ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -கன்னி பூரட்டாதி திரு அவதாரம் —

ஸ்ரீ கோயில் கந்தாடை  அண்ணன் ஸ்வாமிகள் தனியன்

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்ய மஹம் பஜே

ஸகல வேதாந்த ஸார அர்த்த பூர்ணாஸயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிரஜாமாத்ரு யோகிந்த்ர பாதாஸ்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ஸ்ரயே

வாழி திருநாமம்

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே

திருச் சேலை இடை வாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க் கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மான பரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப் பவள வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

———-

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன்

சகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ர உத்பவா நாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பதாஸ்ரயம்
வரத நாராயண மத் குரும் ஸம்ஸ்ரயே

1389-புரட்டாசி பூரட்டாதி -திரு அவதாரம்
திருத் தகப்பனார் ஸ்ரீ தேவராஜ தோழப்பர்
இவருக்கு 7 சகோதரர்கள்
இயல் பெயர் ஸ்ரீ வரத நாராயண குரு
இவருடைய பால்யத்திலே திருத் தகப்பனார் ஸ்ரீ பரமபதம் ஆச்சார்யர் திருவடி அடைய
ஸ்ரீ கோயில் மரியாதை கிடைக்காமல் போனது
ஸ்ரீ ராமானுஜர் ஸ்வப்னத்தில் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கத் தெரிவித்து அருளினார்
1371-ஸ்ரீ நம் பெருமாள் ஸ்ரீ கோயிலுக்குத் திரும்பினாலும் 1415 வரை ஸ்ரீ கோயில் மரியாதைகள்
இவர் வம்சத்துக்கு கிடைக்க வில்லை
ஸ்ரீ மா முனிகளே பின்பு ஏற்பாடு செய்து அருளினார்
ஸ்ரீ அழகிய ஸிம்ஹர் திரு ஆராதனப் பெருமாளையும் தந்து அருளினார்
கீழ் உத்தர வீதி 16 கால் மண்டபத்தையும் இவருக்கு மடமாகக் கொடுத்து அருளினார்

ஸ்ரீ மா முனிகளின் நியமனப்படி இவருடைய சிற்றண்ணர் குமாரர் அப்பாச்சியார் அண்ணா –
தமையனார் போர் ஏற்று நாயனாரையும் ஸ்ரீ வான மா மலை ராமானுஜ ஜீயர் இடம் ஆஸ்ரயிக்கச் செய்தார்
ஸ்ரீ அப்பாச்சியார் அண்ணா – ஸ்ரீ காஞ்சி புர கோயில் நிர்வாகம் செய்து வந்தார்

இவரே ஸ்ரீ உத்தம நம்பியையும்
ஸ்ரீ அப்பிள்ளார்
ஸ்ரீ அப்பிள்ளை
ஸ்ரீ எறும்பி அப்பா -ஆகியோரையும் ஸ்ரீ மா முனிகளை ஆஸ்ரயிக்கச் செய்தார்

இவர் ஸ்ரீ மா முனிகள் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு
ஸ்ரீ வர வர முனி அஷ்டகம்
ஸ்ரீ ராமாநுஜார்யா திவ்யாஜ்ஞா –நூல்களையும்
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை தனியனையும் அருளிச் செய்துள்ளார்
இவருக்கு ஸ்ரீ பகவத் சம்பந்தாச்சார்யார் -என்னும் விருது ஸ்ரீ மா முனிகள் தந்து அருளினார்
ஸ்ரீ நம் பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் -என்று அருளப்பாடிட்டார் –
ஸ்ரீ காஞ்சி பேர் அருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் -என்று அருளப்பாடிட்டார்
ஸ்ரீ மா முனிகள் சரம தசையில் இவர் கையாலேயே தளிகை சமைக்கச் செய்து விரும்பி அமுது செய்து மகிழ்ந்தாராம்

இவர் வம்சத்தின் பெருமையால் ஸ்ரீ மா முனிகள் இவர் வம்சத்தாரை கீழ் உள்ள 7 கோத்ர த்துக்குள்ளேயே
சம்பந்தம் செய்து கொள்ள அறிவுறுத்தி அருளினாராம்
1-ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -வாதூல கோத்ரம்
2-ஸ்ரீ முடும்பை நம்பி வம்சம் -ஸ்ரீ வத்ச கோத்ரம்
3-ஸ்ரீ முடும்பை அம்மாள் வம்சம் -கௌண்டின்ய கோத்ரம்
4-ஸ்ரீ ஆஸூரிப் பெருமாள் வம்சம் -ஹரிதா கோத்ரம்
5-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் வம்சம் -ஆத்ரேய கோத்ரம்
6-ஸ்ரீ குமாண்டூர் இளைய வல்லி வம்சம் -கௌசிக கோத்ரம்
7-ஸ்ரீ வங்கி புரத்து நம்பி வம்சம் -பரத்வாஜ கோத்ரம்

ஸ்ரீ கோயில் அண்ணனின் அஷ்ட திக் கஜங்கள்

1-ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் –இவர் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருத் தம்பியார்
2-ஸ்ரீ திருக் கோபுரத்து நாயனார் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -ஸ்ரீ அழகிய சிங்கர் திருத்தம்பியார்
3-ஸ்ரீ கந்தாடை நாயன் -இவரும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சம் -இவரது திருக் குமாரர் –1408-மார்கழி உத்திரட்டாதி
4-ஸ்ரீ சுத்த சத்வம் அண்ணன் -இவர் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் -இவரது திரு மருமகன்
5-ஸ்ரீ திருவாழி ஆழ்வார் பிள்ளை -இவரும் ஸ்ரீ இளைய வல்லி வம்சம் –
6-ஸ்ரீ ஜீயர் நாயனார் -ஸ்ரீ கோமடத்தாழ்வான் வம்சம் -ஸ்ரீ மா முனிகள் திருப்பேரானார்
7-ஸ்ரீ ஆண்ட பெருமாள் நாயனார் -ஸ்ரீ குமாண்டூர் ஆச்சான் பிள்ளை திருப்பேரானார்
8-ஸ்ரீ ஐயன் அப்பா –

ஸ்ரீ திருமலை அனந்தாழ்வான் வம்ச ஸ்ரீ குன்னத்து ஐயன் இவர் இடத்திலும்
இவர் குமாரர் பேரர்கள் இடத்திலும் அன்பு பூண்டு பல கைங்கர்யங்களைச் செய்தாராம்

இவர் விபவ வருஷம் -1448- சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷ த்ருதீயை அன்று
ஸ்ரீ ஆச்சார்யர் திருவடிகளை அடைந்தார் –

தேன் அமரு மலர் முளரித் திருத் தாள்கள் வாழியே
திருச் சேலை இடை வாழி திரு நாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனி யுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உப வீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மா முனி சீர் பேசும்
மலர்ப் பவளம் வாய் வாழி மணி முறுவல் வாழியே
ஆனனமுந் திரு நாம மணி நுதலும் வாழியே
அருள் வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

————–

இவர் மாமுனிகளின் பெருமையைக் கூறும் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் 13 பாசுரங்கள் கொண்ட நூலையும் இயற்றினார்.
மேலும் வரவரமுநி அஷ்டகம், ராமானுஜார்ய திவ்யாஞ்ஞா என்னும் நூல்களையும் செய்தருளினார்.

மணவாளமாமுனிகளின் உபதேசரத்ன மாலைக்கு கீழ்க்காணும் தனியனை அருளிச் செய்தார்.
முன்னந் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர்
தன்னின் படியைத் தணவாத சொல் மணவாளமுனி
தன்னன்புடன் செய் உபதேசரத்தின மாலைதன்னை
தன்நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே

இவர் உத்தம நம்பி, எரும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளார் ஆகியோரையும் மாமுனிகளிடம் ஆஸ்ரயிக்கச் செய்தவர்.

இவர்
கந்தாடையப்பன்,
திருகோபுரத்து நாயனார்,
சுத்தசத்வம் அண்ணன்,
திருவாழி ஆழ்வார் பிள்ளை,
கந்தாடை நாயன்,
ஜீயர் நாயனார்,
ஆண்ட பெருமாள் நாயனார்,
ஐயன் அப்பா
ஆகிய ஸ்வாமிகளை தம்முடைய அஷ்டதிக்கஜங்களாக நியமித்தார்.

அண்ணன் என அழைக்கப்பட காரணம்:

அண்ணன் ஸ்வாமி ஒரு நாள் கூட தவற விடாமல், அரங்கரின் விஸ்வரூப தர்சனத்துக்கும்-புறப்பாட்டுக்கும் வந்து விடுவார்.
ஸ்ரீரங்கத்திலுள்ள சிலர் இவரிடம், ஒரு நாள் அரங்கரைச் சேவிக்க முடியா விட்டால் என்னாகும் என்றனர்.
இவர் அப்படித் தவறினால், தம் கண்களை இழந்து விடுவேன் என்றார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அவர்கள் இவருக்குத் தெரியாமல் கோவில் அர்ச்சகர்களிடம் கூறி, ஒரு நாள்
அதிகாலையில் மிகச் சீக்கிரமாகவே விஸ்வரூபம் நடத்திவிட முடிவு செய்தனர்.
அப்படிச் செய்ய முயன்றபோது, அவர்களால் கோவில் கர்ப்பக் கிரகக் கதவுகளைத் திறக்க முடியாமல் ஏதோ அடைத்திருந்தது போலிருந்தது.
அவர்கள் திறக்க முயன்று கொண்டிருந்த போது, வரதநாராயண குருவின் திருமாளிகையில் அவரது தம்பி அவரை,
“அண்ணா,எழுந்திருங்கள், விஸ்வரூபத்துக்கு நேரமாகிவிட்டது” என்று எழுப்பினார்.
அண்ணன் உடனே எழுந்திருந்து அவசரமாக நீராடிவிட்டு, திருமண்காப்பு இட்டுக்கொண்டு பெரிய கோவிலுக்கு விரைந்தார்.
தம்பியும் அவருடன் சென்றார். கோவில் த்வஜஸ்தம்பத்துக்கு அருகில், இருவரும் தண்டனிட்டு நமஸ்ஹாரம் செய்தனர்.
அதன்பின் தம்பியைக் காணவில்லை.

கோவில் கதவுக்குப் பக்கத்தில் சென்றவுடன், அனைவரும் வியக்கும்படி கோவில் கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன.
அங்கிருந்தோர் அனைவரும் வரத நாராயணரின் பக்தி நிஷ்டையைக் கண்டு போற்றி வணங்கினர்.
திருவரங்கர் அர்ச்சக முகேன ஆவேசித்து,தாமே அவர் திருமாளிகைக்குச் சென்று ‘அண்ணா’என்று எழுப்பியதைச் சொல்லி,
இனி மேல் வரதநாராயணரும், அவர் சந்ததிகளும் ‘அண்ணன்’ என்று அழைக்கப்படுவர் என்று அருளினார்.
அன்றிலிருந்து அவர் ‘கோவில் கந்தாடை (முதலியாண்டான் திருக்குமாரரின் பட்டப் பெயர்) அண்ணன்’ என்றழைக்கப்பட்டார்.
அவரின் சந்ததியினருக்கும் இந்தக் ‘கோவில் அண்ணன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று.

நம்பெருமாள் இவருக்கு ஜீயர் அண்ணன் என்று அருளப்படிட்டார். காஞ்சிப் பேரருளாளர் இவருக்கு ஸ்வாமி அண்ணன் என்று அருளப்பாடிட்டார்.

அண்ணன் ஸ்வாமிகளும் அவர் சகோதரர்களும் ஸ்ரீரங்கத்தில் கோவில் மரியாதைகளுடன் புகழ் பெற்ற ஆசார்யர்களாக விளங்கி வருகையில், மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரி யிலிருந்து ஸ்ரீரங்கம் எழுந்தருளினார். அரங்கனின் அநுக்ரஹமும், அவருடைய தேஜஸும் ஸ்வாமி மாமுனிகளுக்கு பல சீடர்களைப் பெற்றுத் தந்தது.

ஒரு நாள் அண்ணன் ஸ்வாமி அவர் திருமாளிகை திண்ணையில் ஓய்வெடுத்து இருக்கையில், மாமுனிகள் மடத்திலிருந்துஒரு ஸ்ரீவைஷ்ணவர் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த அண்ணன் அவரை அழைத்து, நீர் யார்? எங்கிருந்து வருகிறீர்?என்று கேட்டார். அவர் தம் பெயர் சிங்கரையர் என்றும்,அருகில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் பெரியஜீயரிடம் (மாமுனிகள்) சீடராக விரும்பி வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதற்கு அண்ணன் ஸ்வாமி, ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கும் போது,ஏன் மாமுனிகளிடமே சீடராக வேண்டும் என்றார். சிங்கரையர் அது பெருமாளின் திருவுள்ளம் என்றும்,பரம ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டுஎதுவும் சொல்ல முடியாதென்றும் கூறிவிட்டார்.

இதைக் கேட்டு ஆச்சர்யப்பட்ட அண்ணன், அவரை உள்ளே அழைத்து பிரசாதம்,தாம்பூலம் அளித்து அன்றிரவு அவர் திருமாளிகையிலேயே தங்கும்படி சொன்னார். அன்றிரவு மேலும் அவரிடம் விவரம் கேட்க, அவரும் அந்த அரிய வைபவத்தைச் சொன்னார். அவர் தாம் மாமுனிகள் மடத்துக்கும், மற்ற திருமாளிகைகளுக்கும் காய்கறிகள் முதலானவற்றைக் கொடுத்து வருவதாகவும், மாமுனிகள் அவற்றை மடத்தில் சேர்க்கும் முன்,அவரிடம்”இவை எங்கே விழைகின்றன?யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்?யார் அறுவடை செய்கிறார்கள்” என்று பலவாறு கேட்டுத் திருப்தி யடைந்த பின்பே கொடுக்கச் சொன்னார் என்றார். அவை ஸ்ரீவைஷ்ணவர்களின் தோட்டத்தில் விளைந்ததாகவும்,அதன் தொடர்பான வேலைகளைச் செய்பவர்களும் ஸ்ரீவைஷ்ணவர்களே;சிலர் மாமுனிகளின் சீடர்களும் ஆவார்கள் என்று மாமுனிகளிடம் சிங்கரையர் சொன்னாராம்.

மாமுனிகள் அவரிடம் பெரிய பெருமாளைச் சேவித்து ஊர் திரும்புமாறு,அருளியதால் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அர்ச்சகர் தீர்த்தம், சடாரி, பிரசாதம் சாதித்து, அபய ஹஸ்தமும் அளித்தார். மாமுனிகளின் ஆசார்ய சம்பந்தமும் விரைவில் கிட்டும் என்று ஆசீர்வதித்தார். சிங்கரையர் மீண்டும் மாமுனிகள் மடத்துக்குச் சென்று அவரிடம் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றாராம்.

செல்லும் வழியில் மடத்திலிருந்து கொடுத்தனுப்பிய பிரசாதத்தை உட்கொண்டதாகவும், ஆசார்ய பிரசாத மகிமையால் அவரது ஆத்மா சுத்தியடைந்தது என்றார். அன்றிரவு, கனவில் அவர் பெரியபெருமாள் சந்நிதியில் சேவித்துக் கொண்டிருப்பது போலவும், அப்போது பெருமாள், அவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனைக் காட்டி “அழகிய மணவாள ஜீயர் (மாமுனிகள்) ஆதிசேஷனுக்குச் சமம்; நீர் அவர் சிஷ்யனாகக் கடவது” என்று அருளினார் என்று சொல்லி முடித்தார். இதைக் கேட்டுப் பெரிதும் வியந்தார் அண்ணன் ஸ்வாமி. இந்த வைபவம் அண்ணன் மாமுனிகளிடம் ஆஸ்ரயிப்பதற்கான முதல் தூண்டுகோலாக இருந்தது.

சிங்கரையர் வைபவத்தைக் கேட்டு அதையே எண்ணிக் கொண்டு உறங்கிவிட்டார் அண்ணன்.அன்றிரவு அவரும் ஒரு கனவு கண்டார்!அந்தக் கனவில் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மாடியிலிருந்து இறங்கி வந்து இவரைச் சவுக்கால் அடித்தார்!பிறகு இவரையும் கூட்டிக் கொண்டு மாடிக்குச் சென்றார்; அங்கு ஒரு சந்யாசி மிகவும் கோபமாக அமர்ந்திருந்தார். அவரும் அண்ணனைச் சவுக்கால்அடித்தார்;அழைத்துச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் சந்யாசியிடம்”இவன் சிறுபிள்ளை; தான் செய்வதறியாது செய்து விட்டான்” என்றார்.

சந்யாசியும் சாந்தமடைந்து அண்ணனை அழைத்துத் தம் மடிமீது அமரவைத்து “நீயும், உத்தமநம்பியும் தவறு இழைத்து விட்டீர்கள்” என்றார். “மாமுனிகளின் பெருமை அறியாது தவறிழைத்து விட்டேன் அடியேனை மன்னியுங்கள்” என்று வேண்டினார் அண்ணன்.அந்த சந்யாசி”நாம்ஸ்ரீபாஷ்யகாரர் ராமாநுஜர், இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான், நாமே ஆதிசேஷன்; இங்கு மணவாள மாமுனிகளாக அவதரித்திருக்கிறோம்.நீரும் உம்சொந்தங்களும், அவரிடம் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்றார்.

கனவு கலைந்து திடுக்கிட்டு விழித்த அண்ணன் ஸ்வாமியின் கண்களிலும், மனத்திலும் ஆனந்தம் பொங்கியது! ஜகதாசார்யரையும், தம் குலபதி முதலியாண்டானையும் சேவித்த ஆனந்தம்!! உடையவரே தம்மைத் திருத்திப் பணிகொண்டு, மாமுனிகளை ஆசார்யராக காட்டிக் கொடுத்த பேறு பெற்ற ஆனந்தம்!!!

மாமுனிகள் கோவில் அண்ணனை தம் அஷ்ட திக்கஜங்களுள் ஒருவராக நியமித்தார். இடைக்காலத்தில் பெரிய கோவிலில் கந்தாடையார்களுக்கு நின்று போன சில மரியாதைகளை மீண்டும் பெற்றுத் தந்தார் மாமுனிகள். அண்ணனுக்கு பகவத் விஷயத்தில்

(திருவாய்மொழி) இருந்த ஞானத்தினால் அவருக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றினார். கந்தாடை அப்பன், சுத்த சத்வம் அண்ணன் மற்றும் பல ஆசார்யர்களை அண்ணனிடம் ஆஸ்ரயித்து பகவத் விஷ்ய காலட்சேபம் கேட்குமாறு செய்தார். இவ்வாறு பலகாலம் பெரிய பெருமாளுக்கு கைங்கரியங்கள் புரிந்தார்.

மாமுனிகள் இறுதிக்காலத்தில் இவர் திருக்கரங்களினால் செய்த தளிகையை விரும்பி உகந்து அமுதுண்டு மகிழ்ந்தார்.

இவர் விபவ வருடம் கி.பி. 1448 சித்திரை மாதம் கிருஷ்ண பட்ச திருதியை அன்று ஆசார்யன் திருவடி அடைந்தார்.

பேராத நம் பிறப்பை பேர்க்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாளால் அருள் பெற்றோன் வாழியே
ஏராரு நன் மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன் புகழை படைக்க வல்லோன் வாழியே
பகர் வசன பூடணத்தின் படி யுடையோன் வாழியே
ஆராமாஞ்சூழ் கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழும் கந்தாடை யண்ணன் என்றும் வாழியே!!!🙏🙏🙏

புண்ணிய நற் புரட்டாசி பூரட்டாதி
மண்ணில் உதித்த மறையோனே – எண்ணாதியாம்
கன்னி மதிள்சூழ் கோயில் கந்தாடை அண்ணனே
இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் –சித்திரை அனுஷம் –

ஸ்வாமி ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்ஹாசனாதிபதிகளுள் 72 ஆம் ஸிம்ஹாசனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ கோயில் கந்தாடை குமாண்டூர் இளையவில்லியாச்சான் ஸ்வாமி திருவம்சத்தில் அவதரித்து திருமாளிகையின் ஸமாஸ்ரயண குருபரம்பரையின் 23 ஆம் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தொட்டையாசார்யர் ஸ்வாமியின் திருநக்ஷத்ரம்

தனியன்:
ஸ்ரீ கௌசிகாந்வய ஸுதார்ணவ பூர்ண சந்த்ரம்
ஸ்ரீ லக்ஷ்மணார்ய குருவர்ய ஸுதம் வரேண்யம்|
தஸ்மாதவாப்த நிகமாந்த ரஹஸ்ய போதம்
ஸ்ரீமந் மஹா குருமஹம் ஸரணம் ப்ரபத்யே||

வாழி திருநாமம்:
வாழியிராமாநுசாரியன் வண்கமலத் தாளடைந்த வாழி
தொட்டையாரியன் தாள் வாழியவே
வாழியரோ தென்குருகூர் மாறன் திருவாய்மொழிப் பொருளை
இங்கு உலகோற்கு ஈந்தருளும் சீர்

சித்திரையில் அனுஷநாள் சனித்த வள்ளல் வாழியே
சீராரும் இளையவில்லி திருக்குலத்தோன் வாழியே
பக்தியுடன் பூதூரான் பதம் பணிவோன் வாழியே
பதின்மர் கலைப் பொருளனைத்தும் பகருமவன் வாழியே
நித்தியமும் அரங்கர் பதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடனத்தின் நெறியுடையோன் வாழியே
எத்திசையும் அடியவர்கட்கு இதமுரைப்போன் வாழியே
இளையவில்லி தொட்டையாரியன் இணை அடிகள் வாழியே

பொன்னரங்கம் வாழ பூதூரான் தாள் வாழ
தன்னிகரில் ஆரியர் நற்றாள் வாழ – மன்னுலகில்
தொன் நெறி சேர் இளைய வில்லி தொட்டையாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

———–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading