ஸ்ரீ திருமால் பெருமை -சங்கத்தமிழ் –பரிபாடல் –

ஸ்ரீ திருமால் பெருமை -சங்கத்தமிழ் –பரிபாடல் – 1. திருமால்

அரு மறைப் பொருள்

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பணைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை- 10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.
அமர் வென்ற கணை
இணைபிரி அணி துணி பணி எரி புரை
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர் 15

நெரி திரடெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற் 20

றுணி படல் இன மணி வெயில் உறழ் எழில் நக்கு
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை
உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறிரிய அமரரைப் 25

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்
சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம்
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை.

சொல்லில் அடங்காப் பெரும் புகழ்

‘பொருவேம்’ என்றவர் மதம் தபக் கடந்து,
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30

இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்!
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35

அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

துதி மொழிகள்

விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் 40

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50

நிலனும், நீடிய இமயமும், நீ.
அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்’ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55

மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழலவை;
பொன் ஒக்கும் உடையவை;
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68

———

பரிபாடல் – 2. திருமால்
திருமாலின் பெருமை

ஊழிகளின் தோற்றம்

தொல் முறை இயற்கையின் மதியொ
… ….. … மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

வராக கற்பம்

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

திருமாலின் நிலைகள்

நீயே, ‘வளையொடி புரையும் வாலியோற்கு அவன் 20

இளையன்’ என்போர்க்கு இளையை ஆதாம்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25

இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.

திருமாலின் சிறப்பு

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது’ என
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று. 35

கடவுள் வாழ்த்து

பாடியவர் :: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர் :: பெட்டனாகனார்
பண் :: பாலையாழ்

திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்
மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10

மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ’ என பொழியுமால், அந்தணர் அரு மறை.

முனிவரும் தேவரும் பாடும் வகை

‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20

தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்’ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25

சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்’ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30

வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!

வனப்பும் வலியும்

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60

ஓ!’ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;
சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள்
தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65

வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,
உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70

முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

நால்வகை யுகங்களிலும் ஆராயப்படும் சிறப்பு

பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80

நால் வகை வியூகம்

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

பல திறப் பெயரியல்புகள்

இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85

தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

புகழ்தலை ஒழியோம்

ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5

திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;

இரணியனைத் தடித்தமை

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10

புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு, 20

தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;

வராகம் ஆகி உலகத்தை எடுத்தமை

புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35

கருடக் கொடி

சேவல் ஓங்கு உயர் கொடியோயே!
சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40

நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45

பாம்பு சிறை தலையன;
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

பகையும் நட்பும் இன்மை

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50

உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65

பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

—————

தைந் நீராடல்

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

———–

திருமாலைத் தொழுவார் பெறும் பேறு

மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5

தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்–
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10

அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் –தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.

எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பெருமை

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15

அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20

நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று–மூ-ஏழ் உலகமும்,
மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25

பல்வேறு தோற்றத்துடன் விளங்கும் ஒரு முதல்வன்

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்–
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்–
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35

இலங்கு ஒளி மருப்பின் களிறும் — ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

புகழ்ந்து போற்றுதல்

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40

சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்–அருள், செறல், வயின் மொழி; 45

முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை– 50

அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55

வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!– 60

அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்–
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64

——————–

1. திருமால்

(முதல் செய்யுளான இது தொல்காப்பியம் செய்யுள் இயல்,
சூ.121, பேராசிரியர் நச்சினார்க்கினியர், உரையில் கண்டெடுக்கப்பட்டது.)

இருந்தையூர் அமர்ந்த இறைவனது அடி பரவுதல்

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5

திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

இருந்தையூரின் சிறப்புகள்
மலை, குளம், வயல், ஆகியவற்றின் வளம்

ஒருசார்-அணி மலர் வேங்கை, மராஅ, மகிழம்,
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி,
மணி நிறம் கொண்ட மலை.
ஒருசார்-தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை … .. 10

வண்ண வரி இதழ்ப் போதின்வாய் வண்டு ஆர்ப்ப,
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின்
கண் வீற்றிருக்கும் கயம்.
ஒருசார்-சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுஉற்று
உழவின் ஓதை பயின்று, அறிவு இழந்து … . 15

திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டித்,
திரு நயத்தக்க வயல்.

அந்தணர் இருக்கை

ஒருசார்-அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி,
விறல் புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித்
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி, .. .. 20

அறத்தின் திரியா, பதி.

வணிகரும் உழவர்களும் வாழும் தெருக்கள்

ஆங்கு ஒருசார்-உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல்,
பண்ணியம், மாசு அறு பயம் தரு காருகப்
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் . . . 25

விளைவதை வினை எவன் மென் புல வன் புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை

ஆதிசேடனது திருக்கோயிலில் மைந்தரும் மகளிரும் வழிபடுதல்

வண்டு பொரேரென எழ, 30

வண்டு பொரேரென எழும்;
கடிப் புகு வோரிக் கதவமிற் றோட்டி-
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர-
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார்
ஊர் களிற்றன்ன செம்மலோரும் . . . . 35

வாய் இருள் பனிச்சை வரி சிலைப் புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும் . .. . . 40

நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும்,
கடல் நிரை திரையின் கரு நரையோரும்-
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, .. .45

விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும்
துளங்கா விழுச் சீர்த் துறக்கம் புரையும்-
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்
வரை கெழு செல்வன் நகர்.

பூ முடி நாகர் கோயிலின் எழும் ஓசைகள் முதலியன

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, … 50

விண்ட கட கரி மேகமொடு அதிரத்
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப,
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற,
சூடு நறவொடு தாமம் முகிழ் விரியச் .. .55

சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

குளவாய் அமர்ந்தான் நகரில் மகளிரும் மைந்தரும் வணங்கிப் பேறு பெறுதல்

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி
அவிர் நிமிர் புகழ் கூந்தல். … 60

பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர்-
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு,
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க,
நல்லவை எல்லாம் இயைதரும்-தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக்
குளவாய் அம்ர்ந்தான் நகர்.

ஆதிசேடனின் சிறப்புக்களைப் போற்றுதல்

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, … 65

மகர மறி கடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் .. .70

அறாஅது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
மணி புரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிபு இல் சீர்ச் ….. 75

செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல் உயர் வென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்

விண்ணப்பம்

அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. .. .82

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading