“வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன் னூல் பாதங்களான பதினாறு” (பரமதபங்கம் 22)
சித்தசித்தென விரித்துரைத்தன
அனைத்தமைத் துறையுமிறைவனார்
சிறிய பெரிய வுருவுடைய வுடலமென
நடல மில திலகு நிலையினார்
சித்திரத் தொழிலை யொத்த பத்தரொடு
முத்தர்பித்தியெனுமுணர்வினார்.
சிதைவின் மறைநெறியிலெறிய வுரு முறைகள்
முறிய சிறையரிய நிறைவினார்
கத்துவிக்கவல தத்துவித்தை வழி
கற்றவர்க்கசைவின் மாயனார்
கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர்
வழிகளழியு மருண்மொழியினார்
கத்திலக்கிலு மருக்குலத்திலும்
அசித்தி லொக்குமொரு முதல்வனார்
கரணமிடு கடிய பதினொரிருடிகமும்
அடைய முடியுமடி யிருடியார்
ஒத்தனைத் துலகு மொற்றியொற்றி வரும்
இப்பவத்திசை யினிசைவினார்
உருவ மருவமெனு முலகின் முடகிலதில்
உவமை யில திலகு தலைவனார்
உத்தமப்படி வகுத்த வித்தைகளில்
உத்தரிக்க வுணர் குணவனார்
உரிய கிரிசைகளிலரியதொரு விரகு
தெரிய விரையு மவர் பரிவினார்
சத்தசத்தெனு மனைத்தணைத்தவினை
தொத்தறுக்கவல துணிவினார்
‘ சரியுமளவிலுரி யவரையறிவரிய
தமனி நெறி சொருகு விரகினார்
தத்துவத்திரளு தைத் துதைத் தடவு
தத்துவிக்குமவர் தலைவனார்
தருகவுணருமவர் சரணமனுகவிட
லரிய வருள் வரதரடியமே.
– (அத்திகிரி மான்மியம், 19)
சாரீரக சாஸ்த்ர ஷோடசபாதீ ப்ரதிபாத்ய குணங்களை
‘ஸ்ரஷ்டா தேஹீஸ்வநிஷ்டோ நிரவதி மஹிமா பாஸ்த தோஷ ச்ரிதாப்த:
காத்மா தெரிந்த்ரியாதே ருசித ஜநந க்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ|
நிர்த்தோஷ த்வாதி ரம்யோ பஹுபஜநபதம ஸ்வார்ஹ காம்ப்ரஸாத்ய:
பாபச்சித் ப்ரஹ்மநாடீ கதிக்ருத திவஹந் ஸாம்யதச் சாத்ரவேதய:
என்பது அதிகரண ஸாராவலி உபக்ரமத்திலே அநுக்ரமித்த படி.
இப்பாசுரத்தில் இதன் அடைவை அமைத்துள்ள அழகினைக் காட்டுவாம்.
(1) “சித்து அசித்து என விரித்து உரைத்தன அனைத்து அமைத்து உறையும் இறைவனார் –
சேதனங்கள் அசேதனங்கள் என்று விஸ்தரித்துச் சொல்லப்பெற்றவை யான எல்லா வஸ்துக்களையும் ஸ்ருஷ்டித்து
அவற்றில் வஸிக்கும் ஈசுவரன்.
இத்தால் முதல் பாதத்தின் அர்த்தம் என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட “ஸ்ரஷ்டா ” (சிருட்டிப்பவன்) என்பது அருளிச் செய்யப்பட்டதாயிற்று.
(2) “சிறிய பெரிய உரு அடைய உடலம் என நடலம் இலது இலகு நிலையினார்” –
ஸூக்ஷ்மங்களான ஸ்தூலங்களான ரூபங்களை யுடைய வஸ்துக்களெல்லாம் சரீரம் என்னும்படி தோஷம் இல்லாமல்
விளங்கா நிற்கிற ஸ்திதியை யுடையவர்.
இரண்டாம் பாதார்த்தமான தேஹி” (ஸகல சேதனாசேதனங்களையும் தனக்கு சரீரமாக வுடையவன்) என்பது நிரூபிதம்.
(3) “சித்திரத் தொழிலை ஒத்த பத்தரொடு முத்தர் பித்தி எனும் உணர்வினார்”-
சித்திரம் எழுதுவதாகிய வியாபாரத்தோடே ஸத்ருசமான பக்த ஜீவர்களுடன் முக்தர் களான – ஜீவர்களும்
சுவர் என்று சொல்லப்படுகிற (இவற்றிற்கு ஆதாரமாகிய) ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தை உடையவர்.
மூன்றாம் பாதார்த்தமான “ஸ்வநிஷ்ட:” (தன்னை யொழிந்த மற்ற எல்லா வஸ்துக்களையும் தன்னுடைய ஸ்ங்கல்பத்தின்
ஏக தேசத்தினால் தாங்கிக் கொண்டிருப்பவன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகின்றது.
(4) “சிதைவில் மறை நெறியில் எறிய உரு முறைகள் முறிய சிறை அரிய நிறைவினார் “-
அபௌருஷேய மாகையாலே ப்ரமம் முதலிய தோஷங்களினால் சிதைவில்லா . வேதமார்க்கத்திலே
ஆரூடங்களான அசேதனங்களுடைய கிரமங்கள் (ஸங்கோசம், விகாசம், விகாரம், நாசம் முதலியவை முறிந்துபோகுமாறு
(அவை தன்னிடத்தில் இருக்காதவாறு ஸங்கோசம் செய்யமுடியாத குணபூர்த்தியை உடையவர்.
இத்தால் நாலாவது பாதார்த்தமான”நிரவதி மஹிமா”
(“நினைந்தஎல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே … உன் பெருமை” என்கிறபடியே
எல்லையில்லாத பெருமையுடையவன்) என்பது நிரூபிக்கப் பெற்றதாகிறது.
(5) “கத்துவிக்கவல கத்துவித்த வழி கற்றவர்க்கு அசைவில மாயனார்” –
ஜல்ப விதண்டாவாதங்களைச் செய்ய ஸாமர்த்யத்தை யுடைய அப்படிப்பட்ட வாதங்களை அப்யஸித்தவர்கட்கு
அவர்கள் வாதங்களினால் அசைக்க முடியாத விசித்திர சக்தியுடையவர்.
ஐந்தாவது பாதார்த்த மாகிற அபாஸ்த பாத:”
(யுக்திகளினாலும் ‘ஸாங்க்யஸ்ம்ருத் யாதிகளினாலும் சலிப்பிக்க முடியாதது) என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
(6) “கபிலர் கணசரணர் சுகதர் சமணர் அரர் வழிகள் அழியும் அருள் மொழியினார்” –
கபிலருடைய மதாநுஸாரிகளான ஸாங்க்யர்கள், கணாதமதாநுஸாரிகள், பௌத்தர் கள், ஜைனர்கள், பாசுபதமதாநுஸாரிகள்
இவர்களுடைய வழிகள் நசிக்கும்படியான கிருபையினால் சொல்லப்பட்ட வார்த்தையையுடையவர்.
(கபிலாதிகளுடைய மதங்கள் வேதவிருத்தங்களானபடியால் அப்படி விரோதமின்றிக்கே தன்னை ஆச்ரயித்தவர்களிடத்தில்
கிருபையினால் தன்னால் உபதேசிக்கப்பெற்ற சாஸ்த்ரத்தை யுடையவர்.
எனவே கபிலாதி சாஸ்த்ரங்களைக் கொண்டு அநாச்ரிதர்களை மோஹிப்பிப்பதும்
ஸாத்விகமான பாஞ்சராத்திர சாஸ்த்ரத்தைக் கொண்டு தன் ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் செய்கிறான்)
இத்தால் ஆறாவது பாதத்தின் அர்த்தமான
” ஶ்ரிதாப்த:” (தன்னுடைய ஆச்ரிதர்களுக்கு ஆப்தன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(7) ‘கத்து இலக்கிலும் அருக் குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்”–
இந்திரியங்களில் லக்ஷ்யங்களான(இந்திரியங்களால் அறியப்படுமவைகளான ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களிலும்)
இந்திரியங்களால் அறியப்படாத ஜீவவர்க்கத்திலேயும் கீழ்க்கூறப்படாத மஹான் முதலிய அசேதன வஸ்துக்களிலும்
ஸமமாயிருக்கிற அத்விதீயமான காரணபூதர் (பிரகிருதியுடைய ஸாக்ஷாத் விகாரமான மஹத் தத்வத்திலே போல
பரம்பராவிகாரமான பூததந்மாத்ர பஞ்சகத்திலேயும் விகாரமில்லாத ஜீவ வர்க்கத்திலேயும் ஸாக்ஷாதேவ நிமித்தோபாதாந பூதரானவர்)
இத்தால் ஏழாம் பாதத்தினுடைய அர்த்தமான “காத்மா தேருசித ஜநந க்ருத்” என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(8) ‘கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் அடி இருடியார் —
சக்ஷுராதி இந்திரியங்களை பிரவேசிக்கும்படி செய்வதற்கு அசக்யங்களான (அவற்றிற்கு விஷயமில்லாத)
பதினொரு இந்திரியங்களும் எல்லாம் நசிக்கும்படியான ஆதிகாலத்தில் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை
ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருக்கும் ரிஷி யாகிய பகவான். –
இத்தால் எட்டாம் பாதத்தின் அர்த்தமான ‘இந்த்ரியாதே ருசித ஜநந க்ருத்’ என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(9) “அனைத்து உலகும் ஒத்து ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்” –
ஸமஸ்த லோகங்களிலேயும் ஸமமாக இருந்து மேன்மேலென விருத்தி அடைந்து வருகிற
(ஒன்றை அநுஸரித்து மற்றொன்றாக கர்மம், அவித்யை, வாஸனை, ருசி, ப்ரக்ருதி ஸம்பந்தம் என்பவை
சக்கரம் போல் ஒன்றின் பின் ஒன்றாய் வருகிற)
இந்த ஸம்ஸாரத்தில் தானும் அவற்றுடன் சேர்ந்திருக்கும்படியான அங்கீகாரத்தை யுடையவர்.
(அவரவர்களுடைய கர்மாநுகுணமாக அவரவர்கள் ஸம்ஸரிக்கும் பொழுது தானும் கூட இருந்து நடத்துபவன்).
இத்தால் ஒன்பதாம் பாதத்தின் அர்த்தமான ஸம்ஸ்ருதௌ தந்தரவாஹீ என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(10) “உருவம் அருவம் எனும் உலகில் முடகு இல் எனில் உவமை இலது இலகு தலைவனார்” —
ரூபத்தை யுடைய சேதன வஸ்துக்கள் ரூபம் இல்லாத அசேதன வஸ்துக்கள் என்று சொல்லப்படுகிற லோகங்களில்
இருக்கச் செய்தே ஸங்கோசம் இல்லாதவன் என்கிற விஷயத்தில் உபமானம் இல்லாதபடி விளங்குகின்ற பிரதாந பூதர்.
(சேதனாசேதன வஸ்துக்களுடன் கலந்திருக்கச் செய்தேயும் அவற்றினுடைய தோஷங்கள் தன்னிடத்தில் தட்டாதபடி பிரகாசிக்கிறான்.)
இத்தால் பத்தாம் பாதத்தின் அர்த்தமாகிற நிர்தோஷத்வாதி ரம்ய; என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(11) “உத்தமப்படி ‘வகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்”–
உத்தம ப்ரகாரத்தாலே (பரம புருஷார்த்த ஸாதனமாக) பிரித்துச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு ப்ரும்ம வித்யைகளில்
ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தாரணம் செய்வ தற்காக அந்தந்த வித்யா நிஷ்டர்களினால் அநுஸந்திக்கப் படுகிற குணத்தையுடையவர்.
பதினோராம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட பஹுஜன பதம்
(அநேகம் விதங்களான உபாஸனங்களுக்கு விஷயமானவர்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(12) ” உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினார்” —
அவரவர்கள் வர்ணாச்ரமத்திற்கு உசிதமான நித்ய நைமித்திக காம்ய கர்மங்களில் அநுஷ்டிக்க முடியாததான ஒரு உபாயத்தினால்
(பலாபி ஸந்தியில்லாமல் ஸாத்விக த்யாகத்துடன் அநுஷ்டிப்பதினால்) தன்னை உள்ளபடி அறிந்து கொள்ள
த்வரிக்குமவர்களிடத்தில் கிருபையை உடையவர்.
இத்தால் பனிரெண்டாம் பாதத்திற்கு அர்த்த மான ”ஸ்வார் ஹ கர்ம ப்ரஸாத்ய:” என்பது நிரூபிக்கப்பட்ட தாகிறது.
(13) ‘ சத்தசத்தெனு மனைத்தணைத்தவினை தொத்தறுக்க வலதுணிவினார் —
புண்ணிய ரூபங்களான ஸத்துக்கள் பாப ரூபங்களான அசத்துக்கள் என்று சொல்லப்பட்ட ஸமஸ்தங்களான
ஆத்மாவைச் சூழ்ந்து கொண்டிருக்கிற இரண்டு வித கர்மங்களுடைய ஸம்பந்தத்தை சேதிக்கச் சக்தமான நிச்சயத்தையுடையவர்.
(இவனுடைய ஸங்கல்பமுண்டாகில் வேறு தடுப்பாரில்லை).
இத்தால் பதின்மூன்றாம் பாத அர்த்தமான ‘பாபச்சித் என்பது நிரூபிக்கப்பட்ட தாயிற்று.
(14) “சரியுமளவில் உரியவரை அறிவரிய, தமனிநெறி சொருகுவிரகினார்” —
தேகந்தளருங் காலத்திலே (சரீர விச்லேஷ சமயத்தில்) அர்ச்சிராதி கதியாலே போகக்கூடிய யோக்யதை யுடையவர்களை
பகவத் கடாக்ஷத்தாலன்றி அறிய முடியாததான நூற்றோராவதான ப்ரும்ம நாடியில் பிரவேசிக்கும்படியான உபாயத்தை அறிந்தவர்.
இத்தால் பதிநாலாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட “ப்ரஹ்ம நாடீ கதிக்ருது” என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.
(15) “தத்துவத்திரள் உதைத்து தைத்து அடைவு தத்து விக்கு மவர் தலைவனார்” —
பிராகிருத தத்துவங்களினுடைய ஸமூஹத்தை பாதங்களாலே ஆக்ரமித்து கிரமத்தில் பிரகிருதி மண்டலத்தைத்
தாண்டுவிக்குமவரான அர்ச்சிஸு முதலிய ஆதிவாஹிகர்கட்கு நியாமகர்.
இத்தால் பதினைந்தாம் . பாதார்த்தமான அதிவஹந்’ என்பது நிரூபிக்கப்பெற்றது.
(16) “தருக வுணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர்” —
தங்களுக்கு அவன் திருவடிகளிலே அது பாவ்யமாகக் கொடுப்பதற்காக ந்யாஸோபாஸனாதிகளைச் செய்யுமவர்
அவனுடைய திருவடிகளைக்கிட்டி அநுபவிக்கும் பொழுது விடுவதற்கு அசக்யமான கிருபையாலே
ஸகல புருஷார்த்த ப்ரதரான பேரருளாளர்.
இத்தால் பதினாறாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட “ஸாம்யத:” என்பது நிரூபிக்கப் பட்டதாகிறது.
பரம பதத்தில் பகவானுடைய கல்யாண குணங்களுக்குத் தோற்று அடிமை செய்தாலும்
அபஹதபாப்மத்வாதி குணங்களின் ஆவிர்பர்வத்தினால் பரமாத்மாவுக்கு ஸத்ருசனாகவிறே இவன் இருப்பது என்று தாத்பர்யம்.
—————
” பயின்மதி நீயே பயின்மதி தருதலின்
வெளியு நீயே வெளியுற நிற்றலின்
தாயு நீயே சாயைதந்துகத்தலின்
தந்தையு நீயே முந்தி நின்றளித்தலின்
உறவு நீயே துறவா தொழிதலின்
உற்றது நீயே சிற்றின்ப மின்மையின்
ஆறு நீயே யாற்றுக் கருடலின்
அறமு நீயே மறநிலை மாய்த்தலின்
துணைவனு நீயே யிணையிலையாதலின்
துய்யனு நீயே செய்யாளுறைதலின்
காரண நீயே நாரணனாதலின்
கற்பக நீயே நற்பதந் தருதலின்
இறைவனு நீயே குறையொன்றிலாமையின்
இன்பனு நீயே துன்பந் துடைத்தலின்
யானு நீயே யென்னுளுறைதலின்
எனது நீயே யுன தன்றியின்மையின்
நல்லாய் நீயே பொல்லாங்கிலாமையின்
வல்லாய் நீயே வய்யமுண்டுமிழ்தலின்
எங்கனமாகு மெய்ய! நின் வியப்பே
அங்ஙனே யொக்க வறிவதாரணமே.”
– (மும்மணிக்கோவை. 7)
(தன்னைத்தான் அநுபவித்தபடியே பேசுமிடத்தில் ஸஹேதுகமாக உபபாதித்தருளுகிறார்.
பயில்மதி – இடை விடாதே அநுபவிக்க அளவுடைமையை ;
தருதலின் – எனக்கு அருள் செய்கையாலே ;
பயில்மதி – அநுபவயோக்யனான சந்திரன் ;
வெளியுற – இதர தேஜோவஸ்துக்கள் பிரகாசத்தை அடையும்படி ;
நிற்றலின் – நிற்பதினாலே ;
வெளியும் – நிருபாதிகதேஜோ ரூபியான சூர்யனும் ;
சாயை-நிழலை (சாயை — ஸம்ஸார ஸந்தாப ஹரமான திருவடிகளை);
தந்து – கொடுத்து ;
உகத்தலின் – சந்தோஷித்தலால்,
தாயும் – மாதாவும் ;
முந்தி – சிருஷ்டி காலத்திற்கு முன்னே ;
அளித்தலின் – கரணகளேபர ப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ;
தந்தையும் – பிதாவும் ( அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து,
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்” – திருவாய் மொழி 2-3-3) ;
துறவாது – விடாதே ;
ஒழிதலின் – ஒழிகையாலே ;
உறவும் – நிர்வ்யாஜ பந்துவும் (“தேறேல் என்னை உன் பொன்னடிச் சேர்த்து ஒல்லை,
வேறே போக எஞ்ஞான்றும் விடலே’. திருவாய்மொழி 2-9-10) ;
சிற்றின்பம் – அல்பாநுகூலங்களாகத் தோற்றிப் பின்னர் அநர்த்தத்தை விளைவிக்கும் காமங்கள் ;
இன்மையின் — இல்லாமையால் ;
உற்றதும் – ப்ராப்தமும், வகுத்த விஷயமும் ;
பரித்யாகாநர்ஹ அந்தரங்கவஸ்து ; வாஸஸ்தானமும் ;
ஆற்றுக்கு – அநுஷ்டிக்குமேதேனுமொரு வ்யாஜமாத்ரமான உபாயத்துக்கு ;
அருள்தலின் – உபாயலாகவத்தையும், பல கௌரவத்தையும், நினையாதே பரிபூர்ண பலப்ரதானம் பண்ணி ரக்ஷிக்கையாலே ;
ஆறும் – நிருபாதிக ஸர்வவித ஸம்பந்தமுமுடையவனாகையாலே இத்தலையில் வ்யாஜ மாத்ரத்தைக் கொண்டு
தான் உபாயாந்தர ஸ்தானத்திலே நிற்கையாலே ஸகலபல சாதகமும்;
மறநிலை – பாபங்களின் நிலையை ;
மாய்த்தலில் – நசிப்பிக்கையாலே ;
அறமும் – தர்மமும் ;
இணை – தன்னோடொப்பார் ;
இல்லையாதலின் – இல்லாமையால் (“ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா” – திருவாய்மொழி 2-3-2) ;
துணைவனும் – சகாயமாய் நிற்பவனும் ;
செய்யாள் – பெரிய பிராட்டியார்;
உறைதலின் – அகலகில்லேனிறையுமென்று நித்ய வாஸம் பண்ணுகையாலே ;
துய்யனும் — பரிசுத்தனும்
நாரணனாதலின் — நாராயணனாகையாலே ;
காரணம் –நிகில ஜகந்நிமித்தோபாதாநருப ஸர்வவித காரணபூதனும் ;
நற்பதந்தருதலின் – பரம பதத்தைத் தருகையாலே ;
கற்பகம் – கல்ப வ்ருக்ஷம் ;
குறை ஒன்று – ஒரு குறையும்;
இலாமையின் — ஸ்வரூப ரூப குண விபவாதிகளில் நியூநதை ஒன்றுமில்லாமையாலே ;
இறைவனும் – ஸர்வேசுவரனும்;
துன்பம் – துயரங்களை;
துடைத்தான் — நீக்குகையால்;
இன்பமும் – நிருபாதிகாநந்த ஸ்வருபமும்;
என்னுள் — எனக்குள்;
உறைதலின் – கறந்தபாலுள் நெய்யே போல் அப்ருதக்ஸித்தனாய் வஸிக்கையாலே;
யானும் – இவ்வாத்மாவைப்பற்ற எவன் நியந்தாவும், ஆதாரமும், சேஷியும் ஆகையாலே யானும் நீயே;
உனதன்றி – உன்னுடையதல்லாமல் :
இன்மையின் – இல்லாமையின்;
எனதும் மதியமெல்லாம் பொல்லாங்கு இலாமையின் – தீமையொன்றுமில்லையாதலின்; –
நல்லாய்- கல்யாண ஸ்வபாவன், நல்லவன்;
வய்யம்-பூமியை, ப்ரஹ்மாண்ட லக்ஷ சதகோடிகளை ;
உண்டு-பிரளயம் வந்தவாறே வயிற்றில் வைத்து ரக்ஷித்து;
உமிழ்தலில் -பிரளயம் போனவாறே யதா பூர்வம் நிகரணம் பண்ணுகையாலே;
வல்லாய் — வல்லவன், நிகில ஜகத் ஶ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரகரண சக்தன்;
மெய்ய — அடியவர்க்கு மெய்யனே;
எங்ஙனமாகும் அங்ஙனமே-எவ்வகையாயிரா நின்றதோ அவ்வகையில் எல்லாம் ;
நின் வியப்பு -உன் ஆச்சர்ய ஸ்வபாவம்;
ஒக்க அறிவது — உன் படிக்கேற்க அறிய வல்லது;
ஆரணமே — அபௌருஷேயமான நித்ய நிர்த்தோஷமான வேதமே).
“ஸோ அங்கவேத யதியா ந வேத” என்று கைவாங்கின பழமறை போலன்றிக்கே
மாறன்மறை அனைத்தையும் அறிவது. “ஸேவா யோக்ய:” (திரமிடோபநிஷத் ஸாரம்) இத்யாதியிற்படியே
திருவாய்மொழி பத்து பத்துக்களிலும் ப்ரதிபாதிதங் களான பத்து அர்த்தங்களும்
இப்பாசுரத்திலே அருளிச் செய்யப் பட்டிருக்கிறது.
எங்ஙனமென்னில்,
(1) பயின்மதி நீயே — ஸேவ்யத்வம் (எம்பெருமானே தொழத் தகுந்தவன்)
(2) வெளியுநீயே –போக்யத்வம் (எம்பெருமானே பரம போக்யன்)
(3) தாயு நீயே, தந்தையு நீயே – சுபஸுபக விக்ரஹத்வம் (எம்பெருமானே விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹம் படைத்தவன்)
(4) உறவு நீயே, உற்றதுநீயே -ஸர்வ போக்யாதிகத்வம்
(போக்யங்களான ஸகல புருஷார்த்தங்களிற் காட்டிலும் மேம்பட்ட அளவற்ற யோக்யதையை யுடையவன்)
(5) ஆறுநீயே, அறமுநீயே – ச்ரேயஸ்தத்தேதுதாநம்
(உபாயமான புருஷார்த்தத்தையும் அதற்கு உறுப்பான உபாயத்தையும் எம்பெருமான் தானே கொடுத்தருள்பவன்).
(6) துணைவனு நீயே, துய்யனுநீயே – ப்ரபதந ஸுலபத்வம்
(தன்னை யடைக்கலம் புகுகிறவர்களுக்கு மிகவும் எளியன்)
(7) காரணநீயே, கற்பகநீயே – அநிஷ்ட நிவர்த்தகத்வம் (அடியார்களது அல்லல் போக்கும் தன்மையன்)
(8) இறைவனுநீயே, இன்பனுநீயே – ஆச்ரிதேச்சாநுஸாரித் வம் (அடியார்களுடைய அபிப்பிராயத்தைப் பின் சென்று நடப்பவன்)
(9) யானு நீயே, எனதுநீயே – நிருபாதிக ஸுஹ்ருத்வம்
(இயற்கையாகவே இன்னருள் புரியும் இயல்வினன்)
(10) நல்லாய் நீயே, வல்லாய் நீயே – ஸ்த்பதவீ ஸஹாயத்வம்
(தாளடைந்தோர் தங்கட்குத்தானே நலமந்தமில்லதோர் நாட்டில் வழிக்குத் துணையாமவன் எம்பெருமான்)
———–
“ப்ராப்யஸ்ய ப்ரஹ்மணோ ரூபம் ப்ராப்துச்ச ப்ரத்ய காத்மந: |
ப்ராப்த்யுபாயம் பலம் சைவ ததாப்ராப்தி விரோதிச || வதந்திஸ கலாவேதாஸ் ஸேதிஹாஸ புராணகா:|
என்று ஹாரீத ஸம்ஹிதை இதனை அறுதியிட்டது.
” பொருளொன்றென நின்ற பூமகள் நாதன் அவனடி சேர்ந்து
அருளொன்று மன்பன் அவன்கொளுபாயம் அமைந்த பயன்
மருளொன்றிய வினை வல்விலங்கென்று வையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே.”
– (அதிகாரச் சுருக்கு. 11)
” அயன்பணியு மத்திகிரி அருளாளரடி யிணைமேல்
நயங்கொள் சேர்கச்சிநகர் நான்மறையோர் நல்லருளால்
பயன்களிவை யனைத் துமெனப் பண்டுரைத்தார்படி யுரைத்த
வியன்கலை களீரைந்தும் வேதியர் கட் கினியனவே.” (11)
———-
இம்மாலையின் இறுதிப் பாசுரமான,
“மறைத்தலையிலிசை யெழுத்தில் வணங்கும் வாக்கில்
மந்திரத்தினா லெழுத்தாந் திருநாமத்தில்
நிறைத்திலகு வேற்றுமையி லிரண்டாமொன்றி
னெடுமாறன் கீதையெல்லா நிறைந்த சொல்லில்
உறைத்தவர் கண்டுரைத்த பொருளான தெல்லாம்
உயர் விருத வருளாளப் பெருமாள் தேசின்
திறத்திலிவை திருச்சின்னமாலை பத்துஞ்
செவிக்கினிதாஞ் சிற்றின்ப மிசையாதார்க்கே.” (11)
[மறைத்தலை – வேதமுடி ;
இசை எழுத்து – பிரணவம்;
மந்திரம் – மூலமந்திரம் ;
நாலெழுத்தாந்திருநாமம் – மூலமந்த்ராநு ப்ரவிஷ்டமாய் சதுரக்ஷரமான நாராயண என்பது;
இலகு – விளங்குகிற ;
வேற்றுமை – நான்காம் வேற்றுமை ;
இரண்டாம் ஒன்றில் – கண்டத்வயாத்மகமான துவய மந்திரத்தில் ;
நெடுமால் – விபூத்யத்யாய விச்வ! ரூபாத்யாயப் படியே ஸர்வோத் க்ருஷ்டரான கண்ணன்;
கீதை – கீதா சாஸ்த்ரம் ;
நிறைந்த சொல் – பூர்த்திகரமான சரம சுலோகம்;
தேசின் திறத்தில் – தேஜஸ்ஸு விஷயமாக ;
இசையாதார்க்கு – ஸம்மதியாதவர்கட்கு ;
இனிதாம் – போக்யமாம்.)
என்பது இம்மாலைப் பொருளை அடைவாக அமைத்து அருளியுள்ளதை அங்கைக் கனிபோல அறிவிக்கின்றது.
——————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply