***- எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து, அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே, வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார்.
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-
பதவுரை
| பத்து உடை |
– |
பக்தியை யுடைய |
| அடியவர்க்கு |
– |
அடியார்களுக்கு |
| எளியவன் |
– |
ஸுலபனாயும் |
| பிறர்களுக்கு |
– |
மற்றையோர்களுக்கு |
| அரிய |
– |
துர்லபனாயுமிருக்கிற |
| வித்தகன் |
– |
ஆச்சரிய பூதனும், |
| மலர் மகள் விரும்பும் |
– |
பெரிய பிராட்டியார் விரும்புதற் கீடானவனும் |
| பெறல் அரு |
– |
பெறுதற்கு அரியனுமான |
| நம் அடிகள் |
– |
நமது ஸ்வாமி |
| மத்து உறு கடை வெண்ணெய் களவினில் |
– |
(யசோதைப் பிராட்டி) மத்தை யுறுத்திக் கடைகின்ற வெண்ணெயினுடைய களவில் |
| உரம் இடை |
– |
மார்வினிடையிலே |
| ஆப்புண்டு |
– |
கட்டுண்டு |
| உரலினோடு இணைந்திருந்து |
– |
உரலோடு பொருந்தி இருந்து |
| ஏங்கிய |
– |
ஏங்கி யிருந்த |
| எளிவு |
– |
எளிமைக் குணம் |
| எத்திறம் |
– |
எப்படிப்பட்டது! |
பத்துடையடியவர்க்கு எளியவன்- “முற்ற முதிர்ந்த பக்தியையுடையார்க்கு எளியன்” என்றுரைப்பது ஆழ்வார்க்கு விவக்ஷிதமாயிராது· தன் பக்கலில் சிறிது ஆசை வைத்தவர்களையும் தான் விடமாட்டாமலிருக்கிறான்’ என்று சொல்லுவதே ஏற்றதாகும். ஆகவே, அத்வேஷம் மாத்திரமே இங்குப் பத்து என்னுஞ்சொல்லுக்குப் பொருளாக வுரியதாம்.
எளியவனாயிருக்குந்தன்மை எல்லாரிடத்துங் காட்டப்பட்டால் அனர்த்தமாகுமே! உகந்தவர்கட்கு மாத்திரம் எளியனாய், உகவாதார்க்கு அருமைப்பட்டவனநாயிருந்தால்தானே அன்பர் தேறியிருக்க முடியும்; அதற்காக அருளிச் செய்கிறார் பிறர்களுக்கு அரிய வித்தகன் என்று.
எம்பெருமானையே உபாயகமாகக் கொள்ளாமல் பிறிதொன்றை உபாயமாகக் கொள்ளுமவர்கள் இங்குப் பிறர்களாவார்; அன்வர்கட்கு அருமைப்பட்டிருத்தலாகிற ஆச்சரியத்திற்கு ஆஸ்பதன் எம்பெருமான் என்கை.
என்ன ஆச்சரியமென்னில்; யசோதைப்பிராட்டி முதலானார்க்கு விதேயனாயிருந்த நிலை தன்னிலேயே பூதனை, சகடம், மருதம் முதலியவற்றிற்கு அணுகவுமொண்ணாதிருந்தமை காண்க.
மலர்மகள் விரும்பும் அரும்பெறல் நம் அடிகள் = தாமரை மலரிலே பிறந்து அதனையே இருப்பிடாக வுடையவளாயிருந்த பிராட்டி அங்கே அடிக்கொதித்து அதனைவிட்டு ‘அகலகில்லேனிறையுமென்று அவர்மேன்மங்கை யுறைமார்பா” என்கிறபடியே திருமார்பை விரும்பி விடாதேயிருக்கப் பெற்ற பெருமான்.
முதல் திருவாய்மொழியில் “உளன் சுடர்மிகு சுருதியுள்” என்று ஆழ்வார் ஏகாந்தமாகக் காட்டின லக்ஷ்மீ ஸம்பந்தம் இப் பாட்டில் நன்கு வெளியிடப்பட்டதாயிற்று.
முதலடியில் “பத்துடை யடியவர்க்கெளியவன்” என்று சொன்ன பக்த புராதீனத்வமானது பின்னடிகளில் உபபாதிக்கப்படுகிறது. மத்துறு கடை வெண்ணெய் என்று தொடங்கி.
யசோதைப் பிராட்டி மத்தை யுறுத்தித் தயிர் கடையும்போது அவளது நிழலிலே யொதுங்கியிருந்து களவு வழியிலே வெண்ணெயை அள்ளி அமுது செய்ய, கையோடே பிடியுண்டு உரலோடே மார்வை நெருக்கிக் கட்டியிட்டு வைக்கப் பெற்று அழுது ஏங்கி நின்ற நிலைமை என்னே! என்று கரைக்கின்றாராழ்வார்.
‘உரலினோடிணைந்திருந்தேங்கிய வெளிவு எத்திறம்?’ என்று சொல்லிக் கொண்டே ஆழ்வார் மோஹித்துவிட்டாரென்பது “த்வாமந்ய கோப க்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீயமவமாநம ம்ருஷ்யமாணா, ப்ரேம்ணாத தாம பரிணாமஜுஷா பபந்த தாத்ருக் ந தே சரிதமார்யஜனா ஸஹந்தே” என்ற அதிமானுஷ்ஸ்தவ ஸ்ரீஸூக்தியில் ஈற்றடியால் வெளியிடப்பட்டது. கூரத்தாழ்வானால்,
ஆசார்ய ஹ்ருதயத்திலும் “மூவாறுமாஸம் மோஹித்து” என்றருளிச் செய்யப்பட்டது.
——————–
***- ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்.
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
பதவுரை
| நிலை வரம்பு இல பல பிறப்பு ஆய் |
– |
ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பை யுடையனாய் |
| முதல் இல கேடு இல முழு நலம் |
– |
முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம் |
| ஒளி வரும் |
– |
ஒளி மல்கும்படியான |
| எளி வரும் இயல்பினன் |
– |
ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய் |
| வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும் |
– |
மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும் |
| ஒழிவு இலன் |
– |
எப்போதும் உடையவனான |
| இறையோன் |
– |
ஸ்வாமியானவன் |
| அளிவரும் அருளினோடு அமைந்து |
– |
அளித்த கிருபையோடே கூடி |
| அகத்தனன் |
– |
(அடியவர்க்கு) அந்தரங்கனாய் |
| புறந்தனன் |
– |
(மற்றையோர்க்கு) அணுகத் தகாதவனாயிருப்பன். |
எளிவருமியல்லினன் = கீழ்ப்பாட்டில் “பத்துடை யடியவர்க்கும் எளியவன்” என்று ஸ்நேஹிகளுக்கு ஸுலபனாயிருப்பன் என்று சொன்னது தகுதியன்றென்று திருவுள்ளம் பற்றி எளிமை தானே ஸ்வரூபமாயிருக்குமென்கிறது.
நிலை வரம்பில பல பிறப்பாய் = நிலையில்லாதனவும் வரம்பில்லாதனவுமான பலவகைப்பட்ட அவதாரங்களைச் செய்யபவனென்றபடி,
இன்ன யோநியில் தான் பிறப்பதென்று ஒரு ஸ்யவஸ்தை கொள்ளாமலே ‘நிலையில’ என்றது;
இன்ன சேஷ்டி தந்தான் செய்வது என்று ஒரு வ்யவஸ்தை கொள்ளாமையாலே ‘வரம்பில’ என்றது – என்று பூர்வாசார்யர்கள் நிர்வஹித்தார்களாம்.
பட்டர் ‘நிலையில’ என்பதற்கே அவ்விரண்டு பொருளையுங்கொண்டு, இனி ‘வரம்பில’ என்பதற்கு- வரம்பில்லாமையாவது. “அவதரித்து எளியனாய் நின்ற நிலைதன்னிலே பரத்வந்தோற்ற நின்றாலும் நிற்கையாம்” என்று அருளிச் செய்வராம். எங்ஙனே யென்னில்,
அர்ஜுனனுக்குச் சாரதியாய் நின்று தாழ நிற்கச் செய்தேயும் விச்வரூபத்தக் காட்டினபடியும்.
சிவபிரான் பக்கல் புத்தீரவரம் வேண்டிப்போகா நிற்கச் செய்தே கண்டாகர்ணனுக்கு முக்தி யளித்த படியும்
ஏழு பிராயத்திலே கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தபடியும் முதலானவை நோக்கப்படின், ஒன்றிலும் ஒரு நியதியில்லை, லக்ஷிப்பதற்கு உறுப்பாகுமத்தனையே வேண்டுவது என்ற திருவுள்ளம் விளங்கும்.
பலபிறப்பாயொளிவரு முழுநலம் = பிறக்கப் பிறக்க நாம் புகரழிந்து வாரா நின்றோம்; அங்னல்லாமல் எம்பெருமான் பிறக்கப் பிறக்கக் கல்யாண குணங்கள் மிகவும் புகர்பெற்ற விளங்குமாயிற்று. *ஸ உச்ரேயாத் பவதி ஜாயமாந:* என்று வேதமும் ஓதிற்று; ஸா (பகவாத்) ஜாயமாநஸ்ஸத் ச்ரேயாதேவ பவதி) என்றபடி. கருமமடியாகப் பிறந்தாலன்றோ பிறக்கப் பிறக்கப் புகர் அழிவது: அநுக்ரஹமடியாக வருகிற அவதாரமாதலால் ஔஜ்ஜவல்யம் மிக்கிருக்குமென்க.
முதலில் கேடில = ஒரு நாளில் தோன்றி ஒருநாள் வரையிலே முடியுமவை யல்லாமல் நித்ய ஸித்த குணங்கள் என்றவாறு.
வீடு ஆம் தெளி தருநிலைமையது முழுவதும் ஒழிவிலன் = வீடு – மோக்ஷம்; அதுவாகிற தெளிவைத் தந்தருளுமியல்வு என்றைக்கு மொருபடிப்பட்டிருக்கப் பெற்றவன் என்கை.
இதனால் மோக்ஷப்ரதத்வ மென்கிற குணம் சொல்லப்பட்டதாயிற்று.
இக்குணம் கீழே முழுநலம் என்றதிலேயே அடங்கக்கூடுமாயினும் , இது சிறந்த குணமாதலால் தனிப்படச் சொல்லலாயிற்று.
தெளிவு என்னுஞ்சொல் தெளி என்று குறைந்து கிடக்கின்றது. பரமபதத்தைத் ‘தெளிவிசும்பு’ என்றே வழங்குவர். தெளிவே வடிவெடுத்திருக்குமிடமாதல் அறிக. இந்த லீலாவிபூதி கலக்கத்திற்கே ஏற்பட்டதுபோல அந்த நித்யவிபூதி தெளிவுக்கே ஏற்பட்ட தென்றவாறு.
அருளுக்கு அளிவருதலாவது நிர்ஹேதுகத்வமாம். பாண்டவர் போல்வார்க்குக் கையாளாயிருக்கையும் துரியோதனாதியர்க்கு ஆளிட்டுவிடுகையும் ஈற்றடிக்கு விஷயம்.
————–
***- எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில்.
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
பதவுரை
| அமைவு உடை |
– |
நல்ல பல பரிபாகத்தை யுடைத்தான |
| அறம் நெறி முழுவதும் |
– |
தரும மார்க்கம் எல்லாவற்றாலும் |
| உயர்வு அற உயர்ந்து |
– |
இதற்கு மேல் உயர்த்தி யில்லை என்னும் படியாக மிக வுமுயர்ந்தவர்களாகி |
| அற |
– |
மிகவும் |
| நிலம் அது ஆம் |
– |
கை வந்திருக்கப் பெறுவதாகிற |
| அமைவு உடை |
– |
சதிரை யுடையரான |
| அமரரும் |
– |
பிரமன் முதலிய தேவர்களும் |
| யாவையும் |
– |
எல்லா அசேதனங்களும் |
| அமைவு உடை |
– |
(ஆச்சரியப் படத் தகுந்த அமைதியை யுடைய |
|
முதல் ஸ்ருஷ்டியென்ன |
||
| கெடல் |
– |
ஸம்ஹாரமென்ன |
| யாவரும் |
– |
எல்லாச் சேதனர்களும் |
| தான் ஆம் |
– |
தானே யாம்படியான |
| அமைவு உடை |
– |
பொருத்தம் பொருந்திய |
| நாரணன் |
– |
நாராயணனுடைய |
| மாயையை |
– |
அவதார ரஹஸ்யத்தை |
| யாரே அறிபவர் |
– |
ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை) |
முதலடியில் அமைவுடை யென்று தொடங்கி, மூன்றாமடியில் அமைவுடை என்னுமளவும் அமரர்க்கு (விசேக்ஷகுணம்) அடைமொழி.
அமைவுடையறநெறி முழுவது முயர்வறவுயர்ந்து = ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களுக்குக் கடவரான பிரமன் முதலிய அமரர்கள் என்றும்
இடையூறென்றுமிக்கி ஸபலங்களாக தருமங்கள் எல்லாவற்றாலும் மேற்பட்டவர்களாம்.
அவர்கள் இன்னமும் எப்படிப்பட்டவர்களென்னில்; அமைவுடை முதல் கெடல் ஓடி விடையறநிலம துவாரமமைவுடையர் =
முதல் என்று ஸ்ருஷ்டியைச் சொல்லுகிறது;
கெடல் என்று ஸம்ஹாரத்தைச் சொல்லுகிறது.
ஓடிவிடை என்பது ‘இடையொடிவு’ என்றாகி அவாந்தரஸம்ஹாரத்தைச் சொல்லுகிறது.
ஆகிய இக்காரியங்கள், அற – மிகவும், நிலமதுவாம் அமைவுடை = கைவந்திருக்கும் பூர்த்தியை யுடையார் என்றபடி.
அமரரும் யாவையும் தானாமவையுடை நாரணன் = கீழ்ச்சொன்ன கடவுளர்களென்ன, ஸகல அசேதநப் பொருள்களென்ன, மற்றுமுள்ள ஸகல சேதனப்பொருள்களென்ன, ஆகிய எல்லாம் தான் என்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படியான அமைதியையுடையனாய், இதுபற்றியே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவனான எம்பெருமானுடைய என்றபடி.
மாயையையறிபவர்யாரே? = இப்படிப்பட்ட எம்பெருமானுடைய அவதார ரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியப்போகாதென்றவாறு.
மாயையென்று ஆச்சரியமாய், தனக்குப் புத்திர ப்ராயர்களான தசரத வஸுதேவாதிகளைத் தனக்குத் தந்தையராகக் கொண்டு, அவர்கள் என்மகனென்று அபிமானிக்கும்படி வந்து பிறந்த ஆச்சரியத்தை ஆரும் அறியகில்லார் என்று முறைப்ப.
யாரே அறிபவர்? = நித்ய ஸூரிகள் பரத்வாநுபவத்திலே போதுபோக்கு கையாலே இதனை அறியார்கள்;
ஸம்ஸாரிகள் உண்டியே உடையே உகந்தோடு மலர்களாகையாலே அறியார்கள்;
மயர்வற மதிநலமருளப் பெற்ற ஆழ்வார்களோ மோஹித்துக் கிடப்பர்கள்; ஆகையாலே ஒருவருமறியார்கள்.
———————
***- எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-
பதவுரை
| பேரும் |
– |
(விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும் |
| பிற |
– |
(அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும் |
| பல ஆயிரம் உடைய |
– |
அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தோற்றி |
| எம்பெருமான் |
– |
எமக்கு நாதனானவனாய், |
| யாரும் |
– |
எப்படிப்பட்ட ஞானிகளுக்கும் |
| ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான் |
– |
ஒரு படியை யுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய். |
| யாரும் |
– |
(அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும். |
| ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான் |
– |
ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு |
| ஓர் பேரும் |
– |
ஒரு பேரும் |
| ஓர் உருவமும் |
– |
ஒரு ரூபமும் |
| உளது இல்லை |
– |
உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூலர்க்கும்) |
| இலது இல்லை |
– |
இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்) |
| பிணக்கே |
– |
நித்ய விவாதமாயேயிருக்கும். |
யாரும் ஓர் நிலைமையனென அறிவு அரிய எம்பெருமான் = எவ்வளவேனும் அதிசயித்த ஞானத்தையுடையரேலும் அப்படிப்பட்டவர்களும் தமது முயற்சியாலே காண விரும்பினால் இன்னபடிப்பட்டிருப்பதொரு ஸ்வபாவத்தையுடையவனென்று அறியவொண்ணாத எம்பெருமான்- எம்பெருமானுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெறாதவர்கள் எவ்வளவு சீரியராயினும் எம்பெருமானது நிலைமையை ஒரு ஸ்தூலாகாரமாகவும் அறியகில்லாராய்க்கிடப்பரென்றபடி.
யாருமோர் நிலைமையனென அறிவு எளிய எம்பெருமான் = பிறப்பாலும் செய்கையாலும் ஞானத்தாலும் எத்தனை தாழ்ந்தவர்களாகிலும் தன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காகப் பெற்றவர்களாகில் அன்னவர்களாலே எளிதிலறியக்கூடிய படிகளையுடையனாயிருப்பன்.
பேருமோராயிரம் = அநபவிக்குமடியர்க்கு இழிந்துவிடமெல்லாம் துறையாம்படி பல்லாயிரந் திருநாமங்களையுடையனாயிருப்பன்.
ஆயிரமென்றது அநேக பர்யாயம்.
பிறபலவுடைய எம்பெருமான் = இங்குப் ‘பிற’ என்பது திய்வமங்கள விக்ரஹத்தை நோக்கியது.
நாமத்திற்கும் ரூபத்திற்கும் எங்கும் ஒரு சேத்தியுண்டாகையாலே இங்ஙனே பொருள் கொள்ளுதல் பொருந்தும்.
“பேருமோருருவமும்” என்ற ஈற்றடியுங் காண்க.
திருநாமவாச்யங்களாலும் தன் இச்சையாலே பரிக்ரஹிக்கப்படுமவைகளாயுமுள்ள பலபல திருவுருவங்களையுடையானென்றவாறு.
பேரும் ஓருருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே= இதற்குப் பலபடியாகப் பொருள் கொள்ளலாம்.
‘பேதம் ஓருருவமும் உளது. இலதில்லை. பிணக்கு இல்லை’ என்று மூன்று வாக்கியமாகக் கொண்டு-
அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு விலக்ஷணமான நாமங்களும் ரூபங்களும் உண்டு; இல்லையென்பது கிடையாது; ஆகையால் சாஸ்திர விச்வாஸசாலிகளுக்கு விவாதமில்லை- என்பதாக ஒரு யோஜநை.
அன்றியே,
பேரும் ஓர் உருவமும் உளதில்லை = (எம்பெருமான் பக்கலில் அன்பு இல்லாதார்க்கு) ஒரு திருநாமமும் ஒரு விக்ரஹமும் உண்டாயிருப்பதில்லை (என்று தோற்றியிருக்கும்); இலதில்லை – (எம்பெருமான் பக்கலில் அன்புடையார்க்கு) அந்த நாம ரூபங்கள் உண்டாகியே தோற்றம்,
பிணக்கே- அன்புடையார்க்கு அன்பிலாதார்க்கும் இப்படி விவாதமாகியே யிருக்கும் என்றுமாம். மற்றும் பலவகைகளும் காண்க.
—————-
***- ‘ஆச்ரயிக்கத் தக்கவனான எம்பெருமான் எளியனென்பது அறிந்தோம்; அன்னவனை ஆச்ரயிக்கும் வழி என்ன?’ என்று ஸம்ஸாரிகள் கேட்பதாகக் கொண்டு, அவன் கீதையிலே அருளிச் செய்துவைத்த பக்திமார்க்கத்தாலே அவனை ஆச்ரயியுங்கோள் என்கிறார்.
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
பதவுரை
| அறு வகை சமயமும் பிணக்கு அற |
– |
ஆறுவகைப்பட்ட மதங்களும் (வைதிக மார்க்கத்தோடு) பிணக்கம் ஒழியும்படி. |
| நெறி |
– |
வேத மார்க்கத்தை |
| உள்ளி |
– |
ஆராய்ந்து |
| உரைத்த |
– |
அருளிச் செய்த |
| கணக்கு அறு நலத்தனன் |
– |
எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையவனும் |
| அந்தமில் ஆகி |
– |
முடிவில்லாத முதல்வனும் |
| அம் பகவன் |
– |
அழகான குணங்களை யுடையவனுமான எம்பெருமானது |
| வணக்கு உடை |
– |
வணக்கத்தையுடைய |
| தவம் நெறி |
– |
பக்தி (அல்லது) ப்ரபத்தி ஆகிற |
| வழிநின்று |
– |
மார்க்கத்தில் நின்று |
| புறம்நெறிகளை |
– |
வேறு மார்க்கங்களாகிற களையை |
| கட்டு |
– |
பறித்து |
| அவனுடைய உணர்வு கொண்டு |
– |
அவனளித்த கீதையைக் கொண்டு |
| உணர்ந்து |
– |
உணர்ச்சி பெற்று |
| பசையற |
– |
வாஸநா ரூபமான பற்றும் அறும்படி |
| உணக்குமின் |
– |
உலர்த்தி விடுங்கள். |
அறுவகைச் சமயமும் பிணக்கு அற நெயி உள்ளிரைத்த = ஸாங்கியம், யோகம் காணாதம். பௌத்தம், ஜைனம், பாசுபதம் என்ற ஆறுவகைப்பட்ட சமயங்களும் வைதிக சமயத்தோடு பிணக்கங்கொண்டிருக்கும்;
அந்தப் பிணக்கம் தீருமாறு வேத மார்க்கத்தை ஆராய்ந்து அருளிச் செய்தவனும்
எண்ணிறந்த திருக்கல்யாணகுணங்களையுடையவனும் ஒருநாளும் முடிவில்லாத ஜகத்காரணபூதனும் ‘
பகவாத்’ என்று அஸாதாரணமான திருநாமத்தையுடையவனுமான எம்பெருமான் திறமான பக்தியோகத்திலே நின்று
பிராகிருதவிஷயங்களாகிய களையைக்கடிந்து அவற்றின் ஸங்கத்தையும் விடுங்கோள்,
எங்ஙனே விடுவதென்னில் அவனருளிச் செய்த கீதையாலே அவனையுணர்ந்து புறம்புண்டான பற்றுக்களை யெல்லாம் விடுவது என்றவாறு.
ஸாங்கமான ஸகலவேதங்களுக்கும் தானே பொருள் என்பதை ஸ்ரீகீதையிலே அருளிச் செய்கையாலே அறு சமயக் கொள்கைகள் அவத்யமென்று கழியுண்டனவாயிற்று.
கீதை அவதரியாவிடில் அறுசமயங்களுக்கும் வைதிகசமயத்திற்கும் பரஸ்பரம் ஏற்பட்ட பிணக்கு அறாதேயிருக்கும்;
வைதிகமார்க்கத்தை நிலை நிறுத்தி கீதை அவதரித்துவிட்டபடியாலே அந்தப் பிணக்கு அற்றதென்க.
பசை அற உணனக்குமின் = கீதையில் இரண்டாவது அத்யாயத்தில் (59) “விஷயாவிவார்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:- ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே’ என்று ஓதப்பட்டது காண்க.
இதெல்லாம் எதுகொண்டு என்ன, அவனுடைய வுணர்வுகொண்டு என்கிறார்.
இவ்விடத்தில் உணர்வு எனகிறது உணர்வுக்கு உறுப்பான கீதையை, கீதாசாஸ்திரத்தைக் கொண்டு தெரிந்துகொண்டு பசையற வுணக்குமின் என்க.
——————–
***- ஸம்ஸாரிகள் ஆழ்வாரை நோக்கி “ஆழ்வீர்! அவதாரத்திலே ஆச்ரயிக்கும்படி சொல்லா நின்றீர்;
“மத்யே விரிஞ்சகிரிசம் ப்ரமாவதார:” (ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்- உத்தர சதகம்.) என்கிறபடியே,பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே அவதரித்து நிற்கிற நிலையாயிருந்தது முதலவதாரம்;
அதில் மூவரும் ஒரு திகரானவர்போலத் தோற்றியிராநின்றார்கள்; அம்மூவரும் முக்கியர்களேயோ? அல்லது மூவரிலே ஒருவன் முக்கியவனோ! அல்லது மூவர்க்கு மப்பால் ஒருவன் முக்கியனோ? என்று எங்களால் ஆராய்ந்து அறுதியிடப் போகாமையாலே ஆச்ரயிப்பதிலே ஒரு ஆலோசனை உண்டாயிற்று; அதனை நீக்கி ஆச்ரயணீய வஸ்துவை நிர்ஷ்கர்ஷித்துத் தரவேணுமே நாங்கள் ஆச்ரயிக்கும்படி” என்று விஜ்ஞாபிக்க,
த்ரிமூர்த்திஸாம்ய ப்ரமத்தைப் பரிஹரிக்குமடைவிலே அருளிச் செய்கிற பாசுரம் இது.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
பதவுரை
| உணர்ந்து உணர்ந்து |
– |
உணர்வையே இயற்கையாக வுடையானாகி |
| இழிந்து அகன்று உயர்ந்து |
– |
(அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து |
| உரு வியந்த |
– |
ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற |
| இ நிலைமை |
– |
இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை |
| உணர்ந்து |
– |
கேள்வியாலே அறிந்து |
| உணர்ந்து |
– |
மநநத்தினாலே அறிந்து |
| உணரிலும் |
– |
யோகாத்தாலே ப்ரத்யக்ஷமாக அறிந்தாலும் |
| இறை நிலை உணர்வு |
– |
ஸர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதாவது |
| அரிது |
– |
அருமையாயிருக்கின்றது; (ஆயினும்;) |
| உயிர்கான் |
– |
சேதநர்களே! |
| அரி அயன் அரன் என்னும் இவரை |
– |
விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை |
| உணர்ந்து உணர்ந்து |
– |
(ஒவ்வொருவருடையவும்) குணம் முதலியவற்றைக் கொண்டு பலகாலும் ஆராய்ந்து. |
| உரைத்து உரைத்து |
– |
(அதற்கு இணங்கப்) ப்ரமாணங்களை வ்யவஹரித்துப் பார்த்து |
| மனப்பட்டது ஒன்று |
– |
உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின ஒரு பொருளை |
| உணர்ந்து உணர்ந்து |
– |
பலகாலும் அநுஸந்தித்து |
| உரைத்து உரைத்து |
– |
(அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றைப்) பலகாலும் சொல்லி |
| இறைஞ்சுமின் |
– |
உபாஸியுங்கோள். |
ஜீவாத்ம ஸ்வரூபத்தை ஒருபடி ஸாக்ஷாத்ரிக்கப் பெற்றாலும் பரமாத்ம ஸ்வரூபம் அறுதியிடவரிது என்கிறார் முன்னடிகளால்.
ஜீவாத்ம ஸ்வரூபம் எப்படிப்பட்டதென்னில்; உணர்ந்துணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த = ஞானமாத்திரஸ்வரூபமன்றியே ஞானத்திற்கு ஆச்ரயமாயிருக்கும்படியை ‘உணர்த்துணர்ந்து’ என்பதனால் அருளிச் செய்தபடி
‘இழிந்து அகன்று உயர்ந்து என்பதனால் ஸர்வ வயாப்தி சொல்லப்படுகிறது; ஜீவஸ்வரூபம் அணுவானதாயினும் தர்மபூத ஜ்ஞானத்வாரா வ்யாப்தி உண்டாதலால் இங்ஙனமருளிச் செய்க் குறையில்லை என்க.
இங்கே ஈடு; – “இச்சேதனன் தான் அணு பரிமாணனாயிருக்கச் செய்தேயும், ஈச்வரன் ஸ்வரூபத்தாலே எங்கும் வியாபித்திருக்குமா போலே ஜ்நானத்தாலே எங்கும் வ்யாபித்திருக்குமென்கிறது” என்பதாம்.
இழிந்து என்பதனால் கீழ் நிலங்களில் வியாப்தியும்,
அகன்று என்பதனால் நடுநிலஙக்ளில் வியாப்தியும்
உயர்ந்து என்பதனால் மேல் நிலங்களில் வியாப்தியும் சொல்லுகையாலே ஸர்வ வியாப்தியும் சொல்லிற்றாயிற்று.
உருவியந்த என்பதனால் தேஹத்திற்காட்டிலும் விலக்ஷணன் என்னுமிடம் சொல்லப்பட்டது. உரு என்று ரூபவத்தான அசேதந வஸ்து ஸமுதாயத்தைச் சொல்லுகிறது. வியந்த என்றும் பிரிக்கலாம் இயந்த என்றும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே.
ஆக இப்படிப்பட்டதான இந்நிலைமை உணர்ந்துணர்ந்து உணரிலும் = ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தை ச்ரவணம் மநநம் முதலியவற்றால் ஸாக்ஷாத்கரிக்கக் கூடினாலும்- தேஹாதிரிக்தமாயிருக்கிற ஆத்மாவின் ஸ்வரூபத்தை யோகசாஸ்திரத்திற் சொல்லுகிற க்ரமத்தாலே யிழிந்து வருந்தி ஓருவகையாய் அறிந்தானானாலும் என்றபடி.
உயிர்காள்! இறைநிலை உணர்வரிது = சேதனர்களே! ஸர்வேச்வரன் பிரமருத்திரர்களுக்கு அந்தராத்மாவாய் அவர்களைச் சரீரமாகக் கொண்டு தான் சரீரியாய் நிற்கிற நிலை அறியமுடியாததென்கை.
‘இறைநிலை உணர்வரிது’ என்று சொல்லிவிடலாகுமோ? அல்பஜ்ஞர்களான எங்களால் அறியமுடியாதென்பது உண்மையே; அறிந்தவர்களில் தலைவரான தேவரீர் நிஷ்கர்ஷித்து அருளிச் செய்தால் நாங்கள் அறிந்து கொள்ளத் தடையில்லையே என்ன; மத்யஸ்த த்ருஷ்டியாலே ஆராய்ந்து பார்க்கும்படி அருளிச் செய்கிறார்
அரியயனரனென்னுமிவரை உணர்ந்துணர்ந்துரைத்துரைத்து இத்யாதி.
நாராயணனென்றும் நான்முகமெனன்றும் ருத்ரனென்று முள்ள மூன்று மூர்த்திகளின் ஸ்வரூபத்தையும் ஸ்வபாவத்தையும் ஆராய்ந்து பாருங்கோள்;
அந்த ஸ்வரூபவஸ்வ பாவங்களைத் தெரிவிக்கின்ற பிரமாணங்களையும் ஒருவர்க்கொருவர் சொல்லிப் பாருங்கோள்;
ஒருவன் படைப்பவாய் இருவர் படைக்கப்படுமவர்களாய், ஒருவன் ஸாத்விகனாய் இருவர் ராஜஸதாமஸர்களாய்ப் புலப்படுமவர்கள்.
அங்ஙனம் புலப்படுமவர்களில் நிஷ்பக்ஷபாதமாய் எந்தத் தெய்வம் உங்கள் நெஞ்சில் சிறந்ததாகத் தோன்றுகின்றதோ அதனை நீங்களே நிஷ்கர்ஷித்துப் பற்றுதல் நன்று என்றாராயிற்று.
—————–
***- ஆராய வேண்டிய படியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.
ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-
பதவுரை
| ஒன்று என |
– |
ஒன்றென்றும் |
| பல என |
– |
பலதென்றும் (அதாவது |
|
ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்) |
||
| அறிவு அரு |
– |
அறிதற்கு அரிதான |
| வடிவினுள் |
– |
உருவுக்குள்ளே |
| நின்ற |
– |
நிலைத்திருக்கிற |
| நன்று |
– |
விலக்ஷணமான |
| எழில் |
– |
கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற |
| நாரணன் |
– |
ஸ்ரீமந் நாராயணன் |
| நான்முகன் |
– |
பிரமன் |
| அரன் |
– |
ருத்ரன் |
| என்னும் இவரை |
– |
என்கிற இத் தெய்வங்களை |
| ஒன்ற |
– |
மத்யஸ்த த்ருஷ்டியாக |
| நும் மனத்து வைத்து |
– |
உங்களது நெஞ்சில் வைத்து |
| உள்ளி |
– |
(அவர்களை ஸ்வரூப ஸ்வ பாவங்களை ப்ராமணங் கொண்டு) ஆராய்ந்து |
| நும் |
– |
உங்களுக்குண்டான |
| இரு பசை அறுத்து |
– |
இருவர் திறத்திலும் ஈச்வர புத்தியை யொழித்து |
| அவனிடை |
– |
அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே |
| நம்முடை |
– |
நம்முடைய |
| நாள் |
– |
வாழ் நாளில் |
| நன்று என |
– |
நன்றாக |
| நலம் செய்வது |
– |
பக்தி பண்ணுதற்கு உரியது. |
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற = அரி அயன் அரன் என்கிற மூன்று மூர்த்திகள் பிரதானவர்களாய், மூவர்க்கும் மூன்று சரீரங்களிலும் ஒரு ஆத்மாவே உள்ளானோ? அன்றியே, மூன்றிலும் மூன்று சேதநர் தனித்தனி புகுந்து நிற்கின்றனரே? என்று ஸந்தேஹம்வரின் நிர்ணயம் பெற முடியாதபடி யிருக்கின்ற வடிவையுடையவரான நாராயணன் நான்முகன் அரன் என்கிற மும்மூர்த்திகளையும் நிஷ்பக்ஷ பாதமாக நெஞ்சிலே கொண்டு ஆராய்ந்து பார்க்கவேணும்; அங்ஙனம் பார்த்தவாறே அவற்றுள் ஒரு மூர்த்தியை முக்கியமாகவும் மற்ற இரு மூர்த்திகள் அமுக்கியமாகவும் புலப்படும்; அப்போது, அவ்விரு மூர்த்திகளின் பக்கலிலே நம்முடைய வாழ்நாளில் விரைவாக அநந்ய ப்ரயோஜநமான பக்தியைச் செலுத்தப் பார்ப்பது என்றாராயிற்று.
மூன்றாமடியில், ஒன்ற என்றது நிஷ்பக்ஷபாதமாக என்றபடி. ஆராய்வதற்கு முன்னே விஷ்ணுவுக்கே சிறப்பு வேணுமென்றாவது, மற்ற இருவர்க்கே சிறப்பு வேணுமென்றாவது ஆக்ரஹம் கொள்ளாமல் பிரமாணகதியின்படியே எங்ஙனம் தேறுகின்றதோ அங்ஙனம் கொள்வதே கடமையென்று தேறி என்பது கருத்து. இரு பசை யறுத்து = இரு மூர்த்திகளிலேயுள்ள பசையை யறுத்து என்றபடி.
——————
***- கீழ்ப்பாட்டில் “நன்றென நலஞ்செய்வதனிடை” என்றருளிச் செய்ததைக் கேட்ட ஸம்ஸாரிகள், அநாதிகாலமாக நாங்கள் பண்ணிக் கூடு பூரித்துக் கிடக்கிற ப்ரபல கருமங்கள் பிரதிபந்தமாயிருக்க நாங்கள் எப்படி எம்பெருமானை ஆச்ரயிக்க முடியும்? அன்றியும் எங்களுடைய வாழ்நாள் வெகுவாய்க் கழிந்து ஒழிந்ததாகையாலே இனி ஆச்ரயிக்க நாள் தானுமில்லையே! என்ன,
அவர்களுக்கு உத்தரம்போல் அருளிச் செய்யும் பாசுரம் இது. நீ
ங்கள் செய்து கிடக்கிற பாவங்களை நினைத்து அஞ்சவேண்டா; நீங்கள் எம்பெருமானை ஆச்ரயிப்பதாக முயன்றவளவிலே விரோதி கருமங்களடங்கலும் தொலைந்துபோம்; அவற்றைத் தொலைக்கப் பிராட்டி ஸந்நிதாநமுண்டுகாணும்;
வாழந்õள் பெரும்பாலுங் கழிந்தொழிந்ததே யென்றிருக்கவும் வேண்டா; நீங்கள் தண்டுகாலாவூன்றித்தள்ளி நடக்கும்போதாகிலும் அக்கோலோடே சாய்ந்தால் அது தானும் ஒரு நமஸ்காரமாகக் கணக்கிடப்பெறலாகும் என்றார்.
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-
பதவுரை
| மனனகம் |
– |
மனத்திலுண்டான |
| மல் அற |
– |
(மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி |
| கழுவி |
– |
விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி |
| நாளும் |
– |
நாள் தோறும் |
| நம் |
– |
நமக்கென்றே உரிய |
| திரு உடை அடிகள் தம் |
– |
திருமகள் கொழுநனான ஸ்வாமியினுடைய |
| நலம் கழல் |
– |
அழகிய திருவடிகளை |
| வணங்கி |
– |
ஆச்ரயிக்க |
| நாளும் நின்று |
– |
எப்போதும் விடாது நின்று |
| அடும் நம |
– |
வருந்துகின்ற நாமறிந்தே |
| பழமை அம் கொடு |
– |
பழமையாகிய மிகவுங் |
| வினை உடனே மாளும் |
– |
கொடிய பாபங்கள் ஆச்ரயித்தவுடனே தொலையும்; |
| ஓர் குறைவு இல்லை |
– |
ஒரு குறைவுமுண்டாகாது; (இப்படி ஆச்ரயிக்குமிடத்தில்) |
| மாளும் ஓர் இடத்திலும் |
– |
சரீரத்தை விடுகிற காலத்திலும் |
| வணக்கொடு |
– |
வணக்கத்தோடு |
| மாள்வது |
– |
முடிவது |
| வலம் |
– |
நன்று. |
“மனனகமலமறக்கழுவி நாளும் நம் திருவுடையடிகள் தம் நலங்கழல் வணங்க, நாளும் நின்றடுநமபழமை யங்கொடுவினையுடனேமாளும், ஓர் குறைவில்லை; மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே” என்று அந்வயிப்பது.
இப் பாட்டின் முதலடிக்குச் சார்பாக அறிய வேண்டிய பொருள் கேண்மின்:- ப்ரஹ்ம வித்யையை உணர்ந்த அதிகாரிக்கு அவ்வித்யையின் மஹிமையினால் உத்தர பூர்வ பாபங்களின் அச்லேஷ விநாசங்கள் கூடும்.
ஏனெனில் வித்யா மஹிமையை விவரிக்கப் பிறந்த *ஏவம்விதி பாபம் கர்ம நச்லிஷ்யதே* *ஏவம் ஹாஸ்ய ஸர்வ பாம்மாந: *நாராபுக்தம் க்ஷயதே கர்* (கரும பலன் அநுபவித்தேயறவேணும்) என்கிற சாஸ்திரத்தோடு விரோதிக்கின்றதே யென்னில், விரோதமொன்றுமில்லை; விஷயபேதங் கொண்டு இரண்டு சாஸ்திரங்களையும் பொருந்த விடத் தட்டில்லை.
இனி விஷய பேதம் எவ்வாறெனில், “கருமபலன் அநுபவித்தே அறவேணும்’ என்கிற சாஸ்திரம்- கருமங்கள் பலன் தருவதில் திண்ணிய சக்தியுடையன எனக் கூறுதலை விஷயமாகவுடையது. *ஏவம் ஹாஸ்ய ஸர்வ பாப்மாந ப்ரதூயந்தே* இத்யாதி ச்ருதிகள் ப்ரஹ்மவித்யை ப்ராசீநபாபங்களுக்குள்ள பலப்ரதாந நக்தியை நாசஞ்செய்வதிலும் பவிஷ்யத் பாபங்களுக்குள்ள பலப்ரதாந சக்தி உத்பத்தியைத் தடைசெய்வதிலும் வல்லமையுள்ளதெனக் கூறுதலை விஷயமாகவுடையன, ஆகையால் இரண்டிற்கும் விஷயம் வேறுபட்டதாயிற்று.
அக்நிக்கு தாஹ ஸாமர்த்தியத்தையும் ஜலத்திற்கு தாஹநிவாரண ஸாமர்த்தியத்தையும் கூறுகின்ற இரண்டு பிரமாணங்கள் விஷய பேதத்தாலே அவித்தமாவதுபோல இதனைக் கொள்க.
இப்பாட்டின் முதன் மூன்றடிகட்குச் சந்தையாக “த்வதங்க்ரிமுத்திச்ய கதாபீ கோநசித யதா ததாவாபி ஸக்ருத் க்ருதோஞ்சலி:, ததைவ முஷ்ணாக்யசு பாந்தயசேஷதா: சுபாதி புஷ்ணாதி ஜாது ஹீயதே” என்ற ஆளவந்தார் ஸ்தோத்ரரரத்ந ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கவுரியது.
மூன்றாமடியின் முடிவில், வணங்கி என்றது எச்சத்திரிபாய் வணங்கவென்றபடி. வணங்கின் என்ற பாடத்தில் இங்ஙனங்கொள்ளவேண்டிய அருமையில்லையாயினும் அது பாடமன்று.
மூன்றாமடிக்கு ஒரு ஸம்வாதமருளிச் செய்கிறார் நம்பிள்ளை; அதாவது- “ஸர்வேச்வரனை ஆச்ரயித்தானாகில் அவன் பலப்ரதனாகிறான், பிராட்டியைப் புருஷகாரமாகப் பற்ற வேண்டுகிறதென்? என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க, *நாளுநந் திருவுடையடிகள்தம் நலங்கழல் வணங்கி யென்று, அவள் முன்னாக ஆச்ரயிக்க வேணுமென்னாநின்றது கண்டீரே! என்று அருளிச் செய்து, அவனை ஆச்ரயிக்குமிடத்தில் இவன் குற்றம் பாராதே தன்னிழலிலே இவனை வைத்து அவன் பக்கல் முகம் பெற்றவாறே குற்றத்தைப் பொறுப்பிக்குமவள் முன்னாகப் பற்றவேணும் என்றருளிச்செய்தார்” என்பதாம்.
நலங்கழல் = பிராட்டி புருஷகாரமாகப் பற்றினாருடைய குற்றங்களைக் கணிசியாதே கைக் கொள்ள வல்ல திருவடிகள் என்றவாறு. இதுவாயிற்றுத் திருவடிகட்கு நன்மை.
மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வதுவலமே = இராவணன் “த்விதா பஜ்யேமப்யேவம் ந நமேயம் து கஸ்யசித்” என்றான்; நான் உடல் பிளந்து செத்துப் போகும்படி நேர்ந்தாலும் சரீரம் இருதுண்டாகப் பிளவுற்றுக் குறுக்கே விழுமத்தனையொழிய அப்போதும் ஒருவனை வணங்கினாப்போல் விழமாட்டேன்’ என்றான். அப்படிப்பட்ட விருத்த ஸங்கல்ப மின்றியே, சாகிற போதாவது தலை கவிழ்ந்து சாவப்பெற்றால் நன்று என்கிறாராழ்வார்.
—————–
***- கீழ்ப்பாசுரங்களில் பிரமன் முதலானருடைய அவரத் தன்மையையும் எம்பெருமானுடைய பரத்வத்தையும் குறிப்பட்டருளினார்.
இப்பாட்டில், அந்தப் பிரமனும் சிவனும் எம்பெருமானைப்பற்றியே தங்கள் ஸ்வரூபம் பெற்றிருக்கிறபடியையும்,
அந்த ஸாமாந்ய தெய்வங்களும் காலிடமாட்டாத இந்நிலவுலகத்திலே எம் பெருமான் ஆச்ரியதர்கட்காக வந்து திருவவதரிக்கிறபடியையும் அருளிச் செய்கிறார்.
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-
பதவுரை
| எழு |
– |
பதினான்கு லோகங்களையும் நிர்வகித்தற்குரிய எழுச்சி யுடைய |
| திசை முகன் |
– |
நான்முகக் கடவுள் |
| திரிபுரம் எரித்தவன் |
– |
முப்புரங்களை எரித்தவனாகிய ருத்திரன் |
| வலத்தனன் |
– |
வலதுபக்கத்திலிருப்பான்; |
| பின்னும் |
– |
மேலும் |
| அவன் புலப்பட |
– |
அவன் கண்ணுக்கு இலக்காக |
| தானே |
– |
தானே |
| படைத்த |
– |
ஸ்ருஷ்டி செய்த |
| நல் உலகமும் தானும் |
– |
நல்ல லோகங்களும் தானுமாக |
| துந்தித் தலத்து இடம்பெற |
– |
திருநாபியில் இடம் பெற்றிருக்க, |
| அகத்தனன் |
– |
அவதரித்து உள்ளேயிருப்பன்; |
| சொல புகில் |
– |
இப்படி சொல்லப் பார்த்தோமாகில் |
| இவை பின்னும் |
– |
இந்தக் குணங்கள் பிள்ளையும் |
| வயிற்றுள |
– |
தொலையாமல் உள்ளே யிருக்கும் |
| இவை அவன் துயக்கு |
– |
இவைகளே அவன் மயங்கப் பண்ணும்படி |
முப்புரமெரித்த கடவுளாகிய ருத்ரன் எம்பெருமானுடைய வலவருகை ஆச்ரயித்திருப்பன்; நான்முகக் கடவுளும் அவன் படைத்த வுலகமும் திருநாபிக்கமலத்திலே நெருக்கமறப் பொருந்தியிருப்பன;
இப்படியாலே பரதத்துவமான ஸ்ரீமந் நாராயணன் “காணவாராய்” என்று விரும்பி வேண்டுமவர்களுடைய கண்ணுக்கு இலக்காவதற்காகத் தானே (கருமத்தாலன்றியே தன் இச்சையாலே) உலகத்தினிடை அவதரித்து நிற்கும்.
ஆக விப்படி எம்பெருமானுக்கு ஏற்பட்டிருக்கின்ற குணங்களைச் சொல்லப் பார்த்தோமாகில், சொல்லித் தீர்ந்த குணங்கள் சிலவேயாம்,
சொல்லப்படாமல் வயிற்றினுள்ளேயிருக்கும் குணங்கள் அகாதமாய்த் தொலையாதவையாயிருக்கும்.
இப்படிகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமற்போவதேன்? என்னில்; விமுகராயிருக்குமவர்களுக்கு ஸம்சய விபர்யயங்களை அவன்தானே பண்ணிவைக்கிறானத்தனை என்றாராயிற்று.
வலத்தனன் திரிபுரமெரித்தவன் என்பதால், ருத்ரன் எம்பெருமான் திருமேனியின் ஏகதேசங்களைப் பற்றி உளனாகிறானென்பதோடு எம்பெருமானது ஸௌசீல்ய குணமும் அநுபவிக்கப்படுகிறது.
தாமஸ தெய்வமான ருத்ரனுக்கும் தனது திருமேனியின் வலப்பக்கத்திலே இடங்கொடுத்து ஆதரிக்குமவனன்றோ எம்பெருமான்.
இப்பாட்டில் ஈட்டில் = “பச்யைகாதச மே ருத்ராந் தக்ஷிணம் பார்ச்வமாச்ரிதாந்” என்ற மோஷதர்ம வசநம் உதாஹரிக்கப்பட்டுள்ளது. “தபஸா தோஷிதஸ் தேந விஷணுநா ப்ரபவிஷ்ணுநா ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ: நிவாஸ: பரிகல்பிதா:” என்றொரு வசனமும் இருபத்துநாலாயிரப்படியிற் காண்பதுண்டு. (பண்ணின தவத்தினால் திருவுள்ளமுவந்த திருமால் அவனுக்குத் தனது வலவருகிலே வாஸஸ்தானம் அமைத்துக் கொடுத்தருளினன் என்பது இதன் பொருள்.)
“ஏறாளுமிறையோனும் திசைமுகனும் திருமகளும், கூறாளுந்தனி யுடம்பன்” என்றும்
“அக்கும்புலியினதளுமுடையாரவரொருவர், பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றும்
ஆழ்வார்கள் அடிக்கடி அருளிச் செய்கிறார்களே;
சிவன் முதலானார் எப்போதும் எம்பெருமானுடைய திருமேனியைப் பற்றியிருக்கிறார்களோ? என்றொரு சங்கை பிறக்கப்படும்;
இந்தச் சங்கையும் இதற்குப் பரிஹாரமும் பூருவங்களில் வியாக்கியானங்களிலேயே உள்ளன எங்ஙனே யென்னில்;
“ஸர்வகர்லமும் இவர்கள் எம்பெருமானுடைய திருமேனியிலேயிருப்பர்களோ வென்னில்; ஆபத்துக்களிலே திருமேனியிலே இடங்கொடுத்தருளும்;
அது மஹா குணமாகையாலே ஆழ்வார்கள் எப்போதுமொக்க அருளிச் செய்துகொண்டு போருவார்கள்.
ஸாமந்தர்க்குப் புறம்பே நாடுகள் கனக்கவுண்டாகிலும் மாளிகைக்குள்ளே செம்பாலே நாழியரிசியைத் தங்களுக்கு வரிசையாக நினைத்திருப்பர்களிறே;
அப்படியே இவர்களும் திருமேனியில் பண்ணிவைக்கும் ப்ராப்திவிடார்களிறே. ஒரோகலஹங்களிலே அடையவளைந்தானுக்குள்ளே குடிவாங்கியிருந்து கல புஹந் தெளிந்தவாறே புறம்பே புறப்பட்டாலும்
‘இவ்விடம் இன்னார் பற்று, இவ்விடம் இன்னார் பற்று’ என்று பின்னும் ப்ராப்தி சொல்லி வைக்குமாபோலே.”என்றருளிச் செய்துள்ள ஸ்ரீஸூக்திகள் காணத்தக்கன.
முற்காலத்தில் தாரகாசுரனுடைய புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷண் கமலாக்ஷன் என்னும் மூவரும் மிக்க தவஞ்செய்து பிரமனிடம் பெருவரம் பெற்று, வானத்துப் பறந்து செல்லும் தன்மைவாய்ந்த மூன்று பட்டணங்களையடைந்து மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்தவிடங்களிற் பறந்து சென்று பலவிடங்களின் மேலும் இருந்து அவ்விடங்களைப் பாழாக்கி வருகையில்
அத்துன்பத்தைப்பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் சிவபெருமான் பூமியைத் தேராகவும் சந்திரஸூலியர்களைத் தேர்ச்சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும் பிரமனைச் சாரதியாகவும் மஹாமேருவை வில்லாகவும் ஆதிசேஷனை வில்நாணியாகவும், விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைத்து அக்நியை முனையாகவுடைய அன்பாகவும் அமைத்துக் கொண்டு யுத்தஸந்நத்தனாய்ச் சென்று போர் தொடங்கும்போது சிரித்து அச்சிரிப்பில் நின்று உண்டென நெருப்பினால் அவ்வசுரர்களை அந்த நகரங்களுடனே எரித்திட்டான்- என்பது திரிபுரமெரித்த வரலாறு.
திரிபுரம் = திரிந்து கொண்டிருந்த பட்டணங்கள் எனப் பொருள்படுதலால் வினைத்தொகை.
இனி, த்ரிபுரம் என்னும் வடசொல் திரிபுரமெனத் திரிந்ததாகவும் கொள்ளலாம்; மூன்று பட்டணங்கள் என்பது பொருள்.
பின்னும் தன்னுலகத்தனன் புலப்பட = இப்படி அவர்களுக்குத் தன் திருமேனியிலே இடங்கொடுத்ததுக்கு மேலே, *காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து அலமந்து அழைக்குமவர்களுக்கு ஸேவைஸாதிக்கும் பொருட்டு இந்த ஸம்ஸார நிலத்திலே வந்து அவதரித்தானென்கிறது.
இவை பின்னும் வயிற்றுள் என்பதற்கு- அவன் இப்படி அவதரித்துப் பண்ணும் ரக்ஷணங்களில் ஏதோ சில பாகம் சொல்லில் சொல்லக்கூடுமேயன்றி எல்லாஞ்சொல்லித் தலைகட்டப்போகாது;
சொல்லப்புகில் உள்ளேயுள்ளே யாமித்தனை, வெளிவந்து முடிவுபெறமாட்டா; என்கிற பொருள் தவிர மற்றொரு பொருளும் கூறுவர்:-
இந்த ஜகத்துக்கு ஓர் ஆபத்து வந்தால் வயிற்றினுள்ளே வைத்து நோக்கும்படியை சொல்லிற்றாகவுமாம்
“நளிர்மதிச்சடையனும் நான்முகக்கடவுளும், தளிரொளியிமையவர்தலைவனும் முதலா, யாவகை யுலகமும் யாவருமகப்பட, நீல்நீர் தீ கால் சுடரிருவிசும்பும், மலர்சுடர்பிறவும் சிறிதுடன் மயங்க, ஒரு பொருட் புறப்பாடின்றி முழுவது மகப்படக் கரந்து, ஓராலிலைச் சேர்ந்த எம்பெருமான மாயனையல்லது, ஒருமா தெய்வம் மற்றுடையமோ யாமே” என்ற திருவாசிரியப் பாசுரங்காண்க.
——————
***- எம்பெருமான் தன்னிடத்து அமர்ந்த காதல் அமையப்பெறாதவர்கள் திறத்தில் பண்ணும் மாயமயக்குக்களை முன்னடிகளில் அருளிச் செய்து, அது தான் எப்படியே யானாலும், அவன் காட்டிய வழியே காணவிருக்கின்ற நாம் மனமொழி மெய்களாலே நம் விடாய்கெட உலகளந்த திருவடிகளை அநுபவிப்போமென்று தாம்கொண்ட பாரிப்பைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-
பதவுரை
| துயக்கு அறு மதியில் |
– |
கலக்க மற்ற நெஞ்சில் பிறந்த |
| நல் ஞானத்துள் |
– |
நல்ல ஞானத்தையுடையரான |
| அமரரை |
– |
தேவர்களையும் |
| துயர்க்கும் |
– |
கலங்கப் பண்ணுகிற |
| மயக்கு உடை |
– |
மயக்கும் வல்லமையை யுடைய |
| வானிலும் மாயைகள் |
– |
அவதார ஆச்சரியங்கள் எல்லையற்ற ஆகாசத்திற் காட்டிலும் |
| பெரியன வல்லன் |
– |
பெரியனவாகச் செய்ய வல்லவனாய், |
| புயல் |
– |
நீலமேகம் போலே |
| கரு நிறந்தனன் |
– |
கருநிறத்தை யுடையனான எம்பெருமானுடைய |
| பெரு நிலம் கடந்த |
– |
பெரிய பூமிப் பரப்பை எளிதாக அளந்த |
| நல் |
– |
விலக்ஷணமான |
| அடிபோது |
– |
திருவடித் தாமரைகளை |
| அமர்ந்து |
– |
வேறு பிரயோஜனங்களில் பற்றற்று அமர்ந்து |
| அயர்ப்பு |
– |
மறப்பில்லாதவனாய் |
| அவற்றுவன் |
– |
முறை மாறி அவன் குணங்களை வாயாலே சொல்லுவேன்; |
| தழுவுள்ள |
– |
ஆலிங்கனம் பண்ணுவேன்; |
| வணங்குவன் |
– |
தலையாலே வணங்குவேன். |
துயக்காவது ஸம்சய விபர்யயங்கள்.
‘அதுவோ இதுவோ! அப்படியோ இப்படியோ! என்று ஐயங்கொள்ளுதலாகிற ஸம்சயமும்,
ஒன்றை வேறொன்றாகவே துணிந்துவிடுதலாகிற விபர்யயமும் இல்லாத மதியையுடையராய்
உள்ளது உள்ளபடியே க்ரஹிக்கவல்லவர்களான தேவர்களையும் கலங்கப் பண்ணும் ப்ராமகத்வ (ப்ரமஜநகத்வ) சக்தியை யுடைய ஆச்சரியமான தன்மைகளுக்கு எல்லையில்லாதவன் என்பன முன்னடிகள்.
இங்கு அமரர் என்றது இந்திரன் முதலிய தேவர்களை என்றும், நிதய் ஸூரிகளையென்றும் அருளிச்செய்வர்.
இந்திரராதி தேவர்களுக்கு ரஜோகுண தமோ குணங்கள் மிக்கிருக்கச் செய்தேயும், ஸத்வகுணம் தலையெடுத்தாலும் அதுவும் அப்படியே கனத்திருக்கும். அப்படி ஸத்துவம் தலையெடுக்குங் காலத்து நம்முடைய காரியம் நம்மாற் செய்து நிறைவேற்றுவித்துக்கொள்ள முடியாது; எம்பெருமானே நம் காரியத்துக்கு நிர்வாஹன்’ என்றிருந்து அவன் பக்கலிலே யாசித்துக் காரியத்தையும் நிறைவேற்றுவித்துக்கொண்டு அடுத்த க்ஷணத்திலே எதிரிடுவர்கள். இந்திரனுடைய கதையே இதற்கு உதாஹரணமாகும்.
இங்கே நம்பிள்ளையீடு:-
“தங்களிருப்பிடமுமிழந்து ஸ்த்ரீகளும் பிடியுண்டு எளிமைப்பட்டவளவிலே அத்தை பரிஹரித்துத் தரவேணுமென்று இரந்து பின்னை இவனும்போய் நரதவதம்பண்ணிச் சிறைகிடந்த ஸ்திரீகளையும் மீட்டுக்கொடுத்துப் போராநிற்கச்செய்தே, புழக்கடைக்கே நின்றதொரு பூண்டைப் பிடுங்கிக் கொண்டு போர, வஜ்ரத்தைக்கொண்டு தொடர்ந்தானிறே” என்பதாம்.
இனி, அமரர் என்பதற்கு நித்யஸூரிகளென்று பொருள்கொள்ளும் பக்ஷத்தில் பெரிய திருவடியின் இதிஹாஸம் உணரத்தக்கது. இங்கே நம்பிள்ளையீடு:-
“அன்றிக்கே, நன்ஞானத்துளமரர் என்கிறது நித்யஸூரிகளையாய் ஜ்ஞாதிகனான பெரிய திருவடியும்’ தேவரீரையும் நாயச்சிமாரையும் வஹித்தேன் நானன்றோ’ என்றாற்போல சிவியார் சொல்லும் வார்த்தையைச் சொன்னானிறே” என்பதாம்.
இப்படி இந்திராதி தேவர்களையும் நித்யஸூரிகளையும் மயக்கவல்ல மாயைகள் எம்பெருமானிடத்தில் அளவிட முடியாதவையிருக்கின்றன என்பது கிடக்கட்டும்; அவனநுக்ரஹத்தாலே காட்டின வடிவழகை நாமநுபவிப்போமென்கிறார் மேலடிகளில்.
நீர்கொண்டெழுந்த காளமேகம் போன்ற திருமேனியையுடையவனும் பரம்பின நிலத்தை அளக்கிறவிடத்து
வஸிஷ்ட சண்டான விபாகமின்றியே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்தவனுமான எம்பெருமானுடைய,
“நீயொரு நாள் படிக்களவாக நிமிர்ந்த நின்பாதபங்கயமே தலைக்கு அணியாய்” என்று ஆசைப்பட வேண்டும்படி மிகவழகிய திருவடித் தாமரைகளை மனமொழி மெய்கள் மூன்றினாலும் அநுபவிக்கப்பெறுவேனாகவேறுமென்று மநோரதிக்கின்றார்.
ஈற்றடியிலுள்ள வினைமுற்றுகளுக்குப் பிரார்த்தனைப் பொருள் கொள்ளாமல் இயல்வுப் பொருள் கொண்டு ‘அலற்றுவதையும் தழுவுவதையும் வணங்குவதையுமே ஸ்வபாவமாகவுடையேன்’ என்பதாகவும் உரைப்பர். (இது ஆறாயிரப்படி நிர்வாஹம்)
——————-
***- இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது.
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-
பதவுரை
| அமரர் |
– |
தேவர்கள் |
| தொழுது எழ |
– |
ஸேவித்து விருத்தியை யடைய |
| அமரர் |
– |
பொருந்தின |
| பொழில் வளம் |
– |
சோலை வளமுள்ள |
| குருகூர் |
– |
திருக் குருகூரில் அவதரித்த |
| சடகோபன் |
– |
ஆழ்வாருடைய |
| குற்றேவல்கள் |
– |
(வாக்கினாலாகிய) கைங்கரியமான |
| அமரர் சுவை |
– |
சுவையமைந்த |
| ஆயிரத்து அவற்றினுள் |
– |
ஆயிரம் பாடலுக்குள் |
| அலைகடல் |
– |
அலையெறிகின்ற திருப்பாற்கடலை |
| கடைந்தவன் தன்னை |
– |
கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து |
| இவை பத்தும் |
– |
இந்தப் பத்துப் பாசுரமும் |
| வல்லார் |
– |
கற்க வல்லவர்கள் |
| அமரரோடு |
– |
நித்யஸூரிகளோடு |
| உயர்வில் |
– |
பரமபதத்தில் |
| சென்று |
– |
சேர்ந்து |
| தம்பிறவி |
– |
தம் பிறப்பாகிற |
| அம் சிறை |
– |
உறுதியான பந்தத்தில் நின்றும் |
| அறுவர் |
– |
நீங்கப் பெறுவர்கள். |
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன்தன்னை = தேவர்கள் வணங்கி வேண்டினவளவிலே அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி அலைகடல் கடந்தவன் என்றும் பொருள்கொள்ளலாம்.
அமரர்கள் தொழுதெழும்படியாக அலைகடல் கடைந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
முதற்பொருளில் (தொழுதெழ என்பது) இறந்தது தழுவிய வினையெச்சம்; இரண்டாம் பொருளில் எதிர்காலந் தழுவி வினையெச்சம்.
இரண்டாம் பொருளையே ஆசாரியர்கள் இனிதாகக் கொள்ளுபவர்கள்.
கடல்முகமாகக் கவிழ்ந்து கொண்டு ‘உப்புச்சாறு எப்போது கிளரப் போகிறதோ!’ என்று தங்களுணவையே நோக்கிக் கொண்டிருந்த ப்ரயோஜநாந்தரபரமான தேவஸமூஹமுங்கூட, தோளும் தோள்மாலையுமாய் ஒரு கடல் ஒரு கடலை நின்று கடையுமாபோலே கடைந்த அழகுக்குத் தோற்றுப் பரவசமாய் வணங்கும்படியாக என்றவாறு.
இதனால் விமுகரையும் ஈடுபடுத்தவல்ல அழகுடைமை சொல்லிற்றாகிறது.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயமாக, சோலை வளம் பொருந்திய திருக்குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார் வாக்கினாலடிமை செய்தபடியான, ரஸமே வடிவெடுத்த திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப்பத்துப் பாசுரங்களை ஓதவல்லார் நித்யஸூரிகளொடொத்த உயர்த்தியையுடையராய்த் தங்களுடைய பிறப்பாகிற விலங்கு விட்டகலப் பெறுவர்கள் என்றதாயிற்று.
——————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
Leave a Reply