ஸ்ரீ திருவாய் மொழி -1-2- வீடுமின் முற்றவும்-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

 

பதவுரை

முற்றவும்

(பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும்
விடுமின்

விட்டுவிடுங்கள்;
வீடு செய்து

அப்படிவிட்டு,
உம் உயி

உங்களுடை ஆத்ம ஸ்துவை
வீடு உடையான் இடை

மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே
வீடு செய்ய மின்

ஸமர்ப்பியுங்கள்.

***- எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விட்டு எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோளென்கிறார். “முற்றவும் வீடுமின்” என்று அடைவே சொல்லாயிருக்க, அப்படிச் சொல்லாமல், தொடங்கும்போதே வீடுமின் என்பானென் னென்னில்; ஒரு சிறு குழந்தை கையிலே ஒரு பாம்பைப் பிடித்துக்கொண்டு கிடந்தால் ‘போடு, போடு’ என்று சொல்லி, பிறகு பாம்பு’ என்னுமாபோலேயும், ஒருவன் வீட்டினுள்ளே கிடந்து உறங்கா நிற்க வெளியிலே நெருப்புப்பற்றி எரியாநின்றால் ‘புறப்படு, புறப்படு’ என்று கோஷித்து விட்டுப் பிறகு ‘நெருப்பு’ என்னுமாபோலேயும் முந்துற, விடுங்கோளென்கிறார்.

எதை விடுவதென்ன, முற்றவும் என்கிறார். அஹங்கார மமகாரங்களாலே தூஷிக்கப்பட்டவற்றிலே சிலவற்றை வைத்துக் கொண்டு சிலவற்றை விடுவதென்பது கூடாதே; முழுவதையும் விட வேண்டுமாதலால் முற்றவும் என்கிறார்.

உம் உயிர் வீடுடையானிடை = இதற்குப் பலபடியாகவும் பொருளுரைக்கலாம்

உங்களுடைய உயிரையும் அதற்கு வீடாகிய சரீரத்தையும் தனக்குச் சரீரமாகவுடையனான பகவானிடத்தில் என்னலாம்;

உங்களுடைய உயிரை வீடாகவுடையவான எம்பெருமானிடத்தில் என்னலாம்.

உம் உயிர்- உங்களாத்மாவை, வீடு- விடுதமிடத்தில், உடையானிடை- ஸ்வாமியிடத்தே. வீடு செய்மின்- என்னலாம்

வீடுடையானிடை- வீடாகிய பரமபதத்தையுடையவனான எம்பெருமானிடத்தில், உம்முயிர் வீடு செய்மின் என்னலாம்.

“அநித்யமான சரீரத்திற்கு ஒரு நன்மை தேடிக்கொள்ளச் சொல்லுகிறேனல்லேன், நித்யமான ஆத்ம வஸ்துவுக்கன்றோ நானொரு நன்மை தேடிக்கொள்ளச் சொல்லுகிறது” என்ற கருத்தும், “என் உயிர்க்கா நான் நன்மை தேடச் சொல்லுகிறேன், உங்கள் உயிர்க்கன்றோ” என்ற கருத்தும் ‘உம்முயிர்’ என்பதில் தோன்றும்.

‘வீடு செய்மினே’ என்றும் ‘வீடு இசைமினே’ என்றும் இரண்டு பாடல்களும் வியாக்யானங்களில் பரிக்ரஹிக்கப்பட்டுள்ளன; ‘

வீடு இசைமினே’ என்றது- வீட இசையுங்கோள் என்றபடி.

விட வேண்டியவற்றை விடாமற்போனாலும் விடவேணுமேன்கிற அபேக்ஷையையாவது நெஞ்சிற் கொள்ளுங்கோள் என்றவாறு.

அபிமுக்யம் காட்டுகிறவளவிலேயே பரம ஸந்தோஷமடையுமியல்வினனான எம்பெருமானுக்கு இந்த சேதநன் விஷ்யாந்தரங்களை விடுவதிற்காட்டிலும், விட இசைவதுதானும் மகிழ்ச்சிக்குறுப்பாகும் என்க.

————–

***- எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில்.

மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2-

பதவுரை

உயிர் மன்னு

ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற
ஆக்கைகள்

சரீரங்கள்
மின்னின்

மின்னலைக் காட்டிலும்
நிலையில்

நிலையுடையன வல்ல;
என்னும் இடத்து

என்று சொல்லுமளவில்
நீரே

நீங்களே
இறை

சிறிது
உன்னுமின்

ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள்.

‘உயிர்மன்னு ஆக்கைகள் மின்னின்னிலையில’ என்றும் அந்வயிக்கலாம்

‘மன் உயிர் ஆக்கைகள் மின்னின்னிலையில’ என்றும் அந்வயிக்கலாம்.

ஆத்மாக்கள் விஷய போகங்களுக்கு ஆயதனமாகப் பற்றி யிருக்கிற சரீரங்களானவை மின்னல் போலவுங்கூட நிலத்திராதவை என்றும், நித்யர்களான ஆத்மாக்கள் கொண்ட சரீரங்களானவை- என்றும் முறையே உரைத்துக்கொள்க. மின்னின் = மின்னல்போல; மின்னலைக்காட்டிலும்.

என்னுமிடத்து இறையுன்னுமின்நீரே = இந்த வியத்தை நீங்களே ஆராய்ந்து பார்க்கலாமே; இதற்காக ஒரு ஆசார்யோபதேசம் வேணுமோ? என்றவாறு.

பன்னீராயிர வுரையின்படிக்குப் பின்னடிகளின் கருத்தாவது- மின்னின்னிலையில் மன்னுயிராக்கைகள் என்று சொல்லும்படியாதலால் நீங்கள் இறை – ஸ்வாமியை, உன்னுமின் – மநநம் பண்ணுங்கோள் என்பதாம்.

————–

***- விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில்.

நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3–

பதவுரை

நீர் நுமது என்ற இவை

அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை
வேர் முதல் மாய்த்து

(ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து
இறை

ஸ்வாமியை
சேர்மின்

அடையுங்கள்;
உயிர்க்கும்

ஆத்மாவுக்கு
அதன் நேர்

அதனோடு ஒத்து
நிறை இல்

பூர்த்தி இல்லை.

(*அநாத்மந்யாத்ம புத்திர் அஸ்வே ஸ்வமிதி யாமதி: அவித்யாதருஸம்பூதிபீஜமேதத் த்விதா ஸ்திதம்*) என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் சொல்லப்பட்டது. இதைத் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் ‘நீர்நுமதென்றிவை வேர்முதல்” என்றார். இங்கு ‘நான் எனதென்றிவை’ என்றோ ‘நாம் நமதென்றிவை’ என்றோ இருக்க வேண்டும்; அப்படி யிருந்தால்தான் அஹங்கார மமகாரங்களுக்குப் பர்யாயமாகும்: ஆழ்வார் அப்படி யருளிச்செய்யாது நீர் நுமது என்றது:- அநுவாதரீதியாலுங்கூட அஹங்கார மமகார ஸ்பர்சம் தமக்குக்கூடாதென்ற கருத்தினாலென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்- “நான் எனது தம்வாக்காலே சொல்ல மாட்டாரே,  நாக்கு வேம் என்று.”

—————-

விட வேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப் பாட்டிலருளிச் செய்கிறார்.

இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-1-4-

பதவுரை

அவன் உரு

அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,
இல்லதும் அல்லது

விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையது மன்று
உள்ளதும் அல்லது

ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையது மன்று;
எல்லை இல்

எல்லை யில்லாத
அ நலம்

அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்)
பற்று அற்று புல்கு

ஹேய விஷய ஸங்கத்தை விட்டு-(அப்பெருமானை) ஆச்ரயிக்க

அவனுக்கு உள்ளதுமல்லது இல்லதுமல்லது =நம்முடைய ஸித்தாந்தத்தில் எல்லாம் உள்ள வஸ்துக்களேயன்றி இல்லாத வஸ்து ஒன்றுமேயில்லையே; அப்படியிருக்க இல்லது என்பதேன்? எனில்; கேண்மின்:

இங்கே இல்லது என்பதற்கு: ‘அடியோடு இல்லாதது’ என்றாவது ‘பொய்யானது’ என்றாவது பொருளில்லை; ‘அழியுந்தன்மையுடையது’ என்று பொருள். உள்ளது என்றது அழியாத பொருள் என்றபடி அசித்தையும் சித்தையும் சொன்னவாறு.

ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் இரண்டாவது அம்சத்தில் பன்னிரண்டாவது அத்யாயத்தில் *ஜ்யோதீம்ஷி விஷ்ணுர்புவநாதி விஷ்ணு வநாதி விஷ்ணு: கியோ திசச்ச, நத்யஸ் ஸமுத்ராச் ச ஸ ஏவ ஸர்வம் யதஸ்தி யந்நாஸ்தி ச விப்ரவர்ய* என்றுள்ள ச்லோகத்தில் அஸ்தி சப்தத்தாலே சித்தையும் நாஸ்தி சப்தத்தாலே அசித்தையும் சொல்லியிருக்கையாலும்,

தைத்திரீய உபநிஷத்தில் *ஸத்யஞ்சாந்ருதஞ்ச ஸத்யமபவத்* என்ற விடத்து ஸத்ய சப்தத்தாலே சித்தையும் அந்ருத சப்தத்தால் அசித்தையும் சொல்லி யிருக்கையாலும்

அவற்றை அடியொற்றி ஆழ்வாரும் உள்ளது இல்லது என்ற சப்தங்களினால் சித்தையும்  அசித்தையும் குறித்தனர்.

இனி உள்ளது – உள்ளேயிருப்பது (சரீரத்தினுள்ளேயிருப்பது) என்று பொருளாய் ஆத்மாவைச் சொல்லிற்றாகி. இல்லது – (இல்- வீடு) வீடாகவுள்ளது. (அத்மாவுக்கு இருப்பிடமாகவுள்ளது) என்று பொருளாய் உடலைச் சொல்லிற்றாகி ஆக இவ்வழியாலே சித்தையும் அசித்தையும் சொல்லிற்றாகவுங் கொள்ளலாமென்பர்.

பரமாத்மாவினுடைய ஸ்வரூபம் நேதந அசேதந விலக்ஷணம் என்கை.

ஆனால் பரமாத்ப ஸ்வரூபம் எங்ஙனே யிருக்குமென்ன, எல்லையிலந்தலம் என்கிறது. எல்லையில்லாத ஆந்தமயமாயிருக்குமென்றவாறு.

அப்படிப்பட்ட பரம பொருளை, பற்றற்றே புல்கு = *புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸநையோடே விட்டே பற்றவேணும். புல்கு என்னும் ஏவலொருமைவினை முற்றுக்குச் சேர விளி வருவித்துக் கொள்க. நாட்டை நோக்கிச் சொல்வதாகக் கூறுப.

————

***- எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில்.

உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹ லோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண் வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில்.

அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5-

 

பதவுரை

பற்று அற்றது எனில்

விஷயாந்தர ஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே
உயிர்

ஆத்துமா
வீடு உற்றது

மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;)
அது

அந்தக் கைவல்ய மோக்ஷத்தை
செற்று

வெறுத்து
மன்ன உறில்

நிலை நிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில்
அற்று

(ஆச்ரயிக்கும் போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து
இறை பற்று

அந்த எம்பெருமானை பற்றுக

பற்று அற்றதெனில் = ப்ரக்ருதியிலும் ப்ராக்ருதங்களிலுமுண்டான பற்று ஒழிந்த மாத்திரத்திலே என்றபடி.

உயிர்வீடு உற்றது = ஆத்மாநுபவமாகிற மோக்ஷம் வந்து புகுந்ததாயிடும். கைவல்ய மோக்ஷத்திலே இச்சை பிறக்கும் என்றவாறு. ‘மறுபடியும் பிறத்தல் இறத்தலாகிய துன்பங்கள் உண்டாகாதபடியிருந்தால் போதுமானது’ என்கிற இவ்வளவையே ஆசைப்பட்டு அதற்காகக் கைவல்ய மோக்ஷத்தளவிலே த்ருப்திபெறதலாகிற ஒரு நிலைமை நேரும் என்றபடி, விலக்ஷணமான ஞானத்தையும் ஸ்வரூபத்தையும் உடைத்தான ஜீவாத்மாவாகிய வஸ்துவுக்கு அசித் ஸம்பந்தமேயன்றோ மறைவை உண்டுபண்ணிக்கொண்டிருந்தது; அப்படிப்படட் அசித் ஸம்ஸர்க்கம் கழிந்தவாறே ஆத்மஸ்வரூபம் பிரகாசிக்கும் அதுதான் நித்யமாயும் ஜ்ஞாநாநந்த ஸ்வரூபியாயுமிருக்கையாலே ‘இத்தகையத்தான ஆத்மவஸ்துவையே அனுபவித்துக்கொண்டிருக்கலாமே’ என்ற ஆசை பிறக்கும்படி நேர்ந்துவிடுமென்க.

அது செற்று = அதில் விருப்பமற்று என்றபடி

மன்னுறில் = மன்ன- உறில், மன்னவுறில் என்று புணர வேண்டுமிடத்து மன்னுறில் என்றானது தொகுத்தல். ‘அதற்கு மேலும் ஒரு புருஷார்த்தமுண்டு’ என்று ஆசைப்பட்டு அப்பால் போக வேண்டிய தொன்றில்லாதபடி ஒப்புயர்வற்ற புருஷார்த்தமாகிய பகவத் ப்ராப்தி லக்ஷண மோக்ஷணத்தைப் பெற வேண்டியிருக்கில் என்றபடி.

அற்று என்பதிலுள்ள வினையெச்ச விகுதியைப் பிரித்தெடுத்து பற்று என்பதனோடு கூட்டி, பற்று என்பதிலுள்ள ஏவல் விகுதியைப் பிரித்தெடுத்து அற்று என்பதில் கூடடி“, ‘பற்று அறு’ என்றாக்கி, இறையைப் பற்றிக் கைவல்ய மோக்ஷ ருசியை அறு என்பதாகவு முரைப்பர்.

————

***- ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக் கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில்.

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

பதவுரை

ஈசனும்

எம்பெருமானும்
பற்றிலன்

ஆச்ரிதர்களோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாக உடையனாய்
முற்றவும்

தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்
நின்றனன்

இரா நின்றான்: (ஒலோகமே!)
பற்றிலை ஆய்

எம்பெருமானோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்
அவன்

அப் பெருமானுடைய
முற்றில்

ஸகல கைங்கரியங்களிலும்
அடங்கு

அந்வயிப்பது.

ஈசனும் பற்றிலன் = ‘எம்பெருமான் பற்றில்லாதவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்படியிருக்கும்: ஆனால் பூருவாசாரியர்கள் அப்பொருளைக் கொண்டிலர்; “ஸர்வேச்வரனேயாகிலும் ஆச்ரிதரெல்லார் பக்கலரிலுமொக்க ஸ்நேஹ ஸ்வபாவனாயிருக்கும்.” என்று ஆறாயிரப்படியிலே திருக்குருகைப்பிரான் பிள்ளானருளிச் செய்தது நோக்கத்தக்கது. பற்றிலானென்பது பற்றிலனென்று குறுகிக் கிடக்கிறதென்பர். பற்றொடுகூடி யுள்ளவனென்றபடி ஆச்ரிதர்களுடன் புரையறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்கை.

ஈசனும் = ஈச்வரனாயிருக்குந் தன்மையாகிற மேன்மையுங்கூட இல்லா விடில் அந்த சீலகுணம் நிறம் பெறமாட்டாதன்றோ. பரத்துவமுள்ள விடத்தே காணப்படும் ஸௌப்பியமேயன்றோ போற்றத் தக்கதாகும். காஷ்டலோஷ்டங்கள் மிகவும் எளியனவாயிருக்கின்றனவென்றால் யாது பயன்? ஒன்றுமில்லை. ஆகவே மேன்மை கிடைக்குமிடத்தேயுள்ள நீர்மையே பாராட்டுதற்குரியது. இதற்காகவே எம்பெருமானிடத்தில் மேன்மை குடிபுகுந்ததேயன்றி, அதுகண்டு நாம் அஞ்சுவதற்காகவன்று.

முற்றவும் நின்றனன் = ஸகலவித பந்துவுமாகவும், தாரக போஷக போக்ய வஸ்துக்களெல்லாமாகவும், அறிவு ஒழுக்கம் ஜாதி முதலியவற்றாற் ஏற்றத் தாழ்வு பெரிதுமுடைய எவ்வகுப்பினர்க்கும் ஒருங்கே ஆச்ரயணீயனாகவும் நின்றான்.

பற்றிலையாய் = ‘பற்றிலன்’ என்பதன் முன்னிலையிது. அச் சொல்லுக்குக் கொண்ட பொருளை இச்சொல்லுக்குங் கொள்ளத்தக்கது. அவன் உன்னிடத்தில் பற்று வைத்திருப்பது போலவே நீயும் அவனித்துப் பற்றுடையனாய் என்றபடி,

அவன் முற்றில் அடங்கு = அவனுடையதான எல்லாவற்றிலும்- ஸகலவித கைங்கரியங்களிலும் ஊன்றியிருக்கக்கடவை என்றபடி.

இப்பாசுரத்திற்கு பட்டர் அருளிச் செய்யும்படி யொன்றுண்டு; அதாவது ஈசனம்- ஷாட்குண் பரிபூர்ணனான் ஸ்ரீவைகுண்ட நிலயனான எம்பெருமானும், பற்றிலன்- அங்குள்ள நித்ய முக்தர்களிடத்துப் பற்று இல்லாதவனாய், முற்றவும் நின்றனன்- இன்று ஆச்ரயிக்கிற ஸம்ஸாரிகளிடத்திலேயே பரிபூர்ணமான காதல் கொண்டிராநின்றான். பற்றிலையாய் – ஹேய விஷயங்களிலே நீ வைத்திருக்கிற பற்றை விட்டவனாகி, அவன் முற்றிலடங்கு- அவனையே எல்லாமாகப் பற்றுவாயாக என்று. உலகத்தை விளித்துச் சொல்லுகிறபடி.

————-

***- கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே;

கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்:

அப்பெருமானது ஐச்வர்யம் அளவற்ற தென்பது உண்மையே; அப்படிப்பட்ட ஐச்வரியமெல்லாம் நமது நாதனுடைய ஐச்வரியமன்றோ என்று அநுஸந்தித்து நாமும் அந்த ஐச்வரியத்தினுள் அந்தர்பவிக்கவும் பெற்றால் பின் வாங்க ப்ரஸகதி யிராதென்கிறார்.

எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள உறவை உணரவே கூச்சம் குலையும் என்பது இப்பாட்டுக்குத்  தேர்ந்த கருத்தாம். ஸம்பந்தவுணர்ச்சி உண்டாகுமத்தனையே போதுமென்கை.

நிருபாதிக பிதாவாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய “உன்றன்னோடுறவேல் நமக்கு இங்கொழிக்க வொழியாது” என்னும்படியாக உறவின் உறுதியை உற்று நோக்கி, ஈச்வரன் “த்வம் மே” (நீ எனக்கு உரியவன்) எனில், “அஹம் மே” (நான் எனக்கே உரியேன்) என்னும் விவாதத்தை விட்டொழித்தால் அப்பெருமானது செல்வ மிகுதியைக் கண்டு சிறிதும் கூசநேரிடாதென்க.

ராஜகுமாரன் ஒரு அழகிய தோட்டத்தைக் கண்டு உள்ளே புக நினைத்தும் கட்டுங்காவலுமா யிருந்தது கண்டு அஞ்சி நிற்கு மளவில் “இஃது உன் தகப்பனது தோட்டங்காண்” என்னவே நினத்தபடி புகுந்து திளைத்துப் பரிமாறலாமன்றோ; அதுபோலக் கொள்க.

அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7-

பதவுரை

அடங்கு எழில்

முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க

(எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு

பார்த்து
அடங்க

அதெல்லாம்
ஈசனஃது

எம்பெருமானுடையதான
எழில் என்று

ஸம்பத்து என்று துணிந்து
உள்ளே

அந்தப் பகவத் விபூதிக்குள்ளேயே
அடங்குக

சொருகிப் போவது

அடங்க எழில்; தொகுத்தல் விகாரம். சம்பத்து – ஸம்பத் என்ற வடசொல் விகாரம்.

ஈசனடங்கெழிலஃதென்று – ‘அஃதடங்க ஈசனெழிலென்று’ என அந்வயித்துக் கொள்ளவேணும். அஃதெல்லாம் நமது ஸ்வாமியானவனுடைய ஸம்பத்து என்று அனுஸந்தித்து என்றபடி.

உள்ளே அடங்குக=எம்பெருமானது விபூதியினுள்ளே தானு மொருவனாக அடங்கப் பார்க்கவேணும். அதற்கு வெளிப்பட்டால் விநாசமே பலிக்கும். அதனுட்பட்டு விட்டால் கூசவேண்டி அவசியமேயில்லை யென்க.

————–

***- என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில்.

உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8-

பதவுரை

உள்ளம்

நெஞ்சு என்றும்
உரை

வாக்கு என்றும்
செயல்

உடல் என்றம்
உள்ள

ஏற்கெனவே யுள்ள
இம் மூன்றையும்

இந்த மூன்று உறுப்புக்களையும்
உள்ளி

ஆராய்ந்து பார்த்து
கெடுத்து

அவற்றிற்குள்ள விஷயாந்தரப் பற்றைத் தவிர்த்து
இறை உள்ளில்

எம்பெருமான் பக்கலிலே
ஒடுங்கு

அந்வயிப்பது.

ஒடுங்கு என்பதை தன்வினையாகவும் பிறவினையில் வந்த தன்வினையாகவுங் கொள்வர். நீங்கள் ஒடுங்கவேணுமென்றும் உங்கள் உறுப்புக்களை ஒடுங்கச்செய்ய வேணுமென்றும் முறையே பொருள்காண்க. ஒடுங்குதல் அந்வயித்தல்.

————

***- எம்பெருமானோடு நமக்குள்ள உறவின் உணர்ச்சி யுண்டாகவே கூசாமல் அணுகலாமென்றார் ஏழம்பாட்டில்.

அவன் தன்விஷயத்தில் உபயோகப் படுத்துவதற்காகவே தந்தருளின உறுப்புகளை அவன் விஷயத்திலேயே உபயோகப்படுத்து மத்தனையே வேண்டுவது என்றார் எட்டாம்பாட்டில்;

இவற்றைக்கேட்ட உலகர்கள் ‘ஆழ்வீர்! நாங்கள் ஸ்வாதந்திரியம் பாராட்டி அதனால் பகவத் விஷயத்தில் ஊற்றமற்றிருக்கின்றோமல்லோம்; எம்பெருமானுடைய போக்யதையை அறியாமலிருக்களோமல்லோம்: அப்ராப்தங்களான விஷயாந்தரங்களை விட்டு ப்ராப்தனான அவனையே பஜிக்கவேணுமென்னும் விருப்பம் மிகவுடையோமாயினும் பஜிக்க வொட்டாத பிரோதிகள் கனக்க உண்டாயிரப்பதனாலன்றோ நாங்கள் பஜியாமலிருக்கிறோம்’ என்ன;

நீங்கள் அவனைக் கிட்டவே அந்த விரோதிகளெல்லாம் உடனே விட்டு நீங்குமென்கிறாரிப்பாட்டில்.

ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9-

 

பதவுரை

அவன் கண்

அந்த எம்பெருமான் பக்கலிலே
ஒடுங்க

அந்வயிக்கவே
எல்லாம்  ஒடுங்கலும்

(ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம்
விடும்

விட்டு நீங்கும்:
பின்னும்

அதற்குப் பிறகு
ஆக்கை விடும் பொழுது

சரீரம் தொலையும் நாளை
எண்

எதிர்பார்த்திருப்பது.

————-

***- கீழே ஆழ்வார் உபதேசித்தபடியே யெல்லாங்கேட்ட  ஸம்ஸாரிகள் “ஆழ்வீர் அப்படியே செய்வோம்; எம்பெருமானைப் பஜிப்போம்; பஜநத்திற்கு ஆலம்பனமாக ஒரு மந்த்ரம் வேணுமே அது என்ன மந்த்ரம்?’ என்ன,

அந்த மந்த்ரம் இன்னதென்று தெரிவித்தருளுகிறாரிப்பாட்டில்

நாராயணத் திருநாமத்தின் பொருளை அனுஸந்தானஞ் செய்து கொண்டே அத்திருநாமத்தை வெளியிட்டருளுகின்றார் காண்மின்.

இப்பாசுரம் திருமந்த்ரார்த்தம் என்னமிடம் ஆழ்வானுடைய இதிஹாஸத்தினால் நன்கு விளங்கும்; அது வருமாறு:-

அழகியமணவாளனுடைய அநுகிரஹத்தினால் ஆழ்வானுக்கு இரண்டு திருக்குமாரர்கள் திருவவதரிக்க, ஆழ்வான் அக்குமாரர்கட்கு நாமகரணம் முதலியன செய்வித்தற்கு உடையவர் கடவரென்று எண்ணித் தாம் ஒன்றுஞ் செய்யாதிருக்க,

நம்பெருமாள் திருவருளால் ஆழ்வானுக்கு உபய குமாரர்கள் அதித்ததாகப் பெருமகிழ்ச்சி கொண்டிருந்த ஸ்ரீபாஷ்யகாரர் அக்குழந்தைகள் பிறந்த பதினோரா நாளிலே சிஷய வர்க்கத்ததுடன் ஆழ்வான் திருமாளிகைக் கெழுந்தருளித் தமது பிரதான சிஷ்யர்களில் ஒருவரான எம்பாரை நோக்கிக் ‘குழந்தைகளை எடுத்துக்கொண்டு வாரும்’ என்ன,

அவர் அங்ஙனமே பிரபன்ன குலக்கொழுந்தான அக்குழந்தைகளை எடுத்துவரும்போது த்ருஷ்டி தோஷாதிகள் தாங்காதபடி ரக்ஷையாக த்வயமென்னும் மந்த்ரரத்னத்தை அநுஸந்தித்து வாழ்த்திக் கொண்டே வந்து குழந்தைகளை எம்பெருமானாருக்குக் காட்டினார்.

அவர் மிக்க களிப்புடனே ஆனந்தக் கண்ணீர் துளிக்கத்  தம் திருக் கண்களால் குளிரக் கடாக்ஷிக்கும்போது அத்தெய்விக சிசுக்களின் தேஜோ விசேஷத்தைக்கண்டு வியப்புக்கொண்டு ‘எம்பாரே! இக்குழந்தைகளிடம் த்வயம் பரிமளிக்கின்றேதே, அங்ஙனம் ஆகுமாறு என்செய்தீர்?’ என்று வினவ;

எம்பார் ‘குழந்தைகட்கு காப்பாக த்வாயாநுஸந்தானஞ் செய்துகொண்டு வந்தேன்’ என்று சொல்ல, உடையவர் அப்படி எம்பார் காப்பிட்டதற்கு உகந்து அவரைப்பார்த்து ‘நீர் இக்குழந்தைகள் உய்யும்வகையை நாடிச் செய்தற்கு முற்பட்டீராதலால் இவர்கட்கு நீரே ஆசார்யாகக் கடவீர்’ என்ற நியமித்துவிட்டார்.

இக்குமாரரிருவர்க்கும் ஒருகால் கூரத்தாழ்வான் திருவாய்மொழிப்பொருள் சொல்லிவரும் போது,  எண்பெருக்கந்நலத்து இத்தயாதியான இந்தப்பாசுரம் வந்தவளவிலே இது திருமந்திரார்த்தத்தை விவரிக்கிறதாதலாலும் மந்த்ரார்த்தம் ஆசார்யரிடத்திலேயே கேட்டறியவேண்டியதாதலாலும் அதனை அவர்கட்குச் சொல்லாது நிறுத்தி ‘இதனை உங்கள் ஆசார்யர் பக்கலிலே கேட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல,

அதனை விரைவில் அறிந்துகொள்ளவேணு மென்னும் அவாவினால் உடனே அவர்கள் எழுந்து தங்கள் ஆசார்யரான எம்பார் எழுந்தருயியிருக்குமிடத்தைக் குறித்துப் போகவுக்கவளவில்,

ஆழ்வான் யாக்கை நிலையாமயைத் திருவுற்றத்திற் கொண்டு அவர்களை யழைத்து, ‘இன்னபோது இன்னாரிப்பர் இன்னார் போவாரென்று தெரியாது, ஆதலால் இருந்து கேளுங்கள்’ என்று திருமந்திரத்தைச் சொல்லி இப்பாட்டின் பொருளையும் விவரித்து, இப் பாசுரத்தைத் திருமந்திரத்தின் அர்த்தமாக நினைத்திருங்கள்’ என்று பணித்தருளினார் – என்பதாம்.

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

பதவுரை

எண் பெருக்கு

எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருக்கும்படி அளவிறந்த
அ நலத்து

அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களை யுடைய
ஒண் பொருள்

சிறந்த பொருளாகிய ஜீவாத்ம வர்க்கத்தையும்
ஈறு இல

முடிவில்லாத
வண் புகழ்

திருக் கல்யாண குணங்களையும் உடையனான
நாரணன்

நாராயணனுடைய
திண் கழல்

(அடியாரை ஒருநாளும்) கைவிட கில்லாத திருவடிகளை
சேர்

ஆச்ரயிப்பது.

ஈறிலான ஆத்மாக்களையும் ஈறிலவான கல்யாணகுணங்களை யுமுடையனாகையாயிற்று

நாராயணனாகையாவது. அப்படிப்பட்ட நாராயணனுடைய

திண்கழர்சேர் = அடியவர்களை ஒரு நாறுங் கைவிட மாட்டாத திருவடிகளைச் சேருங்கள் என்றவாறு. இப்பாட்டில் விளி வருவித்துக்கொள்வது.

————-

***- இத்திருவாய்மொழி வாய்வந்தபடி சொல்லிற்றன்று, சேதநருடை ஹிதத்துக்கீடாக ஆராய்நது சொல்லபட்டதென்று நிகமனஞ் செய்கிற பாசுரம் இது.

சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-

பதவுரை

சேர் தடம்

செறிந்த தடாகங்களை யுடைய
தென் சுருகூர் சடகோபன் சொல்

திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
சீர் தொடை

கவி யுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப் பெற்ற
ஆயிரத்து

ஆயிரத்தினுள்ளே
இ பத்து

இப்பத்துப் பாசுரமும்
ஓர்த்த

ஆராய்ந்து சொல்லப்பட்டது.

சேர்த்தடத் தென் குருகூர்சடகோபன்சொல் = இங்கு ஈடு முப்பத்தாறாயிரப்படியில் “சேர்த்தடம் என்கிற வித்தைச் சேர்தடமாக்கி” என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. இலக்கணப்படிக்குச் சேர்தடமென்று இயல்பாகவே யிருக்கவேண்டுமல்லது சேர்த்தடமென்ற தகரவொற்று மிகவேண்டிய அவசியமில்லை; ஆனாலும் மற்ற மூன்றடிகளிலும் இதே ஸ்தானத்தில் வல்லொற்றுமிக்கிருப்பதனால் அதற்கிணங்க முதலடியிலும் மிக்கது; சொற்செறிவு அங்ஙனமிருந்தாலும் பொருட் சேர்த்திக்கு ஏற்பத் தகர வொற்று இன்றியே கொள்க என்கிறார் நம்பிள்ளை.

பாட்டின் முதலிலுள்ள சேர் என்பதை வினைமுற்றாகவுங் கொள்ளலாம். இப்பத்தே சேர் – இப்பத்துப்பாட்டையும் சேருங்கள், (அதாவது) அனுஸந்தானஞ் செய்யுங்கள் என்றபடி, முதற்பாட்டில் வீடுமின் என்ற பன்மைக்குச்சேர இங்கும் பன்மையாகவே பொருள்கொள்ள வுரியது.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading