பகவத் விஷயத்தை அநுபவிக்கப் புகுமவர்கள் வாயாலே ஏதோ சில பாசுரங்களைச் சொல்லிப் புகழ்கின்றார்களே,
என்ன பாசுரஞ் சொல்லிப் புகழ்வது! பெரு வெள்ளத்திலே புகுந்து முழுகுமவர்கள் குமிழ் நீருண்டு கிடக்குமத்தனை போல,
பகவத் விஷய ஸாகரத்திலும் அழுந்திக் கிடக்கலாமே யொழிய ஏதேனும் பாசுரமிட்டுச் சொல்லப் போமோ? என்கிறார்.
மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?–6-
பதவுரை
மூவரில்–த்ரி மூர்த்திகளுள்
முதல்வன் ஆய ஒருவனை-முதற் கடவுளாகிய அத்விதீயனும்
உலகம் கொண்ட கோவினை–(மாவலியிடத்தில்) உலகங்களை இரந்து பெற்ற ஸ்வாமியும்
குடந்தை மேய–திருக்குடந்தையில் நித்ய வாஸம் செய்பவனும்
குரு மணி திரளை–சிறந்த நீல ரத்னக் குவியல் போன்றவனும்
இன்பம் பாவினை–இன்பந்தரும் பாட்டுக்களைப் போலே சுவை மிக்கவனும்
பச்சை தேனை-பசுந்தேன் போலே நாவுக்கு இனியனும்
பைம் பொன்னை–பசும் பொன் போல் விரும்பத் தக்க கவனும்
அமரர் சென்னி பூவினை–நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருப்பவனுமான பெருமானை
புகழும்–புகழ்கின்ற
தொண்டர் தாம்–தொண்டர்கள்
என் சொல்லி புகழ்வர்-எதைச் சொல்லிப் புகழ்வார்கள்?
மூவரில் முதல்வனாய வொருவனை –
ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவர்களென்றும் த்ரிமூர்த்திகளென்றுஞ் சொல்லப்படுகிற
அரி அயன் அரன் என்னுமிவர் தம்முள் முழுமுதற் கடவுளாயிருப்பவன். அன்றியே,
ஏகமேவ அத்வதீயம் ப்ரஹ்ம -என்ற சுருதியின்படி
இந்திரனைக் கூட்டி மூவராக்கி அம்மூவர்களிற் காட்டிலும் முழுமுதற் கடவுளாயிருப்பவன்
என்றும் பொருள் கூறுவர்.
உலகங் கொண்ட கோவினை – மூவர்க்கும் முதற்கடவுளாயிருந்தால் அவர்களுக்கு ஆக வேண்டிய
காரியத்தைத் தலைக் கட்டிக் கொடுக்க வேணுமே;
அவர்களுள் ஒருவனான இந்திரனுக்குக் காரியஞ்செய்து கொடுத்தமை சொல்லுகிறது.
மஹாபலி அபகரித்த பூமியை மீட்டுக்கொடுத்தமை சொன்னடி.
குடந்தை மேய குருமணித் திரளை – இன்னும் ஸம்ஸாரிகள் இடர்ப் பட்டாருண்டாகிலும் துவளலாகாதென்று
அவர்கட்குக் கதியாகத் திருக் குடந்தையிலே படுக்கை பொருந்திப் பள்ளி கொள்ளும் நிலையை நோக்குங்கால்
சிறந்த நீல ரத்னங்களைக் குவிந்திருக்குமா போலே புகர்த்து விளங்கும்படி.
‘குரவ் ’ என்னும் வடசொல் குருவென்று கிடக்கின்றது. சிறந்த வென்று பொருள்.
இன்பப் பாவினை –
”அந்தமிழினின்பப் பாவினை” என்றார் குலசேகரப் பெருமாளும்.
அருளிச் செயல் போலே செவிக்குத் தித்திப்பவன் எம்பெருமான் என்றவாறு.
பச்சைத் தேனை –
செவிக்கு மாத்திரமன்றியே நாவுக்கும் இனியனா யிருப்பவன்;
நாள் பட்ட தேன் போலல்லாமல் அப்போதுண்டான தேன் போலே பரம போக்யன்.
பைம் பொன்னை –
உடம்புக்கு அணையலாம்படி விரும்பத் தக்கவனென்க.
அமரர் சென்னிப் பூவினை-நித்ய ஸூரிகள் தலைமேற் புனைந்து கொண்டாடும் தத்துவம்.
”எம்மா வீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து …….. அம்மா வடியேன் வேண்டுவதே”
என்று நாமெல்லாரும் பிரார்த்தித்துப் பெற வேண்டிய பேறு சிலர்க்குக் கை வந்திருக்கின்றதே யென்று தலை சீய்க்கிறார்.
ஆக இப்படிப் பட்ட எம்பெருமானைப் புகழ்கின்ற தொண்டர்கள் என் சொல்லிப் புகழ்வரென்கிறார்.
இத்தால், தாம் பாசுரம் பேசுவதும் எம்பெருமானுடைய பெருமையின் எல்லையைக் கண்டன்று;
போது போக்க வேண்டியத்தனை என்றதாம்.
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply