***- கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார்.
மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-
பதவுரை
| மாயக் கூத்தா |
– |
ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே! |
| வாமனா |
– |
வாமன லேஷங்கொண்டவனே! |
| வினையேன் கண்ணா |
– |
மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே! |
| கண் கைகால் தூய செய்ய மலர்களா |
– |
திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும் |
| சோதி செம் வாய் முகிழதா |
– |
அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும் |
| சாமம் சாயல் திருமேனி தண் பாசு அடையா |
– |
சாமளமான சாயலையுடைய திருமேனி குளிர்ந்து பசுமை தங்கிய இலையாகவும் பெற்று |
| நீள் வாசம் தாமரை தடம் போல் வருவானே |
– |
பெரியதாய் நறுமணம் மிக்கதான தாமரைத் தடாகம் போல் வருமவனே! |
| ஒருநாள் காணவாராய் |
– |
ஒருநாளாகிலும் நான் காணும்படி வருவாயாக. |
தமக்கு இப்படிப்பட்ட கிலேச முண்டானதற்கு ஹேதுவையருளிச் செய்கிறார் முதலடியில்
மாயக்கூத்தா வாமனா! – பாளனாய்ச் சென்று செய்த செயல்களையும் நெஞ்சார நினைத்தேன், நினைத்த மாத்திரத்திலே அவ்வடிவுதன்னை நாம் கட்கூடாகக் கண்டே தீரவேணுமென்று ஆவல் கிளர்ந்தது, அதனால் இப்படி அலற்றுகிறேன்காண் என்பது குறிப்பு.
வினையேன் கண்ணா வென்பதற்கு நம்பிள்ளையருளிச் செய்யும் விசேஷார்த்தங்காணீர் – “ஸ்ரீவாமன்னாய் வந்து அவதரித்தது இந்த்ரனுக்கானாப்போலே க்ருஷ்ணனாய் வந்தவதரித்தது தமக்காக வென்றிருக்கிறார்“ என்று,
க்ருஷ்ணாவதார ஸமாப்திக்கும் ஆழ்வாருடைய திருவ்வதாரத்துக்குமிடையிலே சில நாட்களே சென்றனவாக ஸம்ப்ரதாய மாதலால் இங்ஙனே யருளிச் செய்வது மிகப்பொருந்தும்.
பல்லிலே பட்டுத் தெறித்தாற்போலே அவ்வவதாரத்திற்குச் சிறிது பிற்பட்டபடியாலே வெறுத்துச் சொல்லுகிறார் வினையேன் என்று.
இங்ஙனே அவனையழைத்து, ஒரு தாமரைத் தடாகம்போல் வரவேணுமென்கிறார் மேல் தடாகத்திற்கு மெம்பெருமானுக்கு முண்டான ஒற்றுமையைத் தாமே நிரூபணம் செய்தருளுகிறார் (கண் கை கால் தூய செய்ய மலர்களா இத்யாதியால்)
கிட்டினாரோடு முதலுறவு பண்ணும் திருக்கண்களும், அத்திருக்கண்ணோக்குக்குத் தோற்றவர்களை அணைக்கும் திருக்கைகளும், திருக்கைத்தல ஸபர்சத்துக்குத் தோற்று விழுந்திருவடிகளுமாகிய இவ்வயவங்கள் இந்தடாகத்திற்குரிய தாமரைகளாம்.
முகுந்தமாலையில் * கரசரணஸரோஜே ஹரிஸரஸி * என்றதும் இங்கே அநுஸந்தேயம். தடாகத்தில் தாமரைப்பூக்கள் மாத்திரமேயோ இருப்பது? முகுளமுமிருக்குமே, அதுவும் இங்கு உண்டென்கிறார் சோதிச் செவ்வாய்முகிழதா என்பதானால்.
புகரையுடைத்தாய்ச் சிவந்திருக்கிற திருப்பவளமே முகுளமாகக் கொள்ளத்தக்கது. காம்பீர் யாதிசயத்தாலே பரிபூர்ணஸ்மிதம் பண்ணாமல் விகாஸோந்முகமான ஸ்மிதமே யிருப்பது கொண்டு திருவதரத்தை முகுளாவஸ்தையோடு ஒப்பிட்டுச் சொல்லுகிறது.
இனி, தாமரையிலையின் ஸ்தானத்திலே இங்கு எதுவென்னில், சாயல்சரமத்திருமேனி தண்பாசடையா என்கிறார்.
மேலே ஒன்பதாம்பத்திலே * அக்கமலத் திலைபோலுந் திருமேனியடிகளுக்கே * என்ற பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.
பச்சைமாமலை போன்ற மேனியானது தாமரையிலைக் கொப்பாகுமென்க. பசுமை அடை, பாசடை, (அடை இலை) ப்ரசுரமாயிருப்பதொரு தடாசும் கைகால் கைகால் முளைத்து நடந்து வருமாபோலே வரவேணும் பிரானே! என்கிறார்.
“வாசத்தடம்போல் வரவேணும்” என்னாதே “வரசத்தடம் போல் வருவானே! வாராய்“ என்று சொல்லியிருப்பது – இங்ஙனே முன்பு தம்பக்கல் வந்தபடியைத் தெரிவிக்கும்.
இது அபூர்வ ப்ராத்தனையன்று, ஏற்கனவே இப்படிப்பட்ட அநுபவம் எனக்கு நேர்ந்திருக்கிறது, அதனையே இப்போதும் பிரார்த்திக்கிறனென்றபடி.
—————–
***- என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடனே வந்து தோற்றியருள வேணு மென்கிறார்.
காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-
பதவுரை
| கரு நாயிறு உதிக்கும் |
– |
கறுதத்தொரு ஸூர்யன் உதித்துக்கிளம்பியிருப்பதாய் |
| மா கரு மாணிக்கம் |
– |
மஹத்தான நீல ரத்னமாய் |
| நாள் நல் மலை போல் |
– |
அப்போதுண்டான அழகிய மலை போலே |
| சுடர் சோதி |
– |
பரம்புகிற சுடரையுடைத்தான தேஜஸ்ஸையுடைய |
| முடி சேர் |
– |
மயிர் முடியோடே சேர்ந்த |
| சென்னி அம்மானே |
– |
திருமுடியையுடைய பெருமானே! |
| காணவாராய் என்று என்று |
– |
நான் காணும்படிவாராயென்று பலகலுஞ் சொல்லி |
| கண்ணும் வாயும் துவர்ந்து |
– |
பார்க்கிற கண்ணும் கூப்பிடுகிற வாயும் வசையறவுலர்ந்து |
| நாணி |
– |
வெட்கமுமடைந்து |
| நல் நாடு |
– |
இந்த நல்ல நாட்டிலே |
| அடியேன் அலமந்தால் |
– |
அடியேன் இப்படி தளர்ந்தால் |
| ஒரு நாள் இரங்கி நீ காண வாராய் அந்தோ |
– |
ஒரு நாளாகிலும் நீ க்ருபை பண்ணி நான் காண வருகிறிலையே, ஐயோ. |
கீழ்பாட்டில் “காணவாராய்“ என்று ஒரு காலே சொல்லியிருந்தாலும் பலகால் வாயாரக் கூப்பிட்டிருப்பரே,
பாட்டிலே சொல்லுகிறவளவேயோ உள்ளது? ஆழ்வாருடைய கூக்குரல்களெல்லாம் பாட்டிலே யடங்குமோ?
இப்பாட்டில் “காணவாராய் காணவாராயென்று சொல்லியும் நீ வரக் காணாமையாலே ஆறியிருக்கமாட்டாமல் பின்னையும் “காணவாராய், காணவாராய்“ என்றேன்,
(கண்ணும்வாயும் துவர்ந்து) எந்த வழியாக வருகிறாயோவென்று திசைகள் தோறும் பார்த்துக் கண்களும் பசையறவுலர்ந்தன,
கண்ண நீர்க்கைகளாலிறைக்கும் * என்னும்படியான நிலைமையும் போயிற்று, கூவிக்கூவி வாயும் பசையற வலர்ந்தது.
(அடியேன் நாணி) உடனே எனக்கு லஜ்ஜையுமுண்டாயிற்று. எதற்காக வென்னில், இரண்டு விதத்தாலே லஜ்ஜையாகக்கூடும்,
ஒரு க்ஷுத்ரபலனுக்காகவல்லாமல் காண்கைக்காகவே முறையறிந்து நாம் கூப்பிடச் செய்தேயும் நமக்குவந்து தோன்றவில்லையேயென்று உண்டான லஜ்ஜையொன்று,
“ஆழ்வார் இப்படி கூப்பிடாநிற்கச் செய்தேயும் வந்து தோன்றாமலிக்கிறானே, இப்படியும் ஒரு நிர்க்ருணனுண்டோ, என்று நாட்டார் உன்மேல் வழிசொல்லக்கூடுமே, நம்மாலன்றோ இந்த அவத்யம் அவனுக்குண்டாகிறது“ என்றுண்டான லஜ்ஜை மற்றொன்று.
(நன்னாட்டு அலமந்தால்) * இருள் தருமாஞாலமென்று வெறுத்து இகழப்படுகின்ற இந்த நாட்டை நல்ல நாடென்றதற்கு இரண்டு வகையாகக் கருத்து கூறுவர், எதிர்மறையிலக்கணையினால் தீய நாடு என்றதாகவே கொள்ளலாம்,
அன்றியே, ஆழ்வார் தம்மைப்போலே இந்நாட்டினர் இப்படி அலமந்து கூப்பிடக் காணாமையாலே இந்நாட்டு எம்பெருமானைப்பெற்று அநுபவிக்கின்றதென்றே கொண்டு நல்லநாடென்றதாகவுங் கொள்ளலாம்.
பின்னடிகளால் விலக்ஷணமான உத்ப்ரேக்ஷை பண்ணுகிறார், கருநிறத்தனான ஸூர்யன் அப்ரஸித்தன், கரியமாணிக்கமும் அப்ரஸித்தம், இற்பொருளுவமை முறையில் அப்படிப்பட்ட இரண்டு வஸ்துக்களைக் கற்பனை செய்து கொள்ளுகிறார்,
கரிய ஸூர்யன் உதிக்கப்பெற்ற கரிய மாணிக்கமலைபோலே யென்கிறார்.
மிக்க புகரையுடைய மயிர்முடிக்குக் கரியஸூர்யன் உவமை, கரிய திருமேனிக்குக் கரியமாணிக்கம் உவமை.
—————
***- ஆபர்ணசோபையும் அவயவசோபையுமுடையவொரு காளமேகம் நடந்து வருகிறதோ
வென்னலாம்படி வந்து தோன்றவேணுமென்கிற ஆவலைக் காட்டுகிறாரிதில்.
முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-
பதவுரை
| முடிசேர் சென்னி அம்மா |
– |
திருவபிஷேகத்தோடு செர்ந்த திருமுடியை யுடைய ஸ்வாமியே! |
| நின் மொய் பூ தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணி பெருமானே |
– |
உனக்கு அஸாதாரணமாய்ச் செறிந்து அழகிய ஒளியை யுடைய குளிர்ந்த திருத்துழாயாகிற ஸர்வாதிகனே! |
| என்று என்று |
– |
என்றிப்படி பலகாலுஞ் சொல்லி |
| ஏங்கி அழுதக்கால் |
– |
பொருமிப் பொருமியழுதால் |
| படி சேர் மகரம் குழைகளும் |
– |
வடிவுக்குச் சேர்ந்த மகரகுண்டலங்களும் |
| பவளம் வாயும் |
– |
பவளம் போன்ற திருவதரமும் |
| நால் தோளும் |
– |
நான்கு திருத்தோள்களும் |
| துடி சேர் இடையும் அமைந்தது |
– |
துடிபோலே யிருக்கிற இடையுமாயமைந்த |
| தூ நீர் ஓர் முகில் போல் தோன்றாயே |
– |
தூய நீரையுடைய ஒரு காளமேகம் போலே வந்து தோன்றமாட்டேனென்கிறாயே. |
உலகுக்கெல்லாம் அதபதி இவனே“ என்று கேரட்சொல்லித்தருகின்ற திருவபிஷேகமணிந்த சென்னியையுடைய ஸர்வேச்வரனே! என்றும்,
* தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மானே! என்றும்
சொல்லிச்சொல்லி அப்படிப்பட்ட அழகைக் கண்ணாரக் காணவேணுமென்று விரும்பி நான் பொருமிப் பொருமியழுகிறேனே,
என்னழுகைக்குரல் உனது செவியில் விழவில்லையோ? அழுகைக் குரலில் தளர்த்தியையறிந்தால் விரைந்தோடிவந்து நிற்கவேண்டாவோ?
எங்ஙனே வந்து தோன்றவேணுமென்கிறாயோ, ஓர் தூநீர் முகில்போல் தோன்றவேணும், அது எப்படிப்பட்ட முகிலாயிருக்க வேணுமென்னில், மகரகுண்டலங்களும் பவளவாயும் நான்கு தோள்களும் நுண்ணியஇடையும் அமைந்ததாயிருக்கவேண்டும்.
இப்படியல்லாமல் ஆகாசத்திலே திரிகிற நிரவயவமான மேகம் போல்வரில் வேண்டேன். என்றாராயிற்று.
படிசேர் மகரக்குழைகளும் – படிசேர் என்றது இயற்கையாகச் சேர்ந்த என்றபடி. திருமேனியிலே பொருந்தின என்றுமாம்.
தொன்றாய் – உடன்பாட்டுப் பொருளும் எதிர்மறைப் பொருளும் கொள்ளலாம்.
————–
***- இப்பாட்டும் மேற்பாட்டும் சந்தோஷமாகச் சொல்வனபோல் தோன்றும்,
கீழ் மேற்பாட்டுக்களில் நிர்வேதம் காணாநிற்க, இடையில் சந்தோஷம் வந்து புக ப்ரஸக்தியில்லை,
இவ்விரண்டு பாசுரங்களுங்கூட நிர்வேதமாகவே சொல்லப்படுவன. உன்னுடைய வடிவழகுவந்து
என்னெஞ்சிலே நிறைந்து நலிகிறவிதம் என்னால் சொல்லப்போகிறதில்லையென்று நொந்து சொல்லுகிறபடியே யிது.
தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-
பதவுரை
| மா நீர் வெள்ளி மலை தன் மேல் |
– |
ஆழ்ந்த நீரினுள்ளே கிடப்பதொரு வெள்ளி மலையின் மேலே |
| வண் கார் நீலம் முகில் போல |
– |
அழகிய கார்காலத்துக் காளமேகம் போலே |
| தூ நீர் கடலுள் |
– |
வெளுத்த நீரையுடைய பாற்கடலில் |
| துயில்வானே |
– |
திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! |
| எந்தாய் |
– |
என் ஸ்வாமியே! |
| தூ நீர் முகில் போல் தோன்றும் |
– |
தெளிந்த நீர் நிறைந்த மேகம் போலே விளங்குகின்ற |
| நின் சுடர் கொள் வடிவும் |
– |
உன்னுடைய ஒளி பொருந்திய வடிவும் |
| கனி வாயும் |
– |
கனிந்த திருவதரமும் |
| தேன் நீர் கமலம் கண்களும் |
– |
மது ஜலத்தையுடைய கமலம் போன்ற திருக்கண்களும் |
| வந்து என் சிந்தை நிறைந்த ஆ |
– |
இங்கே வந்து என்நெஞ்சு நிறைந்திருக்கிறபடியை |
| சொல்ல மாட்டேன் |
– |
இன்னதென்று சொல்லகில்லேன். |
எம்பெருமானுடைய வடிவு எப்படிப்பட்டதென்றால், தூ நீர் முகில்போல் தோன்றும் – கண்ட மாத்திரத்திலே விடாய்கெடும்படியான காளமேகம் போன்றது, அப்படிப்பட்ட திருவடிவு என் சிந்தையுள்ளே நிறைந்து நலியாநின்றதே!,
கனிவாயும் தேனீர்க்கமலக் கண்களும் – வாயும் கண்ணுமான அவயவங்கள் வடிவிலே அந்தர்க்கமாயிருக்கவும் தனிப்படச் சொல்லுகிறது – இவை தனித்தனி யுருவமாய்க் கொண்டு நலிகிறபடியினாலே.
கையில் கிடைத்தபோதே நுகரலாம்படியிருக்கிற கனிபோன்ற வாயும், தாமரைபோன்ற திருக்கண்களும் என் சிந்தையிலே நிறைந்து நலிகிறபடியைச் சொல்ல கில்லேன்.
தேன் நீர் – தேனினுடைய தன்மையை யுடைத்தான் கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
பின்னடிகளில் ஒரு விலக்ஷமான உத்ப்ரேக்ஷயுள்ளது, திருப்பாற்கலிலே திருவனந்தாழ்வான்மேலே எம்பெருமான் திருக்கண் வளர்ந்தருள்வதானது நீர்க்குள்ளே யழுந்தினதொரு வெள்ளிமலையின் மீது காளமேகம் படிந்தாற்போன்றுள்ளது என்கிறார்.
மேலே ஒன்பதாம்பத்தில் * காய்ச்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல் * என்கிறார்.
பொன்னிறத்தனனான புள்ளரையன்மீது எம்பெருமானிருப்பது பொன்மலையின்மீது காளமேக மிருக்குமாபோலேயுள்ளதென்றார். அங்கு,
இங்கு, திருப்பாற்கடலும் வெண்ணிறத்தது, அதில் திருவனந்தாழ்வானும் வெண்ணிறத்தனன், அவன்மீது கரிய கோலப்பிரான் சயனித்திருப்பது கைலாஸகிரியில் காளமேகம் கிடந்தாற்போன்றுள்ளது என்றாயிற்று.
மூலத்தில் திருவனந்தாழ்வானுக்கு வாசகமான சொல் இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளத்தை நோக்கி அதுவும் கொள்ளத்தக்கதே.
“திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மேலே யென்கை.“ என்பது இருபத்தினாலாயிரம்.
——————-
***- இப்பாட்டும் கீழ்ப்பாட்டுப் போலே வருந்திச் சொல்லுகிறதாகவே யுள்ளது.
உன்னுடைய வடிவழகு என்னுடைய் ஹ்ருதயத்திலே இடைவீடின்றி நினைவுக்கு வந்து நலியாநின்றது,
இதை மறக்க நேர்ந்துவிட்டால் நான் பிழைத்திடுவேன், இதுவோ மறக்கப்போகிறதில்லை, மறக்க ஒருவிரகு சொல்லவேணும் பிரானே! என்றார்,
என்னுடைய ஸன்னிதான மில்லாமையே மறக்கைக்கு கருவானயன்றோ வென்றானெம்பெருமான்,
அதற்கு ஆழ்வார் “எம்பிரானே ! முன்னமே நான் சொன்னதை மறந்தயோ?
* மறக்குமென்று செந்தாமரைக் கண்ணோடு, மறப்பற வென்னுள்ளே மன்னினான் தன்னை மறப்பனோவினியாலே துயரறு சுடரடி என் மனஸ்ஸிலே புகுந்து வைத்திருக்கிறேனல்லவா? நீ மயர்வறுக்கையாலே துயரறு சுடாடி என் மனஸ்ஸிலே புகுந்து நலியாநின்றது, மறக்கைக்கு வழியேது? உண்டாகில் நீயே சொல்லவேணும் என்கிறார்.
சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-
பதவுரை
| ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுது உண்ட |
– |
கடல் சூழ்ந்த பெரிய ஜகத்தையெல்லாம் பிரளயங்கொள்ளாமல் திருவயிற்றிலடக்கினவனாயும் |
| மா நீர் கொண்டல் வண்ணனே |
– |
நிரம்பின நீரையுடைய காளமேகம் போன்ற வடிவையுடையனாயுமிருக்கின்ற பெருமானே! |
| அடியேன் சொல்ல மாட்டேன் |
– |
(என்னுள்ளத்திலுள்ள வெளிச்சத்தைப் பற்றி) அடியேன் ஒன்றும் சொல்ல தெரியாதவனாயிருக்கின்றேன். (ஆனாலும் சிறிது சொல்லுகின்றேன்) |
| உன் துளங்கு சோதி தரு பாதம் |
– |
உன்னுடைய விளங்கும் சோதியுடைய திருவடிகளானவை |
| எல்லை இல் சீர் இளஞாயிறு இரண்டு போல் |
– |
அளவிறந்த அழகையுடைய இரண்டு பாலாத்தியர்களைப் போல |
| என் உள்ளே வா |
– |
என்னுளத்துள்ளே யிராநின்றன. |
| அல்லன என்னும், இருள் சேர்தற்கு, உபாயம் என்னே |
– |
துக்கமென்று சொல்லப்பட்டுகற மறப்பென்கிற இருள் வந்து சேருவதற்கு எது வியோ அதை சொல்லுவேணும். |
உன் துளங்குசோதித் திருத்பதாம் இளநாயினரண்டுபோல் என்னுள்ள சொல்லமாட்டேனடியேன் –ஒளிவிளங்குமுன் தீருவடிகள் அளவிறந்த வழகையுடைய பாலாதித்யர்களிருவரப்போலே என் ஹ்ருதயத்திலிநின்று நலிகிற படியை என்னவென்று சொல்லவேணும்
நலிவதாக் மூலத்திலில்லையே யென்னவேண்டா, சொல்லமாட்டேனடியேன்“ என்பதில் அஃது உறைந்துகிடக்கும்.
இளநாயிறு என்றதும் ஸாபிப்ராயம். ஸூரய்ன் உதிக்கும்போதே கண்ணைக் குத்துகிறாப்போலே உதிப்பனன்றோ.
பின்னடிகளில் “அல்லலென்னுமிருள் சேர்தற்கு உபாயமென்னே“ என்பதற்குப் பலர் பொருளில் மயங்குவர்கள்,
இரண்டு திருவடிகள் இரண்டு ஸூரியர்கள்போலே உள்ளே பிரகாசித்துக்கொண்டிருக்க இருள் எப்படிவந்து சேரும்? வந்துசேரமாட்டாது என்பதாகப் பொருள்கொள்வது கூடாது. (அது பிரகரணத்திற்குச் சேராது)
மறப்பாகிற இருள் வந்து சேருகைக்கு உபாயம் சொல்ல வேணுமென்று மறப்பை அபேக்ஷிக்கிறாராயிற்று.
இருள் என்பது அஜ்ஞானத்திலே ஒருவகையாகையாலே, இருள் சேர்தற்கு உபாயமென்ன? என்றது – மறந்து பிழைப்பதற்கு வழியென்ன? என்று கேட்கிறபடி.
இங்கே இருபத்தினாலாயிரப்படி ஸ்ரீஸூக்திகாண்மின், – “அநர்த்த ரூபமான விஸ்ம்ருதி தேட்டமாம் படியிறே வடிவழகு ஹ்ருதயத்திலே நின்று நலிகிறபடி. ஏதேனுமாக இவர்க்கு துக்க நிவ்ருத்தியே இப்போது வேண்டுவது, திருவடிகள் நெஞ்சிலே ப்ரகாசியா நிற்க, அஜ்ஞானம் வந்து சேருகைக்கு ப்ரஸங்க மின்றியே யிருக்க அத்தை யபேக்ஷிக்கிறாரிறே.“
இங்கே ஈட்டில் பட்டருடைய நிர்வாஹமொன்றும் அம்மாளுடைய நிர்வாஹமொன்றும் அரளிச்செய்யப்படுகிறது.
“உன்னைக் காட்டாதே அருமைப்படுத்தப் பார்த்தாயாகில், நாட்டார் மிகவும் நிஹீனமாகத் கொள்ளுகிற அஜ்ஞானம் வருவதோருபாயம் சொல்லாய் என்பதாக பட்டருடைய நிர்வாஹம்,
மறந்து பிழைக்கலாமென்கிற எண்ணத்தினால் இது கேட்பதாகக் கொள்வது.
இனி அம்மாளுடைய நிர்வாஹமாவது – திருவடிகள் என் ஹ்ருதயத்திலே ப்ரகாசியாநிற்க துக்கரூபமான அஜ்ஞானம் வருகைக்கு உபாயமுண்டோ? என்று. அது உண்டானால் ஸம்ஸாரிகளைப் போலே உண்டியே உடையே உகந்தோடித் திரியலாமே யென்று.
—————-
***- பிரானே! உன்னுடைய வடிவழகை நினைத்து காணவேணும் காணவேணுமென்று கூப்பிடுகிற நான் காணும்படி
ஏதேனுமோரிடத்தில் நின்றும் சடக்கெனவோடிவந்து தோன்றக்கூடாதாவென்று மிகுந்த ஆர்த்திதோற்ற வருளிச் செய்கிறார்.
கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-
பதவுரை
| கொண்டல் வண்ணாகுடக் கூத்தா |
– |
காளமேக வண்ணனே! குடக்கூத்தாடினவனெ! |
| வினையேன் கண்ணா |
– |
அக்குடக் கூத்தைக் கண்டனபவிக்கப்பெறாத பாவியேனுக்குக் கண்ணானவனே! |
| கண்ணா |
– |
ஸ்ரீ க்ருஷ்ணனே! |
| என் அண்டவாணா |
– |
என்னையடிமைப் படுத்திக் கொள்ளுகைக்காகப் பரமபத நிலயனானவனே! |
| என்று |
– |
என்றிங்ஙனே உன்படிகளைச் சொல்லி |
| என்னை ஆள |
– |
என்னை அடிமை கொள்ளுமாறு |
| கூப்பிட்டு அழைத்தக் கால் |
– |
கூவியழைத்தால் |
| விண் தன் மேல் தான் |
– |
பரமபதத்தில் நின்றோ |
| மண் மேல் தான் |
– |
பூமியில் நின்றோ |
| விரி நீர் கடல் தான் |
– |
பரம்பின நீரையுடைய கடலில் நின்றோ |
| மற்று தான் |
– |
அந்தர்யாமியாயிருக்குமிடத்தில் நின்றோ, |
| தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே |
– |
அடியேன் உன் திருவடிகளைக் காணும்படியாக ஒரு நாள் கூட வந்து தோன்ற மாட்டேனென்கிறாயே. |
மாநீர்க்கொண்டல் வருமாகாசத்தில் நின்றும் வந்து தோற்றலாம், பரமபதத்திலிருக்கிற விருப்போடேவந்து தோற்றலாம்,
மண்மீது விபவாவதாரங்கள் பண்ணின திருவயோத்தி திருவடமதுரை முதலானவிடங்களிலிருந்து வந்து தோற்றலாம்,
* சீரார்திருவேங்கடமே திருக்கோவலூரே மதிட்கச்சியூரகமே பேரகமேயென்னும்படியான திருப்பதிகளில் நின்றும் வந்து தோற்றலாம்,
“தூணிலுமுளன் துரும்பிலுமுளன்“ என்னும்படி ஸர்வபதார்த்தங்களிலுள்ளும் கரந்து பரந்துளனான நீ எங்கிருந்தும் புறப்பட்டுத் தோற்றலாம்,
திருவுள்ள முண்டாகில் வழிதானா இல்லை? என் ஸத்தைகிடக்கைக்கு எங்கிருந்தாவது ஒரு நாளாகிலும் வந்து தோற்ற வேணும் என்கிறார்.
————–
***- கீழ்ப்பாட்டில் * தொண்டனேன் உன் கழல் காண வொரு நாள் வந்து தோன்றாய் * என்றார்,
இங்கேற வந்து தோற்றுவது முடியாதென்னில், என்னை ஆங்கே யழைத்து அடிமை கொள்ளவாவது வேண்டுமென்கிறாரிப்பாட்டில்
வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-
பதவுரை
| செம் தண் கமலம் |
– |
சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற |
| கண் கை கால் சிவந்த வாய் |
– |
கண்களையும் கைகளையும் கால்களையும் சிவந்த வாயையுமுயை |
| ஓர் கரு நாயிறு |
– |
ஒரு கரிய ஸூர்யன் |
| அந்தம் இல்லா கதர் பரப்பி |
– |
முடிவில்லாத கிரணங்களைப் பரப்பி |
| அலர்ந்தது ஒக்கம் அம்மானே |
– |
பரம்பினாற்போன்ற வடிவழகையுடைய ஸ்வாமியே! |
| வந்து தோன்றாய் அன்றேல் |
– |
(கீழே விரும்பினபடி) வந்து தோன்றா விட்டாலும் |
| வையம் தாய உன் மலர் அடி கீழ் |
– |
பூமியையளந்து கொண்ட உனது பாதாரவிந்தங்களின் கீழே |
| யான் முந்திவந்து நிற்ப |
– |
நான் முற்பட்டு வந்து நிற்கும்படியாக |
| முகப்பே கூவி பணி கொள்ளாய் |
– |
திரு முன்பே யழைத்து அடிமை கொண்டருள வேணும். |
“வந்து தோன்றயன்றேல்“ என்று ஒரே வாக்கியமாகக் கொள்வதும், “வந்து தோன்றாய், அன்றேல் என்று பிரித்துக் கொள்வதும் பொருந்தும்.
கீழ்ப்பாட்டில் பிரார்த்தித்ததையே மறுபடியும் பிரார்த்திக்கிறார் வந்து தோன்றாய் என்று நானிருந்த விடத்தே உன்னைக்கொண்டு வந்து காட்டியருளாய் என்றபடி.
அன்றேல் – அது முடியாதாகில், என் ஆர்த்தியின் கனத்தைப் பார்த்துத் திருவருள் சுரந்து வந்து முகங்காட்டப் பார்த்திலையாகில் என்றபடி.
* ஈங்சோர் பெண்பால் பொருளோ வெனுமிகழ்வோ இவற்றின் புறத்தாளென்றெண்ணோ * (திருவிருத்தம்.) என்கிறபடியே
உன்னுடைய பெருமையையும் என்னுடைய சிறுமையையும் பார்த்து இங்கு வந்து முகங்காட்டத் திருவுள்ளமில்லையிகிலு மென்னவுமாம்,
உன் வையந் தாய மலரடிக்கீழ் முந்திவந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் – வஸிஷ்ட சண்டாள விபாகம் பாரத திருவடிகளின் கீழே அடியேனை வரவழைத்துக்கொண்டு திருவுள்ளத்திற்கு உகப்பான கைங்கரியத்தை நியமித்துப் பணி கொள்ளாய் என்கிறார்.
பரதாழ்வானைப் போலே பிரிந்து தரித்திருக்கும் பிரக்ருதி யல்லேன்,
* மூஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யாவிவோத்தருதௌ * என்ற இளையபெருமாள்படியான வென்னைக் கூவி ஏவி அடிமை கொண்டருளவேணு மென்கிறார்.
இப்படி நிர்ப்பந்திக்கைக்குக் காரணமென்னென்ன, பிரிந்து பிழைக்கமுடியாத வடிவழகு படுத்தும்பாடிது காண் என்கிறார் – பின்னடிகளால்
சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற திவ்யாவயங்களையுடையையாய், நீல நிறத்தனான வொரு ஸூர்யன் அளவிற்ந்த கிரணங்களைப் பரப்பிக்கொண்டு விகஸிதனானாய் போலே யிருக்கிறாயாகையாலே, நீயாவது இங்கு வரவேணும் என்னையாவது அங்கு அழைத்துக் கொள்ளவேணுமென்று நிர்ப்பந்திக்கிறேன் என்றாராயிற்று.
—————
***- பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ
வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார்.
ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-
பதவுரை
| தொக்க மேகம் பல் குழாங்கள் காணும் தோறும் |
– |
திரண்ட மேகங்களின் பல திரள்களைக் காணகிற போதெல்லாம் |
| அம்மான் உருவம் ஒக்கும் என்று |
– |
எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று |
| உள்ளம் குழைந்து |
– |
நெஞ்சுருகி |
| நாள் நாளும் நான் தொலைவன் |
– |
நாடோறும் நான் கிலேசப்படுவேன் |
| அன்று |
– |
பாரதப்போர் நடந்த வக்காலத்தில் |
| தக்க ஐவர் தமக்கு ஆய் |
– |
உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக |
| ஈர் ஐம்பதின்மர் |
– |
துரியோதனாதிகள் நூற்று வரும் |
| தாள் சாய |
– |
காலற்றுப் போம்படியாக |
| புக்க |
– |
சேனையிடையே புகுந்த |
| நல் தேர் தனி பாகா |
– |
சிறந்த அத்விதீயனான |
|
ஸாரதியானவனே! |
||
| வாராய் |
– |
(அவ்வழகோடே) வருகின்றிலை, |
| பொருத்தம் இதுவோ |
– |
அடியார் பக்கலில் பொருத்த மிருந்தபடி இதுவோ? |
நாமெல்லாரும் நீர் கொண்டெழுந்த நீலமேகத்தைக் கண்டால் “நன்றாக மழைபெய்யப் போகிறது, நம்முடைய நிலம் இருபோகமும் முப்போகமும் விளைப்போகிறது“ என்று இதுவே நினைவாக மகிழ்ந்திடுவோம்,
* உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணனென்றிருக்கிற ஆழ்வார்க்கு இந்த நினைவு உண்டாக ப்ரஸக்தியில்லையே,
* பூவையுங் காயாவும் நிலமும் பூக்கின்ற காவிமலரென்றுங் காண்டோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை யெல்லாப் பிரானுவேயென்று * (பெரிய திருவந்தாதி) என்கிற பாசுரப்படியும்,
* மண்ணையிருந்து துழாவியென்கிற பதிகத்தின்படியும்
எதையும் பகவிதாத்மகமாகவே பார்க்கிறவராகையால் மேகங்கைளைப் பார்க்கும்போது “ஒக்கும்மமானுருவம்“ என்று நினைக்கிறாராயிற்று.
அன்னலுந் துன்னலுமான மேகமெங்கே, எம்பெருமானுருவம்“ என்று நினைக்கிறாராயிற்று.
அன்னலுந் துன்னலுமான மேகமெங்கே, எம்பெருமானுடைய திருவடிவமெங்கே! இது ஆழ்வார்க்குத் தெரியாததன்றே, ப்ரமிக்கைக்குச் சிறிது காரணம் போதுமென்றோ.
(உள்ளங்குழைந்து நாணாளும் தொலைவன் நான்) தோற்புரையேயன்றியே அகவாயும் சிதிலமாய் இடைவிடாமல் கிலேகியாநிற்பேன். நான் உன்னை மறந்திருக்க வொண்ணாதபடி மேகம் உன்னை நீச்சலும் நினைப்பூட்டி மாய்க்கின்றதே! என்செய்வேன்! என்று வருந்துகிறபடி.
இதற்கு என்னை என் செய்யச் சொல்லுகிறீர் என்று எம்பெருமான்னினைவாக, ஆச்ரித பாக்ஷபாதியென்று பேர்பெற்றநீ வந்தாலாகாதோ வென்கிறார்.
நான் ஆச்ரிதபக்ஷபாதயென்பதை நீர் அறிந்தவிதம் எங்ஙனேயென்று அவன் கேட்க, கதை சொல்லுகிறார் தக்க வைவர்தமக்கா யென்று தொடங்கி.
போலிகண்டு இரங்கவறியாத பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து நீ செய்த காரியம் ஒரு பாரதத்துக்குப் போதுமே,
* ஸேநயோருபயோர் மத்யே ரதம் ஸ்தாபய * என்று, இரண்டு சேனைகளுக்கும் நடுவே தேரைக்கொண்டு நிறுத்து என்றால் அப்படியே செய்த்து முதலிய காரியங்கள் ஒன்றிரண்டோ?
நூற்றுவரைத் தொலைக்க ஐவர்க்கு அத்தனை செய்தநீ என்னொருவனுக்கு வெறுமனே (ஒரு காரியமுஞ் செய்யாதே) வந்து தோன்றினாலாகாதோ வென்கிறார்.
(இதுவோ பொருத்தமே) அடியார்களோடு முன்புநீ பொருந்திப் போந்தபடி இதுவோ? அடியார்களுக்குத் தூது போயும் சராதியாய் நின்றும், ஆயுத மெடேனென்று ஆயுதமெடுத்தும், பகலை இரவாக்கியும் இப்படி யெல்லாஞ்செய்து ஆச்ரித பக்ஷபாதத்தைக் காட்டினாயென்பது பொய்யோ? ரிஷிகளுக்குக் கைக்கூலி கொடுத்து எழுதுவித்துக் கொண்டதோ? என்று கேட்கிறாராயிற்று.
—————
***- ஒருவர் தப்பாமல் எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்தருளுகைக்காக வடமதுரையிலே வந்து திருவ்வதாரம் பண்ணியருளின ஆச்சர்ய குணசாலியான கண்ணபிரான், தன்னைக் காணவாசைப்பட்டு நோவுபடுகிற வென்திறத்திலே என்ன செய்வதாக நினைத்திருக்கிறானோ வென்று தம்முடைய ஸ்ருதயத்துக்குள்ளே தாம் சிந்திக்கிறபடியை வெளியிடுவது இப்பாட்டு.
கீழ்ப்பாட்டில் பஞ்சபாண்டவர்களுக்கு உதவினபடியைச் சொல்லிக் கூப்பிட்டார், அவர்களுக்கு உதவினபடி கிடக்கட்டும், திருவாழியாழ்வான் பெரிய திருவடி முதலானாரோடு கலந்து பழகுகிற பொருத்தமும் இவ்வளவேயோ என்கிறார் என்னவுமாம்.
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-
பதவுரை
| மின் ஆழி படை யாய் |
– |
ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே! |
| ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே |
– |
வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே! |
| இதுவோ பொருத்தம் என்று என்று |
– |
இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி |
| ஏங்கி அழுதக்கால் |
– |
பொருமியழுதால், |
| இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் |
– |
இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக |
| மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன் |
– |
தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான் |
| எதுவே ஆக கருதும் கொல் |
– |
என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ? |
இதுவோ பொருத்தம் – இப்படி கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டு மீண்டும் “இதுவோ பொருத்தம்“ என்கிறார். மின்னாழிப்படையாய்! மேகத்திலே மின்னல் மின்னினாப்போலே மின்னாநின்ற திருவாழிப்படையை யுடையவனே யென்றது – அத்திருவாழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்கும்படி.
அத் திருவாய் மொழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்குமளவோயோ? என்கிறாராகவுமாம்.
ஏறுமிருஞ் சிறைப்புள்ளதுவே கொடியாவுமர்த்தானே! – நீ வந்து சேர நினைத்தால் அருமையுண்டோ? ஒரு நொடிப்பொழுதில் கொண்டு சேர்க்கவல்ல பரிகரமில்லையோ என்றவாறு.
* தாஸஸ் ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ் தே விதாநம் வ்யஜநம் * என்று ஸ்தோத்ராத்னத்தி லருளிச் செய்தபடியே பெரிய திருவடிபக்கலில் வல வகையடிமைகளையுங் கொள்வதாகச் சொல்லப்படுவதும் இப்படிதானோ?
என்னோடு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தந்தானோ அவனோடும்? என்று கேட்கிறபடியாகவுமாம்.
என்றென்றேங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் – இப்படிச் சொல்லிச் சொல்லிப் பொருமியழுதால் இக்கூப்பீட்டுக்கு முகங்காட்ட நினைக்கிறானோ?
இப்படியே கூப்பிட்டுக் கொண்டு கிடக்கட்டு மென்றிருக்கிறானோ?
(இம்மாஞாலம் இத்யாதி) மண்ணின் பாரம் நீக்குதல் என்றொரு வியாஜமிட்டு இங்கேவந்து பிறந்து ஸாது பரித்ராணம் பண்ணிப் போருகிறவன் நம்கூப்பீட்டுக்கு என்ன நினைத்திருக்கிறானோ வென்கிறார்.
மாயனே! என்றவிடத்து ஏகாரம் விளியுருபன்று, ஈற்றகை.
—————-
***- எம்பெருமானே! நீ அவதாரங்கள் பண்ணி ஸௌலப்யத்தைக் காட்டி நிற்கச் செய்தோம் அக்காலத்திற்குப் பிறபட்டேன்,
பொருள்தோறும் வியாபித்து நின்றாயாகிலும் அந்தர்யாமியைக் காண அசக்தனாயிராநின்றேன, பின்னை எங்கே காணக் கடவேனென்கிறார்.
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-
பதவுரை
| பிறந்த மாயா |
– |
அவதாரங்களைச் செய்தருளும் மாயனே! |
| பாரதம் பொருதமாயா |
– |
பாரதப்போர் புரிகையில் பல ஆச்சரியங்களைக் காட்டினவனே! |
| நீ இன்னே |
– |
நீ இப்படி எளியனாயிருக்கச் செய்தே |
| சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே |
– |
சிறந்த பஞ்ச பூதங்களையும் அந்த பூதங்களில் நின்று முண்டான பதார்த்தங்களையும் சரீரமாகவுடைய ஸர்வாதிகனாய் |
| கறந்த பாலுள் நெய்யே போல் |
– |
கறந்த பாலினுள்ளே நெய் போலே |
| கண்டுகொள் இறந்து |
– |
கண்டுகொள்ளுதல் இல்லாதபடி. |
| இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா |
– |
மேலே சொன்ன வஸ்துக்க ளெல்லாவற்றிலும் உறைகின்ற ஆச்சர்ய பூதனே! |
| உன்னை எங்கே காண்கேன் |
– |
உன்னை எவ்விடத்திலே காணக்கடவேன்? |
பிறந்தமாயா! –பிறக்கையாகிற மாயத்தைச் செய்தவனே! என்றபடி. பிறவாதவனென்றிருக்கச் செய்தேயும் கர்மவச்யர்களைப் போலேவந்து பிறப்பதும், எல்லாரும் தன்னைக்கண்டு அஞ்சி யொளிக்க வேண்டியிருக்க, தான் கம்ஸாதிகளுக்கு அஞ்சி யொளிக்கையுமாகிற இவை * மாயனென மாயமே * என்று வியக்கத்தக்க மாயமன்றோ.
பாரதம் பொருதமாயா – பிறந்த ஆச்சரியம் போலவே பாரத யுத்தம் நடத்தி வைத்ததும் ஒரு ஆச்சரிய மென்கிறார்,
ஸத்யப்ர்திஜ்ஞனானதான் அஸத்ய ப்ரதிஜ்ஞனான ஆச்சரியம்.
ஆயுதமெடே னென்று ஆயுத மெடுக்கையும் பகலை இரவாக்குகையும் எதிரிகளின் உயிர் நிலையைக் காட்டிக் கொடுக்கையும் முதலான ஆச்சரியங்களை நினைப்பது.
நீ யின்னை என்றது நீ இப்படி ஸுலபனா யிருக்கச் செய்தே என்றபடி. சிறந்தகால் தீ நிர்வான் மண் பிறவுமாய பெருமானே! – பிறந்து கண்ணுக்குப் புலப்படுகிறவனாயிருக்கச் செய்தேயும் பஞசபூதங்கள் முதலியவற்றில் அநுப்ரவேசித்திருந்து கண்ணுக்குப் புலப்படாமலு மிருப்பவனே! என்றபடி.
கண்ணுக்குப் புலப்படா திருக்கும்போது அவற்றினுள்ளே யிருக்கிறனென்று எப்படி தெரிந்து கொள்வதென்ன, அதற்கொரு த்ருஷ்டாந்தமருளிச் செய்கிறார் கறந்தபாலுள் நெய்யேபோல் என்று.
ப்ரஹ்மவிதுநிஷத்தில் கூறியதையடியொற்றி யருளிச் செய்தபடி. பாலைக்கடைந்து வெண்ணையாக்கி நெய்யாக்குகிறோம். பாலில் இல்லாத வஸ்து அபூர்வமாக உண்டாய்விட மாட்டாதன்றோ, நெய்யும் பாலினுள்ளே யிருக்கச்செய்தே அது கறந்தபாலில் நமக்குத் தெரியாமலன்றோ இருக்கிறது. அதுபோலவென்க.
மூன்றாமடியின் முடிவில் “கண்டுகொள்“ என்றல்ல, “கண்டுகோள்“ என்றோத வேணும்.
“பனிக்கடலிற் பள்ளிகோளை“ என்றவிடத்து “பள்ளிகோள்“ என்றது போன்ற தாமிது
கீழே ஐந்தாம்பத்தில் (5-2-7) * நிறுத்தி நும் முள்ளதத்துக் கொள்ளுந் தெய்வங்களும்மை யுய்யக் கோள் * என்றவிடமும் இத்திறத்ததே,
கண்டுகொள் இறந்து நின்ற –கண்டு கொள்ளுதல் இல்லாமலிருக்கின்ற என்றபடி.
உன்னையெங்கே காண்கேனே –கண்ணாலே காண்கிற பாலினுள்ளே நெய்யுண்டா யிருக்கக் காணவரிதானாப் போலே ஸகல பதார்த்தங்களினுள்ளு மிருந்துவைத்தும் காணவொண்ணாதபடி நிற்கிற ஆச்சரியபூதனே! உன்னை எங்கே காணக்கடவேன்?
பரமபதத்தில் காண்பதற்கு இந்த சரீரஸம்பந்தம் குலையவேணும், ஸ்ரீராம க்ருஷ்ணாதியவதாரங்களுக்கோ பிற்பட்டவனானேன், அச்சரவதாரமோ நான் நினைக்கிறபடி பேசவும் தழுவவும் யோக்யதையற்றது, அந்தர்யாமித்வம் கண்ணுக்கு இலக்காகாத்து, இனி இழவோடே முடிந்து போகவேண்டியதோயோ நான்? என்றாராயிற்று.
—————-
***- இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே
எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-
பதவுரை
| ஈன் துழாய் அம்மான் தன்னை |
– |
பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை |
| யான் எங்கே காண்கேன் என்று என்று |
– |
நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி |
| அங்கே தாழ்ந்த சொற்களால் |
– |
அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே |
| அம் தண் குருகூர் சடகோபன் |
– |
ஆழ்வார் |
| செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் |
– |
மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே |
| இவையும் பத்தும் வல்லார்கள் |
– |
இவை பத்தையும் ஓத வல்லவர்கள் |
| இங்கே காண |
– |
இந்நிலத்தே எல்லாரும் காணும்படி |
| இப் பிறப்பே |
– |
இந்த ஜன்மத்திலேயே |
| எல்லியும் காலை மகிழ்வர் |
– |
இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள். |
ஸர்வேச்வர னென்னுமிடத்தை நிலைநாட்டவல்ல திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானைக் கண்டல்லது தரிக்க மாட்டாதபடி சபலனானநான் எங்கே காணக்கடவே னென்று பலகாலுஞ் சொல்லி,
தோளும் தோள்மாலையுமான வழகிலும் மேன்மையிலும் ஈடுபட்ட சொற்களாலே ஆழ்வாரருளிச் செய்ததாய் மனமொழி மெய்கள் ஒருங்கேநின்று சொன்னதான ஆயிரத்தினுள்ளும் இப்பத்தையும் ஓதவல்லவர்கள்
இஹலோகத்திலே இந்த ஜன்மத்திலே பகலுமிரவும் படிந்து குடைந்து பகவதநுபவம் பண்ணிக் களிக்கப் பெறுவர்கள்.
“ஆளக் கூப்பிட்டழைத்தக்கால்“ என்று ஆழ்வார் கூப்பிடச் செய்தேயும் வந்து முகங்காட்டாத குற்றத்தை இப்பதிகங் கற்பாரிடத்திலே எம்பெருமான் தீர்த்துக் கொள்வனும், இவர்களுக்குச் சடக்கெனவந்து முகங்காட்டுவனென்க.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 13, 2022 at 11:38 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply