோதி மேல் அறிவார் எவரே -என்றும்
கள்வா -என்று துடங்கி -புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவர் என்றும் அருளிச் செய்தவையும் உண்டு இறே –
இப்படி அருளிச் செய்யும் இடத்தில்
கிருஷ்ண ஏவஹி லோகா நாம் உத்பத்தி ரபி சாப்யாய -என்றும்
ஸ ஏஷ ப்ருது தீர்க்கா ஷச சம்பந்தி தேஜ நார்த்தன -என்றும்
அர்ச்சய மர்ச்சிதும் இச்சா மஸ்சர்வம் சம்மதம் து மர்ஹத -என்றும்
பாதேன கமலா பேன ப்ரஹ்ம ருத்ரார்சித நச -என்றும்
சொல்லுகிற பிரமாணங்களைப் பின் சென்று இறே அருளிச் செய்தது –
ராமா கமலா பத்ராஷஸ் சர்வ சத்வ மநோஹரா-என்றும்
பாவநஸ் சர்வ லோகா நாந்த்வமேவர ரகு நந்தன -இத்யாதி பிரமாணங்களைப் பற்ற
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் -என்றும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் -என்றும் அருளிச் செய்தார் இறே
இப்படி பரோபதேச பிரகாரத்தை அறிந்து பரத்வ ஸ்தாபகரான ஸ்ரீ ஆழ்வார் இடத்திலே –
அற்றார்கள் யாவர் –
அற்றுத் தீர்ந்து அனந்யார்ஹராய் இருப்பார் யாவர் சிலர் –
அவர் அடிக்கே ஆங்கு அவர் பால் உற்றாரை மேலிடா தூன்
அவர்கள் திருவடிகளுக்கு அனந்யார்ஹராய்-அவ்விடத்திலே அப்படியே அவர்கள் விஷயத்தில்
அந்தரங்கராய் கிட்டினவர்களை மாம்ஸாஸ்ருகாதி மல ரூபமான தேஹம் அபி பவியாது-
இத்தால் தேக சம்பந்தம் மேலிடாது -என்றபடி-
——————————————
அவதாரிகை –
இதில் ஸ்ரீ எம்பெருமான் ஏக தத்வம் என்னும் படி சம்ஸ்லேஷிக்க-தத் அனுபவ சஹகாரி சாபேஷராய்
அருளிச் செய்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி பிரசாங்கிகமான பரோபதேசத்தை தலைக் கட்டின அநந்தரம்
கீழ்-தம்முடைய ஆர்த்தி தீர வந்து கலந்த ஸ்ரீ எம்பெருமான் உடைய சம்ஸ்லேஷ ரசத்தை பேச ஒருப்பட்டு
எப்பேர்பட்ட இனிமையும் விளையும் படி தம்முடனே அவன் வந்து
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-இத்யாதிப் படியே ஏக தத்வம் என்னலாம் படி கலந்தபடியையும்
அந்த கல்வியால் வந்த ரசம் தம் ஒருவரால் உண்டு அறுக்க ஒண்ணாத படி அளவிறந்து இருக்கிற படியையும்
அனுசந்தித்து தனித் தேட்டமான இதர விஷயங்கள் போல் அன்றிக்கே-துணைத் தேட்டமாய்
அதுக்கு இவ் விபூதியில் ஆள் இல்லாமையாலே
இவ் வனுபவத்தில் நிலை நின்ற நித்ய சூரிகள் திரளிலே-போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறுவது எப்போதோ
என்று பிரார்திக்கிற-ஊனில் வாழ் அர்த்தத்தை ஊனம் அறவே வந்து -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
—————————————————-
ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை
யானது அனுபவித்தற்காம் துணையா -வானில்
அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே ஆடு—13-
———————————————————-
வியாக்யானம்–
ஊனம் அறவே வந்துள் கலந்த மாலினிமை யானது –
அதாவது-நித்ய சம்சாரி என்று சங்கோசியாமல் சங்கோசம் அற ஸ்ரீ சர்வேஸ்வரன் வந்து
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -என்றும்
என தாவியுள் கலந்த பெரு நல் உதவி -என்றும்
கனிவார் வீட்டின்பமே -என்றும்
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே -என்றும்-இப்படி சர்வ ரசங்களும் உண்டாம்படி
அந்தரங்கமாகக் கலந்த கலவியின் இனிமையானது ச ஹிருதயமாக சம்ஸ்லேஷித்த சாரஸ்யம் ஆனது
அனுபவித்தற்காம் துணையா –
ஏவம் வித ரஸ்யதையை அனுபவிக்கைக்கு
அடியார்கள் குழாம்களை உடன் கூடுவது என்று கொலோ -என்று அனுகூல சஹவாஸம் அபேஷிதமாய்
வானில் அடியார் குழாம் கூட ஆசை யுற்ற மாறன் அடியார் உடன் நெஞ்சே யாடு –
வையத்து அடியவர்கள் அன்றிக்கே அனுபவத்துக்கு தேசிகராய் வானில் அடியார்கள் குழாம்களுடன் கூட வேணும் என்று
அபி நிவேசத்திலே ஊன்றின ஸ்ரீ ஆழ்வார் அடியாரான இங்குத்தை ஸ்ரீ வைஷ்ணவர்களோடே நெஞ்சே கூடி யாடு
அன்றிக்கே –
அக் குழாத்தில் முழுகி அனுபவிக்கப் பார் -என்றுமாம்-அடியீருடன் கூடி நின்று ஆடுமினோ -என்றார் இறே-
—————————————————————
அவதாரிகை –
இதில் ததீயரையும் அவனையும் பிரிகையாலே மிகவும் தளர்ந்து தாய் பேச்சாலே பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – எங்கனே என்னில் –
ஸ்ரீ எம்பெருமானைப் பிரிந்த அளவன்றிக்கே அவனுக்கு பிராண பூதரான நித்ய சூரிகளையும் கூடப் பிரிகையாலே
தம் தசையை அறியாதபடி மோஹிதராய் கிடக்கிற தம் படியை பார்ஸ்வச்தரான பரிவர் அவனுக்கு விண்ணப்பம் செய்கிற
பிரகாரத்தை கலந்து பிரிந்து மோஹங்கதையான ஸ்ரீ பிராட்டி உடைய விரஹ பரவச வியாபார உக்திகளை அனுகரித்து
அவனுக்கு அறிவிக்கிற திருத் தாயார் பேச்சாலே அருளிச் செய்கிற -ஆடி யாடியில் அர்த்தத்தை –
ஆடி மகிழ் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் –
————————————————–
ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க மோகித்து
துன்புற்றான் மாறன் அந்தோ —-14-
—————————————————–
வியாக்யானம்-
ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன் கூடி இன்பம் எய்தாக் குறையதனால் -வாடி மிக –
ஆடி மகிழ் வானில் –
பகவத் அனுபவத்தில் அவஹாகித்து ஹிருஷ்டர் ஆகிற -என்னுதல் –
அன்றிக்கே
ஸ்ரீ பகவத் அனுபவ பிரகர்ஷத்தாலே-ந்ருத்யந்தி கேசித் -என்னும் படியாக – அத்தாலே ஹ்ருஷ்டராக -என்னுதல் –
இப்படியான வானில் அடியார் உண்டு ஸ்ரீ வைகுண்ட வாசிகளான நித்ய சூரிகள்
அவர்கள் சங்கத்திலே சங்கதராய் -ஆனந்தத்தை அடையாத அபூர்த்தியாலே-வாடி வாடும் -என்று மிகவும் வாடி –
அன்புற்றார் தம் நிலைமை ஆய்ந்து உரைக்க –
முயல்கின்றேன் அவன் தன் மொய் கழற்கு அன்பை -என்று நிரவதிக சிநேக உக்தரான
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி ப்ரயுக்த ஸூஹ்ருத்துக்கள்-
இவர் வ்யாமோஹத்தை ஸ்ரீ எம்பெருமானுக்கு நிரூபித்து-தன் முகேன இது தேவர் கிருபா சாத்தியம் -என்று
விஞ்ஞாபிக்கிற படியை-தன் திறத்திலே பரிவுடைய திருத் தாயார்-தன் ஸ்வ பாவத்தை அறிந்து பேசும்படியாக –
மோகித்து துன்புற்றான் மாறன் அந்தோ –
தாம் தம் தசையைப் பேச மாட்டாமல்
பிறர் பேசும்படி மோஹித்து துக்கத்தைப் பிராப்தர் ஆனார் ஸ்ரீ ஆழ்வார் –
ஐயோ -மமா பிவ்யதிதம் மன -என்று
அற்ற பற்றார்க்கும் இரங்க வேண்டும் படியாய் இறே இவர் தசை இருப்பது –
அன்புற்றார் தன்னிலைமை யாய்ந்து உரைக்கை யாவது –
சாதியர் கூர்த்தவஞ்ச -இத்யாதிப் படியே
எங்கும் நாடி நாடி நரசிங்கா வென்று வாடி வாடும் -என்றும்
உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் -உம்மைக் காண நீர் இரக்கம் இலீரே -என்றும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் என தவள வண்ணர் தகவுகளே -என்றும்
உம்மைத் தஞ்சம் என இவள் பட்டனவே -என்றும்
நுமது இட்டம் என் கொலோ இவ் ஏழைக்கு -என்றும்
இவள் மாழை நோக்கு ஒன்றும் மாட்டேன்மினே -என்றும்–இப்புடைகளிலே அருளிச் செய்தவை-என்கை –
இப்படி தம் தசை தமக்கும் வாசோ மகோசரமாய்-கண்டார் எல்லாரும் இரங்க வேண்டும்படியாய் இருக்கும் ஆயிற்று –
—————————————————
அவதாரிகை –
இதில் ஆடியாடியில் -விடாய் தீர அடியார்கள் குழாங்களுடனே வந்து கலந்த படியைப் பேசின
பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்-அது எங்கனே என்னில்
இவருடைய ஆர்த்தி தீரக் கலந்து-வாட்டமில் புகழ் ஸ்ரீ வாமனனாவன் –
ஆயிரம் ஆண்டு முதலையின் கையிலே அகப்பட்டு இடர் பட்ட ஆனையின் இடரைச்
சடக்கென வந்து போக்கினால் போலே-
ஆடியாடி யிலே தாம் பட்ட இடர் எல்லாம் போம்படி
ஆசைப் பட்டபடியே அடியார் குழாங்கள் உடன் கூடி வந்து-சம்ஸ்லேஷித்து அருளக் கண்டு
தம்மோட்டைக் கலவியாலே-அவன் வடிவிலே பிறந்த புதுக் கணிப்பை மண்டி அனுபவித்து
ப்ரீதராய்ச் செல்லுகிற அந்தாமத்து அன்பில் அர்த்தத்தை அந்தாமத்து அன்பாலே -அருளிச் செய்கிறார் –
—————————————————–
அந்தாமத்து அன்பால் அடியார்களோடு இறைவன்
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் -சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே
வாய்ந்த வன்பை நாடோறும் வை—-15-
—————————————————-
வியாக்யானம்–
அந்தாமத்து அன்பால் –
அழகிய ஸ்ரீ வைகுண்ட தாமத்தில் பண்ணும் விருப்பத்தாலே –
அத் தேசத்திலும் அத் தேசிகர் இடத்திலும் உண்டான அதி ஸ்நேஹத்தாலே –
அடியார்களோடு இறைவன் –
அடியார்கள் உண்டு -அஸ்த்ர பூஷன பிரமுகராய் உள்ள நித்ய சூரிகள் -அவர்களோடு கூட ஸ்ரீ சர்வேஸ்வரன்
சபரிகரனாய் உளனாம் படி சம்ஸ்லிஷ்டனாய்-
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்காழி நூலாரமுள-என்றத்தை நினைக்கிறது –
வந்து ஆரத் தான் கலந்த வண்மையினால் –
சர்வ ஸ்மாத் பரனான தான் ஸ்ரீ பரம பதத்தின் நின்றும் பரமாபதமா பன்னரான-இவர் இருந்த இடத்து அளவும் வந்து
பரிபூர்ணமாக சம்ஸ்லேஷித்த ஔதார்யத்தாலே –
சந்தாபம் தீர்ந்த –
விசோதித ஜடஸ் ஸநாத-தஸ்தௌ தத்ர ஸ்ரியாஜ்வலன் -என்றும்
அதிவ ராமஸ் ஸூஸூபே-என்றும்
செந்தாமரை தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தாமரை அடிக்கள் செம்பொன் திரு உடம்பே -என்றும்
திரு உடம்பு வான் சுடர் –என்னுள் கலந்தானுக்கே -என்றும்
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம் மின்னும்
சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் -என்றும்
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -என்றும்
வாட்டமில் புகழ் வாமனன் மலை போலே பெருத்து அவயவ சௌந்தர்யாதி களையும் யுடையனாய்
இருக்கிற படியை அனுபவித்து சந்தாபம் ஆனது சவாசனமாக நிவ்ருத்தமான –
சந்தாபம் ஆவது
ஆடியாடி யில்
வாடுதல்
இரக்கம் இல்லாமல் தவித்து
வெவ்வுயிர்த்தல்
வாய் வெருவுதல்
உள்ளம் உக உருகுதல்
உள்ளுள் ஆவி உலருதல்
தன் நெஞ்சம் வேதல் துடக்கமானவை –
உள்ளுள் ஆவி உலர்ந்து -தீர -என்றும்
அல்லாவியுள் கலந்த -என்றும்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தான் -என்றும்
என்னுள் கலந்தவன் -என்றும் இறே இவர் அருளிச் செய்தது –
சந்தாபம் தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே வாய்ந்த வன்பை நாடோறும் வை –
ஸ்ரீ வானோர் தனித் தலைவன்-அந்தாமத்து அன்பு செய்யும் படியான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே
உன் தன் மொய் கழற்கு அன்பை முயல்கின்றேன் -என்கிறபடியே
மனசே ஸூசங்கதமான சங்கத்தை நித்யமாக நிஷிப்தம் ஆக்கு
நிதியை அடியிலே இட்டு வைப்பாரைப் போலே அன்பை அடியிலே இட்டு வை-
————————————————————
அவதாரிகை –
இதில்-அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதம் -என்று அனுபவிக்கிற இவர்
அயோக்யன் என்று அகலில் செய்வது என் -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அதி சங்கை பண்ண –
இவர் சமாதானம் பண்ணி தேற்றின படியைப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார்
அது எங்கனே என்னில் -ஸ்ரீ சர்வேஸ்வரன் உடன் சம்ஸ்லேஷித்த இவர் அல்லாவியுள் கலந்த -என்று
தம் சிறுமையைப் பார்த்து அனுசந்திக்கையாலே-வள வேழ் உலகு -தலை எடுத்து
இன்னமும் இவர் நம்மை விடில் செய்வது என் –என்று அதி சங்கை பண்ணி அலமருகிற படியைக் கண்டு
இவனுக்கு நம் பக்கல் பாரதந்த்ர்ய வாத்சல்யங்கள் இருந்த படி என் –என்று விஸ்மிதராய்
தான் அகலாமைக்கு உறுப்பாக பலவற்றையும் சொல்லி அவன் அதி சங்கையையும் தீர்த்து
அவனைத் தரிப்பிக்கிற -ஸ்ரீ வைகுண்ட மணி வண்ண -னில் அர்த்தத்தை-ஸ்ரீ வைகுந்தன் -இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் –
————————————————
வைகுந்தன் வந்து கலந்ததற் பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து -நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத் தான் விடேன் என்று உரைக்க
வன்மை யடைந்தான் கேசவன்—16-
—————————————–
வியாக்யானம்–
வைகுந்தன் வந்து கலந்ததற் பின் –
ஸ்ரீ நித்ய விபூதி உக்தன் அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மான் -என்னும்படி ஒரு நீராக கலந்த பின்பு –
வாழ் மாறன் –
அத்தாலே சத்தை பெற்று சம்பன்னரான ஆழ்வார் –
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து –
இவர் -அல்லாவி -என்று அகல நினைக்கிற நைச்சய அனுசந்தானத்தைக் கண்டு
இது என்னாக விளையக் கடவது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் விசாரித்து –
நைகின்ற தன்மைதனைக் கண்டு –
அவன் சிதிலனாகிற பிரகாரத்தை தர்சித்து –
உன்னைத் தான் விடேன் என்று உரைக்க –
இப்படி என் விஸ்லேஷத்தில் அதி பீருவாய் இருக்கிற உன்னை தான் விடேன் என்று –
உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே -என்றும்
உன்னை எங்கனம் விடுகேன் -என்றும்
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ -என்றும்
உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ -என்றும்–ஸ்ரீ ஈஸ்வரனைக் குறித்து அருளிச் செய்ய –
வன்மை யடைந்தான் கேசவன் –
விஜ்வர ப்ரமுமோதஹா-என்னும்படி துளக்கற்ற அமுதமாய் எங்கும் பக்க நோக்கு அறியாதே – என்றும்
என் மரகத மலையே -என்னும்படி ஸ்தர்யத்தைப் பிராபித்தான் -பிரசக்த கேசவன் ஆனவன் –
———————————————————
அவதாரிகை –
இதில்-கீழ் மேல் உண்டானவர்கள் எல்லாரும் தம்முடைய சம்பந்தத்தாலே ஸ்ரீ பகவத் தாஸ்ய லாபத்தை லபித்தார்கள் என்று
ஹ்ருஷ்டராய்ப் பேசுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
கீழ்-தம் அளவில் உண்டான உகப்பு தம் ஒருவர் அளவிலும் சுவறி விடுகை அன்றிக்கே தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்-விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினர் -என்கிற
விரோதி நிவ்ருத்தி அளவன்றிக்கே-பலத்தாலும் வெள்ளமிட்டு-அலை எறிகிற படியைக் கண்டு –
மமாப்யேஷ யதாதவ -என்னும்படி ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே என்று வித்தராய்
தம்மை இப்படி சபரிகரமாக விஷயீ கரிக்கைக்கு அடியான-அவன் குண சேஷ்டிதங்களை
திருத் த்வாதச நாம முகத்தாலே பேசி அனுபவித்து ப்ரீதர் ஆகிற
கேசவன் தமரில் -அர்த்தத்தை-கேசவனால் எந்தமார்கள் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —
—————————————————
கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு
ஆறு என்று நெஞ்சே அணை—17-
—————————————————–
வியாக்யானம்–
கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும் தேசம் அடைந்தார் என்று சிறந்துரைத்த -எம்பிரான் எம்மான் நாராயணனாலே-
எமர் -கீழ் மேல் ஏழ் பிறப்பும் -கேசவன் தமர் -ஆனார்கள்-மாசரிது பெற்று – அத்தாலே -நம்முடைய வாழ்வு வாய்க்கின்ற வா –
என்றத்தை நினைக்கிறது –
கேசவனால் எந்தமர்கள் –
ஜகத் காரண பூதனாய்-விரோதி நிரசனம் பண்ணுமவனாய் – பிரசஸ்த கேசவனான அவனாலே
மதீயர் தேசு அடைந்தார் என்று தேஜஸ் சைப் பிராபித்தார்கள் என்று – ஸ்ரீ கேசவன் தமராகை இறே இவர்களுக்கு தேஜஸ்
தாஸ்யம் இறே ஆத்மாவுக்கு தேஜஸ் கரமாவது –
அத்தை தம்மோட்டை சம்பந்தத்தாலே கீழ் மேல் உண்டான சம்பந்தி பரம்பரையில் உள்ளவர்கள் எல்லாரும் லபித்தார்கள் என்று
அந்த யுபகார கௌரவத்தாலே-அவன் குண சேஷ்டிதங்களுக்கு வாசகமாய் ஸ்ரீ வைஷ்ணத்வ சிஹ்னமாய்
கேசவன்
நாரணன்
மாதவன்
கோவிந்தன்
விட்டு
மது சூதனன்
திரி விக்ரமன்
வாமனன்
சிரீதரன்
இருடீகேசன்
பற்ப நாபன்
தாமோதரன் – என்கிற திரு த்வாதச திரு நாமங்களை பேசி அனுபவித்து ஹ்ருஷ்டராய் அத்தை இப்படி நன்றாக அருளிச் செய்த –
சிறப்பு -நன்று –
வீசு புகழ் மாறன்-
சம்பந்த சம்பந்திகள் அளவும் ஸ்ரீ வைஷ்ணத்வம் ஏறிப் பாயும் படியான வைபவத்தால் வந்த பிரசுரமான யசஸ்சை உடைய
ஸ்ரீ ஆழ்வார் உடைய-
மலரடியே மன்னுயிர்க்கு எல்லாம் உய்கைக்கு ஆறு என்று –
புஷ்பம் போன்ற திருவடிகளே நித்தியமான ஆத்மாக்களுக்கு எல்லாம் உஜ்ஜீவிக்கைக்கு உசித உபாயம் என்று –
நெஞ்சே அணை-
அவர்களிலே ஒருவனாய்-அம்சம் பெறும்படியான எனக்கு உபகரணமாய் சௌமனஸ்யம் உள்ள மனசே
பிரஸூன சமமான திருவடிகளை நீயும் சமாஸ்ரயணம் பண்ணு–
நாராயணனாலே -என்று –
அவனுடைய ஸ்வீகாரமே நிரபேஷ உபாயம் என்றதின் அனுவாதமான கேசவனால் என்கிற இப் பதத்திலே -தத் விவரணமாக
மாதவன் என்றதே கொண்டு -என்றும்
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் மேவும் தன் மயமாக்கினான் -என்றும்
என்னைக் கொண்டு -என்றும்
தன் பேறு ஆனமைக்கு -விட்டிலங்கு செஞ்சோதி -என்றும்
அம்மான் திரிவிக்ரமனை எனக்கே அருள் செய்ய –எனக்கு என்ன –விதி சூழ்ந்தது -என்றும்
தொழும் மனமே தந்தாய் -என்றும்
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -என்றும்
உன்னை என்னுள் வைத்தேன் என் இருடீகேசனே -என்றும்
ஏற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்றும்
தாமோதரனை -என்றும்-அருளிச் செய்த சந்தைகளும் அனுசந்தேயங்கள்-
—————————————————————
அவதாரிகை –
இதில் மோஷ பிரதத்வத்தை உபதேசித்த பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் சபரிகரமாக விஷயீ கரித்து விடுகிற மாத்ரம் அன்றிக்கே
முக்த ப்ராப்யமான போகத்தை தமக்கும் தம் பரிகரத்துக்கும் தருவானாகப் பாரிக்கிற படியைக் கண்டு
எல்லாருக்கும் தம்மோடு ஒரு சம்பந்தம் சித்திக்கும் படி சம்சாரிகளுக்கு அவனுடைய மோஷ பிரதத்வத்தை உபதேசிக்க
அவர்கள் அத்தைக் காற்கடைக் கொள்ள
ஸ்வ லாபத்தைப் பேசி த்ருப்தராகிற அணைவது அரவணை மேல் அர்த்தத்தை
அணைவர்கள் தம்முடனே -என்று அருளிச் செய்கிறார் என்கை-
——————————————-
அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட -இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே
வீசு புகழ் எம்மா வீடு—-18-
——————————————–
வியாக்யானம்–
அணைந்தவர்கள் தம்முடனே –
அணைவது அரவணை -யில்படியே- ஸ்ரீ பூமி நீளா நாயகனாய்–ஸ்ரீ அநந்த போக பர்யங்களில் எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டி அடிமை செய்கிற ஸ்ரீ அநந்த பரிமுகரான சூரி சங்கங்களோடு கூட்ட -என்னுதல்
அன்றிக்கே
கேசவன் தமர் -என்னும்படி கீழ் அந்தரங்கர் ஆனவர்கள் தங்களோடு கூட்டுதல் என்னுதல்
தம்முடனே -என்கிறது–ஸ்ரீ ஆழ்வார் தம்முடனே -என்றதாகவுமாம் –
தம்முடனே அணைந்தவர்கள் –
எமர் -என்று தாம் அபிமாநிக்கும் படியாக தம்மோடு அன்வயம் உண்டாம்படி யானவர்கள் -என்னுதல்
ஆயன் அருட்காளாம் குணம் தனையே கொண்டு –
எப்பொருட்கும் –இணைவனாம் -என்று – ஆஸ்ரித ஸூலபனாய் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணன் உடைய கிருபைக்கு விஷயமாம் படியாக –
மேலும் -என் கண்ணனை நான் கண்டனே –என்றார் இறே –
ஏவம் விதனானவனுடைய மோஷப் பிரதத்வம் ஆகிற குணம் ஒன்றையுமே கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
குணங்களையே கொண்டு -என்ற பாடம் ஆன போது
வீடு முதலாம் -என்கிற மோஷ பிரதத்வாதி குணங்களையே உபாயாந்தர நிரபேஷமாக திருத்துகைக்கு பரிகரமாகக் கொண்டு -என்னுதல்
அவ் வவதாரத்திலே இறே
இடைச்சி
இடையன்
தயிர்த் தாழி
கூனி
மாலாகாரர்
பிணவிருந்து
வேண்டி அடிசில் இட்டவருக்கு எல்லாம் மோஷம் கொடுத்தது
இணைவனாம் யெப்பொருட்க்கும் வீடு முதலாம் -என்று அவதார சாமான்யமாய் –
வேடன்
வேடுவச்சி
பஷி
குரங்குகள்
சரா சரங்களுக்கும்
மோஷம் கொடுத்தமை யுண்டாய் இருக்கவும்
ஆயனருக்கு -என்றத்தைப் பற்ற ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே ஊன்றி சொல்லிற்று –
கச்ச லோகன் அநுத்தமான் -என்று இறே
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ பெரிய உடையாருக்கு பிரசாதித்தது –
இப்படி அவதாரத்திலே மோஷ பிரதத்வாதி குணங்களைக் கொண்டு திருத்தி –
உலகைக் கூட்ட -இணங்கி மிக –
நித்ய சம்சாரிகளை நித்ய சூரிகளோடு கூட்ட-மிகவும் இணங்கி -மிகவும் பொருந்தி
அவர்கள் துர்க் கதியை சஹிக்க மாட்டாமல் அவர்களோடு இணக்குப் பார்வை போல்
சஜாதீயராய் இணங்கி –
ஆயன் அருட்கு ஆளாம் குணங்களையே கொண்டு-உலகை அணைந்தவர்கள்
தம்முடனே கூட்ட மிகவும் இணங்கி -என்று அந்வயம் –
மிக இணங்கி மாசில் உபதேசம் செய் மாறன்-
க்யாதி லாப பூஜாதி தோஷ ரஹிதமாய் இருக்கும் –
ஸூத்த உபதேசத்தை மிகவும் அடுத்து அடுத்துப் பண்ணும் பரிசுத்த ஞானரான ஸ்ரீ ஆழ்வார் –
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம் -என்றும்
பிறவிக் கடல் நீந்துவார்க்கு புணைவன் -என்றும்
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்–என்றும்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே -என்று இறே உபதேசித்து அருளிற்று –
மாசில் உபதேசம் செய் மாறன் மலரடியே –
ஏவம் வித உபதேஷ்டாவான ஸ்ரீ ஆழ்வார் உடைய புஷ்ப ஹாச ஸூகுமாரமான திருவடிகளே –
வீசு புகழ் எம்மா வீடு –
பரமே வ்யோமன் -என்று விக்யாதமான யசஸ்சை உடைய சர்வ பிரகார விலஷண மோஷம் –
ஸ்ரீ ஆழ்வாருக்கு -செம்மா பாதம் -இறே எம்மா வீடு–பொசிந்து காட்டும் இங்கே –
இவருக்கு ஸ்ரீ மாறன் மலர் அடியே யாயிற்று-விபூதிஸ் சர்வம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் இறே-
————————————————————
அவதாரிகை –
இதில்
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
பிறர்க்கு அவன் மோஷ பரதன் -என்னுமத்தை உபதேசிக்கிற அளவில்
முதல்
நடுவு
இறுதி
இவர் மோஷத்தை ஸ்லாகித்துக் கொண்டு பேசுகையாலே
இவருக்கு மோஷத்தில் அபேஷையாய் இருந்தது -என்று ஸ்ரீ ஈஸ்வரன் அத்தைக் கொடுக்கப் புக –
தமக்கு உகப்பாகத் தரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே அபுருஷார்த்தம் -என்று அத்தை கழித்து –
ஸ்ரீ பரமபதஸ்தனாய் ஸூகிக்கவுமாம்-சம்சாரஸ்தனாய் துக்கிக்கவுமாம் எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை
ஸ்ரீ தேவர்க்கு உறுப்பாம் அதுவே எனக்கு வடிவாம்படி பண்ணி அருள வேணும் என்று ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷிக்கிற
எம்மா வீட்டில் அர்த்தத்தை – எம்மா வீடும் வேண்டா –என்று துடங்கி அருளிச் செய்கிறார் -என்கை-
———————————————
எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த -நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாளிணை சூடி
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் —19-
—————————————————-
வியாக்யானம்–
எம்மா வீடும் வேண்டா என் தனக்குன் தாளிணையே அம்மா அமையும் என ஆய்ந்து உரைத்த –
எவ்வகையாலும் வி லஷணமான மோஷமும் வேண்டா –
சேஷ பூதனான எனக்கு-யாவந்ன சரனௌ சிரஸா தாரயிஷ்யாமி -என்னும்படி
சேஷியான தேவருடைய அங்க்ரி யுகளமே அமையும் என்று
உபய அனுகுணமாக முக்தியை ஆராய்ந்து தலை சேர நிஷ்கர்ஷித்து அருளிச் செய்த –
வாய்ந்து- என்று
இவ்வர்த்தத்திலே பொருந்தி என்றுமாம் –
இது -எம்மா வீட்டை -அடியே துடங்கி அடி ஒத்தின படி –
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து -என்று துடங்கி
உன் பொன்னடிச் சேர்த்து -என்று இறே தலைக் கட்டித் தான் இருப்பது –
தாளிணையே -என்கையாலே
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்றது ஸூசிதம்-
திருமுடியை திருவடிகளுக்கு பாத பீடம் ஆக்குகிறது அத்யந்த பாரதந்த்ர்யம் இறே –
நம்முடைய வாழ் முதலாம் மாறன் –
நம்முடைய ஸ்வரூப அனுரூபமான சம்பத்துக்கு அடியாம் ஸ்ரீ ஆழ்வார்
ஸ்ரீ ஆழ்வார் உடைய வாழ்வுக்கு அடி -தனியேன் வாழ் முதலே -என்கிற ஈஸ்வரனாய் இருக்கும்
இவருடைய வாழ்வுக்கு அடி ஸ்ரீ ஆழ்வாராய் இருக்கும் –
மலர்த் தாளிணை சூடி –
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -என்றும்
பாத பற்புத் தலை சேர்த்து -என்கிறபடியே செவ்விப் பூ சூடுவாரைப்போலே பூ போன்ற அடி இணையைச் சூடி –
கீழ்மை யற்று நெஞ்சே கிளர் –
தத் இதர சேவை ஆகிற தாழ்ச்சி அற்று ஸ்ரீ ஆழ்வார் சேவையாலே சத்தை பெற்று மனசே மயங்காமல்
மேன்மேல் எனக் கிளர்ந்து போரு –
——————————————————
அவதாரிகை –
இதில் சர்வ பிரகாரத்தாலும் ஸ்ரீ திருமலையை ஆஸ்ரயிக்கையே புருஷார்த்த சாதனம் என்று பரோபதேசம்
பண்ணுகிற பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தமாக வனுபவிக்கிற பிரகாரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் -என்று ஆகவுமாம் –
இது எங்கனே என்னில்
எம்மா வீட்டில் ஸ்வ பிராப்யத்தை நிஷ்கரிஷத்த அளவில்-ஒல்லை ஒல்லை -என்று இவர் த்வரிக்கப் புக்கவாறே
இவர் த்வரிக்கைக்கு அனுகுணமாக
இங்கேயே
இவ்வுடம்போடேயே
கிட்டி அடிமை செய்யலாம் படி தெற்கு ஸ்ரீ திருமலையிலே தான் நிற்கிற படியை இவருக்குக் காட்டிக் கொடுக்க
அத்தை அனுசந்தித்து
அவனிலும் அவன் உகந்து வர்த்திக்கிற தேசமே பிராப்யம் என்று நினைத்து
ஸ்ரீ திருமலை ஆழ்வாரை பெரிய ஆதாரத்தோடு அனுபவித்து ப்ரீதராய்
சம்சாரிகளையும் அங்கே ஆஸ்ரயிக்கும் படி பரோபதேசம் பண்ணுகிற கிளர் ஒளியின் அர்த்தத்தை
கிளர் ஒளி சேர் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் —
————————————————–
கிளர் ஒளிசேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க
வளர் ஒளி மால் சோலை மலைக்கே -தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேரும் எனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம்முடி—-20-
————————————————-
வியாக்யானம்–
கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க –
அதிசயமான ஒஜ்வல்யத்தை யுடைத்தாய் கீழ் உக்தமான எம்மா வீட்டில் பிராப்யமானது லபிக்கைக்காக –
வளர் ஒளி மால் சோலை மலைக்கே –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை -என்னும்படி கிளர் ஒளி மாயோனாய்
நாள் செல்ல செல்ல வளர்ந்து வாரா நின்றுள்ள ஒளியை யுடைய சர்வேஸ்வரன் வர்த்திக்கிற
ஸ்ரீ திருமால் இரும் சோலை மலைக்கே –
தளர்வறவே நெஞ்சை வைத்துச் சேரும் எனும்-
பகவத் ஸ்மரண ராஹித்யம் ஆகிற அநர்த்தம் இன்றிக்கே அவன் வர்த்திக்கிற ஸ்ரீ திருமலையில்
மனஸை வைத்து ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்யும் –
தளர்வு –
மநோ தௌர்ப்பல்யம்-ஜீவ ஸ்வா தந்த்ர்யம் -நின்றவா நில்லா நெஞ்சு
அறவே –
அது இன்றிக்கே -என்றபடி
கீழ் பிராப்யம்மான பாத பற்புக்கு தென்னன் உயர் பொருப்பை பிராப்யமாக விதித்த படி –
இது வன்றாட்சி மயமாகையாலே -திரு விருத்தம் -ஆஸ்ரயிக்கைக்கு அடி உடைத்து -சிமயம் -சிகரம் –
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே –
இப்படி நெஞ்சை வைத்து சேரும் எனும் –
நெஞ்சை வைத்துச் சேரும் என்கிறதுக்கு மூலம் -கிளர் ஒளி இளமை -என்கிற பாட்டு
மானஸ ஸ்ரத்தை மாறுவதற்கு முன்னே -என்று இறே இதுக்கு அர்த்தம் அருளிச் செய்தது –
உய்த்து உணர்வு எனும் ஒளி விளக்கு –என்னக் கடவது இறே
சேரும் என்றது -கிளர் ஒளி இளமை கெடுவதம் முன்னம் என்கிற முதல் பாட்டு பிரதானமாய்
போதவிழ் மலையே புகுவது பொருளே –என்னும் அளவும் அருளிச் செய்தவை –
அதாவது
சார்வது சதிரே -என்றும்
ஏத்தி எழுவது பயனே -என்றும்
அயன் மலையை அடைவது கருமமே -என்றும்
திருமலை யதுவே அடைவது திறமே -என்றும்
நெறி பட வதுவே நினைவது நலமே -என்றும்
பிரதஷிணஞ்ச குர்வாணஸ் சித்ர கூடம் மஹா கிரிம் -என்னும்படி
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -என்றும்
தொழக் கருதுவது துணிவது சூதே -என்றும்
போதவிழ் மலையே புகுவது பொருளே -என்றும்
ஸ்ரீ திருமலையோடு
அத்தைச் சேர்ந்த அயன்மலையோடு
புற மலையோடு
ஸ்ரீ திருப்பதியோடு
போம் வழியோடு
போகக் கடவோம் -என்று துணிந்த துணிவோடு
வாசி அற பிராப்யாந்தர்க்கதமாய்-ஸ்வ அனுபவ கர்ப்ப பரோபதேச முகேன
அனுபவித்து இனியராகிற பிரகாரமும் இவர்க்கு இப்பாட்டிலே விவஷிதம் –
அந்தர்கத குணா உபாசனத்தை மதித்து பெருக்கி மூழ்கி அழுந்து கீழ்மை
வலம் சூது செய்து இளமை கெடாமல் செய்யும் ஷேத்திர வாசம்
சங்கீர்த்தனம் அஞ்சலி பிரதஷிண கதி சிந்தநாத்யங்க உக்தம் ஆக்குகிறார் இரண்டாம் பத்தில் –
என்று இறே-ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -220-உபாய பரமாக ஸ்ரீ நாயனார் அருளிச் செய்கிறார்
ஸ்ரீ நாயனார் உபாய பரமாக அருளிச் செய்தது-ஆகையால் ஸ்ரீ திருமலையை பிராப்யதயாவும் ப்ராபகதயாவும்
ஆஸ்ரயிக்கும் படி அருளிச் செய்யக் குறை இல்லை இறே
நெஞ்சை வைத்து சேரும் எனும் -நீடு புகழ் மாறன் தாள் –
இப்படி பர அநர்த்தம் கண்டு பரோபதேசம் பண்ணுகையாலே நெடுகிப் போருமதாய்
அத்தாலே நித்தியமான யசஸை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே –
முன் செலுத்துவோம் எம்முடி –
அவர் திருவடிகளின் முன்பே நம்முடைய தலை சேரும்படி நடத்துவோம்
ஸ்ரீ மத தத் அங்கரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்நா-என்னக் கடவது இறே
இனி அவர் அடி அறியவே இறே வேண்டுவது
அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகள் நம் சென்னியிலே சேருவதற்கு முன்னமே-நாம் முற்பாடராய்
முடியைச் செலுத்துவோம் -என்றாகவுமாம் –
———————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply