கீழ்ப்பாட்டில், “மாற்றாருனருக்கு வலி தொலைந்து” இத்யாதியால்
தாங்கள் போக்கற்று வந்தவாறைக் கூறின விடத்தும், “இன்னமும் இவர்களுடைய அகவாயை அறியக் கடவோம்”
என்று கண்ணபிரான் பேசாதே கிடக்க’
அது கண்ட ஆய்ச்சிகள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது?
எமக்கு நீ தான் புகலாகாதொழிந்தாலும் வேறொரு புகலைத் தேடி ஓடாதபடி அநந்யார்ஹைகளாய் வந்து
அடி பணியா நின்ற எங்களை நீ கடாக்ஷித்தருளவேணு” மென்று பிரார்த்திக்கும் பாசுரம், இது.
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை
அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப்போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து–கழிந்துவிடும்’
ஏல் ஓர் எம் பாவாய்
தம்மிடத்தில் ஈஸ்வரத்வ புத்தியை யுடைய சில அஹங்காரிகளான அரசர்கள்
“இப்பூமிக்கு நாம் கடவோம்” என்று அபிமானித்திருந்த அஹங்காரத்தை அடிப்பற்றோடு அழித்துப் போகட்டு
‘ஸோஹம்’ என்றிருந்த நிலை குலைந்து ‘தாஸோஹம்’ என்று சேஷத்வத்தை முறையிட்டுக் கொண்டு
ஸர்வ ஸ்வாமியான உன்னுடைய பள்ளிக்கட்டிலின் கீழ் வந்து புகுந்து கூட்டங்கூட்டமாக இருப்பது போல,
நாங்களும் எங்களுடைய ஸ்த்ரித்வாபிமாநத்தைத் தவிர்த்துக் கொண்டு இங்ஙனே வந்து புகுந்தோம்’
இனி எம்மைக் கடாக்ஷித்தருளதியேல், இன்றளவும் உன்னைப் பிரிந்திருந்ததற்கு அடியான
பாவங்களடங்கலும் ஒழிந்துவிடு மென்கிறார்கள்.
அபிமான பங்கமாய்-
“ஒரு நாயகமாய் ஓடவுலகுடனாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாங்கொள்வர்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்தபடி
ராஜ்யம் முதலியவற்றை இழந்து மிக்க பரிபவங்கள் பட்டு அஹங்காரமடங்கப் பெற்றனரென்க.
ஆய்ச்சிகள் “வந்துதலைப் பெய்தோம்” என்றதைக் கேட்ட கண்ணபிரான்
“பெண்காள்! எல்லாம் ஸபலமாயிற்றதன்றோ? இனி ஒரு குறையுமில்லையே?” என்ன’
“உன்னுடைய கடாக்ஷம் பெற நினைத்தன்றோ நாங்கள் வந்தது’
அது பெறவேண்டாவோ?” என்கிறார்கள்-“கிங்கிணி வாய்ச்செய்த” இத்யாதியால்.
ஏக காலத்தில் ஞாயிறும் திங்களு முதித்தால் தாமரை மலர் பாதி முகுளிதமாயும், பாதி விகஸிதமாயுமிருக்கு மென்றுகொண்டு,
கண்ணபிரானுடைய திருக் கண்களுக்கு அந்த நிலைமையை வேண்டுகின்றனர்.
இஃது, இற்பொருளுவமை’ வடநூலார், ‘அபூதோபமை’ என்பர்.
கண்ணனுடைய திருக் கண்கள். சேதனருடைய குற்றங்குறைகளை நினைத்துப் பாதி மூடியும்,
அவர்களுடைய கூக்குரலைக் கேட்டுப் பாதி திறந்து மிருக்கு மாதலால், அதற்கு இந்த உவமை கூறியது மிகப் பொருந்தும்.
முதலிலேயே பூர்ண கடாக்ஷஞ் செய்தருளினால் தாங்கப்போகாதென்று,
பொறுக்கப் பொறுக்கக் கடாக்ஷி க்கவேணு மென்கிறார்கள், சிறுச் சிறிதே என்பதனால்.
“கிங்கிணிவாய்ச் செய்த” என்றவிடத்து, செய்த- என்கிறவிது-உவமஉருபு’ (உபமாவாசகபதம்)
எனவே, கிண்கிணிவாய் போன்ற என்றதாயிற்று.
கிண்கிணி- அரைச்சதங்கை’
பாதிபாகம் மூடினவாறாகவும், பாதிபாகம் திறந்தவாறாகவுஞ் செய்யப்படுவதொரு ஆபரண விசேஷம்.
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply