காவேரீ விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்|
ஸ வாஸுதேவோ ரங்கேச: ப்ரத்யக்ஷம் பரமம் பதம்||
விமானம் ப்ரணவாகாரம் வேதச்ருங்கம் மஹாத்புதம்|
ஸ்ரீரங்கசாயி பகவாந் ப்ரணவாத்த ப்ரகாசக: ||
ப்ரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க மிவா பரம்
பரஸ்ய ப்ரஹ்மணோ யத்ர சேஷித்வம் ஸ்புடம் ஈஷ்யதே
———
நரகந்தரம்புவி இம்மூன்று இடத்தும் நனி மருவு
நரகந்தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் நாயகவா
நரகந்தரம்புள் பிடறு ஏறு அரங்கர் நல் ஆய்க்குலத்தி
நரகந்தரங்க முற்றார் அடியார்க்கு நமன் அஞ்சுமே ———-21–
நரகு – நரகம்,
அந்தரம் – சுவர்க்கம்,
புவி – பூமி,
இ மூன்று இடத்தும் – என்கிற இந்த மூன்றுஉலகங்களிலும்,
நனி மருவுநர் – மிகுதியாகப் பொருந்தியுள்ள சனங்களெல்லாம்,
அகம் தரங்கித்து வெம் காலற்கு அஞ்சுவர் – மனம் அலைந்து கொடிய யமனுக்குப் பயப்படுவார்கள்;
நாயக வாநர கந்தரம் புள் பிடர் ஏறு அரங்கர் – சிறந்த குரங்கான அநுமானுடைய கழுத்தின் மேலும்
(பக்ஷி ராஜனான) கருடனுடைய பிடரியின் மேலும் ஏறுகிற திருவரங்கரும்,
நல் ஆய்க்குலத்து இநர் – சிறந்த இடையர் குலத்தில் (வளர்ந்து அதனை விளக்கின) சூரியன் போன்றவரும்,
தரங்கம் அகம் உற்றார் – திருப்பாற் கடலை வசிக்குமிடமாகக் கொண்டு அங்கு வாழ்பவருமான நம்பெருமாளுடைய,
அடியார்க்கு – தொண்டர்கட்கு,
நமன் அஞ்சும் – அந்த யமன் பயப்படுவான்.
மூன்று உலகங்களிலுள்ளாரும் யமனுக்கு அஞ்சுவர்;
அந்த யமன் திருமாலடியார்க்கு அஞ்சுவன் என்று அடியார்களின் பெருமையை விளக்கியவாறாயிற்று,
ஆதலால், அனைவரும் எம்பெருமானுக்கு அடியராய் உய்யக் கடவரென்பது, குறிப்பெச்சம்.
இங்ஙனம் இவர்கள் அஞ்சுதற்கும், அவன் அஞ்சுதற்கும் காரணம் – முறையே மூவுலகத்தாரும் தீராவினையை யுடைமையும்,
திருமாலடியார் வினை தொலைத்திருத்தலு மென்க.
அடியார்க்கு நமன் அஞ்சுதலை,
“திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன்னாமம், மறந்தும்புறந் தொழாமாந்த ரிறைஞ்சியுஞ்,
சாதுவராய்ப் போதுமின்க ளென்றான் நமனுந் தன், தூதுவரைக் கூவிச் செவிக்கு” என்ற அருளிச் செயலினாலும் அறிக.
“ஒருகாலத்தில் பாசத்தைக் கையிலெடுத்துக் கொண்டு பிராணிகளைக் கொண்டுவரும்படி புறப்பட்ட தன் சேவகனை
யமதருமராசனானவன் அந்தரங்கத்தில் அழைத்து
“ஓ படனே! நீ உன்தொழிலை நடத்திவருகையில் ஸ்ரீமதுசூதநனை ஆசிரயித்தவரைத் தொடாதே, விட்டுவிடு;
நான் மற்றவர்களுக்குப் பிரபுவேயல்லது வைஷ்ணவர்களுக்குப் பிரபுவல்லேன் ………
“கமலநயான! வாசுதேவ! விஷ்ணுவே! தரணிதர! அச்சுத! சங்கசக்ரபாணி! நீ அடியேங்களுக்குச் சரணமாகவேண்டும்” என்று
எவர்கள் சொல்லிக்கொண்டே யிருப்பார்களோ, அப்படிப்பட்டமகாபரிசுத்தபுருஷரை ஓ படனே!
நீ கண்ணெடுத்துப் பாராமல் தூரமாய் ஓடிப்போ; விகாரநாசாதிகளில்லாமல் சத்திய ஞாநாநந்த மயனாய்ப் பிரகாசிக்கின்ற
அந்த எம்பெருமான் எவனுடைய இருதயகமலத்தில் வாசஞ்செய்துகொண்டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம்
பிரசரிக்கு மிடங்களிலெல்லாம் நீ செல்லத்தக்கவனல்லை, நானும் செல்லத்தக்கவனல்லேன்;
பதறிச்சென்றால், அவ்வெம்பெருமானுடைய திருவாழியின் தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்;
அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்டதிவ்வியலோகத்துக்கு எழுந்தருளத்தக்கவன்’ என்று கூறினன்’ என்ற வரலாற்றை
ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் பரக்கக்காணலாம்.
ஸ்வர்க்க மத்திய பாதாள மென்று மூன்றாகப்பகுக்கப்படுகிற பதினான்குஉலகங்களிலு முள்ள பிராணிகளெல்லாம்
இயல்பில் கர்மபந்தமுடையவர்க ளாதலால், கர்மிகளைத் தண்டிப்பவனான யமனைக் குறித்து அஞ்சுவ ரென்க.
நரகு – நரகம்; இது, கீழுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
அந்தரம் – வானம்; இது, மேலுலகங்கட்கெல்லாம் உபலக்ஷணம்.
மருவுநர், ந் – பெயரிடைநிலை. அகம் – அகத்து உறுப்பு, அந்த:கரணம்; அகம் – உள்.
காலன் – பிராணிகளின் ஆயுளைக் கணக்கிடுபவன்.
பெருமான் இராமாவதாரத்தில் அநுமானையும், எப்பொழுதும் கருடனையும் வாகனமாகக் கொண்டு அவர்கள் பிடரியில் ஏறியருள்வன்;
அதுபற்றி, அவர்கள் முறையே திருவடியென்றும், பெரிய திருவடியென்றும் பெயர் பெறுவர்.
கந்தரம் – வடசொல்; தலையைத் தரிப்பது: கம் – தலை. பிடர் – கழுத்தின் பின்புறம்.
இநன் – சூரியன்; வடசொல். “உலகங்களாகிய தாமரைகளெல்லாம் மலரும்பொருட்டு, தேவகியாகிய கிழக்குச் சந்தியில்
அச்சுதபாநு (திருமாலாகிய சூரியன்) உதித்தருளினான்” என்று கண்ணனைச் சூரியனாகக் கூறியுள்ளதனால்,
‘ஆய்க்குலத்துஇநர்’ என்றார். அக்குலத்துக்கு நன்மை, தேவாதி தேவனான திருமால் மனிதனாய் எழுந்தருளிக்
குழந்தைப் பருவத்தில் வளர்ந்தருளப் பெற்ற பேறுடைமை.
அகம் – இடம், வீடு. நமன் அஞ்சும் – செய்யுமென்முற்று, ஆண்பாலுக்கு வந்தது.
ஆய்க்குலத்திநர் அகம் தரங்கம் உற்றார் என்று எடுத்து,
இடைச் சாதியாருடைய வீட்டிலும், பாற்கடலிலும் பொருந்தியவ ரென்றும், ஆயர் குலத்தில் வளர்ந்தவரும்
பாற்கடலினிடத்துப் பொருந்திய வருமானவரென்றும் உரைப்பாரு முளர்.
———–
அஞ்சு அக்கரம் தலை கங்கையன் எற்றலும் அஞ்சிறைய
அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே
அஞ்ச கரத்தலை செய்து பித்து ஏக அருள் அரங்கன்
அம் சக்கரத் தலைவன் தாள் அலால் மற்று அரண் இலையே–22–
அஞ்சு அக்கரம் தலை கங்கையன் ஏற்றலும் – பஞ்சாக்ஷர மந்திரத்துக்கு உரியவனும் தலையிற் கங்கா நதியைத்
தரித்தவனு மான சிவபிரான் (தன்பக்கல் வந்து) இரந்தவளவிலே,
அம் சிறைய அஞ்சம் கரத்தலை குண்டிகையான் மண்டை அம் கை விட்டே கரத்தலை செய்து அஞ்ச – அழகிய இறகுகளையுடைய
ஹம்ஸவாகனத்தையும் கையிற்கமண்டலத்தையு முடையனான பிரமனது கபாலமானது (அச்சிவபிரானுடைய)
உள்ளங்கையை நீங்கி மறைதலைச்செய்து விலகவும்,
பித்து ஏக – (அச்சிவபிரான் கொண்டிருந்த) திகைப்பு ஒழியவும்,
அருள் – கருணைசெய்த,
அம் சக்கரம் தலைவன் அரங்கன் – அழகிய சக்கராயுதத்தையுடைய இறைவனான ரங்கநாதனுடைய,
தாள் அலால் – திருவடியே யல்லாமல்,
மற்று அரண் இலை – வேறு ரக்ஷகம் (எவ்வுயிர்க்கும்) இல்லை; (எ – று.)
மும்மூர்த்தியில் ஒருமூர்த்தியான சிவபிரான் பிரமகபாலத்தால் தனக்கு நேர்ந்த சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள
வேறுவகையில்லாமற் கலங்கி எம் பெருமானைச் சரணமடைய, அப்பெருமான் எளிதில் அதனைத் தீர்த்தருளின னென்ற
வரலாற்று முகத்தால், நம்பெருமாளுடைய பரத்வத்தை வெளியிட்டு, அப்படிப்பட்ட சர்வேசுவரனல்லாமல்
வேறுபுகலிடமில்லையென்று ஜீவாத்மாக்களின் அநந்யகதித்வத்தை விளக்கினார்.
பித்தேகவருளரங்கன் –
“சிரந்தடிவா னிவனோ வென் றயன் வெய்ய தீய சொல்லக்,
கரந்தடிவான் தலைகவ்வப் பித்தேறலிற் கண்ணுதலோன்,
இரந்தடிவீழத் துயர்தீர்த்த வேங்கடத்தெந்தை” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
ஐந்து – அஞ்சு; முழுப்போலி.
அக்ஷரம், கங்கா, ஹம்ஸம், பித்தம், சக்கரம், சரணம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
சிறைய – குறிப்புப் பெயரெச்சம்.
கரத்தலை, தலை – ஏழனுருபு; கரம் – வடசொல்.
வைதிகர் கையிலே எப்போதும் ஜலபாத்திரங்கொண்டிருத்தல், பரிசுத்தியின்பொருட்டென்க.
அகம் + கை = அங்கை; “அகமுனர்ச் செவி கை வரின் இடையன கெடும்” என்றார் நன்னூலார்.
விட்டே, ஏ – அசை. அஞ்ச = விலக, காரியப் பொருளைக் காரணச் சொல்லாற் குறித்தார், உபசார வழக்கால்.
மூன்றாமடியில் உள்ள ‘கரத்தலை’ என்பது – கரத்தல் என்ற தொழிற்பெயரின் இரண்டாம் வேற்றுமை விரி.
சக்கரத் தலைவன் – ஆழிப் பிரான்.
————
இலங்கை யிலாதரனைங்கரன் மோடி யெரி சுரத்தோன்
இலங்கை யிலாத மலையான ஈசன் இரிய வெம்போரில்
இலங்கை யிலாதபடி வாணனைச் செற்ற வென்னரங்கன்
இலங்கை யிலாதவன் போகக் கண்டான் என் இதயத்தனே–23–
இலங்கு அயில் ஆதரன் – விளங்குகின்ற வேலாயுதத்தினிடத்து விருப்பமுடையவனான சுப்பிரமணியனும்,
ஐங் கரன் – (நான்கு கைகளோடு துதிக்கையுமாகிய) ஐந்துகைகளையுடையவனான விநாயகனும்,
மோடி – துர்க்கையும்,
எரி – அக்கினியும்,
சுரத்தோன் – ஜ்வர தேவதையும்,
இலம் கயிலாதமலை ஆன ஈசன் – வசிக்குமிடம் கைலாச கிரியாகப்பெற்ற இறைவனான சிவனும்,
இரிய – அஞ்சி நிலைகெட்டு ஓட,
வெம்போரில் – உக்கிரமான யுத்தத்தில்,
அம் கை இலாதபடி வாணனை செற்ற – அழகிய (ஆயிரம்) கைகள் இல்லாமற்போம் வண்ணம் பாணாசுரனை அழித்திட்ட,
என் அரங்கன் – எனது திருவரங்கனும்,
இலங்கையில் ஆதவன் போக கண்டான் – இலங்காபுரியிற் சூரியன் போகும்படி செய்தவனுமான திருமால்,
என் இதயத்தன் – எனது இருதயகமலத்தி லுள்ளான்; (எ – று.)
துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலந சீலனும், அங்ஙனம் நல்லோரைக்காத்தற் பொருட்டுத் தீயோரையழிக்குமிடத்துச்
சர்வசங்காரமூர்த்தியே வந்து தடுத்தாலும் தடுக்கவொண்ணாத பேராற்றலுடையவனு மான பெருமான்
எனது மனத்தில் எழுந்தருளியிருக்கும்படி அவனை நான் எப்பொழுதும் மனத்திலே நிலை நிறுத்தித் தியானித்து வருகின்றே னென்பதாம்.
“மோடியோட வங்கி வெப்பு மங்கியோடவைங்கரன்,
முடுகியோடமுருக னோடமுக்கணீசன் மக்களைத்,
தேடியோட வாணனாயிரம்புயங்கள் குருதிநீர், சிந்தி
யோட நேமிதொட்ட திருவரங்கராசரே” என்றார் திருவரங்கக்கலம் பகத்திலும்.
“இருணன்காசற வெழுகதிரவனிற்கவென்றும், அருணன் கண்களுங் கண்டிலா விலங்கை” என்றபடி
இராவணனிடத்து அச்சத்தால் சூரியன் சென்றறியாத இலங்கையிலே அவ்விராவணனைக் கொன்றதனால்
சூரியன் தனது சஞ்சாரரீதியின்படி அங்குத் தடையின்றி இனிதுசெல்லும்படி செய்தனன் இராமபிரானென்பது,
‘இலங்கையிலாதவன் போகக்கண்டான்’ என்பதன் கருத்து.
இலங்கையரசனாய்த் தேவர்கட்கு இடையூறு செய்து வந்த இராவணனைச் சங்கரித்துத் தேவர்கட்கு நன்மைசெய்தவனென்ற
பொருளை ‘இலங்கையி லாதவன் போகக்கண்டான்’ என வேறுவகையாற்சொன்னது, பிறிதினவிற்சியணி.
காணுதல் – செய்தலென்னும் பொருளில் வருதலை, ‘திருநகரங்கண்ட படலம்’ என்றவிடத்திலுங் காண்க.
முருகன் வேற்படையில் விருப்பமுடையனாதல், ‘வேலன்’ என்ற அவன் பெயரினாலும் விளங்கும். இவன், சிவபிரானது இளையகுமாரன்.
விநாயகன் யானைமுகமுடையனாதலால், ஐங்கரனாவன்; இவன், சிவபிரானது மூத்தகுமாரன்.
துர்க்கை – பார்வதியின் அம்சமானவள்.
அயில் என்பது – ஐயில் எனவும் கைலாஸம் என்ற வடசொல்லின் திரிபான கயிலாதம் என்பது கையிலாதம் எனவும்
யமகவமைப்பின் பொருட்டு முதற்போலியால் அகரத்துக்கு ஐகாரம் பெற்றன;
“அ ஐ முத லிடையொக்கும் சஞயமுன்” என்றார் நன்னூலார்.
ஜ்வரம், பாணன், ஆதபன், ஹ்ருதயம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
இலம் – இல்லம் என்றதன் தொகுத்தல்; அம் – சாரியை. ஈசன் – ஐசுவரியமுடையவன்.
யமகநயத்தின்பொருட்டு ‘போரில்’ என்ற ஏழாம்வேற்றுமை விரி, போர் இல் என உருபுபிரிக்கப்பட்டது;
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருந்தாலும், பொருள்நோக்குமிடத்துச் சேர்த்துப் படித்துக் கொள்க.
ஆயிரங்கைகளிற் பெரும்பாலன ஒழிந்ததனால், ‘கையிலாதபடி’ எனப்பட்டது.
காலில் விழுந்தபின் கண்ணபிரானால் துணியாது விடப்பட்ட நான்கு கைகளும் பொலிவிழந்தன வென்பதும் தொனிக்க,
‘அங்கையிலாதபடி’ என்றன ரென்னலாம். செற்ற, செறு – பகுதி.
ஆதவன் – ஆதபன் என்ற வடசொல்லின் விகாரம்; நன்றாகத் தபிப்பவன் என்று பொருள்.
—————
அத்தனை வேதனை ஈன்ற அரங்கனை ஐம்படை சேர்
அத்தனை வேதனை வாய் வைத்த மாயனை ஆர் அணங்கு ஓர்
அத்தனை வேதனை தீர்த்தானைச் சேர்க்கிலள் ஆயிரம் சால்
அத்தனை வேதனை யப்புவள் சாந்து என்று அனல் அரைத்தே —-24–
அத்தனை – எப்பொருட்கும் இறைவனும்,
வேதனை ஈன்ற அரங்கனை – பிரமனைப் பெற்ற திருவரங்கனும்,
ஐம்படை சேர் அத்தனை – பஞ்சாயுதங்கள் பொருந்திய திருக் கைகளை யுடையவனும்,
வேதனை வாய் வைத்த மாயனை – (கிருஷ்ணாவதாரத்தில்) வேய்ங்குழலைத் திருவாயில் வைத்து ஊதிய மாயவனும்,
ஆர் அணங்கு ஓர் அத்தனை வேதனை தீர்த்தானை – அருமையான (பார்வதியென்னுஞ் சிறந்த) தெய்வ மகளைத்
தனது உடம்பில் ஒருபாதியிலுடையவனான சிவபிரானைத் துயர் தீர்த்தருளியவனும் ஆன அழகிய மணவாளனை,
சேர்க்கிலள் – (என்னுடன்; சேரச் செய்யாள்;
அனை – (என்னுடைய) தாய், (பின்னை என் செய்வளென்றால்,-)
சாந்து என்று அனல் அரைத்து – சந்தனக்குழம்பென்று நெருப்பை யரைத்து,
ஆயிரம் சால் அத்தனை வேது அப்புவள் – ஆயிரஞ்சாலவ்வளவு வெப்பத்தை (என்னுடம்பிற்பூசி) நிரப்புவள். (எ – று)
கீழ் 23 – பாசுரங்களில் எம்பெருமானுடைய பலவகைப் பிரபாவங்களைக் கூறி அவனது உத்தம புருஷத் தன்மையைக்
கருதியதனாலே, அப்பொழுதே அவனைக் கிட்ட வேண்டும்படியான ஆசை யுண்டாய்,
அங்ஙனம் அவனைக் கிட்டப் பெறாமையாலே, ஐயங்கார் ஆற்றாமை மீதூர்ந்து தளர்ந்தார்;
அத்தளர்ச்சியாலே தாமான தன்மை யழிந்து ஆண் பெண்ணாம்படியான நிலைமை தோன்றி ஒருபிராட்டி நிலையை யடைந்தார்;
ஆண் பெண்ணாதல் கூடுமோ வெனில், –
“கண்ணிற் காண்பரேல் ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினாய்,”
“வாராக வாமனனே யரங்கா வட்ட நேமி வலவா ராகவா உன் வடிவு கண்டால்
மன்மதனும் மடவாராக ஆதரஞ்செய்வன்” என்ப வாதலாலே, இது கூடும்:
தண்டகாரணியவாசிகளான முனிவர் இராமபிரானது சௌந்தரியாதிசயத்தில் ஈடுபட்டுத் தாம் பெண்மையைப் பெற விரும்பி
மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடின ரென்ற ஐதிகியமும் உணர்க.
“கண்ணனுக்கே, யாமது காமம் அறம் பொருள் வீடிதற் கென்றுரைத்தான்,
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே” என்பதன் பொருளும் அறியற்பாலது.
(“பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேதுறு முலையினாள்,”
“வாண் மதர் மழைக்கணோக்கி, ஆண் விருப்புற்று நின்றார் அவ்வளைத்தோளினாரே” எனப் பெண் ஆணாகும் இடமும் உண்டு.)
அங்ஙனம் ஆண் பெண்ணாகிலும் சாதாரணப் பெண்மையையே யன்றி எம்பெருமானுக்கு உரியவளாகும்
ஒரு பிராட்டியின் நிலைமையை அடையுமாறு எங்ஙனமெனில், –
பரமாத்மாவினது தலைமையும், ஜீவாத்மாவினது அடிமையும், ஜீவாத்மா பரமாத்மாவுக்கே உரியதாயிருக்கையும்,
புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்கு முன் உலக முழுதும் பெண் தன்மையதாதலும்,
ஜீவாத்மாவினது சுவாதந்திரிய மின்மையும், பாரதந்திரியமும், தாம் எம்பெருமானது சேர்க்கையால்
இன்பத்தையும் பிரிவினால் துன்பத்தையும் அடைதலும், அவனையே தாம் கரணங்களெல்லாவற்றாலும் அனுபவித்து ஆனந்தித்தலும்
முதலிய காரணங்களால், தம்மைப் பிராட்டிமாரோடொக்கச் சொல்லத் தட்டில்லை.
தோழி நிலைமையும் தாயார் நிலைமையும் முதலியன ஆகிறபடி எங்ஙனே யென்னில், –
தாம் விரும்பிய பொருளின் வரம்பின்மையால் அங்ஙன மாகுமென்க.
சிருங்கார ரசப்பிரதானமான அகப்பொருட்கிளவித்துறைகளைத் தோத்திரப் பிரபந்தரூபமான ஞானநூலாகிய
இதிற் கூறுதற்குக் காரணம்,
கடுத்தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தின்பிப்பார்போலச், சிற்றின்பங்கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுதல் என்பர்.
ஓர் உத்தம புருஷன் பரிவாரத்துடன் வேட்டையாடுதற்குப் புறப்பட்டு வனத்துக்குச் சென்றவனாய்,
ஓர் உத்தம கன்னிகையும் தோழியருடன் பூக்கொய்து விளையாடுதற்கென்று பூஞ்சோலையிற் சேர்ந்தவளவிலே,
ஒவ்வொரு வியாஜத்தால் தோழியர் பிரிய அக் கன்னிகை அங்குத் தனித்து நின்ற சமயத்திலே,
ஒவ்வொரு வியாஜத்தாற் பரிவாரங்கள் பிரியத் தனிப்பட்டவனாய் அப் புருஷன் அங்கு வந்து சேர,
இருவரும் ஊழ்வினை வசத்தால் இங்ஙனம் தற்செயலாய் ஓரிடத்திலே சந்தித்து ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டு
காந்தருவ விவாகக் கிராமத்தாற் கூடி உடனே பிரிய, பின்பு அப்பிரிவினாலாகிய தாபத்தால் வருந்தி அரிதில் மீண்டு
வந்த அத்தலைமகளைக் கண்ட செவிலித் தாய் அத்தாபத்துக்குக் காரணம் இன்னதென்று அறியாளாய்
அப்பொழுது நிகழ்கிற வேனிற் காலத்தினாலாகிய தென்று கருதி அதனைத் தணித்தற் பொருட்டுச் சந்தனக் குழம்பை
அம் மகளுடம்பின் மேல் மிகுதியாக அப்பிச் சைத்யோபசாரஞ் செய்ய, காலதாப மல்லாததால் அதனைத் தணிக்க மாட்டாத
அச்சந்தனக் குழம்பு கலவிக் காலத்தில் இன்பஞ்செய்யும் பொருள்களுள் ஒன்றாதலால் பிரிவுக் காலத்தில் காம தாபத்தை
மிகுவிப்பதாய் மிக்கவெப்பஞ் செய்ய, அதனால் மிகவருந்திய தலைமகள் தோழியின் முன்னிலையில் அத்தாய் செயலைக்
குறித்து வெறுத்துக்கூறியது இது.
அழகியமணவாளன் ஒருகால் ஐயங்காரது ஞானக்கண்ணுக்கு இலக்கான பொழுது அவனைக்கிட்டி
முத்தியின்ப மனுபவிக்கும்படியான ஆசைகொண்டவரான இவரை அப்பெருமான் அப்பொழுதே சேர்த்துக் கொள்ளாது மறைய,
அதனாலுண்டான துயரத்தால் ஐயங்கார் தபிக்கிற காலத்தில், அவ் வருத்தத்தின் காரணத்தை இன்னதென்று அறியாத
அவரிடம் அன்புள்ள ஞானிகள் அவர்க்குச் செய்த உபசாரங்கள் அவர் வருத்தத்தைத் தணிவிக்க மாட்டாது
அதனை மிகுவிக்கிற நிலையிலே ஐயங்கார் அவர்களது திறத்தைத் தமது நண்பரை நோக்கி உரைத்தவாறாகும்
இது வென்று இச்செய்யுளுக்கு உள்ளுறைபொருளும் காண்க.
வேதன் – வேதம் வல்லவன்; நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை யும் பாராயணஞ்செய்கின்றவன்;
வேதா என்னும் வடசொல்லின் திரிபெனக் கொண்டால், விதிப்பவன் (படைத்தற்கடவுள்) என்று பொருள்படும்.
இரண்டாமடியில் ஹஸ்தம் என்ற வடசொல் அத்தம் என்றும்,
மூன்றாமடியில் அர்த்தம் என்ற வடசொல் அத்தம் என்றும் விகாரப்பட்டன.
வே – மூங்கில்; வேய் என்பதன் விகாரம்: அதனாலாகிய புள்ளாங்குழலுக்குக் கருவியாகு பெயர்;
தன் – சாரியை. பலவிடங்களிற் பரவிமேய்கிற பசுக்கூட்டங்களை ஒருங்குசேர்த்தற்பொருட்டும்,
அவற்றைமகிழ்வித்தற்பொருட்டும் கண்ணன் வேணுகானஞ்செய்தனன்.
மாயன் – மாயையை யுடையவன்; மாயையாவது – செயற்குஅரியன செய்யுந் திறம்;
ஆச்சரியகரமான குணங்களும் செயல்களுமாம்; பிரபஞ்ச காரணமான பிரகிருதியுமாம்.
வேதனை, பிரமகபாலம் கை விடாமையால் நேர்ந்தது.
‘ஆயிரஞ்சால்’ என்றது, மிகுதியை விளக்கக் கூறியது; சால் – பெரியபாத்திரம்.
வேது – வெவ்வியது. அனை – அன்னை; தொகுத்தல். வேதநா, சந்தநம் என்ற வடசொற்கள் – வேதனை, சந்து என்று விகாரப்பட்டன.
ஆர் அணங்கு ஓரத்தன் நை வேதனை எனப் பிரித்து, நிறைந்த அழகுடையளான அம்பிகையைப் பக்கத்திலுடையனான
சிவபிரான் வருந்திய வருத்தமென்று உரைப்பாரு முளர். நை – வினைத்தொகை,
————-
அரைக்கலை வேலை யுடுத்த மண் பல் பகலாண்டு பற்றல்
அரைக்கலை வேலை யுடை வேந்தர் வாழ் வெண்ணலை வரையும்
அரைக்கலை வேலை யவர்க்கே புரிவை என்றாலு நெஞ்சே
அரைக்கலை வேலை யரங்கனுக்கு யாட்பட வாதரியே———25–
நெஞ்சே – (என்) மனமே!
அரைக்கு – அரையினிடத்து,
அலை வேலை உடுத்த – அலைகளை யுடைய கடலை (ஆடையாக)த்தரித்த,
மண் – பூமியை,
பல் பகல் ஆண்டு – பலநாளளவும் அரசாண்டு,
பற்றலரை கலை வேலை உடை – பகைவர்களை நிலை குலைந்தோடச் செய்கிற வேலாயுதத்தை யுடைய,
வேந்தர் – அரசர்களது,
வாழ்வு – (நிலையற்ற) வாழ்க்கையை,
எண்ணல் – ஒரு பொருளாகக் கருதாதே:
ஐவரையும் – பஞ்சேந்திரியங்களையும்,
அரைக் கலை – நீ அடக்க மாட்டாமல்,
அவர்க்கே வேலை புரிவை என்றாலும் – அவ்விந்திரியங்கட்கே வசப்பட்டு (அவை செல்லும் வழியிலேயே நின்று அவற்றிற்குப்)
பணி விடை செய்வாயாயினும்,
அரை கலை வேலை – அரைக் கணப் பொழுதாயினும்,
அரங்கனுக்கு ஆட்பட ஆதரி – ஸ்ரீரங்கநாதனுக்கு அடிமை செய்ய விரும்புவாய்.
இவ் வுலகத்தில் எதிரற்ற தனியரசாட்சி கிடைப்பதாயினும், அது முத்திப் பெருஞ்செல்வத்தை நோக்கப் பெரிதும் அற்பமாதலால்,
அதனை விரும்பாதே; பெரும்பாலும் காலத்தை யெல்லாம் ஐம்பொறிகளின் வழியிலேயே செலுத்துவையாயினும்,
அவப் பொழுதிலும் தவப் பொழுது’ என்றபடி மிகச் சிறிது பொழுதேனும் நம் பெருமாளுக்கு அடிமை செய்ய விரும்புவையாயின்,
பஞ்சேந்திரிய மூலமாக வுண்டாகிற சகல கருமங்களையும் போக்கி எல்லாச் செல்வங்களினும் மேலான முத்திப் பேற்றைத்
தவறாமலடைதல் கூடும் என்று தன் நெஞ்சத்தைத் தானே விளித்து அறிவுறுத்தினார்.
அரை – பாதி; உடம்பின் நடுவுறுப்பான இடைக்கு ஆகுபெயர். அரைக்கு = அரையில்; உருபுமயக்கம்.
அலை வேலை – இரண்டனுருபும் பயனுந்தொக்க தொகை;
அலை யலைக்கிற வேலை யெனக் கொண்டால், வினைத்தொகையாம்.
இனி, அரை – இடையில், கலை – ஆடையாக, வேலை – கடலை, உடுத்த என்று பதவுரை கூறினுமாம்.
கலை – மேகலை யென்னும் இடையணியுமாம்.
பூமியைச் சூழ்ந்துள்ள கடலைப் பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாகவும் அப் பெண் இடையிலணியும்
அணியாகவும் கூறுதலும், அரசனாளப் படுகின்ற பூமியை அக் கணவனாலளப்படும் மனைவியாகக் கூறுதலும் கவிசமயம்.
பகல் – நாளுக்கு இலக்கணை. ஆண்டு உடை என இயையும்.
பற்றலர் – விரும்பாதவர், சேராதவர்: எதிர்மறை வினையாலணையும் பெயர்.
கலை வேல் – வினைத்தொகை. எண்ணல் – எதிர்மறை யொருமை யேவல்.
அடக்குதற்கு அரிய உட்பகைவ ரென்ற கருத்து
‘ஐவர்’ என்ற உயர் திணைத் தொகைக் குறிப்புப் பெயரில் தோன்றுதல் காண்க;
உம் – முற்று அரைக் கலை – முன்னிலை யொருமை யெதிர்மறை முற்றெச்சம்:
கு – சாரியை, அல் – எதிர்மறை யிடை நிலை. ஏ – பிரிநிலை. உம் – இழிவு சிறப்பு.
கலை -கால நுட்பம்: ‘கண்ணிமைப் பொழுது பதினெட்டுக் கூடினால், ஒரு காஷ்டை;
முப்பது காஷ்டைகள் கூடினால், ஒரு கலை’ என்ற கால வளவையை யுணர்க.
—————
ஆதவன் அந்தரம் தோன்றாமல் கல் மழை ஆர்த்து எழு நாள்
ஆ தவனம் தர வெற்பு எடுத்தான் அடியார் பிழை பார்
ஆதவன் அம் தரங்கத்தான் அரங்கன் அடியன் என்று உள்
ஆத அனந்தரம் கண்டீர் வினை வந்து அடைவதுவே——–26–
ஆதவன் – சூரியன்,
அந்தரம் – வானத்திலே,
தோன்றாமல் – கட்புலனாகாதபடி,
கல் மழை – ஆலாங்கட்டியைப் பொழிகின்ற மேகங்கள்,
ஆர்த்து எழு நாள் – ஆரவாரித்துக் கொண்டு எழுந்த காலத்தில்,
ஆ – பசுக்கள்,
தவனம்தர – தவிப்பை யடைய,
வெற்பு எடுத்தான் – (அத் துன்பத்தை நீக்கும் பொருட்டுக்) கோவர்த்தந கிரியை (க்குடையாக) எடுத்துப் பிடித்தவனும்,
அடியார் பிழை பாராதவன் – தன் அடியார்களுடைய குற்றத்தைப் பொருள் செய்யாது அவர்கட்கு அருள் செய்பவனும்,
அம் தரங்கத்தான் – அழகிய அலைகளை யுடைய கடலிற் பள்ளி கொள்பவனும் ஆகிய,
அரங்கன் – ஸ்ரீரங்கநாதனுக்கு,
அடியன் தொண்டன்
யான், என்று உள்ளாத அனந்தரம் கண்டீர் – என்று (ஒருவன் தன்னைக்) கருதாத பின்பன்றோ,
வினை வந்து அடைவது – (முன்பு அவன் செய்த) கருமம் (தன் பயனை விளைத்தற்கு அவனிடம்) வந்து சேர்வது; (எ – று.)
பிறப்பு அநாதியாய் வருதலின் ஒருவன் முற் பிறப்புக்களில் எவ்வளவு கருமம் செய்திருப்பினும்,
அவன் தன்னைத் திருவரங்கநாதனது அடியவனென்று கருதுதல் மாத்திரஞ் செய்வனாயின்,
அவனது பழவினை யனைத்தும், விளக்கின் முன் இருள் போலவும், காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத்துய்போலவும்
இருந்த விடமுந் தெரியாதபடி விரைவில் அழிந்திடு மென்பதாம்.
கண்டீர் என்ற முன்னிலைப் பன்மை யிறந்த கால வினை முற்று,
இடைச் சொல் தன்மைப்பட்டுத் தேற்றப் பொருள் குறித்து நிற்கும்.
அந்தரம் ஆர்த்து என்று இயைத்து, வானத்தை யுடைத்துக் கொண்டு எனினுமாம்.
எழு நாள் – வினைத்தொகை; பண்புத் தொகையாய், ஏழுநா ளென்றும் பொருள்படும்.
மேகங்களின் மிக்க மழை பசுக்களுக்கு வருத்தத்தை விளைத்ததோடு, அவற்றின் மிக்க பேரிடிகளினோசையும்
அச்சத்தால் ஆநிரையை மிகவருத்தின தென்பது, ‘கல்மழை யார்த் தெழுநாள் ஆதவனந்தர’ என்பதில் தோன்றும்.
ஆதவநம்தர என்பதற்கு – பசுக்கள் (அம்மழை மிகுதியைப் பொறுக்கு மாற்றலின்றி நிலை நிற்க மாட்டாமல்)
ஓடத்தொடங்க என்று உரைத்தலு முண்டு.
இந்திரன் கல்மழைபொழிவித்ததனால் அதனைக் கல்மலைகொண்டே தடுத்திட்டனன்,
அவன் நீர்மழைபொழிவித்திருந்தால் அதனை நீர்கொண்டே தடுத்திருப்பன்,
அகடித கடநாசாமர்த்தியமுடைய எம்பெருமான் என்ற தாற்பரியம்,
‘கன்மழைக்காக வெற்பெடுத்தான்’ என்ற சொற்போக்கில் தோன்று மென்பர் ஆன்றோர்.
அடியார் பிழை பாராதவன் – “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல்,
என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல் நன்றுசெய்தா ரென்பர்போலும்,
மன்னுடைய விபீடணற்காய் மதிவிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த,
என்னுடைய திருவரங்கர்க்கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவரே” என்ற பெரியாழ்வாரருளிச்செயலைக் காண்க.
அம் – உரிச்சொல். தரங்கம் – அலை.
‘அம் தரங்கம்’ என்பதை அடையடுத்த சினையாகுபெயரென்றாவது, பண்புத் தொகை யன்மொழியென்றாவது கொள்ள வேண்டும்.
அடியார் அந்தரங்கத்தான் என்றும் எடுத்து, “மலர்மிசை யேகினான்” என்றபடி
அன்பால் நினைக்கின்ற அடியார்களுடைய இதயத்தில் அவர் நினைந்த வடிவோடு சென்று வீற்றிருப்பவன் என வுரைப்பினும் அமையும்.
அடியன் – தன்மையொருமை. உள்ளாதவன் அந்தரம் என்று பதம் பிரித்து,
உள்ளாதவன் – கருகாதவனுக்கு, அந்தரம் – முடிவில், வினை வந்து அடைவது என்று உரைப்பாரு முளர்.
அந்தரம், தபநம், தவநம், தரங்கம், அந்தரங்கம், அநந்தரம் – வடசொற்கள்.
அடைவதுவே – குற்றியலுகரம் சிறுபான்மை கெடாது பொது விதியால் வகர வுடம்படு மெய் பெற்றது.
—————
அடையப்பன் னாகம் கடிவா யமுதுக வங்கி குளிர்
அடையப்பன் னாக மருப்பா யுதமிற வன்று குன்றால்
அடையப்பன் னாக மிசை தாங்கப் பாலர்க்கு அருள் செய்ததால்
அடையப்பன் னாகம் கரியான் அரங்கன் எட்டக்கரமே –27-
ஆல் அடை – (பிரளயப்பெருங்கடலிலே) ஆலிலையிற் பள்ளி கொண்டருள்கிற,
அப்பன் – (யாவர்க்குந்) தலைவனும்,
ஆகம் கரியான் – திருமேனி கறுத்திருப்பவனுமான,
அரங்கன் – ரங்கநாதனது,
எட்டு அக்கரம் – திருவஷ்டாக்ஷரமந்திரமானது, –
பல் நாகம் அடைய கடி வாய் அமுது உக – விஷப் பற்களினாற் சர்ப்பங்கள் (உடம்பு) முழுவதிலும் கடித்த வாயினிடமாக அமிருதம் சிந்தவும்,
அங்கி குளிர் அடைய – நெருப்புக் குளிர்ச்சியை யடையவும்,
பல் நாகம் மருப்பு ஆயுதம் இற – பல யானைகளின் தந்தங்களாகிய ஆயுதங்கள் ஒடியவும்,
குன்றால் அடை அப்பு அ நாகம் மிசை தாங்க – மலையோடு அடுத்தலை யுடையதான ஜலம் (கடல்) அந்த மலையின்மீது ஏந்தவும்,
பாலற்கு – சிறுவனான பிரகலாதனுக்கு,
அன்று – அந்நாளில் (இரணியன் பலவாறு வருத்தத் தொடங்கிய காலத்தில்),
அருள் செய்தது – கருணை புரிந்தது; (எ – று.)
தனித்தனி எல்லாப்பிராணிகளாலும் இறவாதபடி வரம் பெற்றவனும் மூவுலகையும் வென்று தன்னையே கடவுளாக
அனைவரும் வணங்கும்படி செய்துவருகின்றவனுமான இரணியாசுரன்
தன்மகனான பிரகலாதனுக்கு அசுர குருவாகிய சுக்கிராசாரியரைக்கொண்டு அக்ஷராப்பியாசஞ் செய்விக்கிறபொழுது,
அக்காலவழக்கத்தின்படி அவ்வாசிரியன் ‘இரணியாயநம:’ என்று முதலிற் சொல்லிக் கல்வி கற்பிக்க,
பிரகலாதன் அங்ஙனஞ்சொல்லிக் கல்விகற்க உடன்படாது நாராயண நாமத்தை யுட்கொண்ட அஷ்டாக்ஷர மகாமந்திரத்தைச் சொல்ல,
அதனை யுணர்ந்த இரணியன் மைந்தனைத் தன்வழிப்படுத்துதற்குப் பலவாறுமுயன்றும்
அவன் வழிப்படாது விடாப்பிடியையுடையனானமை கண்டு கடுங்கோபங்கொண்டு,
தன்னைச் சார்ந்த அசுரர்களை யழைத்துப் பிரகலாதனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டனன்;
அதற்கு இசைந்த அவர்கள் தக்ஷகன் முதலிய கொடிய அஷ்டமகாநாகங்களைக் கொண்டுவந்து அக்குமாரன்மீது கடிக்கவிட,
அந்தப்பெரும்பாம்புகள் காளி காளாத்திரி யமன் யமதூதி என்ற விஷப்பற்கள் கொண்டு
அவனுடைய சகல அவயவங்களிலுங் கடித்து உக்கிரமான விஷங்களைக் கக்க,
அவன் இடைவிடாது நாராயணநாமோச்சாரணஞ் செய்துவந்ததுபற்றி அவன்பக்க லெழுந்த திருமாலருளால்,
அக்கடித்தவாய்களினின்று சொரிந்த விஷமே அமிருதமயமாக, அந்தப்பரமபாகவதன் சிறிதும் ஊறுபாடின்றி யிருந்தனன்;
அசுரர்கள் அவனை நெருப்பிலே போகட, அத்தீயும் குளிர்ந்து அவனை எரிக்கமாட்டாதாயிற்று;
இரணியன் கட்டளையால் திக்கஜங்கள் பிரகலாதனைப் பூமியிலே வீழ்த்தித் தங்கள் வலியதந்தங்களாற் பாய்ந்து இடித்தபோது,
திருவருள்வலிமைபெற்ற அவனது மார்பிற் பட்டதனால் அத்திசையானைகளின் தந்தங்கள் முறிந்து போய்விட்டன;
அசுரர்கள் அவனைப் பெரியமலையுடன் சேர்த்து நாகபாசங்களினாற் கட்டிக் கடலிலே போகட,
அச்சமுத்திரத்திலே அம்மலையானது பிரகலாதன் தன்மேற்பக்கத்திலிருக்கத் தெப்பமாய்மிதந்தது:
நாகபாசந் தானே விடுபட்டதனாற் பிரகலாதன் இனிது பிழைத்துக் கரைசேர்ந்தனன்;
இங்ஙனம் பலவாறாகத் துன்பந்தீர்த்துப் பக்தனைப் பாதுகாத்தது எனப் பெரியதிரு மந்திரத்தின் பிரபாவத்தை வெளியிட்டார்.
நாகம் மருப்பு ஆயுதம் இற என்பதற்கு –
யானைத்தந்தங்களும் ஆயுதங்களும் ஒடிபட வென்று உரைத்தலுமாம்;
அசுரர்கள் ஒருங்குசேர்ந்து பலவகைப்படைக்கலங்களைக் கொண்டு பிரகலாதனை வதைக்கத்தொடங்க
அவ்வாயுதங்களெல்லாம் அவனுடம்பிற் பட்டமாத்திரத்தில் ஒடிந்துபோய்விட
அவன் அவற்றாற் சிறிதும்வேதனையுறாது விளங்கின னென்பதும் உணர்க,
நம்பெருமாள் எழுத்து எட்டின் பெருமை நவிலுமதோ
சம்பரன் மாயம் புரோகிதர் சூழ் வினை தார் அணி வாள்
வெம்படை மாசுணம் மாமத வேழம் விடம் தழல் கால்
அம்பரமே முதலானவை பாலனுக்கு அஞ்சினவே –திருவரங்கத்து மாலை –81
நாகம் என்ற வடசொல் – யானையையும் பாம்பையும் குறிக்கும்போது, நகத்தில் வாழ்வது எனக் காரணப்பொருள்படும்:
தத்திதாந்தநாமம்; (நகம் – மலையும், மரமும்) அங்கி – அக்நி என்ற வடசொல்லின் சிதைவு.
குளிர் – முதனிலைத்தொழிற்பெயர்.
மூன்றாமடியில், அடை – அடுத்தல்; தொழிற் பெயர்: அடு – பகுதி, ஐ – விகுதி,
குன்றால் அடை அப்பு என்பதற்கு – மலைகளினாலே யடைக்கப்பட்ட சமுத்திர மெனினும் அமையும்;
நாகபா சத்தினாற்கட்டிக் கடலிலேயிடப்பட்ட பிரகலாதன்மேல் இரணியன்கட்ட ளைப்படி அசுரர்கள் அனேகமலைகளைக்
கொண்டுபோய்ப் போகட்டு அழுத்து வாராயின ரென்று புராணங் கூறும்.
‘அன்றுகுன்றாலடையப்பு’ என்று எடுத்து, அக்காலத்தில் (இராமாவதாரத்தில்) மலைகளைக்கொண்டு திருவணை
கட்டியமைக்கப்பட்ட கட லென்று இயற்கையடைமொழி புணர்ந்ததாகப் பொருளுரைத்தல் சிறப்பன்று.
‘நாகம்’ – மலையையுணர்த்தும்போது, நக மென்ற வடசொல்லின் நீட்டல்.
ஆயுதம், அப், பாலன் – வடசொற்கள். அப்பன் – ஸர்வஸ்வாமி. ஈற்றடியில், ன் – விரித்தல்.
முன்றாமடியில், ‘அந்நாகம்’ என்பது, ‘அன்னாகம்’ என்று கொள்ளப் பட்டது, யமகநயத்தின்பொருட் டென்க.
—————-
அக்கர வம்புனைந் தாரய னாரிடை யாயிரு நால்
அக்கர வம்பு மலராள் கொழுநன் அரங்கன் செங்கோல்
அக்கர வம்புயன்றான் மூலம் என்ப தறிவித்திடான்
அக்கர வம்புவி மேல் வேழ மே வெளி யாக்கியதே –28-
இரு நால் அக்கரம் – அஷ்டாக்ஷரமகாமந்திரத்துக்கு உரியவனான,
வம்பு மலராள் கொழுநன் – வாசனையையுடைய தாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகளுக்குக் கணவனும்,
செம் கோலம் கரம் அம்புயன் – சிவந்த அழகிய தாமரைமலர்போன்ற திருக்கைகளையுடையவனுமாகிய,
அரங்கன் ரங்கநாதன், –
அக்கு அரவம் புனைந்தார் அயனார் இடை ஆய் – எலும்பையும் சர்ப்பங்களையும் ஆபரணமாகத்தரித்த
சிவபிரானுக்கும் பிரமதேவருக்கும் நடுவிலே தானிருந்து கொண்டு,
தான் மூலம் என்பது அறிவித்திடான் – தானே (எல்லார்க்கும்) ஆதிமூலப்பொருள் என்கிற உண்மையை வெளிப்படுத்தான்;
அ கரவு – அந்த ஒளிப்பை,
அம் புவிமேல் வேழமே வெளியாக்கியது – அழகிய நிலவுலகத்தில் (கஜேந்திரனாகிய) யானையே பகிரங்கப்படுத்தி விட்டது; (எ – று.)
படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் முறையே செய்பவராதலாற் பிரம விஷ்ணு ருத்திர ரென்று
முறைப்படுத்திக் கூறப் படுகின்ற திரிமூர்த்திகளுள் இடைப்பட்டவனான திருமால்
முன்னும் பின்னு முள்ளமற்றையிருவர்க்கும் ஸமனானவன்போன்றிருத்தலால்,
‘அவனே அம் மூவரில் மற்றையிருவர்க்கும் முதற்பொருள்’ என்கிற மெய்ம்மை அறிதற்கு அரிதாயிருந்தது;
அந்த மறைபொருள், கஜேந்திராழ்வான் ஸ்ரீமந்நாராயணனை மற்றைப்பெயர்களாற் குறியாமல் ‘ஆதிமூலமே’ என்று குறித்து
விளித்ததனால் இனிது வெளியாயிற்று என்பதாம்.
“உன்னொக்க வைத்த விருவர்க்கு மொத்தி யொருவர்க்கு முண்மையுரையாய்” என்றது,
முதன் மூன்றடிகட்கு மேற்கோளாகத்தக்கது.
கஜேந்திராழ்வான் ஆதிமூலமேயென்று பொதுப்படக் கூப்பிட்டபொழுது, எம்பெருமானல்லாத பிறதேவரெல்லாரும்
தாம்தாம் அச்சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய,
திருமால் தானே வந்து அருள்செய்தன னாதலால், இரகசியார்த்தம் வெளியாயிற் றென்க.
அக்கு – ருத்திராக்ஷமாலையுமாம். கரவு – கள்ளம். வேழமே, ஏ – இழிவு சிறப்பு;
“விலங்குமன்றோ சொல்லிற்று ஐயமற்றே” என்பர் திருவேங்க டத்தந்தாதியிலும்.
————–
ஆக்கு வித்தார் குழலால ரங்கே சரன் பால் விதுரன்
ஆக்குவித்தார வடிசில் உண்டார் கடலாடையகல்
ஆக்குவித்தாரறி வற்றேனைத் தம்மடி யார்க்கடிமை
ஆக்குவித்தாரடியே யடியேன்று ய்க்குமாரமுதே–29-
குழலால் – வேய்ங்குழலினிசையால்,
ஆ குவித்தார் – பசுக்களை (ஓரிடத்துத் திரளாக)க் கூட்டினவரும்,
விதுரன் ஆக்கு வித்தாரம் அடிசில் – விதுரன் சித்தஞ்செய்த விசேஷ போஜநத்தை,
அன்பால் உண்டார் – அன்பினாற் புசித்தருளியவரும்,
கடல் ஆடை அகலா – சமுத்திரமாகிய ஆடையை நீங்காத,
கு – பூமியின் உற்பத்திக்கு,
வித்தார் – விதை போலக் காரணமானவரும்,
அறிவு அற்றேனை தம் அடியார்க்கு அடிமை ஆக்குவித்தார் – அறிவற்ற என்னைத் தமது அடியார்கட்கு
அடியவனாகும்படி அருள்செய்தவருமாகிய,
அரங்கஈசர் – ரங்கநாதருடைய,
அடியே – திருவடிகளே,
அடியேன் துய்க்கும் ஆர் அமுது – தாசனாகிய யான் அனுபவிக்கும் அருமையான அமிருதமாம்.
அமிருதத்தை நுகர்ந்து ஆனந்தமடைவார்போல அடியேன் எம்பெரு மானுடைய திருவடிகளைத் தியானித்தல் துதித்தல் பூசித்தல்
முதலியன செய்து பேரானந்தமடையவே னென்பதாம்.
பலவிடங்களிற் பரவி மேய்கிற பசுக் கூட்டங்களை ஒருங்கு சேர்த்தற் பொருட்டும், அவற்றை மகிழ்வித்தற் பொருட்டும்,
கண்ணன் இனிமையாக வேணு காநஞ் செய்வன்.
விதுரன் – திருதராட்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி முறையாகிறவன்;
விசித்திர வீரியனது மனைவியாகிய அம்பிகையினால் ஏவியனுப்பப்பட்ட தாதியினிடம் வியாச முனிவனருளாற் பிறந்தவன்;
பாண்டவர்க்குந் துரியோதனாதியர்க்குஞ் சிற்றப்பன். கண்ணன் பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது பேசுபவனாய்
அத்தினாபுரிக்குச் சென்ற போது அங்கு வேறு யாருடைய வீட்டிற்குஞ் செல்லாமல் ஞான பக்திகளிற் சிறந்த
விதுரனுடைய திருமாளிகையினுட் புக்குத் தங்கி அங்கு அவனால் மிக்க அன்புடனமைக்கப்பட்ட
விருந்துணவை அமுதுசெய்தருளின னென்பது, பிரசித்தம்.
குழல் – அதனொலிக்கு, முதலாகுபெயர். அன்பால் உண்டார் என இயையும்; அன்பால் ஆக்கு என்றும் இயைக்கலாம்.
வித்தாரவடிசில் – பல வகைச் சுவைப் பண்டங்களோடு கூடிய உணவு, விஸ்தாரம், கு – வடசொற்கள்.
அகலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அடியே, ஏ – பிரிநிலை.
அடியே அடியேன் துய்க்கும் ஆரமுது – “உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங்,
கண்ண னெம்பெருமான்” என்றார் நம்மாழ் வாரும். அரங்கேசர் – குணசந்தி.
————-
ஆராதனம் செய்து கண்டனின் கீர்த்தி யறைவன்றிரு
ஆரா தனம் செய்வன் வேதா வென்றாலடியேன் புகழ்கைக்கு
ஆராதனம் செய்ய போதாந்திரு மகளாக பல் பூண்
ஆராதனம் செயன்பாகா வரங்கத் தமர்ந்தவனே –30-
செய்ய போது – செந்தாமரை மலர்,
ஆதனம் ஆம் – வீற்றிருக்குமிடமாகப் பெற்ற,
திருமகள் இலக்குமியை, ஆக – மார்பிலுடைய வனே!
பல் பூண் ஆரா – ஆரத்தையும் மற்றும் பலவகை யாபரணங்களையுந் தரித்தவனே!
தனஞ்செயன் பாகா – அருச்சுனனுக்குச் சாரதியானவனே!
அரங்கத்து அமர்ந்தவனே – திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனே!
ஆராத நஞ்சு எய்து கண்டன் – உண்ணத் தகாத விஷம் பொருந்திய கழுத்தை யுடையவனான சிவபிரான்,
நின் கீர்த்தி அறைவன் – உனது புகழை யெடுத்துச் சொல்லித் துதித்துப் பாடுவன்;
வேதா – பிரமதேவன்,
திரு ஆராதனம் செய்வன் – (உனக்குப்) பூசனை புரிவன்;
என்றால் -, அடியேன் புகழ்கைக்கு ஆர் – நான் (உன்னைத்) துதித்தற்கு என்ன தகுதியுடையேன்!
திரிமூர்த்திகளுள் மற்றை யிருவரும் புகழ்ந்து பூசனை புரியுஞ் சிறப்பை யுடைய உனது புகழ் எளியனான என்னால்
எடுத்துச் சொல்லுந் தரமுடையதன்று என்பதாம்.
‘ஆராதநஞ்செய்துகண்டன்’ என்றது – மகா பாகவதனான உருத்திரனுடைய செயற்கரியன செய்யுந் திவ்விய சக்தியையும்,
‘வேதா’ என்ற பெயர் – விதித்தற் கடவுளான பிரமனது பெருமையையும் விளக்கும்.
திருமாலின் கட்டளைப்படி தேவர்கள் அசுரர்களைத் துணைக் கொண்டு திருப்பாற்கடல் கடைகையில், அதனினின்று எழுந்த
அதி பயங்கரமானதொரு பெரு விஷத்தைக் கண்ட மாத்திரத்தில் அதன் கொடுமையைப் பொறுக்க மாட்டாமல்
அஞ்சி யோடிச் சரணமடைந்த தேவர்களின் வேண்டுகோளால் அவ்விஷத்தைச் சிவபிரான் அமுது செய்து
கண்டத்தில் நிறுத்தி அனைவரையும் பாதுகாத்தருளின னென்பது வரலாறு;
பாற்கடல் கடைகையில் அதனினின்று உண்டான பலபொருள்களுடனே விஷமும் தோன்றத் திருமால் அவற்றில்
விஷத்தைச் சிவபிரானுக்குக் கொடுத்து உண்ணச் செய்தன ரென்றும் வரலாறு கூறப்படும்.
அருச்சுனனது வேண்டுகோளின்படி கண்ணன் திருவருளால் மகாபாரத யுத்தத்தில் அருச்சுனனுக்குத் தேரூர்ந்து
அதனாற் பார்த்தசாரதி யென்று ஒரு திருநாமம் பெற்றமை பிரசித்தம்.
முதலடியில் ‘னஞ்செய்து’ என்றவிடத்து நகரம் னகரமாகத் திரித்துக் கொள்ளப்பட்டது. யமகநயத்தின்பொருட் டென்க.
கண்டம், கீர்த்தி, ஆராதநம், வேதா, ஆஸநம், ஹாரம், தநஜ்ஞ்யன் – வடசொற்கள்.
மூன்றாமடியில், ஆர் – யார் என்பதன் மரூஉ. திருமகளாக – திருமகளாகன் என்ற பெயரின் ஈறுகெட்டவிளி.
ஹாரம் – பொன்னாலும் முத்தினாலும் மற்றையிரத்தினங்களாலும் மலரினாலு மாகிய மார்பின் மாலை.
தருமபுத்திரன் இராஜ சூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அருச்சுனன் வடக்கிற்சென்று பல அரசர்களை வென்று
அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்ந்ததனால், அவனுக்கு ‘தநஞ்ஜயன்’ என்று ஒருபெயராயிற்று;
இனி, இப்பெயர்க்கு – வெற்றியைச் செல்வமாகவுடையவ னென்றும் ஒருபொருள் கொள்ளலாம்.
அடியேன் ஆர் என்றவிடத்து, யார் என்ற வினாவினைக்குறிப்புமுற்று – தன்மையொருமைக்கு வந்தது.
இரண்டாமடியிறுதியில், வருமொழி முதலுயிர்வரக் குற்றியலுகரக்கேடு கொள்ளாமலும், பொது விதிப்படி வகரவுடம்படுமெய்த்
தோற்றத்தையேனும் ஏற்காமலும் சந்திபிரித்து நிறுத்தினது, யமகவமைப்பின் பொருட்டு.
இங்ஙனம் சொல்லணிக்காகப் பிரித்துக்காட்டியிருக்கிற இடங்களிலெல்லாம், கட்டளைக்கலித்துறையிலக்கணவமைதியை நோக்குமிடத்து,
குற்றிய லுகரம் அலகுபெறவில்லை யென்று கொள்ளவேண்டும்;
இல்லாவிடின், “முதற்சீர்நான்கும் வெண்டளைபிழையாக், கடையொருசீரும் விளங்காயாகி, நேர்பதினாறே
நிரைபதினேழென், றோதினர் கலித்துறை யோரடிக் கெழுத்தே” என்ற கட்டளைக் கலித்துறை யிலக்கணம் அமையாது.
இங்ஙனம் கொள்ள வேண்டிய விடங்களிலெல்லாம் மூலத்தில் இப்பதிப்பில் (+) இக்குறி இடப்பட்டிருக்கிறது.
—————
அமர வரம்பையி னல்லார் பலரந்திக் காப்பெடுப்ப
அமர வரம்பையில் வேல் வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்
அமர வரம்பையில் கான்போயிறந்தன ராதலில் வீடு
அமர வரம்பையின் மஞ்சா ரரங்கருக் காட் படுமே –31–
அமர அரம்பையின் நல்லார் பலர் அந்திக் காப்பு எடுப்ப – தேவசாதியாகிய ரம்பை யென்னும் அப்ஸர ஸ்திரீயைக் காட்டிலும்
அழகிய வர்களான மகளிர் பலர் திருவந்திக்காப்பு எடுக்கவும்,
அமர அரம் பையில் வேல் வேந்தர் சூழ – போர்க்கு உரியதும் அரமென்னும் வாள் விசேடத்தால் அராவப்பட்டதுமான
வேலாயுதத்தை யேந்திய அரசர்கள் பக்கங்களிற் சூழ்ந்து நிற்கவும்,
மண் ஆண்டு இருந்தோர் அமர – நிலவுலகத்தை யர சாண்டிருந்தவர்க ளெல்லாரும்,
(பின்பு),
வரம்பை இல் கான் போய் இறந்தனர் – எல்லையை யுடையதாகாத வனத்திற்குச் சென்று மாய்ந்தார்கள்:
ஆதலில் – ஆகையால்,
வீடு அமர – (நீங்கள்) பரமபதமடைதற்பொருட்டு,
அரம்பையில் மஞ்சு ஆர் அரங்கருக்கு ஆள்படும் – வாழை மரத்தின் மீது மேகங்கள் தங்கப்பெற்ற ஸ்ரீரங்கத்தில்
எழுந்தருளியிருக்கிற நம்பெருமாளுக்கு அடிமைப்படுங்கள்; (எ – று.)
செல்வம் யாக்கை இவற்றின் நிலை யில்லாமையை முதல் வாக்கியத்தில் எடுத்துக் காட்டி,
இரண்டாம் வாக்கியத்தில், அரங்கனுக்கு ஆட்பட்டால் அழியாச் செல்வமாகிய முத்தி சித்திக்கு மென்றார்.
அரசர்கள் தமது ஆயுளிற் பெரும்பான்மை அரசாண்டு முதுமை வந்த பின்பு அவ்வரசாட்சியைத் தமது மைந்தர்க்கு அளித்து
வனம் புகுந்து மறுமைப் பேற்றின் பொருட்டுச் சில காலம் தவஞ்செய்தலு முளதாயினும், அச்சில நாளைத் தவத்தால்
வீடு பேறு கிடைக்கு மென்ற நிச்சய மில்லை யென்பதும் இதிற் போதரும்.
‘வேந்தர் சூழ மண்ணாண்டிருந்தோர்’ என்றதனால், சக்கரவர்த்திக ளென்றதாயிற்று.
அரம்பை – ரம்பா என்ற வடசொல்லின் விகாரம்; இன் – ஐந்தனுருபு, எல்லைப் பொருளது;
இங்ஙனம் உபமான உபமேயங்களினிடையே வரும் எல்லைப் பொருளை உறழ்பொரு வென்பர்.
அந்திக் காப்பு எடுத்தல் – பவனி வருதலாகிய திருவிழாவின் முடிவிலே கண்ணெச்சில் கழித்தற் பொருட்டு ஆரதி யேந்துதல்;
அந்திக் காப்பு – அந்தி மாலைப் பொழுதில் திருஷ்டி தோஷ பரிகாரத்திற்காக ஆரதியேந்துதலுமாம்.
இரண்டாமடியில், அமரம் – ஸமரம் என்ற வடசொல்லின் விகாரம்;
அமர என்று எடுத்து, அமர் என்ற பெயரின்மேற் பிறந்த குறிப்புப்பெயரெச்ச மெனினுமாம்.
பயில் என்பது பையில் எனப் போலியாய் நின்றது, யமகத்தின்பொருட்டு.
அரம்பயில்வேல்- கீழ் ‘அரங்காதுவார்கணை’ என்றதனோடு ஒப்பிடுக.
மூன்றாமடியில், அமர என்பது – ‘அடைய’ என்பது போல எஞ்சாமைப் பொருள் காட்டி நின்றது;
அம் மரம் என்று எடுத்து, அழகிய மரங்களையுடைய வென்று உரைப்பாரு முளர்.
வரம்பையில் என்றவிடத்து, இல் என்பது – செயப்படுபொருள் குன்றாததாய் நின்றது.
அரம்பையில் மஞ்சுஆர் அரங்கம் – வாழை மரங்களின் உயர்ச்சி வளத்தை விளக்க வந்த தொடர்புயர்வுநவிற்சி யணி.
ஆட்படும் – உம்ஈற்று ஏவற்பன்மை.
—————
ஆளாக வந்த வடியேற் கருள்பரி யானை திண் டேர்
ஆளாக வந்தனிற் செற்றிலங்கே சனை யட்டவல்வில்
ஆளாக வந்தன் புயந்துணித் தாயரங் காமுளரி
ஆளாக வந்தமி லுன்னடி யார்க்கன்ப னாவதற்கே –32-
ஆகவந்தனில் – போரிலே,
பரி – குதிரைகளையும்,
யானை – யானைகளையும்,
திண் தேர் – வலிய தேர்களையும்,
ஆள் – காலாள்களையும்,
செற்று – அழித்து,
இலங்கா ஈசனை அட்ட – இலங்கையரசனான இராவணனைக் கொன்ற,
வல்வில் ஆளா – வலிய வில்லை யாள்கிற வீரனே!
கவந்தன் புயம் துணித்தாய் – கபந்தனென்ற அரக்கனது தோள்களை யறுத்திட்டவனே!
அரங்கா – ரங்கநாதனே!
முளரியாள் ஆக – தாமரை மலரில் வாழ்பவளான திருமகளை மார்பிற் கொண்டவனே!
ஆள் ஆக வந்த அடியேற்கு – அடிமை யென்று வந்து உன்னைச் சரணமடைந்த எனக்கு,
அந்தம் இல் உன் அடியார்க்கு அன்பன் ஆவதற்கு அருள் – எல்லை யில்லாத உனது அடியார்கட்கு
அடியவனாகுமாறு கருணை செய்வாய்; (எ – று.)
எம்பெருமானுக்குத் தொண்டனாவதனோடு அப்பெருமானடியார்கட்கு அடிமை பூண்டொழுகுதலில்
தமக்கு உள்ள அபேக்ஷையைக் கூறினார்.
பரியானை தேர் ஆள் – சதுரங்க சேனை. குதிரை, ஓரங்கமாதலோடு மற்றோரங்கமான
தேரைச் செலுத்துவது மாதலால், முன்நிறுத்தப்பட்டது.
அதனையடுத்து யானையை நிறுத்தினது, அது சேனைக்கு அலங்காரமாதலும் வீரர்க்கு வாகனமாய் நிற்றலோடு
தானும் போர்செய்து பகையழிப்பதாதலும் பற்றியென்க.
ஆஹவம், லங்கேசன், அந்தம் – வடசொற்கள். லங்கேசன் – குணசந்தி.
முளரி – முட்களை யுடைய அரியையுடையது: வேற்றுமைத் தொகையன்மொழி; அரி = அரை: தண்டின் சுற்றுப்புறம்.
————-
ஆவா கனத்த ரடியார் மனத்துட் புள்ளான வொப்பில்
ஆவா கனத்த ரரங்கர் பொற்றாளுக்கு அடிமைப் படார்
ஆவா கனத்த வழுக்குடல் பேணி யறி வழிந்தவ்
ஆவா கனத்த ரிருந்தென் னிராமலென் னம்புவிக்கே–33-
அடியார் மனத்துள் ஆவாகனத்தர் – அடியார்களுடைய இதய கமலத்தில் வந்து வீற்றிருத்தலை யுடையவரும்,
புள் ஆன ஒப்பு இலா வாகனத்தர் – கருடப் பறவையாகிய ஒப்பற்ற வாகனத்தை யுடையவருமாகிய,
அரங்கர் – ஸ்ரீரங்கநாதருடைய,
பொன் தாளுக்கு – அழகிய திருவடிகளுக்கு,
அடிமைப்படார் – ஆட்படமாட்டார்கள் (சிலர்):
ஆ ஆ – அந்தோ!
கனத்த அழுக்கு உடல் பேணி – பாரமாயுள்ள அசுத்தமான தம் உடம்பைப் பாதுகாத்துக் கொண்டு,
அறிவு இழந்து – மதி கெட்டு,
அவா ஆகு – (சிற் றின்பத்தில்) ஆசை கொள்ளுகிற,
அனத்தர் – பயனற்ற அவர்கள்,
அம் புவிக்கு – அழகிய இந்நில வுலகத்தில்,
இருந்து என் – உயிர் வாழ்ந்திருத்தலால் என்ன லாபம்?
இராமல் என் – இராதொழிதலால் என்ன நஷ்டம்? (எ – று.)
அரங்கர்க்கு ஆட்படாதவர் இருந்தென்ன? போயென்ன? என்றபடி;
எனவே, இவ்வுலகத்தில் மானுடப் பிறப்பெடுத்தலின் பயன் அரங்கர்க்கு ஆட்பட்டு உய்தலே யென்பது, தேர்ந்தகருத்து.
‘மலர்மிசை யேகினான்’ என்றபடி அன்போடு தியானிக்கின்ற அடியார்களுடைய இதய கமலத்தில் எம்பெருமான்
அவர் நினைந்த வடிவத்தோடு வந்து வீற்றிருத்தலால், ‘ஆவாகனத்த ரடியார்மனத்துள்’ என்றார்.
ஆவாகனத்தர் – தம்மைத்தாமே அங்கு நிலைநிறுத்துபவ ரென்க.
ஆவாஹநம், மநஸ், வாஹநம், கநம், அநர்த்தம், புவி – வடசொற்கள்.
“நேமி சேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடைப், பூமிபாரங்கள்” என்றபடி
பகவத் பக்தரல்லாதவரது உடல் பூமிக்குப் பாரமாதலால், ‘கனத்த வுடல்’ எனப்பட்டது.
ஆ ஆ – இரக்கக் குறிப்பிடைச் சொல்லின் அடுக்கு.
————-
அம்பு விலங்கை நகர் பாழ் படச் சங்கு மாழியும் விட்டு
அம்பு விலங்கை கொண்டாயரங்கா வன்றிடங்கர் பற்றும்
அம்பு விலங்கை யளித்தா யினியென்னை யாசை யென்றிவ்
அம்பு விலங்கையிட் டேசம் சிறையி லடைத் திடலே –34-
அம் – அழகிய,
புவி – பூமியில்,
லங்கை நகர் பாழ்பட – இலங்காபுரியிலுள்ள அரக்கர்கள் அழியும்படி,
சங்கும் ஆழியும் விட்டு அம்பு வில் அம் கை கொண்டாய் – சங்க சக்கரங்களைக் கைவிட்டு
(வந்து இராமனா கத்திருவவதரித்து) அம்பையும் வில்லையும் அழகியகைகளிற் கொண்டவனே!
அரங்கா!
அன்று – அந்நாளில்,
அம்பு – ஜலத்திலே,
இடங்கர் பற்றும் – முதலையினாற் பிடித்துக் கொள்ளப்பட்ட,
விலங்கை – மிருக ஜாதியான கஜேந்திராழ்வானை,
அளித்தாய் – பாதுகாத்தருளியவனே! –
இனி -, என்னை -,
ஆசை என்று இயம்பு விலங்கை இட்டு – ஆசை யென்று சொல்லப் படுகிற (ஆசையாகிய) விலங்கைப் பூட்டி,
ஏசும் சிறையில் அடைத்திடல் – இகழப்படுகிற (பிறப்பாகிய) சிறைச் சாலையில் அடைக்காதே; (எ – று.)
உனக்கு ஆட்பட்ட அடியேனது காமம் முதலிய குற்றங்களைப் போக்கி இனிப் பிறப்பில்லாதபடி
முத்தி யளித்தருள வேண்டு மென வேண்டியபடி.
பெருமாள் இலங்கை யரசனான இராவணன் முதலிய இராக்கதர்களை யழிக்கக் கருதி வனவாசஞ்செல்லுங்காலத்தில்
சங்க சக்கராம்சமான பரத சத்துருக்கனர்களை உடன் கொண்டு செல்லாது நகரத்திலேயே விட்டுச் சென் றமையும்,
‘சங்கும் ஆழியும் விட்டு’ என்றதில் அடங்கும்.
ஒருவிலங்கினாலே மற்றொரு விலங்கிற்கு நேர்ந்த துன்பத்தையும் பொறாமல் தனது பேரருளினால்
அரை குலையத் தலை குலைய மடுக்கரைக்கே வந்து உதவின மகா குணத்தி லீடுபட்டு,
‘அன்று இடங்கர் பற்றும் விலங்கையளித்தாய்’ என்றார்.
விலங்கு – திர்யக்ஜாதி. ‘விலங்கையிட்டேசஞ்சிறையில்’ என்று பாடமோதி,
விலங்கை யிட்டே, சம் – ஜந்மமாகிய, சிறையில் – சிறைக்கூடத்தில் என்று உரைப்பாரு முளர்;
சம் = ஜம்: ஜநநம், பிறப்பு. ஏசு அம் சிறை என்று எடுத்து, அம் – சாரியை எனினும் இழுக்காது.
உயிரைப்பந்தப்படுத்துதலால், பிறப்பு ‘சிறை’ எனப்பட்டது.
“அவாவென்ப எல்லா வுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து” என்றது கொண்டு,
அவாவை ‘விலங்கு’ என்றதன் காரணத்தை உணர்ந்து கொள்க.
லங்கை நகர் – இடவாகுபெயர். மூன்றாமடியில், அம்பு – வடசொல்.
அடைத்திடல் – எதிர்மறை யொருமை யேவல்; எதிர்மறைவியங்கோளுமாம்.
————-
இடவ மலைக்கும் புயங்க மலைக்கு மிலங்குமால்
இடவ மலைக்கு மிருங்க மலைக்கு மிறை வசங்க
இடவ மலைக்கும் புனல் அரங்கா வெய்த்த மார்க் கண்டன் கண்டு
இடவ மலைக்கு முலகழி யாதுள் ளிருந்த தென்னே –35–
இடவ மலைக்கும் – ருஷப கிரியாகிய திருமாலிருஞ்சோலை மலைக்கும்,
புயங்க மலைக்கும் – சேஷ கிரியாகிய திருவேங்கட மலைக்கும்,
இலங்கும் அகல் இடம் அமலைக்கும் -விளங்குகின்ற விசாலமான நிலவுலகத்துக்கு உரிய அதி தேவதையான பூமி தேவிக்கும்,
இருங் கமலைக்கும் – பெரிய செந்தாமரை மலரில் வாழ்பவளான ஸ்ரீதேவிக்கும்,
இறைவ – தலைவனே!
சங்கம் இடவ – சங்கத்தை இடக்கையிலுடையவனே!
மலைக்கும் புனல் அரங்கா – (கரையை) மோதுகின்ற காவிரி நீர்ப் பெருக்குப் பாயுந் திருவரங்கத்தி லெழுந்தருளியிருப்பவனே!
எய்த்த மார்க்கண்டன் கண்டிட – (பிரளயத்தி லலைபட்டு) மெலிவடைந்த மார்க்கண்டேய முனிவன்
(நினது திருவயிற்றினுட் சென்று) காணுமாறு,
அம் அலைக்கும் உலகு அழியாது உள் இருந்தது – (பிரளய வெள்ள) நீரினால் அழிக்கப்பட்ட உலகங்களெல்லாம்
அழியாமல் நினது திருவயிற்றினுள்ளே யிருந்த விதம்,
என்னே – என்ன விசித்திரமோ!
ருஷபம் தவஞ்செய்து பேறுபெற்ற மலையாதலால் தென்திருமலைக்கு ‘ருஷபகிரி’ என்றும்,
பரமபதநாதனது கட்டளையின்படி அவனுக்குப் பல வகைக் கைங்கரியங்களைச் செய்யும் ஆதிசேஷனே
அப்பெருமான் இனிது எழுந்தருளி யிருத்தற்கு மலை வடிவமானதனாலும்
மேரு மலையினிடமிருந்து ஆதிசேஷனுடணே வாயுவினாற் கொணரப்பட்ட மலையாதலாலும்
வடதிரு மலைக்கு ‘சேஷகிரி’ என்றும் பெயர்கள் வாய்த்தன.
இடவம் – ருஷபம் என்ற வடசொல்லின் விகாரம்.
புஜங்கமலை யென்பது – ‘சேஷகிரி’ என்பதன் பரியாயநாமமாக நின்றது. புஜங்கம் என்பது, புயங்கம் என்று விகாரப்பட்டது.
அமலா, கமலா என்ற வடசொற்கள் – ஆவீறு ஐயாயின. அமலை – குற்றமில்லாதவள்.
இறைவன் – இறைமை என்ற பண்பினடியாப் பிறந்த பெயர்; வ் – பெயரிடைநிலை.
மலைத்தல் – பொருதல். எய்த்தல் – மெலிதல்.
மார்க்கண்டன் – மிருகண்டுவினது குமாரன்; வடமொழித் தத்திதாந்தநாமம். அம் – நீர்; வடசொல்.
காலகதியைக் கடந்து என்றும் பதினாறாக நெடிதூழிவாழும்படி நீண்ட ஆயுள்பெற்ற மார்க்கண்டேய முனிவன்
பத்திர நதிக்கரையில் தவம் புரிந்து நரநாராயணரது தரிசனத்தைப்பெற்று
‘யான் பிரளயக்காட்சியைக் காணு மாறு அருள்புரியவேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவ்வாறே அவர்கள் அநுக் கிரகித்துச்
சென்றபின்பு மாயவன் மாயையால் மகாபிரளயந் தோன்ற, அப் பிரளயப் பெருங்கடலிற் பலவாறு அலைப்புண்டு
வருந்திய மார்க்கண்டேயன், அவ்வெள்ளத்தில் ஆலிலையின் மீது ஒருகுழந்தை வடிவமாய் அறிதுயிலமர்கிற
ஸ்ரீமந்நாராயணனைக் கண்டு அப்பெருமானது திருவயிற்றினுட் புக்கு, அங்கிருந்த உலகங்களையும் எல்லாச்
சராசரங்களையும் கண்டு பெரு வியப்புக் கொண்டன னென்பது, இங்குக் குறித்த விஷயம்.
—————–
இருந்தை யிலங்க வெளிறு படாதென் செய்தாலு நிம்பத்து
இருந்தை யிலந்தித்தி யாதவை போற் புல்லர் யாவும் கற்றாய்ந்து
இருந்தை யிலம் பன்ன கண்ணார்க்கு அல்லால் வெண்ணெ யில்லி லொளித்து
இருந்தை யிலங்கை யரங்கற்கு அன்பாகி யிருக்கிலரே–36-
என் செய்தாலும் – என்ன உபாயஞ்செய்தாலும்,
இருந்தை – கரியானது,
இலங்க – விளங்கத் தக்கதாக,
வெளிறு படாது – வெண்ணிற மடையாது;
(என்செய்தாலும்) -,
நிம்பத்து இருந் தையிலம் தித்தியாது – சிறந்த வேப்பெண்ணெய் இன்சுவை பெறாது;
அவை போல் -, –
புல்லர் – அற்பகுணமுடையரான கீழ்மக்கள்,
யாவும் கற்று ஆய்ந்து இருந்து – சகல சாஸ்திரங்களையும் பயின்று ஆராய்ந்திருந்தும்,
ஐயில் அம்பு அன்ன கண் ணார்க்கு அல்லால் – கூரிய அம்பு போன்ற கண்களை யுடைய மகளிர்க்கு அன்பாயிருப்பரேயல்லாமல்,
இல்லில் ஒளித்து இருந்து வெண்ணெய் ஐயில் அம் கை அரங்கர்க்கு அன்பு ஆகி இருக்கிலர் – (ஆய்ச்சியருடைய) கிருகத்தில்
(அவரறியாதபடி) ஒளித்து வீற்றிருந்து வெண்ணெயை எடுத்து உண்ட அழகிய கையை யுடைய ரங்கநாதர்
விஷயமாக அன்பு கொண்டிருக்க மாட்டார்கள்; (எ – று.)
என்றது, புல்லறிவாளரியல்புக்கு இரங்கியவாறாம். உவமையணி.
‘என் செய்தாலும்’ என்பதை மத்யதீபமாக முன் பின் வாக்கியமிரண்டற்கும் கூட்டுக.
வெண்ணெயை ஒளித்திருந்து உண்டது, கிருஷ்ணாவதாரத்தில்.
நிம்பம், தைலம் – வடசொற்கள்.
இரண்டாமடியில் ‘தையிலம்’ என்பதும், மூன்று நான்கா மடிகளில் ‘ஐயில்’ என்பதும் – யமகத்தின் பொருட்டுக் கொண்ட போலிகள்.
தைலம் – எண்ணெய்; திலம் – எள்: அதன் சம்பந்தமானது. இங்கு இச்சொல் நெய் என்ற மாத்திரமாய் நின்றது.
வேப்பெண்ணெய்க்கு ‘இரும்’ என அடைமொழி கொடுத்தது, இகழ்ச்சிக்குறிப்பு; கைப்பிற் பெரிய என்று பொருள்கொள்ளினுமாம்.
யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்பது – துணைவினை:
நான்காமடியில், ‘இருந்து’ என்பதற்கு – உட்கார்ந்து என்பது பொருள்;
ஆகவே, ஒரு சொல் வந்த பொருளில் வாராமை காண்க.
மூன்றாமடியில், ‘இருந்து’ என்றதன் பின் உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
ஐயில் அம்பு அன்ன – வேலையும் அம்பையும் போன்ற எனினுமாம்.
————
இருக்குமந் தத்தி லாரியா வரங்கன் மண் ஏழுக்குந்தய்
இருக்குமந் தத்திரு வாய்மலர்ந் தான் எட்டு எழுத்தைக் குறி
இருக்குமந் தப்புத்தி யீர்த்து நல் வீடெய்தலாகும் கை போய்
இருக்குமந் தச்செசிட் டூமன்முந் நீர்கடந் தேறிடிலே–37-
இருக்கும் அந்தத்தில் அறியா அரங்கன் – வேதமும் தனது முடிவில் (வேதாந்தமாகிய உபநிஷத்துக்களில்) அறிய மாட்டாது நின்ற ரங்கநாதனும்,
மண் ஏழ் உண்டும் தயிருக்கும் அந்த திரு வாய் மலர்ந்தான் – ஏழு வகைப்பட்ட உலகங்களை யெல்லாம் புசித்தும்
(வயிறு நிரம்பாமற் கிருஷ்ணாவதாரத்திலே) தயிரை உண்ணும்பொருட்டாகவும் அந்த அழகிய வாயைத் திறந்தவனு மான திருமாலினது,
எட்டு எழுத்தை – திருவஷ்டா க்ஷரமந்திரத்தை,
குறியிருக்கும் – சிந்தியாத உங்களுக்கும்,
மந்தம் புத்தி ஈர்த்து நல் வீடு எய்தல் ஆகும் – கூர்மையற்ற அறிவை யொழித்து (தத்துவ ஜ்ஞாநம் பெற்று)ச் சிறந்த முக்தியை அடைதல் கூடும்:
கை போய் இருக்கும் அந்தன் செவிடு ஊமன் முந்நீர் கடந்து ஏறிடில் – கைகளில்லாத முடவனும் குருடனும் செவிடனும் ஊமையுமான
ஒருவன் கடலைக் கடந்து அக்கரையேறுவனானால்; (எ – று.)
ஏறிடில் எய்தலாகும் என இயையும். முடம், குருடு, செவிடு, ஊமை என்ற உறுப்புக் குறைகளை யெல்லாமுடைய ஒருவன்
கடல் கடந்து கரையேறுவது உண்டானால், எம்பெருமானது திருவஷ்டாக்ஷரத்தைச் சிந்தியாத உங்கட்கும்
பிறவிக் கடல் கடந்து முத்திக் கரை சேர்தல் உளதாம் என்றார்; என்றது, அஸம்பாவித மென்றபடியாம்:
இது, பொய்த்தற்குறிப்பணி; வட நூலார் மித்யாத்யவஸிதியலங்கார மென்பர்: இதன் இலக்கணம் –
ஒரு பொருளைப் பொய்யென்று நிரூபித்தற்கு மற்றொரு பொய்ப் பொருளைக் கற்பித்தல்.
நீந்த மாட்டாமைக்கு முடமும், கரை இன்னதிசை யிலுள்ளது எனக் காண மாட்டாமைக்குக் குருடும்,
அதனைக் குறித்துப் பிறரை உசாவியுணர மாட்டாமைக்கு ஊமையும், பிறர் சொல்லக் கேட்டறியமாட்டாமைக்குச் செவிடும் சேர்க்கப்பட்டன.
ருக், அந்தம், மந்தம், புத்தி, அந்தன் – வடசொற்கள்.
இருக்கும், உம் – உயர்வுசிறப்பு; பகவானது சொரூபத்தை யுணர்ந்து உரைத்தற்கென்றே யமைந்ததும் என்றபடி,
மண் ஏழ் – ஈரேழுலகம். மண்ணேழுண்டும், தயிருக்கும் என்ற உம்மைகள் – முறையே, உயர்வு சிறப்பு இழிவு சிறப்புப் பொருளன.
அந்தத் திருவாய் – உலகமுண்ட பெருவாய். குறியிர் – முன்னிலைப் பன்மை யெதிர்மறை வினையாலணையும்பெயர்;
இர் – விகுதி: எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது. உம் – இழிவுசிறப்பு. எய்தல், எய்து – பகுதி.
முந்நீர் – படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மை யுடையது; நீர்மை – தன்மை:
ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழைநீர்) என்னும் மூன்றுநீரையுடையது என்றலு முண்டு; பண்புத்தொகையன்மொழி.
—————
ஏறும் கரியும் பரியும் செற்றான் பரன் என்று மன்றுள்
ஏறும் கரி மறை யாதலினால் ஐயாம் யாதுகுமக்கீடு
ஏறும் கரிய வரங்கற்கு அன்பாய்வினை யென்னுமிடி
ஏறும் கரியுமினி மேற் பிறவியிட ரில்லையே –38-
‘ஏறும் – எருதையும்,
கரியும் – யானையையும்,
பரியும் – குதிரையையும்,
செற்றான் – வென்றவனான திருமால் தானே,
பரன் – (யாவர்க்கும்) மேலான இறைவன்,’
என்று – என்று ஐயந் திரிபறத் தெரிவித்து,
மன்றுள் ஏறும் – அவை யேறுகிற (நியாய சபையாராற் சரி யென்று ஏற்றுக் கொள்ளப்படுகிற),
கரி – சாட்சி,
மறை – வேதமாகும்:
ஆதலினால் – ஆதலால்,
உமக்கு – உங்கட்கு,
ஐயம் யாது – (திருமாலே பரம் பொரு ளென்கிற விஷயத்திற்) சந்தேக மென்ன?
(சிறிதும் சங்கைகொள்ளவேண்டா என்றபடி):
கரிய அரங்கர்க்கு அன்பு ஆய் – கரிய திருநிறமுடைய ரங்கநாதருக்கு (நீங்கள்) அன்புள்ள அடியார்களாகி,
ஈடேறும் – உய்வு பெறுங்கள்: (அங்ஙனம் நீங்கள் அன்பரானால்),
வினை என்னும் இடி ஏறும் கரியும் – (தொன்று தொட்டு வருகிற உங்கள்) கருமமாகிய பேரிடியும் கரிந்தொழியும்:
இனிமேல் பிறவி இடர் இல்லை – (உங்கட்கு) வரும் பிறப்புத் துன்பமும் இல்லையாம்; (எ – று.) – ஈற்று ஏகாரம் – தேற்றம்.
இது, உலகத்தார்க்கு நல்லறிவுணர்த்தியது.
அரங்கர்க்கு அன்புபூண்டு ஒழுகினால், அப்பரமனதருளால், மூவகைக் கருமங்களில் சஞ்சிதம் ஆகாமியம் என்ற இரண்டும் ஒழிய,
பிராரப்தகருமமும் வலியொடுங்கியிடுமென்க.
(சஞ்சிதம் – பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரால் அளவின்றி யீட்டப்பட்ட வினைகளின் பயன்கள்.
பிராரப்தம் – அவ்வினைப் பயன்களுள் இறந்த உடம்புகளால் அனுபவித்தன ஒழியப் பிறந்த உடம்பால் முகந்து நின்றவை.
ஆகாமியம் – இப் பிறப்பில் ஈட்டப்பட்டுப் பின் அனுபவிக்கக் கடவன.)
வேதம் அனைவராலும் தடையின்றி ஒப்புக் கொள்ளப்படும் மூலப் பிரமா ணமென்பார், ‘மன்றுளேறுங் கரி மறை’ என்றார்.
வினைப் பயன் தவறாது விளைந்து வருத்துதலால், ‘இடியேறு’ எனப்பட்டது.
ஏறு – ஆண்பாற்பெயர்; சிறந்ததையும் பெரியதையும் ‘ஏறு’ என்றல், மரபு.
————–
இடராக வந்தெனைப் புன் சிறு தெய்வங்கள் என் செயுமான்
இடராக வன் பிணி மா நாகம் என் செயும் யான் வெருவி
இடராக வன்னி பினலிடி கோண் மற்றுமென் செயும் வில்
இடராக வன்னரங்கன்று இருந்தாள் என்னிதயத்ததே–39-
வில் – வில்லை,
இடம் – இடக்கையிலேந்திய,
ராகவன் – ரகுகுலத்தி லவதரித்தவனான,
அரங்கன் – ரங்கநாதனது,
திரு தாள் – திருவடி,
என் இதயத்தது – அடியேனது மனத்தி லுள்ளது: (ஆதலால்),
புல் சிறு தெய்வங்கள் – இழி குணமுடைய அற்ப தேவதைகள்,
என்னை – இடர்,
ஆக வந்து என் செயும் – துன்பம் விளைப்பனவாக வந்து நெருங்கி யாது செய்ய மாட்டும்?
மானிடர் ஆகம் வல் பிணி மா நாகம் – மனித சரீரத்துக்கு உரிய கொடிய நோய்களாகிய பெரும் பாம்புகள்,
என் செயும் -?
ராகம் வன்னி – செந்நிறமுடைய தீயும்,
புனல் – நீரும்,
இடி – இடியும்,
கோள் – (நவ)கிரகங் களும்,
மற்றும் – இன்னும் தீங்கு விளைப்பன யாவும்,
யான் வெருவியிட என் செயும் – நான் அஞ்சும்படி என்ன செய்ய மாட்டும்? (எ – று.)
“வேண்டுதல் வேண்டாமை யில்லானடி சேர்ந்தார்க்,கி யாண்டு மிடும்பையில” என்றபடி
தன்னைப் பற்றி வருவனவும், பிற வுயிர்களைப் பற்றி வரு வனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையால்
வரும் பிறவித் துன்பங்கள்யாவும் எம்பெருமானது திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு உளவாகா என்பதாம்.
(தன்னைப் பற்றி வருவன – உடம்பைப் பற்றி வருந் தலைநோய் முதலியனவும், மனத்தைப் பற்றிய காமம் கோபம் முதலியனவும்;
இவை, ஆத்யாத்மிகம் எனப்படும்.
பிற வுயிர்களைப் பற்றி வருவன – மிருக பக்ஷி மநுஷ்ய பிசாச சர்ப்ப ராக்ஷ ஸாதிகளால் உண்டாவன; இவை, ஆதிபௌதிகம் எனப்படும்.
தெய்வத்தைப் பற்றி வருவன – குளிர் காற்று மழை இடி வெயில் முதலியவற்றால் நேர்பவை; இவை, ஆதிதைவிகம் எனப்படும்.
(இவற்றை வடநூலார் தாபத்ரய மென்பர்.)
மானிடர் – மாநுஷர் என்ற வடசொல்லின் விகாரம்.
ராகவஹ்நி என்ற வடமொழித் தொடர், விகாரப்பட்டது.
ராகவன் – வடமொழித்தத்திதாந்த நாமம்.
இதயம் – வடசொற்சிதைவு. தாள் – சாதி யொருமை. ராகவன்னரங்கன், னகரமெய் – விரித்தல்.
—————–
அத்திரங்கா யாமென வுணரேன் எனதாசையுன்கை
அத்திரங்கா யத்தியிற் பெரிதானாரை யாகிப்பல் வீழ்
அத்திரங்கா யந்திரம் போல் பொறி ஐந்து அழியுமக்கால்
அத்திரங்கா யரங்கா வடியேனுன் அடைக்கலமே –40–
அரங்கா – ! –
காயம் – உடம்பு,
அத்திரம் – நிலையற்றது,
என உணரேன் – என்று அறியும் மெய்யுணர்வுடையனல்லேன் யான்;
எனது ஆசை – என்னுடைய அவாவோ,
உன் கை அத்திரம் காய் அத்தியின் பெரிது – உனது கையினால் எய்யப்பட்ட ஆக்கிநேயாஸ்திரத்தினால்
தவிப்படைந்த கடலினும் பெரியது;
நரை ஆகி – கிழத்தனம் முதிர்ந்து,
பல் வீழ – பற்கள் விழ,
திரங்கா – தோல் திரைந்து,
யந்திரம் போல் பொறி ஐந்து அழியும் அ காலத்து – யந்திரம் போல இடையீடின்றித் தொழில் செய்கிற
பஞ்ச இந்திரியங்களும் அழியும் மரண காலத்தில்,
இரங்காய் – இரக்கங் கொண்டு (அடியேனுக்கு) அருள் செய்வாய்;
அடியேன் உன் அடைக்கலம் – நான் உனது தாசனாகச் சரண்புகுந்தேன்; (எ – று.) – ஆல் – அசை.
“எய்ப் பென்னை வந்து நலியும் போ தங்கேது நா னுன்னை நினைக்க மாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தே னரங்கத்தரவணைப் பள்ளியானே” என்ற பெரியாழ்வாரருளிச்செயல் இங்குக் கருதத்தக்கது.
அஸ்திரம், காயம், ஆசா, அஸ்த்ரம், அப்தி, யந்த்ரம், காலம் – வட சொற்கள்.
அப்தி – நீர்தங்குமிடம்; அப் – ஜலம். ‘உன்கையத்திரங்காய்’ என்றது, கடலுக்கு அடைமொழியாய் நின்றது.
திரங்கா – உடன்பாட் டெச்சம்.
யந்திரம்போற் பொறியைந்து அழியும் என்பதற்கு – (சூத்திர மற்ற) மரப்பாவை போலப் பஞ்சேந்திரியங்களும்
அழியு மென்று உரைத்தலு மொன்று.
பொறியைந்து என்பதில், இனைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது.
————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply