இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1-
பதவுரை
| குயில் பேடைகாள் |
– |
பெண் குயில்களே! |
| இன் உயிர்சேலும் நீரும் |
– |
உங்களுடைய உயிர் போன்ற சேவல்களும் நீங்களும் |
| கூவிக் கொண்டு |
– |
(கலவிக்காகப்)பரஸ்வரம் கூவிக்கொண்டு |
| இங்கு |
– |
என் கண் வட்டத்திலே |
| எத்தனை |
– |
மிகவும் |
| என் உயிர் நோவ |
– |
என் பிராணன் நோவுபடும்படி |
| மிழற்றேல்மின் |
– |
தொனியைச் செய்யவேண்டா: |
| என் உயிர் கண்ண பிரானை வர |
– |
எனக்கு உயிரான கண்ண பிரான் இங்கு வந்துசேரும்படி |
| நீர் கூவ கிலீர் |
– |
நீங்கள் அழைக்க மாட்டீர்கள் |
| என் உயிர் கூலி கொடுப்பார்க்கு |
– |
என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்திருக்கு முங்களுக்கு |
| இத்தனையும் வேண்டுமோ |
– |
இவ்வளவு பாரிப்புக் தான் வேணுமோ? |
***– சில குயிற் பேடைகளை நோக்கி நீங்கள் என்னை முடிக்க வேண்டினால் அதற்கு இத்தனை பாரிப்பு வேணுமோ?
கோழி வெண் முட்டைக்கு என் செய்வதெந்தாய் குறுந்தடி (கோழி முட்டையை யடிப்பதற்குச் சிறு தடிதான் வோணுமோ?) என்றாப்போலே, அபலையாய் அற்றுக்கிடக்கிற வென்னை முடிக்கைக்கு இவ்வளவு ஸம்பிரமங்கள் வேண்டியிருந்த தோவுங்களுக்கு? என்கிறாள்.
இன்னுயிர்ச் சேவலும் நீரும் = குயிற் பேடைகளே! உங்களுக்கு நற்சீவனான சேவலும், சேவலுக்கு நற்சீவனான நீங்களுமாய்க் கூடியிருந்து,
இப்படி சேர்த்தியைக் காட்டி நலிகிறதுக்கு மேலே; கூலிக்கொண்டு–பேச்சாலும் கவிய வேண்டுமோ? விரணிகளுக்குக் கூடியிருப்பாரைக் காண்பதும் அஸஹயம்; அவர்கள் பரஸ்பரம் பேசும் பேச்சுக்களைக் கேட்பதும் அஸஹயம். இவ்விரண்டையும் காட்டுகிறது இங்கு.
இங்கு எத்தனை எண்ணுயிர் நோவ மிழற்றேல்மின்= ஏற்கெனவே அற்றுக்கிடக்கிற என்னுயிர் இன்னமும் படுகொலைப்படும்படி உங்களுடைய கூக்குரலை வெளிப்படுத்த வேண்டாவென்கிறாள். பிரிவிலே தளர்ந்திருக்கிற என்னுயிர் சிதிலமாம்படி மிகவும் ப்ரணய கூஜிதத்தைப் பண்ணுதே ருங்களென்கிறாள்.
‘என்னுயிர் நோவ’ என்கிற விதில் ஒரு விசேஷப் பொருள் கூவுங்கோள்; என்னருகே கூவினால் என்னுயிர் அங்ஙனம் தளிர்க்காது, சிதிலமாகும் ; ஆகவே இங்கு மிழற்றேல்மின் என்பதாக.
இங்ஙனம் சொல்லக்கேட்ட குயிற் பேடைகள் ‘எங்களுடைய ஜாதிக்குக் கூவுகை தானே இயல்வு; அதனைத் தவிர்ந்திருக்க முடியுமோ?’ என்ன: அதற்குச் சொல்லுகிறான் என்னுயிர் கண்பிரானை நீர்வரக் கூவகிலீர் என்று,
உங்களுக்கு கூவுகையே பண்யானால், என்னுயிரான கண்ணபிரான் இங்கே வந்து சேருமாறு அவனைக் கூவலாகாதோ?–அது செய்யாதே யிருக்கிறீர்களே யென்கிறாள்.
என்னுயிரை மாய்ப்பதற்காகவே நீங்கள் கூவுகிறீர்கள்; அந்தோ இதற்கு இத்தனை ஸம்பிரமம் வேண்டியிருந்ததோ?
என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்த வுங்களுக்கு இத்தனை முயற்சி வேணுமோ?
என்னுயிரை நானே கூவிக் கொடுக்க ஸித்தமாயிருக்க, உங்களுக்கு இத்தனை பாரிப்பு வேணுமோ? என்றுமாம்.
—————-
***– சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2-
பதவுரை
| அன்றில்பேடைகாள் |
– |
பெண்ணன்றிற் பறவைகளே |
| நீரும் நும் சேவலும் |
– |
நீங்களும் உங்கள் சேவல்களும் |
| எத்தனை கரைந்து ஏங்குதிர் |
– |
எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே |
| இத்தனை வேண்டுவது அன்று |
– |
என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!; |
| அந்தோ |
– |
ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு? |
| வித்தகன் கோவிந்தன் |
– |
மாயக் கோபாலன் |
| ஒருவர்க்கும் மெய்யன் அல்லன் |
– |
நல்லார் தீயாரென்கிற வாசியின்றிக்கே அனைவர்க்கும் பொய்யனே |
| இனி |
– |
ஆன பின்பு |
| என் உயிர் |
– |
என் பிராணன் |
| அவன் கையதே ஆம் அத்தனை |
– |
அவன் கைப்பட்டதேயன்றோ. |
அன்றில் என்பது ஒரு பறவை; குரரீ என்று வடமொழியிற் கூறப்படும்; க்ரௌஞ்ச மென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும்.
அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணை பிரியாது நிற்கும்; கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டு பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறுக்க கில்லாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்று தரம் கத்திக் கூவி, அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும்.
ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற் பறவை இணை பிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று லாயலசைக் கோத்துக் கொண்டு உறங்கும் பொழுது அவ்வுறகத்தில் வாயவகு தன்னில் நெகிழ்ந்த வளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாக மிக இரங்கத்தக்க சிறு குரல் செய்து விரஹிஜனங்களின் செவியில் விழுந்தால், பொறுக்க முடியாத துன்பமாகும்.
பெரிய திருமடலில், “பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும், என்னுடைய நஞ்சுக்கோ ரீர்வாளா மென் செய்கேன்!” என்றதுங் காண்க.
பெரிய திருமொழியிலும் “காவார் மடற் பெண்ணை யன்றிலரி குரலும், ஏவாயினூடியங்கு மெஃகில் கொடிதாலோ” என்றாற் போன்ற பாசுரங்கள் பலகால் வருவது காண்க.
அன்றிற் பேடைகாள்! இத்தனை வேண்டுவதன்று+என்னை முடிக்கைக்கு இத்தனை வேண்டுவதில்லையே. குயில்களின் தொனியிலேயே உயிரை இழந்து கொண்டிருக்கிற என்மேல் அன்றில்களான நீங்கள் உங்களுடைய தொனியையும் செலுத்திப் பிராயசப்பட வேண்டுமோ? பூசல் செய்து கொள்ளை கொள்ளும் கள்ளர் காலிலே விழுந்து ஐயோ! என்பாரைப்போல இங்கு ஆழ்வார் அந்தோ! என்கிறார். சரணம் என்ற வாயை அம்பாலே நிறைக்கலாமோ? என்பது இதன் கருத்தாம்.
இப்படி சொல்லக்கேட்ட அன்றில் பேடைகள் ‘நாங்கள் என் செய்தோம்?’ என்ன எத்தனை நீரும் நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர் என்கிறான். சேவலில் கருத்தறிந்து பரிமாறுகிற உங்கள் சேவலும் ஸம்ச்லேஷ ரஸத்தாலே உள்ளழிந்து கூக்குரவிடுகிறீர்களே! இதைக் காட்டிலும் வேறு நலிவு உய்டோ வென்கிறாள். எத்தனை யென்றது–மிகவு மென்றபடி.
இப்படி சொல்லக்கேட்ட அன்றிற் பேடைகள் ‘ அம்மா பராங்குச நாயகீ ! உன்னோடு கலவியே தாரகமாயிருக்கிற வெம்பெருமான் ஒரு கணப்பொழுது பிரியுமளவில் அவனே எங்களை யிட்டு நலிவிக்கிறானாக இங்ஙனே கொடுமை சொல்ல வேணுமோ? இது தகுமோ? சற்றுப்போது பொருத்திருந்தால் அவன் தானே வருகிறான்’ என்று சொல்ல;
அதற்குச் சொல்லுகின்றாள் வித்தசன் கோவிந்தன் மெய்யனல்ல னோருவர்க்கும் இத்யாதி. வித்தகன்–இதுவரையில் பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன என்றிருந்தோம்; இப்போது பத்துடை யடியவர்க்கு அரியனான வித்தகன் என்று முடிவு செய்தோம் என்பதாகத் தெரிவிகிறது.
இங்கே ஈடு; – [“வித்தகன்”] விஸ்மயநீயன். இப்போது அநுகூலர்க்கு அரிய வித்தகன், [கோவிந்தன்] ஸர்வரக்ஷகன், இத்தால்–ரக்ஷகரைப்போலே யிருந்து பாதகனாமவன். ரக்ஷகனென்று பற்றப் போகாது”.என்று.
மெய்யனல்லன் ஒருவர்க்கும்–”மெய்யர்க்கே மெய்யனாகும் – பொய்யர்க்கே பொய்யனாகும்” (திருமாலை) என்றார் ஓராழ்வார்; இவர், ஒருவர்க்கும் மெய்யனல்ல னென்கிறார்.
“ராமாவதாரத்தில் மெய்யும் க்ருஷ்ணாவதாரத்தில் பொய்யுமிறே ஆச்ரிதர்க்குத் தஞ்சம்” என்றாயிற்று நம் ஆசாரியர்களின் உறுதி.
“அத்தனையாமினி என்னுயிரவன்கையதே” என்றது “இனி என்னுயிர் அவன் கையதே யாமத்தனை” என்றபடி.
‘என்னுயிர் நோவ மிழற்றேன்மின்’ என்று லேண்டச்செய்தேயும் அவை கூவுகை தவிராமையாலே, இனி நான் முடிந்தேனத்தனை யென்றாளாயிற்று.
————
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3-
பதவுரை
| அன்றில் பேடைகாள் |
– |
பெண்ணன்றில் பறவைகளே |
| எனது ஆர் உயிர் அவன் கையுதே |
– |
எனது அருமையானவுயீர் அவன் கைப்பட்டதே |
| நீர் எவம் சொல்லி |
– |
நீங்கள் ஏதேதோ உக்திகளைப் பேசிக் கொண்டு |
| குடைந்து |
– |
ஸம்ச்லேஷித்து |
| புடை சூழவே ஆடுதிர் |
– |
என் கண் வட்டத்திலேயே திரிகின்றீர்கள்; |
| தவம் செய்தில்லா |
– |
அவனைப்போலே பிரிவுக்கு ஆறியிருக்கும்படியான பாக்கியம் பண்ணாத |
| பினையாட்டியேன் உயிர் |
– |
பாவியான என்னுடைய பிராணன் |
| இங்கு உண்டோ |
– |
(அங்கே போனபடியாலே) இங்கு இல்லையே |
| நும் எங்கு கூக்குரல் கேட்டும் |
– |
உங்களுடைய பரேம கனமான தொனியைக் கேட்டும் |
| எவம் சொல்லி |
– |
எத்தைச் சொல்லித் தரிப்பது? நிற்றும் |
***– மீண்டு மிப்பாட்டிலும் அவ்வன்றிற் பேடைகளையே யிரக்கின்றாள்.
அவன் கையதே யெனதாருயிர்–அவனுடைய உயிர் என் கைப்படதாயிருந்த நிலை கழிந்து என்னுடைய உயிர் அவன் கைப்படநாம்படியான நிலையாயிற்று.
கீழ் நாலாம்பத்திய “உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்” என்றாரே. ஒரு காலத்தில் இவருடைய உயிர் அவனதாயிருப்பதும், மற்றொரு காலத்தில் அவனுடைய உயிர் இவரதாயிருப்பது முண்டே.
அன்றிற் பேடைகாள்= நீங்கள் இப்போது கூடியிருந்து ரஸமநுபக்கிறீர்கள். இந்த ரஸமறிந்த நீங்கள் பிரிந்தார் படும் துயரமும் அறிய வேண்டாவோ? அஃதறிந்தால், பிரிந்த வென்னை இப்படி கூக்குரலாலே நேரவு படுத்துவீர்களோ?
எவஞ் சொல்லி நீர் குடைந்தாடுதிர்=நீங்கள் எத்தனை உக்தி விசேஷங்களைச் சொல்லி நிபிட ஸம்ச்லேஷம பண்ணிப் பரிமாறுனிற்றீர்கள்! உங்களுடைய பேச்சும் காதால் கேட்கப்போகிறதில்லை, உங்களுடைய செயலும் கண்ணால் காண முடிகிறதில்லையே! என்கிறாள்.
அவ்வன்றிற் பேடைகளின் அநக்ஷரராஸமான பேச்சுக்களைத் தன் வாயால் அநுவாதஞ் செய்யவும் கூசின படியாலே எவஞ் சொல்லி என்கிறாள்.
எத்தெத்தையோ சொல்லுகிறீர்களே !; உங்களுடைய குசால் உங்கள் பேச்சிலன்றோ தெரிகிறது என்கை. விரஹிகளுக்கு உத்தீபகமான தொளியன்றோ அது.
புடை சூழவே–தொனி மாத்திமன்றே என்னை யழிக்கிறது; நீங்கள் உந்தம் சேவலுடனே சுற்றிச்சுற்றி ஸஞ்சரியா நின்றீர்களே! இந்த உங்கள் கொந்தளிப்பைக் கண் கொண்டு காண முடிய வில்லையே; செயைப் புதைத்துப் பிழைப்பேனோ? கண்ணைப் புதைத்துப் பிழைப்பேனோ? என்கிறாள்.
தவஞ்செய்தில்லாவினையாட்டியேனுயிர் இங்குண்டோ?= தவமாவது பாக்கியம், பாக்ய ஹீகையான வினையாட்டியேன் என்று இத்தலைவி தன்னை நிந்தித்துக் கொள்வதற்கு இருவகையான கருத்துக் கூறுவர்கள்;
“உயிரை இங்கே வைத்து உபகரிக் கபாக்யம் பண்ணிற்றிலேன்” என்பது ஒரு கருத்து;
அதாவத? என்னுயிர் நீடித்திருந்தாகில் என்னை நீங்களும் நீடித்து நவிய நேரும்; இவ்வழியாலே உங்களுக்கு ஒருபகாரம் பண்ணினேனாவேன்; உயிர் சென்று கொண்டேயிருக்கையாலே இவ்வுபகாரம் செய்ய பாக்யம் பண்ணாதவளாயினேன் என்பது தான்.
மற்றொரு கருத்தாவது=”அவனைப் போலே பிரிவுக்குச் சிளையாதபடி பாக்யம் பண்ணப் பெற்றிலேன்” என்று பிள்ளான் பணிப்பராம்.
பிரிவு என்பது வ்யக்தித்வய நிஷ்டமாகையாலே, எம்பெருமானை நான் பிரிந்திருப்பதுபோல என்னை அவன் பிரிந்திருப்பது முண்டே; ஆனால் அவன் இப்பிரிவுக்குச் சிறிதும் வருந்துகிறானல்லன்; நானும் அப்படி வருந்தாதிருக்கலாமே; அதற்கு பாக்யம் பண்ணிற்றிலேன் என்கை.
இப்படிப்பட்ட தௌர்ப்பாக்ய சாவிநியான என்னுடைய, உயிர் இங்கு உண்டோ–=கொள்ளை கொளள் வீட்டினுள்ளே புகுந்தவர்களுக்கு வீட்டுக்குடையார் விளக்கேற்றிக் காட்டி இங்கு ஏதேனும் ஒரு சரக்காவது இருக்கின்றதா பார்த்துக் கொள்ளுங்கள் என்று காட்டுமாபோலே காட்டுகிறளாம் பராங்குச நாயகி.
உயிர் இருந்தாலன்றோ நீங்கள் நலியலாம்; இங்கு உயிரிலையே, நீங்கள் நலிந்து என் பயன்? என்கிறாளாயிற்று.
உயிர் இல்லாவிடில் இப்பேச்சு எங்ஙனே பேசுகிறாளென்று கேட்க வேண்டா ; உயிர் போகுந் தருவாயிலிருக்கிறது என்பதே உயிரிங்குண்டோ– என்றதன் கருத்து.
நும் ஏங்கு கூக்குரல் கேட்டும் எவஞ்சொல்லி நிற்றும்–கேட்டாரை முடிக்கவல்லதான உங்கள் தொனியைக் கேட்டுங்ககூட நான் தரித்திருக்க முடியுமோ?
————
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4
பதவுரை
| கோழிகாள் |
– |
மயில்களே! |
| கூக்குரல் கேட்டும் |
– |
நீங்கள் பாஸ்பரம் அழைத்துக் கொள்ளுகிற தொனியைக் கேட்டும் |
| நம் மாயன் கண்ணன் |
– |
நமது மாயக்கண்ணன் |
| வெளிப்படான் |
– |
வந்து தோன்றுகின்றவன் |
| நீரும் சேவலும் மேல் கிளை கொள்ளேன் மின் |
– |
நீங்கள் ஆணும் பெண்ணுமாயிருந்து உயரக் கூவ வேண்டா |
| நமக்கு |
– |
என்னுடைய |
| வாக்கும் மனமும் கருமமும் |
– |
காணத்ரய வ்ருத்தியும் |
| ஆங்கதே |
– |
அப்பெருமான் பக்கலிலே யாயிற்று |
| ஆக்கையும் ஆவியும் |
– |
உடலும் உயிரும் |
| அந்தரம் நின்று உழலும் |
– |
நடுவே நின்று தத்தளிக்கின்றன |
***– சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே! இது நீதியோ வென்கிறாள்.
கூக்குரல் கேட்டும் நங்கண்ணன் மாயன் வெளிப்படான்= உங்களுடைய கூச்சல் கேளாதவிடமுண்டோ? எங்குங் கேட்குமே; திரு நாட்டிலுள் கேட்குமே; அது கேட்டு இங்கு நான் படுகிற பாட்டை அங்கு அவனும் பட நேருமே; அப்படியிருந்தும் அவன் பதறியோடி வாராதே கிடக்கிறானே! இஃது என்னோவென்கிறாள்.
இத்தால் தன்னுடைய ஆற்றாமைமிகுதியைக் காட்டினாளாயிற்று. இங்ஙனே சொல்லச் செய்தேயும் அவை முன்னிலும் உயர்ந்த தொனியைச் செய்தன; செய்யவே, மேற்கிளைக் கொள்ளேன்மின் நீருஞ் சேவலும் கோழிகாள் என்கிறாள். இங்கு கோழியென்றது மயிலை. கிளையாது தொனி; மேலான கிளை–உச்சத்வநி, உங்கள் ஜாதிக்குத் தக்கதாய் ப்ரணயப்ரயுக்தமான உச்சத்வநியைப் பண்ணவேண்டா வென்றபடி.
இங்ஙனே சொல்லச் செய்தேயும் அவை உச்சத்வனியையே செய்ய; என்னுடைய ஸர்வகரணங்களையும் முடித்தே விடுவதாக ஸங்கல்பித்து வந்தன்றோ நீங்கள் இப்படி உச்சத்வனியைப் பண்ணா நின்றீர்கள்; என்னுடைய கரணக்ராமங்களில் ஒன்றும் இங்கில்லையே;
(வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே) என்னுடைய ஸகலகாரணங்களும் அவன் பக்கலிலே சென்று சேர்ந்தனவே; அங்கே சென்று கத்துங்கோள் என்றாளாயிற்று.
‘உம்முடைய வாக்கும் மனமும் கருமமும் அங்கே சென்றற்றவனவாசில் இங்கே நீர் பேசுகிறபடி எங்ஙனே?’ என்று அவை கேட்பதாகக் கொண்டு, ஆக்கையுமாலியும் அந்தரம் நின்றுழலுமே என்கிறாள்;
உடலும் உயிரும் ஏதோ நடுவே நின்று அனர்த்தப் படுகின்றன வத்தனை; தரித்து நிற்பதாக நினைக்க வேண்டா என்றபடி.
——————-
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5-
பதவுரை
| அந்தரம் நின்று |
– |
நடுவே வீணாகப் பரிச்சாப்படுகிற உழல்கின்ற |
| யானுடைய பூனவ காள் |
– |
என்னுடைய பூவைகளே ! |
| நும் திறந்து எதும் இடை இல்லை |
– |
உங்கள் உத்யோகத்திற்குச் சிறிதும் அவகாசமில்லை |
| குழறேன்மின |
– |
உங்கள் தொனியைக்காட்டி நலி வேண்டா |
| இந்திர ஞாலங்கள் காட்டி |
– |
(பண்டுமாவலியிடத்து) மாயா விநோதங்கள் காட்டி |
| இவ் எழ் உலரும் கொண்ட |
– |
இவ்வேழுலகங்களையும் ஆக்ரமித்து கொண்டாடப் போலே என்னையும் கொள்ளை கொண்ட |
| நம் திருமார்பன் |
– |
நமது திருமால் |
| நம் ஆவி உண்ண |
– |
நம்மூயிரையும் கொள்ளை கொள்ள |
| நன்கு எண்ணினான் |
– |
நன்றாக ஸங்கல்பித்தான் |
***– இப்பாட்டின் முன்னடிகள் பூவைகளை நோக்கிச் சொல்லுவது; பின்னடிகள் தன்னிலேதான் சொல்லிக் கொள்வது.
அந்தரம் நின்றுழல்கனிற் பூவைகளே! என்றது–நிஷ்ப்பலமாக நின்று சிரமப்படுகிற பூவைகளே! என்றபடி.
இங்கு ஏதாவது பசை யிருந்தால் நலியலாம்; அப்படி யொரு பசையின்றிக்கே யிருக்க, வீணாக ஆயாஸப்படுவது எதற்காக? என்றவாறு,
யானுடைப் பூவைகாளென்றது என்னுடைப் பூவைகளே! என்றபடி. நீங்கள் நான் வளர்த்த பூவைகளாயிருந்து வைத்து என்னை இப்படி நலியலாமோ? என்பது கருத்து, என்னுடைய பூவைகளான படியினாலேயே நலிகின்றீர்கள் போலும்; அவனும் என்னுடைய வனாகையாலேயே யன்றோ நலிகின்றான். நலிகைக்கு என்னுடைமையே ஹேது போலும்–என்பதுமொரு கருத்து.
நுந்திறத்து ஏது மிடையில்லை குழறேன்மினோ=என்னைக் கொலை செய்வதற்கு உங்களிடத்தே ஒரவகாச மில்லை; அநக்ஷரரஸமான பேச்சைக் காட்டி யென்னை ஹிம்ஸிக்க வேண்டா வென்றபடி. என்னைக் கொலை பண்ணுவதற்கென்று கங்கணங் கட்டிக்கொண்டிரா நின்ற எம்பெருமான் தன்னுடைய அக்காரியத்தில் தான் ஜாகரூகனாயிருக்க, உங்களுக்கு எதுக்கு வீண் பரிச்ரமம்? என்னை நலிவதில் அவன் லிகவாங்கினா லன்றோ நீங்கள் அதை நிறைவேற்ற வேண்டும்; அவன் உங்களுக்கு அவசாகம் வைத்திலனே என்றாளாயிற்று.
இனி, பின்னடிகளுக்கு ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி காண்மி;– “பண்டு இந்த லோகத்தைத் தனக்காக்கிக் கொள்ளுகைக்குச் சில பொய் செய்தாப்போலே–என்னோடே கலந்து பரிமாறுகிறானாகத் தோற்றும்படி சில பொய்களைச் செய்து அகன்று போனவது என்னை முடிக்கைக்கு நல்ல விரகு பார்த்தான்; என்ன சதுரனே! என்று தன்னிலை நொந்து சொல்லுகிறாள்.” என்று,
இந்திர ஜாலங்கள்போலே த்ருஷ்டி சித்தாபஹாரியான வடிவுகையும் சிலத்தையும் சேஷ்டிதத்தையும் காட்டி வாய்மாளப் பண்ணி, ஆஸுரப்ரக்ருதியான மஹாபலி என்னதென்றிருந்த லோகத்தைத் தன்னதாக்கிக் கொண்டாப்போலே, என்னையும் ஸெளந்தர்ய சீலாதிகளைக் காட்டி வாய்மாளப்பண்ணி, நான் என்னதென்றிருந்த ஆத்மாவைத் தன்னதாக்கிக் கொண்டவவன் இப்போது என்னை முடிக்கைக்கு நல்லுபாயம் பார்த்தான் ஸர்வசக்தன் உத்யோகித்த காரியத்திலே குறை கிடக்குமோ?
பின்னடிகளும் பூவைகளை நோக்கியே சொல்லுகிறதெனினும் குறையில்லை.
——————-
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6-
பதவுரை
| நன்கு எண்ணி |
– |
எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து |
| நான் வளர்த்த |
– |
நான் போஷித்து வந்த |
| சிறு கிளி பை தலே |
– |
சிறிய கிளிக் குட்டியே! |
| இன் குரல் நீ மிழற்றேல் |
– |
இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்) |
| நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன் |
– |
உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும் |
| கண்ணன் கை காலினன் |
– |
(உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும் |
| நின் பசும் சாமம் நிறத்தன் |
– |
உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும் |
| என் ஆர் உயிர் |
– |
என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான |
| காகுத்தன் |
– |
இராமபிரான் |
| கூட்டுண்டு நீங்கினான் |
– |
என்னோடே கலந்துப் பிரிந்தான் |
***– இந்த நிலைமையில் நாம் திருநாமத்தைச் சொல்லலாகாது என்றறியாதே திருநாமத்தைச் சொல்லி நவிகிற கிளிப் பிள்ளையைக் குறித்து எனக்கு அஸஹயமான தசையிலே இப்படிச் சொல்லி நலியவே உன்னை நான் வளர்த்தது! என்று சொல்லி அத்தை நிவர்த்திப்பிக்கிறாள்.
நன்கெண்ணி நான் வளர்த்த–வளர்த்தலாவது திருநாமங்க கற்பித்தல்; எந்த மையத்தில் திருநாமம் சொன்னால் ஸாத்மிக்கும்; எந்த ஸமயத்தில் அது சொன்னால் பாதகமாகும்–என்பதை யறிந்து மையம் பார்த்துச் சொல்லுமாயென்று உனக்கு நான் கற்பித்து வைத்திருக்க, இங்ஙனே பாதகமான நிலைமையிலே திருநாமத்தைச் சொல்லிக் கொலை பண்ணுவது முண்டோ! என்று கிளிப் பிள்ளையை நோக்கி நோகிறாள்.
இன் குரல் நீ மிழற்றேல்–இன் குரல் என்றது கூரியவேல் என்னுமாபோலே யென்பர் நம்பிள்ளை. கிளியே! உன்னுடைய குரலாகிற கூர்வேல யிட்டுக் கொலை பண்ணாதே யென்றபடி. “நிரம்பரமென் சொல்லால் என்னை முடியாதேகொள்; மாத்ருவதத்திலேயும் ப்ரவர்த்திப்ருண்டோ?” என்பது ஈடு.
இப்போது எம்பெருமான் என்னோடு கூடியிருந்தானாகில், நீ திருநாமஞ் சொல்லுவது எனக்குப் பரம போக்யமாகவேயிருக்கும்; அவனோ பிரிந்து போயினான். ஆன பின்பு, அவன் வடிவுபோலே யிருக்கும் உன் வடிவைக் காட்டி, அதற்கு மேலும் அவன் திருநாமங்களையுஞ் சொல்லி என்னை நோவு படுத்தாதே யென்றாளாயிற்று.
————-
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-
பதவுரை
| கூட்டுண்டு நீங்கிய |
– |
என்னோடு கலந்து பிரிந்த |
| கோலம் தாமரை கண் செம்வாய் |
– |
அழகிய தாமரை போன்ற கண்களையும் சிவந்த அதாத்தையு முடையனாய் |
| வாட்டம் இல் என் கரு மாணிக்கம் |
– |
இடைவிடாமல் என்னினைவிலேயேயிருக்கிற நீலரத்னம் போன்றவடிவையுடையனான |
| மாயன் கண்ணன் போல் |
– |
மாயக் கண்ணனைப் போலயிருக்கிற |
| கோட்டிய வில்லோடு மின்னும் மேகம் குழாங்கள் காள்! |
– |
வளைக்கப்பட்ட வில்லோடு கூடி மின்னுகிற மேகதிரள்களே! |
| நும் உரு |
– |
உங்கள் வடிவத்தை |
| காட்டேன்மின் |
– |
காட்டாதே மறைத்துக்கொள்ளுங்கோள்; |
| அது என் உயிர்க்கு காலன் |
– |
அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு மிருத்யு |
***– எம்பெருமானது வடிவுக்குப் போலியான மேக பங்க்திகளைக் கண்டு, உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோளென்கிறாள்.
எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து பிரிந்து போன பிறகு ஸெளந்தர்ய லாவண்யாதிகள் அதிசயிக்கப் பெற்றான் போலும்; அதனைச் சொல்லுகிறது முன்னிரண்டடிகள்.
இங்கு நம்பிள்ளை இரண்டு படியாக அருளிச் செய்வர்; “ஏகத்வ மென்னும்படி கலந்து பிரிந்த பின்பு அவனுடைய அவயவ சோபை யிருந்தபடி யென்னுதல்; இவளோட்டைக் கலவியால் வந்த சோபை யென்னுதல்; ” என்று.
அதாவது, அவனோடு கலந்து நான் பிரிந்தேன, என்னோடு கலந்து அவன் பிரிந்தான்; இப்படி இருவருக்கும் பிரிவு ஒத்திருக்கச் செய்தேயும் அவனைப் பிரிந்த நான் *சங்கம் சரிந்த சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் * என்றும்,
*சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்* என்றும் சொல்லும்படி மேனி நிறமழிந்த கிடக்கிறேன்;
என்னைப் பிரிந்த அவனோ வென்னில், பிரிவுக்குக் கிளையாதபடி கண்ணும் வாயும் விகாஸம் பெற்றுப் பொலியா நின்றான் என்பது முதற்கருத்து;
இந்தப் பொலிவு பிரிவினாலென்று கொள்ள வேண்டா; என்னோடு கலந்ததனாலேயே யென்று கொள்ளலா மென்பது இரண்டாவது கருத்து.
மின்னு மேகக் குழாங்கள்காள்! என்று மேகங்களை விளிக்கின்ற இத்தலைவி அந்த மேகங்களுக்கு எம்பெருமானை உவமை கூறுகின்றாள்.
கீழே எட்டாம்பத்தில் ஒக்குமம் மானுருவமென்று உள்ளங் குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல் குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான் என்றதை இங்கு நினைப்பது.
மேகம் வில்லோடுகூடி விளங்கும் போது வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்வேந்தி யிருக்குங் கண்ணனுடைய நினைவு வாராமலிராது; மேகம் மின்னும்போது ஸ்ரீகெளஸ்துபம் முதலிய திருவாபரணங்களினால் மின்னா நின்றுள்ள கண்ணபிரானுடைய நினைவு வாராமலிராது. அதையிட்டு “என் கருமாணிக்கங் கண்ணன் மாயன்போல் கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாங்கள்காள்!” என்றது.
நாட்டேன்மின் நும்முரு=மிருத்யு வென்னலாம்படியான உங்கள் வடிவைக்காட்டி என்னைக் கொலை செய்ய வேண்டா வென்றபடி.
என்னுயிர்க்கு அது காலனே–பண்டே விரஹம் தின்ற என்னுயிர்க்கு அது யமனன்றோ.
இங்கு மேகக் குழாங்கள்காள்! என்று, முன்னிலையாக விளித்து, நும்முரு என்றுஞ் சொல்லிவைத்து இது என்ன வேண்டியிருக்க அது என்று பரோக்ஷம் போலச் சொல்லி யிருக்கையாலே, கண்கொண்டு காண மாட்டாமை முகத்தை மாற வைத்துச் சொல்லுகிறளென்பது போதரும்.
இப்பாட்டில் ‘குழாங்கள் காள்!’ என்ற பிரயோகம் வட மொழி வைதிகப் பிரயோகம் போலே நிர்வஹிக்கத் தக்கது.
எட்டாம் பத்திலும் *இடையில்லை யான்வளர்த்த கிளிகாள் பூவைகள்காள்* என்றுள்ள பிரயோகம் இத்தோடு ஒப்பிடத்தக்கது.
மேல் பத்தாம் பாட்டிலும் *நாரைக் குழாங்கள்காள் * என்பர்.
—————
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8-
பதவுரை
| குயீல் பைதல்காள் |
– |
குயிற் குட்டிகளே |
| அது உயிர்க்கு காலன் என்று |
– |
(கண்ணனுடைய நாமமாகிற) அது என்னுயிர்க்கு மிருத்யுவென்று சொல்லி |
| உம்மை யான் இரந்தேற்கு |
– |
(அந்த க்ருஷ்ண நாமத்தைச் சொல்ல வேண்டாவென்) உங்களை வேண்டிக்கொண்ட என்னை |
| கண்ணன் நாமமே குழறி கொன்றீர் |
– |
அந்தக் கண்ணன்நாமங்களையே அநக்ஷரமதுரமாகச் சொல்லிக் கொலை செய்கிறீர்கள் |
| தயிர் பழஞ் |
– |
தயிரையும் பழைய சோற்றையும் சோற்றோடு |
| பால் அடிசிலும் தந்து |
– |
பாலையும் செஞ்சோற்றையு மூட்டி |
| சொல் பயிற்றிய |
– |
அவனது திருநாமங்களாகிற சொற்களை கற்பித்தத்ற்குக் கைம்மாறாக |
| நல் வளம் ஊட்டீவீர் |
– |
(இப்படி யென்னைக் கொலை செய்கையாகிற) நல்ல காரியம் செய்தீர்கள் |
| பண்பு உடையீரே |
– |
நீங்கள் நல்ல தர்மிஷ்டர்களே |
***– இந்த நிலைமையில் பகவந்நாம ஸம்கீர்த்தனமும் அஸஹயமாயிருக்கிறபடியை அந்யாபதேசத்தாலே தெரிவிக்கிற பாசுரமிது.
ஆழ்வார் தாம் வளர்த்தத குயில்களுக்கு ராமநாமங்களையும் கிருஷ்ண நாமங்களையும் கற்பித்து வைத்திருப்பதுண்டு;
ராமநாமம் ம்ருத ஸஞ்ஜீவனமாகையாலே, உயிர் தொலையும்படியாயிருக்கும் நிலைமையிலே ராமநாமங்களையே சொல்ல வேண்டு மென்றும், கிருஷ்ண நாம ப்ரஸ்தாவமும் செய்யலாகாதென்றும் திட்டம் செய்திருந்தது முண்டு.
இப்போது உயிர் தொலையுந்தருணமாகையாலே, ராமநாமத்தையே சொல்லுங்கள், கிருஷ்ண நாமத்தைச் சொல்லவேண்டா வென்று விசேஷித்துக் கட்டளை யிட்டிருந்தும் அவை க்ருஷ்ண நாமத்தையே சொல்ல, ஓ படுகொலை! படு கொலை! படுகொலை! என்கிறாள் பாரங்குச நாயகி.
குயிற் பைதல்காள்! உயிர்க்கு அது காலனென்று உம்மை யானிரந்தேற்கு=குயிற் குட்டீகளே! அந்த க்ருஷ்ண நாமமானது ராமநாமம்போலே ம்ருதஸஞ்ஜீவநியாய்ப்போனவுயிரை மீட்டுக் கொண்டு வந்து கொடுக்க வல்லதன்று;
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே (நாச்சியார் திருமொழி12–7) என்கிறபடியே இருக்கிறயுயிரையும் கொண்டுபோய் முடிக்க வல்லது; அப்படிப்பட்ட நாமத்தை இப்போது என் செவியிலே வீழ்த்த வேண்டா வென்று நான் பலகாலம் பிரார்த்தித்திருந்தும் அந்தோ! சரணாகத காதுகரானீர்களே! கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–நெஞ்சைப் புண்படுத்தி வைக்கும் கிருஷ்ண நாமத்தையே அவ்யக்தமதுரமாகச் சொல்லிச் சொல்லி என்னைக் கொலை செய்கீறீர்களே! ம்ருதஸஞ்ஜீவநியான ராம நாமங்களையும் சேர்த்துச் சொன்னாலாகாதோ? உபகாரம் பண்ணினார்க்கு இப்படி அபகாரம் பண்ணுகை நீதியோ? என்ன; என்ன வுபகாரம் நீ பண்ணிற்று? என்று அவைகேட்க;
தயிர் பழஞ்சோற்றோடு பாலடிசிலும் தந்து சொல்பயிற்றிய நல்வளம் என்கிறாள் பஞ்சாமிருதமளித்தன்றோ உங்களை நான் வளர்த்தது. தயிரென்ன பழமென்ன சோறென்ன பாலென்ன அடிசிலென்ன ஆகிய இவ்வைந்தையும் தந்து என்பதாகக் கொள்ளலாம்;
சோறு என்றாலும் அடிசில் என்றாலும் ஒன்றேயாயிருக்க இரண்டுபடச் சொல்லுவானென்? என்னில், வேறுஞ்சோற்றைச் சோறென்கிறது; விசேஷ மிச்ரமான சோற்றை அடிசிலென்கிறது–என்று கொள்ளலாம்.
இப்படி கொள்ளுமளவில் ஐந்து பதார்த்தங்கள் தேறுகையாலே பஞ்சாமிருதம் போன்ற அர்த்த பஞ்சகத்தையுமுபதேசித்து சிஷ்யர்களைப் போஷித்தமை ஸ்வாபதேசார்த்தமாக விளங்கும்,
அன்றி, பழஞ்சோறு என்றவிடத்து பழமும் சோறும் என்று இரண்டாகக் கொள்ளாமல் பழைய சோறு என்று ஒன்றோயகக் கொள்வதுதான் முன்னோர்களின் வியாக்கியானங்களிலுள்ளது.
“தயிரும் பழஞ்சோறும் பாலும் செஞ்சோறும் அவ்வவ காலங்களிலே தந்து” என்பது ஈடு.
இவையிட்டு நான் உங்களை வளர்த்துப் போந்ததற்கு நல்ல கைம்மாறு செய்தீர்கள்! இவ்வளவு இரக்கங்கெட்டவர்களா நீங்கள் ! என்றதாயிற்று.
—————-
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்-9-5-9-
பதவுரை
| பண்பு உடை வண்டொடு தும்பிகான் |
– |
பாட்டின் நீர்மையை யுடைய வண்டுகளோடு கூடின தும்பிகளே |
| நும் இன் குரல் |
– |
உங்களுடைய இனிய குரலானது |
| புண் இரை வேல் கொடு குத்தால் ஒங்கும் |
– |
புண்ணின் புரையிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலேயிரா நின்றது |
| பண் மிழற்றேன்மின் |
– |
பண்பாடு தலைத்தவிருங்கள் |
| தண் பெரு நீர் தடம் |
– |
குளிர்ந்து நிரம்பின நீரையுடைய தடாகம் |
| தாமரை மலர்ந்தால் ஒக்கும் |
– |
தாமரை மலரப் பெற்றாற்போலேயாய் |
| பெரு கண் கண்ணன் |
– |
மிகப் பெரிய கண்களை யுடையனான க்ருஷ்ணன் |
| நம் ஆவி உண்டு |
– |
நமது உயிரைக் கவர்ந்து |
| எழ நண்ணினான் |
– |
அகன்று போயினன் |
***– மதுவைப் பருகிக் களித்துப் பாடுகிற சில வண்டுகளையும் தும்பிகளையுங் குறித்து உங்கள் தொனி என்னால் பொறுக்கப் போகிறதில்லையே; பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள்.
பண்புடை வண்டொடு தும்பிகாள்! பண்மிழற்றேன்மின்=நான் வளர்த்த குயில் நோலே நீங்கள் நன்றி கெட்டவர்களன்றே; நீங்கள் சிறந்த தார்மிகளல்லவா? என்று, இரக்கம் பிறக்கும்படி கொண்டாடிப் பேசுகிறாள் பண்புடை வண்டென்று,
பண்பாவது நீதி நீங்கள் நீதி தவறாதவர்களாகையாலே உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டா வேன்றபடி. பண்மிழற்றுகையாவது ஆலாவனை செய்கை.
சொற்கள் நன்கு விளங்கும்படி பாடுவதைக் காட்டிலும் சொல் தெரியாமலே ஆலாபனை செய்வதுதான் நெஞ்சை அதிகமாக் கவர்வது; அங்ஙனே பண்மிழற்றுதல் வேண்டா வென்று இரக்கிறாள்.
‘பண்புடை’ என்று பாடமல்லாமல் ‘பண்புரை’ என்று பாடமிருப்பதாகவும் நம்பிள்ளை காட்டுகின்றனர் ; அப்போது பண்பு உரை என்றாகி அழகிய முரலுகையையுடைய வண்டுகளென்றபடியாம்.
பண்புரைவேல்கொடு குத்தாலொக்கும் நும் இன்குரல்= பண்டே குயில் மயில் முதலானவற்றின் தொனியாலே புண்பட்டிருக்கிற வுயிரிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலே யிரா நின்றது உங்களுடைய இனிமையான குரல்; ஆதலால் பண்மிழற்றேன்மின் என்று கூட்டுக.
இங்ஙனே சொல்லக்கேட்ட வண்டுகளும் தும்பிளும் “நாங்கள் எம்பெருமானது திருநாமங்களைத்தானே பாடுகிறோம் ; இது உனக்கு உத்தேச்யந்தானே ; அஸஹயமாதென்? ” என்ன. அதற்குச் சொல்லுவன் பின்னடிகள்.
‘எம்பெருமானும் நானும் கூடியிருந்து கேட்க வேண்டிய பாட்டைப் பிரிந்திருந்து கேட்க முடியுமோ? அவன் தன்னழகைக் காட்டி என்னை மாய்த்துப் போனானே! இந்நிலையிலே எனக்கு உங்கள் பாட்டு எப்படி ஹையமாகும்’ என்கிறாள்.
தண் பேருநிர்தடந்தாமரை மலர்ந்தாலோக்குங் கண் பெருங் கண்ணன்=குளிர்ந்து அகாதமான நீரையுடைய பொய்கையிலே தாமரைப்பூ அலர்ந்தாற்போலேயாய் அவ்வளவேயன்றி எல்லைகாண வெண்ணாத பெருமையை யுடையனவான கண்களையுடைய கண்ணபிரான், கம்மலாவியுண்டு எழ நண்ணினான்=அவ்வடிவழகைக் காட்டி என்னை முடித்துப் பிரிந்து போனானே; இந்த மையத்திலோ நீங்கள் இன்குரல் மிழற்றுவது!
————–
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே-9-5-10-
பதவுரை
| யழனம் முதல் தாரை குழாய்கள்தான் |
– |
நீர்நிலங்களிலே திரிகிற நல்ல நாரைத் திரள்களே! |
| தாமும் எழ நண்ணி |
– |
நாம் இவ்விபூகியை விட்டெழுந்து |
| நம் வானநாடனோடு ஒன்றினோம் |
– |
நம்பரம பத நாதனோடே சேர்ந்து பொருந்தி விட்டோம் |
| இனி பயின்று என் |
– |
(இனி நீங்கள் என்னை முடிக்கத் திரளவிருந்து) ஆலோசிப்பதில் என்ன லாபம்? |
| இழை நல்ல ஆக்கையும் |
– |
ஆபரணாபிராமநான சரீரமும் |
| பையவே |
– |
நாளடைவிலே |
| புயக்கற்றது |
– |
வசையற்றதாயிற்று |
| எங்கும் |
– |
உலகமெல்லாம் |
| தழை நல்ல இன்பம் தலைப்பெய்து |
– |
விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று |
| தழைக்க |
– |
வாழ்ந்திடுக |
***– சில நாரைக் குழாங்கள் அருகே யிருந்து மந்த்ராலோசனை செய்யுமாபோலே தென்பட்டன;
தன்னை முடிப்பதற்கு அவை ஆலோசிப்பதாகக் கொண்டு அந்தோ! நான் முடிந்தேன் ; இனி நீங்கள் திரண்டு பயனென்கொல்? என்கிறாள்.
பழன நன்னாரைக் குழாங்கள்காள் ! இனி பயின்று என்?=பழனமாவது நீர்நிலம்; நீர் நிலங்களிலே உலாவுகின்று நல்ல நாரைக் கூட்டங்களே ! நீங்கள் ஒன்று கூடி ஆலோசிப்பதில் இனி என்ன பயன்? இதற்கு முன்பு ஏதேனும் பயனிருந்தாலும் இருக்கக்கூடும்;
இது நாறும் ஜீவித்திருக்க நசைமயிருந்தபடியாலே உங்களுடைய உத்யோகத்திற்கு ஏதேனும் பயன் ஸம்பாவிதமாகலாம்; இனி ஜீவித்திருக்குமாசையில்லை; நாமும் எழநண்ணி நம் வான நாடனொடு ஒன்றினோம்=நாமும் போக்கிலே யொருப்பட்டு அயர்வறு மமரர்களதிபதியோடே ஒன்று சேர்ந்தோமானோம்;
நாம் ஜீவிக்க வெண்ணி யிருந்தகாலம்போய் முடிகையிலே துணிந்தோம். ஆன பின்பு இனி நீங்கள் திரண்டு பிரயோஜனமில்லை.
இப்படி சொல்லக் கேட்ட நாரைகள் “நீர் இங்கேயே திருப் புழியாழ்வாரடியிலேயே எழுந்தருளி யிருப்பது காண்கிறோமே;
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடொன்றினோ மென்றது பொய்யுரையாகவன்றோ வுள்ளது என்று சொல்ல;
அதற்கு மறுமொழி கூறுவது மூன்றாமடி; [இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது] உடல் ஒன்றே இங்குள்ளது அதுவும் இதோ போய்க்கொண்டே யிருக்கிறது என்றபடி.
இழை நல்ல ஆக்கை =இழை யென்று ஆபரணத்திற்குப் பெயராதலால், ஆபரணங்களினாலே அழகியதான சரீரம் என்றபடி,.
அன்றியே, அவனுக்கு ஆபரணம்போலே ஸ்ப்ருஹணீயமான சரீரம் என்றுமாம். பையவே என்றது இன்று நாளையிலே யென்றபடி. புயக்கற்றது–பசையற்றது, தொலையப்போகிறது என்பது கருத்து.
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்குத் தழைக்கவே= இதற்கு மூன்று ஆசிரியர்கள் மூன்று வகையாகக் கருத்துக் கூறினராம்;
பெரியவர்களாயிருப்பார் பரமபத மெழுந்தருளும் பேரது லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸீகிநோ பவந்து என்றும் ‘நாடு வாழ்க’ வென்றும் மங்களாசாஸனம் செய்துகொண்டு போவார்களாதலால் ஆழ்வாரும் அப்படியே மங்களாசாஸனம் செய்து போவதாக ஆளவந்தார் நிர்வஹிப்பராம்.
அங்ஙனன்றிக்கே எம்பெருமானார் நிர்லஹிப்பதாது, ‘நான் பிறந்து பகவத் விஷயத்திலிடுபட்டுப் படாதபாடுகளும் பட்டேன்; இதோ நான் முடிகிறேன்; நான் பட்டபாடு பிறரொருவரும் பட வேண்டா ‘ என்பதாக.
இதிற் காட்டிலும் விலக்ஷணமாக பட்டர் நிர்வஹிப்பராம்–இது வரையில் ஆழ்வார் படும்பாடுகளைக் கண்டு, ஐயோ! இவர் இவ்வளவு ஆத்திகளை யடைந்து வருந்துகிறாரே! நமக்கும் கண்டு பொறுக்க முடியாத ஆர்த்தியாயிருக்கிறதே! இவரை எம்பபெருமான் விரைவாக திருவடி சேர்த்துக் கொள்ளலாகாதா? என்று பலர் நினைத்திருந்தார்களாம்; அப்படிப்பட்டவர்களை நோக்கி, இதோ நான் என் ஆர்த்தியெல்லாம் தீர்ந்து முடிந்து போகின்றேன்; என் ஆர்த்தி கண்டு நோவுபட வேண்டாவினி நீங்கள்; ஆனந்தமாக இருங்கள் என்கிறார்–என்பதால்.
—————-
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே-9-5-11-
பதவுரை
| இன்பம் தலைப் பெய்து |
– |
பேரின்பத்தை விளைவித்துக் கொண்டு |
| எங்கும் தழைத்த |
– |
எங்கும் மவியாபித் திருக்கின்ற |
| தன் புகழ் |
– |
எம்பெருமான்றனது கீர்த்திகளை |
| பல் ஊழிக்கு ஏத்த |
– |
ஊழிதோறூழியோவாமல் அதிக்கும்படியாக |
| தனக்கு அருள் செய்த |
– |
தமக்கு பரம கிருமை பண்ணின |
| மாயனை |
– |
ஆச்சரிய குணசீலனான எம்பெருமானைக் குறித்து |
| தென் குருகூர் சடகோபன் சொல் |
– |
ஆழ்வாரருளிச் செய்த |
| ஆயிரத்துள் |
– |
ஆயிரத்தினுள்ளே |
| இவை ஒன்பதோடு ஒன்றுக்கு |
– |
இப்பதிகத்திற்கு |
| மூ உலகும் உருகும் |
– |
மூவுலகத்தவரும் உருகுவர்கள் |
***– இப்பதிகத்திற்கு பாசுரம் நெஞ்சிலே பட்டால், ஆரேனுமாகிலும் உருகியே நிற்பர்கள் என்கிறார்.
கீழே ஆறாம்பத்தில் பொன்னுலகாளீரோ என்கிற பதிகத்திற்குப் பயனுரைத்த பாசுரத்தில் “ஊற்றின்கண் நுண்மணல்போலுருகா நிற்பர் நீராயோ” என்றருளிச் செய்தது மிங்குக் காண்க.
முதலடியை இரண்டுபடியாக அந்வயிக்கலாம் ; எங்குந் தழைத்த இன்பம் தலைப்பெய்து–லோகமெல்லாம் வெள்ளமிட்ட அளவுகடந்த ப்ரீதியை யுடையராய்க் கொண்டு என்றபடி.
அன்றியே, இன்பந் தலைப்பெய்து எங்குந் தழைத்த தன்புகழைப் பல்லூழிக்கு ஏத்த அருள் செய்த மாயனை என்றும் அந்வயிக்கலாம்.
இன்பத்தை யுண்டாக்கா நின்று கொண்டு எங்கும் வியாபித்திருக்கினற் தன்னுடைய திருப்புகழ்களைக் காலதத்துவமுள்ள தனையும் ஏத்தும்படியாகத் தமக்கு அருள் செய்த எம்பெருமானைக் குறித்து ஆழ்வாரருளிச் செய்த ஆயிர மென்க.
“அநுபவிதாக்களுக்கு நிரவதிக ஸீநாவஹமாய் லோகமெல்லாம் நிறைந்த தன்புகழை ஸர்வகாலமும் ஏத்தும் படி தனக்கு அருள்செய்த மாயனை” என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
மாயனைக் குறித்து அருளிச்செய்த ஆயிரத்துள் இப்பதிக்கத்தில் முதலிட்டு ஒன்பது பாட்டும் ஒரு தட்டாய், பத்தாம் பாட்டு மாத்திரம் பாமவிரக்ஷணமாயிருக்கையாலே ஒன்பதோ டொன்றுக்கும் என்னப்பட்டது.
அப்படிப்பட்ட இப்பதிக்கத்திற்கு மூவுலகும் உருக வேண்டாவோ வென்கிறார்.
பலனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரத்தில் ஒரு பலன் சொல்லதே இங்ஙனே சொல்லலாமோ வென்னில் இதுவும் பயனுரைத்த படியேயாம்;
ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாயிருப்பவர்களையும் உருகச் செய்வது ஒரு பலனன்றோ.
————————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 15, 2022 at 12:31 am and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply