பேரியல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னைப் பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலத்திப் பொருவரும் சீர்
ஆரியன் செம்மை இராமானுசன் முனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக் கீழ் என்னைச் சேர்ததற்கே -இராமானுஜ நூற்றந்தாதி–3-
ஆரியன் செம்மை இராமானுசன்
ஆரியன் இச் சொல்லுக்கு –
சமதிகத சர்வ சாஸ்த்ரராய் –சாஸ்திரம் அனைத்தும் நன்கு அறிந்தவராய்–என்று உரை அருளினார் பெரிய ஜீயர்
அதற்க்கு அடி -அநார்ய ஜூஷ்ட மச்வர்க்யம்-என்னும் இடத்தில் கீதா பாஷ்யத்தில்-
ஆர்ய பதத்துக்கு வித்வான் -என்று வியாக்யானம் செய்யப் பட்டு இருக்கிறது –
ஆர்ய என்னும் சொல் வித்வான் என்னும் பொருளை எங்கனம் தருகிறது என்பதை-
தாத்பர்ய சந்த்ரிகையில் வேதாந்த தேசிகன் –
அதத்த் வேப்யோ தூராத்யாதா புத்தி ஏஷாம் தே ஆர்யா –
தத்துவம் அல்லாதவைகளில் நின்றும் தூர விலகின புத்தி உள்ளவர்கள் ஆர்யர்கள் -என்று விளககித் தந்துள்ளார் –
சாஸ்த்ரங்களில் சொன்ன தத்துவத்தில் ஊன்றி –அல்லாதவற்றில் புத்தியை செலுத்தாத தத்துவ தர்சிகள் ஆர்யர் என்றது ஆயிற்று
——————–
ராமன்- சீதை திருமணம் நடப்பதற்கு முன், ராமனது குல குருவான வசிஷ்டர்
ராமனது பரம்பரையில் வந்த மன்னர்கள் பெயரையும் அவர்கள் பெருமையையும் பற்றியும் பேசுகிறார்.
ராமனுக்கு முன் வந்த மன்னர்கள் பெயரை வரிசையாகச் சொல்கிறார்.
அதாவது இன்னார் மகன் இன்னார் பட்டத்துக்கு வந்தார் என்று அடுத்ததடுத்து வரிசையாகச் சொல்கிறார்.
1- பிரம்மா
2-மரீசி
3- காஷ்யபர்
4- சூரியன் (சோழர் பரம்பரை இங்கிருந்து ஆரம்பிக்கிறது)
5- மனு
6- இக்ஷ்வாகு (வசிஷ்டர் இவரை அயோத்தியின் முதல் அரசன் என்று சொல்கிறார். )
7- குக்ஷி
8- விகுக்ஷி
9 -பாணன்
10- அனரண்யன்
11- ப்ரீது (சோழர் பரம்பரையில் வருகிறார்)
12- திரிசங்கு
13- துந்துமாரன் (சோழர் பரம்பரையில் வருகிறார்)
14- யுவனாஷ்வன் (சோழர் பரம்பரையில் வருகிறார்)
15- மாந்தாதா (இதுவரை சோழன் பரம்பரையும், ராமன் பரம்பரையும் ஒத்து இருக்கிறது.)
16- சுசந்தி
17- த்ருவசந்தி
18- பரதன்
19- அசிதன்
20- சகரன்
21- அசமஞ்சன்
22- அம்ஷுமான்
23- திலீபன்
24- பாகீரதன் (கங்கையைக் கொண்டு வந்தவன்)
25- ககுஸ்தன் (சோழர் பரம்பரையில் இக்ஷ்வாகுவுக்கு அடுத்து இந்த அரசன் வந்து விடுகிறான்)
26- ரகு
27- பிரவ்ரித்தன்
28- சங்கனன்
29- சுதர்ஷணன்
30- அக்னிவர்ச்ணன்
31- ஷீக்ருகன்
32- மரு
33- ப்ரஷுஸ்ருகன்
34- அம்பரீஷன்
35- நஹுஷன்
36- யயாதி
37- நாபாகன்
38- அஜன்
39- தசரதன்
40-ராமன்
சோழர் பரம்பரையையும், ராமன் பரம்பரையையும் ஒப்பீடு செய்யும் போது சில விஷயங்கள் தெளிவாகின்றன.
மாந்தாதா வரை, இருவர் பரம்பரையும் ஒத்ததாக உள்ளது.
மாந்தாதாவுக்குப் பின் சோழர் பரம்பரையில் முசுகுந்தன் வருகிறான்.
ராமன் பரம்பரையில் சுசந்தி வருகிறான்.
அவனுடைய இரண்டு பிள்ளைகளில் முதல் மகன் இக்ஷ்வாகு சிம்மாசனத்துக்கு வருகிறான் என்று வசிஷ்டர் கூறுகிறார்.
மற்றொரு பிள்ளையைப் பற்றி ராமாயணத்தில் ஒரு குறிப்பும் இல்லை.
இதைக் காணும் போது ஒரு அரசனின் பிள்ளைகள் பலர் இருந்தால்,
அவர்களில் ஒருவர் இக்ஷ்வாகு பரம்பரையில் தொடர்கிறார்.
மற்றவர்கள், வேறு வேறு இடங்களில் அரசு ஸ்தாபனம் செய்து ஆண்டிருக்க வேண்டும்.
அவர்கள் வழியில் தனித் தனி பரம்பரை தொடர்ந்திருக்க வேண்டும்.
இன்றைக்கு பாகிஸ்தானத்தில் இருக்கும் பெஷாவர் என்பது பரதனது மகன் புஷ்கலனது பெயரில்
புஷ்கலாவதி என்று ஸ்தாபிக்கப்பட்டு, அந்த மகனிடமே ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
மற்றொரு மகனான தக்ஷன் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டதே தக்ஷசீலம் என்னும் நகரம்.
அதுவும் அந்த மகனிடம் கொடுக்கப்பட்டு அவனை அடுத்து அவன் பரம்பரையினர் ஆண்டு வந்தனர்.
அது போலவே லக்ஷ்மணன், சத்ருக்னன் மகன்களுக்கும், வேறு வேறு இடங்களில் ஆட்சிப் பொறுப்பு
கொடுக்கப்பற்றிருக்கிறது என்று மகா கவி காளிதாசர் தான் எழுதிய ‘ரகு வம்சம்’ என்னும் நூலில் எழுதி உள்ளார்.
ராமனுக்குப் பிறகு அயோத்தி சிம்மாசனத்துக்கு வந்தது ராமனின் மகனான குசன்,
அவனைத் தொடர்ந்து அவன் சந்ததியினர் என்று காளிதாசர் அவர்கள் பெயரைப் பட்டியலிடுகிறார்.
சிபியின் சரித்திரத்தைப் பல்வேறு இலக்கியங்களிலிருந்து ஆராய்ந்தால், அவன் தந்தை உசீனரன் என்று தெரிகிறது.
சோழர் செப்பேடுகளும் அதையே தெரிவிக்கின்றன.
உசீனரன் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவன் என்று மகா பாரதத்தில் வருகிறது.
ராமன் பரம்பரையில் வந்த யயாதியின் மகளான மாதவிக்கும் உசீனரனுக்கும் பிறந்தவனே சிபி என்பது முக்கியச் செய்தி.
அதாவது, மனுவில் ஆரம்பித்து மாந்தாதா வரை சோழர்கள் குலமும் சூரிய குலத்திலிருந்து வேறுபடவில்லை.
அதற்குப் பிறகு, பங்காளிகளாகப் பிரிந்து மாறியிருக்க வேண்டும்.
அப்படி மாறினதில் சூரிய வம்சத்தை விட்டு விலகியும் போயிருக்கிறார்கள்.
ஆண் சந்ததி நின்று போய், பெண் சந்ததி மூலமாக குலம் மாறியிருக்க வேண்டும்.
எனினும் யயாதியின் மகள் மூலம், மீண்டும் சூரிய குல சம்பந்தம் வந்திருக்கிறது.
யயாதி என்னும் அரசன், ராமனது தந்தையான தசரதனுக்குக் கொள்ளுத் தாத்தா.
அவனது மகள் வழியில் வந்த சந்ததியில் சிபி வருகிறான்.
இப்படி சிபிக்கும், ராமனுக்கும் ரத்த சம்பந்தம் இருந்திருக்கின்றது.
சிபி யயாதியின் பேரன். அவர்கள் இருவரைப் பற்றியும் ஒரு குறிப்பு வருகிறது.
யயாதி ஒரு காரணமாக தேவ லோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு விடுகிறான்.
அப்பொழுது தன்னை சிறந்த தவம் உடையவர்களுக்கிடையே தள்ளிவிடுமாறு கேட்டுக் கொள்கிறான்.
அதன்படி அவன் சென்றடைந்தவர்களுள் ஒருவன் அவன் பேரனான சிபி என்கிறது மகா பாரதம்.
இதை ராமாயணத்திலும் சொல்லக் காணலாம்.
————
இற்றை நாள் வரை முதலியான் முன் செய்தன
குற்றமு முளவெனிற் பொறுத்தி கொற்றவ;
அற்றதான் முகத்தினில் விழித்தல் ஆரிய!
பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான்.– (கம்ப ராமாயணம் யுத்த காண்டம், கும்பகர்ணன் வதைப் படலம்)
இந்த இடத்தில், உரையாசிரியர்கள் “ஆரிய” என்பதைத் “தலைவன்” என்று எழுதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் (கி.பி. 1370 — 1443)
“வாய்த்த திரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை
ஆர்த்தபுகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேச ரத்ன மாலை) என்று எழுதுகிறார்.
வேதாந்த தேசிகர்(கி.பி. 1269—1370),
“காண்பனவு முரைப்பனவு மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற்
பாண்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்
வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம்
நாம் பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே” (அம்ருதாஸ்வாதி – 37) என்கிறார்.
இங்கே “ஆரியன்” என்பதை “சிறப்புடையவன்” என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
—————————
ஆரிய என்ற சொல் பாரதியாரின் தேசீய கீதங்களில் 24 இடங்களில் வருகிறது.
ஜய வந்தே மாதரம் பாடல்:
ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் (வந்தே)
எங்கள் நாடு பாடல்:
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.
பாரத மாதா பாடல்:
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்.
சித்த மயமிவ் உலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கி விட்டால் – துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்.
காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.
இங்கெல்லாம் ஆரிய தேவி என பாரத தேவியைக் குறிப்பிடுகிறார் பாரதியார்.
அடுத்து எது ஆரிய நாடு என்பதைத் தெள்ளத் தெளிவாக பாரத தேவியின் திருத் தசாங்கத்தில் குறிப்பிடுகிறார்.
பாரத நாட்டின் எல்லையையும் வகுத்துக் கூறும் அருமையான பாடல் இது.
தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! – வானாடு
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.
தாயின் மணிக்கொடி பாரீர் என்று பாடிய கவிஞர் அனைவரும் அணிவகுத்து
நிற்கும் காட்சியை ஆரியக் காட்சி என்கிறார்.
அணியணி யாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
தமிழ்த் தாய் பாடலில்,
முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்
என்று இங்கு ஆரியத்தை வடமொழி என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.
தமிழச் சாதி பாடலில் பாரதத்தை ஆரிய நாடு என்று அறிவிக்கிறார்.
மற்றவை தழுவி வாழ்வீ ராயின்,
அச்சமொன்று இல்லை! ஆரிய நாட்டின்
அறிவும் பெருமையும் – … …
வாழிய செந்தமிழ்! பாடலில் ஆரியன் என இறைவனைக் குறிப்பிடுகிறார்.
ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
பஞ்சமும் நோயும்நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
சத்ரபதி சிவாஜி பாட்டில் ஆரியன் என்பதற்கு ஒரு DEFENITION தருகிறார் இப்படி:
தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன்.
மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன்.
ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர்
ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!
அடுத்து ஆரிய நீதி என்பது அறநூல்கள் காட்டும் வழி செல்வதேயாம் என்பதை இப்படிக் கூறுகிறார்:
தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
குரு கோவிந்தர் பாட்டில் ஆரியர் ஒரே ஜாதி அதாவது இந்த பாரத நாட்டில் வாழும் அனைவரும்
ஆரிய ஜாதி என்றும் இதைப் பிளவு படுத்தி ஜாதிகள் பல பேசும் அனைவரும் மாய்க என்றும் கூறுகிறார்.
ஹிந்து இனம் ஒரே இனம் என்பது அவரது அடிப்படைக் கொள்கையாக அமைவதை இங்கு காண்கிறோம்.
பாடல் இது தான்:
சீடர்காள்! குலத்தினும் செயலினும் அனைத்தினும்
இக்கணந் தொட்டுநீர் யாவிரும் ஒன்றே
பிரிவுகள் துடைப்பீர்! பிரிதலே சாதல்
ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி
வகுப்பவர் வகுத்து மாய்க, நீர் அனைவிரும்
லாஜபதியின் பிரலாபம் என்ற பாடலில் வரும் வரிகள் இவை:
ஆரியர்தம் தர்மநிலை ஆதரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தங் காதல் துறந்திருந்த நன்னாடு.
ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மைதந்த
சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு.
இங்கெல்லாம் ஆரிய நாடு என்றால் பாரதம் ஆரிய தேவி என்றால்
அன்னை பாரத தேவி என்ற பொருளையே காண்கிறோம்.
தெய்வப் பாடல்களில் 3 இடங்களில் வரும் ஆரிய என்ற சொல்லும்
சுயசரிதையிலும் ஞானப்பாடல்களிலும் கண்ணன் பாட்டிலும் குயில் பாட்டிலும் வரும் ஆரியர் என்ற சொல்லும்
பண்பாடுள்ளவர் என்ற பொருளில் வருகிறது.
அதே போல பாஞ்சாலி சபதத்தில் வரும் 7 இடங்களிலும் இதே பொருளே அமைகிறது.
ஆக பாரதியார் அப்படியே அடி வழுவாது
இந்த பாரத நாட்டை ஆரியர் நாடு என்றும்
பண்பாளரை ஆரியர் என்றும் அறநூல்கள் வழி நடப்பவரை ஆரியர் என்றும் கூறி இருக்கிறார்.
ஆரியம் என்ற சொல்லை வடமொழி என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.
ஆரியன் என்பதை ஹிந்துக்கள் வழிபடும் இறைவன் என்ற பொருளிலும் பயன்படுத்தியுள்ளார்.
தேவாரம், பண்டைய இலக்கியம் கூறியதற்கு ஒரு படி மேலே போய்,
காலத்தால் பின்னால் தோன்றியதால் தெளிவாக ஹிந்து தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட
பாரத நாட்டை ஆரிய நாடு என்று அறிவிப்பதோடு
தேசபக்தி இல்லாதோர் ஆரியர் அல்லர் என்றும்
ஆரிய இனம் ஒரே இனம் என்றும் இதில் இன, ஜாதி போன்ற வேறுபாடுகளை வகுப்பவர் மாய்ந்து ஒழிக என்றும் கூறுகிறார்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் ஆரியன் திராவிடன் என்ற பொய்யான வாதங்கள் எல்லாம்
அவர் பாடல்களால் பொடிப் பொடியாகிப் போகிறது.
சங்க இலக்கியமும் தேவாரமும் சுட்டிக் காட்டும் நல்ல பொருளே
அவர் பாடல்களிலும் அழுத்தமாக நிலைபெறுகிறது. வாழ்க பாரதி நாமம்!
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ யாமுனாசார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply