***- குவலயாபீட வதம் மல்ல நிரஸநம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான
திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார்.
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1-
பதவுரை
| வார் கடா அருவி |
– |
பாய்கின்ற மதநீராகிற அருளிப் பெருக்கையடைய |
| யானை மா மலையின் |
– |
குவலயாபீட யானையாகிற பெரிய மலையினுடைய |
| மருப்பு |
– |
இரண்டு தந்தங்களாகிற |
| இணை குவடு |
– |
இரண்டு சிகரங்களை |
| இறுத்து |
– |
முறித்து |
| உருட்டி |
– |
(யானையை) முடித்தொழித்து |
| ஊர் கொள் திண்பாகன் உயர் செகுத்து |
– |
யானையை நடத்த வல்ல சதிருடையனான பாகனது உயிரையும் முடித்து |
| அரங்கில் |
– |
அரண்மனை வாசலில் |
| மல்லரை கொன்று |
– |
(சாணூர முஷ்டிக) மல்லர்களையும் தொலைத்திட்டு |
| சூழ் பரண் மேல் போர் கடாவு அரசர் புறக்கிட |
– |
சுற்றுமுண்டான மஞ்சத்தின் மேலே நின்ற ரணவீரர்களான அரசர்கள் முதுகு காட்டியோடும்படியாகப் பண்ணி |
| மாடம் மீமிசை |
– |
மாடத்தின் மேல் நிலத்திலேயிருந்த |
| கஞ்சனை |
– |
கம்ஸனை |
| தகர்த்த |
– |
தொலைத்திட்ட |
| சீர் கொள் சிறு ஆயன் |
– |
வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியிருக்குமிடமான |
| திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு |
– |
திருச்செங்குன்றூர்த்திருச் திருச்சிற்றாறென்கிற திருப்பதியானது |
| எங்கள் செல் சார்வு |
– |
எங்களுக்குச் சென்று சேரும் புகலிடமாகும். |
வில்விழவென்கிற வியாஜத்தினால் அக்ரூரணையிட்டுக் கம்ஸனால் திருவாய்ப்பாடியினின்று மதுரைக்கு வரவழைக்கப்பட்ட பலராமஸமேதனான கண்ணபிரான் குவலயாபீட ஸம்ஹாரம் தொடங்கிக் கம்ஸவதமளவாகச் செய்த பராக்ரமச் செயல் மூன்றடிகளால் கம்பீரமாகப் பேசப்படுகிறது.
எம்பெருமான் ஆழ்வார்க்குக் காட்டின வீரம் பாசுரத்திலும் ஏறிப் பாய்ந்துவிட்டதுபோலும்.
குவலயாபீடயானை கண்ணனை முடிப்பதற்காக அரண்மனைவாசலில் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்தது, அதனை அநாயாஸேந முடித்துப் பாகனையும் உயிர்மாய்த்தான் கண்ணபிரான். அந்த யானையை ஒரு மலையாக ரூபிக்கிறாராழ்வார், மலைக்கு அருவிப் பெருக்கு இருக்குமே, அப்படியே யானைக்கு மதநீர்ப்பெருக்கு உள்ளதென்கிறார், மலைக்குக் குவடுகளிருப்பதுபோல யானைக்கு மருப்பிணையுள்ளதென்கிறார்.
உருட்டியென்று அவ்யானையை முடித்தமை சொன்னபின்பும் “ஊர் கொள் திண்பாகன்“ என்று அந்த யானையைப் பாகன நடத்துகிறானாகச் சொன்னவது கூடுமாவென்ன,
இதற்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் “உயிருள்ள பதார்த்தத்தை நடத்துமாபோலே நடத்த வல்லனாயிற்று சிக்ஷாபலத்தாலே“ என்று.
அந்தப் பாகனையும் முடித்து, சாணூரமுஷ்டிகரென்னும் மல்லர்களையும் கொன்று, அதன்பிறகு மஞ்சத்தின்மீது கம்ஸனுக்குக் காவலாக இருந்த அரசர்களையும் முதுகுகாட்டி யோடப் புடைத்து, உயர்ந்த மாடத்திலே யிருந்த கம்ஸனையும் முடிசிதற மயிரைப்பிடித்துக் கீழேவிழ விட்டு மேலேபாய்ந்து அவனை முடித்திட்ட வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளி யிருக்குமிடமான திருச்செங்குன்னூர்த் திருச்சிற்றாறு நாங்கள் அச்சங்கெட்டு ஆச்ரயிக்குமிடம்.
————–
***- வெறும் வீர ஸ்ரீயைக் காட்டினபடியேயன்று, தன்னுடைய பரமபோக்யத்தை காட்டிக் கொடுத்தானென்கிறார் யாமுடையமுதம் என்று.
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2-
பதவுரை
| உங்கள் செல் சார்வு |
– |
யாம் சென்று சேரும் புகலிடமாயும் |
| யாமுடை அமுதம் |
– |
நமக்குப் பரமபோக்யனாயும் |
| இமையவர் அப்பன் |
– |
தேவாதி தேவனாயும் |
| என் அப்பன் |
– |
எனக்கு ஸ்வாமியாயும் |
| பொங்கு மூ உலகும் |
– |
பரந்த மூவுலகத்தையும் |
| படைத்து அழித்து அளிக்கும் |
– |
ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து ஸம்ஹரிப்பானாயும் |
| பொருந்தும் மூ உருவன் |
– |
மேலே சொன்ன முச்செயல்களுக்கும் பொருத்தமாக மூர்த்தித்ரயஸ்வரூபியாயும் |
| எம் அருவன் |
– |
எமக்கு உயிரானவனாயும் |
| செம் கல் உகளும் தேம் பனை புடை சூழ் |
– |
செவ்விய மீன்கள் துள்ளும்படி தேன்மிக்க நீர் நிலங்கள் சூழ்ந்த |
| திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு |
– |
திருச்சிற்றாரென்னும்பதியிலே |
| அமர்கின்ற |
– |
அமர்ந்திருப்பவனாயு மிருக்கின்ற |
| ஆதியான் அல்லால் |
– |
ஆதிப்பிரானல்லது |
| என் அமர் துணைமற்று யாவர் |
– |
எனக்குற்ற துணை வேறுயார்? (யாருமிலர்) |
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்-எங்கள் என்றும் யாமுடை கூட்டி யென்க.
“* கேசவன் தமர்க்குப் பின்பு தனியரல்லரே“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
“இமையவரப்பன்“ என்பது அத்தலத் தெம்பெருமானுக்கு இற்றைக்கும் வழங்குந் திருநாமம்.
இமையவரப்பனென்று சொல்லி உடனே என்னப்ப னென்கையாலே நித்ய ஸூரிகளை அடிமை கொண்டாப்போலே தம்மையுமடிமை கொண்டவன் என்பது காட்டப்பட்டதாம்.
“குறைவற்றார்க்கும் ஸத்தா ஹேதுவாய் குறைவுக்கெல்லையான வெனக்கும் ஸத்தா ஹேதுவானவன்“ என்பது ஈடு.
நான்முகனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டியை நடத்தியும், தானான தன்மையில் ரக்ஷணத்தை நடத்தியும், ருத்ரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹாரத்தை நடத்தியும் இப்படி மூவுருவாயிருக்குமவன் என்னுடைய பயத்தைப்போக்கி எனக்கும் தாரகனாயிராநின்றானென்கிறது இரண்டாமடி.
இப்படிப்பட்ட வெம்பெருமான் நீர்வளம் பொருந்திய திருச்சிற்றாற்றுப்பதிலே, விபவாவதாரங்கள் போலே தீர்த்தப் ப்ரஸாதித்துத் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளாமே நித்யஸந்நிதி பண்ணி யிராநின்றான்,
அவனை யொழிய எனக்கு உற்ற துணையில்லை, அவனே நமக்கு நற்றுணைவன் என்றாராயிற்று.
—————
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3–
பதவுரை
| இமையவர் பெருமான் என் அமர் பெருமான் |
– |
நித்ய ஸூரிநாதனாப் போலே என்க்குற்ற நாதனாய் |
| இரு நிலம் இடந்த எம்பெருமான் |
– |
மாநிலத்தைப் பிரளயாபத்திலிருந்து இடந்தெடுத்த எமது நாதனாய் |
| முன்னை வல் வினைகள் முழுது உடன்மாள |
– |
அநாதியான வலிய தீவினைகளெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மாளும்படியாக |
| என்னை ஆள்கின்ற எம்பெருமான் |
– |
என்னை அடிமை கொண்டருளுகிற பெருமையை யுடையனாய் |
| தென் திசைக்கு அணி கொள் |
– |
தென் திசைக்கு அலங்காரமாகக் கொள்ளப்படுவதான |
| திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்ங்கரை மீபால் நின்ற |
– |
திருச்சிற்றாறென்னும் திருப்பதியின் மேலேப்பக்கதில்லெழுந்தருளி யிருப்பவனான |
| எம்பெருமான் |
– |
அஸ்மத்ஸ்வாமியினுடைய |
| அடி அல்லால் |
– |
திருவடிகளைத் தவிர்த்து |
| எனக்கு நினைப்பிலும் பிறிது சரண் இல்லை |
– |
என்னுடைய மனோரது தசையிலும் வேறொரு புகல் இல்லை. |
***- “என்னமர் பெருமானிமையவர் பெருமா“ வென்ற விதனை “இமையவர் பெருமான் என்னமர் பெருமான்“ என மாற்றியந்வயிப்பது.
* அயர்வரும் அமரர்களதி பதியாயிருக்குமவன் எனக்கு அமர்ந்த ஸ்வாமியாயுள்ளான்.
அந்த பரத்வமெஙகே, இந்த ஸௌலப்ய மெங்கே! என்று வியப்புத் தோற்ற வருளிச் செய்கிறபடி
இரு நிலமிடந்த எம்பெருமான் – பிரளயாபத்தைப் போக்கின தன் வல்லமையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவனென்றபடி.
முன்னைவல்வினைகள் முழுதுடன்மாள என்னையாள்கின்ற வெம்பெருமான் – கீழே தமக்குப் பிறந்த அச்சத்தைப் போக்கினபடியைச் சொல்லுவது இங்கு விவக்ஷிதம்.
நான் காமடியில் “சரண்நிலைப்பிலும்“ “சரணம் நினைப்பிலும்“ என்பன பாட பேதங்கள்.
“சரணம்“ என்று பாடமாம்போது “அடியல்லால்“ என்பது “அடியலால்“ என்று தொகுதுதலாகக் கொள்க.
——————-
***- மஹாபலியின் வலியை யடக்கியும் கடல் கடைதலாகிற அரிய பெரிய காரியத்தைச் செய்தும் அடியார்களது துன்பங்களைத்
தொலைத்துத் திருச்சிற்றாற்றுப் பதியிலே நின்றருளினவனது திருவடிகளல்லது வேறெனக்கு அரணில்லை யென்கிறார்.
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4-
பதவுரை
| பெரிய மூ உலகும் நிறைய |
– |
இடமுடைத்தான மூவுலகும் நிறையும்படியாக |
| பேர் உருவம் ஆய் நிமிர்ந்த |
– |
பெரிய வடிவையுடையனாய்க் கொண்டு வளர்ந்த |
| குறிய மாண் எம்மான் |
– |
வாமனப் பிரமசாரியான என் ஸ்வாமியாய் |
| குரை கடல் கடைந்த |
– |
கோஷிக்கின்ற கடலைக் கடைந்தவனாய் |
| கோலம் மாணிக்கம் என் அம்மான் |
– |
அழகிய ரத்னம் போன்ற திருவடிவை எனக்குக் காட்டித்தந்தருளின உபகாரகனாய். |
| செறி குலை வாழை கமுகு தெங்கு அணி |
– |
செறிந்த குலைகளையுடைய வாழை கமுகு தெங்குகளின் திரள்கள் சூழ்ந்த |
| திருச் செங்குன்றூ திருச்சிற்றாறு |
– |
திருச்சிற்றாற்றுத் திருப்பதியிலுள்ளவர்கள் |
| அறிய |
– |
தன்னை உள்ளபடியறியும்படி |
| மெய்ம்மையே நின்ற |
– |
உண்மைப் பெருமையோடே நின்றருளாமவனான |
| எம்பெருமான் |
– |
அஸ்மத்ஸ்வாமியினுடைய |
| அடி இணை அல்லது |
– |
திருவடியிணைகளல்லது |
| எனக்கு ஓர் அரண்பிறிது இல்லை |
– |
எனக்கு வேறொரு ரக்ஷகமுமில்லை. |
பெரிய மூவுலகும் நிறையப் பேரூரூவமாய் நிமிர்ந்த – மூவுலகின் பெருமைக்குத் தக்கபடி தன்னுருவத்திலும் பெருமை கொண்டானென்க.
திருவுருவம் பெருமை கொண்டது மூவுலகங்களையும் ஆக்ரமிக்கைக்காகவேயன்று,
அகடிதகடநாஸமர்த்தனான அவன் சிறிய திருவுருவத்தாலும் மூவுலகையும் ஆக்ரமிக்க முடியாமையில்லையே, பின்னை எதற்காகப் பேருருவமான தென்னில்,
தொடங்கின கார்யம்வென்ற ப்ரீதிப்கர்ஷத்தாலே வளர்ந்தபடி“ என்பர் நம்பிள்ளை.
உலகில் ஒருவனுக்கு அபீஷ்டம் நிறைவேறப் பெற்றால் உடல் பூரிக்குமன்றோ, அப்படி இங்கும் தன் பக்கலிலே பல்லைக்காட்டிப் பரிதாபம் தோன்ற நின்ற இந்திரனுக்குக் காரியம் செய்யப் புகுந்து அது நிறைவேறப் பெறுகையாலே உடல் பூரித்தாயிற்று.
குறியமாண் எம்மான் –“கொண்டகோலக் குறளுருவாய்“ ஐயோ! இப்படி பரம ஸுகுமாரமான திருமேனியைக் கொண்டா கடலைக் கடைவது,
தேவருமசுர்ருமான முரட்டாண்கள் பலகோடி நூறாயிரவர் இல்லையோ?
அவர்கள் * நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூர்ரென் செய்தார்? * என்னும்படியாகச் சோர்ந்து துவண்டுநின்றால் நீ கடையவேணுமென்று என்ன தலைவிதியோ?
கோலமாணிக்க மென்னும்படியான திருமேனியின் ஸௌகுமார்யத்தைச் சிறிதும் பராதே இப்படியும் ஒரு அதிப்வருத்தியுண்டோ? என்று நெஞ்சிளகிச் சொல்லுகிறபடி.
இப்படிப்பட்ட. வெம்பெருமான் பரம போக்யமான திருச்சிற்றாற்றிலே யுள்ளாரடங்களும் இவன் ஸர்வேச்வரனென்ற்றியும்படியாக, தன்னுடைய பெருமையை மறைத்துக் கொள்ளாதே நிஜஸ்வரூபத்தோடே நின்றருளினான்,
அவனது திருவடியிணையல்லது எனக்கு வேறொரு ரக்ஷகமில்லை.
———————
***- மற்றும்பல திருப்பதிகளா முண்டாயிருக்க, ஆழ்வீர்! நீர் சிற்றாற்றிலே இவ்வளவு
நிர்ப்பந்தம் கொள்வதேன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு மறுமொழி கூறுகின்றாரிதில்.
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-
பதவுரை
| அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை |
– |
திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற கோவில்களில் ரக்ஷகனாயிருக்கின்றவனும் அவனிற் காட்டில் வேறுபட்ட வனல்லன், |
| அது பொருள் ஆகிலும் |
– |
என்கிறவதுவே உண்மைப் பொருளானாலும் |
| என் ஆவி |
– |
என் உயிரானது |
| அவனை அல்லது அமர்ந்து அணைகில்லாது |
– |
அத்திருச்சிற்றாறெம்பெருமானை யொழிய வேறொருவனைப் பொருந்தி விரும்பமாட்டாது, |
| ஆதலால் |
– |
ஆகையினாலே |
| அவன் உறைகின்ற |
– |
அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமானதும் |
| நல்ல நான்மறையோர் |
– |
வைதிகோத்தமர்கள் |
| வேள்வியுள் மடுத்த |
– |
யாகத்திலிட்ட ஹவிஸ்ஸுக்களிலுண்டான |
| நறு புகை |
– |
பரிமளம் மிக்க புகையானது |
| விசும்பு ஒளி மறைக்கும் |
– |
ஆகாசத்திலுள்ள (ஸூரியன் முதலிய) சுடர்ப்பொருள்களை மறைக்கும் படியாயுள்ளதும் |
| நல்ல நீள மாடம் |
– |
விலக்ஷணமாக வோங்கின மாடங்களையுடையதுமான |
| திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு |
– |
திருச்சிற்றாற்றுப் பதியானது |
| எனக்கு நல் அரண் |
– |
எனக்கு நிர்ப்பயமான புகலிடம் |
அல்லதோரணும் அவனில் வேறில்லை அது பொருள் –திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற புகலிடமான அர்ச்சரஸ்தலங்களும் திருச்சிற்றாற்றுப் பெருமானுகந்தவையே, இதுபரமார்த்தம் இதில் எனக்கு இறையேனும் ஸந்தேஹமில்லை,
எல்லாத் திருப்பதிகளும் ஒன்றுதான், அத்திருப்பதிகளிலுள்ள எம்பெருமான்க ளெல்லாரும் ஒருவரேதான் என்கிறதத்துவம் நானறியாததன்று என்றபடி.
அப்படியாகில் திருச்சிற்றாற்றுப் பெருமாளையல்லது அறியேனென்று இந்த நிர்ப்பந்தம் எதற்காக? என்கிறீர்களோ?
ஆகிலும் அவனை யல்லது என்னாவி அமர்ந்தணைகில்லாது பெருமானை என் மனம் சேர்ந்தணையாது.
சிறிய திருவடி * ஸ்நேஹோ மே பரமோ ராஜந்! த்வயி நித்யம் ப்ரதிஷ்டித, பக்திச் ச நியதா வீர! பாவோ நாந்யத்ர கச்சதி * என்று பரம பதநாதனையும் வேண்டேனென்றான், பரமபதநாதன் ஈச்வரனல்லனோ? ப்ராப்த சேஷியல்லனோ? எதற்காக விஷயத்திலும் கொள்ளுங்கோ ளென்கிறார்.
அமர்ந்து அணைகை –உள்வெதுப்பற்றுப் பொருந்றெனக்கு நல்லரணே என்ற விடத்து அந்வயம்.
“திருச்சிற்றாறே எனக்கு நல்லரண்“ என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. அத்தலத்தின் வைதிக ஸம்ருத்தி சொல்லுகிறது மூன்றாமடி.
நல்ல நான் மறையோ ரென்றது – காம்யகருமங்களைச் செய்பவரல்லர், பகவத் கைங்கர்ய மென்னும் ப்ரதிபத்தியோடே செய்பவர்களென்றபடி.
காம்யமாகச் செய்தாலும் குற்றமில்லை யென்கிற திருவுள்ளமும் நம்பிள்ளைக்கு உள்ளது.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி, “அநந்யப்ரயோஜந ராகில் இவர்கள் நுஷ்டானத்துக்கு ப்ரயோஜநமென்னென்னில் ஸ்வயம் ப்ரயோஜநமாதல். பகவத் ப்ரதிபக்ஷங்களையழியச் செய்யும் அபிசாரம் பலமாதல், எம்பெருமானாரைப் போலேயாயிற்று அவ்வூரில் ப்ராஹ்மணரும்“ என்று.
இங்கு அறிவேண்டிய இதிஹாஸமாவது – கொடுங்கோன்மை கொண்ட சோழனுக்காக மேல்நாட்டுக் கெழுந்தருளின எம்பெருமானார் திருநாராயணபுரத்தில் பதினொரு ஸம்வத்ஸர மெழுந்தருளியிருந்தும் அவனுடைய வாழ்நாள் மாளக் காணாமையலே அவன் முடியும்படி, திருவேங்கட முடையானை அதிதேவதையாகப் பண்ணிக்கொண்டு அபிசார கருமமொன்று அநுஷ்டித்து மநோரதம் தலைக்கட்டப் பெற்றார் அல்லரே என்பது – .
—————-
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-
பதவுரை
| எனக்கு நல் அரணை |
– |
எனக்கு நிர்ப்பயமான புகலிடமாயும் |
| எனது ஆர் உயிரை |
– |
என்னுடைய ஸத்தையை நிர்வஹித்துப் போருமவனாயும் |
| இமையவர்தந்தை தாய் தன்னை |
– |
நித்ய ஸூரிகளுக்கும் ஸகலவித பந்துவானவனாயும் |
| தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை |
– |
ஸர்வஜ்ஞனான தனக்கும் தனது தன்மை அறியக்கூடாமலிருப்பவனாயும் |
| தட கடல் பள்ளி அம்மானை |
– |
விசாலமான கடலிலே பள்ளி கொள்பவனாயுமுள்ள ஸர்வேச்வரனை |
| மனம் கொள் சீர் |
– |
மனத்திலே கொண்ட பகவத் குணங்களையுடையவர்காளன |
| மூவாயிரவர் |
– |
மூவாயிர மந்தணர்கள் |
| வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் |
– |
சிவனையும் பிரமனையும் திருமாலையும் மொத்தவர்களாய்க் கொண்டு |
| வாழ் |
– |
வாழுமிடமாய் |
| கனம் கொள் திண்மாடம் |
– |
செறிந்து திண்ணிதான மாடங்களையுடைத்தான |
| திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற தனுள் |
– |
திருச்சிற்றாற்றுப் பதியிலே |
| கண்டேன் |
– |
ஸேவிக்கப்பெற்றேன் |
***- பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது,
* மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது.
எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம்,
அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று.
அவர்களை வண்சிவனு மயனுந்தானு மொப்பார் என்றது –ஆளவந்தார் ஸ்தோத்ரத்னத்தில் * த்வதாச்ரிதாநாம் ஜகதுத்பவஸ்திதி ப்ரணாச ஸம்ஸார விமோசநாதய பவந்தி லீலா, * என்றருளிச் செய்தபடி ஸ்ருஷ்டிஸ்திதி ஸம் ஹாராதிகளை இவர்களே நிரவஹிக்க வல்லார யிருக்கையைச் சொன்னபடியாம்.
இங்கே நம்பிள்ளையீடு – ஸ்ரீபரத்வாஜமஹாமுனியோடொக்கு மவர்கள், தன்னைப் பிரிந்த வன்று முதல் ராவணவதம் பண்ணி மீளுமளவுஞ் செல்ல “இவர்களுக்கு என் வருகிறதோ“ என்று இத்தையே நினைத்திருந்தவனிறே ஸ்ரீ பரத்வாஜ பகவான்“ என்று.
——————
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7-
பதவுரை
| திருச்செங்குன்றூரில திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடி |
– |
திருச்சிற்றாற்றுப்பதியிலே நான் காணப்பெற்ற அந்த பொருமானானவன், |
| செய்ய கமலம் திருக்கண்ணும் |
– |
செந்தாமரை போன்ற திருக்கண்ணும் |
| செம் வாயும் |
– |
சிவந்த திருப்பவளமும் |
| செம் அடியும் |
– |
சிவந்த திருவடிகளும் |
| செய்ய கைவும் |
– |
சிவந்த திருக்கைகளும் |
| செய்ய கமலம் திரு உந்தியும் |
– |
சிவந்த கமலத்தையுடைத்தான திருநாபியும் |
| கமலை செய்ய மார்பும் |
– |
பெரிய பிராட்டியாரை யுடைத்தாய்ச் சிவந்ததான திருமார்வும் |
| செய்ய உடையும் |
– |
திருப்பிதகவாடையும் |
| ஆரமும் |
– |
கோலமாமணியாரங்களும் |
| படையும் |
– |
திவ்யாயுதங்களும் |
| திகழ |
– |
விளங்க |
| என்றும் என் சிந்தை உளான் |
– |
எந்நாளும் என்னெஞ்சினுள்ளே யுறைகின்றான். |
***- திருச்சிற்றாற்றெம்பெருமானுடைய வடிவழகை வாயரப் பேசுகிறாரிதில் அழகு பொருந்திச் சிவந்தவையாய், விகாஸம் செவ்வி முதலானவற்றால் தாமரையையொத்திருப்பவையான திருக்கண்களும், அத்திருக்கண்ணோக்காலே பிறந்தவுறவை ஸ்வாபித்துக் கொள்ளும் புன்முறுவல் பொலிந்த திருப்பவளமும், அந்தப் புன்முறுவலுக்குத் தோற்றவர்கள் விழுந்து வணங்கத் தக்க திருவடிகளும், திருவடிகளில் விழுந்தவர்களை யெடுத்தணைக்கும் திருக்கைகளும், அப்படி அணைக்கப்பெற்றவர்களும் நித்யமும் அநுபவிக்கத் தக்கதாய் அழகுக் கெல்லையாய் ஸர்வோத்பத்திஸ்தானமென்று தோற்றும்படியிருக்கிற திருநாபியும், பகவத்ஸம் பந்தமில்லாதவர்களுக்கும் பற்றாசான பிராட்டிக்கு இருப்பிடமாய்க் கொண்டு சிவந்திருக்கின்ற திருமார்வும், திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரமும், அச்சம் தீரும்படி ரக்ஷகத்வ ஸூசகமாயிருந்துள்ள திருவபிஷேகமும் திவ்யாயுதங்களும் விளங்க என்றும் என்சிந்தையிலே வர்த்திக்கையாலே அச்சம் தலைகாட்ட வழியில்லை யென்றாராயிற்று.
—————-
***- இப்படி யென்னெஞ்சிலே திகழாநிற்கிற திருச்சிற்றாற்றெம்பெருமானைப் புகழும்படியறிகின்றிலே னென்கிறார்.
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8-
பதவுரை
| என் சிந்தையுள் திகழ இருந்தானை |
– |
என்னெஞ்சினுள்ளே விளங்கிக் கொண்டிருப்பவனும் |
| நால் மறார் செழு நிலம் தேவர் |
– |
நான்கு வேதங்களையு மோதின விலக்ஷண ப்ராஹமணர்கள் |
| திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை யானை |
– |
திசைகள் தோறும் நின்று கைகூப்பித் துதிக்கும்படியான திருச்சிற்றாற்றுப் பதியிலுள்ளவனும் |
| புகர் கொள்வானவர்கள் புகல் இடம் தன்னை |
– |
சிறந்த தேவர்களுக்கும் புகலிடமாயிருப்பவனும் |
| வன்கைய் அசுரர் வெம் கூற்றை |
– |
மிடுக்கரான அசுரர்களுக்கு வெவ்விய யமன் போன்றவனும் |
| பொருந்து மூ உலகும் படைப்போடு கெடுப்பு காப்பு அவன் |
– |
தன்னோடு பொருந்திய மூவுலகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ப்ரளய ரக்ஷணங்களுக்குக் கடவனுமான பெருமானை |
| புகழும் ஆறு அறியேன் |
– |
புகழும் விதம் இன்னதென்ற்று அறிகின்றிலேன் |
செழுநிலத்தேவர் நான்மறையோர் திசை கைகூப்பி யேத்தும் –நாலு வகைப்பட்ட வேதங்களையோதி நிபுணர்களாய் நிலத் தேவர்களாயிருக்குமவர்கள் திக்குக்கள்தோறும் நின்று கைகூப்பியேத்தும்படியான திருச்சிற்றாற்றிலே வர்த்திக்கிறவனை யென்றது –உகவாதார்க்குக் கிட்டவொண்ணாதபடியாய் உகந்தவர்களே புடைசூழவிருக்கிறபடியைச் சொன்னவாறு.
புகர்கொள்வானவர்கள் புகலிடந்தன்னை –வானவர்க்குப் புகராவது-தங்களை வந்து பணிகின்றவர்களுக்குத் தாங்கள் புகலாயிருக்கையாம், அப்படிப்பட்டவர்களுக்கும் ஆபத்து வந்தால் அவர்களுக்குப் புகலிடமாயிருப்பவனெம்பெருமான்.
* வேதாபஹாரகுருபாதகதைத்ய பீடாத்யாபத் விமோசநம் பண்ணிக் கொடுப்பார் இவனை யொழிய வேறொருவருகளுக்கு மிருத்யுவாயிருப்பவன் எம்பெருமான்.
கூற்றை என்றால் போராதோ? “வெங்கூற்றை“ யென்னவேணுமோ? யமன் வெவ்வியனாகவல்லாமல் ஸாதுவாகமிருப்பனோவென்று சங்கை தோன்றும்,
இதற்கு நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர் –“அந்தகன் தண்ணீரென்னும்படி வெவ்விய கூற்றமாயுள்ளவனை“ என்று.
அசுரர்களை யழிக்கும் விஷயத்தில் யமனுடைய வெம்மையிற் காட்டில் பன் மடங்கு அதிகமான வெம்மையை யுடையவன் என்றவாறு.
இப்படிப்பட்ட எம்பெருமானைப் புகழுமாற்றியேன் – நான் புகழ்ந்து அப்பெருமானுக்கு ஆகவேண்டுவதொன்றுமில்லை,
என் குறை தீரப் புகழவேண்டுவதுண்டே அங்ஙனே புகழும் பரிசு அறிகின்றிலேன், புகழாதொழியவும் மாட்டுகிறிலேன், பின்னை என் செய்வதென்ன,
பொருந்து மூவுலகும் படைப்பொடு கெடுப்புக் காப்பவனே – தனக்கு விதேயமான ஸகல லோகங்கைளினுடையவும் ஸ்ருஷ்டி முதலானவற்றைப் பண்ணுமவனென்று திரறச் சொல்லுமத்தனை, பிரித்து வகையிட்டுச் சொல்லப்புகுந்தால் சொல்லிமுடிக்கப் போகாதென்றப்படி.
————–
***- பிரமன் முதல் எறும்பளவாகவுள்ள ஸகல ஜந்துக்களினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுவான்
திருச்சிற்றாற்றெம்பெருமானே யென்னுமிடம் அர்த்த வாதமன்று, மெய்யே யென்கிறார்.
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9-
பதவுரை
| கொடை பெரு புகழார் |
– |
ஓளதாரியத்தால் மிக்க புகழையுடையராய் |
| இனையர் |
– |
இன்னாரின்னா ரென்று ப்ரஸித்தி பெற்றவர்களாய் |
| தன்னானார் |
– |
எம்பெருமான் றன்னோடொத்த ஜ்ஞாந சக்திகளை யுடையராயிருக்குமவர்கள் |
| கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடை பலி |
– |
கூர்மையான ஞானமும் (அதற்கு தக்க) அனுட்டானமும் நித்ய்யாத்ரையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றிருக்குமிடமான |
| திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன் |
– |
திருச்சிற்றாற்றுப்பதியில் |
| படைப்பொடு கெடுப்பு காப்பு அவன் |
– |
ஸ்ருஷ்டி ஸம்ஹார்ரக்ஷணங்களுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன் |
| பிரமன் பரம்பரன் |
– |
ப்ரஹ்மஸ்வரூபியா யிருக்கிற பராத்பரன் |
| சிவபிரான் அவனே |
– |
சிவஸ்வரூபியுமானவன் |
| இடை புக்கு |
– |
மேற் சொன்ன இருவர்க்கு மிடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து |
| ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே |
– |
ஒரு பதார்த்தைத்தையும் விட்டு நீங்காமல் ஸர்வாந்தர்யாமி யாயிருக்குமவன் |
| யாவையும் தானே |
– |
சேதநாசேதந விபாகமின்றிக்கே எல்லாம் தன்னதீன மாயிருக்கப் பெற்றவன் |
| புகழ்வு இல்லை |
– |
இதில் அதிசயோக்தியானது ஒன்றுமில்லை. |
படைப்போடு கெடுப்புக்காப்பவன் – படைத்தல் அழித்தல் காத்தல் ஆகிய இவையெல்லாம் தன் அதீனமாம்படியிருக்குமவன்.
பிரமபரன்பரன் – மநுஷ்யர் முதலானவர்களிற்காட்டிலும் இந்திரனுக்கு எவ்வளவு ஏற்றமுண்டோ, அவ்வளவு ஏற்றம் இந்திரனிற்காட்டில் பிரமனுக்குண்டு, அவனிற்காட்டில் எம்பெருமானுக்கு அத்தனை யேற்ற முண்டு என்பது இங்கு அறியத்தக்கது.
“பிரமனும் அவனே, சிவனும் அவனே“ என்ற கான தேஹத்தை தேஹமே ஆத்மா என்பதுபோல. இடைப்புக்கு ஓருருவு மொழிவில்லை –மில்லை, மற்றுள்ள ஸகல பதார்த்தங்களும் அவனிட்ட வழக்கே யென்கை.
புகழ்வில்லையென்றது –அதிசயோக்தியன்று என்றபடி. இப்படி அர்த்தவாதமன்றிக்கே யதார்த்தமான புகழையுடைய எம்பெருமான் திருச்சிற்றாறமர்ந்த நாதன் என்கிறார்.
அத்தலம் எப்படிப்பட்ட தென்ன, அத்தலத்திலுள்ளாரது பெருமையைச் சொல்லும் முகத்தால் அத்தலத்தின் பெருமை சொல்லுகிறன பின்னடிகள்.
(கொடைப்பெரும்புகழார் இத்யாதி) அவ்வூரிலுள்ளார் ஔதார்யத்தில் பெரும்புகழ் பெற்றவர்கள், எதிரிகளையும் பண்ணிப் படைத்த புகழ்.
இனையர் –இன்னாரின்னாரென்று ப்ரஸித்தி பெற்றிருக்குமவர்கள்.
“எனையர்“ என்னும் பாடமும் வியாக்கியானங்களில் காட்டப்பட்டுள்ளது, இப்படியிருப்பார் பலரென்றபடி
தன்னானார் – எம்பெருமானைப் போன்று தட்டுத் தடங்கலில்லாத சக்தியையுடையவர்கள்.
“அவன்றன்னைப் போலே அதிகரித்த காரியத்தில் வெற்றிகொண்டல்லது மீளாதவர்கள்“ என்பது ஈடு.
கூரிய விச்சையோடொழுக்கம் நடைப்பலியியற்கை – “வித்யா“ என்னும் வடசொல் விச்சையென விகாரப்பட்டது, ஞானத்தைச் சொன்னபடி.
கூர்மையான ஞானமும் அதற்கேற்ற அனுட்டானமும், அனுட்டானங்களில தலையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றவர்கள்.
இப்படிப்பட்ட பரம பாகவதர்கள் மலிந்த திருச்சிற்றாற்றுப்பதியில் அமர்ந்த நாதன் முன்னிரண்டடிகளிற் சொன்ன பெருமை பொலிந்தவன்.
—————-
***- ஸர்வேச்வரனாயிருந்து வைத்து ஸகல ப்ராணிகளும் ஆச்ரயிக்கலாம்படி திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார்.
அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10-
பதவுரை
| அமர்ந்த நாதனை |
– |
நாதனென்றால் தகும் தகுமென்னும்படியான நாதனாய் |
| அவர் அவர் ஆகி |
– |
தன் பக்கலில் அர்த்திகளாக வருவாரெல்லார்க்கும் அபிமாரியாய் |
| அவர்க்கு அருள் அருளும் அம்மானை |
– |
அவர்கட்கு அபிஷ்டங்களை யளித்தருளும் ஸவாமியாய் |
| அமர்ந்த தண் பழனம் |
– |
செறிந்து குளிர்ந்த நீர் நிலங்களையுடைய |
| திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற் றங்கரையானை |
– |
திருச்சிற்றாற்றுப் பதியிலெழுந்தருளியிருப்பவனுமாய் |
| அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர் |
– |
ஸ்ரீமான்களான மூவாயிரம் பிராமணர்களுக்கு வாஸஸ்தானமாய் |
| அவனி தேவர் வாழ்வு |
– |
நிலத்தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழுமிடமான அப்பதியிலே |
| அமர்ந்த மானோனை |
– |
பொருந்தியெழுந்தருளியிருக்கு மாச்சர்ய பூதனுமாய் |
| முக்கண் அம்மானை நான் முகனை |
– |
சிவனுக்கு பிரமனுக்கும் அந்தர்யாமியுமான பெருமானை |
| அமர்ந்தேன் |
– |
கிட்டப் பெற்றேன். |
அமர்ந்த நாதனை –எம்பெருமானைத் தவிர்த்துப் பிறர்களை இவ்வுலகுக்கு நாதரென்றால் “ஐயோ? இது தகாத பேச்சாயிருந்தது“ என்று பரிதபிக்கவேண்டியிருக்கும், எம்பெருமானை நாதனென்று சொன்னால் தகும் தகும் என்னும்படியாயிருக்குமாம், “அமர்ந்த நாதனை“ என்றதற்கு இதுவே கருத்து.
*த்ரைலோக்யமபி நாதேந யேந ஸ்யாத் நாதவத்தரம் * என்ற ஸ்ரீராமாயண ச்லோகம் இவ்விடத்திற்கு மிகப் பொருத்தமானது.
“ஆனைப் பிணங்களைக் குதிரை சுமக்கவற்றே என்னாதபடி உபய விபூதிக்கும் நாதனென்றால் தக்கிருக்கும்மவனை“ என்று இருபத்தினாலாயிரம்.
அவரவராகி –இதற்குக் கீழே “நாதனை“ என்று வந்தபடியாலே அதற்குச் சேர இதற்குப் பொருள் கொள்ளவேண்டும்,
நாதன் என்பதற்கு –அர்த்திக்கப்படுமவன் என்று பொருளாகையாலே அர்த்திகள் நினைவுக்கு வரக்கூடியவர்கள்,
மேலே “அவர்க்கருளருளும்மானை“ என்றிருக்கையாலே அதற்குச் சேரவும் பொருள் கொள்ளவேணும்,
ஆகவே, அவரவராகி யென்றது – அந்தந்த அர்த்திகளாகியென்று பொருள்படும்.
இதற்கு இரண்டு வகையாகக் கருத்தருளிச் செய்வர். அவர்கள் “இது நமக்கு வேணும்“ என்றிருப்பதுபோல எம்பெருமான் “இவர்களுக்கு இது வேணும்“ என்றிருப்பனாம் –அதைச் சொல்லுகிறதென்று முதற் கருத்து.
அவர்கள் அர்த்திகளாயிருக்குமாபோலே இவனும் அர்த்தியாயிருக்கும், கொடுக்கவேணுமென்று அவர்கள் அர்த்தித்தால் கொள்ள வேணுமென்று இவன் அர்த்திப்பனென்பது இரண்டாங்குகருத்து.
அவரவர்களது அபேக்ஷதங்களைத் தன்பேறாகக் கொடுக்குவனென்றதாயிற்று.
கீழ் ஆறாம்பாட்டில் * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்றருளிச் செய்த்துபோல இங்கும்
* அமர்ந்தசீர்மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி * என்றருளிச் செய்கிறார்.
“முக்கணம்மானை நான்முகனை“ என்றது –முக்கண்ணனுக்கும் நான் முகனுக்கும் உயிரானவனை யென்றபடி.
——————-
***- இத்திருவாய்மொழி கற்கைக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியையும் பரமபதப்ராப்தியையும் பயனாகவருளிச் செய்கிறார்.
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-
பதவுரை
| தேனை நன் பாலை கன்னலை அமுதே |
– |
தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலப் பரமபோக்யனாய் |
| இருந்து உலகு உண்ட அம்மானை வானம் நான்முகனை |
– |
கட்டளைப்பட்ட ஜகத்தைக் காத்தருளின பெருமானாய் வானுலகத்தவனான சதுர் முகனை |
| மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை |
– |
மலர்ந்து குளிர்ந்த திருநாபிக்கமலத்திலே யுண்டாக்கின் ஆச்சரிய பூதனுமான |
| கோனை |
– |
ஸர்வேச்வரனைக்குறித்து |
| வண் குருகூர் வண் சடகோபன் |
– |
ஆழ்வார் |
| சொன்ன ஆயிரத்துள் |
– |
அருளிச்செய்த ஆயிரத்து னுள்ளும் |
| இப் பத்தும் |
– |
இத்திருவாய்மொழியானது |
| வானின் மீது ஏற்றி |
– |
பரமபதத்திலே ஏறவிட்டு |
| அருள் செய்து |
– |
பகவத் கைங்கர்ய ப்ராப்து யாகிற அருளைச் செய்வித்து |
| பிறவி மா மாயம் கடத்தினை முடிக்கும் |
– |
ஸம்ஸாரமாகிற ஆச்சர்ய நாடகத்தை முடித்துவிடும். |
ஆழ்வார்க்கு எம்பெருமான் விஷயத்திலுண்டான அச்சத்தைத் தீர்ப்பது இத்திருவாய்மொழியிலேயாதலால், அச்சமுண்டாவதற்குக் காரணமும் இங்கே ஒருவாறு தெரிவிக்கப்படுகின்றது –தேனை நன்பலைக் கன்னலை யமுதை யென்று.
இப்படி ஸர்வவித போக்யவஸ்துவாயிருக்கையாலே இதற்கென வருகிறதோவென்று அச்சமுண்டாகக் கூடுமென்றோ. அவ்வச்சம் கெட்டதற்கான ஹேதுவும் அடுத்தபடியாகச் சொல்லுகிறது திருந்துலகுண்டம்மானை யென்று.
ஜகத்தைப் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கி அச்சங்கெடுத்த பெருமான் திறத்திலேயோ நாம் அச்சங்கொள்வது! என்று அச்சந்தவிர்ந்தபடி.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகமானது தன்னைக் கற்கவல்லவர்களை முந்துறமுன்னம் ஸம்ஸாரத்தை யறுத்துப் பின்னை திருநாட்டிலே யேற்றுமென்று சொல்லவேண்டுவது முறைமையாயிருக்க இங்ஙனே சொன்னதன் சுவையை
நம்பிள்ளை வெளியிடுகிறார்காண்மின் –“நாடு அராஜகமானால் முன்னம ராஜபுத்ரன் தலையிலே முடியை வைத்துப் பின்னை விலங்கு வெட்டிவிடுமாபோலே“ என்று.
அதாவது, ராஜகுமாரன் ஏதோ குற்றங்கள் செய்திருந்தற்காகச் சிறையிலடைக்கப்பட்டு விலங்கிடப் பெற்றிருந்தான், திடீரென்று அரசன் முடிந்துபோக, சிறையில் கிடக்கும் ராஜபுத்திரன் தலையிலே முடிவைக்க வேண்டியதாயிற்று,
அப்போத, ஒரு நொடிப்பொழுதும் நாடு அராஜகமாயிருக்கக் கூடாதாகையாலே முன்னம் அவன் தலையிலே முடியை வைத்து பின்னை சிறை விடுவிப்பர்களாம். அதுபோலவென்க.
ஸ்தநந்தயப்ரஜைக்கு சிகித்ஸைபண்ணவேண்டி வந்தால், முலையை வாயிலேகொடுத்துச் சிகித்ஸை பண்ணுமாபோலேயென்கிற த்ருஷ்டாந்தமும் இங்குப் பொருந்தும்.
————————————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 13, 2022 at 11:07 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply