ஸ்ரீ ‘அ’-ராமாயணம்
அனந்தனே அசுரர்களை அழித்து,
அன்பர்களுக்கு அருள அயோத்தி
அரசனாக அவதரித்தான்!
அப்போது அரிக்கு அரணாக அரசனின்
அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.
அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை
அரவணைத்து அருளும் அருட்செல்வன்!
அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில்
அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும்
அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான்!
அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய
அனந்த ராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ!
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும்
அடங்காமல் அநியாயமாக அவனை ஆரண்யத்துக்கு அனுப்பினாள்!
அங்கேயும் அபாயம், அரக்கர்களின் அரசன்,
அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்.
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு,
அளவேயில்லை. அயோத்தி அண்ணல், அன்னை
அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும் அளவில்லை.
அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை
அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை
அரசனாக அரியணையில் அமர்த்தினர்.
அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும்
அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர். அலசினர்.
அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து
அளந்து அக்கரையை அடைந்தான்.
அசோகமரத்தின் அடியில், அரக்கிகள் அயர்ந்திருக்க
அன்னையை அடி பணிந்து அண்ணலின்
அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்.
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள்
அனேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும்
அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.
அரக்கர்களை அலறடித்து, அவர்களின்
அரண்களை, அகந்தைகளை அடியோடு அக்கினியால்
அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம்!
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை
அடக்கி, அதிசயமான அணையை
அமைத்து, அக்கரையை அடைந்தான்.
அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின்
அஸ்திரத்தால் அழித்தான்.
அக்கினியில் அயராமல் அர்ப்பணித்த அன்னை
அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.
அன்னையுடன் அயோத்தியை அடைந்து
அரியணையில் அமர்ந்து அருளினான்.
அண்ணல், அனந்தராமனின் அவதார
அருங்கதை அகரத்திலேயே அடுக்கடுக்காக
அமைந்ததும் அனுமனின் அருளாலே!
———-
ஸ்ரீ லவ-குசலர் பாடிய இராமாயணம்
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்
நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே
வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்
அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே
ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்
வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்.
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
———–
எளிய இராமாயணம்
தசரத மஹாராஜா செய்த யாகத்தின் பலனாய் அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து,
ரகு குலத்திற்கு பெருமை அளித்து,
வில்வித்தை வாள் வித்தையில் தேர்ந்து,
விஶ்வாமித்ர முனிவரின் யாகத்தை காத்து ,
அகலிகைக்கு சாபவிமோசனமளித்து, ஜனக நகர் சென்று,
சிவ தனுசை வளைத்தொடித்து, நங்கை சீதையை கை பற்றி,
சிற்றன்னை கைகேயின் ஆணையால் மரவுரி மான்தோல் தரித்து,
மனையாள் சீதை சகோதரன் லக்ஷ்மணுடன் கானகம் சென்று,
குஹனின் அன்பான உதவியால் கங்கையை கடந்து,
சித்திரகூடம்தனில் தங்கி, பரதனுக்கு பாதுகையை அளித்து,
ராஜ்யத்தை ஆளச்செய்து, அகஸ்தியரை தரிசித்து,
பஞ்சவடி சென்று, அங்கு வந்த அரக்கி சூர்பணகையின் மூக்கை அறுக்கவைத்து,
மாய மானான மாரீசனை கொன்று, சீதையை பிறிந்து மனம் தளர்ந்து,
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து,
ஸபரியை ஆசிர்வதித்து, அனுமனைக் கண்டு,
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, வாலியை வதைத்து,
அனுமனுக்கு அனுக்ரஹ பலமளித்து,
விளையாட்டாக கடலை தாண்ட செய்து,
அஸோக வனம்தனில் அமர்ந்துருந்த சீதையிடம் கனையாழியை கொடுக்கவைத்து,
ராவணனை கண்டு லங்கைக்கு தீயிட்டு வந்த அனுமனிடமிருந்து,
சீதை கொடுத்தனுப்பிய சூடாமணியை பெற்றுகொண்டு,
அலைகடலில் அணைகட்டி பரிவாரங்க ளுடன் லங்கை சென்று,
ராவணனை வென்று வதைத்து, விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட்டு,
அன்பு சீதைக்கு அக்னிதேவனின் ஆசியை பெற்று கொடுத்து,
ஆருயிர் சீதை ஆசை லக்ஷ்மண் தாசன் அனுமனுடன் நந்திக்ராமம் சென்று,
அங்கு காத்திருந்த பரதனை அணைத்துகொண்டு,
யாவரும் அயோத்தி திரும்பி, அங்கு கூடியிருந்த ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கிவிட்டு,
அன்பு தாயார்களின் பொற்பாதங்களில் தலை வைத்து வணங்கி,
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து,
மணிமகுடம் ஏற்றுகொண்ட மஹானுபாவன் ஶ்ரீராமபிரான்
—————–
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
ஸ்ரீராம நாம வரானன ஓம் நம இதி (ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் பலச்சுருதி-27)
———————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply