ஸ்ரீ திருவாய் மொழி -1-1-உயர்வற–ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை–

***- இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

பதவுரை

என் மனனே

எனது மனமே!
உயர்வு அற

(தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி
உயர்

உயர்ந்த
நலம்

(ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.
உடையவன்

(சுயமாக) உடையனானவன்
யவனவன்

யாவனொருவனோ
மயர்வு அற

அஜ்ஞானம் நசிக்கும்படி
மதி நலம்

ஞானத்தையும் பக்தியையும்
அருளினன்

(அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன்
யவனவன்

யாவனொருவனோ.
அயர்வு அறும்

மறப்பு இல்லாத
அமரர்கள்

நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவன்

ஸ்வாமி யாவனொருவனோ
அவன்

அந்த எம்பெருமானது
துயர் அறு சுடர் அடி

துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை
தொழுது

வணங்கி
எழு

நீ கடைத்தேறக் கடவை.

புற மதத்தவருடைய கொள்கைப்படி எம்பெருமான் நிர்க் குணனல்லன் ஸமஸ்த கல்யாண குணாத்மகன் என்கிற வேதாந்த ஸித்தாந்தத்தை முதலடியிலே வெளியிட்டருளுகிறார். இதனால், எம்பெருமான் தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி இவ்வாழ்வாரை ஈடுபடுத்திக் கொண்டமை விளங்கும்.

குணங்களுக்குத் தோற்று அடிமைப்படுதல் என்றும் ஸ்வரூபமாகவே அடிமைப்பட்டிருந்தல் என்றும் இருவகைப்பட்டுள்ளதான அடிமையில் குணப்ரயுக்தமான அடிமையிற்காட்டிலும் ஸ்வரூபப்ரயுக்தமான அடிமையே சிறக்குமென்பது ஸம்ப்ரதாய ஸாரார்த்தமாயினும், ஆழ்வார் தம்மை எம்பெருமான் அகப்படுத்திக் கொண்டது திருக்குணங்களைக் கொண்டாதலால் தாம் இழிந்த துறையை முதலிலே பேசுகிறாரென்க.

ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமையும் ஆழ்வார்க்குக் குறைவற்றதென்னுமிடம் “ஆகிலுங் கொடியவென்னஞ்ச மவனென்றே கிடக்கு மெல்லே” என்ற பாசுரத்தால் வெளியிடப்படுகின்றமை காண்க.

ஸ்வரூப ப்ரயுக்தமான அடிமை இயற்கையிலேயே இருக்கச் செய்தேயும் சேஷியானவன் கல்யாண குணங்கட்கும் கொள்கலமாயிருப்பதனால் இக் குணங்களும் அடிமைக்கு ஓர் உபாதியாக அமைகின்றன வென்றுணர்க.

ஸ்ரீராமபிரானுடைய வநவாஸ ஸமயத்திலே அத்ரி பகவானுடைய ஆச்ரமத்தில் பெருமாள் எழுந்தருளி மஹர்ஷியை அநுவர்த்தித்திருந்த பின்பு அவருடைய தேவியான அநஸூயையைப் பிராட்டி அநுவர்த்தித்திருக்கிறவளவிலே, அவள் பிராட்டியைப் பார்த்து ‘உற்றாரையும் செல்வத்தையும் விட்டுப் பெருமாள் பின்னே காட்டுக்குவந்த விது தைவ யோகத்தாலே உமக்கு நன்றாகக் கூடிற்று; நகரத்திலிருக்கிலுமாம். காட்டிலிருக்கிலுழாம்; பெண்டிர்க்குத் தெய்வம் பார்த்தாவே கிடீர். நீர் இப்படியே எப்போதும் பெருமாள் விஷயத்திலே அனுகூலித்திருக்கக் கடவீர்’ என்று சொல்ல;

பிராட்டி வெட்கமடைந்து கவிழ்தலையிட்டிருந்து ‘எனக்குப் பெருமாள் பக்கலில் அநுராகம் ஸ்வரூபமாகவே உண்டாயிருக்கச் செய்தே அவர் தாம் குணங்களிற் சிறந்தவராகையாலே என்னுடைய அநுராகத்தை குண ப்ரயுக்தமாக நாட்டார் நினைக்கக் கூடும்; எப்போதாவது ஒரு ஸமயம் அவரைக் குணங்களை விட்டுப் பிரித்துக் காட்டக் கூடுமாகில் அப்போது என்னுடைய அநுராகம் ஸ்வரூப ப்ரயுக்தமே யன்றி குண ப்ரயுக்தமல்ல என்பது நன்கு விளங்க அவகாசமுண்டாகும்; அப்படி ஒருநொடிப் பொழுதும் காட்ட முடியாதபடி அவர் எப்பொழுதும் ஸமஸ்த கல்யாண குணாம்ருத ஸாகரமாக இருப்பதால் நான் அவர் பக்கல் இருக்குமிருப்பை அறிவிக்கப் பெறுகிறிலேன்; அவர் குண ஹீநருமாய் விரூபருமா யிருந்த போதிலும் நான் அவர் பக்கல் இப்படியே காணுமிருப்பேன்’ என்றாள் என்பது ப்ரஸித்தம்.

இளைய பெருமாள் திருவடியோடே தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும்போது “அஹமஸ்யாவரோ ப்ராதா குணைர் தாஸ்ய முபாகத:” என்று பெருமாளுடைய திரு வுள்ளத்தாலே நான் அவர்க்கு உடன் பிறந்தவனாகிறேன் என்னுடைய கருத்தினால் குணங்கட்குத் தோற்று அவர்க்கு அடிமைப் பட்டவன் நான் என்றதும் இங்கு நினைக்கத் தக்கது.

உபநிஷத்துப் போலே பகவத் குணத்தை அளவிடப் புகுந்து பின் வாங்கிப் பரிபவப் படாமல் ஆழ்வார் “உயர்வறவுயர் நலமுடையவன்” என்று அழகாகப் பேசி முடித்தனரென்ப.

உயர்வு பெற உயர்நலம்- உயர்ந்தவையென்று பேர்பெற்ற மற்ற வஸ்துக்கள் எல்லாவற்றினுடையவும் உயர்த்தி உண்மை யன்றென்னும்படியும் தன்னுயர்த்தியே சாச்வதமாகும்படியும் உயர்ந்த கல்யாண குணங்களை யுடையவன் என்றதாயிற்று.

இனி, உயர்வு என்று (உயவு என்னுஞ் சொல்லுக்கே வருத்தமென்ற பொருளுண்டென்றும் உயர்வு என்பதற்கு அப்பொருளில்லையென்றும் சிலர் கூறுவர்: பூருவாச்சாரியர்களின் வியாக்கியானங்களில் இவ் வர்த்தமுள்ளது) வருத்தத்திற்குப் பேருண்டாதலால், வருத்த மில்லாமல் உயர்த்தி பெற்றனவான குணங்களையுடையவன் என்றலுமொன்று. மற்றையோர்க்கு ஒரு உயர்த்தி யுண்டாக வேண்டுமானால் மிக்க வருத்தத்தாலன்றி உண்டாக மாட்டாது;

“யுககோடி ஸஹஸ்ராணி விஷ்ணுமாராத்ய பத்மபூ: புநஸ் த்ரைலோக்யதாத்ருத்வம்.ப்ராப்தவாதி சச்ரும.” என்று – நான்முகக்கடவுள் பல்லாயிரம் யுகங்கள் விஷ்ணுவை ஆராதிதித்து ஸித்தி பெற்றானென்று சொல்லிற்று; பரமசிவன் முதலிய ஒவ்வொரு கடவுளரும் இங்ஙனமே வருத்தப்பட்டு ஸித்தி பெற்றமை வேத வேதாங்கங்களிற் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் போலன்றிக்கே எம்பெருமானது குணோத்கர்ஷம். எந்த ஆயாஸத்தாலுமன்றி இயற்கையாகவே அமைந்ததாயிற்று.

ஆளவந்தார் முதலிய நம் ஆசாரியார்கள் எம்பெருமானுடைய குணசாலித்வத்தை அருளிச் செய்யுமிடங்களில் “ஸவாபாவிக  அநவதிக அதிசய அஸங்க்யேய கல்யாண குண கண:” என்றருளிச்செய்வது காண்க. இதில் ‘ஸவாபாவிக’ என்றது – வருத்தமின்றி இயற்கையாகவே அமைந்த என்றபடி.

“உயர்வற வுயர்குண முடையவன்” என்னாதே ‘நலமுடையவன் என் கையாலே அவனது திருக் குணங்கள் முழுதும் பரம போக்யம் என்னுமிடம் பெறப்படும். நன்மையே உருவெடுத்திருக்கும்போலே. நலம் என்பது பால்பகா அஃறிணைப் பெறராதலால் பன்மைப் பொருள்பட்டு குண ஸமூஹங்களைச் சொல்லக் கடவது –ஆனந்தகுணமொன்றையே சொல்வதாகவுங் கொள்வர்; அப்போது மறற் குணங்கட்கும் உபலக்ஷணமாகிறது. ஆநந்தாவஹமான விபூதியை யுடையவன் என்றலுமொன்று; காரியத்தைச் சொல்லும் சப்தத்தினால் காரணத்தை லக்ஷிக்கிற முறைமையின் காரியமான ஆனந்தத்தைச் சொல்லுகிற நல மென்னுஞ் சொல் காரணமான விபூதியை லக்ஷிக்கக் குறையில்லை யென்க.

இரட்டுற மொழிதலால் உயர்வற வுயர்ந்த திருக் குணங்களையும் விபூதியையு முடையவன் என்றும் முதலடிக்குப் பொருள் கொள்ளத்தகும்.

கூரத்தாழ்வான் இம் முதலடியிலே மிகவும் ஈடுபட்டிருப்பராம்: ‘எம்பெருமானுக்குக் குணமில்லை. விபூதி யில்லை’ என்கிற குத்ருஷ்டியகளின் மிடற்றைப் பிடித்தாற் போல உபக்ரமத்தில் தானே–உயர்வறவுயர்நலமுடையவன் என்ற அழகு என்னே! என்று உருகிப் போவராம்.

மயர்வுஅற மதிநலமருளினன் –அடியோடு ஞானமே இல்லாமையும் ஒன்றை வேறொன்றாக அறிகையும், அதுவோ இதுவோ வென்று ஸந்தேஹங் கொள்ளுதலும், தெரிந்ததை மறந் தொழிகையுமாகிற இவை யெல்லாம்  மயர்வு எனப்படும்; அது அறும்படியாக ஜ்ஞாந பக்திகளிரண்டையும் தமக்குத் தந்தருளினபடியைக் கூறினர்.

மதிநலம் என்பதை ‘நலம்மதி’ எனக்கொண்டு ‘நல்ல ஞானத்தையருளினன்’ எனவும் பொருள் கூறுவர்; முளைக்கும் போதே வயிரம் பற்றி முளைக்கும் பதார்த்தம் போல உபக்ரமமே பக்தி தசையாகப்பெற்ற ஞானம் என்றபடி.

‘எனக்கு அருளினன்’ என்ற வேண்டாவோ? எனக்கென்பதை ஏன் விட்டார்? என்னில்; எம்பெருமானுடைய விஷயீகாரம் பெறுதற்கு முன்பு தம்மை அஸத் கல்பராக (இல்லாதவராக) நினைத்திருக்கின்றமையால் ‘மயர்வறமதிநல மருளினன்’ என்பதற்கு முன்னே ‘எனக்கு’ என்று ஸ்வஸ்த்தையைக் கூறத் திருவுள்ளம் பற்றிலர் என்பர். துயரறு சுடரடி தொழுது என்ற பிறகே தம்மை உளராத நினைத்தார் போலும். அதன் பிறகே யன்றோ என் என்று தமது ஸத்தையை வெளியிட்டுக் கொண்டார்.

“மயர்வறமதிநலமருளினன்’ என்ற இரண்டாமடியால், இத் தலையில் நினைவின்றியே யிருக்க, தானே வந்து அருளினன் என்றார். அங்ஙனம் தானாகவே வந்து அருளினவன் தன்னருள் கொள்வாரில்லாத ஒருவனோ’ என்ன; அவனருளையே எதிர்பார்த்திருப்பார் ஒருநாடாகவுளர் என்கிறார் மூன்றாமடியால்.

அயர்வறமமரர்களதிபதி = அயர்வாவது மறுப்பு; அது ஒருநாளு மில்லாதவர்களான நித்ய ஸூரிகளுக்கு நியாமகன் என்க.

துயரறு சுடரடி = அடியார்களுடைய துக்கங்களை யெல்லாம் போக்கி அதனால் ஒளி பெற்று விளங்குகின்ற திருவடி என்று எம்பெருமானார்க்கு முந்தின முதலிகள் நிர்வஹிக்கும்படி; அதாவது – துயரறுக்குஞ் சுடரடி என்று கொண்டார்கள். அங்ஙனன்றியே எம்பெருமானார் ‘துயரறுக்குஞ் சுடரடி’ என்று பொருள் நிர்வஹிப்பராம். உள்ள சொல் வடிவத்திற்கு ஏற்ற பொருள் இதுவேயாகும். அதாவது – அடியார்கள் துயர்தீர, தான் துயர் தீர்ந்தானாயிருக்கை. எம்பெருமான் பரது:க்கது:க்கியாகையால் ஆச்ரிதருடையச் து:க்க நிவர்த்தியைத் தன்னுடைய து:க்க நிவ்ருத்தியாகக் கொள்ளுமியல்வினன் என்பதாம்.

எழ = அதோ கதி யடைவதைத் தவிர்த்து உயர் கதி யடைந்திடு என்றவாறு உஜ்ஜீவித்துப்போ என்றதாயிற்று.

இப் பிரபந்தத்தில் நிரூக்கப்படுகிற தத்துவ ஹித புருஷார்த்தங்களைச் சுருங்கச் சொல்லுகிறது இப்பாசுரம். திருமாலே பரதத்துவமென்றும் அவனது அடி தொழுகையே பரமஹிதமென்றும், (தத்க்ரதுந்யாயத்தாலே) அதனை ப்ராபிக்கையே புருஷார்த்தமென்றும் சொல்லிற்றாகிறது.

பிரபந்தம் இடையூறின்றி முடிவதற்காகப் பிரபந்தாரம்பத்தில் இயற்றப்பட வேண்டிய இஷ்ட தேவதாநமஸ்காரம் முதலான மங்களமும் சுடரடிதொழுதொழு என்பதனால் இயற்றப்பட்டதென்றுணர்க.

இப்பாட்டில், யவனவன் என்பதை ஒரே சொல்வடிவாகக்கொண்டு பொருளுரைக்கப்பட்டது. (வடமொழியில் ‘யோஸௌ என்பது போல இதனைக் கொள்க.) அன்றியும், யவன்- யாவனொருவன், அவன்- அவனுடைய என்று முதல் மூன்றடிகளிலும் பொருள் கூறி ஒவ்வொரு அடியோடும் ‘தொழுதெழென்மனனே!’ என்று கூட்டி மூன்று வாக்கியமாகவும் போஜித்துப் பொருள் கூறுவர்.

உயர்வறவுயர்நல முடையவன் யவன், அவன் சுயரறு சுடரடி தொழுதெழு; மயர்வற மதிநலமருளினன் யவன் அவன்  துயரறு சுடரடி தொழுதெழு- என்றிப்படி மூன்று வாக்கியமாகிறது.

இதுவன்றி, (முதலடியில்) யவன்- யாவனொருவனோ, அவன் அவளினன் என்றும், (இரண்டாமடியில்) யவன் – அப்படி அருளினவன் யாவனோ, அவன் அதிபதி என்றும், (மூன்றாமடியில்) யவன்- அப்படி அதிபதியானவன் யாவனோ, அவன்- அவனுடைய, அடி தொழுது எழு நின்றிப்படி வாக்யைக வாக்யமாகவும் யோஜிப்பதுண்டு. (வாக்யைக வாக்யம்- பல சிறு வாக்கியங்கள் உள்ளடக்கிய மஹாவாக்யம்.)

யவனவன் என்னுமிடங்களில் யாவன் என்பது யவன் எனக் குறுகியுள்ளது. “நெஞ்சினால் நினைப்பான் யவன்”(திருவாய்மொழி 3-6-9) ‘பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்” (திருவாய்மொழி 3-7-1))  விண்ணுங் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெம்பால் யவர்க்கும்” (திருவிருத்தம் 43) என்றவிடங்களிலும் இவ்வாறே. இங்கே யாவினா எஞ்சாமைப் பொருளது.

“ஆவோயவர், யாவர்க்கும் என்றுள்ள பாடங்களை மறுத்து எகர முதலதாகப் பாடங்கொள்ள வேணுமென்று சிலர் வற்புறுத்துவர்; அது அஸம்பிரதாயம். ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் யகர முதலான பாடமே காண்கிறது; ‘ஆலோடல்லது யகர முதலாது” (தொல்காப்பிய்ம் எழுத்ததிகாரம் மொழிமரபு 32.) என்ற விதிக்குக் கதியில்லை யோவெனின்; அச் சூத்திரவிதி இயற்கை மொழிக்கே யன்றிச் செய்யுளில் வேண்டுழிக் குறுக்கல் பெற்ற மொழிக்கு விலக்காகாது என்று கற்றுணர்ந்த பெரியோர் கூறுவர்.

இப்பாட்டில், முதலடியால் கல்யாண குணமுடைமையும், இரண்டாமடியால் அவற்றுள் முக்கியமான காருண்யமும், மூன்றாமடியால் நித்யவிபூதியாட்சியும், நான்காமடியால் திருமேனியுடைமையும் அருளிச் செய்ததனால் இப்பாசுரம் முழுதும் குத்ருஷ்டிகட்குக் கழுத்துப்பிடியாமென்ப.

ஸ்ரீஹஸ்திசைல சகரோஜ்ஜ்வல பாரிஜாதனான பேரருளானனுடைய திருவடிகளைத் (திருவேங்கடமுடையான் திருவடிகளைப் பூவார் கழல்களென்றும், அழகிய மணவாளன் திருவடிகளைப் பொது நின்ற பொன்னங்கழல் என்றும், திருப் பொலிந்த சேவடி என்றும் வழங்குதல் போல.) துயரறு சுடரடி என வ்யவஹரித்தல் ஸம்ப்ரதாயமாதலால் இப்பாசுரம் தேவப்பெருமாளை நோக்கியதென்று பெரியோர் பணிப்பர்.

————-

***- எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக் கொண்டது தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக் குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமே யொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக் குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற் காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிற படியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2–

பதவுரை

மனனகம்

மனத்திலே யிருக்கிற
மலம் அற

(காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)
மலர்

மலர்ந்ததாகி
மிசை எழ தரும்

மேலே மேலே விருத்தி யடைகிற
மனன் உணர்வு

மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்
அளவிலன்

அளவிடப்படாதவனும்
பொறி உணர்வு

(மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்
இனன்

இப்படிப்பட்டவனும்
முழு உணர் நலம்

பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும்
எதிர் நிகழ் கழிவினும்

எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்
இனன் இலன்

ஒப்பு இல்லாதவனும்
மிகுநரை இலன்

மேற்பட்டவரில்லாதவனுமா யிருப்பவன்
என் நன் உயிர்

எனக்கு நல்ல ஆத்மா.

“மனனகமலமற மலர் மிசையெழுதரும் மனனுணர்வளவிலன்” என்னுமளவால் ஜீவாத்ம ஸ்வரூபத்திற் காட்டிலும் பரமாத்ம ஸ்வரூபம் விலக்ஷணம் எனப்படுகிறது. “பொறியுணர்வலையிலன்” என்று ஜடப் பொருள்களிற் காட்டில் விலக்ஷணம் எனப்படுகிறது

ஞானமும் ஆனந்தமுமே வடிவெடுத்ததாயும், முக்காலங்களிலும் ஒப்புயர்வற்றதாயுமிருக்கிற அந்த பரமாத்ம ஸ்வரூபம் அடியேனுக்குத் தாரகமாயுமிரா நின்றது என்கிறார் பின்னடிகளில்.

என்னுயிர் என்றதையும் ஒரு விசேஷணமாகக் கொண்டு அப்படிப் பட்டவனது சுடரடி தொழுதெழன் மனனே!- என்று முன்பாட்டோடே கூட்டிப் பொருளுரைத்துக் கொள்வதுமுண்டு.

சிற என்றதை ‘அற அற’ என்று இரட்டித்துக் கொள்க. ‘சிரமமாக ஒழிய என்பது பொருள்.

மன்னகமலம் = ‘காமா கிரோதச்ச லோபச்ச ஹர்ஷோ மாநோ மதோ த்ருதி:- விஷாதச் சாஷ்டமா: ப்ரோக்த: இத்யேதே மநஸோ மகா:” என்று சொல்லப்பட்ட காமம் குரோதம் முதலிய துர்க் குணங்கள் படிப்படியாகக் கழிந்து கொண்டேவர, அதனால் மன வுணர்சசி யானது விகாஸம் பெற்று மேன்மேலுங் கொழுந்துவிட்டுக் கிளர்ந்து வரும். (அப்படிப்பட்ட மாநஸ ஜ்ஞாநத்தாலே ஜீவாத்மா உணரப்படுவன்; எம்பெருமானோவெனில் அப்படி உணரப் பட மாட்டான் என்க.

(மனன் அகம்) அகம் – ஏழாம் வேற்றுமை யுருபு; மநஸ்ஸிலே என்றபடி மனனுணர்வு- மாநஸஜ்ஞானம்; (அதனாலே) அளவு- பரிச்சேதித்தல்; அதை யுடையவன் ஜீவாத்மா; அஃதில்லாதவன் எம்பெருமான் என்க. இங்ஙனன்றியே, மனனுணர்வு என்பதற்கே மனத்தினாலுணரப்படும் ஜீவாத்மா’ என்று பொருள் கொண்டு, அதனளவல்லாதவன் எம்பெருமான் என்றும், பொறியுணர்வவை என்பதற்கு- கண் முதலிய இந்திரியங்களால் உணரப்படும் பொருள்கள் என்றுபொருள் கொண்டு அவைபோலல்லாதவன் எம்பெருமான் என்றும் உரைப்பர்.

பகவத் ஸ்வரூபமானது சேதநாசேதந ஸ்வரூபங்களிற் காட்டில் விலக்ஷணம் என்று சொல்லவேணுமானால் ‘ஜீவாத்மாவைப் போலல்ல; ஜடப்பொருள் போலல்ல’ என்றிப்படி (எளிதாக)ச் சொல்லலாமே; அங்ஙனம் சொல்லாமல் “மன்னகமலமற” என்று தொடங்கி ‘ஜீவாத்மா மாநஸஜ் ஞானத்திற்கு விஷயமாகவல்லவன், ஜடப் பொருள் பாஹ்ய இந்திரியங்களுக்கு விஷயமாகவற்று’ என்கிற விஷயங்கள் சொல்லப்படுவதற்குக் காரணம் ஏதென்னில்; உலகத்திற் சில பதார்த்தங்களுக்குப் பரஸ்பர வைலக்ஷண்யம் குறை யற்றிருக்கச் செய்தேயும் ஏதாவது ஒரு ப்ரகாரத்தாலே ஸாம்யமும் சொல்லக் கூடியதாயிருக்கும்; காண்மின்; பொன்னும் கரியும் ஒன்றோடொன்று நெடுவாகி பெற்றிருக்கச் செய்தேயும், பொன்னைக் காண்கிற கண்ணே பொன்னேயுங் காணா நின்றது என்று இப்படியால் ஒரு ஸாம்யமும் சொல்லக் கூடியதாயிருக்குமே; அப்படிப்பட்ட ஸாம்யமாவது எம்பெருமானுக்கு சேதநாசேதநங்களோடு உண்டோவென்னில் அதுவுமில்லை. யென்கைக்காக ஜீவாத்மாவை கிரஹிக்கிற இந்திரியம் இன்னதென்றும் ஜடப் பொருள்களை க்ரஹிக்கிற இந்திரியங்கள் இன்னவையென்றும் கூறப்பட்டதென்க.

இங்ஙனம் சொல்லக்கூடுமோ? எம்பெருமான் பாஹ்ய இந்திரியங்களாலே க்ரஹிக்கக் கூடியவனல்லனாயினும் அழுக்கற்ற மனத்தினால் க்ரஹிக்கக் கூடியவனாக ஓதப்பட்டிருக்கின்றானே, அதற்கு மாறாக “மனனுணர்வளவிலன்” என்னக்கூடுமோ? என்னில்; கூடும். எம்பெருமான் விசுத்தமான மனத்தினால் க்ரஹிக்கக் கூடியவன் என்று ப்ரமாணங்கள் சொன்னதற்குக் கருத்து யாதெனில்; ‘எம்பெருமான் அப்படிப்பட்டவனெல்லன், அவ்வளவனல்லன்’ என்றிப்படி அறியக் கூடியவன் என்று சொல்லுவதேயாம். ஆதலால் அந்த: காரணத்தினால் ஜீவாத்மா க்ரஹிக்கப்படுவதற்கும் பரமாத்மா கிரஹிக்கப்படுவதற்கும் நெடுவாசி யுண்டென்க.

எம்பெருமான் அடியோடு ஞானத்திற்கே விஷயமல்லன் என்று சொல்லி விட்டால் ஆகாசத் தாமரை, மலடி மகன், முயற்கொம்பு முதலிய வஸ்துக்கள் போல் எம்பெருமானும் ஒரு அஸத்பதார்த்தம் (இல்லாத பொருள்) என்று சொன்னதாக முடியுமாதலால், அப்படிப்பட்ட துச்சத்வ சங்கை எம்பெருமானிடத்து உண்டாகாமைக்காக விசுத்தமான அந்த: காரணத்தினால் க்ரஹிக்கக் கூடியவனாகச் சொல்லிற்றேயன்றி, உண்மையில் அணு த்ரவ்யமான ஜீவாத்மா க்ரஹிக்கப்படுவதுபோல் விபு த்ரவ்யமான பரமாத்மா க்ரஹிக்கப்பட முடியாதென்ப.

இனன் = இப்படிப்பட்டவன் முன்னடிகளிற் சொன்ன தன்மைகளையே உட்கொண்டு ‘இப்படிப்பட்டவன்’ என்று அநுபாஷிக்கிறபடி முன்பு சொல்லப்பட்டதையே மீண்டும் அநுபாஷணஞ் செய்தல் ஈடுபாட்டின் மிகுதியை வளக்கும்.

உணர் முழுநலம் = உணர் என்றது உணர்வு என்றபடி: (ஞானம்) என்க. நலம்- ஆநந்தம். முழு என்றதை இரண்டனோடுங் கூட்டுக. கட்டடங்க ஞானமுமாய் கட்டடங்க ஆனந்தமுமாயிருக்குமென்றவாறு. பரமாத்ம ஸ்வரூபத்தில் ப்ரகாசமல்லாததும் அநுகூலமல்லாததுமான பாகமே கிடையாதென்றதாயிற்று. ஆனந்தமும் ஞான விசேஷமே யாதலால் ஒன்றைச் சொன்னாலே போதுமே; ஆனந்தம் ஞானம் என்ற இரண்டையுஞ் சொல்லத் தேவையில்லையே  யென்னில்; அப்போது இனன் என்றதற்கு ‘உபமானம்’ என்று பொருள் கொண்டு, நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானத்தினாலேயே அறியப்படுவதான முழுநலமாயிருக்கும் என்று உரைத்துக் கொள்ளலாம்.

உபநிஷத்து “யுதா ஸைந்தவகந” என்று ஓர் உபமானத்தை யிட்டேயன்றோ பர ப்ரஹ்ம ஸ்வரூபத்தை நிரூபிப்பது. ஆழ்வார் தாமும் “கடி சேர் நாற்றத்துள்ளாலை யின் பத்துன் பக்கழிநேர்மை. ஒடியாவின்பப் பெருமையோன்” (திருவாய்மொழி: 8-8-2) என்று ஓர் உபமானத்தை யிட்டு நிரூபிக்கின்றமை காண்க.

நம் தர்சனத்தில், சித்து அசித்து ஈச்வரன் என்ற மூன்று தத்துவமே உள்ளது. ஈச்வரன் மற்றை யிரண்டு தத்துவங்களிற் காட்டில் விலக்ஷணன் என்பது முன்னடிகளிலேயே வியக்தமாகக் சொல்லப்பட்டிருக்க, ‘எதிர்நிகழ்கழிவினும் இன்னிலன்’ என்று மூன்று காலங்களிலும் ஒப்பில்லாதவன் என்று மறுபடியும் சொல்வதற்குப் பயன் ஏன்? என்னில்; கேண்மின்; ஸாதாமிய த்ருஷ்டாந்தமென்னும் வைதர்மிய த்ருஷ்டாந்தம் என்றும் த்ருஷ்டாந்தம் இருவகைப்படும். அவனைப்போல் இவனிருக்கிறான். என்று அந்வய முகத்தாலே ஒப்புச் சொல்லுகை ஸாதர்மிய த்ருஷ்டாந்தம்; அவன் எப்படி அயோக்கியனாயிருக்கிறானோ அப்படி இவன் அயோக்யனல்லன்’ என்று வ்யதிரேகமுகத்தாலே சொல்லுகை வைதர்மிய த்ருஷ்டாந்தம். இப்பாட்டின் முன்னடிகளால் எம்பெருமானுக்கு ஸாதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்றது, ‘இனனிலன்’ என்பதால் வைதர்மிய த்ருஷ்டாந்தமும் இல்லை யென்னப்படுகிறது. சேதநாசேதநங்களைப்போல எம்பெருமானும் இந்திரிய க்ராஹ்யன், என்னக்கூடுமானால் அப்போது ஸாதார்மிய த்ருஷ்டாந்தமுண்டாகும்; அங்ஙனல்லன் என்று சொல்லப்பட்டமையால் ஸாதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்று முன்னடிகளிற் சொல்லிற்றாயிற்று. இனி, ‘எம்பெருமான் அவைபோலல்லன்’ என்று சொல்லுகிற முகத்தால் வைதர்மிய த்ருஷ்டாந்த ஸம்பாவமாவது எம்பெருமானுக்குச் சொல்லக் கூடுமோ வென்று விமர்சித்துப் பார்த்து அதுவுமில்லை யென்கிறது இனனிலன் என்பது.

இப்படிச் சொல்லும் பக்ஷத்தில் எம்பெருமான் சேதநாசேதநங்கள் போலல்லன் என்றுஞ்சொல்ல முடியாது, என்பதாகத் தேறுகின்றது; ஆகவே ‘எம்பெருமான் சேநாசேதநங்களைப் போன்றவன், என்று முன்னடிகட்கு முரணாக ஸ்தாபிக்கப்பட்டாகிறதே என்று சிலர் சங்கிக்கலாம்; அப்படியல்ல. வைதர்மிய த்ருஷ்டாந்தமில்லையென்று சொல்வதன் கருத்து யாதெனில்; ‘வஸிஷ்டன் சண்டாளனைப் போலல்ல’ என்று ஒருவன் சொன்னால், ‘சீ சீ, அப்படிச் சொல்லாதே’ என்று ஒருவன் அதனை மறுத்துச் சொன்னானாகில்’ வஸிஷ்டர் சண்டாளனைப் போன்றவர்தாம்’ என்று ஸ்தாபிப்பதா அதன் கருத்து? அல்ல; எடுத்துக் கழிக்கவும் தகாத ஒரு ஹேய வஸ்துவோடே ஸர்வோத்க்ருஷ்ட வஸ்துவுக்கு ஸாமன்யம் உண்டென்கையும் ஸாம்யம் இல்லை யென்கையும் இரண்டும் இகழ்வாம்; ஸாம்ய ப்ரஸக்தியேயில்லாத வஸ்துவேடே ஸாம்யத்தை மறுப்பதும் தகாததேயாம்.

இவ்வளவு அர்த்தங்களையுஞ் சுருக்கி ஒன்பதினாயிரப்படியிலே நஞ்சீயர் அருளிச்செய்கிறார்- “அவனோடு ஒவ்வாதென்று சொல்லுகைக்கும் ஸத்ருசமாயிருப்பதொரு பதார்த்தத்தை யுடையனல்லன் என்கிறது”  என்று.

இங்ஙனேயாகில், “கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமுமடியிணையுங் கமல வண்ணம்” என்றும் “நீலமேகநிபம்” என்றும் இப்படியே பலரும் பல த்ருஷ்டாந்தங்களைக் கொண்டு எம்பெருமானை வருணிப்பது சேருமோ? எனில்; சேராதுதான்; நெஞ்சில் ஒருபடியாகப் பதிவதற்காக ஏதோ சில உபமானங்களைக் கூட்டிச் சொல்லுகிறதேயொழின, உண்மையில், பரஞ்சோதிக்கு ஸர்வாத்மநா விஸத்ருசமான வஸ்துக்களை உவமை கூறுதலும் இகழ்வேயா மென்பதை இவ்வாழ்வார் தாமே மேலே “ஓட்டுரைத் திவ்வுலகுக்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ!” என்று ஸ்பஷ்ட்மாகவே அருளிச் செய்கிறார்.

இன்னுணர் முழுநலம் என்பதற்கு “நேராகத் தன்னை அறிய முடியாமையாலே எப்போதும் உபமானந்தாலேயே அறியப்படுவதான முழுநலமாயிருக்கும்” என்றும் ஒருபொருள் கொள்ளலாமென்று மூன்றாமடியில் சொல்லிவைத்து, நான்காமடியில் வந்து இன்னிலன் (உமானமற்றவன்) என்று சொல்லுவது நேர்  விரோதமன்றோ வென்று சிலருடைய நெஞ்சு குழம்பியே கிடக்கும். இதற்கு நாம் என் செய்வோம்! ஏதாவதொரு உபமானத்தை யிட்டுப் புகழ்ந்தாலன்றி வஸ்து ஸ்வரூபம் தெரிய மாட்டாதாகையாலே உபமானத்தைக்கொண்டே உணர வேண்டியதாயுமிரா நினறாது; உபமானத்துக்கு அர்ஹமான வஸ்து எதுவுமில்லை என்கிற உண்மைப் பொருளை மறையாதே வெளியிட வேண்டியதாயுமிரா நின்றது: ஆகையாலே இந்த விரோதம் அபரிஹார்யமாய் ஸஹ்யமாகக் கடவது.  இதனை எதுபோலக் கொள்ள வேணுமென்றால்- “எனதாவி தந்தொழிந்தேன் இனி மீள்வதென்பதுண்டே” என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணி “எனத தாவியார் யானார் தந்த நீ கொண்டாக்கினையே” என்று அதனை உடனே மறுத்துக் கூறுமிடத்து ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணவும் வேணும் ஐயோ! அநியாயமாகப் பண்ணினோமே! என்று அநுதாபப்படவும் வேணும்’ என்று சாஸ்த்ரார்த்தம் தேறுவதுபோல், எம்பெருமானை உபமான முகத்தாலே புகழவும் வேணும், உடனே, ஐயோ! விலக்ஷண வஸ்துவுக்கு ஒப்புச் சொல்லி அவத்யத்தை விளைத்தோமே! என்று அநுதாப்படவும் வேணும் என்று சாஸ்திரார்த்தமாகக் கொள்ளத்தக்கது.

மிகுநரைஇலன்= மிகுநர் என்றால் தன்னைப் பார்க்கிலும் மேற்ப்பட்டவர்; எம்பெருமான் தானே ஸர்வ ஸ்மாத் பரனாகையாலே அவனுக்கு மேற்பட்டார் ஆருமில்லையென்கிறது. அவனுக்கு ஸமானமானவர்களே இல்லை என்ற முடித்த பின்பு. மேற்பட்டாரிருக்கக்கூடுமோ வென்கிற சங்கையே உண்டாக இடமில்லாதிருக்க, “மிகுநரையிலன்’ என்னக் கூடுமோ வெனின்;“ந தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருச்யதே” என்ற ச்வேதாச்வதர உபநிஷத்தின் சாயையை அடி யொற்றிச் சொல்லுகிறபடி. அவ்வுபநிஷத்துதான் அப்படி சொல்லக் கூடுமோவென்னில்; எம்பெருமானுக்கு மேற்ப்பட்டவர்கள் எப்படி அஸம்பாவிதர்களோ அப்படியே ஒத்தாரும் அஸம்பாவிதர்களென்று உபமாந ராஹித்யத்யத்தைத் திடப்படுத்துவதற்காகவே சொல்லுகிறதென்று நஞ்சீயர் ஒரு வழி காட்டினர்.

முதற்பாட்டில் உயர்வில்லாதவனென்றார்; உயர்வில்லாவிடினும் ஒப்புண்டோ என்று சங்கித்து, ‘மிகுநரையிலேனே’ என்று கொண்டு முன் சொன்ன உயர்வில்லாத ஸர்வேச்வரனைச் சுட்டி, அவன் சேதநாசேதந விலக்ஷண ஜ்ஞாநாந்த ஸ்வரூபியாதலால் எதிர் நிகழ்கழிவினும் இனனிலன் ஸமாநனில்லாதவன் என்றார் இப்பாசுரத்தில் என்றுங்கொள்ளலாம். அப்பொழுது, இனன்- இப்படிப்பட்டவனுடைய என்று பொருள் கொண்டு, சுடரடிதொழுதெழென் மன்னே! என்று முன்பாட்டோடே கூட்டிக்கொள்க.

என்னுயிர் என்பதை என் நன் உயர் என்றும், எனன் உயிர் என்றம் இரண்டு வகையாகவும் பிரிக்கலாம்.

மனன் இனன் என்ற விடங்களில் மகரனகரப்போலி அறிக. மனம் என்றாலும் மனன் என்றாலும், இனன் என்றாலும் இனம் என்றாலும் ஒக்குமென்க. இனன் என்பதற்கு இப்படிப்பட்டவனென்று பொருளாகும் போது, இனன் என்று னகர வீற்றதாகவே சொல்வடிவமாகும்.

——————

***- கல்யாண குணமுடைமையையும் நித்ய விபூதி யாட்சியையும் திவ்ய மங்கள் விக்ரஹ முடைமையையும் முதற் பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச் செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத் தக்கதான லீலா விபூதி யுடைமையை இப் பாட்டிலே அருளிச் செய்கிறார்.

பரம போக்யமான கல்யாண குணம் முதலிவற்றை ஒரு பெரிய திருநாள் போலே அநுபவியா நின்ற  இவர்க்கு அத்யந்த ஹேயமாய் இருள்தருமாஞாலமென்று பெயர் பெற்றதான இந்த லீலா விபூதியின் ஆட்சியை அனுபவித்தல் ப்ராப்தமாகுமோ? ஞானிகள் அருவருக்கும் படியாயன்றோ இப்பிபூதியிருப்பது; இதனை அநுஸந்திக்க இவர் எங்ஙனேயிழந்தார்? என்று சங்கை பிறக்கக் கூடும்;

இவ்விபூதி இருள் தருமாஞாலமாயிருந்தாலும் ஆழ்வார் மயர்வற மதிநலமருளப் பெற்ற வராகையாலே அந்த ஞான விளக்கத்தினால் இவ் விபூதியின் இழிவை நோக்காது இதெல்லாம் எம்பெருமானுடைய ஆட்சியின்கீழ் அமைந்தது’ என்று கொண்டு ததீயத் வாகாரத்தை இட்டுப் பார்க்குமவரான பின்பு அவனுடைய ஐச்வரியங்களை யெல்லாம் ஒன்று விடாமல் அநுபவிக்கிற அடைவிலே இதனையும் அநுபவிக்கிறார் என்று கொள்க.

இங்கே ஈடு முப்பதாறாயிரப்படி யருளிச் செயல்:- “ராஜாக்களுக்கு நாடெங்கம் செல்லா நிற்கச்செய்தே மஹிஷிகளும் தாங்களுமாகச் சில பூந்தோட்டங்களைக் கடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதாய் லீலா ரஸ மநுபவிபக்குமாபோலே ‘திருவிண்ணகர்ச் சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகு’ என்கிறபடியே ஸர்வேச்வரனும் பெரிய பிராட்டி யாருமாகக் கடாக்ஷித்த போது உண்டாய் இல்லையாகில் அவர்களுக்கு லீலார ஸ விஷயாம யிருக்கிற லீலா விபூதியை அனுபவிக்கிறார்” என்று.

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3-

பதவுரை

அது இலன் (என)

அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்
இது உடையன் என

இந்தப் பொருளை யுடையவன் என்றும்
நினைவு அரியவன்

நினைப்பதற்கு அருமைப் பட்டவனாகியும்
நிலன் இடை

பூமி முதலான (கீழ்) உலகங்களிலும்
விசும்பிடை

ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள)
உருவினன்

ரூபியான அசேநப் பொருள்களை யுடையவனாகியும்
அருவினன்

ரூபியல்லாத சேதனர்களை யுடையவனாகியும்
புலனொடு

விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்)
புலன் அலன்

(தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும்
ஒழிவு இலன் பரந்த

எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற
அ நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே

முன் சொன்ன கல்யாண குணங்களை யுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோம்.

இலன் அது, உடையன் இது – என நினைவு அரியவன்- ‘இவனுக்கு இது இல்லை என்றம் நினைக்க முடியாது; ‘இவனுக்கு அது உண்டு’ என்றும் நினைக்க முடியாது- ‘இவனுக்கு அது இல்லை’ என்று நினைக்குமிடத்துக் குறைவுபாடு ஏற்படுமாகையாலே அப்படி நினைக்கக் கூடாதாயினும் ‘இவனுக்கு அது உண்டு’ என்று நினைப்பதற்குத் தடை என்ன! என்னில், ‘இராமனுக்கு வியாகரணம் தெரியும்’ என்றால் அவனுக்கு மீமாம்ஸை தெரியாது தர்க்கம் தெரியாது, வியாகரணமொன்றுதான் தெரியும், என்று நினைக்க இடமுண்டாவதுபோல, ஒரு பொருளைச் சுட்டி ‘எம்பெருமான் அதனையுடையன்’ என்றால் ‘அது தவிர மற்ற பொருள்களை அவனுக்கு இல்லை’ என்று தோற்ற இடமுண்டாகிக் குறையாய்த் தலைகட்டுமாதலால் ‘இவனுக்கு அது இல்லை’ என்று சொல்வதோடு ‘இவனுக்கு அது உண்டு’ என்று சொல்வதோடு வாசியற இரண்டும் ஒண்ணாதவையே என்றுணர்க.

ஆனால் எம்பெருமானுடைய ஐச்வரியத்தை எப்படி தான் பேசக் கடவதென்றால் நிலனிடை விசும்பிடை யுருவினனருவினன் என்று பேசவேணுமென்கிறார். வேதபுருஷன் *பதிம் விஸ்வஸ்ய* என்று பேசினாப் போலே ஸர்வ ஸ்வாமி யென்ன வேணுமென்க. பூமி முதற்கொண்டு பாதாளம் வரையிலுள்ள கீழுலகங்களிலும், பரமபதந் தவிர பொருள்களும் எத்தனை யுண்டோ அவற்றை யெல்லா முடையவன் என்ன வேணும். இதில் ‘பரமபதந்தவிர’ என்றதனால் , பரமபதம் எம்பெருமானுடைய ஆட்சிக்கு உட்பட்டதன்றோவென்று சங்கிக்க வேண்டா; லீலா விபூதிச் செல்வத்தை மாத்திரமே இப்பாட்டில் அருளிச் செய்கிறாராகையாலும் நித்ய விபூதிச் செல்வத்தை முதற்பாட்டில் அருளிச் செய்தாராகையாலும்.

உருவினன் அருவினன் – ‘ரூபி’ என்னும் வடசொல் உரு என்றும், ‘அரூபி’ என்னும் வடசொல் அரு என்றும் சிதைந்து கிடக்கிறது.

ஜடப்பொருள்களெல்லாம் ஓரொருவகையான ரூபத்தையுடையனவாகக் காணப்படுதலால் அவை ரூபி யெனப்படும். (ரூபி-ரூபமுடையது.) ஜீவாத்மா உருவமற்றவனாதலால் அரூபி யெனப்படுவான் நிலனிடை விசும்பிடை யுருவினன், நிலனிடை விசும்பிடை யருவினன் என்க.

நிலன்- நிலம்; மகரனகரப்போலி.

இப்படி ஸர்வ ஸ்வாமியான ஸர்வேச்வரன் இந்த லீலாவிபூதியின் ரக்ஷணத்திலே உதாஸீநனாய்க்கொண்டு பரமபதத்திலே போக ப்ரவணனாயிருப்பவ னல்லன்; இவற்றினுடைய லாப நஷ்டங்களையே தன்னுடைய லாப நஷ்டங்களாகக்கொண்டு, புலப்படும் பதார்த்தங்களெல்லாவற்றிலும் அந்தர்யாமியா யிருப்பவன் என்கிறார் புலனொடு என்று,

புலன் என்பது இங்குப் புலன்களாலறியப்படும் பொருள்களுக்காயிற்று. லக்ஷணையென்க. புலப்படுகின்ற ஸகல பதார்த்தங்களோடும் அந்தராத்மாவாயக் கலந்து நின்றானேயாகிலும் என்றபடி.

அழுக்கு வஸ்துவோடே உறைகின்ற அரும்பொருளும் அந்த ஸம்பந்தத்தாலே தானும் அழுக்கேறப்பெறுவதுபோல தோஷமே வடிவான பதார்த்ங்களிலே உறைகின்ற எம்பெருமானும் அவற்றின் தோஷங்கள் தன்னிடத்திலே தட்டப்பெற்று ஜடப்பொருள்களைப்போலே பரிணாம சாலியாயும் சேதநரைப்போலே ஸுகதுக்கங்கள் கலசியிருப்பவனாயும் ஆய்விடக்கூடுமோவென்று சங்கைபிறக்கக்கூடுமாதலால் அந்த சங்கையை ஒழித்தருளுகிறார் புலனலன் என்று. புலன்களினுடைய படியையுடையவனல்லன். ஜடப்பொருள் போலே விகாராஸ்பதமல்லன்;: ஒட்டற்று விளங்காநிற்குமவன் என்க.

ஒழிவு இலன் பரந்த- ஒழிவு இல்லதவனாய் வியாபித்த என்கை –ஒரு வஸ்துவு மொழியாமல் ஸகல வஸ்துக்களிலும் வியாபித்து என்றாவது ஒருகாலமுமொழியாமலர் ஸர்வ காலங்களிலும் வியாபித்து என்றாவது பொருள் காண்க.

கீழரண்டு பாட்டிலும் சொன்ன குணங்களோடு கூடியிருக்குந்தன்மையை அநுவாதஞ் செய்கிறார். அந்நலனுடையொருவனை என்று. இப்படி பரம விலக்ஷணனான எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோமேயென்ற ஆனந்தம் தோற்ற முடிக்கிறார். நெடுங்காலம் பிறவிக் கடலிலே அழுந்தி எம்பெருமானுடைய கதையின் லாலஸநையையும் அறியாதிருந்த நாம் இப்படி உபயவிபூதியுக்தனாயிருந்துள்ள அவனைப் பூர்ணமாக அநுபவிக்கப்பெற்றோம் என்னும் மகிழ்ச்சி சொல் தொடையிலே விளங்கும்.

அன்றியே, நணுகினம்நாமே! என்று காகுஸ்வரமாகக் கொண்டு, அப்படிப்பட்ட எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!; நணுகுவதற்கு நமக்கு யோக்யதையில்லா திருக்க நணுகினது போல் தோற்றுகிறவிக்கிறது ஒருகால் சித்த ப்ரமமாக விருக்குமோ? என்பதாகவும் உரைப்பர்.

————

***- இப்பாட்டுமுதல் மேற்பாட்டுக்களெல்லாம் கீழ்ப்பாட்டிற் சொன்ன லீலாவிபூதிச் செல்வத்தைப் பள்ளிப்பன்னி யுரைக்கின்றன. பரம போக்யமான நலமந்தமில்லாதோர் நாடாகிய நித்ய விபூதியை (பரமபதத்தை) விட்டு இருள் தருமா ஞானமாகிய இந்நிலத்தை விசேஷமாக வருணிப்பதேன்! என்னில்; அந்தத் திருநாட்டிலுள்ளவர்கள் அஜ்ஞாநம் அந்யதாஜ்ஞாநம் விபரீதஜ்ஞாநம் அந்யசேஷத்வம் உபாயந்தரபரதவம் உபேயாந்தரபரத்வம் முதலிய குற்றங்குறைகளில் ஒன்றுமின்றியே எம்பெருமான் திருவுள்ளமுகக்குமாறு இருப்பவர்களாகையால் அந்த நாடு திருந்துவதற்காகச் சொல்ல வேண்டிய பாசுரம் என்ன இருக்கிறது? ஸர்வாத்மா பரதந்திரமாயிருக்கிற அந்தத் திருநாட்டைப் பற்றிப்பேச வேண்டியதொன்றில்லை. இந்த நாடு அதற்கு எதிர்த் தட்டாயிருக்கையாலே இதைப் பற்றியே பன்னி யுரைக்க ப்ரஸக்தியுள்ளது. ஆகவே மேல் பாசுரங்களாலே லீலா விபூதிச் செல்வத்தைப் பரக்க அருளிச் செய்வது பொருத்துமென்க.

எம்பெருமானார் கத்யத்தில் *ஸ்வாதீ தரிவித சேததாசேதந ஸ்வரூப ஸ்திதி ப்ரே வ்ருத்தி பேதம் *என்று அருளிச் செய்வது- இப்பாட்டு முதல் முறையேயுள்ள மூன்று பாசுரங்களிலும் சொல்லுகிற பொருளையே ஸங்க்ரஹித்தபடியாம் ஸகல சேதநாசேதநங்களின் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீதமாயிருக்குமென்பது இப்பாட்டிற் சொல்லுகிறது; அப்படியே அவற்றின் ஸ்திதியும் (ரக்ஷணமும்) அவனதீநமாயிருக்கு மென்பது மேற்பாட்டிற் சொல்லுகிறது. அவற்றின் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனதீதங்களாயிருக்குமென்பது அதற்கு மேற்பாட்டில் சொல்லுகிறது.

இந் நாட்டிலுள்ள ஸகல பதார்த்தங்களிலுடையவும் ஸ்வரூபம் எம்பெருமானுக்கு அதீநமென்னுமிடம் இப்பாட்டிற் சொல்லுகிறது. இவற்றின் ஸ்வரூபம் அவனதீதமாயிருக்கையாவது என்னென்னில், ஸ்ருஷ்டி காலத்திலே எம்பெருமான் தானே இவற்றை யுண்டாக்கி ஜீவ த்வாரா உட்புகுந்து வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவுமாக்கியும், பிறகு பிரளய காலத்திலே இவற்றை யெல்லாம் தன் பக்கலிலே ஸூக்ஷ்ம ரூபமாகக் கிடக்கும் ஏறிட்டுக் கொண்டு தரித்தும் பொருகையாகிற இதுதான் இவற்றின் ஸ்வரூபம் அவநதீநமாயிருத்தலாம்.

உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருளையும் தனித்தனி யெடுத்துக்கொண்டு இதன் ஸ்வரூபம் அவனதீதம். இதன் ஸ்வரூபம் அவனதீதம். இதன் ஸ்வரூபம் அனைதீநம் என்றிப்படி சொல்லுவதென்றால் இஃது ஒருநாளும் ஓயாத கதையாகும். இங்ஙன்றியே, ஸகல பதார்த்தங்களும் அவனதீதம் என்று ஒரே வார்த்தையாகச் சொல்லி முடித்துவிடலாமே யென்றால் இதில் ஸ்வாரஸ்யமில்லை கேட்போர்க்கு ரஸிக்காது; ஆழ்வார்க்கும் திருப்தி பிறவாது. ஆகவே பெருக்கமும் சுருக்கமுமின்றியே பேசி யருளுகிறார்.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4-

பதவுரை

நாம்

நாம் முதலான தன்மைப் பொருள்களும்
அவன் இவன் உவன்

அவன் இவன் உவன் என்கிற ஆண் பால்  சுட்டுப் பொருள்களும்
அவள் இவள் உவள்

அவள் இவள் உவள் என்னும் பெண் பால் சுட்டுப் பொருள்களும்
எவள்

எவள் என்கிற பெண் பால் வினாப் பொருளும்
தாம்

தாம் என்னும் பன்மைப் பொதுப் பொருளும்
அவர் இவர் உவர்

அவர் இவர் உவர் என்னும் பலர் பால் சுட்டுப் பொருள்களும்
அது இது உது

அது இது உது என்னும் ஒன்றன் பால் சுட்டுப் பொருள்களும்
எது

எது என்னும் ஒன்றன் பால் வினாப் பொருளும்
வீம் அவை

நசிக்குந் தன்மையுள்ள பொருள்களும்
இவை உவை அவை

இவை உவை அவை என்னும் பலவின் பால் சுட்டுப் பொருள்களும்
நலம் அவை

நல்ல வஸ்துக்களும்
தீங்கு அவை

கெட்ட வஸ்துக்களும்
ஆம் அவை

எதிர் காலப் பொருள்களும்
ஆய அவை

இறந்த காலப் பொருள்களும்
ஆய் நின்ற

ஆகி நின்ற எல்லாப் பொருள்களும்
அவரே

அந்த ஊர்வேச்வரனேயாம்

நாம் என்று தன்மையாக (உத்தமபுருஷனாக)ச் சொல்லிக் கொள்ளப்படுகிற வ்யக்திகளும், அவன் என்று தூரத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்ய புருஷ வ்யக்திகளும், இவன் என்று ஸமீபத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸாமாந்திய புருஷ வ்யக்திகளும், உவன் என்று- மிக்க தூரத்திலுமல்லாமல் மிக்க ஸமீபத்திலுமல்லாமல் நடுவில் உள்ளவர்களாகச் சொல்லப் படுகிற ஸாமாந்ய புருஷ வ்யுக்திகளும், அவள்  என்று தூரத்திலுள்ளவர்களாகச் சொல்லப்படுகிற ஸ்த்ரீ வ்யக்திகளும், இவன் என்று ஸமீபத்திலுள்ளவர்களாகச் சொல்லப் படுகிற ஸ்த்ரீ வ்யக்திகளும், உவள் என்று நடுவில் உள்ளவர்களாகச் சொல்லப் படுகிற ஸ்தரீவ்யக்திகளும், எவள் என்று வினவப் படுகிற வ்யக்திகளும், அது, இது உது, எது என்னப்படுகிற அஃறிணைப் பொருள்களும் (அதாவது- அசேதந வஸ்துக்களும்). அழியக் கூடிய பொருள்களும், நல்ல பொருள்களும் கெட்ட பொருள்களும், இனி உண்டாகப் போகிற பொருள்களும் கீழ் உண்டாகிக் கழிந்த பொருள்களுமாகிய அனைத்தின் ஸ்வரூபமும் எம்பெருமானுக்கு அதீநம் என்றதாயிற்று.

‘எம்பெருமானுக்கு அதீநம்’ என்று மூலத்தில் இல்லாதிருக்க எவ்விதம் அந்த அர்த்தம் செய்கிறது’ மூலத்தில் அவரே என்றிருப்பதால் ஸகல வஸ்துக்களுக்கும் எம்பெருமானுக்கும் அபேதமே யன்றோ சொல்லப்படுகிறது. ஆகவே அத்வைதாமகச் சொல்லியிருக்க வேறு வகையாகப் பொருள் பணிப்பது; எங்ஙனே! எனில்; கேண்மின்;- மேல் ஏழாம்பாட்டில் “உடன் மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்று ஸர்வ வஸ்துக்களிலும் எம்பெருமான் அந்தர்யாமியாக இருக்கிறானென்பதை வ்யந்தாமகப் பேசியிருக்கிற படியைக்கொண்டு ஸமத்வயம் காண்க.

இப்பாட்டில் முதலிடியிலுள்ள அவள் இத்யாதிகள் ஜாத்யேக வசனமாகக் கொள்ளத் தக்கன. இரண்டாமடியில் அவர் இத்யாதிகள் பன்மையாக இருக்கும்போது, அவள் இத்யாதியை ஜாத்யேகசவநமாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லையேயென்னில்; இரண்டாமடியில் அவர் இத்யாதியாகவுள்ள பன்மை வ்யயக்தி பஹுத்வத்தைச் சொல்லவந்ததன்று; ‘பூஜாயாம் பஹுவரநம்’ என்பதுண்டாகையால் பூஜ்யத்வத்தை மாத்திரம் காட்ட வந்த பன்மையாகக் கொள்ளத் தக்கது. பூருவர்களின் வியாக்கியானங்களிலும் இங்ஙனமேயுள்ளது. இதை நோக்கி, முதலடியிலுள்ளவை ஸாமாந்ய புருஷ வாசகங்களென்று கொள்ளப்பட்டது. எவள் என்றது பும்லிங்க நிர்த்தேசத்திற்கும் உபலக்ஷணமாகக் கொள்ளத் தக்கது. இங்ஙனமே, வீமவை என்று அழியக்கூடிய பொருள்களைச் சொன்னது அழியாப்பொருள்களுக்கும் உபலக்ஷணமாகும்.  அழியாப் பொருள்களின் ஸ்வரூபமும் எம்பொருமானுடைய அதீநமோ என்கிற சங்கையை ஆழ்வான் ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் *இச்சாத ஏவ* என்கிற ச்லோகத்தால் தீர்த்தருளினர்.

நலம் தீங்கவை – நன்மை தீமை என்று, பன்மை (தர்மத்தை)ச் சொல்லுகிறதாகவுங்கொள்ளலாம். நல்லபொருள் தீயபொருள் என்று பண்பியை (தர்மியை)ச் சொல்லுகிறதாகவும் கொள்ளலாம். ஜாதியோடும் வ்யக்தியோடும் வாசி யறவும், குணத்தோடும் த்ரவியத்தோடும் வாசி யறவும், க்ரியையோடும் க்ரியாவத்தோடும் வாசி யறவும் எல்லாவற்றின் ஸ்வரூபமும் எம்பெருமானதீநம் என்றதாயிற்று.

ஆமவை என்று எதிர் காலப் பொருள்களையும் ஆயவை என்று இறந்த காலப் பொருள்களையும் சொன்னதுபோல நிகழ் காலப் பொருள்களையும் சொல்ல வேண்டியிருக்கச் சொல்லாது விட்டதேன்? எனில்; நிகழ்காலமென்பது ஒரு நொடிப் பொழுதேயாகும்; இது இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் அடங்கிப் போகக் கடவதாதலால் தனிப் படச் சொல்ல வேண்டிய அவசியமில்லையென்பர்.

ஆக இப்பாட்டால், ஆண், பெண், அலி, சிறந்த பொருள்கள், அழியும் பொருள்கள், விவக்ஷணப் பொருள்கள், அவிலக்ஷணப்பொருள்கள், இறந்த காலப்பொருள்கள், எதிர்காலப் பொருள்கள் என்று சில வகைகளாலே இந்த லீலா விபூதியிலுள்ள ஸகல பதார்த்தங்களையும் நிர்த்தேசித்து, இவற்றின் ஸ்வரூபம் எம்பெருமானந்தீநமென்று அருளிச் செய்தாராயிற்று.

——————–

***- ஸகல பதார்த்தங்களினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமான் அதீநமென்று கீழ்ப் பாட்டிற் சொல்லிற்று; ஸ்வரூபம் போலவே ஸ்த்திதியும் (அதாவது- ரக்ஷணமும் எம்பெருமானதீநமே என்கிறது இப்பாட்டில். -இவ்வுலகில் ரக்ஷகர்களென்று பேர் சுமப்பவர்கள் பலவகைப் பட்டிரா நின்றனர். ஒருவன் ஒரு வீட்டுக்கு மாத்திரம் ரக்ஷகனென்றிருப்பன்; ஒருவன் ஒரு க்ராமத்துக்காக ரக்ஷகனென்றிருப்பன்; ஒரு நாட்டுக்காக ரக்ஷக்னென்றிருப்பன்;  ஒருவன் மூவுலகுக்கு ரக்ஷகனென்றிருப்பன் ஒருவன் பதினாலுலகுக்கு ரக்ஷ்கனாயிருப்பன், ஆக விப்படிப்பட்ட அவரவர்கள் ரக்ஷகரென்னும்படி நிற்பது அந்த வ்யக்திகளில் எம்பெருமான் அந்தராத்மாவாய் நின்று நடத்துகையாலத் தனையே யன்றி, இவனுடைய அநுப்ரவேசமின்றி ஒருவராலும் ஒரு ரக்ஷணமும் பண்ண முடியாது என்பது ஸகல சாஸ்த்ரங்களிலும் முறையிடப்பட்டுள்ளது. *ந ஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விதிவர்த்ததே- ஸமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விதர் புருஷோத்தாம், *ஸம்பத்துக்களைச் சேமித்துக் கொடுப்பதிலும் ஆபத்துக்களைத் தவிர்த்தொழிப்பதிலும் எம்பெருமானுக்கன்றி மற்றொருவற்கும் சக்தி யில்லை என்று சொல்லிற்று-. இதனை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5-

பதவுரை

அவர் அவர்

அந்தந்த அதிகாரிகள்
தம தமது

தங்கள் தங்களுடைய
அறிவு

ஞானத்தாலே
அறி

அறியப் படுகிற
வகை வகை

பல பல படிகளாலே
அவரவர்

அந்தந்த தெய்வங்களை
இறையவர் என

ஸ்வாமிகளென்றெண்ணி
அடி அடைவர் தன்

ஆச்ரயிப்பர்கள்;
அவரவர் இறையவர்

அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள்
குறைவு இலர்

அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்)
இறையவர்

ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்
அவரவர்

அந்தந்த அதிகாரிகள்
விதி வழி

தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக
அடைய

பலன் பெறும்படியாக
நின்றனர்

அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளி யுள்ளான். (அதனாலே காண்மின்.)

அவரவர்–உலகத்திலுள்ள சேதநர்கள் ஸாத்விகராகவும் ராஜஸராகவும் தாமஸராகமுள்ளார்கள். சுத்த ஸாத்விகராயிருப்பவர்கள் “உன்னித்து மற்றொரு தெய்வந்தொழாள் அவனையல்லார்” “களைவாய் துன்பம் களைகண்மற்றிலேன்” என்னுமா போலே எம்பெருமானை யன்றி மற்றொரு தெய்வத்தையும் தொழாதவர்களாயும் ஒரு பிரயோஜனத்தையும் விரும்பாதவர்களாயு மிருப்பார்கள்; அன்னவர்களைப் பற்றி இங்குச் சொல்ல வேண்டியதொன்றுமில்லை. மற்ற குணங்கட்கு வசப்பட்டவர்கள் ஆரோக்யம், ஐச்வரியம், ஸத்தாநம் முதலிய க்ஷுத்ர பலன்களை விரும்பினவர்களாய், அப்படிப்பட்ட பலன்களையும் நேர்கொடு நேரே எம்பெருமானிடத்துச் சென்று விரும்புதலின்றியே தாம் தாம் அபிமானித்திருக்கிற தெய்வங்கள் பக்கலிலே விரும்புபவர்களாயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் குறிக்கிறார் அவரவர் என்று.

தமதமது அறிவு- ஒவ்வொரு சேதநருடையவும் ஞானம் ஒவ்வொரு விதமாயிருக்குமன்றோ. இங்கு ஞானமென்று ருசியைச் சொல்லுகிறது. தங்கள் தங்களுடைய ருசியினாலே யென்றபடி. ஒருவனுக்கு ஸவர்க்க போகத்திலே ருசி யுண்டாகும்; மற்றொருவனுக்கு இஹலோக போகங்களிலே ருசியுண்டாகும். இன்னொருவனுக்கு இன்னொன்றிலே ருசியுண்டாகும்; ஆகவே அதிகாரிகள் பல வகைப் பட்டிருக்கிறாப் போலவே அவர்களுடைய ருசிகளும் பலவகைப் பட்டிருக்கும் –

தமதமது என்கிற இரட்டிப்பால் அந்த ருசி பேதங்கள் காட்டப்படுகின்றன.  அப்படிப்பட்ட ருசி பேதங்களினால்; அறி- அறியப்பட்ட, வகை வகை- சேதநர்கள் பல வகைப் பட்டிருக்கிறாப் போலவும் அவர்களுடைய ருசிகள் பலவகைப் பட்டிருக்கிறாப் போலவும் அவர்கள் கோலின பலன்களுக்காக அனுட்டிக்கும் ஸாதானங்களும் பலவகைப் பட்டிருக்குமே:- ‘வகைவகை’ என்ற இரட்டிப்பால் அது சொல்லப்படுகிறது. சிலர் த்யானத்தினாலும், சிலர் யஜ்ஞங்களினாலும், சிலர் அர்ச்சனையினாலும், சிலர் திருநாம ஸங்கீர்த்தநங்களினாலும், சிலர் அபிஷேகத்தினாலும் ஆக விப்படி வெவ்வேறுபட்ட வகைகளாலே தெய்வங்களை வழிபடுகிறவர்களன்றோ. அந்த வகைகளெல்லாம் இங்குக் குறிக்கொள்ளத் தக்கன. அப்படிப்பட்ட உபாயங்களைக் கொண்டு

அவரவர் இறையவரென அடியடைவர்கள்- முதலடியிலுள்ள ‘அவரவர்’ என்றது வழிபடுகின்ற சேதநர்களைச் சொல்லிற்று; இவ்வடியிலுள்ள ‘அவரவர்’ என்பது வழிபாடு செய்யப்படுகிற பலபல தெய்வங்களைக் குறிக்கின்றது. இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் இப்படி உரைக்கப்படுகின்ற நாம பேதங்களைத் திருவுள்ளம் பற்றி அவரவர் என்கிறார். இறையவரென- ‘இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே அஸாதாரணமாயினும், பிரதிபத்தி செய்கிற சேதநர்களின் அபிமானத்தயடியொற்றி (அவர்களது கருத்தாலே) இறையவர் என்கிறார்; ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வாமியாகக் கொள்வர் என்றவாறு.

“தொழுது மாமவர் நீர்சுடர் தூபங்கொண்டு, எழுதுமென்னுமிது மிகை என்கிறபடியே தொழுது எழுவதுதானும் மிகையாம்படியான பகவத் விஷயத்திலே வாஸநை பண்ணிப் போருகின்ற ஆழ்வார் திருவாக்கிலே அடியடைவர்கள் என்கிற வாசகமே யாய்த்து வரக் கூடியது.

அவரவரியறையவர் குறைவிலர் – அவரவர்களுடைய இறையவர் என்றாவது உரைக்கலாம். முதற்பொருளில், ஆச்ரயிப்பவர்களான அந்தந்த சேதநர்களினால் போற்றப்பட்ட தெய்வங்கள் என்றபடி, குறைவிலர்- தம்மை அடுத்தவர்கட்கு வேண்டிய பலன்களை யளிப்பதில் தகுதி யுடையார் என்றபடி. ஆனால், அத் தெய்வங்கள் தாமாகவே பலனளிப்பதில்லை; எம்பெருமான் தங்களிடத்தில் அநுப்ரவேசித்திருப்பதனால்தான் தாங்கள் பலனளிக்கத் திறமை பெறுகிறார்களென்கிறார் வாக்ய சேஷத்தினால் (அவரவர் விதி வழி யடைய இறையவர் நின்றனர்) என்று அந்வயிப்பது.

ஈடு முப்பத்தாறாயிரப்படியில் இங்கே “ஐயன்பாழியிலானை போர்க்கு உரித்தாமன்றாயிற்று அவ்வோ தேவதாமாத்ரங்களுக்கு பலப்ரதாநசக்தியுள்ளது” என்று ஸ்ரீஸூக்தியுள்ளது; இதன் கருத்தாவது- பிடாரி கோவில்களின் வாசலில் குயவன் செய்த பெரிய பெரிய யானை குதிரைகள் நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் அவை போர் செய்ய மாட்டா; ஒழுங்காக அங்கு நிற்குமத்தனையே யன்றி ஒரு காரியமும் செய்யமுடியா; அதுபோலவே தேவதாந்தாரங்களும் என்றபடி. (ஐயன் பாழி – சாஸ்தா என்கிற தெய்வத்தின் கோவில் என்க. ஆனை- யானை குதிரை முதலானவை. போர்க்கு உரித்தரமன்று- யுத்தஞ்செய்ய உபயோகப்படுமேயானால் என்றவாறு.)

ஆக இப்பாட்டால் சொல்லிற்றாயிற்று என்னெனில்; உலகத்தில் நடக்கிற ரக்ஷணத் தொழில் யாவும் எம்பெருமானுடையதே. அக்னி, இந்திரன், சிவன், பிரமன் முதலிய இதர தெய்வங்களைக்குறித்து அவரவர்கள் வழிபாடுகள் செய்து தாம் தாம் கோலின் பலன்களைப் பெறுவதாகக் கண்டாலும் அதுவும் எம்பெருமான்றானே அத்தெய்வங்களுக்கு உள்ளீடாக இருந்து நடத்துகிற ரக்ஷணமே யன்றி அத்தெய்வங்களே ஸ்வதந்திரமாகச் செய்துவிடுகிற ரக்ஷணமன்று என்றதாயிற்று.

————–

***- லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6-

பதவுரை

நின்றனர்

நிற்பவர்கள்
இருந்தனர்

இருப்பவர்கள்
கிடந்தனர்

கிடப்பவர்கள்
திரிந்தனர்

திரிபவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப் பெருமானுடைய அதீநமே)
நின்றிலர்

நில்லாதவர்கள்
இருந்திலர்

இராதவர்கள்
கிடந்திலர்

கிடவாதவர்கள்
திரிந்திலர்

திரியாதவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமை யாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப் பெருமானுடைய அதீநமே.)
என்றும்

எப்போதும்
ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர்

ஒரே விதமான இயற்கையை யுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர் தாம் யாவரென்னில்;)
என்றும்

எப்போதும்
ஓர்இயல்வொடு நின்ற

ஒரே விதமான இயற்கையோடு கூடி யிருக்கின்றவராய்
எம் திடர்

திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர்.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் – நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்கிற காரியங்களைச் செய்கின்ற புருஷர்களைச் சொல்லுகிற சொற்கள் இவையாயினும் புருஷர்கள் வரையில் விவக்ஷிக்க வேண்டிய அவசியம் இங்கு இல்லை. கீழ் நாலாம்பாட்டிலேயே உலகத்திலுள்ள ஸகல வ்யக்திகளினுடையவும் ஸ்வரூபம் எம்பெருமானுடைய அதீநம் என்பது சொல்லப்பட்டு விட்டபடியால் அதனையே ஈண்டுஞ் சொல்வதாகக் கொள்ளில் பயனில்லை; அபூர்வமான பொருளே இங்குக் கூறப்பட்டதாக வேண்டும். ஆகவே நின்றனர் இத்யாதிக்கு நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்கிற தொழில்கள் மாத்திரமே இங்குப் பொருளாக அமையும். இங்ஙனமே இரண்டாமடியிலும் நின்றிலர் இத்யாதிக்கு- நில்லாமை இராமை கிடவாமை திரியாமை என்பவைகளே பொருளாகப் பொருந்தும். மூலத்தில் தர்மி வாசக சப்தம் இருக்கச் செய்தேயும் தர்மியை விட்டு தர்மத்தை மாத்திரம் பொருள் கொள்ளுமிகு ஸம்ஸ்கிருத சாஸ்திர மரியாதைக்கு மிகவுமிணங்கினதேயாகும்: எங்ஙனேயென்னில்:-

அருணயா பிங்காக்ஷ்யா க்ரீனாதி* என்று வேதத்திலுள்ளது. யஜ்ஞத்திற்காக ஸோமம் ஸம்பாதிக்க வேண்டுமென்றும் அதனை விலை கொடுத்து வாங்க வேணுமேயன்றி வேறு வகையால் ஸம்பாதிக்கலாகாதென்றும் சொல்லி வருகிற பிரகரணத்திலே அந்த வாக்கியம் (யஜுர்வேதம்- ஆறாவது காண்டம் முதல் ப்ரச்நம் 45-வது பஞ்சாதி.) உள்ளது. சிவந்ததாயும் பொன் வர்ணமான கண்களை யுடைத்தாயுமிருக்கின்ற பசுவை விலையாகக் கொடுத்து ஸோமம் வாங்க வேண்டியது என்பது இதன் பொருள். பசுவை விலையாகக் கொடுத்து ஸோமம் வாங்க வேண்டியது என்பது இதன் பொருள். இவ் விடத்தில், இரண்டு விசேஷணங்களோடு கூடின விசேஷ்யமான பசுவாகிற வ்யக்தி மூலத்தில் சொல்லப் பட்டிருந்தாலும் அதில் நோக்கில்லை பசுவைக் கொண்டு தான் ஸோமம் வாங்க வேண்டுமென்பது ஏற்கனவே கீழ் வாக்கியங்களிலும் இதர விதி வாக்கியங்களிம் ஸித்தித்து விட்ட படியால் இங்கே விசேஷ்யமான அம்சத்தில் நோக்கு இன்றியே விசேஷணமான அம்சத்தில் மாத்திரமே நோக்கு என்று கொள்ள வேணும்: இப்படியே சாஸ்திரஜ்ஞர்கள் கொண்டிருக்கிறார்கள். அதாவது ‘சிவப்பு நிறமுடையபசு, என்கிறவரையில் இங்கு விதேயமல்ல; சிவப்பு நிறம் என்பது மாத்திரமே இங்கு விதேயம் என்று கொண்டார்கள்.

மற்றோரிடமுங் காண்மின் :- *லோஹிதோஷ்ணீஷா ருத்விஜ: ப்ராசாந்தி* என்பதாக ஓதப்பட்டுள்ளது; அபிசார கருமத்தில் ருத்விக்குக்கள் சிவந்த தலைப்பாகை யுடையவர்களாயிருத்தல் வேண்டுமென்று சொல்லிற்கு. தலைப்பாகையோடு கூடியிருக்க வண்டுமென்பது ஏற்கெனவே வேறு பிரமானத்தினால் கிடைத்திருப்பதால் அந்தத் தலைப்பாகையில் சிவப்பு மாத்திரமே இங்கு விதி விஷயம் என்று கொண்டார்கள். ஆக இப்படிப்பட்ட வழியாகவே இப் பாசுரத்திலும் விசேஷ்யாம்சத்தைத் தவிர்த்து விசேஷணம்சத்தில் மாத்திரமே (அதாவது நிற்றல் இருத்தல், கிடத்தல், திரிதல்; நில்லாமை இராமை கிடவாமை திரியாமை என்கிற ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி அம்சங்களில் மாத்திரமே) நோக்காகக் கொள்வது ஆவச்யகமும் பொருத்தமுடையதுமாம்.

நின்றனர் இத்யாதிக்கு நிற்றல் முதலியவற்றைப் பொருளாகக் கொண்டாலும் அந்த நிற்றல் முதலியவை எம்பெருமானுடைய ஸங்கல்பாதீநமென்பது மூலத்தில் சொல்லிற்றில்லையே யென்னில்; நன்கு சொல்லிற்று எங்ஙனேயென்னில்; நின்றனர் (முதலிய யாவரும்) எம். திடர்’ என்று மூலத்திலுள்ளதன்றோ? திடர் என்றது திடமான பிரமாணமாகிய வேதத்தினால் ஸித்திக்கும் எம்பெருமான் என்றபடி நின்றனர் முதலான யாவரும் எம்பெருமான்’ என்று ஸாமாநாதிகரண்யத்தாற் சொல்லுகிறவிதற்குக் கருத்து ‘எம்பெருமானுக்கு அதீநம்’ என்று சொல்லுமதுவேயாம்.

இங்கே ஒரு சங்கை:- பிரவ்ருத்தி ரூபமான காரியங்களெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பாதீநம் என்பதில் தட்டில்லை; நிவ்ருத்தியும் அவனுடைய அதீநம் என்று ஏதுக்கு இசைய வேண்டும்? ஒரு வியாபாரமுமற்றிருக்கையாகிற நிவ்ருத்தி ஸ்வயமாகவே யுள்ளதன்றோ? உயர வீசி யெறியப்படுங் கல்லானது தன்னடையே கீழே விழா நின்றால் அந்த நிவ்ருத்தியும் பகவத் ஸங்கல்பாதீநமென்று கொள்ள வேணுமோ? என்று. இந்த சங்கைக்கு எம்பார் அருளிச் செய்த ஸமாதானமாவது:- ‘ஸ்வர்க்கத்தில் நின்றும் விழுகிற த்ரிசங்குவை சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க வேண்டிற்றுக் கண்டாயே; அப்படியே நிவ்ருத்திக்கும் அவன் வேணுங்காண்’ என்றருளிச் செய்தாராம்.

என்றும் ஓரியல்வினரென நினைவரியவர்- எம்பெருமானுடைய படிகள் பலபல வாகையாலே எத்தனை நாள் ஆராய்ந்தாலும் இன்னபடிப் பட்ட ஸ்வபாவத்தையுடைவனென்று நெஞ்சால் நினைக்கவுங்கூட முடியாதவனெம்பெருமான். “ என்று மோரியல்வினரென நினைவரியவர்” என்று சொல்லி வைத்து உடனே “என்றுமோரியல் வொடுநின்ற” என்றுரைத்தது பொருந்துமா எனில்; கேண்மின்: * என்று மோரியல்வினரென நினைவரியவர் என்று சொல்லப்பட்ட இயல்பு என்றைக்கும் ஒருப்பட்டிப் பட்டிருக்குமென்பதே ஈற்றடியின் கருத்தாம்.

திடர் – த்ருடமான வேத ப்ரமாணத்தினால் ஸித்திப்பவர் என்றபடி. எம்பெருமான் அப்படி ஸித்திப்பது வைதிகோத்தமராகிய தமக்குப் பரம லாபம் என்பது போன்ற “எம் திடர்” என்கிறார்.

——————–

***- ‘கிழ்ப் பாசுரங்களில் எல்லாப் பொருள்கட்கும் எம்பெருமானே நியாமகன்  என்று சொல்ல வேண்டி யிருக்க அங்ஙனம் சொல்லாமல்’ எல்லாம் எம்பெருமானே’ என்று (ஸமாநாதிகரணமாகச்) சொல்லி யிருப்பதால் அத்வைதாபிப்ராயம்போல் தோன்றக் கூடுமன்றோ? உண்மையில் அப்படி யில்லை. ஸகல சேதநாசேதநங்களும் சரீரமாய் எம்பெருமான் ஸகலாந்தர்யாமித்வேத சரீரியாய் நிற்றலால் இப்படிப்பட்ட சரீர சரீரிபாவ ஸம்பந்தத்தைப் பற்றவே ஐக்கியம் சொல்லப்பட்டதென்று நிரூபிக்கிறது இப்பாசுரம். விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை இப்பாட்டு ஸாரமாக எடுத்துரைக்கின்றது என்றுணர்க.

திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7-

பதவுரை

திடம்

உறுதியான
விசும்பு

ஆகாசமென்ன
எரி

அக்நியென்ன
வளி

வாயுவென்ன
நீர்

ஜலமென்ன
நிலம்

பூமியென்ன
அவை அவை தொறும்

அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும்
உடல் மிசை உயிர் என்

சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல
கரந்து

மறைந்து
எங்கும் பரந்து

உள்ளிலும் வெளியிலும் வியாபித்து
இவைமிசை

ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு
படர் பொருள் முழுவதும் ஆய்

படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி)
சுடர்மிகு சுருதியுள் உளன்

தேசு பொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான்
இவை உண்ட சுரன்

(ஸம் ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் தேவனாவான்.

திடவிசும்பு என்று தொடங்கி முழுவதுமாய் என்னுமளவும்- பஞ்சபூதமடியா கவுண்டாகின்ற ஸகல பதார்த்தங்களுக்கும் எம்பெருமானே உபாதாந காரணம் என்று சொல்லுகிறது. ஆகாசம் அக்நி வாயு ஜலம் பூமி என்கிற ஐந்து பூதங்களின் காரியப் பொருளாக விரிகின்ற தேவ மநுஷ்யாதி ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கி என்றபடி முதலிலுள்ள திடம் என்னும் அடைமொழி ஆகாசமொன்றில் மாத்திரம் அந்வயிப்பதாகவுமாம்; மேலுள்ள நீலமீறான – பூதங்களிலும் அந்வயிப்பதாகவுமாம். காரியங்கள் அழிந்து போனாலும் காரணங்களான பூதங்கள் சிறிது காலமளவும் அழியாதிருத்தல் பற்றித் திடமென்று பூதங்களை விசேஷிப்பதாகக் கொள்கை. இது ஆகாசத்திற்கு மாத்திரம் விசேடணமென்று கொள்ளில், ஆகாசமானது மற்றுள்ள பூதங்களுக்கு முன்னே யுண்டாகி அவை யழிந்தாலும் சிலநாள் நிலற்கக் கடவதாகையாலே திடமென்றதென்க. அன்றியும் லோகாயகிகன் முதலான சிலர் ‘ஆகாசந்தவிர நான்கே பூதங்கள்’ என்று கொள்ளுகிறபடியால் அக் கொள்கையைக் கண்டித்து ஆகாசம் திடாகவுண்டென்று காட்டுகிறபடியுமாம்.

முழுவதுமாக்கி என்னாதே ஆய் உன்றது- *பஹுஸ்யாம் ப்ரஜாயேய* என்கிற உபநிஷத்தின் சாயையை அடியொற்றி யென்ப.

அவை யவை தோறும் உடன் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துள்ள- உண்டான ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித் தனியே குறைவற வியாபித்திருக்குமெம்பெருமான் (உடன்மிசை உயிரென) நம்முடைய சரீரத்துக்கு ஆத்ம தாரகனாய் நியாயமகனாய் சேஷியாயிருப்பது போல அந்த சரீராத்மாக்களுக்கு எம்பெருமான் தான் தாரகனாய் நியாமகனாய் சேஷியாயிருக்குமென்றபடி. கரந்து என்றது ஒருவர்க்குத் தெரியாமல் என்றபடி எங்கும் பரந்து என்றது உள்ளும் புறமும் வியாபித்து என்றபடி.

ஆழ்வார் தாம் இப்படி நிஷ்கர்ஷித்து அருளிச் செய்கிற விஷயத்திற்கு மூல ப்ரமானம் வேதமே யென்று காட்டுகிறார் உளன் சுடர் மிகு சுருதியுள் என்று.

இவை யுண்ட சுரன்- கீழ்ப் பாசுரங்களில் ஜகத்தினுடைய ஸ்ருஷ்டி ஸ்திதிகள் எம்பெருமானுடைய அதீனமென்று சொல்லிற்று; ஸம்ஹாரமும் அவ் வெம்பெருமானுடைய செயலே யென்கிறது இதனால். பிரளய காலத்திலே எம்பெருமான் ஸகல லோகங்களையும் தனது திரு வயிற்றிலே வைத்தடக்கி ஆலந்தளிரிலே பள்ளி கொள்வதாக நூற்கொள்கை.

————-

***- வேதாந்தங்களில் ஸித்திப்பவனும் எம்பெருமானே யென்றும் அனைத்துக்கும் ஆத்மாவாய் நிற்பவனும் அவனே யென்றும் உலகத்தில் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நடத்துகிறவனும் அவனே யென்றும் கீழ்ப் பாசுரங்களில் அருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘இப்படி எல்லாப் பெருமைகளையும் ஒருவன் தலையிலேயே ஏற்றிச் சொல்லி விடலாமோ? பிரமன் சிவன் முதலான தேவர்களும் சில சில அரிய பெரிய காரியங்களை நடத்திப் போருவதாக ப்ராமணங்களில் விளங்கா. நின்றதே; சிவபிரான் த்ரிபுர ஸம்ஹாரமாகிற மிகப் பெரிய அருந்தொழிலை நடத்தினதென்றும் ஸகல லோகத்தின் ஸம்ஹாரத் தொழிலுக்கு அதிகாரியா யிருக்கின்றா னென்றும் பிரமனும் தேவர்களுக்கெல்லாம் ஜ்ஞாந ப்ரதானம் பண்ணினானென்றும் லோக ஸ்ருஷ்டியை நடத்திப் போருகிறா னென்றும் பிரமாணங்களால் நன்கு விளங்கும் போது எல்லாப் பெருமைகளையும் விஷ்ணுவாகிற ஒரு வ்யக்தியின் மேலேயே ஏறிட்டுச் சொன்னால் பக்ஷபாதத்தாலே சொல்லுகிறதாக ஆகுமே’ என்று கூற, அவர்களுக்குத் தெளிவு பிறக்குமாறு அருளிச் செய்யும் பாசுரம் இது.

சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8-

பதவுரை

சுரர் அறிவு அரு நிலை

(பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்
விண் முதல் முழுவதும்

மூல ப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகல வஸ்துக்களுக்கும்
வரன் முதல் ஆய்

சிறநத் காரண பூதனாய் (அவற்றை யெல்லாம் படைத்தவனாயும்)
அவை முழுது உண்ட

அவற்றை யெல்லாம் (பிரளய காலத்தில்) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள
பரபரன்

பரம் புருஷன்
அரன் என

ருத்ர மூர்த்தியின் உருவத்தைத் தரித்தவனாகி
ஒரு மூன்று புரம் எரித்து

இணை யில்லாத திரி புரங்களை எரித்தும்
உலகு அழித்து

உலகங்களை அழித்தல் செய்தும்
அயன் என

நான் முகக் கடவுள் என்னும் படியாக நின்று
அமரர்க்கு

தேவர்களுக்கு
அறிவு இயந்தும்

ஞானத்தைக் கொடுத்தும்
அலகு அமைத்து

உலகங்களைப் படைத்தல் செய்தும்
உளன்

அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன்

முன்னடிகளில் ஸ்ருஷ்டியையும் ஸம்ஹாரத்தையும் பேசியிருப்பதன் கருத்து- இந்த இரண்டு தொழில்களையும் பிரமனுக்கும் சிவனுக்கும் அஸாதாரணமாகச் சிலர் நினைப்பதால் அந்த நினைவைக் குலைப்பதற்குத் தம்முடைய ஸித்தாந்தத்தை ஸ்தாபித்துச் சொல்லுகிறபடி ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களென்னும் மூன்று காரியங்களில் ரக்ஷணமாகிற ஸ்திதி என்னும் காரியம் மாத்திரம் எம்பெருமானுடையது, மற்ற இரண்டு காரியம் ப்ரஹ்ம ருத்ரர்களினுடையது என்று பலர் நினைத்திருப்பர்கள்; அன்னவர்களுடைய நினைவின் படி ரக்ஷணத் தொழில் எம்பெருமானுடையதே என்பதில் விவாத மொன்றுமில்லாமையால் பிரதிபக்ஷிகளாலும் அங்கீகரிக்கப்பட்ட அவ் விஷயத்தை மீண்டும் நாம் எடுத்து ஸ்தாபிக்க வேண்டிய அவசியமில்லை யென்றும் விவாதாஸ்பதமான மற்ற இரண்டு காரியங்களைப் பற்றியே இங்கு உண்மையைப் பேச வேண்டுமென்றும் திருவுள்ளம் பற்றி ஆழ்வார் அவ்விரண்டையுமே இப்பாட்டில் பிரஸ்தாவித்து உண்மை யுணர்த்துகின்றாரென்று உணர்க.

கஸ்மிந் நுகலு ஆகாச ஓதச்ச ப்ரோதச்ச என்கிற உபநிஷத் வாக்யத்தில் ஆகாச சப்தத்தினால் ப்ரக்ருதியைக் சொல்லுகிறதாக வேதாந்திகளின் ஸித்தாந்தம். அந்த ரீதியில் இங்கு விண் என்கிற ஆகாச வாசக சப்தமும் ப்ரக்ருதி வாசகமாகும் என்று ஆசார்யர்கள் நிர்வஹித்தருளினர். இனி, விண் என்கிற இச்சொல் பூதங்களிலொன்றாகிய ஆகாசத்தையே சொல்லுகிற தென்பாருமுளர். *ஆகாசரத் வாயு: வாயோரக்தி:* என்ற ஆகாசமடியாக ஸ்ருஷ்டிக் கிரமம் சொல்லுகிற ஒரு புடையும் வேதாந்தங்களிலுள்ளதனால் அதற்கிணங்கும்.

அவை முழுதுண்ட பர பரன் = ம்ருத்யு முதலானவர்களுக்கு ஏக தேச ஸம்ஹாரகத்வமே உள்ளது. ஸம்ஹார கர்த்தாக்களையுமுட்பட ஸம்ஹரிக்கவல்ல ப்ராத் பரன் எம்பெருமானே யாவன்.

அமரர்க்கும் அறிவியந்து = நான்முகன் தேவர்கட்கு ஞானமளித்ததாக ஒரு ப்ரஸித்தியுண்டு. அதனையும் நிரூபித்துப் பார்க்குமளவில், ச்வேதாச்வதர உபநிஷத்தில் எம்பெருமானே நான்முகனைத் தனது திருநாபிக் கமலத்தில் தோற்றுவித்து அவனுக்கு வேதோபதேச முகத்தால் ஞானமுமூட்டினதாக ஓதிக்கிடக்கையாலே பிரமன் செய்த ஜ்ஞான ப்ரதானமும் எம்பெருமானதீனமாகவேயிருக்குமாயிற்று.

சுரரறி வரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுதுண்ட பரபரன் அரனெனப் புரமொரு மூன்றெரித்து அலகு அழித்து, அயனென அமரர்க்கு அறிவியந்து உலகு அமைத்துளன்- என்று அந்வய க்ரமமாயிற்று.

————–

***- இப்பாட்டால் ஸர்வ சூந்யவாதி நிரஸிக்கப்படுகிறான். ப்ரஹ்மஸூத்ரம் இரண்டாவது அத்யாயம் இரண்டாவது பாதத்தில் *ஸர்வதாநுபபத்தேச்ச* என்கிற ஸூத்ரத்தின் ஸ்ரீபாஷ்யத்தில் பாஷ்யக்காரர் சூந்ய வாதத்தைக் கண்டித்திருப்பது பெரும் பாலும் இப்பாசுரத்தின் நடையை உட் கொண்டேயாம்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9-

பதவுரை

உளன் எனில்

ஈச்வரனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப் போலே) சொன்னாலும்
உளன் அலன் எனில்

ஈச்வரனில்லை யென்று (நாஸ்திகர்களின் படியே) சொன்னாலும்
உளன்

ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்;
அவன் உருவம் அவன் அருவம்

அப் பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்;
இரு தகைமையோடு

இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு)
உளன் என இலன் என்

உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப் படுகிற
இவை குணம் உடைமையின்

அஸ்தித்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாக வுடையனாகுந் தன்மையினாலே
இவ்வுருவுகள் இவ்வருவுகள்

உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயு மிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும்
ஒழிவு இலன் பரந்து உளன்

எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன்.

உளளெனில உளன் = ‘ஈச்வரன் இல்லை’ என்கிற நிரீச்வர வாதம் இப் பாட்டில் நிரஸிக்கப் படுகிறதாக விளங்குகின்றதே யன்றி ஸர்வ சூன்ய வாதம் நிரஸிக்கப்படுவதாக விளங்கவில்லையே என்று சிலர் சங்கிப்பர்கள். உண்மையில் ஸர்வ சூந்யவாதியே இப்பாட்டில் நிராகரிக்கப் படுகிறான். ஸர்வமும் சூந்யமென்கிற வாதத்தில் ஈச்வரனுடைய சூந்யத்வமும் அடங்கினதாதலால் அதை நிரஸித்து ‘ஈச்வரனுளன்’ என்று ஸ்தாபிக்கப்பட்டுவிட்டால் ஈச்வரன் தானும் விபூதி யுக்தனாகவே தேறுவானாதலால் அம்முகத்தாலே ஸகலமுமுள்ளதாக ஸ்தாபிக்கப்பட்டுவிடுகிறதென்பது ஆழ்வார் திருவுள்ளமாகக் காண்கிறது. ஒரு மனிதன் உளனாக ஏற்படும்போது செவி வாய் கண் மூக்குடல் முதலான உறுப்புகளோடு கூடியே ஏற்படுவதுபோல, எம்பெருமானுளனென்று ஏற்படுமிடத்தும் சேதநங்களாகிற சரீரத்தோடு கூடியே ஏற்பட வேண்டுதலால் எம்பெருமானுடைய உண்மையை ஸாதிக்குமளவே ஸர்வ சூந்யவாத கண்டனத்திற்குப் போதுமாயிற்று.

இல்லை என்று சொல்லுகிற வாதியை நோக்கி “உளனெனிலுளன்” என்று ஆழ்வாரருளிச் செய்வது எப்படிக்கூடும்? உளன் என்கிற பேச்சு அந்த வாதியின் வாயில் இல்லாதிருக்க உளனெனில் என்கைக்கு என்ன ப்ரஸக்தி? என்று சங்கை பிறக்கலாம். கேண்மின்; ‘ஈச்வரனுளன்’ என்று சொன்னால் எப்படி ஈச்வரனுடைய உண்மையைத் தேறுமோ அப்படியே ‘ஈச்வரன் உளனலன்’ என்றாலும் ஈச்வரனுடைய உண்மையே தேறும் என்று காட்டுவதற்கே ஆழ்வார் இங்ஙனமருளிச்செய்தவாறு. வைதிகர்களான நாங்கள் உளன் என்கிற சொல்லாலே ஈச்வரனுடைய உண்மையை ஸாதிக்கிறோம்; அந்த உண்மையையே இலன் என்கிற சொல்லாலே நீ ஸாதித்தாயாகிறாய் என்று நிரூபிக்கிறபடி.

(உளனெனில் அவனுருவம் இவ்வுருவுகள்; உளனலனெனில் அவனருவமிவ்வருவுகள்.) ஈச்வரனுக்கு உளனாயிருக்குந் தன்மையாவது ஸ்தூல ரூபத்தோடு கூடிய சேதநாசேத்நங்களைச் சரீரமாகவுடையனாயிருக்குந் தன்மையேயாம். இனி, இலனாயிருக்குந் தன்மையாவது ஸூக்ஷ்ம ரூபத்தோடு கூடிய சேதநாசேதநங்களைச் சரீரமாகவுடையனா யிருக்குந்தன்மையேயாம். உபநிஷத்தில் *அஸத் வா இத மக்ர ஆஸீத்* என்று ஓதப்பட்டுள்ள இடங்களில் ஸூக்ஷ்மசிதசித் சரீரகத்வமே அஸதத்வம் என்று நிர்ணயிக்கப் படுவதாகத் தேறுதலால் அதனை அடி யொற்றி ஆழ்வார் உள்ளனவெனில் அவனருவமிவ்வருவுகள் என்றருளிச்செய்தாரென்க. ‘ஈச்வரனுண்டு என்றால் ஸ்தூல ரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விவக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்ம ரூப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விக்ஷிதம்; ‘ஈச்வரனில்லை’ என்றால் ஸூக்ஷ்ம ருப ப்ரபஞ்ச விசிஷ்டத்வம் விசக்ஷிதம்; ஆக இவ் விரண்டு வகை தவிர அடியோடு சூந்யத்வமென்பது எவ்வழியாலும் ஏற்படாதென்றதாயிற்று.

பின்னடிகளின் கருத்தாவது உளன் என்ற ப்ரதிஜ்ஞையாலே உண்மை ஏற்படுகிறது; இலன் என்ற ப்ரதிஜ்ஞையாலே இன்மை ஏற்படுகிறது. உண்மையாவது அஸ்தித்வம்; இன்மையாவது நாஸ்தித்வம்: இவ்விரண்டு தருமங்களும் ஒரு பொருளை ஆச்ரயித்தே யிருக்க வேண்டுதலால் நாங்கள் சொல்லுகிற அஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும், நீ சொல்லுகிற நாஸ்தித்வத்திற்கு ஆச்ரயமாகவும் ஒரு வஸ்து தேறும்? என்று ஆக்ஷேபிக்க முடியாது; ஏதோவொரு வஸ்துவைச் சுட்டித்தானே நாஸ்தி யென்ன வேண்டும்; அப்படி நாஸ்தி என்று நீ சொல்லுகிற வஸ்து எது? என்று கேட்டால் அப்போது அதனை நீ நிரூபித்தேயாக வேண்டுமே; ஆனது பற்றியே நாஸ்தித்வத்திற்கு ஆஸ்ரயமாகவும் வஸ்துவினுண்மை ஸித்தித்தே தீருமென்கிறோம். அப்படி ஸித்திக்குமாதலால் ஸர்வ தேச ஸர்வ கால வ்யாபியான எம்பெருமான் ஸ விபூதிகனாய் ஸித்தித்தானாயிற்று என்றதாம்.

——————

பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10-

பதவுரை

பரந்த

எங்கும் வியாபித்த
தண் பரவையுள்

குளிர்ந்த கடலினுள்
நீர் தொறும்

ஜல பரமாணு தோறும்
பரந்த அண்டம்

விஸ்தாரமான இவ் வண்டத்தி லிருக்குமா போலே
இது என பரத்து உளன்

நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி)
நிலம்

பூமியிலும்
விசும்பு

மேலுலகங்களிலும்
ஒழிவு அற

ஒன்றொழியாமே
கரந்த சில் இடம் தொறும்

அதி ஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும்
இடம்

அவ் வவ் விடஙக்ளிலே
திகழ்

விளங்கா நின்ற
பொருள் தொறும்

ஆத்ம வஸ்துக்கள் தோறும்
கரந்து

(வ்யாப்ய வஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து
எங்கும் பரந்து உளன்

எல்லா விடங்களிலும் வியாபித்திரா நின்றான் (யாவரெனில்;)
இவை உண்ட கரன்

இவ் வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளே யடக்கி, தான் ஸ்திரமாயிருக்கு மெம் பெருமான்.

***- (பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப் பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார்.

கீழ் ஏழாம்பாட்டில் “சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே” என்றது முக்கியமாக நாராயண திருநாமத்தைத் திருவுள்ளம் பற்றியேயாமென்பது ஸம்பிரதாயம்

சுருதியென்றால் வேதம்; மிகுசுருதி யென்றால் வேதாந்தமாகிய உபநிஷத்து

சுடர் மிகு சுருதியென்றால் நாராயாணாநுவாகம்.

ஆகவே நாராயணாநுவாக ஸித்தனான எம்பெருமானுக்கே இப்பதிகத்தில் பரத்துவம் பேசப்பட்டதென்பது குறிக் கொள்ளத்தக்கது.

ஸர்வ வ்யாபகத்வமே நாராயண நாமத்தின் தேர்ந்த பொருளாதலால் அதனை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த் திவலைகள்தோறும் வியாபித்திரர் நின்றான் என்று முதலடியில் கூறினார். சாந்தோக்ய உபநிஷத்தில் சாண்டில்ய வித்யையில் *ஏஷமஆத்மா அந்தர் ஹருதயே ஜ்யாயாந் ப்ருதிவ்யா: ஜ்யாயாநந்தரிக்ஷாத் ஜ்யாயாந் திவோ ஜ்யாயாநேப்யோ லேகேப்ய* என்று மிகப் பெரியதாக ஓதப்பட்டுள்ள பரம் பொருள் நீர்த் திவலையிலே வியாபியா நின்றால் அவகாசம் அற்பமாகி நெருக்குப் பட்டிருக்குமோவென்ன அப்படிப்பட்ட வருத்தமில்லையென்று ஸ்யாப்தியின் ஸௌகரியத்தை இரண்டாமடியாற் கூறுகின்றார் (ஓர் அண்டத்தை) ஸ்ருஷ்டித்து (அதிலே ஏகாகியை) வைத்தால் எப்படியிருக்குமோ அப்படி அஸங்கு சிதமாகவே வயாப்தி யுள்ளதென்றவாறு.

இப்படி ஜல பரமாணுக்களிலே வியாபித்து விடுமிவ்வளவோயோவென்ன; நில விசும்பொழிவற என்று பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே யென்கிறார். ஸகல பதார்ததங்களிலும் வியாப்தி யுண்டென்று சொன்னபடி. அதனையே பின்னடிகளில் விவரிக்கின்றார். (கரந்த சிலிடந்தொறும் இத்யாதியால்.) இமையோடு இமை பொருந்தும் போதைக் காற்றிலே முடியும் படியான ஸூக்ஷ்மமான அல்ப சரீரங்கள் தோறும் அந்தந்த சரீரங்களிலே ஜ்ஞாநாநந்த லக்ஷணமாய் கொண்டு விளங்கா நின்ற ஆத்மாக்கள் தோறும், யார்க்கும் தெரியாதபடி வியாபித்திருக்கும்.

ஜீவாத்மாவானவன் சரீரத்திலே வியாபித்திருப்பது ஞானத்தினாலே யன்றி ஸ்வரூபத்தாலே யென்று; பரமாத்மா அங்ங்னன்றியே ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்திரா நின்றானென்க.

இப்படி சொல்லக் கூடுமோ? ஜீவஸ்வரூபமோ அணுவாக ஓதப்பட்டது; பரமாத்ம ஸவரூபமோ விபுவாக ஓதப்பட்டது. அணுவான வஸ்துவினுள்ளே விபுவான வஸ்து குறையற வியாபித்திருக்குமென்றால் இது எங்ஙனே ஸம்பாவிதம்? என், இவையுண்டகரனே என்பது இதற்கு ஸமாதானம் போலுள்ளது. “சிறு வடிவைக் கொண்டு பெரிய வற்றையெல்லாம் தன் வயிற்றிலே வைத்தால் *தாழ்குழலார் வைத்த தயிருண்டபொன்வயிறு, இவ்வேழுலகமுண்டு மிடமுடைந்தால்* என்கிறபடியே பின்னையும் அவ்வயிறே இடமுடைத்தாம்படி யிருக்கவல்ல ஸர்வ சக்தி சிறிய வற்றிலே குறைவற இருக்கமாட்டானோ என்கிறார்” என்பது ஈடு.

கரன் = வடசொல் லிகாரம்; திடமாகவுள்ளவன் என்றபடி: -திடமான பிரமாணமாகிய வேத வேதாந்தங்களில் ஸித்தன் என்றவாறு.

———-

***- இப் பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி

கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11-

பதவுரை

கரம்

திடமான
விசும்பு

ஆகாசமென்ன
எரி

அக்னியென்ன
வளி

வாயுவென்ன
நீர்

ஜலமென்ன
நிலம்

பூமியென்ன (ஆகிய)
இவை மிசை

இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள)
வரன்

சிறந்த
நவில்

சப்தமென்ன
திறல்

(கொளுத்தும்) சக்தி யென்ன
வலி

(எதையும் தூக்க வல்ல) பலமென்ன
அளி

குளிர்ச்சி யென்ன
பொறை

எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன
ஆய் நின்ற

ஆகிய இத் தருமங்களெல்லாம் தன் வசமாயிருக்கப் பெற்ற
பரன்

ஸர்வேச்வரனுடைய
அடிமேல்

திருவடி விஷயமாக
குருகூர் சடகோபன் சொல்

திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
நிரல் நிறை

சப்த பூர்த்தியும் அர்த்த பூர்த்தியுங்கொண்ட
ஆயிரத்து

ஆயிரம் பாசுரங்களிலே
இவை பத்தும்

இப் பத்துப் பாசுரமும்
வீடு

மோஷ பிராபகம்.

பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன ஆயிரத்தில் இப் பத்தும் வீடளிக்குமென்க. பரனுக்கு அடைமொழியாய் நிற்பன முன்னிரண்டடிகள், முதலடியில் ஐந்து பூதங்கள் சொல்லப்படுகின்றன. இரண்டாமடியில் அந்தப் பூதங்களின் குணங்கள் முறையே சொல்லப்படுகின்றன.

1. விசும்பு – ஆகாசம்; அதன் குணம் – நவில்- சப்தம்

2. எரி- அக்நி; அதன் குணம்- திறல்- தஹந சக்தி

3. வளி – வாயு; அதன் குணம் – வலி – மிடுக்கு.

4. நீர் – ஜலம், அதன் குணம்- அளி- குளிர்ச்சி.

5. நிலம் – பூமி; அதன் குணம் – பொறை- க்ஷமை  என்று உணர்க.

இவையாய் நின்ற பரன் என்றது- இப்படிப் பட்ட பூதங்களையும் அவற்றின் குணங்களையும் உண்டாக்கி அவை யெல்லாம் தானிட்ட வழக்காம்படி யிரா நின்ற பரம புருஷன் என்றபடி, பஞ்ச பூதங்களையும் அவற்றின் குணங்களையும் சொன்னது மற்றுமுள்ள தத்துவங்களையுஞ் சொன்னபடியாய் லீலாவிபூதி முழுவதையுஞ் சொல்லிற்றாகி, நித்ய விபூதிக்கும் அது உபலக்ஷணமாகி, ஆக உபயவிபூதி நீர்வாஹகனாயிருக்கிற பரம புருஷனென்றதாயிற்று.

குருகூர் = *குருகா என்னும் வடசொல் குருகையென ஐயீறாயிற்று. ஆழ்வார் திருநகரி வடமொழியில் ‘குருகாபுரி’ என வழங்கப்பட்டது. அதுவே தமிழில் குருகூரென வழங்கலாயிற்று.

ஆழ்வார் தாமே* குருகூர்ச் சடகோபன் சொன்ன* என்று பிறர் போலக் கூறினது கவி ஸம்ப்ரதாயம் பக்தி தலை யெடுத்துத் திவ்யப் பிரபந்தங்களை அருளிச் செய்கிற ஆழ்வார் தமது திரு நாமத்தை நிர்தேசித்துக் கொள்வது- பின்புள்ளார் ஆதரித்துப் பரிக்ரஹித்தற் பொருட்டாம்.

நிரனிறையாயிரத்து என்றவிடத்து ஈடு முப்பத்தாறாயிரப்படி ஸ்ரீஸூக்திகள் காண்மிண்:- “நிரல்நிறை என்னுதல், நிரன்நிறை என்னுதல், நிரல் நிறை என்ற போது சப்தங்களும் நிறை என்னுதல் நிரல் நிறை என்றபோது சப்தங்களும் நிறைந்து அர்த்தங்களும் புஷ்கலமாயிருக்கை. நிரன் நிறை என்றபோது நேரே நிறுத்தப்படுகை. லக்ஷணங்களிற் குறையாமே எழுத்துஞ்சொல்லும் பொருளு மந்தாதியும் க்ரமத்திலே நிறுத்தப்படுகை” என்று.

ஆயிரம் = ஆயிரம் பாசுரம் பாடவெணுமென்று ஆழ்வார் ஸங்கல்பஞ்செய்து கொண்டு அருளிச் செய்யப் புகலில்லை. *மயர்வற மதிநலமருளப் பெற்றவராகையாலே ஆயிரம் பாசுரங்கள் தம் திருவாக்கிலே அவதரிக்குமென்றுணர்ந்து அருளிச் செய்தபடி. எம்பெருமான் விஷயத்திலே ஆயிரம் பாசுரம் பேசி யல்லது தரிக்க மாட்டாத தம்முடைய நிலைமையைக் கொண்டு அருளிச் செய்தபடி யாகவுமாம்.

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading