****- நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார்.
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
பதவுரை
| அருள் பெறுவார் அடியார் தம் |
– |
எம்பெருமானருளைப் பெறுவதையே நிரூபமாகவுடைய பாகவதர்களுக்கு |
| நமது விதி வகையே |
– |
நாம் வித்ததபடியே யாம்; (ஆன பின்பு) |
| இனி |
– |
இனியொருநாளும் |
| அடியனேற்கு |
– |
அடிமைப் பட்டிருக்கு மெனக்கு |
| இருள் தருமா ஞாலத்துள் பிறவி |
– |
இவ்விருள்தருமா ஞாலத்திற் பிறப்பை யான் வேண்டேன் நான் இச்சிக்கமாட்டேன் |
| ஆழியான் |
– |
திருவாழியை யுடையனான எம்பெருமான் |
| மட நெஞ்சே |
– |
சபலமான மனமே! |
| அருள் தருவான் அமைகின்றான் |
– |
க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்; |
| நீ மருள் ஒழி |
– |
இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார் |
| அது |
– |
அப்படி க்ருபை பண்ணுவது |
| வாட்டாற்றான் அடி வணங்கு |
– |
திருவாட்டாற்றொம் பெருமானது திருவடிகளை வணங்கு. |
இப்பாட்டுக்கு இரண்டாமடியே உயிர்நிலையானது. ஆழியான் அருள் தருவானமைகின்றான் – நெஞ்சே! கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரன் நம்மேல் முழுநோக்காக நோக்கிப் பரம க்ருபையைப் பண்ணுவானாகப் பார்க்கின்றான்
திருவாழியை ஒரு கண்ணாலே பாரிப்பது, என்னை யொருகண்ணாலே பாரிப்பதாகா நின்றான்; திருவாழியை விட்டாலன்றோ ளும்மை நான் விடுவது என்னா நின்றான்; திருவாழியாழ்வான் முதலான நித்யஸூரிகள் பக்கலிலே பண்ணும் ப்ரேமத்தை யெல்லாம் என்னொருவன் திறத்து ஒரு மடைசெய்து பண்ணாநின்றான்.
இங்ஙனே செய்வது ஆர்பக்கலிலேயென்ன, அருள் பெறுவாரடியார்தம் அடியனேற்கு என்கிறார். எம்பெருமான் இப்படிப்பட்ட பேரருளைத் தம்பக்கலிலே செய்வதற்குக் காரணமுங்காட்டிக்கொண்டு சொல்லுகிறபடி.
எம்பெருமான் பண்ணும் பேரருளுக்கு இலக்காயிருப்பார் சிலருண்டு; அவர்கள் நமக்கு ஸ்வாமிகள். அவர்கள் பக்கலிலே அவன் பண்ணின அருள் அவர்களவிலே பரியவஸியாமல் நம்வரையிலும் வெள்ளங் கோத்ததுகாண் என்கிறார்.
நாம் அவன் தன்னையே பற்றியிருந்து அவனையே பார்த்திருந்தோமாகில் இப்பேரருள் பெறமுடியாதுகாண்; அவனருளுக்கிலக்கான அடியர்களையே நாம் பற்றினோமானது பற்றியே இப்பேரருளுக்கு நாம் இலக்காக வேண்டிற்று என்கிறார்.
எட்டாம்பத்தில் *நெமாற்கடிமைப் பதிகம் பாடினதற்குப் பலன் இன்று பெற்றோம் என்கிறார் போலும்.
‘அவனோ அருள்தருவானாயிருந்தான் ; நீரோ அருளைப்பெற அவகாசம் பார்த்திருந்தீர்; அது கிடைக்கிறபோது பெறவேண்டியது தானே, பெற்றுக்கொள்ளும்; இதற்கு தடையென்ன? என்றது நெஞ்சு;
அதற்குமேல் கூறுகிறாராழ்வார் அது நமது விதிவகையே என்று. நெஞ்சே! அவன் வெறுமருளையே தருவானாயிருந்தால் அதை நான் பெற்றுவிடமாட்டோனோ? அவன் அருள் தருவதோடு நிற்க வில்லையே?
*அஹம் ஸர்வம் காரிஷ்யாமி* என்று பார்த்துவந்த இளையபெருமாள் *க்ரியநாமிதி மாம் வத* என்று ஒரு நிர்ப்பந்தங்கொண்டாரன்றோ. ஏவிக் கொள்ள வேணும் என்றாரோ;
அதுபோல இந்த ஸர்வேச்வரன் தானும் ‘ஆழ்வீர்என்னை ஏவி அடிமைகொள்வீர்என்னா நின்றானோ; என்னுடைய விதிநிஷேதங்களுக்குத் தான் கட்டுப்பட்டவனாய். இன்னதை இன்ன விதமாகச் செய்யுமாறு தன்னை நோக்கி விதிக்கவேணுமென்று வேண்டாநின்றானே; இப்படியுமொரு அநியாயமுண்டோ? என்கிறாராழ்வார் நெஞ்சை நோக்கி.
எம்பெருமானார்க்கு முன்புள்ளார் சிலர்“அது நமது விதிவகையே” என்பதற்கு ‘அது நம்முடைய பாக்யாநுகுணமாக’ என்று பொருள் பணித்தார்களாம்;
*தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ர் நியதிரி விதி:* என்ற அமரகோசத்தை அவர்கள் கருத்திற் கொண்டனர் போலும்.
அப்படியன்றிக்கே எம்பெருமானார் “அப்பொருள் பொருந்தாது, இத்திருவாய்மொழியில் மேலோடுகிற ரஸத்தோடு சேராது; நாம் விதித்தபடியே செய்வானாயிருந்தான் என்னும் பொருளே இணங்கும்” என்றருளிச் செய்வாராம்.
“அது நமது சொல் வகையே” என்றும் பாசுரம் பணித்திருக்கலாம்; அங்ஙனன்றி ‘விதிவகையே’ என்றதில் ஒரு விசேஷமுண்டு.
விதியைக் கடந்தால் ப்ரத்யவாயம் வருமென்று அஞ்சுவாரைப்போலே அஞ்சாநின்றானாம் எம்பெருமான்.
‘நமக்கு இஷ்டமானதை ஆழ்வாருடைய நியமனமின்றி நம் மனம் போனபடி செய்துவிட்டோமாகில் என்ன ப்ரத்யவாயம் நேருமோ? என்று அஞ்சி ‘ஆழ்வீர் விதிக்கவேணும், விதிக்கவேணும்’; என்றானாம்;
அதை அப்படியே அநுவதிக்கிறராழ்வார். “என்னைப் பரம பதத்திற்குக் கொண்டுபேர் வழியெல்லாம் குடைகளும் சாமரமும் தோரணமும் வாத்யமுமாக இருக்கவேணும்; நீ கைப்பந்தம் பிடித்துக்கொண்டு ஸ்வாமியெச்சாரிக்கை! என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்லவேணும்; நடைபாவாடை பரப்பவேணும்; திருச்சின்னமும் காஹளியும் பணிமாறவேணும்; திருவிருத்தம் விண்ணப்பம் செய்வாரும் ஸ்தோத்ரரத்னம் சொல்லுவாரும் புடைசூழவேணும் – இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நீ செய்யவேணும்; என்று ஆழ்வார் திருவாக்கிலே விதிவாசகங்கள் வெளிவரவேணுமென்று எம்பெருமான் நிர்ஷிக்கிறபடி.
நமது விதிவகையே என்றவிடத்து ஈட்டில் “ததா அநுஜாநந்த முதார விக்ஷணை,“ என்ற ஸ்தோத்ர ரத்ந ஸூக்தியை ப்ரஸங்கித்து நம்பிள்ளையருளிச் செய்துள்ள திவ்ய ஸூக்திகளுக்கு வண்ணெல்லா முண்டோவிலை! என்ன வேண்டம்படியாயிரா நின்றது. கல்லுங்கரையநின்ற அந்த ஸ்ரீஸூக்திகள் அப்படியே அநுவதிப்போம்.
“(நமது விதிவகையே (த்தாநுஜாந்ந்த முதாரவீக்ஷணை) இது பட்டர் தாமே யருளிச்செய்ய நான் கெட்டேனென்றருளிச் செய்தார். சேனை முதலியார் சட்டையும் மயிர்க்கட்டும் கையும் பிரம்புமாய் வந்து புகுரப்புக்கவாறே நாச்சிமாரும் தானுமாய் ஸ்வைரமாக விருக்கிறவது தவிர்ந்து, நாச்சிமாரும் ஸிம்ஹானைத்திலொரு மூலைகளிலே யொதுங்க. தானும் ஸவிநயமாக இருக்குமாய்த்து வ்ருத்த ஸாமந்தரைக் கண்ட ராஜாக்களைப்போலே.
இவர் தாமும் ‘இவ்விருப்புக்குத் தண்ணீர்த் துரும்பாக வொண்ணாது‘ என்று ஜகந் நிர்வாஹத்துக்கு வேண்டுமவற்றை பாசுரப்பரப்பற விண்ணப்பஞ் செய்வராய்த்து. பிராட்டிமாரோடிருகுமதிலும் ப்ரஹ்மாவாக்க வேணும் இன்னானை மாற்றவேணும்‘ என்று வேண்டுமவற்றைச் சுருங்க விண்ணப்பஞ் செய்வர்.
ஐயர் யாதொன்று சொல்லிற்று அவயெல்லா யருளிச்செய்தபோது கிடாம்பியாச்சானோடு அல்லாதாரோடு வாசியறக் குமிழி நீருண்டது. ஆச்சான்தான் பட்டருக்கு ஸ்நேஹித்திருக்கும் போர. இளையாழ்வான் ஆச்சானை ‘பட்டர் தம்மையாச்சரயித்தவர் களிற் காட்டிலும் நீர் தாழ அநுவர்த்திப்பானென்?‘ என்று கேட்க, நீ அன்று கண்டிலைகாண்,
எம்பெருமானார் பட்டர்கையிலே புஸ்தகத்தைக் கொடத்துத் திருமுன்பே ஒரு ச்லோகத்தை விண்ணப்பஞ் செய்வித்துத் திருப்பிரம்புக்குப் புறம்பாக்க கொண்டு புறப்பட்டுச் சுற்றும் பார்த்தரளி நம்முடையாரங்கலும் நம்மை நினைத்திருக்குமாபோலே இவனை நினைத்திருங்கோள் என்றருளிச் செய்தார். (இவை ஈட்டு ஸ்ரீஸூக்திகள்.)
இருள் தருமாஞாலத்நுளினிப்பிறவி யான் வேண்டேன் – இது ஆழ்வார் தாம் தம் திருவுள்ளத்தோடே சொல்லுகிறபடி. “ஆழியானருள் தருவானமைகின்றான் அது நமது விதிவகையே” என்று சொன்ன ஆழ்வாரை நோக்கி
நெஞ்சு கேட்டது ‘எம்பெருமானுடைய ஆசையிருக்கிறபடி தெரிந்து கொண்டேன்; நீர் அவருடைய ஆசையின்படியே ஒழுகுவதாயிருக்கிறீரா? இங்கேயே குணாநுபவம் செய்வதாயிருக்கிறீரா?” என்று.
அதற்கு ஆழ்வார் விடை கூறினர் அவன்வழியே போவதாகத் தானிருக்கிறேனென்றார்.
அதற்கு நெஞ்சு சொல்லிற்று “வாரியாரின்பமெய்திலென்? மற்றை நரகமே யெய்திலென்? என்று சொன்னவரன்றோ நீர். அங்குப்போனால் திருநாடு ஒன்றே; இங்கு *சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே, மதிட்கச்சி யூரகமே பேரகமே பேராமருதிறுத்தான் வெள்ளறையே வெஃகாவே, பேராலி தண்கால் நறையூர் திருப்புலியூர், அராமஞ் சூழ்ந்தவரங்கம், கணமங்கைக்காரரர்மணி நிறக்கண்ணனூர் விண்ணகரம், சீரார்கணபுரம் சேறை திருவழுந்தூர், காரார் குடந்தை கடிகை கடன்மல்லை, ஏரார் பொழில்சூழிட வெந்தை நீர்மலை, சீராரும் மாலிருஞ் சோலை திருமோகூர், பாரோர்புகழும்வதாரி வட மதுரை யென்றிப்படி நூற்ழெற திருப்பதிகளை யநுபவிக்கலாமே; ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போகவா நினைக்கிறீர்” என்று.
அதற்குமேல் ஆழ்வார் சொல்லுகிறார் – [இருள்தருமாஞாலத்து ளினிப் பிறவி யான் வேண்டேன்] நெஞ்சே! இந்நிலம் இருள் தருமாஞாலமென்பதறியாயோ? நித்யஸூரிகள் தாமே இங்கு வந்தாலும் அவர்களையும் மருளச் செய்யுமதன்றோ, இந்நிலம். நித்யஸூரிகளென்று என்ன? நித்யஸூரி நாதன் தானே வந்தாலும் அங்ஙனே யன்றோ? * *உபமாநமசேஷாணாம் ஸாதூநாம் யஸ் ஸதபவத்* என்று புகழப்பட்ட ப்ரஹ்லாதாழ்வானையுமன்றோ மருளப்பண்ணிற்று இந்நிலம். இருக்கவிருக்க அஞ்ஞானத்தை வளர்ப்பதான இந்நிலத்திலே யிருப்பதை இனியான் வேண்டேன். – என்கிறாழ்வார்.
“இனியிருக்க யான் வேண்டேன்” என்ன வேண்டுமிடத்து “இனிப்பிறவி யான் வேண்டேன்” என்றதில் ஒரு மருமமுண்டு; அதாவது – *க்ருதாதிஷு நராராஜந் கலௌ இச்சந்தி ஸம்பவம்* என்று ஸ்ரீபாகவதத்திற் கூறியபடி ஆழ்வார் ஆசைப்பட்டு வந்து பிறந்தவராதலால், இப்படி நான் ஆசைப்படப் பெற்றதாயினும் இப்பிறவி இனி வேண்டர் கலியுகத்தில் வந்து பிறந்து இந்த யுகத்தவர்களுக்குத் திருவாய்மொழி பாடித்தரவேணுமென்று ஆசைப்பட்டேன்; (இனி) அக்காரியம் நிறைவேறியானபின்பு இதுவரையிலும் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததுபோல் இனிப்பிறக்க விரும்பமாட்டேனென்கிறார் என்பதாம்.
இப்படிச் சொன்ன ஆழ்வாரை நோக்கி மீண்டும் நெஞ்சு சொல்லிற்று – ஆழ்வீர்! உமக்கு ஒன்று நினைப்பூட்டுகிறேன், கீழே நீர் திருவாறன் விளையை யநுபவிக்கும்போது எம்பெருமான் வந்து உம்மைத் திருநாட்டுக்கு அழைத்தான், அப்போது “தீவினை யுள்ளத்தின் சார்வல்லவாதித் தெளிவிசும் பேறலுற்றால்.. திருவாறன் விளையதனை மேவிவலஞ்செய்து கைதொழக்கூடுங்கொலென்னு மென்சிந்தனையே“ என்று சொல்லியிருக்கிறீர். அதனை மறந்தீரோ? ‘இது பரமபதத்துக்குப் போம்பழி, இது திருவாறன்விளைக்குப் போம்வழி. எந்தவழியிற் செல்ல விரும்புகிறீர்?‘ என்றால் திருவாறன் விளைக்கே என்னெஞ்சு செல்லுமென்றீர், அப்படியிருக்க அதற்குமாறாக இப்போது சொல்லத்தகுமோ? என்றது (நெஞ்சு).
அதற்கு மேல்சொல்லுகிறாராழ்வார் – மருளொழிநீ மடநெஞ்சே! அப்படி நான் நினைத்திருந்தது உண்மையே, ஆனால் இவ்விருள்தருமா ஞாலத்தின் தன்மையை அறியவறிய அந்நினைவு மருளேயாய்த் தோன்றிற்று. நெஞ்சே! அந்தமருளை நியும் தவர்ந்திடு, உகந்தருளின நிலங்களிலுண்டான ஆதராதிசயத்தில் ஒரு குறையில்லை. ஆனால் ப்ரக்குதிவச்யனாக்கி சப்தாதி விஷயங்களிலே கொண்டுபோய் மூட்டும் ஸம்ஸாரஸ்வபாவத்தை யுணர்ந்த பின்பு * இருபாடெரி கொள்ளியினுள்ளெறும்பே போல் நலிவுபடப்பாராதே. * பாம்போடொரு கூரையிலே பயிலப்பாராதே, பின்னை என் செய்யவேணு மென்கிறாயோ.
வாட்டாற்ற்றானடி வணங்கே – திருவாட்டாற்றெம்பெருமானுடைய மனோரதத்தின் வழியே யொழுகப்பார் என்றபடி. திவ்யதேசங்களை விட்டுப் பரமபதத்தேறப் போவதாக நிச்சயித்திருக்குமாழ்வார் இப்போது “வைகுந்தனடி வணங்கே” என்றன்றோ சொல்லப்ராப்தம்; அதைவிட்டு, மீண்டும் திவ்யதேசத்தில் நசை தோன்ற “வாட்டாற்றானடி வணங்கே” என்று சொல்லுவதென்? என்று சங்கைதொன்றும். கேண்மின்;
இப்போது திருவாட்டாற்றில் வந்து காட்சிதரும் பெருமான் ஆழ்வாரைத் திருநாட்டுக்கு அழைத்துச் செல்ல விரைந்திருப்பவன்; அது மேற்பாசுரங்களில் வியக்தமாகவுள்ளது. ஆகவே, வாட்டாற்றானென்பதற்கு நமக்கு ஹிதகாமனாய் நம்மைக் கொண்டு போக வந்திருப்பவனென்றிவ்வளவே பொருள்.
அடிவணங்கேயென்றதும் – அவன் வழியையே பின் செல்லப்பார் என்றபடி, வேறு அபிப்ராயமின்றிக்கே ஒரேவிதமான அபிப்ராயமுடையவன் என்பதைக் காட்டும்படியான அடிவணங்குகையைச் சொன்னது – ‘நமஸ்காரம் பண்ணு’ என்ற பொருளில் சொன்னதன்று; அவருடைய கருத்துக்கிணங்கியிரு என்றவாறு.
இங்கே நம் பிள்ளையீடு;- நமக்கு ஹிதகாமனாய் வந்திருக்கிற அவன் வழியேபோய் அவனை யநுபவிக்கப்பாராய். உகந்தருளின நிலங்களிலே வந்து நிற்கிறது நம்மை அவ்வருகே கொடுபோகைக்காயிருக்கும். நீயும் அவன்னினைவிலே போகப் பாராய். அடிவணங்குகையாவது – -ஈரரசுதவிருகையிறே; அவன் கருத்திலே போகை.”
————-
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-
பதவுரை
| மாஞாலம்பிறப்பு அறுப்பான் |
– |
இருள் தருமா ஞாலத்தில் ஜன்ம ஸம்பந்தத்தைத் தொலைப்பதற்காக |
| பழ வினைகள் பற்று அறுத்து |
– |
அவித்யை கருமம் முதலான அநாதியான தொல்லைகளை யறுத்து |
| வாட்டாற்றான் அடி வணங்கி |
– |
திருவாட்டாற் றெம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி |
| நாட்டாரோடு இயல்வுஒழிந்து |
– |
உலகத்தாரோடு ஸஹவாஸத்தையும் தவிர்த்து |
| நாரணனை |
– |
ஸ்ரீமந் நாராயணனை |
| நண்ணினம் |
– |
கிட்டப்பெற்றோம் |
| கேசவன் எம்பெருமானை |
– |
கேசவனான பெருமானை |
| பாட்டு ஆயபலபாடி |
– |
பாட்டானவை பலவும்பாடி |
| மடநெஞ்சே கேட்டாயே |
– |
நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே. |
****- இப்பாட்டும் நெஞ்சோடே ஸம்வாதமாயிருக்கிறது.
ஆழியானருள் தருவானமைகின்றான்” என்று எம்பெருமான் அருள் செய்வதாகச் சொல்வதற்கு இங்கு விஷயமில்லையே;
‘பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு மந்நின்ற நீர்மையினி யாமுறாமையென்று அடிதொடங்கியே நீர் பிரார்த்தித்தவரன்றோ. பலகால் நிர்ப்பந்தித்துக் கேட்டதற்குப் பலன்பெற்றால் அது அருள் பெற்றதாகுமோ? என்று நெஞ்சுகேட்க
அதற்கு விடையிறுக்கிறாராழ்வார் – அறிவிலியான நெஞ்சே! நாம் அபேஷித்தது எவ்வளவு? பெற்றது எவ்வளவு? என்று ஆராயமாட்டிற்றிலையே; இப்போது எவ்வளவு பெற்றோமோ அவ்வளவும் முன்பு அபேஷித்திருக்கிறோமாவென்று சிறிது விமர்சித்துப்பார். பொய்ந்நின்ற ஞானம் போகவேணும், பொல்லாவொழுக்கு கழியவேணும், அழுக்குடம்பு தொலையவேணும் என்று இவ்வளவே யன்றோ நாம் இரந்தது. அதாவது விரோதிகள் கழியவேணுமென்று இவ்வளவு மாத்திர மன்றோ நாம் வேண்டினது. நாம் பெற்றது இவ்வளவேயோ? பழைவினைகள் பற்றறுவதற்கு மேற்பட, பாட்டாயபலபாடப்பேற்றோம், நாட்டாரோடியல்வொழியப் பெற்றோம்; நாரணனை நண்ணப்பெற்றோம்; இவ்வளவும் அவனருள் பலித்தபடியன்றோ; இதை நன்கு உணர்ந்து பாராய் நெஞ்சே! என்று சொல்லும் முகத்தால் தாம்பெற்றபேற்றின் கனத்தைப் பாராட்டிக் கூறுகிறாராயிற்று.
மாஞாலப்பிறப்பறுப்பான் வாட்டாற்றானடிவணங்கி – எம்பெருமானையடி வணங்கி நாம் பிரார்த்தித்தது மாஞாலப்பிறப்பறுப்பது மாத்திரமே; மற்றொன்றன்று. ஆயிரம் நாம்பெற்ற பேறுகாணாய். “கேட்டாயேநெஞ்சே” என்பது ஆனந்தமேலீட்டால் சொல்லுகிற வார்த்தை. கேட்டாயே யென்றது – நன்றாக ஆராய்ந்துபார் என்றபடி.
நாம் பெற்றபேறு என்னவெனில், கேசவனெம்பெருமானைப் பாட்டாயபலபாடி – தன்னுடைய குழலழகைக் காட்டி நம்மையடிமைகொண்டான்;
*பாலேய் தமிழாரிசைகாரர்பெறாப்பேறன்றோ? பச்சைப்பசும்பொய்கள் பேசி மானிடத்தைக் கவிபாடுவார் மலிந்தவுலகில்
*என்னானையென்னப்ப னெம்பெருமானைக் கவிபாடப் பெற்றதும், அதுதானும் ஒருநூறு இருநூறன்றிக்கே ஆயிரமாகப் பாடப்பெற்றதும் நாம் வேண்டிப்பெற்றதோ?
இதற்குமேலே, நாட்டாரோடியல்வொழிந்து – உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரோடு ஸங்கம் ஒழியப்பெற்றபடி கண்டாயே;;
“யானேயென்றனதே” என்று அஹங்காரமமகாரவச்யராயிருக்குமிந்த நாட்டாரோடு ஸங்க மறுகை ஸாமான்யமானதோ?
இதற்கும்மேலே, நாரணனை நண்ணினமே – ஔபாதிகபந்துக்களைவிட்டு நிருபாதிகபந்துவான நாராயணனையே ஸகலவிதபந்துவுமாக நண்ணப்பெற்றோம்.
இவ்வளவும் நாம் இரந்து பெற்றதன்றிக்கே அவனருள் பலித்தபடிகாண் – என்றாராயிற்று.
————–
****- இப்பாட்டும் நெஞ்சோடே கொண்டாடிச் சொல்லுகிறது. நம்முடைய பேற்றுக்கு அவன் விரையும்படியாயிற்றே! இப்படியாகுமென்று நாம் கனவிலாவது எண்ணினதுண்டோ? நாமெண்ணினதொன்று, நிகழ்ந்தது மற்றொன்றாயிற்றே! இதுவென்! என்று வியக்கிறார்.
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-
பதவுரை
| என் நெஞ்சே |
– |
என்னுடைய அனுபவத்திற்கு வாய்த்தநெஞ்சே! |
| வளம் மிக்க வாட்டாற்றான் வந்து |
– |
திருக்கல்யாண குணம் ருத்தி பொருந்திய திருவாட்டாற்றெம்பெருமான் தானே வந்து |
| பல நாமங்கள் சொல்லி |
– |
பல திருநாமங்களையுஞ் சொல்லி |
| இன்று விதிவகையே விண் உலகம் தருவான் ஆய் |
– |
இப்போது நமது நியமனப் படியே திருநாடு தருபவனாகி |
| நாராயணனை நண்ணினம் |
– |
பரமபந்துவான ஸ்ரீமத் நாராயணனைக் கிட்டப்பெற்றோம் |
| விரைகின்றான் |
– |
துர்தனாயிரா நின்றான் |
| இக்கருமங்கள் |
– |
இக்காரியங்கள் |
| மண் உலகில் இந்நிலத்திலே |
– |
|
| எண்ணின ஆறு ஆகா |
– |
நாம் எண்ணினபடிக்கு மேற்பட்டு விட்டதே. |
ப்ரேமம் தூண்டச் சொல்லுவார்க்கு இன்ன திருநாமந்தான் சொல்லவேணுமென்கிற நியதியில்லாமையாலே “நாமங்கள் பலசொல்லி” என்கிறார்.
மண்ணுலகில் வளம்மிக்க வாட்டாறு – பரமபதத்திலே எம்பெருமானுடைய திருக்குணங்கள் பகலவிளக்குபோலே அப்ரகாசமாயும் அல்பப்ரகாசமாயுமிருக்கும், இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாசிப்பதிங்கே யாகையாலே, வளம் மண்ணுலகில் மிக்கதாயிற்று.
ஆசாரிய ஹ்ருதயத்தில் (184) “மோஷதானத்தில் ப்ரணத் பாரதந்த்ரியம் வளம்மிக்க நதியிலே கரைபுரளும்’ என்றருளிச் செய்தார்.
இங்கு, திருவாட்டாற்றை வளம்மிக்க நதியென்று வ்யபதேசித்து இதில் ‘ப்ரணத பாரதந்த்ரியம் மிக மிக விளங்குமென்கையாலே இக்குணம் விளங்கப்பெறுகையே இத்தலத்திற்கு வளமிகுதியென்க.
கேட்பாரற்ற ஸ்வதந்திரனாய் ஸர்வநியந்தாவாயிருக்கிற ஸர்வேச்வரன். “நமது விதிவகையே” என்று ஆழ்வார் பலகாலுஞ் செல்லும்படி பரதந்திரனாய் நியாம்யனயிருந்தானென்றால் இதனில் மிக்க வளமில்லைபிறே.
“இன்று விண்ணுலகம் விதிவகையே தருவானாய் விரைகின்றான்” என்று மூன்றாமடியை அந்வயித்துக் கொள்வது (இன்று) நேற்றுவரை எதிரிபார்த்ததன்று இது; இன்று இங்ஙனே விடியக்கண்டதித்தனை.
‘விண்ணுலகில் வாழ்ச்சிதருவானாய்’ என்னாமல் “விண்ணுலகம் தருவானாய்’ என்றதை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர்; “அங்கே ஒரு குடியிருப்பு மாத்ரமே கொடுத்து விடுவானாயிருக்கிறிலன்; *வானவர்நாடு* *ஆண்மின்கள் வானகம்*; என்கிற பொதுவையறுத்து நமக்கே தருவானாக த்வாரியா நின்றான்” என்று (விரைகின்றான்) எம்பெருமான் தான் மூட்டை கட்டிக்கொண்டு முன்னேபோவது, பின்னே ஆழ்வார் புறப்பட்டு வராமை கண்டு திரும்பிவந்து ‘ஆழ்வீர்வாரும் வாரும்’ என்று சொல்லிப்பதறா நின்றானாம். இன்று இப்படிப் பதறுகிறவன். ‘தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ” என்று கதறினபோது எங்கே யுறங்கினானென்று கேட்கவேண்டா? ஒரு காரியத்திற்காக வைத்திருந்தான்;; அக்காரியம் முடியுமளவானவாறே விரைகின்றானென்பது யுக்தமேயன்றோ. (காரியமாவது – * தொண்டர்க் கமுதுண்ணச் சொன் மாலைகள் சொல்லுவிக்கை.)
விரைகின்றானென்கைக்கு விஷயமுண்டோ? ஸர்வசக்தனான தனக்கு ஆழ்வாரைக் கொண்டுபோக ருசியிருந்தாகில் கொண்டுபோகத் தடையென்ன? தடுப்பாரொருவரு மில்லையே, ‘விரைகின்றான்’ என்கையாலே ஏதோ தடையிருப்பது போலவன்றோ தெரிகிறது; அது என்ன தடை? என்று கேட்க நேரும். கேண்மின்;
தன்னிஷ்டப்படி ஆழ்வாரைக் கொண்டுபோவதில் அவருக்கு ஈஷத்தும் ருசியில்லை; ‘இப்படிசெய், இப்படிசெய்’ என்று ஆழ்வார் விதிக்க, அதன்படி நடந்து கொண்டால்தான் தனக்கு ஸ்வரூபஸித்தியென்று அவன் நினைத்திருக்கையாலே அந்த நியமனம் பெறுவதற்காகவே அவன் விரைகின்றானென்றுணர்க அதற்காகவே முதற்பாட்டிற்போல இப்பாட்டிலும் “விதிவகையே” என்றது.
விரைகின்றானென்றதில் ஒரு சிறந்த சாஸ்த்ரார்த்தம் தொனிக்கும்; உலகில், உடைமையைப் பெறுவது உயைவனுக்கே பணி. உடைமை தவறிவிட்டால் அது கரையமாட்டாது, அதைத் தேடிப்பெற்றுப் பூண்டுகளிக்கவேணுமென்று உடையவன்தான் விரைவது இயல்பு, அதுபோல, சேதநலாபம் ஈச்வரனுக்கே யாகையாலே அவன் விரைவதுதான் ப்ராப்தம் ஸபலமாகக் கூடியதும் அதுதான் – என்பது சாஸ்த்ரார்த்தம்.
எண்ணினவாறாகா – *பொய்ந்நின்ற ஞானமும் இந்நின்ற நீர்மை யினியாமுறாமை* என்று இவ்வளவேயன்றோ நாமெண்ணினது. அவன் இங்ஙனே விரைய வேணுமென்றாவது, விரையப்போகிறானென்றாவது எண்ணினோமோ?
(இக்கருமங்கள்) எம்பெருமான் விஷயமான காரியமெல்லாம் இப்படியே யென்றவாறு. -நாம் எண்ணினவளவுக்குப் பதின்மடங்காகக் காரியம் பலிப்பது பகவத்விஷயத்திலே யென்க.
லௌகிகாரிலே சிலரை நோக்கி “என்காரியத்திற்கு நீயே கடவை” என்கிறோம்; அவர்களும் அப்படியேயென்று தலை துலுக்குவதுண்டு;
ஆயிரம் எண்ணினத்தில் நூற்றிலொருபங்கும் பலிக்கக் காணமாட்டோம்; சிறிது பலித்தாலும் அதற்கும் நம்முடைய முயற்சியே ஊடுருவச் செல்லும். இதற்கு மாறாயிருக்கும் பகவத்விஷயம்.
இப்படிப்பட்ட கனத்தபேறுபெறுகைக்கு அடி நீயேயென்று நெஞ்சைக் கொண்டாடிச் செல்லுகிறார் என்னெஞ்சே யென்று, எ
ன் என்பதைப் பிரித்து என்னே! யென்கிற பொருளிற்கொண்டு, வியந்து சொல்லுகிறவாறாகவும் கொள்ளலாம்.
———-
****- கீழ் முதற்பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும் “விதிவகையே” என்று, எம்பெருமான் நியாமகனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து நியாமகனா யிருக்கும்படியை யருளிச்செய்தாரே, ஸர்வேச்வரனிடத்தில் இது ஸம்பவிக்குமோ வென்று சிலர்சங்கிப்பர்களென்று கருதி அந்த சங்கைக்குப் பாரிஹாரமாக இப்பாட்டு அருளிச் செய்கிறபடி.
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-
பதவுரை
| நல் நெஞ்சே! |
– |
நல்ல மனமே! |
| படைதொட்டான் |
– |
ஆயுதமெடுத்த பஷபாதியாய் |
| வல் நெஞ்சத்து இரணியனை |
– |
வலிய நெஞ்சையுடையனான இரணியாசுரனது |
| நம்பெருமான் |
– |
நமக்கு ஸ்வாமியானவன் |
| மார்பு இடந்த |
– |
மார்பை இருபிளவாக்கி முடித்தவனாய் |
| என் நெஞ்சத்துள் இருந்து |
– |
என்னெஞ்சினுள்ளே பொருத்தியிருந்து |
| இங்கு |
– |
இவ்விருப்பிலே |
| வாட்டாற்றான் |
– |
திருவாட்டாற்றிலே ஸன்னிதி பண்ணியிருப்பவனாய் |
| இரு தமிழ் நூல் இவை |
– |
பெரிய தமிழ் நூலாகிய இத்திருவாய்மொழியை |
| மன் அஞ்ச |
– |
அரசர்களெல்லாரும் அஞ்சும்படி மொழிந்து தானே யருளிச்செய்து |
|
(அவ்வளவோடு நில்லாமல்) |
||
| பாரதத்து |
– |
பாரதப் போரிலே |
| பாண்டவர்க்கு ஆய் |
– |
தன்னடியர்களான பாண்டவர்களுக்காக |
| நமக்கு அருள் தான் செய்வானே |
– |
நமக்கு மேன்மேலு முதவிகளைச் செய்வானாயிராநின்றான். |
இப் பாட்டில் இரண்டாமடியும் மூன்றாமடியும் உயிர்நிலையாயிருக்கும்.
எம்பெருமான் தான் அடியார்கட்கு விதேயனென்னுமிடத்தை ப்ரஹ்லாதாழ்வான் திறத்திலும் பாண்டவர்கள் திறத்திலும் காட்டினானாயிற்று.
முன்னே நின்ற தூணைக்காட்டி. “நீ சொல்லுகிறபகவான் இங்குளனோ?” என்று இரணியன் கேட்க. எங்குமுளனென்று ப்ரஹ்லாதன் சொல்ல, அவருடைய சொல்லை மெய்ப்பிக்கைக் காகவே அப்போதே அத்தூணில் நின்றும் தோன்றினபடியாலே இந்த அபதானத்தாலே பக்த விதேயத்வம் வெளியாயிற்று.
அர்ஜுநன் *ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத* என்று சொல்ல, அப்படியே உபய ஸேனைகளினிடைய ஸேனையைக் கொண்டுபோய் நிறுத்துவது முதலயி பலகாரியங்களினால் அவ்வவதாரத்தில் ஆச்ர்தவிதேயத்வத்தை வெளியிட்டுக் கொண்டானாயிற்று.
என்னெஞ்சத்துள்ளிருந்து – நெடுங்காலம் ஸம்ஸாரத்திலே விஷயாந்தரங்களிலே மண்டிக் கிழந்தமையாகிற தண்மைதோற்ற என்னேஞ்சு என்கிறார் ஆழ்வார்;
ஆழ்வாருடைய மமகாரத்திற்கு இலக்கான வஸ்துவே நமக்கு உத்தேச்ய மென்றிருக்கும் எம்பெருமான் இவர் என்னெஞ்சு என்றதுவே ஹேதுவாக மேல்விழுந்து உள்ளே புகுந்தான்;
மறுபடியும் வெளியே வந்தால் மீண்டும் உள்ளேபுக வழி கிடைப்பது அர்தாகுமோ வென்கிற அச்சத்தினால் அங்கேயே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருந்தான்;
அப்படியிருந்து செய்வதென்? என்னில், இங்கு இருந்தமிழ் நூலினை மொழிந்து இப்படிப்பட்ட திருவாய்மொழியை யருளிச்செய்தானாயிற்று,
“தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்கிறார் ஒருகால்;
மற்றொருகால் இத்தமிழ் நூலை அவன்மொழிந்தானாகச் சொல்லுகிறார்;
உண்மைதானிருந்தபடி யென்னென்னில்; இரண்டும் உண்மையே.
வடமொழி வேதத்தைபற்றிச் சொல்லுமிடத்து *அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா* என்றது.
‘அநாதிநிதநா’ என்று சொல்லி வைத்து ஸ்வயம்புவா உத்ஸ்ருஷ்டா வாக் என்றதில்லையோ? அதுபோலவே இங்குங் கொள்க.
இப்படி திருவாய்மொழியைப் பேசி வெளியிடுவித்துக்கொண்ட குணம் பரத்வமன்று ஸௌலம்யமே யென்று காட்டிக்கொண்டு மேல் அருளிச்செய்கிறார்
வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த – இங்கு இரணியன் மார்விடந்ததைச் சொல்லுவதில் நோக்கில்லை; சிறுக்குனுக்கு உதவினபடியைச் சொல்லுவதே விவஷிதம்.
சிறுக்குன் நினைத்தபடி செய்தவன் நான் சொன்னபடி செய்யானோ என்கைக்காக இது சொல்லிற்று.
மன் அஞ்ச – *மலைபுரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய என்றபடி.
பாண்டவர்க்காய்ப் படை தொட்டது – ஆயுதமெடேனென்று சொல்லிவைத்து ஆயுதமெடுத்தது.
பெரியாழ்வார் திருமொழியில் *மன்னர் மறுக மைத்துனர்மார்க்கொரு தோரின்மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை* என்று ஒரு கதை யருளிச்செய்திருப்பதுண்டு;
அதையும் இங்கு நம்பிள்ளை யெடுத்துக்காட்டியருளினர்.
அர்ஜுனனுடைய தேர்க்குதிரைகள் இளைத்தபோது, கடினமானவிடங்களிலும் நீர் நரம்பு அறியுமவனாகையாலே வாருணாஸ்த்ரத்தைவிட்டு அங்கே நீரை யுண்டாக்கிக் குதிரைகளை விட்டு நீரூட்டிப் புரட்டி யெழுப்பிக் கொண்டுபோனானென்பது கதை.
இதைக் கண்ட எதிரரசர்கள் ‘இவனுடைய ஆச்ர்த பஷபாத மிப்படியிருக்கையாலே நாம் இவர்களை வெல்லுகை கூடுமோ!’ என்று குடல்மறுகினராகையாலே இங்கு மன்னஞ்ச என்றது.
—————-
****- அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார்.
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-
பதவுரை
| வான் ஏற வழி தந்த |
– |
அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக விருக்கிற |
| பணி வகையே |
– |
பண்டு பணித்திருந்தபடியே |
| வாட்டாற்றான் |
– |
திருவாட்டாற்றெம்பெருமான் |
| நான் ஏற பெறுகின்றேன் |
– |
நான் மேலே செல்லப் பெறாநின்றேன். |
| நெஞ்சே நரகத்தை நகு |
– |
மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச் |
| சிரித்திடுசெழு பறவை தான் ஏறி |
– |
அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய |
| தேன் ஏறு மலர்துளபம் திகழ் பாதன் |
– |
தேன் மிகுந்த துளவமலர்விளங்கும் திருவடிகளை யுடையனாய் |
|
திரிவான தாள் இணை |
||
| என் தலை மேலே |
– |
உபயபாதங்கள் என் தலை மேலாயின |
திருவாட்டாற்றெம் பெருமாளுக்கு “வானேற வழிதந்த” என்றே நிருபகம்போல அருளிச்செய்கிறார் காண்மின்,
வானேறு வதற்கான வழி – அர்ச்சிராதி மார்க்கம்.
*முத்தோர்ச்சிரி திநபூர்வபஷ ஷடுதங்மாஸே த்யாதியாக நடாதூரம்மாளருளிச்செய்தது காண்க.
*நடைபெறவங்கிப் பகலொளி நாளுத்தராயணமாண்டு* இத்யாதியானவொரு பாசுரமுங்காண்க.
வானேறும் வழியைத் தரவிருக்கிறானேயல்லது தந்துவிட வில்லை; ஆகிலும் தந்த வென்று இறந்தகாலமாகக் கூறினது அதற்கு றம்பற்றியென்க.
பணிவகையே நானேறப் பெறுகின்றேன் – அவன் கீதையிலே *மோஷயிஷ்யாமி மாசுச* என்று பண்டே சொல்லிவைத்திட்டானே; அப்பேறுதன்னை விரைவில் நான் பெறவிருக்கின்றேனென்று திருவுள்ளத்தைக் குறித்துக் கூறினாராழ்வார்;
அதற்கு நானென்ன செய்யவேண்டுமேன்று திருவுள்ளம் கேட்க நரகத்தை நகு நெஞ்சே! என்கிறார். நெடுநாளாக நம்மை ஸம்ஸாரியாக்கி யெளிவரவுபடுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்துச் சிரி; உன்னை அடியறுத்தோமே யென்று சொல்லிச் சிரி என்கிறார்.
பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ; அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம்பற்றித் திருமாலை திருப்பரிவட்டம் முதலான வரிசைகளை வரவிட்டருளினவளவிலே “நானேறப்பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப் பார்த்துச் சிரித்தாராம்.
“நரகத்தைநகு” என்ற இவ்விடத்திற்கு நரகலோகத்தைப்பார்த்துச் சிரியென்று சிலர்பொருள் கூறுவர்; அதுவேண்டர் ஸம்ஸாரத்திற்கே நரகமென்று பெயராதலால் ஸம்ஸார பூமி யென்கிற பொருளே இங்குக் கொள்ளத் தகும்.
பேறு கைப்புகுந்தாலன்றோ நரகத்தைச் சிரிக்கலாம்; அது கைபுகுந்து விட்டதோ வென்ன் அதில் ஸந்தேஹமென்? என்கிறார் பின்னடிகளால்.
எம்பெருமான் தாளிலணிந்த துளபமாலையுடன் பெரிய திருவடியின்மேலேறி வந்து நின்று ஸேவை ஸாதிக்கின்றானே, இனி நான் வானேறுவதில் ஐயமுண்டோ என்பது பின்னடிகளின் பரமதாற்பாரியம்.
தேனேறு மலர்த்துளவந் திகழ்பாதன் – *தேனே மலருந் திருபாதம்* என்றபடி எம்பெருமானுடைய திருவடிகளில் தேன் வெள்ளமிடுமே;
*விஷ்ணோ: பதே பரமெ மத்வ உத்ஸ.* என்று வேதமும் ஓதிற்றே;
அந்தத் தேனும் திருத்துழாயில் ஏறித் தேனேறு மலர்த்துளவமாயிற்றென்க.
செழும் பறவை தானேறி – *பறவையேறு பரம்புருடா! நீயென்னைக் கைக்கொண்டபின்* என்கிறபடியே ஆழ்வாரைக் கைக்கொள்கைக்கு செழும்பறவை மீதேறி வந்தானாயிற்று
திரிவான் – திரிவானுடைய -ஆறாம் வேற்றுமையுருபு; பெரிய திருமொழியில் (8.7.10) *கலியன் தமிழிவை* என்ற பிரயோகமுங்காண்க.
தாளிணை என்தலை மேலே – பெரிய திருவடியின் தோளிலேயிருந்த திருவடிகள் தம் தலை மேலேயேறப்பெற்ற அதிசயம் என்னே! என்று வியக்கிறார்.
————–
****- தாம் பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கி யருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் – இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார்
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-
பதவுரை
| தாள் இணைகள் தலை மேல |
– |
அவனது உபய பாதங்கள் எனது தலைமேலுள்ளன |
| மலை மாடத்து வாட்டாறு |
– |
மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே |
| தாமரை கண் என் அம்மான் |
– |
புண்டாரிகாஷனான அஸ்மத் ஸ்வாமியாய் |
| அவு அணைமேலான் |
– |
சேஷசயனத்தின் மீது கண் வளர்ந்தருள்பவனாய் |
| என் நெஞ்சத்து |
– |
எனது நெஞ்சிலே |
| எம்பொழுதும் நிலை பேரான் |
– |
ஒரு போதும் நிலைபெயராது நிரந்தரவாஸம் செய்பவனாய் |
| மதம்மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் |
– |
மதமிகுதியினால் கொலையிலே முயன்ற குவலயாபீட யானையின் கொம்பை முறித்தவானான பெருமானுடைய |
| எம்பெருமான் |
– |
தன்னுடைய பெருமைய எமக்குக் காட்டிக் கொடுத்தவனாய் |
| குரை கழல்கள் |
– |
வீரக்கழலினோசை பொருத்திய திருவடிகளை |
| குறுகினம் |
– |
கிட்டப் பெற்றோம். |
தாளிணைகள் தலைமேல – *நீயொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கணியாய்* என்று நான் பிரார்த்தித்தபடியே அழகிய திருவடிகளாலே என் தலையை அலங்காரித்தருளினான்.
தாமரைக்கண்ணென்னம்மான் – இஃது எழுவாய்போலே யிருந்தாலும், என்முன்னே நின்று தாமரைக் கண்களாலே குளிர நோக்கினானென்எங் கருத்துப்பட நின்றது.
என் நெஞ்சத்து நிலைபேரான் – நெஞ்சைவிட்டுப் பேராதே நின்றாயிற்று இதெல்லாம் செய்தாகிறது.
தலைமேலே நிற்கிறானென்பதும், முன்னே நின்று திருக்கண்களால் நோக்குகிறானென்பதும், நெஞ்சினுள்ளே பேராமல் நிறிகிறானென்பதும் பொருந்துமோ? ஏக காலத்திலேயா இவையெல்லாம் செய்கிறான்? என்று சங்கிப்பார்க்கு
நம்பிள்ளை யருளிச்செய்வது காண்மின்; – “ஸௌபாரி ஐம்பது வடிவு கொண்டாப்போலே எம்பெருமான் ஆழ்வாரையநுபவிக்க அநேக விக்ரஹம் கொள்ளாநின்றான் – என்று.
உபநிஷத்தில் பரியங்க வித்தையயிற் சொல்லுகிறபடியே முக்தாத்மா திருவனந்தாழ்வான்மேலே அடியிட்டு ஏறப்பெறுவதொரு பேறு உண்டு, அதை நினைத்தருளிச் செய்கிறார் – “மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான்” என்று.
மலைகளைப் புடைபடத் துளைந்து நெருங்க வைத்தாற்போலே யிருக்கிற மாடங்களை யுடைத்தான திருவாட்டாற்றிலே திருவனந்தாழ்வான்மேலே திருக்கண் வளர்ந்தருள்பவன்.
அநுபவ விரோதிகள் பலவுண்டே, அவை என்னாயிற்றென்ன குவலயாபீட மதயானை பட்டது பட்டதாக வருளிச்செய்கிறார் ஈற்றடியில்.
மதம் மிக்க கொலை யானை மருப்பொசுத்ததைக் கூறும் முகத்தால் தம்முடைய விரோதிகளாகிற மதயானையை முடித்தமை கூறினாராயிற்று
—————
****- கீழ் எட்டாம்பத்தில் குட்டநாட்டுத் திருப்புலியூரெம்பெருமானுடைய திருவருள் தமக்குப் பலித்தபடியைத் தோழிபேச்சாலே வெளியிடுமளவில்
*அன்றி மற்றொருபாயமென்? இவளந்தண்டுழாய் கமழ்தல் * என்ற
திருத்துழாய்ப் பரிமளம் திருமேனியிலே கமழ்வதையிட்டு நிரூபித்தாராழ்வார்;
இப்போது திருவாட்டாற்றெம்பெருமானுடைய திருவருள் பலித்தபடியையும் அந்த நிரூபகத்தையிட்டே தம் வாயாலே பேசுகிறார்.
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-
பதவுரை
| கோவிந்தன் |
– |
கண்ணபிரான் |
|
(அப்படி குடி கொண்டதனால்) |
||
| நம் குடி கொண்டான் |
– |
நம்மையே தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் . |
| திரை குழுவு கடல் புடை சூழ் | அலைத்திரட்சியை யுடைய கடலாலே புடை சூழப் பட்டு | |
| தென் நாடு நிலதம் அன்ள |
– |
தென்னாட்டுக்குத் திலகம் போன்றிருப்பதாய் |
| மலர்அடி மேல் | திருவடித் தாமரைகளின் மீது சாத்தின | |
| வரை குழுவு மணி மாடம் |
– |
மலைகள் திரளவிருந்தாற் போன்றுள்ள மாடங்களை யுடைத்தான |
| விரை குழுவு நறு துளபம் |
– |
பரிமளம் திரண்டு கமழ்கிற திருத்துழாயானது |
| வாட்டாற்றான் |
– |
திருவாட்டாற்றி லெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய |
| மெய் நின்று கமழும் |
– |
என்னுடம்பிலே நிலைநின்று வாஸிக்கின்றது. |
“குரைகழல்கள் குறுகினமே” யென்றார் கீழ்ப்பாட்டில்; அது மெய்யேயென்கைக்காக மீண்டுமிப் பாட்டில் குரைகழல்கள் குறுகினமென்கிறார்;
அதை மூதலிக்கிறார் வாட்டாற்றான் மலரடிமேல் விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே யென்பதனால்.
“கோவிந்தன் நம் குடிகொண்டான்” என்றும் “நம் கோவிந்தன் குடிகொண்டான்” என்றும் அந்வயிக்கலாம்.
பசுக்களோடுங் கலந்து பாரிமாறிக் கோவிந்தனென்று பெயர்படைத்த பெருமான்
*அரவத்தமளியினோடு மழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து* என்றாப்போலே
பரிஜன பரிவார ஸமேதனாய் வந்து, திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷங்குடியோடுங்கூட வந்து என்னெஞ்சிலே குடிகொண்டபடி பார்ரென்கிறார்.
அதற்கு அடையாளங்கூறுவது மேலெல்லாம். (திரை குழுவு கடல்புடைசூழ் இத்யாதி) திரைமிக்கிருந்துள்ள கடலாலே சுற்றுஞ் சூழப்ட்டிருப்பதாய் தென்னாட்டுக்குத் திலகம்போலெயாய் மலைகளை நெருங்க வைத்தாற்போலே மணிமயமான மாடங்கள் நெருங்கியிருப்பதான திருவாட்டாற்றை யிருப்பிடமாகவுடைய ஸர்வேச்வரனது திருவடித் தாமரைகளின்மீது சாத்தியிருந்த பரிமளப்ரசுரமான திருத்துழாயானது என்னுடம்பிலே நிலைநின்று நாறாநின்றது. என் வார்த்தையிலே ஸந்தேஹமுண்டாகில் என்னுடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களோ
—————
****-தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார்.
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-
பதவுரை
| மெய்நின்று கமழ் |
– |
திருமேனியிலே நிலைநின்று கமழா நின்ற |
| புனல் மை நின்ற வரை போலும் திரு உருவன் |
– |
புனலையும் அஞ்சனத்தையும் நிலை நிற்கும் மலையையு மொத்திருக்கின்ற திருவுருவத்தை யுடையனான |
| துலபம் |
– |
திருத்துழாயினுடைய |
| வாட்டாற்றாற்கு |
– |
திருவாட்டாற்றெம்பெருமாளுக்கு |
| விரை ஏறு திரு முடியன் |
– |
பரிமளம் மிகப் பெற்ற திருமுடியை யுடையவனாய், |
| கருதும் இடம் பொருது |
– |
திருவுள்ளம் நினைத்த விடத்தே சென்று போரை நடத்தி |
| எந்நன்றி செய் தேன் ஆ நான் |
– |
என்ன நன்மை செய்தேனாகக் கொண்டு |
| கை நின்ற |
– |
உடனே திருக்கையிலே வந்து சேருகிற |
| சக்கரத்தன் |
– |
திருவாழிப்படையை யுடையனாய் |
| என் நெஞ்சில் திகழ்வது |
– |
அவன் எனது நெஞ்சில் விளங்குவது |
மெய்ந்நின்றுகமழ் துளபவிரையேறு திருமுடியன் – இங்கு மெய் என்று ஆழ்வாருடைய திருமேனியைச் சொல்லிற்றாகவுமாம், எம்பெருமானுடைய திருமேனியைச் சொல்லிற்றாகவுமாம்.
என்னுடை வுடம்பிலே வியாபித்துக் கமழும்படியான திருத்துழாய் மாலையத் தன் திருமுடியிலே யுடையவன் என்றாவது,
தன்னுடைய திருமேனியிலே நின்று கமழா நின்றுள்ள திருத்துழாயில் பரிமளமானது கொழித்து எறடா நின்றுள்ள திருமுடியையுடையவன் என்றாவது பொருள் கொள்ளலாம்.
இங்கு ஈட்டு ஸ்ரீஸுக்தி – “கடலில் நீர் ஸஹ்யத்திலேறக் கொழித்தாற்போலே காணும் திருமேனியில் திருத்துழாயின் பரிமளமானது மெய்யெல்லாங்கொண்டு தலைக்குமேலே போனபடி.”
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் – எம்பெருமாளுக்கு ஆச்ர்த விரோதி நிரஸநம் செய்யவேண்டி வருமே; அதற்காக அங்கங்கே தான் புறப்பட்டெழுந்தருளவேணு மென்கிற நிர்ப்பந்தமில்லை;
இன்னவிடத்திலே இன்னகாரியமாகவேணுமென்று திருவுள்ளத்தில் நினைப்பிட்ட மாத்திரத்திலே திருவாழியாழ்வான் சென்று ஒரு நொடிப்பொழுதில் காரியந் தலைகட்டி அடுத்த க்ஷணத்திலே மீண்டு வந்து திருக்கையிலே நிற்பானாம்.
ஆழ்வான் அதிமாநு ஸ்தவத்தில் “அக்ஷேஷு ஸக்தமதிநா ச நிராதரேண வாராணஸீ ஹரபுரி பவதா விதக்தா” என்றருளிச்செய்த சுலோகம் இங்கு நினைக்கத்தக்கது.
புனல் மைந்நின்றவரை போலுந் திருவுருவன் – புனல் போலவும் மைபோலவும் நின்றவரை போலவு மிருக்கின்ற வடிவையுடையவன்,
ஆக மூன்றடிகளாலும் தெரிவிக்கப்பட்டதாவது என்னென்னில்; தன்னுடைய திருத்துழாய் நறுமணம் என்னளவிலே வீசும்படி செய்தும் கையுந் திருவாழியுமான அழகைக் காட்டியும், பச்சைமாமலைபோல் மேனியை முற்றூட்டாக வநுபவிக்கக் கொடுத்தும் இப்படியன்றோ என்னிடத்தில் விலக்ஷணமான விஷயீகாரம் காட்டினதென்றதாயிற்று.
இதற்குத் தம் பக்கலிலே ஒரு கைம்முதலில்லாமையை ஈற்றடியினால் பேசுகிறார் எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திழ்வதுவேயென்று.
“செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய் தந்தாயென்ற அத்வேஷாபிமுக்க்யங்களும் ஸத்கர்மத்தலல்ல.” (108) என்ற ஆசாரிய ஹ்ருதய சூர்ணை இங்கு அநுஸந்தேயம்.
(எந்நன்றி செய்தேனா) நன்மையென்று போரிடலாவதொரு தீமைதான் நான் செய்தோனோ? அதுவுமில்லையே; என்னுடைய எந்த காரியத்தை அவன் நன்மையாகத் திருவுள்ளம் பற்றினானோ தெரியவில்லையே யென்று தடுமாறுகின்றார்.
இங்கே யீடு; – “பெரியவுடையாரைப்போலே தடையோடே முடிந்தேனோ? திருவடியைப்போலே *த்ருஷ்டாஸுதா* என்று வந்தேனோ? அன்றியே தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தனம் பண்ணினேனாம்படி விஹித கர்மங்களை யநுஷ்டித்தேனோ? என்ன நன்மை செய்தேனாக என்னெஞ்சிலே புகுந்து பெறாப்பேறு பெற்றாப்போலே விளங்கா நின்றான்!”
—————-
****- இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-
பதவுரை
| திகழ்கின்ற திருமார்வில் |
– |
விளங்குகின்ற திருமார்பிலே |
| புள் ஊர்தி |
|
பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு |
| திருமங்கை தன் னோடும் |
– |
பெரிய பிராட்டியாரோடுங்கூட |
| போர் அரக்கர் குலம் கெடுத்தான் |
– |
போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான் |
| திகழ்கின்ற திருமாலார் |
– |
விளங்குகின்ற லஷிமீநாதன் |
| சேர்வு இடம் |
– |
நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே |
| நண் வாட்டாறு |
– |
குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம் |
| இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள் |
|
வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன் |
| நின்ற புகழ் |
– |
நிலைநின்ற புகழையுடைய |
தனக்கு திவ்யமஹிக்ஷியோ ஸர்வலேகேச்வாரியான பெரிய பிராட்டியர்; தான் உறையுமிடமோ திருநாட்டிற் காட்டிலும் வீறுபெற்ற திருவாட்டாறு:
தனக்கு திவ்யவாஹனமும் அடியாருடைய விரோதிகளைத் தொலைக்கும் பாரிகரமும் பெரிய திருவடி;
இப்படிப்பட்ட பெருமைகளைப் பெற்றுவைத்து, என்னுடைய தாழ்வுகளைப்பார்த்து என்னையிகழாதே ஒரு நொடிப்பொழுது என்னைப் பிரிந்தால் தாரிக்கமாட்டாதானாய்க் கொண்டு என்னெஞ்சினுள்ளே புகுந்திருந்தருளினான்!
இது என்ன வியாமோஹம்! என்கிறார்.
திகழ்கின்ற திருமார்வில் – திருமார்புக்கு ஓர் ஆபரணமிட்டு அதனால் விளக்கம் பெறுவிக்கவேணுமோ?
வெறும் புறத்திலேயே ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோ விளங்கா நிற்பது; அதற்மேலே பெரிய பிராட்டியாரும் சேர்ந்ததனாலுண்டான வழகு பேச்சுக்கு நிலமாமோ?
உலகில் பலரையும் ஸ்ரீமான்களென்று சொல்லுவதுண்டு; அது உபசார வழக்கேயன்றி வேறில்லை; திருமங்கை தன்னோடும் திகழ் கையாலே உள்ளபடி ஸ்ரீமானாயிருப்பவன் எம்பெருமானொருவனே.
அப்படிப்பட்டவன் திருவாட்டாற்றில் வாஸம் பெற்றது பெருமைக்குமேல் பெருமையாயிற்று.
*வேதாத்மா விஹகேச்வர:* என்னப்பட்ட பெரிய திருவடியை வாஹனமாகக் கொள்ளப் பெற்றது இன்னமும் பெருமையாயிற்று
இப்படி பெருமைக்கெல்லாம் எல்லையான பெருமை பெற்றவன் இகழ்வின்றி யென்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே –
*மாறிமாறிப்; பல பிறப்பும் பிறந்த நித்ய ஸம்ஸாரி யிவனென்று தண்மைபாராதே ஒரு ஷணமும் விட்டுப் பிரியாதே யிருக்கிற இவ்விருப்புக்கு அடியான வியாமோஹமென்கொல்! என்கிறார்.
————–
****- பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார்.
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-
பதவுரை
| பிரியாது ஆள் செய் என்று |
– |
ஒருகணமும் பிரியாதிருந்து அடிமை செய்யக் கடவாயென்று அநுக்ரஹித்து |
| ஆகம் கீண்டான் |
– |
உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர) |
| வாட்டாறு |
– |
திருவாட்டாற்றிலே |
| பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான் |
– |
ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய் |
| வாரி வாள் வாய் அரவு அணை மேலான் |
– |
சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான் |
| அன்று |
– |
முன்பொரு காலத்தில் |
| அர் ஆகி |
– |
நரசிங்க மூர்த்தியாகி |
| இரணியனை |
– |
இரணியாசுரனுடைய |
| பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு காட்டினள் |
– |
பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்காரிய பயனையும் பெற லாகுமென்பதைக்காட்டி விட்டான் |
இப்போது தாம்பெற்ற பெறாதபயன் எது வென்னில்; இனியொரு நாளும் பிரியாதேயிருந்து அடிமை செய்யுமாறு சோதிவாய் திறந்து அருளிச்செய்த தொன்று; இனிமேல் பிறப்பு நேராதபடி வேரோடறுத்த தொன்று; அடிமை செய்யென்று சொல்லி விட்டவளவேயன்றிக்கே கைங்காரியங் கொண்ட தொன்று – ஆகிய இவை பெற்ற பேறுகள்.
இவை எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையாலன்றி மற்றொன்றால் பெறமுடியாதவை யாதலால் பெறாதபய னென்றது.
இரண்டாமடிக்கு அவதாரிகை யிடுகிறார் நம்பிள்ளை – “இதுக்கு முன்பே தமக்குப் பண்ணிற்றோருபகாரத்தைச் சொல்லுகிறார்” என்று.
அரியாகி இரணியனை ஆகங்கீண்டதும் தமக்குப்பண்ணின உபகாரமென்றிருக்கிறாராம் ஆழ்வார்.
தாம் அநுபவிக்கைக்காகவே அவதாரங்கள் அமைந்த வென்று கருத்து.
இரண்டாமடியின் முடிவில் அன்று என்றிருப்பதனால், அன்று அவ்வுபகாரம் செய்தான். இன்று இவ்வுபகாரம் செய்தானென்று சொல்லுவதாக தேறுகிறதன்றோ; அன்று மின்றும் தமக்கே செய்ததாகத் தேறினாராயிற்று.
பெரியார்க்காட்பட்டாக்கால் பெறாதபயன் பெறலாமென்று எங்கே சொல்லியிருக்கிற தென்னில்; ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் ஷத்ரபந்துவின் உபாக்யானத்தில் – *மஹாத்மநாம் ஸம்ச்ரயமப்யுபேதோ தைவாவஸீதத்யதிதுர்க்கதோபி* என்றுள்ளது
அதிதுர்க்கதோபி – மிகவும் வறியனாயிருந்தாலும், மஹாத்மநாம ஸம்ச்ரயம் அப்யுபேதா:- பெரியார்க்கு ஆட்பட்டானாகில், நைவ-அவஸீததி – மேன்மையையடைவனே யல்லது கீழ்மையை யடையமாட்டா னென்றபடி.
இப்பாசுரத்தைத் திருவுள்ளத்திற் கொண்டு தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில் பணித்ததொரு ச்லோகமும் நினைவுக்கு வருகின்றது – *அதாரிக்ருதோபி மஹதா தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு, அலபதஸமயே ராஜ்யம் பாதாக்ராந்தாபி பாதுகா சௌரே!* என்று.
“மஹா புருஷ ஸமாச்ரயணம் பண்ணினால் பின்னை அவர்கள், கொள்ளுகிறவன் சிறுமைபார்த்தல் கொடுக்கிற பொருளின் பெருமைபார்த்தல் செய்யாதே கொடுப்பார்களென்று இங்ஙனே நாட்டிலே யொன்றுண்டு; அத்தை என்பக்கலிலே காட்டினான்; ப்ரஹ்லாதாதிகளைக் கொண்டு திருவாய் மொழிபாடுவித்துக் கொண்டானோ?” என்பது ஈடு.
—————-
– இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று.
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-
பதவுரை
| தள் கனைகழல்கள் காட்டி |
– |
தன் திருவடிகளைக் காட்டியருளி |
| பாட்டு ஆய தமிழ் மாலை ஆயிரத்துள் |
– |
பாட்டாயிருக்கிற தமிழ்த் தொடையான அயிரத்துள் |
| கடு நரகம் புகல் ஒழித்த |
– |
கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த |
| செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும் |
– |
கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை |
| வாட்டாறு எம்பெருமானை |
– |
திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து |
| வளம் குருகூர் சடகோபன் |
– |
ஆழ்வார் (அருளிச்செய்த) |
| வானவர்கள் கேட்டு ஆரா |
– |
நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள். |
தன் கனை கழல்கள் காட்டி – திருவடியைச் சொன்னது திருமேனிக்கும் உபலஷணமாகும். தன் ஸ்வரூபரூப குணவிபூதிகளை ப்ரகாசிப்பிக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தைக் காட்டி யென்றபடி.
கடுநரகம் புகலொழித்த – *பொய்ந் நின்ற ஞானமும்…. இந்நின்ற நீர்மையினியா முறாமை* என்று முதலில் அபேஷித்தபடியே செய்து தலைக்கட்டினபடி.
ஆழ்வார் இந்த ஷேம ஸமாசாரத்தைத் திருவாட்டாற்றெம்பெருமான் முகமாகப் பெற்றதனால் “கடுநரகம் புகலொழித்த வாட்டாற்றெம்பெருமானை” என்கிறார்.
செவிக்கினிய செஞ்சொல் இப்பத்துங்கேட்டு வானவர்கள் ஆரார் – தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையைப் பாடிவிட்டு முடிவில் “இளைய புன் கவிதைக் என்றார்;
இவர் அங்ஙனே பேசாமல் ‘செவிக்கினிய செஞ்சொல்’ என்கிறார், தம்மையும் உளுக்கினபடி. “என்னவிலின்கவி’ என்றாரே கீழும்.
நித்யஸூரிகள் இப்பதிகத்தை முக்தர் சொல்லக் கேளா நின்றால் ‘இன்னம் சொல், இன்னம் சொல்’ என்பர்களே யல்லது கேட்டவளவால் திருப்தி பெறார்களாம்.
இங்கிருந்து அங்குச் சென்றவர்களை (முக்தர்களை) நோக்கி நித்யஸூரிகள் ‘நிலவுலகத்திலிருந்து வருகிறீர்களே, அங்கு ஏதாவது விசேஷ முண்டாகில் சொல்லுங்கள்’ என்று கேட்பார்களாம்;
‘திருக்குருகூர்லே ஆழ்வாரென்றொருவர் அவதாரித்துத் தொண்டர்க்கு முதுண்ணச் சொல்மாலைகள் சொன்னார்; அவற்றைக் கற்ற பெருமையாலே இங்கு வந்தோம்; இதுவே விசேஷம்’ என்பர்களாமிவர்கள்.
அப்படியாகில் அத்திருவாய்மொழி யாயிரத்திலே ஒரு பதிகம் வேறொன்று தோன்றாமல் இப்பதிகந் தன்னையெடுத்துப் பாடுவர்களாம் முக்தர்கள். அப்போது அவர் படும்பாட்டைப் பார்க்க வேணும் என்று ஆழ்வார் உட்கண்ணாலே யறிந்து கூறுகிறபடி.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 16, 2022 at 2:17 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply