ஸ்ரீ அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ பதரி நாராயணன்–

கூர்மாதின் திவ்ய லோகான் ததுமணி மண்டவம் தத்தரு சேஷம்
தஸ்மின் தர்மாதி பீடம் சதுமரி கமலம் க்ராஹஹ க்ராஹஹநிம்ச
விஷ்ணும்தே விபூஷா ஷினாதே வைனதேயம்
சேநேசத்துவார பாலன் விஷ்ணு முகத்தான் பிரபத்தியே !!

ஸ்ரீ அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!!

திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி
மூலவர் பத்ரி நாராயணன்
உத்ஸவர்
தாயார் அரவிந்தவல்லித்தாயார்
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசை கிழக்கு
பாசுரங்கள் 22
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 21-பெரியாழ்வார் -1-

இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிபடர்ந்த சூழலில், மலையின் மத்தியில்,
எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நர நாராயண பர்வதத்தின் மடியில்,
பவித்திரமான அலகநந்தா நதிக்கரையில், அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும்
பத்ரிநாத் மலைச் சிகரங்களின் மத்தியில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில்,
இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது.
அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது.
இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது.
பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும்.
தொடக்கூட முடியாத அளவில் வேகமாகவும், மிகக்குளிர்ந்த நிலையிலும்,
அலகநந்தா பக்கத்திலேயே ஓடிக்கொண்டு இருக்கும் போது இந்த வெந்நீர் ஊற்று மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
அதற்கான காரணம் இன்னும் அறியப்படாததும் மேலும் ஆச்சர்யம் தரும்.
தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் சூடாக வருகிறது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு எம்பெருமானின் அனுக்கிரகம்.
இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து, தரிசிக்க வசதியாக உள்ளது.

தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் சிம்ம துவாரத்தில் இருக்கும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார்.
கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.
இங்கு
பத்ரி நாராயணன்,
கருடாழ்வார்,
நாரதர்,
உத்தவர்,
குபேரன்,
நரன் மற்றும் நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர்.

பத்ரி நாராயணர், இலந்தை மரத்தின் கீழ், ஜடாபரிதனாய், நான்கு திருக்கரங்களுடன், (சதுர் புஜங்களுடன்),
கிழக்கு நோக்கி மேல் வலது திருக்கரத்தில் சக்கரமும், மேல் இடது திருக்கரத்தில் சங்கும்,
கீழ் வலது இடது திருக்கரங்களை யோக முத்திரையாக் கொண்டு,
மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன்,
பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மூர்த்தியாக
வீற்று இருந்து தபஸ்வி வேஷத்தில் காட்சி கொடுக்கிறார்.

பகவானின் வலப்புறம் குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள்.
இடப்புறத்தில் தேவரிஷி நாரதர், உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர்.

ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே.

தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள தாயார் சந்நிதியில்,
மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள்.
பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது.
கோவிலின் பின்புறம் லக்ஷ்மி நரசிம்ஹருக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது,
அதில் இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.

இங்கு எம்பெருமானுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை,
மக்களுக்கு எதிரிலேயே, திரை எதுவும் போடாமல் பக்தர்கள் நேரடியாக காண்பதற்கு ஏதுவாக
கேரளத்தை சேர்ந்த நம்பூத்ரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து நடைபெறுகின்றன.

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு, திருமஞ்சனம் செய்து
நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து,
ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார்.
இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். அ
ப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர்.
இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர்.
இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர்.
இந்த பூஜை நடைபெறும் சமயம் எம்பெருமானின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

இங்கு கோவிலின் வடபுறம் அலகநந்தாவின் கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது.
இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு, கயா ஸ்ராத்தம் போல், இங்கும் ஸ்ராத்தம் செய்யப்படுகிறது.
பத்ரிநாராயணனுக்கு காலையில் நிவேதனம் செய்துவிட்டு, பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் எனப்படும் பிரசாதத்தை,
கோவிலிலேயே கொடுப்பார்கள்.
இவ்விடத்தில் ஸ்ராத்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோக்ஷம் கிடைப்பதாக ஐதீஹம்.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன.
அவை,
தப்த குண்டம்,
பிரகலாத குண்டம்,
நாரத குண்டம்,
கூர்ம தாரா மற்றும் ரிஷிகங்கா.

இதில் தப்த குண்டத்தில், அக்னி வாசம் செய்வதாக வரலாறு.
தப்த குண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது.
மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது.

கூர்ம தாரா தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது.
இங்கு எம்பெருமானின் திருவடிகளை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை
மானா கிராமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள்.
இந்த மானா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது,
அதற்கு பிறகு திபெத். இங்கே கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது.
சரஸ்வதி நதி இங்கே பூமிக்குள் சென்று, திரிவேணி சங்கமத்தில் ( அலஹாபாத் பிரயாகை) மீண்டும்
வெளிவருவதாக நம் புராணங்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.
இவற்றை தவிர, பத்ரியில் வஸுதார என்ற பனித்திவலைகள் விழும் நீர்வீழ்ச்சியும் உண்டு.
அந்த நீர்திவிலைகள் நம் மேல் படும் போது புண்ணியம் தரும் என்று நம்பப் படுகிறது.

பத்ரிகாச்ரம் பற்றி குறிப்பிடுகையில் “பஞ்ச பத்ரி” என்று ஐந்து பத்ரி பற்றி சொல்லப்பட்டுள்ளது.
பெரும்பாலானவை இறுதியில் 4 அல்லது 5 கிமீ, போல் நடைப் பயணத்தின் மூலமாகவே அடைய வேண்டி உள்ளது.
புருஷசூக்தம் ஸ்லோகத்தை இயற்றிய நாராயணர், இந்த ஐந்து இடங்களில் தவம் இருந்ததாக சொல்வர்.
அவை,
யோக பத்ரி,
வ்ருத்த பத்ரி,
த்யான பத்ரி,
தபோ பத்ரி மற்றும்
பவிஷ்ய பத்ரி.

வ்ருத்த பத்ரி
அலகநந்தாவின் அழகான பள்ளத்தாக்கு , மிகவும் ரம்யமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார்.
ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார்.

த்யான பத்ரியில்
பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.

யோக பத்ரியில்
தியான மந்திர் அமைந்துள்ளது. அங்கே, கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான்
தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார்.

த்யானபத்ரி, யோகபத்ரி இரண்டும் ஒன்று, பாண்டுகேஸ்வரில் உள்ளது, என்று சொல்பவர்கள் உண்டு.
அவர்கள், இதனைத் தவிர, ஆதிபத்ரி என்று இன்னொரு ஸ்தலமும் கர்ண ப்ரயாகை அருகில் சொல்லப்படுகிறது.

பவிஷ்ய பத்ரி
தபோவனில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்டதாகவும்,
கலியுகத்தில் தாம் இங்கு எழுந்தருளப் போவதாகவும் சொல்லப் படுகிறது.
வரும் காலத்தில், இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகும் என்றும்,
அது சமயம் பத்ரி நாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது.

தபோ பத்ரி தான் இன்றைய பத்ரிநாத், அல்லது பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகிறது

தப்த குண்டம் :
அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார்.
இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார்.
விஷ்ணு, அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால்
அவருடைய பாவமெல்லாம் நீங்கும் என்றும், அதனால் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார்.
அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம்.
சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலகாநந்தா நதியில் தொட முடியாத அளவிற்கு
குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

நாரதர் :
வ்ருத்த பத்ரி நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம்.
இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.
நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும்,
பின்னாளில் ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குபேரன் :
மஹாலக்ஷ்மியை திருமணம் முடிக்க எம்பெருமான் இங்கு குபேரனை அழைத்து
விமரிசையாக தன்னுடைய திருமண ஏற்பாட்டை செய்த திருத்தலம்.
அதனால், குபேரனும் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார்.

ப்ரம்ம கபாலம் :
சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன.
சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார்.
இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது.
அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை.
சிவன், விஷ்ணுவிடம் இதற்கு பரிகாரம் கேட்டபோது, ‘பூலோகத்தில் ஒரு பதி விரதையிடம் பிச்சையினை பெற்றால்’,
பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று கூறினார்.
சிவபெருமான், பூலோகத்தில் பத்ரி ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க,
மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது.
அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர்.
இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஹனுமான் :
பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது.
இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர்.
ஹனுமான் கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

உத்தவர் :
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி
உத்தவரை அங்கு சென்று, தனது திருவடி தீர்த்தமான அலகநந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய வேண்டும் என்று உபதேசித்தார்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது,
தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர், கிருஷ்ணைரை சந்தித்து,
தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார்.
உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,
உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார்.
பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும்,
அதுவரை பத்ரி சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் வைகுந்தம் வந்தடைய ஆசி வழங்கினார்.
கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் சென்று பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு,
வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

வியாசர் :
இந்த மலையில், மணிபத்ரபூர் என்ற மானா கிராமத்தில், ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார்.
வியாச குகைக்கு எதிரில் உள்ளது. இந்த குகை புராதனப் பெருமையைப் பறை சாற்றியபடி அமைந்திருக்கிறது.
இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவியம் மனதில் ஊன்றியது.
வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார்.
உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகம் எடுத்ததாகவும்,
அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை என்றும்,
ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்து போகச் செய்து விட்டார் என்றும் ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.

பாண்டு :
இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும்,
அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது.
பீமன் கட்டிய பீம்பாலம் வழியாகத் தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள்
என்று இங்கு நிலவும் செவி வழி செய்தி.

ஆதி சங்கரர்:
எம்பெருமானின் உத்திரவு படி பிரம்மா முதலிய தேவர்கள், அலகானந்தா, நாரத குண்டத்தில் இருந்த
பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்து
அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வந்தார்.
இடையில் இதற்கு தடை ஏற்பட்டு, விக்ரகம் மறைந்தது.
ஆதிசங்கரர் பத்ரிநாத் வந்தபோது, அவர் கனவில் தோன்றிய எம்பெருமானை,
ஆதிசங்கரரே மீண்டும் நாரத குண்டத்தில் இருந்து மீட்டு மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
இதனால் தான் இன்னும் ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நம்பூதிரிகளால்,
அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading