***- தலைமகள் மேனிமெலிந்து வாடிக்கிடக்கிறபடியைக் கண்ட தோழிகள் நீ இங்ஙனேயானமைக்குக் காரணமென்? சொல்லாய் என்ன,
இவள் வெட்கத்தாலே ஒன்றுஞ் சொல்லாதிருக்க,
“நங்காய்! உகவாத பிறர்க்கன்றோ வெட்கப்படவேண்டுவது, எங்களுக்கு வஜ்ஜிக்கவேணுமோ?
உனது உள்ளத்திலுள்ளதை உள்ளபடி சொல்லலாகாதோ“ வென்று தோழியர் நிர்ப்பந்தித்துக்கேட்க,
பிறர்க்கு மறைத்து உங்களுக்குச் சொல்லலாம்வார்த்தை ஒன்றும் எனக்குத் தோன்றவில்லையே,
எனது நிலைமையை நீங்கள் கண்ணால் காண்கின்றீகளன்றோ,
திருவேங்கடமுடையானைச் சென்று தொழுதுவருவோமென்று நினைத்தவனவிலே
இந்நிலையெய்தினேன் காண்மின் என்று அவர்களுக்கு மறுமாற்றமுரைப்பதாயிராநின்றது இப்பாட்டு.
நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-
பதவுரை
| வரி வளை நங்கன் ஆயங்காளோ |
– |
அழகியவனையணிந்த நம்முடைய தோழிகளே! |
| நம்முடை ஏதலர் முன்பு நாணி |
– |
நம்மிடத்துப் பகைபாராட்டுகின்ற தாய்மாரின் முன்புசொல்ல வெட்கப்பட்டு |
| நுங்கட்கு யான் உரைக்கும் மாற்றம் ஒன்றுநோக்குகின்றேன் |
– |
உயிர்த் தோழிகளான வுங்களுக்கு மாத்திரம் செவிப்படும்படி நான் ஒரு வார்த்தை சொல்லப்பார்க்கின்றேன், |
| எனக்கும் காணமாட்டேன் |
– |
ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் பாசுரமிட்டுச் சொல்லும் வழி அறிகின்றிலேன், (ஆகிலும் சொல்லுகேன் கேண்மின்) |
| வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் |
– |
வெவ்வியபார்வையையுடைய பெரிய திருவடியை நடந்துமவனாய் அஸ்மத்ஸ்வாமியான |
| வேங்கடம் வாணனை வேண்டிசென்று |
– |
திருவேங்கடமுடையானைக் காணவாசைப்பட்டுப் புறப்பட நினைத்ததுவே காரணமாக |
| சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் |
– |
கைவளைகள் கழன்றனவென்னும்படி இளைத்தேன், மேனியொளியை இழக்கப்பெற்றேன் |
| தடமுலை பொன்நிறம் ஆய் தளர்ந்தேன் |
– |
தடமுலைகள் பசலைநிறம்பூச்சுப்பெற்று உடலும் தளர்ந்தவளாளேன். |
ஆயங்களோ வென்றது தோழிகளே! என்றபடி. அவர்களுக்கு வரிவனையென்று விசேஷணமிட்டது ஒரு கருத்தோடு கூடியது.
சுகமோ துக்கமோ நமக்கு ஒத்திருக்கவேணுமென்று பலகாலும் சொல்லிவந்த நீங்கள் இப்போது கைவளை கழலாதிருப்பதும் நான் வளைகழன்றிருப்பதும் கண்டீர்களன்றோ, தோழிகளான நிங்கள் இப்படியிருக்கத்தகுமோ? என்பது கருத்து,
ஆனால் ஸுக துக்கங்களை ஸம்மாகக் கொண்டிருக்கிற தோழிகள் இப்படி இருப்பதற்குக் காரணமென்? இவள் வளை யிழந்திருக்க அவர்கள் வளையிட்டிருப்பர்களோ? என்னில்,
இதற்கு ஈட்டிலருளிச்செய்வது காண்மின், – “இவளைத் தரிப்பிக்கைக்காக அவர்களும் வருந்தி தரித்திருப்பர்களிறே. பிராட்டியைப் பிரிந்தவிடத்தில் பெருமாளிற் காட்டிலும் தம்முடைய காவற்சோர்வாலே வந்ததென்று தளர்த்தி இரட்டித்திருக்கச் செய்தேயும் பெருமாள் மிகத்தளருவரென்று தம்முடைய தளர்த்தி தோற்றதபடி இளையபெருமாள் தரித்திருந்தாப் போலே இவர்களும் தரித்திருப்பர்கள் வளைய.“ என்று.
நம்முடைய்யேதலர்முன்பு நாணி –ஏதலரென்று சத்துருக்களுக்குப் பெயர், தலைவிக்கு சத்துருக்கள் யாரென்னல், ஹிதஞ்சொல்லி மீட்கப்பார்க்கிற் தாய்மார்களே சத்துருக்களாவர்
ஸ்வாபதேசத்தில், பேறுதப்பாதென்று துணிந்திருக்கையே தாயாகவும், பேற்றுக்குப் பதறுகையே மகளாகவும் சொல்லப்படுவது. த்வரைக்கு அத்யவஸாயம் விரோதியென்றுணர்க.
“நம்முடையேதலர்“ என்றதற்கு ஆசார்யஹ்ருதயத்தில் விசேஷ ஸவாபதேச மருளிச்செய்யப்படுகிறது. அதில் இரண்டாம் பிரகரணமுடியில் (139) “மகள் நம்முடையேதலர் யாமுடையத்துணையென்னும் ஸித்த ஸாதந ஸாத்யபரரை“ என்றுள்ளது.
பஹிரங்க கர்மஜ்ஞாநாதி உபாயாந்தரங்களிலே ஊன்றினவர்களை பஹிரங்க சத்ருக்களென்றும்,
ஸித்தோபாயபூதனான அவனுடைய உபாயத்வத்திலே ஊன்றி நின்று, “பதறுதல் பராதந்திரியத்திற்குச் சேராது“ என்று நிஷேதிக்கிற ஸித்தோபாய நிஷ்டரை அந்தரங்கசத்ருக்களென்றும் சொல்லுகிறது.
இப்பாசுரத்தில் “ஏதலமர்“ என்று ஸாமான்யமாகச் சொல்லாமல் “நம்முடையேதலர்“ என்று விசேஷித்துச் சொல்லுகையாலே அந்தரங்க சத்ருக்களே இங்குப் பொருளாக வமையும்
ஸித்தோபாய நிஷ்டைக்கு ப்ரதிகூலரான ஸாத்யோபாய நிஷ்டரைத் தாய்மார் சத்ருக்களான நினைத்திருப்பர்,
பதற்றத்திலே நின்ற மகளுடைய நினைவுக்கு அது எதிராகையாலே அப்படிப்பட்ட நினைவுடைய தாய்மாரை இவள் அந்தரங்க சத்ருவாக நினைக்கத் தகுதியுள்ளது.
ஆகவே, இங்கு “நம்முடையேதலர் முன்பு“ என்றது – தாய்மார்முன்பு என்றே பொருள்பட்டு நிற்குமென்க.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி “இவளுக்குச்சில சத்ருக்கள் இல்லையிறே, ஹிதஞ்சொல்லி மீட்கப்பார்க்கிற தாய்மாரிறே சத்துருக்கன்“ என்பதாம்.
அவர்கள் முன்பு தொழிந்தாயாகிலும் எங்கட்குச் சொல்லலாகாதோ?“ என்று தோழிகள் கேட்டபடியாலே,
அவர்களுக்குச் சொல்லாது மறைத்து வைத்து உங்களுக்குச் சொல்லலாம் வார்த்தை என்ன விருக்கிறது, ஒன்றும் சொல்லத் தெரிய வில்லையே யென்றாளாயிற்று.
ஆனாலும் சிறிது சொல்லென்னச் சொல்லுகிறாள் சங்கஞ்சரிந்தனவென்று தொடங்கி
* என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே * என்று ஆண்டாளருளிச்செய்த்துபோல, என்னுடைய சரிவளையைச் சரிவளையே யாக்கினர் தலைவர் என்கிறாள் போலும் பராங்குசநாயகி.
மூன்றாமடி முழுதும் இழவுசொல்லுகிறது. இழந்த விழவுக்கு ஹேது சொல்லுகிறது நான்காமடி.
பரமபதத்திலிருப்பை ஆசைப்பட்டேனல்லேன், நமக்குக் காட்சி தருகைக்கு வந்து நின்றவிடத்தே ஆசைப்பட்டடேனித்தனை, அதற்குப் பெற்றதண்டனை இது – என்றாளாயிற்று.
(வெங்கட்பறவையின்பாகன்) பறவைக்கு “வெங்கண்“ என்று விசேஷணமிட்டதற்கு – அநுகூலமாகவொரு பொருளும் பிரதிகூலமாக வொருபொருளுமருளிச்செய்வர்.
கருத்மான் விரோதிகளின்மேலே வெவ்விய கண்களைச் செலுத்தி அவர்களை முடித்துப் பெருமானை இங்குக் கொணரவல்லவன், அவனிடத்துக் குறையில்லை என்பதாக முதற்பொருள்.
ஸம்ச்லேஷ தலையிலே பிரித்துக் கொண்டுபோமவனான வெவ்வியன் என்பதாக இரண்டாம்பொருள்
* அக்ரூர க்ரூரஹ்ருதய* என்ற கோபிகளின் வார்த்தை இதற்குச் சார்பாகும்
வேண்டிச்சென்று என்றது – விரும்பினபடியாலே யென்று பொருள்பட்டு நிற்கிறது.
சாய் என்றது “சாயா“ என்ற வடசெல்லின் விக்ரயம்.
—————
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-
பதவுரை
| ஒன்று வேண்டி சென்று |
– |
என்னிடத்தில் ஒன்றைய்யே க்ஷித்து வந்து |
| பெறுகின்றவரில் |
– |
பெறுகின்றவர்களுக்குள்ளே |
| என்னுடைய தோழியர் |
– |
தலைமைபெற்ற உயிர்த்தோழிகளான |
| நுங்கட்கேலும் |
– |
உங்களுக்குங்கூட |
| ஈண்டு இது உரைக்கும் படியை |
– |
இப்போது எனக்கு ஓடும் நிலைமையைப் பாசுரமிட்டுச் சொல்லக்கூடிய பிரகாரத்தை |
| இடராட்டியேன் கான் அந்தோ காண்கின்றிலேன் |
– |
இடருற்றிருக்கிற நான் ஐயோ! அறிகின்றிலேன், |
| காண்தகு தாமரை கண்ணன் |
– |
காணவினிய தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனாய் |
| கள்வன் |
– |
பார்த்த பார்வையிலே ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல வஞ்சகனாய் |
| விண்ணவர்கோன் எங்கள் கோனை |
– |
நித்யஸூரிகளைப் போலே என்னை யடிமை கொண்வனான எம்பெருமானை |
| கண்டால் |
– |
காணப்பெற்றால் |
| ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் |
– |
அவன் பக்கலிலேதிரண்ட வளைகளையும் அடக்கத்தையும் மீட்டுக் கொள்ளலாமென்று |
| எத்தனைகாலம் இளைக்கின்றேனே |
– |
எத்தனையோகாலமாக ப்ரயாசைப்படுகின்றேனே. |
***- “வேங்கடவாணனை வேண்டிச் சென்று – சங்கம் சரிந்தன சாயிழந்தேன்“ என்றான் கீழ்ப்பாட்டில்
நீ ஆசைப்பட்ட விஷயம் திருவேங்கடமுடையானாகில் அது தகுதியே நீ ஆசைப்பட்டால் கிடையாத்துண்டோ வென்று தோழியர் சொல்ல,
ஆசைப்பட்டபொருள் பெறுவாரெல்லாரிலும் நான் தலையாயிருக்கச் செய்தேயும் ஆசைப்பட்டுப் பெறாதே நான் படுகிற வ்யஸனம்
வாசா மகோசரமாகையாலே ஸ்யஸனப்படுமத்தனையல்லது உங்களுக்குச் சொல்லுகைக்கு ஒரு சொல் காண்கின்றிலேன் என்கிறாள்.
முன்னடிகட்கு ஆறாயிரப்படியின் நடையிலே உரைத்தோமிது.
இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் பொருள் வாசி காண்கிறது.
வேண்டிச் சென்று என்றது வேண்டிவந்து என்றபடி.
என்னிடத்திலே வந்து ஒன்றை விரும்பிப் பெறுமவர்களில் தலையான வரிசையையுடைய தோழிமாரான வுங்களுக்கும் என்பது முதலடியின் கருத்து.
என்னிடத்தில் கேட்டு நீங்கள் பெறாததுமுண்டோ? உங்களுக்குஞ் சொல்லாது மறைப்பதொன்றுண்டோ? அப்படியிருந்தும் ஈண்டிதுரைக்கும்படியை யந்தோ காண்கின்றலேனிடராட்டியேன் நான் என்று கூட்டுக.
மற்றொருபடியாகத் தமிழனுடைய நிர்வாஹமொன்றும் காட்டப்படுகிறது,
வேண்டிச்சென்று ஒன்று பெறுகிற்பார் இல்“ என்று பதம் பிரித்து, அப்பெருமானிடஞ் சென்று ஒன்று வேண்டிப் பெற நினைத்தவர்களில் அது பெற்றாரில்லை,
* வேண்டிற்றெல்லாந்தரும் வள்ளல் * என்று வீணான ப்ரஸித்தியேயொழிய அவனிடம் பெற்றாரில்லை – என்பதாகவும் பொருள் கொண்டிருந்தேனாகிலும் இப்போது சொல்லலாவது காண்கிறிலேன் என்கிறாள்.
அந்தோ! – நீங்கள் கேளாவிட்டாலும் நானே சொல்லியாகிலும் ஒருவாறு ஆற்றவேண்டியிருக்க, வாய் திறந்தொன்று சொல்லவொட்டுகிறதில்லையே நான் படுமிடர், ஐயோ என்கிறாள்.
“இடராட்டியேன்“ என்றதை விவரிப்பன் பின்னடிகள். (காண்தகு தாமரைக் கண்ணன்) வடமொழியில் தர்சநீயமென்றொரு சொல்லுண்டு,
அதற்குப் பர்யாயமான தமிழ்ச்சொல்“ காண்டகு “என்பது. ஓயாது கண்டு கொண்டே யிருக்கத்தக்க என்று பொருள்.
இது தாமரைக்கு அடைமொழியாகவுமாம், கண்ணுக்கு அடைமொழியாகவுமாம்.
(கள்வன்) அத்திருக்கண்ணோக்கத்தாலே என்னையும் என்னுடைமையையும் கொள்ளைகொண்ட பகற்கொள்ளைக்காரன் என்றபடி.
“விண்ணவர்கோன்“ என்று சொல்லி உடனே தங்கள் கோன் என்றதனால் – நித்யஸூரிகளைப்போலே ஆழ்வாரைமீடுபடுத்திக்கொண்டவன் என்கிற கருத்துத் தோன்றும்.
“ஒரு விபூதியாகப் படுத்தினபாட்டைக்கிடீர் என்னையொருத்தியையும் படுத்திற்று“ என்று விசேஷத்துக்கருத்து முரைப்பர் நம்பிள்ளை.
இப்படிப்பட்ட எம்பெருமான் * கண்காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவ்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி நிற்சின்றான்,
அவனைக் காணப் பெற்றால் அவனால் கொள்ளை கொள்ளப்பட்ட எனது வளைகளையும் அடக்கத்தையும் திருப்பிப் பெற்றுக் கொள்ள வேணுமென்னும் அவாவினால் நான் நெடுங்காலமாக ஆயாஸப்படுகிறேன் என்றாளாயிற்று.
அவன் பிரிந்தவன்று தொடங்கி வளைகழன்றும் அடக்கங் கெட்டும் இருப்பதனாலும, அவனோடு கூடப்பெற்றால் வளைதங்கி அடக்கமும் குறையற்றிருக்க நேருமாதலாலும் “கண்டால் ஈண்டிய சங்கும் நிறைவுங் கொள்வான்“ எனப்பட்டது.
இவ்வாசையோடே காலங் கழிகிறதேயன்றி ஆசை நிறைவேறும் விரகில்லையே! என்கிற வருத்தம் ஈற்றடியிலேயுறையும்.
——————-
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-
பதவுரை
| நீலம் மலர் நெடு சோதி சூழ்ந்த |
– |
நீலநிறத்தாய் எங்கும் வியாபித்ததாய் எல்லைகாண வொண்ணாத்தான தேஜஸ்ஸாலே சூழப்பட்ட |
| நீண்ட முகில்வண்ணன் கண்ணன் |
– |
மஹா முகம்போலே இருக்கிற நிறத்தையுடைய கண்ணபிரான் |
| கொண்ட |
– |
அபஹரித்துக்கொண்ட |
| கோலம்வளையொ |
– |
அழகிய வளைகளையும் மேனி நிறத்தையும் |
| எத்தனை காலமும் கூட சென்றே கொள்வான் |
– |
அநேக காலம் கூடவே சென்றாகிலும் மீட்டுக் கொள்ளுகைக்காக |
| ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் |
– |
உலகமெல்லா மறியும்படிபடி கடந்து புறப்பட்டாளென்கிறபழியைப் பெற்றேன், |
| இனி நாணி தான் என் |
– |
விலக்ஷணமான நெற்றியை யுடைய தோழிகளே! |
| இனி நாணி தான் என் |
– |
இனி லஜ்ஜித்துத் தான் பயனுண்டோ? |
| காலம் இளைக்கில் அல்லால் |
– |
காலம் முடிந்துபோமித்தனை யல்லது. |
| வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள் மின் |
– |
விளையாட்டியேனான நான் இளைத்து மீளமாட்டேன் இதை அனுபவத்தில் பார்த்துக்கொள்ளுங்கள். |
***- எத்தனை காலமிளைக்கின்றேனே“ என்ற தலைவியை நோக்கி
நங்காய்! பகவத் விஷயம் எட்டவொண்ணாத விஷயமென்பதை நீயே யறிந்திருக்கின்றாயே,
நாள் சென்றவாறே இது ஸர்வாத்மநா துர்லபமென்று நீதானே மீளப்போகிறாய்,
அப்படி நீயாக ஒரு காலவிசேஷத்திலே மீள்வதைக்காட்டிலும் எங்களுடைய வார்த்தை கேட்டு மீண்டதாக எங்கள் வார்த்தைக்கு ஒரு மதிப்பு கொடுக்கலாகாதோ? என்று தோழியர் சொல்ல,
காலதத்துவம் முடிந்தாலும் நான் அவனைக் கண்டல்லதுவிடேன் என்கிறாள்.
(காலமிளைக்கில்லால் வினையேன் நானிளைக்கின்றிலன்) காலம் முடிந்து போனாலும் போகுமேயல்லது நான் இளைத்து மீளுகிறேனென்பது கிடையாதென்றபடி.
இங்கு வினையேன் என்றதற்கு இரண்டு வகையான கருத்துரைப்பர்,
துர்பலம் என்றாலும் மீளவொண்ணாததான விஷயத்திலே ஆசை வைக்கும்படியான பாபத்தைப் பண்ணினேன்,
நீங்கள் சொன்னவார்த்தை நெஞ்சில்படாதபடியான பாபத்தைப் பண்ணினேன்.
கண்டுகொண்மின் என்றது உறுதிப்பாடு தோன்றச் சொல்லும் வார்த்தை.
எத்தனை காலமானாலும் நான் கண்டல்லது விடேனென்பதை நீங்கள் காணவேபோகிறீர்களென்றவாறு.
இங்ஙனே சொல்லக்கேட்ட தோழியர் “நங்காய்! அவனே வரப் பார்த்திருக்கையொழிய இப்படி. இத்தலையால் ப்ரபல ப்ரயத்னம் செய்வது நம்குடிக்குப் பழியன்றோ? பழிபரிஹரிக்க வேண்டுவது அவச்யமன்றோ, பெண்டிர்க்குத் தலையானகுணமான நான் தவிரலாமோ? என்று கூற
ஞாலமறியப் பழிசுமந்தேன் நன்னுதலீர்! இனி நாணித்தானென்? என்கிறாள்.
* அஞ்சிறைய மடநாரையில் தூதுவிட்டு * மாசறு சோதியிலே மடலெடுக்க முயன்றபோதே பழிபுகுந்திருக்க நன்னுதலீர்! நுதல் – நெற்றி. என்முகம் வாடிக்கிடக்க உங்கள் முகம் ஒளிபெறு விளங்குவதை! இதுனெ என்று கேட்கிறபடி.
கண்டே விடுகிறேன் காண்மின் என்று இப்படியொரு நிர்பந்தம் எதுக்காகக் கொள்ளுகிறாயென்று கேட்டார்க்கு விடையிறுக்கிறது மூன்றாமடி.
அவனுடைய வடிவழகை என்னை இப்பாடு படுத்துகிறதென்கிறாள் (
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த) இது முகில்வண்ணனான எம்பெருமானுக்கு விசேஷணம். முகிலுக்கு விசேஷணமென்றுங் கொள்ளலாம்.
நீலர் மலர் கெடு என்ற மூன்றும் சோதிக்கு விசேஷணங்கள். நீல நிறத்தாயும் எங்கும் பரமபினதாயும் எல்லை காண ஒண்ணாததாயுமிருப்பது சோதி, அதனால் சூழப்பட்ட என்றபடி.
இது முகில்வண்ணனுக்கு விசேஷணமாம்போது குறையொன்றுமின்றியே அவயிக்கிறது.
முகிலுக்கு விசேஷணமாகக் கொள்ளப்பட்டால் அப்படிப்பட்டதொரு விலக்ஷணமான முகிலைச் சிதைந்து சொல்லுகிறதாகக் கொள்ளவேணும்.
அப்படிப்பட்ட கண்ணன் கவர்ந்துகொண்டுபோன வளையையும் மேனிநிறத்தையும் திருப்பிக் கொள்ளுகைக்காக இனியுள்ள காலலமெல்லம் முயல்வதாக நான் உறுதகொண்டு ஞாலமறியப் பழசுமந்தேன் இனி நாணியென்?
——————-
***- ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் நிருக்குளந்தை யென்பது ஒரு திருப்தி.
இது பெருங்குளமென்று வழங்கப்படும். அத்தலத்திலுள்ள எம்பெருமான் மாயக்கூத்தன்,
அப்பெருமானிடத்து ஆழ்வார் தமக்குள்ள ஈடுபாட்டைச் சொல்வது இப்பாசுரம்.
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-
பதவுரை
| மாடம் கொடி மதிள் தென் குளந்தை |
– |
மாடங்கயும் கொடியணி மதிள்களையுடைய்ய பெருங்குளமென்னுந்திருப்பதியிலே |
| வண் குடபால் நின்ற மாயக்கூத்தன் |
– |
அழகிய மேற்பக்கத்திலே நின்ற மாயக்கூத்தப் பெருமானாய் |
| ஆடல் பறவை உயர்ந்த |
– |
மகிழ்ச்சியினால் களித்தாடுகிற கருடனாலே வஹிக்கப்பட்டிருப்பவனாய் |
| வெல் போர் ஆழிவலவனை |
– |
போர்க்களத்தில் வெற்றிபெறுமியல்வின்னான திருவாழி யாழ்வானை வலத்திருக்கை யிலுடையனான பெருமானை |
| ஆதரித்து |
– |
ஆசைப்பட்டு |
| கூட சென்றேன் |
– |
அவனோடு ஸம்ச்லேஷிக்கச் சென்றேன், |
| கோல்வனை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் |
– |
அழகியவளையும் நெஞ்சும் முதலானவையெல்லாம் |
| பாடு அற்று ஒழிய இழந்து |
– |
என்பக்கல் சேஷியாமல் விட்டுப்போம்படியாக இழந்து |
| பல வளையார் முன் வைகல் பரிக அழிந்தேன் |
– |
பல வளைகளையுடைய பெண்டுகள் முன்னே நெடுங்கால மாகவே என் இயல்புமாறப் பெற்றேன் |
| இனி என் கொடுக்கேன் |
– |
(எல்லாமிழந்த நான்) இனி என்ன இழக்கக் கடவேன் |
(கூடச்சென்றேன்) இதற்கு இரண்டுபடியாகப் பொருளருளிச் செய்வர்,
* சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே* என்றவிடத்தும்
* நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே * என்ற விடத்தும் திருநாடு செல்வதான பொருளை விவக்ஷித்தாப்போலே
இஙகும் அப்பொருளே விவக்ஷிதமாகி “நான் இதோ முடிந்து திருநாடு செல்லப்புகாநின்றேன், (இனி என்கொடுக்கேன்) இங்கிருந்தா வேண்டியதென்னவிருக்கிறது? என்பதாக ஒரு பொருள்.
மற்றொரு பொருளாவது – கூடாதேனானபின்பு, இனி என்கொடுக்கேன் – இனி இழக்கவேண்டியதென்னவுள்ளது? ன்பதாக
“தென்குளத்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தனையாதரித்துக் கூடச்சென்றேன்“ என்று தானே மூலமுள்ளது,
இதற்கு – திருக்குளந்தைப்பெருமானே. விரும்பி அவனோடே ஸம்ச்லேஷிக்கச் சென்றேன் என்கிற பொருள் தேறுமேயல்லது
இதோ முடிந்து திருநாடு சென்றேன்“ என்கிற பொருள் எப்படியேற்கும்? என்று சங்கை தோன்றும்,
இப்பொருள் சொல்லும் நிர்வாஹத்தில் கூடச் சென்றேன் இனியென்கொடுக்கேன்“ என்பது தனிப்பட்ட வாக்யமாகக் கொள்ளத்தக்கது.
பாட்டின் முடிவிலுள்ள “ஆமிவலவனையாதரித்தே“ என்பதற்கு “கூடச் சென்றேன்“ என்பதில் அந்வயமென்று இப்போது கொள்ளவேண்டா,
“ஆதரித்து“ என்னும் வினையெச்சம் “பல்வளையார்முன் பரிசழிந்தேன்“ என்றதில் அந்வயிப்பதாகக் கொள்க.
ஆறாயிரப்படியில் – “திருக்குளந்தையில் பரமாதாரமான லைத்திக்கிலே நின்றருளினவனை யாதரித்துக் கூடச்சென்றேன்“ என்றிருக்கிறதேயென்னில், அது வொரு யோஜனை. அந்த யோஜநையும் கொள்ளப்பட்டேயுள்ளது. ஒரு யோஜனைக்கு மற்றொருயோஜனை விரோதியன் முதலால் “கூடச் சென்றேனினியென் கொடுக்கேன்“ என்பதை மேலோடே அந்வயியாமல் தனிவாக்யமாகக் கொள்ளும் யோஜதையும் பொருத்துமாதல் அறிக.
மாயக்கூத்தன் – இதற்குப் பலபடியாகப் பொருள்கூறலாம். கீதையில் * தைவிஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்ய்யா * என்று தானே சொல்லி வைத்தபடி குருவிபிணைத்த பினைபோலே மாயப்பிணையொன்று பிணைத்து அதிலே எல்லாரையும் மயக்கி இப்படியொரு கூத்துக்காண்பவன்.
அன்றியே, அந்த கீதையிலே.-*ஸம்பவாம்யாத்ம்மாய்யா* என்றருளிச் செய்தபடியே ஸங்கல்பமென்னும் பொருளதான மாயையினாலே திருவ்வதாரங்கள் செய்து – குடக்கூத்து, மரக்கால்கூத்து, குரவைக்கூத்து என்னும்படியான பலவகைக்கூத்துக்களைச் செய்து “மாயக்கோலப்பிரான் தன் செய்கை நினைத்து மனங்குழைந்து“ ன்னும் படியாக்குமவன்.
அன்றியே, * சூட்டு நன்மாலைகள் தாயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தாரநிற்கவேயங்கு ஓர் மயையினா வீட்டியவெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன்கூன் கோட்டிடை யாடினை கூத்து அடலாயர்தம் கொம்பினுக்கே * (திருவிருத்தம்) என்கிறபடியே நம்போல்வார்க்கு நெஞ்சினாலும் நினைக்கவொண்ணாத்தொரு மாயக்கூத்தைச் செய்பவனென்னவுமாம்.
வென்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்டு நிற்பது,
புண்ணில் புளிப்பெய்தாலொக்குந் தீமைகளை மனைதோறுஞ் செய்வது, உருகவைத்தகுடத்தோடு வெண்ணெய் றிச்சியுடைத்திட்டுப் போந்து அருகிருந்தார் தம்மையநியாயஞ்செய்வது, இல்லம்புகுந்தொருமகளைக் கூவி கையில்வளையைக் கழற்றி கொண்டு கொல்லையில் நின்றுங் கொணர்ந்துவிற்ற அங்கொருத்திக்கவ்வளை கொடுத்து நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிப்பது,
ஆற்றிலிருந்து விளையாடுபவர்களைச் சேற்றாலெறிந்து விளைதுகில் கைக்கொண்டு காற்றிற்கடியனாயோடி யகம்புகுவது,
வண்டமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு விண்டோய் மரத்தேறுவது,
மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக்கச் சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் உரலோடாய்ச்சி யொண்கயிற்றால் விளியாவார்க்க வாப்புண்டு விம்மியழுவது,
பஞ்சனுங்காளிதோள் விரும்பியது,
குன்றெடுத்தாநிரை காத்துக் கோவலனாய்க் குழலூதியூதிக் கன்றுகள் சாமாறவளையெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டது,
நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்னத் துறியவளும் திருவுடம்பிற்பூச ஊறியகூனினையுள்ளே யொடுங்க ஏறவுருவியது.
வார்கடா வருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி ஊர்கொள்திண்பாகனுயிர்செகுத்து பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்ப் பாரதம் கைசெய்த்து, பற்றலர்வீயக் கோல்கையில் கொண்டு மலைபுரைதோள் மன்னவரும் மாதரும் மற்றும் பலர் குலைய நூற்று வரும் பட்டழியப் பாரத்தன் நிலைவளையத் திண்டேர் மேல் முன்னின்றது,
பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப் பகலவனொளிகெடப் பகலே ஆழியாலன்றஙகாழியை மறைத்தது,
கொல்லாமாக்கோல்கொலை செய்து பாரதப்போரெல்லாச் செனையுமிருநிலத்தவித்தது,
மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய்மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தது,
படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகலுமுடனேறத் திண்டோகடவிச் சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளையுடலொடுஙகொண்டு கொடுத்தது
முதலான மாயக்கூத்துக்கள் பலவும் இங்கு அது ஸந்திக்கவுரியவை.
(ஆடல்பறவையுயர்ந்த) எம்பெருமான் தன் மீதேறிச் சாரிகை யெழுந்தருளப்போவதை நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியின் கனத்தாலே சிறகை விரித்தடித்துக்கொண்டு கூத்தாடிநிற்பது கருடப்பறவையின் இயல்வு, அதுபற்றி “ஆடல் பறவை“ என்கிறது.
(வெல்போராழி) விடுத்த திசைக்கருமம் திருத்துமவனான திருவாழியாழ்வான் எந்தப்போர்க்களத்துச் சென்றாலும் வெற்றியோடே மீள்வளென்க.
வலவன் என்றது – திருவாழியாழ்வானை வலத்திலேயுடையவன் என்று பொருள்படுவதுதவிர “வல்லவன்“ என்பதன் தொகுத்தலாகி, திருவாழியைச் செலுத்தவல்லவனென்றும் பொருள்படும்
ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் ஆதரித்துப் பரிசழிந்தேன் என்றாராயிற்று.
—————–
ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-
பதவுரை
| தோழியர்காள் |
– |
தோழியர்களே! |
| நினைக்குங்கால |
– |
ஆராய்ந்து பார்க்குமளவில் |
| நன்று உணர்வர்க்கும் ஒருவன் ஆக உழிதோறு ஊழி உணரல் ஆகா |
– |
நன்றாக உள்ளபடி அறியவல்லார்க்கும் காலமுள்ளதனையும் அறிய முயன்றாலும் இத்தகையனென்று அறிய வொண்ணாதபடி |
| சூழல் உடைய |
– |
அடியார்களை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களையுடையனாய் |
| சுடர் கொள் ஆதி |
– |
மிகுந்த தேஜஸ்ஸையுடைய காரணபூதனாய் |
| தொல்லை அம்சோதி |
– |
நித்ய அஸாதாரண அப்ராக்ருத ஜ்யோதிர்மயரூபத்தை யுடையனாய் |
| ஆழி வலவனை |
– |
திருவாழிவலவனான ஸர்வேச்வரனை |
| ஆதரிப்பும் |
– |
விரும்பி பணிகையும் |
| ஆங்கு |
– |
அப்படிப்பணியுமிடத்து |
| அவன் நம்மில் வரவும் எல்லாம் |
– |
அவன் நம்பக்கதில் வந்து சேருகையும் ஆகிய இவையெல்லாம் |
| நம்முடையமே தான் |
– |
நம்மைத் தோற்றிப் புதிதான உண்டாகப் பெற்றிருக்கிறோமோ? |
| இங்கு சொல்லுவதோ! அரியதுதான் |
– |
அவன் விஷயத்தில் எதையாவது அவத்யமாகச் சொல்லிவிடுவது தகாது. |
***- “நங்காய்! ஆழிவலவனையாதரித்துப் பரிசழிந்தேனென்று நீயே சொல்லாநின்றாயே, அவனை யாசைப்பட்டார் இப்படி பரிபவப்படுமதொழிய, ஆசைப்பட்டபடியே பெற்றுக் களிப்பதென்பது கிடையாதே, ஆகவே அவனையாசைப்பட்டு வருந்துவதிற்காட்டிலும் ஆசையை அறத்துறந்து மறந்து மகிழ்ந்திருப்பதே நலன்மன்றோவென்று தோழிமார் சொல்ல
அவர்களுக்குத் தலைவி விடை கூறுகின்றாள். ஆசைப்படுவாரும் பெறுவாரும் பலரில்லையோ, அவனையாசைப்படுவதென்பது இன்று நேற்று உண்டாயிற்றோ? நாளொருத்தியேயோ புதிதான இன்று ஆசைப்படத் தொடங்கினேன்! அவனையாசைப்படுவதும் அவன்றான் வந்து கலந்து களிப்புறச்செய்வதும் தொன்றுதொட்டு நிகழுமதன்றோ. அப்படியிருக்க “அவன் அரியன், அவனையாசைப்படவேண்டா“ என்று சொல்லுவது தகுதியோ? என்கிறாள்.
என்னோடே கலந்து பழகுகின்ற நீங்கள் என்னைப்போலவே அவனது இயல்வையறிந்திருந்தும் அவனையாசைப்பட வேண்டாவென்றிப்படிச் சொல்லலாமோ என்னுங்கருத்துதோன்ற தோழியர்காள்! என விளிக்கிறாள்.
ஆழிவலவனையாதரிப்பும் ஆக்கவன் நம்மில் வரவும் – கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால் வாராயொருநாள்
* தாமரைநீள்வாசத் தடம்போல்வருவானே! ஒருநாள் காணவாராயே
* கொண்டனேன் உன்கழல்காண ஒருநாள் வந்து தோன்றாயே * என்றிப்படியலற்றி அவனையழைப்பதும்,
அழைத்தவாறே அவன்றான் நம்போல்வாருடைய இல்லந்தேடியோடிவருவதும் என்றபடி.
இவ்வளவோடு நிறுத்தாமல் எல்லாம் என்று பின்னையும் சொன்னதற்குப் பொருளென்? என்னில்,
வருகிற பின்பு தானே வாய்விட்டுச் சொல்லுவது, வந்த பின்பு அவன் செய்யுமவை பன்னியுரைக்குங்காற் பாரதமாமே,
முற்றம்புகுந்து முறுவல்செய்து நிற்பதும், பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறிப்படிறுசெய்வதம் குழறுபூவையொடுங் கிளியோடுங்குழகுவதும், மையலேற்றி மயக்கப் பேசுவனவும் செய்வனவும் வாய்கொண்டு சொல்லப்போமோ? அவை, எல்லாம் என்பதிலே படங்குமித்தனை.
நம்முடைமேதான் – நம்மைத்தோற்றிப் புதிதாக ஏற்பட்டவையல்லவே என்பது கருத்து, உடையம் – பன்மைத்தன்மைக் குறிப்பு வினைமுற்று. ஏ என்பது எதிர்மறைப் பொருளதாகி, உடையோமல்லோம் என்றதாய்நிற்கும். நம் என்றது நாம் என்றபடி.
சொல்லுவதோ இங்கு அரியதுதான் – அரியது என்றது – சொல்லத்தகாத வார்த்தை என்றபடி.
அவனையாசைப்படவேண்டாமென்று தோழிமார் சொல்லும் வார்த்தையே “அரியது“ என்பதனால் விவக்ஷிதம்.
அரியது சொல்லுவதோதான்? சொல்லத்தகாத வார்த்தையை நீங்களா சொல்லுவது? என்றபடி.
அன்றியே, சொல்லுவதோவிங்கு அரியதுதான் என்று உள்ளபடியே அந்வயித்து, நீங்கள் சொல்லும் வார்த்தையான விது சொல்லத்தகாத்தே, நான் கேட்கத் தகாததே என்று முரைக்கலாம்.
பின்னடிகளால் அப்பெருமானுடைய அருமையே சொல்லப்படுகிறது. அவனை அரியனென்று சொல்லலாமாவென்று முன்னடிகளில் கண்டித்தவளே அவனது அருமையைச் சொல்லலாமோவென்னில், இதற்கு நம்பிள்ளையருளிச் செய்யுமழகுகாணீர், – “அவன் கிட்டவரியனாயிருக்கிறமை இல்லையாவென்ன, அதுகானும் நான் சொல்லக் கேட்கவேண்டாவோ வுங்களுக்கு“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
நன்குணர்வார்க்கும் ஒருவனென்று ஊழிதோறூழி உணரலாகா – எதையும் ஆராய்ச்சி செய்து நன்கு அறியவல்லவர்களான மஹாமேதாவிகளும் எத்தனைகாலங்கூடி அறியப்புகுந்தாலும் அறியமுடியாத என்றபடி.
இப்படியாகில் * வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் * அஹம் வேத்மி மஹாத்மாநம் * என்றவை எங்ஙனே சேரும்?
சிலரை ப்ரஹ்ம வித்துக்களென்றும் தத்வவித்துக்களென்றும் சொல்லுகிறோமே, அதுதான் எப்படி சேரும்? என்கிற சங்கை யுண்டாகும். * ஊழிதோறுழியொருவனாக நன்குணர்வார்க்கு முணரலாகாதவனென்று அறிகிறவர்களே ப்ரஹ்மவித்துக் களும் தத்வ்வித்துக்களுமாவர் என்க.
இப்படிச் சொல்லிவிடலாமோ? எம்பெருமானுடைய படிகள் இன்னின்னவையென்று நன்கு நிஷ்கர்ஷிக்கவன்றோ சாஸ்த்ரங்கள் அவதரித்துள்ளன, அப்படிப்பட்ட சாஸ்த்ரங்களையறிந்தவர்களன்றோ நன்குணர்வார், அவர்களுக்கும் உணரலாகாததுண்டோ? என்று கேள்விபிறக்கும். இதற்குச்சொல்லுகிறோம்.
எம்பெருமானுடைய சில விஷயங்கள் நிஷ்கர்ஷிக்க முடியாமலேயிராநின்றன. இரண்டொன்று எடுத்துரைப்போம்,
“பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு என்னைபடி பணிவார்க்கு நான் ப்ராப்பன் என்று பல விடங்களிற் கூறுகின்ற எம்பெருமான் தானே *நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந * என்கிறான்,
புருஷகார பலத்தைக்கொண்டும் மற்று எந்த ஸாதனங்கொண்டும் என்னை வசப்படுத்த முடியாது, எனக்காகத் தோன்றுகிறபோது நானாகவே ஒரு அதிகாரிவிசேஷத்தைத் திருவுள்ளம் பற்றுவேனத்தனை – என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.
இங்ஙனே மற்றொன்றுங் காண்மின், * ச்ருதிஸ் ஸம்ருதிர் ம்மைவாஜ்ஞா யஸ் தாமுல்லங்க்ய வர்தத்தே, ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோஹீ மத்பத்தோபி ந வைஷ்ணவ * (ச்ருதிஸ்மிருதிகள் என்னுடைய ஆணை, அதை மீறி நடப்பவன் எனக்கு த்ரோஹி, அவன் வேறுவிதமான பக்தி விசேஷங்களை என்னிடத்துச் செலுத்தினாலும் வைஷ்ணவல்லவன்) என்று ஓரிடத்தில் சொல்லி வைத்து
* அப்சேத் ஸுதுராசாரோ பஜதே மாம் அநந்யபாக், ஸாதுரேவ ஸ மந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ * என்றும் * மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந, தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதத் அகர்ஹிதம் * என்று மருளிச் செய்கிறான் – எவ்வளவு துஷ்டனானவனும் என்னைக் கபடமாகவாவது அடிபணிந்தானாயின் அவனை என்னோடொப்ப பஹுமானிக்கக்கடவது, மற்றபடி அவனிடத்தில் தோஷங்களிருந்தாலென்ன? என்கிறான்
இங்ஙனே சொல்லுகிற எம்பெருமான்படியை என்னென்று அறுதியிடுவது. இதனால் யாருமே அறுதியிடமுடியாதென்று கொள்ளவேண்டா, மயர்வற மதிநலமருளப் பெற்றவர்கள் அறுதியிடாத தொன்றில்லை.
(சூழலுடைய) சூழல் என்றும் சூழ்ச்சி என்றும் பர்யாயம், அகப்படுத்திக் கொள்ளும் யந்த்ரம் சூழலெனப்படும்.
கிட்டினாரைத் தப்பாமல் அகப்படுத்திக்கொள்வல்ல அவதார சேஷ்டிதங்களையுடையவன் என்றபடி.
(சுடர்கொளாதி) சுடர்கொள் என்பதும் ஆதி என்பதும் தனித்தனியே எம்பெருமானுக்கு வாசகங்கள் என்று கொள்வது தவிர, சுடர்கொள் என்பது ஆதிக்கு விசேஷணமாய் அந்வயிப்பதாகக் கொள்வதும் பொருந்தும்,
தேஜஸ்ஸு முதலான எண்ணிறந்த கல்யாண குணங்களையுடையவன், ஜகத்காரண பூதன் – என்பது முந்தின யோஜநையில் தேறும் பொருள். தேஜிஷ்டமான ஜகத்காரணத்வத்தையுடையவன் என்பது இரண்டாவது யோஜநையில் தேறும்பொருள்.
ஜகத் காரணத்வம் தேஜிஷ்டமாயிருக்கையாவது – உபாதாநகாரணத்வம் ஹைகாரிகாரணத்வம் நிமித்தகாரணத்வம் ஆகிய மூவகைக் காரணத்வமும் எம்பெருமான்றனக்கே பெருந்தியிருப்பது காணா நின்றோம்,
ப்ரபஞ்சத்தைக் குறித்து எம்பெருமான் காரணமாகிறானென்றால் மேற் சொன்னமூவகைக் காரணமும் தானே யாயிருப்பதாக வேதாந்த நூற்கொள்கை.
இதைக்கொண்டே “சுடர்கொளாதி“ என்கிறது. ஆதி என்பதற்கு காரணத்வத்தையுடையவன் என்று பொருளாகி, அதன் ஏகதேசமாகிய காரணத்வத்தில் “சுடர்கொள்“ என்பது விசேஷணமாய் அந்வயிப்பதாகக் கொள்க.
நினைக்குங்கால் – அவ் பெருமையை ஆராயப்புகுந்தாலென்றபடி.
ஆக, பின்னடிகளினால் தேறினது என்ன? என்னில், “சொல்லுவதோ விங்கரியதுதான்“ என்பதே முக்கியமானது,
அரியவஸ்துவே எளியதாமளவில் தடுப்பாருண்டோ? என்றதாகவே முடிபு.
————–
***- மறுபடியும் தோழியானவள் “நங்காய்! நீ சொல்லுகிறபடியே அவன் எளியனல்லன், அருமைப்பட்டவனே“ என்று சொல்ல,
தோழீ! அவன் அரியனானாலென்ன? எளியனானாலென்ன? எந்த நிலையில் அவன் தன்னையே வாய்வெருவும்படியன்றோ நம்மைப்பண்ணிவிட்டான், அப்படிப்பட்டவன் வாசலிலே கூப்பிடாதே ஸம்பந்தமில்லாதார் வாசலிலே கூப்பிட ப்ரஸக்தியுண்டோ? என்கிறாள் தலைவி.
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-
பதவுரை
| நினைக்குங்கால் |
– |
ஆராயப்புகுமளவில் |
| தொல்லை அம்சோதி என்சொல் அளவு அன்று |
– |
அஸாதாரணமாய் அழகியதான அவனுடைய தேஜஸ்ஸானது என்னுடைய சொல்லில் அடங்கும்மதன்று |
| இமையோர் தமக்கும் |
– |
தேவர்களுக்குங்கூட (நிஷ்கர்ஷிக்கவொண்ணாதபடி) |
| எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அதிறம் நிற்க |
– |
அளவிறந்த ஸம்சயங்களை விளைக்கும்படியான அப்பெருமேன்மை கிடக்க, |
| வல்லிவளம்வயல் சூழ குடந்தை மாமலர் கண் வளர்கின்ற மால் எம்மாமை கொண்டான் |
– |
பூங்கொடியும் அழகிய வயல்களுஞ் சூழ்ந்த திருக்குடந்தையிலே சிறந்த தாமரை போன்ற திருகண்கள் வளரும்படி சாய்ந்தருளின பெருமான் எம்மேனி நிறத்தைக்கொள்ளை கொண்டான், |
| அல்லி மலர் தண் துழாயும் |
– |
பூந்தாரினுடைய விகாஸத்தை யுடைத்தான திருத்துழாய் மாலையையும் |
| தாரான் |
– |
அருள் செய்கின்றினை, |
| இனி |
– |
இப்படியான பின்பு |
| ஆர்க்கு பூசல் இடுகோ |
– |
(இத்துயரத்தை) வேறு யார் பக்கலிலே சென்று முறை யிடக்கடவோம்? |
| சொல்லீர் |
– |
நீங்களே சொல்லுங்கள். |
நினைக்குங்கால் தொல்லையஞ்சோதி – ஆராய்ந்து சொல்லப்புக்கால், இதர விக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவன் என்று இவ்வளவு சொல்லலாமேயொழி வேறு சொல்லப்போமோ? அவனுடைய அருமை நாம் சொல்லுமளவிலுள்ளதோ? என்பது கருத்து.
என் சொல்லளவன்று – என்னுடைய சொல்லில் அடங்குமதன்று, ஓர் அபலையாகிய நான் இருந்து சொல்லுமளவோ அவன் பெருமை.
இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும் – கூழ்ப்பு என்று ஸம்சயத்திற்குப் பெயர், மிக மேம்பட்ட ஞானம்படைத்த பிரமன் முதலிய தேவர்களுக்கும் ஒரு நிச்சயத்தை விளைக்கமாட்டாத்தான பெருமையன்றோ அவனுடையது.
ஒரு ஸமயத்தில் எளியனென்றிருப்பர்கள், மற்றொரு ஸமயத்திலே அரியனேயிவன் என்றிருப்பர்கள். ஆகவே, அரியனோ எளியனோ என்கிற ஸந்தேஹமே அவர்களுக்கும் ஊடுருவச் செல்லாநிற்குமாயிற்று.
மஹாபாரதத்தில் மோக்ஷதர்மத்தில் ப்ரஹ்மருத்ரஸம் வாதத்தில் ருத்ரனை நோக்கிப் பிரமன் சொல்லுகிறான் * தவாந்தராத்மா மம ச யேசாந்யே தேஹிஸம்ஜ்ஞகா, ஸர்வேஷாம் ஸாக்ஷிபூதோஸௌ ந க்ராஹ்ய கேநசித் க்வசித் * என்கிறான்.
உனக்குமெனக்கும் மாத்திரமன்றிக்கே ஸகல தேஹிகளுக்கும் அந்தராத்மாவாயும் ஸாக்ஷியாயுமிராநின்ற இப்பெருமானை ஒருவரும் ஒருவிதமாகவும் அறுதியிடகில்லார் என்கையாலே “இமையோர்தமக்கு மெல்லையிலாதன கூழ்ப்புச்செய்யும்“ எனப்பட்டது.
இமையோர் என்று பிரமன் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தராநின்கவேயங்கு ஓர்மாயை யினாவீட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்போந்து * என்ற திருவிருத்தப் பாசுரம் இங்கே அதுவந்தக்கவுரியது.
அத்திறம்நிற்க எம்மாமைகொண்டான் – அப்படிப்பட்ட மேன்மை கிடக்கச் செய்தேயும் தன்னுடைய வடிவழகு முதலியவற்றைக் காட்டி என்னிறத்தைக் கொண்டான், என்னோடு சிருங்கார சேஷ்டைகைளைச் செய்யாநின்றாறென்றபடி.
இமையோர்களுக்கும் அறுதியிடமாட்டாதபடியிருந்தவன் என்னோடு வந்து பழகும்போது எனக்கு ஸர்வாத்மநா விதேயனாகவேயிருந்தானென்பது கருத்து.
கூடியிருந்த காலத்தில் அப்படியிருந்தவன் இப்போது, அல்லி மலர்தண்டுழாயுந்தாரான் – தான் வாராவிட்டாலும் தன்னோடு ஸ்பர்சமுள்ளதொரு பொருளையாவது தந்து என் வாட்டத்தைத் தனிக்கலாமே, அது செய்கின்றிலன்.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி – “அது செய்தானாகில் பூவுக்கிட்டோம் போலும் என்றிருக்கலாமே“ என்று.
இதன் கருத்து யாதெனில், குடும்ப வாழ்க்கையில் தலைவனும் தலைவியும் கூடிவாழ்ந்து மகிழ்ந்திருத்தல் என்பதொன்று. அஃதில்லையாகில் (நாயகன் மன வெறுப்போடே பிரிந்திருந்தாலும்) நாயகி ஸுமங்கலியாக வாழ்வதற்கு ஒரு குறையில்லையே. நல்ல சேலைகளையணியவும் மஞ்சள் பூசிக்கொள்ளவும் பூச்சூடிக்கொள்ளவும் குறையில்லையே. ஆனாலும் அதுவொரு மகிழ்ச்சியாகாதே. ஆயினும் ஸுமங்கலியாக வாழ்கிறோமென்று ஒருவாறு மகிழலாமன்றோ. அதுபோல, எம்பெருமான் வந்து ஸம்ச்லேஷித்து ஆனந்தப்படுத்தா தொழிந்தாலும் அல்லிமலர்த்தண்டுழாயாவது தந்தானாகில் பூச்சூடவாவது பாக்கியம் பெற்றிருக்கிறோமென்று ஒருவாறு உகந்திருக்கலாம், அந்தோ! அக்கேடுமில்லையே! என்பதாகக் கொள்க.
ஆர்க்கு இடுகோ இனிப் பூசல் – “நம்மை நலிந்தவன் வாசலிலே கூப்பிடாதே ஆர்வாசலிலே கூப்பிடுவோம். சொல்லிக்காண்“ என்பது ஈடு.
* ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச் சேற்றாலெறிந்து வளைதுகில் கைக்கொண்டு காற்றில் கடியனாயோடி அகம்புக்கு மாற்ற முந்தாரானால் இன்று முற்றும் வளைத்திறம்பேசானால் இன்று முற்றும் * (பெரியாழ்வார் திருமொழி 2-10-1.) என்று, நலிந்தவன்வாசலிலே நின்று கூப்பிடவன்றோ தகுதி, ஸம்பந்தமில்லாதார் வாசலிலே சென்று கூப்பிடவோ? அருள் செய்தாலும் படுகொலையடித்தாலும், அவன் பக்கலிலேயன்றோ முறையிடுதல் முறை.
* ஆர்க்கோவினி நாம் பூசலிடுவது அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந்தன்னைப் படைக்கவல்லேனந்தோ * என்ற நாச்சியார் திருமொழிப்பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.
வில்லிவளவயல் சூழ்குடந்தை மாமலர்க்கண்வளர்கின்ற மால் – “எம்மாமை கொண்டான்“ திருப்பதி ப்ரஸ்துதமானபடியாலே இங்கும் “வல்லிவளவயல்சூழ் குளந்தை“ என்று அத்திருப்பதியின் ப்ரஸ்தாவமேயிருக்கலாமென்று சிலர் கூறினர்,
அது சிறிதும் பொருந்தாது, திருக்குளந்தையில் நின்ற திருக்கோலம், திருக்குடந்தையில் சயனத்திருக்கோலம். “தென்குளந்தை வண்குடபால் நின்றமாயக் கூத்தன்“ என்று அங்கு நின்ற திருக்கோலம் பேசப்பட்டது.
“குடந்தை மாமலர்க் கண்வளர்கின்றமால்“ என்று இங்கு சயனத்திருக்கோலம் பேசப்படுகிறது.
ஆகவே இந்த வாசியை யறியாது சொல்லுவது பொருந்தாது. இப்பாசுரத்தில் திருக்குடந்தைத் திருப்பதியின் அநுபவமேயுள்ளது.
——————
***- “அப்பெருமானைக் காண்பது அரிது, ஆகவே அவனை விட்டு விடுதலை நன்று என்று உறவு முறையார் அலைக்க,
அவனுடைய திருக்குணங்களிலே அகப்பட்ட நான் எத்தனை காலமானாலும் அவனைக் கண்டல்லதுவிடேன்,
அதற்கு இடையூறான வுங்களோடு ஸம்பந்தம் எனக்கு வேண்டாவென்று உறவறுத்து உரைக்கின்றாளிப்பாட்டில்,
மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-
பதவுரை
| ஏலம் மலர் சூழல் அன்னைமீர்காள் |
– |
நறுமணம்மிக்க பூவையணிந்த குழலையுடைய தாய்மார்களே! |
| என்னுடை தோழியர்காள் |
– |
என்னுடைய தோழிமார்களே! |
| மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று |
– |
மாலே! ஹரியே! கேசவனே! நாராயணனே! ஸ்ரீமாதவனே! கோவிந்தனே! வைகுண்டனே! என்றிப்படி பலகாலுஞ் சொல்லி |
| ஓலமிட என்னை பண்ணி விட்டு இட்டு |
– |
கூப்பிடும்படியாக என்னைப்பண்ணி கைவிட்டு (எம்பெருமானானவன்) |
| ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் |
– |
ஒருபடியாலும் தன் வடிவையும் தன்னைக் கிட்டுவ தோரடையாளத்தையும் காட்டுகின்றிலன், |
| என் செய்கேன் |
– |
இதற்கு நான் என்ன பண்ணுவேன்! |
| பல காலம் சென்றும் காண்பது ஆணை |
– |
காலமுள்ளதனையும் சென்றாகிலும் காணக்கடவே ளென்பது ஸத்யம் |
| உங்களோடு எங்கள் இடை இல்லை |
– |
(இந்த அத்யவஸாயத்தைக் குலைக்கப் பார்க்கிற) உங்களுக்கு மெனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை. |
முதலடியில் சில திருநாமங்களை யடுக்குகின்றாள், ஒவ்வொரு திருநாமமும் ஒவ்வோரபிப்ராயத்தோடு கூடியது,
அப்பெருமான் இப்படி உபேக்ஷிக்குமளவில் நாமும் அவனை உபேக்ஷித்திருக்கையன்றோ தகுதி, அப்படி உபேக்ஷித்து விலகியிராமல் அவனையே அவற்றுவதற்கு என்ன காரணமென்னில்,
மால் – அடியார் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவனாயிற்றே அவன், மாலாய்ப்பிறந்த நம்பியான அவன் நம்மீது அத்தனை வியாமோஹங் கொண்டிருந்தவனன்றோ, நெடுக உபேக்ஷித்து விடமாட்டானே! என்கிற எண்ணத்தோடு மாலென்கிறாள்.
அரி – நம்மிடத்தில் விரோதி கனத்திருந்தாலும் அதைத் தன்னுடைய ஸங்கல்பலவலேசத்தாலே ஹரித்திடவல்லனல்லனோ? விரோதிவன்மையைப்பற்றி நாம் கவலைப்படவேண்டுமோ? என்கிற எண்ணத்தோடு அரியென்கிறாள்.
கேசவன் – * மைவண்ண நறுங்குஞ்சிக்குழல் பின்தாழ * என்றும் * களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழலகள் தடந்தோள்மேல் மிளிரநின்று விளையாட * என்றும் சொல்லும்படியான திருக்குழலொழுங்கைக்காட்டி நம்மை அகப்படுத்திக்கொண்ட அவன் “இவ்வழகை நினைத்து நினைத்துப் புலம்புவளே பராங்குச நாயகி“ என்றுணரமாட்டானோ? இதை நினைத்தாகிலும் பதறியோடிவரமாட்டானோ? என்கிற எண்ணத்தோடு கேசவனென்கிறாள். (கேசவனென்பதற்குப் பல பொருள்களுண்டு, சிறந்த மயிர்முடியையுடையவனென்ற பொருள் இங்கு விவக்ஷிதம்.)
நராணன் – நாராயணனென்ற சொல்லுக்குப் பலபொருள்களுண்டு, முமுக்ஷுப்படி த்வயப்ரகரணத்தில் “புருஷகாரபலத்தாலே ஸ்வாதந்த்ர்யம் தலைசாய்ந்தால் தலையெடுக்குங்குணங்களைச் சொல்லுகிறது நாராயணபதம், அவையாவன – வாத்ஸல்யமும் ஸ்வாமித்வமும் ஸௌலன்“ என்கிற பொருள் இங்கு விவக்ஷிதம், உடனே சீமாதவன் என்கையாலே இப்பொருள் பொருந்தும்,
இப்படி பெரியபிராட்டியாருடைய ஸம்பந்தத்தினால் கீளப்பப்பட்ட திருக்குணங்களையுடைய பெருமான் நம்மைக் கைவிடாமாட்டானென்னுங் கருத்தினால் “நாராணன் சீமாதவன்“ என்கிறாள்.
கோவிந்தன் – அண்டினார்க்குக் கையாளாயிருக்குமவன் நம்மைக் கைவிடுவனோ?
வைகுந்தன் – கீழ்ச்சொன்ன திருக்குணங்களெல்லாம் திறம்பெறும்படி மேன்மையை யுடையவன்.
என்றென்று – ஆக இப்படிப்பட்ட திருநாமங்களை நிரந்தரமாகச் சொல்லிக் கூப்பிடும்படி என்னைப்பண்ணிவிட்டு, தன்வடிவைக் காட்டுகிறவன், தானிருந்த விடத்துக்கு ஓரடையாளமுங் காட்டுகிறிலன்.
இங்ஙனே சொன்ன தலைவியை நோக்கித் தோழியர் “துர்லபனான அவனைப்பற்றின பேச்சை விட்டிடுவதே நலம்“ என்று கூற அதற்கு மறுமாற்றமுரைப்பன பின்னடிகள்
அரியனான அவனை எளியனாக்கிக் கண்டேதீருவேன், எத்தனை காலமானாலும் சரி, ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
இப்படிப்பட்ட எனது துணிவுகண்டும் நீங்கள் ஹிதஞ்சொல்லி என்னை மீட்கப்பார்க்கில், உங்களோடு உறவை அறத்துறப்பன், நீங்கள் கடக்க நில்லுங்கள் என்றாளாயிற்று.
—————-
***- இப்பதிகத்திற்கு இப்பாடே உயிர்நிலையாயிருக்கும். புறம்புண்டான பற்றுக்கள் சிறிது மில்லாமையைத்
தெவிப்பதேயன்றோ இத்திருவாய்மொழிக்கு முக்யமான ப்ரமேயம், அஃது இப்பாட்டிலுள்ளது.
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–8-2-8-
பதவுரை
| யான் வளர்த்த கிளிகாள் |
– |
நான் வளர்த்து வந்த கிளிகளே! |
| பூவைகள் காள் |
– |
பூவைகளே! |
| குயில்காள் |
– |
குயில்களே! |
| மயில்காள் |
– |
மயில்களே! |
| இடை இல்லை |
– |
(என்னிடத்தில் உங்களுக்கு) ஓர் அவகாசமில்லை, |
| நம் உடைய மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது |
– |
நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் மிச்சப்படவொட்டாதே |
| கொண்டான் |
– |
கொள்ளை கொண்டவன் |
| அடையும் |
– |
இங்கிருந்து சென்று சேர்ந்த |
| வைகுந்தமும் |
– |
திருநாடும் |
| பால் கடலும் |
– |
திருப்பாற்கடலும் |
| அஞ்சனம் வெற்பும் அவை |
– |
திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள் |
| நணிய |
– |
அருமையற்று எளியவையே (ஆனால்) |
| பாசங்கள் |
– |
புறம்புண்டானபற்றுக்கள் |
| கடை அற |
– |
ஸவாஸநமாக |
| விட்ட பின்னை அன்றி |
– |
விட்டொழிந்தால்லலது |
| அவன் |
– |
அப்பெருமான் |
| அவை காண் கொடான் |
– |
அத்தலங்களைக் காணக் கொடான் |
கீழ்ப்பாட்டில் “உங்களோடெங்களிடையில்லையே“ என்று தோழிமாரோடு உறவறுத்தமை சொல்லிற்று, லீலோபகரணங்களிலும் அதரமுண்டானமை சொல்லுகிறதிப்பாட்டு.
லீலோபகரணங்களால் பிறக்கும் ரஸமெல்லாம் தனக்கு எம்பெருமானாலே பிறக்குமென்பது தோன்ற முதலடி அமைந்துள்ளது. “யான்வளர்த்த“ என்பது கிளிகளிற்போலவே பூவை குயில் மயில்களிலும் அந்வயிக்கும்.
ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி, – “தன்னை ப்ரதிபந்திக்கிற அன்னைமாரோடும் உறவறச்செய்தேயும் அவனைக் காணாதொழிந்தவாறே. தான்வளர்த்த தன்னுடைய லீலோபகாணமான கிளிகள் பூவைகள் குயில்கள் மயில்கள் என்கிற விவற்றோடுள்ள ஸம்பந்தமாகாதே அவனைக்காண்கைக்கு ப்ரதிபந்தகமென்று பார்த்து அவற்றை நோக்கிச் சொல்லுகிறாள்.“ என்று.
ஆசார்யஹ்ருதயத்தில் (153) * கண்வலைப்படாதே அகவலைப்பட்டு * என்று தொடங்கும் சூர்ணையில் “பராபிமாநத்திலேயொதுங்கின நம்பிக்கன்பர் தலைமீதடிப்பொடி உடையவருடையார்போல்வாரைக் கிளிபூவை குயில்மயிலென்னும்“ என்று ஸ்வாபதேசார்த்தம் அருளிச்செய்யப்பட்டுள்ளது,
தொண்டாடிப்பொடியாழ்வார் ஆழ்வான் ஆண்டான் எம்பார்அருளாளப்பெருமாளெம்பெருமானார் முதலானவர்கள் போல்வாரைக் கிளிபூவை குயில்மயிலாகச் சொல்லுவதாகத் தேறியுள்ளது. அப்படிப்பட்டவர்களிடத்தில் ஸங்கம் உபாதேயமேயல்லது த்யாஜ்யமன்றே, அப்படியிருக்க, இவற்றோடு ஸங்கமற்றதாகச் சொல்லுகிறவிது சேருமோவென்று சங்கை பிறக்கும், கேண்மின்,
சாணாகதி கத்யத்தில் * பிதரம் மாதாம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீக் குருக் * என்று தொடங்கி குருக்களைமுட்பட்ட த்யஜித்ததாக அருளிச் செய்யப்படுகிறது.
தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாரதார் அன்பு தன்பால் செய்தாலும் அம்புயைகோன் –இன்பமிகு விண்ணாடு தானளிக்கவேண்டியிரான், ஆதலால் நண்ணாவர்கள் திருநாடு * என்றும் * ஞானமனுட்டானமிவை நன்றாக வேயுடையனான குருவையடைந்தக்கால், மாநிலத்தீர்! தேனார்கமலத்திருமாமகன் கொழுநன்தானே வைகுந்தந்தரும் * என்றும்! (உபதேசரத்தினமாலையில்) அருளிச்செய்தபடியே ஆசார்யஸம்பந்தமே முக்திக்கு முதல்தனிவித்தாயிருக்க அப்படிப்பட்ட ஆசார்ய ஸம்பந்தத்தையும் சொல்யிருக்கிறதேயென்று கேட்கலாம்,
இதற்கு அவ்விடத்து வியாக்யானத்திலே விரியவுரைத்தோம். அவர்களை அறவே விட்டிடுவதாக இங்கு விவக்ஷித மன்று, மாதாபிதாக்களையும் ஆசார்யர்களையும் புத்ரமித்ராதிகளையும் பகவத் விபூதிகளாக் கருதுகின்றே னென்பதுவே இங்குப் பரமதாத்பரியம்.
இவர்கள்தாமே பகவத் பாகவதாநுபவ விரோதிகளாகில் இவர்களை ஸர்வாத்மநா த்யஜிக்கவும் ப்ராப்தமே, குரோரப்யவலிப்தஸ்ய கார்யாகார்ய மஜாநத“ உத்பதம் ப்ரதிபந்நஸ்ய ஸத்யஸ் த்யாகோ விதீதே * என்றது காண்க.
“பூவைகள்“ என்னும் பன்மைச்சொல்லின் மேல் விளியுருபு ஏறினால் “பூவைகாள்“ என்றாகும், “பூவைகள்காள் என்றாவதற்கு வழியில்லை எனினும், வடமொழி வேதத்தில் வரும் பலவகைப் பிரயோகங்களைச் “சாந்தஸத்வாத் நதோஷ“ என்பதுபோல இங்குங்கொள்க. “பூவைகாள்“ என்றே பாடமென்று சிலர் சொல்லுவது அஸம்பிரதாயம்.
“உடையம்“ என்றதை மாற்றி “நம்முடைய“ என்று கொள்வது. நம்மிடத்தில் ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறது இரண்டாமடி.
கொண்டான் என்றது வினைமுற்றன்று, வினையாலணையும் பெயர், மூன்றாமடியின் முதலிலுள்ள அடையும் என்பதில் அந்வயிக்குமது, கொண்டானடையம்வைகுந்தமும் என்க.
இத்தலையிலுள்ளதெல்லாம் நேராகக்கொண்டு எட்டவொண்ணாத நிலத்திலேபோய்ப் பாரித்து வெற்றிகொண்டாடியிருந்தானென்கை“ என்பது ஈடு.
என்னையு மென்னுடைமையையுங் கொள்ளைக்கொண்டு அவன் பரமபதத்திலோ திருப்பாற்கடலிலோ * சேணுயர்வானத்தோடொத்தான * சேணுயர்வேங் கடத்திலோ சென்று சேர்ந்தாலும் (அவை நணிய) அவை நமக்குக் கிட்டத்தகாதவையல்ல, ஸமீபஸ்தங்களே என்கிறார்.
“நண்ணிய“ என்பது “நணிய“ என்று தொக்கிக் கிடக்கிறது. நண்ணத்தகுந்தவையே என்றபடி.
அப்படியானால் அநுபவம் கிடைக்கவில்லையேயென்று அழுவானேன்? கிட்டியநுபவித்துச் சளிக்கலாகாதோவென்ன, அதற்கு உத்தரமுரைக்கிறார்
கடையறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண்கொடானே என்று.
இங்கே ஈடு, “அவன் சுணையுடையவன், புறம்பேஞமொருவிஷயத்திலே நசைகிடக்க ஸ்வாநுபவத்தைக் காட்டிக்கொடான், பின்னாட்டாதபடி ஸவாஸநமாக பாஹ்யருதிபோனாலல்லது போகஸ்தானங்களைக் காட்டிக் கொடான்“. என்று
ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்திகாண்மின், -“அவன் நம்முடைய நிறமும் வளையும்நெஞ்சும் தொடக்கமாகவுள்ள ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக்கொண்டு போனானாகிலும், பரமப்ராப்யமான திருநாடும் திருப்பாற்கடலும் திருமலையும் தன்னையாசைப்பட்டார்க்குக் காணநணியவாகில் காட்டாதொழிவானென்னென்னில், உங்கள் பக்கலுள்ள ஸங்கம் நிச்சேஷமாகப் போனாலல்லது அவனவை காண்கொடான், ஆதலால் இனி உங்களோடு முறவில்லையென்கிறார்.“ என்று.
————-
***- கீழ்ப்பாட்டில் * கடைபறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண் கொடானே * என்று கூறின தலைவியை நோக்கி
நங்காய்! எங்களோடு உறவை வேணுமாகில் நீ விட்டுத் தொலைக்கலாமேயொழிய அவன் காட்சி கொடுப்பதென்பது சொல்ல,
எல்லாம் பண்டே இழந்தாயிற்றன்றோ, இன்னமும் இழக்க என்னவிருக்கிறது? என்று அவர்களுக்குச் சொல்லுகிறாள்.
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-
பதவுரை
| ஆர்க்கும் |
– |
எப்படிப்பட்ட பேரளவுடையார்க்கும் |
| தன்னை காண் கொடுப்பான் அல்லன் |
– |
தன்னைக் காணக் கொடாத வனாயிருந்து வைத்து |
| மாயம் தன்னால் |
– |
தனது வஞ்சனத்தினாலே |
| கை செய் அப்பாலது ஓர் |
– |
அக்ருத்ரிம்மாய் அத்னிதீயமான |
| கோலம் மாண் குறள் வடிவு |
– |
ஸௌந்தரியத்தையுடைய யாசகவாமன வேஷத்தை |
| காட்டி |
– |
(மஹாபலிக்கு) வெளிக்காட்டி (உடனே) |
| மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த |
– |
மண்ணுலகும் விண்ணுலகும் நிறையும்படியாக வியாபிதவனாய் |
| சேண் சுடர் பல தோள்கள் தழைத்த |
– |
ஓங்கி விளங்காநின்ற பல திருத்தோள்களும் தழைத்திருக்கிற |
| தேவபிராற்கு |
– |
தேவபிரானான எம்பெருமானுக்கு |
| என் நிறைவினோடு |
– |
என்னுடைய ஸ்த்ரீத்வபூர்த்தியோடே கூட |
| நாண் கொடுத்தேன் |
– |
லஜ்ஜையையும் இழந்தேன், |
| நல் நுதல் என்னுடைய நங்கைமீர்காள் |
– |
விலக்ஷணமான திருமுக மண்டலத்தையுடையீர்களாயிருக்கிற என்னுடைய தோழிகளே! |
| இனி என் கொடுக்கேன் |
– |
இன்னமும் என்ன இழக்கக்கடவேன்? |
(தன்னை ஆர்க்கும் காண்கொடுப்பானல்லன்) தமது முயற்சியினால் காண நினைப்பார் எத்தனை சிறப்புப் பெற்றவர்களாயிருந்தாலும் அவர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொடுக்குமியல்வின்னல்லன் எம்பெருமான்.
இது தாய்மாருடைய வார்த்தையின் அநுவாதமிருக்கிறபடி.
அவன் துர்லபன் என்றன்றோ நீங்கள் சொல்லுகிறீர்கள், ஆமாம், அவன் துர்லபனென்றே கொள்ளுங்கோள் என்று அப்யுபகம்யவாதம் பண்ணுகிறபடி.
துர்லபனென்று “காணகொடுப்பானல்லன் ஆர்க்குந்தன்னை“ என்று இசைந்து சொல்லிவிடுவதனால் லாபமில்லையே யென்னில், லாபமோ நஷ்டமோ, அந்த விசாரம் இங்கில்லை. “இன்னமும் ஆத்மாத்மீயங்களே நீ இழக்கவேபோகிறாய்“ என்று தாய்மார்கள் சொன்னதற்கு வலிதாக விடை கூறுவது மேல் முழுவதும்.
எந்த வடிவைக் காட்டி மஹாபலியின் ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டானானபின்பு, இன்னமும் அவன் கொள்ளை கொள்ளத்தக்கதாய் நான் இழக்கத் தக்கதாய் என்ன இருக்கிறது என்பது கருத்து.
“கை செய் அப்பாலது“ என்றது மாயத்தில் அந்வயிப்பதன்று, மாண்குறள் கோலவடிவுக்கு விசேஷணமாய் அதிலே அந்வயிக்கும்.
கைசெய்கைக்கு அப்பாலதான அழகையுடைய வடிவு.
* ஓவியத்தெழுதவொண்ணா வுருவத்தாய்! * (கம்பர்) என்றபடி சித்திரத்திலும் எழுத வொண்ணாதபடி மிக அற்புதமாயமைந்த ஒப்புயர்வற்ற அழகையுடைய வடிவைக்காட்டி யென்றபடி.
உபயவிபூதி நாதனான தான் ஒன்றுமில்லாதான் போலே யாசகனாய் வருகையும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்து கொள்ளுகையும் ஆகிய மாயத்தை நினைத்து, மாயந்தன்னால் எனப்பட்டது.
மாவலி பரம சந்தோஷத்துடனே நீர்த்தாரையைக் கையில்விட, கையிலே நீர் விழுந்தவளவிலேயே ஸமஸ்த லோகங்களும் விம்மவளர்ந்தான், கற்பகச் சோலை பணைத்தாற்போலே திருத்தோள்கள் தழைத்தன.
இந்திரனிழந்த ராஜ்யத்தை மீட்டுக்கொடுத்து அதனாலுண்டான மகிழ்ச்சி மிகுதியினால் வடிவுபுகர்பெற்று விளங்கிற்று,
அப்படிப்பட்ட விலக்ஷணமான வடிவை எனக்குக்காட்டி எனது ஸர்வஸ்வமான அடக்கத்தை இழக்கக்கூடியதும் என்பாலொன்றுமில்லையே – என்றாளாயிற்று.
—————-
***- “நங்காய்! எது எப்படியிருந்தாலும் உனக்கு ஹிதமே கோருமவர்களான நாங்கள் சொல்லுமதை நீ கேட்கவேணுமே“ என்று தாய்மார் சொல்ல
“ஆமாம், கேட்க வேண்டியது அவசியந்தான், உங்கள் வார்த்தை கேட்கைக்கு நெஞ்சுவேணுமே,
அது இங்கில்லையே, அவன் பக்கல் போயிற்றே, என் செய்வேன்? என்கிறாள் தலைவி.
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-
பதவுரை
| என்னுடைய நல் |
– |
நுதல் நங்கைமீர்காள்! |
| என் நெஞ்சு |
– |
எனக்கு வீதேயமாயிருந்த நெஞ்சானது |
| நின் இடையேன் அல்லேன் என்று |
– |
உனக்கு நான் உறுப்பாலேனல்லேன்“ என்று சொல்லி |
| என்னை நீங்கி |
– |
என்னை விட்டகன்று, |
| கேமியும் சங்கும் இரு கை கொண்டு |
– |
திருவாழி திருச்சங்குகளை இரண்டு திருக்கையிலுமேந்திக் கொண்டு |
| ஓர் கோலம் நீலம் நல் நெடு குன்றம |
– |
ஓர் அழகிய நீல மஹாபர்வதம் |
| நெடு சூழ் பல்சுடர் நாயிற்றோடு பால் மதி ஏந்திவருவது ஒப்பான் |
– |
பரந்து சூழ்ந்த பல சுடரையுடைத்தான் ஸூர்யனோடு கூடவெளுத்த சந்திரனையும் (தன் சிகரத்திலே) தாங்கிக் கொண்டு நடந்துவருவது போன்றுள்ளவனுடைய |
| நாள் மலர் பாதம் அடைந்தது |
– |
அப்போதலர்ந்த செந்தாமரை போன்ற திருவடிகளையடைந்திட்டது. |
| இனி யான் என் செய்வது |
– |
இப்படி நான் நெஞ்சிழந்த பின்பு எதைச் செய்வது? |
யான் இனிச் செய்வது என்? ஸ்வதந்திரனான எம்பெருமானைத்தான் நியமிக்கமுடியவில்லையென்றால், பரதந்திரமான நெஞ்சையும் அந்தோ! நியமிக்க முடியவில்லையே, யான் என் செய்வேன்? என்கிறாள்.
“என்னெஞ்சு“ என்னும்படியாக எனக்கு விதேயமாயிருந்த நெஞ்சன்றோ, அதைக்கொண்டு ஜீவிக்க வேண்டியவளன்றோ நான், இப்படியிருக்க, நிர்தாக்ஷிண்யமாய் அது என்னைவிட்டகன்றதே,
அகன்றுபோம்போது வெட்டிதாகவொரு வார்த்தையும் சொல்லியன்றோ போயிற்று, அது என்னென்னில், (நின்னிடையேனல்லேனென்று.) “ஆழ்வீர்! இனி உமக்கும் நமக்கும் யாதொரு ஸம்பந்தமுமில்லைகாணும்“ என்று உறுவறுத்துக் கொண்டு போயிற்றே,
ஸம்ந்யாஸாச்ரமஸ்வீகாரம் செய்வார் போமாப்போலே யன்றோ போயிற்று.
போனாலென்ன? பின்தொடர்ந்து சென்று பிடிக்கவொண்ணாதோ வென்கிறீர்களோ?
பின்தொடரவொண்ணாதபடி கடலிலேயன்றோ சென்று புக்கது. கடல்வண்ணனுடைய திருவடிவாரத்திலே லயித்துவிட்டதே!
இப்படி நெஞ்சைப் பறிகொடுத்தநான் உங்கள் ஹிதவசனங்கேட்கப் பரிகரமற்றிருக்கின்றேனே, என்செய்வேன்? என்றாளாயிற்று.
பின்னடிகளில் எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அதுதன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது.
ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும் எந்தியிராநின்ற பச்சைமாமலைபோல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்யசந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரியமலை ஏற்ற உவமையாம்.
திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம்.
* ஆங்கு மலரும் குவியும் மாலுந்திவாய், ஒங்கு கமலத்தினொண்போது, ஆங்கைத் திகிரிசுடரென்றும் வெண்சங்கம், வானிற்பகருமதியென்றும் பார்த்து. * (மூன்றாந்திருவந்தாதி) என்ற பேயார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.
—————
***- இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது,
உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது.
பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-
பதவுரை
| பாதம் அடைவதன் பாசத்தாலே |
– |
திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால் |
| மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு |
– |
புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு |
| கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல் |
– |
கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக. |
| வண் குருகூர் சடகோபன் சொன்ன |
– |
உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த |
| தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் |
– |
தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள் |
| இவையும் ஓர் பத்து |
– |
இவை பத்தையும் |
| இசையோடும் வல்லார் தாம் |
– |
இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள் |
| ஆதும் ஓர் தீது இலர் ஆகி |
– |
ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி |
| இங்கும் அங்கும் |
– |
உபய விபூதியிலும் |
| எல்லாம் அமைவார்கள் |
– |
எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர் |
புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விட்டபடியே எம்பெருமான் திருவுள்ளத்தில் நன்குபடுத்துமதுவே
இத்திருவாய்மொழிக்கு உயிரான விஷயமாதலால் “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வண்பாசங்கள் முற்றவிட்டு“ என்றார்.
கோதில் புகழ்க்கண்ணன் – கண்ணனுடைய புகழ்க்கு ஏது கோது? என்னில்,
அவனையும் விரும்பி மற்ற வன்பாசங்களையும் விரும்புகைதான் கோது,
“குணங்களுக்குக் கோதாவது, தன்னையொழியப் புறம்பேயும் நசைபண்ணும்படியாயிருக்கை“ என்பது நம்பிள்ளையீடு
அங்ஙனே கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடிகளிலே ஆழ்வாரருளிச்செய்தது தீதிலந்தாதியோராயிரம்.
நாராயணகதையைச் சொல்லுவதாக ஆரம்பித்த மஹாபாரதம் பூசல் பட்டோலேயென்று பரந்தது.
ராம் வ்ருத்ந்தும் சொல்லுவதாக எழுந்த ஸ்ரீராமாயணம் – அப்படி இதர கதைகளின் ப்ரஸ்தாவகந்தமும் கொள்ளாமலிப்பதுவே இதற்குத் தீதில்லாமையென்க.
அப்படிப்பட்ட ஆயிரத்தினுள் இப்பதிகை இசையோடும் சொல்லுமவர்கள் * பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும் * என்னும்படியான தீது ஒன்றுமில்லாதவராகி இஹலோகத்தோடு பரலோகத்தோடு வாசியற எங்கும் குறையற்றிருப்பர்கள் – என்றாராயிற்று.
————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Related
This entry was posted on November 13, 2022 at 7:41 pm and is filed under திரு வாய் மொழி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply