***- எம்பெருமானிடத்தில் ஆச்ரயிக்கின்ற அதிகாரிகளை யெல்லாம் ஆழ்வார் உற்றுநோக்கினார்,
எதற்காக வென்னில், எம்பெருமான் பக்கலிலே பரிவதற்கு நமக்குத் துணையாவார் ஆரேனுமுண்டோ? என்று பார்க்கைக்காக.
உற்று நோக்கின விடத்திலே ஐச்வர்யார்த்திகள் முந்துறமுன்னம் திருவுள்ளத்தில் பட்டார்கள்,
ஐயோ? இவர்கள் எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தையறிந்து பரிகையன்றிக்கே தங்களுக்கு அப்பெருமன் இஷ்ட ஸாதனமென்று கொண்டிருக்கிறார்களே! என்று வெறுத்து இவ்வெறுப்பை எம்பெருமான்றன்னையே நோக்கி யருளிச் செய்கிறார்.
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-
பதவுரை
| அங்கும் இங்கும் எங்கும் |
– |
மேலுலகங்களிலும் இவ்வுலகத்திலும் மற்றுமெவ்வுலகங்களிலுமுள்ள |
| வானவர் தானவர் யாவரும் |
– |
தேவர்கள் அசுரர்கள் முதலான யாவரும் |
| உன்னை இனையை என்று அறியகிலாது அலற்றி |
– |
உன்னை உள்ளபடி அறியப்பெறாது எதையோ சொல்லிக் கூப்பிட்டு |
| பூமகள் மண்மகள் ஆய் மகள் |
– |
ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி யென்னும் தேவிமார் |
| அங்கம் சேரும் |
– |
திருமேனியில் சேர்ந்திருக்கப்பெற்றார்களென்றும். |
| சங்கு சக்கரம் கையவன் |
– |
திருவாழி திருச்சங்குகளைத் திருக்கையிலேந்திய பெருமான் |
| சரணம் என்பர் |
– |
நம்முடைய ஆபத்துக்களைப் போக்கவல்லவன் என்றும் ரக்ஷ்கத்வ மாத்ரத்தையே அநுஸந்தித்திருப்பர்கள். |
அங்குமிங்கும் எங்கும் வானவர்தானவர்யாவரும் உன்னை இனையையென்று அறியகிலாது – மேலுலகங்களிலும் கீழுலகங்களிலும் மற்றுமுள்ள எவ்விடங்களிலுமிராநின்ற அநுகூலர்களான வானவர்களும் பிரதிகூலர்களான தானவர்களும், இவ்விரண்டுவகுப்பிலும் சேர்ந்தவர்களான மநுஷ்யாதிகளுமான யாவரும் எம்பெருமானே, உன்னை இப்படிப் பட்டவனென்று அறியாமல் என்றபடி.
உன்னுடைய ஸௌகுமார்யத்தை யறியாதவர்களாய் என்பது கருத்து
ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இப்போது அவனுடைய ஸௌகுமார்யமே உறைத்திருப்பதனாலும், அதனாலேயே தாம் அவன் பக்கலிலே பரியத்தேடுகையாலும் இவ்விடத்தில் இனையையென்று உன்னையறியகிலாது என்பதற்கு இதுவே பொருளாகத்தகும்.
“கருமுகை மாலைபோலேயிருக்கிற உன்படியறியாதே“ என்பது ஈடு.
எம்பெருமானுடைய ஸௌகுமார்யத்தை அவர்கள் அறியாதே செய்கிற காரியம் என்னவென்றால் (சரணமே யென்பர்) எம்பெருமானுக்கு ரக்ஷையிடப்பாராதே அவன் பக்கல் நின்றும் தாங்கள் ரக்ஷைபெறப்பார்ப்பர்கள்.
இன்னமும் அவர்கள் செய்வதெனென்னில், “பூமகள் மண்மகள்ளாய் மகள் அங்கஞ் சேரும், சங்கு சக்கரக்கையவன்“ என்றும் சொல்லுவர்கள்,
இப்படிச் சொல்வது நன்றுதானே, இதல் பிறகு ஒன்றுமில்லையே, இதை நித்தனைக்கு உறுப்பாக்குவதேன? என்னில்,
வாயற் சொல்லுகிறமகளோடுண்டான் சேர்த்திக்கும் சங்கு சக்கரக்கையவனான இருப்புக்கும் பல்லாண்டு பாடுகிறவர்களாயக் கொண்டு அந்த வாசகங்களைச் சொன்னார்களாகில் நன்றே,
பல்லாண்டு பாடும்படியான பரிவு அவர்களுக்கு இல்லையே,
தங்களுடைய இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் உறுப்பாக புருஷகார பூதர்களும் திவ்யாயுதங்களு முண்டு என்று ப்ரயோஜனத்தில் விருப்பத்தாலே சொல்லுகிற வாசகமாகையாலே அதுபற்றி ஆழ்வார் க்ஷேபித்துக் கூறுகின்றாரென்க.
அலற்றி – “ஐயோ! எம்பெருமானுக்கு என் வருகிறதோ!“ என்று வயிறெரியாதே அவனுடைய ரக்ஷகத்வத்தையும் சக்திபூர்த்தியையுஞ் சொல்லுகிற வசனங்களைக் கொண்டு அவற்றுவர்களாம் அவர்கள்.
* வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு * என்று அச்சேர்த்திக்கு மங்களா சாஸனம் பண்ணுவாரில்லை, கையும் திருவாழியுமான அழகை அநுபவிக்க இழிவாரில்லை, நம் விரோதிகளைத் துணித்து நம்மை ரக்ஷிக்கைக்கு வேண்டுவனவுண்டெள்று இவ்வளவே நினைத்து ஏதோ சப்தாசிகளை யலற்று கிறார்களே யென்று வருந்தியருளிச் செய்தாராயிற்று.
ஆறாயிரப்படியருளிச் செயல் – “ஸ்வர்க்காதிலோகங்களிலும் இந்த லோகத்திலும் மற்று மெங்கும் வர்த்திக்கிற தேவதாநவப்ரப்ருதி ஸமஸ்தாத்மாக்களும், ஏவம்பூதனென்று உன்னையுள்ளபடி யறியாதே, லக்ஷ்மீபூமி நீளரநாயகனாய் சங்கசக்ரகதாதரனாய் பரமப்ராப்யனாயிருந்த வுன்னைத் தங்களுக்கு உபாயமென்பர், ஆதலால் எனக்கு அவர்கள் துணையல்ல ரென்கிறார்.“
————
***- கீழ்ப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை நித்தித்துப் பேசினார், இப்பாட்டில் கைகல்யார்த்திகளை க்ஷேபித்துப் பேசுகிறார்.
ஆனால் மேலெழப் பார்க்குமளவில், இதில் பிறருடைய நித்தையிருப்பதாகப் புலப்படாது,
இரண்டாமடியில் “மரணந்தோற்றம் வான்பிணி மூப்பென்றியை மாய்த்தோம்“ என்று ஆழ்வார் தம்மைப்பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றாரேயல்லது முன்னிலையான வினைமுற்று காணவில்லையே,
தன்மையான வினைமுற்று, காண்கிறதேயல்லது முன்னிலையான வினைமுற்று காணவில்லையே யென்று பலரும் சங்கிக்க இடமுள்ளது.
ஆழ்ந்து குறிக்கொண்மின், முகுந்த மாலையில் * நாதேந புருஷோத்தமே * என்கிற ச்லோகத்தில் “யம்கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேசம் அல்பார்தத்தம் ஸேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் * என்றுள்ளது,
புருஷோத்தமனான எம்பெருமான் நலமந்தமில்லதோர் நாடுதருவானாய் நிற்க, ஐயோ! அறிவிலிகளான நாம் க்ஷுத்ரபலன்களைத் தருமலனான ஓர் அற்பனைத் தேடியோடுகின்றோமே! என்று ஆத்மநித்தையே இதிலுள்ளது,
ஆனாலும் இது தம்மைப்பற்றி இகழ்ந்து கூறுவதில் நோக்குடைய தன்று, பிறரையிகழ்ந்து கூறுவதிலேயே முழுநோக்கு.
உலக வழக்கிலும் இஃது உள்ளது. “நீங்கள் நன்றாக வாழ்ந்துவிட்டீர்களே!“ எனது பிறரை ஏசிச் சொல்லவேண்டுமிடத்து
“நாம்நன்றாக வாழ்ந்துவிட்டோமே!“ என்று தம்மையே ஏசிச் சொல்லுவதுண்டு. அந்த நியாயமே இங்குக் கொள்ளத்தக்கது.
சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2-
பதவுரை
| சரணம் ஆகிய நால்மறை நூல்களும் சாராதே |
– |
ஐச்வர்யத்திற்குரிய உபாயங்களை விதிக்கின்ற நால்வேதங்களாகிற சாஸ்த்ரங்களை விட்டிட்டு |
| கரணம் பல் படை பற்று அறு ஓடும் கனம் ஆழி |
– |
உபகரணங்களையுடைய், பல சத்ருஸேனைகள் நிச்சேஷமாக வோடும்படி ஜ்வலிக்கின்ற திருவாழியாகிற |
| அரணம் திண்படை ஏந்திய ஈசற்கு ஆள் ஆயே |
– |
க்ஷேமங்கரமான திவ்யாயுதத்தைத் தரித்துள்ள எம்பெருமானுக்கு சேஷபூதர்களாயிருந்து வைத்தே (முபுக்ஷுக்களாகியு மென்றபடி) |
| மரணம் தோற்றம்வான் பிணிமூப்பு என்ற இவைமாய்த்தோம் |
– |
இறப்பும் பிறப்பும் மஹாவியாதிகளும் கீழ்த்தனமுமான விவற்றைப் போக்கிக்கொண்ட வித்தனையொழிய வேறில்லையே. |
“கைவல்யார்த்திகளும் தமக்குத் துணையல்லரென்கிறார்“ என்பது இப்பாட்டுக்கு ஆறாயிரப்படியவதாரிகை.
கைவல்யார்த்திகளென்கிற பதமும் இப்பாட்டில் இல்லை, அவர்கள் துணையல்லர் என்பதைத் தெரிவிக்கும் வாசகமும் இதில் வியக்தமாக இல்லை, ஆழ்ந்து நேரக்குதலில் கிடைக்குமிது.
சரணமாகிய நான் மறைநூல்களுஞ் சாராதே என்றது –க்ஷுத்ரப்ரயோஜ்னங்களை விதிக்கும் முகத்தால் நமக்குத் தஞ்சமாகிய வேதசாஸ்த்ரங்களைப் பற்றி க்ஷத்ரப்ரயோஜனங்களை விதிக்கும் முகத்தால் நமக்குத் தஞ்சமாகிய வேதசாஸ்த்ரங்களைப் பற்றி க்ஷுத்ர பலன்களை ஸபித்துப் போகாதே என்றபடி.
இது வொருநன்மையே, இந்த நன்மைக்குமேல் மற்றொரு நன்மையுமுண்டு, அது, கரணப்பல்படை யென்று தொடங்கிப் பின்னிரண்டடிகளாற் சொல்லப்படுகிறது.
விரோதி நிரஸனத்தில் வல்லவனான திருவாழியாழ்வானைத் தாங்கியுள்ள எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தல் கைவல்ய நிஷ்டர்களுக்குமுண்டே, ஸாதநாநுஷ்டான தசையில் பகவத் ப்ராப்திகாமர்களுக்குப் போலே ஆத்மப்ராப்திகாமர்களுக்கும் பகவத்பஜனமுண்டாகையாலே.
ஆக, சரணமாகிய நான்மறைநூல்களும் சாராமலிருந்தும் ஈசற்கு ஆளாகியிருந்தும் மரணம் தோற்றம் வான்பிணிமூப் பென்றிவைமாய்த்தலாகிற ஜராமரணமோக்ஷிமே தவிர, பகவத் கைங்கர்ய ப்ராப்தியென்பது கேவலர்க்குக் கிடையாமையாலே அவர்களையும் க்ஷேபித்தாராயிற்று.
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பென்றிவைமாய்த்தீர்களே தவிர, வேறு அத்தாணிச் சேவகம் பெற்றீர்களில்லையே, ஆகையாலே நீங்களும் எனக்குத் துணையல்லீர் என்றதாக முடிந்தது.
கரணப்பல் படையித்யாதிக்கு இரண்டுவகையாகப் பொருள் நிர்வஹிப்பதுண்டு
கரணம் என்று உபகரணங்களைச் சொன்னபடியாய், யுத்தத்திற்கு வேண்டிய உபகரணங்களை யுடைத்தாய்ப் பலவகைப்பட்டதான படை –சத்ருக்களின் சேனையானது, பற்று அறமிச்சமில்லாமே, ஓடும்படி கனல்நின்ற திருவாழி –என்பது ஒரு வகையான பொருள். (
2) கரணம் என்று இந்திரியங்களுக்கும் பேராகையாலே, கரணப்பல்படை –இந்திரிய ஸமூஹமானது, பற்று அற-விஷயங்களில் பற்றற்று மீளும்படியாக, என்று மற்றொரு பொருள்.
இப்பொருளில், பற்றற என்பது ஆளாயே என்பதில் அந்வயிக்கும்
“ஓடுங்கனலாழியரணத்திண்படை யேந்திய ஈசற்கு, கரணப்பல்படைபற்றற ஆளாயோ” என்று இங்ஙனே அந்வ்யங்காண்க.
——————–
***- கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று.
இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-
பதவுரை
| ஆளும் ஆளார் |
– |
(கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை. |
| ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் |
– |
திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே |
| வாளும் வில்லும் கொண்டு |
– |
நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு |
| பின் செல்வார் மற்று இல்லை |
– |
பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே, |
| தாளும் தோளும் |
– |
திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு |
| கைகளை ஆர தொழ காணேன் |
– |
கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்) |
| ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன் |
– |
இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன். |
ஆளும் ஆளார் – எம்பெருமானுக்கு உபய விபூதியும் ஆளாயிருக்கச் செய்தேயும் அப்பெருமான் ஒரு சேவகனைத் தன்னிடம் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை யென்று வயிறு பிடிக்கிறாராழ்வார்.
எதனாலேயென்னில், (ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்) ஆள் இருந்தால் திருவாழி திருச்சங்குகளைத் தாமே சுமப்பரோ? மடாதிபதிகள் தம்முடைய த்ரிதண்டத்தையும் ஒரு கைங்கர்யபார் கையிலே கொடுத்துத் தாம் கைவீசிக்கொண்டு பேரகாநின்றார்களே
அவர்களுடைய திருமேனி அத்தனை ஸுகுமாரமானால் எம்பெருமானது திருமேனியின் ஸௌகுமார்யம் வாய்கொண்டு வருணிக்ப்போமோ? திருவாழி திருச்சங்கு முதலான திவ்யாயுதங்களைத் தாம் சுமக்கலாமோ? அவை சுமக்க ஆள்வைத்துக்கொள்ள வேண்டாவோ? என்கிறார்.
இங்கே நம்பிள்ளையீடு – விபூதித்வயத்திலும் பரிகைக்கு ஆளில்லை. தனியே ஒருவரை ஆளவேணுமென்றிருக்கிறார், நித்யஸூரிகள் பகவதனுபவத்திலே அந்யபரர், ஸம்ஸாரிகள் சப்தாதிகளிலே அந்யபரர், (ஆழியும் சங்கும் சுமப்பார்தாம்) ஆபரணமான திவ்யாயுதங்கள், அவன் ஸௌகுமார்யத்தாலே மலையெடுத்தாற் போலே சுமையாய்த் தோற்றுகிறது இவர்க்கு“
திருவாழி திருச்சங்குகள் எம்பெருமானுக்கு நிருபகங்களாகையாலே அவற்றை அவனே சுமந்தாக வேண்டுமேயல்லது பிறர் சுமக்கக்கூடுமோ? என்று சில பரவை காந்திகள் சொல்லுவதாகக் கொண்டு,
அதைவிட்டு, வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை என்று வேறொன்றிலே தோள்மாறுகிறார்.
ராமாவதாரத்திலே இளைய பெருமாள் * ப்ருஷ்டதஸ் து தநுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாம ஹ * என்னும்படியாக வாளும் வில்லுங்கொண்டு பின் தொடர்ந்து திரிந்தாரே, அப்படியொருவரைப் பின்னேகொண்டு செல்லலாகாதோ வென்கிறார்.
தாளுந் தோளும் கைகளையாரத் தொழக்காணேன் – பெருமாள் நடக்கும்போது மாறியிடுந் திருவடிகளும் வீசுகின்ற திருத்தோள்களும் காப்பிட வேண்டும்படி யிருக்குமே, அந்தோ, அவற்றுக்கும் மங்களா சாஸனம் செய்வாரில்லையே! என்கிறார்.
கைகளையார என்றது – கைகளார என்றபடி, ஐகாரம் – சாரியை.
தொழக் காணேன் – இன்னார் தொழ என்பது வியக்தமாக இல்லாமையாலே, பிறர் தொழக் காணேன் – இன்னார் தொழ என்பது வியக்தமாக இல்லாமையாலே, பிறர் தொழக் காணேன், நான் தொழும்படி காணேன் என்று இரண்டு வகையாகவும் கொள்ளலாம்.
ஆறாயிரப்படியில் – “தானெழுந்தருளும் போது அவன் திருவடிகளையும் திருத்தோள்களையும் என்னுடைய கைகளினுடைய விடாய் தீரும்படி தொழக் காணப்பெறுகிறலேன்“ என்று காண்கையாலே,
திருவடிகளையும் திருத்தோள்களையும் ஆழ்வார் தாம் தொழப் பெறாமே வருந்தியருளிச் செய்வதாகத் தெரிகிறது.
திருவடிகளுக்கும் திருத்தோள்களும் பரிகின்றவர்களைக் காணேன் என்கிற பொருளும் பொருந்தும்.
ஆக, கீழ் மூன்றடிகளாலும் பரிவர் இல்லாமைக்கு வருந்தி, இனி ஈற்றடியினால் தம்முடைய பரிவின் மிகுதியைக் காட்டுகின்றார்.
நாளும்நாளும் காடுவனடியேன் ஞாலத்தே என்று (ஞாலத்தே) இங்கே ஈடு இன்சுவை மிக்கது, “பரமபதத்திலேயிருந்து அஸ்தாநே பயசங்கை பண்ணுகிறானோ? ப்ரஹ்மாஸ்ர்த ப்ரயோகம் பண்ணுவார் நாகபாசத்தை யிட்டுக்கட்டுவார், அழைத்து வைத்து மல்லரையிட்டு வஞ்சிக்கத் தேடுவார், பொய்யாஸன மிடுவாராகிற தேசத்திலே வர்த்திய நின்றால் நான் அஞ்சாதே செய்வதென்?
——————-
***- கீழ்ப்பாட்டில் * வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை * என்று அஞ்சினவாறே,
எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! நம்மைப்பற்றி நீர் அஞ்சவேண்டுமோ!
நம்முடைய ஸர்வரக்ஷகத்வம்பெருமையை நீ அறியீரோ? என்று அப்பெருமையைக் காட்டிக் கொடுத்தான்,
(அதாவது) வடதளசாயி விருத்தாந்தத்தை நினைப்பூட்டினான்,
அதை யநுஸந்தித்துத் தம்முடைய தவளர்ச்சியை விண்ணப்பஞ்செய்கிறார் இதில்.
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-
பதவுரை
| ஓர் முற்றா உரு ஆகி |
– |
மிகச் சிறு பிராயமான வடிவையுடையையாய் |
| ஞாலம் போனகம் பற்றி |
– |
ஜகத்தையெல்லாம் அமுது செய்து |
| ஆல் பேர் இலை |
– |
ஆலினுடைய மிகச்சிறிய இலையிலே |
| அன்னவசம் செய்யும் அம்மானே |
– |
கண் வளர்ந்தருளுகிற ஸ்வாமியே! |
| கார் எழில் |
– |
காளமேகம் போன்றழகிய |
| உன் கோலம் |
– |
உனது வடிவழகை |
| காணல் உற்று |
– |
காணவேணு மென்றாசைப்பட்டு |
| ஆழும் |
– |
அதிலே ஆழங்காற்பட்டிருக்கின்ற |
| கொடியேற்கு |
– |
கொடியேனாகிற எனக்கு |
| பேர்வது ஓர் காலம் |
– |
நிகழ்கிற ஒரு க்ஷணாவகாச மானது |
| கார் இருள் ஊழி ஒத்து உளது |
– |
காடாந்தகாரம்மிக்க கல்பம் போலே நீள்கின்றது. |
ஞாலம் போனகம் பற்றி – ஆவிலையமர்ந்த பெருமானுக்கு உலகம் முழுவதும் உணவாயிற்று, இது நமக்கு ஸாத்மிக்குமா ஸாத்மியாதா? என்று கூட ஆராயாமல் பூமிப்பரப்பையெல்லாம் வயிற்றிலே எடுத்து வைத்துக்கொண்டமைக்கு வயிறெரிகிறார்.
அதற்கு “பாலன் தனதுருவாய் எபுலண்டு“ என்றதாயிற்று.
அதற்குமேலே ஆலம் பேரிலை அன்னவசஞ்செய்யும்மமானே! – பேரிலை என்றது எதிர்மறையிலக்கணையால் சிறிய இலை என்று வருமுறக்கத்திற்கு அன்னவச மென்று பெயர்.
வையமேழையுமுண்ட ஆயாஸத்தினால் திருக்கண்வளர்ந்தருள நினைத்தால் விசாலமானதோரிடத்தைக் கற்பித்துக் கொண்டு அதிலே * தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி * என்னும்படியே விசாலமாகக் கண்வளர்ந்தருளலாகாதோ?
மிகச்சிறியதாய் முகிழ்விரியாத்தான ஆலந்தளிரிலேயோ கிடப்பது? சரிந்து விழுந்தால் அந்தோ! என்னாகும்? என்று வயிறு பிழக்கிறார்.
அன்னவசஞ் செய்யு மென்றவிடத்து ஈடு, – “உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளும், யசோதைப் பிராட்டி தொட்டில் பண்ணும் வ்யாபார மெல்லாம் பண்ணுமாயிற்று அதுக்குள்ளே.“
இனி, பின்னடிகளால் தம்முடைய அச்சமிகுதியை விவரிக்கிறார்.
காரெழில் உன்கோலம் காணுலுற்று ஆழும் கொடியேற்கு, பேர்வதோர் காலம் காரிருள் ஊழியொத்துள்ளதால் என்று அந்வயிப்பது.
மங்களாசாஸனம் பண்ணுகைக்கு உனது அழகிய வடிவைக்காண ஆசைப்பட்டு அது பெறாதே நோவுபடுகிற மஹாபாபியானவெனக்கு ஒரு க்ஷணகாலமும் கல்பகோடிஸஹஸ்ரமாக நெடுகாநின்றது காண்! என்கை.
ஆறாயிரப்படி, – “ஓர் முற்றாவுருவாய் அந்தப்பிள்ளைத் தனத்தாலே ஸர்வ லோகங்களையும் அமுது செய்து, பெரிய வெள்ளத்திலே சிறியதோராலிலையிலே, யசோதைப்பிராட்டியைப் போலே யிருப்பாளொரு தாயாருமின்றியே தனியே கண்வளர்ந்தளுகிற தசையிலே துணையாயிருக்கப் பெறாமையாலும் உன் வடிவழகை. காணவாசைப்பட்டுப் பெறாமையாலும் அகாதமான துக்கார்ணவத்திலே நிமக்நனாயக் கிடக்கிற வெனக்கு ஒரு க்ஷணமானது அந்தகாரமயமான ராத்ரி யுகமாய்ச் செல்லுகிறதென்கிறார்.“
—————
***- கீழ்ப்பாட்டிலே * ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார்.
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5
பதவுரை
| கொடி ஆர் மாடம் |
– |
கொடிகள் நிறைந்த மாடங்களையுடைய |
| கோளுர் அகத்தும் புளிங்குடியும் |
– |
திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் |
| மடியாது |
– |
இடம் வலங்கொள்ளாமல் |
| இன்னே |
– |
இன்று காணும் விதமாகவே |
| நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் |
– |
நீ சயனத்தை விரும்பி மகிழ்ந்து திருக்கண் வளர்ந்தருள்வதானது |
| அடியார் அல்லம் தவிர்த்த அசவோ |
– |
(பல திருவ்வதாரங்கள் செய்து) அடியார்களின் துன்பங்களைப் போக்கின சிரமத்தினாலோ? |
| அன்றேல் |
– |
அல்லது |
| இப்படி |
– |
இப்பூமியை |
| நீண்டு தாவிய அசவு தானோ |
– |
ஓங்கியுளந்த சிரமத்தினாலோ? |
| பணியாய் |
– |
கூறியருளவேணும். |
இப்பாட்டில் திருக்கோளூரையும் திருப்புளிங்குடியையும் பிரஸ்தாவித்தது மற்றுமுள்ள சயனத்திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம்.
* நாகத்தணைக் குடந்தை வெஃகாத்திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில் * என்று திருமழிசைப்பிரானும்,
* அரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை * என்று திருமங்கை மன்னனும் தொடுத்தருளின சயனத்திருப்பதிகள் பலவும் இங்கே விலக்ஷிதமாகலாம்.
இத்திருப்பதிகளிலே ஆடாமல் அசையாமல் நீ திருக்கண்வளர்ந்தள்வதற்கு என்ன காரணம்? மஹத்தான சிரம்மோ?
திருவடிகளிலே சரணம் புகுந்த இந்திராதி தேவர்களுக்காக ராவணாதிகளை அழியச்செய்து அவர்களது துக்கங்களைப் போக்கின. விளைப்போ? அன்றியே, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து. ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலகமெல்லாம் தாவியளந்த சிரம்மோ? என்கிறார்.
இவ்விடத்தில் * நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலமேனமாய் இடந்த மெய்குலங்கவோ? * இத்தியான திருச்சந்த விருத்தப்பாசுரம் நினைக்கத் தக்கது.
கொடியார் மாடம் – மாடங்களுக்கு கொடிகட்டியிருப்பதும் ஆழ்வார்க்கு அச்சத்தை விளைக்கிறதென்று நம்பிள்ளை திருவுள்ளம்பற்றி யருளிச் செய்யுமழகு பாரீர் – “சத்ருக்கள், கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி கொடி கட்டிக்கொண்டு கிடக்கவேணுமோ? கொடிக்கு பயப்படவல்லார் இவரைப் போலில்லை, கம்ஸபயத்தாலே ஒளித்துவளர்ந்தாப்போலே யிருக்கலாகாதோ?“ என்பன ஈட்டு ஸ்ரீஸூக்திகள்.
இந்தப்பதிகம் பயம்மிக்கு அருளிச் செய்வதாகாயாலே இங்ஙனே பொருள் பணித்தது இன்சுவை மிக்கதேயாம்,
“ஆச்ரிதர்க்கு ஆத்மதானம் பண்ணுகைக்குக் கொடிகட்டிக்கொண்டிருக்கிற திருக்கோளூரிலும் என்பது ஆறாயிரப்படியருளிச்செயல்.
மடியாது – உலகில் உறங்குமவர்கள் சற்று இடது பக்கமாயும் சற்று வலது பக்கமாயும் மாறிமாறியசைந்து கிடப்பதுண்டே, அப்படி ஒருபோதும் அசையாமல் என்றபடி.
இதற்கு மற்றொரு பொருளும் அருளிச் செய்யப்படுகிறது. திருப்பதிகளிலே எம்பெருமான் இப்படி திருக்கண்வளர்ந்தருள்வதானது நமக்காகவன்றோ வென்று இந்நிலவுலகத்தவர்கள் வரிந்து ஈடுபட வேண்டுமே, அப்படி ஒருவரம் ஈடுபடக்காணாமையாலே எம்பெருமான் இக்கிடையைவிட்டு எழுந்துபோக வேண்டியதன்றோ ப்ரரப்தம், அப்படியெழுந்து போகாமே, என்றேனுமொருநாள் யாரேனு மொருவர் பரியக்கூடுமென்று கிடக்கிறானாகச் சொல்லுகிறபடி. அசவு –அயர்வு.
————–
***- கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய சயனத்தை நினைத்து பரிந்து பேசின ஆழ்வாரை நோக்கி
“நீர் இப்படி துடிக்கக் கடவீரோ? அவன் ஸர்வரக்ஷகனன்றோ, என்று சொல்ல,
அதற்கு “நிர்யஸூரிகளின் பரிவுக்கு இலக்கானவ்வன் ஸம்ஸாரத்திலே அவ்வடிவோடே வந்து உலாவாநின்றால் நானிப்படி துடிக்காமலிருக்க முடியுமோ? வேறு எம்பெருமானைத் தவிர வேறுயாரையும் ஒருநாளும் பணிந்தறியாத அமரர்களன்றோ நித்யஸூரிகள். அவர்களுடைய பணிவுக்கும் ஞானம் முதலிய குணங்களுக்கும் தாமே இலக்காயிருக்குமவர் என்றபடி.
ஆறாயிரப்படியில் நிர்வாஹம் வேறுவகையாகவுள்ளது, “ஸ்வாச்ரித சதுர்முகாதி தேவர்களுக்கு ஸ்வேதரஸகல ஜநாபிவந்த்யத்வ நிரதிசயஐச்வர்யப்ரதனாய்“ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல்.
நான்முகன் முதலிய தேவர்களுக்கு தங்களைப் பலரும் பணியும்படியான பெருமையையும் செல்வங்களையும் அளித்தவன் என்பது கருத்து,
வணங்காமை என்கிற தன்மைசிலரிடத்திலே ஹேயமாகவும் சிலரிடத்திலே சிறப்பாகவும் சொல்லப்படும்.
வணங்குவதற் கென்றே பிறந்த நம் போல்வார் வணங்காதிருந்தால் அது “வணங்காமன்னன்“ என்றும் “வணங்கலி லரக்கன்“ என்றும் சொல்லும்படியாகி ஹேயமாகும்.
தேவதைகளாகவுள்ளவர்கள் எம்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க வேண்டியவர்களல்லாமையாலே பணியாவமார் என்றது பொருந்தும்.
பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6-
பதவுரை
| பணியா அமரர் |
– |
எவரையும் பணிய வேண்டாத நித்ய ஸூரிகளினுடைய |
| பணிவும் பண்பும் தாமே ஆம் |
– |
பணிவுக்கும் ஞானும் முதலிய குணங்க்களுக்கும் தாமே இலக்காயிருபவரும் |
| அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்துமவர் |
– |
ஆபரணமாப் பொருந்திய திருவாழி திருச்சங்குகளைத் தாங்கி நிற்பவருமான அப்பரமபுருஷ |
| பணியா வெம் நோய் தவிர்ப்பான் |
– |
ஒருகாலும் தணியாத வெவ்விய நோய்களைத் தவிர்பதற்காக |
|
திரு ஆர் நீலம் மணி மேனியோடு |
||
| திரு ஆர் நீலம் மணி மேனியோடு |
– |
அழகியதாய் நீலமணி போன்றதான வடிவோடுகூட |
| என் மனம் சூழ உலகில் வருவார் |
– |
என்மனம் பிரமிக்கும்படியாக இவ்வுலகில் வந்து உலாவுவார் |
அணியாராழியஞ் சங்கமு மேந்துமவர்காண்மின் என்றதன் உட்கருத்தை நம்பிள்ளை கண்டறிந்து வெளியிடுகிறபடி பாரீர், “ஸர்வாபரணமும் தானேயாகப் போரும்படியான திவ்யாயுதங்களைத் தரித்து நித்யஸூரிகளுக்குக் காட்சி கொடுத்தால் அவர்களும் அஸ்தாநே சங்கைண்ணி மங்களாசாஸனம் பண்ணும்படியாயிற்று இருப்பது.“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
இங்கே ஆழ்வார் துடிக்கிறதுடிப்பு திருநாட்டிலே நித்யஸூரிகளுக்கு முண்டாயிருக்குமென்றபடி.
அஞ்சுவதற்கு நிலமல்லாத திருநாட்டிலேயே அப்படியானால் இந்நிலத்திற் சொல்ல வேணுமோவென்கிறார் பின்னடிகளில்.
உலகில் என்பதை மூன்றாமடியிலும் அந்வயிக்கலாம். நான்காமடியிலும் அந்வயிக்கலாம்.
அதாவது, “உலகில் தணியாவெந்நோய் தவிர்ப்பான்“ என்பது ஒரு அந்வயம்,
உலகில் வருவார்“ என்பது மற்றொரு அந்வயம். தாபத்ரயம் முதலான துக்கங்கள் தணியாவெந்நோயென்படுகிறது.
திருநீலமணியார் மேனியோடு – அப்பெருமான் அவ்விபூதியைவிட்டு இவ்விபூதியிலே வரவேண்டினால் நீலமணி போலே ச்ரமஹரமாய் ஸூகுமாரமான அவ்வடிவோடே வரவேணுமோ?
அப்படி வருகையால் என் என்மனம் சுழற்சியடைகின்றது என்பதை என்மனம் சூழ என்பதனால்காட்டினபடி.
—————–
***- இங்கே வந்து திருவண்பரிசாரத்திலே யெழுந்தருளியிருக்க, அந்தோ! நான் உதவப்பெற்றிலேனே,
இது கிடக்க, இங்ஙனே ஓரடியானுள னென்று அவனுக்கு அறவிப்பாருமில்லையேயென்று துடிக்கிறார்.
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-
பதவுரை
| வருவார் செல்வார் |
– |
அந்தப்பக்கத்தில் நின்றும் வருபவர்களும் இந்தப்பக்கத்தில் நின்றும் போமவர்களுமான மனிசர்கள் |
| வண் பரிபாசுரத்து இருந்த |
– |
திருவண்பரிசாரத்திலெழுந்தருளிருக்கிற. |
| என் திருவாழ் மார்வர்க்கு |
– |
என்னுடைய திருமாலுக்கு |
| உரு ஆர்சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று |
– |
வடிவழகார்ந்த திருவாழி திருச்சங்குகளைச் சுமந்து கொண்டு இங்கு உம்மோடு ஒரு பக்கத்திலிருந்து கொண்டு திரியுமடியானொருவனிருக்கின்றானென்று. |
| என் திறம் சொல்லார் |
– |
என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுகின்றிலர் |
| செய்வது என் |
– |
(இதற்கு) நான் செய்யக் கூடியது என்னோ? |
வருவார் செல்வார் – ஆழ்வார் திருப்புளியடியிலே யெழுந்தருளி யிருந்தன்றோ இப்பாசுரமருளிச் செய்கிறார்,
திருநகரத் திருவீதியிலே போவாரும் வருவாருமான வழிப்போக்கர்களுண்டே, அவர்கள் ஸம்ஸாரிகளாய்த் தங்கள் காரியங்களுக்காகப் போவதும் வருவருமா யிருந்தாலும் ஆழ்வாருடைய நினைவு அப்படியன்று,
திருவண்பரிசாரம் ஸேவிக்கப்போகிறார்கள், திருவண்பரிசாரம் ஸேவித்து மீளுகிறார்கள் என்றே இவர் நினைத்திருப்பது,
இங்கே ஆறாயிரப்படி – “ஸ்வகார்யார்த்தமாகப் போகிறோம் வருகிறாரும் திருப்பாரிசாரத்தேறப்போகிறாராகவும் வருகிறாராகவும் நிச்சயித்து“ என்று.
இனிஈட்டு ஸ்ரீஸூக்தி, -ஸ்வகார்யத்தாலே த்வரித்துப் போவாரை தம் தசையை யறிவிக்கப் போகிறார்களென்றும், அங்கு நின்றும் வருவாரை தம்மையழைக்க வருகிறார்களென்றுமிருப்பர்.“
தம்மை யழைக்க வருகிறார்களென்று இவர் நினைத்திருந்தபடி ஒருவரும் தம்மருகே வரக்காணாமையாலே இவர்கள் திருப்பரிசாரத் தெம்பெருமா னிடத்திலே நம்மைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை போலும்,
அதனால்தான் அப்பெருமான் நியமிக்கவில்லை போலும் என்று அறுதியிட்டு “திருவாழ்மார்பர்க்கு என்திறம் சொல்லார் செய்வதென்?“ என்கிறார்.
என்னவென்று சொல்ல விருப்பமென்னில், பின்னடிகள் முழுவதும் அந்தச் சொல்லின் அநுவாதம். “பரிவர் ஒருவருமில்லாதிருக்கிற இந்த ஸம்ஸார மண்டலத்திலே சங்குசக்கரங்களைச் சுமந்து கொண்டு உம்மோடே ஒரு பக்கத்திலே கூடவே திரியுமடியா னொருவன் திருநகரியிலே திருப்புளியடியிலேயுளன்“ என்று சொல்லவேணுமாம்.
ஒருபாடுழல்வானென்கிறாரே, ஒருபக்கத்திற்கு ஆழ்வாரானால் மற்றொரு பக்கத்திற்கு ஆர்? என்று கேள்வி பிறக்குமே.
இதற்கு நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “ஒரு பார்ச்வத்துக்கு இளைய பெருமாளுண்டிறே“ என்று.
ஓரடியான் வென்றது – அநந்ய ப்ரயோ ஜநனான தாஸன் என்றபடி. * வாஸுதேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப என்றெண்ணி யிருக்கிற எம்பெருமான் பக்கலிலே சென்று, இப்படிப்பட்ட மஹாத்மா துந்லப ரல்லர், ஸுலபரேயாயினர், திருப்புளியடியிலேயுளர் என்று சொல்லவேணுமாம்.
————-
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8-
பதவுரை
| ஏழ் குன்று |
– |
குலபர்வதங்களேழையும் |
| எழ் பார் |
– |
தீவுகளேழையும் |
| சூழ் |
– |
சூழ்ந்த |
| கடல் |
– |
ஸமுத்ரங்களையும் |
| ஏழ் ஞாலமும் |
– |
ஏழுலகங்களையும் |
| முழு |
– |
முழுக்க |
| நின்றே தாவிய |
– |
நின்ற நிலையிலே நின்று ஆக்கிரமித்துக்கொண்ட |
| நீள் கழல் |
– |
நெடிய திருவடிகளை யுடையையாய் |
| ஆழி |
– |
திருவாழியையுமுடையையான |
| திருமாலே |
– |
திருமகள் கொழுநனே! |
| என்னை |
– |
அடியேனை |
| கோலம் திருந்து அடி கீழ் |
– |
தேவரீருடைய அழகு விஞ்சின திருவடிகளின் கீழே |
| நின்றே ஆள் செய்ய |
– |
நிலைநின்று அடிமை செய்வேனாம்படி |
| நீ கொண்டருள நினைப்பது தான் என்றே |
– |
தேவரீர் அங்கீகரிக்கத் திருவுள்ளம்பற்றுவது என்றைக்கோ? |
***- தமக்காகப் பிறர் ஒருவாய்ச் சொல்கூடச் சொல்லுகின்றிலரே யென்று கிலேசப்பட்டார் கீழ்ப்பாட்டில்.
“பிறர்கதை கிடக்கட்டும், எம்பெருமான்றன்னையே கேட்போம் என்று துணிந்து “உன் திருவடிக்கீழே பரிகைக்கு நிலையாளாக என்னைக் கொள்வது என்றைக்கு? என்று அவனையே கேட்கிறார்.
இவர் கேட்பதற்கு முன்னமே எம்பெருமான் “ஆழ்வீர்! உம் அபேக்ஷிகம் செய்கிறோம்“ என்று ஆபிமுக்கியம் தோற்ற நிற்க,
என்றே? என்கிறார், அந்த நாளைக் குறிப்பிட்டாலாகாதோ வென்கிறார். எதற்கு நாள் குறிப்பிட வேணுமென்ன, என்னை யென்று தொடங்கி அதைச் சொல்லுகிறார்.
என்னை யென்றது – உன்னோடு கூடவே யிருந்து உனக்கு ஸதா மங்களாசாஸனம் பண்ணியல்லது தரித்திருக்க கில்லாத வென்னை யென்றபடி.
(உன் ஏரார் கோலத் திருத்தடிக்கீழ்) உன்திருவடிகளின் பரமபோக்யதையை நினைத்துக்கொண்டால் அத்திருவடிகளின் நிழலும் ரேகையுமாக விருப்பதன்று, தனிப்பட வொரு பொருளாக இருக்க என்னாலாகுமோ என்கிறார்.
திருவடிகளுக்கு ஏரார் கோலமாவது – * சங்காதாங்க கல்பகத்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்சனங்களை யுடைத்தாயிருக்கை.
திருந்து என்றது – அடியார்களைத் திருத்திப்பணி கொள்ளவல்லமையைச் சொன்னபடி,
அதாவது –ஒரு ப்ரயோஜனத்திற்காக வந்து சேர்ந்தவர்களையுங் கூட தம்கையாம்.
இப்படிப்பட்ட திருவடிகளின்கீழே நின்றேயாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது என்றே? –
நானாக அடிமை செய்யப்புகுவது புருஷார்த்தமன்றே, ஆனை கிடக்க, அதன்மேல் நீர்மாக ஏற நினைக்குமாபோலே யாகுமன்றோ வது,
* க்ரியதாமிதி மாம் வத * என்றும் * ஏவ மற்றமாராட் செய்வார் * என்றுஞ் சொல்லுகிறபடியே ஏவிப் பணிகொள்வதன்றோ சீரியது,
அங்ஙனே செய்யத் திருவுள்ளம்பற்றி யிருக்கும் நாள் எதுவோவென்று கேட்கிறார்.
நின்றேயாட் செய்கையாவது – ப்ரயோஜநாந்தரங்களில் நெஞ்சு செல்லாமல் ததேக ப்ரயோஜநத்வபுத்தி நிலைநிற்கப் பெற்று கைங்கரியம் பண்ணுகை.
ஆழ்வார் இங்ஙனே கேட்கவும் எம்பெருமான் மறுமாற்ற மொன்றுஞ் சொல்லாமையினாலே “ஒரு கைம்முதலு மில்லாதவுமக்கு நானென்ன சொல்லுவது“ என்றிருந்தானாகக் கொண்டு, தாவியன்றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்டாயே, அது யாரிடத்தில் என்று கைம்முதல்கண்டு செய்தது? என்று கேட்பார் போலப் பின்னடிகளருளிச் செய்கிறார்.
திருவண் பரிசாரத்திலெழுந்தருளி யிருக்கிற விருப்புக்கே நான் பரிய வேண்டி யிருக்க, அதற்குமேலே அதிமாநுஷமான செயலையும். நீ செய்தருளினால் நான் பரியாதிருக்க முடியுமோ வென்னுமபிப்ராயத்தாலே உலகளந்த சரிதையை எடுத்துரைக்கிற ரென்னவுமாம்.
ஸப்தகுல பர்வதமென்ன, ஸப்த த்வீப மென்ன, அவற்றைச் சூழ்ந்த ஸப்தஸமுத்ரமென்ன, இப்படி ஏழுவகைப்பட்ட பூமியை யெல்லாம் நின்ற நிலையிலே நின்றளந்து கொண்டருளும்படி நீண்ட திருவடிகளை யுடையாய்! கையுந் திருவாழியுமான திருமாலே! ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு கல்லுங் கரடுமான பூமியை யளந்து கொண்ட சிரமந்தீர சிசிரோபசாரம் பண்ணப் பெறும் நாள் என்று? என்று கேட்டாராயிற்று.
—————-
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9-
பதவுரை
| திருமால் |
– |
திருமாலே! |
| நான் முகன் செஞ்சடையான் என்ற இவர்கள் யார் |
– |
பிரமனென்றும் ருத்திரனென்றும் சொல்லப் படுகிறவர்களில் யார்தான் |
| எம்பெருமான் தன்மையை |
– |
எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யாதி ஸ்வபாவத்தை |
| அறிகீற்பார் |
– |
அறியவல்லார்? |
| பேசி என் |
– |
இது சொல்லி என்ன ப்ரயோஜனமுண்டு? |
| ஒரு மா முதல்வா |
– |
விலகணான பரமகாரணமானவனே! |
| ஊழி பிரான் |
– |
காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்வாமியானவனே! |
| என் காதல் கலக்க |
– |
என்னுடைய ப்ரேமமானது நெஞ்சைக்கலக்க |
| என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன் |
– |
என்னையடிமை கொண்ட கரியகோலத் திருவுருவனே! என்று இவ்வளவே யன்றோ நானும் சொல்ல வல்லேன். |
***- ஆழ்வீர்! நமக்குப் பரியப் பிரமன்முதலான தேவர்களுண்டாயிருக்க நீர் இப்படி அஞ்சுவானேன்? என்று எம்பெருமான் கேட்க,
அவர்கள் உன்னுடைய ஸௌகுமார்ய மறியப் பிறந்தவர்களோ வென்கிறார்.
முதலடி “திருமால் நான்முகன் செஞ்சடையானென்றிவர்கள்“ என்றிருக்கையாலே
“திருமாலென்ன, நான்முகனென்ன, செஞ்சடையானென்ன ஆகிய இவர்கள்“ என்று இங்ஙனம் விபரீதமான பொருளே நெஞ்சில்பட்டுவிடும்,
இப்படியன்று பொருள். திருமால் என்றது விளி, திருமாலே! என்றபடி.
நீயும் பிராட்டியுமான சேர்த்திக்கு மங்களாசாஸனம் பண்ணுவர்களோ அவர்கள்! என்பது உட்கருத்து.
நான்முகன் ஸ்ருஷ்டிக்கு உறுப்பான பல முகங்களை யுடையனாய் அதிலே போதுபோக்கித்திரியா நின்றான்.
செஞ்சடையான் ஸாதகவேஷத் தோற்றச் சடைபுனைந்து தன் அபிமதலாபத்திலே கண்வைத்துக் கிடவாநின்றான்,
ஆக இவர்களும் இவர்களது வகுப்பிலே சேர்ந்த மற்றுள்ளவர்களும் எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யத்தை யறிய வல்லவர்களோ? இதைப்பற்றிச் சொல்லி என்னபயன்?
அவர்கள் நம்மை யறியமாட்டார்களாகில் அறிந்த நீர் பேசிக் காணீரென்று எம்பெருமான் ஆழ்வாரை நோக்கிக்கூற,
என்னால்தான் பேசலாயிருந்த்தோ வென்கிறார் பின்னடிகளில்,
நான் பேசக்கூடியதும் “ஒருமாமுதல்வனே! ஊழிப்பிரானே! என்னையாளுடைக் கருமேனியானே!“ என்று இவ்வளவே யன்றோ,
உன் ஸௌகுமார்யமறிந்து பேசவல்ல தன்மை என்திறத்தில் தானுண்டோ? என்கிறார்.
இங்கே ஈடு, (என் காதல் கலக்கவே) என்னுடைய ப்ரேமமானது நான் அஞ்சும்படி கலங்கப்பண்ண, உன்வடிவழகிலும் மேன்மையிலும் கலங்கிச் சொன்ன வத்தனை போக்கி உன் ஸௌகுமார்யத்தை எல்லைக்கண்டு சொன்னேனல்லேன், ப்ரேமாந்தனாய்க் கொண்டு சொன்னேனத்தனைபோக்கி நெஞ்சொழிந்து சொன்னேனல்லேன், ப்ரயோஜநாந்தரபரரான ப்ரஹ்மாதிகள் பரிவும் உனக்கு ஸத்ருசமன்று, ப்ரேமாந்தருனான என்பரிவும் உனக்கு ஸத்ருசமன்று என்றதாயிற்று.
————–
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-
பதவுரை
| கலக்கம் இல்லா நல்தவம் முனிவர் |
– |
ஸம்ஸாரக் கலக்கமற்ற நல்ல தபஸ்விகளான ஸனகாதிமுனிவர்களென்ன, |
| கரை கண்டோர் |
– |
ஸம்ஸாரத்தைக் கடந்து அக்கரை சென்ற முக்தர்களென்ன, |
| துளக்கம் இல்லா வானவர் |
– |
ஒருகாலும் ஸ்வரூப விபர்ய யமடையாதவர்களான நிர்யஸூரிகளென்ன, |
| எல்லாம் |
– |
ஆகய இவர்களெல்லாரும் |
| தொழுவார்கள் |
– |
பரிவுபூண்டு மங்களாசாஸனம் பண்ணுமவர்களாயிராநின்றார்கள், |
| மா கடல் தன்னை |
– |
பெருங்கடலை |
| மலக்கம் எய்த கடைந்தானை |
– |
கலங்கும்படி கடைந்த பெருமானை |
| நாம் உலக்க புகழ் கிற்பது |
– |
அற்பரான நாம் ஒரு முடிவுகண்டு புகழ்ந்தோமாவது |
| என் செய்வது |
– |
கைகூடுமதோ? |
| உரையீர் |
– |
சொல்லுங்கோள். |
***- ஆழ்வாருடைய அச்சத்தைப் பரிஹரிக்கைக்காக எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “நமக்கு ஸநகாதிகள் முக்தர்கள் நித்யஸூரிகள் ஆகிய விவர்கள் கிட்டிநின்று பரிகிறார்கள், அதுதவிர, நாமும் அரிய செயல்களும் செய்யவல்லோமான பின்பு நீர் நமக்கு அஞ்சும் வேண்டா காணும்“ என்றருளிச் செய்ய,
ஆழ்வார் அச்சந்தீர்ந்து அத்தை யநுஸந்தித்து இனியாராகிறார்.
இவ்விஷயம் ஆழ்வார்க்கு முன்பே தெரியாதோ? இப்போதுதான் தெரியுமோ? என்று சிலர் கேட்கக் கூடுமென்று கொண்டு
இங்கே நம்பிள்ளையருளிச் செய்கிறார் – “இவர் தமக்கு இன்னபோது இன்னது பயஹேதுலாம், இன்னபோது இன்னது பரிஹாரமாம் என்று தெரியாதிறே“ என்று.
கலக்கமில்லா நல்தவமுனிவர் –மஹாதபஸ்விகளான ஸநகாதிகள்.
கரைகண்டோர் – ஸம்ஸார நிலத்தைக்கடந்து மோக்ஷ பூமியைக் கண்டவர்களான முக்தர்கள்.
துளக்க மில்லாவானவர் – ஒருகாலும் ஸம்ஸாரஸ்பர்சமே யில்லாதவர்களான நித்யஸூரிகள்,
ஆகிய இவர்கள் ளெல்லாரும் மங்களாசாஸன பரர்களாயிருக்கின்றார்க ளென்று எம்பெருமானுணர்த்தியதை அநுவாதம் பண்ணினபடி முன்னடிகள். இரண்டாமடியின் முடிவில் தொழுவார்களென்றது மங்களா – சாஸனம் பண்ணுவர்களென்ற பொருளில் பிரயோகிக்கப்பட்டது.
இப்படி மங்களா சாஸனபரர் குறையற்றிருக்கும்போது நமக்கென்ன பணியென்று தலைக்கட்டுகிறார் பின்னடிகளால்.
—————-
***- இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுடைய தனிமைக்கண்டு அஞ்சவேண்டும்
நிலமான ஸம்ஸாரத்திலே பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.
உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11-
பதவுரை
| உரையா வெம்நோய் தவிர |
– |
வாய்கொண்டு சொல்லாவொண்ணாதபடி வெவ்விய கலக்கமாகிற நோயானது தீரும்படி |
| அருள் |
– |
க்ருபை செய்தருளின |
| நீள் முடியானை |
– |
ஸர்வாதிக சேஷியானவனைக்குறித்து, |
| வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் |
– |
மலைபோன்ற மாடங்கள் பொருந்திய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய |
| உரை எய் சொல்தொடை ஓர்ஆயிரத்துல் இபத்தும் |
– |
ஸ்ரீ ஸூக்தியாயமைந்த ஆயிரம் பாசுரங்களினுள்ளும் இப்பதிகத்தை |
| நிரையே வல்லார் |
– |
அடைவுபட ஓதவல்லவர்கள் |
| நீடு உலகத்து பிறவா |
– |
கடல் சூழ்ந்த மண்ணுலகில் இனியொருநாளும் பிறக்க மாட்டார்கள். |
அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநனான எம்பெருமானுக்கு என் வருகிறதோவென்று அஞ்சினவிது விலக்ஷணமான நோயாகையாலே உரையா வேந்நோய் என்கிறார்.
வாய்கொண்டு உரைக்க முடியாததான வெவ்விய நோய் என்றபடி.
இது தவிரும்படியான அருள்செய்தானாயிற்று உபய விபூதிநாதனான ஸர்வேச்வரன்.
இவ்விடத்தில் நீண் முடியானை யென்றருளிச் செய்தற்கு அம்மங்கியம்மாளென்னு மாசிரியர் ஓர் இன்சுவைப்பொருள் கூறுவராம்,
“ஆழ்வாருடைய அச்சம் தீரும்படி உம்முடைய வபேக்ஷிதம் செய்கிறோமென்று தலைதுலுக்கினான் போலும்“ என்று.
ப்ரக்ருதத்தில் ஆழ்வார்க்கு அபேக்ஷிதம் செய்கையாவது * ஆளுமாளார் ஆழியுஞ்சங்கும் சுமப்பார்தாம் * என்ற இழவுநீர் ஆழியும் சங்கும் சுமக்கவல்ல ஆள்களை ஆளுகையாம்.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 13, 2022 at 8:16 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply